logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

திருச்சிற்றம்பலம் 
கணபதி துணை

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய 

1. பாயிரம்  1- 36
2. திருநாட்டுப்படலம்  37- 146
3. திருநகரப்படலம்  147 - 267
4. நைமிசாரண்யப்படலம் 268 - 308
5. புராண வரலாற்றுப் படலம் 309- 340
6. தலம் முதலிய விசேடப் படலம் 341 - 365
7. பிரமன் சாபம் பெற்ற படலம் 366 - 422
8. பிரமபுரிப் படலம்  423 - 502
9. அம்பர்ப் படலம் 503- 633
10. வைரவப் படலம் 634 - 706
11. விமலன் முத்தியடைந்த படலம் 707- 751
12. காமனருச்சனைப் படலம்  752 - 776
13. மாற நாயனார் வழிபடு படலம் 777- 814
14. செங்கட்சோழ நாயனார் வழிபடு படலம் 815 - 851
15. நந்தன் வழிபடு படலம் 852 - 1007

       பாயிரம்

    காப்பு : விநாயகர்

1. சீர்பூத்த மணங்கவரும் பொறிதனைச்சார்ந் தொன்றியமர்
    திறமு நாளும்
ஏர்பூத்த விடுதல்பிறி தொன்றனுக்கின் மையுமிதயத்
    தெண்ணி யந்த
நீர்பூத்த பொறியுவப்ப வுரிவிடய மிடமணங்கூர்
    நிலந்து ழாவும்
வார்பூத்த புழைத்தடக்கை யொருகோட்டு வாரணத்தை
    வணங்கி வாழ்வாம்.

    படிக்காசுப் பிள்ளையார்

2. அடிக்காசு மனர்மாற்றா ரடர்ந்தூறு செயினகல
    லன்றி யாவி
மடிக்காசு குணத்தீரென் றடியார்முன் னொடியாமுன்
    மருவுந் தோன்றல்
கடிக்காசு வளர்படப்பூண் முடிக்காசு மதியொடணி
    கடவு ளெங்கள்
குடிக்காசு தவிர்த்தருள்செய் படிக்காசு மழகளிற்றைக்
    குறித்து வாழ்வாம்.

    பிரமபுரேசர்

3. பூமேவு கற்பகநாட் டிமையவரு மமையவரும்
    புகழ்சால் வேந்தும்
பாமேவு மறையானு முறையானுந் திக்கணவற்
    படைத்து ளானும்
மாமேவு மற்றையரு முற்றயரும் பணியேற்று
    வரங்க ணல்கிக்
காமேவு திருவம்ப ரமர்பிரம புரேசர்பதங்
    கருதி வாழ்வாம்.

    பிரமலிங்கம்

4. கள்ளமணுத் துணையுமுறாப் பேரன்பின் மிகப்பொலிசெங்
    கண்ணி னார்தம்
உள்ளமென வவரியற்று கோயிலெலா முவந்ததன்றி
    யுவகை மேன்மேல்
நள்ளமிளிர் தரும்பிரம வரைக்கோயி லகம்புகுந்து
    நவில்வார் பாசம்
தள்ளவளர் பெருங்கருணைப் பிரமலிங்கப் பெருமானைச்
    சரணஞ் சார்வாம்.

    பூங்குழனாயகியம்மை

5. மணங்கமழுங் கோகனக மலரெனவுட் குறித்திரவி
    வருத்த றீர்ப்பான்
இணங்கவிருள் வணங்கலென வாக்கமுத வரமாத
    ரெல்லா ருந்தம்
குணங்கிளருங் கருங்குழறாழ்த் திடவுவக்குஞ் சேயடிப்பூங்
    கோதை யோதை
உணங்கருஞ்சீர் வம்புவனப் பூங்குழனா யகியைமனத்
    துறுத்தி வாழ்வாம்.

6. கலைபொருணச் சுநர்விளர்த்த சிவந்தவர
    விந்தமெனக் கருதற் கேற்ப
அலைவரும்பொன் வாணியம ரந்நிறத்தா
    மரையேயா யமரா ரஞ்சும்
நிலைவிழைநர் பசுங்கமல மெனக்குறித்தற்
    கேற்புறவந் நிகழ்ச்சி யேயாய்
மலைவகலப் பொலியுமுக வம்புவனப்
    பூங்குழல்பொன் மலர்த்தாள் போற்றி.

        நடேசர்

7.அலங்குமலர்க் கரமூன்று முத்தொழிலாற்
    றிடும்யாமொன் றாற்றே மாகில்
இலங்குபய னென்னையென வெண்ணுபுமற்
    றிரண்டுநவிற் றிருதா ளுள்ளும்
கலங்குதறீர்த் தருளொன்றைக் காட்டிடுதல்
    பூண்டொருகை கவியா நிற்கத்
துலங்குமணி மயமன்று ணின்றுநடம்
    புரிமுதலைத் தொழுது வாழ்வாம்.

    சிவகாமியம்மை

8. தனக்கெனவொன் றாயினும்வேண் டாதவனே
    பெருங்கருணைச் சத்த னாளும்
மனக்கினிய சத்தியுமத் தகையளே
    யெனப்புகலும் வார்த்தைக் கேற்பச்
சினக்குமெழு பவப்பகைதீர்ந் தெவ்வுயிருஞ்
    சிவானந்தத் தெண்ணீர் மூழ்க
வனக்கனக மன்றவன்செய் நடங்காணும்
    பராபரையை வணங்கி வாழ்வாம்.

    தட்சிணாமூர்த்தி

9. செய்தொழிலி னளவுமருட் சத்திபதி
    தலினளவுஞ் சித்தாந் தத்தர்
எய்பொருளி னளவுமுத்தி யிருப்பளவு
    மத்துவிதத் தியல்புந் தேறக்
கொய்மலர்நே ரோருகைவிர லொவ்வொன்றா
    மடக்கியிணை கூட்டி யான்றோர்
மெய்கெழும வினிதுணர்த்தி யாலடிவா
    ழரசடியை விரும்பி வாழ்வாம்.

        வேறு
        
        வைரவர்

10. கவைமுனந் தெரிந்து பின்புதற் குதவுந்
    தூத்தவ வேட்டுவர் பொருவச்
செவைமலர்க் கிழவன் றலைச்சுவை முன்னந்
    தெரிந்துபின் கைக்குத வுகிரும்
நவைகொண்மா னெய்த்தோர்ச் சுவைமுனந் தெரிந்து
    நயந்துபி னத்தலைக் குதவும்
கவைபடு திறற்சூ லமுங்கரங் கொண்ட
    கடவுடன் சேவடி போற்றி.

        வேறு
    
    படிக்காசு விநாயகர்

11. பாதகங்கைக் கொண்டுழலும் படிறர் தமக்
    கொருஞான்றும் பாலி யாது
போதகங்கைக் கொண்டருச்சித் திடையறாப்
    பேரன்பு புரித லாய
வேதகங்கைக் கொண்டவர்க்கே யுவப்புதவக்
    கொண்டமரும் விதமா லென்ன
மோதகங்கைக் கொண்டமரும் படிக்காசு
    மழகளிற்றை முன்னி வாழ்வாம்


    முருகப் பெருமான்

12. வள்ளியபங் கயக்கிழவன் முடிகொடுத்த
    லொடுவணங்கி மற்றை வானோர்
தெள்ளியபொன் முடிகொடுத்த புறச்சுவட்டுப்
    பொலிவினொடுஞ் சிறிய நாயேம்
கொள்ளியசூட் டலினெமது முடிகொடுத்த
    வகச்சுவடுங் குலவக் கொள்ளும்
ஒள்ளியகை காலொடம ரொருமுருகப்
    பெருமானை யுன்னி வாழ்வாம்.

        வேறு

        திருநந்தி தேவர்

13. சிகரமே வியகை லாயஞ் சிறப்புறக் காத்த லோடும்
மகரமே வியநீர் வைப்பும் வானமு மதித்து நாளும்
பகரமே வியபே ராளன் பரசிவ னவனப் பேர்மேல்
அகரமே வியபே ருங்கொ ளண்ணலை யெண்ணு வாமே.

        அகத்தியர்

14. அறந்தரு தீக்கை பல்ல வவற்றுளும் பரிசத் தான்முத்
திறந்தரு மலக்கோட் பட்ட வுயிரெலாஞ் சிவமாச் செய்வேம்
நிறந்தரு முலகத் தென்று நிகழ்த்தல்போ னெடிய மாலைத்
திறந்தரு சிவமாச் செய்த செந்தமிழ் முனிதாள் போற்றி.

        திருஞான சம்பந்தர்

15. அளிகிளர் சரியை யாதி யாற்றுந ரடையும் பேறு
தெளிகிள ரீதீ தென்று தெரிக்குநூ லிறைக்கு மாறாக்
களிகிளர் திரும ணத்திற் கலந்தநாற் றிறத்தெல் லோரும்
ஒளிகிளர் சோதி சேர வுறுத்தினார்க் கடிமை செய்வோம்.

        திருநாவுக்கரசர்

16. ஆலம்பெற் றிருண்ட கண்டத் தண்ணல்பா னேமி கொள்ளக்
காலம்பெற் றலரொன் றற்காக் கண்ணிடு மால்போ லாது
சீலம்பெற் றருமை யாமோர் செந்தமிழ்ப் பதிகம் பாடிச்
சூலம்பெற் றுயர்ந்த வையர் துணையடி முடிமேல் வைப்பாம்.

            சுந்தரர்

17. அதிர்சினக் கூற்றுக் கண்டோ ராற்றினுண் முழுகி மேனி
பிதிர்தர வேறு தாங்கிப் பிறங்குவை குந்தஞ் சார்ந்த
கதிர்மணி வண்ண னாணக் காமர்வெண் களிற்றின் மேற்கொண்
டெதிரிறண் கயிலை சார்ந்தா ரிணையடி முடிமேல் வைப்பாம்.

        திருவாதவூரர்

18. புத்தனாய் நூலொன் றோதிப் புன்மையே புரிந்தோ மிந்த
அத்தனாய் தரினென் னாகு மென்றுமா லச்சங் கொள்ளச்
சுத்தனா யவனூ லேற்றார் தொகையெலாஞ் செக்கி லிட்ட
முத்தனாய் மணிநேர் வார்த்தை முதல்வன் றாண் முடிமேற் கொள்வாம்.

        சண்டீசர்

19. வலனுயிர் குடித்த தோன்ற லொருபசுப் புரக்கு மாண்பில்
கலகமெண் ணில்ல மேவல் கண்டுமற் றதற்கஞ் சாது
நலனமை சேய்ஞ லூரி னாளுமோ ரிடையூ றின்றிப்
பலபசுப் புரந்த வையன் பாததா மரையுட் கொள்வாம்.

        அறுபத்து மூவர்

20. மாதக வுயர்நீ றுங்கண் மணியுமைந் தெழுத்தும் போற்றிப்
போதகச் சரியை யாதி நான்கினும் பொருத்தங் கொண்டு
மேதக வுலக மாதி மேவிய வறுபான் மூவர்
பாதக மலமே யெங்கள் பாதக மலஞ்சி தைக்கும்.

        வேறு
    
    சோமாசிமாற நாயனார்

21. வாசி மாறன் வழிச்செல லென்பது
சீசி மாறன்பர் செவ்விதென் னார்களார்
நேசி மாறன்வில் லோன் றொழு நீர்மைச்சோ
மாசி மாறன் மலர்க்கழல் போற்றுவாம்.

    கோச்செங்கணான்

22. நங்க ணான்முக னண்ணா னெழுதிட
வெங்க ணான்யமன் மேவான் வருத்துற
அங்க ணானரு ளாலுயர்ந் தான்றகோச்
செங்க ணானடி சென்னியி ருத்தினே.

        சேக்கிழார்

23. ஓங்கு சைவத் துயர்பரி பாடையும்
வீங்கு பேரொளிப் பத்திசெய் மேன்மையும்
தேங்கு பேறுந் தெரித்தருள் சேக்கிழான்
பாங்கு சேர்மலர்ப் பாதம் பரசுவாம்.

        அடியார்கள்

24. அம்ப ரீசற் ககில பணிகளும்
உம்பர் போற்ற வுஞற்றுமெய் யன்பரும்
இம்பர் மற்றுள சைவத்தி யாவரும்
நம்ப ரேயென நாந்தொழ மேவுவார்.

        வேறு

    நமச்சிவாய தேசிகர்

25. இறுதியில் பேரா னந்த வின்பமெவ் வுயிரு மேவ
மறுவில்வண் டுறைசை நாளு மன்னிவாழ் நமச்சி வாயன்
நறுமலர் சமழ்க்கும் பாத நம்முடிக் கணியப் பெற்றோம்
பெறுமவற் றிதற்கு மேலாப் பெறுவதொன் றுண்டு கொல்லோ

    அம்பலவாண தேசிகர்

26. அருமறை பொலிகோ முத்தி யம்பல வாண தேவன்
கருமல மூலத் தோடு கருகுபு கேட்டை மேவப்
பொருவருஞ் சோதி யத்தம் பொருந்தவைத் தென்னை யாண்டு
திருவடி புக்கில் செய்தான் செய்வதொன் றிதன்மே லுண்டோ.

        வேறு

    குரு பரம்பரை

27. ஆயகை லாய பரம்பரைத் திருவா
    வடுதுறைச் சுப்பிர மணிய
தூயவா ரியன்போ தத்தின்மெய் கண்டான்
    றொக்கசித் தியினரு ணந்தி
ஏயவொண் பிரகா சத்துமா பதியே
    யென்பரைம் பதமுணர்த் துதலான்
மேயநா நமச்சி வாயனென் றெடுத்து
    விளம்புதுந் தலைமைகொண் டென்றும்.

        வேறு

        நூல் செய்வித்தோன்

28. சொற்கொண்ட திருவம்பர் நகர்புரக்குங் கோமான்
    றூயகங்கா குலன்மேழித் துவசன்மணக் குவளை
கற்கொண்ட புயத்தணிவோ னிராமலிங்க வள்ளல்
    கனதவத்தில் வந்துதித்த வேளாளர் பெருமான்
விற்கொண்ட புருவவய லார்பொல்லா னென்று
    விளம்புநல்லா னல்லொழுக்க முருக்கொண்டா லனையான்
நற்கொண்டல் பொருங்கரத்தான் சைவசிகா மணிநன்
    னாவலர்கொண் டாடுவே லாயுதபூ பாலன்.

        வேறு

        நூல் வரலாறு

29. பெருமையிற் பொலியு மம்பர்ப் பெருந்திருக் கோயின் மேய
கருமையிற் பொலியுங் கண்டக் கடவுளார் திருப்பு ராணம்
அருமையிற் பாடு கென்ன வடமொழி யனைத்து மாராய்ந்
தொருமையிற் பாட லுற்றேன் றமிழினா லுரை மறாதே.

        அவையடக்கம்

30. பிரமனார் பூசை கொண்டு பெருந்திருக் கோயின் மேய
பரமனார் புராணம் பாடும் பண்புனக் கில்லை யென்னில்
உரமனா ரணங்கி னோர்முன் னோரைவெஃறுரும்பு போலத்
திரமனா ரருளி லேசஞ் சேர்தரி னுண்டா மன்றே.

31. செறிகுறி லுடையைந் தோடு
    குறிலிலா விரண்டுஞ் சேர்த்து
மறிவினெட் டுயிரே ழென்று
    மாத்திரை நோக்கிக் கொள்வார்
அறியிய லுடைய பாவோ
    டியலிலா வடியேன் பாவும்
குறியிலான் சரித நோக்கிக்
    குறிகொள்பா வென்றே கொள்வார்.

32. நன்சொலே கொண்டு போற்ற னன்மையா மதுமுட் டுற்றால்
புன்சொலாய் வந்த கொண்டு போற்றலுங்  கடன்மை யாகும்
கொன்சொலார் நறிய சந்தக் குறடுமுட் டுற்ற தாலே
முன்சொல்வார் மூர்த்தியார்தம் முழங்கைதேய்த் திட்டா ரென்று.

33. விராட்டொடு சம்ராட் டென்னு நாமத்தும் விசேட மாகச்
சுராட்டெனு நாமம் பூண்ட சுயம்பிர காசன் மன்ற
மராட்டவன் மதியொ டும்பாம் பணிந்தமை மதிக்கி னொன்றோ
டிராட்டையி னெழன்முற் பாவோ டென்னது மேற்றற் கன்றோ.

34. பெரியர்போ லியானும் பெம்மான் பேரருட் புராணங் கூறல்
தெரிதரின் மாயோன் போற்சிற் றெறும்புமண் முழுதுமுண்பான்
புரிவொடு மெழுஞ்சற் றாய போதிற்றே னுண்ண னீத்துப்
பரிவினீ முனிபோ லாழி யுண்ணவும் படரு மன்றே

35. இழிதிணை யுயிரு மெய்யு மிலங்கறி வொடுமி யைந்தே
இழிபொழிந் துயர்புற் றாற்போ லிறையவன் சரிதத் தோடும்
இழிதக வுடையேன் சொல்லும் பொருளுமுற் றுறவி யைந்தே
இழிபொழித் துயர்வு பூணு மென்பதற் கைய மென்னே.

        வேறு

    ஆக்கியோன் பெயர்

36. நீண்டதிரு மால்பிரமன் காணரிய
    வடிமுடியோ னிலவு மேன்மை
பூண்டதிரு வம்பர்மான் மியமுழுதுஞ்
    செந்தமிழாற் புனைதல் செய்தான்
காண்டமலி சுனைவளஞ்சா றிரிசிரா
    மலைவளருங் கருணை யாளன்
மாண்டகலை முழுதுணர்ந்த மீனாட்சி
    சுந்தரநா வலவ ரேறே.

        பாயிர முற்றியது.
        (திருவிருத்தம் - 36)

        2. திரு நாட்டுப் படலம்

37. புண்ணிய வுருவத் தாய்வம் புவனப்பூங் குழலா ளோடும்
தண்ணிய பிரம லிங்கத் தம்பிரா னினிது மேவி
அண்ணிய வுயிர்கட் கின்ப மருள்செயு மம்ப ராதி
நண்ணிய வயங்கு சோழ நாட்டணி சிறிது சொல்வாம்.

38. பரன்வலக் கட்கு லத்துற் பவித்தவன் வழியு தித்து
விரவுமற் றவற்கு டுக்கை கொடுத்ததைக் கொடிமீ தேற்றி
உரவுகொ ளவன்றோட் டாரு ளொன்றுகொண் டுவப்புற் றந்த
வரனையே தொழுவோ ராளு மாண்பது சோழ நாடு.

39. ஈதியா முரைப்ப துண்மை யிரட்டுற மொழிதல் செய்தாம்
ஆதிநூ லாய வேத மாகமம் புராண மற்றும்
ஓதிய மிருதி யெல்லா முணருநீ ராய வாற்றால்
தீதிலா வண்ண முண்டு தேக்கெறி வதுசோ ணாடு.

40. ஒளிர்சிவ லோகங் கண்ட வொருவன்றென் னாடு நீங்கித்
தளிர்செறி பொழிற்றன் பாலோர் தலத்தடைந் தகலா னாகிக்
குளிர்பணி யனைத்துஞ் செய்து கொள்ளரு மின்ப மேவி
மிளிர்திற மகிழ்ச்சி மேன்மேல் விளைத்தது சென்னி நாடு.

41. கனிபடு சோலை யல்ல காமரு கழனி யல்ல
நனியுயர் களங்க ளல்ல நாடுகா லோடை யல்ல
பனிகிளர் குடிஞை யல்ல பயில்வள நகர மல்ல
இனியபொற் றளிக ளாக்கொண் டிலங்கிடு வதுநீர் நாடு.

42. போகியொண் டலைமேற் றங்கால்
    பொருத்தியுற் றோர்கண் மேற்கண்
போகிய வறமுண் டாக்கிப்
    பொருணிறை செல்வம் வாய்ந்து
போகிகான் மிதிப்பத் தெவ்விப்
    புண்ணியங் குறையுற் றுக்கீழ்ப்
போகிய விடும்வா னாட்டை
    யசிப்பது பொன்னி நாடு.

43. பொன்னியு மதிற்கி ளைத்த பொருதிரை கெழுபல் யாறும்
மன்னிய கைக ளாக வான்பெரும் பழன மெல்லாம்
துன்னிய படைக ளாகக் கொண்டுசூழ் வறுமைத் தெவ்வை
உன்னிய கெடுப்ப தென்று முறுபுகழ் வளவ னாடு.

44. நீர்வள முடைமை யானு மொளிவள நிரம்ப லானும்
போர்வள வெற்றி யானும் புல்லிய சுரநா டென்றும்
ஓர்வள நிசிநா டென்றும் வெற்றிதோற் புடைநா டென்றும்
சீர்வள வானா டெள்ளிச் செழிப்பது கிள்ளி நாடு.

45. அயலமை பார மெல்லா மடுப்பினு மஞ்சா தோம்பி
இயல்புறு மிறைமன் னற்கீந் திறாதநோய் வருத்தா நின்ற
மயலமை பசியு மின்றி வைப்பள வில்ல கொண்டு
புயல்வள மேன்மே லோங்கப் பொலிகுவ தபய னாடு.

46. நீருங்கா விரியே வேந்து நேரியர் பிரானே மண்ணும்
ஓருஞ்சோ ணாடே யென்ன வுயர்மொழிப் புலவ ரியாரும்
தேருஞ்சால் பமையக் கூறுந் திருப்புகழ் பெற்ற நாடு
பாரும்பா தலமும் வானும் பார்க்கினும் பிறிதொன் றின்றே

        மழைவளம்

47. பாகமா லொருத்தன் மாயப் படர்பெருஞ் சீய மூரும்
நாகநேர் நிறத்த வாகி நரலையி னடுவட் புக்கு
மேகமார் புனன்மிக் குண்டு செலுத்துமவ் விறைதன் மேனி
மோகமார் நிறமே யொப்பக் கறுத்தன முழுது மம்மா.

48. வெள்ளிய கொண்மூ வீரை விரவுபு மெய்க றுப்புக்
கொள்ளிய வறலுண் காட்சி கோமக னூர்தி தம்முள்
நள்ளிய வொன்று போற னயப்பதி னவனே போறல்
எள்ளிய தாகா தென்ன வியைதரக் கோடன் மானும்.

49. பூருவ திசையி னின்றும் புறப்படு மகவான் போலப்
பேருவர்க் கடலி னின்றும் பெயர்ந்துமை மேக மெல்லாம்
ஓருவ மான மேனு முரைப்பதற் கொல்லா வாகிப்
பாருவப் பெய்த மேன்மேற் படர்ந்தன விண்ண மெங்கும்,

50. காரியி னெழுந்த மேகங் கடுமைசெய் வேனி லென்னும்
மூரியந் தகுவர் தம்மை முதலொடு முருக்க வெண்ணிப்
பேரிய முழக்கி யாங்குப் பிறங்குரு மொலியெ ழுப்பிக்
கூரிய வயிர வாளின் வீசின குலாவு மின்னு.

51. கொடுமைசெய் முதிய வேனிற் குலமுதல் பரிதி யென்று
முடுகுபு மாய்ந்த கொண்மூ மூண்டபா ரதவெம் போரில்
படுமணி வண்ண னங்கைப் பயிலுஞ்சக் கரமெ ழுந்து
வடுவமை யிருள்வி ராவ மாய்த்தது போலு மன்றே.

52. மூசிய கொண்மூ வம்பர் முன்னவன் மெய்யி னீறு
பூசிய வொருபால் போறல் போய்மற்றோர் பாலே போன்று
வீசிய சடைபோன் மின்னி வியன்றுடி யெனமு ழங்கிப்
பேசிய வருளே யென்னப் பெருமழை பெய்த மாதோ.

53. தவமொரு நான்கி டத்துந் தனித்தனி நின்றோர்க் கொப்ப
அவமிலா னந்த முத்தி யருண்மணத் தளித்தார் போலக்
குவலய மகிழ்ச்சி கூரக் குறிஞ்சிமுற் றிணைநான் கிற்கும்
கவலற வொப்ப நன்னீர் காலத்திற் பொழிந்த மேகம்.

54. நெடுமழைத் தாரை வீழ நிலங்குழி படைத்த தோற்றம்
கொடுமுது வேனில் வெப்பங் குமைத்திட மிகக்கு டிப்பான்
வடுவற வாய்தி றத்தன் மானுமேல் வழியுங் காட்சி
விடுதிறஞ் செய்தல் போலும் வெறுத்தினி யுண்ணே மென்றே.

55. கேள்வியில் வேறு பட்டுங் கேடிலா முதல்வன் பின்னர்
வாள்விரி விமரி சத்தில் வேறுறா வண்ணம் போல
மூள்சின முதுவே னிற்கண் முழுதும்வே றுற்ற பாலை
ஆள்பெரு மழைபெய் காலத் தஃதுறா தொன்றா யிற்றே.

        வரை வளம்

56. அருவியுங் கான் யாறு மாவிகா லோடை மற்றும்
மருவிய கழியு நன்னீர் மலிதரு மாறு பெய்த
பெருமழை வளஞ்சொல் வாரார் பிறக்கமார் குறிஞ்சி முன்னா
வருதிணை யைந்த னுள்ளும் வரைவளஞ் சிறிது ரைப்பாம்.

            வேறு

57. தந்தை புல்லிய தொருவரைக் கொடியெனத் தானும்
அந்தை தீர்நசை யால்வரைக் கொடிதழீஇ யமரும்
சிந்தை கூர்தரு தேமுமால் வரையெனத் தெரிந்து
முந்தை மால்வரைக் குலமெலாங் குடிபுகு முருகு.

58. பெற்ற தந்தையுந் தமையனு மெனப்பெருங் களிற்றுக்
கொற்ற வெம்பகை தனக்குமுண் டாயினுங் குலவ
உற்ற தெய்வதப் பிடிமணந் தமையுளத் துன்னி
அற்ற மோவவேள் வரைதொறும் பயிலுவ வத்தி.

59. முந்து பார்த்தனோ டுடற்றிய புளிஞன்பான் முளைத்து
வந்து வன்றியின் மருப்பொசி யிறவுளன் மற்றும்
நந்து நம்மகட் புணர்ப்புவந் தனனென நயந்து
சந்து சூழ்வரைச் சாரலிற் பயிலுவர் சவரர்.

60. புற்ற கழ்ந்திடு குடாவடி யவணின்று போதல்
உற்ற வெம்பணி வாலம்வாய்க் கவ்வவவ் வுரகம்
முற்ற நான்றிடக் கரேணுநோக் குபுகய முனியென்
றற்ற மோவுற வடையும்பி னுண்மைதேர்ந் தகலும்.

61. கிளர்க ரிக்குல முழங்கிட வெதிரொலி கேட்டுத்
தளர்வ றச்சிலை பாய்ந்துதம் மருப்பிணை சாய்க்கும்
விளர்ப ளிங்கெழு கரிநிழற் பாய்ந்தரி வெள்கி
உளர்க ளிற்றின மெதிரினு மற்றென வொதுங்கும்.

62. கூண்ட மால்வரை யேந்துதேத் தடைபிறைக் கோடு
கீண்ட வாய்வழி யொழுக்குதேன் கெழுமியங் குரிமை
பூண்ட செந்தினைப் புனம்புகும் புறத்தினு நனைத்து
மீண்ட தேன்மிசை வழிதரச் சுனைவயின் வீழும்.

63. முற்று குஞ்சர மூங்கிலி னிளமுளை முறித்துப்
பற்று மென்பிடி வாய்ப்புகுத் திடும்பினர் பருத்தே
எற்று வெங்கழை யாய்வருத் திடுதிற மெண்ணி
அற்று மாய்தர முன்னரே யடுவது மானும்.

64. சுரையி ரும்புகொண் டியவுளர் கவலைக டொடுபோ
தரையி ருட்டையும் வாய்ப்பெயு மழன் மணி யெழுந்து
புரையில் சோதியம் பொங்கரிற் றங்கவப் பொங்கர்
கரைப கற்கணு மெரிவதென் னெனக்கரு துறுவார்.

65. செறிகொ டிச்சியர் பொற்றொடித் தோணலந் தெவ்வற்
கறிம கிழ்ச்சிமற் றவர்க்கினி தியற்றியாங் கடங்க
மறிதி னைக்குரல் பறத்தலிற் கவர்பசு வன்னி
முறித ரத்திரண் முத்திறைப் பனவளை மூங்கில்.

66. காக துண்டமுஞ் சந்தமுந் தடிந்திடு கனலான்
மேக மென்றிட வுறுநறும் புகைகவர் விருப்பால்
பாக மென்றினை யிடியொடு தேன்கொளும் பயில்வால்
ஆக மொன்றிநம் மிளையவே ளாவயி னமரும்.

67. அரையி ருட்பொழு தந்நலார் தோள்புண ராசை
கரைய றப்பெரு கலிற்படர் காளையர் களவு
புரைய றத்தெரித் திடுமெனப் பொங்குசெம் மணியை
விரையொ ளித்தரு விலதைபுற் களையுளம் வெறுப்பார்.

68. உகைக்கு மண்ணலா ரிடமென வமர்ந்துந முள்ளம்
திகைக்கும் வண்ணநீங் கியதிலை யெனமயி றேம்ப
நகைக்குந் தம்வரல் கொடிச்சியர்க் குணர்த்திட ஞாலம்
முகைக்குஞ் சீர்த்தியர் முறுகிய துயிலெழுப் பிடுவார்.

69. பிரிய மொன்றிடை யுறினது சார்ந்தவும் பேணும்
அரிய வாங்கொடிச் சியர்முலைப் போகம்வேட் டரசர்
உரிய புன்றினை மூரலு மீயலு முலகம்
தெரிய வுண்டுவப் பார்த்திருந் தமுதமுஞ் செயிர்த்தே.

70. மூத்த பிள்ளைபா னசைன்றி யடுபுர மூன்றும்
தீத்த வர்க்கிளஞ் சேயிடத் திலையெனச் செப்பாம்
பூத்த வண்சிரா மலைமுதற் பற்பல பொருப்பும்
ஆத்த நாயகத் தம்பிரா னினிதமர் தலினால்.

71. பாயும் வேங்கையும் பாய்தரா வேங்கையும் பதைத்துக்
காயும் வேடரும் காய்தரா வேடருங் கலப்புற்
றேயு மால்வரைப் பெருவள னியாதெடுத் திசைத்தாம்
தோயு முல்லை நன் னிலவளத் தினுஞ்சில சொல்வாம்.

        முல்லை வளம்

72. மனையெ னுந்திரு வருகடற் கிடக்குமால் வயங்கம்
மனையே னுந்திரு மானினம் பயிறலு மற்றம்
மனையு டன் பிறப் பானினம் பயிறலு மதித்து
மனையி தென்றுகொண் டுவப்புற விருக்குமால் வனத்தே.

73. அண்ட ராதியர் புகழ்ந்திட முத்தொழி லாற்றும்
அண்ட ராகிய மூவரு ளிடையனா யமரும்
அண்ட னாடொறுங் காவல்செய் தமரிட மென்றே
அண்ட ராகிய விடையரா வயினினி தமர்வார்.

74. முல்லை யின்புகழ் பரந்தெனப் பசுங்கொடி முல்லை
எல்லை யில்வள முசுண்டையின் கனிபடு தொண்டை
வல்லை விண்டிடு பிடாவிணர்க் களாவொடு மற்றும்
கொல்லை யெங்கணுஞ் சொரிதரும் வெண்மலர்க் குப்பை,

75. கரிய கார்குறு முயல்செறி கடிப்புதன் முல்லைக்
குரிய தென்றிய லுரைத்தலின் மேலிடத் தொருங்கு
தெரிய மூடிய தன்றிக்கீ ழிடத்தினுஞ் செறிந்தாங்
கரிய தென்றிடா துகுப்பன வமைந்தகா யாவீ.

76. ஒடிவில் பன்மலர் முருக்கின்மேல் வெண்பிறை யுறலும்
நெடிய செந்தழன் மேனியான் முடிப்பிறை நிகரும்
வடிம துக்கிழக் கிறக்கிட வன்றியின் மருப்பாம்
அடியி றக்கிட மகக்களந் தரைபட்ட தாகும்.

77. தேம்பு நுண்ணிடை யாய்ச்சியர் காய்ச்சிய தீம்பால்
ஓம்பு மட்கலத் துறைதரப் பிரையுகுத் திடுமுன்
காம்பு தீர்புளிம் பழம்விழு மனையர்தாய்க் கருவிற்
கூம்பு நாட்கலந் திருந்தமை குறித்துத வுதல்போல்.

78. தொறுவி மார்நறும் பாலழ லடுந்தொறுஞ் சுவையாம்
நிறுவு மோரதிற் படுந்தொறு நிறைசுவைத் ததியாம்
தெறுவன் மத்தினா லுடைத்தொறும் வெண்ணெயாஞ் செந்தீ
குறுகி டுந்தொறும் வாசமா முயர்ந்தவர் குணம்போல்.

79. கோலுஞ் செந்தழ லடுந்தொறு மளவினிற் குறைந்து
சாலும் பல்லுருக் கோடலி லொற்றுமை சமையும்
பாலும் பொன்னுமொன் றின்சுவை பயின்றிடு மற்றொன்
றேலு மொள்ளொளி செய்திடும் வேற்றுமை யிதுவே.

80. நாடும் வன்மையி னுயரிய குறும்பொறை நாடர்
பாடு மேற்றினைத் தழீஇயிமின் மிசைவைப்பர் பாணி
ஆடு பாம்பர வல்குலாய்ச் சியர்த்தழீஇக் கொங்கைக்
கூடு பாணிவைத் திடுதிறங் குறிப்பிப்பார் போன்றார்.

81. கான முல்லையைக் குறிஞ்சியென் றறிஞருங் கருதத்
தான மெங்கும்வான் றவழ் தரக் குவிதருஞ் சாமை
ஆன கோத்திர வம்பய றாடக முழுந்து
கூன மைந்தபல் புளிம்பழ மவரைமுற் குலவ.

82. குலவு கொன்றைபொன் சொரிந்தில வென்னின்வேய்ங் குழலும்
நிலவு ஆன்கழுத் தணிமணி யோசையு நீடிக்
கலவு கானிடைத் தலைவனைப் பிரிந்துமெய் கருகி
உலவு மான்மக டனித்தமர்ந் தாற்றலு முண்டோ

83. மல்லன் மாமுகி லோதியாக் கோபஞ்செவ் வாயா
வில்லு வக்கனி கொங்கையாத் தளவுவெண் ணகையாச்
சொல்ல வாய்ந்தகான் மகண்மழைக் கொழுநனைத் தோய்ந்து
பல்ல வாம்வர காதிய பன்மகப் பயக்கும்.

84. ஆன்ற ரும்பய மல்லது பயம்பிறி தடையா
தேன்ற பல்விரை யலரலா லலர்பிறி தில்லை
மான்ற பூங்கள வல்லது களவொன்று மருவா
தோன்று கோபமல் லாற்பிறர் கோபந்தோ யாதே.

85. பொருந்து மாயவ னமரிட மாயினும் பொலிந்து
குருந்து கூவிளங் கொன்றைபச் சறுகுமல் குதலான்
முருந்து வெண்ணகை பங்கினா னெடுங்கள முதலா
இருந்து பேரருள் புரிதலம் பல்லகொண் டிலங்கும்.

86. கற்பு மேம்படு மாய்ச்சியர் புரைதரக் கமழும்
கற்பு மேம்படு முல்லையின் வளஞ்சில கரைந்தாம்
பொற்பு மேம்படு மிந்திரன் புகரறக் காப்பப்
பொற்பு மேம்படு மருதத்தின் வளஞ்சில புகல்வாம்.

        வேறு

        மருத வளம்

87. உயர்வரைச் சைய நின்று மொண்மணி யாதி வாரிப்
பெயர்தரு மருவி யந்தப் பெயரொரீஇ வெள்ள மாகி
மயர்வறு திருக்கா வேரி மாநதி யிடைப்ப ரப்புற்
றயர்வுயிர்த் திடல்சற் றேனு மிலையெனப் பெருகு மம்மா.

88. கோடிரண் டுடைமை யானுங் குலமணி யொளியி னானும்
மாடுயர் தருக்கள் சாய்த்து மதநனி யொழுக்க லானும்
பாடமை முழுக்கத் தானும் பயம்பட வியங்க லானும்
நீடுமால் யானை போலு நிகரில்கா வேரி வெள்ளம்.

89. மூலமா விலிங்க நின்று முளைத்தபன் மூர்த்தம் போலக்
கோலமார் பொன்னி நின்றுங் கொள்ளிட மண்ணி மிக்க
சீலமா ரரிசின் முள்ளி வாய்திகழ் கடுவா யாதி
ஞாலமா ரனந்த மாகக் கிளைத்தன நாடு வாழ்த்த.

90. கடல்வயி றுடையப் பாயுங் காவிரி வெள்ளத் தூடே
உடல்வலி யடைந்து சின்மீ னொழுக்கெதி ரேறா நிற்கும்
அடல்வலி யின்றிச் சின்மீ னொழுக்கினோ டமைந்து செல்லும்
மிடலமை யிருவ ரேடும் வையையாற் றியங்கன் மான.

91. எறிதிரைப் பொன்னி நீத்த மிருகரை யலையக் குத்தி
முறிபல வுடைப்புச் செய்ய மொய்வலிக் களம ரீண்டிச்
செறிதரு மவற்றை மாற்ற மதகவாய்ச் செல்லுங் காட்சி
பொறிபல வற்றி னும் போய்ப் புகுமனம் போன்ற தன்றே.

92. திங்களூ ரவத ரித்த திருமறை யவர்த முள்ளத்
தெங்கணா வரசைக் காண்டற் கெழுநசை பரந்த தென்னப்
பொங்குகா வேரி வெள்ளம் போற்றுபன் மதகூடும்போய்த்
தங்குபல் கழனி யோடை தடமெலாம் பரந்த தம்மா.

93. ஒருகலிக் காம ருக்கு முற்றவா ரூர ருக்கும்
மருவுளம் வேறு பட்ட வண்ணம்போல் வேறு பட்ட
பெருநிலம் வேறு றாம லிடைநின்ற பெருமான் போல
வருபுனற் பொன்னி நீத்தம் வயறொறு மிடைநின் றன்றே.

94. குழைதாம் புணரத் தெண்ணீர் செறுப்புகூஉக் குலவ லோடும்
பழையர்தம் மனைப்பு குந்து படுபிழி மிதப்ப மாந்திக்
கழைசுளி களிநல் யானை போன்மெனக் களிப்பு மேவி
விழைதொழின் முயன்று செய்வான்வேட்டனர் களம ரெல்லாம்.

95. கொடுந்தழ லினும்வெ துப்பு மிடிகுலைந் தொழியக் கொல்வான்
அடுந்தொழி லியம னூர்தி யதுகொடு முயற னன்றென்
றொடுங்கலில் வலிசான் மள்ள ரொருங்குடல் பகடு சேர்த்து
நடுங்கலி லலந்தோ ளேந்தி நன்னிலந் தோறும் புக்கார்.

96. இணையிரு கரும்ப கட்டி னிரும்பிய னுகங்கி டத்தி
அணையுமற் றதற்கு நாப்ப ணமையவேர்க் கால்பொ ருத்திப்
பிணைதர விடக்கை மேழி பிடித்தொரு வலக்கை யெள்ளின்
துணையிரும் பொருகோல் வாங்கித் தொழித்தன ருழுதல் செய்வார்.

97. குறிதரு விளாக்கள் பல்ல போலுபு படைச்சால் போக்கிச்
செறியமேற் றிசையி னின்றுங் கீழ்த்திசைச் செல்ல வுய்த்து
முறிவிறென் றிசையி னின்றும் வடதிசைச் செலமு யன்று
மறிவில்பா வூடை போக்கு மாக்களை நிகர்த்தார் மள்ளர்.

98. பொன்னிறம் புடவிக் கென்று புகலுவ துண்மை யேனும்
அன்னிறம் படைத்த மாயோ னகலந்தோய் தரலா லந்தத்
தொன்னிற மறம ழுங்கித் தோய்நிறம் விராவிற் றென்ன
மென்னிறக் கழனி யெங்குங் கருநிற நொதியான் மேவும்.

99. பயிரினை விருத்தி செய்யும் பைம்புனல் வேலி யெல்லாம்
உயிரினு மோம்ப னன்றென் றுற்றகங் கரிந்து வெட்டி
வயிரவன் றடந்தோண் மள்ளர் மீமிசை மலிய வேற்றிச்
செயிரற வரம்பு யர்த்தார் செல்லுநீர் சிதையா வண்ணம்.

100. உறுகருஞ் சேற்றுத் தோய்கா லூழ்த்தலுட் குறித்து மாற்றப்
பெறுமுறை தெரிந்தி யங்கும் பெற்றியிற் பரம்பு மீக்கொண்
டறுதியில் வடம்விடாம லங்கைதொட் டூரா நிற்பர்
செறுவளத் தன்றி யாங்குஞ் செம்மாப்புச் சேரா தன்றே.

101. விழைவளங் கழனி யெங்கு மிதக்குமா றருள்செய் யென்று
மழைமுகி லூருந் தேவை வணங்குபு வாழ்த்தல் செய்து
பிழைதபு செந்நெல் வெண்ணென் முளையெலாம் பிறங்க வாரித்
தழைதர வித்தி னார்கள் வயலெலாந் தடந்தோண் மள்ளர்.

102. குறுமுளைக் கூறு றாமற் கூடுமண் வேறு பாட்டின்
வெறுபுனற் றெளிப னைத்து மற்றைநாட் கவிழ்த்துப் பின்றை
உறுமழப் பசிய றிந்து பாலூட்டு மொருதாய் போலச்
செறுவுறப் பாய்த்து நிற்பர் திண்புயக் களமர் நன்னீர்.

103. வெள்ளிய நிறங்க ழிந்து பச்செனு நிறம்விராய
ஒள்ளிய கொண்மூப் பெய்த வுறுபுனல் பாயுந் தோறும்
வெள்ளிய நிறங்க ழிந்து பச்செனு நிறம்வி ராவி
ஒள்ளிய முளைக் கணாறென் றொருபெயர் படைத்த வன்றே.

104. பறிசெயுந் தொறுமா தாரப் பற்றுநா மொழியே மென்று
செறியுமண் ணொடுபேர் மூலஞ் செவ்விய குணிற்கண் மோதி
முறிதர லில்லா வண்ண முடிசெய்து சுமந்து சென்று
வெறிவய லுய்ப்பார் போகம் வீசிடு மொருவன் போன்றார்.

105. நாறுதங் கியதே மாயை நன்னில மனைத்து மான்மா
மாறுகொள் ளாத நாறு வான்பெரும் போக முய்க்கும்
பேறுளா ரொருவ னூன்றும் பிணையனா ரருளே யாகத்
தேறுமா றெங்கு நட்டார் சேணில நயக்கு மாறே.

106. இருநிலம் வேறு பட்ட தெண்ணுபு சாய்ந்தாற் போலப்
பொருவற வெங்கு நட்ட முதலெலாம் பொருந்தச் சாய்ந்து
மருவுமிந் நிலத்துச் சார்பே வளமென்றோர்ந் தெழுந்தாற் போலப்
பெருகவெவ் விடத்து மம்மா வெழுந்தன பெருநா றெல்லாம்.

107. எழுபயிர் தழையுங் காலைக் குணமெலா மியையும் போது
பழுதுசெ யுலோபந் தோன்றும் படியெனக் களைக டோன்றி
வழுவமை யூறு செய்ய மள்ளர்மற் றதுதெரிந்து
தழுவுமின் னாரை யேவ வவர்தளை தோறும் புக்கார்.

108. தகைமயில் வயல்சார்ந் தென்னச் சாருழத் தியர்தங் கண்டம்
பகையென முந்தி நீலோற் பலத்திர ளனைத்துங் காட்ட
வகைபெறக் கைத டிந்த அங்கையின் பகையுங் காட்டத்
தொகைபெறு கமல மெல்லாந் தொலைத்தன சொற்ற கையே.

109. கடிபகங் கவளைப் போது காதிடைச் செருகல் செய்தும்
வடிமல ராம்பன் மோப்ப நாசியின் மருங்கு சேர்த்தும்
கொடியனார் பயிலு வார்கண் குவளைவா யாம்ப லொத்த
படியறி தரவ டுத்த பாடமைத் திடுவா ரொத்தே.

110. ஒருகரி முன்ன முல்லை யொருகொடி தகைக்கப் பட்ட
தொருபிடி யிந்நாள் வள்ளைக் கொடிபல வொழித்துச் செல்லும்
பெருகவும் வியப்பே யென்னிற் குவலயம் பெயர்ப்ப தோரில்
பெருமித மாமோ பற்பல் கொடிகளைப் பேதித் தேகல்.

111. அகனமர் வினையின் மேய வாற்றுக்கா லாட்டி மார்தம்
முகமதி கண்ட போதே முண்டகஞ் சோரு மென்னில்
இகவில்கை முயற்சி யென்று மிகையியைந் ததுவுங் கூடில்
சகம்விரா யமையு மந்தத் தாமரைக் குய்தி யுண்டோ

112. முகமுத லுறுப்பிற் கெல்லா முழுப்பகை யாய தோர்ந்தோ
இகவிறந் திணையாள் வேந்தற் கியைபெருந் திருவ மெல்லாம்
அகலிருங் கடற்க ரப்ப வமைத்ததை யுணர்ந்தோ கஞ்சம்
உகவதைத் தனர்சார் புற்ற வனைத்தையு மொழித்தா ரன்றே.

113. சைவலங் குவளை யாம்ப றாமரை யனிச்சம் வள்ளை
கைவலத் திறுத்தார் புல்லுங் களைந்தனர் மூலத் தோடு
பெய்பல புல்லுந் தீரக் களைந்ததெப் பெற்றி யென்னின்
மொய்பகை யெளிய தென்று முன்னுபு விடுவா ருண்டோ.

114. அரிமதர் விழியா ரிவ்வா றடர்களை கட்ட கன்றார்
புரிதொழிற் களமர் யோகர் புகலிரு வழிய டைத்துத்
தெரியொரு வழிதி றக்குஞ் செயலின்ஞெண் டுகள்செய் போக்கும்
பரிதர வடைத்தர ரோர்வாய் திறந்தனர் பாய்த்தி னார்நீர்.

115. களமர்க ளிடைய றாத முயற்சியிற் கதித்த காலை
வளவகன் கழனி தோறும் வண்பயிர் பணைத்தெ ழுந்து
பளகறக் கருப்பங் கொண்டு பசுந்தலை மடல்கி ழித்துத்
தளர்வரும் வயிர வீட்டி தாமென வெளித்தோன் றும்மே.

116. முளையென விளர்த்துத் தோன்றுங் கதிரெலா முழுநி லாவின்
விளைகருக் கொண்டு பைத்துக் கலியினை வெகுளல் காட்டத்
தளைதொறுஞ் சிவந்து தாங்குந் தன்மையுள் ளுணர்ந்தா லென்ன
வளைதலைக் கொடுமண் சாய்ந்த மள்ளர்தாழ் மடைசீத் தாரால்

117. அரிதரு பருவந் தேர்ந்து கூனிரும் பங்கை யேந்தி
விரிமுத லறத்த டிந்து விரைந்தரி பல்ல சேர்த்து
வரிகயி றிடையி றுக்கி மலையெனத் தலைமேற் கொண்டு
தெரிதரக் களத்திற் சேர்ப்பார் திண்புயக் களமர் மாதோ.

118. களத்துயர்த் தியபோ ரெல்லாஞ்
    சரித்தனர் கருங்க டாக்கள்
வளத்துறப் பலபி ணித்து
    வளையமே னடாத்துங் காலை
உளத்துநெற் பலால நீங்க
    முணர்தரக் கயவாய் கவ்விக்
கொளத்துனைந் தியங்கிக் கூற்றிற்
    கூறுசெய் திட்ட மாதோ.

119. இருதிணை யுயிர்மு யற்சிக்
    கித்திணை தருமி லாபத்
தொருதிணைக் கிஃதா மென்றே
    யொதுக்கினர் பலால மற்றும்
வருதிணைக் கிஃதா மென்று
    தூற்றிவா ரிக்கு வித்தார்
தருதிணை வளர்க்குஞ் செந்நெ
    லளந்திடச் சமைந்தா ரன்றே.

120. இறையவ னறிந்து கொள்ளு
    மாறிலொன் றியைய நல்கி
மறையவ ராதி யோர்க்கு
    வழங்குவ வெறுப்ப வீசி
நிறைதர மற்று முள்ள
    நெல்லினை யளத்தல் செய்து
குறையற மனையி னுய்க்குங்
    குடிகளே மருத மெங்கும்.

121. நெல்வள மிஞ்சி மஞ்ச
    ணெடுங்கழை வளமுன் னாகப்
பல்வள மருவி யம்பர்
    முதற்பல தலமுங் கொண்ட
சொல்வள மருதச் சீரென்
    சொற்றனங் கண்ட லாதி
புல்வள மலியு நெய்தல்
    வளஞ்சில புகல லுற்றாம்.

        வேறு

        நெய்தல் வளம்

122. குழைபசிதீர்த் தெவ்வுலகுங் கோணாம லினிதோம்பும்
மழைமுகிறன் பசிதீர்க்க வந்துவிழும் வைப்பாகி
விழையும்வள மேன்மேலும் விருப்பின்முயல் வார்க்குதவும்
தழைவருண னினிதோம்பத் தவாதமருங் கழிநெய்தல்.

123. விரிசுடுசெந் தழல்கொளுந்த மிசைப்பயின்றும் வேவாமே
புரிசுவையுப் புறக்கலந்தும் புணர்சிறிதுந் தோயாமே
தெரிமயிலை பலபயில்வ திகழ்தரவில் லறத்தமர்ந்தும்
அரிதுயரஞ் சற்றேனு மமையாத வறிவினர்போல்.

124. கரியசெழும் புன்னாகங் கருநிறக்கொண் மூப்பொருவும்
உரியவரும் பத்தனையு முறந்ததா ரகைமானும்
தெரியவெள்ளோ திமம்புகுதல் செல்லுமுழு மதிவிழையும்
பிரியமிகு மதுத்திவலை பெய்யுமழைத் திவலையே.

125. பொருள்பலவுஞ் செறிவரைமுற் பொருள்பலவு முள்ளடக்கித்
தெருள்வகையில் பற்பலவும் வெளிப்படுத்துந் திரைப்புணரி
அருள்வகைசெய் விழுப்பொருளை யகத் தடக்கிப் பருப்பொருளை
மருள்வகையி லாதுவெளிப் படுத்துவார் தமைமானும்.

126. கலமனைத்துஞ் சயந்தனமே கனமகரங் கறையடியே
வலதரங்கம் வாம்பரியே மயிலையெறி பவராளே
புலவுடன்மீ னெறிவாளே புணரியா கவப்பாரென்
றிலகுமுடி மன்னரெலா மவண்பொருதற் கிசைவுற்றார்.

127. திருப்பெரிது படைத்தவருந் தீக்குணமுண் டேலொழியார்
திருப்பெரிதில் வாதவரு நற்குணமுண் டேற்சிதையார்
அருப்புமணிப் பெரும்புணரி யளப்பிலுவர் நீருதவும்
அருப்புமணற் சிறகேணி யான்றசுவை நீருதவும்.

128. படவியக்கி நெடுந்தூரம் படந்துநெடும் வலைவீசித்
தடநெடுமீன் பலகவர்ந்து தடங்கரையின் மிசைக்குவித்துக்
கடலகம்வாழ் குநரொதுங்கக் கனவிரதங் கவர்ந்த முகில்
விடலருமக் குவியல்பெரு வெற்பெனவே றிடுமிளைக்கும்.

129. விரும்புநுளைச் சியர்மகவை மென்னிழல்செய் புன்னாகத்
திரும்புகவைத் தனகருங்கோட் டியை தருதொட் டிலிற்கிடத்தி
அரும்புபல மீன்பிளப்பா ரவருவப்பத் திரைமீன்றாய்ச்
சுரும்புறுமத் தருப்பிணித்த தொட்டிலசைத் துறக்கிடுமே.

130. பட்டமீன் முழுமையுஞ்செம் பாதிபிளந் துப்புறுத்தி
வட்டவான் களம்பரப்பு நுளைச்சியர்வண் கைக்கமலம்
தொட்டவிசே டந்தெரிந்து தோற்றுகதி ரோன்கரங்கள்
இட்டமிகத் தைவரல்கண் டேற்பவருள் ளுவப்புறுவார்.

131. அணங்கனைய பரத்தையர்வா யரக்காம்பன் மலர்நாறும்
குணங்கிளரு முடக்கைதைக் கொழும்பூவைம் பானாறும்
இணங்கருஞ்செண் பகநாறு மேற்றமார் முறிமேனி
உணங்கன்மீன் றலைமிசையே நாறுமெனி லுறுவியப்பே.

132. திரையெறியு மணிமுத்தந் திண்கரையிற் செறிந்தோங்கும்
உரைசிறந்த புன்னாகத் தடியொருங்கு தோன்றுவன
கரையியங்கு பரதவரிக் காமர்மர மத்தனையும்
புரையிலரும் புதிர்த்தவித மென்னையெனப் புந்திசெய்வார்.

133. முறிதிரைமே லெடுத்தெறியு முத்தமொளிர் புன்னாகம்
செறிதருமோ திமக்குடம்பை சேர்கருவி னொடும் பொருந்த
அறிதரலி லவ்வன்ன மடைகிடந்து நெட்டுயிர்த்துக்
குறிதுயர மிகக்கூருங் குஞ்சிவெளிப் படாமையினால்.

134. வினைபுரியு முமணர்குழீஇ மிகக்குவிக்கு முப்பொருபால்
தனைநிகருங் கடற்குளிப்போர் தாங்குவிக்கும் வளையொருபால்
இனைதலறக் கலனின்று மிறக்குபல பொருளொருபால்
புனைபவளத் திரளொருபாற் பொருபுணரிக் கரையெங்கும்.

135. மறையருச்சித் தேத்தியது மாதவத்துப் புண்டரிகன்
இறையருள்பெற் றெம்பெருமா னின்மலமே னியினுடம்போ
டுறைதிறம்பெற் றதும்பிறவு முளத்தமைய வுணர்தருகால்
குறைவில்புகழ் நெய்தலினோ குறிஞ்சிமுத லியதேத்தோ.

136. அறிபுகழ்நா வுக்கரசை யான்றதலை மேற்சுமந்தும்
நெறியமையு மதிபத்தர் நிதம்பயிலுந் தவம்புரிந்தும்
குறிபெறுபல் புகழ்படைத்துக் குணம்படைத்த பெருநெய்தல்
செறிவளமென் னெடுத்துரைத்தாம் பாலைவளஞ் சிலபுகல்வாம்.

            வேறு

            பாலை வளம்

137. கொடிய வேனினண் பகலிடைப் பிறந்ததுங் கொதிக்கும்
நெடிய தன்சினத் தழற்கியை புடைமையு நினைந்து
கடிய மூவிலை வேலுடைக் கன்னிகை காப்பப்
படிய வெம்பரன் முரம்பினாற் பொலிவது பாலை.

138. வழுதி தோள்புணர் மாலையும் வழுதிமுன் மற்றைப்
பழுதின் மன்னவர் பகைப்புல முருக்குபு பமரத்
தொழுதி மேவரச் சூட்டிடு மாலையுந் தோற்றும்
கொழுதி வண்டிமிர் நிம்பமுஞ் சீரிடமுங் குழைத்தே.

139. கழலி லாமற வோரிலாப் பாலையைக் காண்பார்
நிழலி லாக்கொடுந் தேமென வுரைப்பதென் னினைமின்
விழலி லாச்சிறப் பீந்தமர் தலிற்கலி மேல்வந்
துழலி லாச்சுர வுலகமென் றறிஞர்நன் குரைப்ப.

140. வறிய கூவலை நிரப்புவ பாடல மதுவம்
நறிய நீர்நனி யுதவுவ நாடுமா மலகம்
குறிய வெம்பரன் மிதித்திடப் பஞ்சுகுங் கோங்கு
செறிய வின்பழங் காலுவ தேங்குகற் சூரம்.

141. அகையி லோர்முனி வரனெனக் கல்லுணா வமைந்து
தகையி லெங்கணும் பயிலுவ துணைக்கபோ தங்கள்
மிகைய லாவுடன் போக்கியல் சுரநில மேன்மை
தொகையி னோதினந் திணைமயக் கமுஞ்சில சொல்வாம்.

        திணை மயக்கம்

142. வரையின் வேய்தலை வளைந்துகா னாய்வளப் பாடித்
தரையின் மேவருங் குழல்பட முயறிறஞ் சாரும்
புரையில் கானிமி லேற்றினம் வரையகம் போந்து
விரைய வேங்கையை யுரிஞியோ ரற்புதம் விளைக்கும்.

143. கான வானினம் பொழிந்தபால் வாவிநீர் கலப்ப
மான வோதிம நீர்பிரித் துண்டுள மகிழும்
ஆன செய்க்குலை யரம்பையங் கனிவனத் தான்பால்
தான மாங்கலத் தாயுவப் புறவுதிர் தருமால்.

144. பணைய கம்பொலி யன்னந்தன் முட்டையின் பாங்கர்
அணைய வாரிமுத் ததனையுஞ் சேர்த்தடை காக்கும்
இணையில் சூதவான் காய்க்குலை யெய்தியுப் பளத்தைப்
பிணைய நீவுவ பின்புசம் பந்தித்தல் பேணி.

145. குரவு பாவையீன் றிடப்பணை குளிர்புனல் வாக்கும்
பரவு மால்வரை காந்தட்கை வருடுமின் பசுப்பால்
விரவு கான்றருங் கழியமை யுற்பல விழிகள்
உரவு மேவுற விமைத்தில கண்டுகண் டுவக்கும்.

146. சந்த மேவிய குடிபல நெருங்கியுட் டழைய
வந்த நாட்டகத் தைந்திணை வளங்களு மயக்காம்
பந்த முந்தெரிந் துரைப்பர்யார் யாமெவன் பகர்ந்தாம்
முந்த மாநகர் வளத்தினுஞ் சிற்சில மொழிவாம்.

    திரு நாட்டுப்படலம் முற்றியது.

        திரு விருத்தம் 110


        3. திரு நகரப் படலம்

147. மங்கை நாயகி கண்டுள மகிழ்ச்சியிற் றிளைப்பச்
செங்கை யாடுநஞ் சிவபிரான் றிருவருள் சிவணக்
கொங்கை யார்பொழிற் குவலயத் திலதமாய்க் குறிப்பார்க்
கங்கை யாமல கம்பொரப் பொலிகுவ தம்பர்.

148. சிறந்த மாகவிப் புலமைய ரளப்பிலர் செறிந்து
நிறந்த வாப்புகழ் படைத்தது நிதியர சிறைஞ்ச
உறந்த மாத்திரு வாளரு மொழிவற வுறைவுற்
றறந்த வாச்சிறப் பாற்பொலிந் தோங்குவ தம்பர்.

149. விசிக்கும் வார்முர சோதையான் மாளிகை விளர்ப்பால்
வசிக்குந் தேமென மாயவ னமர்தலாற் புலவர்
பசிக்கு நல்லமு துதவலாற் பாற்கடல் கடுக்கும்
அசிக்குந் தன்மையில் பெரும்புக ழாற்பொலி யம்பர்.

150. உம்ப ராதிய ரொருங்குவந் துமையவ ளொருபால்
நம்பர் தாள்பணிந் தந்நகர் வளமெலா நயந்தீ
திம்ப ராயினு மம்பரே யென்றிசைத் திடலால்
அம்ப ரென்றொரு பெயர்புனைந் ததுதிரு வம்பர்.

151. அம்ப ராவணி சடையினர் திரிபுர மடுமால்
அம்ப ராவளர் கொடியின ராரரு ளமைநே
யம்ப ராவம லாவெனி லமைநிரா லம்பர்
அம்ப ராவவீற் றிருப்பது பெருந்திரு வம்பர்.

152. போக்க வல்லது பிணியினை மிடியெனும் புலையைத்
தாக்க வல்லது கற்பத்துந் தளர்ச்சியைத் தபுத்துக்
காக்க வல்லது கடையுறா வானந்தக் களிப்பை
ஆக்க வல்லது சார்ந்தவர்க் கமலர்வா ழம்பர்.

153. கொடுக்கு மிச்சைய ராகம வழிமலக் குறும்பு
கெடுக்கு மிச்சையர் மறங்கெடக் கிளரறப் படைகை
எடுக்கு மிச்சைய ரினையவர் முதலிய ரென்றும்
அடுக்கு மிச்சைய ரெனச்சொலப் பொலிகுவ தம்பர்.

154. எடுத்த நேமியான் மார்பமும் வானகத் திருப்பும்
விடுத்த வாரருட் டியாகரா சப்பெயர் விமலர்
உடுத்த வாவியா ரூரக நின்றும்வேற் றுருக்கொண்
டடுத்த வாவின்வீற் றிருக்குமா தவஞ்செய்த தம்பர்.

155. குவல யத்திரு நிறத்துமால் குலிசவேற் றடக்கை
இவர்மு கிற்றிறல் வேந்தனோ ரேந்தன்மற் றிவரின்
கவல றத்தவம் புரிந்தவோர் மறையவர் கருதி
அவத ரித்திடப் பெருந்தவம் புரிந்ததா லம்பர்.

156. இம்பர் மாதவ மெண்ணினா ளியற்றின ரென்னில்
அம்பர் மாநகர் வளஞ்சிறி தறைந்திடற் கமைவார்
உம்ப ராயினு மஃதின்றி யுரைத்திடப் புக்கார்
வம்ப ராகுவர் மற்றெவ ராகுவர் மாதோ.

157. தளர்வில் காப்பின்மா றாரணி யனையதா ரணியுள்
வளவ நாடவன் மார்பக மனையமார் பகத்துள்
கிளர்நி லாமணி யம்பரக் கிளர்மணி சூழ்ந்த
துளவ மாலிகை யம்பர்மா நகர்சுலாஞ் சோலை.

158. சோலை வெங்கதிர் செலுத்தியோ ராததுந் துணர்த்த
மேலை வண்கிளை யிவர்ந்தறி யாதது மென்பூ
மாலை வார்தன்முற் றுண்டறி யாதது மந்தி
காலை முற்பொழு தாவயி னரிதரோ காண்டல்.

159. சோலை மேற்கிளை யனைத்தும்விண் டுளைத்திவர்ந் தேறும்
மாலை யோர்ந்தவர் பாதலப் பொழிலுமண் டுளைத்திவ்
வேலை யாவியி னெழுமென்ப ராவயின் மென்பூப்
பாலை யார்பொழிற் சாயலீ தென்றுளம் படரார்.

160. வாவி யாவும்வா ரிதிபொரூஉ மரையிலை வயக்கம்
மேவி யாவயின் வீழ்ந்தற லுண்டமால் விழையும்
தாவி மற்றத னுட்புகுங் கொக்கரை தகைதல்
ஓவி யம்முகி லுட்புகு வெண்பிறை யொக்கும்.

161. மீது போம்பிறைக் கோடுறக் கிழித்தலான் விடுபட்
டோது தேத்தடை யொழுக்குதேன் வாவியு ளொதுங்கும்
மோது காற்றின்வீழ் கனியெலா மதனக முழுகல்
தீது தீர்செல்வர் கனிமதுக் கலத்திடல் சிவணும்.

162. மன்ன மேலெழு கதலிவார் குருத்தெலாஞ் சாலி
அன்ன மேந்துபு பொலிதரு மதுவியப் பன்றே
சொன்ன கும்பமேற் சூதமே லிலாங்கலி தோன்றல்
நன்னர் மேவுவ மற்றது நாடுறி னியல்பே.

163. பாய சாலியும் வேழமு மரம்பையும் பலாவும்
ஆய சூதமுங் கந்தியுந் தென்னையு மழகாய்
மேய வொன்றினொன் றுயர்ந்துசூ ழுவநெடு விண்ணம்
தோய மாநக ரேறுசோ பானமே துணையும்.

164. கரும்பு பற்பல தலையிறாற் கனத்தினாற் கோடும்
சுரும்பு கீழிழி மதுக்கொளத் துவன்றிநேர் கூடும்
அரும்பு முற்பலங் காற்றலை யுண்டவ ணாடும்
விரும்பு மைந்தர்கண் காண்டொறும் வெம்பய நீடும்.

165. வாச நந்தன வனமெலா மொலிக்கரு வண்டர்
மூச வொன்றுவ விலேகர்வா முழிமென முன்னி
மாச மைந்ததா னவர்பல ரார்த்தனர் வந்து
நேச மின்றிமிக் கலைப்பமற் றவர்பட னிகரும்.

166. நாட்ட மூன்றுடை யானுமை யொடுநனி நயப்ப
வாட்ட மொன்றிலா வம்பர்மா நகர்வள மலிபூந்
தோட்ட மீதென விடங்குறித் தின்னமுஞ் சொலின்யாம்
வேட்ட வாபொது வடங்குமோ புறநகர் விள்வாம்.

        புறநகர்

        யானைகள்

167. பிறவி யெண்ணிடல் குறித்தவ ரெமைமுதற் பேசி
உறவி யோனியை யீற்றில்வைத் தோதுவ ரதனால்
அறிமி னள்ளுள வெமக்குப்பின் னாகுமென் றறைந்தாங்
கெறிமி னோடைமால் யானைகள் சிலைப்பன வெங்கும்.

168. எம்மை முன்புரைத் திடுதலி னெந்தலை யேற்ற
செம்மை வள்ளலை முன்புபூ சிப்பது தெளியும்
மும்மை யாமுல கங்களு மெனமொழி தலுமாம்
கொம்மை மத்தகக் குஞ்சரக் குழாத்தெழுஞ் சும்மை.

169. இலக டத்துகு மணியொடு மிலகுபொற் றரையில்
பலப தச்சுவ டுறுநடுக் கருங்கடாம் படர
நிலம டக்கொடி புனைதர நேர்கருஞ் சரட்டில்
குலவு பொன்மணி மதாணிகள் கோத்திட்ட தொக்கும்.

170. ஆய யோனியின் முதன்மையான் முதற்குலத் தமைந்த
நேய மாமறை யவரென நீரிடைப் புகுந்தத்
தூய நீர்தலை யிறைத்துமேற் றூவிப்பின் பருகும்
பாய மும்மதத் திருமுறச் செவியொர்கைப் பறம்பு.

171. வாவி வாய்நிழல் கண்டுநீர் துதிக்கையுள் வாங்கும்
மேவி யெங்கொளித் தஃதென நேடுபு வெகுளும்
தாவி மாற்றலர் மணிமுடி தாளிட்டுத் தகர்க்கும்
கோவி யானைகள் யாத்தவா ரிகள் பல குலவும்.

            குதிரைகள்

172. வாசி யென்னுமோர் பெயரெதற் குள்ளது வயங்க
மூசி மேலெழு நெருப்புமோர் நாளுமுற் பட்ட
ஏசி லாதவெம் முகந்தலை போறலி னென்னாப்
பேசி யார்ப்பன போறடகனைத் திடும்பரிப் பெருக்கம்.

173, வெருவ லோவிய குதிரையென் பெயர் விரா வெழுத்துள்
மருவ லார்துவை படமுத லிடைகொடு வாவும்
பொருவ றீர்வரு கையிலிடை கடையெனப் பொலியும்
ஒருவ லாமுதல் கடைகொடு முகிறப வோங்கும்.

174. திருத்த மாரனிந் நகர்ப்பரி சிந்தித்தும் பெறாத
வருத்த மேவலான் மற்றதற் குறுபெயர்ச் சார்பாம்
பொருத்த மோர்ந்தொரு கிள்ளையை யூருதல் புரிவான்
அருத்த வேதமு மதனுருக் கொளினெவ னறைவாம்.

175. பிரிய மேவுமிந் நகர்ப்புரி யுருக்கொளல் பெட்ட
விரிது ழாயணி மார்பினா னதன்வியன் பெயருள்
அரியெ னும்பெய ரடைந்தன னப்பெயர் வியந்து
தெரிய வையக மேத்திடுமெனிலதன் சிறப்பென்.

176. உற்ற மந்திரத் தடங்குவ வாயினு மொன்னார்
செற்ற மேவுறிற் செயிர்த்தெழு கடலையுந் தாவும்
சொற்ற வான்கதிக் காலவாய்த் தங்கள்கா றொடரப்
பெற்ற வாம்பரிப் பேரிலா யம்பல பிறங்கும்.

            தேர்கள்

177. அடிகி ழிப்பது மண்ணைமற் றலங்கரித் தமைத்த
முடிகி ழிப்பது விண்ணைமொய்த் துப்புறஞ் சூழ்ந்த
கொடிகி ழிப்பது திசையையென் றாலொப்புக் கூறும்
படிகி ழிப்பது தனித்தனி பற்பல தேரும்.

178. மடந்த வாவுமை பாகனா ரிவர் ந்துமும் மதிலும்
கடந்த தேரினைக் கடப்பதொன் றில்லையே கருமால்
இடந்த தேமுமோ ரிடமஃ தெற்றைக்குங் கீழால்
கிடந்த தாக்கிமேற் றிரியுமிக் கிளர்மணித் திண்டேர்.

179. ஒற்றைக் காலுள தெழுபரி மறையவ ருதகப்
பற்றைக் காமுறும் பாகிரு காலுமி லாதான்
கற்றைச் செஞ்சுடர் நகையொடு கண்ணுமி லாதான்
மற்றைத் தேர்மிசைப் பயிலினு மிவைக்குமா னாதால்.

180. உருவ மாட்சியா லோங்குபொன் வரையென வுரைப்பாம்
திருவ மிக்கமற் றஃதென நிற்றலிற் றீர்ந்து
பருவ மைந்தரோ டெங்குஞ்சஞ் சரித்தலிற் பகராம்
வெருவ மாற்றலர் முழங்கெழீஇத் தோற்றிடும் வியன்றேர்.

181. சென்ற தேமெலாஞ் சயந்தன மெனக்கொளுந் திறத்தால்
ஒன்ற மேலவர் சயந்தன மெனும்பெய ருரைத்தார்
வென்ற வாம்பரி பூண்டதேர் நிலையெலாம் விண்ணோர்
துன்ற வாக்கிய தேர் நிலை கீழ்ப்படத் தோன்றும்.

        போர் வீரர்

182. எரிந்த வேன்முகத் தெதிரினும் விழித்தகண் ணிமையார்
புரிந்த கொள்ளுமெய் வடுவன்றி வேறுபூண் பூணார்
வரிந்த பொற்கழல் மாற்றலர் மடியப்பல் வருடம்
தெரிந்த மர்த்துங்கண் டூதிசற் றாயினுந் தீரார்.

183. நம்பர் மேயவிந் நகருறை வீரரெல் லாரும்
அம்ப ராதலி னம்பரென் றொருபெய ரறைந்தார்
இம்ப ரந்நகர்க் கறிவினா லுயர்ந்தவ ரென்னில
வம்ப ராகுவர் மற்றவர்க் கொப்புள மதிப்பார்.

184. மல்லெ டுத்தவிந் நகர்வய வீரரை மதித்தே
வில்லெ டுப்பர்மற் றயனகர் வீரர்க ளென்னில்
சொல்லெ டுத்தமற் றிவர்திறஞ் சொல்லுந ரெவரே
கொல்லெ டுத்தவெங் கூற்றமுள் ளஞ்சுமே குறுக.

185. இனைய வீரர்வா ழிடங்களு மிவர்தொழி லியற்றும்
அனைய மாந்தர்வா ழிருக்கையும் யானையா திகட்குப்
புனைய வாம்பல வமைப்பவ ரிருக்கையும் பொலிந்து
நினைய லாம்படி விளங்கிடு நிகர்ப்பரி தாயே.

186. அறங்கு லாவிய வம்பர்மா நகரினைச் சூழ்ந்த
மறங்கு லாவிய புறநகர் வளனெவன் வகுத்தாம்
திறங்கு லாவிய விடைநகர் வளத்தினுஞ் சில்ல
நிறங்கு லாவிய வாசையி னிகழ்த்துத லுற்றாம்.

            வேறு

            இடைநகர்

187, ஓங்குபொன் மாட நேரு முதீசியம் பொருப்பை யென்று
தேங்குபல் புலவர் சொல்வார் யாமது செப்ப மாட்டேம்
வீங்குபே ரரணம் வேவ வெகுண்டது தழுவி மேவும்
பாங்குசே ரிவற்றை யொப்ப தெங்ஙனம் பகரு வீரே.

188. முழுவலி மடங்க லன்ன மொய்ம்பினார் முகிழ்மென் கொங்கை
ஒழுகொளி மணிப்பூ ணல்லா ரொடுமினி தமரா நின்ற
எழுநிலை யடுக்கு மாட முயர்ந்தமை யெண்ணி யன்றோ
பொழுதிரு வழிக்கொண் டென்றும் போதன்மேற் கொண்ட தம்மா.

189. விளக்கொளி மழுங்க மின்னு மின்னனார் விளக்கத் தானும்
வளக்கதிர் மணிகால் யாத்த மாளிகைச் சோதி யானும்
துளக்கமி னகர மேலாஞ் சுவர்க்கமே யைய மில்லை
களக்கமின் றுறையு மாக்கள் கண்ணிமைத் திடலோர் குற்றம்.

190. குஞ்சர மனைய மைந்த ரறிவினைக் கூட்டுண் டேகும்
வெஞ்சர மனைய கண்ணார் மேயசா ளரநாற் பாலும்
மஞ்சரங் காது கொண்ட மாளிகை நடுவட் டோன்றல்
பஞ்சரத் தூடு தோன்றும் பைங்கிளிக் காட்சி போலும்,

191. முத்தவெண் சுண்ணங் கொண்டு முழுமையுந் தீற்று மாடச்
சுத்தவெள் ளொளிவா னோக்கித் தூமணி பசுமால் யானை
வித்தகப் பரியொவ் வொன்றே தருவைந்தே மேவி னாயீங்
குத்தம வவையெண் ணில்லென் றசித்திட லொக்கு மன்றே.

192. எழுநிலை மாட மேலா லெழுவெனப் பொலியுந் தோளார்
முழுமதி யினைக்கை வாங்கி முயங்குவார் வதன மாய
செழுமதி யொடுசேர்த் தொப்புப் பார்க்குங்காற் சேற்கண் மையைக்
கழுவில தஃதிவ் வையங் களங்கமென் றின்னுங் கூறும்.

193. ஒளிகிள ரிந்து காந்த முற்றமொண் மதியங் கண்டு
தெளிபுனல் பெருக்க நாப்பட் டெரிவைதன் முகங்கண் கண்ட
அளிமதி கமலங் கூம்பா துற்பல மடக்கிற் றென்று
களிகெழு மூக்க மின்றிக் கவலையா லுடம்பு தேயும்.

194. நிலையுயர் வளஞ்சா லம்பர் நீணகர் வாழு மாதர்
சிலைநுதல் பொருவா மென்று குளிர்மதி சிறுத்துப் பார்க்கும்
தொலைவரும் வனப்பு வாய்ந்த சுடர்முகம் பொருவா மென்று
தலைமையிற் பெருத்துப் பார்க்குஞ் சரிவரா மையின்வி ளர்க்கும்.

195. ஆடலை யவாவுந் தோளா ரணங்கனார் தமக்குண் டாய
ஊடலை யுணர்த்துந் தோறு மெழுவவொண் சிலம்பி னோதை
நீடலை யடையா வண்ண நீத்திருங் களிப்புத் துள்ளக்
கூடலை யடையுந் தோறு மெழுவமே கலைகொள் ளோதை.

196. முற்றவெண் சுண்ணந் தீற்ற முழுநிலா வெறிக்கு மாடம்
உற்றபாற் கடலின் பொம்ம லொக்குமற் றதற்கு மேலால்
செற்றநல் வனப்பு வாய்ந்த மின்னனார் சேருங் காட்சி
அற்றமில் பவள வல்லி யநேகமேற் றோன்றல் போலும்.

197. விரியுய -----ட மேலால் வெண்ணிலா முற்ற மேவி
அரிமத மழைக்க ணல்லார் கந்துக மாடுங் காலைப்
புரிவட முத்தஞ் சிந்திச் சாயைமேற் போய வுண்மை
தெரிதர லின்றி யின்னு முடுவெனச் செப்பா நிற்பர்.

198. விண்டுதேம் பிழியொ ழுக்குந் தாமரை யொருங்கு விட்டு
வண்டுசே தாம்பன் மூச வானகத் துதயஞ் செய்யும்
ஞெண்டுசேர் மதியஞ் சேந்த நிறந்தப விளர்த்துத் தேய்தல்
பண்டுகூ ரவ்வூர் மாதர் முகமொவ்வாப் பரிசா லன்றோ.

199. குனிசிலை நுதலா ரோடு கூடுபு மைந்தர் வைகத்
தனியமை சுவர்க்க மெள்ளுஞ் சந்திர காந்தக் குன்றம்
பனிமதி யுதயங் கண்டு படர்புன லொழுக்குங் காட்சி
நனியுயர் குன்ற நின்று மருவிவீழ் நலமே மானும்.

200. அன்னநீ ரோடும் வீதி யறாவளப் பொன்னி மானும்
மின்னகு மிருபான் மாட மிளிரிரு கோடும் போலும்
பொன்னவிர் புதவு வாய்தல் புகன்றவோ மதகு நேரும்
சொன்னமுற் குன்றஞ் சைய வரையெனச் சொல்ல லாமால்.

201. அரிபளிங் குறப்ப டுத்தி யந்தருப் பணமே போல
விரியெழி லமைத்த வீதி யாயினு மூடு மின்னார்
தெரிதரச் சிந்து முத்த மாணிக்கம் பவளஞ் செற்றிப்
பரிவற வியங்கு வார்தம் பாதத்திற் கூறு செய்யும்.

202. தினமறு கிடைய ரித்தல் செய்பவர் மாட்டு வந்து
கனமிகு பிறநா டாளுங் காவலர் கடன்கொள் வாரால்
இனமழை பெய்த காலை யெடுத்தெடுத் தொருங்கு சேர்க்கும்
தனமுடை யவரு தீசித் தடந்திசைக் கிறைவ ராவார்.

203. வானக மறைக்கும் பந்தர் வயக்கிமே லிடங்க ளெல்லாம்
தேனக மாலை நாற்றிச் செவ்விய கால்க டோறும்
பூநகத் தாற்று வாழை பொழிகரும் பாதி யாத்த
தூநகர் நியம வீதி சுவர்க்கத்தை நரகஞ் செய்யும்.

204. பணவர வல்கு லாரைப் பருப்பத நாணுந் தோளார்
குணமுற விருப்பின் வேட்டுக் கோலமார் பவனி போதும்
மணவணி முழக்க மோர்பால் வருவிழாச் சிறப்பு மோர்பால்
அணவிய வீதி வாளா கிடப்பதின் றொருநா ளானும்.

205. கரியிவர் சிறப்பும் வேகக் காற்றெனக் கடுகிச் செல்லும்
பரியிவர் சிறப்பும் வாசி படர்ந்துவல் லீர்க்கு மாழிக்
கிரியிவர் சிறப்பு மல்கிக் கிளர்மணி வீதி நோக்கி
அரியிவர் தலந்துன் புற்று நிசியுல காயிற் றம்மா.

206. அடைகெழு கற்ப மாலை யணிபுயத் தமரர் யாரும்
மிடைபெரு நகர ருத்த நகரென விளம்ப மேய
இடைமுழு நகரென் சொற்றா மிஞ்சிசூழ்ந் தடைந்தோர்க் கின்பம்
கொடை செயுண் ணகரின் மேன்மை வளஞ்சில கூற லுற்றாம்.

        உள் நகர்

        அகழிச் சிறப்பு

207, பாதலத் தளவு போய பாம்புரி நறிய நீரால்
மீதலம் புகழுஞ் சுத்த நீர்க்கடல் விரியுங் கஞ்சப்
போதலர் வழியுந் தேனான் மதுக்கடல் புக்க மேதி
காதலிற் பொழியும் பாலாற் பாற்கடல் கடுக்கு மன்றே.

208. ஒருமுனி பருகல் கூடு மொருவன்வேல் சுவற்றல் கூடும்
பெருவிறல் பலவாற் றானு மிழப்பதே பெற்றோ மென்று
கருநிறப் புணரி சூழ்ந்து கலந்ததன் னுவர்ப்பும் போக்கிப்
பொருவலி யமைந்து வைகுந் திறம்பொரூஉம் புனற்கி டங்கு.

209. விண்டசெங் கமல மாம்பன் மேலிடம் பொலியக் கொண்டு
தண்டலில் கொடுங்க ராமுள் ளிடங்கொண்ட தனிக்கிடங்கு
கொண்டபன் னயம்புறத்துங் கொடுமைவஞ் சனைய கத்தும்
மண்டமிக் கமைத்து வாழு மாந்தரை மானு மன்றே.

210, அரவிறை நாட்டி னுள்ளா ரகன்புவி வாரா நிற்பர்
பரவுபற் பலது வார வழியெனப் பகர்வார் பொய்யே
புரவுசெ யம்பர் சூழும் பூம்புனற் கிடங்கி னாறே
விரவுற வருதன் மெய்ம்மை வேறினிப் புகல்வ தென்னே.

211. திரையெறி கடனீர் முற்றுஞ்
    செங்கைநல் லுழுந்திற் கொண்டோன்
குரைபுன லளவை நோக்கிக்
    கும்பிடு மகழி மேன்மை
உரைசெயற் கடங்குங் கொல்லோ
    வொருபெருங் கடலாற் சூழும்
வரையெனப் பொலியுஞ் சீர்த்தி
    மதிற்சிறப் பெடுத்துச் சொல்வாம்.

        மதிலின் சிறப்பு

212. பொறிபல வமைத்து வல்ல யவனராற் புரிந்த வன்மை
செறிமதி லோக்க மண்மேற் சிலரெனப் பொய்ம்மை கூறாம்
குறிகொளு மயன்மே லண்டத் தெல்லைபோய்க் கூடிற் றப்பால்
முறிதரச் சென்ற தில்லை யுயர்ந்ததென் மொழியுங் காலே.

213. அறிவினர் படைத்த செல்வ மடைந்தவர் செல்வ மாமென்
றெறிவினை யாளர் கூறு மேற்றஞ்சால் வார்த்தை மெய்யே
நெறியுய ரம்பர் சூழு நெடுமதின் மேலா லுள்ள
குறிகொளு நகர்கட் கெல்லாங் கோணைமா மதிலா யிற்றே.

214. இம்பரா தரங்கு லாவப் புண்ணிய மினிது செய்தார்
உம்பர்வா னகர மேறி யுறைவது சரத மன்றே
நம்பர்பே ரருள்செய் தாலு ஞாலத்திற் கணியா யுள்ள
அம்பர்சூழ் மதிலின் றென்னி லேறுவ தரிது மாதோ.

215. திண்ணிய மதிலி னோக்கஞ் சேணுல களத்த லாலே
கண்ணிய கதிர்மார்த் தாண்டன் கைரவ மலர்த்துஞ் செல்வன்
எண்ணிய மற்றை யோர்தஞ் செலவிற்கூ றுண்டோ வென்னின்
பண்ணிய புதவ வாயிற் படர்தலிற் றடையொன் றின்றே.

216. மதியமுண் ணகர மென்று மற்றது சூழ்ந்த நொச்சி
துதியமை யூர்கோ ளென்றுந் துணிந்தெடுத் தோதுஞ் சீர்த்தி
நிதியவம் மதிலின் மேன்மை நிகழ்த்துதற் கெளிதாங் கொல்லோ
பதியமை யாதா ராய பரத்தையர் மறுகு சொல்வாம்.

        பரத்தையர் தெரு

217. மறைமுத லனைத்துந் தேர்ந்த வியாதனு மயக்கம் பூண்டான்
குறைவிலவ் வளவு தேராக் கொள்கைய ரேனு மெங்கும்
நிறைபரஞ் சிவமே யென்றோர் முத்திரை நிகழ்த்தா நிற்கும்
முறையுடைக் கணிகை மாதர் முழுத்தவ முடைய ரன்றோ.

218. தங்கண்மெய் யுறுப்பு ணர்ந்துந் தாங்குபூ ணாடை நோக்கி
யுங்களுண் டவர்போன் மைந்த ருறமயக் குறுகாலத்தும்
திங்களங் கண்ணி யோனே வந்தனை செய்யத் தக்க
மங்கள னெனக்கை கூப்பு மாதரிற் குரவ ரியாரே.

219. பாடலி னயத்தி னானும் பரதநூல் வழுவா தாடும்
ஆடலி னயத்தி னானு மரம்பைய ரவாவும் யாணர்
வீடலி னயத்தினானும் விலையிலா தவரை யந்தோ
வாடலி னயத்தி னாரும் விலைமட மாத ரென்பார்.

220, வந்தனை யேற்கத் தக்கோன் மாதேவ னேயென் றோர்ந்தும்
கந்தனை யனையார்க் கெல்லாங் கைகுவிப் பார்மா தேவற்
சிந்தனை செய்வா ரன்ன திறத்தவர் நல்கு மின்பப்
பந்தனை துய்ப்பா ரென்னிற் பைம்பொன்கொள் ளுதலோர் குற்றம்

221. தெறுவலிக் குமர ரியாருஞ் சித்திர முகத்தா லின்பம்
பெறுநகக் குறியி னோடு பற்குறி பெட்ட ணைத்தல்
மறுவற வமுதந் துய்த்தன் முதலிய வுணர வைக்கும்
உறுகணி கைய ருணர்த்தா துணர்த்திடு வாரு மானார்.

222. சுண்ணப்பச் சிலையும் பாகுந் துவருற மென்றா னந்தம்
நண்ணப்பஃ றரம வாவி நல்குபு களிப்புச் செய்யும்
வண்ணப்பன் மணியும் பொன்னும் வயங்கப்பூண் பரத்தை மாதர்
கண்ணப்பர் நிகர்த்தார் மைந்தர் காளத்தி யாரை யொத்தார்.

223. தீயெச்சி லவியு மெங்குந் தேடியோ ரிடத்தி னுய்க்கும்
ஈயெச்சின் மதுவு மாழி நின்றெழு மெழிலி தம்வாய்
தோயெச்சின் மழையு மெள்ளத் துணிந்தவர் பொதுமின் னார்தம்
வாயெச்சி லமுது மெள்ளும் வலியின ராவ ரம்மா,

224. முலைவிலை மாதர் மேவு முழுமனை யாக சாலை
கலைபுண ரல்குல் குண்டங் கனிவாய்பொற் கலம்பா கெச்சில்
மலைவரு நறவங் கூடி மகிழ்ச்சியின் மாந்து மாந்தர்
இலைமுகப் பைம்பூண் மார்பத் திமையவ ரெனின்மற் றென்னே.

225. பரவுசெவ் வணியி னாரும் வெள்ளணி பரித்து ளாரும்
விரவுபொன் மறுகு நாளும் விலைமட மாதர் மேய
புரவுசெய் யழகு கல்விக் குடையிரு பூமின் னாரைக்
கரவுசெய் யாதி யக்கிக் காட்டிடு காட்சி மானும்.

226. விரைகெழு புனலிற் சேறாய் மிதிபத மிழுக்கல் செய்ய
வரைவில்பன் மாலை வீழ்ந்து மற்றதை மாற்றல் செய்து
புரையற வியக்கா நிற்கும் பொதுமின்னார் தெருவென் சொற்றாம்
உரைபுகழ் வேளாண் மாந்தர் தெருவள முரைப்பா மன்றே.

        வேறு

        வேளாளர் வீதி

227. அருமைசெய் தடைந்தவர்க் கன்ன மூட்டல்சீர்
மருவிளை யான்குடி மாறர் பாலிவர்
ஒருவற நன்குகற் றுளார்கொ லோவவர்
திருவிவர் பாற்கற் றுளார்கொ றேர்கிலேம்.

228. மொய்த்தவே ளாளர்பொன் முகப்பு மாளிகை
உய்த்தமா மடைவயி னுற்று ளாரிடு
குய்ப்புகை காவதங் கோடி நாறுமேல்
மெய்ப்படு மவர்திரு வீக்க மென்சொல்கேன்.

229. உறுப்பொரு மூன்றையு முற்றுத் தாங்குமோர்
உறுப்பினுண் டாகிய வுண்மைக் கேற்பவவ்
உறுப்பெழு மூவரை யும்பு ரப்பரால்
உறுப்புழு தொழிலென வுவக்கு மாந்தரே.

230. நிலவொரு மூவர்க்கும் புனித நேர்வது
குலவுமந் தாகினி குறிக்கு மற்றதின்
உலவுசீ ரொடும்பிறந் தோங்கு மாந்தர்பால்
சுலவுவண் புனிதம்யார் கட்டு ரைப்பவர்.

231. நல்ல நீர் கங்கையென் றுரைப்பர் நன்னயம்
புல்லநீர் தோய்ந்தவர் வயிற்றுப் பொங்கழற்
கொல்லவன் பமைந்ததக் குலத்திற் கன்றியே
சொல்லமற் றொருகுலஞ் சுமப்ப துண்டுகொல்.

232. கலைபல கற்றலிற் கற்ற யாரையும்
மலைவறப் புரத்தலில் வருவி ருந்தினை
உலைவற வோம்பலி னுவக்கு நீரரே
அலைபுன லம்பர்வே ளாள ரென்பவே.

233. ஓதலும் பகைப்புல மொதுங்கித் தேம்புற
மோதலு நிதிக்குவை முகந்து கொள்ளுவான்
போதலு முழுதொழில் புரித னோக்கியேல்
ஆதலும் பிறிதுமற் றவரி னாகுமே.

234. வல்லவே ளாளர்தம் மருதப் போர்க்களம்
சொல்லவுங் கேட்கவுந் தொடர்பிற் சாரவும்
நல்லவா யமைந்தன நயந்து கேட்கவும்
புல்லவுங் கூடுமோ நெய்தற் போர்க்களம்.

235. பரசிவ னடியரைப் பரம னேயெனப்
பரவுவர் சிவாலயப் பணிசெய் வார்திகம்
பரனடி யருச்சனை பண்ணி யுண்பரம்
பரமர்வே ளாளரெப் பண்பிற் றாழ்ந்துளார்.

236. பொருவரு மினையவே ளாளர் பொற்பின்வாழ்
தெருவள மெம்மனோர் செப்பற் பாலதோ
மருவிய மற்றுள வருணத் தாரமர்
தருதெரு வளமினிச் சாற்ற நின்றவே.

            வேறு

        வணிகர் தெரு

237. வீங்குதம் பொருளி னிம்மியி னளவும்
    விடார் மொழி சுருக்கியே யுரைப்பார்
தேங்குபஃறிறத்தும் பொருள்வரு வாயே
    சிந்திப்பார் சிறுபழி யுறற்கும்
ஓங்குதம் வினையி னிடங்கொடார் பரம
    னுயர்பணி தலைக்கொள்வா ரெவையும்
வாங்குநாள் வாங்கி விடுக்குநாள் விடுக்கும்
    வணிகர்தந் தெருக்களும் பலவால்.

    மன்னர் வீதி

238. காட்சியி னெளியர் கடுமொழி யரியர்
    காசினி யகத்துயி ரெலாந்தம்
பூட்சியி னமைந்த வுயிரென மதிப்பார்
    பொறையுருக் கொண்டமர்ந் தனையார்
ஆட்சியி னமைந்தார் மாற்றல ருயிரே
    யவாவிய வேலினா ரளவா
மாட்சியி னொருகோ னடவுவெண் கவிகை
    மன்னர்வாழ் தெருக்களும் பலவால்.

    மறையவர் தெரு

239. உழல்பவந் தபுக்கு மறைமுதற் கலைக
    ளுணர்ந்தவ ரும்பரார்க் கரிய
தழலுருப் பரனைத் தழலிடைக் காண்பார்
    சாந்தமே யுருவுகொண் டன்னார்
குழன்மொழி மனையா ரதிதியர் வயிற்றுக்
    கொடுந்தழன் மாற்றிட வுவப்பார்
கழல்வினை யினராய் மறையவர் வாழுங்
    காமரு தெருக்களும் பலவால்.

    ஆதி சைவர் தெரு

240, பரவுமான் மார்த்தம் பரார்த்தமென் றிரண்டும்
    பண்புறப் பூசனை புரிவார்
விரவுமூ வகைத்தீக் கையுமபி டேக
    மேன்மையு மடைந்தவர் நறிய
குரவுவார் குழலாள் பாகர்மெய் தீண்டுங்
    கொள்கையர் கோதிலாக் குணத்தர்
கரவுதீ ராதி சைவவே தியருட்
    களித்துவாழ் தெருக்களும் பலவால்.

    சைவ மடங்கள்

241. புண்ணியம் பயக்கு மாகமம் புகலும்
    பொதுச்சிறப் பென்னுமீ ரியல்பின்
கண்ணிய வொருமுப் பொருளுநன் குணர்ந்து
    கரிசறத் தெளிந்தவ ரொன்றும்
எண்ணிய விரண்டு மில்லையாங் கலப்பி
    னியைந்துபே ரின்பத்துட் டுளையும்
தண்ணிய சுத்த சைவசித் தாந்தத்
    தாபதர் மடங்களும் பலவால்.

242. புக்கமா ணாக்கர் காலத்தாற் கனவாற்
    பொருந்திய தராதர முணர்ந்து
தக்கதாஞ் சமய முதலிய வாற்றிச்
    சாரியைமுன் னான்கினும் பயிற்றி
மிக்கவைம் பாசத் தளையொருங் ககற்றி
    வீடுபெற் றின்புற வுய்த்து
நக்கவா சிரிய ரினிதுவீற் றிருக்கு
    நலம்பொலி மடங்களும் பலவால்.

        கழகங்கள்

243. இகல்சிறி தேனு மில்லதெஃ குடையா
    ரீரிரு புலமையர் குழுமி
அகல்பல துறைநூ லியற்றுதல் விளங்க
    வகலிடத் தவர்க்கெடுத் துரைத்தல்
நகல்வனப் பொருங்கு தழீஇவழுக் களைந்து
    நாடுறு மியன்முழு துணர்த்தல்
புகலிலக் கியங்கள் பயிற்றன்மற் றிவற்றாற்
    பொலிதரு கழகமும் பலவால்.

    தண்ணீர்ப் பந்தல்

244. கதிருதித் திடுமுன் னறும்புன றெவ்விக்
    காமரு நிறையெலா நிறைத்துப்
பிதிர்துடி யாதி பெய்துமோர் கலந்தும்
    பேரிலி குசக்கனி பிழிந்தும்
முதிர்தரந் தெரிந்து கவர்ந்தவர் மல்க
    மூரிய மாவ டுவமைத்தும்
முதிர்கொடு வேனிற் பதிவழி யருகு
    முயங்கிய பந்தரும் பலவால்.

        சத்திரங்கள்

245. தளவரும் பென்ன முரவையொட் டொழித்த
    தண்டுலத் தமைத்தநன் மடையும்
பிளவரும் பருப்புங் கருனையும் வறையற்
    பெருக்கமுஞ் சிற்றுணா வகையும்
உளவரும் விரும்பு நறுமண நெய்யு
    முறுசுவைக் கனிகளும் பிறவும்
களவரு மன்பி னுபசரித் தூட்டுங்
    காமர்சத் திரங்களும் பலவால்.

        கோயில்

246. பொருவரும் வளஞ்சா லம்பர்மா நகரம்
    பொலங்கொடு செய்பெருந் தகடாம்
ஒருவரு நகரோர் மூன்றுளு மாட
    மொளிமிகப் பதித்தபன் மணியாம்
வெருவரு நாப்பண் ணாயக மணியாய்
    விளங்கிய தென்பர்கற் றுணர்ந்தோர்
திருவரும் பரிதி குலவிளக்காய
    செம்பியர் பிரான்புரி கோயில்.

        வேறு

247. ஓங்கு மால்வரை மேலொளிர் காட்சியால்
தேங்கு வானவர் சேவித்துச் சூழ்தலால்
வீங்கு மாபுகழ் மேவிய பண்பினால்
வாங்க நாளழி யாமை வயங்கலால்.

248. தேவி யோடுஞ் சிவபெரு மானருள்
மேவி நாளும் விடாம லமர்தலால்
வாவி சூழ்கயி லாயவண் கோயிலே
ஆவி நேர்கிள்ளி யாற்றிய கோயிலே.

    கோயில் மதில்

249. மாறு தாங்கி வடிவு குலையத்தீ
ஏறு தாங்கி யிழிந்தவை யெள்ளியே
பேறு தாங்கிப் பிரானையுட் கொண்டுவெள்
ஏறு தாங்கி யுயர்ந்தன விஞ்சியே.

    கோபுரம்

250. உட்ட வாதவன் போங்குற வுட்புகூஉ
அட்ட மூர்த்தி யடிதொழு மன்பினார்
சட்ட மார்சிவ லோகத்தைச் சார்வதற்
கிட்ட வேணியென் பாமுயர் கோபுரம்.

251. பிரிய வானதி யும்பிறை யும்முடிக்
குரிய வாமெனத் தாங்கி யொளிர்தலால்
கரிய மாறும்பித் தோலிற் கலத்தலால்
அரிய நாயகன் போலுமக் கோபுரம்.

    அன்னமாம் பொய்கை

252. என்ன தீர்த்தமு மெய்திவந் தாடுறும்
முன்ன மெண்ணிய யாவு முடிப்பதாய்
மன்னி மேன்மை மருவி விளங்குறும்
அன்ன மாம்பொய்கை யற்புதத் தீர்த்தமே.

253. தூல காரணஞ் சூக்கும மேயென
ஞால மோதுத னன்றுதெ ளிந்தனம்
சீல மார்பெருந் தீர்த்தங்கள் யாவைக்கும்
மூல மாய்ச்சிறி தாயது முந்தலால்.

254. நெடிய மாதவர் யாவரு நேர்ந்துகீழ்ப்
படிய மேவுங் குறுமுனி பண்பென
நெடிய தீர்த்தங்கள் யாவையு நேர்ந்துகீழ்ப்
படிய மேவுங் குறியவப் பைம்புனல்.

255. சிறிய தாய வுருவஞ் சிவணினும்
முறிய வல்லிருள் யாவு முருக்கலும்
குறிய யாவு மெனவிலை கோடலும்
செறிய வாமணி போலுமத் தீம்புனல்.

256. அண்ட வாண ரவாவன்ன மாம்பொய்கை
பண்ட வாதசோ பான வனப்பினால்
விண்ட தாமரை யாதிய வீயினால்
கண்ட பார்வை கவர்வதெஞ் ஞான்றுமே.

    அம்பிகையின் திருக்கோயில்

257. புவன வேணிப் புராணர்மெய் யென்றியம்
புவன வாயினர் சூழப் பொலிதரும்
புவன மீன்று புரக்குங் கருணைவம்
புவனப் பூங்குழன் மேயபொற் கோயிலே.

258. போற்ற வாம்வனப் பூங்குழன் மானமிக்
கேற்ற மாங்கதி ரென்றும் விளங்கலால்
தோற்ற மீறு தொலைப்பரி தாங்கதி
சாற்ற நின்றது தான்மிகை யாமன்றே.

    இறைவர் கோயில்

259. அருமை மைந்தனங் காற்றிய கோயிலென்
றொருமை யாள ருரைத்திட வோங்கலால்
பெருமை செய்யப் பிதாநின்ற தொக்குமால்
கருமை சேர்மணி கண்டர்வி மானமே.

260. போற்று வார்கட் புறவிருள் போக்கிடும்
ஏற்று வார்கொடி யேற்றவி மானமுள்
சாற்று வார்மல மாசு தகர்த்திடும்
ஆற்று வார்சடை யாங்கமர் சோதியே.

    கொடி மரம்

261. கூறு தன்னிலை பூக்கொள லின்றியே
வேறு கொண்டு விராவிய பேர்க்கெலாம்
மாறு தீர்பல மெல்லாம் வழங்குமால்
ஏறு தாங்கி யெதிர்நிற்கு மோர்தரு .

        பிற சந்நிதிகள்

262. ஆடு மேன்மை யடிகட மன்றமும்
கூடு நாயகர் மேவிய கோயிலும்
தேடு சந்திர சேகரர் மானமும்
பாடு வாரிப் படிமிசை யாரரோ.

        ஒலிகளின் சிறப்பு

263. மேய நாரதர் வீணை முழக்கமும்
பாய நான்மறைப் பாட லமலையும்
ஆய நால்வர் துதியி னரவமும்
ஆய மன்றுறங் காமை மருவுமே.

264. வளையி னோதையும் வாரழ லாற்சுட்ட
முளையி னோதையு மூடுஞ் சருமவார்த்
தளையி னோதையுஞ் சாற்றுபல் வங்கியத்
துளையி னோதையுஞ் சூழ்முகி லோதையே.

265. அம்மை முன்சென் றடியுறை வைப்பதும்
கொம்மை வெள்விடைக் கூத்தர்முன் வைப்பதும்
இம்மை யாவ ரளவிட் டியம்புவார்
செம்மை யார்பொற் சிலம்பென லாமரோ.

266. இன்ன தாய வெழின்மணிக் கோயிலில்
அன்ன மென்னடை யம்பிகை யாளொடும்
நன்னர் மேவி நயந்தரு ணல்கிடும்
பின்ன மில்லாப் பிரமபு ரேசனே.

267. நம்பர் மேவிய நல்ல நகரெனும்
அம்பர் மாநகர்ச் சீரென் னறைந்தனம்
இம்பர் ஞால மினிதெடுத் தேத்துபூங்
கொம்பர் மல்கிய நைமிசங் கூறுவாம்.

    நகரப் படலம் முற்றியது.
    (இப் படலத்துத் திருவிருத்தம் 121)

    4. நைமிசாரணியப் படலம்

    நைமிசத்தின் பெருமை

268. கால வேற்றுமை யின்மையிற் கண்கவர்
கோல மேவலி னின்பங் குலாவலின்
சீல மாருஞ் சிவபுர மேயென
ஞால மேத்தப் பொலிவது நைமிசம்.

269. வாவித் தாமரை வண்டு பெடையொடும்
கூவித் தாமரை யெண்கொளப் பாடுபண்
மேவித் தாமரை யாதி விலங்குணா
ஓவித் தாமரை சோடுற் றுவக்குமால்.

270. கான வாரண மார்த்துக் களித்துப்பெய்
தான் வாரண மாவிர தங்கொளும்
மான வாரண மாதவர் தோய்புனல்
பேன வாரண மாறெனப் போருமே.
            
                (இவையிரண்டுந் திரிபு)

271. போத கத்தினை யாவளி போற்றுகைப்
போத கத்தினை நோக்கரிப் போத்தினம்
போத கத்தினை யார்புனத் தென்னுநூல்
போத கத்தினை யாயுமப் பொங்கரில்.

272. தந்த வாரணம் போர்த்திய சாமிவி
தந்த வாரணம் போற்றுமத் தானத்தி
தந்த வாரணம் போடுசெய் சந்திநீர்
தந்த வாரணம் போமுகுந் தன்கைக்கே.

                (இவையிரண்டும் யமகம்)

273. அம்ப டர்ந்தக லாதவி ருஞ்சடை
அம்ப டர்ந்தக லாதவி ருஞ்சடை
நம்ப னங்கம லப்பத நாறுவ
நம்ப னங்கம லப்பத நாறுவ.

                (இது பாடக மடக்கு)

        வேறு

274. தித்தித்ததேதூத், தொத்துத்துதைதேத்
துத்தத்து தேத்தீ துத்தத்த தோத.

            (இது தகரவருக்கம் ஒன்றனால் வந்த செய்யுள்)

குறிப்புரை:- தூத் தொத்துத் துதை தேத்துத் தத்து தேத்தீ- பரிசுத்தமுடைய பூங்கொத்துகள்
நெருங்கியவிடத்துத் தாவுகின்ற தேனீக்கள்,  துத்தத்த தோத - ஏழிசையிலொன்றைப் பாட ,
தித்தித்ததே- இனிப்பாயிருந்தது . 

        வேறு

275. சந்தமூடுவ, சந்தமூடுவ, சந்தமூடுவ சந்தமூடுவ.

                    (இஃதேக பாதம்)

குறிப்புரை:- சந்தன மரங்களிற் பொருந்திய கொடிகளினிடையே  தென்றற் காற்றானவை 
பிணங்குவன. அழகு மூடியிருப்பன . 

276. ஆய வாழை குராவத வாருவ, நேய மாழை மராநித மோருவ
பாயகாஞ்சி பலவு நிரம்புவ, தூயதாஞ்சுப மேவுப ரம்புவ.

                    (இது கோமூத்திரி)

277. சந்து வம்பு தழுவு மகிழினும்
நந்து வண்கிளை கொண்டொளிர் நாகத்தும்
முந்து வஞ்ச முகிழ்த்தவி றாலினும்
வந்து வந்து வளைந்து விழுமளி.

                    (இது கூட சதுக்கம்)

        வேறு

278. சார்ந்த தாம்ப றாமரை, நேர்ந்த தாம்ப றாமரை,
சார்ந்த தாம்ப றாமரை, நேர்ந்த தாம்ப றாமரை,

                    (இது முரச பந்தம்)

279. ஓரு மோருயி ராற்பசு வோதலுற்
றாரு மற்றொன்ற னாலுயி ராக்குபு
சேரு மற்றொன்றி னெத்தருச் செப்பலாம்
வாரு மற்றஃ தெங்கு மலருமே.

                (இஃது அக்கர வருத்தனை)

280. சாத மந்தவ னந்தழை வித்தலு
மேத மேதுமின் றாகவி ரித்தலுங்
காதல் பூப்ப விடந்தொறுங் காட்டலும்
போத கந்தகங் கம்மெனப் போற்றுமே.

                (இஃது அக்கரச் சுதகம்)

        வேறு

281. தவமகலார் சேர, வருதிரமா வார்சே,
மதியிவருமேவார், கரவர் கரு மாலா.

                (இது சுழி குளம்)

282. மாவாயாவீ வீயாவாமா
வாயாவோவா வாவோ யாவா
யாவோவாமா மாவா வோயா
வீவாமாமே மேமா வாவீ

                (இது சருப்பதோபத்திரம்)

283. தேயாவாமா யாவாடாதே, தேனாராவே தாமோவாதே,
தேவாமோதா வேரானாதே, தேடாவாயா மாவாயாதே.

                (இது மாலை மாற்று)

284. போது மேயம ராகவி போருந்த
மீது பாயவு மாடுவ வேருந்தி
மோது மோத நறாநகு மூருங்க
மேது வாரவை நீடவ ணேருந்து.

                (இது காதை கரப்பு)

        வேறு

285. துருவ நீரது, கருகுறாதது, திருவமாயது, தருவிராயது.

                (இஃதிதிற் கரந்த செய்யுள்)

        வேறு

86. அருமா தவத்தர் புரிமேதத் தாலமர் நன்னிழலாற்
பெருநா னிலமும்பர் தாங்கூடு மாறளி பெற்றிடலால்
ஒருவா மயற்பண் புரம்போம் வரம்பற் றுரந்தரலால்
வெருவா வனமதி மேன்மையுற் றென்றும் விளங்கிடுமே.

                (இது கரந்துறை செய்யுள்)

        வேறு

287. அம்பரம ரும்ப ரருளிடத்தா ரற்புதமார்
நம்பரமர் தாண்மனமே நாடு.

                (இஃதிதிற் கரந்த செய்யுள்)

288. ஏக மாத்திரை யேறு மடைத்தலை
ஏக மாத்திரை யேறும்வெற் பாற்றிடும்
ஏக மாத்திரை யேறுசங் கங்குலாய்
ஏக மாத்திரை யேறுபொன் கீளுமே.

                (இது மாத்திரைப் பெருக்கம்)

289. ஒன்றின் மாத்திரை யுற்றக ழுக்கடை
ஒன்றின் மேற்றிசைக் காற்றி னுயருவ
ஒன்றின் மேக வளமை யுரைத்திடில்
ஒன்றில் கார்க்கவி யெண்ணில்கண் ணுற்றவே.

                (இது மாத்திரைச் சுருக்கம்)

290. பரவ சோகுதண் பாடல ராசியும்
விரவி யுங்கு மிடைகர வீரமுங்
குரவ மாமல கங்குளி ரத்தியு
முரம னைபட வோங்கு குணத்தவே.

291. புனைவண் டாடு மருத மரவம்பூ
நனைவம் பேய்தொடை பொங்கரா னாடியே
நினைகண் ணோகண்டா னீதம தாகுவ
தனைவ ராத தரமொய்க றாதவே.

            (இவையிரண்டும் இரட்டை நாகபந்தம்)

292. சூத மேயவந் தீந்தழை துன்றுவ
சீத மாமலர் சீர்துற்ற மாண்பின
ஏத மென்றதொன் றின்றுண்டு தீவிய
போத நாறலின் மாறடும் பொங்கரே.

            (இஃது அட்டநாக பந்தம்)

        வேறு

293. ஒருவரு மாவின் கனிவானத் தாருண வேதமுறா
முருகலர் பூங்கொம்பர் தாமுத வேது முதலுணர்த்தார்
திருவள வாத வவரென வேவந்து சேருமண்மீ
தருண்மெய்யை யாய்ந்தொழி யாவழி யாத வளத்ததுவே.

            (இஃது இரதபந்தம்)

        வேறு

294. மாதவாத தாதறாத சூதமோத கீதவேத
வேதமோவு சூழலாய வாழைசே பலாமுனாய
போதமேய தீயவாய சாரொணாத தானமாய
தோதவாய மேன்மைசால்வ தோகைகூர்வ தாயதே.

                (இது கமல பந்தம்)

        வேறு

295. தேய மாதர மேயதே, தேய மேதக வேயதே,
தேய வேமிக வாயதே, தேய வாவின மாயதே.

                (இது நான்காரைச் சக்கரம்)

            வேறு

296. பொற்பமர் வானுயர் கொம்பரெ லாம்பசும் பூச்சொரிவ
பற்பல வாய வருக்கை பழம்பல கவியுதிர்ப்ப
அற்பமர் புன்னை யரும்பெரெ லாமகன் மண்மறைப்ப
பொற்றுணி பற்றிய வண்கணி வண்டப்பப்ப பூப்பற்றுமே.

                (இஃது ஆறாரைச் சக்கரம்)

            வேறு

297. துறுமலர் பூப்பன துணர்விரி புன்னை
திகழ்கருங் காரன சிரத்தி லாங்கலி
வளர்சந் தான மான்வழை தளிர்ப்பன
விரிபண் பயில்வன மேவிய வண்டினம்
வியன்சினை நறுவிலி மிடைவன வேபழம்
வழிமது விழித்திறான் மௌவ றருமே.

                (இஃதெட்டாரைச் சக்கரம்)

298. அரியுங் கரியு மடுபுலி மாவும்
விரியுங் கலையு மிகவும் பிரிய
பிரிய முனிவர் பிரிகலர் மொய்ப்பர்
கனிகொண் டினிய கஞலு மாங்கே.

                (இது பிறிது படு பாட்டு)

            வேறு

299. இனிய பலாநிறை வாமலர் மாவியல் வாழையெலா
முனிவரி தாமிறை தீரளி தோய்மயன் மூசுறுமா
நனிசுவை கூர்கறை யோவமிர் தாவியல் கானயமார்
கனியொழி யாநறை மாமழை யாம்வயல் கால்படுமே.

                (இது திரிபங்கி)

            வேறு

இதிலடங்கிய செய்யுண் மூன்றாவன:-

300. இனிய பலா, முனிவரிதா, நனிசுவைகூர்; கனியொழியா.     (1)

301. நிறைவா மலர்மா, மிறைதீ ரளிதோய்,
கறையோ வமிர்தா, நறைமா மழையாம்.             (2)

302. வியல்வா ழையெலா, மயன்மூ சுறுமா,
வியல்கா னயமார், வயல்கால் படுமே.             (3)

            வேறு

303. அளியி னங்கலந் தாடிடத் தேனிழி
தளிர டர்ந்தசெந் தாதக லாக்கணி
களிகி ளர்ந்த தழைசெறி காட்சியா
னளிய டைந்த தழலிட்டி நண்ணியே.

                (இது நிரோட்டகம்)

304. குரவு பாதிரி கொக்கு வழைகழை
பரவு வாழை பலவு பலாசுசே
உரவு சாலொடு வாருயிர் பூக்கடு
விரவு தாழை வியப்புற வுள்ளவால்.

                (இஃது அநாசிகம்)
            வேறு

305. அதவ மரவ மரச, வகல மடல வனச,
மலர வறல பனச, மரந லதக மவண.

            (இஃது அகரவுயிரால் வந்த செய்யுள்)

குறிப்புரை :- அத்தி  மரம் , குங்கும மரம் ,  அரச மரம் , விசாலமான அழகிய இதழ்களையுடைய 
தாமரைப் பூக்களையுடைய தடாகங்களையும் உடையன . பலாமரம் , நல்ல சஞ்சீவி மருந்தும் 
அவ்வனத்தில் இருக்கின்றன . 
            
        வேறு

306. தாமா வாமா, வாயா காயா, யாவா யாமா, வாயா மாயா.

            (இஃது ஆகார வுயிரால் வந்த செய்யுள்)

குறிப்புரை :- தாமா வாமா  வாயா - தாவுகின்ற மிருகங்களும் , காட்டுப் பசுக்களும்  கொடுவனவல்ல .
காயா யா - காயா மரமும் , யாவென்னும் மரமும்
வாயா மா - எவ்விடத்தும் கிடைக்காத மா மரங்களும்
ஆயா மாயா - ஆச்சா மரங்களும்  இன்னுமெவைகளும்  ஒழிவனவல்ல அந்நைமிசாரணியத்தில் 

307. விதிதி கிரியி, நிதியி விரிதி, கிரியி சிகியி, மிதிதி கிரியி.

            (இஃது இகர வுயிரால் வந்த செய்யுள்)

குறிப்புரை :- விடப்பட்ட தருப்பைச் சக்கரத்தையுடையது
செல்வத்தினை உடையது. விரிந்த மூங்கில்களை உடையது
மயில்களை உடையது .  மிதிக்காநின்ற சூரியன்றேருருளையையுடையது 
அந்த நைமிசாரணியம் .

308. மந்த மாருதம் வந்து தவழ்தரச்
சந்த நாறுமத் தானத் தியல்வளம்
நந்த வென்மொழிந் தாநற் புராணத்தின்
முந்த வாம்வர லாறு மொழிகுவாம்.


        நைமிசாரணியப் படலம் முற்றியது.
        (இப்படலத்துத் திருவிருத்தம் 41)


        5. புராண வரலாற்றுப் படலம்

    நைமிசாரணிய முனிவர்களின் இயற்கை

309. சாற்றிய வனத்து வாழ்வார் சாந்தமே யுருக்கொண் டன்னார்
போற்றிய நீற்றி னோடு கண்மணிப் பொலம்பூண் மேனி
ஏற்றிய சிறப்பார் வேத நடுப்பொலி யெழுத்தோ ரைந்தும்
மாற்றிய வினைய னைத்தும் வழுத்திடு நியம முற்றார்.

310. எறிகட லேழு மொன்றா யெழப்பறம் பனைத்துங் காற்று
முறிதரப் பேர்த்துப் பேர்த்து முகந்துமேல் வீச யாரும்
அறிதரும் பூத மைந்து மடுக்கழி தருகா லத்தும்
குறிகுணங் கடந்த பெம்மான் குறித்தியா னத்தி னீங்கார்.

311. வண்டடை கிடக்குங் கற்ப மாலிகை செறியுந் தோளா
கண்டலன் வாழ்வுஞ் செய்ய கமலமே லிருப்பான் வாழ்வும்
விண்டலர் துளபத் தண்டார் மேலவன் வாழ்வு நாளும்
உண்டவ னொருவன் கான்ற பதமென வுள்ளங் கொள்வார்.

312. கொழுமுர ணியமன் வந்து கூடுக வமருக் கென்று
செழுமடல் விடுக்குங் கண்ணார் செய்யபொன் றகர்த்துக் கொட்டின்
எழுமொளி சமழ்க்குந் தேம லிளமுலை ஞெமுங்க வந்து
தழுவினுந் தம்மை யீன்ற தாயென மதிக்கு நீரார்.

313. அளவிலின் புற்ற காலு மளவிறுன் புற்ற காலும்
உளனமை தரமுன் செய்த வினையென வுணர்ந்து வப்பும்
தளர்வுமில் லவர்செம் பொன்னுந் தரைபடு மோட்டிற் காண்பார்
களவுவஞ் சனைபொய் யாதி கனவினுங் கண்டி லாதார்.

314 சிவபரன் குறியே யுள்ளல் சிவபரன் பெயரே கூறல்
சிவபரன் பணியே யாற்றல் சிவபரன் புகழே கேட்டல்
சிவபரன் றலமே நோக்கல் சிவபரன் வாக்கே யாய்தல்
சிவபர னருளே யேற்ற லன்றிமற் றொன்றுஞ் செய்யார்.

315. அத்திரி கருக்கன் காத்தி யாயனன் பிருகு மாவ
கத்தியின் சுகன்ற தீசி கண்ணுவ னாபத் தம்பன்
உத்தமப் பரத்து வாச னுபமன்னி யன்ச னந்தன்
வித்தகந் திரண தூமாக் கினிவிபண் டகன்சு தன்மன்.

316. இலகிதன் சுதீக்க ணன்சீ ரிரைப்பியன் பகவன் சாதன்
புலகன்மார்க் கண்டன் கர்க்கி புருசுண்டி திரண விந்து
நலமலி வசுமா தேவ னாரதன் றூம பானன்
வலசதா னந்தன் சம்பு மாதேசன் சுனன்வ சிட்டன்.

317. சரபங்கன் புசுண்டன் வச்சன் சனகன்ச னாதன் சங்கன்
அரபத்தன் வாம தேவ னாணிமாண் டவியன் விந்து
பிரசண்டன் சிலாதன் றாலப் பியன்சனற் குமாரன் சத்தி
பரவுபார்க் கவன்சு மந்து பராசரன் கூசு மாண்டன்.

318. கிரிசர னுரோம சன்சீர் கிளர்சுனப் புச்சன காணன்
விரிபுகழ்ச் கனக னாசு விலாயனன் கலைச்சி ருங்கன்
தெரிசருச் சரன்சா பாலி தேவலன் காசி பன்றோம்
அரிதுரு வாசன் சாதா தபனரி தகன்பி ருங்கி.

319. திருதன்குச் சகன் சாண் டில்லி யன்கனச் சேபன் மேலாம்
திருதன்சந் திரசூ டன்பப் புருவகன் மருட ணன்கேழ்
தருத்தாத் திரேயன் சீர்க்கௌ தமன்போதா யனன்சி றப்பின்
ஒரு வின்முற் கலன்ற வஞ்சா லுக்கிர வீரி யன்னே.

320. பதுமன்கா லவன்ப ருப்ப தன்கவுண் டின்னி யன்றோம்
அடிகடி பயில வன்பா ணினியங்கி ரசுபார் போற்றும்
முதுபுகழ்க் குசுரு விச்சு வாமித்தி ரன்மூ வாத
பொதுநலத் தசிதன் வல்ல புலத்தியன் றவுமி யன்னே.

321. வருசவு பரியேயட்ட வக்கிரன் கபிலன் மன்னும்
ஒருசம தக்கி னிப்பே ருத்தம னுற்றார்க் கின்பம்
தருசவு னகன் முன் னாமா தவத்தரெண் ணில்லார் கூடிப்
பொருவிலி மகிழு மியாக மாங்கொன்று புரிய லுற்றார்.

    முனிவரரின் ஆராய்ச்சி

322. அம்மகங் காண வேண்டி யடுத்தவா ரணியத் துள்ள
செம்மன முனிவர் யாருஞ் சிறந்தமா ணாக்க ரோடும்
பொம்மலுற் றாங்கு மொய்த்தார் பொலிந்தபன் முனிவருள்ளும்
தம்மன மெழுமா சங்கை சாற்றிட லுற்றார் சில்லோர்.

323. அடுபவக் காடு மாய்த்தற் காகிய கணிச்சி தேரின்
கடுமிடற் றடக்கி மாலா தியரிற வாமற் காத்த
விடுசுடர் மேனி யண்ணல் விரைமலர்ப் பாத மென்றே
தடுவருந் துணிபிற் றேர்ந்தேஞ் சாற்றலு மொன்றுண் டம்மா

324. துருவுபு மாலுங் காணாச் சுயம்பிர காச மூர்த்தி
அருமலர்ப் பாத நல்கு மறமெது வென்று தேர்ந்து
பொருவருந் துறவு தானம் புணர்தவ மகமுன்னாய
திருவநல் கெவற்றி னுள்ளுஞ் சிறந்ததொன் றெனவுந் தேர்ந்தேம்.

325. அன்னது சிவபி ரானன் கமர்தல விசேடங் கேட்டல்
மன்னவங் கடைந்து போற்றன் மருவுறச் சிந்தை செய்தல்
இன்னவை யாய வொன்றா மென்னினுந் தலம னேகம்
நன்னர்மற் றெதுசி றந்த தென்பது நாடி னேமால்.

326. இதுசிறப் புற்ற தான மெனச்சொலல் வேண்டு மென்னக்
கதுமென வெழுந்து சௌன கன்கரங் குவித்து நின்று
முதுதவப் பெரியீர் சூத முனிவரிற் றெளிவா மென்றான்
அதுமனங் கொண்டி ருந்தா ரனைவரு மன்ன காலை.

        சூத முனிவர் வருகை

327. வெள்ளிய நீறு பூசி விளங்குகண் மணிகள் பூண்டு
தெள்ளிய வெழுத்தைந் தெண்ணிச் சிறந்தமா ணாக்க ரோடும்
ஒள்ளிய புராண நூலோ ருருக்கொடு நடந்தா லென்ன
வள்ளிய கொடைசால் சூத மாதவ னாங்கு வந்தான்.

328. வந்தமா தவனை நோக்கி யிருந்தமா தவரெல் லாரும்
முந்தநேர் சென்று தாழ்ந்து முகமனோ டழைத்து வந்து
சந்தவா தனத்தி ருத்தித் தகுகடன் பலவு மாற்றி
அந்தமி றவத்தீர் யாரு மிருக்கென வருகி ருந்தார்.

    முனிவர்கள் சூதரை உபசரித்தல்

329. ஐயநின் றரிச னத்தா லரியமா தவரே யாமும்
செய்யவித் தினமு நல்ல தினமேசெய் வேள்வி யுங்கார்
மையணி களத்தா னுள்ள மகிழ்ச்சிசெய் வேள்வி யேயோர்
பொய்யற வுரைத்தே மென்று புகன்றனர் மகிழ்ந்தா ரன்றே.

330. உயர்ந்தவர் செய்கை யாதோ ருயர்விலார் தமையுந் தம்மின்
உயர்ந்தவ ரென்று கொள்கை யும்பர்நா யகன்றாட் கன்பின்
உயர்ந்தமா தவத்தீர் நும்மை யுறுவிசே டத்தால் யானும்
உயர்ந்தவ னானே னீவி ருரைத்தசொன் மறுத்தற் காமோ.

        சவுனகரின் வினா

331. என்றிருஞ் சூதன் சொல்லச் சவுனக முனியெ ழுந்து
நன்றிரு கரங்கு வித்து நயக்குநீ வருதன் முன்னம்
ஒன்றிவ ணிகழ்ந்த தைய வுறுபவங் களைத லாகும்
குன்றியல் சிலையான் பாதங் கூடுறி னென்றெ ளிந்தேம்.

332. அதுபெறற் குபாய மிட்டி யாதிய பலவுண் டேனும்
முதுதலப் புராணங் கேட்டன் முதன்மையா மெனவுந் தேர்ந்தேம்
விதுமுடிப் பரமன் வாழு மேதகு தலமெண் ணில்ல
இதுசிறப் புற்ற தென்றியா முணர்ந்தில மியம்பல் வேண்டும்.

333. எத்தலம் பிரமன் மாயோ னாதிய ரிறைஞ்சு தானம்
எத்தல மனேக சன்ம பாதக மிரிக்க வல்ல
தெத்தல மென்றுந் தீரா வறுமையை யிடிக்க வல்ல
தெத்தல மிந்தி ராதி போகமு மெளிதி னல்கும்.

334. சாதியின் வழுவு பாவந் தகர்ப்பது மனைய தோடம்
ஆதிய வுடையார்ச் சார்வா லாயதோட் டுவது நாளும்
ஓதிய நனவே யாதி மூன்றுமுண் டாக்கும் பாவம்
மோதிய வன்மை யுற்ற தலமெது மொழியுங் காலே.

335. எதுகலி தோடம் போக்கு மிருபிறப் பாள ரத்தி
எதுபவ வயுத மேனு மிரித்திடு மெவர்க்கு முத்தி
எதுபிர மாதி தேவ ரழுக்காறெய் திடவ ளிக்கும்
எதுமன முதன்மூன் றானு நினைத்தவை யெய்துந் தானம்.

336. அழறுரும் பழித்தல் போலு மலரிய லொழித்தல் போலும்
எழன்முத லெவையுந் தீர வூமனை யிரித்தல் போலும்
தழல்சின மடங்கல் யானை யனைத்தையுஞ் சாடல் போலும்
கழறராப் பாவ மெல்லா மெத்தலங் கடிதின் மாய்க்கும்.

337. சொற்றமாத் திரத்தே மேலாம் புண்ணியந் தோன்ற வேண்டும்
பற்றவே யார்க்கு மெல்லாச் சம்பத்தும் பலிக்க வேண்டும்
அற்றமில் ஞான மாதி யனைத்தையுங் கொடுக்க வல்ல
கொற்றமார் தலமு ணர்ந்து கூறுகென் றிருந்தான் மன்னோ.

338. உழுவலன் புடைய யோகி தனக்குமுன் னின்று ரைத்த
முழுவதுந் தெரிந்த சூத முனிவனோர் முகுர்த்த காலம்
பழுதற வுள்ளத் துள்ளிப் பரவுமோர் தலந்தெரிந்து
தொழுதகை யினனாய்க் கண்ணீர் துளும்பிட வுரைக்க லுற்றான்.

        சூதன் உரை

339. உத்தம ராய நீவி ரொருபொரு ளாக வைத்து
வித்தக மில்லா வென்னை வினவினீர் யானு முங்கள்
சித்தமிக் குவப்ப தாய தொருதலந் தெரிந்தே னாணி
முத்தமற் றனைய தான நாமமு மொழியக் கேண்மின்.

        வேறு

340. பிரமபுரி யென்றுரைக்கும் வேதவே தாந்தமெலாம் பெயரும் பல்ல
பரமன்மகி ழதன்மகிமை காந்தோப புராணத்திற் பார்கொண் டாடும்
வரமளவா வகத்தியசங் கிதையுரைக்குங் கேண்மினென வகுக்க லுற்றான்
திரமருவு புராணவர லாறுரைத்தாம் விசேடமினிச் செப்பு வாமே.

        புராண வரலாற்றுப் படலம் முற்றியது.

        (இப்படலத்துத் திருவிருத்தம் 32)

        6. தலம் முதலிய விசேடப் படலம்

        தலத்தின் எல்லைகள்

341. குணகடன்மேற் றிசையிரண்டு யோசனையில்
    வானவர்கள் கும்பிட் டேத்தும்
மணமலிதென் றிருவாரூர் வடக்கொருயோ
    சனையிலரி மலர்க்கண் சாத்திப்
புணர்பயங்கொண் மிழலைக்குக் குணக்கரையோ
    சனையிலென்றும் பொலிமா யூரத்
தணவியதென் றிசைவயினோர் யோசனையில்
    விளங்கிடுநா மறைந்த தானம்.

        தலப் பெருமை

342. பத்திசெயி னிகபரமும் பாலிக்கு
    மேலாகப் பகரா நின்ற
முத்தியுநன் கினிதுதவு மெவ்வுயிர்க்கு
    மெஞ்ஞான்று முன்னி னாலும்
சித்தியடை வதற்கோரா சங்கையிலை
    யதன்பெருமை செப்ப வல்லான்
அத்தியுரி போர்த்தவனே யல்லதைமற்
    றெவராலு மறைய லாமோ,

343. பொருளுதவு மனையுதவும் புத்திரப்பே
    றுதவுமற்றைப் போகத் தோடு
தெருளுதவு ஞானகலைச் சிறப்புதவு
    முத்தியுநற் சிறப்பின் மேவும்
அருளுதவு மெண்ணியவை யெண்ணியாங்
    கேயுதவு மனைத்து முய்ய
இருளுதவுங் கண்டத்தா ரினிதமரும்
    பிரமபுரி யென்னுந் தானம்.

344. கலைகளுண்மெய்ஞ் ஞானகலை போற்பலவா
    கியதருவுட் கற்ப கம்போல்
மலைவில்பசுக் களுட்காம தேனுவைப்போ
    லவயவத்துள் வயங்குங் கண்போல்
விலைவரம்பின் மணிகளுட்சிந் தாமணிபோற்
    பல்லொளியில் வெய்யோ னேபோல்
அலைவரிய வக்கரத்து ளகரம்போன்
    முதன்மையுறு மனைய தானம்.

345. வரமலியும் பிரமபுரி யென்றுரைக்கு
    மத்தலத்தில் வசிப்போர் மேன்மை
உரனமையத் தெரிந்துரைப்பான் மலரவனோ
    மற்றெவரா லுண்டு கண்டீர்
கரவுதப முத்தலமு மத்தலமே
    யெடுத்துரைக்குங் கனிவு பூண்டு
பரசிவனுக் கொப்புளதே லதற்குமுள
    தாகுமெனப் பகர லாமால்.

346. பிறந்தவர்க்கு மிடையறா வழிபாடு
    செய்தவர்க்கும் பெட்பிற் காணச்
சிறந்தவர்க்கு மெஞ்ஞான்று நினைத்தவர்க்கும்
    புறத்தெல்லை சேர்த ராமல்
இறந்தவர்க்கு முத்திதரு மொவ்வொர்தல
    மித்தலமவ் வெவர்க்கு நல்கும்
அறந்தவர்க்கு வயப்படல்போ லத்தலஞ்சார்ந்
    தவர்க்குவய மமரர் யாரும்.

347. மன்னியவத் தலத்தொருநாள் வசித்தாலு
    மத்தலத்து வழிச்சென் றாலும்
பன்னியவா ணிகமாதி யெந்நிமித்தங்
    குறித்தங்குப் படர்ந்துற் றாலும்
மின்னியபூட் கணிகையர் விழைவினடைந்
    தமர்ந்தாலும் விரிஞ்ச னாதி
துன்னியவா னவர்பலரு நறுமுறுப்பப்
    பரபோகந் துய்ப்பா ரன்றே.

348. அலையெறிமந் தாகினிசூ ழானந்த
    வனத்தலத்தி னாயுள் காறும்
நிலைமையுற வசித்தடைபே றொருநாளத்
    தலம் வசிக்கி னேரே மேவும்
மலைவருமக் காசியிலா யிரமறையோர்
    தமக்கூட்ட வருமி லாபம்
தொலைவருமத் தலத்தொருவர்க் கொருபிடிசோ
    றளித்தலினாற் றோன்றுந் தோன்றும்

349. வேறுதலத் திடைச்சாந்தி ராயணமே
    கிரிச்சரமே விதந்து மேலோர்
கூறுதத்த கிரிச்சரமே முதலாய
    விரதமெலாங் கொண்டு நோற்கும்
பேறுசமழ்ப் புறுமனைய தலத்து முப்போ
    துண்டமர்ந்தான் பெரும்பேற் றிற்கு
நாறுமணுத் துணையறமு மேருவா
    மத்தலத்தி னடாத்தின் மாதோ.

350, கனியுண்டு காயுண்டு கந்தமுண்டு
    சருகருந்திக் கதிக்குங் காற்றைத்
தனியுண்டு பிறதலத்தி னோற்பவரத்
    தலத்தடைந்து தருவா ரிற்கண்
நனியுண்டு பிரமபுரீ சனைத்தொழுது
    வைகுவரேன் ஞாலத் தெந்தத்
துனியுண்டு துயருண்டு மேலிடத்து
    மில்லையெனச் சொல்ல லாமே.

351. வம்புவனப் பூங்குழலா ளொருபாகர்
    பிரமபுரி வயங்கு மீசர்
அம்புவளர் சடைப்பரமர் தரிசனமொன்
    றேநினைத்த வனைத்து நல்கும்
வெம்புபவக் கடல்சுவற்றற் கொருவடவை
    யவர்நாம மெய்யே யந்த
நம்புதிருப் பெயர்புகலார் தம்பிறப்பு
    மெப்பிறப்போ நவிலுங் காலே.

352. மறையவனா யினுமகுட மன்னவனா
    யினுமொழுக்க வணிக னேனும்
முறைதிறம்பாச் சூத்திரனே யாயினுஞ்சாங்
    கரனேனு மொழிய லாகாக்
கறைகெழுமு நீசனா யினுமிழிந்த
    பாடண்டக் கலதி யேனும்
அறைமகளி ராயினுநூ லறிந்தவரா
    யினுமொன்று மறியா ரேனும்.

353. அறமியற்று வாரெனினு மறமியற்று வாரெனினு மான்ற கேள்வித்
திறமதிக்கு மவரெனினு மஃதுமதி யாரெனினுஞ் சிறுவ ரேனும்
உறவிருத்த ரேயெனினுங் கரஞமலி முதலாய வுயிர்க ளேனும்
மறமிரிக்கும் பிரமபுரி வைகுதலாற் சிவலோக மருவ லுண்மை.

    தலத்திற்குரிய வேறு பெயர்கள்

354, பிரமனருச் சனைசெயலாற் பிரமபுரி யம்பரப்பேர் பெற்ற தோன்றல்
திரமுறமே வலினம்பர் மாநகர மாகாளி சேர்ந்த மாண்பால்
உரனமைமா காளிபுர மாகாளன் பூசனை நன் குஞற்று மாற்றால்
கரவரிய மாகாள புரம்புன்னை யாற்புன்னா கவன மாதோ,

355. நந்தனளித் தலினந்த ராசபுரம்
    யாவோரு நயக்கு மாறன்
வந்ததிரு வருட்பேற்றான் மாறபுரி
    சண்பகமா வனஞ்சேர் மாண்பால்
கந்தமலி சண்பகா ரணியமிவை
    முதற்பலவாங் கரையு நாமம்
அந்தமிலத் தலப்பெருமை யாவரறிந்
    துரைக்கவலா ரளக்கொ ணாதே.

356. மன்னுபெரும் பிரமபுரி மாதேவ
    னருளடையான் வயங்கு முத்தி
துன்னுதுமென் பவன்கொடிய விடம்புசித்துப்
    பசிவருத்தந் தொலைப்போ னாவன்
இன்னுமவன் றனைநினையா னெத்தனையோ
    பிறவியெடுத் திறப்பா னேனும்
முன்னுகொடும் பந்தமறா னெனவேத
    வேதாந்த மொழியு மாதோ.

        அரிசிலாறு

357. ஆயபெரும் பிரமபுரித் தக்கணத்தோர்
    நதியொழுகு மரிசி லென்று
மேயபெரும் பெயர்படைத்த காவிரியைக்
    கண்ணுற்றார் வெய்ய கூற்றின்
தீயதெனும் வைதரணி கண்ணுறா
    ரறமுதலாந் திறநான் கென்னப்
பாயபெரும் பயன்முழுது மொருங்கடைவர்
    மற்றினியாம் பகர்வ தென்னே.

358. பொன்னிநதி மூழ்கினர்க்கு மேன்மேலும்
    புண்ணியமே புரிவ தேனும்
மன்னியொரு தலஞ்சார்ந்த மற்றையது
    விசேடமெல்லா வளத்த லத்தும்
மின்னியொளிர் பிரமபுரிச் சார்புடைமற்
    றஃததிவி சேட மாகும்
பன்னியதைக் கண்டாலு முண்டாலும்
    படிந்தாலும் பயன்மேன் மேலும்.

    அன்னமாம் பொய்கை

359. தெளிபிரம புரீசருக்குக் குணதிசையிற்
    பொலியுமொரு தீர்த்த நாளும்
அளிகிளர்மற் றதனாம மன்னமாம்
    பொய்கையென வறைவ ரான்றோர்
ஒளிதிகழு மதன் பெருமை வடமொழியி
    லன்னமெனற் குரையா நிற்கும்
களிகெழுவா சகத்தினுக்கு வாச்சியமே
    யுணர்ந்து சொலக் கடவ தன்றே.

360. அந்தநறும் பொய்கையினோர் கான்முழுகிற்
    செபம்வேத மறமுன் னாய
விந்தவிர தங்களிலொன் றில்லானு
    மாவன் முத்த னியல்பு வாய்ப்பச்
சந்ததமு முழுகுறுவோன் றனக்கரிதோ
    முத்தியெந்தத் தலத்து ளோரும்
முந்தவதின் வந்துவந்து முழுகிமுழு
    கித்திகழு முத்த ரானார்.

361. காயமொழி மனமூன்றா லாயபா
    தகச்சேறுங் கதிக்குந் தூல
மாயவுடன் முதன்மூன்றா லாயபா
    தகச்சேறு மனேக சன்மம்
மேயகொடி தாயபா தகச்சேறு
    மத்தீர்த்தம் விரைந்து மண்ணும்
தூயவது போலுலக மூன்றினும்வே
    றிலைமறையின் றுணிபு மீதே.

362. அன்னமாம் பொய்கைநறுந் தீர்த்தத்திற்
    சங்கற்ப மறைந்து கொண்டு
தன்னமே வாவன்பிற் படிந்தாடி
    வெண்ணீறு தழுவப் பூசி
என்னமா மணியுமொவ்வாக் கண்மணிபூண்
    டைந்தெழுத்து மிதயத் தெண்ணி
முன்னமா தவமுடையே மெனப்பிரம
    புரீசர்திரு முன்பு சார்ந்து.

        பிரமபுரீசர் துதி

363. மலரவனுக் கருள்புரிந்தாய் போற்றியுயர்
    பிரமபுரி வாச போற்றி
அலர்பிரம கிரியீச போற்றியயன்
    மான்முதலோர்க் கரியாய் போற்றி
பலர்புகழ்முச் சுடரினுமிக் கொளிதிகழுந்
    திருமேனிப் பரம போற்றி
உலர்தலிலே காதசரா முருத்திரருக்
    கதிபதியா யொளிர்வாய் போற்றி.

364. அருவுருவங் குணங்குறிகள் கட்டுவீ
    டனைத்துமிலா வனாதி போற்றி
மருவுமுயி ரவத்தையடை யவுந்தனக்கொன்
    றேனுமிலா வரத போற்றி
பொருவுதவிர் சிற்பரவற் புதசச்சி
    தானந்த புனித போற்றி
வெருவுதப வுலகளிக்கும் வம்புவனப்
    பூங்குழல்சேர் விமல போற்றி.

365. பொதுநடனம் புரிபாத போற்றியெனத்
    துதிபுரிவோர் பூணும் பேற்றை
முதுபுலவ ரானுமொழி தரமுடியா
    தியாமேயோ மொழிய வல்லேம்
மதுமலர்நீர்ப் பிரமபுரித் தலமுதன்மான்
    மியஞ்சிறிது வகுத்தாம் பூமேற்
சதுமுகன்வந் தருச்சித்தற் காயகா
    ரணமெடுத்துச் சாற்று வாமால்.

    தல முதலிய விசேடப் படலம் முற்றியது.

    (இப்படலத்துத் திருவிருத்தம் 25)

    7. பிரமன் சாபம் பெற்ற படலம்

366. வரியளி முரலுங் கற்ப மாலிகைத் தடந்தோள் வானோர்
பரிவொடு முதலு கத்திற் பனிவரைச் சிகர மேய
விரிமலர்த் தவிசோன் பாங்கர் மேயினர் பணிந்து போற்றி
இரிதரா வோரா சங்கை யிரிதர வினாதல் செய்தார்.

    தேவர்கள் பிரமனை வினாவுதல்

367, மறைபிர மாண மாகு மற்றுள நூல்கட் கெல்லாம்
அறையுமம் மறைதா னாங்காங் கனேகரைப் பிரம மென்றே
முறைமையி னுரைத்த தியாரை முகமனா வுரைத்த தியாரைக்
குறையற வுணர்த்தல் வேண்டு மத்துணை கூறா யேனும்,

368. படைத்தலை நீயே செய்வாய் பார்முத லனைத்துஞ் செந்தேன்
அடைத்தலை யுகுக்குங் குல்லை யாளியவ் வனைத்துங் காக்கும்
துடைத்தலை யியற்றும் வெய்ய சூற்படை சுமந்த பெம்மான்
கடைத்தலை யிவரு ணெற்றிக் கண்ணுடைப் பெருமா னுக்கே.

369. அடங்கலுந் தன்பாற் றோற்ற மாதலாற் பவனான் மாக்கள்
மடங்கரும் பிறப்பி றப்பா மயந்தவிர்த் திடுத லாற்றோம்
உடங்குகொ லுருத்தி ரன்யா வோரையுஞ் சுகப்ப டுத்தி
இடங்கொள வைத்த லாலே மிருடனென் றியம்பா நிற்பர்.

370. ஒருதனக் குயர்ந்தோ ரில்லா வுண்மையி னாலீ சானன்
மருவசை வற்றிருக்கு மாண்புமே வுறலாற் றாணு
பொருவரு முத்தி யின்பம் புணர்த்திடு மதனாற் சம்பு
வெருவுறத் துட்ட ரைக்கொல் விதத்தினாற் சருவ னென்பார்.

371. ஒண்கதிர் முதற்கோள் யாவு முதித்தலத் தமித்த லொன்றில்
எண்கடல் கரைமேற் றாவா தடங்குத லிறத்தல் பூமுன்
விண்கடை யாய பூதம் வெளிப்பட லொடுங்க லாதி
எண்கொளத் தகநடத்தும் வலியினுக் கிரனே யென்பார்.

372. ஒளிகிள ருருவா லென்றூ ழுடுபதி யழற்கு நாளும்
ஒளிகொடுத் திடலாற் காயத் திரிமுத லுளம னுக்கள்
ஒளிகெழ வுபாசித் தேத்து முண்மையா லுயிர்கட் கெல்லாம்
ஒளியுற வவித்தை முற்று மொழித்தலாற் பர்க்க னென்பார்.

373. அளவரு மொளியோ னாகி யமர்தலி னான்மா தேவன்
தளர்வற வினையைந் தாற்றுந் தன்மையாற் பரமே சன்சீர்
உளபல நாம மின்னு முள்ளன சிவனுக் கேயப்
பளகிலா தவனோ வேறோ பரமெடுத் துரைத்தி யென்றார்.

    பிரமன் தானே பிரமம் என்றல்

374. தராதல மதிக்குந் தேவர் சாற்றிய மாற்றங் கேளா
இராசத குணத்துண் மூழ்கு மிண்டையோன் மதிமயங்கி
அராவணி பவனு மல்ல னராவணை யானு மல்லன்
புராதன முதல்வன்யானே புந்தியிற் றெளிமி னின்னும்.

375. சராசர புவன மெல்லாந் தோற்றிடுந் தகையேன் யானே
கராசல வுரிபோர்த் தானுங் கராமடு திகிரி யானும்
பராவுமென் கூற்றிற் றோற்றும் பண்ணவர் படைத்த லாதி
விராவுமுத்தொழிலுஞ் செய்வா னெனையன்றி வேறு முண்டோ.

376. ஒருபரம் பிரமம் யானே சுயம்புவென் றுரைக்கு நாமம்
மருவிய தெனக்கு மற்றோர்க் குளதெனின் முகமன் மாறாத்
திருவினன் யானேயானே பிரபுவென் றெவருந் தேர்மின்
இருவரு மெனையு பாசித் திடுவரென் றுரைத்தா னன்றே.

    தேவர் திருமாலை அணுகி வினாதல்

377. மலரவன் செருக்கிற் சொற்ற வார்த்தைவா னாட்டு ளார்கேட்
டுலர்தலி லினையன் வார்த்தை யுண்மையே போலு மென்று
பலர்சொலவ் வரையி லோர்பாற் பருமணிச் சிகர மேய
அலர்துழா யலங்க லானை யடைந்தனர் பணிந்தா ரன்றே.

378. கடவுளீர் நீவிர் வந்த காரிய மென்னை யென்று
மடலவிழ் துளபத் தண்டார் மாயவன் விருப்பிற் கேட்கப்
படவர வணையாய் முந்திப் பதுமமே லவன்பா லுற்றோம்
இடர்தபு மூவ ருள்ளும் பிரமம்யா ரிசைத்தி யென்றேம்.

379. அரியல னரனு மல்ல னயனெனுந் தானே யாரும்
தெரிதரு பிரமமென்று செப்பினான் கேட்டு வந்தோம்
விரிதுழா யலங்கன் மார்பா மெய்மையோ பொய்மை யோதோம்
இரிதர வுரைத்தி யென்றார் முறுவலித் திசையா நிற்பன்.

        திருமால் இறுத்த விடை

380. இழிந்ததா மதத்தின் மூழ்கு மிணர்த்துழா யலங்கன் மார்பன்
வழிந்ததேங் கமல மேலால் வதிபவன் பிரமங் கொல்லோ
ஒழிந்தசூற் படைக்கை யானோ வொருவரு மல்லர் யானே
மொழிந்தவான் பிரம மின்னு மொழிவதொன் றுண்டு கேண்மின்

381. முன்னமெ னுந்தி யாய முண்டகத் துதித்த லாலே
இன்னமுங் கமல யோனி யெனும்பெயர் பலருஞ் சொல்வார்
அன்னவன் றானென் மைந்த னவன்பர மாதல் பொய்மை
உன்னரும் பிரமம் யானென் றுரைப்பது மெய்மை யாமால்.

        நான்முகன் கூறல்

382. என்றுரைத் தயனென் பானீங் கெய்துக வெனநி னைத்தான்
அன்றுரைத் திறுமாப் புற்ற வயனுமவ் வாறே வந்து
கன்றுரைத் தகுவர்ச் சாடுங் கரியாயோர் வணக்க மென்று
நன்றுரைத் திடலு மின்றி நயந்தெதி ரிருந்தா னன்றே.

    இருவரும் தாம் தாமே பிரமம் என்றது

383. எதிரிருந் தானை நோக்கி யென்மக னல்லை யோநீ
முதிருமன் பூற்றெ டுப்ப முறைப்படி வணக்கஞ் செய்யாய்
பிதிர்தலி லிறுமாப் புற்றுப் பேணலன் போலி ருந்தாய்
அதிர்கட லுலக மெள்ளு மறிவெங்குப் படைத்தா யென்றான்.

384. யானெலா மியற்ற லாலே யென்மக னல்லை யோநீ
வானெலாம் புகழு மென்னை மதித்துநீ தொழலா காதோ
சானெலாம் பைங்கூழ் கண்டு தாழுத லுணர்த ராதென்
மீனெலாம் பொலியும் வாரி மீமிசைக் கிடப்போ யென்றான்.

385. அன்னவா கனத்தோ னிவ்வா றறைதலும் பிரமம் யானென்
முன்னநீ யிவ்வா றோதன் முனிதக்க முறைமை யாமே
என்னமூ டத்து வத்தை யெய்தினாய் மகனே யென்றான்
சொன்னகீர் செவிவெ துப்பத் துடிதுடித் துரைப்பன் வேதன்.

386. நேமியம் படையாய் மூடத் துவமெனக் கோநி னக்கோ
சாமியு நீயோ வென்னைத் தந்தநின் பெருமை தேரின்
பூமியச் சுறமு னின்னைப் பொறையுயிர்த் திட்ட தம்பம்
ஆமிதை யறியார் யாரே யதற்குள துனக்கு முண்டால்

        இருவரும் போரிடல்

387. எனவசி வாயிற் றோற்றி யிண்டைமா மலரோன் கூறக்
கனநிகர் வடிவ மாயோன் கண்சிவந் துடன்றெ ழுந்து
மனனொடு முகன்று டிப்ப வாய்வெரீஇ யடவென் சொன்னாய்
முனகவென் றுருத்து நின்றா னெழுந்தனன் முளரி யோனும்

388. அடமறு மார்ப வேதுக் கெழுந்தனை யதுகண்ட டச்சம்
படவடங் கிடுவ துண்டோ வென்றுசெம் பதும மேலோன்
கடவுளர் பலருங் காணக் கண்சிவந் தொருகை யோச்சி
மடலவிழ் துளபத் தாரான் வண்கவு ளுறப்பு டைத்தான்.

389. இதுவரை மொழிப்போ ராற்றி யிருந்தவ னெண்ண மின்றிக்
கதுமெனக் கைப்போர் செய்தான் காரியம் வியப்பிற் றென்று
மதுமலர் துளபத் தண்டார் வானவ னொருகை யோச்சிச்
சதுமுக னொருக போலந் தகர்தரப் புடைத்தா னன்றே.

390. மாயவன் புடைத்த லோடு மாறறைந் தனனென் றொண்பூ
ஆயவன் மிகக்கொ திப்புற் றங்கையிற் றண்டங் கொண்டான்
பாயவன் சிறைப்புள் ளூரும் படலையந் துளவோ னுந்தன்
நேயவன் றண்டங் கொண்டா னிகழ்ந்தது பெருங்க லாமே.

391. இருவருந் தண்டங் கைக் கொண்ட டோச்சின ரெறியா நிற்பர்
மருவரு மிலக்கிற் றப்பா வணஞ்சினந் துறப்பு டைப்பர்
பொருவரும் வீரந் தோற்றி வஞ்சினம் புகலா நிற்பர்
ஒருவரு மெதிரு றாம லுற்கையிற் சுழலா நிற்பர்.

392. விண்ணிடைத் திரிவர் மேரு வெற்பிடைத் திரிவர் வாரி
மண்ணிடைத் திரிவர் திக்கின் வரம்பிடைத் திரிவர் தாம்வாழ்
கண்ணிடைத் திரிவ ரெல்லாக் கடலினுந் திரிவர் பூவில்
பெண்ணிடைக் கலந்து போகம் பெரிதுகொண் டுவக்கு நீரார்.

393. வானவ ரச்சங் கொண்டார் வாள்வலி படைத்த வென்றித்
தானவ ரச்சங் கொண்டார் தடங்கட லுடுத்த பாரில்
மானவ ரச்சங் கொண்டா ரென்பதென் வகுப்பார் காப்பார்
ஆனவ ரிந்த வண்ணங் கலாய்த்தம ராற்றுங் காலை.

394. முதன்மொழிப் போரும் பின்னர் முயன்றகைப் போரு நீத்து
மதனுடைத் தண்டப் போரின் மடங்கிலார் மண்ணின் மீதோர்
பதனுடைத் தானஞ் சேர்ந்து பலபடை தொடுப்பா னெஞ்சுள்
நுதலினா ரனைய காலை நோன்மைமா லிதனை யெண்ணும்.

    திருமால் வேதங்கள் முதலியவற்றை அழைத்துக் கேட்டல்

395. படைபல தொடுத்து ஞாட்புப் பண்ணினான் பலநீட் டிக்கும்
இடைவிலக் குநரு மில்லை யிமையவர் பிரமம் யாரென்
றடைதரத் தெரிவார் வேத மாதியை யழைத்துக் கேட்டால்
புடையற வுண்மை கூறும் போதனு முணர்வா னென்று

396. தன்னுடை யிதயத் தெண்ணிச் சலசமண் டபத்து மேய
பொன்னுடை மார்பத் தண்ணல் புந்தியி னினைத்தல் செய்தான்
மின்னுடை வேத நான்குங் காயத்திரி யுமே லாய
மன்னுடைப் பிரண வப்பேர் மனுவுமிங் கடைக வென்றே.

397. புனைதுழாய் மௌலி யண்ணல் புந்தியி னிந்த வாறு
நினைதலு மிருபத் தோர்சா கையினிக ழிருக்கு வேதம்
இனைதலி னூற்றோர் சாகை யியசுரு வாயி ரஞ்சால்
அனையநற் சாம மொன்பா னதர்வணம் விரைந்து வந்த

398. வருகாயத் திரியும் வாய்த்த பிரணவ மனுவும் வந்த
அருகாமற் றவற்றை நோக்கி யமரர்கள் பலருந் தேரக்
கருகாமும் மூர்த்தி கட்குட் பிரமம்யார் கழறு கென்னத்
திருகாமச் சுதன்சொ லோர்ந்து தனித்தனி செப்பா நிற்கும்.

    வேதங்கள் முதலியன சிவபெருமானே பிரமம் எனல்

399. எவனிடத் திருந்து பூத மியாவையுந் தோன்றா நிற்கும்
எவனிடத் தனைய பூத மெழுந்தவா றொடுங்கா நிற்கும்
அவன்மயேச் சுரனெ னும்பே ரண்ணலே பிரம மாவான்
அவனலா தில்லை யேயென் றறைந்ததா லிருக்கு வேதம்.

400. எவனெல்லா மகங்க ளானும் பூசிக்கப் படுவோ னென்றும்
எவன்யோகர் முதலி யோராற் பூசிக்கப் படுவோ னென்றும்
அவனொரு பினாக பாணி பரமேசன் பிரம மாவான்
அவனல்லா தில்லை யென்ன வியசுரு வறைந்த தன்றே.

401. எவன்வலி தாங்கி யண்ட சக்கரஞ் சுழலு மென்றும்
எவனணு வெளிநி றைந்தா னெவன்பெரி யவனெ வைக்கும்
அவன்யோக ருணரா நிற்கு மீச்சுரன் பிரம மாவான்
அவனலா தில்லை யென்னா வறைந்தது சாம வேதம்.

402. எவன்பொறி முழுத டக்கு மியல்பினார் நோக்கப் பட்டோன்
எவனிக மாதி மூன்றற் கென்றுங்கா ரணமா யுள்ளான்
அவனுருத் திரன்ம கேச னரன்பரம் பிரம மாவான்
அவனலா தில்லை யென்ன வதர்வண மறைந்த தன்றே.

403. மொழிபரம் பிரம மான பரசிவ மூர்த்தி யெல்லாம்
பழிதப வெங்க ளெங்கண் மூர்த்தியாப் பாவிக் கின்றோம்
அழிவிலம் மூர்த்தி யெல்லாம் பிரமமே யறிக வென்று
கழியரி லெல்லாக் காயத் திரிகளுங் கரைந்த வன்றே.

404. கரைதரு தொழிலைந் தற்குங் காரண ரனேக மாய
புரைதபு மொளிகட் கெல்லாம் பொங்குபே ரொளிய ரென்றும்
பரையொடு கலந்தி ருக்கும் பர்க்கரே பிரம மாமென்
றுரைகெழு பிரம காயத் திரிமனு வுரைத்த தன்றே.

405. குறிதரு நாம ரூப குணங்களாற் குறிக்க வொண்ணான்
செறிதரு வசனா தீதன் றிகழ்பரஞ் சோதி யென்றும்
முறிவினிட் களமா யுள்ள முக்கணான் பிரம மல்லார்
அறிதரி னாகா ரென்னாப் பிரணவ மறைந்த தன்றே.

        பிரமனின் வினா

406. மறைமுத லனைத்து மிந்த வாறெடுத் துரைப்பக் கேட்டுப்
பொறைதபு மகங்கா ரத்தாற் பூவினான் கோபங் கொண்டு
முறையுற வதுவை செய்து மனையொடு முயங்கு வானோ
நிறைபரம் பிரம மாவா னெனநெடி திகந்து சொன்னான்.

        பிரணவத்தின் விடை

407. அறிதராப் பிரம னிவ்வா றறைதலும் பிரண வத்தின்
குறியதி தெய்வந் தானோ ருருக்கொடு குலவ நேர்வந்
தெறிமழுப் பரன்வே றாய பெண்ணோடு மிசைந்தா னல்லன்
செறிதரு மவனா நந்தந் தெரிதிரென் றுரைத்த தன்றே.

    இருவரும் மீண்டும் போர் தொடங்கல்

408. அறைதரு பிரண வத்தி னதிதெய்வ மிதுபு கன்றும்
முறைதபு மிருவ ருக்கு முன்மயக் கொழிந்த தில்லை
மிறைதபு மீசன் மாயை மூடினால் விலக்கு வார்யார்
குறைதப முன்போற் பூசல் குறித்தன ரெழுந்தா ரன்றே.

    சிவபெருமான் சோதியாய்த் தோன்றுதல்

409. கடவுள ரதுதெ ரிந்து கலங்கினர் முறையிட் டார்வெவ்
விடமிடற் றடக்கும் பெம்மா னிவர்செருக் கடங்க வீப்பான்
படர்திரு வுள்ளங் கொண்டு பகையிரு வருக்கு முன்னம்
தொடர்புற வளக்க லாவோர் சோதியா யெழுந்தா னன்றே.

410. பாதல நின்றெ ழுந்து பார்முழு வதுங்கி ழித்து
மீதல முகடுங் கீண்டு விளங்குமோர் சோதி தன்னை
ஆதலங் கமையத் தேவ ரனைவருங் கண்டார் மிக்க
காதலங் களப்பின றாக விருவருங் கண்டா ரன்றே.

        இலிங்கத்தின் எழுச்சி

411. இருவருஞ் செருக்கு மாற வெழுந்ததோர் சோதிக் கோர்பாற்
பொருவருஞ் சுவாலா மாலை பொங்கநோக் கிடுகண் கூச
வெருவரும் படித்தாய் நாச விருத்தியில் லதுவாய் மாழ்கும்
குருவரு மோரி லிங்கங் குலவுற வெழுந்த தன்றே.

        சிவசொரூபம் தோன்றல்

412. அதிசய மதன்மேன் மற்றோ ரதிசயந் தோற்றிற் றென்ன
மதிசெயுஞ் சோதி லிங்க முளைத்தது மற்று முண்டாம்
பொதிவள முணர்வா மென்று நிற்கின்ற போது கண்டார்
கதியருள் சோதி நாப்பட் கவினுமோர் தெய்வ ரூபம்.

        இறைவன் சொரூபவருணனை

413. மதிதவழ் சடையு மூன்று நயனமு மழுவு மானும்
பொதிவலி யொருநாற் றோளும் புயங்கபூ டணமும் வெய்ய
கொதிசினத் தரக்கின் றோலே கொளுந்திரு வரையு மெய்யில்
பதிதிரு நீறுந் தேவி பண்புபூத் திருக்கும் பங்கும்.

        சிவபெருமான் கூறுதல்

414. தேசுவிட் டெறிக்கு மந்தச் சிற்பர வுருவ நோக்கி
மாசுவிட் டகலாச் சிந்தை யிருவரு மற்றீ தென்னோ
பேசுசித் திரத்திற் றோன்று மெனப்பெரி தெண்ணுங் காலை
மூசுமற் புதக்கூத் தையன் முகிழ்நகை புரிந்தீ தோதும்.

415. பிரமம்யாம் பிரமம் யாமென் றேபெருங் கலாம்வி ளைக்கும்
தரமரூஉ மயனே மாலே சார்தர வீங்கு வம்மின்
திரமுறு மினைய சோதி யடிமுடி தெரியக் காண்போர்
பரமெனற் கைய மில்லை காணுறப் படரு மென்றான்.

        திருமால் செயல்

416. என்றலும் வராக மாகி யிணர்த்துழாய்ப் படலை மார்பன்
அன்றலி லடிகாண் பேனென் றாயிரந் தெய்வ வாண்டு
சென்றமை பாத லத்துத் திரிந்தனன் சற்றுங் காணான்
கன்றலின் மீண்டு நீயே பரமென்று கைகு வித்தான்.

417. மாயவன் பன்னாட் டேடி வருத்தமுற் றமலன் பாதம்
மேயவோர் துகளுங் காணன் மீண்டுமெய் மொழிந்தா னென்று
தூயவா னவரு வந்தார் தூண்டருஞ் சோதி நாப்பண்
நாயனு முளம கிழ்ந்தா னவின்றமுற் பிழையு மெண்ணான்.

        பிரமன் செயல்

418. முடியறி குவன்யா னென்று முயன்றெழுந் தயனோ ரன்ன
வடிவுட னண்ட மேலாற் பறந்துமுன் வருடந் தேர்ந்தும்
பொடியணி மேனி யோன்றன் புயமுங்கண் டறியா னாகிக்
கடிதிரு சிறைமொய் யோய்ந்து கலங்குபு மீளுங் காலை.

419. அரியெனக் காணே னென்னி லாமவ மான நீங்கத்
தெரிதரக் கைதை யொன்று சிருட்டித்துக் கண்டா னென்றே
புரிவொடு சொற்றி யென்று போதித்துத் திருமுன் வந்தே
பரிதரு மிறுமாப் போடு நின்றனன் பலரு மொய்த்தார்.

420. அண்டர்காள் பலருங் கேண்மி னாயவிச் சோதி மேலால்
கொண்டதோர் முடியைக் கண்டேன் கூறுமித் தாழம் பூவும்
எண்டகு மதனால் யானே பரமென விசைத்து நின்றான்
திண்டிறல் படைத்த வானோர் தெருமந்து மயங்கா நின்றார்.

        சிவபெருமான் சபித்தல்

421. இறையென நவின்ற தன்றிப் பொய்மையு மிசைத்தா னென்று
பிறைமுடிப் பரன்கோ பித்திப் புள்ளுருப் பெயர்க்க வல்லாக்
குறைபெறு கென்று வைது குலமல ரவற்காப் பொய்மை
அறைதரு கைதாய் நீயென் னருச்சனைக் காகா யென்றான்.

        கவிக் கூற்று

422. கடிமல ராளி சாபம் பெற்றது கரைந்தா மன்னான்
வடிமழு வுடையோன் பாதந் தொழுதருண் மதித்தெ ழுந்தே
ஒடிவரும் வளப்புன் னாக வனம்புகுந் துவப்பு மேவப்
படியருந் தவம்பு ரிந்த வண்ணமும் பகர்வா மன்றே.

    பிரமன் சாபம் பெற்ற படலம் முற்றியது.

    (இப்படலத்துத் திருவிருத்தம் 57)

        8. பிரமபுரிப் படலம்

        பிரமன் வருந்தியது

423. எந்தை புவன மனைத்தினுக்கு மீசன் சினந்து சபித்திடலும்
நிந்தை யடைந்தோ திமவடிவி னீங்கா தமரு மலர்க் கிழவன்
சிந்தை தெளிய மறையாதி தெளித்த மொழியும் வறிதிகந்தே
அந்தை யடைந்தா மதன்பயனு மடைந்தா மென்று கவன்றிடுவான்.

424. தம்மை யறிந்து பரநாமே யென்று பிதற்றுஞ் சமயரென
மும்மை யுலகு நனியிழிப்ப மோகந் தலைமேற் கொளச்சிறிதும்
செம்மை தவிர்ந்து பரநாமென் றுரைத்தாஞ் செருக்குற் றென்செய்தாம்
அம்மை யொருபா லுடையானிவ் வளவில் விடுத்த தருளன்றே.

425. மேய வுலகம் புல்லெனவவ் வுலகத் துள்ளும் வீற்றிருக்கை
ஆய நகரம் புல்லெனவந் நகரத் துள்ளு மலங்காரம்
மேய தளியும் புல்லெனவத் தளியி னுள்ளு மிக்கொளிரும்
தூய தவிசும் புல்லெனவென் வந்த தென்று துயரமுறும்

426. காத லமைந்த கலைமடந்தை வருந்த விரதங் கடைப்பிடித்துப்
போதலமைந்த மைந்தரெலாம் வருந்த வென்றும் புறங்காப்புற்
றோத லமைந்த பரிசனமும் வருந்த வொளிரூர் தியும்வருந்தச்
சாத லமைந்த பெருந்துயரஞ் சார்ந்த தாவா வெனக்கலுழ்வான்.

427. செறியா வந்து பரம்யாரே தெளிய வுரைக்க வேண்டுமென
நெறியா வினாய வானரைநோ வேனோ வறிவி னிறைந்தெழுந்த
அறியா மையைநோ வேனோமற் றாரை நோவே னென்றுளத்துக்
குறியா வெழுந்து முதல்வனடி பாடித் துதிப்பே னெனல் குறித்தான்.

428. எழுந்து பரையோர் பாற்பொலிய விலங்கும் பெரிய முதல்வேதக்
கொழுந்து கருணா : நிதியாய கோமா னடித்தா மரைமலர்க்கீழ்
விழுந்து குழைவுற் றுடனெழுந்து நேரே நின்று விடுபாடற்
றழுந்து துயர முழுதொழிப்பா னன்னப் படிவ விதிதுதிப்பான்.

        பிரமன் துதி

429. பரதத் துவநா மாபராப ராதத் துவம சிவாக்கியமுன்
கரவற் றொளிர்பல் வாக்கியங்கட் கிலக்கா யுள்ள காரணா
பரவப் படநற் சுயம்பிரகா சாகை குவிப்பார் பவநாசா
அரவத் தொடைபூண் டொளிர்சாந்த ரூபா நினையஞ் சலிக்கின்றேன்.

430. ஆவா வெவன்சொ ரூபநா னறியா மையிற்சுட் டுற்றுழன்றேன்
மேவா வெவன்சொ ரூபநான் கண்டு கட்டு வீடுற்றேன்
தாவா வவன்யா ரெனின் முக்கட் சம்பு வாய நீயுனக்கே
ஓவா திரவும் பகலும்யா னுறுவந் தனைகள் புரிகின்றேன்.

431. மூசா நின்ற தத்துவக்கூட் டங்க ளெவன்பான் முழுவதுமில்
பேசா நின்ற வைம்பூதங் களுக்கும் பெருங்கா ரணன்யாவன்
தேசார் சாம்ப மூர்த்தியெவ னீயே சிறிது நினைத்தெரிந்தேன்
ஈசா சுயமாம் பிரகாசத் திறைவா நின்னைத் தொழுகின்றேன்.

432. எந்த வடிவங் குறித்தவுட னிரியா வினையோ ரிரண்டுமறும்
முந்த வெவைக்குங் காரணமாய் முளைத்த வடிவ மெவ்வடிவம்
அந்த வடிவ நின்வடிவ மாமென் றுணர்ந்தே னையமிலை
சந்த முலையோர் பான்மணந்த சங்க ராநிற் றுதிக்கின்றேன்.

433. நலமார் சச்சி தாநந்த நம்பா பாவ னாதீதா
சலமார் கால சங்காரா காம தகனா விசுவேசா
புலமார் யோக ருள்ளொளியாய்ப் பொலியற் புதாசிற் பராபரமா
வலமார் பினாக மிடங்கொண்ட வரதா நின்னைத் துதிக்கின்றேன்.

434. அத்தா போற்றி யடியார்த மல்லற் பிறவி முழுதொழிக்கும்
நித்தா போற்றி பெருங்கருணை நிமலா போற்றி யனாதியே
முத்தா போற்றி யெஞ்ஞான்று மூவா முதல்வா போற்றியருள்
உத்தா பனமின் றோங்கிவள ரொருவா போற்றி போற்றியே.

435. பதியே போற்றி யைம்பூதப் பரப்போ ருருளைத் தேரிரவி
மதியே யுயிரென் றோரெட்டும் வதிவாய் போற்றி யடியார்தம்
நிதியே போற்றி குறைவில்லா நிறைவே போற்றி யெவ்வுயிர்க்கும்
கதியே போற்றி விரும்புகளை கண்ணே போற்றி போற்றியே.

436. கோனே போற்றி நினைத்தாலுங் கூறி னாலு மிக்கினிக்கும்
தேனே போற்றி சுவையமுதத் தெளிவே போற்றி யருள்பொழியும்
வானே போற்றி மாமேரு வளைத்தாய் போற்றி கேதனமேல்
ஆனே யுயர்த்த பெருங்கருணை யானே போற்றி போற்றியே.

        சிவபிரான் அருள்புரிதல்

437. என்று துதித்துப் பணிந்து பணிந் தெழுநான் முகனுக் கிரங்கியே
குன்று சிலையாக் குனித்தருளெங் கோமான் மலர்மே லாய்நினக்கு
நன்று வேண்டும் வரம்யாது நவிறி தருதும் புரிதுதியால்
ஒன்று பிழைதீர்ந் தனையென்றா னுவந்தோ திமநான் முகனுரைப்பான்.

        பிரமன் வேண்டுகோள்

438. ஏழை யடியே னின்னுண்மை யெய்யா தியற்று பிழையனைத்தும்
மாழை விழியோர் பாலுடையாய் பொறுத்தல் வேண்டு மதிமயக்காம்
பாழை யொழிந்துய்ந் திடல்வேண்டும் பரவுங் கருணை யெஞ்ஞான்றும்
கூழை யுறாம லென்மாட்டுக் கொளுத்தி யருளல் வேண்டுமென்றான்.

        சிவபிரான் அருளல்

439. அன்ன வடிவத் தினனிவ்வா றறையக் கேட்ட மாதேவன்
பன்ன முடியாப் பிரமநீ யல்லை பகர்மா யனுமல்லன்
சொன்ன பலவும் வெறுவதற்குத் தூய தலமொன் றடைந்துதவம்
துன்ன முயறி யத்தலமுஞ் சொல்வா மென்று சொலும்பெருமான்.

        பல புண்ணிய தலங்கள்

440. செங்கை மழுமா னேந்தியநாந் தீரா மகிழ்ச்சி யுறமேனிப்
பங்கை யுடையா ளொடுமமரப் பட்ட தாய மாதானம்
சங்கை தவிரா நந்தவன மென்று பலருஞ் சாற்றிடுவார்
கங்கை நதிசூழ் தரக்கிடந்த காசி யாமற் றதன் றென்பால்

441. கொம்மை முலையா ளுறத்தழுவக் குழைந்து நாமோர் மாவடியின்
மும்மை யுலகும் போற்றெடுப்ப முகிழ்க்கு மருளி னமர்தானம்
இம்மை மறுமை முதலாய வெவையுங் கொடுத்துப் பவப்பகையாம்
வெம்மை தவிர்க்கும் புனற்கம்பை மேய காஞ்சி யதன்றென்பால்.

442. எல்லா வுலகுங் குதூகலிப்ப விமய மடந்தை விழிநோக்க
நல்லா தரவிற் பொற்பொதுவி னடநா மியற்று மொருதானம்
கல்லா முருட ருற்றாலுங் கற்றா ரினுமேம் படவுயர்த்தும்
செல்லார் மதில்சூழ்ந் துறப்பொலியுந் தில்லை வனமற் றதன்றென் பரல்

443. மலையான் புதல்வி மயூரவுரு மருவி யருச்சித் திடச்சுவணக்
கலையான் முதலோர்க் கருள் வழங்கிக் கவின நாம்வை கிடுந்தானம்
துலையா னதில்வா ளிரவிசெலு மதியி னுலகு தொக்காடும்
அலையான் மலிகா விரிசூழ்மா யூர மன்ன தலத்தென்பால்.

        புன்னாகவனப் பெருமை

444. என்று முளதோர் யோசனையி லிரும்புன் னாக வனமெனுமேர்
நன்று கெழுமு மொருதான நாமு மதன்சீர் புகலரிதால்
கன்று பிறவிப் பிணியாதி யனைத்துங் களையுங் கருதியவை
ஒன்றுந் தவறா தினிதுதவு மொழியா வளத்த தெஞ்ஞான்றும்.

445. எந்தத் தவமாங் கியற்றிடினு மினிய வாய பலங்கொடுக்கும்
அந்தத் தலமே சித்தியெலா மமையக் கொடுக்கு மயக்கமெலாம்
முந்தக் கெடுக்கு மறமாதி முகிழ்க்கு நான்கு மெளிதுதவும்
பந்தத் தொடர்தீர்த் தெவ்வுயிர்க்கு மின்பம் பயக்கு மாலதுவே.

446. அன்ன தலத்தை நீயின்னே யடைந்து தவஞ்செய் திடுவாயேல்
என்ன வரமு மாவயின்யா மெய்தி யினிது தந்தருள்வோம்
பொன்னந் திதலை முலைவாணி கொழுந போதி யென்றுரைத்துப்
பின்ன மில்லா வொருமுதல்வன் பிறங்கு கயிலை வரையுற்றான்.

        பிரமன் புன்னாகவனஞ் செல்லுதல்

447. கற்றைச் சடையான் செந்திருவாய் மலர்ந்த மொழியே கடைப்பிடியா
இற்றைத் தினமுய்ந் தனமாலென் றெண்ணி யொருபுன் னாகவனப்
பற்றைப் பெரிதுற் றவனாகிப் படர்வான் பரந்து மலர்ச்சோலைச்
சுற்றைப் புனையுந் திருக்காசித் தலத்தை யடைந்தான் றுயரறுவான்.

448. பொங்கு மணிமுத் தலையெறியும் புனித மந்தா கினிதீர்த்தம்
முங்கு விதியின் முழு கியெழுஉ முதல்வி விசாலக் கண்ணியொடும்
தங்கு மகில நாயகன்றாள் சாரந்து பணிந்து களிப்புற்றே
எங்கு நிகழ்சீ ரவாசியிடத் துள்ள தலமெ லாம்பணிந்து.

449. தேயம் பரவுந் திருக்காஞ்சித் தலத்தை யடைந்து திகழ்கம்பைத்
தோயந் தகவிற் படிந்தாடித் தூய காமக் கண்ணியொடு
நேயம் பரவ மாவடிவாழ் நிமலப் பெருமான் பதம்போற்றி
மாயங் கழிய வவணின்று மற்றுந் தொழுது செல்கின்றான்.

450. முந்து தில்லை வனம்புகுந்து முகின்மேற் பிறைபோன் மரையிலைமேல்
நந்து மருவுஞ் சிவகங்கை நலமார் தீர்த்தம் படிந்தெழுந்து
சந்து முலையாள் சிவகாமித் தாய்கண் களிக்கப் பரம்பரனு
வந்து புரியு நடம்போற்றி மற்றுந் தென்பா லியங்குவான்.

451. கோலம் பொலியு மாயூரங் குலவப் புகுந்து காவிரியில்
சீலம் பொலியும் புனலாடித் தேவர் முனிவர் தொழுதேத்த
ஏலம் பொலியுங் குழலஞ்ச லம்மை யிடங்கொண் டினிதிருந்த
ஆலம் பொலியுங் களத்தான்பொன் னடிகள் போற்றிப் பணிந்தெழுந்தான்.

452. குறித்த தான மணித்தாகக் குறுகிற் றென்று கொண்டதுயர்
பறித்த துணிபின் விரைந்தெழுந்து பறந்து பெருவான் வழிச்சென்றே
எறித்த கதிரோன் றேர்நுழைதற் கிடங்கொ டாத செறிவுடைத்தாய்ச்
செறித்த பொறிமா தவர்செறியுஞ் செழும்புன் னாக வனமடைந்தான்.

            வேறு

453. பகைதவிர் கரும்புன் னாகம் பொன்னிறம் பயிலா நிற்கும்
முகைமலர்க் கடுக்கை யின்ன வாதத்தான் மோதுந் தோற்றம்
தகைகிளர் நெடிய மாலுந் தானுமோர் வாதங் கொண்டு
மிகையுற மோதி நின்ற விதம்பொரூஉ மென்று கண்டான்.

454. இசையிரு தருவி னுக்கு மெதிரிணர் மாத விப்பாற்
பசைநற வுண்ட வண்ட ரினிதுபண் பாடுந் தோற்றம்
வசைதவிர் வேத மாதி மாயனுந் தானுங் கேட்ப
நசைகெட வுண்மை சொற்ற நலம்பொரூஉ மென்று ணர்ந்தான்.

455. சொற்றவத் தருக்கட் கோர்பாற் றுணர்பல வெடுத்து மேன்மேல்
பொற்றபொன் மலர்கள் பூத்து முருக்கொன்று பொரியுந் தோற்றம்
செற்றமா லொடுத னக்குஞ் செறிசெருக் கொருங்கொ ழிப்பான்
முற்றநே ரெழுந்த சோதி பொருமென முன்னி னானே.

456. மலர்பல செறிமு ருக்கு வானளாய் நிற்ப நாப்பண்
அலர்செறி பிடவொன் றம்ம வடியினின் றெழுந்து தோற்றல்
பலர்புகழ் சோதி நாப்பட் பதுமமெய் நிறையக் கொண்ட
உலர்தலில் பெருமான் மேவ லொத்ததென் றுள்ளங் கொண்டான்.

457. அம்மலர் முருக்கின் கீழாற் குடாவடி யடைந்து மேவச்
செம்மலர் முடிக்கு மேலோர் கழுகொன்று சிவணுங் காட்சி
மும்மல ரணுகாச் சோதி யடியொடு முடியுந் தேரும்
நம்மலர் விலங்கும் புள்ளு மாமென நயந்தா னன்றே.

458. ஒருவிட பத்தின் கீழாற் றேத்தடை யொன்று மேவ
மருமலர் தளிரா னன்ன விடபமேல் வயங்குந் தோற்றம்
கருகிருள் பருகுஞ் செய்ய கதிரவ னூரா நிற்கும்
ஒருபெருந் தேரை யொத்த தென்றுளத் துவகை பூத்தான்.

459. கண்டகண் ணிருளப் பூத்த காசையாங் கொன்று நிற்ப
அண்டவெண் மதிய மோர்பாற் கிளையடைந் தமையுங் காட்சி
கொண்டவெண் டலையி னோடு குணங்கெழு வடுகப் புத்தேன்
விண்டல மதிக்க நின்ற வியப்பிதா மெனவி யந்தான்.

460. பராரையொன் றாக மேலாற் பணைத்தெழு கிளைமூன் றாக
மராமர மொன்று நிற்குந் தோற்றம்வா னுய்ய நின்ற
புராதன வேக பாத வுருத்திரர் போன்ற தென்று
தராதல முழுது மீன்ற தாதையுள் ளுவந்தா னன்றே.

461. பலபல மாவும் புள்ளு மாவயிற் பயிற னோக்கித்
தலமிதன் விசேடந் தேர்ந்து தடையறத் தவம்பு ரிந்து
நலமுற லுளங்கு றித்து வந்தன நம்போ லென்று
நிலமுத லெவையுந் தந்தோ னினைந்திறும் பூதுற் றானே.

462. மருவிய கரும்புன் னாக வனத்ததி சயமிவ் வாறு
பொருவரும் வியப்பிற் றேர்ந்து தவம்புரிந் தாங்கு வைகும்
திருமுனி வரையுங் கண்டு செய்தவம் புரிய வெல்லாம்
தருதிறற் பிரம னம்ம சங்கற்பஞ் செய்து கொண்டான்.

        பிரமன் தவம் புரிதல்

463. வெள்ளிய வரையின் மேலோ ரிலிங்கமாய் விடைமுன் றோன்ற
வள்ளிய வருள்சால் வம்பு வனமலர்க் குழலா ளோர்பால்
நள்ளிய கணேசர் கந்தர் நந்தியா தியருஞ் சூழத்
தெள்ளிய சோமாக் கந்தர் சேகர மதித ரித்தார்.

464. தண்ணிய நடன பாதர் தண்டீச ரீறாயுள்ள
புண்ணியர் தங்களோடும் புராதனர் வந்து காட்சி
எண்ணிய கொடுக்குங் கால மெவ்வள வதுவ ரைக்கும்
பண்ணிய முயல்வே னென்று பதுமன்மா தவஞ்செய் தானே.

465. மழைவெயில் பனிமி குந்து வருத்தினும் வருந்தா னாகிக்
குழைமனத் தமலன் பாதங் கூடுறப் பொருத்தி யுண்டல்
விழைவொழித் தசலம் போல மேவிமா தவம்பு ரிந்தான்
தழைசுர வருட மோர்பா னாயிரந் தாங்க ழிந்த.

    பிரமன் தவத்தால் நிகழ்ந்தவை

466. சிறையெகி னுருவ மேய திருமல ரவனிவ் வாறு
குறையறு தவஞ்செய் காலைக் கொழுந்தவக் கனல்வி ரைந்து
முறையெழுந் தண்ட கூட முட்டியத் திறனாந் தூமம்
நிறைதர வெங்கு மாகி நிமிர்ந்தது வருத்திற் றன்றே.

    திருமால் முதலியோர் கயிலைக்குச் செல்லல்

467. மலரவன் முயன்று செய்யு மாதவத் தழல்கா றூமம்
உலர்தலின் றாகி யெங்கு முடற்றலா லச்சம் பூண்டே
அலர்துழாய்ப் படலை மார்பத் தண்ணலிந் திரன்முன் னாய
பலரொடு மடைந்தா னெங்கள் பரம்பரன் கயிலைக் குன்றம்.

468. மகபதி யாதி யாய வானவர் கணங்க ளோடும்
பகவனார் கயிலை புக்க பைந்துழாய்ப் படலை மார்பன்
சகமெலாம் புகழு நந்தி தாண்மலர் பணிந்தெ ழுந்து
ககனநா டடைந்த துன்பங் கழறுதற் குற்றோ மென்றான்.

469. என்றலு நந்திப் புத்தேன் யாருமீங் கிருக்க வென்று
குன்றவிற் பெருமான் முன்னங் குறுகுபு பணிந்தெ ழுந்து
கன்றலின் மாய னாதிக் கடவுள ரடைந்தா ரென்றான்
இன்றவர் வருக வென்னா வெம்பிரான் வாய்ம லர்ந்தான்.

470. நலமலி கருணை பெற்று நஞ்சயி லாதி மீண்டு
குலமலி வானோர் தம்மை வருகெனக் கூவ லோடும்
பொலமலி யாடை யானும் புரந்தர னாதி யோரும்
வலமலி திருமுன் சென்று வணங்கின ரெழுந்து நின்றார்.

    திருமால் சிவபெருமானிடம் கூறியது

471. நிற்பவர் தம்முண் முந்த நெடியமால் வதன நோக்கிக்
கற்பக நாட ரோடும் வந்ததென் கழறு கென்ன
விற்பயின் மணிசான் மார்பன் மீளவும் பணிந்தெ ழுந்து
சிற்பர கேட்டி யென்று விண்ணப்பஞ் செய்ய லுற்றான்.

472. மலரவ ன்ன ரூப மரீஇவள மலிபுன் னாக
அலர்வன மமர்ந்து செய்யு மருந்தவக் கனலி னாய
உலர்தலி றூமம் பொங்கி யுலகெலாம் வருத்தா நிற்கும்
பலர்புகழ் கருணை யானே பாற்றிட வேண்டு மென்றான்.

    சிவபிரான் புன்னாகவனம் வருதல்

473. என்றலுங் கருணை பொங்கி மலரவன் கருத்து மெண்ணி
வென்றவெண் கயிலா யத்தோர் கூற்றொடும் விடையி னோடும்
நன்றமை யிலிங்க மாகி நாயக முதலோர் சூழக்
கன்றலி லொருபுன் னாக வனமுற்றான் கருணை மூர்த்தி.

474. கடவுளர் பலரு மொய்ப்ப நந்திமுற் கணங்கள் சூழக்
கடலுடைந் தென்ன வெல்லா வியங்கரூங் கைமிக் கார்ப்பக்
கடமுலை யரம்பை மாதர் காமரு நடனஞ் செய்யக்
கடகரி யுரியான் வந்த தோர்ந்தனன் கண்விழித்தே.

        பிரமனின் செயல்

475. எழுந்தன னுவகை பொங்க நோக்கின னிமைக்குந் திங்கள்
கொழுந்தணி சடையான் வந்தான் குறித்தவா றருள்வான் வந்தான்
அழுந்தல்செய் துயர மெல்லா மடியறக் காய்வான் வந்தான்
செழுந்தனி முதல்வன் வந்தான் சிவன்வந்தான் வந்தா னென்று.

476. சூழ்ந்தனன் பலகா லாடித் துள்ளினன் படிமேற் றோய
வீழ்ந்தன னெழுந்து நின்று வினையெலா மொருங்கு மாயப்
போழ்ந்தனன் புகரின் றாக வாழ்ந்தனன் புன்மை யேனென்
றாழ்ந்தனன் பேரானந்த வாரியு ளலர்மே லண்ணல்.

477. எண்ணிய வாறே காட்சி யெம்பிரா னருளிச் செய்தான்
புண்ணிய மலியும் பூசை விதிப்படி புரிவ தற்கு
நண்ணிய கரமுன் னாய கருவிநா னடையே னேனும்
அண்ணிய வியன்ற மட்டு மாற்றுவே னெனத்து ணிந்து

478. பரம்பர னெதிர்வ லப்பாற் பைம்புனற் பொய்கை யொன்று
நிரம்புறப் படைத்துக் கங்கை முதனெடுந் தீர்த்த மெல்லாம்
வரம்பற வதிற்றா பித்து வளங்கெழப் படிந்தெ ழுந்து
திரம்படு மன்பு வாய்ப்பச் செழுமல ராதி கொண்டு

479. அற்புத விலிங்க பூசை யாற்றியோர் பாக மேய
சிற்பரை தனையும் பூசை செய்துநா யகர்ந டேசர்
பொற்பமர் கணேசர் கந்தர் போற்றுதண் டீச ரீறாச்
சொற்பயில் பலர்க்கும் பூசை யாற்றுபு தொழுதெ ழுந்து.

480. மீளவு மிலிங்க முன்பு மேவுபு பணிந்தெ முந்து
நீளவு நினைந்து நெஞ்ச நெக்குநெக் குருகா நிற்ப
வாளமர் கண்ணீர் பாய வடிவத்து மயிர்சி லிர்ப்பத்
தாளலர் கமலத் தோனாத் தழுதழுத் திடத்து திப்பான்.

        பிரமன் துதி

481. மறைமுழு துரைத்தாய் போற்றி மறைமுடி யமர்வாய் போற்றி
மறையடிச் சிலம்பாய் போற்றி மறைவயப் பரியாய் போற்றி
மறையடி நிலையாய் போற்றி மறைசெய்கோ வணத்தாய் போற்றி
மறையுறப் புகழ்வாய் போற்றி மறைமுழு துணராய் போற்றி.

482. எங்கணுந் தலையாய் போற்றி யெங்கணுங் கண்ணாய் போற்றி
எங்கணும் வாயாய் போற்றி யெங்கணுஞ் செவியாய் போற்றி
எங்கணும் கையாய் போற்றி யெங்கணுங் காலாய் போற்றி
எங்கணும் வடிவாய் போற்றி யெங்கணு மானாய் போற்றி.

483. விழியமை பால போற்றி வெந்நுனைச் சூல போற்றி
அழிதலில் சீல போற்றி யளப்பில்வி சால போற்றி
பழிதபு கோல போற்றி பரிந்தம ரால போற்றி
மொழியனு கூல போற்றி முரணமன் கால போற்றி.

484. திரிபுரஞ் செற்றாய் போற்றி தெளிமறை சொற்றாய் போற்றி
அரிமல மற்றாய் போற்றி யன்பரு ளுற்றாய் போற்றி
கரியதள் பெற்றாய் போற்றி ககுவமோர் சுற்றாய் போற்றி
புரியருள் வற்றாய் போற்றி பூரண நற்றாய் போற்றி.

485. ஆலமார் கண்ட போற்றி யவிர்பிறைத் துண்ட போற்றி
சீலமார் தண்ட போற்றி செவியமர் வண்ட போற்றி
கோலமா ரண்ட போற்றி குன்றக்கோ தண்ட போற்றி
காலமார் சண்ட போற்றி கனிபவர் தொண்ட போற்றி.

486, எண்ணிய வெண்ணி யாங்கே முடித்தரு ளிறைவ போற்றி
கண்ணிய பகையொன் றில்லாக் கற்பகத் தருவே போற்றி
புண்ணிய மலர்ப்பூங் கொம்பர் வதியொரு புறத்தாய் போற்றி
பண்ணிய தவத்தி னார்க்கே பயன்படும் பகவ போற்றி.

        சிவபிரான் அருளல்

487. என்றுள முருகப் பல்ல துதித்தெதிர் நிற்கின் றானுக்
கொன்றுநம் பெருமான் வேண்டும் வரமெவ னுரைத்தி யென்னத்
தொன்றுசெய் பிழைய னைத்துந் தொலைந்ததென் றுவகை யெய்தி
நன்றுவந் தனையி யற்றி நான்முக னிவைவேண் டுற்றான்.

            வேறு
        நான்முகன் வேண்டிய வரங்கள்

488. மாறாத தீவினையேன் புரிந்தபிழை
    யத்தனையு மறத்தல் வேண்டும்
தேறாத காரணத்தான் மறந்தும்யான்
    பிரமமெனச் சொலாமை வேண்டும்
பாறாத பெரும்பத்தி நின்னடிக்கே
    யெந்நாளும் பண்ணல் வேண்டும்
சீறாத நின்னருளா லிவ்வுருவி
    னின்றும்யான் றீர்தல் வேண்டும்.

489. புன்மையேன் புரிபொய்கை யன்னமாம்
    பொய்கையெனப் புகலு நாமம்
நன்மைசார்ந் ததிற்படிந்த தெவ்வுயிரா
    யினுமியம னாம நீங்கி
இன்மைசா ராதிகத்து வாழ்ந்துபர
    போகங்க ளெல்லா மாழ்ந்து
வன்மைசால் சிவலோக மடைந்துசிவா
    னந்தமுற்று வாழ்தல் வேண்டும்.

490. மன்னியவிக் கயிலாய வரையினொடு
    நந்திமுதல் வானோ ராய
மின்னியபல் கணத்தொடுமிப் புன்னாக
    வனத்தென்று மேவல் வேண்டும்
துன்னியவிவ் வரைநாமங் கயிலாய
    கிரியென்று துதித்துப் போற்றல்
முன்னியவென் பொருட்டுவர லாற்பிரம
    கிரியென்று மொழிதல் வேண்டும்.

491. இந்தநகர் யான் செயலாற் பிரமபுரி
    யெனும்பெயரொன் றெய்தல் வேண்டும்
சந்தநினக் கும்பிரம புரீசனெனும்
    பெயரெவருஞ் சாற்றல் வேண்டும்
சுந்தரநின் பாகத்தாள் கந்தவெழிற்
    பூங்கதுப்பிற் றோன்ற லாலே
அந்தமிலா வம்புவனப் பூங்குழலா
    ளெனும்பெயர்பூண் டமர்தல் வேண்டும்.

492. அன்னமாம் பொய்கைநன்னீ ராடிநினைத்
    தருச்சித்திங் கமரா நிற்பார்
என்னரா யினுமவரே யிம்மையிற்பல்
    போகமுநன் கெய்தி வாழ்ந்து
தன்னமா யினுமிருள்சா ராப்பரபோ
    கமுங்களிப்புத் ததையத் துய்த்துப்
பின்னமே வாதொருநீ யமர்சிவலோ
    கம்புகுந்து பிறங்கல் வேண்டும்.

        வேறு

493. இந்த நல்வரம் யாவுநன் கீகெனச்
சந்த மாமல ரோன்றலை தாழ்த்தலும்
முந்த னாய முதல்வன் மகிழ்ச்சிகூர்ந்
தந்த ணாவிது கேட்கென் றருளுவான்.

    சிவபிரான் அருளுதல்

494. ஓதி மப்படி வத்தை யொருவிநீ
ஆதி யிற்படி வத்தை யடைகுதி
நீதி பெற்றமற் றியாவு நினைத்தவா
றேதி கைப்பற வெய்துதி யின்னமும்

495. கும்ப மாத மகத்திற் குலவநாம்
நம்பக் காட்சி கொடுத்தரு ணன்மையால்
இம்ப ரித்தின மெய்திப் பணிபவர்
உம்ப ராவ ருறவிழிந் தார்களும்.

    பிரமன் முன்னை உருப் பெற்றமை

496. என்று கூறி யமர்ந்தா னிறையவன்
அன்று மேவிய வன்ன வடிவொரீஇத்
தொன்று மேவுரு வம்பெற்றுத் தோன்றினான்
குன்று நேர்முலை வாணி கொழுநனே.

497. நலம்வி ராயபுன் னாக வனமெனும்
தலம்வி ராய நகரஞ் சமைத்தனன்
குலம்வி ராய குடிகளு மேற்றினான்
பொலம்வி ராய மரைமலர்ப் புங்கவன்.

    பிரமன் தனதிருப்பிடம் சேர்தல்

498. பின்னும் பெட்பிற் பிரமபு ரீசரை
மன்னு மாங்கு வதிந்தனன் பூசித்தான்
பன்னுந் தன்னகர் செல்லப் படர்ந்தனன்
கொன்னு மாரருள் பெற்றுக் குறுகினான்.

499. சென்று வாணி முதலியர் சேர்தரப்
பின்று றாத பிரமபு ரீசர்தாள்
ஒன்று முள்ளத்த னாகி யுவப்புறா
என்றுஞ் செய்தொழி லாற்றி யிருந்தனன்.

500. பெற்ற மூரும் பிரமபு ரீசரைக்
கற்ற மாயவன் கைதொழு தேத்துபு
வெற்ற மேய வருளை வியந்துபோய்ப்
பொற்ற வைகுந்தம் புக்குற வாழ்ந்தனன்.

501. பந்த மோவும் பிரமபு ரிப்பரன்
சந்த மார்கழற் றாழ்ந்து வணங்கியே
அந்த வாசவ னாதியர் யாவரும்
தந்த மாநகர் சார்ந்துற வாழ்ந்தனர்.

502. நாடு மேன்மைப்புன் னாக வனமருட்
பீடு சாலும் பிரம புரியெனப்
பாடு மேன்மை பகர்ந்தன மம்பரென்
றாடு காரண மும்மறை வாமரோ.

        பிரமபுரிப் படலம் முற்றியது.

        (இப் படலத்துத் திருவிருத்தம் - 80)

        9. அம்பர்ப் படலம்

        துருவாசர் பிரமபுரி வருதல்

503. கருந்தடங்கண் மகணாவிற் கடவுளரி முதலியர்க்கா
மருந்தமிடற் றடக்கியகோ மானடிக்கே யன்புடையான்
அருந்தவத்தர் சிகாமணியா யைம்பொறியுஞ் செகுத்தியங்கும்
பெருந்தகைய னிணையில்லான் துருவாச னெனும்பெயரான்.

504. அந்தமுனி வரன்பிரம னருந்தவஞ்செய் தன்னவுருப்
பந்தமொழித் துய்ந்ததலங் கண்டுபணி வதுகுறித்து
நந்தவெழும் விருப்பினனா யாகாய நடவைகொடு
சந்தமுற வருகின்றான் றனித்துவரு மக்காலை.

    மதலோலை துருவாசரிடம் வந்து வேண்டியது

505. கருமுகிலும் விளர்த்திடச்செய் கருங்குழலாள் வார்கிழித்துப்
பொருமுபெருங் கனதனத்தாள் புடைபரந்த கடிதடத்தாள்
பெருமுனிவர் தவங்குலைக்கும் பிறழ்நெடுங்கண் ணாடளவின்
வருமுகைநேர் மூரலாண் மதலோலை யெனும்பெயராள்.

506. கடியதொழி லசுரர்குலத் துற்பவித்துங் காமருசீர்
வடிவமையு மொருதெய்வ மடமகளே யெனப்பொலிவாள்
முடிவில்வலி மகப்பெறுவான் முன்னியசிந் தையளாகிக்
கொடிநுடங்க லெனமருங்கு னுடங்கவெதிர் குறுகினாள்.

507. தனிமுனிவ னெதிரடைந்து தாமரைக்கை குவித்திறைஞ்சி
வனிதையொரு நானின்று மகப்பெறுகை யதுகருதிக்
கனிவிருப்பி னினையடைந்தேன் காதலினென் முலைகலந்து
துனியின்மகத் தரல்வேண்டுந் துருவாச வெனச்சொன்னாள்.

        துருவாசர் கூறியது

508. நாணிலா மங்கையிவ ணல்லதுரைத் திலளென்று
கோணிலா மனத்துமுனி கொதியழலிற் சினங்கொண்டு
பூணிலா முலைமடந்தாய் பூமேலான் பன்னெடுநாள்
வீணிலாத் தவம்புரிந்து புள்ளுருவம் விடுத்ததலம்.

509. பிரமபுரி யெனும்பெயரிற் பிறங்குறுமத் தலமமரும்
பரமரடி சேவிக்கப் பத்தியின்யான் செலும்பொழுது
கிரமமிலிம் மொழிபுகன்றாய் கேட்டைகே டீவினையா
தரமருவு மிருமைந்தர் தமையின்னே பெறக்கடவாய்

    துருவாசர் பிரமபுரியடைந்து இறைவரை வழிபடுதல்

510. என்றுநவின் றாங்கொருவி யிரும்பிரம புரியடைந்து
பொன்றுதலி லன்னமாம் பொய்கைநீர் திளைத்தாடி
வென்றுமிளிர் வெண்ணீறு கண்மணிமே தகப்புனைந்து
தன்றுணையின் மனுவாய வெழுத்தைந்துந் தகவெண்ணி.

511. விண்ணோங்கு குடுமிவரைப் பிரமகிரி மிசையிவர்ந்து
கண்ணோங்கு நுதலானைக் காரோங்கு களத்தானைப்
பண்ணோங்கு மிசைபோலப் பரந்தோங்கும் பெருமானைப்
பெண்ணோங்கு மொருபாகப் பிரமபுரீ சனைக்கண்டு.

512. விழியருவி மழைபொழிய மெய்முழுது மயிர்சிலிர்ப்பக்
கழிசுவையன் பூற்றெடுப்பக் கசிந்துகசிந் துள்ளுருக
மொழிகுளற வாநந்த முழுப்பரவை யலையெறியப்
பழியகல வட்டாங்க பஞ்சாங்கத் தொடும்பணிந்து

513. உள்ளிவழுத் துநருள்ளத் தொளியாய வொருமுதலே
தள்ளிமலக் குறும்பொழிக்குந் தத்துவஞா னியர்பொருளே
வள்ளியர்சேர் பிரமபுரி வாழ்வாய பெருவாழ்வே
வெள்ளிவரை மேற்பவள வெற்பேயென் றுறத்துதித்து

514. பொங்குதிரு வருள்பெற்றுப் புறவிடை கொண் டவணீங்கி
மங்குதலி லாவரணம் வாழ்வார்யா ரையுந்தொழுது
பங்குபெறு பெருந்தவத்திற் பரைபாதந் தொழக்கருதி
எங்குநிக ழன்னவரைச் சோபான வழியிழிந்தான்.

    துருவாசர் தமதிருப்பிடம் மீளல்

515. வம்புவனப் பூங்குழலா டிருமுன்மரு விப்பணிந்து
பம்புதிரு வருள்பெற்றுப் பரவுபெரு மகிழ்ச்சியனாய்
நம்புதவத் துருவாச னலங்கொளுந்தன் னிருக்கைமரீஇ
அம்புவனச் சடையார்த மருள்கருதி வாழ்ந்திருந்தான்.

    மதலோலைக்கு மக்கள் தோன்றல்

516. அன்னமுனி வெகுண்டுரைத்த வார்த்தைபழு தாகாமே
வன்னமலர்க் கருங்கூந்தன் மதலோலை யென்பவள்பால்
என்னதுய ரமுநமக்கே யெய்துமெனச் சுரர்நடுங்க
முன்னமொரு மகன் பிறந்தான் முருக்குதிறல் வலியமைந்தான்.

517. பம்பரமா முலைத்தாயும் பயங்கொளவா வரணமிலா
அம்பரத்திற் றோன்றியதா லம்பரனென் றொருநாமம்
உம்பரவை நடுநடுங்க வுதித்தவன்பெற் றானனைய
கொம்பரதி சயம்பயப்ப மீட்டுமொரு குழவுயிர்த்தாள்.

518. அந்தவிள மகன்பிறந்த வுடனழுதா னழுதவொலி
எந்தவுல கமும்பரவி யெவ்வுயிர்க்கும் பெருமயக்கம்
தந்ததனா லம்பனெனு மொருபேர்தான் பெற்றானப்
பந்தமகா ரிருவரொடும் பாவைகுர வனையடைந்தாள்.

    அவள் தன் குருவினிடம் கூறல்

519. வெள்ளிமல ரடிபோற்றி வெளியியங்கு காற்சிவமே
உள்ளிதவத் துருவாச னுதவவிரு மகவடைந்தேன்
தெள்ளியிவ ருய்யும்விதஞ் செய்யென்றாள் கவலையெலாம்
தள்ளயவ னுளத்துணர்ந்து மேலுறுதி சாற்றுவான்.

        குருவின் கூற்று

520. அம்பரா நின்பகைவ ராயவர்வா னாடரே
வெம்பரா வினுங்கொடுமை விளைத்திடுவ ரதுதீர
நம்பரா பரன்குறியோர் நற்றலத்துப் போற்றிடினவ்
உம்பரா தியர்வணங்கி யுன்வழிநிற் பார்நாளும்.

521. பன்னாக வணிபூணும் பரமரினி தமர்தானம்
முன்னாக வும்பர்குழா மொய்த்துநா டொறுந்துதிக்கப்
புன்னாக வனமெனும்பேர் பூண்டுவிளங் கியதானம்
பின்னாகப் பிரமபுரி யெனும் பெயர்பெற் றஃதன்றே.

522. அந்தமா தலத்தையடைந் தற்புதமாஞ் சிவலிங்கம்
சந்தமா திகடழுவித் தம்பியொடும் போற்றுதியேல்
நந்தமா திரைநாளா னண்ணியருள் கரந்திடுவன்
பந்தமா யதுபுரியப் படர்தியென விடைகொடுத்தான்.

    அம்பரன் இயற்றிய பூசை

523. போற்றுகுரு மொழியேற்றுப் புன்னாக வனம்புகுந்து
கீற்றுமதி சடைக்கணிந்த கேடிலாப் பெருமானை
ஏற்றுமிசை வருவானை யெண்ணியது தருவானை
மாற்றுதலி லருளானைப் பிரமபுரி வாழ்வானை

524. அன்புதலைக் கொளநோக்கி யம்பரன்மற் றம்பனொடும்
என்புகரைந் திடப்பெருகி யிருவிழியும் புனலிறைப்ப
முன்புவிளை யாவின்ப முகிழ்த்தெழப்பல் காற்பணிந்து
துன்புதவிர்ந் தனமென்று சொல்லிநனி யுள்ளுவந்தான்.

525. ஆதிமல ரவனமைத்த வன்னமாம் பொய்கையுணர்ந்
தோதிமுடி யாவன்பி னிளவலொடு முவந்தாடிச்
சோதிதிருப் பூசனைக்காந் தூயவுப கரணமெலாம்
நீதியொடு புறஞ்சேர்ந்து நேடியோ ரிடந்தொகுத்து

526. மறுவலுமத் தடம்பொய்கை மாதீர்த்தங் குடைந்தாடிப்
பெறுபலவுந் தூய்தாக்கிப் பிரமபுரீ சரையன்புக்
கிறுதியிலை யெனப்பூசை யினிதியற்றி யவ்வாறே
பொறுமைகிளர் வம்புவனப் பூங்குழலா ளையும்போற்றி.

527. மன்னியமத் தாவரண வானவர்யா ரையும்போற்றித்
துன்னியதா னுறைவதற்கோர் சூழல்புறத் துறவமைத்து
முன்னியகா லங்கடொறு முனிவில்பூ சனையியற்றிப்
பன்னியவம் பரனிவ்வா றிளவலொடும் பயிலுநாள்

528. மண்டபமுங் கோபுரமும் வயங்குவிமா னமுமதிலும்
கொண்டறவ ழாவரண வானவர்கு லாந்தளியும்
தொண்டரகங் களிதுளும்பத் தூயவாம் பணிபிறவும்
கண்டவர்கண் கவர்தருநந் தனவனமுங் கண்டனனால்.

529. பொருப்பரையன் மடப்பாவை யிடப்பாகம் புணர்ந்தபிரான்
விருப்பமிகு திருப்பணிகண் மேதகவிவ் வாறியற்றித்
திருப்பதப்பூ சனைகாலந் தொறுஞ்சிறப்பச் செய்தயன்பேர்ப்
பருப்பதத்தின் வழிபடுமம் பரன்றுதிசெய் திடுவானால்.

530. எண்ணியவை யெண்ணியாங் கினிதளிக்கும் பெருமானே
கண்ணியவா னவரிரப்பக் கடியவிட மெடுத்தயின்ற
புண்ணியனே பூசனைசெய் புண்ணியர் தம் பெருவாழ்வே
பெண்ணியலு மொருபாக பிரமபுரீச் சுரபோற்றி.

531. கொற்றமார் திரிபுரமுங் குலைந்தழிய முறுவலித்தாய்
செற்றமார் சிலைமதவே டீயாக நுதல்விழித்தாய்
உற்றபேர்ப் பெருங்கால னுருண்டுவிழும் படியுதைத்தாய்
பெற்றமே லெழுந்தருளும் பிரமபுரீச் சுரபோற்றி

532. துரியமிசை யோகியர்க டொழுதுவப்ப வொளியானாய்
அரியபெருந் தவத்தினர்நன் றாதரிக்க முதலானாய்
கரியகுழ லுமையோடுங் கலந்துயிர்க்கின் பினிதளிப்பாய்
பிரியமிகு பெருங்கருணைப் பிரமபுரீச் சுரபோற்றி

        இறைவர் காட்சியளித்தல்

533. என்றுதுதி புரிவான்மு னெம்பிரா னெழுந்தருளி
நன்றுநமைப் பன்னாளு நயந்துநீ பூசித்தாய்
ஒன்றுமதற் குளமகிழ்ந்தோம் வேண்டியதென் னுரையென்னத்
துன்றுமகி ழம்பரன்முன் றொழுதெழுந்து கூறுவான்.

        அம்பரன் வேண்டுகோள்

534. அருமணிநே ரிந்நகர மம்பரா லயபுரமென்
றொருபெயர்பூண் டிடல்வேண்டு முரைத்தபுரத் தீசனென
வருபெயரு நீபூணல் வேண்டுநினை வழிபடுவார்
திருவமிகப் பெறல்வேண்டுஞ் செப்பியமற் றிவையன்றி

535. மருவியவென் னிளவலொடும் வலியுடைய னாயானும்
வெருவுறப்பல் வானவரை வென்றுமிகை பெறல் வேண்டும்
பொருவரிய பலபுவன போகமுநன் குறல்வேண்டும்
தருவனமற் றிவையென்றான் றம்பிரா னிதுபுகல்வான்.

        இறைவர் வரம் ஈதல்

536. அம்பனா மிளவலொடு மம்பரநீ கலந்தமர்நாள்
உம்பரா தியர்பலரு நலிவுசெயா தொழிதருவார்
நம்பநீ யுரைத்தவெலா நாங்கொடுத்தோ மென்றருளி
விம்பமே வினன்பிரம புரிவாழும் வித்தகனே.

    அம்பர் என்னும் பெயருக்குக் காரணம்

537. அன்றுமுதற் பிரமபுரி யம்பரா லயபுரமென்
றொன்றுமொரு பெயர்பூண்ட ததுமருவி யம்பரென
நன்றுவழங் கிடுமிந்நா ணாதனுமப் பெயர் புனைந்தான்
குன்றுபுரை புயத்திருவர் சரிதமேற் கூறுவாம்.

        அவுணர் வரலாறு

538. முன்னமம ருறையுளையே முழுநகர மாக்குகெனச்
சொன்னபொழு தமரமயன் றொக்கவளத் தொடுசமைக்க
அன்ன நகர் நாப்பணம ரத்தாணி யரியணைமேல்
மன்னவிருந் தனன்மகுடம் வாளவுணர் குலங்கவிப்ப

539, பிரியாத தம்பியொடும் பேரவையி னிடைப்பொலிவுற்
றிரியாத மதகளிறு மிவுளியும்வாம் பரித்தேரும்
சரியாத காலாளுஞ் சமைந்துசூழ் தரக்கொடுமை
அரியாத வமைச்சர்முத லனைவருமேத் திடப்பொலிவான்.

540. அகலிடத்து நாற்றிசையு மமைந்தபல தேயத்தும்
இகல்வலிமன் னவர்பாற்போ யறைகூவ வெய்தாமே
தகலமையுந் திறையளப்பத் தான்கொண்டு நகர் புகுந்தான்
உகலமையாப் பெருவிறல்சா லுலம்பொருதோ ளம்பரனே.

541. சம்புமொழித் திறனுணர்ந்து தம்பியொடும் பிரியானாய்
வெம்புமனத் தவன் சினந்து விண்ணவர்வாழ் தலம்புகுந்து
கொம்புமத கரிபரிமுற் குலைகுலையும் படிகலக்கி
நம்புதருக் களைமுறித்து நலிகுறும்பு நனிசெய்தான்.

542. அம்பரநேர் தடநெடுங்க ணயிராணி முலைத்துணைதோய்
அம்பரநா டவன்வெருவி யாண்டளப்பா னொடுமுன்னாள்
அம்பரமர் மொழிப்படியே யனுசனொடு மடைந்தமர்செய்
அம்பரன்றன் செயலெண்ணி யடுத்ததீ தெனப்புரிவான்.

543. மூவர்தொழும் பிரமபுரி முன்னிநெடு நாளாகத்
தேவர்பல ருந்தொழுமா தேவனருச் சனையாற்றிப்
பூவர்தொழில் குலவாங்குப் பொற்பவரம் பெற்றநினை
யாவரெதிர்ப் பவரெண்ணா தெங்களொடும் பொரநினைந்தாய்

544. என்றுகுழைந் துரைத்திடலு மிடிமுழக்கி னுறநகைத்துக்
குன்றுதெறு புயத்தவுணர் குலங்களைநின் றிறலுணர்வான்
இன்றுபுகுந் தனமுனமே யீதுணர்ந்தாற் புகேமென்று
நன்றுமொழிந் தனன் பெறுவ பெற்றுநடந் தனன்மாதோ.

545. இன்னமும்விண் மிசையுலக மெங்கணுமிவ் வாறடைந்து
தன்னமுன்னே ரலராகாத் தகையுணர்ந்து திறையாகச்
சொன்னமுந்தூ சும்பிறவுந் தொக்ககொண்டு நகர்ப்புகுந்தான்
அன்னமுமே னமுமுணரா னருள்பெற்ற வம்பரனே.

546. ஆயதிறற் றம்பியொடு மம்பரா சுரனென்பான்
நேயமிகு தன்னகர நீண்முடியத் தாணியகம்
மேயவரி யணையமர்கான் மிக்கோனா கியகுரவன்
பாயவிவண் வருகென்று பண்புறுதூ தினைவிடுத்தான்.

547. தூதுமொழி தலுமகிழ்ச்சி துள்ளமழைக் கோளெழுந்து
மோதுவலி யம்பரற்கு முன்குறுக விருக்கையெழீஇப்
போதுபல தூய்ப்பணிந்து பொற்பீடத் திருத்தியிருந்
தோதுதிற முண்டடிகேள் கேட்கவென வுரைத்திடுவான்.

548. அடிகண்மொழி தலைக்கொண்டு பிரமபுரி யடைந்தைந்து
முடியுடையான் றனைப்போற்றி முன்னியயா வையும்பெற்றேன்
கடிமலர்க்கற் பகநாடு முதற்பலவுங் கைக்கொண்டேன்
படியிலொரு குறையுமிலை பஃறிருவு மனுபவிப்பேன்.

549. இணங்குதிற லுடையெனக்கு மெம்பிக்குந் தக்கபடி
மணங்குலவச் செயல்வேண்டுங் கன்னிகையார் மதித்துரைத்தி
உணங்குதலில் புகழோயென் றுரைத்திடலு முறுவலித்து
நிணங்குலவு வாளவுணர் நிருபகே ளெனப்புகல்வான்.

550. வாளவுணர் குலம்புரக்கு மன்னவர்க்குக் குலதருமக்
கோளமையும் படியின்ன குலத்துதித்தா ரென்றுளதோ
காளவிழி மடமாதர் கட்கினிய ராயிருந்தால்
நீளமணம் புணர்வதுவே நெறியென்று புகர்மொழிந்தான்.

        அசுரனின் தீச்செயல்

551. மறைமொழியிற் குருமொழியே சிறந்ததென மனங்கொண்டு
நிறைபொருளும் பிறவுநனி நிரம்பவுத வினன்போக்கி
முறைமைதப வுலகிடைப்பன் முரணுடையார் தமைச்செலுத்திக்
குறையறமற் றவருதவு மடவார்தோள் கூடுவான்.

552. படிமகளி ரின்றுசுரர் பைங்கொடிபோல் பவர்நாளைக்
கடிதலிலா வியக்கர்குலங் கலந்தமட வார்மறுநாள்
ஒடிவில்வித்தி யாதரர்த மொள்ளிழைமங் கையர்மறுநாள்
தடிதலற வப்பானாள் வேறுபுணர் தரம்பூண்டான்.

553. நென்னலனு பவித்தவரை யின்றுநீக் கிடுவானின்
றின்னலறப் புணர்ந்தவரை நாளையிரிப் பான்மறுநாள்
அன்னவரைக் கழித்திடுவா னப்பாலு மப்படியே
சொன்னபடி கொணர்வார்க்கே தூசுநிதி யமுஞ்சொரிவான்.

554. இந்தவிதம் விடனொழுக விளையானு மிளையானாய்ப்
பந்தமிகு மத்தொழிலே கைக்கொண்டான் படுபாவி
வந்தபடி செய்வதனை மதித்திறந்தார் சிலமாதர்
சந்தமழி தரக்குலைத்துத் தவ்வெனமே வினர்சிலரே.

555. மண்முதலெவ் வுலகுமிடர் மாறுவதென் றென்பாரும்
பெண்ணுருவங் கொடுபிறத்தல் பெரும்பாவ மென்பாரும்
கண்மருவு பேரழகே கடியவிட மென்பாரும்
என்னுமிள மையிற்கொடிதின் றென்பாரு மாயினார்.

        இந்திரன் பிரமனிடம் முறையிடல்

556. இந்தவித மடமாத ரெல்லாரு நிலைகுலைய
முந்தவமர்க் காற்றாத முகிலூர்தி முகம்புலர்ந்து
கந்தமலர்க் கடவுளடி கைதொழுதம் பரன்கொடுமை
வந்தபடி யெடுத்துரைக்க மற்றவனு நனியிரங்கி

557. திருமறுமார் பனைச்சார்ந்து சேவித்தம் பரன்கொடுமை
பெருமவுளத் துணராம லிருப்பதெவன் பேசுகென
வருமறையா கமமுழங்கும் பிரமபுரி யமர்தரக்குச்
சருமவுடை யார்க்குரைப்பிற் றவிர்வோமித் துயரென்று.

558. கருதியம ரரும்வெளிறு களிறுகைக்கு மிந்திரனும்
கருதியுணர் நான்முகனுஞ் சூழமா யவனேகிப்
பருதிமதி யழன்முக்கட் பரன்பிரம புரியடைந்து
தருதியற மென்றன்னத் தடப்பெருநீ ரிடைப்படிந்து

    திருமால் தேவர்களுடன் பிரமபுரீசரைக் காணல்

559. வெள்ளியநீ றுறத்தரித்து மேதகுகண் மணிபூண்டு
வள்ளியவைந் தெழுத்தெண்ணி நந்திபதம் வணங்கியெழுந்
தொள்ளியகோ யிலைவலம்வந் துட்புகுந்து நேர்கண்டான்
தெள்ளியஞா னப்பிழம்பாஞ் சிவலிங்கப் பெருமானை.

        திருமால் பக்தியும் துதியும்

560, கண்டுவிழி புனலிறைப்பக் கைகுவித்துப் பணிந்தெழுந்து
தண்டுதலில் பேரன்பு தலைக்கொண்டு நெஞ்சுருக
அண்டுபர வசத்தினனா யாநந்தக் கூத்தாடி
விண்டுமொழி தழுதழுப்ப மேவுதுதி யெடுத்துரைப்பான்.

561. எவனுலகுக் காதார மெனப்படுவா னெவ்வுலகும்
எவன்வலியி னாய்நிலைபெற் றிறுதியுறு மெவ்வுயிரும்
எவனருளாற் பந்தமுறு மிரித்தின்ப வீடடையும்
அவனொருநீ நின்னடியே யடைந்தடியேன் றுதிக்கின்றேன்.

562. எவன்வலியாற் பருதிமதி முதலியவெ லாமியங்கும்
எவன்வலியாற் கரைகடவா தெழுபெருவா ரியுமடங்கும்
எவன்வலியாற் பூதங்க ளெஞ்ஞான்று மெழுமடங்கும்
அவனொருநீ நின்னடியே யடைந்தடியேன் றுதிக்கின்றேன்.

563. எவன்மறை நூன் முழுதுரைத்தா னெவன்மறையா லுணர்வரியான்
எவன்மறையே வாம்பரியா விணைத்துவெளி யியக்கினான்
எவன்மறைமே லடிவைத்தா னெவன்மறைநூ புரம்புனைவான்
அவனொருநீ நின்னடியே யடைந்தடியேன் றுதிக்கின்றேன்.

564. எவனுருவ மெட்டுடையா னெவனுருவ மொன்பதுளான்
எவனுருவ மாறுடையா னெவனுருவ மொன்றுமிலான்
எவனுணரு மெண்குணத்தா னெவன்பிறப்போ டிறப்பில்லான்
அவனொருநீ நின்னடியே யடைந்தடியேன் றுதிக்கின்றேன்.

565. எவன்புவியி லைந்தானா னெவன்புனலி னான்கானான்
எவனழலின் மூன்றானா னெவன்வளியி லிரண்டானான்
எவன்வெளியி னொன்றானா னெவனிவற்றா லுணர்வரியான்
அவனொருநீ நின்னடியே யடைந்தடியேன் றுதிக்கின்றேன்.

566. எதுபிரமன் புரிதவத்திற் கிரங்கியிறை யொடுமடைந்த
தெதுகயிலை யெனும்பெயர் பூண் டெஞ்ஞான்று மிலங்கிடுவ
தெதுதரிசித் தவர்க்களவா வின்பமருள் பெருவிலங்கல்
அதுபிரம கிரியிஃதீங் கமருநினைத் தொழுகின்றேன்.

567. அம்புவன முழுவதுமோ ரறுகினுனிப் பனியென்னப்
பம்புவனச் சடையமைத்த பரமநினைத் தொழுகின்றேன்
வெம்புவனத் திடையாடும் விமலநினைத் தொழுகின்றேன்
வம்புவனப் பூங்குழல்பால் வரதநினைத் தொழுகின்றேன்.

568. கிரமமுணர்ந் தியங்கிடுவார் கீழ்மையுறா விதமுயர்த்தும்
பரமதயா நிதியாய பகவநினைத் தொழுகின்றேன்
அரமதலைத் தொடைபூணு மமலநினைத் தொழுகின்றேன்
பிரமபுரித் தலையமரும் பெருமநினைத் தொழுகின்றேன்.

        சிவபெருமான் காட்சி அருளல்

569. என்றுநெடி யவன்றுதிப்ப விண்டைமலர் மேயானும்
குன்றுகுலை தரவயிரக் கொடும்படைகை விதிர்த்தானும்
துன்றுமம ரருமிரங்கித் தனித்தனியே துதித்தார்கள்
அன்றுகரு ணையிற்பெருமா னவர்காண வெளிநின்று.

        திருமால் கூறியவை

570. மாயவனை முகநோக்கி மலரவனா தியரொடுநீ
மேயதெவ னுரைத்தியென விரைமலர்த்தாள் பணிந்தெழுந்தே
ஆயவலி யம்பரனு மம்பனுஞ்செய் கொடுமையெலாம்
தூயவுளத் துணராய்போ லிருப்பதெவன் சுடர்க்கொழுந்தே.

571. இருவர்தலை யெடுத்தவுண ரிறைவரா யெங்களொடும்
பொருவர்மக ளிரையலைப்பர் புன்றொழிலே தலைநிற்பார்
தருவர்புவிக் கஞரனைத்து மற்றவரைச் சாய்த்திடுவார்
ஒருவரிலை யடியேமா லாகுவது மொன்றிலையால்,

    சிவபிரான் தேவியைக் குறிப்பொடு நோக்கல்

572. ஆலமடர்த் திடவடக்கி யன்றுபுரந் ததுபோலிக்
காலமவர் குறும்படக்கிக் காத்தல்கட னென்றிறுத்தான்
சூலதர னவர்கொடுமைத் தொழிறொலைப்பான் றன்னொருபால்
மூலவழ கியமுதல்வி முகநோக்கி முறுவலித்தான்.

        தேவி காளியை நினைத்தல்

573. புண்ணியநா யகப்பெருமான் புரிமுறுவற் குறிப்புணர்ந்து
தண்ணியபே ரருண்முதல்வி தன்கூற்றின் மாகாளி
நண்ணியவீங் கெனநினைத்தா ணினைத்தவுடன் ஞாலமெலாம்
பண்ணியமா தவமெனவப் பாவையடைந் தடிதொழுதாள்.

    காளிக்கு இட்ட கட்டளையும் அவள் செயலும்

574. அடிதொழுத மாகாளி முகநோக்கி யணங்கேநீ
கொடியபுரி யம்பரனுங் கோணுடையம் பனுமின்றே
முடியநெடி யவனொடுபோய் முடித்திடுகென் றாள்பணிந்து
கடியதிரி தலைச்சூலங் கைக்கொண்டாள் கனன்றெழுந்தாள்

        காளி இயற்றிய சூழ்ச்சி

575. விதிமுதல்யா வரையுமவர் மேவுமிடம் புகச்செலுத்திக்
கொதிதழற்சூ லக்கரத்தாள் கொண்டல்புரை வண்ணனொடும்
பதிதரமேற் றிசையமர்ந்தம் பரனிளவற் றுணையிழப்ப
மதியமைய வாராய்ந்தோர் மறையவர்கன் னிகையானாள்.

576. எந்தவுல கினுங்குடிகொண் டின்பமுற வீற்றிருந்த
சந்தமுழு வதுந்திரண்டோ ருருக்கொண்ட தன்மையென
முந்தவரு மோகினியிம் மோகவுருத் தொழுத்தையெனக்
கந்தமல ரவன்றொழினாண் கைக்கொளுமோ ருருக்கொண்டாள்.

    திருமால் ஒரு வைதிகக் கிழவன் உருக்கொள்ளல்

577. மறையவர்கன் னிகையென்ன மாகாளி யுருக்கொண்ட
நிறையழகு தெரிந்துமுன் மோகினியாய் நிகழ்மாயோன்
குறையமைய வுருமாறிக் கொண்டதெனப் பன்னூலும்
அறைதிறத்தோர் வைதிகஞ்சால் கிழமறையோ னாயினான்.

            வேறு

        இருவரும் அசுரர் இருப்பிடம் போதல்

578. பார்ப்பன விருத்த னாய பைந்துழாய்ப் படலை யானும்
சீர்ப்பவோர் பனத்தி யாய திரிதலைச் சூல மாதும்
ஆர்ப்பமை கருங்க ழற்கா லம்பர னம்பன் செல்வம்
போர்ப்பநன் கமரு மாட நோக்கினர் போத லுற்றார்.

579. திருவளர் விபூதி யுங்கண் மணியுமெய்த் தேசு செய்ய
ஒருவறப் புனைச ழங்க லுடையுத்தரீய மின்னப்
பொருவரும் பூணூன் மார்பிற் பொலிதரத் தண்டொன் றூன்றி
மருவடி பெயர்த்து மெல்ல மறையவன் முன்ன டந்தான்.

580. இளங்கதி ருதய மென்ன மெய்யொளி யெங்கும் போர்ப்பக்
களங்கமின் மதிய மென்னக் காமரு வதனஞ் சீர்ப்ப
விளங்குபொற் சிலம்பு தண்டை மேகலை யாதி யார்ப்பத்
துளங்கலிலணங்கு மெல்லத் தொடர்ந்துபின்னடந்து சென்றாள்

581. அதிசவுந் தரமின் னாளோ டந்தணன் வருகை கண்ட
மதியில்சில் லவுண ரோடி யிருவர்க்கும் வகுத்துக் கூறப்
பொதிமகிழ்ச் சியரா யன்னர் புதியரே லழைத்து வம்மின்
எதிரென வவரு மோடி யிறைவர்பால் வருக வென்றார்.

    அசுரர்கள் கன்னியைக் காணுதல்

582. வருகென வழைத்த லோடு மங்கையு மறைவ லானும்
திருகுறு மனத்தார் முன்பு சென்றனர் நின்றா ராகப்
பொருவரும் வனப்புந் தேசும் பூத்தபூங் கொடியைக் கண்கள்
இருவரும் விடுத்து மோகந் தலைக்கொள வினிது கண்டார்.

    கன்னியின் சௌந்தரிய வருணனை

        கூந்தல், நெற்றி

583. இனிதமை கல்வி கேள்வி யிலருளத் தினுநீ ருண்ட
பனிமுகி லினுங்கா ரென்று பண்புகொள் கதுப்பின் சீரும்
புனிதனன் கெடுத்த வில்லும் போழிள மதியு நாணும்
கனிதரு வடிவிற் றாய காமரு நுதலின் சீரும்.

        புருவம், கண்

584. பொருசிலை யோடு சேமச் சிலையையும் பொற்ப மாரன்
மருவுதண் குடைமேற் சார்த்தி வைத்தன புருவச் சீரும்
ஒருவரும் வலிசா றங்க ளுயிர்கொளற் கிணைந்து வந்த
வெருவரு மியம ரென்ன விளங்கிரு நயனச் சீரும்.

        செவி, நாசி

585. களிவளர் தங்க ளுள்ளங் கலந்திடை யறாம லாட
ஒளிவளர் செம்பொ னாற்செய் யூசனேர் செவியின் சீரும்
அளிவள ராத தங்க ளாவியா முணவு மாந்த
எளிவளர் காம ரூபி யெனமிளிர் நாசிச் சீரும்.

        கன்னம், மோவாய்

586. இருவர்தா நனிபோ ராற்றற் கெடுக்கும்வா டீட்டற் காய
பொருவருஞ் சாணை யென்னப் பொலிதரு கபோலச் சீரும்
மருவரும் வனப்பு வாய்ந்து காண்பவர் மனமுங் கண்ணும்
ஒருவறக் கவரா நிற்கு மொள்ளிய சுபுகச் சீரும்.

        இதழ், வாய்

587. கவிரொடு தொண்டை கோபங் காட்டகம் பயிலும் வண்ணம்
அவிர்பெரு வனப்பு வாய்ந்த வரக்கவி ரிதழின் சீரும்
புவியகம் பயஞ்சார்ந் தாம்பற் போதிராப் போதே மெல்லச்
செவியவாய் திறக்கும் வண்ணந் திகழ்ந்தசெவ் வாயின் சீரும்.

        பல், பேச்சு

588. முத்தெனப் பசிய மஞ்ஞை முருந்தெனத் தளவ ரும்பின்
கொத்தெனப் புலவ ரொப்புக் கூறுவா ணகையின் சீரும்
பத்தெனப் பதினொன் றென்னப் பகரினும் பான்முன் னாய
பித்தெனப் பேச லன்றிப் பேசொணாப் பேச்சின் சீரும்

        முகம்

589. முழுமதி யுதய மென்று மொழிதரிற் களங்க முண்டு
பழுதில்செங் கமல மென்று பகர்தரி னிரவிற் சாம்பும்
தழுவுமற் றுவமை யாதொன் றாயினுஞ் சமையா தாக
ஒழுகொளி வனப்பு வாய்ப்புற் றொளிர்திரு முகத்தின் சீரும்.

        கழுத்து, தோள்

590. வலம்புரி வடிவோ கந்தி வடிவோமற் றியாதோ வென்று
நலம்புரி யறிஞ ராலு நாடொணாக் கழுத்தின் சீரும்
உலம்புரி தங்கள் வன்றோ ளுடைத்திடும் வன்மை சான்று
குலம்புரி மென்மை வாய்ந்து குலவிய தோளின் சீரும்.

        முழங்கை, அகங்கை

591. தள்ளரு மகதி வீணைத் தண்டெனும் வடிவம் வாய்ப்புற்
றெள்ளரும் வனப்பு மேவி யிலங்குகூர்ப் பரத்தின் சீரும்
கொள்ளருங் காந்த ளானுங் குலாவுசெங் கமல மானும்
விள்ளரு முவமை யாகா விளங்கெழி லகங்கைச் சீரும்

        விரல், நகம்

592. கொடிவிடு பவள மென்று கூறினும் பயனா காது
கடிபடு நரம்பு ரோமங் கழிந்தபல் விரலின் சீரும்
வடிவுடை மதவே ளூரும் வாம்பரி மூக்கின் றோற்றப்
படியென வழகு வாய்ந்து பதிந்தபன் னகத்தின் சீரும்

        கொங்கை

593. குற்றமில் பொன்னிற் செய்த குடங்கொலோ விளநீர் கொல்லோ
பற்றமை தாளங் கொல்லோ பருப்பதப் பண்பு கொல்லோ
வுற்றசக் கரவா கங்கொல் லோவெனக் கருது வார்க்கோர்
வெற்றமொன் றுதவா தாய மேதகு கொங்கைச் சீரும்.

    வயிறு, உரோம வொழுக்கம்

594. ஆலிலை யென்ற போது மமைதரு மிதன்வ னப்புப்
போலிலை யென்று பேசப் பொலிதிரு வயிற்றின் சீரும்
நாலிலை யைந்து மில்லை நகுமெறும் பொழுக்கமொன்றே
மேலிலை யெனுமு ரோம வொழுக்கத்தின் வியக்குஞ் சீரும்

    வயிற்று மடிப்பு, உந்தி

595. உற்றநம் பெயருக் காய பொருளிலொன் றுறுவீர் மோகம்
பற்றமுக் காலு மென்று பகருமுன் மடிப்பின் சீரும்
முற்றவும் வலஞ்சூழ் மாண்பால் வலம்புரி யெனமொ ழிந்தார்
கற்றவ ரொன்றற் கென்று கரைதரு முந்திச் சீரும்.

        இடை, அல்குல்

596. பெயரலா லுருவந் தீர்ந்து பேதுறு மெனைமோ கித்தால்
பெயரலா லுருவந் தீர்வீ ரென்றுபே சிடையின் சீரும்
பெயர்வரு மெனைமோ கித்தாற் பேதுற்றுச் சாவீ ரென்று
பெயரராப் படத்திற் பொங்கிப் பிறங்கக லல்குற் சீரும்.

        தொடை, முழந்தாள்

597. பச்சிளங் கதலித் தண்டுங் கரபமும் பழிக்கப் பட்ட
நச்சிவைக் குடைந்தென் றோத நகுமிரு குறங்கின் சீரும்
அச்சிரி யாம லென்று மளைபுகு மலவன் கொல்லோ
மெச்சிவைக் கொப்பா மென்னும் வியின் முழந் தாளின் சீரும்.

        கணைக்கால், பரடு

598. அருவமே மார னன்னா னம்பறாத் தூணி மட்டும்
உருவமோ வென்றி யாரு முரைசெயுங் கணைக்காற் சீரும்
சருவரும் பொற்ற ராசுச் சிறியதட் டொத்த லின்றி
வெருவுறச் சுமந்து தேம்ப விளங்கிய பரட்டின் சீரும்.

        புறங்கால், விரல்கள்

599. வளமமை மாரன் கீர்த்தி வரைந்தபுத் தகமே யீதென்
றுளனமை வனப்பு வாய்ப்புற் றொளிவிடு புறங்காற் சீரும்
குளனமை நறுநீர் பாய்த்தி யெருப்பெயக் கோதில் பூமிக்
களனமை யரிச னத்துக் கவின் முளை விரலின் சீரும்.

        நகம், குதிகால்

600. மதியினைப் பற்றிப் பத்து வகையுறக் கடைந்து வைத்த
விதியெனப் பொலியும் பத்து விரற்பதி நகத்தின் சீரும்
அதிசயத் தெழும்பொற் பந்தே யாயினி வேறின் றென்று
குதிகுதித் துரைத்தா லுந்த குதிபெறாக் குதிகாற் சீரும்

        உள்ளடி, மேனி

601. பிண்டியின் றளிரை மாவிற் பிறங்கிய தளிரைக் கூறின்
மண்டிய தோட மென்று மயங்கு முள் ளடியின் சீரும்
கண்டிக ழருணன் றோற்றுங் காலத்துக் கதிரும் வெள்க
எண்டிசை யிருளு மாய வெறிகதிர் மேனிச் சீரும்.

    அசுரர்கள் இருவரும் அவளைக் கண்டு மோகித்தல்

602. இருவரு மதிமோ கத்திற் றனித்தனி யெய்த நோக்கிப்
பொருவரும் பெருமால் பூண்டார் பொருதிறற் காம வேளும்
வெருவருங் கழைகு ழைத்துச் சுருப்புநாண் விரையப் பூட்டி
ஒருவரும் பகழி பல்ல வுடன்றெதிர் தொடுத்தா னன்றே.

603. காமவேள் சரந்து ளைக்கக் கருத்தழிந் தவச மாகி
நாமவம் பரன்மெய் சோர்ந்து நாமிவட் புணரே மாகில்
ஏமமின் மரண மின்றே யெய்திடு மெனவச் சுற்றான்
ஆமவன் றம்பியாய வம்பனு மனைய னானான்.

604. மறையவன் வதன நோக்கி மங்கையை யெனக்கு நல்கின்
நிறைபொரு ளாதி வேட்ட நிரம்பநீ கோடி யென்றான்
முறைதவி ரம்ப ரப்பேர் மூர்க்கன்மற் றவன்பின் வந்தான்
மிறையற வெனக்கு நல்கி வேட்டவே கோடி யென்றான்.

        அந்தணன் கூற்று

605. இருவர் தம் மொழியுங் கேட்டே யிணர்த்துழாய் மறைத்து நின்றான்
ஒருமட மயிலை யெவ்வா றிருவர்க்கு முதவா நிற்பேன்
பொருவரு மிருவர் தம்முட் புவியெலா மதிக்கத் தக்க
பெருவிற லொருவற் கேயிப் பெண்ணெனும் பேச்சு விட்டான்.

    இருவரும் போரிடத் துணிதல்

606. மறையவ னறமே சொற்றான் மற்றிரு வரும்போ ராற்றி
நிறைவலி யடைந்து ளாரே நேரிழைக் குரியா ரென்று
குறையறப் பொருதற் கெண்ணங் கொண்டன ரிறைவன் முன்னாள்
நிறைகரு ணையிற்கொ டுத்த வரமுள நினையா ரானார்.

    திருமால் கன்னியுடன் புறத்தேகல்

607. இருவரும் பொருது வெற்றி யெய்திய கழற்கால் வீரர்
ஒருவருக் குதவ லுண்மை யொருவர்வென் றெய்துங் காறும்
பருவர லொழிப்பான் கோயிற் பச்சிமத் திருப்பே மென்று
திருமயி லொடுமான் முன்னஞ் செறிந்ததேஞ் சென்ற மர்ந்தான்.

        அசுரர் இருவரும் போரிடல்

608. வேதியன் மடந்தை யோடும் விமலனார் தளிக்கு மேல்பால்
ஓதிய தானத் துற்றா னுண்மையா னென்று வந்து
சாதியி லவுணர் தாமத் தானத்தின் வடபா லுற்று
மோதினார் செருக்கு மேன்மேன் மூண்டெழ வமர்த்தா ரன்றே.

609. கிட்டின ரொருவர் தம்மை யொருவர்கல் கெழுமுந் திண்டோள்
கொட்டின ருருமே றென்னக் கொதிகொதித் ததிர்த்துப் பொங்கி
முட்டினர் முகவு ரோம முறுக்கினர் சிகையைக் கையால்
எட்டினர் பிடித்தார் செந்தீ யிருவிழி யுதிர நின்றார்.

610. வரைமிசை யிடிவீழ்ந் தென்ன மார்பிடை யறையா நிற்பர்
புரையறப் புவியிற் றள்ளிப் புரட்டுவர் கையி னேந்தி
விரையமே லெறிவர் மண்மேல் வீழ்தலு மிசைக்கொண் டார்ப்பர்
உரைகெழு வீர ராய வொருவரை யொருவ ரம்மா.

611. அடியெடுத் துதைப்பர் தண்ட மங்கையிற் கொடுசு ழற்றி
முடிமிசைப் புடைப்ப ரென்பு முறிதரச் சினந்த டிப்பர்
வெடிபடச் சிரிப்பர் வாளால் வெட்டுவர் பரிசை கொண்டு
கடிதுறத் தகைப்பர் மேன்மேற் கற்களுஞ் சொரியா நிற்பர்

612. ஒருவர்தங் கழற்கால் பற்றி யொருவர்மண் மிசைப்பு டைப்பர்
ஒருவர்தங் கையைப் பற்றி யொருவர்தாஞ் சுழற்றி வீழ்ப்பர்
ஒருவர்வாய்ச் செந்நீர் சோர வொருவர்வென் னறையா நிற்பர்
ஒருவர்முன் னொருவர் குப்புற் றொய்யெனக் கறித்து நிற்பார்.

        அம்பன் இறத்தல்

613. அடுசம ரிந்த வண்ண மொருதின முழுது மாற்றிப்
படுதிறங் குறித்து மற்றை நாட்பக லிறக்கும் வேளை
உடுபதிக் குடையான் வெம்போர்க் குடையுமம் பரன்சி னந்து
கடுமுர ணம்ப னாவி காற்றிட மடித்தா னன்றே.

614. கன்னிகை யொருத்திக் காகக் கலாங்கொடு சமர்வி ளைத்துத்
தன்னிக ரில்லா வம்பன் றானுயிர் விட்ட காலை
மின்னிகர் மணிப்பூண் மார்பின் விண்ணவர் மிக்கு வந்தார்
எந்நிலத் தவர்க்கும் பாதி யிரிந்தது துயர மென்றே.

615. அடுதிற லம்பன் வெம்போ ராற்றுபு சுடுவன் கான்று
படுநில மதனை யின்னும் படுகள மென்று கூறும்
நடுநிலை யுலக மாங்கு நண்ணவு மச்சம் பூணும்
வடுவற வாங்குண் டாகும் வருக்கமு மாறா மன்றே.

        அம்பரன் செயல்

616. முன்னவன் மங்கை கொங்கை முயங்குதற் கிடையூ றாய
பின்னவன் றொலைந்தான் வேறு பெறுமிடை யூறொன் றின்றால்
அன்னவள் பாற்போ யின்னே யம்பனை வென்றாற் போலக்
கன்னல்வே டனையும் வெல்வே னெனக்களித் தெழுந்து வந்தான்.

    கன்னிகை பேருருவங் கொள்ளல்

617. வந்தவன் பனத்தி யாய வஞ்சகக் கன்னி முன்போய்ச்
சந்தமென் முலைக ளாரத் தழுவுவான் முயலு முன்னம்
நந்தமை யாளுங் கன்னி நலங்கொளவ் வுருவ மாறிப்
பந்தமி லுருவம் வேறு கொண்டனள் படிவா னஞ்ச.

618. முதிர்சினத் தந்த ஞான்று முளைத்தெழு மாலா லங்கொல்
அதிர்தர வுலக மெல்லா மழன்றெழும் வடவை யேகொல்
பிதிர்விலிவ் வுருவ மென்று பேதுற்றெவ் வுயிரு மஞ்சக்
கதிரவன் றலைச்சூட் டாகக் கன்னிகை யெழுந்து நின்றாள்.

619. விழியெழு கோபத் தீயான் மேதினி மரங்க ளெல்லாம்
ஒழிதரு சாம்ப ராக வும்பரா தியர்ந டுங்கிக்
கழிவெரூஉ வடைய நோக்கிக் கன்னிகை யஞ்ச லென்று
பழிதபு கைய மைத்தம் பரன்முக நோக்கி நக்காள்.

620. முறைதபு காமம் பூண்டு மூவுல கத்துஞ் சென்று
நிறைதப வலிந்து பற்றி நேரிழை யாரை யெல்லாம்
குறையறப் புணரு மூட குறித்தவா றென்னை வந்து
மிறையறத் தழுவு கென்றாள் வெடிபட முழங்குஞ் சொல்லாள்.

621. வெடிபட முழங்குஞ் சொல்லும் பிறையென விளங்கும் பல்லும்
முடிமிசை வடவைத் தீயே முளைத்தெனப் பொலிக துப்பும்
வடிவிழி யிறைக்குந் தீயுங் கோரமாம் வடிவு நோக்கிப்
படியினம் முயிர்கொள் கூற்றிப் படிவென வவுணன் றேர்ந்தான்

    அம்பரன் கொண்ட அச்சம்

622. தழுவுதல் வல்லை யாயிற் றழுவுக தழுவு கென்று
முழுதுல கீன்ற கன்னி மொழிந்தடி பெயர்த்தா ளஞ்சிப்
பழுதுவந் தடைந்த தென்ன பண்ணுவ மென்றுட் கொண்டு
கழுதினு நிலையி லானாய்க் கால்விசைத் தோட வுள்வான்.

623. அடிபெயர்த் திடுத லோடு மழற்கொழுந் தோடி வந்து
முடிகெழு சிகையை மற்றை முகவுரோ மத்தைத் தீத்த
தடியுடல் சற்று நின்றாற் சாம்பராய் விடுமே யென்று
மடிதலற் றுய்வா னெண்ணி வடகிழக் கோடி னானால்,

624. எங்குநீ யோடி யுய்வா யடவென வெங்க ளம்மை
அங்குநின் றவற்றுரத்தி விடாமலைங் கடிகை சென்றாள்
மங்குத லடைந்த தென்று மற்றவன் றிரும்பி நோக்கத்
தங்குமற் றனையான் மார்பிற் றாளெடுத் துதைத்தா ளன்றே.

        அம்பரன் இறத்தல்

625. உதைபட லோடும் பெம்மா னுதையுண்ட காலன் போலப்
பதைபதைத் தாங்கு வீழ்ந்தான் பாரெலாம் புகழ்மா காளி.
சிதைதர வயிறு கீண்டு செறிகுடர் மாலை பூண்டு
புதையுயிர்த் துயரோ டன்னா னுயிரையும் போக்கி னாளே.

626. அம்பர னிறத்த லோடு மவன்றம ராகி மண்ணில்
அம்பரத் தினின்மே வுற்ற வவுணர்யா வரையு மாய்த்தாள்
அம்பரக் கண்ணி னாரோ டனைவரு முவந்தா ரந்த
அம்பரற் செகுத்த தான மம்பர கரப்பேர் மேவும்.

        அம்பரன் சுவர்க்கமடைதல்

627. மும்மையா ருலகு மீன்ற முகிழ்முலை கூற்றிற் றோன்றும்
அம்மைதாள் படுத லாலே யம்பர நாமம் பூண்ட
செம்மையி லவுணன் முன்னந் தீவினை செய்தா னேனும்
வெம்மையில் சுவர்க்க லோக மேவிவீற் றிருந்தா னன்றே.

628. அயனரி மகவா னாதி யமரர்க ளுவகை பூத்தார்
வியன்மலர் மாரி பெய்தார் மிகுபய மெவர்க்கு நல்கும்
இயலுரு விதுதீர்ந் தியாரு மிறைஞ்சிடு முருக்கொ ளென்று
தயன்மல ரடிவீழ்ந் தேத்த வவ்வண்ணஞ் சமைந்தா ளன்றே.

    தேவர் முதலியோர் தேவியையும் இறைவரையும் பூசித்தல்

629. அம்பர்மா நகரின் கண்ணு மம்பர கரத்தூர்க் கண்ணும்
உம்பரா தியர்மா காளி பூசனை யுஞற்றி யம்பர்
நம்பர்பா தமுமி றைஞ்சி நல்லருள் பெற்றுப் போனார்
இம்பர்நா டனைத்தும் பூசை யியற்றிவேண் டுவபெற் றுய்யும்.

        திருமால் கோயில் கொள்ளல்

630. நம்பர னருளே போற்றிக் கோயின்மேற் றிசைப்பா னண்ணி
அம்பரன் மடியுங் காறுந் தனியமர் திறத்தான் மாலை
உம்பரன் பளப்பி லாம லோங்கவீற் றிருந்தா னென்பர்
இம்பரன் பருக்கு வேண்டும் வரமளித் திருக்கு மாங்கே.

631. அருள்பொழி திருமா காளி யமருமா லயத்தி னோர்சார்
வெருடரு திகிரி யங்கை வீற்றிருந் தானு மேவும்
இருடபு மிவரை யேத்தி யெம்பிரா னம்ப ரீசன்
பொருள்பெறு பதமுந் தாழ்வா ரெண்ணிய பொருந்தி வாழ்வார்.

            வேறு

632. ஒருபிரம புரீசருக்குக் குணதிசையில் யானைமுகத் தொருகோட்டண்ணல்
மருவுவனீ சானதிசைக் கயிலாய நாதரென்று மருவி வாழ்வார்
அருவுருவப் புவனேச ரழற்றிசைமே வுவர்மேல் பா லருச்சு னத்தின்
திருநிழற்கீழ் மாகாளே சுரரிருப்பா ரிவர்திறமேற் செப்பா நிற்பாம்.

633. தென்றிசையிற் பூரணைபுட் கலையொடம ருவன்சாத்தன் சிறப்பா மம்பர்
என்றியம்பும் பெயர்வரலா றெடுத்துரைத்தாம் புவனேசதத் தெம்மை யாளும்
நன்றியலு மாயவன்றோற் சட்டைபுனைந் தொருவடுக நாதன் மேவும்
மின்றிகழும் பெருங்கருணை யனையபிரான் வரவெடுத்து விளம்பு வாமால்.

        அம்பர்ப் படலம் முற்றியது.

        (இப்படலத்துத் திருவிருத்தம் 131)

        10.வைரவப் படலம்

    சங்காரசீலன் தவம்புரிந்தது

634. பழிதபு மா தவத்திற் பன்னெடு நாட்பயின்றான்
பொழியரு ணனிபடைத்த புலத்திய மாமுனிவன்
வழியவு ணருக்கிறையாய் வந்தவ னுருமேற்றின்
தெழிகுரற் சங்கார சீலனெ னும்பெயரான்.

635. அன்னவ னிமையவரை யடுத்தொரு நூறாண்டு
தன்னமு முணவின்றித் தாமரை மலர்மேலான்
முன்னவன் றனைக்குறித்து முயறவம் புரிதரலும்
பொன்னவிர் மென்றூவி யோதிமப் புள்ளேறி

        பிரமன் வரம் ஈந்தது

636. அனையவன் முன்வந்தா னதுதெரிந் துடனெழுந்து
புனைமலர் பலதூவிப் பொன்னடி மிசைவீழ்ந்து
கனைகடற் புவிதந்த காரண வெனத்துதித்தான்
இனைவர நீகுறித்த தியம்பரு ளுதுமென்றான்.

637. முனைகெழு சமராடி முழுதுல கமும்வென்று
புனைதரு பெருவென்றி பூணவு மமரரொடு
தனைநிகர் மகவானுஞ் சாற்றிடு மற்றையரும்
நினையுமென் வழிச்செலவு நீவரந் தருகென்றான்.

638. புரிதரு மரியதவம் போற்பிறி துதவுவதோ
விரிமலர் மிசையண்ணல் வேட்டவை முழுதளித்துக்
கரிசறு தன்னுலகம் புக்கனன் களிப்படைந்து
தெரிதிறற் சங்கார சீலனந் நின்றெழுந்தான்.

    சங்காரசீலன் தேவர்களை எதிர்த்தல்

639. கரிபரி யிரதம்விறற் கழலுடை வயவரொடும்
பரிவகல் சங்கார சீலனெ னும்பதகன்
விரிதிற லமராடி வெல்லுத லுட்குறித்துப்
புரியம ராவதியை வளைத்தனன் போயன்றே.

640, வாய்தொறு மமர்வீரர் வலியழி தரப்புடைத்துப்
பாய்தருக் குலமெல்லாம் பற்றுபு முறித்தமரர்
தோய்தரு மடவாரைத் தொடர்ந்தலைத் தனனின்னும்
ஆய்வதற் கரிதாம்பல் குறும்புக ளாற்றினனால்.

641. விண்ணவ ரதுதெரிந்து வெருக்கொடு வேந்தாய
அண்ணலை யடிவணங்கி யவுணன்வந் திடர்புரியும்
வண்ணமொன் றொழியாமே வகுத்தலுஞ் சினங்கொண்டு
கண்ணக னழலாதிக் கடவுள ரொடுமெழுந்தான்.

642. வெள்ளிய களிறுந்தி வேந்தன்வச் சிரமேந்தி
ஒள்ளிய முடிவானோ ரொடுமமர்க் களமடுத்தான்
துள்ளிய திறலவுண வீரனுஞ் சுடுபடைகை
அள்ளிய தானையொடு மெதிர்த்தன னார்த்தன்றே.

        தேவாசுரப் போர்

643. மழைமுகி லிடிப்பதென வார்முர சங்குளிறக்
கழைசுளி களியானை யாதிய நனிகலிப்ப
விழைப்படைக் கலமனைத்தும் வெயிலினும் வில்வீசத்
தழையிரு வகையாருஞ் சார்ந்தன ரமர்புரிவார்.

644. தடிகரங் கொடுசுழற்றித் தலைமிசை மோதிடுவார்
கொடிறுடை தரப்புடைப்பார் குந்தங்கொண் டுரந்துளைப்பார்
படியதிர் தரவதிர்ப்பார் பாசம துறவீசிப்
பிடிபிடி யெனநிற்பார் பெரும்பர செறிதருவார்.

645, கரியொடு கரிமுட்டக் கலகல வொலிக்குந்தார்ப்
பரியொடு பரிமுட்டப் பாய்பரி யுருள்பூண்ட
கிரியொடு கிரிமுட்டக் கெடலரும் வயவரெனும்
அரியொடு மரிமுட்ட வமர்நடந் ததையன்றே.

646. வாளொடு கரமற்றார் சிற்சிலர் வலயங்கொள்
தோளொடு தாரற்றார் சிற்சிலர் துணிவெய்தித்
தாளொடு கழலற்றார் சிற்சிலர் தமக்கமைந்த
நாளொடு முயிரற்றார் சிற்சிலர் நலிவுற்றே.

647. முடிதுணி பட்டாரு மொய்வலிப் பட்டிகைசால்
கடிதுணி பட்டாருங் கல்லுறழ் தோளணிபொன்
தொடிதுணி பட்டாருந் தொடுகழல் கிடந்திமைக்கும்
அடிதுணி பட்டாரு மாயின ரிருவருளும்.

648. ஆடின குறைத்தலைக ளாடின பேய்க்கணங்கள்
கூடின பருந்தெருவை கூடின கொடியிகலன்
பாடின பறந்தலையைப் பாடின வமர்த்தொழிலை
ஓடின பெருநெய்த்தோ ரோடின வவுணர்குழாம்.

            வேறு

649. விறலுடைத் தனது சேனை வெரிந்கொடுத் தோடல் கண்டு
திறலுடையவுண னங்கை மறித்தெழூஉச் சீற்றங் கொண்டு
மறலுடைத் தண்டு போலோர் தண்டுகைக் கொண்டு வானம்
பெறலுடைப் படையுட் புக்குச் சாடினன் பெருங்கூற் றென்ன.

650, சாடுதல் கண்டு சில்லோர் தலைத்தலை மயங்கி நின்றார்
வீடுத லுற்றார் போல வீழ்ந்துசில் லோர்கி டந்தார்
ஆடுத லொழிந்து சில்லோ ரவசமே யானார் சில்லோர்
ஓடுத லுற்றா ரன்ன துணர்ந்தன னும்பர் கோமான்.

651. அடுசினங் கொண்டு வேந்த னருகுற நின்ற தீயை
முடுகின னனையான் சென்று முழுவலிச் சூலங் கொண்டு
கடுவலி யவுணர் தம்முட் கழிந்தன ரயுதர் மாயப்
படுசமர் புரிந்தான் றீய பாதக வசுரன் கண்டான்.

652. என்னுடைக் கோபத் தீமு னெதிருமோ வித்தீ யென்று
கொன்னுடைத் தண்டங் கொண்டு குதிகுதித் தோடி வந்து
பொன்னுடைச் சென்னி மேலாற் புடைத்தன னோங்கி யந்தோ
மின்னுடைக் கனலி வீழ்ந்தான் விண்ணவர் வெருக்கொண் டாரால்,

653. அதுதெரி மகவான் மற்றை யறுதிசை யரையு மேவக்
கதுமெனக் காற்றெ ழுந்தை யாயிரர் கலங்க மாய்த்து
முதுசினத் தவுணன் றண்டான் மொத்திட மூர்ச்சை யாகி
இதுபடற் காமோவென்று ளெண்ணின னோட்டங் கொண்டான்.

654. வளைமருப் பெருமை யூர்தி வல்லைவந் தவுணர் தங்கள்
கிளைபல சவட்டி வீழ்த்துக் கெடலரு மவுணன் சீறி
விளைசெரு நன்றா லென்று வெவ்விய முசலங் கொண்டு
களைதவ வடிக்கப் பட்டுக் கால்விசைத் தோடி னானே.

655. வலிகெழு வருணன் புக்கு வாளுடை யவுணர் சேனை
மெலிதரச் சிலச வட்ட வெய்யசங் கார சீலன்
ஒலிகழ லார்ப்ப வந்து பரிகத்தா லுடன்று வீசப்
பொலிவழிந் தமருக் காற்றே னெனப்புகன் றோடி னானால்.

656. தனபதி முதலா வுள்ள மற்றையர் சார்ந்து தீயோன்
இனமடிந் தொழியத் தம்மா லேன்றமட் டுஞ்ச வட்டி
அனலெனக் குந்த மேந்தி யவுணன்செய் போருக் காற்றார்
உனல்பிறி தில்லை யென்று வெரிந்கொடுத் தோடி னாரே.

657. எழுபரித் தேர்க டாம்பன் னிருவரெண் வசுக்கண் மற்றை
முழுவலி வானோ ரியாரு மொய்த்தனர் நெடும்போ ராடிக்
கழுமுண்முற் கரங்குந் தத்தாற் காய்வலி யவுணன் சாடப்
பழுதுவந் துற்ற தென்று பயந்தன ரோடி னாரே.

        அவுணனும் இந்திரனும் பொருதல்

658. எதிர்த்தவ ரெல்லாம் வெந்நிட் டிரிதலு மிரியா வொள்வாள்
விதிர்த்தவ னாகி வெய்யோன் வேந்தன்முன் மேவ மேன்மேல்
அதிர்த்தமற் றவனும் வெள்ளை யானைமே லிவர்ந்து வெற்புப்
பொதிர்த்தவச் சிரங்கை யேந்திப் போர்பெரி தாற்ற லுற்றான்.

659. மழைமதக் கரிகள் பல்ல வயத்தவாம் பரிகள் பல்ல
தழையொளி யிரதம் பல்ல தவாவலி வயவ ரோடு
குழைதர நூழி லாடிக் கோணுடை யவுணன் சென்னி
புழைபட வயிரங் கொண்டு புடைத்தனன் வான வேந்தன்.

660. மலைமிசை யிடிவீழ்ந் தென்ன வன்சத கோடி வந்து
தலைமிசைத் தாக்க லோடுஞ் சங்கார சீல னென்பான்
நிலைகுலைந் தயர்ந்தி ரண்டு நாழிகை நேர மண்மேல்
புலையுடல் கிடத்திச் சோர்ந்து பொன்றினான் போற்கிடந்தான்.

661. மெலிவடைந் தவுண ரெல்லா மெலிந்தன ரழுது சோர்ந்தார்
பொலிவடைந் தமர ரெல்லாம் புயந்தடித் திடநின் றார்த்தார்
நலியுடல் வருத்தந் தீர்ந்து நான்மருப் பியானை யூர்தி
வலியினை வியந்தே ழுந்தான் வயங்குசங் கார சீலன்.

        இந்திரன் தோற்றல்

662. எழுந்துநின் வீர மெல்லா மின்றறி குவலென் றோதி
உழுந்துருண் முன்ன நாற்கோட் டும்பலின் மேற்குப் புற்றுச்
செழுந்துணைக் கரங்க ளோச்சித் தேவர்கோ னிறத்திற் குத்த
விழுந்துமூர்ச் சித்தா னஞ்சி வெள்ளிய களிற்றி னின்றும்.

663. அறிதிற னின்றிச் சோர்ந்த வண்ணறன் வண்ணங் கண்டு
மறிதலில் வலியோ னாய மாதலி யோடி வந்து
செறிதர வெடுத்த ணைத்தோர் தேத்தொளித் தனன்வாள் வீசி
எறிவலி யவுணன் சங்க மெடுத்துவாய் வைத்தார்த் தானே.

        சங்காரசீலனின் வெற்றி

664. கற்பக நாடு முற்றுங் கைவசப் படுத்திக் கொண்டு
வெற்பக நாணுந் தோளான் விசயமெங் கணுங்கொண் மாண்பால்
பொற்பக மகலாச் சர்வ விசய னென்றொருபேர் பூண்டு
வற்பக லாது வாழ்ந்தான் வானவர் தளர்ந்தா ரன்றே.

        இந்திரன் பிரமனிடம் முறையிடல்

665. நிலைதளர் வான வேந்த னேரிழை மடவா ரோடும்
மலைவில்புத் தேளி ரோடு மலரவன் முன்னஞ் சென்று
சிலையென வணங்கித் தாழ்ந்து தேவநின் வரத்தின் மாண்பால்
தலையமை வலியோ னாய சங்கார சீல னென்பான்.

666. வந்துகற் பகநன் னாட்டை வளைத்தம ராடி வென்று
நந்துமென் றனைத்து ரந்து நலிவிலா திருக்கின் றான்யான்
எந்துசெய் குவதென் றேங்கி யிருக்குமோ ரிடமுந் தேரேன்
முந்துநின் சரணஞ் சார்ந்தேன் மொழிந்தன னுண்மையென்றான்.

            பிரமன் உபதேசம்

667. மகபதி வார்த்தை யோர்ந்த மலரவ னெடும்போ தாய்ந்து
சகமகி ழம்பர் மேவித் தமரொடுந் தம்பி ரானை
நகமலர் தூவிப் போற்றி நன்கினி தமர்வா யென்னில்
அகமலி யவுண னாங்கு மணுகுவ னன்ன காலை

668. மதிமுடிக் கணிந்த பெம்மான் வயிரவப் பிரானைக் கொண்டு
கொதிதிற லவுண னாவி குலைத்திடு மதற்கு மேலுன்
பதியடைந் தினிது வாழ்வாய் பகலருந் தமரி னோடும்
திதியமைந் தென்று கூறித் திசைமுகன் விடுத்தா னன்றே.

        இந்திரன் அம்பர் சென்று இறைவனை வழிபடல்

669. திசைமுகன் விடுத்த லோடுஞ் செறிபெருந் தமரி னோடும்
இசைகெழு மகவா னம்ப ரெய்தின னூழி நாளும்
அசைவற வமருந் தீர்த்த மன்னமாம் பொய்கை மூழ்கி
நசையொடு பிரம லிங்க நம்பனைப் பணிந்தா னன்றே.

        இந்திரன் பூசை இயற்றல்

670. மண்முழு தீன்ற வம்பு வனமலர்க் குழலா டாளும்
எண்முழு தவாவப் போற்றி யிராப்பக லச்ச மின்றிக்
கண்முழு தியையு மேனிக் கடவுணன் கமர்ந்தா னென்ப
பண்முழு தவாவு மஞ்சொற் சசிமுதற் பல்லா ரோடும்.

        நான்முகன் செய்த சூழ்ச்சி

671. இவனிலை யின்ன தாக விண்டைமா மலர்மேல் வைகும்
அவனுயிர் மகதி வீணை யருண்முனி வரனைக் கூவி
எவனம ருலகங் கைக்கொண் டினிதுற வாள்வா னன்னான்
பவனம ரம்பர் மேவப் பண்ணுதி யின்னே யென்றான்.

        நாரதன் செயல்

672. என்றலு மிருகை கூப்பி யெண்ணிய வாறே செய்வல்
ஒன்றவெம் பெருமா னேயென் றோதிநா ரதன்விரைந்து
சென்றனன் றிறற்சங் கார சீலன்றன் முன்னர்ப் புக்கான்
நன்றமைப் பவன்போ லாசி நகைமுகத் தொடுந வின்றான்.

673. இருக்கவென் றனையான் கூற விட்டவா தனத்திருந்து
பெருக்கமாய் நினது கீர்த்தி பிறங்கிய தெங்கு மென்றான்
சருக்கரைக் குன்றி னான்ற தேன்மழைத் தாரை யன்ன
திருக்கிளர் வீணைச் செல்வா வதிசயஞ் செப்பு கென்றான்.

674. அதிசய முண்டு கூறற் கச்சமு முண்டென் செய்கேன்
அதிர்கழ லண்ண லேயென் றறைதலு நீயஞ் சாதி
மதிகுறை நிறத்தா யுள்ள வாறெலா முரைத்தி யென்ன
மதியிடைக் குய்யம் வைத்த மாமுனி வரனு ரைப்பான்.

675. வானவர் கணங்க ளோடு மங்கையர் கூட்டத் தோடும்
தானமுன் பளித்த வேந்தன் சதுமுக னனேக காலம்
மோனநற் றவமி யற்றி முன்னிய தடைந்த தானம்
ஆனது மண்மே லன்ன தம்பராங் கமர்ந்து வைகி.

676. வலிகெழு நின்னை நாளும் வயங்குநின் கிளையை மாய்க்கும்
பொலிவரங் கொள்வான் முன்னிப் புராணனைப் பூசை யாற்றி
மெலிவற வமர்வா னின்னு மிகநினை யவம திப்பான்
கலிபடை யொடுசென் றின்னே கடிதனன் றென்று போனான்.

        சங்காரசீலன் அம்பர் அடைதல்

677. முனிவரன் போன பின்பு முனிவுமா னமுமிக் கோங்கப்
பனிமலர்ப் பொழில்சூ ழம்பர்ப் பதியினை வளைந்து வானோர்
புனிதன்செய் விரத மாற்றல் புரியாது புசியே னென்று
தனியொரு விரதம் பூண்டு படையொடுந் தரைவந் துற்றான்.

678. தரையக மருவி யம்பர்த் தனிப்பெரு நகரஞ் சூழ்ந்து
புரையறத் தவஞ்செய் கின்ற பூசுரர் குழாத்தைப் பற்றிக்
கரைதர வலைத்தான் வானோர் கணத்தொடும் புனிதன் றேர்ந்து
பரையொரு பாகன் முன்போய்ப் பணிந்தனன் பழிச்ச லுற்றான்.

            இந்திரன் துதி

679. பூரண முதலே போற்றி பூரணா நந்த போற்றி
வாரண வுரியாய் போற்றி வாரணஞ் சடையாய் போற்றி
காரண விமலா போற்றி காரணங் களத்தாய் போற்றி
ஆரணப் பொருளே போற்றி யம்பர்வாழ் பரமா போற்றி.

680. அருந்தவர் முதலே போற்றி யளவிலா நிறைவே போற்றி
மருந்தன மொழியாள் வம்பு வனமலர்க் குழலோர் பாகத்
திருந்தருள் சுரக்க வைத்த விணையிலாப் பரம போற்றி
பெருந்தகைப் பிரானே போற்றி பிரமபு ரீசா போற்றி.

681. திரிபுர முழுது நீறாய்ச் சிதைதர நகைத்தா யோலம்
அரிமக னுடலஞ் செந்தீ யுணாக்கொள வமைத்தா யோலம்
பரிவற வந்த காலன் பதைத்திட வுதைத்தா யோலம்
பிரியமிக் கெவருஞ் சாரும் பிரமபு ரீசா வோலம்.

682. தீயவல் லசுர னாலே சிதைப்புண்டே னோல மோலம்
பாயவென் பொருள னைத்தும் பற்றின னோல மோலம்
காயமே லடியேன் செல்லுங் கணக்கிலை யோல மோலம்
மாயமன் றொழித்த தேத்தும் வளைத்தன னோல மோலம்.

683. சற்றுநீ கருணை செய்யா விடினவ னொருவன் றானே
முற்றும்வாய் மடுப்பா னோல மூவுல குடையா யோலம்
பற்றுவே றின்றி நின்றாள் பற்றினே னோல மோலம்
கற்றுமே தகவுற் றார்தங் களைகணே யோல மென்றான்.

        கடவுள் கூறல்

684. முறையிடு மோலங் கேட்டு முன்னவன் கருணை பூத்துக்
கறையடி யுகைப்பான் முன்னர்க் காட்சிதந் தருளி யஞ்சேல்
இறையள வவுணன் மாய வெறிவிப்பா மென்று கூறி
அறைகழல் வடுகப் புத்தே ளாவயின் வரல்கு றித்தான்.

        வைரவக்கடவுள் தோன்றுதல்

685. நினைத்தலும் வடுகப் புத்தே ளாவயி னேரே தோன்றி
நனைத்தள மலர்ப்பொற் பாத நன்குதாழ்ந் தெழுந்து நின்று
கனைத்தவண் டிமிருங் கொன்றைக் கண்ணியா யடியேன் செய்யும்
வினைத்திற னருளல் வேண்டும் வேண்டுமென் றிரந்து நின்றான்

    இறைவன் வைரவனுக்கு இட்ட கட்டளை

686. வயிரவ கால வின்னே வானவர் தமைவ ருத்தும்
செயிரமை கொடுஞ்சங் கார சீலனைப் படையி னோடும்
உரியர்குடித் தித்தா னத்தே யுறைந்துகாப் பியற்று கென்றான்
பயிரிடர் தணிக்குங் கொண்மூ வெனப்பணிந் தெழுந்தானன்றே

    வைரவக் கடவுள் போரியற்றல்

687. கடவுளர் கூட்டத் தோடுங் கைக்கொண்ட சூலத் தோடும்
தடநெடுவடுகப் புத்தேள் சார்ந்துசங் கார சீலன்
விடநெடும் படையைக் கைக்கண் மேயசூற் படைக்கு நல்கி
உடல்வலி யவுணள் முன்ன முற்றணன் வருதி யென்றே.

        அவுணன் இறத்தல்

688. வரமலி வடுகப் புத்தேள் வரவுணர்ந் தஞ்சா னாகி
உரமலி யசுரன் முன்ன ருற்றன னுறுதல் கண்டு
கரமலி முட்டி செய்து கண்கழன் றோட மார்பில்
தரமலி புடைத்தல் செய்தான் தரைமிசை யலறி வீழ்ந்தான்.

        தேவர்கள் மகிழ்ச்சி

689. என்பெலா முறிந்து சிந்த விரத்தநீர் வாயிற் கான்று
வன்பெலா மொருங்கு தீர்ந்து மாய்ந்தன னவுண னுள்ள
துன்பெலாந் தவிர்ந்தோ மென்று சுரர்கள்பூ மாரி தூர்த்தார்
அன்பெலா மம்ப ரீசர்க் காக்குபு மகிழ்ந்தா ரன்றே.

690. அடுதிற லவுண னைக்கொன் றன்னமாம் பொய்கை மூழ்கி
உடுபதி முடிமேற் றாங்கு முத்தம வம்ப ரீசன்
தொடுகழல் வணங்கி வாழ்த்தித் தோத்திரஞ் செய்து நின்றான்
படுமலர்க் கற்ப நாடு படுந்துய ரனைத்துந் தீர்த்தான்.

        இறைவன் கட்டளை

691. துதிபுரிந் தெதிரே நிற்குந் தொடுகழற் காற்புத் தேளை
மதிமுடிப் பெருமா னோக்கி வயிரவ கால வானோர்
பதிமுத லெவர்க்குந் துன்பம் பாற்றினாய் நனிமகிழ்ந்தேம்
திதிபுரிந் திருத்தி யிந்தச் செழுந்தலத் தென்று மென்றான்.

    வைரவன் புவனேசலிங்கம் தாபித்தல்

692. உரைமறா வடுகப் புத்தே ளுவந்தெழுந் தழலோன் றிக்கில்
புரையற வெழுந்து சென்று பொலிதிருத் தளியொன் றாக்கித்
தரைமுழு துவக்கு மாறோர் தற்பரக் குறிதா பித்துக்
கரைபுவனேச னென்று கருதொரு நாமங் கூறி.

693. சூலங்கொண் டகழ்ந்தோர் தீர்த்த மாவயிற் றுலங்க வாக்கி
ஞாலங்கொண் டாடுஞ் சூலப் புனலென நாமஞ் சாற்றித்
தாலங்கொண் டாடுங் கங்கை யாதிய தழுவச் செய்து
கோலங்கொண் டாடு மீசற் காட்டினா னன்பு கூர்ந்தே.

694. உறுமல ராதி யாய வுபகர ணங்க ளெல்லாம்
பெறுமுறை பெற்றுப் பூசை பிறங்குற முடித்து நானன்
அறுதியில் கருணை வாங்கி யாவயி னமரா நின்றான்
தெறுதொழி லவுண ராதி தீயவர் பயங்கெடுத்தே.

695. பொலிபெரு நகரா மம்பர்ப் புவனேசத் தமரா நின்ற
வலிகெழு வடுகப் புத்தேண் மலரடி வணங்கப் பெற்றார்.
ஒலிமுரட் பகைமாய்த் தெல்லா விலாபழு மொருங்கு பெற்று
மெலிவறப் போகந் துய்த்து வீடுபே றடைவ ரீற்றில்.

696. குட்டநோய் தொழுநோய் காசங் குன்மநோய் கொடுங்கா மாலை
துட்டநோ யான மற்றுஞ் சூலதீர்த் தத்துண் மூழ்கி
உட்டவா வன்பு பொங்க வுயர்புவ னேச மேவி
இட்டமார் வடுகப் புத்தேள் பதந்தொழ விரியு மன்றே.

    இந்திரன் இயற்றியவை

697. மன்னிய வடுகப் புத்தேள் வரவிது பலர்க்குந் தீங்கே
முன்னிய வவுண னாவி முடிந்தபி னுவப்பு மேவி
மின்னிய மணிப்பூண் மார்பின் விண்ணவர் குழாத்தி னோடும்
துன்னிய நயன மேனித் தோன்றலிந் திரனீ தாற்றும்.

698. அருந்தவர் புகழு மம்ப ராலயத் தெதிரே யோர்பால்
இருந்தட மொன்றுண் டாக்கி யிந்தர தீர்த்த மென்று
பொருந்தவோர் நாமஞ் சாத்திப் புண்ணியக் கங்கை யாதிப்
பெருந்தவத் தீர்த்த மெல்லாம் பிறங்குற வதிற்றா பித்து.

699. முறைமையின் முழுகி மொண்டு மொண்டுநா யகனுக் காட்டி
அறையுப கரண மெல்லா மைந்தரு வழங்க வாங்கி
நிறைபெரும் பூசை யாற்றி நேர்நின்று துதித்துப் போற்றிக்
கறைதபுத் துய்ந்தே மென்று களத்திது பின்னுஞ் செய்வான்.

700. மதிநுதன் மங்கை வம்பு வனமலர்க் குழலா ளுக்கும்
துதியமை பூசை யாற்றித் தொழுதுதோத் திரமுஞ் செய்து
நிதிமணி காம தேனு நிகரிலைந் தருமற் றுள்ள
பொதிதரு வளங்க ளெல்லா முடையவன் பொலிந்தா னன்றே.

701. கடவுளர் பலருந் தங்கோ னாற்றிய கரிசி றீர்த்தம்
மடனற மூழ்கி யம்பர் வள்ளலை யவன்பான் மேய
தடநெடுங் கண்ணி னாளைத் தவாதவன் பூற்றெ டுப்பப்
புடவிமுற் றுய்யப் பூசை புரிந்தனர் பொலிந்தா ரன்றே.

        இறைவன் வரமளித்தல்

702. இன்னணம் பூசை யாற்று மிமையவர் தமக்கு மன்னார்
மன்னவன் றனக்கு முக்கண் வானவன் விடைமேற் றோன்றிக்
கன்னலங் கழனி சூழிக் காமர்பூம் பதியைச் சார்ந்தார்
என்னரே யெனினு மச்ச மிரித்தெலா மெய்து வாரால்.

703. இந்தமா தலத்தைச் சார்ந்த நீவிரு மிகலிற் றீராப்
பந்தமாம் பகைது றந்து பண்டைவாழ் வனைத்தும் பெற்றீர்
உந்தநா டடைந்து வாழ்வீர் வேட்டவை யுரைப்பீ ரென்னத்
தந்தநான் குடைய வேழ நடாத்துவோன் றாழ்ந்து கூறும்.

704. அடியனே னமைத்த தீர்த்தத் தமைதர வெந்நாண் மூழ்கிப்
படியிலியா ரேனு நின்றாட் டரிசனம் பண்ணு வாரேல்
மிடியிலா வாழ்க்கை யெய்தி வேட்டவை யனைத்துந் துய்த்து
முடிவினின் கயிலை சார்ந்து முயங்கியின் புறுதல் வேண்டும்.

705. நின்னடி மறவா வன்பு நிரந்தரம் பொலிய வேண்டும்
இன்னவை தருதி யென்றா னல்கியெம் பிரான்ம றைந்தான்
தன்னமர் மனைவி யோடுஞ் சார்ந்தபல் லிலேக ரோடும்
பொன்னக ரினிது மேவிப் புரந்தர னினிது வாழ்ந்தான்.

706. அடைபவர் பயங்கெ டுக்கு மம்பருட் புவனே சத்து
மிடைவடு கேசர் மேன்மை விரித்தன மனைத்து மாய்க்க
மிடைதரு கற்பத் தாலும் வீக்கொணா வத்தா னத்துத்
தடையற விமலன் சார்ந்து முத்திசார்ந் ததுதெ ரிப்பாம்.

        வைரவப் படலம் முற்றியது.

        (இப்படலத்துத் திருவிருத்தம் - 75)

        11. விமலன் முத்தியடைந்த படலம்


707. பேசி யாவரும்
நேசி மான்மியக்
காசி மாநகர்
வாசி வேதியன்.

708.. அமல நாதர்தாள்
கமல மேதொழும்
விமல னென்பவன்
முமல நீங்குவான்.

709. மதிசெய் புண்ணிய
வதியென் மங்கையை
விதியின் வேட்டனன்
அதிகு ணத்தினான்.

710. ஏர்த்த பாரியோ
டார்த்த வன்பெழத்
தீர்த்த மாடுதல்
போர்த்த புந்தியான்.

711. கங்கை யேமுதற்
சங்கை யில்லன
அங்கை நெல்லியின்
தங்கை யார்புனல்.

712. நந்து வேட்கையின்
முந்து மூழ்குவான்
வந்து சேர்ந்தனன்
உந்து காவேரி,

713. அங்கு மேவிய
நங்கு தீர்புனல்
எங்கு மூழ்குவான்
தங்கு மேன்மையான்.

714. கரிசி லாதுசொல்
அரிசின் மாந்தி
தரிசனஞ்செய்தான்
புரித வத்தினான்.

715. அங்கு மூழ்கிப்பின்
எங்கு மாயசீர்
தங்கு மம்பரில்
பொங்கு கோயிலுள்.

716. விருப்ப வார்சிலைப்
பொருப்ப னாநகை
நெருப்பற் போற்றவா
அருப்ப வண்மினான்.

717. அன்ன மாம்பொய்கை 
என்ன வோதுநீர்
முன்ன மூழ்கினான்
சொன்ன மாதவன்.

718. பிரம லிங்கராம்
பரம ரைத்தொழூஉச்
சரம நீங்கினான்
கிரம மேவினான்.

719. புவன மீன்றவம்
புவனப் பூங்குழல்
அவமி றாடொழு
தவல மாற்றினான்.

720.சுத்த வேதியன்
அத்த லத்தமர்
பத்த மேவுறச்
சித்தம் வைத்தனன்,

721. வித்த கப்பிரான்
உத்த ரத்திசை
ஒத்த தோரிலம்
புத்த தாக்கினான்.

722.சீல மேவவங்
கேல வைகுபு
காலந் தோறுண
வாலற் போற்றுவான்.

723. ஆய நாளையிற்
பாய விற்பெயர்
நேய மாமதி
மேய தென்பவே.

724.மூன்று காலமு
மான்ற புட்பெயர்
சான்ற பொய்கையுள்
தோன்ற மூழ்குபு.

725. உணர்வின் மிக்கவர்
உணருங் கோயிலை
உணவி லாதுநூ
றணவச் சூழுவான்

726.பரவிச் சூழுங்கால்
உரவிற் சாலுருத்
திரம னுத்தவம்
தரந வற்றுவான்.

    வேறு

727. பந்த மில்ப ரம்பரன்
சந்த மாருஞ் சந்நிதி
நந்து மன்பின் மேவியே
ஐந்தெ ழுத்து மெண்ணுவான்.

728. சித்த மாசி லாதுகா
யத்தி ரிப்பெ யர்மனு
பத்தி யிற்செ பித்தனன்
முத்த னாகும் வேதியன்.

729. அரும றைவி திப்படித்
தரும சீல மாரழல்
கரும முந்த விற்றுவான்
பொரும றீர்ந்த புந்தியான்

730. ஒன்ற வந்த சிலைமதி
நன்ற மைந்த விவ்விதம்
சென்ற தென்ப முற்றவும்
கொன்ற வைம்பொ றியவற்கே.

731. மகர மாத முற்றினம்
புகரில் பூசை யாற்றுபு
நிகரில் சோதி நேர்நின்று
பகரு வான்பெ ருந்துதி.

        வேறு

        விமலன் துதி

732. வருதிரிலோ சனபோற்றி மாதேவ வரபோற்றி
ஒரு மதனாத் தகபோற்றி யுவமையில்சங் கரபோற்றி
கருநிறவந் தகற்செகுத்த கருங்கழற்காற் பரபோற்றி
பெருமுனிவ ருளங்குடிகொள் பிரமபுரீச் சுரபோற்றி.

733. மண்ணுநீ புனலுநீ வயங்கழனீ மருத்துநீ
விண்ணுநீ பிரணவநீ வியாகிருதி முதலியநீ
எண்ணுநீ யெழுத்துநீ யெல்லைநீ யாணுநீ
பெண்ணுநீ பிரமபுரிப் பெருமநினைத் தொழுகின்றேன்.

734. அருவுநீ யுருவுநீ யருவுரவு நீயுடனீ
மருவுயிர்நீ யுயிர்க்குயிர்நீ மனாதிகளுக் கெட்டாய்நீ
கருவுநீ கண்ணுநீ கண்ணுண்மணி நீயளவாத்
திருவுநீ பிரமபுரிச் செல்வநினைச் சரணடைந்தேன்.

735. வாசகநீ வாச்சியநீ பெயருருவ வகையுநீ
நேசமுறு திரிசியநீ நிரம்பதிரி சியமுநீ
தேசமைய நடிப்பவனீ செலநடிப்பித் திடுபவனீ
பேசரிய பிரமபுரிப் பிரானேநிற் சரணடைந்தேன்.

736. அரிபிரமர் நனிமுயன்று மளப்பரிய நின்னுருவம்
தெரிதலலாற் பிறவுருவந் தெரியாதென் விழிகளுக்குப்
பரிவமைய நின்னாமம் பகர்ந்திடுவ தல்லாது
பிரியமிலாப் பிறர்நாமம் பேசவரா தென்வாய்க்கே.

737. சுற்றுமதி லித்தலத்தைச் சூழ்தருவ தல்லாது
மற்றுமுள தலஞ்சூழ வாராதென் கால்களுக்குப்
பற்றுநினைத் திடிற்றபுநின் பதம்புனைவ தல்லாமல்
உற்றயலார் பதம்புனைய வாராதென் னொருதலைக்கே.

738. இன்னமுதா நின்புகழை யேற்றிடுவ தல்லாது
பன்னமரர் பிறருறுசீர் பற்றவரா தென்செவிக்கே
மன்னநினை யெஞ்ஞான்று மறவாது நினைப்பதலால்
உன்னயலார் தமை நினைத்த லொல்லாதெ னெஞ்சினுக்கே.

739. என்றுதுதி புரிவிமல னெதிர்விமல னெழுந்தருளி
நன்றுபுரி துதிமகிழ்ந்தே மெண்ணியதென் னவிலுகெனக்
கன்றுதலற் றடிபணிந்து கைகூப்பி யெதிர்நின்று
பொன்றுதலி லாதவரம் வேண்டுவான் புவியுவப்ப.

    விமலன் வரம் வேண்டுதல்

740. மன்னியவண் பிரமபுரி வாழ்தேவ மாதேவ
மின்னியநின் றரிசனத்தால் விட்டதெனைத் தொடர்பாசம்
அன்னியமின் முத்தியுமின் றேயடைந்தே னானந்தம்
துன்னியவ னாயினே னானாலுஞ் சொல்லக்கேள்.

741. காசிநக ரகம்வசித்துக் கங்கையிடைத் தினமுழுகும்
வாசியன்யா னவணின்று மருவினனிக் கேத்திரத்தைப்
பேசியவித் தலநின்றும் பிறங்கயலா கியதலமும்
நேசியென நீசொலினு நேசியாத் துணிபடைந்தேன்.

742. அரிசினதி யன்னமாம் பொய்கைமுத லாந்தீர்த்தம்
கரிசில்வர நதியினுமான் மியங்கலந்த வானாலும்
தெரிதருமெய்ப் புகழெனக்கித் திருத்தலத்தி லுண்டாகப்
புரிதலடி களுக்கரிதன் றது புகலு வேனடியேன்,

743. மருவியவோர் மூவுலகு மூடுருவி வரநதியிப்
பொருவரிய வன்னமாம் பொய்கையிடை நிற்குமா
றருள்புரிதி மகரமதி யதிற்படிவோ ரெவ்வகைய
திருவமும்பெற் றீற்றிலுயர் முத்தியுஞ்சேர் தரச்செய்தி.

744. இன்னவரந் தருவதலா லெஞ்ஞான்று நினக்கன்பு
மன்னவளர்த் திடுமகவொன் றுறல்வேண்டு மலர்மேலான்
முன்னவனுக் கருள்புரிந்தா யருடியென மொழிந்திறைஞ்சப்
பன்னகபூ டணப்பெருமா னவ்வண்ணம் பரிந்தருள்வான்.

745. பாதலநின் றெழுந்துவர நதிபருவச் சிரத்தூண்போல்
மீதலமுட் டுகவன்ன மாம்பொய்கை நடுவிரைந்தென்
றோதலுமவ் வாறெழுந்தே வெளிமுகடுற் றதுகடல்சூழ்
பூதலமிக் குவப்புற்ற தினியென்ன புகல்வதுவே.

746. கங்கையெழுந் ததுமூழ்கு கான்முளையா தியபிறவும்
சங்கையறப் பெறுகென்று தம்பிரா னுருக்கரந்தான்
செங்கையம ராமலகத் திறமெனக்கண் டுளங்களித்தில்
மங்கையொடு மதின்மூழ்கி மகிழ்வுற்றான் விமலனே.

747. விண்டடவ வெழுகங்கை விமலன் முழு கியபின்றைப்
பண்டமரும் படியென்னப் பண்பினமர்ந் தஃதடங்கக்
கண்டவர்க ளதிசயித்தா ரின்னும்பா தலகங்கை
அண்டமளிப் பவனாணை யந்நின்றும் பெயராதால்.

748. தாதேயு மலர்க்கூந்தன் மனைவியொடுந் தகவாழ்நாள்
மாதேவ னென்னுமொரு மகப்பெற்றுப் பிரமவரை
மீதேயும் பெருமானார் மெல்லடிசேர்ந் தனன்விமலன்
கோதேயி லானந்தப் பெருவாழ்க்கை கூடினான்.

749. தந்தையொழு கியபடியே தருமமிகு மாதேவன்
அந்தைதபு பிரமவரை யண்ணலா ரடிக்கன்பு
சிந்தையிடை யறாதோங்கச் சேவித்துப் புவனேசத்
தெந்தைபிரான் றிருவடியு மேத்தியிறைஞ் சுவனாளும்

750. புண்ணியமார் வம்புவனப் பூங்குழலா ளொருபாகத்
தண்ணியநா யகனடிக்கே தலையன்பு செலச்செலுத்தி
நண்ணியமா தவப்பயத்தா னாடுபுகழ் மாதேவன்
எண்ணியவான் சிவலோக மெய்தியமர்ந் தனனீற்றில்,

751. மூவாத புகழ்க்காசி முத்தலத்து வாழ்விமலன்
தாவாத பேரம்பர்த் தலம்புகுந்து தவஞ்செய்தே
ஓவாத வின்பமுத்தி யுற்றதுரைத் தனங்காமன்
மேவாத பெரும்பேறு பெற்றதிறம் விளம்புவாம்.

    விமலன் முத்தியடைந்த படலம் முற்றியது.

    (இப்படலத்துத் திருவிருத்தம் - 45)

    12. காம னருச்சனைப் படலம்

    விசுவாமித்திரன் தவம் பாழ்பட்டமை

752. முன்ன மாநிலம் புரந்துபின் முனிவர னானான்
என்ன யாருஞ்சொல் விச்சுவா மித்திர னென்பான்
அன்ன வாகனன் மைந்தனாம் வசிட்டன்மே லமைந்த
தன்ன மாயினுங் குறைபடாப் பெரும்பகை தழைய

753. அந்த மாதவ வசிட்டனை வெல்லுமா றமைந்து
சந்த மாதவ முத்தரந் தவிர்திசை மூன்றும்
நந்த வாற்றினன் றிசைதொறு மரம்பையர் நண்ணிப்
பந்த மேவுறப் பண்ணினர் தவஞ்சிதை படுத்தார்.

754. திசையொர் மூன்றினுந் தவஞ்சிதை பட்டது தெரிந்து
வசைவி ராவிய தேயென நனிசின மருவி
அசைவி லாநமை மயக்கிடு தொழில்வல னானான்
இசைகு லாவிய மாரனே யெனமனத் தெண்ணி

    முனிவன் மாரனுக்கு இட்ட சாபம்

755. அனையன் செய்தொழில் பலித்திடா தொழிகவென் றறைந்து
நினையு முத்தர திசைமரீஇ நெடுந்தவம் புரிந்தான்
புனையு மாதவன் சாபத்தாற் புரிதொழில் சிதைய
வினைவி ளைந்ததென் றெண்ணிய மாரவேள் விரைந்து.

    மாரன் நான்முகனிடம் முறையிடல்

756. கஞ்ச மேலவன் றிருமுன மடைந்தனன் கண்டு
தஞ்ச நீயெனப் பணிந்தெழுந் துலகரு டலைவா
அஞ்ச மூர்திறத் தையவாக் காயுதத் தமலா
புஞ்ச மாதவர் முதல்வவென் றுறத்துதி புரிந்து

757. ஆய விச்சுவா மித்திர னருந்தவம் புரிய
மேய தெய்வமின் னார்பெரு விக்கினம் விளைத்தார்
தீய செய்தவன் காமனே யென்றவன் சினந்து
மாய வத்தொழில் பலித்திடா தொழிகென வகுத்தான்.

758. அந்த வெம்மொழி யாற்செயல் பலிப்பிலா தாக
நொந்த சிந்தையின் முகம்புலர்ந் துன்னடி நோக்கி
முந்த வந்தனன் முற்றிய சாபவெந் தீமை
நந்த நல்லருள் புரியென நயந்திரந் தனனே.
    
    நான்முகன் கூற்று

759. பஞ்ச பாணன்வாய் மொழிசெவி யேறலும் பரியா
அஞ்ச மூர்பவ னஞ்சனீ யஞ்சமா முருவம்
தஞ்ச மாகவெற் கொழித்தது தாவிலெப் பயமும்
நெஞ்ச முள்ளுமு னீக்கிடு நெடுத்தல மம்பர்.

760. அங்கு மேவிநீ யன்னமாம் பொய்கையுண் முழுகிப்
பங்கு மால்வரை யாள்கொளக் கொடுத்தருள் பரனைப்
பொங்கு பேரருட் பிரமபு ரீசனைப் போற்றின்
தங்கு சாபவெந் தீமைநீ தவிருவை யென்றான்.

    மன்மதன் பிரமபுரீசரைத் தரிசித்துப் பூசித்தல்

761, என்ற வார்த்தைதன் றலைக்கொடு மாரவே ளென்பான்
குன்ற நேர்பெரு மாளிகைத் தலைமிசைக் கொண்மூ
நன்ற வாவுபு கண்வள ரம்பரை நாடி
ஒன்ற மேவினன் சாபத்தை யொழித்தவனொத்தே.

762. இந்த மாத்தலந் திப்பிய தலமென வெண்ணி
முந்த வன்னமாம் பொய்கையம் புனலிடை மூழ்கிப்
பந்த மாய்த்திடு நீற்றொடு கண்மணி பரித்து
நந்த வைந்தெழுத் தெண்ணினான் சிந்தையு ணயந்தே.

763. தரையெ லாம்புகழ் தண்கயி லாயமாம் பிரம
வரையின் மீதுற விவர்ந்தனன் பிறவிநோய் மாற்றும்
புரையி லாப்பெரு மருந்தினைப் புண்ணிய வாழ்வைக்
கரையி லாதபே ரொளியினைக் கண்களாற் கண்டான்.

764. கண்டு நெஞ்சநெக் குருகிடக் கண்கணீர் துளும்பத்
தண்டு போற்றிரு முனம்பணிந் தெழுந்தனன் றணவா
தண்டு வாருக்கே யருள்புரி யாதியை யன்பு
கொண்டு பூசனை புரிந்தன னிரதிதன் கொழுநன்.

765. முன்ன மோர்மல ரிடுதலு முனிந்தவெம் பெருமான்
பன்ன மாமலர் பற்பல தூவவும் பகையான்
சொன்ன நூல்வழித் தொண்டுபட் டருச்சனை தொடங்கி
மன்ன வன்புசெய் வார்க்கருண் மாறுவ துண்டோ,

766. புவனம் யாவையு மீன்றருள் புண்ணியத் தாய்வம்
புவனப் பூங்குழ லம்மைசந் நிதியினும் புகுந்து
புவனப் பூமுதற் கொண்டுபூ சித்தன னையம்
புவனப் பூவெனக் கழையுறப் பூட்டிடு முரவோன்.

767. ஒருதி னம்புகுந் தரிசிலன் மூழ்குவ னுவப்புற்
றொருதி னந்திற லிந்திர னுறுபுன லாடும்
ஒருதி னந்திகழ் சூலதீர்த் தத்துறத் தோயும்
ஒருதி னந்திக ழன்னமாம் பொய்கையுண் முழுகும்.

768. ஒருதி னம்புவ னேசரை யுவப்புறப் பணிவான்
ஒருதி னந்திறல் வயிரவற் போற்றுத லுறுவான்
ஒருதி னந்திரு வருச்சுன வனம்பணிந் துள்வான்
ஒருதி னம்பிர தக்கண மெல்லைசூ ழுறுவான்.

769. இந்த வண்ணமாய்ப் போற்றிடும் விருப்பின னேனும்
சத்த மாமலர் காலங்க டொறுங்கொடு தப்பா
துந்த வம்பர்நா யகன்கழற் பூசனை யுஞற்றும்
நந்த மற்றவ னாமமே நாவுற நவிற்றும்.

770. உள்ள நாட்குநாட் குழைதர வுரோமங்கள் சிலிர்ப்ப
வெள்ள மார்புன லிடையறா திருவிழி விடுப்பக்
கள்ள மேதுமில் பூசனைக் கணக்கு நூ றாண்டு
கொள்ள வன்புசெய் தாற்றினான் றுதிசெயக் குறித்தான்.

771. சம்பு சங்கர தற்பர வற்புத சைல
வம்பு வார்முலை யொருபுறத் திருத்திய வரத
நம்பு மன்பருக் கெய்ப்பில்வைப் பாகிய நம்ப
வெம்பு மென்றுயர்ச் சாபந்தீர்த் தருள்செயல் வேண்டும்.

772. ஞாலத் தாயொரு பாகத்து நண்ணிய வைத்த
கோலத் தாய்திரு மான் முனோர் குலைகுலைந் தஞ்சும்
சூலத் தாய்சன காதியர்க் குண்மைமுன் சொற்ற
சீலத் தாய்கரக பாலத்தாய் சேவித்தே னின்னை.

773. அண்ட வாணர்த முயிர்கொள வந்தகூற் றடங்கும்
கண்ட நாயக சாபஞ்சா ராப்பனிக் கற்றைத்
துண்ட நாயக பிறவிமுற் றுவந்துவ மனைத்தும்
விண்ட நாயக விமலநா யகநினை விழைந்தேன்.

774. பொன்செய் மாளிகைப் பிரமபு ரீசநின் பொற்றாள்
என்செ யம்புய முடிக்கணிந் தெனென விறைஞ்சும்
தென்செய் மாரனுக் கெம்பிரான் றிருவுருத் தோற்றிக்
கொன்செய் கோசிகன் சாபந்தீர்த் தனங்குறிக் கொண்ணீ.

775. முன்பு நீசெயுந் தொழில்கடைப் பிடியென மொழியா
அன்பு சாலிடம் புகுந்தன னம்பர்வா ழையன்
துன்பு தீர்ந்தன மென்றுவே டளிவலஞ் சூழ்ந்து
பின்பு தன்பதி யடைந்துவாழ்ந் திருந்தனன் பிறங்க.

776. காம னாரடைந் தருச்சனை புரிந்தது கரைந்தாம்
மாம னார்தகர்த் தலைபெற வழங்கினார் கலர்பால்
தாம னார்கொன்றைத் தாமனார் கருணையான் மாற
நாம னார்பெற்ற பேற்றினை யெடுத்துநா நவில்வாம்.

    காமனருச்சனைப் படலம் முற்றியது.

    (இப்படலத்துத் திருவிருத்தம் - 25)

    13. மாற நாயனார் வழிபடு படலம்

    அம்பர் நகரின் சிறப்பு

777. பூமேவு தமிழரும்பும் பொதியவரைக் காலரும்பத்
தேமேவு மாந்தருவிற் செய்யபசுந் தளிரரும்பும்
காமேவு மகத்தூமங் கண்டுமுகி லெழுந்ததெனத்
தாமேவு சிறைமஞ்ஞை நடமாடுந் தனியம்பர்.

        அந்தணர் குடி

778. அந்தவளம் பதிதழைப்ப வற்புதமாங் குடிப்பிறப்பால்
முந்தவறன் முழுகுதலான் முழுநீறு பூசுதலால்
சந்தமறை யோதுதலாற் றவாதபிற வொழுக்கத்தால்
வந்தவொரு குறையுமிலா மறையவர்தங் குடிதழையும்.

    சோமாசி மாறனார் தோற்றம்

779. அனையமறை யவர்குலத்தி லருந்தவத்த ரொருவர்பால்
நினையவினி தமைதருநன் னெறியனைத்து மோருருவம்
புனையவெடுத் துதித்ததெனப் புண்ணியநா யகனருளால்
இனையவரு பிறப்பொழிப்பா னினிதொருவ ரவதரித்தார்.

        அவர் இயல்பு

780. மாறனா ரெனுநாம மருவினார் மூவகைத்தோ
மாறனா ரறிவெனப்பன் மறையுணர்ந்தார் வளவனார்
மாறனார் சேரனார் வழுத்துவார் பிரமபத
மாறனார் தருபதமு மதித்தறியா மதியினார்.

781. வேதமுடிப் பொலிந்தோங்கும் வெள்ளியநீ றணிதலொடு
போதமலி கண்மணியும் பூண்டுவக்கும் வாழ்க்கையினார்
ஏதமற வைந்தெழுத்து மிடையறா தெண்ணுவார்
சீதமதி முடித்தபிரான் றிருவடிக்கே யாளானார்.

782. சிவனடியார் தமைக்காணிற் சிவனென்றே வழிபடுவார்
சிவனமருந் தானமெலாஞ் சென்றுசென்று போற்றுவார்
சிவனருமைப் புராணமே செவியேற்க விடுத்திடுவார்
சிவன்வடிவ மாம்பலவுந் தரிசிக்குஞ் சீலத்தார்.

783. அன்னமாம் பொய்கைநித மடைந்தாடி நீறணிந்து
வன்னமா மோரைந்து மனத்தினுறக் கணித்தெழுந்து
பின்னமாந் திறனமையாப் பிரமபுரீ சரைத்தொழுவார்
தன்னமாஞ் செயல்விடய வாதனைசா ராமனத்தார்.

784. வம்புவனப் பூங்குழலாண் மலர்ப்பாதஞ் சேவித்து
நம்புவிருப் பொடுபுவனே சத்தமரு நம்பரையும்
பம்புதிறல் வடுகரையும் போற்றுவார் பலபிறப்பாம்
வெம்புதுயர் முழுதொழிப்பா னவதரித்த வேதியரே.

785. நீறுபுனைந் தடைவாரை நேர்காணிற் பணிந்தெழுந்து
மாறுதவிர் திருப்பொலிதம் மாளிகையிற் கொடுபுகுந்தே
ஆறுசுவை யமுதூட்டி யன்பினுப சரித்திடுவார்
பேறிதன்மே லில்லையெனு மொருதுணிபு பெரிதுற்றார்.

    மாறனார் சுந்தரமூர்த்தி நாயனாரைச் சந்தித்தல்

786. இந்தவித மொழுகுநா ளெம்பிரான் றடுத்தாண்ட
சந்தமலி வன்றொண்டர் தமைத்தரிசித் திடல்கருதி
முந்தவெழூஉத் திருவாரூர் முழுநகரம் புகுந்துநறும்
கந்தமலர்க் குழற்பரவை யார்திருமா ளிகைகலந்தார்.

787. அம்பரமர் மாறனார் தமைக்காண வடைந்ததிறம்
நம்பரரு ளாற்றெரிந்த நாவலூர் நாவலனார்
இம்பர்வரு பரமசிவ மிவரெனவந் தெதிர்கொண்டார்
உம்பரினு முய்ந்தேனென் றுவந்திவரு முடன்கலந்தார்.

788. மறையவருஞ் சிவத்துவிச மறையவரு மிக்குவக்கும்
முறையினெரு வரையொருவர் முன்பணிந்தா ரிவரென்றே
இறையுமய லறியாமே யிறைஞ்சுபுபுற் றிடங்கொண்ட
பிறைமுடியார் தமைத்தொழுது பேருவகை தலைக்கொண்டார்.

789. விண்ணாடு முகங்கவிழ விரிதிரைவா ரிதியுடுத்த
மண்ணாடு தலையெடுப்ப மாதவத்தர் கொண்டாடத்
திண்ணாடு திறத்தடைந்த தியாகரா சப்பெருமான்
தண்ணாடு மலர்ப்பாதந் தரிசித்தா ரிருவோரும்.

    மாறனார் அம்பர் திரும்புதல்

790. இந்தவிதந் திருவாரூ ரிறைவர்தரி சனஞ்செய்து
சந்தமலி தார்மார்பர் வன்றொண்டர் தம்மோடும்
அந்தமினம் மாறனார் சின்னாளங் கமர்ந்தன்பு
நந்தவமர் பிரமபுரி நாயகரைத் தொழல்குறித்தார்.

791. விடைகொண்டு புறம்போந்து விரிமருத வழிநடந்து
பெடைகொண்டு வண்டடையப் பெருஞ்சோலை மிகப்பொழிதேன்
புடைகொண்டு கமழம்பர் புகூஉப்பிரம புரீசர்பதம்
உடைகொண்டு நெஞ்சுருகப் பணிந்துறையு ளுற்றனரே.

792. தடங்கொண்டார் மலர்ப்பொய்கைத் திருவாரூர்த் தளியிடைப்புற்
றிடங்கொண்டார் தோழர்நினைப் பெய்தியபோ தெல்லாமெய்த்
திடங்கொண்டார் திருவாரூர் சென்றுதரி சித்தடைவார்
விடங்கொண்டார் கண்டத்தா ரன்பரெலா மிகமகிழ.

    சுந்தரர் அம்பர் வந்து திரும்புதல்

793. அம்பரமர் மாறனா ரடுத்தடுத்து வரல்கண்டு
நம்பரம ரருளென்று நாவலூர் நாவலனார்
உம்பரம ருலகந்தா மொப்பிலா வம்பரடைந்
திம்பரமர் வார்களிப்ப வெய்தினார் மறையவரில்.

794. மறையவரு மெதிர்கொண்டு வந்துபணிந் தழைத்துப்போய்
நிறைகருணைப் பிரமபுரி நிருத்தர்தாள் பணிவித்துக்
குறைவிறிரு மாளிகையுட் கொடுபுகுந்து முகமனெலாம்
நறையொழுகு நறுமலர்த்தார் நம்பியார் பெறப்புரிந்தார்.

795. சின்னாளங் ஙனமமர்ந்து திருவாரூர் செலநினைந்து
பொன்னாள்பன் மணிப்பூணார் மாறனார் தமைப்போற்றிச்
சொன்னாடும் விடைபெற்றுச் சென்றதற்பின் றூமறையோர்
முன்னாடு பணியனைத்து முயன்றுபுரிந் தமர்நாளில்.

    மாறனார் யாகம் செய்யக் கருதியது

796. இகமொன்று களிப்படைய வீரிரண்டு சூழநடு
முகமொன்று கொண்டபிரான் மொய்பனிகூர் வான்றடவு
நகமொன்று மங்கையொடு நண்ணியவி யுணாக்கொள்ள
மகமொன்று செயல்குறித்தார் மாதவத்து மாறனார்.

        வேறு

    மாறனார் சுந்தரரை உதவி வேண்டல்

797. பாய்புக ழாரூர் சென்று பரவையார் மனையின் கட்புக்
காய்புகழ் நம்பி பொற்றா ளஞ்சலித் திறைஞ்சி யேத்தி
வேய்புகழ் யாக மொன்று நாயினேன் விருப்பிற் செய்கேன்
ஏய்புகழ்த் தியாக ராச ரினிதெழுந் தருளல் வேண்டும்.

798. அருண்மலி தியாக ராச ரம்மையோ டெழுதல் வேட்டுப்
பொருண்மலி திருவடிக்கு விண்ணப்பம் புரிந்தே னீரும்
தெருண்மலி பெய்த மேவல் செப்பவும் வேண்டுங் கொல்லென்
றிருண்மலி பொழில்சூ ழம்ப ரெய்தினார் மாற னாரே.

        யாகம் இயற்றல்

799. திருவள ரம்பர் மேல்பாற் செழுமகச் சாலை கோலி
வெருவரும் வேதி குண்ட மேகலை யொடுஞ்ச மைத்து
மருவுப கரணம் யாவுங் குறையற வமைத்து வாய்ந்த
பெருமறை யவர்கள் சூழப் பிறங்கெரி வளர்த்தார் நன்னாள்.

    சுந்தரரும் யாகத்துக்கு வருதல்

800. அயனகர் மறையோர் யாரு மடைந்தன ரருள்வன் றொண்டர்
மயறபு தியாக ராசர் மலரடி வணங்கிப் போற்றி
இயலமை யம்பர் முன்ன மெய்தல்விண் ணப்பஞ் செய்து
வியலருள் பெற்றி யாக சாலையுண் மேவி னாரால்.

    இறைவர் அன்பர்கள் வேண்டுகோளை முற்றுவித்தல்

801. தண்ணிய மாற ரெண்ணந் தனைமுடித் திடவன் றொண்டர்
புண்ணியத் தியாக ராசர் வருகையுட் புணர்த்தி மேவ
எண்ணிய வனையார் தோழ ரெண்ணத்தை மறுப்பர் கொல்லோ
கண்ணிய வன்ப ருள்ளக் கருத்தினை முடித்தல் செய்வார்.

    இறைவர் புலையுருவங்கொண்டு வருதல்

802. உருவெது கொடுசென் றாலு முணருவ ரன்ப ரென்று
கருகிருண் மேனி தாங்கி யழுக்குடை கடியிற் சூழ்வுற்
றொருமுடைத் தோறோ டாங்கி யூன்சுமை யொடும்வெ றிக்கள்
மருவிய நாற்றத் தோடும் புலையராய் வந்தா ரன்றே.

803. ஈசரே நீச ரானா ரென்றிடம் பிரியா ளாய
வாசமார் குழலா ளும்மவ் வண்ணமோர் புலைச்சி யாகி
நேசமார் தரப்பின் மேவ நெடுமறை முடிக்கு மெட்டார்
பேசநீ ளன்பர் யாக சாலையுட் பிறங்கப் புக்கார்.

804. அருமறை முடிக்கு மெட்டா வையரோர் புலைய ராகித்
திருமறை யவர்தஞ் சாலை புகுதலுஞ் சேய்த்தே கண்ட
பெருமறை யவரெல் லாரும் பெருஞ்சினந் தலைகொண் டங்கை
உருமறைந் தென்னத் தட்டி யோச்சவு மொழியக் காணார்.

    மாறனார் உண்மை உணர்தல்

805. புலையனீங் கடைவ தென்னை போயது மறையோர் தன்மை
நிலைகுலைந் தெனவெ ழுந்து ஞெரேலனப் புறத்துப் போனார்
தலைமறை யவரெல் லாருந் தனிமறை யவரு முள்ளத்
துலைவற வுணர்ந்தா ராகி வன்றொண்டர்க் குரைக்கலுற்றார்.

806. நம்மையாள் பவரே யிந்த வுருநயந் தடைந்தா ரென்று
செம்மையே தெரிந்தே னீரேன் செப்புகின் றீரென் றோத
அம்மையோ டடைந்தா ரன்ன ரேயைய மில்லென் றோதி
எம்மையா ளுடையா ரூர ருறநகைத் தீது சொல்வார்

    சுந்தரர் இறைவரிடம் சில கூறுதல்

807. மறைமுதற் கலைக ளெல்லா மாலயற் கரியார் நாதப்
பறையரென் றுரைக்கும் வார்த்தை புதிதுறப் பண்ணி னீரோ
முறைமையிற் கரித்தோ லிந்த முடைத்தோல்செய் தீரோ தெய்வ
நறைகமழ் கழுநீ ரூனாச் சுமந்தது நன்று நன்றால்.

808. புழுகுநெய் வாச மெல்லாம் புலைமது வாச மாக்கி
ஒழுகுதன் மிகவு நன்றா லுடன்களை யாமை யானோ
முழுகிய தழுக்குச் சூழ்ந்த கலையக முதல்வ ரேயிப்
பழுதழ காயிற் றென்று பற்பல பேசி னாரால்.

        கவிக் கூற்று

809. ஒருமருப் பண்ணல் சாத்தன் முதலிய ருருவ மாறி
அருகுவந் தந்த ணீரீங் கடைந்தவர் புலைய ரல்லர்
பெருகநன் குணர்வீ ரென்று பேசவுந் தெரியா ரென்றூழ்
கருகிய விருள்கு ருட்டுக் கண்ணிற்குத் தபுத லுண்டோ.

810. ஐயமெள் ளளவு நீங்கா வையரங் ககன்று போகச்
செய்யவன் றொண்ட ரோடு திகழ்மகிழ் வடைந்த மாறர்
பையர வல்குற்பாகப் பறையர்தம் பாதம் போற்றி
வெய்யநல் லவிகொ டுத்தார் விண்மலர் மழைபெய் தன்றே.

811. வேண்டுவ தென்னை யென்று வித்தகர் வினவ வென்னை
ஆண்டுகொண் டவரே யிந்த வடிவினீங் கமர்க வென்னப்
பாண்டுநீ றணிவா ரந்தப் படியருள் புரிந்தார் செந்தீத்
தூண்டுநன் மகஞ்செய் மாண்பாற் சோமாசி மாற ரானார்.

812. கூறுமா ரூரர் பொற்றாள் குறிக்கொடு தொழுதும் மாலிப்
பேறுபெற் றனனா லென்று பேசுபு விடுத்த பின்னர்
நாறுபூம் பொய்கை தோய்ந்து நன்மனை யடைந்து நாதற்
றேறுமா தரவில் வாழ்ந்து சிவலோக மடைந்தா ரீற்றில்.

813. மறைமுதல் வெண்ணை நல்லூர் வைதிக மறையோ னாகிக்
குறையறத் தடுத்தாட் கொண்டு குற்றேவல் செய்யப் பெற்ற
இறையவர் நாவ லூர ரடியேனென் றிசைக்கப் பெற்றார்
அறைபெரும் புகழை யாமோ வறிந்தெடுத் திசைக்க வல்லேம்.

814. பெண்மைசா லொருபா லானை யிடையறப் பேணி வாழ்ந்த
வண்மைசால் புகழ்ச்சோ மாசி மாறர்தஞ் சரிதஞ் சொற்றாம்
திண்மைசால் செங்கட் சோழர் திருவவ தாரஞ் செய்தாங்
குண்மைசால் பணிபு ரிந்த சரித்திர முரைப்பா மன்றே.

    மாற நாயனார் வழிபடு படலம் முற்றியது.

    (இப்படலத்துத் திருவிருத்தம் - 38)

    14. செங்கட் சோழ நாயனார் வழிபடு படலம்

        கயிலாயத்தின் சிறப்பு

815. வானவர் மகவான் மலரணைப் புத்தேண் மதுப்பொழி நறுந்துழாய் மார்பன்
தானவர் சால கடங்கடர் புகழ்க்காந் தருவர்கிம் புருடர்மற்றியக்கர்
ஆனவர் முதலோர் சூழ்ந்தினி தேத்த வருவுரு வருவுரு வெனுஞ்சொற்
பானவ ருமையோ டினிதுவீற் றிருக்கும் பண்புடை யதுகயி லாயம்

    மாலியவானும் புட்பதந்தனும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொள்ளல்

816. அந்தமால் வரையிற் பெருங்கண நாத ரனேகரு ளொருவன்மா லியவான்
சந்தமார் புட்ப தந்தன்மற் றொருவன் றவலரு முளச்செருக் காய
பந்தமிக் குடையா ரிருவரு மிவர்நம் பரம்பர னடிப்பணி புரிவார்
கந்தநன் மலரா தியகொடு பூசை கமழ்தரப் புரிதரு நாளில்

817. ஒருவரை யொருவ ரிகலுபு முந்தி யுறுபணி யாற்றுபு வருவார்
இருவரு மொருதேத் தெதிர்ந்தன ரழுக்கா றிருத்தலா லெரியெழச்சினந்து
வெருவருங் கரட கடதடக் களிறாய் விடுகெனப் புட்பதந் தனைமுன்
மருவருங் கமைசற் றில்லவ னாகி மாலிய வான்சபித் தனனே.

818. மாலிய வான்சொல் செவியகம் புகலு மறாச்சினம் பூண்டழுக்காறே
கோலிய மனத்துப் புட்பதந் தனுநீ குறிக்கொளாச் சிலம்பியா கென்றான்
ஆலிய செருக்கா லொருவருக் கொருவ ரமைத்தசா பத்தொடக்  குண்டு
வாலிய நீற்று மேனியெம் பெருமான் மலரடி தொழு தெழுந்துரைப்பார்.

    இருவரும் இறைவரிடம் குறை கூற அவர் அருளல்

819. அடியரே மறிவின் றொருவருக் கொருவ
    ரமைத்தனஞ் சாபமீ தென்றார்
நெடியவ னுணரா நின்மலப் பெருமா
    னிலாவரும் பெனநகை முகிழ்த்துக்
கடியபா தகந்தீர் சோழநன் னாட்டிற்
    கரைபொரு காவிரி வடபால்
படியவா ஞான கேத்திர மென்றோர்
    பண்புசால் பெருந்தலம் விளங்கும்.

820. அத்தல நீவி ரிருவருங் குறுகி
    யாங்குமிப் படியிகல் பூண்டு
முத்தலம் புகழு நங்குறிப் பூசை
    முடித்தொழித் திடுமினிச் சாபம்
நத்தல மருமொண் களத்து மையொடுநா
    நயந்துசெய் பேரருண் மாண்பால்
இத்தல மீட்டும் புகுந்தினி தமர்வீ
    ரென்றனன் விடைகொடுத் தனனே.

    இரண்டும் ஞானகேத்திரமடைதல்

821. விடைகொடு களிறுஞ் சிலம்பியு மெவற்று
    மேம்படும் வளவர்நன் னாட்டின்
மடையடு கருப்பங் கட்டிகொண் டடைக்கு
    மருதத் துண்மிகச் சிறப்பாய
நடைகெழு தரங்கக் காவிரி வடபான்
    ஞானகேத் திரத்தினை யடையா
உடைதிரைக் கடல்வைப் பேத்துமத் தான
    முயர்வளம் வியந்துநோக் கியவால்.


    இரண்டும் இறைவரைப் பூசித்தலில் பிணக்குறுதல்

822. உள்ளிய களிறுஞ் சிலம்பியும்
    வேறாயுறைந்துபூ சனைசெயத் தொடங்கி
வெள்ளிய நாவற் றருவடி முளைத்த
    விமலவற் புதக்குறி கண்டு
தெள்ளிய சிலம்பி யையகோ சருகு
    திருமுடி யுதிர்வதோ வென்று
புள்ளிய விமான மாதிய நூலாற்
    பொருக்கென விழைத்ததை யன்றே.

823. மழைமதக் களிறு மக்குறி நோக்கி
    மகிழ்ச்சியிற் பூசனை புரிவான்
விழைதலுற் றையன் மணிமுடி மேலான்
    மிக்கனு சிதமெனு மிந்நூல்
தழைதரப் படர்த றகாதென வழித்துத்
    தண்புனன் முழுகுபு நெஞ்சக்
குழைவொடு மலரா தியகொடு பூசை
    குயிற்றுபு சென்றதை யன்றே.

824. வழிவருநாளிற் சிலம்பிவந் தந்தோ
    மலரவ னுணர்தரா முடிமேல்
இழிசரு கடையா வணம்புரி தருகோ
    யிலையழித் திட்டது மன்றிப்
பழிபடு தழைமுற் சுமத்திய தென்ன
    பாவமென் றவையெலாம் விலக்கிக்
கழிதர வாய்நூல் கொடுதளி யிழைத்துக்
    கருத்துற மகிழ்ந்துசென் றன்றே.

    சிலந்தி நடந்தது அறிந்ததும் அதன் செயலும்

825. மற்றைநாண் மழைபோன் மதக்களி றடுத்து
    மறுவலும் விமலனார் சடிலக்
கற்றைவார் முடிமே னூலுறல் கண்டு
    கைகொடு சுலாய்ப்புனன் முழுகிப்
பற்றையார் பூசை முடித்தினி தேகப்
    படர்தரு மற்றைநாட் சிலம்பி
உற்றையார் தளிசெய் தழிப்பது
    தெரிவா னொளித்தொரு சாரிருந் தன்றே.

826. அடுத்தநா ளெறும்பி யடுத்துநூற் றளியை
    யழித்திடக் கண்டுளம் புழுங்கி
மடுத்தநாம் புரியுஞ் சிவப்பணிக் கூறு
    மருவிட நாடொறு முயன்று
கெடுத்ததைக் கெடுத்த லறமென நினைந்து
    கிளர்துதிக் கைப்புழை நுழைந்து
தொடுத்தவெஞ் சினத்தான் மண்டையுட் குடைந்து
    துண்ணெனக் கறித்ததை யன்றே.

    இறைவர் இருவர்க்கும் வரமளித்தல்

827. கடித்தலும் பிளிறித் துதிக்கைவாய் வைத்துக்
    கறையடி வீழ்ந்துமாய்ந் தன்று
வடித்தநூற் றளிசெய் திடவெளி வருவான்
    வழியிலா மையினுழல் சிலம்பி
துடித்ததாய் மடிந்த தெம்பிரா னாங்குத்
    தோற்றிட வடிமிசைப் பணிந்து
முடித்தவான் பிறையா யருளென வேண்டு
    முறையிரு வோரையு நோக்கி.

828. கறையடி யுருவிற் றீர்ந்தவன் முன்போற்
    கயிலைமால் வரையினை யடைக
குறைபெறு சிலம்பி யுருவினிற் றீர்ந்தோய்
    கொழுங்கதிர் மரபிடைத் தோன்றி
முறையினிப் புவியாள் வளவன்மா தவத்து
    முளையெனத் தோன்றுபு நாளில்
நிறைமணி மகுடங் கவித்துல காடி
    நெஞ்சுறு குறையற முடித்தே.

829. இம்பரேத் தெடுக்கு மித்தலத் தினுமிக்
    கேற்றமா கியவொரு தானம்
அம்பரென் றுரைப்ப தத்தலப் பணிசெய்
    தமருநா ளாவயிற் றோன்றி
உம்பரும் வியக்கு நங்கணத் தலைமை
    யுதவுதும் போதியென் றருளிப்
பம்பரஞ் சமழ்க்கு முலையருச் சித்த
    பண்புசால் குறியிடை மறைந்தான்.

    மாலியவான் சோழர் குடியில் பிறத்தல்

830. மறைமுதன் மறையவரருளிய படியே
    வான்பெருஞ் சிதம்பர தலத்து
முறையுளி யரசு புரிசுப தேவன்
    முதல்வனை வழிபடு நாளில்
நிறைகுணக் கமல வதிதிரு வயிற்றி
    னிகழ்கரு வுற்றன ரெங்கும்
குறையறத் தளிசெய் திடுமொரு கருத்துக்
    கொண்டுமுற் சிலம்பியிற் றீர்ந்தார்.

831. மதியொரு பானு நிரம்புறக் கமல
    வதிவயி றுளைதரு காலை
அதிமதிக் கணித நூலின ரரசை
    யடைந்தொரு முகுர்த்த நாழிகைதீர்த்
துதிதிற மருவி னுலகெலாம் புரக்கு
    மொருமக வென்றனர் கேட்டு
விதியுளி செங்கோல் செலுத்துவோன் மனையாள்
    விழைந்துணர்ந் திடுதிறம் விடுத்தாள்.

832. வருமக வாக்கங் கேட்டலுங் கமல
    வதியொரு முகுர்த்தந்தீர் காறும்
இருபதங் கயிற்றிற் பிணித்துமேற் றூக்கி
    யிறக்குநல் லோரையி லென்ன
மருமலர்க் குழலார் தலைகிழக் காக
    மலர்ப்பத மேக்குறத் தூக்கிப்
பொருவரு மோரை வந்தபோ திறக்கப்
    பூங்குழன் மங்கையுண் மகிழ்ந்து

    செங்கணான் பிறப்பும் வளர்ச்சியும்

833. வலம்புரி யொருமுத் தீன்றெனக் கடல்சூழ்
    மலர்தலை யுலகெலாந் தழைய
நலம்புரி தரும நனிதலை யெடுப்ப
    நன்மக வுயிர்த்தனள் பிறக்கும்
புலம்புரி காலந் தாழ்த்தலிற் சேந்து
    பொலியிரு கண்களு நோக்கிக்
குலம்புரி மடந்தை செய்யகண் ணானோ
    குலவவீங் குதித்தவ னென்றாள்.

834. காவலன் மகிழ்ச்சி தலைக்கொளச் சாத
    கன்மமுற் பலவுநன் கியற்றி
மேவலன் பகலா மறையவ ராதி
    விழைபவ ரியாவர்க்குஞ் செம்பொன்
ஓவலன் பொழிந்து சிவபிரா னருளே
    யுளங்குறித் திருந்தனன் கொடிமேல்
சேவல னென்ன நாட்குநாள் வளர்ந்தார்
    சிவாலயப் பணிசெய வந்தார்.

    அரசுரிமை பெறுதல்

835. பிறையென வளரு மைந்தனார் மறைமுற்
    பெருங்கலை யாகிய பலவும்
நிறைதரவுணர்ந்தார் மூவகைக் கரிசு
    நீக்கிமற் றஃதிறை யுணர்ந்து
குறைவறு மகிழ்ச்சி யனாய்ப்பதி னாறாங்
    குலவக வையினுல குவப்ப
நறைமல ரலங்கன் மணிமுடி கவித்து
    நல்லர சுரிமையுங் கொடுத்தான்.

836. மறையவர் வாழ்த்த மன்னவரிறைஞ்ச
    மற்றையர் பணிதலை நிற்ப
நிறைமதிப் புலவர் நிலாங்கவி தொடுப்ப
    நிகழமைச் சாதியர் சூழ
கறையகன் மதியின் வெண்குடை நிழற்றக்
    காமரு சாமரை யிரட்ட
முறையுளி செங்கோல் செலுத்துவா ரானார்
    முதிரருட் டிருப்பெரு வளவர்.


    கோச்செங்கணார் யானை சிதைக்கமுடியாத சினகரம் கட்டத் துணிதல்

837. கறைதபுத் தரசு புரியுநன் னாளிற்
    கங்கைவார் சடையவ ரருளால்
அறையுமுற் பவத்து நிகழ்ச்சியு முணர்ந்தா
    ராதலிற் கறையடி சிதைக்கக்
குறைசின கரத்தைச் சிதைதரா வண்ணங்
    குயிற்றுவான் கருத்தினு ளமைத்து
நிறைதிரு வானைக் காவகத் தடைந்தார்
    நேரியர் குலப்பெருஞ் செல்வார்.

838. வெள்ளிய நாவ லடியினீர்த் திரளாய்
    வீற்றினி திருப்பவர்க் களவா
ஒள்ளிய செம்பொ னாற்றளி யமைப்பா
    னுன்னின ரிறையவர் மறுக்கத்
தெள்ளிய வடபாற் கெண்டகை யாய
    சிலைகொடு களிற்றுவெம் பகையைத்
தள்ளிய கோயி லழகுறப் புரிந்து
    தாழ்ந்தனர் திருவருள் பெற்றார்.

839. புண்ணிய வளவ ரானைக்கா வகத்துப்
    பொற்பமர் தளியமைத் தாங்கு
நண்ணிய நல்லூர் வலிவல மாவூர்
    நலமலி சிக்கல்கீழ் வேளூர்
கண்ணிய வாறை வடதளி தலைச்சங்
    காடுமா வலம்புரம் யாரும்
எண்ணிய செம்பொன் பள்ளிநன் மருக
    லிவைமுதற் பஃறளி சமைத்தார்.

    அரசர் அம்பரை அடைந்து கோயிலமைத்தல்

840. நலமலி தலம்பற் பலசமைத் தம்பர்
    நன்னக ரருளினா லடைந்து
வலமலி பிரம புரீசரை வம்பு
    வனமலர்க் குழலியை வணங்கிக்
குலமலி தளிநன் கமைத்திடக் கருதிக்
    கோதிலா வமைச்சரோ டாய்ந்து
புலமலி தபதி முதலியர்க் கூவிப்
    பொருள்பல வீசினர் மன்னோ.

841. தருபொரு ளேற்றார் கற்றடிந் திடுவார்
    தடிந்தகற் பண்டியேற் றிடுவார்
பெருநில னெளியக் கொண்டுவந் திறக்கிப்
    பினுங்கொடு வரற்கியக் கிடுவார்
வெருவறத் தண்டின் வடம்பிணித் தேற்றி
    வீங்கிய தோள்கொடு சுமப்பார்
மருவுற நிறுத்தத் தக்கவை நிறுத்தி
    வயங்கவேற் றிடுவவேற் றிடுவார்.

842. நிலம்பிளந் திடுவார் மணல்சொரிந் திடுவார்
    நிறைதரத் துறுசிலை படுப்பார்
வலம்படு குற்றி கொண்டிடித் திடுவார்
    மற்றதில் வரிக்கலேற் றிடுவார்
அலம்பட வளவி லிட்டிகை யறுப்பா
    ரறுத்தவை யனைத்தையுஞ் சுடுவார்
உலம்பலுண் டாக நூறிடித் திடுவா
    ருறுசுவைக் குளங்கரைத் திடுவார்.

843. தளர்வற விந்த விதந்தொழில் புரிந்து
    தடமதில் கோபுரஞ் செம்பொன்
வளர்கருக் கிரகமத்தமண் டபமா
    மண்டப நிருத்தமண் டபம்வான்
உளர்தரு குடுமி விழாக்கொண்மண் டபந்தீ
    யொழிவறப் பயின்மடைப் பள்ளி
கிளர்மகச் சாலை யுமைமுதற் பலருங்
    கெழுமுவான் சினகரம் பிறவும்.

844. பொலிதர வமைத்தார் வளவனா ரமைச்சர்
    புரோகிதர் முதலியர் சூழ
மெலிவற வமைந்த திருப்பணி யனைத்து
    மேவிநோக் குபுமகிழ் கூர்ந்து
நலிவினன் னாளிற் கும்பநீ ராட்டி
    நலங்கெழு நித்திய மாதி
ஒலிகெழு பூசை காலங்க டோறு
    முறநனி நடத்துபு தொழுவார்.

        வேறு

    இறைவர் அருள்புரிதல்

845. இந்த வண்ணம்பன் னாள்வழி பாடுசெய் திருக்கச்
சந்த மேவிய பிரமபு ரீசருட் டழைய
வந்த வான்பெரு மகிழ்ச்சியான் மற்றவர்க் கருள்வான்
முந்த நாவலி னடியரு ளியமொழிப் படியே.

846. ஓங்கு தங்குறிக் குத்தர பாகத்தி லும்பர்த்
தாங்கு நாவலி னடியமர் தருதிறங் காட்டப்
பாங்கு மேவிய வளவனார் பரிந்தது நோக்கித்
தீங்கு தீரநன்கருளின ரெனமகிழ் திளைத்தார்.

847. முழுது மாகிய பிரமபு ரீசர்மெய்  யன்பின்
தொழுக திர்க்குல மன்னவர் காணநேர் தோன்றி
எழுது சீர்த்தியாய் பெருங்கணத் தலைமைநிற் கீந்தாம்
பழுது தீர்தர வாழ்கெனப் பணித்தனர் மறைந்தார்.

848. அண்ண லாரரு ளியபடி கணாதிப ராகி
எண்ண லேதுமின் றாய்ச்சிவ லோகத்தை யெய்தி
விண்ண லார்கரங் கூப்பிட மேதக வுற்றார்
கண்ண லார்புகழ் நிரப்பிய கோச்செய்ய கண்ணார்.

849. பரவ வம்பரை மருவிய ஞானசம் பந்தர்
இரவ கற்றிய வளவரைப் புகழ்ந்தன ரென்னின்
குரவ வார்குழல் பாகருக் கன்பினாற் குலாய
புரவர் சீர்த்தியை யாங்கொலோ விற்றெனப் புகல்வேம்.

850. அம்பர் மாநகர்த் தம்பிரா னுத்தரத் தமரும்
நம்ப ரானைக்கா வமுதலிங் கேசரை நயப்பார்
இம்பர் வாழ்பவ ராயினு மிந்திர னாதி
உம்ப ரார்தொழ வுயர்ந்துவான் சிவபுரத் துறைவார்.

851. செங்கட் சோழனா ரம்பரிற் றிருப்பணி செய்த
அங்கட் சீர்த்தியை யாசைகொண்ட டொருவிதத் தறைந்தாம்
திங்கட் செஞ்சடை யெம்பிரா னடிக்கன்பு செய்யும்
வெங்கட் போதக நந்தன்செய் பணியினை விரிப்பாம்.

    செங்கட் சோழ நாயனார் வழிபடு படலம் முற்றியது.

    (இப் படலத்துத் திருவிருத்தம் - 37.)

    15. நந்தன் வழிபடு படலம்

    நந்தன் இயல்பு

852. கந்த வார்பொழிற் காம்போச தேயத்தான்
நந்த மாருயிர் நானிலத் தாருயிர்
எந்த நாளு மெனக்கரு துங்குணச்
சந்த நந்த னெனும்பெயர் தாங்கினான்.

853. மாற்ற லார்புறங் காணும் வலியினான்
ஆற்ற லான்மண் ணனைத்தும் புரப்பவன்
போற்ற லானுயர்த் தான்கழற் பூச்செவி
ஏற்ற லன்னா னியம்பிய வார்த்தையே.

854. ஐய மாதிமுத் தோமு மகற்றுபு
செய்ய நூல்க ளெவையுந் தெரிந்தவன்
பைய ராவணி பண்ணவன் வேடமே
மெய்ய தாய பொருளென மேவினோன்.

855. நீறு கண்டிகை யோம்பு நியதியான்
ஏறு மஞ்செழுத் தெண்ணும் விரதத்தான்
சீறு மும்மலச் சேறு கழுவற்கோர்
ஆறு தாங்கி யருட்புனல் வேண்டுவான்.

856. மறையி னான்முகத் தோனைவண் காவல்செய்
முறையி னேமி முகுந்தனை நீதிநூல்
துறையின் வாய்ந்த மனுவைத் துகளிலாப்
பொறையி னீர்சூழ் புடவியை வென்றவன்.

857. அளியன் வான்புக ழாய வளவிலா
ஒளியன் றங்குறை யோதவுற் றார்விழிக்
கெளியன் மாமுகி லீகைய னின்சொலாம்
நளியன் மேனி நலத்தின் மதனனே.

858. கோடி வண்டு குடைந்துகு டைந்துபண்
பாடி யாடப் பரிசென வின்னறா
நாடி நல்கு நலங்கிளர் மாலிகை
கூடி வீங்குங் குலவரைத் தோளினான்.

859. பகையி ரித்துத் தடற்றிற் புறப்படாப்
பகையு டம்பு பகிர்ந்துநெய்த் தோருண்டு
மிகையெ னாது தடிமுன் விழுங்கியும்
தகைவி ராம்பசி தாங்கரும் வாளினான்.

860. எண்ணி லாதக டாத்தவெ றும்பியும்
எண்ணி லாதவ யப்பரி யீட்டமும்
எண்ணி லாத விரதமும் வெற்றிமிக்
கெண்ணி லாத வயவரு மேய்ந்துளான்.

861. மதிய மைச்சர் வயங்குபு ரோகிதர்
பதிய மைந்த படைத்தலை வீரர்கள்
துதிசெய் மற்றுள தூயருஞ் சூழ்தர
நிதிய மன்ன னிறையுல காளுநாள்.

    நந்தன் வேட்டை மேற் செல்லல்

862. நெடிய வேட்டை வினைநிரப் பாமையால்
கொடிய மாவின் குலங்கள் பெருகுபு
முடிய வூறு முயன்று புரியுமென்
றடிய வாய்ப்பணிந் தாங்கறைந் தார்சிலர்.

863, என்ற வார்த்தை யிருசெவி யேறலும்
வென்ற வீரர்கள் யாரும்வி ரைந்தெழீஇ
ஒன்ற வேட்டைக் கொருப்பட் டெழுகெனாக்
குன்ற நேர்புயக் கொற்றவன் கூறியே.

864. ஓங்கு மாளிகை யுட்புகுந் தேவலர்
பாங்கு மேவ வமைத்த பசும்புனல்
வீங்கு தோளின னாடிவெண் ணீறிடா
வாங்கு நூலிடை பாகனை வாழ்த்தியே

865. மறுவ றப்பொற் கலத்து வயக்கிய
அறுசு வைத்திறத் தாயவு ணாச்சுரர்
நறுமு றுப்பக்கை தொட்டுநன் காம்விரை
பெறுமென் பாகடை பெட்புற மென்றபின்

866. அரையிற் கால்வழி யாச்செலுத் தோருடை
விரையப் பூட்டி விசித்தொரு பட்டிகை
உரையிற் சீர்த்த வுடைவா ணடுவுறத்
தரைமுற் றீயுங்கைக் கோதைக டாங்கியே

867. வன்மை சான்ற வயிரக் கவசமூ
றின்மை யாகமெய்க் கிட்டுத யக்கதிர்த்
தன்மை யாகத் தலைச்சாத் தணிந்தபின்
வின்மை யார்கழன் மென்பதஞ் சேர்த்தினான்.

868. ஆன்ற வேதிய ராக்கங் கரைந்திடக்
சான்ற மங்கல வாழ்த்துத் ததைதரத்
தோன்ற வந்தியர் முன்னந் துதைதர
மான்ற சிந்தையின் மன்னன் வெளிவந்தான்.

869. வாரி யேழு மதிக்குமுன் வாவிடும்
மூரி வாம்பரி பண்ணுபு முன்கொணர்ந்
தாரி யாவென் றடியினி றைஞ்சினான்
சாரி யாதி தழைப்பிக்கும் வாதுவன்.

870. கரியி வர்ந்து வயிரங்கை யேந்துபு
சரிய வெற்புத் தகர்த்தவ னாணுற
அரியி வர்ந்ததென் றியாரு மறைதரப்
பரியி வர்ந்தனன் பார்த்திவ னென்பவே.

871. எண்ணில் வீர ரிறுக்கிய கச்சையர்
கண்ணில் வெய்ய புலிங்கங் கழற்றுவார்
மண்ணி லொப்ப ரெவரெனு மாண்பினார்
புண்ணி லாவுவை வாளொடு போந்தனர்.

        வேறு

872. கலையெ டுத்து ரைக்கு நீதி கண்டு பாரி னுயிரெலாம்
தலையெ டுத்து மகிழு மாறு தாங்கு மேந்த லைச்சுலாய்ச்
சிலையெ டுத்து வீர வீர ரெண்ணி லார்கள் சென்றிட
வலையெ டுத்து வார்சு மந்து சென்று ளார்பன் மாக்களே.

873. மருண்ட சிந்தை யாளர் தம்ம திக்கு நேரெ னச்சொலச்
சுருண்ட வாலி ரும்ப னைம டற்க ருக்கெ னத்துதைந்
திருண்ட தாம்வி ளிம்பு வாயி ரங்கி நீரொ ழுக்குநா
வெருண்ட பார்வை ஞாளி பற்றி மேவி னார்கள் சிலவரே.

874. பணையெ ழுந்துமுகிலி னங்கள்பதற மண்டி யொலிசெயா
அணைய வெங்கு மறவர் துன்றி யடிவ ணங்கி யேகவே
துணைய மைந்த புயம டங்க றுரக முந்தி மிருகமார்
இணையி லாவ னம்பு குந்த தேற்கு மாறு பற்றியே.

875. துடிமு ழங்கு படையி னோடு துட்ட மாக்க ளைத்தெற
அடிமு ழங்கு வீர கண்டை யண்ணல் காடு புகுதலும்
ஒடியெ றிந்து வாரொ ழுக்கியு ழியொர் காவ தப்படக்
கடிசெய் தாய பின்பு மாக்கள் கலைத ரக்க லைத்தனர்.

876. துங்க மேய பம்பை கொம்பு துடிமு னாவி யம்பலும்
சிங்கம் யாளி வல்லி யஞ்சி னத்த கேழல் வெய்யமா
தங்கம் வன்கு டாவடிததைந்த மான்பெ ரும்மரை
அங்க முட்பொ திந்த வன்றி யாதி மாவெ ழுந்தவே.

        (வேறு)

877. பாயுஞ்சில தொடருஞ்சில படருஞ்சில விடறிக்
காயுஞ்சில வதிர்க்குஞ்சில கதிக்குஞ்சில சினத்தீ
ஏயுஞ்சில வெறியுஞ்சில விஃதென்னெனப் பதைத்து
மாயுஞ்சில வெருளுஞ்சில மருளுஞ்சில மாக்கள்.

878. எய்வார்சில ரெறிவார்சில ரெதிர்மாவிருஞ் சென்னி
கொய்வார்சிலர் கொதிப்பார்சிலர் குறுகிச்சுரி கைப்போர்
செய்வார்சிலர் தெழிப்பார்சிலர் தெறுமாச்சிதை வுணர்ந்து
மொய்வார்முர சறைவார்சிலர் முதுவெஞ்சமர் வயவர்.

879. சிலமாக்களை யடிபற்றுபு சிலர்மண்மிசை யறைந்தார்
சிலமாக்களை வாள்வீசுபு சிலர் வெட்டுபு சிதைத்தார்
சிலமாக்களை யடுவாளியிற் சிலரெய்யெனச் செய்தார்
சிலமாக்களை யுடைவாள் கொடு சிலர்குத்துபு வீழ்த்தார்.

880, வாலற்றன சிலமாவுடல் வலியற்றன சிலமா
காலற்றன சிலமாவெழு கதியற்றன சிலமா
தோலற்றன சிலமாவடு துடிப்பற்றன சிலமா
பாலற்றன சிலமாவழல் பண்பற்றன சிலமா.

881. மிருகக்குல மிவ்வாறல மருமேல்வைவெஞ் சினமே
பெருகக்குய வரியாளிபி றங்குந்திண்ம டங்கல்
அருக்ககன மதநீர்பொழி யானைத்திர ளாதி
முருகத்திற லினர்மேற்செல முதல்வன்னது கண்டான்.

            வேறு

882. அடுபுலிப் போத்துப் போலு மண்ணல்வாம் பரியு கைத்துக்
கொடுவரி சிலைகைக் கொண்டு கூர்ங்கணை பலசெ லுத்த
நெடுவலி மாக்க ளெல்லாம் ஞெரேலெனப் பதைப தைத்தும்
கடுமுர ணிழந்து சாய்ந்து கதறின வனம டங்க.

883. கலிகருங் கழற்கால் வேந்தன் கைச்சிலை செலுத்து மேவோர்
புலிமுகந் துளைத்துப் பின்பு போகிமண் புடையா நிற்கும்
மெலிவறு தோகைக் கீழால் விளங்குற வதுதெரிந்தோர்
வலிகெழு வாலி ரண்டு வாய்த்தது வியப்பே யென்பார்.

884. ஆகத்தின் மறுவு றாத நெடியமா லடுவி லுய்க்கும்
மோகத்தி னழல்கால் வாளி மும்மதம் பொழியா நிற்கும்
நாகத்தி னுடம்பு முற்று நண்ணுபு கரக்குங் காட்சி
மேகத்தி னுழைந்து மாயு மின்னலை யொத்த வன்றே.

885, பொதிதர வுடம்பு முற்றும் புண்டரீ கக்க ணெய்தாத்
திதிபுரி மகவா னங்கைச் சிலீமுகம் விரைந்து சென்று
கொதிதழற் சினம டங்கல் குறிக்கொடு தொடருங் காட்சி
மதியினைத் தொடர்ந்து செல்லும் வாளரா வொத்த வன்றே.

886. மருடபக் கலைக டேர்ந்த மன்னவன் செலுத்தும் பல்லம்
அருடபக் கொலையே மேற்கொண் டடல்புரி கரிய கேழல்
வெருடபப் பொலிய மேனி கிழித்துமிக் கேறுங் காட்சி
இருடபக் கிழித்துச் செல்லுங் கொள்ளியொத் திருந்த வன்றே.

887. அயல்வளர் தேமாஞ் சோலை யளிநறாக் கனிகள் சிந்தக்
கயலெழு தடஞ்சு லாய காம்போசந் திறைவ னோரே
இயல்வலி மடங்க லியானை யெறுழ்ப்புலி மூன்றுங் கொன்று
வியலமை புரமூன் றட்ட கணையென விளங்கிற் றன்றே.

888. முன்வரு கணையைக் கேழன் முனிவொடு கறிக்குங் காலைப்
பின்வரு கணையு டம்பு பிறந்ததென் னினமே வுற்றால்
என்வரு மென்று வாயாற் கறித்ததென் னியம்பு கென்று
கொன்வரு கோபச் செந்தீக் கொண்டுடன் பிளப்ப தொத்தே.

889. நடைதளர் குழவைக் கொல்லான் சூலுடைப் பிணவை நாடான்
அடைமழ வுணமு லைப்பா லருத்திடு மாவை மாயான்
உடைவெயில் வெப்பத் தானீ ருண்டிடு மவையுஞ் சாயான்
மிடைவலி யுடனெ திர்க்கும் வெய்யமாத் தொலைக்கும் வேந்தன்.

890. இன்னணம் வேட்ட மாடு மேல்வையிற் சினந்தெ ழுந்தோர்
கொன்னவில் புலிப்போத் தொன்று குரகதத் தெதிரே பாய
அன்னது கண்ட வேந்த னடுகணை யொன்று விட்டான்
மின்னகு மதனைக் கண்டு வெம்புலி பிழைத்தோ டிற்றே.

891. ஓடுவ தெங்கு நீயென் றுடன்றுவாம் பரியு கைத்தே
நாடுகா வலன்பின் சென்றா னயந்தது புகுந்த தேத்துக்
கூடுவான் புலித்தோன் மூடிக் குறிகொள் பிங்கலாக்க னென்பான்
நீடுமா தவமேற் கொண்டு நிட்டையி னிருந்தா னன்றே.

    மன்னன் விடுத்த அம்பினா லடிபட்டு முனிவன் இறத்தல்

892. பொறிவழி மனம்போக் காது புந்தியிற் பரனை யெண்ணித்
தறியென வசைவி லாம லிருக்குமா தவத்தோன் மேனி
செறிபுலித் தோலாற் புக்க புலியெனச் சிந்தை செய்து
மறிவரும் பகழி யொன்று வல்லையில் விடுத்தா னன்றே.

893. தலைவிரி யரம்பை யீன்ற தாற்றிருங் கனியுட் சூசி
மலைவறப் புகுவ தொப்ப மாமுனி மேனி யுள்ளால்
கொலைபுரி பகழி மேவக் குலைகுலைந் தெழுந்து வீழ்ந்து
மலைமக டவன்றா ளுள்ளி வல்லையி னுடல நீத்தான்.

894. முனிவர னிறத்த லோர்ந்து வினைவந்து முற்றிற் றென்று
நனிமனம் பதைக்கும் வேந்த னடவுவாம் பரியி ழிந்து
கனிவொடு மருகு போந்து கண்டுமூர்ச் சித்து வீழ்ந்தான்
இனியெவன் செயவல் லேனென் றிரக்கமுற் றழுதா னன்றே.

    பிரமகத்தி நந்தனைப் பிடித்தல்

895. அழுதழு திரங்கும் வேந்தை யமைச்சரா தியர்கள் சூழ்ந்து
பழுதுவந் தடைந்த தென்ன பண்ணுவா மென்று தேற்ற
எழுதுசித் திரம் போல் வாளா விருந்தன னவன்கண் காணக்
கழுதுமுள் ளஞ்சுங் கோரத் தெழுந்தது பிரம கத்தி.

896. கொலைபுரி கயவா நின்னைக் கொன்றன்றி யொழியே னென்று
மலையினுந் திண்மை வாய்ந்த மார்பமங் கையாற் றட்டும்
உலைவற முகரோ மங்கண் முறுக்கிடு முடன்று சீறும்
அலைவுசெய் ததிர்க்குந் துள்ளு மழலென வாயங் காக்கும்.

897. நெருப்பினு மழன்று மேவு நிற்பினு மொறுக்கு மன்றி
இருப்பினும் புடைக்கும் வீழ்ந்து கிடப்பினு மிதிக்கு மேற்றப்
பொருப்பினு முயர்ந்த திண்டோ டட்டும்போர் செயவாவென்னும்
கருப்பினுஞ் சுவையுண் டாகக் கறித்துயிர் குடிப்பே னென்னும்.

    அரசன் தலயாத்திரை செய்யத் துணிதல்

898. கொடியவப் பிரம கத்தி குறுகலு நந்த னஞ்சி
நெடியதன் சேனை முற்று ஞெரேலென நகர்க்குப் போக்கி
முடியநன் குறும மைச்சர் முதலியோ ரையும்வேண் டானாய்ப்
படியமை தலங்க ளெல்லாம் பணிவதற் குள்ளங் கொண்டான்,

899. கற்றவவ் வரசன் முக்கட் கடவுளைப் பூசை யாற்றும்
நற்றவ முடையா னந்த நற்றவப் பயன்வீண் போமோ
சொற்றவக் காட்டி னுள்ளாற் சுடுசினப் பிரமகத்தி
உற்றவப் போதும் பெம்மான் றலந்தொழு முணர்ச்சி நீங்கான்.

            காசி

900. மோனந்த வாத சீவன் முத்தரார்ந் திறைஞ்சா நிற்கும்
ஆனந்த வனமாங் காசி யடைந்திருங் கங்கை யாடித்
தானந்த மில்லா முக்கட் சயம்புவைத் தொழுது பின்னும்
ஈனந்த வாமை கண்டா னெலாந்தொழு மாசை மிக்கான்.

    திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

901. திருப்பத நெடியோ னன்று தேடியுங் கண்டி லான்கைப்
பொருப்பதள் போர்த்த மேனிப் பூரண னினிது மேய
பருப்பத மடுத்துப் போற்றிப் பழியுடன் சூழச் சூழ்ந்து
விருப்பதங் கறாது மேவ மேவினான் வேந்தர் வேந்தன்.

        திருக்காளத்தி

902. நீளத்தி கிரிப்பொ ருப்பு நிறையுயி ருய்யு மாகார்
கோளத்தி யுடுத்த மைந்த குவலய மோலி யாகி
வாளத்தி யணிவா னென்றும் வைகுறப் பெற்ற தாஞ்சீ
காளத்தி யெனுநா மத்தென் கயிலையை வணங்கிப் போற்றி

        காஞ்சீபுரம்

903. தருக்காஞ்சிம் முதலோ ரைந்துஞ் சாற்றுவாஞ் சரணத் தன்பு
சுருக்காஞ்சின் மயமா வாமென் பவர்க்கருள் சுரந்து காட்சி
குருக்காஞ்சி யிடையா ளோடுங் கொடுப்பவ ரினிது மேய
திருக்காஞ்சி யொருமா மூலஞ் சென்றுசே வித்தா னன்றே.

        திருவாலங்காடு

904. பொருவாலங் காட்டு வெய்ய புலியத ளுடுத்தோ னெங்கும்
மருவாலங் காட்டு வேணி வைத்தவன் வானோ ரஞ்சி
வெருவாலங் காட்டு கண்ட வித்தகன் மேய தெய்வத்
திருவாலங் காட்டுட் புக்குத் திருநடஞ் சேவித் தானால்.

        திருவொற்றியூர்

905. வெற்றியூ ரொருமூன் றட்ட விமலனைக் கமலத் துள்ளான்
பற்றியூர் கலுழப் புள்ளான் பறந்திடந் தினுங்கா ணானைச்
சுற்றியூர் கோள்வ ளைந்த மதிநிகர் சோலை சூழ்ந்த
ஒற்றியூர் புகுந்து போற்றி யுவணின்று மெழுந்தா னன்றே.

        திருமயிலை

906. எயிலையன் றட்ட மூர்த்தி யெல்லாமா மட்ட மூர்த்தி
அயிலையங் கையிற் கொண்டா னைங்கையான் றந்தை மேய
கயிலையென் றெடுத்துப் பேசும் புன்னையங் கானல் சூழும்
மயிலையம் பதியுட் புக்கு வள்ளலை வணங்கிப் போற்றி.

    வான்மியூர், வெண்பாக்கம், திருமாற்பேறு, கச்சூர், இடைச்சுரம்.

907. மருந்துகொண் டமர ராட்டும் வான்மியூர் வயல்க டோறும்
திருந்துசெங் கரும்பாக் கஞ்செய் வெண்பாக்கந் திருமாற் பேறு
முருந்துவெண் ணகையா ராடன் முழவறா வரங்க மேலால்
பொருந்துவா னச்சூர் கச்சூ ரிடைச்சுரம் புகுந்து போற்றி.

        திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை.

908. ஒருகழு கும்ப ரேகி யுழன்றுங்கா ணரியான் பாதம்
இருகழு கென்றுங் காணூஉ விறைஞ்சொரு வரையும் போற்றி
அருண்மய மகலா தாக வழன்மய மாகி னான்செம்
பொருண்மய மவனே யென்னப் பொலிதிரு வரையும் போற்றி.

        அறையணி நல்லூர், விருத்தாசலம்.

909. சூலத்தந் தகனை யேற்றார் தொன்னகர் கொடிய தாய
ஆலத்தந் தமிலார் வைகு மறையணி நல்லூர் வேத
சீலத்தந் தணன்முன் னானோர் சேவிக்க விருத்த நாமக்
கோலத்தந் தையர்நீங் காத குலவரை யனைத்தும் போற்றி

        திருவதிகை, பாதிரிப்புலியூர்.

910. பரிபுரம் புலம்பு மென்றாட் பாலைவிற் பிடிக்கக் கண்டு
திரிபுரங் குலையு மாறு சிலீமுக மொன்று தொட்டு
விரிபுரந் தரன்முன் னோரை வாழ்வித்தார் விரும்பூ ருங்கை
யெரிபுரந் தவர்வா ழும்பா திரிப்புலி யூரு மேத்தி

            சிதம்பரம்

911. வாடுகின் றாரா யின்னு மலர்மிசை யோனு மாலும்
தேடுகின் றாராய் நிற்பச் சிதம்பரத் தங்கை சென்னி
சூடுகின் றாராய்த் தொண்டர் துதித்தர கரவென் றார்ப்ப
ஆடுகின் றார்பொற் பாத மஞ்சலி செய்து போற்றி

    காழி, புள்ளிருக்கு வேளூர், புன்கூர்.திருவெண்காடு, கடவூர்.

912. ஆழிசூழ் காழி போற்றி யமைந்தபுள் ளிருக்கு வேளூர்
வாழிசென் றிறைஞ்சிப் புன்கூர் வளமலி திருவெண் காடு
பாழிசேர் கடவூ ராங்கட் பயிறலம் பலவும் போற்றிச்
சூழிமால் யானை வேந்தன் றுனைந்துமா யூரஞ் சார்ந்தான்.

        மாயூரம்

913. காவிரி யிடப தீர்த்தங் கண்ணுற்றுக் கமழ்நீ ராடித்
தாவிரி நீறு பூசித் தம்பிரான் றளியுட் புக்கு
நாவிரி புகழான் மிக்க வள்ளலை நயந்து போற்றிப்
பூவிரி யலங்கன் மார்பன் பச்சிமம் பொருந்தச் செல்வான்

    மூவலூர், துருத்தி, அழுந்தூர், ஆவடுதுறை

914. அன்னமார் பொய்கை சூழு மணிதிகழ் மூவ லூரும்
சொன்னவா றறிவார் மேய துருத்தியுந் தொழுதா ரென்றும்
இன்னறீ ரழுந்தூர் மாடக் கோயிலு மிலஞ்சி தோறும்
துன்னமா மலர்சா லெங்க ளாவடு துறையும் போற்றி,


    திருக்கோடிகா, கஞ்சனூர்,மங்கலக்குடி, குறுக்கை,
    திருவிடைமருதூர், திருநாகேசுவரம், கும்பகோணம்.

915. பாடிகா வலைமே வாதார் பண்பினன் கிறைஞ்சிப் போற்றும்
கோடிகா கஞ்ச னூர்மங் கலக்குடி குறுக்கை மூதூர்
நாடிவா னவர்க ளேத்து மிடைமரு தூர்நா கேசம்
நீடிமா முனிவர் போற்று நிறைவளக் கும்ப கோணம்

    திருவலஞ்சுழி, பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், நல்லூர்,
    ஆவூர், கருகாவூர், திருவையாறு, நெய்த்தானம்,ஆனைக்கா.

916. திருவலஞ் சுழிபட் டீசந் திருச்சத்தி முற்ற நாளும்
பொருவரு நல்லூ ராவூர் புண்ணியக் கருகா வூர்சீர்
தருவளத் திருவை யாறு தாயெனப் பொலிநெய்த் தானம்
இருவினை தபுமா னைக்கா விவையெலா மிறைஞ்சிப் போற்றி

    சிராமலை, எறும்பியூர், நெடுங்களம், திருக்காட்டுப்பள்ளி,
    திருப்பூந்துருத்தி, கண்டியூர்.

917. தராதலம் புகழா நிற்குந் தந்தையே தாயாய் மேவும்
சிராமலை தொழுதெ றும்பி யூர்நெடுங் களஞ்சே வித்துப்
பராவுறு காட்டுப் பள்ளி பாடல்சால் பூந்து ருத்தி
அராவணை யண்ணல் போற்றுங் கண்டியூ ரனைத்தும் போற்றி

    சோற்றுத்துறை, வேதிகுடி, பாலைத்துறை, வழுவூர்.

918. தொழுபவர் வினைதீர் சோற்றுத் துறைவேதி குடியும் போற்றிச்
செழுமலர்ப் பொய்கைப் பாலைத் துறையகஞ் சென்று தாழ்ந்து
பழுதறு வழியி னுள்ள பஃறல மெல்லாங் கண்டு
வழுவற முனிவர் போற்றும் வழுவூர்வீ ரட்டம் புக்கான்.

    திருப்பாம்புரம், திருவீழிமிழலை

919. கரியுரி போர்த்த மேனிக் கண்ணுதற் பரனைப் போற்றி
அரிபுகழ் பாம்பு ரத்தை யடைந்துநெஞ் சுருகித் தாழ்ந்து
தரிசனஞ் செய்யு மன்பர் தவாதபே ரின்பந் துய்க்கத்
திரிமல வாற்றன் மாற்றுந் திருவீழி மிழலை புக்கான்.

920. விண்ணிழி விமான மேய விமலவா னந்த வாழ்வைக்
கண்ணிழி யருவி பொங்கக் கையிணை சென்னி யேற
எண்ணிழி வனைத்து நீங்க விறைஞ்சுபு வெளியே வந்து
புண்ணிழி வேல்போ னெஞ்சுட் பொருதுயர் வருத்தச் சோர்வான்.

    நந்தன் வருந்துதல்

921. இத்தனை தலங்க ளெல்லா மிறைஞ்சியு மந்தோ கெட்டேன்
முத்தனை முனிவர் கோனை முருக்கிய பழிதான் செய்யும்
அத்தனை துயருட் சற்று மகன்றில தினியென் செய்கேன்
பித்தனை யொத்தே னென்று பிதற்றுபு குணபாற் செல்வான்.

    நந்தன் அம்பர் எல்லையை அடைதல்

922. குணதிசை விருப்பிற் செல்லுங் கோமகன் முற்ப வத்தின்
அணவுபுண் ணியமுன் னீர்க்க வலர்ந்தெழு மூக்கத் தோடும்
குணமுற நடந்து சென்று கொண்டல்கண் படுக்க வோங்கி
மணமலி பொழில்சூ ழம்பர் மாநக ரெல்லை யுற்றான்.

    அம்பரெல்லையில் பிரமகத்தி நீங்குதல்

923. அம்பர்மா நகரத் தெல்லை யடைதலும் விடாது பற்றி
உம்பரு மருளச் சீறி யுடற்றிடும் பிரம கத்தி
இம்பரென் செய்கு வாமென் றிரிந்துபின் றொடரக் கண்டான்
நம்பர்த மருளே யென்று நயந்தன னந்த மன்னன்.

924. நிழலென விடாது பற்றித் தொடர்தரு நெடிய பாவம்
கழலுபு மெல்ல மெல்லத் தொடர்வது கண்ட மன்னன்
அழலவிர் விழியான் மேய வற்புதத் தலமீ தென்று
சுழலுத றவிர்ந்த நெஞ்சிற் சூழுபு நடக்க லுற்றான்.

    கோயிலின் முன் மன்னன் சில முனிவர்களைக் காணல்

925. புறநகர் கடந்தப் பாலா மிடைநகர் கடந்து போய்மேல்
உறமிளிர் வளத்தா லான்ற வுண்ணகர் கடந்து சென்று
மறமலி சூலத் தண்ணல் வளர்பெருங் கோயில் கண்டத்
திறமலி தளிமுன் னாகத் திகழ்முனி வரையுங் கண்டான்.

926. தாயினைக் கண்டு வாட்டந் தவிர்தரத் தழைந்து செல்லும்
சேயினைப் பொருவ மன்னன் செம்முனி வரரைக் கண்டு
வீயினைப் பொருமன் னார்தம் பாதத்து விரைந்து தாழ்ந்து
நோயினைந் தவிர்ந்தே னென்று நுவன் றெதிர் கிடந்தா னன்றே.

    முனிவர் அரசனை விசாரித்தல்

927. எழுகவென் றாசி கூறி யெழுந்தபின் னரச னென்று
செழுமுனி வரர்க டேர்ந்தெத் தேயநீ நாம மியாது
பழுதெவ னுற்ற தெம்மா லாவதென் பகர்தி யென்னத்
தொழுதெழுந் தரசன் மீட்டுந் துதித்திது சொல்ல லுற்றான்.

    மன்னன் முனிவரரிடம் கூறினவை

928. மேயாகம் போச மன்னன் விளம்புபேர் நந்த னென்பேர்
ஆயகான் வேட்ட மேற்சென் றடுபுலிப் போத்தென் றெண்ணி
மாயமில் பிங்க லாக்கன் வன்றரக் கதண்மேற் போர்த்து
நேயமோ டிருத்த றேரே னெடுஞ்சரந் தூண்டி னேனால்.

929. அன்னவ னிறந்தா னாக வடர்ந்தெழு பிரமகத்தி
தன்னமு மிரக்க மின்றிச் சாடுத லுற்ற காலை
என்னசெய் குதுமா லென்னா வெண்ணருந் தலங்க ளெல்லாம்
பொன்னவிர் சடில மோலிப் புராணனைப் போற்றி னேனால்.

930. தலமெலாஞ் சென்று சென்று தாழவுந் தாழா தாயென்
நலமெலாங் குலைத்த திந்தத் தலத்தக நண்ண வேதன்
வலமெலா மொடுங்கி நீங்கி யணித்தன்றி மருவிற் றாலென்
குலமெலா முய்ய நீவிர் குறித்துணர்த் திடுவீ ரென்றான்.

        முனிவரர் கூற்று

931. ஈதொரு பொருளோ விந்த விருந்தலத் தினுக்கிங் குள்ள
மாதொரு பாகர் செய்யு மாப்பெருங் கருணை யாலே
தீதொருங் கொழியு மின்னே திருப்பெருங் கோயில் புக்குப்
போதொருங் கியலக் கொண்டு போற்றுகென் றேவி னாரால்,

        நந்தன் செயல்

932. அடியனே னுய்ந்த னேனென் றஞ்சலி கூப்பி மன்னன்
முடிவிலா வின்ப வாழ்க்கை முனிவர்பால் விடைகொண் டேகிப்
பொடியணி மேனிப் பெம்மான் புரிந்தமர் கோயில் புக்குக்
கடிமலர் நிறையப் பூத்த வன்னமாம் பொய்கை கண்டான்.

933. நீருரு வெனினும் பாவக் காட்டைநீ றாக்குஞ் சோதிப்
பேருரு வாய வன்னப் பெரும்பெயர்ப் பொய்கை மூழ்கிச்
சீருரு வாய நீறுந் திருந்துகண் மணியுந் தாங்கிக்
காருரு வாய கண்டக் கடவுண்முன் குறுகி னானால்

    நந்தன் பிரமபுரீசரைப் பூசித்தல்

934. வரைமிசை முளைத்த தெய்வ மருந்தையன் புடையார்க் கெய்ப்பில்
விரைதர வுதவும் வைப்பை விரைமலர்ப் பிரமன் போற்றக்
கரையகல் வரங்கொ டுத்துக் காத்தகற் பகத்தைக் கண்டு
புரையற வுய்ந்தே னென்று போற்றுபு பணிந்து வீழ்ந்தான்.

935. பலதரம் பணிந்து வீழும் பலதர மஞ்ச லிக்கும்
பலதரந் துதிமு ழக்கும் பலதர மங்கை கொட்டும்
பலதர நடனஞ் செய்யும் பலதர மாவா வென்னும்
பலதர முள்ளத் துள்ளும் பலதரந் தழுவற் கெண்ணும்.

936, உரைசெயுந் தரமி லன்பே யுருவமாய்ப் பொலியு நந்தன்
வரைசெயு மொருபி னாகம் வாங்கிமுப் புரம்பொ டித்தும்
திரையுறுங் கடனஞ் சுண்டுந் தேவரைப் புரந்த பெம்மான்
புரைசெயும் பதமிவ் வண்ணம் போற்றுபு வெளியே வந்து

937. புண்ணிய மலிந்த தாய்வம் புவனப்பூங் குழலாள் கோயில்
நண்ணிய விருப்பிற் புக்கு நயங்கெழத் தொழுது போற்றிப்
பண்ணிய வருளிற் றாழா வரணதே வரையும் போற்றித்
தண்ணிய குணத்தான் மிக்க தராதிபன் வெளிவந் தானால்.

    அரசனை விட்டுப் பிரமகத்தி முற்றும் நீங்கியது

938. பிரமனுக் கருளிச் செய்த பிரமபு ரீச ராய
பரமரைக் காலந் தோறும் பத்தியின் வணங்கிப் போற்றும்
கிரமமிக் கவனாய் நின்ற மன்னற்குக் கிளக்கு மன்னார்
வரமலி யருளான் முற்று மாய்ந்தது பிரம கத்தி.

939. அயலமர் தோற்ற முந்தீர்ந் தந்தணற் கொன்ற பாவம்
மயலறத் தீர்ந்து மாய்ந்த வண்ணங்கண் டாடிப் பாடிப்
புயலமர் தடக்கை மன்னன் புண்ணிய முனிவர் பாற்போய்
வியலமர் பாதம் போற்றி விண்ணப்பஞ் செய்தா னன்றே.

        முனிவரர் கூற்று

940. அனையவர் மகிழ்ந்து மன்னா வம்பரென் றுரைக்கு மிந்தப்
புனைவளத் தலத்திற் கீதோர் பொருள்கொலோ நினைத்த போது
நினைவரும் பாவ மெல்லா நெருப்பிடைத் துய்யா மெண்ணில்
வினைதபுத் திகமுன் மூன்று மேதக வளிக்கு மன்றே.

    முனிவர்கள் நந்தனுக்குச் சில பணித்தல்

941. என்றனர் மீட்டு நண்ணி யிறைஞ்சியிங் கடியேன் செய்யும்
நன்றமை பணியா நீவிர் நயந்தருள் செய்க வென்னக்
குன்றவிற் குழைத்தா ரன்ப ராங்குல முனிவர் சேர்ந்து
வென்றதிண் புயத்தாய் கேட்டி யெனவிவை விளம்ப லுற்றார்.

942. பரசிவ தரும மேலாப் பகருமெத் தருமத் திற்கும்
வரமுறு மதனா லிங்கண் வயங்கவா லயம்பு துக்கி
விரவுபல் வளஞ்சால் பூசை விழாமுதற் சிறப்புச் செய்து
கரவிலந் தணர்முன் னோர்க்குக் கனிந்தன மூட்டு வாயால்

    மன்னன் தன் நாடு திரும்பியது

943. சிறந்தவித் தலத்தி னின்னுஞ் சிவலிங்கப் பதிட்டை செய்தி
மறந்தபு புராணங் கேட்டி மற்றுநன் கமைத்தி யென்று
நிறந்தழை முந்நூன் மார்பர் நிகழ்த்தலுந் தலைமேற் கொண்டு
புறந்தர லில்லா வாண்மைப் புரவல னெழுந்து போனான்.

944. போனமன் னவன்வ ளக்காம் போசதே யத்து நாப்பண்
ஆனதன் னகரை யுற்றா னமைச்சரே யாதி யாய
மானவர் பலருஞ் சூழ மகிழ்ந்தள வயாவி யுற்ற
ஈனமெவ் விடத்தி லெவ்வா றிரித்தனை யென்றார்க் கோதும்.

    மன்னன் அம்பரின் பெருமைகளைப் புகன்றது

945, எண்ணருந் தலங்க ளெல்லா மெய்துபு பணிந்தந் தீரா
நண்ணரும் பிரம கத்தி நயந்தகா விரிக்குத் தென்பால்
விண்ணரும் பரவா ரூர்க்கு மேவிய வடபா னாப்பண்
கண்ணரும் வளத்திற் றேன்றுங் கரிசிலோர் தெய்வத் தானம்.

946. அரிசிலென் றொருபே ராறு மன்னமாம் பொய்கை யென்னும்
கரிசிலோர் தடமு மாங்குக் கலப்புறு மெந்த ஞான்றும்
துரிசிலா முனிவர் சூழ்வர் சுருதியான் முதலோர்க் கின்பம்
பரிசிலாக் கொடுத்த தம்பர்ப் படர்தரக் கழிந்த தம்மா.

947. அம்பரென் றுரைக்கு மந்தத் தலத்தனு தினமுத் தீரா
தும்பர்வந் திறைஞ்சா நிற்ப ருத்தமத் துத்த மங்காண்
இம்பர்மற் றதற்கு நேரா மொருதல மில்லை யில்லை
நம்பருற் றவர்க்கெஞ் ஞான்று நல்லருள் சுரவா நிற்பர்.

948. ஆங்குநா னடையு முன்ன ரகன்றது பிரம கத்தி
வீங்குபே ருவப்புற் றாங்கு மேவிய முனிவர் பாலென்
தீங்குகூ றினனன் னாருஞ் சிந்தையி னிரக்க மேவிப்
பாங்குசேர் பரனைப் போற்றப் பண்ணினர பணிந்தேன் சின்னான்.

    நந்தன் மீண்டும் அம்பரிலேயே வந்து தங்குதல்

949. தன்னமு மில்லா வண்ணஞ் சாய்ந்ததென் றீமை யெல்லாம்
அன்னமும் வராக முந்தே றாதவர் சேவைக் காக
இன்னமு மாங்குச சேறற் கெண்ணினே னென்றோ ரைந்து
வன்னமு மகலா நாவின் மன்னவ னிதனைச் செய்தான்.

950. உத்தம னெனுந்தன் மைந்த னொருவனுக் கபிடே கஞ்செய்
தெத்தம னியநன் மோலி யிணையெனு மோலி சூட்டிச்
சுத்தம னாகி யாடி கமைநின தென்று தீர்த்து
வித்தம னேகங் கொண்டு மேவினா னம்பர் மீட்டும்.

951. பெருமுனி வரரைத் தாழ்ந்து பிறங்குமந் நகரி னோர்சார்
வருபரி சனருந் தானும் வைகுதற் குறையு ளாக்கி
உருவர ணகழி சூழ வுறுத்தியெவ் வளனு மல்கும்
திருவநன் கமையச் செய்து சிறப்பவாங் கிருந்து கொண்டு

        அரசன் ஆலயம் புதுப்பித்தல்

952. மழைதவழ் கோபு ரங்கண் மண்டபம் விமானம் யாரும்
விழைமடைப் பள்ளி யாக சாலைவே திகைசோ பானம்
தழைதர வியற்றித் தீர்த்தத் தடந்துறை புதுக்கிச் சூழ்ந்த
பிழைதபு மதில்க ளெல்லாம் பிறங்குற வியற்றி னானால்.

    ஆலயத்துக்கு ஆவன பிறவற்றையும் அளித்தல்

953. குடைகொடி யால வட்டங் கோணிய தண்ட மாதி
மிடைபல விருது மியானை விலாழிமா விரதம் வெள்ளே
றடையிவை யாதி யாய வூர்தியு மவிர்செம் பட்டும்
கடைமணிக் கலிங்க மும்பொற் கலிங்கமு முதலாந் தூசும்

954. மணிமுடி சன்ன வீரம் வண்குழை யொளிர்கே யூரம்
அணிமணிக் கடக மாழி யாரமொண் மதாணி யாதிக்
கணிதமில் பணியுஞ் செம்பு கஞ்சம்பித் தளைவெண் செம்பொன்
திணிதர விவற்றிற் செய்பாத் திரங்களு மாக்கி னானால்,

        திருவிழாக்கள்

955. தினவிழாப் பக்க மேய திருவிழாத் திங்கட் சாறு
கனமிகு மாட்டைச் சாறு பவித்திரங் காமர் கோடை
எனநவில் சாறு சீத வாவியி னியங்குஞ் சாறு
மனனவிர் மற்று முள்ள சாறெலாம் வயங்கச் செய்தான்.

        பிற அறங்கள்

956. அன்னசத் திரமுந் தெண்ணீ ரமைந்தபந் தருமி யற்றிப்
பன்னமென் றளிர்பூ மல்கப் பரந்தநந் தனமுங் கண்டு
சொன்னமுன் பிறவும் வாரிச் சோதிபா லன்ப ராய
முன்னவர் முதலி யோர்க்கு முனிவற வீசி னானே.

957. அன்னமாம் பொய்கை தோய்ந்து மரிசினீர் படிந்தும் வேட்ட
என்னவு மெளிதி னல்கு மிந்திரப் புனல் படிந்தும்
பன்னரும் வரைமே லேறிப் பரமரைச் சேவை செய்தும்
கன்னலங் குதலை யம்மை கான்மலர் பணிதல் செய்தும்.

958, மேயவட் டாங்க மாக விதித்தபஞ் சாங்க மாக
நாயக னெதிர்ப ணிந்து நகுமணிக் கோயில் சூழ்ந்தும்
தூயவன் புடையார் மாட்டுத் துன்னியும் புராணங் கேட்டும்
மாயமி லன்பு மேன்மேல் வளர்ந்தெழ வளர்ப்பா னந்தன்.

    வேறொரு கோயில் அமைத்தல்

959. அந்தமா நகரி னோர்சா ராலய மொன்று கண்டு
முந்தமா தவத்தான் மிக்க முனிவரர் புகன்ற வாறே
கந்தமார் கொன்றை மோலிக் கயிலாய நாத ரென்னும்
சந்தமார் நாமஞ் சொற்றோர் சிவலிங்கந் தாபித் தானே.

960. தளைதவிர் பிரம லிங்கத் தம்பிரான் றனக்குஞ் செம்பொன்
வளையவிர் முன்கை வம்பு வனமலர்க் குழலி னாட்கும்
களைகொணித் தியமுன் மூன்றுங் கவின்பெற நடக்கு மாறே
விளைநிலந் துடவை யாதி மிதப்பமேன் மேலு நல்கி

961. காரணங் கடந்தா ராய கயிலாய நாத ருக்கும்
பூரணப் பொருளா யுள்ள புவனேசப் பெருமா னார்க்கும்
நாரண வமையும் பூசை விழாமுத னடக்கு மாறும்
தாரணி வியவா நிற்கு மூதியம் பலச மைத்தான்.

962. ஆய்ந்தசீர் நந்த னென்னபா னன்பினிவ் வாறே பன்னாள்
ஏய்ந்தபே ரறம்வ ழாம லியற்றுபு மகிழ்ச்சி மேவப்
பாய்ந்தநீர்க் கடல்சூழ் வைப்பிற் பற்பல வுயிருஞ் சாம்ப
வாய்ந்தகோ ணிலைதி ரிந்து மழைபெயன் மாறிற் றன்றே.

        வேறு

        பஞ்ச நிலை

963. மழைபெயன் மாறலும் வற்க டங்கிளர்ந்
துழைநிரப் புற்றதா லுறுநி ரப்புற
விழைதரு புவியிடை மேய யாவரும்
குழைதரு பெரும்பசிக் கோட்பட் டாரரோ.

964. உண்ணுநீர் வறந்தன ருடம்பு மாசற
மண்ணுநீ ரெவ்வயிற் பெறுவர் மாநிலத்
தண்ணுநீர் மையிற்றிரு வமைந்த யாவரும்
எண்ணுநீர் மையர்நனி யிரங்கி னாரரோ.

965, செழுமழை யொழியவே ளாளர் செய்தொறும்
உழுதொழி லொழிந்தன ரொழிய மற்றது
வழுவற வியக்கிடு மற்றை மூவரும்
கெழுமுதந் தொழிலொரீஇக் கிடந்து ளாரரோ.

966. மறையவர் பசித்தனர் மனுவென் றோதுநூல்
துறையவர் பசித்தனர் தூக்கு கோலுடை
நிறையவர் பசித்தனர் நிலமெ லாமுழும்
முறையவர் பசித்தனர் மொழிவ தென்னினி.

967. மாறுவேண் டினரலர் மள்ளர் மாதவப்
பேறுவேண் டினரலர் பெரிய ராடுதற்
காறுவேண் டினரல ரந்த ணாளருண்
சோறுவேண் டினர்பல துறையு ளார்களும்.

968. பொருசிலை மாரவேள் போரி னீங்கினன்
வெருவரும் விடரெலாம் விரத்தர் போன்றனர்
பெருகொளிக் கொழுநரைப் பிழைக்கு மாதரும்
ஒருவரு மருந்ததி யொத்து வைகினர்.

969. கரவுளெண் ணார்களுங் கரவு செய்தனர்
விரவுபல் பொருளிலு மேவ வஞ்சிக்கும்
உரவறி யார்களு முறப்பு ரிந்தனர்
தரமகல் சிறுபொருண் மாட்டுஞ் சாரவே.

970. ஒருவருண் டிடுபொழு தொருவ ரீர்ப்பர்மற்
றிருவரு மீர்ப்பர்மிக் கிவர்க லாய்த்திட
மருவரு மயலுளார் வந்து பற்றுவார்
பெருகுவற் கடம்புரி பெற்றி யென்சொல்கேன்.

971. வள்ளவா யமுதுண வளர்ந்த கிள்ளைகள்
தள்ளரும் பசிதலைக் கொண்டு சாய்ந்தன
நள்ளரு மவைக்குறு நலிவு சொல்வதென்
விள்ளரு மெறும்பிற்கு மிசைவின் றாமெனில்.

    பஞ்சக் காலத்தில் நந்தன் செய்தது

972. இன்னணம் வற்கட மெய்துங் காலையில்
பன்னரு வேனிலிற் பரந்த மாநதி
என்னரு முயன்றுநீ ரேற்க நல்கல்போல்
தன்னரும் பொருள்சில நாட வாதுய்த்தான்.

    நந்தன் பிரமபுரீசரிடம் முறையிடல்

973. உளபொருள் வறத்தலு முள்ள வாகிய
அளவறு பூணெலா மழித்து நல்கினான்
வளரொளி யவைகளு மாண்ட பின்னுளம்
தளர்வுற வண்ணலார் கோயில் சார்ந்தனன்.

        நந்தன் துதி

974. அண்ணலார் கோயிலை யடைந்து தாழ்ந்தெழீஇ
நண்ணலார் புரந்தப நகைத்த நம்பனே
ஒண்ணலா ரரசொரு புறத்து றுத்தினாய்
கண்ணலார் வற்கடங் கலக்கத் தேம்பினேன்.

975. பெரும்பசி யுலகெலாம் பிணிக்க வெந்துயர்
அரும்பிய ததுதப வடிய னேனுள
இரும்பொருண் முழுவது மெடுத்து வீசினேன்
விரும்புத வுதற்கினி வேறு கண்டிலேன்.

976. மன்பதை படுபசி வருத்தங் காண்கிலேன்
அன்பருக் கெய்ப்பில்வைப் பாய வண்ணலே
மின்பொலி சடைமதி மிலைந்த செம்மலே
என்புருச் சுமக்கிலே னிரங்கு றாயெனில்,

    நந்தன் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிதல்

977. என்றுநைந் துருகின னிருகண் ணீருக
நின்றுநெட் டுயிர்த்தன னிலவு பேரருள்
குன்றுவிற் குழைந்தவர் கொடுத்தி லாரெனில்
ஒன்றுயிர்ப் பொறையிட லொழித்த லுன்னினான்.

    கடவுள் நந்தன் முன் தோன்றிக் கூறுதல்

978. நந்தனுட் டுணிபுணர் நந்த நாயகர்
அந்தமி லன்பின ரியாவ ராயினும்
கந்தமற் றவர்துயர் காண வல்லரோ
சுந்தரத் தவனெதிர் தோன்றிச் சொல்லுவார்.

979. நந்தநீ வருந்துறே னலியும் வற்கடம்
சிந்தவித் தளியிலைத் திருக்கை யானைமுன்
உந்தநா டோறுங்கா சொன்று வைக்கின்றாம்
முந்தநீ பெறிற்பசி முருங்கும் யாவர்க்கும்.

980. சிலரடை யினும்பலர் செறிந்த போதினும்
அலர்பசி தவிர்க்கும்பொன் னாய காசுகாண்
உலர்தலில் வற்கட மொழியுங் காலையில்
இலகிய காகுமாங் கில்லை யாகுமால்

    படிக்காசு விநாயகர் என்ற பெயர்க்குக் காரணம்

981. கண்டுநீ கொளப்படிக் காசு நல்கலால்
அண்டுமைங் கரமுளாற் கதுமுற் சார்பெயர்
விண்டுக வலைமகிழ் மேவென் றோதுபு
தொண்டுகொண் டருள்பவர் தோற்ற மாற்றினார்.

    அரசன் படிக்காசு பெற்றமை

982. அதிர்கழற் காலினா னகம கிழ்ந்தனன்
முதிரொளி விநாயகர் முன்னர்ச் சென்றனன்
பிதிர்தலில் வற்கடம் பெயர்ந்து நீங்குறக்
கதிருதித் தனையபொற் காசு கண்டனன்.

983. கண்டனன் மகிழ்ந்திரு கைகு வித்தனன்
விண்டனன் கவலைநோய் விரைந்து தாழ்ந்துகைக்
கொண்டன னாடினன் குலவப் பாடினன்
அண்டனன் கருளிய வருளி தென்னென்பான்.

984. தளிவலங் கொண்டுதன் னுறையுள் சார்ந்தனன்
ஒளிகிளர் செம்பொற்கா சொன்ற னாலன்று
களிதப வருகுநர் பசிக ளைந்தனன்
வெளியகத் தினும்பசி வினாவி மாய்த்தனன்

    யாவரும் உணவு பெறுதல்

985, மறுதினத் தினுமந்த வண்ணங் கொண்டுகுத்
தறுதியுற் றிடவெங்கு மவாவி வீசினான்
இறுதியி லியாவரு மெய்தி யெய்திமிக்
குறுதியுற் றிடவுணா வுண்டு வாழ்ந்தனர்.

986. பொருவரு மன்புசால் புரவ லன்கொளும்
பெருநிதி யாயாவோர் காசு பேணுபு
வருகுநர் தமக்கெலா மறாது நல்குபு
தருமுல வாக்கிழித் தன்மை போன்றதே.

987. இவ்விதம் வற்கட வெல்லை காறுமச்
செவ்விய குணத்தினான் செம்பொற் காசினால்
வெவ்விய பசிதப வீட்டி வைகினான்
அவ்விய முயர்ந்தவ ரகற்றி னாலென .

    பஞ்சம் நீங்கி வளம் சுரந்தமை

988. மிடிதுயர் முதற்பல விளைக்கும் வற்கடம்
ஒடிதலுங் காசுறா தொழிந்த தப்பொழு
திடிமுழக் கெழீஇமழை யெங்கும் பெய்தன
கடிபுனற் றடமுதற் கரைபு ரண்டன.

989. உழவொலி யெழுந்தன வுறுசெய் யெங்கணும்
முழவொலி யெழுந்தன மொய்த்த வில்லெலாம்
மழவொலி யெழுந்தன வானு நாணுற
விழவொலி யெழுந்தன மேய கோயிலே.

990. விரும்புகண் மலர்நிலம் விளைந்த சாலிகள்
கரும்புக ளெழுந்தன காக்கும் வேலியாய்
அரும்புக ளரும்பின வாவி வாய்க்கருஞ்
சுரும்புக ளெழுந்தன விளரி தூங்கவே.

991. கனிபல துவன்றின காவிற் கூலங்கள்
நனிபல துவன்றின நாடுந் தேமெலாம்
வனிபல துவன்றின வென்னும் வண்ணம்போய்ப்
பனிபல துவன்றின பாரி லெங்குமே.

992. விள்ளுந ரியார்மழை வளத்தின் மேதக
வுள்ளுந ரியார்கொடை யொருங்கு மேவலால்
கொள்ளுந ரியார்நனி குவிவ ளங்களை
அள்ளுந ரியாரென வறம லிந்ததே.

        மன்னன் மகிழ்தல்

993. இன்னண முலகெலாஞ் செழித்தின் பெய்துதல்
மன்னவ னோக்கியுண் மகிழ்ச்சி பூத்தனன்
நன்னலப் பிரமபு ரீசர் நாண்மலர்
வன்னமென் பதந்தொழூஉ மரபி னின்றனன்.

        நந்தன் இறைவனடி சார்தல்

994. பலபகல் பத்திசெய் பண்பின் மேவிய
நலமலி தொண்டுசா னந்த னென்பவன்
வலமழு வுயரிய லாரருள்
நிலவுறப் பெற்றடி நீழல் வைகினான்.

    அத்தலத்தில் இன்னும் பலர் பேறு பெற்றமை

995. இனையமன் னவனென வெண்ணி லாரவண்
முனைவறப் பூசித்து முத்தி வைகினார்
வனையுமத் தலப்பெரு மான்மி யத்தினை
நினைதர வளப்பவர் நிலத்தி லியாவரே.

    நைமிசாரணிய முனிவர் புராணம் கேட்டு மகிழ்தல்

996, என்றுநை மிசத்தவ ரியாரு மின்புறத்
தொன்றுணர் பெருந்தவச் சூத னோதினான்
கன்றுத லில்லவர் கருத்து முற்றுற
நன்றுணர்ந் தனமென நவின்று போற்றினார்.

        முனிவர்கள் அம்பர் வருதல் 

997. சூதமா தவனொடுந் தொல்லை நைமிசத்
தேதமின் முனிவர ரியாரு மம்பரில்
தீதற வடைந்தனர் செங்கை கூப்பினர்
போதமா ரன்னமாம் பொய்கை மூழ்கினர்.

998. வெள்ளிய நீறுகண் மணிவி ளங்குற
ஒள்ளிய வைந்தெழுத் தோதித் தாங்கினர்
நள்ளிய வன்புள நகக்கை கூப்புபு
தெள்ளிய வண்ணலார் திருமுன் சார்ந்தனர்.

999. கற்பக நிகர்படிக் காசு வேழத்தை
அற்புறப் போற்றின ரார்வ மிக்கெழப்
பற்பல வாயசோ பான மேறிப்போய்த்
தற்பர நாயகன் முன்பு சார்ந்தனர்.

1000. அரியயன் காணொணா வமல மூர்த்தியைத்
தரிசனஞ் செய்தனர் தவாது கண்பொழி
விரிபுனல் வார்தரப் புளக மேவினர்
பிரியமா ரானந்தப் பேறு பெற்றனர்.

1001. புண்ணிய சொரூபவம் புவனப் பூங்குழல்
எண்ணிய பதமல ரிறைஞ்சிப் போற்றினர்
அண்ணிய வானவர் மற்றை யாரையும்
கண்ணிய பிரியத்திற் கலந்தி றைஞ்சியே

    முனிவர்கள் மீண்டு நைமிசம் அடைந்து வாழ்தல்

1002. நகுபுவ னே சங்கை லாய நாதமும்
தகுமுறை மையிற்சென்று தாழ்ந்து சூதனோ
டுகுவினை முனிவர ரொருங்கு நைமிசம்
புகுதிற மருவினர் பொலிந்து வாழ்ந்தனர்.

            வேறு

            நூற்பயன்

1003. இந்தமா புராண முற்று மெழுதுவோ ரெழுது விப்போர்
சந்தமார் தரப்ப டிப்போர் படிப்பிப்போர் தகைமுத் தோமு
நந்தவான் பொருள்வி ரிப்போர் நகுபெரு விருப்பிற் கேட்போர்
முந்தவா தரத்திற் பூசை முறைபுரிந் திறைஞ்சா நிற்போர்.

1004. இவரெழின் மனைவி மக்க ளியைபெருஞ் செல்வத் தோடும்
உவர்வளை புவியில் வாழ்வுற் றும்பர்த முலகத் தெய்திக்
கவர்பெரும் போக மெல்லாங் கைக்கொண்டு வாழ்ந்து பின்னர்
தவருறு சிலையாக் கொண்ட தம்பிரா னுலகஞ் சார்வார்.

1005. பொருள்படு வளஞ்சா லம்பர்ப் புராணத்தை யெழுதிப் போற்றி
அருளுற வைத்த வில்லத் தலகையா திகள்வந் தெய்தா
மருள்செயும் வறுமை நோய்க ணுழைதரா மாற்றா ரேவும்
இருடரு மேவ லாதி யெய்துறா வென்ப மாதோ.

1006. பத்தியுங் கொடுக்கும் விண்ணோர் பற்பல ரிடத்துந் துய்க்கும்
புத்தியுங் கொடுக்கும் பந்தம் போக்குபு நிற்கு மேலாம்
முத்தியுங் கொடுக்கு மென்று மொழிகுவ தென்னை யெவ்வெச்
சித்தியுங் கொடுக்கும் மம்பர்த் திருநகர்ப் புராண மாதோ.

        வாழ்த்து

1007. சீர்பூத்த வம்பர்நகர் வாழ்கவருட் சைவர்குழாஞ் செழித்து வாழ்க
வார்பூத்த பொம்மன் முலை வம்புவனப் பூங்குழலாள் வாழ்க கொன்றைத்
தார்பூத்த தடநெடுந்தோட் பிரமபுரீ சுரர்வாழ்க தாவா வன்னார்
ஏர்பூத்த மன்றுணடஞ் செயவெடுத்த குஞ்சிதத்தா ளென்றும் வாழ்க.

        நந்தன் வழிபடு படலம் முற்றியது

        (இப் படலத்துத் திருவிருத்தம். 156)

        திரு அம்பர்ப் புராணம் முற்றுப்பெற்றது.

            திருச்சிற்றம்பலம்

Related Content

तत्त्वार्यास्तवः - Tattvaryastavah Hymn on Lord Nataraja a

Ardra Darsanam* – The Day Of Mercy

Chidambaram

Kachchi Ekambam (Alandhan ukandhu)

Song On Lord Nataraja - English Translation