logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )

(பாஸ்கர சேதுபதி )

பூமி நான் முகனும் புனிதமா லவனும்
    போற்றி நின் றடி தொழும் பரம
சோமசுந்தரனே சுருதியின் முடிவே
    சூழ்வினை தீர்த்தெமை யாள்வாய்
வாமியின் பாகா வழித்துணை மருந்தே
    வானவா வளர்பிறை சூடி
ஆமையோடுடனே ஏனக்கோ டணியும்
    ஆலவா யமருமென்னரசே.  (1)

கற்பகக் கனியே கருணையங் கடலே
    கயல்விழி யுமையொடு கலந்து
பொற்புற வுலக மதனினைப் புரக்கும்
    பூரண புராதன முதலே
சிற்பர வெளிக்குச் செழுஞ்சுடர் மயமாய்த்
    திகழும்நற் றேயுனை யறிய
அற்பமாம் அறிவோர்க்காகுமோ அறைவாய்
    ஆலவா யமருமென்னரசே.   (2)

வருடமுப் போகம் வளருமா மதுரை
    மன்னவா மாகர் நாயகனே
குருடனும் ஒருவன் குணதிசை யுதிக்கும்
    குவலய வொளியினைக் காண
மருடனால் வருந்தும் வகையினை யடைந்தே
    வள்ளலே மகிழ்வுறக் காணேன்
அருள் தர வேண்டும் அடியேனா னுய்ய
    ஆலவா யமருமென் னரசே. (3)     

மெய்யதாம் நின்னை மறந்துமே வீணாய்
    வேள்மலர் பாணத்தால் வெந்து
பொய்யதாம் மாதர் புலைமயக் காழ்ந்து
    புகலிட மின்றிமற் றொன்றுஞ்
செய்யவே நினையாத் தீமையை மறவாச்
    சிந்தையைச் செய்வதென் றுரைப்பாய்
அய்யனே அமரர் அனுதினம் பரவும்
    ஆலவா யமருமென் னரசே.  (4)

மாமனாய் வந்து மருமகன் றனக்கு
    வழக்கினை யுரைக்குமென் வாழ்வே
மாமனாய் இருந்தும் மற்றவ ரிடத்தில்
    வழக்கது வழங்குத லழகோ
மாமனா யிருந்த வணிகனைப் போலிவ்
    வறியனை மதித்திடல் வேண்டும்
ஆமனே அரியே அசுரர்க ளறியே
    ஆலவா யமருமென் னரசே.   (5)

மீனலோ சனியை மேவுமென் பரனே
    மேன்மையாம் வழுதியன் வேண்ட
கானகத் துறையும் பாம்புடன் புலியும்
    காணவே தூக்கிய காலைத்
தானமே மாறத் தந்திடு மீசன்
    தரணியோர் புகழ்தடா தகையாள்
ஆனன மலருக் கருக்கினே னப்பா
    ஆலவா யமருமென் னரசே.  (6)

மந்திர மாகும் நின்றிரு நீற்றை
    மதியுடன் னணிபவர் மகிழ்ந்து
சுந்தர நின்னைத் துரியமுந் துரியா
    தீதமு மாகவே துணிந்து
கந்தரந் தன்னிற் கறைதனை நிறுத்தும்
    கடவுளே களவிள ராகி
அந்தியும் பகலும் போற்றவே யருள்வாய்
    ஆலவா யமருமென் னரசே.  (7)

பழமறை தேடும் பரமனே பரவும்
    பத்தர்கட் கருளுந் தற்பரனே
தழற்பிழம் புருவாய்த் தாமரைக் கண்ணன்
    தருக்கினைத் தணித்ததோர் தருவே
கழற்றொழு துய்யக் கடையனேன் கவலை
    கொள்வதைக் கடைக்கணித் தருள்வாய்
அழலுமே யரக்கன் றன்றனக் கிரங்கும்
    ஆலவா யமருமென் னரசே.  (8)

மாணிக்க மலையே மரகதப் பிழம்பே
    மறையவர் மகிழும்நற் கொழுந்தே
காணியின் னரசி நாணவே செய்த
    காட்சியே கவுணியன் மதலை
வாயாற் சுட்டி பகர்ந்திடும் பரம
    பாண்டியன் புதல்வியென் றறிய
ஆணிமுத் துயரும் அணிகளு மீந்த
    ஆலவா யமருமென் னரசே.   (9)

வேதியாம் வேய்மாலைதான் தான்சூடும்
    வேந்தனே வீரனே விமலா
ஓதியே உந்தன் உயர்வுறும் நாமம்
    உய்யவே உறுதியாய் உணர்ந்தேன்
சோதியே சுடரே தூய்மைசேர் சுருதி
    தொடரொணாத் தோடுடைச் செவியா
ஆதியே அரசே ஆனந்த மலையே
    ஆலவா யமருமென் னரசே.  (10)

 

Related Content