logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-yazhmoori-padiyathu

யாழ்மூரி பாடியது

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


ஆக்கரிய யாழ்முரி சக்கர மாற்றீரடி முக்காலும்

யாழிசையாற் பாரகத்தோர் தாமுய்ய—ஊழி

உரைப்பாரும் பல்புகழால் ஓங்க உமைகோனைத்

திருப்பதிகம் பாடவல்லசேயை---- ( கண்ணி 83---86,  ஆவுடையபிள்ளைதிருவுலாமாலை)

 

                நால்வர் என்று போற்றப்படும் திருஞானசம்பந்தர் , அப்பர், சுந்தரர் , மாணிக்கவாசகர் போன்ற சான்றோர்களில் முதல் மூன்று திருமுறைபாடியவர் யாவரிலும் மிகச்சிறியவரான திருஞானசம்பந்தர் ஆவார் . பலதலங்கள் சென்று சிவபிரானின் பெருமையைப்பாடி, அவர்புகழைத் தேவாரத்தினூடே பரப்பி வந்தார்.

 

               திருஞானசம்பந்தர் இப்படிப் பலதலங்களைத் தரிசித்துக் கொண்டு போகும் பொழுது , திருக்கோழம்பம் , வைகல்மாடக் கோயில் போன்ற பல தலங்களையும் பணிந்து பாடி இன்புற்றார். அதன் பிறகு திருத்தருமபுரத்தை அணுகினார். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளுகிறார்    என்று கேள்விப் பட்டதும், தருமபுரம் திருநீலகண்டப் பெரும்பாணருடைய அன்னையார் பிறந்த ஊராதலால் , அங்கு வாழும் அவருடைய சுற்றத்தார்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பார்க்க ஆர்வம் கொண்டு , அவரைப் போற்றி எதிர்கொண்டு அழைத்து வரவேற்றனர். அங்கு அவரைப் பார்க்க வந்திருந்த பெரும்பாணரும் , பிள்ளையார் திருவாயால் மலர்ந்தருளிய திருப்பதிகங்களைத் தாம் யாழில் இட்டு வாசிக்கும் பேறுபெற்றமை குறித்துச் சுற்றியிருந்தவர்களிடம் பெருமையாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

 

              அதனைக்கேட்டஉறவினர்கள் ,” தாங்கள் அத்திருப்பதிகத்தினை யாழில் இட்டு தகுந்த முறையில் வாசிப்பதனால் அதன் இசை எங்கும் பரவ ஏதுவாகிற்று “ என்று பாணரை நோக்கி முகமன் பகர்ந்தனர்.  அந்த உரை கேட்டது தான் தாமதம் ,என்ன செய்வது என்று தெரியாது திடுக்கிட்டு வெட்கித்தலை குனிந்தார் திருநீலகண்ட பெரும்பாணர்.

 

             கலக்கம் கொண்ட பெரும்பாணர்,  திருஞானசம்பந்தப் பெருமானைப் பணிந்து , திருப்பதிகத்தின் இசையானது , அளவில் அடங்காத தன்மை வாய்ந்தது என்பதனை தம் சுற்றத்தாரும் , சுற்றியிருந்த பிறரும் அறிந்து உணர்ந்து உய்யும்படி ஒரு திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிநின்றார்.

 

              திருஞானசம்பந்தரும் புன்முறுவல் பூக்க அவரது வேண்டுகோளுக்கு இணங்கி,  திருப்பதிகத்தின் இசை உலகர் கண்டத்திலும் , கருவியிலும் கூட அடங்காவண்ணம்  “  மாதர்மடப்பிடி “  என்ற திருப்பதிகத்தைப் பாடி தருமபுரத்து இறைவனைப் போற்றுவாராயினர். மேலும் பத்து பதிகங்களைப் பாடினார்.

 

மாதர்மடப் பிடியும் மடவன்னமு மன்னதோர்

நடையுடைம் மலைமகடுணையென மகிழ்வர்

பூதவினப் படைநின்றிசை பாடவுமாடுவ

ரவர்படர் சடைந் நெடுமுடியதொர் புனலர்

வேதமொடேழிசை பாடுவராழ் கடல் வெண்டிரை

யிரைந் நுரைகரை பொருதுவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னைதயங்கு மலர்ச்சிறை வண்டறை

யெழில் பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே         (முதலாம்திருமுறை –திருத்தருமபுரம் –பாடல்எண் 1)

 

பொருள்---

              விரும்பத்தக்க இளம்பிடியையும், இளஅன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத் தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசைபாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடி மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.இவ்வாறு திருஞானசம்பந்தர் திருத்தருமபுரத்து இறைவனைப் போற்றிப் பாடினார்.

 

திருநீலகண்டபாணரும் எப்பொழுதும் போல் திருஞானசம்பந்தரின் பாடலில் ஆழ்ந்து மகிழ்ச்சி கொண்டு , தம் யாழில் அப்பாடலை இசைக்க முயன்றார்.  ஆனால் என்ன வினோதம் !அது அவருடைய யாழுக்குள் அடங்கவில்லை. அதனை உணர்ந்த பெரும்பாணர் எப்பொழுதும் ஆளுடைய பிள்ளையின் பதிகங்களைத் தம் யாழில் இசைப்பதைப் பழக்கமாகக் கொண்டவருக்கு இப்பொழுது ஏன் கை வரவில்லை?  என்று நடுக்கம் கொண்டு , திருஞானசம்பந்தரின் காலில் விழுந்தார்.

 

                “தங்கள் திருப்பதிகத்தினை ஏற்பேன் என்று காரணமாயிருந்த இந்தயாழ்க் கருவியை நான் தொடுவதினால் நேர்ந்த பிழையோ!  என்னால் தங்கள் பதிகத்தை வாசிக்க முடியவில்லை என்று அச்சமாக இருக்கிறது.”  என்று சொல்லித் தம்கையில் ஏந்தியிருந்த யாழினை உடைப்பதற்கு ஓங்கினார்.

 

                 உடனே சம்பந்தப்பிள்ளையார் அதனைத் தடுத்தருளி , அந்த யாழ்க் கருவியைத் தம்கையில் வாங்கிக் கொண்டு ,”ஐயா!  தாங்கள் யாழை எதற்காக முரிக்கப் புகுகிறீர்கள்?  சிவபெருமானின் திருவருட் பெருமைகள் யாவும் இந்தச் சிறிய கருவியில் அடங்கிவிடுமா? சிந்தையால் நாம் அளவு காணப்படாத பதிகஇசை, செயலளவில் எய்துதல் அரிது ஆதலின் , இறைவன் பதிக இசையினை உங்களுக்கு வரும் அளவு வாசித்தால் போதும் . அதுவே இறைவனுக்கு நாம் அன்பு செலுத்துவதாகும் “ என்று அவரைத் தேற்றி ,  தம்கையிலுள்ள யாழினைப் பாணர்கையில் திரும்பக் கொடுத்து அருளினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அதனைப் பெற்றுக் கொண்டு முன் போன்று தமது இசைத் தொண்டினை மேற்கொள்ளத் தொடங்கினார் பின்பு ஞானசம்பந்தப்பெருமான் சிலநாட்கள் அந்தத்தலத்தில் தங்கி பிறதலங்களை வணங்கப் புறப்பட்டுத் திருநள்ளாற்றினை அடைந்தார். அவருடன் திருநீலகண்டப் பெரும்பாணரும் சென்றார்.

 

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்

பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின் மேல்

நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.---(திருநள்ளாறுபாடல்எண் –1)

 

 

பொருள்:--- இன்பத்துக்கு நிலைக் களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசியகண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம்பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு

 

              மேற்கண்ட திருப்பதிகத்தைப் பாடினார் திருஞானசம்பந்தர் அவர்கள்.. திருநீலகண்டப் பெரும்பாணர் அப்பதிகத்தை யாழிலிட்டு வாசித்தார். அந்தக் கருவி பதிகத்தை வாங்கிக் கொண்டு ஓசை நயத்தை வீசியது .  அது கண்டு பெரும்பாணர் பெரும் மகிழ்ச்சியுற்றார். அதை யாழில் இசைத்ததைக் கேட்டு சுற்றியிருந் தோரும் மகிழ்ந்தனர்.

 

             யாழில் அடங்காத வண்ணம் திருஞானசம்பந்தர் திருத்தருமபுரத்தில் பாடிய திருப்பதிகத்தினை முன்னால் எப்படி வாசிப்பாரோ அது போன்ற பழக்கத்தினால் மறதியாக வாசிக்கத் தொடங்கிய பாணர், தமது முயற்சி தடைபட்ட நிலையில் ,  தமது பிழையை உணர்ந்து , அப்பிழைக்குக் காரணமாக இருந்த இசைக் கருவியை உடைப்பதற்கு ஓங்கிய போது அதனைக்கண்ட திருஞானசம்பந்தர் விரைந்து தடுத்து அருளி யாழைத் தம்கையில் வாங்கிக் கொண்டு , சிந்தையால் அளவிட முடியாத தெய்வ இசையின் சிறப்பினை உணர்த்தி அந்த யாழினைப் பாணரின் கையில் மீண்டும் அளித்தார் என்பதே வரலாறு. இன்னிசையால் அளவுபடாத திருப்பதிகமாதலால் ஆவுடையபிள்ளையார் இப்பதிகத்தால் பாணரது யாழை முரியப்பண்ணினார் என்றதொரு செய்தியும் உபசாரமாகப் பேசப்படுவதாயிற்று.

                                ஏழிசை யாழையெண் டிசையறிய

                                துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்

என்றும் ---

                                பாமாலை யாழ் முரியப் பாணழியப் பண்டருள்செய்

                               வாகை சுந்தரன்வண் சம்பந்த மாமுனி

என்றும் நம்பியாண்டார் நம்பி ,  ஞானசம்பந்தப்பிள்ளையாரை இனிதே போற்றியுள்ளார்.

 

              யாழில் அடங்காத திருஞானசம்பந்தரின் பதிகமாகிய ‘  மாதர்மடப்பிடி’  –‘ யாழ்முரி ’ – என்ற பெயரால் தொன்று தொட்டு வழங்கி வருகின்றது. அன்னோர் கருதுமாறு யாழை முரித்தச் செயல் திருஞானசம்பந்தர் வரலாற்றில் இடம் பெறவே இல்லை.

 

              முரி என்பது ஓர் அடியில் தொடங்கிய யாப்பினையும் , இசை நடையையும் , அந்த அடியிலே முரிந்து மாற்றி ,  மற்றொரு யாப்பியலும் ,  இசைநடையும்  அமையப் பாடப்படுவதாகிய இசைப் பாட்டாகும் .  இதனை முரிவரி என்றும் கூறுவதுண்டு.

 

              யாழில் அடங்காதவாறு , திருஞானசம்பந்தர் பாடிய ,” மாதர் மடப்பிடி” என்று தொடங்கும் திருப்பதிகம் ‘ யாழ்முரி என்ற பெயரில் தொன்று தொட்டு வழங்கி வருகிறது என்பதை , ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையில் ,  “ஆக்கரிய யாழ்முரி ”  என்ற நம்பியாண்டார் நம்பியின் வாக்கால் அறியலாம்.

 

                “ஆக்கரிய யாழ்முரி சக்கரமாற்றீரடி முக்காலும்

                யாழிசையாற் பாரகத்தோர் தாமுய்ய—ஊழி

                உரைப் பாரும் பல்புகழால் ஓங்காத உமைகோனைத்

                திருப்பதிகம் பாடவல்ல சேயை ( கண்ணி---83—85)


 

Related Content

ஆவி வாழும் வீடு

கண்ணப்ப நாயனார்

பிழைத்துப்போக ஒருவழியினைச் சொல்லி அருள்