logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-sundararin-vendukol

சுந்தரரின் வேண்டுகோள்

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்றொரு பொற்கொடி களிக்கவே பொருகற் பனைநெற்பல அளித்தகாரணன் -----
முருகனை மையமாக வைத்து ,பல நிகழ்ச்சிகளையும் ,  , ஷண்மதத்தையும் திருப்புகழில் புகுத்துவதில் வல்லவரான அருணகிரிநாதர் , திருமுறையில் கண்ட நிகழ்ச்சியையும் ---- ஒரு திருப்புகழ் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். 
வண்ட மருங்குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்
விண்டவர் தம் புரமூன்றெரி செய்த எம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித் தரப்பணியே.

வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே!, உலகமாய் ஆகியவனே! , அடியேன் குண்டையூரிலே சிலநெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
    
மேற்கண்ட பாடல் ஏழாம் திருமுறையில் ,20; திருக்கோளிலியில், சுந்தரமூர்த்திசுவாமிகள் பாடிய இரண்டாவது பாடலாகும்

    திருவாரூர் தலத்துக்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் குண்டையூர் கிழார் என்னும் பெரியவர் வாழ்ந்து வந்தார். இவர் அடியவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து உதவி செய்து வந்தார். அவ்வகையில் திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் நெல் , பருப்பு போன்ற பொருட்களைத் தவறாமல் அவர் வீட்டிற்கு அனுப்பி, அதில் பெரிதும் இன்பம் கண்டார்..
    இப்படித் தவறாமல் பொருட்களை சுந்தரருக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் , ஒரு முறை தாங்காத மழை பெய்தது. அதனால் விளை நிலங்களெல்லாம் பாழாகி,  விளைச்சலும் குன்றத் தொடங்கியது. குண்டையூர்க் கிழார் , விளைச்சல் இல்லாத இந்த நேரத்தில் போதுமான பொருட்களை எப்படி சுந்தரருக்கு அனுப்புவது என்று மிகவும் கவலை கொண்டார்.    அதையே சிந்தித்து வகை தெரியாது , மன உளைச்சலுடன் அப்படியே உறங்கிவிட்டார். உறக்கத்திலும் அதே சிந்தனையாக இருந்த கிழாரின் கனவில் சிவபெருமான் காட்சிதந்தார் ,
”சுந்தரனுக்குப் படி அமைப்பதற்காக உமக்கு நெல் தந்தோம் !” என்று கூறிவிட்டு மறைந்தார்( நெல் போன்ற வகைகளை இறைவனின் தொண்டர்களுக்குக் கொடுப்பதை “படியமைத்தல் ” என்று கூறுவர் ) 
    சிவபெருமான்  ,செல்வத்திற்கு அதிபதியான குபேரனைக் கூப்பிட்டு ,” குபேரனே! குண்டையூரில் கிழார் என்று ஒருவர் இருக்கிறார் .நெற்குவியல்களை அவர் வசிக்கும் ஊரில் கொண்டு போய் சேர்த்துவிடு ! “ என்று ஆணையிட்டார் . அதன்படியே குபேரனும் , நெல்லை மலை மலையாகக் குவித்துச் சென்று குண்டையூரில் இருந்த கிழார் இல்லத்து வாசலில் கொட்டினான். காலையில் எழுந்த கிழார் நெற்குவியல்களைப் பார்த்துப் பார்த்து அதிர்ந்தாலும் , வியப்பினூடே மகிழ்ச்சியடைந்தார்.  இந்த இன்பமான செய்தியை எப்படியேனும் சுந்தரருக்குத் தெரிவித்து விட வேண்டும் என்ற உந்துதலில் குண்டையூர் கிழார் சுந்தரர் இருக்கும் திருவாரூர் தலத்தை நோக்கிச் சென்றார் . அங்கு சுந்தரரைச் சந்தித்து, தன் கனவில் காட்சி தந்த சிவபெருமான் கூறியதையும் ,பின் காலையில் தான் கண்ட நெற்கு வியல்களைப் பற்றியும் ஒன்று விடாது பரபரப்புடன் கூறினார். 
    “ இறைவன் செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது .  இருந்தாலும் ஸ்வாமிகளே! அவ்வளவு நெல்லையும் வண்டியேற்றிக் கொண்டு இங்கு கொண்டு வருவது என்பது கடினமானது எனக் கருதுகிறேன் . தாங்கள் அங்கு வந்துஅ வைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அருள வேண்டும்“ என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார் கிழார். 


    கிழாரின் வேண்டுகோளுக்கிணங் கசுந்தரரும் குண்டையூர் சென்று நெல் மலைகளைப் பார்வையிட்டார். என்னே ஆச்சரியம் ! விண் முட்டி நின்றது நெற்குவியல்கள்


“எப்படி இந்த நெற்குவியல்களை திருவாரூருக்கு எடுத்துப் போவது? . இதுசாத்தியம் தானா?” எண்ண அலைகள் அவர் மனதில் ஓடின. 
    சுந்தரர் ஒரு முடிவுக்கு வந்தார். குண்டையூர்க் கிழாரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள‘ திருக்கோளிலி’ என்ற திருத்தலத்திற்கு விரைந்து சென்றார். ( இப்போதுதிருக்குவளைஎன்றுவழங்கப்படுகிறது) அங்குகோயில் கொண்டிருக்கும் சிவபெருமானிடம் சென்றார். மனம் உருகி சிவபெருமானை நினைந்து பதிகங்கள் பாடினார் . என்ன பாடினார் தெரியுமா? இவ்வளவு நெற்குவியல்களையும் தம்மிடம் கொண்டு செல்வதற்கு வேண்டிய வேலையாட்களைத் தரும்படி வேண்டி நின்றார் . அடியவரின் வேண்டுகோளுக்கு இணங்காமல் இறைவன் இருப்பாரா? அடியவரின் வேண்டுகோளைச் செவிமடுத்தார் அந்த இறைவன் . அடுத்தகணமே
“இன்று இரவு சில பூதகணங்கள் நெல்லைக் கொண்டு வந்து திருவாரூரில் குவிப்பர்” என்று வானில் அசரீரி எழுந்தது. 
திருக்கோளிலியில் நெற்குவியல்களைத் தம் இருப்பிடம் கொண்டு செல்ல ஆள்கேட்டு இறைவனிடம் விண்ணப்பித்து அருளிச் செய்தபாடல் இதோ ! –
நீளநினைந்தடியேன் உனை நித்தலுங்கை தொழுவேன்
வாளன கண்மடவாளவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.----------

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! , வாள் போலும் கண்களையுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாத படி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை  அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , இடைவிடாமல் உன்னையே நினைத்து நாள் தோறும் வணங்கும் தொழிலை உடையேனாய் இருக்கிறேன் ; வேறுயாரை நான் வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .
இது மட்டுமா பாடினார்? ஒன்பது பாடல்கள் பாடினார்
பாதியோர் பெண்ணை வைத்தாய்--  என்று தொடங்கும் பாடல் , அடுத்து–சொல்லுவதென் உனைநான் --- என்று தொடங்கிய பாடலும் , முல்லை முறுவலுமை ஒருபங்குடை முக்கணனே– என்ற பாடலும் , குரவ மருங்குழலாள் உமை நங்கை ஓர் பங்குடையாய், -- என்றும், எம்பெருமான் உனையே நினைந்தேத்துவன் எப்பொழுதும்—என்று தொடங்கும் பாடலும் , அரக்கன் முடி கரங்களடர்த்திட்ட எம்மாதிப்பிரான்–என்ற பாடலும், பண்டைய மால் பிரமன் பறந்தும்மிடந்தும் மயர்ந்தும்—என்ற பாடலு ம்பாடினார்
ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் ஒவ்வொரு பெருமையை விரித்துப் பாடினார். 
குரவமருங் குழலாள் உமைநங்கை ஓர் பங்குடையாய்
பரவை பசி வருத்தம்மது நீயும் அறிதியன்றே
குரவமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை அட்டித்தரப் பணியே.------
இப்பாடலின் தொடக்கத்தில் சிவபெருமானின் பெருமையைக் கூறிவிட்டு பின்,
தன் மனைவி பசி பொறுக்க மாட்டாள் என்று இறைவனிடம் வேண்டுகிறார் . குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய, ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே, பாம்பைக் கட்டியுள்ளவனே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்க வேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித் துன்பத்தையும் அறிவாயன்றே ?அவள் பொருட்டு, அடியேன், குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்
ஒரு பாட்டிலேயே இறைவன் சுந்தரரின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்திருப்பான் . ஆனால் தொண்டர்கள் வாயிலாகப் பதிகங்களைக் கேட்பதில் மகிழ்ச்சி கொள்பவனாயிற்றே இறைவன் ! அவனைப் புகழ்ந்து பாடுவதற்கு எத்தனை பதிகங்கள் பாடினாலும் தகும்
    மறுநாள் காலை திருவாரூர் வீதியெங்கிலும் நெற்குவியல்கள் நிறைந்து இருந்தன. சுந்தரமூர்த்தி நாயனாரும் , பரவை நாச்சியாரும் இதனைக் கண்டு மகிழ்ந்ததற்கு அளவேயில்லை.  மலைமலையாகக் குவிந்த நெல்லைக் கண்டு வியந்தார்கள் . யாவர் வீட்டு வாயிலிலும் நெற்குவியல்கள்! .
“அவரவர் வீட்டு வாசலில் குவிந்து கிடக்கும் நெல்லை அவரவரே எடுத்துக் கொள்ளுங்கள் “ என்று முரசறைந்து கூறியாவரும் நன்மை பெறச் செய்தனர் சுந்தரர் தம்பதிகள். 
    தான் பெற்ற இன்பம் யாவரும் பெறவேண்டும் என்ற மிகச் சிறந்த பண்பை நாம் பாராட்டத்தான் வேண்டும் . இதைப் போன்ற நிகழ்ச்சிகளினின்று நாம் பல நீதி நெறிமுறைகளை அறிந்து அதன் படி செயல்பட்டால் . நாடு முன்னேறும் என்பது திண்ணம்
யாவரும் வேண்டிய நெற்குவியல்களை எடுத்துக்கொண்டதால் குண்டையூரில் விளைந்த பஞ்சமும் தீர்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
திருவாரூர் -- எட்டிக்குடி சாலையில் , திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்ததலம் திருக்கோளிலி. இறைவன் – பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலி நாதேஸ்வரர் என்ற பெயர் கொண்டுள்ளார். . இங்கு இறைவன் வெண்மணலால் ஆன சிவமூர்த்தமாகக் காட்சியளிக்கிறார். இறைவி --- வண்டமர்பூங்குழலி
 

Related Content