logo

|

Home >

sirukathaikal >

ta-srkthkl-kanikkum-karumbukkum-etta-iniyan

கனிக்கும் கரும்புக்கும் எட்டா இனியவன்

திருமுறைக் கதை

உமாபாலசுப்ரமணியன்


    மணம் வீசும் பூக்களும் சோலைகளும் நிரம்பி மனதுக்கு இதத்தைத் தருவதாக இருந்தது அந்த ஊர். எங்கே பார்த்தாலும் மரங்கள் .பூத்துக் குலுங்கும் மரங்கள் அன்றி திருவள்ளுவர் சொல்வதைப் போல“ பயன் மரங்கள் ‘ மிகுதியாக இருந்தன. கனி வளர் மரங்கள் அவை.  அந்த ஊருக்கு யாரேனும் விருந்தினர் போனால் உணவில் சுவைமிகுந்த பழங்களை அதிகமாகக் கொடுத்தே உபசரித்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வார்கள் அவ்வூர்மக்கள். 
    அயல் ஊரிலிருந்து ஒருவர் அந்த ஊருக்கு வந்து அங்கு உள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்கினார். சில நாட்கள் தங்கிய பின் அவர்களிடமிருந்து விடைபெறும் நாளும் வந்தது. தம் ஊருக்குச் செல்லுவதற்கு தம் உறவினர்களிடம் சொல்லிப் புறப்பட்ட போது , உள்ளூர்க்காரர் , ஒரு தாறு வாழைப்பழமும் , நூறுமாம் பழமும் , பலாப்பழம் ஒன்றும் கொண்டு வந்து ,
“தாங்கள் தங்கள் ஊருக்குப் புறப்படவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்கள்!   எங்கள்ஊரின் நிலவளத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? வெறும்கையுடன் தங்களை ஊருக்கு அனுப்புவது முறையன்று அதனால். நான் கொடுக்கும் சிறிய பழங்களை தாங்கள் மறுக்காது ஏற்றுக் கொள்ள வேண்டும் “ என்று பணிவாக அவரிடம் கூறினார்.
வந்தவருக்கு ஒரேதிகைப்பு “ இத்தனையும் நமக்கா ? இவை யாசிறிய பழங்கள் ?” என்று ஆச்சரியத்தில் மூழ்கினார்
தொடர்ந்தார் அந்த வீட்டுக்கரர்,”  இந்தக் கனிகள் யாவும் நம் தோட்டத்தில் விளைந்தது. இந்த மாம்பழம் இருக்கிறதே, அது உயர்ந்த சாதிப் பழம் . மற்ற எல்லாப் பழங்களையும் விட அதிக இனிப்பாக இருக்கும் . இது மாதிரிப் பழம் வேறு எங்குமே கிடைக்காது . குழந்தைகளுக்குக் கொண்டுபோய் கொடுங்கள் .விரும்பிச்சாப்பிடுவார்கள்“ என்று அந்தப் பழத்தின் இனிமையை விண்டுரைத்து அவரை வழி அனுப்பினார்
    அவருக்குக் கிடைத்த பொருள்களிலேயே இனிய பொருள்கள் அவர் தோட்டத்தில் பழுத்த பழங்கள் ஆகும் .அதைப் பற்றிதான் சந்தித்த யாவரிடமும் கூறி மகிழ்ந்து போவார். 
    “ கனியே!  கனியின்ரசமே ! ” என்று பாடும் புலவர்களுக்குக் கூடத்தெரியாது கனியின்ரசம் எப்படியிருக்கும் என்று ஆனால் தம் உறவினருக்குப் பழங்களைக் கொடுத்து அனுப்பினாரே !அவருக்கு அதைப் பற்றி நன்றாகவே தெரியும் . அதிலேயே ஊறியவர் ஆயிற்றே!.
    வேறு ஒருஊர். வளப்பம் மிகுந்தஊர் என்றே சொல்லலாம் .நன் செய்நிலங்கள் அதிகம் இருக்கும் ஊர் . நீர் வளத்திற்குக் குறைவே இல்லை. இவ்வளவுவளம் நிறைந்த நிலத்தில் எதைப் பயிரிட்டால் நல்லபயன் பெறலாம் என்று தெரிந்து வைத்திருந்தார்கள் அங்குள்ள மக்கள். அதனால் எங்கே பார்த்தாலும் , கரும்பும் , நெல்லும் பயிர் செய்திருந்தார்கள். நெல்லை விடக் கரும்பிற்கு வருவாய் அதிகம் . அதனைப் பணம்தரும் பண்டம் என்றே சொல்வார்கள் அதன் மதிப்பு தெரிந்தவர்கள். அதிக இனிமையை உடையதாகவும் இருக்கிற பொருள் கரும்பு.
    பழத்தோட்டம் நிறைந்த ஊருக்குப் போன அன்பர் இந்த ஊருக்கும் ஒருவேலையாக வரும்சந்தர்ப்பம் அமைந்தது .இங்கும் அவருக்கு உறவினர்கள் இருந்தார்கள் . ஒரு உறவினர் நல்ல பணக்காரர். பெருநிலக்கிழவர்,  அவர் வேறு ஊரிலிருந்து வந்த இவரைப் பார்த்து , தம் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார் . அதன் பேரில் வந்தவர் அவர் வீட்டில் ஒருவாரம் தங்கினார் . இவருடைய உறவினரான செல்வந்தர் இவரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். சுற்று முற்றும் இருக்கும் , அறுவடைக்குத்தயாராக இருந்த நிலையில் கதிர் முற்றி இருந்த நெல்வயல்களை வந்தவருக்குக் காட்டினர். பிறகு கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் ஒவ்வொரு கரும்பாகத் தொட்டுப் பார்த்து இன்புறச் செய்தார் . பலகாணிகளில் கரும்பைப் பயிர் செய்திருந்தார் அந்த செல்வந்தர். பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது விருந்தாளிக்கு. உயர்ந்த வகைக் கரும்புகளை இனம்பிரித்து , தனித்தனியே பயிரிட்டிருந்தார். அவ்வப்பொழுது கரும்பு வகைகளின் சிறப்பைத் தன் விருந்தினருக்கு எடுத்துரைத்து விளக்கிக் கொண்டிருந்தார் செல்வந்தர். 
    இந்தச் செல்வந்தருக்குக் கரும்பு ஆலைகளும் இருந்தன. கரும்பு விளைந்தால் போதுமா?. கரும்புகளை ஆலைக்கு எடுத்துச் சென்று , சக்கையாகச் சாறுபிழிந்து , சாற்றைக்காய்ச்சிவெல்லம்ஆக்கவேண்டுமே! வெல்லம் மட்டும் அன்று, சர்க்கரையும் செய்தார்கள். கற்கண்டும் செய்தனர்.
கரும்புகளைப் பற்றிக் கூறிக்கொண்டு வந்த செல்வந்தர் வந்தவிருந்தினரைப் பார்த்து ,” அதோதெரிகிறதே! அந்தக் கரும்புகள் யாவும் வெல்லம் காய்ச்சப் பயன்படுபவை . இதோ இங்கு உள்ளனவே இவைகள் இன்னும் சுவையானவை. உயர்ந்த வகையைச் சேர்ந்தது.  இவைகள் யாவும் சர்க்கரை செய்யத் தகுதியானவை. அதற்குச் சிறிது தூரத்தில் உள்ளதே , அவைகள் யாவும் மிக மிக உயர்ந்த சாதிக் கரும்பு வகைகள் , இதிலிருந்துதான் கற்கண்டு உற்பத்தி செய்கிறோம்! “ 
“அப்படியா? எனக்கு கரும்பில் இவ்வளவு வகைகள் உண்டு என்ற இந்த விவரங்களெல்லாம் தெரியாது . கறும்புச் சாற்றைக் காய்ச்சும் பொழுது படிப்படியாக இனிப்புக்குத் தகுந்தவாறு கற்கண்டு, வெல்லம் , சர்க்கரையாவும் வந்துவிடும் என நினைத்தேன் “ என்று ஆச்சரியத்துடன் கூறினார் வந்தவர்.
“அப்படியானால் கற்கண்டு செய்வதற்கு உகந்த கரும்புதான் எல்லாவற்றிலும் சிறந்தகரும்போ?” கேட்டார் உறவினர்.
“ஆமாம் “ என்றார் கரும்புக்குச் சொந்தக்காரர்.
“சுவையான பழங்களை விட இந்தக் கரும்புக்கு இனிப்பு அதிகமோ ?” என்று மறுபடியும் தன் சந்தேகத்தைக் கேட்டார் விருந்தாளி .
செல்வந்தருக்குச் சிரிப்பு வந்துவிட்டது ,” என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? பழம் இனிமையானது தான் . அதன்சாறும் சுவையுள்ளது தான் .அதிலும் இனிமை இருக்கிறது. ஆனால் கறுப்பஞ்சாறோ! சொல்லவே வேண்டாம் . இனிமையைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது.  இனிமையின் திரவஉருவம் கருப்பஞ்சாறு அதன்கட்டி உருவம் தான் கற்கண்டு “ 
“ஓ! இப்போது தெரிந்துகொண்டேன்  .கனிதான் இனிமையானது என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன். அதனினும் இனி துகரும்பு. அந்தக் கரும்பிலும் இனிமையான கரும்பு கற்கண்டை உற்பத்தி செய்யத் தகுந்த கரும்பு என்பதை நன்கு தெரிந்து கொண்டேன்”
--ஏதோ பெரிய விஷயத்தைத் தெரிந்து கொண்டது போல் பேசினார் விருந்தாளி.
“அதனால் தான் கட்டிக் கரும்பு என்று சொல்வது வழக்கம் “ அவர் சொல்லியதை ஆமோதிப்பது போல்சொன்னார் பணக்காரர்.
“அப்படியா? கனியே !, கனிரசமே ! கட்டிக்கரும்பே ! என்று பாராட்டுவதற்கு இப்போது தான் எனக்குப் பொருள் தெரிந்தது,” _
உடனே கரும்புத் தோட்டத்து சொந்தக்காரர் கட்டிக் கரும்புச்சாற்றைக் கொண்டுவந்து அவரைக்குடிக்கச் சொல்லிக் கொடுத்தார்.
“இந்தாருங்கள் கட்டிக் கரும்பின் சாறு! “ 
“நன்றாக இருக்கிறது .  இதன் சுவையே தனிதான்“ என்று அதைச்சு வைத்துக் கொண்டே சொன்னார் விருந்தினர். 
    யதேச்சையாக அங்குவந்த ஒரு பழுத்தஞானி இவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்தார்.  உடனே செல்வந்தரும் ,” ஐயாவணக்கம் . தாங்கள் நலமாக இருக்கின்றீர்களா? நாங்கள் இருவரும் கரும்பின் சுவையைப் பற்றியும் ,கனிகளின் சுவையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம் . அச்சமயத்தில் நீங்கள் வந்துவிட்டீர்கள். இந்தக் கரும்பின் சாற்றைச் சுவைத்துப் பாருங்கள் . அற்புதமாக இருக்கும் .“ என்றார் .
“கனியும் கட்டிபட்ட கரும்பும் நாவுக்கு இனிமை தரும் பொருள்கள் தான். இனிமை என்று சொன்னவுடனேயே யாவருக்கும் இனிமையான பொருட்கள் தான் நினைவிற்கு வரும் . மற்றப் புலன்களின் நுகர்ச்சிகளை விடநாவினால் உணரும் சுவை உணர்வுதான் மனிதனை அதிகமாகப் பற்றிக் கொண்டு கடைசிவரை விடுவதே இல்லை. அதனால் , நாம் பேசும் பொழுதோ , கவிபாடும் பொழுதோ ,  பொறிகளின் வாயிலாக அநுபவிக்கும் இன்பங்களில் இவற்றையே மற்றவற்றிற்கு ம்உவமையாக எடுத்துச் சொல்வது வழக்கமாக அமைந்து விட்டது “ என்றார் அந்தஞானி.
உடனே செல்வந்தரும் ,” ஐயா எங்களுக்கு தாங்கள் கூறுவது அவ்வளவாக விளங்கவில்லை . ஆலைக்குள் உட்கார்ந்து பேசலாம் வாருங்கள் “ என்று பணிவாகக் கூறி, ஞானியை அழைத்துக் கொண்டு சென்றார்..
    “ இந்தக் கரும்பும் , கனியும் நாவிற்கு இன்பம் தருவதால் நாம் இப்படிப் பெருமகிழ்ச்சியடைகிறோமே! அதைப் போல ஐம்புலன்களுக்கும் ஒருசேர இன்பம் தரும் பொருள் ஏதாவது ஒன்று இருந்தால் , இதை விடப்பன் மடங்குசுவை கொடுக்கும் அந்தப் பொருளைத் தானே மக்கள் நாடுவார்கள் ?” கேட்டார் அந்தஞானி
“ஆமாம் ! அதில் என்ன சந்தேகம் பெரியவரே ?” என்று செல்வந்தர் ஒப்புக் கொண்டார்.
“இனிய பொருட்களெல்லாம் நம்மிடம் வரவேண்டும் என்று ஒருவன் நினைத்தால் அதற்கு நம்மிடத்தில் போதிய செல்வம் வேண்டும். பொருளால் உயர்ந்தவர்கள் செல்வந்தர்கள் என்றால் , மற்றவர்களை ஆணையிடும் ஆதிக்கமும் சேர்ந்து கொண்டால் அவர்கள் அரசர்கள் ஆவார்கள். அதனால் , அரசர்களை செல்வந்தர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கூறலாம் .  ராஜபோகமாகவும் வாழலாம் . தனித்தனியே கனியையும் , கரும்பையும் , கன்னியையும் தேடிச் செல்வதைவிட அரசுரிமை கிடைத்துவிட்டால் இருந்த இடத்திலிருந்தே எல்லாவகை இன்பங்களையும் பெற்று நுகரலாம் . 
    ஆனால் இப்படி அமைந்த பொருளும் , பதவியும் ஆகிய எல்லாம் புலனுக்கு உரிய இன்பத்தைத் தான் தருவதாக உள்ளது. இறைவனுடைய அருளிலே ஆழ்ந்து இன்புறும் தொண்டர் ஒருவரைக் கேட்டுப் பாருங்கள் அவர் என்ன சொல்கிறார் என்று ? உடனே யோசிக்காமல் அவருக்கு இனிமைதரும் பொருள் இன்னதென்று சொல்லிவிடுவார். அது புலனுக்குரிய இன்பம் தரும் பொருளுக்கும் மேலாக உள்ளது.  அது அறிவுக்கு இன்பம் தருவது. அதனினும் உயிருக்கு இன்பம் தரும் பொருள் என்றே சொல்லலாம் . அப்படிப்பட்ட பொருள்என்ன தெரியுமா? இறைவன் தான் .அவன் தான் உயிருக்கே இன்பம் தருபவன் ஆவான். உயிரிலே கலந்து கனியாக இனிப்பவன் ; கரும்பாக இனிப்பவன் ; அதுமட்டுமன்று அவற்றைக் காட்டிலும் மிகுதியாக இனிப்பவன் . “—  ஞானி முடிப்பதற்குள் விருந்தினர் இடைமறித்தார். 
“ஐயா! ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குங்களேன் “ 
“சொல்கிறேன் . அருணகிரிநாதரைப் பற்றி அநேகம்பேர் அறிந்திருப்பார்கள் இறைவனுடைய திருவருளை உணர்கின்றவரையில் உலகத்துப் பொருட்கள் எல்லாம் இனிமையாகத்தான் தோன்றும் . ஆனால் அவனை அறிந்து அவன் திருவருளால் இன்பம் பெற்ற பிறகோ , மற்ற பொருள்கள்யாவும் இனிப்பதில்லை என்ற கருத்தில் ஒருகந்தர் அலங்காரம் சொல்கிறார்.
“பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன் பினால் மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப்பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக்கைத்ததுவே“  ---
உரையாடல் தொடர்ந்து கொண்டே போயிற்று!

இவர்கள் உரையாடலைப் போலவே
இறைவன் உயிரிலே கலந்து கனியாகவும் ,கரும்பாகவும் , அதற்கும்மேலே இனிப்பவன் என்ற கருத்தைக் கொண்டு ஐந்தாம் திருமுறையில் ,  பதினான்காம் பதிகத்தில் அப்பர் பத்தாவது பாடலில் பாடியிருக்கிறார் .

        கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
        பனிமலர்க் குழற்பாவை நல்லாரினும்
        தனி முடி கவித்து ஆளும் அரசினும்
        இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே  -----

பொருள்:---பழங்களைக் காட்டிலும் கற்கண்டை உற்பத்தி செய்ய உதவும் கரும்பைக் காட்டிலும் , குளிர்ச்சியையுடைய மலரை அணிந்துள்ள கூந்தலையுடைய பாவையைப் போன்ற மங்கையரைக் காட்டிலும் , பிறருக்கு நிலம் பொதுவின்றித் தான் ஒருவனே அரசனாக இருந்துமுடி சூடி ஆட்சி புரியும் அரச பதவியைக் காட்டிலும் தன்னை அடைந்த அன்பர்களுக்குத் திருவிடை மருதூரிலே எழுந்தருளியிருக்கும் இறைவன் , இனிமையை உடையவனாக இருக்கிறான் .
 

Related Content