சிறுபூளை Aerva lenatea, Juss.; Amarantaceae.
அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத் தபொருளே.
. - திருஞானசம்பந்தர்.
திரு இரும்பூளை (ஆலங்குடி) என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது சிறுபூளை ஆகும். இது சிறு நீள்வட்ட இலைகளையும், இலைக்காம்புகளில் வெண்மையான பூக்கதிர்களையும் உடைய நேராக வளரும் மிகச் சிறுசெடி வகையாகும். இஃது பொங்கல் பூ, சிறுபீளை என்றும் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஆவாரம் பூவுடன் சிறுபூளை பூவையும் இல்லந்தோறும் பயன்படுத்துவது மரபாக உள்ளது. செடிமுழுவதும் மருத்துவப் பயனுடையது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்ந்து காணப்படுகின்றது.
திருமுறைகளில் பூளை பற்றிய குறிப்பு :-
திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ
புற்றின் நாகமும்
பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை
வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ
டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுடன்
ஏத்தி யுணருமே. 3.043.4
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார்
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே. 6.051.6
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 7.040.4
காளையர்கள் ஈளையர்க
ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப்
பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன்
நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து. 11.006.13
நாளைப் போவேன் என்று
நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப்
பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம்
பதியினின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ்
சூழ் தில்லை மருங்கணைவார். 12.024.22
அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பரும் சீர் திருவாறை வட
தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பரிய தமிழ் பாடி
உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும்
பூளை எய்தினார். 12.034.399
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்
பூளை சென்று எய்தக்
காவண நீள் தோரணங்கள் நாட்டி
உடன் களி சிறப்பப்
பூவண மாலைகள் நாற்றிப் பூரண
பொற்குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத்
திருத் தொண்டர் எதிர் கொண்டார். 12.034.400