logo

|

Home >

to-know >

indhukkalin-nilaimai-naalukku-naal-mosamakivaarukirathu

இந்துக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது


அன்று அன்னியர்கள் செய்ததை இன்று இவர்கள் செய்கிறார்களே..?

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா மீண்டும் தற்போது அன்னியர்களின் கைகளில்தான் உள்ளது. அதே காரணத்தால் தான், இந்துக்களின் நிலைமையும் தொடர்ந்து நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கோடானுகோடி கணக்கில் பணம் வந்து கொண்டிருக்கிறது நம் நாட்டிற்கு. அரசாங்கத்தின் மதிப்பில், சென்னைக்கு மட்டுமே கடந்த ஒரே ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து ரூ.871 கோடியும், பெங்களூருவிற்கு ரூ.702 கோடியும், மும்பைக்கு ரூ.606 கோடியும் வந்துள்ளதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சமூகசேவை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகளுக்கே சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனையபுரம் திருக்கோயில்!

இவ்விதம் பல நூற்றாண்டுகளாக அன்னிய மதத்தினர், நமது கலைப் பொக்கிஷமாகவும், தெய்வத்தின் உறைவிடமாகவும் பூஜிக்கப்பட்டுவந்த ஏராளமான திருக்கோயில்களைச் சூறையாடியும், பின்பு அவற்றை இடித்து, நிர்மூலமாக்கியும் அக்கிரமங்களைச் செய்துள்ளனர். எஞ்சிய திருக்கோயில்கள் மிகவும் சொற்பமே. அவ்விதம் தப்பிப் பிழைத்த புராதன திருக்கோயில்களில் ஒன்றுதான், தேவாரப்பாடல் பெற்ற பனையபுரம் (புறவார் பனங்காட்டூர்) ஸ்ரீ சத்தியாம்பிகை சமேத ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர் திருக்கோயிலாகும். கண் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கும் தெய்வீக சக்திவாய்ந்த இத்திருக்கோயில், சென்னைக்குத் தெற்கே 150-கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 10-கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கதிரவன் பூஜிக்கும் கமல மலர்த் திருப்பாதம்

ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரியன் தன் பொன்னிற ஒளிக்கதிர்களால் நெடிதுயர்ந்த ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் கடந்து, கருவறையில் ஒளிவீசி தேஜோமயனாகப் பிரகாசிக்கும் ஸ்ரீ பனங்காட்டீஸ்வரரைப் பூஜித்து வருவது உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

இத்தகைய கோயிலை இடிக்க திட்டம்!

பழம்பெரும் பெருமைகொண்ட இத்திருக்கோயிலின் பெரும் பகுதியை இடித்துத் தரைமட்டமாக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. காரணம் : இக்கோயிலை ஒட்டிச் செல்லும் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண்.45C சாலையை விரிவாக்கம் செய்வதற்காக!

 

thirupuravar-panangattur temple

 

 

thirupuravar-panangattur temple

 

இக்கோயிலை இடிப்பதற்கு முன்னேற்பாடாக நெடுஞ்சாலைத் துறையினர் திருக்கோயிலின் வெளிச்சுவர்களில் அடையாளமிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திட்டப்படி நடந்தால், சூரிய பூஜை நிகழும் ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர் மற்றும் அன்னை சத்தியாம்பிகை மூலவர் சந்நிதிகளும் இடிக்கப்பட்டு, அக்கருவறை உள்ள நிலத்தின்மீது சாலை அமையும் ஆபத்து உள்ளது. தொல்லியல் சிறப்புவாய்ந்த இவ்வாலயம் கிட்டதட்ட காணாமலேயே போய்விடும்.

நமது வேதகால மகரிஷிகளின் ஞானத் திறமையால் உருவான வானியல் கலையின் விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட இத்திருக்கோயில் அமைப்பும், இங்கு சூரிய பூஜை நிகழ்வதையும் நம் வருங்கால தலைமுறையினர் எவரும் பார்க்க முடியாத இழப்பும் ஏற்பட்டுவிடும். நெடுஞ்சாலைத் துறையின் இத்திட்டத்தால் கிராம மக்கள் மட்டுமின்றி, இப்பகுதிவாழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முகலாய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள், ப்ரெஞ்சுக்காரர்கள் காலங்களில்கூட அழியாமல் இன்று தலைநிமிர்ந்து நிற்கும் இந்தப் புராதன ஆலயத்தை மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் அரசு கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அழிக்க திட்டமிடுவது பெருங்கண்டனத்திற்குரியதாகும்.

உடனடியாக இந்துக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து, முதல் முயற்சியாக நீதிமன்றங்களில் வழக்குத் தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன். இந்து அறநிலையத்துறைக்கும் தந்திகள் அனுப்புமாறு வேண்டுகிறேன். இந்துக்கள் ஒன்றுபட்டு நின்றால் பெறற்கரிய இத்திருக்கோயில் காப்பாற்றப்படும்.

இறைவன் துணையிருக்கிறான் - வாருங்கள்!

இந்த அநீதியைத் தடுத்து நிறுத்துவோம்!

 


  • தொகுக்கப்பட்டது (Edited version); 
    நன்றி - குமுதம் ஜோதிடம் (30-03-2012 இதழ்).

     

Related Content