மாதவி Hiptage madablota, Gaertn.; Malpighiaceae.
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டித் தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானிரே.
. - சுந்தரர்.
திருமுருகன் பூண்டி, திருத்தெளிச்சேரி, வட திருமுல்லைவாயில் , திருநன்னிலம் (திருநன்னிலத்துப் பெருங்கோயில்) முதலிய திருத்தலங்களில் தலமரமாக விளங்குவது மாதவியாகும். இஃது குருகு, குருக்கத்தி, கத்திகை என்றும் குறிக்கப்படுகிறது. இது நீண்டக் கூரிய கரும்பச்சை இலைகளையும், கொத்தான மணமுடைய மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட பெரும் கொடியினம். இதன் பூவே மருத்துவப் பயனுடையது. பூ குளிர்ச்சியுண்டாகி உடல் தேற்றும்.
திருமுறைகளில் மாதவி பற்றிய குறிப்பு :-
மரவத்தொடு மணமாதவி
மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில்
சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை
விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன்
வைத்தான்நெடு நகரே. 1.014.7
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே. 1.056.10
குயிலார் கோல மாத
விகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேரும்
நறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்த
காழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க் கினிய பாடல்
வல்லார் பாவ நாசமே. 1.071.11
மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதனென் றேத்தும் நம்பரன் வைகுந் நகர்போலும்
மாதவி மேய வண்டிசை பாட மயிலாடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே. 1.097.2
வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 1.100.4
தாதலர் தாமரைமேல் அயனுந்
திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய
உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும்
விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ்
புகலிப் பதிதானே. 1.104.9
அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே. 1.109.5
வரந்திகழு மவுணர் மாநகர்மூன்
றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா
தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர விடர்கெடுமே. 1.133.2
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே. 1.135.2
பூதமொடு பேய்கள்பல
பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு
கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி
கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும்
வண்திருவை யாறே. 2.032.6
குரவங் குருக்கத்
திகள்புன் னைகள்ஞாழல்
மருவும் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந்
திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ
டடைவித் தலழகே. 2.037.3
கருந்த டங்கணின் மாத ராரிசை
செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி
இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே. 2.052.1
அந்தண் மாதவி புன்னை நல்ல
அசோக மும்மர விந்த மல்லிகை
பைந்தண்ஞா ழல்கள்சூழ் புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம்ஆ யவனே தவத்தார்க் கருளாயே. 2.053.9
சிந்தை யிடையார் தலையின்
மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும்
போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாள ரென்ன
மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை
சூழ்ந்த பாசூரே. 2.060.1
பல்லிதழ் மாதவி அல்லிவண்
டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடும்எம்
மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலர்
ஓதநீர் வையகத் தே. 2.079.11
செம்பொ னார்தரு வேங்கையும்
ஞாழலுஞ் செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி
சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி
வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு
பைங்கழல் ஏத்துதல் செய்வோமே. 2.110.1
வண்டுவாழுங் குழல்மங்கை
யோர்கூறுகந் தார்மதித்
துண்டமேவுஞ் சுடர்த்தொல்
சடையார்க் கிடமாவது
கெண்டைபாய மடுவில்
லுயர்கேதகை மாதவி
புண்டரீகம் மலர்ப்பொய்கை
நிலாவும் புகலியே. 2.122.3
குருந்தொடு மாதவி
கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப்
பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம்
அரணம் மூன்றெய்த
பெருந்தகை யடிதொழப்
பீடை யில்லையே. 3.020.5
ஏலமார் தருகுழல்
ஏழையோ டெழில்பெறுங்
கோலமார் தருவிடைக்
குழகனார் உறைவிடஞ்
சாலமா தவிகளுஞ்
சந்தனஞ் சண்பகஞ்
சீலமார் ஏடகஞ்
சேர்தலாஞ் செல்வமே. 3.032.4
வருந்திவா னோர்கள்வந்
தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்
கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப்
பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில்
தென்குடித் திட்டையே. 3.035.5
குருந்த மேறிக்
கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த
விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள்
சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போதெனை
வாடலெ னுங்கொலோ. 3.045.5
இடியார் ஏறுடையாய்
இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ
டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ்
திருவான்மி யூருறையும்
அடிகேள் உன்னையல்லால்
அடையாதென தாதரவே. 3.055.2
அவ்வதிசை யாரும்அடி யாருமுள
ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி
யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு
தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம்
நாறுமயி லாடுதுறையே. 3.070.7
வேதமொடு வேள்விபல வாயினமி
குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ
நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு
ஞாழலவை மிக்கஅழகால்
மாதவிமணங்கமழ வண்டுபல
பாடுபொழில் வைகாவிலே. 3.071.5
கானமுறு மான்மறியன் ஆனையுரி
போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர்
மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரதுவே. 3.074.5
பண்டிரைபௌ வப்புணரி யிற்கனக
மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட
முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல்
வந்தமொழி வேதவனமே. 3.076.2
நேடும்அய னோடுதிரு மாலும்உண
ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தமித
ழிச்சடையெம் ஈசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி
மாதவி செருந்திகுரவின்
ஊடுலவு புன்னைவிரி தாதுமலி
சேருதவி மாணிகுழியே 3.077.9
பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே. 3.123.6
நரம்பினோ டெலும்பு கட்டி
நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 7.008.5
கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு
தேத்து மிடங்கதி ரோனொளியால்
விட்ட விடம்விடை யூர்தி யிடங்குயிற்
பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு
மாதவி யோடு மணம்புணரு
மட்ட புயங்கப் பிரான திடங்கலிக்
கச்சி யனேகதங் காவதமே. 7.010.7
புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி யிடம்விர வாதுயி ருண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி யிடங்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
யல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி யனேகதங் காவதமே. 7.010.8
தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்
துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொரு
பித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்
பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே. 7.036.3
எறிக்குங் கதிர்வேய் உதிர்முத் தம்மோடே
லம் இலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 7.042.1
துன்னு வார்சடைத் தூமதி யானைத்
துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப்
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை
ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப்
புனித னைப்பணி யாவிட லாமே. 7.056.2
குளிர்தரு திங்கள்கங் கைகுர
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. 7.098.8
பிறையணி வாணுதலாள்
உமையாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங்க
நீலமால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல்லை
அளைந்துகுளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள்சேர்
திருநாகேச் சரத்தானே. 7.099.1
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 10.4.3.1
தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு மாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத்தெங்ஙன்
ஏகும்என் நேரிழையே. 11.037.15
மாதவியும் புன்னையும்
மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும்
கெழீஇஇப் - போதின் 11.038.25
கேதகையும் சண்பகமும்
நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை
மருங்கணைத்துக் - கோதில். 11.038.90
சூத பாடலங்கள் எங்கும்சூழ்
வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும்
தண்தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
வகுள சண்பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
பூக புன்னாகம் எங்கும். 12.003.29
வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன. 12.025.106
வந்து பந்தர் மாதவி
மணம் கமழ் கருகாவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழல் இணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணமாம்
அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந் தமிழ்ப் பதிகம். 12.034.372
மௌவல் மாதவிப் பந்தரில்
மறைந்து வந்து எய்திச்
செவ்வி நாண்முகை கவர்
பொழுதினில் மலர்ச் செங்கை
நவ்வி வாள் விழி நறு
நுதல் செறி நெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்
விரல் கவர்ந்தது குறித்து. 12.034.1057
கெழு மலர் மாதவி புன்னை
கிளைஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர்
செருந்தி வளர் கைதை
முழு மணமே முந் நீரும்
கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய
மணல் பரப்பும் திருப்பரப்பு. 12.051.4
முருகுறு செங்கமல மதுமலர்
துதைந்த மொய் அளிகள்
பருகுறு தெண் திரை வாவிப்
பயில் பெடையோடு இரை அருந்தி
வருகுறு தண் துளி வாடை
மறைய மாதவிச் சூழல்
குருகுறங்கும் கோனாட்டுக் கொடி
நகரம் கொடும்பாளூர். 12.060.2