logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்

திருச்சிற்றம்பலம்

        விநாயகக் கடவுள்

சீர்பூத்த செம்பூ தரத்தில் பசுங்கொண்டல்
    சேர்புமிளிர்கின்றது ஏய்ப்பத்
    தெளிவுற உருக்குஅரக் கனையதிரு மேனியில்
    செறியக் கடாங் கவிழ்கும்
வார்பூத்த சிறுகண் பெருங்களிற் றுரிமூடும்
    வள்ளல் பிரானளித்த
    மழைமதத் தழைசெவிப் புழைநெடும் கைக்கருணை
    மழகளிற்றைத் துதிப்பாம்
ஏர்பூத்த தவளப் புதுப்பொடி அணிந்தென
    இலங்கிப் பனிப்படலையான்
    இளநிலவு பொழிவெள்ளி வெற்பென இமைத்திட்ட
    இமயா சலத்தில் உதியாக்
கார்பூத்த திருமுல்லை மாநகர் அமர்ந்து ஒரு
    கலாப மயில் வீற்றிருந்த
    காட்சிதரு வடிவுடைப் பிடிநடைக் கொடியிடைக்
    கவுரி சொல்தமிழ் தழையவே.   (1)

        1.  காப்புப் பருவம்

        திருமால்

நீர்கொண்ட சடிலத்தர் வேதன் படைத்தற்கு
    நிருமித்த வைப்பு இது என்ன
    நிலவுமணி மாடமிசை நீலக் கலாபமயில்
    நெடிது நின்று ஆடி அமர்தல்
கூர்கொண்ட குலிசிஒரு முகில் ஏறி ஆயிரம்
    கோவும் களிப்ப வீதி
    குலவும் எழில் காண்தனிகர முல்லைவளர்
    கொடியிடைக் கொம்பினைத் தனிபுரக்க
தார்கொண்ட திருமகளை மருமத்து இருத்தியவள்
    தனை ஒருவர் அறியாவணம்
    தண் நறவு கொப்பளிக்கும் துழாய்த் தொடை எனும்
    தழைபசும் திரையின் மறையாச்
சீர்கொண்டசெங்கேழ்க் கவுத்துவச் சுடர்மணித்
    திருவிளக்கிட்டு வைத்து
    தெண்திரைமிசைப் பள்ளிகொண்டு உலகளிக்கும் ஒரு
    திகிரிப் பசும் கொண்டலே!   (2)

        மாசிலாமணியீசர்
            (வேறு)

குருமணித்திரளை அலைகொழித்து எறியும் நீள் வேலை யூடுறு நள்ளிருட்டு ஆக்கையர்
    குலமறுத்து அமரர் சிறைவிடுத்து அருள் செய்வான் ஆதிநாளையில் உள்ளம் வைத்து ஏத்துபு
    குகன் அருச்சனைசெய் திருவடிக் கமல மூவாத சோதியை ஐய, முன்காத்தருள்
    குசலவர்க்கு அரிய பெரிய முத்திதரு தேவாதி தேவனை வேள் அளிப்பார்த்திபர்

திருமகட்கு இறைவர், பிரமர், அர்ச்சனை செய் நானாசொரூபனை மெய்யனைச் சீர்த்திகழ்
    தினகரக்கடவுள் வழிபடுத்த மனை மாநாவலூர்வரு தெள்ளுசொல் பாட்டினர்
    'திருவும் மெய்ப்பொருளும்' எனஎடுத்து உரைசெய் பாமாலை சூடிய ஐயனைப் பால்பொலி
    திருநதிக்குவடகரை முலைப்பதியுள் வாழ்மாசிலாமணி வள்ளலைப் போற்றுதும்

ஒருமதிக்குடையும் இருள் மதக்களிறும் ஓர்கீரவாசியும் மைய் ஒலித்து ஆர்த்து எழு
    முவரளக்கர் நெடு முரசமிக்க எழில் மானார் பதாதியும் மல்லினில் சூழ்ச்சியின்
    ஒழிவறப்பொருது வருகயல்கொடியும் மாலானதேர் கொளும் வல்லமைக் கீர்த்தியும்
    உடையகொற்றமுறும் ஒருவன் நெக்குருக ஈரேழுலோகமும் மையலைப் பூட்டிடும்

மருமலர்க்கணையும் வருகருப்பு விலும் மாறாது நீடிய கையினில் தூக்கிய
    மதன் உருக்கெடவும் இரதிகட்கு இனிய மாரூபம் ஆகிட மையினைத் தீட்டிய
    வளர்கடைக்கண் அருள் சிரிது அளித்தருள்செய் தாயான ஏர்பெறு தையலைச் சேட்டியல்
    வடிவினுக்கு இணை இல் கொடியிடைப்பிடியை வாடாத கோமள வல்லியைக் காக்கவே.   ( 3)


            முல்லை விநாயகர்
                (வேறு)

வெய்யப ணாடவி அரவப் பதக்கர்பொன்
    வில்லிடை ஓர் உலவையினைப் பிடித்து முன்
மொய்யுறு பாரத கதையைப் பொறித்தருள்
    முல்லை விநாயகன் அடியைப் பழிச்சுது
மையுற நீடிய துவசக் கரத்தினின்
    மல்இமையோர் தரு மலரைப் பறித்து அணி
செய் எயில் சூழ் திருமுலையில் செழிப்புறு
    தெள் எழில் கூர் கொடியிடையைப் புரக்கவே.   (4)

        முருகவேள்
        (வேறு)

தக்கநல் கடம்வரு தாபதற் கோத்துறு
    சத்தியப் பொருள்பகர் வாயனைத் தாக்குறு
கொக்கினைச் சுடர்வடி வேலினில் சாய்த்து அருள்
    குக்கிடக் கொடியுடை நீரனைப் போற்றுதும்;
முக்கனிக் கொழுநறவார் வயல் தேக்கிட
    மொய்த்தடைத் தெழுசெநெல் வான்நதிப் பால்செல
அக்குலச் சுரபிகளார் முலைப் பார்ப்பதி
    அற்புதக் கொடியிடையாள் தனைக் காக்கவே.   (5)

        பிரமதேவர்
        (வேறு)

சந்தம்உறு சுருதிப் பெருங்கடல் தனாது நாத்தட மத்தினால் கடைந்த
    தடைபடாப் பொருளமுத நெஞ்சக் கடத்தினில் தான்அடைத் துண்டுதேக்கிச்
சிந்துரச் சூட்டுவெள் அன்னம் படைத்து ஏறு சேவடிக்குரவன் நறையார்
    சீதளத் தோட்டுடைப் பதுமாதனத்தில் உறைதிசைமுகக் கடவுள் காக்க
கந்தமலர் கற்பகக் காட்டுடைப் புத்தேள் கடாவும் பயோதரம் எனக்
    கார்அகில் புகையூட்டு கோதையைத் தோகைமயில் காணுபு களித்தாடவே
கொந்தலர் அலங்கல் குழல்கற்றை அரமகளிர் கூட்டத்தொடு இம்பர் மடவார்
    கூடிவிளையாடும் மணிமாடம் மலிமுல்லைவாழ் கொடியிடை மடப்பிடியையே.   (6)

        தேவேந்திரன்
        (வேறு)

வடிக்கும் நறும்பால் ஒருகோவும், மதிக்கும் இரண்டு மாநிதியும்,
    வழிமும்மதத்தில், நான்குபிறை மருப்புப் பொருப்பும், ஐந்தருவும்,
இடிக்கும் ஆறு, விண்கொள் புயல் ஏழும், கதிர் வச்சிரப் படையும்,
    எய்திக் கனக நாடு அளிக்கும் எண் ஆயிரம் கண்ணவன் காக்க!
நொடிக்கும் அளவில் புரம் மூன்றும் நுதிவெம் கணையால் பொடிபடுத்த
    நுந்தாச் சுடர் முச்சுடரின் இருநோக்கும் குளிரப் பூக்கள் மதுக்
குடிக்கும் களிவண்டு அனைய தடம் குடங்கைக்கு அடங்கா விழிபரப்பும்
    கூந்தல் பிடியை அடியவர்கள் குடிவாழ் முல்லைக்கொடியே!   (7)

            திருமகள்
            (வேறு)

மாகத்தின் மீதுலவு மேகக் குழந்தை பெருவயிறு குளிரப் பயம் உணும்
    வாரிஒரு தாளினின்றிருபோதும் ஒருபோதும் மாதவம் இழைக்க உதியா
நாகப்படம் கிழிய வாடிக் கடங்க விழுநாகம் புரந்து இலகுபொன்
    ஆகத்தை அணிநல்ல நாகத்தின் ஆகம்வளர் நாயகியை அஞ்சலிப்போம்
மோகப் பெரும்சலதி மூழ்கித் துயர்த்திரை கண்மோதக் கடந்து அலமறும்
    மூடக்குரம்பையுறு வாழ்வைக் கடந்து உயிர்கள் முத்திக்கரைக்கண் ஏறப்
பூகத்தடம் பொழில் உடுத்த திருமுல்லையில் புத்தேள் இடத்தினை மரீஇப்
    புவனங்கள் யாவையும் உயிர்த்த கொடியிடை இளம் பூவையைக் காக்க என்றே    (8)


            கலைமகள்

வரிக்கும் கலைக்கடல் உலாவிப்படைக்கும் ஒரு மகிணன் திருத்தால் உறீஇ
    மதுரம் பழுத்து ஒழுகும் இசை வீணை புத்தக மலர்க் குடங்கைக்குள் ஏந்தி,
விரிக்கும் வரிச்சிறைத்தும்பி மதுஉண்டு முரல் வெண்தாமரைத் தளியின்மேல்
    வீற்றிருக்கின்ற ஒருவெள் ஓமத்தின் அடி மெய்யன்புறத் துதிப்பாம்
நெரிக்கும் கரும்பு கண்வெடித்து உகுத்திட்ட வெண்நித்தில நிலா எறிப்ப
    நிகழும் இருபொழுதும் மலர்குமுதத் தடங்கள் தொறும் நிலவும் பொலம்சூட்டு அனம்
தெரிக்கும் தமிழ்ச்சுவையொடு அமுதொழுகும் பாலிநீர்த் தீஞ்சுவையும்  மாந்திவளரும்
    திருமுல்லைவாயில் உறை சிற்பரக் கொடியிடைத் திருவைப் புரக்க என்றே   (9)

            சத்த மாதர்கள்
            (வேறு)

வெண் நகை இலவு ஒளிப் பூநிறத் தோட்டமும்
    மின்நிகரிடு கிடைப்பால் குறைக் கோட்டமும்
    விண்னுறு கருமுகிற்கேய் குழல் காட்டையும்
    விம்மிய மணிவடத்தார் முலைக் கோட்டையும்
கண் எனும் அழல்விழிக் கார்உருக் கூற்றமும்
    கன்னலை உறழும்அத் தோளிணைத் தோற்றமும்
    கண்ணிடும் அடியரைக் காவலில் காத்திடும்
    கன்னியர் எழுவர் பொன்தாள் முடிச்சூட்டுதும்
தண்ணற விரிவிரைத் தாமரைச் சேக்கையில்
    தன்மையில் அமரு நற்பால்நிறப் பேட்டனம்
    தன்நிழல் அறல்உறத் தான் அதைப் பார்த்து, இது
    தன்மமில் கனவுஎனச் சேவலைச் சீத்திடும்
பண்ணையின் வளமுலைத் தேவியைத் தேத்தெனப்
    பண்அளி முரல்மணத் தாதுஇதழ்த் தேத்தொடைப்
    பண்ணவர் முறைமையில் காதலின் தோத்திரம்
    பண்ணிடு கொடியிடைப் பாவையைக் காக்கவே.   (10)


            முப்பத்து மூவர்
            (வேறு)

நரைப்புது மலர்த்தவிசு அயற்குஒரு நடுக்கமது
    நட்டமாக நகத்தில் கொய்து ஆள்பவர்
    நகைப்பொடு பழித்ததொரு தக்கன் நவிலிட்டிதனை
    நட்பு இலாது சிதைத்திட்ட சேவகர்
    நடித்தருள் பதத்தினில் எதிர்த்திடும் படைச்சமன்
    நடுக்கம் மேவ உதைத்திட்ட நீதியர்
    நகத்தினை எடுத்தவன் முடித்தலை பதைத்து அலற
    நச்சுதாளின் எதிர்த்திட்ட காரணர்,

இரைப்பொழுது உளத்தினில் இணைப்பதம் நினைப்பவரை
    எட்டிடா இரு பத்மத்தின் மூடுவர்
    இடிக்குரல் மதக்களிறு உரித்த கவசத்து இறைவர்
    இச்சை கூர, வனப்புற்ற பூதரி
    எமக்கு மதுரித்திட அருள்கடை விழிக்கருணை
    இட்டமாக மடுப்பித்த பூரணி
    இலைக்கதிர் அயில்படை எடுத்து வருகைத் தலைவன்
    எச்சமாக அளித்திட்ட காரிகை

முறைப்படி வகுத்த புவனத்தினை முழக்கவும்ஓர்
    முட்டி வாது செழிப்பித்த மாறுகள்
    முருக்கு பரிதிப் படை தரித்த கையரிக்கு இளைய
    முத்துவாள் நகை ஒப்பற்ற மானினி
    முளைத்த பிறையைப் பொருநுதல் துடிஇடைக்கமல
    மொக்குநேர் முலை மட்டுற்ற கோதையர்
    முருக்கு அலர் இதழ்க் கருவிடக்கண்விணிடத் தையலர்
    முற்று மேவல் செயப்பெற்ற கோகில

மறைப்பொருள் சிறைக்கிளி உரைத்திட விருப்பின்மனம்
    வைத்த பூவை தலைச்சுற்றி ஆடியில்
    வடித்திடு மதுப்புனல் குடித்திடு களிப்பினொடு
    மத்த மேவு சுருப்புக் குழாமுரல்
    வரப்பொழில் முலைப்பதி மடக்கொடி யிடைக்கவுரி
    மட்டில் பேரழகுக்கு உற்ற காவலர்
    மருத்துவர் உருத்திரர் வசுக்கதிர் எனப்பகரும்
    மத்த வானவர் முப்பத்து மூவரே.   (11)

        2.  செங்கீரைப் பருவம்

வண்டாடு செங்கமல முகமண்டலத்து அழகு மரகத நிறத்தின் வடிவு
    மதுர ஆனந்தச் செழுந்தேன் வழிந்து ஒழுகுமணி வாயினிலவெறிப்பும்
விண்டாடு சிலை நுதல் கட்டியும் பொட்டழகும் வெண்ணித்திலப் பட்டமும்
    விள்அரிய பல்ஆயிரம் கோடி அண்டமும் விரித்த சிற்றாலின் இலையுள்
கண்டாடு மொழியுடைப் புனல் மங்கை செஞ்சடைக் காட்டூடு மெய் விளர்ப்பக்
    கருணைமழை பொழி கடைக்கண்கள் ஒருமூன்றும் களித்திடக் கண்டு கண்டு
செண்டாடும் விடை அண்ணல் கொண்டாடும் மடமஞ்ஞை செங்கீரை ஆடி அருளே!
    திருமுல்லை மாநகர் அமர்ந்த கொடியிடையம்மை செங்கீரை ஆடி அருளே!   (12)

பூந்தொண்டை மண்டலம் விளங்கப் பெரும்புகழ் பொலிந்திடப் பூண்திகள் தெறும்
    பொங்கொளிப் பரிதியும் திங்கள் வெண்குடையும் பொறுத்து அரசளிக்கும் நெறியே
ஆந்தொண்டைமான் கடவு பொன் ஓடை ஆம்பலை அழுத்தி முல்லைக் கொடியினால்
    அலமரக்கட்டிட்டு அவன்பெற வெளிப்பட்டு அளப்பில் இன்பத்தை அருளி
ஏந்தொண்டை அலர்கண்மடல் எழுதும் மதன் ஆகத்தை எரிவிழிக் கூட்டி அருளும்
    எழில்முல்லை நாயகர் எனும் தெவிட்டாக்கனி இடப்பாலினைக் கவர்ந்த
தீந்தொண்டை அழகுதரு செவ்வாய்ப் பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே!
    திருமுல்லை மாநகர் அமர்ந்த கொடியிடையம்மை செங்கீரை ஆடி அருளே!   (13)

கம்பக் கடாசலப் பிள்ளையைத் தந்து வடகயிலைப் பொருப்பில் ஒருநாள்
    கருடப் பதாகை விட்டுணு பெரும் பாந்தள் கடும் சாப மடிபட ஒரீஇ
வெம்பிக் கொடும்பிறவி வெள்ளம் திளைத்து உழலும் வெற்றுயிர்களைப் பற்றியே
    வெவ்வினைப் பொறியகிபடம் விரித்து ஆடாமல் விண்ணுறும் எனத்துரந்தே
அம்பொன்பண அடவிச் சேடன் முடிகொட்புற ஒர்ஐம்படப் பாம்பும் உருக
    அருமறைகளின்னும் இவ்வண்ணம் என்று உணராத அற்புதப் பொன்பொதுவினில்
செம்பொன் செழுங்கொண்டல் ஆடக் களிக்கும் மயில் செங்கீரை ஆடி அருளே!
    திருமுல்லை மாநகர் அமர்ந்த கொடியிடையம்மை செங்கீரை ஆடி அருளே!   (14)

வாங்கு செஞ்சிலை நுதல் குறுவெயர் பொடிப்ப இரு மலர் அடி துடிப்ப நின்று
    வண்டு உறாக் கற்பகப் பாரிசாதத்தின் மலர்மாரி காலப் பறித்துத்
தூங்கு கைக்கரி மருப்பு இணைமுலை அரம்பையர்கள் தூய்ப் பணிந்து ஏவல் செய்ய
    தூதுளங்கனிவாய் மலர்ந்து இனி தழைத்துநல் சூடகச் செங்கை மலராள்
ஏங்குமணி நூபுரம் இரங்குமணிமேகலை இலங்குசெஞ்சீறடியினும்
    இட்டிடையினும் திருத்து அயிராணி பன்முறை எடுத்து அணைத்து உச்சி மோந்த
தேங்குழல் பிடியை மருமகள் எனப் பெற்றபிடி செங்கீரை ஆடி அருளே!
    திருமுல்லை மாநகர் அமர்ந்த கொடியிடையம்மை செங்கீரை ஆடி அருளே!   (15)

இலக்கான பகிரண்டமுற்றும் செறுக்கள் செய்து எண்ணில் உயிர் வர்க்கம் முழுதும்
    ஈர்இரு கருப்பத்தில் வித்திட்டு இருத்தியவை எழிலுற முளைத்த பின்னர்
மலக்கோடை வெப்பத்தில் வாடாது அருட்கருணை மடை திறந்து அமுது ஒழுக்கி
    வல்வினைக் களைகட்டு முட்டுறுபுல் ஆதி எனும் மாக்களை அடாது அடக்கிச்
சலிப்பாறும் வண்ணம் தழைத்து ஓங்க நீங்காது தாங்கி முன்னீடு பெற்றுத்
    தாக்கற்ற சிவபோக முதிரவிளைவிக்கும் தனித்தெய்வமாகி நின்ற
சிலைக்கோல நறுநுதல் பச்சிளம் பெண்ணரசி செங்கீரை ஆடி அருளே !
    திருமுல்லை மாநகர் அமர்ந்த கொடியிடை யம்மை செங்கீரை ஆடி அருளே!   (16)

            (வேறு)

பொன் அடி தங்கிய கிண்கிணியோடு புலம்பு சிலம்பு ஆடப்
    பூரண முகமதியூடு எழு கிரணப்புதுநகை நிலவு ஆட
மின் ஒளிர் காதணி குழையொடு கொப்பு விளங்கி விரிந்தாட
    வெண்தரளச்சிறு முச்சியும் உச்சிமீதின் அசைந்தாடக்
கன்னலின் மெச்சிய பச்சிளமேனிக் கதிர் ஒளி விண்டாடக்
    கமலம் மலர்ந்த விழிக்கடை தோறும் கருணை குதித்தாட
வன்னமலர்த்தட முல்லை இளங்கிளி ஆடுக செங்கீரை!
    அடியவருக்கு அருள் கொடியிடை யம்பிகை ஆடுக செங்கீரை!    (17)

வெள்ளிய முத்தினை ஒத்து முகத்தினில் வேர்வு முதித்தாட
    வெயில் உமிழ் சுட்டியு மணிகிளர்பட்டமும்மின்னுதல் மேலாடத்
தெள்ஒளி வளர்குரு மணிவயிரச் சரிசெங்கையில் மீதாடத்
    தெய்வ மணம் கமழ் ஆலிலையைப் பொருதிரு உதரமும் ஆடக்
கள்ளவினைப் பசுபாசம் அறுத்தருள் கண்இணை வண்டாட
    கட்டழகுற்ற கரும்புருவச் சிலைகதிர்விட மணிமார்பி
னள் அழகாடிட முல்லை இளங்கிளி ஆடுக செங்கீரை!
    அடியவருக்கு அருள் கொடியிடை யம்பிகை ஆடுக செங்கீரை!    (18)

வண்துகில் ஆடை வில்வீசி நுடங்கு மருங்கு துவண்டாட
    வாயமுதூறி வழிந்து நனைந்த வள்காஞ்சி மலிந்தாடக்
கண்டவர் உள்ளம் உடைந்து நெகிழ்ந்து கனிந்து களிப்பாடக்
    காமர் ததும்பு குதம்பையினோடு இருகாதும் அசைந்தாடத்
தண்தரளம் தரு முண்டக வம்பகம் தண்துளி கொள்ளாமே
    தாவடி போல் அவிர் தொட்டில் உதைத்து இருதாள்களும் நோவாமே
அண்டமுடன் பகிரண்டமும் ஆடிட ஆடுக செங்கீரை!
    அடியவருக்கு அருள் கொடியிடை யம்பிகை ஆடுக செங்கீரை!   (19)

            (வேறு)

தந்தெலும் இட்டிடையாள் இரதிச் சதிதன்னோ டிக்காகுந்
    தனித்தனுவைக் கொடுஅலர்க் கணைபெய்து சமர்க்கோலத்தோடும்
வந்துஎதிர் அங்கசனைத்தெறும் வள்ளல் மகிழ்ந்தாரும் தேனென்
    மனத்துறு மையல் அகற்றிடவந்த மருந்தே! பைந்தோகாய்!
நிந்தை இழுக்கறுமால் அயன் உம்பர்கள் நின்பால் இன்பாரும்
    நிலைப்புறு செல்வம் அளித்தருள்க என்று நெருங்கா நின்று ஓதும்
செந்தளிரைப் பொருசீறடி அங்கனை செங்கோ செங்கீரை!
    செழித்திடும் முல்லை தழைத்த பசுங்கொடி செங்கோ செங்கீரை!    (20)

பங்க மலத்துயர் போய் அகலும்படி பண்போடு அன்பாகிப்
    பழிச்சுறு செய்ய மலர்ப்பதம் வந்து பணிந்தே நின்றாரை
அம்கமலத்து அயன் நாரணனும் தொழ அஞ்சேல் என்று ஓதி
    அருட்பெரு வெள்ளம் அழுத்திடுகின்ற அணங்கே நந்தாத
சங்கமலப்படை சார்பணையூடு தவழ்ந்தேறும் பாலித்
    தனித்துறை மல்கு மனப்பெடை போலுறு தத்தாய் முத்தாரும்
திங்கள் முகக் கலியாண சவுந்தரி செங்கோ செங்கீரை!
    செழித்திடும் முல்லை தழைத்த பசுங்கொடி செங்கோ செங்கீரை!    (21)

            3. தாலப் பருவம்

கள்ளக் கருங்கண் கடைசியர்கள் களைகட்டிட நீர் கழனிவரக்
    கண்டம் கவர்கானடைக் குடைந்த கவினார் சூட்டுச் சிறையனங்கள்
துள்ளித் தழலில் தோய்வதுபோல் சுடர்க்கோகனகத்தலர் ஒடுங்கித்
    துருவி இவையும் களைவர் எனத் துணிந்தங்கு இரியத் துன்னியவர்
முள்ளில் பொலிந்த நாளமுறு முளரி அரிந்து நாசியிடை
    மோந்து முருகுவாய் மடுத்து முகில்தண் குழல் காட்டிடைச் செருகி
மள்ளர்க்கு அழகு காட்டும் முல்லை வனத்தாய் தாலோ, தாலேலோ
    மலைமேல் முளைத்த மலர்க்கொடியே மணியே தாலோ தாலேலோ.  ( 22)

 காரில் பொலிந்த கருங்குவளை கஞலிக் கிடக்கும் புனல் தடத்தில்
    கருங்கோட்டு எருமை பாய்ந்து உழக்கக்கண்டு வெருவிக் கனகநிற
மூரிப்பரு நெட்டிளவாளை முதிராக்கந்தித் தண்டலைமேல்
    மோதிப் பழக்காய் உதிர்ந்திடப் பன்முறையு மீண்டு வரும் காட்சி
சீரில்பொலிந்த நகர் மடந்தை செழும்பூங்குழலில் சிக்கறுக்கும்
    செய்யபவளக் கங்கம் எனும் சிறப்பில் பொலிந்து தழைத்து ஓங்கும்
மாரிப்பொழில்சூழ் திருமுல்லை வனத்தாய் தாலோ, தாலேலோ
    மலைமேல் முளைத்த மலர்க்கொடியே மணியே தாலோ, தாலேலோ.   (23)

தொட்ட அகழி நடுப்புகுந்து துடும் என்று ஒலிப்பப் பிடிகளொடு
    துதிக்கைப் பகடுவிளையாடத் தோட்டிக் குடங்கைக் கடும்பாகர்
இட்டவிருப்புத் தொடர்யாத்து அங்கு ஈர்த்திட்டத்தி என இழியும்
    எழிலிதனையும் பிணிப்பர் என விரியக்கூடத் திசைத்திடுதல்
அட்ட திசையும் புகழ்பரப்பும் அழகார்கூடல் செழியன் முன
    மதிருங்கருங் கொண்டலைச் சிறையுளாக்கும் பெருமை ஏய்க்கும் உயர்
வட்ட மதில்சூழ் திருமுல்லை வனத்தாய் தாலோ, தாலேலோ
    மலைமேல் முளைத்த மலர்க்கொடியே மணியே தாலோ, தாலேலோ.   (24)

தெள்ளிக் குழைத்த வெண்சுதையால் தீற்றப்பொலிந்த மாளிகைய
    தெருவில் தவளத் துரங்கநிரை செறிந்து களைப்போடலமரவே
உள்ளத்து அடங்கா வியப்பளிக்கும் ஒளிகூர் அம்மாளிகை முகப்பில்
    ஒழுங்கில் பதித்த நீலமணி ஒளிருந்தோற்ற நளிர்பூத்த
பள்ளப் பெரும்பாற்கடலும் அதில் பரக்கும் தரங்கப் பலநிரையும்
    பணிமேல் கிடந்து கண்வளரும் பச்சை நிறத்து அண்ணலும் ஏய்கும்
வள்ளல் கொடையார் வாழ் முல்லை வனத்தாய் தாலோ, தாலேலோ
    மலைமேல் முளைத்த மலர்க்கொடியே, மணியே, தாலோ, தாலேலோ.   (25)

பதிக்கும் அருணம் மணிமகுடம் பரித்துமுடிமீது அரசர் இளம்
    பரிதி அனைய குமரர் குழாம் பசும்பொன்கொடிஞ்சித் தடம்தேர்மேல்
துதிக்கும்பிடி நீள்மணிமறுகில் சுலவிப் பவனி வருங்காலை
    துணைக்குன்று அனைய முலைக்களிறு சுமந்த நிதம்பத்தேர் மடவார்
கொதிக்கும் நீலக்கருங்கண் நெடும் கூர்வேல் எறிய அவர் பிடித்த
    கொலைவேல் வல்லைநிலை தளர்ந்து குற்றேவலுக்கு ஆட்கொள்ளும் என
மதிக்கும் காமப்போர்செய் முல்லை வனத்தாய் தாலோ, தாலேலோ
    மலைமேல் முளைத்த மலர்க்கொடியே மணியே தாலோ, தாலேலோ.    (26)

            (வேறு)

நிர்க்குண நின்மல நித்திய பூரண நிரதிசயத்து அழியா
    நிட்கள அசல நிரஞ்சன புனித நிரூப அகண்டிதமார்
சிற்பர வரத விசிந்தித நிருமல திமிரம் இரித்தருளும்
    தினகர உதய அனாதிபரம்பர சின்மய சித்துருவாம்
அற்புத மெய்ப்பர தத்துவ உத்தம அட்டகுணப் பொருளாம்
    அத்துவிதத் திறை எத்திறம் உற்றனர் அத்திறமாய் அமர்வாய்
சற்குணர் பரவிய பொற்புரமுலை உமை தாலோ, தாலேலோ
    தற்பர மரகத விற்கொடியிடை உமை தாலோ தாலேலோ   (27)

அத்தியிலுறு வடவைத்தழல் புரியும் அரக்கர்தமக்கு இறையாம்
    அத்தம் ஓர் இருபது பெற்றவன் அலறி அழுங்கிட மணிமுடிகள்
பத்துஅற, ஒருகணை தொட்டவன், எருவடபத்திர மிசை வளரும்
    பத்மவிலோசனனுக்கு ஒரு தங்கை எனப் பகர் பைங்கிளியே!
சித்திர மதுரையின் முத்தனம் எழ வழுதிக்கு ஒரு மகவாகித்
    திக்கொரு விசயமுறத் தனியரசு செலுத்திய பெண்ணமுதே!
சத்தியர் தெரிதரு முத்தமிழ் முலைசிலை தாலோ, தாலேலோ
    தற்பர மரகத விற்கொடியிடை உமை தாலோ, தாலேலோ   (28)

வெண்திரை அகடு நெருப்பெழ ஞாங்கர் விறல்படையைத் திரியா
    விட்டு ஒரு சூர்முதல் அட்டு இமையோர் சிறைவிட்டு அணி மயிலூராக்
கொண்டல் உறங்கு பிறங்கலினேனல் குரல்களை வவ்வாமல்
    குருமணிகவண்வைத் திறணிலிருந்து பல்குருகு கடிந்தோப்பும்
வண்தழை ஆடைக்குறவர் வளர்த்திடும் வள்ளிதன் வள்ளம் எனும்
    மணிகிளர் களபக்குவிமுலை தழுவிய மகனைத் தருமடவாய்
தண்டலை மழைதவழ்முல்லை வனக்கிளி தாலோ, தாலேலோ
    தற்பர மரகத விற்கொடியிடை உமை தாலோ, தாலேலோ   (29)

                (வேறு)

கவலையுற்ற பவமாறாது ஆறாது ஏறாதே
    கழிஉயிர்த் தொகைகள் தேயா மாயா தோயாதே
நவமதுற்ற அருள் ஈவாய், பாவாய் ஓவாமே
    நளின மெச்சும்ஒரு வேதா ஓதா மாதாவே
அவம் அறுக்கும் ஒரு கோமானே மாபூமாதே
    அமுதுபெற்ற பெருவானாடு ஆனாதே நாளும்
குவலயத்தின் முலையாள்வாய் தாலோ தாலேலோ
    கொடியிடைக் கருணை வாழ்வே தாலோ, தாலேலோ   (30)


குலவு அனத்தின் நடையாளே! தாலோ, தாலேலோ
    குலவனத்தின் நடையாளே தாலோ தாலேலோ
மலைவு இலர்க்கு இடமது ஆவாய் தாலோ தாலேலோ
    மலை விலர்க்கு இடமது ஆவாய் தாலோ தாலேலோ
சிலை யிருக்கும் நுதல் ஈடாய் தாலோ தாலேலோ
    சிலையிருக்கு நுதல் ஈடாய் தாலோ தாலேலோ
கலை விரிக்கும் முலையாயே தாலோ தாலேலோ
    கலைவிரிக்கு முலையாயே தாலோ தாலேலோ   (31)


            4. சப்பாணிப் பருவம்

சக்கரத்து ஆயிரம் சுடருடன் எழுந்தமார்த்தாண்டனைப் பரிசிக்கும் ஓர்
    தாமரையை மற்றொர் தாமரை முரணிமோதுறும் சால்பு எனவும் இரவில் ப்ரகா
சக்கரத்தால் தனை முகம் கூம்பிடச் செயும் தாரகாபதியை இகலிச்
    சலமேவும் முளரியை நமக்கு இது தகாது எனச் சார் முளரி தகைதல் எனவும்
சக்கரத்தால் ஒரு சலந்தரன் இரண்டு கூறாம்படி தடிந்த கொழுநன்
    தன்கண் களாம் சுடர் இரண்டும் புதைத்துத் தழைத்துச் சிவந்திருந்த
சக்கரத் தாமரைச் சுந்தரச் செங்கைகொடு சப்பாணி கொட்டி அருளே!
    தடமுல்லை குடிகொண்ட கொடியிடைப் பெருமாட்டி சப்பாணி கொட்டி யருளே!   (32)

எங்கணும் பூத்தஎம் இருகண் புதைத்தலால் ஈட்டுமா வடு உனக்கு இன்று
    எய்தியது எனக்கேட்டு உமக்கு என்றும் மாவடு விருத்துவன் எனச் செய்தல் போல்
அங்கண் நெடுஞாலத்தின் ஆருயிர் தளிர்த்திட அறங்கள் எண்ணாங்கு செய்யா
    அருமாதவத்தினால் ஒருமா அடுத்தவரை அர்ச்சித்துழிக் கம்பை நீர்
பொங்கும் வகை வரவழைத்து அச்சம் கொடுக்கப் பொருக்கெனவுறத் தழுவியே
    புத்தேளிர் காணாத பூரணத்துக்கும் புதுத்தழும்புற வியற்றும்
தங்கவளை தங்கும் இருபங்கயச் செங்கையில் சப்பாணி கொட்டியருளே!
    தடமுல்லை குடிகொண்ட கொடியிடைப் பெருமாட்டி சப்பாணி கொட்டி யருளே!   (33)

பொங்காடும் அரவணைப் புத்தேள் தருக்குறாப் பொருசூகரத்து உருவமாய்ப்
    பூப்பிளந்து அறியாது தெரு மரப்பழமறைபுலம்பி ஓலிட்டு அயர்வுறக்
கொங்காடு கொன்றை, தண்கூவிளங், கோள்அரவு, குளிர்திங்கள், கொக்கிறகுடன்
    குரைபுனல், செழுமத்தம், வெள்எருக்கு, அறுகாத்தி, கோதில் வெண்டலையும், அலையும்
செங்காடு கொண்டபொற் கோடீரமாடச் செழும் பொன்னின் மன்றுள் ஆடும்
    சேவடி வருந்தாது தைவந்து தைவந்து தினமும் சிவப்பூறும் நின்
சங்காடு செங்கொண்டல் அம்கைத் தலம் கொண்டு சப்பாணி கொட்டியருளே !
    தடமுல்லை குடிகொண்ட கொடியிடைப் பெருமாட்டி சப்பாணி கொட்டியருளே !   (34)

மையோதி மையணி குடங்கைக்கு அடங்கா மதர்த்து அரிபரந்த ஒண்கண்
    மலர்வாணி அயிராணி பெண் ஆணி முத்தனைய மாவாள் நிலாமதிமுகப்
பொய்யோது சிற்றிடைப் பொற்றொடிக் கற்புடைப் பூவையர்கள் நாயகரொடும்
    பூரிப்பொடு அளவளாய் இன்பங்கள் துய்த்திடப் போகம் கொடுப்பது ஒன்று
மெய்யோக சாதகத்தால் இருவினைப் பந்தம் வேரற அடித்தொண்டு செய்
    விழுமியரை நாள்தொறும் எடுத்து எடுத்து ஆனந்தவெளி வீட்டிருத்தல் ஒன்றும்
சையோகமாகநின் இருபாணியும் கொண்டு சப்பாணி கொட்டியருளே!
    தடமுல்லை குடிகொண்ட கொடியிடைப் பெருமாட்டி சப்பாணி கொட்டியருளே!   (35)

போக்குமாறு அரியஒரு பொய்இருள் அழுந்திவரு புல்லிய உயிர்க்கு இடமதாப்
    புவனப் பரப்பு எலாம் பன்முறையும் ஈன்றவைகள் போற்ற முத்தேவர் தமையும்
ஆக்குமாறும் அன்றி அவரவர் மனக்கருத்து அறியுமாறும் கருணையால்
    அகிலமும் தன்மயம் எனும்படி கலந்தருளி ஐவகைச் சத்தியாகிக்
காக்குமாறும் வினை கழிக்குமாறும் தனது கைவல்யமாய்
    காட்சியை நினைந்து இருக்கும் நீ சற்று விம்மிதமோடு கைம்மலர்கள் கூட்டி ஒருகால்
காக்குமாறு ஒப்ப இருபொன்னம் குடங்கையால் சப்பாணி கொட்டியருளே!
    தடமுல்லை குடிகொண்ட கொடியிடைப் பெருமாட்டி சப்பாணி கொட்டியருளே!   (36)

            (வேறு)

பஞ்சடி நோவ நடந்து ஒருதொட்டில் பள்ளிகொள் புண்டரிகப்
    பன்னிரு கண் இருமூன்று முகத்துப் பாலகனைப் பரிவால்
கொஞ்சி எடுத்துக் கொங்கை அணைத்துக் குமுதம் செங்கனிவாய்க்
    குதலை மொழிச் சுவை அமுதம் மடுத்துக் குகனுக்கு குளிரு
மஞ்சனம் ஆட்டி, மணிக்கலன் இட்டு, அணி மையும் விழிக்கு எழுதி
    மஞ்சள் தரித்து செஞ்சரணத்திடை மலிநுண் துகள் நீவிக்
குஞ்சி திருத்திச் சிந்துரம் இட்டவள் கொட்டுக சப்பாணி!
    கொடிமதில் முல்லைக் கொடியிடை நாயகி கொட்டுக சப்பாணி!    (37)

தவளத் திரைசுரிசங்கம் எடுத்துஎறி சலதி முகட்டூடே
    தமரம் மிகுத்திட மந்தர வெற்பைத் தனிமத்தாக நிறீஇத்
துவளப் படுகயிறு அரவு பிணித்துத் துணியும் மனத்தினராய்ச்
    சுரரொடும் அசுரர்கள் கடைய உதித்துச் சுட்டிட வருநஞ்சைப்
பவளப்படிவ மணாளன் எடுத்துப் பருகிடும் அமையத்தே
    பற்பலரூப விசித்திரம் நல்கும் பார்வையின் அமுதாக்கும்
குவளைக் கண்களின் அஞ்சனம் இட்டவள் கொட்டுக சப்பாணி !
    கொடிமதில் முல்லைக் கொடியிடை நாயகி கொட்டுக சப்பாணி!   (38)

வழுத்திய பொய்தல் பேதையரோடு மலர்க்காவூடு ஏகி
    வண்டலர் குற்று வரிப்பந்து எற்றுபு மணி அம்மனை ஆடா
விழிப்புறு கண் பொத்தியும் விளையாடி விளங்கு செயற்கையலால்
    மெய்ம்மை இயற்கைத் தன்மையும் முற்றும் மிகுத்த சிவப்பூறிச்
செழித்திடு தெய்வத்தாமரை அழகு திறம்பச் செவ்விபெறும்
    தீங்கொவ்வைக் கனிவாயில் பெருவிரல் தித்திக்கச் சுவையாக்
கொழித்திடு தேறல் விரைப்பொலி கைக்கொடு கொட்டுக சப்பாணி!
    கொடிமதில் முல்லைக் கொடியிடை நாயகி கொட்டுக சப்பாணி!   (39)

            (வேறு)

கயிலை வரைக்குள் இருக்கும் விருப்பினர்கட் பாவாய்
    கருணையின் வெள்ளத்து அமுதம் வடித்த சுவைத்தேனே!
மயிலை மருட்டும் வனப்பினை உற்றமெல் நல்சாயல்
    மலர்மகள் செல்வக் கலைமகள் பெற்ற தவப்பேறே!
அயிலுறும் மத்தனை அத்தியை வைத்து வளர்த்தாளே
    அருவினை வெம்மைச் சிறுமை அகற்றும் மயில்பேடே!
குயிலினம் வெட்க மிழற்றுவள் கொட்டுக சப்பாணி!
    கொழிதமிழ் முல்லைக் கொடியிடை கொட்டுக சப்பாணி!   (40)

விளரி முழங்கும் அளிக்குலம் மொய்த்தவிரைக் கோதாய்!
    விதுவுடன் எல்லுக்கு எழிலை அளிக்கும் வெயில் பாவாய்!
ஒளிவளர் பத்மமலர்ப்பதம் வைத்த கருத்தொடு
    முருகிய உள்ளத்தவர்கள் குளித்த பெருக்காறே !
புளக முலைக் கலசத் தமுதத்தின் வயல் தோணி
    புரம்வரு பிள்ளைக்குதர நிறைத்தருள் நற்றாயே!
குளிர் இமயத்து மடப்பிடி கொட்டுக சப்பாணி!
    கொழிதமிழ் முல்லைக் கொடியிடை கொட்டுக சப்பாணி!   (41)


             5. முத்தப் பருவம்
                (வேறு)

செக்கச் சிவந்த பவளம் எறிதிருப் பாற்கடலில் பிறவாமல்
    செல்வக் கனக நாட்டில் இரு தெய்வநிதியில் பிறவாமல்
ஒக்கப் புவனம் படைத்தானை உந்திக் கமலத்திடை உயிர்த்த
    உவணக் கொடியோன் கரத்து ஏந்தும் ஒளிர் வெண்சங்கத்து உதியாமல்
கக்கக் குருதி சம்பரனைக் காய்ந்த மலர்ஐங்கணை வீரன்
    கையில் பிடித்த மால் விசயக் கன்னலிடத்து நண்ணாமல்
முக்கண் கரும்பின் இடத்து உதித்த முத்தே முத்தந் தருகவே!
    முல்லைப் பதிவாழ் கொடியிடைநின் முருகார் முத்தம் தருகவே!   (42)

உருக்க முறக்குஞ் சரமுகத்தின் ஒருத்தன்தனை முன்ஈன்றெடுத்த
    ஓமென் பிடியே! அடியேங்கள் உள்ளம் தெவிட்டாத் தெள்ளமுதே!
திருக்கைத் திருக்கண்ணால் அகற்றும் தெய்வக் கொழுந்தே பெருந்தவத்தால்
    தேடி எடுக்கும் அழியாத சேமநிதியே ஊழிதொறு
மிருக்கு மிருக்கும் முகில் அறியா இன்பக்கடலே எம்பெருமான்
    எல்லாம் உணர்ந்த திருவுளத்தில் எழுதியமைத்த ஓவியமே!
முருக்கை உருக்குஞ் செங்கனிவாய் முத்தம் தருக முத்தமே!
    முல்லைப் பதிவாழ் கொடியிடை நின்முருகார் முத்தம் தருகவே!    (43)

பொற்றாள் இணைக்கும் தோள் இணைக்கும் புணர்மென் முலைக்கும் மங்கலநாண்
    பூட்டும்பசும் கந்தரத்தினுக்கும் புனிதத் திருவாய் மொழியினுக்கும்
வற்றாக் கருணைக் கண்களுக்கும் மருவார் ஞானக்கரும் குழற்கும்
    மறுகி உடைந்த முண்டகமும் வரையார் வரையும் கரிமருப்பும்
நற்றாற் றிலங்கும் மடல் கமுகு நரலும் கமஞ்சூல் வலம்புரியு
    நறுக்கும் கரும்பும் கடலு மஞ்சு நல்கும் முத்தங்களை நயவேம்
முற்றாக் குரும்பைக்களப இளமுலையாய் முத்தம் தருகவே!
    முல்லைப் பதிவாழ் கொடியிடைநின் முருகார் முத்தம் தருகவே!    (44)

துடிக்கு நிகரு மடிக்கயங்கள் துளைக்கை முகந்து பிடிக்கு ஊட்டும்
    தூவெள் அருவி நிரைநிரையாச் சொரிந்த திகிரிச் சுடர் முத்தும்
படிக்கும் புலவர் கவிக்கு அடங்காப் பாலி ஆற்றில் படுமுத்தும்
    பகைதீர் தொண்டை வளநாட்டில் பண்ணைச் செந்நெல் கதிர்முத்தும்
வெடிக்கும் வேழத்திரள் முத்தும் வேறுபல வெண் முத்தமும் நின்
    விளையாட்டினுக்கு வைத்தருளி வேண்டும் எமக்குக் கற்பகப் பூ
முடிக்கும் குழலாய் நின்கனிவாய் முத்தம் தருக முத்தமே!
    முல்லைப் பதிவாழ் கொடியிடை நின்முருகார் முத்தம் தருகவே!   (45)

நாகமுடியில் சுடர்மணியும் ஞாலத்து இலங்கு நவமணியும்
    நறும்பூந் தருவில் சுரும்பூதா நாட்டில் உறுசிந் தாமணியும்
ஆகம் சிவந்த மலர்ப்பீடத்து அயல் நாட்டுள்ள திருமணியும்
    அந்தண் துளவத்தெரியல் அணி அம்மான் மருமத்து அணிமணியும்
சேகு படையாக் குருவிந்தச் செய்ய மணி என்று எண்ணி விடும்
    சிறியேங்களுக்குச் சிவானந்தம் தித்தித்து அரும்பத்தினம் தினமும்
மோகம் கொடுக்கும் செங்கனிவாய் முத்தம் தருக முத்தமே!
    முல்லைப் பதிவாழ் கொடியிடை நின்முருகார் முத்தம் தருகவே!   (46)

            (வேறு)

மருக்கிளர் தளிர்த்தநறு மாநிழல்கீழ் விரியும் மல்லிகைத் தவிசின் நடுவண்
    மஞ்சளடை தைவரத்துஞ்சு செங்கட் கவரிமணி அலர்ப் பொய்கை அழியா
உருக்கிளர் வனத்தினை உழக்கிட நெடும் கெண்டை ஊறுபால் மடியை முட்ட
    ஒழுகும் வெள் அருவியில் பொழிகின்ற தீம்பாலு வட்டுஎடுத் தமுதமயமாக
குருக்கிளரும் அணை கடந்து எங்கும் வழிகாட்சி ஒருகோடி மதி உதயமாகிக்
    கொள்ளை நிலவு எண்திக்கினும் கற்றை கற்றையாக் கொட்டிக் கிடத்தல் மானும்
திருக்கிளரும் முல்லையுள் இருக்கும் ஒரு சுந்தரி திருக்கோவை முத்தம் அருளே!
    சிந்துரப்பிறைநுதல் குந்தளக் கொடியிடை திருக்கோவை முத்தம் அருளே!    (47)

வானாடு மட்டும் வளர் நாளிகேரத்தின் முதிர் வண்ணப் பழங்கள் பலவின்
    வசிமுட்புறக் கனியறக் கீண்டு தூங்குகுலை மாங்கனி உடைத்ததன் கீழ்க்
கானாடு கதலியின் தாற்றுப் பழத்தைக் கறுத்துவந்து ஆலவாலக்
    கண்ணக நிரம்பச் சொரிந்த அச்சாறு போய்க் கடைமடை உடைத்திடக்கண்
மீனாடு உழத்தியர் வியப்புறக் களமர் அதில் விரவிவரும் அப்பழம் எலாம்
    வேறெடுத்து அதனால் உடைப்படைத்தப் பங்கமேனாறு நடும் வளமை கூர்
தேனாடு தண்டலைத் திருமுலை நாயகி திருக்கோவை முத்தம் அருளே!
    சிந்துரப் பிறைநுதல் குந்தளக் கொடியிடை திருக்கோவை முத்தம் அருளே!    (48)

தொன்னூல் மறைக்கடன் முகந்த செந்நாவோடு தோன்றும் மின்என்ன முந்நூல்
    துவளும் மணி மார்புடைப் பூசுரர்கள் முகிலில் தொனித்திடும்
முந்நூலு முறையில் பயின்று ஐயம் அணுவேனும் முன்னத்துறாமல் உய்த்து
    முழுவதும் உணர்ந்த முதுகுரவர்களும் அக்குரவர் மொழிகள் தவறாது நின்றே
எந்நூலும் உணரும் நல்சேதனச் சற்குணத் தெண்ணின் மாணாக்கர் குழுவும்
    இருந்தோதும் முத்தமிழ்க் கழகங்கள் தோறும் நல்இசைவாணி காணிகொண்ட
செந்நூல் பிறந்த திருமுல்லைவளர் காரிகை திருக்கோவை முத்தம் அருளே!
    சிந்துரப் பிறைநுதல் குந்தளக் கொடியிடை திருக்கோவை முத்தம் அருளே!   (49)

        (வேறு)

உலைபுகு மெழுகுஎன உருகிடும் இருதயர் உச்சியிடத் துறையும்
    ஒலிகெழுபரிபுர சரணமும் வகிரிழை ஒத்திடும் சிற்றிடையும்
அலைஎறி சலதியில் நிலவிய நயனமும் அச்சம் அகற்றியிடும்
    அருள்பொழி வதனமும் இருள்செறி அளகமும் அக்கணுதற் கணவர்
கலையொடு மழுவலர் கரதலம் குவிய கச்சு முலைத் தடமும்
    கனவிலும் நனவிலும் நினைபவர் வினைதரு கட்டம் அறுத்தருள்வோய்!
முலைநகர் நிலைபெறு சிலைநுதல் மலைமகள் முத்தம் அளித்தருளே!
    முதுமறை முடிவளர் கொடியிடை உமையவள் முத்தம் அளித்தருளே!    (50)

குரகத நிரையுமிழ் அருவியும் மருவிய குற்றி முறித்து இகலிக்
    குமுறொலி பெருகிய கறையடி இயம்அவை கொட்டு மதத்திரளும்
விரவிய நதிஎன ஒழுகிட அதனிடை வித்தகம் உற்றிடுநல்
    விசையொடு வருமணி கிளர் கவினுறு கொடி மெச்சிரதத் தொகைகள்
திரைசெறி உவரியினிடை வருபல திமில் செத்துவியப்புதவும்
    திசைதொறும் இசையுறு தனமுடை அரசர்கள் செப்பரும் வெற்றிகொளும்
முரசதிர் திருமறுகு அணிமுலை இமையவள் முத்தம் அளித்தருளே!
    முதுமறை முடிவளர் கொடியிடை உமையவள் முத்தம் அளித்தருளே!    (51)

        
            6. வருகைப் பருவம்

வெண்தரளம் மல்குசிறு தண்டையொடும் எரிமணி விளங்குசெம்பொன் சிலம்பு
    மென்குரல் கிண்கிணியும் ஓலிட்டு அரற்றிட விருப்புடன் அழுத்து செம்பஞ்சு
உண்டஅரவிந்தத் திருத்தாள் பெயர்த்தலை உடுக்கைப் பெருங்குவலயம்
    உன்அடிகள் சூடப் பெருந்தவம் இழைத்ததால் உதவும் பெரும்பயனுறத்
தண்தரளவெண் தொடைதரிக்கும் தனக்குவடு தாங்கரிய திடுகிடை எனத்
    தமனியக் குருமணிப் பருமம் புலம்பிடத் தம்மைஅறி தொண்டர்இதய
முண்டக மலர்க்கோயில் குடிகொண்டிருக்கும் ஒருமுல்லை நாயகி வருகவே!
    முழுமுதல் பொருள் மாசிலாமணியர் அணைகின்ற மோகனப்பெண் வருகவே   (52)

ஒப்பற்ற சீறடி நடைக்குஇடைந்து ஓதிமம் ஒளித்திடப் பிணிமுகம் எலாம்
    உன்சாயலைக் கண்டு அரும் கானகத்துற உழைக்கணம் விழிக்கு ஒதுங்கச்
செப்பொத்த முலைகண்டு நேமிப்புள் இரிய நின் செவ்வாய் மொழிக்கு உடைந்து
    தித்தித்த சொல்கிளியும் மாங்குயிலும் ஏங்கிடத் தெய்வப் பிணாக்களுடைய
அப்பொத்த கண்இணைக் களிவண்டினங்கள் மதன் அத்தம் தொடுத்த சிலையில்
    அளிவந்து அடைந்தன்ன அம்மைநின் திருமேனி அவ்வளவும் வவ்விக்கொள
முப்பத்து இரண்டு அறம் வளர்த்து உலகு அளித்த திருமுல்லை நாயகி வருகவே
    முழுமுதல் பொருள் மாசிலாமணியர் அணைகின்ற மோகனப் பெண் வருகவே!   (53)

வேதண்டம் ஒத்த புயவீரப் பெரும்படைஞர் வெம்படை பயிற்றும் ஒலியும்
    விரிதிரைக்கடல் குழிய வாய்மடூஉ வருகின்ற விண் குழாத்தையும் விலக்கு
மாதண்டம் நாலும் புழைக்கரத்து ஏந்திவரும் மதகளிறு பிளிறு ஒலியும்
    மன்னுகதி ஐந்தினொடு சாரிபதினெட்டும் வலவாம்பரி கனைக்கும் ஒலியும்
கோதண்ட நாண் தெறித்திட நீடும் ஓதையும் கொள்ளாமல் உள் அடக்கிக்
    கொற்றவெண் குடை மன்னர் கோயில் கடைத்தலை குலாவிப் பிடித்த சங்கம்
மூதண்ட கூடமும் வெடித்திட முழங்குதிரு முல்லை நாயகி வருகவே!
    முழுமுதல் பொருள் மாசிலாமணியர் அணைகின்ற மோகனப் பெண் வருகவே!   (54)

கள்அவிழ் மருப்பொழில் வருக்கைப் பழங்களைக் கருமந்தி முழவு கொட்டக்
    கண்டுமிகு வானரங் கொக்கினுதிர் கனிகளைக் கையில் அம்மானை ஆட
நள்அமர் சுரும்பரிசை பாடக் கலாபமயில் நாடகம் புரிய அழகார்
    நறுமலர்க்கோடரங் கைத்தலை அசைத்திட நயத்தைத் தெரிந்து அளிக்கும்
வள்ளலின் செம்பொன் செருந்திகள் சொரிந்திட மலர்க் காந்தளங்கை ஏற்கும்
    வண்மையை அரம்பையர் நடித்திடும் அரங்கென மதித்திடு மதற் குழையெலாம்
முள்ளரைத் தாமரையில் அனமேவுமணி வாவி முல்லை நாயகி வருகவே!
    முழுமுதல் பொருள் மாசிலாமணியர் அணைகின்ற மோகனப் பெண் வருகவே!   (55)

தத்தும் வெள்அருவித் தடஞ்சாரல் நந்தியம் சைலப்பரப்பில் விளையுற்ற
    தமனியக் குப்பையும் தந்திவெண் கோடு நல்சந்தனக் கந்தநிரைபூங்
கொத்துடன் கோழரைக் கார் அகில் குறடும் குரூஉநிறப் பீலிபலவும்
    குங்குமத் தொழுதியொடு சண்பகப் போதும் குவான்மணித் திரள் வர்க்கமும்
மத்துறும் காந்தளின் அரும்பும் செழும் தேத்திறலும் சுமந்து உந்தியே
    அலம்பும் திரைக்கரத்தால் இருபுறத்தும் வெள்ளமுதம் துளிப்பதேபோல்
முத்தம் திரட்டிவரு பாலியின் வடாது கரை முல்லை நாயகி வருகவே!
    முழுமுதல் பொருள் மாசிலாமணியர் அணைகின்ற மோகனப் பெண் வருகவே   (56)

                வேறு

சரத்காலத்து மதிவதனத் தையல் மடவார் ஊடலினால்
    தடம்சோபானத் தரமியத்தில் தனிநின்று உகுத்த கலன் மணியை
உரல்கால் யானை நெருப்பெனக் கண்டு ஒதுங்கி நடக்கும் வீதிஎலாம்
    ஒளிரும் தரளங்களைக் கொழித்து அங்கு உலவும் பருவப் பேதையர்கள்
திரக்காதலினால் பண்ணையொடும் சிற்றில் இழைக்கச் சேயினங்கள்
    சிறுதேர் உருட்டிச் சிதைத்திடப் பின் திரட்டி முத்தங்களிற் குயிற்று
மரக்காம்பலம்பூந்தட முல்லைக்கு அரசே வருக வருகவே!
    அருள்பூத்து இலங்கு கொடியிடைப் பெண் அமுதே வருக வருகவே    (57)

படைக்கும் கயற்கும் கருவிளைக்கும் பரவைக்கடற்கும் பானலுக்கும்
    பாயும் பிணைக்கு நிகர் தடங்கண் பவளத்திருவாய்ப் பிறைக்கொழுந்தின்
இடைக்குங்குமப் பொன் தனமடவார் எழிலார்பளிக்கு மாளிகைமேல்
    எறிகந்துகங்கள் அலரிபச்சை எழுகந்துகத்தைப் போய்ப் புடைக்கத்
துடைக்கும் உரிமையாளரைப் போற்றுவளு நெடுங்காற் கேதனமத்
    துரங்கத் தகடுவருடியவன் சுடர்த்தேர்க் கொடியை கீறி விண்ணை
அடைக்கும் புரிசைத் திருமுல்லைக் கரசே வருக வருகவே!
    அருள்பூத்து இலங்கு கொடியிடைப் பெண் அமுதே வருக வருகவே!    (58)

பண்டைச் சுருதிப் பனுவல்தனில் பதியும் பொருளை அறத்தெரிந்து
    பயிலும் இருமுத்தொழிற்கு உரியார் பசும்பொன் யூகத்தறி நிறுவிக்
குண்டத்து இயற்றும் வேள்விதொறும் கொண்டல் படலைபோல் எழுந்த
    குய்என்று உரைக்கும் நறும்புகைபோய்க் குழுமிவிசும்பைப் புதைத்தலினால்
சண்டற்கு இரதந்தனை இழுத்துத் தாண்டும் எழுமா உடல் கருமை
    தங்கிக் கிடப்பதனை உலகோர் தழைக்கும் பச்சைக் குரகதமென்
அண்டத்தறியச் சாற்றும் முல்லைக்கு அரசே வருக வருகவே!
    அருள்பூத்து இலங்கு கொடியிடைப் பெண் அமுதே வருக வருகவே!    (59)

 கணியா அண்டப் பரப்பு அனைத்தும் காவும் ஒரு தூண் என நிறுத்தும்
    கழறற்கு அரிய மதுகையுடைக் கனகப் பொருப்பாம் வடமேரு
குணியாக் காலம் பொறுத்ததனால் கொள்ளும் பரமால் தாதுவலி
    குறைந்து பெருங்கால் தளர்ந்திடினும் கொல்ஏற்று அண்ணல் இனிஒருக்கால்
பணியாப் புரையோர் தமை அடுவான் பருமாதவராக் குழைத்திடினும்
    பரிக்க அதற்கு ஒப்பாக ஒன்று படைத்தது என வான் முகடு உரிஞ்சும்
அணியார் திருக்கோபுர முல்லைக்கு அரசே வருக வருகவே!
    அருள்பூத்து இலங்கு கொடியிடைப் பெண் அமுதே வருக வருகவே!    (60)

மணம்கூர் ஏலநறும் கூந்தல் மயிலே வருக ! எங்கள் பெரு
    வாழ்வே வருக! மலையரசன் மகளே வருக! மான அருள்
குணம்கூர் இன்பச்சிவஞானக்கொம்பே வருக! அம்பலவர்
    கூத்தின் பயனை உயிர்க்கு அருளும் கொழுந்தே வருக! நினைந்து உருகி
இணங்காதவருக்கு எப்பொழுதும் எட்டாய் வருக! அடியவருக்கு
    எளியாய் வருக! உயிர்க்கு உயிராய் இருந்தாய் வருக! எமை ஆண்ட
அணங்கே வருக! திருமுல்லைக்கு அரசே வருக வருகவே!
    அருள்பூத்து இலங்கு கொடியிடைப் பெண் அமுதே வருக வருகவே   ( 61)

            7. அம்புலிப் பருவம்

வளமருவும் அத்திமுன் பெற்றதால் இருகோடு மாலையிடை மருவி எழலால்
    மானம் உட்கொள்வதால் இமையவரை மகிழச் செய் மாட்சியால் பணிஆர்தலால்
இளமருத வாதார மேவலால் வான்பெற்றிருந்தாரை அணைகின்றதால்
    இறைவன திடத்திருக்கை யுற்றதால் புரை இராவில் சரிக்கையாலும்
தளவ முறுவல் கயற் கண்ணாள் உனக்குநிகர் தானாம் அவட்கு நீயும்
    சரியாதலால் உன்னை 'வம்' எனக் கூவினாள் தண்ணளியினால் காண்டியால்
அளகைநகருக்கு நிகர் முல்லை பசும்பிணையொடு அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே   (62)

பாடுகொண்டு இலகுவான் பாலாறு வருதலால் பசிய மஞ்சள் தரும் அதனால்
    பக்கம் மறை உற்றலால் பன்னிலவு கொள்வதால் பரிதியால் தம்கையாலும்
நீடுகால் தங்கச் சிலம்பு வலம் வருதலால் நேமி அரவம் துன்னலால்
    நிறைகலாநிதி என்று உரைப்பதால் தன்னையா னெய்தலுக்குவகை
தோடுகொண்டு ஆடும் இருவள்ளையைத் தாவிச் சுலாய் குமிழ் மறிந்து மரைமேல்
    துளங்கலுறு கெண்டையில் பிறழுநீள் இருவிழிச் சுரிகுழல் கொத்தல் ஏய்ந்தா
ஆடுகொடி மாளிகைத் திருமுல்லை நாயகியொடு அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே.!    (63)

நீர்கொண்ட புண்டரிக மலர் காம்புறச் செய்வை நீஇவண் முகத்திங்கள் தான்
    நித்தமுறு சத்தியர்கள் உள்ளச் சரோருக நெகிழ்ந்து விரியச் செய்குமால்
ஏர்கொண்ட நின்கண் ஒருமான் உளையென் அம்மை கண்இருமான் உலாவி வருமால்
    ஈண்டு நீஓர் அண்ட முழிதந்து தபனனில் இலங்கிட விளக்கம் செய்வாய்
பேர்கொண்ட அகிலாண்ட முற்றும் வளர்மெய் அருட்பேரொளி பரப்பலாலே
    பெருமாட்டியானவட்கு ஒப்புநீ அல்லையால் பேரருளினால் விளிக்கு
மார்கொண்ட தேர்வீதி முல்லை அபிராமியுடன் அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே.!    (64)

ஒருகரும் பாம்பின் வாயுள்பட்டு உமிழ்ந்த பின்னுச்சிட்ட மாயலைவை நீ
    உயிர்களுக்கு என்னம்மை ஒருகரும் பாம்பின் வாயுற்ற துப்புரவு செயுமால்
வரும் அமரர் உண்பான் அமுதம் கொடுத்தே வருந்துவை பெருந்தகைக்கு
    மாறாத இதழமுதம் என்றும் கொடுத்தே மகிழ்ச்சியின் வளர்ந்தருளுமால்
குருமதற்குக் கவிகை யாவை யாவர்க்குமிவள் குறைவறக் கவிகை அருள்வாள்
    கூறுமூர் கோள்வளைய நிற்றியூர் கோள் இவட்குறுவதிலை ஒப்பு நீயே
அருமறை முழங்கு திருமுல்லை மாதங்கி உடன் அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே.!    (65)

வெம்பைப் பொறிப் புயங்கத்தினுக்கு அஞ்சிநீ வெள்ளை மதியாயினை அதால்
    விரகப் பெருங்காம வேணவாக் கொண்டு உளம் விழுங்கு மல்குற பணிக்காக்
கும்பப் படாமலைக் குருவின் கிழத்தியைக் கூசாது தொட்ட தீமைக்
    கொடும் பாதகத்தினால் இன்னமும் தேய்ந்து உடல் கூனுமுற்று அலைதி அந்தோ!
செம்பொன் செழுங்கமல மல்கு சுப்பிரமணிய தீர்த்தத் தொர் திவலை படினும்
    சிறிது அள்ளி உண்ணினும் கயரோக மாகிய சிமிழ்ப்பறுத்து இனிது உய்தியால்
அம்பொற்றடம் புரிசை சூழ்முல்லை வல்லியுடன் அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே!    (66)

பொற்புறு முயல் களங்கத்தினால் உடலம் புதைத்துக் கிடந்தனை அது போக்கும் ஒரு
    புகலுனக்கு உரைசெய்வல் கேட்டி: இப்புவனத் துளார்கட் கெலா(ம் )
நற்பயன் தருகின்ற புண்ணியப் 'பாலி' நீள்நதியில் படிந்து ஒருதின(ம் )
    நறுமுல்லைவனம் மருவி வருகின்ற காற்றினையு நண்ணிக் களங்கமகற்றி
விற்புருவ என் அம்மை கணவனைப் பூசித்துன் மேதகு குலத்தில் ஒருவன்
    வீட்டின்ப முற்றதுங் கேட்டிருப்பாய்; நீயும் வேண்டிய வரங்கள் பெறலா(ம்)
அற்புதத் திருமுல்லை அல்லியம் கோதையுடன் அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே!   (67)

வெள்ளிப் பசுங்குழவி உற்ற பருவத்தன்னை மின்னுதல் செவ்வி வவ்வி
    மேலும் ஈரெண் கலை நிரம்பு பருவத்திவள் விளங்கு வதனத் தழகெலாம்
கள்ளக் கருத்தினான் மெள்ளக் கவர்ந்து நீ ககனத்தில் ஓடிவிட்ட
    காரியத்தினை இவள் மணாளன் திருச்சடைக் காட்டில் ஒருபணி கண்டதேல்
எள்ளிப் பிடித்துக் குடித்துக் குடித்த அமுதம் எள்ளளவு போதிலுன்னை பிரை
    கொள்ளுமாதலால் உய்யவேண்டுதி எனில், இனிப் பொருக்கென எழுந்தே
அள்ளல் செழும் பழன முல்லைப் பிராட்டியுடன் அம்புலீ ஆடவாவே !
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே  !   (68)

மட்டுண்டு பிரமரங்காமரம் பாடுமலர் மாமறைக் கிழவனீன்ற
    மதிகெட்ட சிறுவிதி மகச்சாலை புக்க நீ வந்த சயவீரன் முனிவால்
தட்டுண்டு தெள்ளமுது கொட்டுண்டு முட்டுண்டு தாளினால் தேய்ப்புண்டதும்
    சற்றல்ல உன்னை அத்தண்டம் புரிந்ததும் தையலிவள் தனையனாமால்
ஒட்டுண்டு கொல்லுகைக்கு எங்கள் பெண்ணரசி திருஉள்ளம் கடுக்கிலதனால்
    ஒய்யெனத் தான் வருதி மறுகெலாம் சிறுவீடு உஞற்றி இளமாதர் சிறுசோ(று)
அட்டுண்டு விளையாடும் முல்லை பசுங்கிளியொடு அம்புலீ ஆடவாவே !
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே !  (69)

மண்டிய சினப்பொறி விழிக்கடை தெறித்திட வடிக்கணை தொடுத்து எதிர்த்து
    வருபெருந் துட்டக் குறும்பனைக் காந்தனை வளைத்துப் பிடித்துக் கருங்
கொண்டலின் உருட்டிப் புரட்டிச் சவட்டி வெங்குடர் குழம்பத் துதைத்துக்
    கொன்று விறல் கொண்டிடத் தொண்டைமானுக்குக் குறித்தொரு படைத்தலைவனாய்ப்
பண்டு வந்து அமர் செய்த வெறுழ் வலிக் கடுநடைப் பைங்கணேற்றிடப் பிரான்
    பகைவரினி யாரென்று நீ வருந் திக்கை வழிபார்த்திருப்பதும் அறிதியால்
அண்டரும் வணங்கு திருமுல்லைக் கனங்குழையொடு அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே !   (70)

வாட் கொண்ட நோக்கமுறு பிள்ளை நாயகன் முன்னர் வாரியில் சுதை வாரிய
    மலையிடத் துனதுகலை எல்லாம் தகர்ந்தும் உயிர் மன்னுதல் உறப்பெற்றதுந்
தாட்கொண்ட மலய முனிகடல் குடித்திட்ட நாட்டனி யகடுபுக்கு மீண்டு
    தங்குதலும் அம்மை நின்னிதயமுறை வாலினித் தையலிவள் நூபுரத்தாள்
தூட்கொண்டு எறிந்திடினும் ஒருவர் கதியின்றியே சோர்வுற்று மடிவை அதனால்
    துண்ணென விரும்புதனை மகனெனப் பெற்ற நீ துரிசறக் கொடியேனையும்
ஆட்கொண்ட திருமுல்லை மரகதக் கொம்பினுடன் அம்புலீ ஆடவாவே!
    அடிமுடி கடந்த ஒரு கொடியிடை இளம்பிடியொடு அம்புலீ ஆடவாவே!   (71)


            8. அம்மானைப் பருவம்

சேலைப் புறங்கண்ட நாட்டத்தின் ஐங்கரச் செம்போதகத்துக்கு முன்
    தித்திக்கு(ம்) மோதகக் கவளமும் வெள்ளிச் செழுங்கனியும் ஈவதெனவும்
மாலைக் கடுக்கையணி கோலச் சடாதாரி மைந்தரைப் பார்த்து  "உலகெலாம்
    வலம் வந்தவர்க்கு இப்பலம் தருதும்" என்று தமை வந்த தந்திக்கு அளிக்க
வேலைக்குள் வந்து அசுரர்குல முழுதறுத்திட்ட வெங்கூருடம் பிடிக்கை
    வீரர்க்கு வாரத்தினீசுனைத் தீங்கனிகள் வேறு அளித்து அருள்வதெனவு
மாலைக் கொழுஞ்சாறுபாய் முல்லையூர் அம்மை அம்மானை ஆடி அருளே !
    அம்மானை வைத்தகைப் பெம்மானை அணை வல்லி அம்மானை ஆடி அருளே  !  (72)

முடித்த செஞ்சடை உடை பரமனந்தரமேனி முற்றும் செறிந்து எழில் பெற
    மொய்ம்பினில் பல்வண அடுக்குத் தொடைத் தெரியல் முறை முறையில் அணிவதெனவு(ம்)
கடித்தடம் கமலத்தின் அழகைப் பழித்த செங்கைத் தளிரிடத்தினின்றும்
    கனக அண்டங்கள் விளையாட்டில் சமைத்தேவு காட்சியை நிகர்ப்பதெனவு(ம்)
வடித்த அஞ்சனமலர் கண்கள் இமையாது நவமணிகள் இழைத்த பலவும்
    வளமை பெறும் இந்திரவிலென்ன ஒளி குலவி எழின் மாகத்தின் மீதுலாவ
வடித்தொழும் பாற்றுமவர் வாழ் முல்லையூர் அம்மை அம்மானை ஆடி அருளே !
    அம்மானை வைத்தகைப் பெம்மானை அணை வல்லி அம்மானை ஆடி அருளே!    (73)

திருத்தமுறுவித்துரும ஒண்கடிகை சிற்சில செறிந்தெனத் திரு விரல்களின்
    செவ்வொளி ஒழுங்குதர அவ்வொளி மறைந்திடத் திருமுறுவல் நிலவு காட்டப்
பெருத்த மணி அம்மனை பிடிக்கும் தொறும் தொறும் பெற்றி வெவ்வேறு காணப்
    பெண்ணமுத நின்னுடைய கண்ணழகு கண்டெம்பிரானும் இமையாதிருக்கக்
கருத்துரை கடந்தது அகந்தைக் கிழங்கைக் களைந்திட்ட மெய்க் காட்சியர் தமைக்
    காதலொடு நின்று வழிபார்த்தழைத்த கன்மனைக் கண்கொண்டவர்க் கோதன
மருத்தியிடுமா செல்வர் வாழ் முல்லையூர் அம்மை அம்மானை ஆடி அருளே!
    அம்மானை வைத்தகைப் பெம்மானை அணைவல்லி அம்மானை ஆடி அருளே!    (74)

மன்னலங் கொண்ட பைங்காற்பழுக்காய்ப் பவளவண் குலைக்கமு கிருளெலா
    மாய்ந்திடக் கற்றை வெண்சோதி இளநிலவினை வழங்கு முத்தங்களீனக்
கன்னலங் காட்டிடை நெருங்குவளை ஆர்க்கக் கருங்குவளை வாய்திறக்கக்
    கவினொழுகு பத்தி பத்தியினின்று நீடுங்கதிர்ச் செந்நெல் தலைவணங்கப்
பொன்னயம் கமலப் பொதட்டின் மேல் கருஞிமிறு போற்று செவ்வழி பயில்வுறப்
    புடைநாரை, இமிழிசைப் பீலியூதச் சிறைய புள்ளன்னம் வீற்றிருக்கு(ம்)
அந்நலங்கழனி புடைசூழ் முல்லையூர் அம்மை அம்மானை ஆடி அருளே!
    அம்மானை வைத்தகைப் பெம்மானை அணைவல்லி அம்மானை ஆடி அருளே !   (75)

முப்புடைய காய்க்குலைத் தென்னம் பொழிற்குளுறு முனைமடற் பாளை வாளின்
    முதிரும் பராரைப் பலாமுள் புறக்கனி முழுச்சுளை கிழித்தெடுத்து
வெப்புடைய ஊடலில் பிரியும் மடமந்திகள் மிசைந்திடக் கடுவனல்கி
    விளையாடு பரிமளச் சோலையூடு ஏகி வரு வெண்ணிலாக் கற்றை மதிய
மெப்புடைய நெறியின்றி மாளிகைச் சாளரத் தெண்ணிலா வழியினுழையூ
    வினைத்துடல் வளைந்ததைக் கூனுற்று வருகின்ற தென்றுகை மின்றுஞ்சொலு
மப்புடைய நீண்மனைத் திருமுல்லையூர் அம்மை அம்மானை ஆடி அருளே!
    அம்மானை வைத்தகைப் பெம்மானை அணைவல்லி அம்மானை ஆடி அருளே!    (76)


                    (வேறு)

பஞ்சுரம் ஓதிய அஞ்சிறை வண்டுகள் துஞ்சிடு பைங்குழலாய்
    பஞ்சமலக் கொடுவேரை அகழ்ந்து பறிக்கும் அருட்கடலே
நஞ்சு பிலிற்றும் எயிற்றர விந்து நகைத்தலை சென்னியின் மேல்நண்ண
    முடித்திடி என்ன வுலம்பு நகத்தை யுரித்த வதட்
கஞ்சுக மேனியர் கண்மணி யாகிய கன்னிமடப் பிணையே
    கதிர் வளரம்மனை அம்மனை உன்கைக் காந்தள் மணங்கமழ
அஞ்சுக மென்மொழி கிஞ்சுக வாயவள் ஆடுக அம்மனையே !
    அலகில் பெருங்கருணைக் கொடியிடையவள் ஆடுக அம்மனையே!    (77)

வாரணி குங்கும மூழ்கிய கொங்கையின் மங்கையருக்கரசே
    வண்ண வலத்தக நண்ணிய செம்பொன் மலர்பத விண்மடவாய்
காரணி மல்கிய தாரணிகின்ற கருங்குழல் அங்கனையே!
    கண்ணிய அன்பர்கள் இன்னல் அகற்றுபு காட்சி அளித்தருள்வோய்!
தேரணி வீதி விழா ஒழியாத சிறப்பு மிகுத்த பெருஞ்
    செல்வம் விளங்கிய முல்லை வளம்பதி திகழ இருந்தருளும்
ஆரணி நாரணி, காரணி, பூரணி, ஆடுக அம்மனையே!
    அலகில் பெருங்கருணைக் கொடியிடையவள் ஆடுக அம்மனையே!   (78)

வில்லைப் பொருநுதல் வல்லைத் தருமுலை வேய்மரு தோள் மடவார்
    விரைபனி நீரில் குங்கும மிக்கு விராவித் தேய்வை செயா
மல்லல் தெருவிடை அள்ளி இறைக்க மலர்க்கால் வழுவாமை
    வண்ணப் பணிமணி எரிஒளி கக்குபு வான்மணி நண்புகொள
ஒல்லைப் பொழுதில் உலர்த்தியிடக் கண்டொப்பறு மடவார்கள்
    உள்ளம் இறும்பூது உற்று மகிழ்ச்சியின் உலவிடும் வளமருவு
மல்லைதரு மெழின் முல்லைப் பதி மயிலாடுக அம்மனையே!
    அலகில் பெருங்கருணைக் கொடியிடையவள் ஆடுக அம்மனையே !   (79)

முத்தநி ரைத்திடும் ஈரைந்தம்மனை முறைமுறை நின்னிரு கைம்
    முளரி அழுந்திச் செந்நிறமாகி முகத்திடை வில்லுமிழ
வித்தக மல்கிய நின்கண் குவளை விரிந்த நலம்காணா
    விரை அளகத்துறு தொங்கலின் வண்டு வெருண்டு சுழன்றாடப்
புத்தமு தத்தினை வைத்த கடம்பொரு புளகித இளமுலையாய்!
    போகமளிக்கு நெடுங்கழை வில்லொடு பூவல ரைங்கணைய
மத்தமெ டுத்தவளத்தனிடத்தவள் ஆடுக அம்மனையே!
    அலகில் பெருங்கருணைக் கொடியிடையவள் ஆடுக அம்மனையே!    (80)

மூலவினைத் தொகை அன்பரை மொய்த்து முனைந் தெதிர் ஓடாமே
    மூடிய ஐம்புல வேடர்கள் அறிவை முறைக் கொண்டாடாமே
சீலமில் எங்களை நுங்குபு வல்லிருள் சிற்றரவு ஆடாமே
    செப்பம் இலாத மனப்பேய் பவுரி திரண்டினி தாடாமே
மாலுறு காம முதற்பகையானும் வலிந்துடன் ஆடாமே
    வன்மைய பரசமயக் குறும்போர்கண் மலைந்திட நாடாமே
ஆலிய பாலி நதித்துறை யாடுவள் ஆடுக அம்மனையே!
    அலகில் பெருங்கருணைக் கொடியிடையவள் ஆடுக அம்மனையே  !  ( 81)

                                                    9. நீராடல் பருவம்

தண்ணமர் கடுக்கைப் பசுங்காயின் மென் குழல் சைவலம் காட்டி அருகே
    தமனியக் கொப்பெனக் கன்னிகாரத்தின் மலர்சார் வள்ளை ஊடணைத்துப்
பண்ணமருமணி மூசு காவியங்கண் களும் பைங்குமிழ்ப் போதின் மூக்கும்
    பதுமான னத்தினொடு செவ்வீழி வாயும் வெண்பனி முருந்தான நகையும்
வண்ண நற்காந்தளின் மலர்க்கையும் தும்பியின் மருப்பாந்தடங் கொங்கையு(ம்)
    மருவுமாலிலைய கடுமரசிலைக் கடிதடமு மாண்புறக் காட்டி ஒழுகி
விண்ணவர் வியப்ப ஒரு பெண்ணில் வருதண்பாலி வெள்ள நீராடி அருளே!
    விடையுடைக் கடவுள் புணர் கொடியிடைக் கௌமாரி வெள்ள நீராடி அருளே!   (82)

வண்டிரைக்குங் கருங்குந்தளச் செவ்வாய் மடந்தையர் குடைந்தாடவே
    வளரும் இளமுலை வெற்பில் அப்பிக்கிடந்த செவ்வண்ணச் செழுங்குங்குமம்
கொண்டிரைத்தோடி ஒருபால் செம்மையும் தனது குணமெனும் வெண்மை ஒளியின்
    கோலம் ஒரு பாலினுங்காட்டி பரந்துவரு கொள்கையால் அனைவருக்கும்
தெண்டிரைக் கடல்வந்த செல்விதன்றவளத் திருப்படிவ மருமகளொடும்
    சேர்ந்து வருகாட்சியைத் தந்திரு சிறைக்கணுந் திரண் முத்தமள்ளி அள்ளி
வெண்டிரைக் கைக்கொண்டு வீசி ஒழுகும் பாலி வெள்ள நீராடி அருளே!
    விடையுடைக் கடவுள் புணர் கொடியிடைக் கௌமாரி வெள்ள நீராடி அருளே!   (83)

கண்ணார் அணங்கின் ஒரு கற்புடைய மங்கைதன் காதலன் சேட்செலமிகும்
    கவலையுற்று அரிய காமத்துயரின் மூழ்கி நற் கவினுரு வளர்த்த தென்னத்
தண்ணார் சுவேதத் தனாதுருக் காட்டித் தடஞ்சிகர மருவு நந்தித் தனிப்பொருப்
    பென்னும் ஒரு தாய் மனையினின்று மொண்டரை எனுந்தோழி துணையா
உண்ணாரினோடும் கருங்கடல் துணைவனை உகந்து அணைந்து இன்பமுறுபாக்
    குலப்பில் வரையுள்ளன தரங்கக் கரங்களால் உந்தி வந்தந்தி புகலும்
விண்ணார் எனப்பெருகி ஒழுகும் திரைப்பாலி வெள்ள நீராடி அருளே!
    விடையுடைக் கடவுள் புணர் கொடியிடைக் கௌமாரி வெள்ள நீராடி அருளே!   (84)

நட்புலவு உள்ளத் திருச்சேடி மாதருடன் நங்கள்குலத் தெய்வமான
    நங்கைநீ வெண்ணீர்த் தடந்துறை குடைந்திட நயப்பற்ற நடலையுடையார்
கட்புலம் கதுவாப் பசுங்கதிர்த் திருஉருக் காந்தி போய்ப்பாய்ந்து அணைவதால்
    காளிந்தி நதியொடு கங்கை வந்தது எனும் காட்சி கண்டு அதிசயமுறப்
புட்புல வருந்தப் பொருந்தியிடு முத்தலைப் பொருமுனைச் சூற்படையுடைப்
    புங்கவனெடுஞ் சடையின் மாற்றவளுருக் கொண்டு போந்ததென்று எள்ளாமலே
விட்புலத்தமுதில் பரந்தொழுகி வருபாலி வெள்ள நீராடி அருளே!
    விடையுடைக் கடவுள் புணர் கொடியிடைக் கௌமாரி வெள்ள நீராடி அருளே!   (85)

மன்னர்க்கு மன்னனாய் இந்நிலத்து அரசுரிமை மன்னியதிருத் தொண்டைமான்
    மதிப்பரும் வரம்பறு பெரும்புகழ் திரண்டொரு வழிக்கொண்டு வந்ததெனவும்
கன்னல் சராசனக் கரதலத்தொருவனைக் கான்முளை எனப்படைத்த
    கமலத் தடங்கண்ணர் கைக்கொண்ட நேமியால் காயிராக்கதனை மேனாள்
பின்னப்படக் கொன்ற காருடற் போர்வையால் பேர்பெற்ற மேதினி எலாம்
    பெட்புறும் பாலால் விளக்கிப் பெருஞ்சுசி பிறங்கிடப் போந்த தெனவு(ம்)
மின்னல் பசும்பொன் கொழித்துவரு தண்பாலி வெள்ள நீராடி அருளே!
    விடையுடைக் கடவுள்புணர் கொடியிடைக் கௌமாரி வெள்ள நீராடி அருளே!   (86)

தங்கும் சுவணத் தகட்டகட்டும் தடஞ்சேர் கணங்கள் நுடங்கெழுந்து
    சாருமிரண்டு புறத்தும் வளர் தண்ணம் பொழில் பூந்தேன் கவிழ்த்து
மங்குல் படலத்து ஊடுருவி மதியின் அகடு கிழித்தங்கண்
    வான்யாற்றுலவி இளைப்பாறி வளங்கூர் உடுமண்டலத் தணைந்து
நங்கள் குலமென்று அவை தழுவி நாளும் பழகும் கெழுதகைமை
    நயம் பாராட்டி மீண்டு அணைந்து நாப்பண் உகைத்துக் குதித்து உலவும்
பொங்கும் பெருமைத் தடம் பாலி புது நீராடி அருளுகவே!
    பொற்பார் முல்லைக் கொடியிடையாள் புது நீராடி அருளுகவே!   (87)

மையார் சிறைவண்டு அடைகிடக்குமலர்க் காவனையநின் குழலின்
    மண்ணிப்பூசுமான் மதமு மணக்கும் புழுகுந்துகிலிகையால்
ஐயார் தொய்யில் பொறித்த குயத் தணிந்த களபச் சந்தனமு
    மாடக் கரைந்த அளற்றின் உவராழிக் கடலும் குமுகும் என
நெய்யார் குலப்படையாளி நிறையும் கருணைப் பிரளயத்தை
    நிகழாவிகளுக்கு அளிப்பதென நெட்டாவிகளின் அகநிரப்பிப்
பொய்யது ஒழுகும் சுவைப்பாலிப் புது நீராடி அருளுகவே!
    பொற்பார் முல்லைக் கொடியிடையாள் புது நீராடி அருளுகவே!   (88)

காலப்புயல் கற்றைக் கூந்தற் கதிர்த்த முடியின் அடிபரந்து கனத்துப்
    புடைத்துப் பருத்து விம்மிக் கச்சுக்கு அடங்காக் கனதனத்தார்
சாலச் செழுங்குங்குமம் சிதறித் தளிர் போல் நிறத்தங் கலுழ்மேனி
    தாம் கண்டறியா வகை முழுதும் தழை சேப்பாய் ஒற்றுமைப்படலால்
வாலப் பசுங்கோகிலம் அனையார் மனையோர் மாமை நோக்கி மதி
    மருளாமுன்னம் அவரோடும் வஞ்சிக் கொடியே நின்னருளைப்
போலப் பரந்து வரும்பாலிப் புது நீராடி அருளுகவே!
    பொற்பார் முல்லைக் கொடியிடையாள் புது நீராடி அருளுகவே!   (89)


            (வேறு)

மம்மர்ப் பிணியுறு சென்மத்துழிதருவாரை எடுத்தருளு
    மலர்புரை பாணிக் குருகு கறங்கிட வரு பாணிக்குருகு
மம்முற் றினமுடனருகு சிலம்பிட வலர் கடதைந்தணி கூ(ர் )
    அளகத்துறை வண்டுடன் அளகத்துறை வண்டுமமர்ந்தாட
வெம்மைக் கரிசற என்னை அளிக்கு நின் விழியிணை சிவவாமே
    வெண்ணகை விரிதரு செம்பவளம் பொரு மெல்லிதழ் வெளிறாமே
பொம்மற் கதிர்மணி குவிதரு பாலிப்புது நீராடுகவே!
    புல்லக் கொடியுடை முல்லைக் கொடியிடை புது நீராடுகவே!   (90)

பற்றலர் சாய வரிக்கணை தொட்ட பரம்பொருளுக் கமுதே
    பாற்கடலூடொரு பச்சை அடப் பெடை பாய்ந்து குடைந்திடல்போல்
தெற்றென வந்தருவிப்புனல் கண்டு செழும்பிடி யாடுதல்போல்
    தேசுவிளங்கும் இளங்குயில் ஒன்று திரைப்புனல் தோய்வதுபோல்
வற்றி அறாத தடத்தொரு கலவ மயிற்பே டாடுதல்போல்
    வாசனை யோசனை கமழ் கங்கா சலமண்டு பசுங்கிளிபோல்
போற்றிரள் வாரி வரன்றிய பாலிப் புது நீராடுகவே!
    புல்லக் கொடியுடை முல்லைக் கொடியிடை புது நீராடுகவே!   (91)

        10. பொன்னூசல் பருவம்

சீதளச் செக்கர்க் குருச்சுடர்ப் பவளத் திருக்கால் உருக்கொள நிறீஇத்
    தெள்ளொளிய வச்சிரத் திரள் விட்ட மழகுறச் சேர்த்தி வயிடூரியமுறுங்
கோதிலாச் செம்பொன் கொழும்பலகை இட்டுக் குடைந்த வெண்டரளங்களாற்
    கோமளக் கதிர்வட மணைத்தொப்பிலாமல் குயிற்று மணியுஞ்சன் மிசைநின்
சோதிவளர் நீனிறத்திருமேனி அழகு இலகு சுந்தரச் சாயை படியாத்
    துகள் தீரு மரகதக் குன்றிலொரு தோகை மயிறுயல் வருங்காட்சி யுறழப்
பூதலத்தவர் பரவு முல்லைவளர் கல்யாணி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (92)

தகட்டிதழ்ப் பங்கயச் சதுமுகத்தேவும் ஒரு தாமோதரக் கடவுளும்
    சார்வரிய தண்டாச் சிவாநந்த மயமான தாபரப் பரியங்கமேல்
பகட்டுடைப் பரமேசனான மணி மஞ்சமேல் பரமபீடத்தினடுவண்
    பரம்பு பரிபூரணக் கருணைப் பிழம்பாய்ப் பதிந்து இனிது வீற்றிருப்போய்!
முகட்டுடைப் பலகோடி அண்டமும் பல்லுயிரு முறைமுறை உயர்த்தெடுத்து மூவாத
    கன்னிநீ ணன்னாகினந்தின முறுக்கவிழ் நறைச் சந்தனப்
பொகுட்டமரு முல்லைத் திருப்பதி புரக்கு மயில் பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (93)

நத்தேயு மொண் களத்திடுகிடை மடந்தையர்கள் நகை நிலாமுன்றிலேறி
    நகுமாடகத்தைத் திருத்தி இசை வீணையின் நரம்புளர்ந் தமுதொழுக்க
முத்தேய் முருந்தனைய மூரலினு மந்நலார் முகமதிக் காந்திதனினு
    மொய்த்தவவ் வரமியத் தண்ணந்து காந்தமெனுமுழு மணிகள் நீர்பில்கிடக்
கொத்தேறு வீமருவு குஞ்சி ஒண் காளையர் குழுக்களத்தன்மை காணூக்
    கூறுமவர் இசையையு முகமண்டலத்தையுங் கொண்டாடி மிக வியக்கும்
புத்தேளி ரும்பரவு முல்லைபதிக் கரசி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே !   (94)

தெள்ளொளிய வெள் நித்திலம் சுழித் தெறிகின்ற தெண் திரைக் குண்டு அகழிசூழ்
    சீர்கொண்ட பூகண்ட மதிலுள்ள பதிகளில் சீகரப் பூங்கோயில் சே(ர்)
ஒள்ளிய விடங்கத்தின் எண்மடங்கு அற்புதத்து ஒப்பிலாச் சினகரம் எடுத்து
    ஒருமுடி கவித்தாண்ட தொண்டைமான் கண்டவர்கள் உறுதிட்டி பட்டிடாமல்
வெள்ளிய எருக்கின் இருதூணாடி நாட்டுபு விளக்கிய திருக்கோயிலில்
    வீற்றிருந்து அருள்புரியும் ஆனந்த வெள்ளமே வேலிப் படப்பை நடுவே
புள்ளி மறிதுள்ளி வளர் முல்லைபதிக்கு இறைவி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (95)

விருப்பொடு வெறுப்பை அறவிட்ட அடியவர் உளவிரைத் தாமரைக் கோயிலில்
    வீற்றிருக்கின்ற ஒரு தோற்றமதுபோன் மெனவும் மெய்ப்போத வழிதெரிக்குன்
திருபொலியும் ஆரணச் சென்னி மிசை மன்னிவளர் தேசினைப்போன்மெனவு(ம்) இத்
    திருஊசல் மிசை இனிது எழுந்தருளி எழுதரிய சிற்றிடைப் பேரல்குலா
உருப்பசியை மேனகையை உள்கிடச் செயுமாமை ஓவியப் பாவையனையார்
    ஓவாமல் ஊட்டுசெம்பஞ்ச டியினொடு சிலம்பொலியராய்த் திரிமருகுகுழ்
பொருப்பனைய மாளிகைத் திருமுல்லை வடிவழகி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (96)

சாற்றரிய பல்கலைக் கேள்வி ஆய்ந்து உள்ள தருக்கொடு தருக்கமிட்டும்
    சதுமறை தெரிந்து முறுசாத்திரம் உணர்ந்தும் ஒரு சங்கரற்கு அன்பு செய்யார்
காற்றினைச் சருகினை நுகர்ந்து எண்ணில் காலங்கள் கண்மூடி யோகிருந்தும்
    காண்டரிய தூண்டா விளக்கினை அருள்கணால் கண்டு தண்டாமல் விழிநீர்
ஊற்றிருந்து ஓடச் சிவானந்தமது உண்டு உறங்கும் அருமாதவரினும்
    உண்மைப் பெருந்தவச் சீருடைய அடியவர்கள் ஒருமித்து இறைஞ்சி நாளும்
போற்றுநல் திருமுல்லைவாயில் பராசத்தி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (97)

கற்பனைய வெண்ணகைச் சிறுநுதல் தெய்வக் கலைக்கடல் தெள்ளமுதமும்
    கமலையும் சுந்தரியும் உண்டாட்டு மகளிரும் காதலில் கொண்டாடவே
செற்பொரு கொடைக்கையின் அருச்சுனன் அருச்சனை செயப்பாசுபதம் அளித்தே
    சிவபரம்சுடர் எங்கள் மாசிலாமணி வரதர் செவ்விதரு முக்கண் களும்
அற்புதத் திருவிருந்து அயரச் சிவானந்த அழிவிலா வெள்ளத்தினூடு அடியவர்
    துளைந்தாடுறச் சராசரமான அகிலமும் அசைந்தாடவே
பொற்புவளர் முல்லைப் பதிக்குள் பெருஞ்செல்வி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!    (98)

ஊக்கமுறு கூருகிர்க் கருவிரல் பெருமந்தியும்பர் வானளவு நாகத்
    துருகேழ் கரும்பணையின் வெண்மலர் திரள் பரித்து ஓங்கு மந்தர நிலத்தில்
நீக்கமறும் வண்ணம் சொரிந்துகளவப்போது நிலமிசை ஒருங்கு வருதல்
    நீனெடும் சினைபோய விசையினால் கிழிபட்ட நிறை கதிர்க்கற்றை மதியின்
தேக்கமுறும் அமுதம் சரிந்து ஒழுகினால் எனச் செவ்வி தெரிவிக்க வருகே
    தேங்கொன்றை பொன் சொரிதல் பொன்னாடு மித்தலம் சேர்ந்தெனக் காட்ட வகுளம்
பூக்கண் மணநாறு நற்றிருமுல்லை வருவல்லி பொன்னூசல் ஆடி ஆருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (99)

கன்மருவும் என்னுடைய நெஞ்சைக் குழைத்து அருட்கருணையால் என்னை, உன்னைக்
    கவிபாடும் வண்ணம் உன் அமுதத் திருக்கடைக் கண் அருள்புரிந்து ஆண்ட பைம்
புன்மருவு நுண்துளிகள் ஆதித்தனைக் கண்டபோது அற்ற தன்மை என என்
    புன் கண்டுடைத் தருளி அன்றுமுதல் என்னுள் புகுந்து ஆட்டிநின்ற துணையே
தென்மருவு பைம்பூண் சிறார் விடு மணிப்படம் சேண் அந்தரத்தின் உலவச்
    செஞ்சாறு செய்யுங் கொடிப்பட மென தினம் தேவர் தொழ வந்தணவுறும்
பொன் மருவு திருமுல்லை பூத்த சுந்தரவல்லி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (100)

செங்கதிர்ப் பிரபைதனை வெல்லு(ம்) மாணிக்கச் சிலம்பும் திருத்தண்டையும்,
    சில்லரிக் கிண்கிணியும் ஆடகப் பாடகச் செய்யதிரு ஆபரணமும்
சங்கையுறு மிட்டிடைப் பட்டாடையும், கதிர் தழைத்த திரு ஒட்டியாணமும்
    சந்திர கலாபமும், சக்ரவாகம் பொரு தனங்களும், செங்கை மலரு(ம்)
மங்களத்திங்கள் முகமண்டலமும் அம்பவள வாயும் வளர் கருணை வெள்ளம்
    வற்றாத கண்ணிணையும் வள்ளைக் குழைக்காதும், வாசக் கருங்கேசமும்
பொங்கழகு பூத்த வளர் முல்லை மரகத வல்லி பொன்னூசல் ஆடி அருளே!
    பொற்சரண பங்கேருகக் கொடியிடைக் கௌரி பொன்னூசல் ஆடி அருளே!   (101)

            முற்றும்.

            திருச்சிற்றம்பலம்
 

Related Content