logo

|

Home >

shaiva-vina-vidai >

thiruvizhat-tattuvangal

திருவிழாத் தத்துவங்கள்

 

  1. திருவிழாவாவது யாது?

     

    ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.

     

  2. மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?

     

    மஹா - பெரிய

    உத் - உயர்வான

    ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.

     

  3. திருவிழா ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் மண் எடுப்பதும், முளை இடுவதும் எதைக் குறிக்கின்றன?

     

    மண்ணைப் பதம் பண்ணி வித்திடுவது படைத்தலைக் குறிக்கின்றது.

     

  4. கொடியேற்று எவ்வாறு நடைபெறுகிறது?

     

    நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம்.

     

  5. கொடியேற்றத்தின் தத்துவம் யாது?

     

    ( அ ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களாகி, அந்நான்கு குணங்களையும் உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.

    ( ஆ ) திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாம்.

     

  6. திருவிழாவில் பவனி வரும் பஞ்சமூர்த்திகள் யாவர்?

     

    விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர்

     

  7. மர வாகனத் தத்துவம் யாது?

     

    இதை ‘விருத்திக் கிரம சிருஷ்டி கோலம்' என்பர். மரத்தின் இலைகள், கிளைகள் முதலியன போல தத்துவங்களாகவும், எண்ணிறந்த சீவராசிகளாகவும் கடவுள் விளங்குகிறார் என்பதை இது குறிக்கின்றது. மரத்தின் வேரில் பீடமிட்டு அதில் அம்மையப்பராகக் கடவுள் விளங்குகிறார். அ•தாவது, இத்தகைய படைப்புக்கெல்லாம் வேராக இருப்பது அருள் என்ற சக்தியோடு கூடிய அறிவு என்ற சிவமே என்பதாம்.

     

  8. சூரியப் பிரபை, சந்திரப் பிரபைகளில் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?

     

    இது “விருத்திக் கிரம ஸ்திதிக் கோலம்" உலகத்திலுள்ள உயிர்கள் பிழைத்து இருப்பதற்குக் காரணம் சூரிய வெப்பம். அவ்வெப்பம் இல்லாவிடில் புசிப்பதற்கு புல்லும் கிடைக்காது. அவ்வெப்பமே கடலில் நீரையுண்டு மேகங்கள் மூலமாய் மழையைத் தருவிக்கின்றது. இன்னும் எல்லாவகையான தொழில்களுக்கும் அது மூலசக்தியாய் விளங்குகின்றது. எனவே உலகத்தைக் காப்பாற்றுவது சூரியனது தொழில். சந்திரன் இன்பத்தை தருபவன். ஆகையால் சூரியப் பிரபையிலும், சந்திரப் பிரபையிலும் இறைவனை வைத்து வணங்குதல் காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகும்.

     

  9. நந்தியின் மேலும் பூத வாகனத்தின் மேலும் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?

     

    மான், மழு, நாற்தோள், முக்கண் முதலிய அடையாளங்களையுடைய சிவனுருவப் பதவி பெற்ற விஞ்ஞான கலர் என்ற ஆன்மவர்க்கத்துள் சிறந்தவர் அதிகார நந்தி என்பவர். பூதகணங்களோ எனின், இறந்தவுடன் ஆன்மாக்களைக் கொண்டு போகும் தொழிலுடையன. இவ்விரண்டு வாகனங்களின் மேலும் இறைவன் ஏறிவருவது சங்காரத்திற்கு அறிகுறியாகும்.

     

  10. நாகப்பாம்பு வாகனம் எதை உணர்த்துகின்றது?

     

    நஞ்சு, மாணிக்கம், படமாகிய மூன்றையும் மறைத்து, வேண்டும்போது வெளிப்படுத்தும் திறமையுடையது நாகப்பாம்பு. அல்லாமலும் இது, தானும் மறைந்திருந்து வேண்டும்போது புற்றிலிருந்து வெளிவரும் தொழிலுடையது. எனவே நாகப்பாம்பு வாகனம் மறைத்தல் தொழிலாகிய ‘திரோபாவம்' என்பதற்கு அறிகுறியாகும். குண்டலி சக்தி, சுழுமுனை நாடி முதலியவற்றோடு ஒப்பிட்டும் தத்துவம் கூறுவர்.

     

  11. ரிஷப வாகனக் காட்சி சிறந்த காட்சி ஆனதேன்?

     

    சிவனடியார்களுக்கு இறைவன் ரிஷப வாகனாரூடராகவே காட்சி கொடுத்திருக்கிறான் என்று அறிகிறோம். விடை எவ்வகையான மாசும் அற்றது. சுத்த வெள்ளை நிறமுடையது. சமம் முதலிய நான்கு குணங்களைக் கால்களாக உடையது. ஆணவ மலத்தை ஒழித்து அருளொடு கூடிய அறிவைப் பணிவுடன் ஏற்று நிற்கின்றது. ஆன்மாக்கள் இங்ஙனம் ஆகும்போதுதான் இறைவன் பேரருள் சுரக்கிறான். ஆகையால் இக்காட்சி அருளல் காட்சியாயிற்று. எனவே இது சிறந்ததாம்.

     

  12. ஆறாம் திருவிழாவில் இறைவன் யானை மீது ஏறிவரும் காட்சியின் தத்துவம் என்ன?

     

    இது ‘லயக்கிரம ( ஒடுங்கும் முறை ) சிருஷ்டி கோலம்' ஆகும். மரம் படைத்தலை உணர்த்துவது போல விரிந்த பாகுபாடுகளெல்லாம் ஒடுங்கி ஒரே பிண்டமாகப் பருமனான உடம்பு கால்களையுடைய யானையைப் போல் ஒடுங்கிவிடுவது லயக்கிரமத்தில் கடைசிப் படியாகவுள்ள படைத்தலைக் குறிக்கிறது.

     

  13. கயிலாய மலை வாகனம் எதை உணர்த்துகிறது?

     

    இராவணன் ஆணவ மலம் நிறைந்த உயிர். இமயமலை பிரபஞ்சம், இராவணன் இமயமலையைத் தூக்க முயல்வது பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதற்கு உவமையாகின்றது. இராவணன் அவ்வாறு தூக்கமுடியாமல் துன்பம் அடைந்தான். அவ்வாறே ஆணவமலம் நிறைந்த உயிரும் இறுதியில் ஆணவத்தை இழந்து, கடவுளைத் தியானித்து, வரம் பெற்று, இறைவன் திருவடி சார்ந்து இன்புறுகிறது. இதனையே இவ்வாகனம் உணரச் செய்கிறது.

     

  14. நடராசர் உற்சவத்தில் அடங்கிய தத்துவங்கள் எவை?

     

    நடராசர் திருவுருவத்தில் ஐந்தொழிலும் உள்ளனவென்பது. ‘தோற்றம் துடியதனில்' என்ற பாடல் மூலம் விளங்கும். அ•தாவது, படைத்தல் உடுக்கையிலும், காத்தல் அபயக்கரத்திலும், அழித்தல் எரிதாங்கிய கையிலும், மறைத்தல் ஊன்றிய காலிலும், அருளல் தூக்கிய காலிலும் குறியீடாக உள்ளனவென்று சிவஞான சாத்திரங்கள் கூறுகின்றன. இங்ஙனமே நடராசர் உற்சவத்திலும் ஐந்தொழில்கள் உள்ளன. சபையை விட்டுப் புறப்படுதல் படைத்தல், அபிடேகம் காத்தல், சாந்தணிதலும் அலங்கார தீபாராதனையும் அழித்தல், வெள்ளைச் சாத்துபடி மறைத்தல், வீதிவலம் வந்து மட்டையடி தரிசனம் அருளல்.

     

  15. தேரின் தத்துவங்கள் யாவை?

     

    தேரின் அமைப்பு பிண்டத்திற்குச் சமானம். விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிலிருக்கும் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம், அதற்கடுத்தது மஸ்தக ஆதி ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக மத்திய ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம், அதற்கடுத்தது புருவ மத்தியஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் தத்துவக் கால்கள், முன் மூன்று துறைகள் கண்கள், பின்னவை சிகையும் இடவலக் காதுகளுமாகும். இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ், குதிரைகள் சூரிய சந்திர கலைகள், சாரதி அக்னிகலை, இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், அதையடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், அதையடுத்த அடுக்கு நாபி, அதற்கடுத்த அடுக்கு கண்டலிஸ்தானம், பத்துச் சக்கரங்களும் தச வாயுக்கள், இறைவன் இதற்குக் கர்த்தா தான் ஒருவனே என்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்ட தத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி லயப்படுத்தி, முறையே இரதக் குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவ மத்திக்கும் ஏற்றி லயப்பட்டு, சும்மாவிருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் எரித்தது ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கும் அறிகுறியாகிறது.

     

  16. வாகனாதிகளின் அறிகுறி என்ன?

     

    முதல் நாள் விருக்ஷத்தடியில் சேவை. மாயை வித்துப் போன்று விருக்ஷத்திற்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் ஒத்த சர்வ லோகங்களுக்கும் காரண பூதமாயிருந்து சர்வ சாக்ஷியாய் இருப்பதை யுணர்த்தும். இதுசிருஷ்டியென அறிக.

    2-ம் நாள். சூரிய பிரபை சந்திரப் பிரபையில் எழுந்தருளி தரிசனந்தருவது, காண்பானாகிய ஆன்மாவுக்குக் காட்டுவான்தான் என்பதை யுணர்த்த காணுங்கண்ணுக்குக் கதிரொளியாய் நின்றதை உணர்த்தும். இது திதியென அறிக.

    3-ம் நாள். பூதவாகனம்: ஆன்மாக்களுக்குக் கன்மானு கூலமான மரணாவஸ்தை விதிக்கின்றோமென சம்ஹார கோலத்தைக் காட்டுகின்றது. அன்றி, பஞ்ச பூதங்களினின்றும் விளங்குவோன் தானே என்பதையும் காட்டும்.

    4-ம் நாள். கைலாசவாகனம் : ஆன்மாக்களின் ஆணவத்தைப் போக்கி நிரதிசயானந்த ஜோதிமயபர ஆகாசமாகிய பரசிவலோகம் எனப்படும் கைலாசத்தைக் கொடுத்தருளும் பரமபதி தானே என்பதைக் காட்டும்.

    5-ம் நாள். ரிஷபவாகம் : பசுபதி தான் என்பதையும் தர்ம தேவதையை இடமாகக் கொண்டவன் என்பதையும் உணர்த்தும். அன்றி, சதுஷ்பாதம்போன்றது அந்தக்கரணம். ரிஷபம் போன்றது ஆன்மா. இதன்மேல் பதியாகிய ஈசுவரன் விளங்குகின்றான் என்று அனுக்கிரகக் கோலத்தை காட்டும்.

    6-ம் நாள். யானைவாகம் : தும்பிக்கைபோன்ற சுழிமுனை நாடியின் வழியாய்த் தன்னைத் தரிசிக்கவேண்டும் என்பதைக் காட்டும். அன்றி, பிரணவதாரகன் தான் என்பதையுங் காட்டும்.

    7-ம் நாள். நந்திவாகனம் : ஆசாரியனை அதிட்டித்து நின்று ஆன்மாக்களைப் பரிபக்குவப் படுத்துவார் என்பதைக் காட்டும்.

    8-ம் நாள். குதிரை வாகனம் : வாசிநாடியில் சுவாசாகார அஸ்வசாரியைக் காட்டும். சுவாசம் மேலும் கீழும் செல்வது வாசியாகும்.

    9-ம் நாள். இரதம் விஸ்வவிராட் சொரூபமே எட்டடுக்குத் தத்துவமாய் உச்சிக்கலசம் சோடசாந்தமெனவும், அதனடுத்த கீழடுக்கு துவாதசாந்தமெனவும், அதனடுத்தது மஸ்தக ஆதிஸ்தானமென்றும், அதனடுத்தது மஸ்தகமத்தியஸ்தானமென்றும், அதனடுத்தது மஸ்தக அந்தஸ்தான மென்றும், ஐந்தாமடுக்கு லலாட மத்தியஸ்தான மென்றும், நடுவேதாங்கும் குத்துக் கால்கள் தத்துவக்கால்க ளென்றும், முன்மூன்று துறைகள் மூன்று கண்களென்றும், பின்னவை சிகையென்றும், இடம் வலம் காதுகளென்றும், ஈஸ்வரனெழுந்தருளியிருக்கும் கேடயபீடம் முப்பாழென்றும், சூரிய சந்திர கலைகளே வாசிகளென்றும், சாரதி அக்கினிக்கலை யென்றும் (இவை நாசியென்றும் ) எட்டாமடுக்குக் கண்டஸ்தானமென்றும் அதனடுத்தது இருதயஸ்தானமென்றும் அதனடுத்தது நாபிஸ்தானமென்றும், அதனடுத்தது குண்டலிஸ்தானமென்றும் தசசக்கரங்களும் தசவாயுவென்றும் காட்டி, கர்த்தா தானொருவனே யென்றுணர்த்தி இது அண்டதத்துவ சொரூபமாய், பிண்டதத்துவசரீரமாயும் விளங்கும் எனவும் உணர்த்தி, தசவாயுச்சகக்கரத்தை நிறுத்த மனது அசைவற்று அச்சுப்பட்டடை உந்திகுண்டலியிலிருந்து கீழப்பட்டடை நாபிக்கு ஏற்றி லயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய இருதயத்துக்கு ஏற்றி லயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய கண்டஸ்தானத்துக் கேற்றி லயப்படுத்தி, பின்னடுத்த பட்டடையாகிய வாய்க்கு ஏற்றி லயப்படுத்தி, பின்முறையே இரதக்குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து இரண்டு கண் வழியாயும் நடுவழியாயும் மேல் நோக்கிஆறாம் அடுக்காகிய புருவமத்தியத்திற்கேற்றி லலாடம் முதல் துவாதசந்தம்வரை ஏற்றி லயப்படுத்தி, சும்மாயிருந்த படியிருக்கும் நித்தியசுகியாயிருந்திடல் வேண்டுமென்று லயக்கிரம கோலத்தைக் காட்டுகின்றது. அன்றிப் புராணவாயிலாகத் திரிபுரசம்ஹார கோலத்தையுங் காட்டும்.

    10-ம் நாள். பிக்ஷாடனமூர்த்தி : ஆவரணம் ஏழையு மொழித்துவிட திரோபவ கோலத்தைக் காட்டும்.

    11-ம் நாள். நடராஜகோலம் : அனுக்கிரகத்தைக் காட்டும். இவ்வுத்ஸவங்கள் தத்வார்த்தக்காட்சிகளாகியும் பஞ்சகிருத்திய ரகசிய தரிசனங்களாகவும் விளங்குமென்பது காமிகாதி ஆகமங்களாலும் சிவத்விஜர்களாலும் அறிந்திடுக.

     

  17. உத்ஸவமென்பதன் தாற்பரியமென்ன?

     

    திருஷ்டிமார்க்கத்தைக் குறிப்பதென்பது பொருள். இது பஞ்சகிருத்தியம் நடைபெறுவதை சூசிப்பிக்கும்.

     

  18. உத்ஸவமெத்தனை விதம்?

     

    ஆறுவிதம்: அவை பைத்ருகம், சௌக்கியம், ஸ்ரீகரம், பார்த்திவம், சாத்வீகம், சைவம் என அறிக.

     

  19. அவற்றினை முறையே விளக்குக?

     

    முறையே பன்னிரண்டு, ஒன்பது, ஏழு, ஐந்து, மூன்று நாட்களும் ஒரு நாளும் கொண்டாடுந் திருவிழாக்கள்.

     

  20. இன்னும் வேறுவிதங்க ளுளவோ?

     

    பதினொனறும், பதின்மூன்றும், பதினைந்தும், பதினேழும், இருபத்தொன்றும் மேற்பட்டதுமான நாட்கள் உத்ஸவம் செய்வதாம். அவை முறையே புக்தி, கௌமாரம், சாயுத்ரம், சாந்தரம், சௌரம், சாவரம் எனப் பெயர்பெறும்.

     

  21. இவ்வுத்ஸவங்களுக்குப் பலன் யாது?

     

    ஒருநாள் - ராஜவிர்த்தி, மூன்று - சிவத்தைச்சந்தோஷிப்பித்தல், ஐந்து - போகம், ஏழு - சிவப்பிரியம், ஒன்பது - சாந்திகம், பதினொன்று - புஷ்டி, பன்னிரண்டு - முத்தி, பதின்மூன்று - சர்வசித்தி, பதினைந்து - ஜனங்களுக்குச் சுகம், பதினேழு - புண்ணியப்பிரதம், இருபத்தொன்று - லோகவிரக்ஷை.

     

  22. உத்ஸவங்கள் செய்யாவிடின் குறைவென்ன?

     

    கிராமத்துக்கும் ஜனங்களுக்கும் க்ஷேங்கிடையாது.

     

  23. அயனாதி புண்ணியகாலங்களில் நடத்தும் உத்ஸவங்களின் பலனென்ன?

     

    அயனோத்ஸவம் - புண்ணியபலம், மாதோத்ஸவம் - இராஜதோஷநிவர்த்தி, அமாவாசை - தாரபத்திராதி இஷ்டகாமியசித்தி, பௌர்ணமி - சகலபாப நிவாரணம், கிர்த்திகை - சௌக்கியம், திருவாதிரை - சகலசம்பத்து, பூசம் - புஷ்டி, மகம் - சுஜனசிரேஷ்டத்துவம், பூரம்- சௌபாக்கியம், உத்திரம் - சீலம், சித்திரை - ரூபலாவண்யமனைவி, விசாகம் - விசேஷகாமபலன், மூலம் - ஆரோக்கியம், பரணி - ஆயுள்விருத்தி, திருவோணம் - சுகபோகங்கள் பலனாம். இவ்வாறு ஒவ்வொரு நக்ஷத்திரங்களுக்குள்ள பலனைக் காமிகாதி ஆகமங்களிற் காண்க.

     

  24. மலை, வனம், ஆறு, குளமுதலிய இடங்களுக்குச் செல்லும் உத்ஸவங்களின் பலனென்ன?

     

    அவ்வவ்விடங்களிலுள்ள நால்வகையோனி எழுவகைத் தோற்ற பேதங்களுக்குப் பலப்பிராப்தியுண்டாகும்.

     

  25. வாரோத்ஸவ பலன்களென்ன?

     

    ஞாயிறு - ருத்ரபதவி, திங்கள் - சௌக்கியம், செவ்வாய் - கிராமலாபம், புதன் - சர்வகாமியசித்தி, வியாழன் - சாஸ்திராதி வித்தை, வெள்ளி - விசேஷ செல்வம், சனி - அபமிர்த்தியுநாசம்.

     

  26. உத்ஸவ காலங்களிலே ஆலயங்களில் நடக்கும் கிரியைக ளெவை?

     

    விருஷயாகம், துவஜாரோகணம், ப்ரகத்தாளம், அங்குரம், யாகசாலை, அஸ்த்ரயாகம், பலிதானம், யானக்கிரமம், பரிவேஷம், நீராஜனம், கௌதுகம், தீர்த்தசங்கிரகணம், சூர்ணோத்ஸவம், தீர்த்தம், அவரோகணம், ஸ்நபனம், விவாகம், பக்தோத்ஸவம் என்னும் அஷ்டாதசக் கிரியையாம்.

     

  27. இவை பஞ்சகிருத்தியங்களை யெவ்வாறுணர்த்தும்?

     

    சிருஷ்டி அங்குரார்ப்பணம் விவாகம், துவஜாரோகணம், ரக்ஷாபந்தன மிவைகளாலும், திதி வாகனாதி யுத்ஸவம், ஓமம் பலியிவற்றாலும், சம்ஹாரம் சூர்ணோத்ஸவம், ரதாரோகணம், கிருஷ்ணகந்தோத்ஸவமிவற்றாலும் திரோபவம் - மௌனவுத்ஸவத்தாலும், அனுக்கிரகம் - சக்தியூடலாலும், உணர்த்தப்படுவதறிக. அன்றி சிருஷ்டி - அபிஷேகத்தாலும் திதி கௌதக பந்தனத்தாலும், சம்ஹாரம் - அகருதூபத்தாலும், திரோபவம் - கற்பூரதீபத்தாலும், அனுக்கிரகம் - கற்பூர அடுக்குத் தீபத்தாலும் சூசிப்பிக்கப்படும்.

     

  28. மகோத்ஸவ தினங்கள் பத்தினாலும் உணர்த்தப்படுவது யாது?

     

    முதல்நாள் - தூலநீக்கத்தையும், இரண்டாம்நாள் - ஸ்தூல சூக்குமநீக்கத்தையும், மூன்றாம்நாள் - மூவினை முக்குணம் முக்குற்றம் முப்பற்று முப்பிறப்பு நீக்கத்தையும், நான்காம்நாள் நாற்கரணம் நால்வகைத்தோற்ற நீக்கத்தையும், ஐந்தாம்நாள் ஐம்பொறி ஐந்தவத்தை ஐம்மல நீக்கத்தையும், ஆறாம்நாள் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரிய மென்னும் ஆறுகுற்ற நீக்கத்தையும், ஏழாம்நாள் எழுவகைப்பிறப்பு நீக்கத்தையும், எட்டாம்நாள் எண்குண விளக்கத்தையும், ஒன்பதாம் நாள் நவபேத விளக்கத்தையும், பத்தாம்நாள் பரானந்தக் கடலிற் படிவதையும் உணர்த்தும்.

     

  29. உத்ஸவமூர்த்திக்குச் செய்யுந் திருவிழா சிவலிங்க மூர்த்திக்கு எவ்வாறு சேரும்?

     

    யோகம், போகம், வீரம் எனச்சக்திகள் மூன்று; அவற்றில் லிங்கபீடம் யோகசக்தி, விஸ்வயோநி போகசக்தி, உத்ஸவமூர்த்தி வீரசக்தி. ஆதலால் வீரசக்திக்கு உத்ஸவம் கொண்டாடுதலறிக.

     

  30. சிவாலயங்களில் கொண்டாடப்படும் உத்ஸவங்களெவை?

     

    நித்தியோத்ஸவம், வாரோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாதோத்ஸவம், அயனோத்ஸவம், வருஷோத்ஸவம் என்பவைகளாம்.

     

  31. நித்தியோத்ஸவ மென்றால் யாது?

     

    தினந்தோறும் உமாசகிதராய்ச் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதாம்.

     

  32. வாரோத்ஸவ மென்றால் யாது?

     

    சுக்கிரவாரந்தோறும் உமையை எழுந்தருளச் செய்வதாம்.

     

  33. பக்ஷோத்ஸவமென்றால் யாது?

     

    பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ தினங்களில் கொண்டாடப்படும் உத்ஸவம்.

     

  34. மாதோத்ஸவ மென்றால் யாது?

     

    மாதப்பிரவேசத்தன்று கொண்டாடப்படும் உத்ஸவமாம்.

     

  35. அயனோத்ஸவமென்றால் யாது?

     

    உத்தராயண தக்ஷிணாயன புண்ணிய காலங்களில கொண்டாடப்படும் உத்ஸவமாம்.

     

  36. வருஷோத்ஸவ மென்றால் யாவை?

     

    பிரமோத்ஸவம், தெப்போத்ஸவம், சைத்ரோத்ஸவம், வசந்தோத்ஸவம் முதலிய உத்ஸவங்க ளொவ்வொன்று பப்பத்துநாட்களில் கொண்டாடப்படும் உத்ஸவங்களாம்.

     

  37. ஆலயங்களிலே சிவலிங்கப்பெருமானுக்கெததனை காலங்களில் அபிஷேகாதி வைபவங்கள் நடத்தப்படுகின்றது?

     

    திருவனந்தல், காலைசந்தி, உச்சிக்காலம், சாயரக்ஷை, இராக்காலம், அர்த்தசாமம் ஆகிய ஆறுகாலங்களிலும், திருவனந்தல் சாயரக்ஷை யொழிந்து நாலுகாலங்களிலும் அவற்றிற்குக் குறைந்த காலங்களிலும் வரவுக்கேற்ப அபிஷேகாதி வைபவங்கள் நடத்தப்படுகின்றன.

     

  38. சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வருஷத்தில் ஆறு அபிஷேகங்கள் நடத்துவதற்குக் காரணமென்ன?

     

    மனிதர்களுக் கொருவருஷங்கொண்டது தேவர்களுக் கொருநாளாகவே, ஸ்ரீ சிற்சபேசன் தேவர்கள் தேவனென்பது விளங்க பிராதஹ்காலத்துக்குச் சமமாகிய மாழ்கழி மாதத்துச் சிவரூபமாகிய திருவாதிரையன்று அபிஷேகமும் தரிசனங்கொடுத்தலும், காலைசந்திக்குச் சமமாக மாசிமாதம் பூர்வ பக்ஷசதுர்த்தசியிலும், உச்சிக்காலத்துக்குச் சமமாக சித்திரை திருவோணத்திலும், சாயரக்ஷை காலத்துக்குச் சமமாக ஆனிமாதத்தில் உத்திரத்திலும், இராக்காலத்துக்குச் சமமாக ஆவணி மாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியிலும், அர்த்தசாமத்துக்குச் சமமாக புரட்டாசிமாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியிலும், அபிஷேகமும் நடத்தலறிக.

     

  39. அவ்வவிஷேகங்கள் நக்ஷத்திரம் மூன்றிலும் சிறந்ததற்குக் காரணமென்ன?

     

    திருவாதிரை சிவநக்ஷத்திர மாதலாலுந் திருவோணம் அச்சுத நக்ஷத்திரமாதலாலும் உத்திரம் சூரிய நக்ஷத்திரமாதலாலும் சிறந்தமை காண்க.

     

  40. சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் யாவை?

     

    ஸ்கந்த மஹா புராணம் சிவபெருமானுக்கு உகந்ததான எட்டு பெருவிரதங்களைக் குறித்துள்ளது. அவையாவன: 1. வைகாசி மாத வ்ருஷப விரதம், 2. புரட்தாசி-ஐப்பசி மாத 21 நாள் கேதார விரதம், 3. கார்த்திகை மாத உமாமஹேஸ்வர விரதம், 4. சோமவார விரதம் 5. மார்கழி மாதத் திருவாதிரை விரதம், 6. தை மாதச் சூல விரதம், 7. மாசி மாத மஹா சிவராத்திரி, 8. பங்குனி மாத கல்யாண விரதம்.

     

  41. பிரதோஷ விரதத்தின் சிறப்பு யாது?

     

    தேவாசுரர்களைக் காக்க சிவபெருமான் கொடிய ஆலால விஷம் உண்டார். அதன் பின் தேவர்கள் அமுதம் உண்டனர். ஆனால் இறைவன் செய்த நன்மையை மறந்தனர். அந்தப் பெருங்குற்றம் நீங்க சிவபெருமானைத் துதித்தனர். சிவபெருமான் அவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு திருநந்திதேவரின் கொம்புகளுக்கு இடையே களி நடனம் செய்த காலமே பிரதோஷ காலமாகும்.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்