logo

|

Home >

hindu-hub >

temples

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.

இறைவியார் திருப்பெயர்: அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை.

தல மரம்:

தீர்த்தம் : கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. பிரம தீர்த்தம் , சிவகங்கை தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம்

வழிபட்டோர்:சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், உமை, முருகன், புளகாதிபன், விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தார், சேக்கிழார், இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், அம்மணியம்மன், சைவ எல்லப்பநாவலர் போன்ற எண்ணற்ற தேவர், முனிவர், சித்தர்கள், அடியார் பெருமக்கள்.

Sthala Puranam

திருவண்ணாமலை ராஜ கோபுரம் 
  • பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.
  • ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது
  • இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
  • சோணாசலம், அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் இத்தலத்தைக் குறிப்பவையே.
  • ஒரு முறை பிரம்மாவிற்கும், மஹாவிஷ்ணுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார். (சிவலிங்கம் என்றால் இறைவனைக் குறிக்கும் குறியீடு என்று பொருள்.) லிங்க உத்பவம் (சிவலிங்கத்தின் தோற்றம்) நடைபெற்ற தலம் இது. திருஞானசம்பந்தர் பதிகங்களில் ஒன்பதாம் பாடல் தோறும் அடிமுடி தேடிய இந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.
  • தமிழில், அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் அளக்க முடியாத வடிவாகத் தோன்றிய சிவபெருமானின் மலை என்பதால் அண்ணாமலை எனப் பெயர் வந்தது.
  • வடமொழியில், அருணம் என்றால் சிவப்பு. அசலம் என்றால் மலை. சிவந்த நெருப்பு வடிவில் தோன்றிய மலை என்பதால் அருணாசலம் எனப் பெயர் பெற்றது. 
  • அண்ணாமலையானது கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.
  • உமையம்மை இங்கு தவம் இருந்து சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகம் பெற்றார் 
  • சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம்.
  • வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலையில் வச்சிராங்கத பாண்டியன் குதிரை மீதேறி பூனையைத் துரத்திவர திருவண்ணாமலையை வலம் வந்து இரண்டும் இச்சாபம் நீங்கி வித்தியாதரர்களாயினர். 
  • வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம் வந்து திருப்பணி பல செய்துள்ளான்.

 

திருமுறை பாடல்கள் பதிகங்கள்  : சம்பந்தர் - 1. உண்ணாமுலை உமையாளொடும் (1.10),                            2. பூவார்மலர்கொண் டடியார் (1.69);                     அப்பர்   - 1. ஓதிமா மலர்கள் தூவி (4.63),                            2. வட்ட னைமதி சூடியை (5.4),                            3. பட்டி ஏறுகந் தேறிப் (5.5);     மாணிக்கவாசகர்  -  1. ஆதியும் அந்தமும் (8.7),                            2. செங்கண் நெடுமாலுஞ் (8.8); பாடல்கள்  : சம்பந்தர்  -    பெண்ணாண் எனநின்ற (1.84.2),                               அண்ணாமலை யீங்கோயும் (2.39.2),                               அண்ணாவுங் கழுக்குன்றும் (3.64.1);              அப்பர்     -     தீர்த்தப் புனற் (6.7.2),                                ஊக முகிலுரிஞ்சு (6.16.5),                                கண்ணார்ந்த நெற்றி (6.21.8),                                விண்ணோர் பெருமானை (6.22.2),                                மூரி முழங்கொலி (6.23.5),                                அண்ணா மலையமர்ந்தார் (6.51.3),                                விண்ணோர் பரவ (6.82.2);              சுந்தரர்   -      தென்னாத் தெனாத் (7.2.6),                                கடங்களூர் திருக்காரிக் (7.31.3),                                தேனைக் காவல் (7.47.7);       மாணிக்கவாசகர்   -      வெளியிடை ஒன்றாய் (8.4.149),                                அண்ணா மலையான் (8.7.18),                                விண்ணாளுந் தேவர்க்கு (8.8.10);     பரணதேவ நாயனார்   -      மதியாரும் செஞ்சடையான் (11.23.38,42);            சேக்கிழார்    -      அண்ணாமலை மலை மேல் (12.21.313) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                 அண்ணாமலை (12.28.970) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.                                                                   

Specialities

அடி அண்ணாமலை திருக்கோயிலும் திருவண்ணாமலையும் 

நகரம் மற்றும் கோவில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் 

  • நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. 
  • இங்கு மலையே இறைவனின் சொரூபம். மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.
  • இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர். பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பு. 
  • மலைவலம் சுற்றி வரும் போது எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் காணலாம். அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.
  • உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.
  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். 
  • வெளிச்சுற்று மதிலில் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும், மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.
  • கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
  • கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.
  • திருவண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பேய்  கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. 
  • அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.
  • ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)
  • உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.
  • விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
  • சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்.
  • மூலவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.
  • சதுர் முக லிங்கம் இங்கு உள்ளது.
  • 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
  • (திருவாசகத்தில்) திருவம்மானை, திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு எழுப்பிச் சென்றதை அடிப்படையாகக் கொண்டது.
  • தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.
  • 'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.
  • குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.

உற்சவங்கள்

  • கார்த்திகை தீபம், ஆடிப்பூரம் உத்தராயண தக்ஷிணாயன புண்ணிய காலங்கள். சித்திரை வசந்த விழா, கந்த சஷ்டி, பாவை விழா, பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்புடையன.
  • சித்திரைமாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவம் நடைபெறுகிறது.
  • ஆனி பத்து நாட்கள் தட்சிணாயன பிரம்மோத்சவம் 
  • ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா  அம்மன் சன்னதி முன்பாக நடக்கும்.
  • தை பத்து நாட்கள் உத்தராயண பிரம்மோத்சவம். தை மாதம்  மாட்டுப்பொங்கல்  திருவூடல் உற்சவம்.  சுவாமி ஊஞ்சல் உற்சவம்
  • தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட்டை  சென்று சுவாமி காட்சி தருவார்.
  • தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கத்தில் அண்ணாமலையார் காட்சி தருவார்.
  • மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று வள்ளாள மகராஜனுக்கு ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.
  • பங்குனி உத்திரம்  திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் நடக்கும்.
  • இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

கார்த்திகை தீபத் திருவிழா 

  • கார்த்திகை மாதம்  பிரம்மோற்சவம்  கார்த்திகை தீபம்  10 நாட்கள் திருவிழா. சிவபெருமான் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. பரணி அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளாக ஒருவரான  சிவபெருமான், எல்லா உயிர்கள்/ பொருட்களிலும் நீக்கமற நிற்கிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை. மலைமேல் மகா தீபம் 11 நாட்கள் எரியும். 
  • திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள். தீப விழாவன்று  ஆலயத்தார் இவர்களை கவுரவித்து மலைமேல் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். 
  • மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
  • தத்துவார்த்தமாக, மனம், மொழி, மெய்களைக் கடந்து ஓருருவம், ஒரு பெயரும் இல்லாத இறைவன், உயிர்களை உய்விக்கும் பொருட்டு ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது. அந்த ஜோதியே உயிர்களின் மீது கொண்ட கருணையினால் சக்தி தன்னில் தோன்ற உலகைப் படைக்கிறது. அவ்வாறு படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் அந்தப் பரம்பொருள் நீக்கமற நிறைகிறது. (அஷ்டமூர்த்தி தத்துவம்). இதனை இந்தக் கார்த்திகை தீபத் திருவிழா நமக்கு உணர்த்துக்கிறது. 

பதிவான வரலாறு மற்றும் கோவில் கல்வெட்டுகள்

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தக் கல்வெட்டுகள் உள்ளன. 
  • பதிவுசெய்யப்பெற்ற மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம், திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம், பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர், பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்து ராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன.
  • முதல் இராஜேந்திரனுடைய காலத்தில் (கி.பி. 1038.) திருவண்ணாமலை, மதுராந்தகவளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்றும், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1179.) காலத்தில் இராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், மேற்படி சோழனுடைய 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1204) வாணகோப்பாடிப் பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், விஜயநகர இராயர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்குன்றக் கோட்டத்துப் பெண்ணைவடகரை வாணகோப்பாடி அண்ணாநாட்டுத் தனியூர் திருவண்ணாமலை என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. இதனால் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய வள நாட்டுப் பெயர் முதலில் மதுராந்தகவளநாடு என்றிருந்து, பிறகு இராஜ ராஜ வளநாடு என்று மாறி, இறுதியில் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் ஆயிற்றென்றும், இம்மண்டலத்தின் உட்பிரிவாகிய செங்குன்றக் கோட்டத்தினுள் அண்ணாநாட்டுத் தனியூராகக் குறிக்கப்பட்டதென்றும் அறியக்கிடக்கும்.
  • முதற்பிராகாரத்துச் சுவரில் கங்கை கொண்ட இராஜேந்திரன் கல்வெட்டு (கி.பி.1028) காணப்பெறுவதால், இதற்கு முன்பே கருங்கல் திருப்பணி நடந்திருக்க வேண்டும், முதற் பிராகாரத்து விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில், சிதம்பரேசர் கோயில் ஆகிய இரண்டின் சுவர்களிலும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சாஸனங்கள் காணப்படுகின்றன. கிளிக்கோபுரத்து 33 கல்வெட்டில் பழைமையுடைய வீரராஜேந்திர சோழனது இரண்டாவது ஆட்சியாண்டின் (கி.பி,1063) முன்பே கருங்கல் திருப்பணியாயிருக்க வேண்டும்.
  • திருக்காமக்கோட்டமுடைய உண்ணாமுலைநாச்சியார் கோட்டம் தனியாக கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றது. கல்வெட்டுகளில் திருக்காமக் கோட்டம் எனக் குறிக்கப்பெறும்.
  • பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த கல்வெட்டுக்களில் வீரராகவன் திருமதில், வாணாதிராயன் திருமதில், திருவேகம்பமுடையான் திருமதில் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. அம்மையப்பன் சந்நிதிக்கு இடையில் மேற்பக்கத்தில் நங்கையாழ்வீசுவரம் என்னுங் கோயில் பல்லவகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரசியால் (கி.பி.1269) எடுப்பிக்கப் பதினாலடிக் கோலால் பதின்மூன்றரைகுழி விற்றுப் பதினாயிரம் பொற்காசு பெற்றுக் கட்டியபகுதி இன்று இல்லை.
  • விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கைத் தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர், திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்குத் தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.
  • பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனும், அவன் மகன் வேணாவுடையானும் செய்த திருப்பணிகள் மிகப்பல. பூஜைக்கும் திருப்பணிக்குமாக `அண்ணாமலைநாதர் தேவதானப்பற்றுக்களும், அண்ணாநாட்டு நாற்பாக்கெல்லைக்குட்பட்ட நன்செய் புன்செய் ஆக உள்ள நிலத்திற்கு ஆயம்பாடி காவலால் வந்த நெல்லும் காசாயமும் மற்றும் எப்பேர்ப்பட்ட பல்லாயங்களும்` இவன் தானமாக ஈந்தான்.
  • கல்வெட்டுக்களில் காணப்பெறும் கோயில் அதிகாரிகள் ஸ்ரீருத்திரர், ஸ்ரீமாகேசுரர், ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார், தானத்தார், தானபதி மாகேசுரர், தேவகன்மிகள், கோயிற்கணக்கர், ஸ்ரீகாரியஞ்செய்வார் எனப் பலராவர். இவரில் ஸ்ரீமாகேசுரர், தர்மசாசனங்கள் ஒழுங்காக நடைபெறக் காரியம் பார்ப்பவராவர்.
  • அண்ணாமலைநாதருக்கும் உண்ணாமுலை அம்மைக்கும் பிச்சதேவர் முதலிய மூர்த்திகட்கும் திருப்பள்ளி எழுச்சி, சிறுகாலை சந்தி, உச்சிப்போது, இரவை, அர்த்தசாமம் முதலியகாலங்களில் அமுது முதலியவற்றிற்கு நிலம் அளித்தமை அறியலாம்.
  • நெய், மிளகு, உப்பு, தயிர், அடைக்காய், வெற்றிலை, சீரகம், வாழைப்பழம், வாழையிலை முதலியன நெல்லளந்து பெறப்பட்டவை. மங்கையர்க்கரசி என்னும் நங்கை தன்னாபரணங்களை விற்ற பொருள்கொண்டும், நெல்லைக்கொண்டும் ஏரி புதுக்கி உதவினாள் என்ற செய்தி கல்வெட்டால் அறியப்படுகிறது.
  • சில சாஸனங்கள் மூலம் பிரமநாயனார் பெரியமடத்து முதலியார், வையந்தொழுவார் பெரியமடத்து முதலியார், ஊருக்குப் பெரிய மடத்து முதலியார், திருவண்ணாமலை உடையார் திருமுற்றத்தே இராஜேந்திரசோழன் சாலை, காங்கேயன்மடம், அம்மைமடம் முதலிய மடங்கள் இருந்தவை அறியக்கிடைக்கிறது.
  • வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

திருவண்ணாமலை ஒலிப்பதிவுகள் 

திருவண்ணாமலை மீது பாடப்பட்ட நூல்களில் சில

நூல் ஆசிரியர் 
அருணாசலேசரநுபூதி சிவானந்தமூர்த்தி
ஶ்ரீஅருணாசலேசர் நவகாரிகைமாலை ஶ்ரீ அருணாச்சலேசர்
அருணாசல சதகம் சபாபதி முதலியார் 
அருணாசல அக்ஷரமாலை PDF சபாபதி முதலியார் 
அருணாசல அக்ஷரமணமாலைரமணர் 
அருணாசல நவமணிமாலைரமணர் 
அருணாசலப் பதிகம்ரமணர் 
அருணாசல பஞ்சரத்னம்ரமணர் 
அருணாசல அஷ்டகம்ரமணர் 
அருணாசலீசர் பதிகம் PDF புரசை சபாபதி முதலியார் 
அருணாசலேசுரர் சாரப்பிரபந்தம் நமச்சிவாய சுவாமிகள்
அருணாசலேசர் வண்ணம்கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி
அருணாசலக் கீர்த்தனைகள்காஞ்சிபுரம் வீரணப் புலவர், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் 
அருணகிரி அந்தாதி குகைநமச்சிவாயர்
திருவருணைத் தனிவெண்பாகுகைநமசிவாய சுவாமிகள்
அருணைப் பதிற்றுப்பத்து  அந்தாதி வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிகள்
அருணைச் சிலேடை அந்தாதி  வெண்பா மாலைசிந்நயச் செட்டியார்
திருவருணைக் கலிவெண்பா சோணாசல முதலியார் 
திருவருணைக் கலம்பகம் மூலமும் உரையும் சைவ எல்லப்பநாவலர்
திருவருணையந்தாதிசைவ எல்லப்பநாவலர்
அருணகிரி புராணம் மறைஞானதேசிகர்
அருணாசல புராணமும் அருணாசலேசுரர் தோத்திரப்பிரபந்தத் திரட்டும் நா. கதிரைவேற்பிள்ளை
அருணாசலபுராணம் மூலமும் உரையும் சைவ எல்லப்ப நாவலர்
திருவருணைக் கலம்பகம்சைவ எல்லப்ப நாவலர்
திருவண்ணாமலை திருவருட்பதிகம் வள்ளலார் 
திருவண்ணாமலைப் பதிகம் -1திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்
திருவண்ணாமலைப் பதிகங்கள் -2திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள் 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம் PDF  
திருவண்ணாமலைக் கார்த்திகைத்தீப வெண்பா சோணாசல முதலியார் 
அண்ணாமலைச் சதகம் திருச்சிற்றம்பல நாவலர் 
அண்ணாமலை வெண்பா குரு நமச்சிவாய சுவாமிகள்
அண்ணாமலையார் வண்ணம்நல்லூர் தியாகராச பிள்ளை
அண்ணாமலை பஞ்சரத்தினம் 
சோண சைல மாலை  PDF சிவப்ரகாச சுவாமிகள்
சோணசைலமாலை உரை திருவேங்கடநாயுடு 
சோணாசல வெண்பா PDF சோணாசல முதலியார் 
சோணாசல சதகம் சோணாசல முதலியார் 
சோணசைலப் பதிகம்சோணாசல பாரதி 
உருத்திர சங்கிதைத் தோத்திரம் 
உண்ணாமுலையம்மன் பதிகம் 
உண்ணாமுலையம்மை வருகைப் பதிகம்பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை
உண்ணாமுலையம்மன் சதகம்மகாவித்வான் சின்னகவுண்டர்
திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்சோணாசல முதலியார் 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு. சென்னை, வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் நிறைய உள்ளன. தொடர்பு : 04175-252438.

Related Content

திருக்கோவலூர் வீரட்டம் தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு

அணிஅண்ணாமலை - (அடிஅண்ணாமலை)

Tiruvannamalai Arunachaleswarar Temple - History and Interes

ತಿರುವಣ್ಣಾಮಲೈ ಅರುಣಾಚಲೇಶ್ವರ ದೇವಸ್ಥಾನ - ಇತಿಹಾಸ ಮತ್ತು ಆಸಕ್ತಿದಾಯಕ