logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்

மூலமும் உரையும்

முகவுரை

திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி என்னும் இச் சிறு நூல் கருவைமா நகரில் கோயில்கொண் டெழுந்தருளி யிருக்கும் சிவபெருமானைக் குறித்து அதிவீர ராமபாண்டியர் பாடியது.

அந்தாதியாவது, முன் நின்ற பாட்டின் இறுதி எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் பின் வரும் பாட்டின் முதலாக வர, ஈறும் முதலும் மண்டலித்து முடியப் பாடும் ஒருவகைப் பிரபந்தம். பண்டையத் தண்டமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தின்படி இந்நூல் ‘விருந்து’ என்னும் வனப்பமைந்த தொடர் நிலைச் செய்யுளாம். இது ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்ற செய்யுளியற் சூத்திரத்தாலும், ‘விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது’ என அதற்குப் பேராசிரியர் கூறிய உரையாலும் பெறப்படும். பிற்காலத்தார் இதனைச் சிறு காப்பியத்துள் அடக்குவர். பொருட்டொடர்பு நோக்காது, சொற்றொடர்பு ஒன்றே கொண்டு அமைந்ததாதலின் இது சொற்றொடர் நிலைச் செய்யுளாய் அடங்கும். ‘செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே’ என்பது தண்டியலங்காரம். அந்தாதி-அந்தத்தை ஆதியாக வுடையது; வேற்றுமைத் தொகைப் புராணம் பிறந்துப் அன்மொழித் தொகை; ‘அந்த+ஆதி’எனப் பிரிக்க. வடமொழித் தொடராதலின் ‘அந்தாதி’ எனத் தீர்க்க சந்தியாகப் புணர்ந்தது.

ஒரே வகைச் செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடரப் பாடுவதே பெரும்பாலும் அந்தாதி எனப்படும். நூற்றந்தாதி எனலுமுண்டு. மற்றிந் நூலோ, சந்தவேறுபாட்டால் பத்துவகையான செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடர அமைந்தது. ஆதலின் ‘பதிற்றுப்பத் தந்தாதி’ எனப்பட்டது. பதிற்றுப்பத்து என்பது ‘பத்து+இற்று+பத்து’ எனப் பிரியும்; ‘இற்று’சாரியை. பத்தாகிய பத்து என விரிதலால் பண்புத்தொகை நிலைத்தொடராகிப் பத்தினாற் பெருக்கிய பத்து எனப் பொருள்படும். திருக்கருவைச் சிவபெருமானைக் குறித்தே இந்நூலாசிரியர் கலித்துறை யந்தாதி வெண்பாவந்தாதி என வேறிரண்டு அந்தாதிகள் பாடியுள்ளமையின், அவற்றினின்றும் இதனை வேறுபடுத்தப் பதிற்றுப்பத்தந்தாதி என்றார் எனலுமாம்.

கருவை என்பது பாண்டிய நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லும் சாலையிடையே, சங்கரநயினார் கோயிலுக்கு வடக்கே சற்றேறக்குறைய காத தூரத்திலும் திருநெல்வேலிக்கு வடமேற்கே சற்றேறக்குறைய நாற்காத தூரத்திலும் உள்ள ஒரு சிவஸ்தலம். கரிவலம் வந்த நல்லூர் எனப்படும். குலசேகர பாண்டியன் வேட்டையாடச் சென்றபோது எதிர்ப்பட்ட ஒர் யானையைத் துரத்த, அது சிவாலயத்தை நாடி ஓடி, ஆண்டு எம்பெருமான் இருந்த புதரை வலம் வந்து சிவகணமாகப் பெற்றமையால் இப்பெயர் பெற்றதென்பர். தஞ்சாவூர் தஞ்சை என மருவினாற்போலக் கரிவலம் வந்த நல்லூர் என்பதுகருவை என மரூஉவாகி மேன்மை யுணர்த்தும் திரு என்னும் அடைபெற்றுத் திருக்கருவை என்றாயது.

இவ்வூரில் கோயில்கொண்டெழுந்தருளியுள்ள சிவபெருமானது திருநாமம், பால்வண்ணநாதர், திருக்களாவீசர், முகலிங்கர்.

படிகலிங்கமாதலின் பால்வண்ணநாதர் எனவும், களாமரம் தல விருட்சமாதலின் திருக்களா வீசர் எனவும், திருமுகம் விளங்கித் தோன்றும் இலிங்க வடிவமாதலின் முகலிங்கர் எனவும் பெயர் எய்தியது. இலிங்கம், அவ்வியக்த லிங்கம் எனவும், வியக்த லிங்கம் எனவும், வியக்தா வியக்த லிங்கம் எனவும் மூவகைப்படும். பீடமும் இலிங்கமுமா யிருப்பது அவ்வியக்த லிங்கம். எல்லா அவயவங்களும் வெளிப்படத் தோன்றும் மாகேசுவர வடிவங்கள் யாவும் வியக்த லிங்கங்கள். முகமும் தோள்களும் வெளிப்படத் தோன்றும் இலிங்க வடிவம் வியக்தா வியக்தலிங்கம். எனவே திருக் கருவையிற் கோயில் கொண்ட இலிங்கமூர்த்தம் வியக்தா வியக்த லிங்கமாம். அம்மை பெயர் ஒப்பனை.

ஒப்பனை யம்மையுடன் வியக்தா வியக்த லிங்கவடிவமாகத் திருக்கருவைப் பதியில் கோயில் கொண்ட சிவபெருமானைக் குறித்துப் பதிற்றுப்பத் தந்தாதி என்னும் இந் நூலைப் பாடிய அதிவீர ராம பாண்டியர் பாண்டிய வமிசத்து அரசர்களில் ஒருவர். இற்றைக்குச் சற்றேறக் குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தவர். சரித ஆராய்ச்சியால் தெரியக் கிடக்கும் பாண்டிய வமிசாவளியில் இவரே கடைசியிற் காணப்படுகிறார். பன்னூறாண்டுகளுக்கு முன்னே செந்தமிழ் வளர்த்துச் சீருஞ் சிறப்பு முற்றிருந்த பாண்டியர் ஆட்சி, இவருடைய காலத்துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னமே நிலைகுலைந்து விட்டபடியால், இவரும் இவரது முன்னோர் சிலரும் தமது தொல்லைத் தலை நகராயிருந்த மதுரையைவிட்டு, அடுத்துள்ள கொற்கை என்னும் ஊரிலிருந்து குறுநில மன்னராய் ஆட்சி செலுத்தி வந்தனர். இது, இந் நூலாசிரியர் இயற்றிய வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை என்னும் நூலின் தற்சிறப்புப் பாயிரமாகிய

‘வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்சொல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைந்தோர் குறைவிலர் தாமே’

என்பதாலும் அறியக் கிடக்கிறது. இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். உடன்பிறந்தார் இருவரும் தமிழ் மொழியிற் சிறந்த புலமை யுடையவர்கள். இவ் வந்தாதியும் இதனோ டொத்த வேறிரண்டு அந்தாதிகளும் வரதுங்க ராம பாண்டியர் இயற்றியவாகக் கூறுவாரும் உளர். அதிவீர ராம பாண்டியர் இயற்றியவை இவை என்பதே பெரும்பாலோர் கூற்று. திருக் கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக் கருவைக் கலித்துறை யந்தாதி, திருக் கருவை வெண்பா வந்தாதி, நறுந்தொகை என்னும் இந் நான்கு சிறுநூல்களை யல்லாமல் நைடதம், கூர்மபுராணம், இலிங்க புராணம், காசிகாண்டம் என்னும் நான்கு பெருநூல்களை இவர் வடமொழியிலிருந்து மொழி பெயர்த்துப் பாடியுள்ளார். இதனால் இவருக்கு வடமொழிப் புலமையும் உண்டென்பது புலனாம்.

இவர் இயற்றிய நூல்களால் இவர் நுண்ணறிவும் நிறைந்த கல்வித் தேர்ச்சியும் உடையரென்பது நன்கு விளங்குகின்றதோடு, இவருக்கு எய்திய கவித்திறம் இயற்கையின் எய்திய தொன்றென்பதும் விளங்கிக் கிடக்கிறது. ஆதலின் இவர் நுண்ணுணர்வு சிறக்க வாய்ந்தவராவர். இவர் முதன் முதல் இயற்றிய நூல் நைடதம் எனவும் இறுதியில் இயற்றிய நூல் இத் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி எனவும் கொள்ள அகச்சான்றுகள் உள்ளன. பெருக்கமஞ்சி அவற்றை விளங்க எடுத்துரைப்பதற்கில்லை. கூர்ந்து நோக்குவார்க்கு அவை நன்கு விளங்கும். கர்ண பரம்பரையாக வழங்கிவரும் அவரது வரலாறும் இக் கொள்கைக்கு இடந் தருகின்றது.

இளம்பருவத்தில் இவர் சிற்றின்ப வேட்கை மிக்கு உழன்றதாகவும், அவ்வொழுக்க மிகுதியால் தொழுநோயுற்று அது பொறுக்கலாற்றாது வருந்தித் திருக்கருவைச் சிவபிரான்மீது மேற்குறித்த அந்தாதிகள் மூன்றையும் பாடித் துதிக்க, அவ்வளவில் அந் நோய் நீங்கப் பெற்றதாகவும் கூறுவர். ‘ஆறாக் காமக் கொடிய கனல் ஐவர் மூட்ட அவல மனம் நீறாய் வெந்து கிடப்பேனை’ என வரும் இந்நூல் இரண்டாவது செய்யுளும் இன்னோரன்ன பிற செய்யுட்கள் பலவும் மேற்கூறிய வரலாற்றை வலியுறுத்தும்.

இவருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் சுவாமி நாததேவர் என்பதும், தீக்கை செய்த ஆசிரியர் அகோர சிவாசாரியார் என்பதும், தாம் இயற்றிய வேறு நூல்கள் சிலவற்றில் இவர் பாடிய குருவணக்கச் செய்யுள்களால் விளங்குகின்றன. காசிகண்டத்தில்,

திருக்கிளர்வெண் பிறைக்கொழுந்தும் செஞ்சடையும்
மறிமானும் திண்டோ ளெட்டும்
உருக்கிளர்வெம் புலியதளும் கரந்துமா
னிடவடிவின் உலகிற் போந்து

மருட்கிடனாம் எனைப்பிணித்த வல்வினையின்
தொடரனைத்தும் மாய நூறி
அருட்கடைக்க ணளித்தாண்ட சுவாமிதே
வன்திருத்தாள் அகத்துள் வைப்பாம்.

என இவர் பாடிய குருவணக்கத்தால் இவரது குருபத்தி இனைத்தென்பது புலனாம்.

இவர் இயற்றிய நூல்கள் ஒவ்வொன்றும் சொல்வளமும் பொருள்வளமும் நிரம்பித் துளும்புவனவாயினும், உருக்கத்திலும் பத்தியிலும் இப்பதிற்றுப்பத்தந்தாதியே தலைசிறந்து நிற்கிறது. உள்ளத்தை உருக்கி உணர்வைக் கவர்வதில் ஒப்புயர்வற்ற திப்பிய நூலென ஆன்றோர் அனைவரும். உவந்து கொண்டாடும் திருவாசகம் என்னும் அரிய பெரிய அருள் நூலோடு இச் சிறு நூலை ஒப்பிட்டு, இதனைக் குட்டித் திருவாசகம் என வழங்கும் வழக்கொன்றே இதன் அருமையைப் புலப்படுத்தும்.

இந்நூலுக்கு யான் எழுதிய இவ்வுரையில், என் ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்களின் கடைக் கணிப்பின் வலத்தாலும், அறிவுக்கறிவாய் உயிர்தோறும் உண்ணின்று அறிவிக்கும் சிவபெருமானது திருவருட் சாயலாலும் ஆண்டாண்டு, ஒரு சில நலங்கள் தோன்றக் கிடக்கும் என்னும் துணிவுடையேன். பாசவயப்பட்டுழலும் சிற்றறிவினேனது அறியாமையால் பிழைகள் சிலவும் அவ் வொருசில நலங்களுடன் கலந்து பரந்து கிடத்தல் இயலும். ஆதலின், அறிவானான்ற பெரியோர் ‘குணம்நாடிக் குற்றம்நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க’ கொள்ளுமாறு வேண்டுகின்றேன். சிவபெருமான் திருவடி வாழ்க.

- நாகை-சொ. தண்டபாணிப்பிள்ளை


சிவமயம்

--------------------------------------------------------------

காப்பு

ஆன கருவைப் பதிற்றுப்பத்
தந்தா திச்சொல் அலங்கல்முற்றும்
ஞான உருவாம் களவீசன்
நளின சரண மிசைச்சாத்தத்
தான அருவி பொழி தடக்கைத்
தறுகட் சிறுகட் புகர்முகத்துக்
கூனல் இளவெண் பிறைக்கோட்டுக்
குணகுஞ் சரத்தின் அடிதொழுவாம்.

  இதன் பொருள்: திருமேனி முற்றும் ஞானவடிவாம் களவீசனது தாமரைமலர்போன்ற திருவடிமீது திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதியான சொல்மாலையைச் சாத்த, மதத்தை அருவிபோலச் சொரியும் நீண்ட துதிக்கையையும், அஞ்சாமையையும், சிறிய கண்களையும், புள்ளிவாய்ந்த முகத்தையும் வளைந்த இளமையான வெள்ளிய பிறைபோன்ற தந்தங்களையும் உடைய குணவிநாயகருடைய திருவடிகளை வணங்குவாம்.

அந்தாதி ஆன எனக் கூட்டுக.

  அலங்கல்-மாலை, களவீசன்-(திருக்கருவையில்) களாமரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். நளினம் - தாமரை. தானம் - மதம். தடம் - பெருமை (ஈண்டு நீளப் பெருமை). தறு கண் - அஞ்சாமை. புகர் - (யானை முகத்தில் உள்ள) புள்ளிகள். கூனல் - வளைவு. குஞ்சரம் - யானை.

  ஆன - இறந்தகாலப் பெயரெச்சம். நளினசரணம், குண குஞ்சரம் - என்பன வடமொழித் தொடராதலின் இயல்பாய்ப் புணர்ந்தன. பிறை - தொழிலாகு பெயர்; பிற-பகுதி, ஐ-விகுதி, அகரக்கேடு சந்தி.

  யானை முகத்தராதலால் விநாயகரைக் ‘குஞ்சரம்’ என்றார். ஈறும் முதலும் ஒன்றி மண்டலித்து மாலைபோல முடிதலின் ‘அந்தாதியான சொல்லலங்கல்’ என்றார். அந்தாதியாகத் தொடராவிடத்தும் சொற்களின் தொடர்ச்சியை மாலை என்றல் மரபு: சொன்மாலை பயில்கின்ற 'குயிலினங்காள்’ என வருதல் காண்க.

  குணவிநாயகர் என்பது திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் விநாயகரது சிறப்புப் பெயர்போலும்: அன்றேல் அருட்குண முடையரான விநாயகர் என்று கொள்க.

  எடுத்த நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு முதற்கண் விநாயகவணக்கம் கூறுதல் மரபாதலால், அம் மரபே பற்றி ஈண்டு விநாயகவணக்கம் கூறப்பட்டது. தம்மை முன் நிறுத்தி வழிபட்டு ஒரு கருமஞ் செய்யப் புகுவோர்க்கு அக் கருமத்தில் நேரிடக்கூடிய விக்கினங்களை நீக்கும் காரணம்பற்றி விநாயககர்க்கு ‘விக்கின விநாயகர்’ என்று பெயர் வழங்குதலும் காண்க. விக்கினம்=இடையூறு.

  விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறும், நூலின் அகத்து ஆண்டாண்டுச் சுட்டப்படும் பிற வரலாறுகள் பலவும் தொகுப்பாக நூலிறுதியில் புறனடையாகச் சேர்க்கப்பட்டுள்ளன ; கண்டு கொள்க. புறனடை - அனுபந்தம்.

நூல்

முதற்பத்து

மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களாகவும்
மற்றைய நான்கும் மாச்சீர்களாகவும் வந்த

அறுசீர் ஆசிரிய விருத்தம்

1. சீரார் கமலச் சேவடி என்
சிந்தை இருத்தி, உனதுதிருப்
பேர்ஆ யிரமும் எடுத்தோதிப்
‘பெம்மான்! கருவை எம்மான்!’ என்(று)
ஆரா அமுதம் உண்டவர்போல்
அனந்தா னந்தத் தகம்நெகிழ
ஆரா இன்பம் அறிவித்தாய் :
அறியேன் இதற்கோர் வரலாறே.

(உனது) அழகமைந்த தாமரைபோன்ற செவ்விய திருவடிகளை என் உள்ளத்தில் பதித்து, உனது ஆயிரம் திருநாமங்களையும் எடுத்துக் கூறி, ‘பெருமானே ! திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் எமது இறைவனே!’ என்று துதித்து, தெவிட்டாத அமுதம் உண்டவர்போல அளவில்லாத ஆனந்தத்திலே உள்ளமானது உருகித் தோய, (யான் இதுகாறும்) அனுபவித்தறியாத இன்ப நிலையை எனக்குக் காட்டி யருளினாய். இவ்வருட்செயலுக்கு ஆனதொரு காரணம் யாதோ, அறியேன்!

அந்தம் - முடிவு ; அனந்தம் - முடிவில்லாதது ; அநந்த ஆனந்தம் - முடிவில்லாத இன்பம் ; அஃதாவது பேரின்பம், வரல்ஆறு - வருதற்கானவழி ; அஃதாவது காரணம். பேரின்பத்தில் உள்ளம் உருகுதலாவது, தான் என்னும் தன்மைகெட்டு இன்பமயமாய்நிற்பது, ஆர்தல் - நிறைதல் - தெவிட்டுதல். ஆரா இன்பமாவது அனுபவியாத இன்பம் ; இங்கே ஆர்தல் - அனுபவித்தல். தன் அனுபவத்துட் படாத ஒன்றைப் பிறர் அறிவிக்க அறிந்து அனுபவித்தல் இயல்பாதலின் ‘ஆராவின்பம் அறிவித்தாய்’ என்றார். ‘பேரின்பநிலையை எனக்கு நீ அறிவித்தது எனது முற்பவ நல்வினைப் பயனாலோ, அன்றி நினது பேரருட் பெருக்கத்தாலோ அறியேன்’ என்பார் ‘வரலாறு அறியேன்’ என்றார். ‘வாரா இன்பம்’ எனக்கொண்டு பொருளுரைப்பது முண்டு. மோனையின்பமும் பொருட்சிறப்பும் நோக்கி ஏற்றவாறு கொள்க.

  தொடக்கத்தில் மங்கலமொழி வகுத்துக் கூறும் மரபுபற்றி இந் நூலும் ‘சீர்’ என்னும் மங்கலமொழியால் தொடங்கப்பட்டுள்ளது.  (1)

2. ஆறாக் காமக் கொடியகனல்
ஐவர் மூட்ட அவலமனம்
நீறாய் வெந்து கிடப்மேனை,
நின்தாள் வழுத்த நினைவுதந்து
மாறா நேயத் திரவுபகல்
மறவா திருக்க வரமளித்தாய் ;
சீறா டரவம் முடித்தசடைக்
கருவை வாழும் செழுஞ்சுடரே !

  சீறி ஆடும் பாம்பினைத் தரித்த சடையையுடைய, திருக்குரவையில் எழுந்தருளி யிருக்கும், நிறைந்த ஒளிப் பிழம்பே ! என்றும் அவியாத காமமாகிய கொடிய நெருப்பை ஐம்புலன்களும் வளர்க்க, கேடுற்ற மனம் (அதனால்) நீறாகும்படி வெந்துகிடக்கும் எனக்கு, உனது திருவடிகளைத் துதிக்க நினைவு கொடுத்து, மாறுபடாத உனது திருவருளாலே, (உனது திருவடிகளை வழுத்தும் செயலையான்) இரவும் பகலும் மறவா திருக்க வரமும் கொடுத்தருளினை.

  ‘உனது பேரருளை என்னென்பது !’ என இசை யெச்சம் கொள்க.

  அவலம் - கேடு. நேயம் - அருள். சீறு ஆடு அரவம் என்னும் மும்மொழிகள் புணர்ந்து சீறாடரவம் என்றாயின. ‘ கிடப்பேனுக்கு ’ எனற்பாலது ‘ கிடப்பேனை ’ என்றாயது உருபுமயக்கம்.

  உடல் உள்ளளவும் உடனிருந்து உடலையும் உணர்வையும் அழிக்கும் இயல்பிற்றாதலால் காமத்தை ‘ஆறாக் கொடிய கனல்’ என்றார். ஐவர் என்னும் சொல் காமத்தீயை மூட்டுவதாகிய குறிப்பால், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புலன்களை உணர்த்தியது. ‘கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் - ஒண்டொடி கண்ணே யுள’ வாதலால், ஐம்புலனும் ஒருங்கே நின்று மூட்டுதற் கிடமாவது காமமேயாதல் உணர்க. ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்றாற்போல ‘உனதருளாலே உள்தாள்வழுத்த மறவாதிருக்கின்றேன்’ என்பார், ‘மாறாநேயத் திரவுபகல் மறவாதிருக்க வரம் அளித்தாய்’ என்றார்.

நினைவு தந்ததேயன்றி அதை மறவாதிருக்க வரமும் தந்தாய் என இறந்தது தழீஇய எச்சஉம்மை வருவித்துக் கொள்க.  (2)

3. சுடரே ! வலியத் தடுத்தாண்ட
துணையே ! பிறவித் தொடுகுழிவீழ்
இடரே யகலக் களாநீழல்
இருந்த கோவே ! எம்பெருமான் !
உடலே ஓம்பித் திரியும்எனை
உன்னை நினைக்கப் பணித்த அருட்
கடலே! உனையன் றொருதெய்வம்
காண வழுத்தக் கடவேனோ ?

  ஒளிப்பிழம்பே! வலிய அருள்செய்து என்னைத் தடுத்தாட்கொண்ட என் உயிர்த்துணையே! (அவாவினால்) தோண்டப்படும் பிறவிக்குழியில் விழுந்து வருந்தும் வருத்தம் அகன்று (யான் உய்யும் நிமித்தமாகத்) திருக்களா நீழலில் எழுந்தருளிய இறைவனே! எமது பெருமானே! (அழியும்) உடலை (ஒருபொருளாகக் கருதிப்) பாதுகாத்துத் திரியும் என்னை உன்னை நினைந்துய்யுமாறு ஏவிய கருணைக்கடலே, உன்னையன்றி வேறொரு தெய்வத்தை யான் காணவேனும் கருதவேனும் கடவேனோ? (கடவேனல்லேன்.)

  ‘பிறவித் தொடுகுழிவீழ் இடரே யகல வலியத் தடுத்தாண்ட துணையே!’ எனக் கொண்டு கூட்டிப் பொருள் உரைப்பினும் பொருந்தும்.

  நகுதக்கனரே’ என்னும் புறப்பாட்டில் (72) ‘அகப்படேனாயின்’ என்னும் தன்வினை ‘அகப்படுத்தேனாயின்’ என்னும் பிறவினைப் பொருளில் வந்தாற்போல ஈண்டும் ‘அகல’ என்னும் தன் வினை ‘அகற்ற’ என்னும் பிறவினைப் பொருளில் வந்ததெனக் கொள்ளினும் எச்சச் சொற்கள் வேண்டாது பொருள் நேரே சென்று இயையும். இவ்வாறு கொள்ளினும் கொள்க.

  ‘தொடுதல்-தோண்டுதல் ; ‘ தொட்டனைத்தூறும் மணற்கேணி’ என வருவது காண்க. ‘தொடுகுழி’ என்பதற்குத் ‘தோண்டப்பட்ட கடல்’ என்று பொருள் உரைப்பாரும் உளர் ; சகரரால் தோண்டப்பட்டது என்பது கருதிப்போலும். குழி என்னும் சொல் கடல் என்னும் அப்பொருட்கு இயையாதாதல் உணர்க.

  அவா என்னும் பாரையால் வினை என்னும் நிலத்தைத் தோண்ட உண்டாம் குழி பிறவிக்குழியாகக் கொள்க. கொள்ளவே, தான் தோண்டிய குழியில் தானே விழுதல்போலத் தனது வினைப்பிறவிக் குழியில் தானே விழ, அறியாமை என்னும் மண்

தன்மீது சரிந்து விழுந்து தன்னை ஆணவம் என்னும் அந்தகாரத் துக்குள்ளாக்கும். ஆக்க, அவ்வந்தகாரத்தால் மீளும் வழி அறியாது துன்புற்றுத் தடுமாறும். அவ்வாறு தடுமாறுவதைத் தடுப்பதற்கும், ஒருகால் தவறி வீழினும் வெளியெடுப்பதற்கும் தமது பேரருட்பெருக்கத்தால் அருகு வந்திருக்கும் பெற்றிமை நோக்கி, ‘இடரே அகலக் களாநீழல் இருந்த கோவே’ என்றார்.

  ஓம்புதல்-காப்பாற்றுதல். புறத்தே சென்று ஒழுகிய என் உணர்வை அகத்தே மடங்கிச் செறியுமாறு செய்தனை என்பார் ‘உடலே ஓம்பித் திரியும்எனை உன்னை நினைக்கப் பணித்தாய்’ என்றார்.

  அன்பாறாகப் பத்தர்கள் வந்து தன்னொடு கலந்து தன்னில் ஒடுங்குவதற் கிடமாதல் கருதியும், அளவிடுதற்காகப் பெருமையுடைத்தாதல் பற்றியும் ‘அருட்கடல்’ என்றார்.

  ‘அன்றி’ என்னும் வினையெச்சத்தின் இகரம் உகரமாகத் திரிந்தது செய்யுள் விகாரம்.  (3)

4. வேனிற் சிலைவேள் தொடுகணைக்கும்
விளங்கும் மகளிர் உளம்கவற்றும்
பானற் கொடிய விழிவலைக்கும்
பற்றாய் வருந்தி, அனுதினமும்
ஈனத் துயரக் கடல் அழுந்தும்
எனையும் பொருளா அடிமைகொண்ட
ஞானத் துருவே! தமிழ்க்கருவை
நம்பா ! பொதுவில் நடித்தோனே !

  வேனிற் காலத்துக்கும் (கரும்பு) வில்லுக்கும் உரியவனான மன்மதன் எய்யும் (காமக்) கணைக்கும், (அழகால்) விளங்கும் மங்கையர்கள் மனத்தைச் சுழற்றித் (தம் வசப்படுத்தவல்ல) நீலோற்பலம்போன்ற கொடிய கண்களாகிய வலைக்கும் இலக்காகி வருந்தி, இழிவாகிய துன்பக் கடலில்நாள்தோறும் அழுந்திக்கிடக்கும் என்னையும் ஒரு பொருளாகக் கருதி ஆட்கொண்ட ஞானவடிவனே! தமிழ் வழங்கும் திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் இறைவனே! சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரிபவனே ! (உன் பெருங்கருணைத் திறத்தை என்னென்பேன் !)

  வேனிற்காலம் மன்மதனுக்கு உரியதாதல்பற்றி, அவற்கு ‘வேனிலாளி’ ‘வேனிலான்’ எனப் பெயர் வழங்கும். சிலை-வில். வேள்-மன்மதன். தொடுதல்-எய்தல். கணை-அம்பு. கவற்சி-கவலை-மனச்சுழற்சி ; கவி, கவர், கவண் முதலிய மொழிகளை இதனோடு ஒட்டி நோக்குக. பானல்-நீலோற்பலம்.

  காமம் முதலிய இழிகுண வசத்தால் உண்டாம் துயராதலின் 'ஈனத் துயரக் கடல்’ என்றார். ‘எனையும்’ என்றதில் உம்மை இழிவு குறிப்பது. (4)

5. நடித்தேன் பொய்க்கூ(டு) எடுத்(து), அவமே
நன்னாள் கழிய ; இந்நாளில்
படித்தேன் உனது திருநாமம் ;
பண்டை வினையின் பற்றறுத்தேன் ;
பிடித்தேன் பிறவிக் கடல்நீந்தப்
பெரிய புணையா உனதடியை ;
முடித்தேன் உள்ளத்(து) எண்ணமெல்லாம் :
கருவை வாழும் முன்னோனே !

  திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் முதல்வனே, பொய்யான இச்சரீரத்தை எடுத்து நல்ல நாட்கள் யாவும் வீணே கழிய (மெய்ந்நிலையில் நிற்காது, பொய்யாக) நடித்து ஒழித்தேன், (இளமை கழிந்த) இக் காலத்தில் தான் உனது திருநாமங்களை ஓதினேன் ; (அதனால்) எனது பழவினையின் தொடர்பை விலக்கினேன் ; பிறவியாகியகடலை நீந்தி முத்திக்கரை சேர்வதற்கு உனது திருவடிகளை ஒரு பெரிய தெப்பமாகக்கொண்டேன் ; (இவ்வாற்றான்) என் உள்ளக் கருத்தனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன். (இனி எனக்கென்ன குறை ? ஒன்றுமில்லை.)

நடித்தல்-பொய்யாக ஒன்றைச் செய்தல்-போலிச் செய்கை ; ‘நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து’ என்ற திருவாதவூரடிகள் திருவாக்கைக் காண்க. கூடு-உள்ளீடில்லாதது. அவம்-வீண். ‘நன்னாள்’ என்றது இளமைப் பருவத்தை. பண்டை வினையாவது சஞ்சிதவினை ; அநாதியே பறறிய பாசம் எனினும் அமையும்: 'பாசவே ரறுத்த பழம்பொருளே’ என்றார் பிறரும்.

பாசத்தோடுபட்டு நிற்றலும் பாசமகலப் பதியோடொன்றி நிற்றலு மல்லது தனித்து நிற்கும் ஆற்றலுடையதன்று ஆன்மா ஆதலால், வினைப்பற்றறுத்தவுடனே ‘உனதடியைப் பிடித்தேன்’ என்றார். நெடுங்கடலைப் பெரும்புணை கொண்டன்றிக் கடத்தல் ஆகாதாகலின், பெரும்பிறவிக் கடல்கடக்க நினதடியினும் பெரிய புணை வேறில்லை யென்றறிந்து ‘ பெரிய புணையா உனதடியை ’ என்றும், பெரும்புணையைப் பற்றினார்க்குக் கரை சேர்வது குறித்து ஐயமும் அச்சமும் உளவாகாவாதலால் தாம் விரும்பியவாறு முத்திக்கரை சேர்வதில் துணிவும் அத்துணிவுபற்றி யெழுந்த மகிழ்ச்சியும் தோன்ற ‘முடித்தேன் உள்ளத் தெண்ணமெல்லாம்’ என்றும் கூறினார். சொல்லளவில் ‘ ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணுடையேன்’ என்பார் போல ‘நடித்தேன்’ எனத் தொடங்கி முடிவில் என் ‘எண்ணமெல்லா முடித்தேன்’ என்றார். ‘திருநாமம் படிக்கப் பண்டைவினை ஒழிந்தது ; வினையொழியப் பிறப்பொழிந்தது, பிறப்பொழிய முத்திநிலை கிட்டியது’ எனக் காரண காரியத் தொடர்ச்சி பெறப்படுதலின் காரணமாலை அணி கொள்ளக் கிடக்கும். புணை-தெப்பம்.

சிவபெருமானை ‘முன்னோன்’ என்றார் ‘முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள்’ ஆதல்பற்றி. (5)

6. முன்னைப் பிறவித் தவப்பயனோ !
முழுதும் அறியா மூடனிவன்
என்னக் கருத்தில் எண்ணியோ !
யாதோ அறியேன், இரவுபகல்
கன்னற் பாகிற் கோற்றேனிற்
கனியிற் கனிந்த கவிபாட
அன்னத் தொகுதி வயற்கருவை
ஆண்டான் என்னை ஆண்டதுவே.

இரவினும் பகலினும் கருப்பஞ் சாற்றின் பாகைப் போலவும், கொம்புத் தேனைப்போலவும், முக்கனியைப் போலவும், சுவைகனிந்த பாடலைப்பாட அன்னக்கூட்டங்கள் வசிக்கும் வயல்சூழ்ந்த கருவாபுரியாளி என்னை அடிமை கொண்டது, முற் பிறவியிற்செய்த தவப்பயனோ! சிறிதும் அறியாத மூடன் இவன் (ஆதலால் இவனுக்கு அருள் செய்வோம்) என்று திருவுளத்திற் கருதியோ ! யாது காரணமோ அறியேன்.

கன்னல்-கரும்பு. கோல்தேன்-கொம்புத்தேன். தொகுதி-கூட்டம்.

‘கவிபாடித் தன்னைத் துதிக்கும் உணர்வைக் கொடுத்துக் கருவாபுரியான் என்னை ஆண்டான்’ என்பதால் கவிபாடும் திறமும் முத்திப்பேறும் தமக்குக் கிட்டியமை கூறினார். கவிபாடும் திறம் கல்வியறிவாற் சித்திப்பது ; முத்திப்பேறு தவத்தாற் சித்திப்பது. ஆனால் எவ்வறிவு மில்லாத மூடன் யான்; இப்பிறப்பில் யான்செய்த தவம் ஏதுமில்லை. ஆதலால், எனக்கு நீ இவ்விரண்டையும் தந்தது-‘முன்னைப் பிறவித் தவப்பயனோ ? முழுது மறியா மூடனிவன் என்னக் கருத்தில் எண்ணியோ ? யாதோ அறியேன்’ என்றார்.

(கன்னற்) பாகு-காய்ச்சப் பெறுவது; அதுபோல்வது ஆராய்ச்சியால் வந்த அறிவு. (கோல்) தேன்-பல மலர்களினின் றெடுத்துத் திரட்டி வைக்கப்படுவது ; அதுபோல்வது பல நூல்களைக் கற்றும்கேட்டும் வந்த அறிவு. கனி-காலமுதிர்ச்சி யான் முதிரப் பெறுவது ; அது போல்வது அனுபவ முதிர்ச்சியான் வந்த அறிவு. இந்த மூவகை அறிவாலும் பிறந்த கவி பெரிதும் சுவையுடையதாம். அவ் வகைச் சுவைசான்ற பாடல் என்பது தோன்றக் ‘ கன்னற்பாகிற் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவி’ என்றார்.

பாலோடுகூடிய நீரைப் பிரித்துப் பாலைத் தன்னுட்கொள்ளும் அன்னம்போலப், பசுவோடுகூடிய பாசத்தைநீக்கிப் பசுவைத் தன்னடியிற்சேர்க்கும் பதி என்பது தோன்ற ‘அன்னத்தொகுதி வயற்கருவை ஆண்டான்’ என்றார்.

ஓகாரம் ஐயப்பொருளன. இன் உருபு ஒப்புப்பொருட்டு.  (6)

7. ஆண்ட குரவன் ஆவானை,
அல்லற் பிறவி அறுப்பானை,
வேண்டும் பதவி தருவானை,
வெளிவீட் டின்பம் அளிப்பானைத்,
தூண்டல் செய்யா மணிவிளக்கைத்,
தொழில்மூன் றியற்றும் தொல்லோனைக்,
காண்டற்(கு) அரிய பேரொளியைக்
களாவின் நிழற்கீழ்க் கண்டேனே.

அருட்கண்ணா லடிமை கொண்ட ஞானாசாரியனாயுள்ளவனை, துன்பந்தரும் பிறப்பினை வேரோடு அறுக்கின்றவனை, அடியார் வேண்டும் பதவிகளைத் தருகின்றவனை, மோட்ச வின்பத்தைத் தருகின்றவனை, தூண்டாத மாணிக்க தீபத்தை, சிருஷ்டி முதலிய முத்தொழிலையுஞ் செய்யும் பழையோனை, காணுதற் கரிய பெரிய ஒளிப்பிழம்பாயுள்ளவனை, களாவின் நிழலின்கீழ்த் தரிசித்தேன்.

குரவன்-குரு. அல்லல்-துன்பம். தூண்டல்செய்யா-தூண்டா. தொல்-பழைய.

சிவபெருமானே குருவுருவாய் எழுந்தருளிப் பக்குவான்மாக்கட்கு அருள்செய்வான் என்பது நூற்றுணிபாகலான் ‘ஆண்டகுரவனாவானை’ என்றார். ‘ மான்காட்டி மானையீர்க்குங் கொள்கையென அருள்மௌன குருவாய் வந்து’ என்னும் தாயுமான சுவாமிகள் திருவாக்கையுங் காண்க. ஆட்கொள்ளுதலால் ஆம் பயன் பிறவியறுதல் ; பிறவியறுதலால் ஆம் பயன் சாலோகமுதலிய பதவிகளைப் பெறுதல் ; அதற்கு மேற்பட்டது. வெளிவீட்டின்பமான முத்திநிலை என்பதுணர்க. தொழில் மூன்றாவன ஆக்கல், அளித்தல், அழித்தல். தொல்லோன்-ஆதியற்றபழம்பொருளா யிருப்பவன். ‘ முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம் பொருளே ’ என்றார் திருவாதவூரடிகள்.  (7)

8. கண்ட கண்கள் புனல்பாயக்,
களிப்பாய் உள்ளம் கரையழிய,
விண்ட மொழியின் நாக்குழற,
விம்மி மேனி மயிர்பொடிப்பப்,
பண்டை வசம்போய்ப் பரவசமாய்ப்
பரமா னந்தத் தெளிநறவம்
உண்டு தெவிட்டா அருள்புரிந்தான்
கருவை வாழும் உரவோனே.

தரிசித்த கண்கள் ஆனந்த பாஷ்பஞ் சிந்தவும், ஆனந்தக் களிப்பிலழுந்தி மனம் வரம்பிகந் தோடவும், துதிக்கும் மொழியொடு நாத் தடுமாறவும், மேனி பூரித்துப் புளகரும்பவும், முன்னுள்ள தன் வசம்போய்ப் பரவசப்பட்டுச் சிவானந்தமாகிய தெளிந்த நறவினை வாய்மடுத்துத் தெவிட்டாதிருக்கத் திருக்கருவையில் வாழும் ஞான மூர்த்தி திருவருள் செய்தான்.

புனல்-நீர். விள்ளுதல்-சொல்லுதல். பண்டை-பழைய. நறவம்-தேன், கள். உரம்-ஞானம்.

கண்களில் நீர் சுரத்தலும், மனம் கரைகடந்த மகிழ்ச்சியுறுதலும், நாக்குழறுதலும், மெய் சிலிர்த்தலும், தன்வசம் அழிதலும் கள்ளுண்டார்க்கும் பக்தி மிகுந்தார்க்கும் ஒப்ப நிகழும் குறிகளாதல் உணர்க மற்றுக் கள்ளால் வரும் இன்பம் சிற்றின்பம் ; மயக்கந் தருவது ; தெவிட்டுவது : பக்தியால் வரும் இன்பமோ பேரின்பம் ; தெளிவைத் தருவது ; தெவிட்டாதது. ஆனதுபற்றிப் ‘பரமானந்தத் தெளிநறவம் உண்டு தெவிட்டா அருள்புரிந்தான்’ என்றார்.  (8)

9. உரகா பரணத் திருமார்பும்,
உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும், புரிசடையும்,
செய்ய வாயும், கறைமிடறும்,
வரதா பயமும் மழுமானும்
வயங்கு கரமும், மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக்
காட்சி கொடுத்து நின்றானே.

சர்ப்பாபரணத்தை யணிந்த திருமார்பும், உமையம்மையாகிய ஒப்பனாம்பிகையின் இடப்பாகமும், பிரம கபாலங்களாற் றொடுத்த மாலையும், புரியையொத்த சடையும், சிவந்தவாயும், நீலகண்டமும், (அன்பர்க்கு) வரமும் அபயமும் அளிக்கும் சின்னமும் மழுவும் மானும் விளங்குந் திருக்கரங்களும், தாமரை மலர்போன்ற திருவடியும் ஆகிய இவற்றோடு திருக்கருவையில் எழுந்தருளிய இறைவன், காட்சி கொடுத்து நின்றருளினன்.

உரகம்-பாம்பு. ஒப்பனை-அலங்காரம் ; இஃது இயற்கை அலங்கார சொரூபியான உமையம்மைக்குப் பெயராயிற்று. சிரமாலிகை-தலைமாலை. மாலிகா என்னும் வடசொல் மாலிகையெனத் தற்பவமாயிற்று.

மேற்செய்யுளில், ஞானமே திருவுருவான சிவபெருமான் தமக்கு அருள்புரிந்ததைக் கூறினார். அவ்வருளே சத்தியாகப் பாகத்தே அமரநின்ற உமாமகேஸ்வரத் திருக்கோலச் சிறப்பை ஈண்டுக் கூறினார். ஆன்மாக்களை அறியாமையினின்று நீக்கி முத்தியின்பத்திற் சேர்ப்பது சத்தியோடுகூடிய சிவமேயாம். இதனை,

அருளது சத்தி யாகும் அரன்றனக்(கு); அருளை யின்றித்
தெருள்சிவ மில்லை ; அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை ;
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் முத்தி
இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்.

என்னும் சிவஞானசித்தித் திருவாக்கு இனிது விளக்குதல் காண்க.

வரதாஸ்தம் கீழமைந்த திருக்கரம்; அஃது அடியார் வேண்டிய தருளுவது. அபயாஸ்தம் மேலெடுத்த திருக்கரம்; அது சரணமடைந்தவரை அஞ்சலிரென்றருளுவது. மழுவேந்திய திருக்கரம் வலக்கரம்; மானேந்திய திருக்கரம் இடக்கரம். உரக ஆபணரம் - உரகாபரணம்; வரத அபயம்-வரதாபயம்: வடமொழியில் வந்த தீர்க்கசந்தி.  (9)

10. நின்ற நிலையும், செய்தொழிலும்,
நினைத்த குறியும், வழிபாடும்,
ஒன்று பதமும், பதங்கடந்த
உண்மைப் பொருளும் அறியேனை
இன்றும் அடியா ருடன்கூட
எண்ணம் புரிந்த இனிய அருள்
நன்று நன்று ! தமிழ்க்கருவை
நம்பா! உம்பர் நாயகனே!

செந்தமிழ் வழங்கும் திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனே! தேவர்களுக்குத் தலைவனே! யான் நிற்கின்ற நிலை இன்னதென்பதையும், (யான்) செய்கின்ற செயல்களையும், அவ்வச் செயல்களில் நின்று கருதும் மூர்த்திகளையும், அம் மூர்த்திகளுக்குச் செய்யும் வழிபாட்டையும், அவ் வழிபாட்டாற் கைகூடும் பதவிகளையும், அப்பதவிகளைக் கடந்துநின்ற முத்தியையும் சிறிதுமறியாத என்னை இப்போது உன் அடியாரோடு கூடி வாழத் தேவரீர் திருவுளத்து எண்ணங்கொண்டருளிய திருவருள் நன்றாயிருந்தது நன்றாயிருந்தது.

குறி-மூர்த்தம். ஒன்றுபதம்-பொருந்தும் பதம். எண்ணம் புரிந்த-எண்ணிய. நம்பன்-இறைவன். உம்பர்-உவ்வுலகம்-வானுலகம்; இது இடவாகுபெயராய் வானுலகத்துள்ள தேவரைக் குறித்தது. ‘உம்பரா ரறியா மறையோன்’ என்றார் திருச்சிற்றம்பலக் கோவையாரினும்.

நின்ற நினைத்த என்பன, நிற்கின்ற நினைக்கும் எனப் பொருள்பட்டு, முறையே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டின.  (10)

இரண்டாம்பத்து

இரண்டாஞ் சீரும் நான்காஞ் சீரும் இறுதிச் சீரும்
மாச்சீர்களாகவும் மற்றைய விளச்சீர்களாகவும் வந்த

எழுசீர் ஆசிரிய விருத்தம்.

11. நாயகன் முகுந்தன் சததளப் பொகுட்டில்
நான்முகன் என்னவீற் றிருக்குந்
தூயவன், கருவைக் களாநிழல் அமர்ந்தோன்
துணையடிப் புகழினை வழுத்தி,
மாயிரு ஞாலம் எடுத் தேத்த
வரம்பெறு மதுரநா வலர்கள்
சேயிரு விசும்பிற் கற்பக நீழற்
செல்வமும் வேண்டுவ திலையே.

இறைவனாகிய உருத்திரனும் திருமாலும் நூறு தளங்களையுடைய தாமரைப் பொகுட்டில் வசிக்கும் பிரமனும் என்று கூற நிகரின்றியிருக்கும் விசுத்ததேகமுடையவனாகிய, திருக்களா நிழலின்கண் எழுந்தருளியிருக்கின்ற, இறைவனுடைய இரண்டு திருவடிப் புகழ்ச்சியைக் கூறிப், பெரிய நிலவுலகிலுள்ளோர் (தம்மைப்) பெரிதும் புகழ(த்தக்க நா வன்மை சித்திக்குமாறு) வரம்பெற்ற, இனிய கவிதொடுக்கும் நாவல்லோர், மிகவும் உயர்ந்த விண்ணுலகில், கற்பக நீழலில் வசிக்கும் இந்திர செல்வத்தையும், வேண்டார்.

நாயகன்-இறைவன், தலைவன். முகுந்தன்-திருமால். சததளப் பொகுட்டு-நூறு இதழ்களையுடைய தாமரை மலர்ப் பொகுட்டு : சதம்-நூறு ; தளம்-இதழ். தாமரைமலர் என்பது குறிப்பெச்சம். தூயவன்-பரிசுத்தன். துணை-இரண்டு. வழுத்தி-துதித்து. மாஇரும்-மிகவும் பெரிய. ஞாலம்-பூமி. சேய் இரு-மிகவும் உயர்ந்த. விசும்பு-வான்உலகு.

உருத்திரனை நாயகன்என்றார் தலைமைதோன்ற. ‘தேன்முகம்’ என வரும் செய்யுட்டொடரில் தாயுமான சுவாமிகள்

கண்டன அல்ல என்றே கழித்திடு மிறுதிக் கண்ணே
கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி யத்தாற்
பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே:
வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன்

விளங்கவெண் ணீறு பூசி விரிசடைக் கங்கை தாங்கித்
துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக்
களங்கமில் உருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி
வளர்ந்ததாள் என்ன உள்ளம் மன்றென மறையொன் றின்றி

மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள்
முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும்  
குறைவிலா வணம்நி றைந்து கோதிலா நடனம் செய்வான்
இறையவ னெனலாம் யார்க்கும் இதயசம் மதம்ஈ தல்லால்-

என்றருளிச்செய்த செய்யுட்கள் ஈண்டு நோக்கத்தக்கன.

சதம் என்பது ஈண்டு எண் மிகுதியை உணர்த்தியது. ‘இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை-உயிர்வழி வவ்வும்’ உடம்படு மெய்யாதலே பொதுவிதியாயினும், மா என்பது உரிச்சொல்லாதலால் ‘இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும்’ என்னும் புறனடையால் ‘மாயிரு ஞாலம்’ என யகர உடம்படு மெய் பெற்றது. ஈற்றேகாரம் தேற்றம். (11)

12. வேண்டுவ தொன்று: தமியன், எப் பிறப்பும்
வெந்தழல் நரகிடை விழினும்
காண்டகு சிறப்பின் அரம்பையர் சூழக்
கற்பக நீழல் வைகிடினும்,
தூண்டரு சுடரே! களாநிழல் அமர்ந்த
சோதியே! கருவைநா யகனே!
ஆண்டகாய்! நினது திருவடிக் கமலத்(து)
அன்பெனும் அழிவிலாப் பொருளே.

தூண்டாத (தீபம்போலும் நின்று மலவிருளையோட்டும்) விளக்கே ! களாமரத்தின்கீழ் எழுந்தருளிய (ஞான) ஒளியே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே ! ஆண்தன்மையிற் சிறந்தவனே! ஒரு பற்றுக்கோ டில்லாத அடியேன் (நின்பால்) வேண்டுவ தொன்றுளது: (அது யாதென்னில்) எந்தப் பிறவி யெடுத்தாலும், கொடிய தீயமைந்த நரகத்தில் விழுந்தாலும், கண்டு மகிழத்தக்க சிறப்பு வாய்ந்த தெய்வப் பெண்கள் சூழ்ந்து நிற்கக் கற்பகநிழற் கீழ் (இன்பவாழ்க்கையில்) இருக்கப்பெற்றாலும்

உனது திருவடித் தாமரையின்கீழ் வைக்கும் அன்பென்று சொல்லப்பட்ட அழிவில்லாத பொருளே.

வெம்தழல்-கொடிய நெருப்பு. காண்தகு-காணத் தகுந்த சிறப்பு வாய்ந்த. ஆண்தகாய்-(ஆன்மகோடிகளை) ஆண்டருளும் பெருமை வாய்ந்தவனே; தகை-பெருமை.

காண்+தகு=காண்டகு. ஆண்+தகாய்=ஆண்டகாய். ‘தூண்டகு சுடரே’ என்பதும் பாடம் ; இதற்கு ‘ஸ்தம்பவடிவமான பேரொளிப் பிழம்பே’ என்று பொருள் கூறுக. தூண்+தகு=தூண்டகு.

தூண்டரிய சுடராவது தூண்ட வேண்டாது ஒளி வீசும் விளக்கு. அஃதாவது, தூண்டாத தீபம். இது மாணிக்கத்தைக் குறிக்கும். இல்பொருள்உவமை யாக்கினுமாம்.

நினது திருவடிக்கு அன்பு பூண்டிருத்தலே பேரின்ப மாதலால் வான்புகினும் சரியே, நரகம்புகினும் சரியே, யான் வேண்டுவது அவ்வன்பே என்றார். ‘எரிவாய் நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறினே’ என்றார் திருவாதவூரடிகளும். அன்பை அழிவிலாப் பொருள் என்றார், அன்புஞ் சிவமும் ஒன்றென்பது பற்றி. ‘இறவாத இன்ப அன்பு வேண்டி’ என்றார் பிறரும். அன்பும் சிவமும் ஒன்றாதலை,

அன்புஞ் சிவமு சிவமு மிரண்டென்ப ரறிவிலார்;
அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்:
அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின்,
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.

என்னுந் திருமந்திரத் திருவாக்கான் உணர்க.

நிழலமர்ந்த சோதியே என்பதால் அருளோடு கூடிய சிவம் என்னும் குறிப்புப் பெறப்படுதல் காண்க.(12)

13. அழிவிலாப் பொருளே! பழமறைக் கொழுந்தே!
அலையெறி அமுதவா ரிதியே!
ஒழிவிலா தருளுங் கற்பகக் கனியே!
ஒப்பனை மைப்பரந் தெறிக்கும்
விழியினா லுருக ஒருபுறம் அளித்த
விமலனே! கருவையம் பரனே!
இழிவிலாப் புணையாம் பிறவியங் கடனின்(று)
ஏறநான் பெற்றதுன் பதமே.

(எக்காலத்தும்) அழிதலில்லாத பொருளாயுள்ளவனே! தொன்றுதொட்டுள்ள வேதம் (விளங்குதற்கு முதற்காரணமான) கொழுந்தே! (அருளாகிய) அலைவீசும் (பேரானந்த மென்னும்) அமுதசாகரமே! (தன்னைச்சரணடைந்தோர்க்கு வேண்டியவற்றை) ஓய்வின்றித்தந்தருளும் கற்பகக்கனியே! ஒப்பனை (யென்னும் உமையம்மையாரது) மைபரவி ஒளிவீசும் கடைக்கட் பார்வையால் திருவுள முருக வாம் பாகத்தை யளித்தருளிய விமலனே! திருக்கருவையிலெழுந் தருளிய இறைவனே! (மீளவும் ஆழுதலில்லாமல்) பிறவியாகிய கடலினின்றும் நான் கரையேற, அடியேன் பெற்ற சிறந்த தெப்பமாவது, உனது திருவடியே.

மறை-வேதம். வாரிதி-கடல். விமலன்-இயல்பாகவே மலபந்தத்தினின்று நீங்கியவன். இழிவு இலா-தாழ்வு இல்லாத-சிறந்த. புணை-தெப்பம்.

சிவபெருமானையே பொருளாக உடையது வேதமாதலால் மறைக் கொழுந்து என்றார். கொழுந்து இலையாய் விரிவதுபோல் சிவபெருமானே வேதமாக விரிந்தார் என்பது கருத்து. இதற்கு இவ்வாறன்றி வேதம் என்னும் வித்தின் முளைத்த கொழுந்து என்று பொருளுரைப்பாருமுளர். அது பொருந்தாமை கண்டு கொள்க. கடல் தன்னகப்பட்ட பொருள்களை அலையால் மொத்திமொத்திக் கரைசேர்த்தல்போல, ஆன்மகோடிகளைத் தம் அருட்பெருக்கால் பிறவியிற் புகுத்திப் புகுத்திப் பேரின்பக் கரைசேர்ப்பவர் என்பது பற்றிச் சிவபெருமானை ‘அலையெறி அமுதவாரிதியே’ என்றார்.  (13)

14. உன்பத மேத்தித் துன்பவே ரறுக்க
உலகினிற் திருவுடன் வாழும்
மன்பதைக் கெல்லாம் எய்திடுந் தரமோ!
வலியவந் தெனைத்தடுத் தாண்டுள்
அன்புவந் தொருவ ரறிந்திடா அறிவும்
அறிவுறுத் தருளினை அதற்கு
முன்பெது புரிந்தேன்? கருவையம் பதிவாழ்
முதல்வனே! முக்கண்வா னவனே!

திருக்கருவை யென்னும் திருப்பதியில் வாழும் முதல்வனே! மூன்று கண்களையுடைய தேவனே! உனது திருவடியைத் துதித்துத் துன்பத்தை வேரோடறுக்க, உலகத்தில் செல்வத்தோடு வாழும் மக்களுக்கெல்லாம் வாய்க்குந் தரமோ? (அம்மக்களுள் ஒருவனாகிய) என்னை (நீ தானே) வலியவந்து தடுத்து அடிமைகொண்டு, நின் உள்ளத்தில் (என்பால்) அன்புகொண்டு மகிழ்ந்து ஒருவர் அறிய ஒண்ணாத மெய்யறிவையும் அறிவுறுத்தருளினாய். அச் செயலுக்கு, முற்பிறப்பில் என்ன (நல்வினை) செய்தேன்? (நானறியேன்.)

திரு-செல்வம். மன்பதை-மக்கட்பரப்பு.

செல்வம் ஆன்மாவை ஆணவாந்தகாரத்துள் அழுத்தி அது காரணமாகத் தோன்றும் அறியாமையே பற்றுக்கோடாகப் பலவகைத் துன்பங்களையும் தரும் என்பது பற்றி, ‘ திருவுடன்வாழும் மன்பதைக்கெல்லாம் துன்பவேரறுக்க எய்திடுந்தரமோ ’ என்றார். துன்பவேராவது அறியாமை. அறியாமையை அறுக்க வல்லது அறிவேயாதலால் ‘ அறிவும் அறிவுறுத்தருளினை ’ என்றார்.  (14)

15. வான்எரி அறல்கால் மண்எனப் பகுக்க
வரும்பெரும் பூதமோர் ஐந்தும்
ஆனமுக் குணமும் கரணமோர் நான்கும்
அனைத்துமாய் ஆதிஈ றின்றி
ஊனுறை உடலுக்(கு) உயிருமாய் உயிருக்(கு)
உணர்வுமாய் ஒன்றினும் தோயா
ஞானநா யகனே! கருவையம் பரனே!
நானறிந்(து) உரைக்குமா(று) எவனோ!

ஆகாயமெனவும் தீயெனவும் நீரெனவும் காற்றெனவும் மண்ணெனவும் பகுக்கப்பட்டு வராநின்ற பெரிய பூதங்கள் ஐந்தும் அமைந்த முக்குணங்களும் அந்தக் கரணங்கள் நான்கும் இவை முதலிய யாவுமாய், தனக்கொரு முதலும் ஈறு மில்லாமல், தசையால் நிலைபெற்ற உடம்புக்கு ஓருயிருமாய், அவ்வுயிருக்கோர் உணர்ச்சியுமாய், (உடனாய் நின்ற அப்பொருள்கள்) ஒன்றினுந் தோய்வின்றி நின்ற ஞானவடிவாகிய இறைவனே! திருக்கருவையி லெழுந்தருளிய பெருமானே! நான் உன்னை உணர்ந்து துதிக்கும் வகை எவ்வாறு? (அறியேன்.)

வான்-ஆகாயம். எரி-நெருப்பு. அறல்-நீர். கால்-காற்று. கரணம் நான்காவன : மனம், புத்தி, சித்தம், அகங்காரம். ஈறு-முடிவு. ஊன் உறை உடல்-மாமிசம் தங்கிய உடல்.

உலகம், உடல், உயிர், குணம், உணர்வு முதலிய அனைத்தும் தானேயாகியும் தான் அவற்றிற்கு வேறாகி நிற்கும் இறைவனதியல்பு தோன்ற ‘ அனைத்துமாய் ’ என்றும், ‘ஒன்றினும் தோயா’ என்றும் கூறினார். ‘எல்லாமா யல்லவுமாய்’ என்றார் பிறரும். ஒருபொருள் பிறிதொன்றனோடு ஒன்று கலந்திருக்கும், அன்றேற் பிரிந்திருக்கும். எளிதுணரற் பாலதாகிய இவ்வியல்பின் மாறி, ஒன்றே பிறிதொன்றனோடு கலந்தும் கலவாமலுமிருக்கும் தன்மை உணர்தற்கரிதாகலின் ‘அறிந்து உரைக்குமாறு எவனோ’ என்றார்.  (15)

16. எவன்உயிர்க் குயிராய் எள்ளுமெண் ணெயும்போல்
எங்கணும் இடையறா நின்றான்,
எவன் அனைத் துலகும் ஈன்றுகாத் தழிக்க
இறைமைசால் மூவுரு வெடுத்தோன்,
எவன்முத லிடையீ றின்றிஎஞ் ஞான்றும்
ஈறிலா மறைமுடி யிருப்பான்,
அவன்எனைப் புரக்கத் திருக்களா நீழல்
அமர்ந்தருள் புரிந்தகா ரணனே.

உயிர்களுக்கோ ருயிராய் எள்ளும் அவ்வெள்ளில் நிறைந்த எண்ணெயும் போல எவ்விடத்தும் இடையறாமல் நின்றவன் எவன், எல்லா உலகத்தையும் படைத்து அளித்து அழிக்கத் தலைமையமைந்த(பிரமன் விஷ்ணு ருத்திரன் என்னும்) மூன்று திருவுருவங்களையுங் கொண்டருளினவன் எவன், (தனக்கொரு) முதலும் இடையும் முடிவுமில்லாமல் எந்நாளும் அழிதலில்லாத வேதத்தின் உச்சியில் இருப்பவன் எவன், அவனே, என்னைப் பாதுகாக்க அழகிய களாநீழலில் அமர்ந்து (எனக்கு) அருள்செய்த காரணன் ஆவான்.

இறைமை-தலைமை. சால்-பொருந்து. இடையறாமல் எனற் பாலது இடையறா என ஈறு குறைந்து நின்றது. புரக்க-காப்பாற்ற. காரணன்-காரணமானவன்.

காரணம், முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என மூவகைத்து. முதற்காரணம் தானே காரியமாவது ; ‘மண்ணாலான குடம்’ என்பதில் மண்போல. துணைக்காரணம் முதற்காரணம் காரியப்படுமளவும் உடனிருந்து பின் நீங்குவது ; ‘திகிரியாலான குடம்’ என்பதில் திகிரிபோல. நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களைக் கொண்டு காரியத்தைச் செய்யும் கருத்தா ; ‘குயவனாலான குடம்’ என்பதில் குயவன்போல. இவற்றுள் ஈண்டுச் சுட்டப்பட்ட காரணம் நிமித்த காரணம் என்பதறிக. பிரணவ சொரூபனாதலால் ‘மறைமுடி யிருப்பான்’ என்றார்.  (16)

17. காரணம் ஏதென் றறிகிலேன், தமியேன
கற்றல மனத்தினைக் கரைத்து
வாரணி முலையாள் ஒப்பனை யோடு
மழவிடை மேலெழுந் தருளி
நாரணன் அறியாத் திருவுருக் காட்டி
நல்லருள் சுரந்துவாழ் வித்தான்
பூரணன் கருவைக் களாநிழல் அமர்ந்த
புண்ணியன் விண்ணவர்க் கிறையே.

எங்கும் நிறைந்தவனும் திருக்கருவையில் களாமரத்தின் நிழலில் எழுந்தருளிய புண்ணியனும் அயன் முதலிய தேவர்களுக்கு இறைவனுமாகிய பெருமான், தனியேனது கற்பாறை (போல வன்மையுடைய) மனத்தை (மெழுகு போல்) இளகச்செய்து, கச்சணிந்த தனத்தை யுடைய உமையம்மையோடு இளமைதங்கிய இடபவாகனத்தின்மே லெழுந்தருளி, திருமாலாலறியப்படாத திருவுருவத்தைக் காட்டி, நல்ல திருவருள் செய்து வாழ்வித்தனன்; (அதற்குக்) காரணமாகக்கூடியதாய் (என்னிடத்திலுள்ள சிறந்த குணம்) யாதென்று அறியகில்லேன்.

அவனது திருவருட்பெருக்கே காரணம் என்பது கருத்து.

அறிகிலேன்-அறியும் ஆற்றல் இலேன்; கில் ஆற்றலுணர்த்தும் ஓர் இடைச்சொல்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. கு-சாரியை,
இல்-எதிர்மறை இடைநிலை என்பது முண்டு. கல்தலம்-கல்லிடம்-கற்பாறை. வார்-கச்சு. மழ-இள. விடை-ரிஷபம். பூரணம்-நிறைவு. விண்ணவர்-தேவர்.

நாரணனும் நான்முகனும் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு சிவபெருமானது அடிமுடி காணப்புக்கும் காணாராயினர் என்பது புராண வரலாறு. ஆதலின், ‘நாரணன் அறியாத் திருவுரு’ என்பதற்கு ‘நாரணன் அறியாத் திருவடியோடு கூடிய உரு’ எனப் பொருள் கொள்க. ‘திருமாலும் பன்றியாய்ச் சென்றிடந்தும் காண்பரிய-திருவடிக்கே சென்றூதாய்க் கோத்தும்பீ’ என்றார் திருவாதவூரடி களும். நாராயணன் என்பது வடசொல். நீரில் வசிப்போராதலால் திருமால் நாராயணன் எனப்படுவர் என்பர். (நாரம்-நீர்; அயனம்-இடம்.) இதற்கு இப் பொருள்படப் பத முடிபு கூறுவதை மறுத்து ‘உண்மையால் நோக்குங்கால் நாராயணன் என்பது அவயவப் பொருள் பற்றிக் காரணக்குறியாய் நின்றே பரமசிவனை உணர்த்தும் என்பது காட்டுதும் ’ என எடுத்துக்கொண்டு ‘ நரருடைய தொகுதி நாரம் ’ என்பது முதலாக, வடமொழி வியாகரண நெறிபற்றிப் பதமுடிபினை இனிது விளக்கி ‘நாராயணன் என ஒருமொழியாய், உயிர்த் தொகையை ஒத்து நிற்பன் என்னும் பொருட்டாய்க் காரணக் குறியாயவாறு காண்க’ என ஆசிரியர் சிவஞான சுவாமிகள் சி வஞானபோத மாபாடியத்துட் காட்டினார் ; கண்டு கொள்க. (17)

18. விண்ணவர் மகுட கோடிவீழ்க் திறைஞ்சும்
விரைமலர்ச் சேவடி மிசையே
உண்ணிறை காத லன்புநின் றுருக
உலையிடு மெழுகென உருகிக்
கண்ணில்நீர் வாரக் கருவையம் பரனே!
கடவுளே! என்றெடுத் தேத்தப்
புண்ணியம் புரிந்தேன் இப்பெரும் பேறு
பூதலத் தெவர்பெறு வாரே.

(மணி) மகுடங்களை யணிந்த அளவிறந்த தேவர்கள் (தண்டாகாரமாக) வீழ்ந்து வணங்கும் வாசமிக்க தாமரை மலரை யொத்த செவ்விய திருவடிகளின்மேல், எனதுள்ள மானது, நிறைந்த ஆசையோடும் அன்போடும் நிலைபெற்று இளகக் கொல்லுலையில் வைத்த மெழுகைப்போல உருகிக் கண்களினின்றும் ஆனந்தபாஷ்பஞ் சிந்தவும் ‘திருக்கருவையி லெழுந்தருளிய பெருமானே ! எல்லாப் பொருளையுங் கடந்து நின்றவனே!’ என்று எனது நாத் துதிக்கவும் புண்ணியஞ் செய்தேன். இந்தப் பெரிய செல்வம் நிலவுலகத்தில் அடைவார் (வேறு) எவர்? (எவரும் பெறலரிது).

மகுடம்-கிரீடம். இறைஞ்சும்-வணங்கும். விரை-வாசனை. சே அடி-செவ்விய அடி. மிசை-மேல். உள் நிறை காதல் அன்பு-உள்ளம் நிறைவுற்ற காதலாலும் அன்பாலும். பேறு-செல்வம்.

விண்ணவர் மகுடகோடி-மகுடகோடி விண்ணவர் என இயைத்துப் பொருள் கொள்க. (18)

19. பெறுவது நினது திருவடிக் கமலம்;
பேசுவ துன்திரு நாமம் ;
உறுவது நினது திருவுரு வெளியாம் ;
உணர்யாஙன் அருள்: அலா துண்டோ?
மறுவறு சிறப்பின் மாசிலா மணியே !
வரதனே ! சிவபெரு மானே !
குறுமுனி பரவக் களாநிழ லமர்ந்த
கொடிமதிற் கருவையா திபனே !

குற்றமற்ற சிறப்பினையுடைய கழுவிய மாணிக்கம் (போல்பவனே)! (அடியார்களுக்கு வேண்டிய) வரத்தைக் கொடுப்பவனே ! சிவபிரானே ! அகத்தியர் வணங்கக் கொடி கட்டிய மதில் சூழ்ந்த திருக்கருவைப்பதியில் திருக்களா நிழலின்கீழ் எழுந்தருளிய இறைவனே ! (அடியேன் சரணமாகப்) பெறுவது உனது திருவடியாகிய தாமரையையே; நான் (புகழ்ந்து) பேசுவது உனது திருநாமத்தையே ; நான் பிறவிமுடிவில் அடைவது உனது திருவுருவாகிய சிதாகாசத்தையே ; யானறிவது உனது திருவருளையே; (இவையே) யல்லாமல் (பெறுவது முதலாயின) வேறுண்டோ ? (இல்லை).

கமலம்-தாமரை. உறுவது-பொருந்துவது. மறு அறு-குற்றம் இல்லாத. மாசு இலா-அழுக்கு இல்லாத. வரதன்-வரம் அளிப்பவன். குறுமுனி-குறுகிய வடிவுடைய முனிவர்-அகத்தியர். பரவ-வணங்க. ஆதிபன்-தவைன்.

குற்றமற்ற மணி சிறப்புடையது. ஆயினும் தொளைக்கப் படுதல் முதலிய குறைகள் அதற்கு உளவாதலின், அவ்வகைக் குறைகள் அற்ற சிறப்புடைய மணி என்பது தோன்ற ‘மறுவறு சிறப்பின் மாசிலாமணியே’ என்றார். ‘தோளாமணி’ ‘கோவாமணி’ ‘மலையிடைப் பிறவாமணி’ என வருவன காண்க. (19)

20. ஆதவன் மதிபார் அனல்வெளி புனல்கால்
அருமறை எச்சனென் றெட்டுப்
பேதமாம் உருவாய் அருவமாய் நிறைந்த
பெற்றியால் உற்றுநான் உன்னை
ஏதினால் உணர்வேன்! உணருமா றருரளாய்;
இளநிலாப் பசுங்கொழுந் தணிந்த
சோதியே ! கருவை ஒப்பனை களபத்
துணைமுலை தழுவுகா தலனே !

குளிர்ச்சி பொருந்திய முற்றாத இளஞ் சந்திரனைச் (சடாமுடியில்) அணிந்த (ஞானப்) பிரகாச வடிவாயுள்ளவனே ! திருக்கருவைப்பதியி லெழுந்தருளிய, உமையம்மையின் வாசனைச் சாந்தை பணிந்த இரண்டு தனங்களையும் தழுவும் அன்புடையவனே ! சூரியனும், சந்திரனும், பிருதிவியும், தேயுவும், ஆகாயமும், அப்புவும், வாயுவும் அரியவேதங்கள் கூறும் ஆன்மாவும் என்று சொல்லப்பட்ட எட்டுவகைப் பட்ட திருவுருவமாகியும் அருவமாகியும் (நீ) நிறைந்துள்ள தன்மையால், (யான்) எவ்வடிவில் (மனம்) பொருந்தி உன்னை அறிந்து (வணங்குவேன்)? அறிந்து உய்யும் வண்ணம் அருள் செய்வாயாக.

ஆதவன்-சூரியன். மதி-சந்திரன். பார்-பூமி. வெளி-ஆகாயம். எச்சன்-ஆன்மா. களபம்-வாசனை.

ஆதவன் முதலிய எட்டும் சிவபெருமானுக்குரிய அஷ்டமூர்த்தங்கள் என்பர். இதனை, ‘ நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்-புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்’ என்னும் திருவாசகத் திருவாக்கினும்,

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமாந னாய்எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருவும் தம்முருவும் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே

என்ற தேவாரத் திருவாக்கினும் காண்க.

இந்திரியம் முதலிய தத்துவங்கள் யாவும் கழிய எஞ்சி நிற்பது ஆன்மா ஆதலால் ‘எச்சன்’ எனப்பட்டது ; ‘யஜ்ஞன்’ என்பதன் சிதைவு என்பாருமுளர். சிவபெருமான் உருவாயும் அருவாயும் அருவுருவாயும் நிற்கும் பெற்றிமையை,

உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவும் கண்டோம்; அருவுரு வான போது
திருமேனி உபயம் பெற்றோம். செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.

எனப் போந்த சிவஞானசித்தித் திருவாக்கான் உணர்க. (20)

மூன்றாம் பத்து

முதற்சீர் மாச்சீராகவும் கடைச்சீர் காய்ச்சீராகவும் இடைச்சீர் நான்கும் விளச்சீர்களாகவும் வந்த

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

21. காத லுற்றிட மனநிலை பெற்றிடக்
கனிந்திடக் களிகூரப்
போத முற்றிட யான்என தென்றிடும்
புலைச்செருக் கறமாற
நாதன் முத்தமிழ்க் கருவையம் பரன்என
நாத்தழும் புறஓதி
ஓதி மற்றுநான் பெற்றதை இற்றென
உரைத்திட முடியாதே.

(நின்திருவடிமீது) ஆசை மீதூரவும், (அதனால்) எனது மனம் (திருவருள்) நிலையில் நிற்கவும், (அதனால் அம் மனம்) கனியவும், (அக்கனிவால்) ஆனந்தக் களிப்பு மிகவும், (அக் களிப்பால் சிவ) ஞானம் முற்றவும், (அச் சிவஞான முதிர்ச்சியால்) யான் எனது என்றகங்கரிக்கும் பொல்லாங்கு செய்யும் மயக்கம் முழுவதும் அகலவும் ‘இறைவனே ! (இய லிசை நாடகமென்னும்) முத்தமிழ் வழங்குந் திருக்கருவையி லெழுந்தருளிய பரனே !’ என்று நாத்தழும்புறத் துதித்துத் துதித்து, நான் பெற்ற பேற்றை இத்தன்மைத்தென்று எடுத்துக் கூற வரையறைப்படாது.

காதல்-ஆசை. போதம்-அறிவு. புலை-பொல்லாங்கு. செருக்கு-ஆணவ மயக்கம். அற மாற-முழுவதும் அகல. இற்று என-இப்படிப்பட்டதென.

ஆசையாவது பற்றுள்ளம். நிலையான பொருளைப் பற்றுவது தானும் நிலை பெறுமாதலால் ‘காதலுற்றிட மனநிலை பெற்றிட’ என்றும், திருவருட்கிலக்காகி நிலைபெற்ற மனம் சூரிய வெப்பத்

 

 

29

திற் கிலக்கான மெழுகுபோல் கரைதல் இயல்பாதலால் ‘கனிந்திட’ என்றும், உறைத்து நின்ற மனம் நெகிழ்ந்து விரிதலே இன்பத்திற் கேதுவாதலின் ‘களிகூர’ என்றும், இன்பானுபவத்தால் அவ்வின்பத்திற்குக் காரணமான ஞானத்தில் தெளிவு பிறத்தலின் ‘போதமுற்றிட’ என்றும், ஞானவிளக்கமாகவே அறியாமை காரணமாக ஏற்பட்ட யான் என்னும் அகப்பற்றும் எனதென்னும் புறப்பற்றும் கொண்டெழுந்த ஆணவமயக்கம் அகலுதலின் ‘புலைச்செருக்கறமாற’ என்றும் கூறினார். இது காரணமாலையணி.

(21)

22. முடிக டந்தது ககனகோ ளகைநெடு
முகட்டினுக் கப்பாலும் ;
அடிக டந்தது பாதலம் ஏழினுக்
கப்புறத்(து); அனலோடும்
துடிகள் தந்தகை கடந்தன திகந்தமால்:
தொல்புகழ்க் களாவீசன்
பொடிகள் தந்தபால் மேனியன் திருநடம்
புகலுதற் கெளிதாமோ !

ஆகாயத்தாற் சூழப்பட்ட அண்ட வட்டத்தின் நெடிய சிகரத்திற்கு அப்புறத்தும் திருமுடி கடந்தது ; பாதாள உலகம் ஏழினுக்கப்பாலும் திருவடி சென்றது ; திசை முடிவில் அக்கினியும் உடுக்கையும் அணிந்த திருக்கரங்கள் சென்றன : (ஆதலால்) தொன்றுதொட்டுள்ள புகழ்வாய்ந்த திருக்களாநீழலில் எழுந்தருளிய ஈசனும், விபூதியை யணிதலால் வெள்ளிய திருமேனியை யுடையனுமாகிய இறைவனது திருநடனத்தின் பெருமை எடுத்துக் கூறுதற்கு எளிதாகுமோ. (ஆகாது என்பது கருத்து.)

ககனம்-ஆகாயம். கோளகம்-அண்ட வட்டம். முகடு-உச்சி. அனல்-(சிவபெருமான் திருக்கரத்தில் ஏற்றருளிய யாக) அக்கினி. துடி-உடுக்கை. திகந்தம் -திக்கு அந்தம்-திசை முடிவு. ஆல்-அசை. தொல் புகழ்-பழைமையான புகழ். பொடி-நீறு.

 

30


இச்செய்யுள் சிவபெருமானது திருநடனச் சிறப்பைக் கூறுவது. அந்நடங்கொண்ட திருவுருவின் பெருமையை,

வேதண்ட மேபுயங்கள் ; விண்ணே திருமேனி;
மூதண்ட கூடமே மோலியாம் ;-கோதண்டம்
ஒற்றைமா மேரு ; உமாபதியார் நின்றாடப்
பற்றுமோ சிற்றம் பலம்!’

என வரும் வெண்பாவாலும் இனிதுணரப்படும். படைத்தல் காத்தல் முதலிய பஞ்சகிருத்தியங்களும்,

தோற்றம் துடியதனில் ; தோன்றும் திதியமைப்பில் ;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்;-ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்;முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு’

என்ற உண்மை விளக்கத் திருவெண்பாவிற் கூறிய வண்ணம், இத்திருக்கோல நடனத்தால் நிகழ்வனவாதலின் அந் நடனச் சிறப்புச் சொல்லுக் கடங்கா அருமையுடையத் தென்பார் ‘ திருநடம் புகலுதற் கெளிதாமோ ’ என்றார். இத் திருநடச் சிறப்பையே ‘ நாற்றடம் தோள்திசை எட்டிலும் தட்ட’ என வரும் கலித்துறையந்தாதியினும் கூறியுள்ளார்.  

(22)

23. எளியன், புன்தொழிற் பாதகன், மாதராய்
இளமுலை வளம்வேட்ட
களியன், தீக்குண வஞ்சகன் நெஞ்செனும்
கருங்கலைக் கரைவித்து
வெளியில் வந்துநின் பொன்னடி சென்னியின்
மிலைந்(து)எனை ஆட்கொண்ட
அளிக னிந்தநின் அருட்குணம் உரைப்பதார்,
அருங்களா அமர்ந்தோனே!

அரிய களாமரத்தின் நீழலில் எழுந்தருளிய இறைவனே! ஏழ்மை உடையவனும், புல்லிய தொழிலேசெய்யும் பாதகனும், பெண்களது இளமைவாய்ந்த தனபோகத்தை

 


31

விரும்பிய மயக்கத்தையுடையவனும், கொடியவஞ்சககுண முடையவனுமான எனது மனமென்னும் கருங்கல்லைக் கரையச்செய்து, (குருவுருக்கொண்டு) வெளிப்பட்டு வந்து, நினது பொன்போலும் அழகிய திருவடிக் கமலங்களை (எனது) தலையிற் சூட்டி, என்னை அடிமைகொண்ட இரக்கம் மிகுந்த உனது திருவருட்குணத்தை எடுத்துச் சொல்வதற்கு (வல்லார்) யாருளர்? (ஒருவருமிலர்.)

புன்தொழில்-அற்பத் தொழில்கள் (செய்யும்). மாதரார்-விருப்பத்திற்கிடமானவர்-மகளிர்; ‘மாதர் காதல்’ என்பது தொல்காப்பியம். வளம், ஈண்டுப் போகத்தைக் குறிக்கும். வேட்ட-விரும்பிய. களியன்-கள்ளுண்டவன்-மயக்க முடையவன். மிலைந்து-சூட்டி. அளி-இரக்கம்.

சிற்றறிவும் சிறுதொழிலும் உடைமைபற்றி ‘எளியன்’ என்றார். காமம் கள்ளினும் மகிழ்செய்யும் என்பதுபற்றிக் ‘களியன்’ என்றார். ‘உள்ளக் களித்தலும் காண மகிழ்த லும்-கள்ளுக்கில் காமத்திற் குண்டு’ என்றார் நாயனாரும். செங்கல் செயற்கைக் கல் : கருங்கல் இயற்கைக்கல்; செங்கல்லினும் வலியது. வெளியில் வந்து என்றது கட்புலனாகக் குருவடிவில் வெளிப்பட்டு வருதலை; முன்னர் ‘ ஆண்டகுரவன் ஆவானை’ (எ) என்றதும் காண்க.  

(23)

24. அமரர் மாதவர் முனிவரர் திரண்டுநின்(று)
அனுதினம் தொழுதேத்தும்
தமர நூபுரப் பொற்சரண் ஏத்திடத்
தமியனுக்(கு) அருள்செய்தான்,
குமர னால்அருஞ் சூர்ப்பகை தடிந்தவன்,
கொள்ளைவண் டினம்ஆர்க்கும்
கமல வாவியும் பொங்கரும் சூழ்திருக்
கருவைஎம் பெருமானே.

(தனது இளையகுமாரனான) முருகக் கடவுளால் (எவரும் வெல்லுதற்கு) அரிய சூரபத்மாவாகிய பகைவனை

 

32


வேரோடு அறுத்தவனும், வண்டின் கூட்டங்கள் தேனைக் கொள்ளை கொண்டிசைக்கும் தாமரைகளையுடைய தடாகங்களும் சோலைகளும் சூழ்ந்த திருக்கருவைப்பதியில் எழுந்தருளிய எமது பெருமானுமாகிய இறைவன், தேவர்களும் பெரிய தவத்தை யுடையவரும் முனி சிரேஷ்டர்களும் கூடி நின்று எந்நாளும் துதித்து வணங்கும் போரொலிவாய்ந்த சிலம்பினை யணிந்த பொன்போலும் அரிய திருவடிகளைத் துதிக்க, (மக்களிற் கடைப்பட்ட) தனியேனாகிய எனக்கும் அருள் செய்தான்.  

அமரர்-தேவர். மாதவர்-தவத்தில் மிகுந்த மக்கள். முனிவரர்-தேவர் படைக்கப் படுதற்குமுன் பிரமனாற் படைக்கப்பட்டவர். தமரம்-பேரொலி. நூபுரம்-சிலம்பு; சிவபெருமானுக்குச் சிலம்பாவது வேதம். சூர்-சூரபத்மா. தடிந்தவன்-கொன்றவன். கொள்ளை-மிகுதியாகக் கொள்ளுதல். இனம்-கூட்டம். ஆர்க்கும்-சப்திக்கும். பொங்கர்-சோலை.

‘அடுஞ் சூர்ப்பகை’ என்பதும் பாடம். அடும்-(பலரையும்) அழிக்கும்.

அமரர் முதலியோரால் வணங்கப்படும் திருவடியின் பெருமை தோன்றப் ‘பொற்சரண்’ என்றார். எனக்கும் என இழிவு சிறப்பும்மை வருவிக்கப்பட்டது.

(24)

25. கருவை யம்பரன், அம்பர மேனியன்,
கடவுளர் காணாத
உருவை அம்பிகை பெறப்பகுந் தளித்தவன்,
ஒன்னலர் புரம்நீற்று
பெருவை அம்பெனக் கண்ணனை உடையன், என்
பிழைபொறுத் தழியாத
திருவை அம்புவிச் சிறப்பொடும் அளித்தவன்
திருக்களா உடையோனே.

 


33

திருக்கருவையினை இடமாகக்கொண்டு எழுந்தருளிய அழகிய பரமனும், சிதாகாசமே திருமேனியாக உடையவனும், (அயன் முதலிய) தேவர்கள் காணாத தனது திருமேனியை உமையம்மை பெறப் பாகஞ்செய்து கொடுத்தவனும், பகைவர் திரிபுரங்களை நீறுபடுத்தும் பெருமை வாய்ந்த கூரிய அம்பாகத் திருமாலை உடையவனும், (தன் திருவடிக்குப் பிழைத்த) எனது பிழையைப் பொறுத்து அழியாத சிவஞானச் செல்வத்தை அழகிய நிலவுலகச் செல்வத்தோடு தந்தருளினவனும் (எவன், அவனே) இத்திருக்களா நிழலில் (வீற்றருளிய) இறைவன்.

உடையோன்-(அனைத்தையும் தனது உடைமையாக) உடையவன்-இறைவன். அம்பரம்-ஆகாயம் (சிதாகாயம்). ஒன்னலர்-பகைவர். ‘ஒன்றலர்’ என்பதன் மரூஉ. புரம்-முப்புரம். வை அம்பு-கூரிய அம்பு. கண்ணன்-கிருஷ்ணன் ; (ஈண்டுக் கிருஷ்ணாவதாரமெடுத்த திருமாலைக் குறிக்கும்). திரு-செல்வம்.

நீற்றல்-நீறாக்கல்-அழித்தல் நீற்று, வினைத்தொகை.

கருவையை இடமாக உடைமைபற்றி அவனது சர்வவியாபகத்தன்மை பழுது படுமாறில்லை என்பது விளங்க ‘அம்பர மேனியன்’ என்றும், இடமும் மேனியும் கூறியதால் கண்டப் பொருள்போல் எளிதிற் புலப்படும் தன்மையன் என்று கொள்ளற்க என்பார் ‘கடவுளர் காணாத உரு’ என்றும் கூறினார். ஒருவற்கு எவற்றினும் அருமையுடையது தன் உடம்பு. ஆனது பற்றியே

தன்உடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்
றுன்னித் துவைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போற்போற்றிக் காய்த்துக்க : உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.

என்னும் ஆசாரக்கோவைச் செய்யுளில் தன் உடம்பை முதன்மையாக வைத்துக் கூறினார். பெருவாயின் முள்ளியார் என்னும் சங்கப்
புலவர். அத்தகைய உடம்பும் ‘கடவுளர் காணாத’ தாயின் அதன்

 

34


அருமை அளவிடற் கரியது. அவ்வுடம்பைப் பகுந்தளித்த பெருங் கொடையாளி என்பது தொனிக்கக் ‘கடவுளர் காணாத உருவைப் பகுந்தளித்தவன்’ என்றார். நண்ணினர்க்கு எளியனும் நண்ணார்க்குச் சேயோனுமாதலால் ஒன்னலர் புரமெரித்த அவனே என் பிழைபொறுத்துத் திருவளித்தான் என்றார். பிழையாவன ‘கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும்’ முதலாயின. அழியாத செல்வமாவது சிவஞானச் செல்வம். மற்றைய செல்வங்களெல்லாம் அழிவுடைசெல்வங்கள். ‘இருவே றுலகத் தியற்கை: திருவேறு;-தெள்ளியராதலும் வேறு’ என்று நாயனார் திருவாய் மலர்ந்தருளியவாறு ஞானச் செல்வம் உடையார்க்கு இம்மைச் செல்வங்கள் இலவாதலும், இம்மைச்செல்வங்கள் உடையார்க்கு ஞானச் செல்வம் இலதாதலும் பெரும்பான்மையான உலக இயற்கை. அவ்வியற்கை மாற எனக்கு இருவகைச் செல்வங்களும் கொடுத்தான் என்பார் ‘ அழியாத திருவை அம்புவிச் சிறப்பொடும் அளித்தவன்’ என்றார்.

(25)

26. உடையர் என்றுதம் மக்களை மனைவியை
ஒக்கலைப் பெருவாழ்வை
அடைய நல்குசீர்ச் செழும்பொருள் முதலிய
அனைத்தையும் நினைப்பாரோ
விடையின் மேல்வரு திருக்களா நாயகன்
விரைமலர்ச் செழுங்கொன்றைத்
தொடையல் வேணியான் அடியவர்க் கன்பொடு
தொண்டுசெய் மனத்தாரே.

இடபவூர்தியின் மேல் எழுந்தருளும் திருக்களாநிழலில் அமர்ந்தருளிய இறைவனும், வாசனைவாய்ந்த தளிர்த்த கொன்றைமலரால் தொடுத்த மாலையை யணிந்த சடா முடியையுடையவனுமாகிய சிவபெருமானது அடியார்களுக்கு அன்போடு வழிபாடு செய்யும் மனத்தையுடையவர், மக்களையும் மனையாட்டியையும் சுற்றத்தாரையும் (வளமை)

 

 

35

மிகுந்த வாழ்க்கையையும் சிறப்புகள் பலவற்றையும் ஒரு சேரத் தரும் செழித்த செல்வப்பொருள் முதலிய (இவை) யாவற்றையும், (பெற்றாலும் அவற்றை விரும்பிப் பொருட்படுத்தி அவற்றால் தம்மைப் பொருள்) உடையவர் என்று கருதுவரோ? (கருதார்.)

ஒக்கல்-சுற்றம். அடைய-ஒரு சேர. நல்கும்-கொடுக்கும். தொடையல்-மாலை. வேணி-சடை. ‘உடையம்’ என்பதும் பாடம்.

சிவபெருமான் திருவடிக்காளானோர் உற்றார் உடைமைகளை வேண்டார் என்பதனை,

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு மினியமையும்
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.

என்றெழுந்த திருவாக்கினும் காண்க. ‘சீர் அடைய நல்கு செழும் பொருள்’ என மொழிமாற்றிப் பொருள்கொள்க. பொருள் எல்லாச் சீரும் தரும் என்பதுபற்றி ‘முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்’ என்றார் திருவாதவூரடிகளும்.

(26)

27. மனத்தை யான்தினம் வணங்குவன், மின்னென
வைகலும் நிலையற்ற
தனத்தை வாழ்வினை நிலையென மதித்துழல்
ஆசையில் தளராதே,
புனத்து ழாய்முகில் போற்றிடுங் கருவைவாழ்
புண்ணியன் பாலற்காச்
சினத்த காலனை உதைத்தவன் பங்கயச்
சேவடி வணங்கென்றே.

(தோன்றிமறையும்) மின்னலைப்போல என்றும் நிலையற்ற பொருளினையும் வாழ்க்கையினையும் நிலையென்று கருதிச் சுழன்று திரியும் விருப்பத்தால் தளர்ச்சி யடையாமல்,

 

36


முல்லை நிலத்திற்குரிய துளபமலர் மாலையணிந்த மேகம் போன்ற நிறமுடைய திருமால் வணங்கும் திருக்கருவைப் பதியில் வாழும் புண்ணிய வடிவாயுள்ளவனும், இளைஞரான மார்க்கண்டேய முனிவருக்காகக் கோபித்த இயமனை உதைத்தவனுமாகிய இறைவனது தாமரை மலரையொத்த செவ்விய திருவடிகளை வணங்காயென்று, எனது மனத்தை யான் நாடோறும் வணங்கிக் குறையிரப்பேன்.

மின்என-மின்னல்போல. வைகலும்-நித்தமும். புனம்-(முல்லைநிலச்) சோலை. துழாய்-துளபம்; முல்லைநிலக் கருப்பொருள்களுள் ஒன்று. முகில்-மேகம். பாலன்- குழந்தை; மார்க்கண்டர் பதினாறு வயதினராய்ச் சிவபெருமானை அடைந்தன ராதலின் பாலன் எனப்பட்டார். சினத்த-கோபித்த. காலன்-யமன். பங்கயம்-தாமரை.

‘ ஆசையின் ’-ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளது. ‘ தளராமே’-மேஈற்று எதிர்மறை வினையெச்சம்.

இறுதியும் முதலும் பூட்டிட்டாற்போல இணைந்து பொருள் தருதலின் இச்செய்யுள் பூட்டுவிற் பொருள்கோள் உடையது.

(27)

28. வணங்கெ னத்தலை அளித்தனை; நின்புகழ்
வாழ்த்தென நாத்தந்தாய்;
இணங்கெ னத்திருக் கூட்டமுங் காட்டினை;
இனிப்பெறும் பேறுண்டோ!
துணங்கை யிட்டுவெம் பேய்க்கணங் குதித்திடச்
சுடலைஆ டரங்காகக்
கணங்கள் போற்றநின் றாடிய குழகனே!
கருவையெம் பெருமானே!

கொடியபேய்களின் கூட்டம் துணங்கைக் கூத்தாடிக் குதிக்க, சிவகணங்கள் துதிக்க, (சர்வசங்கார வெளியாகிய) மயானம் ஆடும் நாடகமேடையாக நின்று, ஆடிய சிவ

 

 

37

பெருமானே ! திருக்கருவையில் எழுந்தருளிய எமது பரமேன ! உன்னை வணங்கத் தலையைத் தந்தாய் ; உனது புகழைவாழ்த்த நாவைத் தந்தாய்; கூட்டுறவுகொள்ள அடியவர் திருக்கூட்டைத்தையுங் காட்டி யருளினாய். இவையல்லாமல் இனி யான் பெறும் பயன் வேறுளதோ ? (இல்லை.)

இணங்க-சேர. துணங்கை-ஒருவகைக் கூத்து. கணம்-கூட்டம். ஆடு அரங்கு-நடனமேடை. குழகன்-அழகுடையவன்-சிவபெருமான்.

துணங்கையாவது, இருகைகளையும் முடக்கி விலாப்புறத்திற் புடைத்துக்கொண்டு ஆடும் ஒருவகைக் கூத்து ; ‘ முடக்கி யிருகை பழுப்புடை யொற்றத்-துடக்கிய நடையது துணங்கை யாகும் ’ என்பது சூத்திரம்.

வணங்க வாழ்த்த இணங்க என்னும் வினையெச்சங்கள் ஈற்றகரம் தொக்கு என என்னும் எண்ணிடைச் சொல்லோடு புணர்ந்தன. இவ்வாறன்றி வணங்கு என, வாழ்த்து என, இணங்கு என என்று பிரித்துப் பொருளுரைப்பின் ‘ நின்புகழ் ’ என்னும் சொற்றொடரோடு முரணுமாறறிக. ‘ என்புகழ் ’ என்பது பாடமாயின் பிற்கூறியவாறு பிரித்துப் பொருள்கொள்வதே பொருத்தமாம்.

மனமொழி மெய்களாற் செய்யும் வழிபாடுகளைச் செய்ய வேண்டி யாவும் தந்தாய். அவற்றால் உன்னை வழிபடுதலிற் சிறந்த பேறு வேறுண்டோ என்பார், ‘இனிப் பெறும் பேறுண்டோ’ என்றார். மனம் கட்டுக்கடங்குவ தரிதாகையால் சிவபெருமானையே சிந்தித்திருத்தற்குச் சிவனடியாருடனே எக்காலத்தும் பழகியிருத்தல் வேண்டுமென்பதுபற்றி ‘இணங்கெனத் திருக்கூட்டமும் காட்டினை’ என்றார்.

(28)


38


29. பெருமை சான்றநின் திருவெழுத் தைந்துமே
பெரும்புணை எனப்பற்றி
அருமை சான்றஇப் பவக்கடல் கடக்குமா(று)
ஆசையில் துணிகின்றேன்
இருமை இன்பமும் அடியவர்க்(கு) ஊட்டிடும்
இறைவனே ! எம்மானே !
தரும மூர்த்தியே ! ஒப்பனை வனமுலை
தழுவுதிண் புயத்தானே !

இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும், தன்னையடைந்த, அடியார்க்கு ஊட்டும் இறைவனே! எமது பெருமானே ! தருமத்தையே திருவடிவமாகக் கொண்டவனே ! ஒப்பனை யென்னுந் திருநாமம் வாய்ந்த உமையம்மையினது சந்தனக்கோலம் அமைந்த தனத்தைத் தழுவிய வலிய புயத்தை யுடையவனே ! பெருமை நிறைந்த உனது பஞ்சாக்கர மந்திரத்தையே பெரிய தெப்பமெனப் பற்றி அருமை பொருந்திய இப் பிறவிக் கடலைக் கடக்கவேண்டுமென்று ஆவலோடு துணிகின்றேன். (என்னைக் கரைசேர்ப்பது உனது கடன்.)

சான்ற-நிறைந்த, பொருந்திய. பவக்கடல்-பிறவிக்கடல். இருமை-இம்மை மறுமை. வனம்-அழகு. திண்புயம்-வலிய புயம். ஆசையில்-ஆசையோடு ; உருபு மயக்கம்.

பிறவி வாயிலாகவே முத்திப்பேறு பெறவேண்டியிருத்தலின் ‘அருமைசான்ற இப்பவக்கடல்’ என்றார். ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்த லரிது’ என்றதுங் காண்க.

(29)

 

39

30. தானை எண்திசை ; முக்கணும் முச்சுடர் ;
தழைசடை கதிர்க்கற்றை ;
மேனி வெங்கனல் ; ஆடிடம் உலகெலாம்
வெந்தொழி புறங்காடு ;  
சேனை வெங்கொலைப் பேய்க்கணம்: என்னின், அத்
திருக்களா அமர்ந்தோனை
வான நாடரும் பூதலத் தடியரும்
வணங்குவ தெவ்வாறே !

(உடையாக) உடுக்கும் ஆடை. எட்டுத்திக்குகள் ; மூன்று கண்களும் சோமசூரியாக்கினிகளாகிய மூன்று ஒளி; தழைத்த சடை சூரியனுடைய கிரணத் தொகுதி; திருமேனி கொடிய நெருப்பு ; ஆடியருளும் திருவரங்கம் உலகமெல்லாம் வெந்து ஒழியும் மயானம்; சூழ்ந்தசேனைகள் கொடிய கொலைத்தொழிலையுடைய பேய்க்கூட்டங்கள் : ஆயின், அத் திருக்களாநிழலில் எழுந்தருளினவனை, விண்ணுலகத்திலுள்ள தேவரும் நிலவுலகிலுள்ள அடியவரும் வணங்குவது எவ்வகை ! (அரிது)

தானை-ஆடை. புறங்காடு-சுடுகாடு.

அஷ்டதிக்குப் பாலகர், சூரியன் சந்திரன் அக்கினி முதலிய எல்லாம் நின் ஆடையினும் உறுப்பினும் அடங்குதலின் வான நாடர் நின்னை வணங்குமா றெவ்வாறென்றார். உலகம் எல்லாம் வெந்து நீறான சுடலையே நீ எக்காலத்தும் இடையறாது நடஞ்செய்திருக்குமிட மாதலாலும், கொலைத்தொழிலுடைய பேய்க் கணங்கள் என்றும் உன்னைச் சூழ்ந்திருத்தலாலும் உன்னடியராய் இவ் வுலகத்துள்ள மக்கள் உன்னை வணங்குவ தெவ்வா றென்றார்.

எனவே, ‘தேவரும் மக்களும் முற்றஉணர்ந்து வழிபடுதற் கரிய பெருமை உடையை நீயாதலின், மக்களிற் கடைப்பட்டேனாகிய யான் உன்னை வழிபடுதலிற் பிழைத்தேனாயினும் பொறுத்தருள்’ என்றாராம்.

 


40


சிவபெருமானுக்கு நடன அரங்கம் மயானமாதல்பற்றிக் ‘ கோயில் சுடுகாடு ’ என்றார் திருவாதவூரடிகளும். திசையினை ஆடையாக உடுத்திருத்தல்பற்றிச் சிவபெருமானுக்குத் திகம்பரன் என்பதும் ஒரு திருப்பெயராயிற்று; திக்குகளை அம்பரமாக உடையவன் : அம்பரமாவது ஆடை. சிவபிரானுக்குச் சூரியன் வலக்கண்ணும் சந்திரன் இடக் கண்ணும் அக்கினி நெற்றிக் கண்ணுமாம். இவை மூன்றும் உயிர்களுக்கு முறையே ஞானவிளக்கத்தினையும் திருவருட்பேற்றினையும் பாசநாசத்தினையும் சிவபெருமான் அளிக்கும் பெற்றியினை இனிது விளக்கும் குறிப்பின போலும்.

இச் செய்யுளில் வஞ்சகப்புகழ்ச்சியணி பெறக் கிடப்பது காண்க.  

(30)

நான்காம் பத்து.

முதற்சீர் மாச்சீராகவும் மற்றைய மூன்றும்
பெரும்பாலும் விளச்சீர்களாகவும் வந்த

கலிவிருத்தம்.

31. எவ்வ முற்ற திரிமலம் இற்றது ;
செவ்வி ஞானத் திருக்கண் திறந்தது ;
கொவ்வை வாயுமை கொண்கன் கருவையான்
பௌவ நஞ்சமுண் டான்கழல் பாடவே.

கொவ்வைக் கனிபோன்ற இதழ்களையுடைய உமையம்மைக்குத் தலைவனும், திருக்கருவைப்பதியிலுள்ளவனும், கடலில் தோன்றிய நஞ்சினை அமுதாகக் கொண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடியைப் புகழ்ந்துபாடக், குற்றம்பொருந்திய (ஆணவம் மாயை கன்மம் என்னும்) மூவகையான மலங்களும் ஒழிந்தன ; செம்மையான ஞானக்கண் திறந்தது.

எவ்வம்-குற்றம். செவ்வி-செம்மை. கொண்கன்-கணவன். பௌவம்-கடல்.

 


41

ஈண்டு வாய் என்றது இதழ்களை. ‘ திரிமலம் இற்றது ’ என்றது பன்மையில் ஒருமைவந்த வழுவமைதி. மூவகையாகப் பிரிவுபடும் மலம் என்னின் வழாநிலையே யாம். மும்மலங்களுள் ஆணவம் என்பது உயிர்களை அனாதியேபற்றி முத்திநிலையி லும் அணுத் தன்மைப்பட்டு ஒடுங்கிக் கிடப்பதல்லது ஆன்மாவைவிட்டு அகலாத இயல்பிற்று ; ஆதலால் இது சகசமலம் என்றும் கூறப்படும். சகசமாவது இயற்கை. மாயை என்பது உயிர்களுக்கு ஆணவத்தின் வலியைக் கெடுத்துப் பேரின்பப்பேற்றை அளித்தற்குச் சாதனமாக இறைவனது திருவருட்சத்தியால் தொழிற்படுத்தப்படும் தனுகரணபுவனபோகங்கள் தோன்றி ஒடுங்குவதற்கு இடமாகும் முதற்காரணம். கன்மம் என்பது ஆணவ இருளிற் கட்டுண்டு செயலற்றுக் கிடந்த ஆன்மா, இறைவனது அருட்குறிப்பால் பேரின்ப முத்திநிலை எய்தற்பொருட்டு மாயாகாரியமான தனு கரணாதிகளோடு பொருத்தப்பட்ட வழி அறிவு விளக்கமுறத் தொடங்குதலானே அவ் வறிவுவிளக்கத்தின் பக்குவத்துக்கேற்றவாறு நிகழ்த்தும் வினை. இக் கன்மமும் மேற் கூறப்பட்ட மாயையும் ஆன்மாவைச் செயற்கையாக இடையேவந்து பற்றுவனவாதலின் இவை இரண்டும் ஆகந்துகமலம் எனப்படும். ஆகந்துகமாவது செயற்கை. ‘ இயற்கை சகசஞ் செயற்கையா கந்துகம் ’ என்பது பிரயோக விவேக உரைச்சூத்திரம்.

ஆன்மாவினை அணுத்தன்மை செய்துநிற்றலானும், ஆன்மாவின் முத்திநிலையில் அதனை அணுத்தன்மைசெய்து நின்ற தான் அணுத்தன்மைப்பட்டு நிற்றலானும் ஆணவம் எனப்பட்டது. தனு கரணபுவனபோகங்கள். தோன்றி ஒடுங்குவதற்கு இடமாதல்பற்றி மாயை எனப்பட்டது ; மா=ஒடுங்குதல், யா=வருதல். இச்சா ஞானக் கிரியைகளால் உண்டாம் தொழில் கன்மம் எனப்பட்டது; கன்மம்=தொழில்=வினை.

ஞானக் கண்ணைப் பாசவிருள் மூடியிருந்ததாதலால், அப்பாசம் அகலவே ஞானக்கண் திறந்ததென்பார் ‘ மலமிற்றது ; கண் திறந்தது ’ என்றார்.

(31)


42


32. பாடி னேன்புகழ் ; பங்கயச் சேவடி
சூடி னேன்;கரு வாபுரிச் சோதியை
நாடி னேன் அவன் நான்எனும் வேறற ;
கூடி னேன் அடி யார்திருக் கூட்டமே.

(இறைவனது) புகழை எடுத்துப் பாடினேன்; அவனது செவ்விய திருவடித் தாமரைகளைத் தலையிற் சூடினேன் ; திருக்கருவாபுரியில் எழுந்தருளிய ஞான தேஜோமயனை அவன் நான் என்னும் வேறுபாடு அகலத் தியானித்தேன் ; (அவனது) அடியவர் திருக்கூட்டத்தோடு கலந்திருந்தேன்.

பங்கயம்-தாமரை.

பாடுதல், வாக்காற் செய்யும் வழிபாடு ; சேவடி சூடுதல், மெய்யாற் செய்யும் வழிபாடு ; சோதியை நாடுதல் மனத்தாற் செய்யும் வழிபாடு : எனவே மனமொழிமெய்களாற் செய்யக் கடவ மூவகை வழிபாடுகளும் கூறினார்.

(32)

33. கூட்ட மிட்ட கருவி குலைந்திடச்
சேட்டை யற்றுள் அறிவு சிதையுமுன்
நாட்டம் மூன்றுடை நாதன் முகலிங்கன்
தாட்டு ணைக்கம லம்தலைக் கொண்மினே.

கூட்டம் கூட்டமாகக் கூடிய சத்தமுதலிய தத்துவங்கள் தத்தம் நிலையினின்று தடுமாற அத் தத்துவக் குறும்புகளொழிந்து உள்ளிருக்கும் அறிவு கெடுதற்குமுன்னமே, சோமசூரியாக்கினி என்னும் மூன்று கண்களையுடைய தலைவனும் திருமுகம்வாய்ந்த லிங்கவடிவினனுமாகிய இறைவனது இரண்டு திருவடிகளாகிய தாமரைகளைத் தலையிற் சூடுங்கள். (பெறுதற்கரிய பேற்றைப் பெறுவீர்கள்.)

 


43

கருவி-(அறிதற்) கருவிகளான சத்தம் பரிசம் முதலிய தத்துவங்கள். சேட்டை-சேஷ்டை-குறும்புச் செயல். கொண்மின்-கொள்ளுங்கள்; மின் ஏவற்பன்மை விகுதி.

யாக்கை நிலையன்றாதலால் கருத்துள்ளபோதே சிவபெருமான் திருவருட் காட்படுமின் என்றார்.

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே-மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு.

என்ற பட்டினத்தடிகள் திருவாக்கையும் காண்க.

(33)

34. தலைக்கொள் வெண்தலை மாலையன், தண்ணிலா
மிலைக்கும் தென்கரு வாபுரி வேதியன்,
புலைக்கு ரம்பை யுடம்பிற் குடிபுகுந்(து)
அலைக்கும் நெஞ்சம் ஒழித்தேனை ஆள்வனே.

முதன்மை வாய்ந்த பிரமன் முதலியோரது வெளுத்த மண்டையோடுகளை மாலையாக உடையவன், குளிர்ந்த இளஞ்சந்திரனைச் சூடும் சடாமுடியை உடையவன், தென் திசையிலுள்ள திருக்கருவையில் கோயில்கொண்டேழுந் தருளிய வேதநாயக னாகிய சிவபெருமான், (ஆன்மா உறையும்) கீழ்மையாகிய குடிலாயுள்ள என்னுடம்பில் தான் குடியேறி, (என்னைக்) கலக்கும் மனத்தை ஒழித்து என்னை அடிமைகொள்வான்.

தண் நிலா-குளிர்ந்த சந்திரன். மிலைக்கும்-சூடும். புலை-கீழ்மையான, குரம்பை-சிறுகுடில்.

கலக்கும் மனத்தை ஒழித்தலாவது, மனக்கலக்கத்தை ஒழித்தல் ; அஃதாவது நிலையற்ற சிற்றின்பங்களை நாடிச் சிதர்ந்து பல முகப்பட்டு அலையும் மனத்தை ஒரு முகப்படுத்திச் சிவபெருமான் திருவடிமீது நிலைத்து நிற்கச்செய்தல்.


44


முடை நாற்றமுடைய கபாலங்களை மனமொப்பி மாலையாக அணிந்தவனாதலால், புலைக்குரும்பையென்று அருவருப்புக் கொள்ளாது என் உடம்பினும் புகுந்து என்னையாள்வான் என்றார்.

(34)

35. என்னை ஆள்பவன், என்னுள் இருப்பவன்,
தன்னை யான்தொழத் தண்ணளி தந்தவன்;
பொன்னை யாளும் புயன்தொழ நின்றவன்,
கன்னி பாகன், கருவைக் கிறைவனே.

திருமகளைத் தழுவும் புயத்தையுடைய திருமால் வணங்க நின்றவனும், உமையம்மையை இடப்பாகத்தில் உடையவனும், கருவாபுரிக்குத் தலைவனுமாகிய சிவபெருமானே என்னை அடிமைகொள்வோனும், என் இதய தாமரையில் வசிப்பவனுமாம் (உரிமையையுடைனாதலால்) தன்னை நான் வணங்கத் தண்ணிய கருணை செய்தோனாயினான்.

தண் அளி-குளிர்ந்த அருள். பொன்-இலக்குமி. உலகுயிர்களை ஈன்றும் ஈனாதவளாய் என்று மழியா இளமையோடிருத்தலின் உமையம்மை கன்னி எனப்படுவாள். ‘ அகிலாண்ட கோடியீன்ற அன்னையே, பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்தரூபமயிலே ’ என்றார் தாயுமான சுவாமிகளும்.

சிவஞ்சத்தி தன்னை யீன்றும், சத்திதான் சிவத்தை யீன்றும்,
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
பவன்பிரம சாரி யாகும்; பான்மொழி கன்னி யாகும்:
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே.

என்ற சிவஞான சித்தித் திருவாக்கில் உருவகமாக அறிவுறுத்தப் பட்ட உண்மை ஈண்டு உணரற்பாற்று.

உயிர்களின் உள்ளத்து இடையறாது வீற்றிருப்பவனாதலால் ‘என்னுளிருப்பவன்’ என்றார். இக் கருத்தானே ‘ மலர்மிசை ஏகினான் ’ என்றார் ஆசிரியர் திருவள்ளுவநாயனாரும்.

(35)

 

45

36. இறைவன் எங்கணும் யாவையும் ஆனவன்
பிறைய ணிந்த சடிலன் பெருந்தகை
கறையி லங்கு மிடற்றன் கருவையான்
மறைய நின்றெனை ஆண்டதெம் மாயமே.

உயிர்களுக்கு இறைவனாயுள்ளவனும், எவ்விடத்தும் எப்பொருளும் ஆனவனும், பிறைமதியை யணிந்த சடாமுடியை யுடையவனும், உயிர்கட்கருளும் பெருந்தன்மையை யுடையானும், (தேவர்களுய்ய உண்ட) விடம் விளங்கிய திருக்கண்டத்தை யுடையவனும், திருக்கருவைப் பதியில் எழுந்தருளி யுள்ளவனுமாகிய இறைவன் தான் மறைய நின்று என்னை அடிமை கொண்டது என்ன இந்திரசாலம்!

சடிலன்-சடையை உடையவன். பெருந்தகை-பெருந் தன்மையுடையவன். கறை-களங்கம் (விடம்). இலங்கு-விளங்கு.
மிடற்றன்-கழுத்தன்.

தேவர்கள் உய்யும்பொருட்டு உட்கொண்ட விடத்தால் உண்டான கறையாதலால், அஃது அவனது அருட்பெருந்தன்மை விளங்கநின்ற தென்பார் ‘ பெருந்தகை, கறையிலங்கு மிடற்றன் ’ என்றார். யாண்டும் வியாபித்து நின்றும் வெளித்தோற்றாது நிற்பதும் அங்ஙனம் மறையநின்று என்னையாண்டதும் பெருவியப்பென்பார் ‘மறையநின்றெனையாண்டதெம் யாயமே ’ என்றார்.

(36)

37. மாய வல்லிருள் நீங்க மனத்திடைத்
தூய ஞானச் சுடர்விளக் கேற்றிய
நாய கன்கள வீசன் நரைமயிர்
பாய மால்விடை யான்பர மேட்டியே.

மாயமாகிய கெடாத இருள் நீங்க, என் மனத்தினிடத்துப் பரிசுத்த ஞானமாகிய ஒளிவீசும் விளக்கினை ஏற்றியருளிய இறைவனாவான், திருக்களா நீழலில் எழுந்


46


தருளிய ஈசனும், வெள்ளிய மயிர் பரவிய பெரிய இடபத்தை வாகனமாகவுடையவனும், பரமேட்டியுமாகியவன்.

பாய-பரவிய. ‘ பாயிருள் ’ என வருவது காண்க. பரமேட்டி-சிவபெருமான். ‘பாயுமால்விடை’ என்பதும் பாடம்.

சுடர்விளக்கேற்றிய என்றதால், அவன் ஆண்டருளி ஏற்றுவதற்கு முன்னே ஞானவிளக்கம் பாசத்தால் மூடப்பட்டு சுடர்விட்டெரியாது கிடந்ததென்பது பெறப்படும். தூயஞானம் என்றது பதிஞானத்தை.

(37)

38. பரம் எனக்குனை யன்றியோர் பற்றிலேன்.
சரம முற்றிய போதில் தருவையோ,
கருவை நிற்கும் களாமுத லே!மறைச்
சிரமி ருக்குந் திருவடிச் செல்வமே.

திருக்கருவையிலுள்ள திருக்களாநிழலில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வனே! (யான்)உன்னையன்றி ஒரு பற்றுக் கோடில்லேன். (ஆதலால்) எனக்குச் சரமதிசை நேர்ந்த காலத்தில், வேதமுடியிலிருக்கும் உனது திருவடியாகிய அருட் செல்வத்தைத் தந்தருள் வாயோ? (தந்தருளுதல் உனது) பாரம்.

பரம்-பாரம். சரமம்-அந்திய காலம்.

ஒருவன்பால் ஒன்றை இரப்போன், ‘ நின்னையே நம்பி வந்தேன். நின்னையன்றி எனக்கு வேறு கதியில்லை ’ என அவன் தனக்கின்றியமையாமையினையும் தனக்கு ஆதரவுவேறற்ற தன்மையினையும் உரைத்துப் பின்னர் வேண்டிய பொருளைக் கேட்டல் இயல்பாதலால் ‘ பரம். எனக்கு உனையன்றியோர் பற்றிலை ’ என்பதை முன்னர்க் கூறித் தாம் வேண்டிய பொருளாகிய திருவடிச் செல்வத்தை இறுதியிற் கூறினார்.

‘களாமுதலே, (யான்) பற்றிலேன்; எனக்குத் திருவடிச் செல்வம் தருவையோ? (தருதல் உனது) பரம்’ என இயைவது நேர்.

 

47

‘பரம் எனக்கு’ என்பதற்கு ‘எனக்கு (நீயே) பரம் (பொருள்)’ எனப் பொருள் கொண்டு ‘தருதல் உனது கடன்’ என்பதனை இசையெச்சமாக்கினும் அமையும். ‘திருவடிச் செல்வம்’ என்பதைத் திருவடிகளையுடைய செல்வம் என வேற்றுமைத் தொகையாக்கியும் ஈற்றேகாரத்துக்கு விளிப்பொருள் கொண்டும் உரைகூறிப் ‘பரம் தருவையோ’ என இயைத்து மேலான மோக்ஷ பதவியைத் தருவையோ என்பதுமுண்டு.

(38)

39. செல்வம் ஈயும்; சிறப்பும் அளித்துளத்(து)
அல்லல் தீர்க்கும்; அறிவை உதவிடும்;
கல்வி நல்கும்; கதிதரும்: பொற்கிரி
வல்வி லான்கள ஈசனை வாழ்த்தவே.

பொன்மலையாகிய மேருவை வலியவில்லாக உடையவனாகிய களாநிழலில் எழுந்தருளிய இறைவனை, ஒருவன் வாழ்த்த, (அவ்வாழ்த்துதல் அவனுக்கு) இம்மை யில் நுகர்தற்குரிய செல்வத்தைத் தரும் ; (அரசர் முதலாயினார் உபசரிக்கத்தக்க) நன்கு மதிப்பையுந் தந்து, மனத்திலுள்ள கவலையையுந் தீர்க்கும்; உணர்ச்சியையுந் தரும்; அவ்வுணர்ச்சிக்குக் காரணமாகிய கல்வியையுந் தரும்; மறுமையில் மோக்ஷத்தையுந் தரும்.

அல்லல்-துன்பம். பொன்கிரி-பொன்மலை-மேருமலை.

‘செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும்’ என்று திருவாதவூரடிகள் அருளியாங்கு அல்லலைத் தருவது செல்வமாயினும் உன்னை வாழ்த்துதலாற் பெற்ற செல்வமாதலால் அது சிறப்பையே தரும் ; அல்லல் ஒருகால் உண்டாயினும் உன்னை வாழ்த்துதலே அவ்வல்லலைத் தீர்க்குமென்பார் ‘செல்வமீயுஞ் சிறப்பும் அளித்துளத் தல்லல் தீர்க்கும்’ என்றார். பொன்மலையினையே ஓர் ஆயுதமாகக் கொண்ட பெருஞ்செல்வனா தலால், தன்னைவாழ்த்தினார்க்குச் செல்வமும் செல்வத்தாற் பெறப்படும் சிறப்பும் அளித்தல் எளிதென்பதும்; மலையினையே வில்லாக வளைத்தவனாதலால்

 

48


அன்பர் மனத்தை வளைத்து அல்லலகற்றலும் அறிவுதவலும் கல்வி நல்கலும் எளிதென்பதும் குறிப்பினாற் பெறப்படும்.

(39)

40. வாழ்வை நம்பி மதிகெட்டுக் கும்பியில்
வீழ்புன் மாந்தார்க் குறுதி விளம்புவேன்:
தாழ்ச டைக்கள வீசன்தன் ஆலயம்
சூழ்தல்; சூழில் துறக்கம் கிடைக்குமே.

இவ்வுலக வாழ்க்கையை ஒரு பொருளாக நம்பி, சிவபெருமானையுணரும் உணர்ச்சி கெட்டு, நரகத்தில் வீழும் புல்லறிவினையுடைய மனிதர்க்கு, ஓர் உறுதியை எடுத்துக் கூறா நிற்பேன்: தாழ்ந்த சடையையுடைய களாநிழலில் எழுந்தருளிய இறைவனது திருக்கோயிலைப் பிரதக்ஷிணஞ் செய்க; செய்தால் முத்தி கைகூடும்.

கும்பி-நரகம். சூழ்தல்-வலம் செய்க. சூழின்-வலஞ் செய்தால்.

சூழ்தல் என்பதற்குக் கருதுதல் என்னும் பொருளும் உண்டாகையால், ‘சூழ்தல் சூழின்-வலம் வருதலைக் கருதினால்’ எனப் பொருளுரைப்பதுமுண்டு. துறக்கம் கிடைப்பது வலம் வருதலால் என்பதேயன்றி வலம் வருதலைக் கருதுவதால் என்பதில்லையாகையால் முன்னைய பொருளே சிறக்குமாறு காண்க. (40)

ஐந்தாம் பத்து.

கொச்சகக் கலிப்பா.

41. கிடைத்தபொருள் கரத்திருக்கக்
கிடைத்திலவென் றயர்வார்போல்
படைத்தநின தருள்பெற்றும்
பெற்றிலர்போற் பரிவுற்றேன்;
முடைத்தலையிற் பலிகொள்ளும்
முகலிங்கா முகிழ்த்தநிலாச்
சடைத்தலையாய் ! நின்மாயம்
யானுணருந் தரத்ததோ ?

 

 

49

புலால் நாற்றமுடைய பிரமகபாலத்தில் பலி ஏற்ற முகலிங்கநாதனே ! கலை ஒடுங்கிய இளஞ்சந்திரனைச் சூடிய சடையோடுகூடிய திருமுடியை உடையவனே ! (தாம் விரும்பியன முன்னமே) கிடைத்துவிட்ட பொருளாகக் கையில் இருக்க (அதை அறியாமல். விரும்பியன) கிடைக்கவில்லை (என்று கருதி) மனந்தளர்ந்து வருந்துகிறவர்களைப்போல, (என்னை இந்த யாக்கையிற்) படைத்த உன்னுடைய அருளைப் பெற்றும் பெறாதவர்போல வருந்தா நின்றேன். (உன்னுடைய மாயம் இருந்தபடி இருவானால்) உன்னுடைய மாயாசத்தி யான் உணரும் தம்மையதோ ? (அன்று.)

பரிவு-துன்பம். முடை-நாற்றம். முகிழ்த்த-குவிந்த. நிலா-சந்திரன்,

‘முகிழ்த்த சடை’ என இயைத்துக் கட்டிய சடை எனப் பொருள்கூறலும் ஒன்று.

ஆணவத்தின் வலியைக்கெடுத்து ஆன்மாலை இறைவனடியிற் சேர்த்தற்குக் கருவியாக இறைவனால் கொடுக்கப்பட்டதே இந்த யாக்கையாதலால், இந்த யாக்கையைப் பெற்றதொன்றுமே நினக்கு என்மாட்டுள்ள அருட்பெருக்கைப் புலப்படுத்தாநிற்க, நினது அருளைப் பெறாதவன்போல உளம்வருந்தல் என்னோ என்பார் ‘ படைத்தநின தருள்பெற்றும் பெற்றிலர்போற் பரிவுற்றேன்’ என்றார். தூயவனாகிய நீ முடைத்தலை கைக்கொள்வதும், சர்வேஸ்வரனாகிய நீ பலிகொள்வதும், நின் அருளை எனக்கு அளித்தமை கண்கூடாகக் கிடக்கவும் யான் அதை அறியாமல் வருந்தச் செய்வதும், யாரானும் உணரத்தகாத பெருமாயமா யிராநின்றன என்பார், ‘நின்மாயம் யானுணரும் தரத்ததோ’ என்றார்.

(41)


50


42. உணராத நின்நிலையை
நீஉணர்த்த உணர்ந்ததற்பின்
புணராத தாடலையிற்
புணர்ந்ததெனப் புளகோங்கத்
தணவாமல் எனைஉனக்குத்
தந்துருகி இரண்டற்றேன் ;
பணராசச் சிலம்பணிந்த
பழமறைஎம் பெருமானே !

பாம்பரசைச் சிலம்பாகத் தரித்த பழமையான வேதங்களுக்குரிய எமது தலைவனே! அறிதற்கு அரிய உனது நிலைமையை நீ அறிவிக்க (யான்) அறிந்த பின்பு கிடைத்தற்கரிய (உனது) திருவடி (அடியேனுடைய) தலையில் பொருந்தியது என்று (கருதி, அதனால்) ஆனந்தம் பெருக என்னை உனக்கு (இடை சிறிதும்) நீங்காமல் கொடுத்து (எனக்கென ஒன்றின்றி எல்லாம் உன் உடைமையாக உன்னிற் கலந்து யான் நீ என்னும்) துவிதபாவனை இழந்து அத்துவித வாழ்வைப் பெற்றேன். (இதனினும் யான் பெறத்தக்க பேறு வேறில்லை).

புளகு-மகிழ்ச்சி. தணவாமல்-நீங்காமல். பணம்-படம் ; இலக்கணையால் படத்தை யுடைய பாம்புக்குப் பெயராயிற்று.

இரண்டறுதலாவது சிவபெருமானினின்றும் தன்னைப் பிரித்துணரும் துவித பாவனை நீங்கிச் சிவபெருமானது உடைமையே தானாதலால் தனக்கென வேறு தனிநிலையில்லை யென்னும் அத்துவித பாவனை பெறுதல். இதுவே அத்துவித முத்திநிலை. இந்நிலையினைப் புலப்படுத்தவே ‘ தாடலையிற் புணர்ந்ததென ’ என இருபொருள்படக் கூறினார். இதிற் பெறக்கிடக்கும் பிறிதொரு பொருளாவது ‘ தாள் தலை என்னும் இருசொற்கள் தாடலை என ஒரு சொல் நீர்மையவாய்ப் புணர்ந்து நின்றாற்போல’ என்பதாம்.

 


51

இது திருவருட்பயனில், ‘ தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக்-கூடலைநீ ஏகமெனக் கொள்’ என உமாபதி சிவாசாரியார் திருவாய்மலர்ந்தருளிய அருமைத் திருவாக்கால் துணியப்படும். இம் முத்தி நிலையே சாயுச்சியம் எனப்படும். அந்நிலையி லும் சிவபெருமான் ஆண்டானும் ஆன்மா அடிமையுமாகும் பெற்றி மாறுபடுமாறில்லை என்பது சித்தாந்த நூற்றுணிபாதலால், சிவபெருமானது இன்புருவத் தாளை ஆன்மா வாகிய தலை சேரும் என்பது போதரத் தாள் தலை என்னும் இருசொற்களின் புணர்ச்சி நிலை உதாரணமாகக் காட்டப்பட்டது. துணிவுபற்றி ‘இரண்டற்றேன்’ என இறந்த காலத்தாற் கூறினார். இதற்கு இவ்வாறன்றியான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் நீங்கப் பெற்றேன் எனப் பொருள் கூறுவாருமுளர்.

‘புகழோங்க’ ‘பணராசி’ என்பவும் பாடம்.

(42)

43. பழமையாம் வாதனையில்
படிந்தமனப் பந்தத்தின்
விழைவினால் தலைமயங்கி
வேறுவே றுருவெடுத்துச்
சுழல்குயவன் திகிரியைப்போல்
பவக்கடலிற் சுழல்வேனோ !
மழவிடையாய் ! பால்வண்ணா !
வானவர்தம் கோமானே !

இளமை தங்கிய இடப வாகனனே ! பால்வண்ண நாதனே ! தேவர்களுக்கு இறைவனே! தொன்றுதொட்டுள்ள (ஆணவமலத்) துன்பத்தில் அழுந்திய மனப்பற்றால் விளைந்த ஆசையால் அறிவு மயங்கி வெவ்வேறு உருக்கொண்டு பிறந்து பிறந்து, குயவன் (சுழற்றச்) சுழலும் சக்கரத்தைப்போலப் பிறவிக் கடலிற் சுழலக் கடவேனோ? (சுழலாது பிறப்பறுத்துத் திருவருள் செய்).

 


52


வாதனை-துன்பம். பந்தம்-பற்று. விழைவு-ஆசை. தலை மயங்கி-அறிவு மயங்கி. திகிரி-சக்கரம்.

துன்பத்துக்கெல்லாம் மூலகாரணம் அறியாமைவடிவிற்றாகிய ஆணவமேயா தலாலும், ஆணவம், செம்பிற் களிம்புபோல ஆன்மாவை அனாதியே பற்றியுள்ள தாதலாலும், ‘ பழமையாம் வாதனை’ என்றார். பந்தமாவது பாசப்பற்று. பாசம் அனாதியே சீவனைப் பற்றியுள்ள தென்பதையும், சிவபெருமானே சீவனைப் பாசத்தினின்று அகற்றித் தன் அடியிற் சேர்க்கவல்லவன் என்பதையும்,

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம் ;
பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

எனப் போந்த திருமந்திரத் திருவாக்காற் கண்டு கொள்க. ‘வாதனை-வாசனை’ என்றலும் ஒன்று.  

(43)

44. ‘ கோமானே ! கருவைவரும்
குணக்குன்றே ! மலரிதழித்
தேமாலை புனைந்த சடைச்
செழுஞ்சுடரே !’ என்றென்று
பாமாலை வாய்பாடிக்
கைகொட்டிப் பதம்பெயர்த்து
நாமாட வம்மின்காள்
தொண்டராய், நமரங்காள் !

நம்மவர்களே ! ‘இறைவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய குணாதீத மலையே! தேன் பொருந்திய கொன்றை மலரால் தொடுத்த மாலையினைத் தரித்த சடாமுடியை யுடைய சிறந்த ஒளிப்பிழம்பே!’என்று (பலகாற் பலவாறு) சொல்லித் தோத்திரப் பாமாலைகள் பல வாயாற் பாடிக் கைபுடைத்தும், கால்பெயர்த்தும், நாம் ஆனந்தக் கூத்தாடுதற்குச் சிவபெருமானது அடியவராய் வாருங்கள்.

 


53

இதழி-கொன்றை. தேன்+மாலை=தேமாலை ; மெலிவுர இறுதி அழிந்தது. வம்மின்காள்-வாருங்கள்; (மின்-ஏவற்பன்மை விகுதி ; கள்-விகுதிமேல் விகுதியாய் வந்து ஈற்றயல் நீண்டு விளியுருபாயிற்று.) நமரங்காள்-நம்முடையவர்களே; (நாம் என்பது முதல் குறுகிநின்ற நம் பகுதி ; அர்-பலர் பால் விகுதி ; அம்-சாரியை; கள் விகுதிமேல் விகுதியாய்வந்து ஈற்றயல் நீண்டு விளியுருபாயிற்று.) சிவபெருமான் புகழைப் பாடியாடுதல் தமக்கின்பஞ் செய்தலின், ‘நமரங்காள் வம்மின்’ என்று பிறரையும் அதுசெய்ய அழைக்கின்றார், ‘ தாமின் புறுவ துலகின் புறக்கண்டு-காமுறுவர் கற்றறிந் தோர்’ ஆகலின்.

(44)

45. தொண்டுசெய்து வழிபட்டுச்
சுருதிபுகழ் களாவீசன்
புண்டரிக மலர்த்தாளைப்
போற்றிமுதற் பேறுபெற்றார்
அண்டர்பிரான் நான்முகத்தோன்
ஆழியான் இவரென்றால்
மண்டனிஞா லத்தெளிய
மானுடரோ வழுத்துவார்!

வேதம் புகழும் திருக்களாநிழலில் எழுந்தருளியிருக்கும் இறைவனது தாமரைமலரை யொத்த திருவடியை வணங்கித் திருத்தொண்டுசெய்து பூசித்து முன்பு (பதவி அதிகாரமுதலிய பலவகையான) பயன்களைப் பெற்றவர்கள் தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனும், நான்கு முகங்களையுடைய பிரமனும், (சுதரிசனமென்னும்) சக்கரத்தையுடைய திருமாலுமாகிய இவர் களானால், மண்ணாலான ஒப்பில்லாத நிலவுலகத்துள்ள வலியில்லாத மக்கட் பிறப்பினரோ அவன் திருவடிப் புகழைப் பேசுதற்கு அருகர் ! (அல்லர்).

 


54


சுருதி-வேதம். புண்டரிகம்-தாமரை. அண்டர்பிரான்-தேவர்தலைவன். ஆழி- சக்கரம். ஞாலம்-உலகம். தனி-ஒப்பற்ற.

இந்திரன் முதலியோர் சிவபெருமான் திருவடியைப் போற்றிப் பேறுபெற்றனர் என்பதைப் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்துள்,

‘வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தேன் இறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்’

எனவரும் செய்யுளாலும் அறியலாகும். தேவலோகங்களினும் இவ்வுலகம் தாழ்ந்ததாயி னும், முத்திக்குச் சாதனமான மக்கள் யாக்கை நிலவுவதற்கு இடமாவது இவ்வுலகமே யாதலால் ‘தனி ஞாலம்’ என்றார். ‘திணிஞாலம்’ எனப் பாடங்கொள்வாரும் உளர். ஆழியான், கடலிற் றுயில்வோனுமாம்.

(45)

46. வழுத்திடுவேன் நாவார ;
மலரிடுவேன் கரங்கொண்டு ;
தொழத்தகுவேன் முடிதாழ்த்தி ;
சூழ்வருவேன் துணைரத்தாளால்;
அழுத்திடுவேன் மனத்துன்னை ;
அகம்புறமொன் றாயுருகிப்
பழித்திடுவேன் அருள்கனிய :
பால்வண்ணா ! நம்பரனே !

பால்வண்ணனே! நமது பரமனே! உனது திருவருள் சுரக்க, எனது நாத் தெவிட்டத் துதிப்பேன் ; எனது கையால் மலர்கொண்டு அருச்சிப்பேன் ; தலையை வளைத்து வணங்குவேன் ; எனது இரண்டு கால்களால் பிரதக்ஷிணஞ் செய்வேன் ; மனத்தில் உன்னைத் தியானிப்பேன்; அகமும் புறமும் ஒருசேரவுருகித் துதிப்பேன்.

 

 

55

பழிச்சிடுவேன் எனற்பாலது பழித்திடுவேன் என நின்றது, சகரத்துக்குத் தகரம் போலியாதலின். பழிச்சல்-துதித்தல் ‘பழுத்திடுவேன் ’ என்பதும் பாடம். இடு, தகு, வரு என்பன துணை வினைகள்.

(46)

47. நம்பியுன தருள்வேட்டு
நடுக்கடலுட் கலங்கவிழ்த்து
வெம்புதுயர் மனத்தார்போல்
மெலிகின்றேன் நெடுநாளா ;
கும்பமுனிக் கருள்புரியுங்
கொற்றவனே ! முகலிங்கா !
தும்பைமுடித் தோய்!புரக்க
இரக்கமின்னந் தோன்றாதோ !

அகத்திய முனிவருக்கருளிய வெற்றியை யுடையவனே! முகலிங்கனே! தும்பை மலரை முடியிற்சூடியவனே! உனது திருவருளை ஒரு பற்றுக்கோடாகக்கொண்டு, அதனை விரும்பி, கடல் நடுவுள் தமது மரக்கலத்தைக் கவிழ்த்து, அதனை மீட்டும் பெறவருந்தும் துன்பம் வாய்ந்த மனத்தையுடையவர்போல, நெடுநாளாக மன மெலி கின்றேன்; என்னைப் பாதுகாக்க இன்னமும் திருவுள்ளத்தில் இரக்கம் வராதா ? (வரவேண்டும் என்பது கருத்து.)

கலம்-கப்பல். ‘கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட’ என்றார் பிறரும். கும்பமுனி-அகத்தியர். தும்பை-தும்பைமலர்.

விரைவிற் கரைசேர்க்கவல்ல புணை ஒன்றைக் கண்டு அதை அடைய விரும்பித் தாம் செல்லும் கலத்தைக் கவிழ்த்தார்போல, யானும் உனது திருவருளாகிய புணையைக் கண்டு அதுகொண்டு விரைவிற் கரைசேரலாமென்று நம்பி அதை அடைய விரும்பியான் பற்றாகப் பற்றியிருந்த இவ்வுலகப் பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தேன். ஆயினும் இன்னும் உன் திருவருட்புணை என் கைக்கெட்டிலது. நெடுநாளாய் வருந்துகின்றேன். ஆதலால்

 


56


நீ இனியும் தாமதியாமல் என்னைக் காக்க உன் திருவருட்புணையை எனக்கு அளித்தருள் என்பார் ‘புரக்க இரக்க மின்னந்தோன்றாதா’ என்றார். ‘கவிழ்ந்து’ என்பது பாடமாயின் கவிழ என்னும் வினையெச்சத் திரிபாகக் கொள்க. நடுக் கடல்-கடல் நடு, இலக்கணப் போலி.

(47)

48. தோன்றியபோ துடன்தோன்றித்
தோன்றாது மறைத்தென்னை
ஆன்றசெழுஞ் செம்பிலுறை
களிம்புபோல் அகலாமல்
ஊன்றுமலத் துகளகற்றி
உன் அருளும் பெறுவேனோ ?
மூன்றுலகுந் தொழுதேத்தும்
முகலிங்கா ! முதற்பொருளே !

மேல் கீழ் நடுவான) மூன்றுலகமும் வணங்கித்துதிக்கும் முகலிங்கனே! அனைத்தினுக்கும் முதலாயுள்ளவனே! யான் தோன்றியபோது, பொருந்திய செழுமையான செம்பில் களிம்புபோல், என்னுடன் தோன்றி, யான்தோன்றாமல் என்னை மறைத்து (என்னைவிட்டு) நீங்காமல் அழுந்திய மலக்குற்றத்தை யொழித்து, உனது திருவருளும் பெற்றுய்வேனோ? (யானறியேன்.)

துகள்-குற்றம். செம்பிற் களிம்புபோல் மலம் ஆன்மாவை அனாதியே பற்றி யுள்ளதென்பது,

நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே-வல்லி
மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
அலர்சோகம் செய்கமலத் தாம்’

எனவருந் திருவாக்காற் பெறப்படும்.

(48)

 

57

49. பொருள்வேட்டும் நிலம்வேட்டும்
பூவையர்தம் புணர்கலவி
மருள்வேட்டும் நாடோறும்
மனவலிகெட் டயர்கின்றேன் ;
அருள்வேட்டுன் சன்னிதிப்பட்
டருந்துயர்போய் உய்வேனோ ?
தெருள்வேட்டார்க் கருள்புரியுந்
திருக்களவில் உறைவோனே.

(சிவ) ஞானத்தினை விரும்புவோர்க்குத் திருவருள் செய்யும் திருக்களா நிழலில் எழுந்தருளிய இறைவனே ! எந்நாளும், பொன்னை விரும்பியும் பூமியை விரும்பியும், நாகணவாய்ப் பட்சிபோலுஞ் சொற்களையுடைய பெண்களோடு புணரும் புணர்ச்சியின் மயக்கத்தை விரும்பியும், மனவலியிழந்து சோர்கின்றேன் ; உனது திருவருளை விரும்பி உன் சந்நிதியை யடைந்து நீங்குதற்கரிய பிறவித் துன்பத்தினின்று நீங்கி நான் பிழைப்பேனோ?

வேட்டு-விரும்பி (வேள், பகுதி). பூவை-நாகணவாய்ப்புள்; கிளியுமாம். மருள்-மயக்கம். தெருள்-ஞானம்.

அன்னையும் அழுதமகவுக்கே அமுதூட்டுவள் ஆதலின், நின் திருவடிஞானத்தை விரும்பினார்க்கே நீ அதனை அருள்வை ; யானோ பொருளையும் நிலத்தையும் பூவை யரையுமே காதலித்து, இக் காதலால் வருவது துன்பமேயாதலால் துன்பமுற்று மன வலிமைகெட்டுச் சோர்கின்றேனே யன்றி நின் திருவடிஞானத்தைக் காதலித்திலேன். எனக்கு நின் அருள்கிட்டுமா றெங்ஙனம்? கிட்டாவழி யான் துயரகன்று உய்தல் கூடுமோ, கூடாதே என்று இரங்குவார் ‘உய்வேனோ’ என்றார். யான் தோன்றா எழுவாய். அயர்கின்றேன் என்பதை எழுவாயாக்கி அயர்கின்ற நான் எனலும் ஒன்று.

(49)


58


50. உறைவாய்நன் மனத்தன்பர்
உடல்தோறும் உயிராகி ;
நிறைவாய்எவ் வுலகனைத்தும்
நீக்கமிலா துணர்ந்தோர்க்கு ;
மறைவாய்உய்த் துணரார்க்கு :
மறைபயிலுங் கருவையில்வாழ்
இறைவா !நின் திருவிளையாட்(டு)
யான்வழுத்த அடங்காதே.

(உன்னை வழிபடும்) நல்ல மனத்தையுடைய அடியாரது சரீரந்தோறும் அவர்கள் உயிரே நீயாகித் தங்கி அருள்வாய்; உன்னை உணர்ந்த சிவஞானிகளுக்கு எல்லாவுலக முற்றும் எள்ளுக்குள் எண்ணெய்போல் நீங்காது நிறைந்தருளுவாய்; உன்னை ஆராய்ந்தறியாதவர்க்கு மறைந்தருளுவாய்: நான்குவேதங்களும் வழங்கும் திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! இவ்வாறுள்ள உனது திருவிளையாடலை, யான் எடுத்துத் துதிக்க, என் துதியில் (அஃது) அடங்காது.

சிவபெருமான் எங்கும் எப்பொருளினும் பாலில்நெய்போலப் பரந்து மறைந்துளனாயினும், தன்னை உணர்ந்து வழிபடும் அன்பருள்ளத்தே உயிர்க்குயிராகி உறைவான் என்பதை ‘கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்-சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று-பிறந்த பிறப்பறுக்குமெங்கள் பெருமான்’ என வரும் திருவாதவூரடிகள் திருவாக்கினும் காண்க. ‘உய்த்துணரார்க்கு மறைவாய்’ என்றார் புறத்தார்க்குச் சேயோனாதலின்.

(50)

 

59

ஆறாம்பத்து

முதற்சீரும் மூன்றாஞ்சீரும் ஐந்தாஞ்சீரும்
காய்ச்சீர்களாகவும் மற்றைய மாச்சீர்களாகவும் வந்த

எழுசீர் ஆசிரிய விருத்தம்.

51. காதற்பெ ருக்கும் ஒருகோடி கோடி
கவலைப்பெ ருக்கும் மிகலாய்
வாதைப்ப டுத்த அலைமாறு போல
மனமாலு ழன்று விடவோ !
வேதப்பெ ருக்கு முழவோசை விம்மு
விழவிற்பெ ருக்கும் இயல்கூர்
நாதப்பெ ருக்கும் ஒழியாது மல்கு
கருவேச! ஞான உருவே.

அளவில்லாத வேதங்களின் ஓசையும், வாச்சியத்தின் ஓசையும், எங்கும் பரவிய உற்சவங்களிலுள்ள ஆரவாரப் பெருக்கும், இலக்கணமமைந்த விணைமுதலிய வாச்சியங்களின் ஒலியும், நீங்காதுநிறைந்த திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! கடலலை ஒன்றன்பின்னொன்று மாறுபட்டு வருதல்போல, எனக்குள்ள ஆசைப் பெருக்கம் ஒரு கோடியும் கவலைப்பெருக்கம் ஒருகோடியும் ஆக மிகுந்து வாதை செய்ய எனது மனம் இம் மயக்கத்திற் சுழன்று அலையக்கடவேனோ? (தேவரீர் திருவுள்ளம் யானறியேன்.)

மால்-மயக்கம். விழவு-விழா-உற்சவம். முழவு-ஒருவகை இசைக் கருவி. மல்குதல்-நிறைதல். காதல்-ஆசை.

ஆசையாவது பற்று. பற்றின் வருவதே கவலையாதலால் ‘ காதற்பெ ருக்கு மொருகோடி கோடி, கவலைபெருக்கு மிகலாய் ’ என்றார். ‘ ஒருகோடி கோடி ’ என்பது மிகுதி குறித்தது. ஓசைகள் பலகூடிக் கலங்கினாற்போல பலதிறப்பட்ட காதலும் கவலையும்கூட என்மனம் கலங்குகிறதென்பார், வேதப்பெருக்கு முதலா

 


60


யின ‘ஒழியாது மல்கு கருவேச’ என விளித்தார். அலை எழுந்தும் விழுந்தும் மாறுதல்போல என் மனமும் காதலால் எழுந்தும் கவலையால் விழுந்துந் தடுமாறிச் சுழல்கின்றதென்பார் ‘ அலைமாறு போல மனமா லுழன்று விடவோ ’ என்றார்.

(51)

52. உருவாகி நிற்றி ; அருவாகி நிற்றி ;
உயிரோடெ வைக்கும் உறவாய்,
மருவாகி நிற்றி ; மலராகி நிற்றி ;
மறையாகி நிற்றி ; மறையின்
பொருளாகி நிற்றி ; உனையான றிந்து
புகழ்கின்ற வாறும் அறியேன் ;
கருவாபு ரிக்குள் உறைதேவ தேவ !
கதியேதெ னக்கு மொழியே.

கருவாபுரியில் எழுந்தருளிய திருமால் முதலிய தேவர்களுக்குத் தேவனே ! திருவுருவங்கொண்டு நிற்கின்றாய்; அரூபியாயும் நிற்கின்றாய்; சித்துப்பொருள்களோடு எப்பொருளுக்கும் உறவாய் விரவி, மலரும் வாசனையும் போல நிற்கின்றாய் ; வேதமாகி நிற்கின்றாய்; வேதத்தின் பொருளாகி நிற்கின்றாய்; நீ இவ்வாறு நிற்றலால் நான் உன்னை ஐயமறவுணர்ந்து, உன்னை வாழ்த்தும்வகையையும் அறியேன் ; (உன்னை வாழ்த்துதற்கு இயலாதேனும் எனக்கு உன்னையன்றித்) துணையேது? கூறியருளாய்.

நிற்றி-நிற்கின்றாய். (முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று. நில்-பகுதி, து-சாரியை, இ-விகுதி. லகரம் றகரமானதும் உகரம் கெட்டதும் சந்தி.)

உருவும் அருவுமாகவும், உலகத்தோடு முயிர்களோடும் ஒன்றியும் ஒன்றாமலும், மலரும் மணமும்போலவும், வேதமேயாகவும் வேதத்தின் பொருளாகவும்-இப்படி இன்னது என்று துணியப் படா இயல்பினையாதலின் உன்னை அறிவதரிதாயுள்ளது. ஆதலின் ‘ அறிந்து புகழ்கின்றவாறும் அறியேன் ’ என்றார்.

(52)

 

61

53. மொழிகின்ற ஆறு சமயங்கள் தோறும்
முழுதுஞ்சு ழன்று நிலையற்(று)
அழிகின்ற சிந்தை அவலங்கெ டுத்துன்
அடிகண்டு நாடி யறியும்
விழியுங் கொடுத்த முகலிங்க நாத!
மிகுமன்பர் தேடு பொருளே!
பொழியுங் கடைக்கண் அருளால ளித்தி
புரையற்ற முத்தி நிலையே.

அறுவகையாகச் சொல்லப்படுகின்ற புறச்சமயங்களிலெல்லாம் முழுவதும் சுழற்சியை யடைந்து நிற்கும் நிலை கெட்டு அழியாநின்ற மனத்திலுள்ள துன்பத்தை யொழித்ததேயன்றி உன் திருவடியைத் தேடியுணர்ந்து தரிசிக்க ஞானக்கண்ணை அடியேனுக்குக் கொடுத்தும் அருளிய முகலிங்க நாதனே ! முறுகிய அன்பினை யுடையோர் ஈட்டும் ஞானச்செல்வமே! குற்றமற்ற மோக்ஷ நிலையைத் திருக்கடைக்கண் சுரக்கும் அருளால் (எனக்குக்) கொடுத்தருளாய்.

புறச்சமயங்க ளாறாவன-உலோகாயதம், சௌந்திராந்திகம், யோகாசாரம், மாத்தி மீகம், வைபாடிகம், ஆருகதம். அவலம்-துன்பம். புரை அற்ற-குற்றம் இல்லாத.

கணப்பொழுதேனும் ஒரு நிலையில் நில்லாமல் எப்பொழுதும் கறங்குபோற் சுழன்று திரிவது மனத்தின் இயற்கை. ஆதலின் பற்றுக்கோடொன்று இல்லாவிடத்து, அது நங்கூரமும் மீகாமனு மற்ற மரக்கலம்போல துறைதெரியாது ஓடித் தெறிகெட்டுப் போம். அவ்வாறு கெட்டொழியாமைப்பொருட்டு அம் மனத்தினை ஒரு நிலையிற் பிணித்துவைத்தல் இன்றியமையாது வேண்டப்படுவதாம். சுழலும் இயல்புடைய மனத்தினுக்கு ஒரு பற்றுக் கோடாகும் அந் நிலையே சமயம் எனப்படும். ஆதலின், பற்றுக் கோடாம் எனக் கருதி யான் பற்றிய அப் பற்றுக்கோடெல்லாம்.

 


62


பற்றுக்கே டாகா தொழியவே, என் சிந்தை தன் இயல்பின்படி நிலையற்றுச் சுழன்று துன்புற்றது. அச் சமயம் நீ நின் திருவடிகளை எனக்குப் பற்றுக்கோடாக அருளி என் மனத்துன்பத்தை யொழித்தாய் என்பார் ‘சிந்தை அவலங்கெடுத்து’ என்றார். ‘விழியும் கொடுத்த’ என்பதில் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை; ‘விழிகொடுத்தும்’ எனக்கொண்டு ‘அருளிய’ என்பதை இசையெச்சமாகக் கொள்க: அவலங் கெடுத்தருளியதேயன்றி விழி கொடுத்துமருளிய என்பது பொருளாம்.  

(53)

54. முத்திக்கு வித்து;(உ)ன் அடியார்கள் சிந்தை
முளரிக்க ருக்கன்; மொழியெண்
சித்திக்கு மூலம்; தவயோகி கட்குத்
தெளிகன்னல் ஊறும் அமிர்தம்;
பத்திக்கு நித்தம் அருள்வீசு கொண்டல்:
களவீசன் எங்கள் பரமன்
அத்திக்கு முன்னம் வரமேய ளித்த
கருவேசன் அம்பொன் அடியே.

திருக்களா நிழலில் எழுந்தருளிய இறைவனும் எங்கள் கடவுளும் வெள்ளை யானைக்கு முன்பு வரந்தந்தருளியவனும், திருக்கருவையில் எழுந்தருளியவனுமான ஈசனது அழகிய பொன் போலும் அரிய திருவடி, மோக்ஷ நிலத்துக்கு ஒரு விதை; கருதும் அடியவர் களது சிந்தையாகிய தாமரை மலர்தற்கு ஒரு சூரியன்; கூறும் அட்டமாசித்திக்கும் காரணம்; தவசிகளுக்கும் சிவயோகிகளுக்கும் (முறையே) தெளிந்த கருப்பஞ்சாறும், (இடையறாது)ஊறி வரும் அமிர்தமும்; அடியவர்செய்யும் பத்திக்குக் கருணா மழை பொழியும் மேகம்.

முளரி-தாமரை. அருக்கன்-சூரியன். கன்னல்-கரும்பு; ஈண்டுத் தெளி என்னும் அடையால் கரும்பின் இரசத்தைக் குறித்தது. கொண்டல்-மேகம். அத்தி-யானை.

 

 

63

உன் அடியார், வினைத்தொகை.

தொழும்பினாலும் தவத்தினாலும் யோகத்தினாலும் பக்தியினாலும், முறையே சிவபெருமானடிக்குப் பாத்திரரான அடியார், தவசியர், யோகியர், பக்தர் என்னும் இத்திறப்பட்டோர்க்குச் சிவபெருமான் திருவடி இத்திறப்படுமென்பது இச்செய்யுள். அடியார் முதலான அனைவோரும் விழைவது முத்திப்பேறே யாதலின் அம்முத்திப் பேற்றுக்கு மூலமாயிருப்பது திருவடியென்பதை முதற்கண் கூறினார்.

தவயோகிகள் என்பதனைக் ‘ கபிலபரணர் ’ என்பதுபோலக் கொள்க. ‘தவசிகட் கும் யோகிகட்கும் முறையே கன்னலும் அமிர்தமுமாய்’ எனப் பொருள் படுதலின் இது நிரனிறைப்பொருள்கோள். திருவடிக்குவமை அவரவர் தன்மைக் கேற்ப வேறுபடுமாறு கூர்ந்து நோக்கிக் கண்டுகொள்க.

‘தெளிகன்ன லூறுமிரதம்’ என்பதும் பாடம். இரதம்-இரசம்.

எண்சித்திகளாவன-அணிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்து வம், வசித்துவம். திருவடி ஒன்றையே பலவாகவுருவகஞ் செய்தமையால் இஃது ஏகாங்கவுருவணி.

(54)

55. அடியா ரிழைத்த பிழைகோடி நெஞ்சின்
அறியாத ஆதி முதல்வன்,
கொடியார் புரத்தை அழல்மூட அன்று
குறுமூரல் கொண்ட குழகன்,
நெடியோன் வழுத்து களவீசன் என்று
நினைதோறும் உள்ளம் நெகிழ
முடியேறும் அங்கை; புளகிக்கும் மேனி;
முகிழிக்கும் என்கண் இணையே.

தன தடியவர்செய்த அளவில்லாத பிழைகளைத் தனது திருவுளத்தி லெண்ணாத ஆதியாகிய முதல்வன், தமது அடிமைத் திறத்தினின்றும் மாறுபட்ட கொடியவர் திரி

 


64


புரத்தை அக்கினி சூழும்படி புன்னகையரும்பிய பேரழ குடையவன், திருமால் துதிக்கும் திருக்களாநிழலில் எழுந்தருளிய இறைவன், என்று நினைக்குந்தோறும் எனது மனமிளக, உள்ளங்கைகள் (ஒன்றி) எனது தலைமீதேறிக் குவியும்; உடல் புளகங்கொள்ளும்; எனது இரண்டு கண்களும் குவியும்.

குறுமூரல்-புன்னகை. குழகன்-சிவபெருமான்-அழகுடையவன்; குழகம்-அழகு. புளகிக்கும்-சிலிர்க்கும். முகிழிக்கும்-முகிழ்க்கும்-குவியும்.

பக்திமேலீட்டால் உள்ளம் நெகிழ்தலும், கைகுவிதலும், மேனி சிலிர்த்தலும், கண்ணிமைகள் சோர்ந்து குவிதலும் இயல்பாதலறிக. மேனி சிலிர்த்தல் முதலியபோலவே கைகுவித்தலும் பக்திமேலீட்டால் தன் குறிப்பின்றி நிகழுமாகலின் ‘ முடியேறும் அங்கை’ எனத் தன்வினை வாய்பாட்டாற் கூறினார்.

விம்மிதம் புளகம் போர்த்தல் விழிப்புனல் மொழிதள் ளாடல்
செம்மைசேர் சரியை யாதி திருத்தொண்டு துதிதி யானம்
அம்மவோ திருப்ப ணிக்கென் றீட்டுவ தழித்துண் ணாமை
எம்மையா ளுடையான் தொண்டர் எண்வகைப் பத்தி மாதோ

என்பது திருக்குற்றாலப் புராணம்.

அடியார்செய்யும் மறங்களை அறங்களாகக் கொண்டது சிவ பூசைக்கிடையூறு செய்த தமது பிதாவின்காலைச் சேதித்து முத்தியடைந்த சண்டேசநாயனார் முதலியோரிடத்தும், கொடியவர் செய்யும் மறங்களை மறங்களாகவேகொண்டு அன்றே யொறுத்தலைத் திரிபுரவாசிகள் முதலியோரிடத்தும் காண்க.

(55)

56. என்கண் ணிடத்தின் அகலாத செல்வன்
எழிலார் களாவின் முதல்வன்
வன்கண் ணர்நெஞ்சு புகுதாத நம்பன்
மனமாச றுத்த பெருமான்

 


65

புன்கண் அகற்றி அடியாரை வீடு
புகுவித்து நின்ற புனிதன்
தன்கண் எனக்கு முடியாத அன்பு
தாஎன்கொல் செய்த தவமே!

எனது அகக்கண்ணினின்றும் நீங்காத ஞானச்செல்வனும், அழகு நிறைந்த களாவின் நிழலில் எழுந்தருளிய முதல்வனும், பாவிகளது நெஞ்சில் குடியேறுதல் சிறிது முணராத எப்பொருட்கும் தலைவனும், அடியேனது மனக்குற்றத்தை ஒழிக்கும் பெருமானும், பிறவித் துன்பத்தை யொழித்து அடியவர்களை முத்தி வீட்டில் குடியேற்றி நின்றருளிய மலரகிதனுமாகிய இறைவன், தன்னிடத்து, அடியேனுக்கு அளவில்லாத அன்பு தந்தருள அடியேன் செய்த தவம் யாது! (அறியேன்.)

எழில் ஆர்-அழகுபொருந்திய. வன்கண்-கொடுமை. புன்கண்-துன்பம். புனிதன்-பரிசுத்தன். தன்கண்-தன்னிடத்து (ஈண்டுக் கண் என்பது இடப்பொருளுணர்த்தும் ஏழாம் வேற்றுமையுருபு). முடியாத-அளவில்லாத.

வன்கண்ணர்-அன்பிற்குப் புறம்பாக நிற்கும் வன்னெஞ்சர். இறைவன் அன்புவடிவினனாதலால், அன்பிலார் உள்ளத்தில் விளங்கித் தோற்றானென்பது பற்றி ‘ வன்கண்ணர் நெஞ்சு புகுதாத நம்பன் ’ என்றார். திருவாதவூரடிகள் ‘புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க ’ என்று அருளிச் செய்ததும் காண்க.

(56)

57. தவமும் தவத்தின் உறுபேறு மான
தலைவா!க ளாவின் முதலே!
புவனங் களாவை; உயிர்வர்க்க மாவை;
நுகர்போக மாவை; புகலும்
திவசங் களாதி வருகால மாவை;
தெளிவார்தெ ளிந்த அமையத்
திவையன் றிநிற்பை: எனின்,ஐய ! நெஞ்சின்
எவரே மதிப்பர் உனையே.

 

66


அடியவர் செய்யும் தவமும், அத் தவத்தால் வரும் பயனும் ஆகிய இறைவனே! திருக்களாநிழலில் எழுந்தருளிய தலைவனே! எல்லாப் புவனங் களுமா வாய் ; அவற்றிலுள்ள சீவராசிகளுமாவாய்; அவ்வான்மாக்கள் நுகரும் போகங்களும் ஆவாய்; சொல்லும், நாள்முதலாக வரும் காலதத்துவமாவாய்; உன்னை உணர்வார் உணர்ந்த சமயத்தில் இவைகளல்லாமல் நிற்பாய்; என்றால், (இவ்வாறு நீ கலந்து நிற்றலால் உன்னை ) மனத்தில் கருதவல்லவர் யாவர்? (ஒருவருமிலர்.)

ஆவை-ஆவாய்; (ஐகாரவீற்று முன்னிலை வினைமுற்று). திவசம்-நாள். அமையம்-சமயம். ஐய-ஐயனே; (ஈறுகெட்டு விளியாயது).

உலகமும் உலகத்துயிர்களும் நீயே யாவை என்பது ‘ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி-பகவன் முதற்றே யுலகு’ என ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அருளியமைகொண்டும் அறியப்படும். உலகம் முதலிய யாவும் தானேயாகும் இறைவன் ஞானிகள் அறிவு தெளிந்து நிற்கும் அனுபவநிலையில் உலகாதிகளின் வேறே தனித்துக் காணப்படுவன் என்று ஆகம நூல்கள் கூறினவாதலின் ‘தெளிவார் தெளிந்த அமையத் திவையன்றி நிற்பை’ என்றார்.

(57)

58. உன்நாமம்ஓதி உனையேவ ணங்கி
உறுபூசை பேணும் உரவோர்
பொன்னா டளிக்க வரம்நல்கும் ஆதி
புனிதா!க ளாவில் உறைவோய் !
முன்னே உனக்கியான் அடியானும் அல்லன் ;
முழுஞானி அல்லன் எளியேன் ;
என்னே ! பிழைத்த பிழைகோடி உள்ள
எனிலும்பு ரத்தல் கடனே.

உனது திருநாமங்களை எடுத்துக் கூறி, உன்னையே பணிந்து மிக்க பூசை செய்யும் ஞானிகள் பொன்னுல

 


67

கத்தைக் காக்க வரந்தந்தருளும் முதலாயுள்ள புனிதனே! களாநிழலில் எழுந்தருளிய இறைவனே! அறிவிற் சிறியேனாகிய யான், முன்னமே தேவரீருக்குத் தொண்டு பட்டொழுகுவேனும் அல்லேன்; சிவஞானியும் அல்லேன்; ஐயோ, உனக்கு எளியேன் செய்தபிழை கோடி யுள்ளன வானாலும் என்னைப் பாது காத்தல் உன் கடனாம்.

உரவோர்-ஞானிகள், (உரம்-அறிவு). புர-காப்பாற்று.

ஈசன் திருவடி யெய்தற்கு அன்பும் அறிவும் இன்றியமையாது வேண்டப்படும். இதனை ‘ அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே ’ எனவும் ‘ஞானமலது கதிகூடுமோ ’ எனவும் இவ்வாறெல்லாம் எழுந்த ஆன்றோர் திருவாக்குகள் கண்டு தெளிக. அன்பாலும் அறிவாலும் ஈசனடிக் காட்படுவோரில் அன்பு அறிவினும் மிகுந்து நிற்கப்பெற்றவர் பக்தரெனவும், அறிவு அன்பினும் மிகுந்து நிற்கப்பெற்றவர் ஞானிகளெனவும் கூறப்படுவர். இவ்விருதிறத்தாருள் யான் ஒரு திறத்தாரினும் சேர்ந்தவனல்லேன் என்பார் ‘அடியானுமல்லன் ஞானியல்லன் ’ என்றார். ‘ ஞானியும் ’ எனற்பாலது உம்மை தொக்கு ஞானி என நின்றது.

(58)

59. கடவா ரணத்தின் உரிபோர்வை கொண்ட
கருவேச! ஆதி முதல்வா!
சடவா தனைக்குள் அவமேகி டந்து
தடுமாறு நெஞ்ச முடையேன்
அடைவாய் வழுத்தி வழிபாடு செய்துன்
அடிபேண ஒன்றும் அறியேன் ;
மடமால் அகற்றி யிடுமாற ளிக்கும்
வரம்நீ கொடுக்கும் வரமே.

மதத்தையுடைய யானையின் தோலைப் போர்வையாகக்கொண்ட கருவை யிலெழுந்தருளிய ஈசனே! ஆதியாகிய முதல்வனே ! சடமாயுள்ள பொருள்களின் பழக்கத்துள்

 

68


வீணேகிடந்து தடுமாறா நின்ற மனத்தையுடையேன், முறையாக உன்னைத் துதிசெய்து தொண்டுபட்டொழுகி, உனது திருவடியை விரும்பச் சிறிதும் அறியேன்; (ஆதலால்) அறியாமையாகிய ஆணவமலத்தால்வரும் மயக்கத்தை அகற்றும் வண்ணம் கொடுத்தருளும் வரமே, நீ அடியேனுக்குக் கொடுக்கத்தக்க வரமாம்.

கடம்-மதம். வாரணம்-யானை. உரி-தோல். சடம்-அறிவற்ற பொருள்கள். வாதனை-வாசனை-பழக்கம். அடைவாய்-முறையாய் ; ‘நூலடைவு’ என வருதல் காண்க. மடம்-அறியாமை. மால்-மயக்கம். அறிவை மறைத்து அறியாமையாகிய மயக்கத்தைச் செய்வது ஆணவமலமே யாதலின் மடமால் என்றது அறியாமையாகிய ஆணவமலத்தால் வரும் மயக்கத்தை.

(கொடுக்கும்) வரம்-எழுவாய்; (அளிக்கும்)வரம்-பயனிலை.

60. வரையா தியற்றி யிடுபாவ காரி;
மறமன்றி வேறு புரியேன்;
விரைமா லைசுற்று குழலாரி டத்து
மிகஆசை வைத்து மெலிவேன்;
கரையா திருக்கும் மனநீக ரைத்துன்
அடிபாட வைத்த கதைநான்
உரையால் நிறைக்க முடியாது முக்கண்
உடையாய்! களாவின் ஒளியே!

(நன்று தீது என்பவற்றுள் தீதினை) நீக்காது, அதனைச் செய்யும் பாவமுடை யேன்; (ஆதலால்) அப் பாவத்தொழிலன்றி வேறு சிறிதுஞ் செய்யேன்; வாசமிக்க கூந்தலையுடைய பெண்களிடத்து மிகவும் ஆசைகொண்டு மெலியா நின்றேன்; திரிநேத்திரங்களை யுடையவனே! திருக்களாநிழற்கீ ழெழுந்தருளிய ஒளிப் பிழம்பே! உருகாதிருக்கும் என்மனத்தை நீ உருக்கி, உன் திருவடியைப்

 


69

புகழ்ந்து பாடவைத்த கதையினை, நான் சொல்லால் அளவறுக்க ஒண்ணாது.

வரையாது-நீக்காது. பாவகாரி-பாவமுடையேன். மறம்-பாவம். விரை-வாசனை.

செய்தற்பாலது அறம்; நீக்கற் பாலது மறம். யானோ நீக்கற் பாலதையே செய்கின்றேன், செய்தற்பாலதை ஒரு சிறிதும் செய்கின்றிலேன் என்பார், ‘ வரையா தியற்றி யிடுபாவ காரி, மறமன்றி வேறு புரியேன்’ என்றார். ‘விரைமாலை சுற்று குழலார்’ என்றதால், ஆடவரை மயக்கித் தம் வலையிற் சிக்குவிப்பதே நோக்கமாகக் கொண்டு தம்மை நறுமலராகியவற்றால் அலங்கரித்துக்கொள்ளும் பரத்தையரே ஈண்டுச் சுட்டப்பட்டோரென்ப துணரப்படும். (60)

ஏழாம் பத்து

முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களாகவும்
மற்றைய நான்கும் மாச்சீர்களாகவும் வந்த

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

61. ஒளிமதி முடித்த வேணி
ஒருவனே ! கருவை யானே !
தெளிவுறா நெஞ்சந் தன்னைத்
தெருட்டிநின் நிலையைக் காட்டி
அருளினா லென்னை யாண்ட
அருட்குன்றே! உன்னை யின்னும்
எளியனேன் பிறவி வேட்டோ
ஏத்திடா திருக்கின் றேனே !

ஒளிவாய்ந்த இளஞ்சந்திரனை யணிந்த சடாமுடியையுடைய ஒருவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! தெளியாத என்மனத்தைத் தெளியச்செய்து, நீ அருளும் நிலையை (நீ கொண்டருளிவந்த ஆசிரியத் திரு

 


70


வுருவாற்) காட்டித் திருவருளினால் என்னை யடிமை கொண்ட கருணாமலையே ! இன்னும் எளியேன், பிறவியை விரும்பியோ உன்னை வணங்காதிருக்கின்றேன் !

தெருட்டி-அறிவுறுத்தி; இறந்தகால வினையெச்சம்; தெருள் என்னும் தன் வினைப்பகுதி தெருட்டு என்னும் பிறவினைப் பகுதியாகி, இறந்த காலங்காட்டும் இகரவிகுதி புணர்ந்து முடிந்தது. வேட்டு-விரும்பி; வேள்-பகுதி, டகரம்-இடைநிலை, உ-விகுதி, ளகரம் டகரமானது சந்தி.

(61)

62. இருக்கினும் நிற்கும் போதும்
இரவுகண் துயிலும் போதும்
பொருக்கென நடக்கும் போதும்
பொருந்தியே துய்க்கும் போதும்
முருக்கிதழ்க் கனிவா யாரை
முயங்கிநெஞ் சழியும் போதும்
திருக்களா வுடைய நம்பா !
சிந்தையுன் பால தாமே.

இருக்கும் பொழுதும், நிற்கும் பொழுதும், இரவில் நித்திரை செய்யும் பொழுதும், விரைந்து நடக்கும்பொழுதும், அறுசுவையோடு உணவு நுகருங்காலத் தும், முருக்க மலர்போன்ற இதழையும் கனி(போலும் இனியமொழிகள் கூறும்) வாயையுமுடைய பெண்களைக்கூடி மனமழியும் பொழுதும், திருக்களா நீழலிலெழுந் தருளிய இறைவனே ! அடியேன் மனம் உன்னிடத்ததாம்.

பொருக்கென-விரைவுப் பொருள்தரும் ஒரு குறிப்புமொழி. துய்த்தல் அனுபவித்தல்.

ஓரிடத்தமர்ந்து இறைவனைச் சிந்தித்தலினும் நின்றுகொண்டு சிந்தித்தல் அரிது; அதனினும் அரிது படுக்கையிற்கிடந்து சிந்தித்தல்; அதனினும் அரிது நடந்து கொண்டு சிந்தித்தல்; அதனினும்

 

 

71

அரிது சுவைப்புலன்வழியே மனத்தைச் செலுத்தி உணவுகொள்ளும்போது சிந்தித்தல்; அதனினும் அரிது ஐம்புலனையும் காம நுகர்ச்சியிற் செலுத்தி மனமழிந்து நிற்கும்போது இறைவனைச் சிந்தித்தல். இங்ஙனம் ஒன்றினொன்று அருமையுடைத்தாதல் பற்றி அம்முறையே கூறினார். இவ்வாறு ‘எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்’ சிந்தையைச் சிவன்பாலே வைத்தல் அவனடிக் கன்பிலாதவழி இயலாதாகலின் ‘உன் திருவடிமீ தன்புடையேன்’ என்பது கருத்தாகக் கொள்க. கொள்ளவே, ‘சிற்றின்பத்துழலும் சிறியனேனும் யான் நின் திருவடிசாரும் பேரின்பப் பேற்றுக்கு உரியனாவேன்’ என்றாராம். என்னை? இறைவனடிக்கு இடையறாத அன்புடையார் எந்நிலையில் நின்றாரேனும் இறைவனடி சார்வர் என்பது நூல்களின் துணிபாதலால் என்க. இக்கருத்தானே திருவெண்காட்டடிகளும்,

காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஒடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர்க் கோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு நல்லன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே

என்றருளிச் செய்தமை காண்க.  

‘இருக்கினும்’ என்பதில் இன் என்பதைத் தவிர்வழிவந்த சாரியையாகக் கொள்க.

(62)

63. சிந்தனை உனக்குத் தந்தேன்,
திருவருள் எனக்குத் தந்தாய்;
வந்தனை உனக்குத் தந்தேன்,
மலரடி எனக்குத் தந்தாய்;
பைந் துணர் உனக்குத் தந்தேன்,
பரகதி எனக்குத் தந்தாய்;
கந்தனைப் பயந்த நாதா !
கருவையி லிருக்குந் தேவே!

 

72


முருகக்கடவுளைத் தந்தருளிய இறைவனே! திருக்கருவையி லெழுந்தருளிய தேவனே ! (நான்) என் மனத்தை உனக்குக் கொடுத்தேன், (நீ) உனது திருவருளினை எனக்குத் தந்தருளினாய் ; வணக்கத்தை உனக்குத் தந்தேன், தாமரைமலர்போன்ற திருவடியை எனக்குத் தந்தருளினாய்; பசிய பூங்கொத்தை உனக்குத் தந்தேன், முத்தியை எனக்குத் தந்தருளினாய்.

வந்தனை-வணக்கம். பைந்துணர்-பசிய பூங்கொத்து. பரகதி-மேலானகதி-முத்தி.

தெய்வம் ஒன்று உண்டு என்று உணர்ந்து சிந்திக்குமளவும் திருவருள் வெளிப் பட்டுத் தோன்றாதாகலின், ‘சிந்தனை உனக்குத் தந்தேன் ; திருவருள் எனக்குத் தந்தாய்’ என்றார். திருவாதவூரடிகள் ‘தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி-முனிவிலாததோர் பொருளது கருதலும்-ஆறுகோடி மாயாசத்திகள்-வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின’ என்றருளிச் செய்தமை காண்க, அவனை வணங்குதற்கும் அவன் அருளே காரணமாதலினாலும் அடியார் வணங்குதற்கு உரியது இறைவன் திருவடியே யாதலினாலும் திருவருள்பெற்றமை கூறியபின் ‘வந்தனை உனக்குத் தந்தேன்; மலரடி எனக்குத் தந்தாய்’ என்றார். ‘ அவனருளாலே அவன்தாள் வணங்கி’, என்ற திருவாத வூரடிகள் திருவாக்கையும் காண்க. இறைவன் திருவடிக்கு அடியார் செய்யத் தக்கது அர்ச்சனையே யாதலாலும் அடியார் விழையும் முத்திப்பேறு இறைவன் திருவடியிற் கலத்தலே யாதலாலும், திருவடி பெற்றமை கூறியபின் ‘பைந்துணருனக்குத் தந்தேன்; பரகதியெனக்குத்தந்தாய்’ என்றார்.

சிந்தனையாவது தியானம்; வந்தனையாவது வணக்கம்; அடிக்கு மலரிடுதல் அர்ச்சனை. ஆதலின், தியானத்தால் திருவருளும், வணக்கத்தால் திருவடிப் பேறும், அர்ச்சனையால் முத்தியும் சித்திக்குமென்றாராம்.

இழிந்தவற்றைக் கொடுத்து உயர்ந்தவற்றைப் பெற்றதாகக் கூறலின் மாற்று நிலை யணி கொள்ளக் கிடக்கும்.

(63)

 

73

64. தேவனே! நின்னை யல்லாற்
பிறிதொரு தேவை எண்ணேன்;
பாவனை நின்னி னல்லாற்
பிறிதொரு பற்று மில்லேன்;
யாவையுங் காட்டக் கண்டேன்;
என்னுளே நின்னைக் கண்டேன்;
காவலா ! கருவை யானே !
இனிமற்றோர் காட்சி யுண்டோ ?

(தேவர்களுக்குத்) தேவனே ! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை ஒரு பொருளாகக் கனவிலுங் கருதேன்; உன்னையல்லாமல் பிறிதொரு பாவனை பற்றுதலுமில்லேன்; (அதனால்) உனது தன்மை எல்லாவற்றையும் நீயே உணர்த்த உணர்ந்தேன்; (ஆதலால்) என் இதயத்தே உன்னைத் தரிசித்தேன்; எல்லா உயிர்களையுங் காத்தலில் வல்லவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! இனி (யான் காண விரும்புவது) இத் திருக்காட்சியன்றி வேறொரு காட்சியுமுளதோ ? (இல்லை.)

காவலன் - காத்தலில் வல்லவன் - தலைவன். காட்சி-காணப்படுவது; காண்-பகுதி, சி-தொழிற் பெயர் விகுதி, ணகரம் டகரமானது சந்தி.

கேள்வியாலும் ஆராய்ச்சியாலும் சிவபெருமான் ஒருவனே தெய்வமென்று உணர்ந்தமையால் ‘ பிறிதொரு தேவை யெண்ணேன்’ எனவும் ‘பிறிதொரு பற்று மில்லேன்’ எனவும் கூறினார். ‘சிவனென யானும் தேறினன் காண்க’ எனவும்,

‘புற்றில்வா ளரவு மஞ்சேன்; பொய்யர்தம் மெய்யு மஞ்சேன்;
கற்றைவார் கடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்ச மாறே ’

எனவும் திருவாதவூரடிகள் திருவாய்மலர்ந்தருளியதும் காண்க.

 


74


நின் திருவருளாலே நீ காட்ட நின்னையும், நின்னையல்லா என்னையும், என்னை மயக்கியிருந்த மாயாகாரியங்களையும் கண்டேன் என்பார் ‘யாவையும் காட்டக் கண்டேன், என்னுளே நின்னைக் கண்டேன்’ என்றார். ‘என்னுளே நின்னைக் காண்டல்’ பளிங்கிற் பதித்த சோதி காணுதல் போல்வதாம். நின்னை யன்றி அகிலம் வேறில்லையாதலால் நின்னைக்கண்ட எனக்கு ‘இனி மற்றோர் காட்சியுண்டோ’ என்றார். இறைவன் திருவருளின்றி அவனைக் காணுதல் இயலாதாகலின் ‘காட்டக் கண்டேன்’ என்றார். ‘அவனருளே கண்ணாகக் காண்பதல்லால்’ என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கையும் காண்க.

(64)

65. உண்டென மறைக ளோதும்
ஒருதனி முதலே ! நாளும்
அண்டரும் முனிவர் தாமும்
காண்கிலர்: அடியேன் உன்னைத்
தெண்டிரை வளாகம் முற்றும்
தேடினேன்; தேடித் தேடிக்.
கண்டனன் களாவி னீழல்.
கருவைமா நகரத் தானே!

கருவை என்னும் பெரிய திருநகரத்தில் வாழ்கின்றவனே! உண்டென்று வேதங்கள் கூறும் ஒப்பில்லாத தனி முதல்வனே! எந்நாளும், தேவர்களும் முனிவர்களும் உன்னைக் கண்டறிகிலர்; நாயிற் கடைப்பட்டேனாகிய யான் உன்னைக் கடல் சூழ்ந்த உலகமுற்றும் தேடினேன்; அங்கு உன்னைத் தேடிக் காணாது, திருக்களா நிழலில் உன்னைத் தரிசித்தனன்.

தெண்டிரை-(தெள்+திரை) தெளிந்த நீரையுடையதும் அலைவீசுவதுமான கடல்; திரை-அலை ; தானியான இது தானமாகிய கடலுக்குப் பெயர் ஆனமையால் தானியாகுபெயர். வளா

 


75

கம்-வளைந்த இடம்-சூழ்ந்த இடம். கடலாற் சூழப்பட்ட இடம் உலகம்.

உண்டு என-உள்ளது என. உள்ளதாவது உண்மையாவது. எல்லாவற்றுக்கு முன்னுள்ளதாய், எல்லாம் தானேயாய், தனக்கொப்பது பிறிதொன்றில்லதாய், எஞ் ஞான்றுமுள்ள உண்மைப்பொருள் ஒன்று உண்டு என மறைகள் முழங்குவது கண்டு ‘உண்டென மறைகளோதும் ஒரு தனிமுதலே’ என விளித்தார். அவன் ஒருவனே தனிமுத லாவ துணர்ந்தும், அகங்காரத்தால் தம்மை வேறுபிரித்துத் தாம் அவனைத் தம்மின் வேறாகக் கண்டுவிடலாம் என்றெண்ணித் தேடமுயன்ற அயனும் மாலும் அவனைக் காண மாட்டாமல் அயர்ந்தமை கருதி ‘அண்டரும் முனிவர் தாமும் காண்கிலர்’ என்றார். அவர்களைப்போல் யான் அகங்கரித்து ழலாமல் உன்னுள் அடங்கிய அடியனாக நின்று உன்னைக் காண முயன்றேனாயி னும், எங்கும் நிறைந்த உன்னை அந்நிலையிற் காண்பது என் சிற்றறிவிற் கமையா தென்பதை உணராமல் ஒரு குறியற்று உலகமெங்கும் தேடியுழன்றேன் என்பார், ‘அடியனேன் உன்னைத் தெண்டிரைவளாகமுற்றுந் தேடினேன்’ என்றார். அவ்வாறு தேடியுழன்றும் காணாமையால், சிற்றவினேனாய யான் நின் பெரு நிலையை ஒருமூர்த்தத்திற்கொண்டு வழிபட்டாலன்றிக் காணமுடியாதென்னும் உணர்வுபெற்று அங்ஙனமே வழிபட்டுக் கண்டேனென்பார் ‘ தேடித்தேடிக் கண்டனன் களாவினீழல் ’ என்றார்.  

(65)

66. தானென உருவ மாகிச்
சங்கற்ப விற்பங் கொண்டு
வானக மாகி மண்ணாய்க்
கடல்களாய் மலைக ளாகி
ஈனமாம் மனப்பேய் செய்த
இந்திர சாலந் தன்னால்
நானுனை யுணர மாட்டேன்,
களாநிழல் நண்ணு வானே !

 

76


திருக்களா நிழலில் எழுந்தருளிய இறைவனே ! இழிந்த எனது மனமென்னும்பேய், எல்லாப் பொருளுந் தானென்னும் வடிவமைந்து, சங்கற்பத்தையும் விகற்பத்தையுங் கொள்ளுதலால், விண்ணுலகமாகியும், மண்ணுலகமாகியும், கடல்களாகியும், மலைகளாகியும், செய்த இந்திர சாலத்தினால் நான் உனது இயல்பை யறியா தொழிந்தேன்.

சங்கற்பமாவது ஒருபொருளைக் கருதுதல்; விகற்பமாவது இது வானன்று மண், இது மண்ணன்று வான் என ஒன்றற்கொன்று வேறுபாடு காணும் பேத உணர்ச்சி.

யான் வேறு; என் காட்சிக்கட்படும் மாயாகாரியமாகி மண் முதலிய பஞ்சபூதங்களாலான இவ்வுலகம் வேறு; எனக்கும் என்னைப்பற்றிய மாயைக்கும் இடந்தந்து யாண்டும் என்றும் வியாபகமாகி மாயையினை முதற்காரணமாகப் பயன்படுத்தலல்லது அதனோடு பற்றிலதாகி உலகிற்கு நிமித்தகாரணமாகி என்னை ஆண்டருளும் இறைவன் வேறு; அந்த ‘அருளுடைய பரமென்றோ அன்றே நானுளன், எனக்கே ஆணவாதி பெருகுவினைக் கட்டென்று அருணூல்’ கூறிய முப்பொருளுண்மை உணராமல் யானே யாவும் என்னும் மாயாவாதப் பித்துரையில் மயங்கி உன்னை உணரேனாயினேன் என்பார் ‘ஈனமாம் மனப்பேய், தானென உருவமாகிச் செய்த இந்திரசாலந்தன்னால் நானுனை உணரமாட்டேன்’ என்றார்.

(66)

67. நண்ணருந் தவங்கள் செய்து
நானுடல் வருந்த மாட்டேன்;
எண்ணுமைம் புலனுஞ் செற்றங்
கிருவினை யறுக்கமாட்டேன்;
கண்ணகன் ஞாலம் போற்றக்
களாநிழ லமர்ந்து வாழும்
அண்ணலே! இனியெவ் வாறோ
அடியனேன் உய்யு மாறே ?

 


77

கிட்டுதற்கரிய தவங்களைச் செய்து, நான் சரீரம் வருந்த மாட்டேன்; (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று) எண்ணப்படுகின்ற ஐந்து புலன்களையும் அழித்து, அதனால் விளையும் நல்வினை தீவினைகளை வேரோடறுக்கமாட்டேன் ; பரந்த நிலவுலகு துதிக்க, திருக்களா நிழலில் விரும்பி வாழும் இறைவனே ! அடியேனாகிய யான் இனிப் பிழைக்கும் வகை, எவ்வகை ?

நண்ணரும்-கிட்டுதற்கரிய; செற்று-அழித்து; (செறு - பகுதி; உறு-உற்று, குறு-குற்று என்பவற்றிற்போல றகரம் இரட்டித்து நின்று இறந்தகாலங் காட்டிற்று); கண் அகல்-இடம் அகன்ற.

இருவினை-நல்வினை, தீவினை. ஆன்மாவைப் பிறவியிற் கட்டுப்படுத்தலில் நல்வினை பொன்விலங்கும் தீவினை இருப்பு விலங்கும் போல்வனவாதலின் ‘இருவினை அறுக்கமாட்டேன்’ என்றார்.

வருத்தமாட்டேன், அறுக்கமாட்டேன்-எதிர்மறைத் தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று; மாட்டு வன்மையுறுத்தற் பொருளில் வந்த விகுதி, என் தன்மை யொருமை விகுதி, எதிர்மறை ஆகாரங்கெட்டது சந்தி.

(67)

68. உய்யவோ ருறுதி நாடா
உலகினிற் சமய மென்னும்
வெய்யஆர் கலியின் வீழிந்து
வெந்துய ருழக்கின் றேற்குத்
தையலோர் பாகம் வைத்துத்
தண்டமிழ்க் கருவை வாழும்
ஐயன்வந் தாண்டு கொண்ட
ததிசயம் விளைக்கு மாறே.

கடைத்தேற ஒரு பற்றுக்கோட்டை நாடி, உலகில் வழங்கும் புறச்சமயங் களென்னும் கொடிய கடலில் வீழ்ந்தழுந்தி, கொடிய துன்பத்தில் வருந்துகின்ற எனக்கு,

 

78


உமையம்மையை இடப்பாகத்தில் வைத்துத் தமிழ் வழங்கும் திருக்கருவைப் பதியில்வாழும் இறைவன் எழுந்தருளி வந்து (என்னை) அடிமைகொண்ட செய்தி, நினைக்குந் தோறும் அதிசயத்தை விளைக்கும் வகையதாம்.

உய்ய-கடைத்தேற. உறுதி-பற்றுக்கோடு(உறு-பகுதி). நாடா-நாடி (செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்). வெய்ய-கொடிய. ஆர்கலி-கடல். வெம்-கொடிய. உழக்கின்றேற்கு-வருந்துகின்றவனாகிய எனக்கு (உழக்கின்றேன்+கு எனத் தன்மை ஒருமை நிகழ்கால வினையாலணையும் பெயர் நான்காம் வேற்றுமை ஏற்று வந்தது. உழ-பகுதி, கின்று-நிகழ்கால இடைநிலை, ஏன்-தன்மை ஒருமை விகுதி. உழத்தல்-வருந்தல்). ஆண்டுகொண்டது-எழுவாய்; ஆறு-பெயர்ப்பயனிலை. ஆறு-வகை.

(68)

69. அதிசய முளத்திற் காட்டி
அகம்புறந் தானாக் காட்டித்
துதிசெயக் கவிநாக் காட்டித்
தொடக்கறா நேயங் காட்டி
மதியினிற் களிப்புங் காட்டி
வந்தெனை யாண்டு கொண்டான்
கதியென வுலகம் போற்றக்
களாநிழ லமர்ந்த நாதன்.

புகலிடம் என்று (அறிந்து) உலகு துதிக்கக் களா நிழலில் எழுந்தருளிய இறைவன், என் மனத்தில் அதிசயத்தைக் காட்டி, உள்ளும் புறம்பும் தானாகவே நிற்கும் நிலைமையைக் காட்டி, கவியால் துதிசெய்ய நாவைக்காட்டி, இடையறாத அன்பினைக் காட்டி, மனத்தில் ஆனந்தக் களிப்பையுங் காட்டி வந்து என்னை அடிமை கொண்டான்.

 

 

79

தொடக்கு அறா-பொருத்தம் நீங்காத. அறா-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அறு-பகுதி. நேயம்-நேசம்-அருள்; சகரத்துக்கு யகரம் போலி. கதி-புகலிடம்.

நாதன் எனை ஆண்டுகொண்டான் என வினை முடிவு செய்க.

தாம் உழந்த வெந்துயர், ஐயன் வந்தாண்ட அக்கணமே அகன்றதென்பது கருதி ‘ அதிசயம் உளத்திற் காட்டி ’ என்றார். சிவபெருமான் எள்ளிலெண்ணெய்போல உள்ளும் புறமும் தானேயாய் நிறைந்து நிற்கும் பெற்றிமையை அவனருளே கண்ணாகக்கண்டேன் என்பார் ‘அகம்புறம் தானாக் காட்டி’ என்றார். திருவருளே சித்குணமாகக் கொண்டவன் என்பார். மேல் ‘தையலோர் பாகம்வைத்து வாழுமையன் ஆண்டுகொண்டான்’ என்றதற்கேற்ப ஈண்டுத் ‘ தொடக்கறா நேயங்காட்டி ஆண்டுகொண்டான்’ என்றார். என் பிறவித்துன்பத்தை நீக்கிப் பேரின்ப உணர்ச்சி தந்தான் என்பார் ‘சிந்தையிற் களிப்புங் காட்டி’ என்றார். மதி முதனிலைத் தொழிலாகு பெயராய் மனத்தின்மே னின்றது.

(69)

70. நாதனே! கவிஞன் ஏவ
நள்ளிருட் போதிற் சென்ற
தூதனே! இமய வல்லி
துணைவனே! கருவை யானே!
போதநே யத்தி னால்நின்
பொலன்கழற் றொண்டு பூண்டும்
ஏதம்நீ அகற்றி டாமல்
இருப்பதும் இசைய தாமோ?

இறைவனே ! (நின்னைப் பாடும்) ஒரு கவிஞனான (சுந்தரன்) உன்னை ஏவ, நடு இராத்திரியில், பரவையார்பாற் சென்ற தூதுவனே ! இமயமலையில் தோன்றிய உமையம்மையின் கேள்வனே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே ! சிவஞானத்தின் வழி வந்த அன்பினால் உன் பொன்போலும் அரிய திருவடிக்கு, அடியேன் அடிமை

 


80


பூண்டும், நீ என் மலக்குற்றத்தை ஒழிக்காமல், வாளா விருத்தலும் உனக்குப் புகழாகுமோ ?

நள்ளிருள்-நடு இரவு. இமயவல்லி-இமயமலையில் தோன்றிய கொடி (போல்பவளாகிய உமாதேவி); கொடிபோல்வாளைக் கொடி என்றது உருவக அலங்காரம். துணைவன்-கேள்வன்-கணவன். போதம்-(சிவ) ஞானம். பொலன்கழல்-பொன்போலும் திருவடிகள். ஏதம்-குற்றம் ; துன்பமெனினும் ஆம். இசை-புகழ்; இசையது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி.

ஒரு கவிஞன் ஏவல் வழிநின்று ஒரு பெண்மகள்பால் தூது சென்றமையால் அவன் இறைமைக்குணம் பழுதுபடுமாறில்லை என்பதை முன்ன ரறிவிக்க வேண்டி, தூதுபோனதைக் குறிப்பிடுதற்கு முன்னே ‘நாதனே’ என்றார். நாதன்-இறைவன். அவ்வாறு தூதுசென்றது தன்னோடு பிரிவற நிற்கும் திருவருளின் பெருந்தகைமையால் என்பது தோன்ற தூதனென்றதை அடுத்து ‘இமயவல்லி துணைவனே’ என்றார். சுந்தரர் உன்னைப் பாடுதலொன்றே செய்தார் ; உன்னை ஒரு பெண்மகள் பால் தூதுசெல்ல ஏவினார். அவருக் கருள் செய்தனை நீ. யானோ உன்னைத் துதிக்கின்றேன் ; உன் திருவடிக்குத் தொண்டுபூண்டொழுகுகின்றேன்; உன்னை ஏவிப் பணிகொள்வேனல்லேன் ; என் பாசத்தை அகற்றி என்னை ஆட்கொள்ளுமாறு வேண்டுகின்றேன். எனக்கு அருள் செய்யாதிருப்பது நின் பெருந்தன்மைக்கு அழகாகுமோ என்பார். ‘இசையதாமோ’ என்றார்.

(70)

எட்டாம் பத்து

முதற் சீரும் மூன்றாஞ் சீரும் மாச்சீர்களாகவும்
மற்றைய இரண்டும் விளச்சீர்களாகவும் வந்த

கலிவிருத்தம்.

71. இசையுஞ் செல்வமுந் திருவு மின்பமும்
அசைவி லாதபே ரறிவு முத்தியும்
விசைய முந்தருங் கருவை மேவினோன்
திசையு டுத்தவன் சீர்ப டிக்கவே.

 


81

திருக்கருவையி லெழுந்தருளினவனும் திக்கினை ஆடையாக உடுத்தவனும் (ஆகிய இறைவனது) புகழைப்பாட, (அப் பாடுதல்) செல்வத்தையும் பொலிவையும் புகழையும் இன்பத்தையும் வெற்றியையும் கம்பித்தலில்லாத சிவஞானத்தையும் மோக்ஷத்தையும் தரும்.

படிக்க என்னும் வினையெச்சத்தினின்று பிரிந்த படித்தல் என்னுந் தொழிற்பெயர் வினைமுதலாய் நின்று தருமென்னும் பயனிலை கொண்டது.

இசை-புகழ். திரு-அழகு. விசையம்-வெற்றி.

இறைவன் ‘பொருள்சேர் புகழ்’ உடையனாதலால் அவன்சீர் படித்தலால் மெய்ப்புகழ் அடைவது திண்ணம், பூவோடு சேர்ந்த நார் மணம் பெறுதல் திண்ணமாதல் போல. புகழுடையார் செல்வமடைதலும், செல்வமுடையார் இன்பமடைதலும், இன்பமுடையார்க்கு அறிவு கலக்க மற்றுத் தெளிந்து விளங்கலும் இயற்கை. அறிவானன்றி முத்திப்பேறு கிட்டுதற்கில்லை; ‘ஞானமலது கதி கூடுமோ’ என்றார் பிறரும். முத்தியின் வருவதே வெற்றியுணர்ச்சி; தன்னை அலைத்த பாசத்தை வேரறுத்த நிலையே முத்தியாதலின் : ‘உறுபிணியார் செறலழிந்திட் டோடிப்போனார்...இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை’ என்று திரு நாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்தமையும் காண்க. இங்ஙனம்,
இசைச் செல்வம் முதலியன ஒன்றற்கொன்று காரணமாய் நிற்றலால் காரணமாலையணி கொள்ளக்கிடக்கும்.

(71)

72. படிய ளந்தவன் பதும மேயவன்
அடிமு டித்தலம் அறியொ ணாதவன்
கடிகொண் மாமலர்க் களவி னீழலான்
குடியி ருக்கவென் நெஞ்சு கோயிலே.

நிலவுலகை அளந்த திருமாலாலும் தாமரை மலரில் வசிக்கும் பிரமனாலும் தனது திருவடித்தலமும் திருமுடித்

 


82


தலமும் அறிதற்கரியவனும், வாசமமைந்த வண்டுகள் மொய்த்த மலர்களையுடைய திருக்களா நிழலில் எழுந்தருளினவனுமாகிய இறைவன் எனது நெஞ்சந் திருக்கோயிலாகக் குடியிருக்கக்கடவன்.

படி-பூமி. பதுமம்-தாமரை. மேயவன்-பொருந்தியவன். கடி-வாசனை.

உயிர்களின் உள்ளத்தில் இறைவன் இடையறாது உறைவானாயினும் அப்பெற்றி உணர்ந்து அவனை வழிபடுவார்க்கன்றி அவனருள் வெளிப்பட்டுத் தோன்றாதாகலின் ‘குடியிருக்க என் நெஞ்சு கோயிலே’ என்றார். ‘சிறைவான் புனற்றில்லை யுள்ளுமென் சிந்தையுள்ளும் உறைவான்’ என்றார் திருவாதவூரடி களும். மா என்னும் பல பொருள் ஒரு சொல் மலரென்னுஞ் சார்பால் வண்டின்மேல் நின்றது.

(72)

73. கோயில் சூழவுங் குடங்கை கொட்டவும்
வாயிற் பாடவும் வணங்கி யாடவும்
ஆயி ரம்பெயர்க் கருவை யாதிபன்
நேய முற்றுவாழ் தொண்டர் நேர்வரே.

ஆயிரந் திருநாமங்களையுடைய, திருக்கருவையிலெழுந்தருளிய இறைவனது திருவடிக்கீழ் நேயமிகுந்து வாழும் அடியார், அவனது திருக்கோயிலைப் பிரதக்ஷிணஞ் செய்யவும், உள்ளங்கை கொட்டவும், திருவாயிலினின்று பாடவும், அவனை வணங்கியாடவும் உடம்படுவார்.

குடங்கை-உள்ளங்கை. நேர்வர்-ஒப்புவர்.

குடங்கை கொட்டல் முதலாயின பத்திப் பெருக்கால் நிகழ்வன. கை முதலிய அவயவங்களாலும் மெய்யாலும் ஆய பயன் இறைவனை வணங்குதலே என்று கொண்டவர் தொண்டராதலின் ‘தொண்டர் நேர்வர்’ என்றார். இதனை அப்பர்சுவாமிகள் அருளிச் செய்த திருவங்கமாலையிலும் காண்க.

(73)

 

83

74. நேர்ந்த நெஞ்சமே! நெடிது வாடிநீ
சோர்ந்த துன்பமுந் துயரும் போக்குவான்
வார்ந்த செஞ்சடைக் கருவை வானவன்
ஆர்ந்த பேரருள் அருவி யாடவே.

(உனது வாட்டத்தையும் சோர்வையும் போக்கும்படி) வேண்டிய மனமே! நீண்ட சிவந்த சடையையுடைய இறைவனது வற்றாத பெரிய அருளாகிய அருவி யில் நீராட, நீ மிகவும் வாடுதற்கும் சோர்தற்கும் காரணமான துன்பத்தையும் வருத்தத்தையும் அவன்போக்கி அருள்வான். (ஆதலால் ஆடுக.)

நீ நெடிது வாடிச்சோர்ந்த என்க. ‘வாடிச் சோர்ந்த’ என்பதனை ‘வாடிச் சோர்வதற்குக் காரணமான’ என ‘நோய் தீர்ந்த மருந்து’ என்பதுபோற் கொள்க. ‘நெடிதுவாடிச் சோர்ந்த நீ’ எனினும் அமையும்; இப்பொருட்கு ‘உன்வாட்டத்துக் கும் சோர்வுக்கும் காரணமான’ என எச்சங்கொள்க. துன்பமாவது தான் பெற்ற தொன்றை யிழந்த காலத்தும், முயன்ற தொருபொருள் கிட்டாத காலத்துந் தோன்றுவது. அதனைத் துன்பமென்னும் பெயர்க் காரணத்தால் உணர்க. துன்(=அடை) பகுதி; துன்னுதலென்னும் பொருட்டு. துயரமாவது இகத்திற்குரிய சாதனங்களைப் பெறாமையால் என்று முள்ளது. துய்=(அனுபவி) பகுதி; துய்த்தல் என்னும் பொருட்டு. துன்பத்துக்கும் துயரத்துக்கும் இதனால் வேறுபாடறிக.

(74)

75. ஆடு மட்கலத் திகிரி யொத்தலைந்
தோடு நெஞ்சமுங் கவலை யோர்ந்துனை
நாடு மோதமிழ்க் கருவை நம்பனே!
ஏடு சேர்மலர்க் களவில் ஈசனே !

முத்தமிழ் வழங்கும் திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனே! இதழ் செறிந்த மலர்களையுடைய திருக்களாவின் நீழலில் எழுந்தருளிய பெருமானே ! மட்கலத்தை

 


84


அமைக்கும் குயவனது சுழன்றாடும் சக்கரத்தையொத்து விடயங்களில் அலைந்து செல்லும் எனது மனமும், (தான் அங்ஙனம் செல்லுதலால் நேருங்) கவலையைச் சீர்தூக்கி, அதனைப்போக்க உன்னைச் சரணடையுமோ. (அறியேன்.)

திகிரி-சக்கரம். மட்கலத்திகிரி, மட்கலத்தை அமைக்கும் சக்கரம் என உருபும்பயனும் உடன்தொக்க தொகையாகக்கொள்க. மட்கலம் என்பதும் மண்ணாலாகிய குடம் என உருபும் பயனும் உடன் தொக்கு தொகையாம். ஓகாரம் வினாப்பொருட்டு. ஒத்து, ஓர்ந்து-இறந்தகால வினையெச்சங்கள். ஓ-உலமவுருபிடைச் சொல்லடியாகப் பிறந்த பகுதி, தகரமெய் இடைநிலை, தகரமெய் சந்தி, உ எச்ச விகுதி. ஓர்-வினைப்பகுதி, தகரமெய் இடைநிலை, தகரமெய் தோன்றி நகரமானது சந்தி, உ எச்சவிகுதி.

(75)

76. ஈச னே!இடத் திமய வல்லியின்
நேச னேயியற் கருவை நித்தனே !
பூசி யேனுனைப் புனித ஆகமம்
வாசி யேன்பிறப் பென்று மாயுமே.

எல்லாவற்றையும் ஆள்பவனே! இடப்பாகத்திலுள்ள உமையம்மையினிடத்து அன்புள்ளவனே, ஒழுங்கமைந்த கருவையிலெழுந்தருளிய நித்தனே ! உன்னைப் பூசித்திடேன்; தூய சிவாகமத்தை வாசித்தல் செய்யேன். எக் காலத்து என் பிறவி யொழியும்? (கூறியருளாய்.)

இயல்-ஒழுங்கு. புனித-தூய.

உயிர்களிடத்துக் கருணை யுள்ளானென்பார் ‘இடத்திமய வல்லியின் நேசனே’ என்றும், என்றும் அழிதலில்லாதவனென்பார் ‘நித்தனே’ என்றும் கூறினார். ‘வேதம் பசு, அதன்பால் நல்லாகமம்’ என்பவாதலின் ‘புனித ஆகமம்’ என்றார். ‘பூசியேன்’ என்பதால் பத்தியில்லேன் என்றும், ‘ஆகமம் வாசியேன்’ என்பதால் ஞானமில்லேன் என்றும் கூறினராவர். சிவபத்தியும் சிவஞான

 

 

85

முமே பிறவியறுக்க வல்லனவாதலால் அவையிரண்டும் இல்லேற்குப் ‘பிறப்பென்று மாயுமே’ என்றார்.

77. பிறவி மாயவும் அருள்பெ ருக்கவும்
துறவி யாய்வனம் துன்னல் வேண்டுமோ?
இறைவன் எம்பிரான் களவில் ஈசனென்(று)
அறையும் முன்னமே அனைத்தும் எய்துமே.

(எப்பொருட்குந்) தலைவனென்றும், எமது பெருமானென்றும், திருக்களா நீழலில் எழுந்தருளிய ஈசனென்றும், (அன்புடன் ஒருமுறை) சொல்லுதற்கு முன்னமே, (முத்திப்பேறும் திருவருட்பேறும் முதலாய) எல்லா நன்மைகளும் வந்து கைகூடும்; (ஆதலால்), அவனது திருவருள் பெருகச்செய்யவும், பிறப் பொழியவும், துறவறத்தை யுடையவனாய்க் காட்டில் தவஞ்செய்ய ஒருவன் சொல்ல வேண்டுமோ ? (வேண்டா.)

துன்னல்-சேர்தல். அறைதல்-சொல்லுதல்.

திருவருளா லன்றிப் பிறவி மாயுமாறில்லை யாதலின் ‘அருள் பெருக்கவும் பிறவி மாயவும்’ என முறைமாற்றிப் பொருள்கொள்க. ‘ துறவியாய் வனம் துன்னல் வேண்டுமோ ’ என்றது, ஈசனடிக்கு அன்பின்றி இல்லமுதலாயவற்றைத் துறந்து வனம் சேர்தலாற் பயனில்லை என்பது கருதி.

‘கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே’

என்றார் திருநாவுக்கரசு சுவாமிகளும்.

அவனடிக்கு அன்பின்றித் துறக்கும் துறவு புறத்துறவாகுமேயன்றி அகத்துறவாகாது. அவனடியைப்பற்றின் அவனருள் தோன்றி அதுவே பிற பற்றுக்களை அறுத்துப் பிறவியை மாய்த்துப் பேரின்பப் பேற்றினை நல்கும். ஆதலின், ‘ஈசனென்றறை

 


86


யும் முன்னமே அனைத்தும் எய்தும்’ என்றார். ‘ அறையும் முன்னமே’ என்றது விரைவும் தெளிவும் பற்றி. மெய்த்துறவு, அவனடியைப் பற்றினன்றி நிகழா தென்பதனை ‘பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்-பற்றுக பற்று விடற்கு’ என்ற நாயனார் திருவாக்கினும் காண்க.

(77)

78. எய்தி என்செயும் கருவை எம்பிரான்
கொய்யும் நாண்மலர்க் கொன்றை வேணியான்
செய்ய பாதம்என் சென்னி வைக்கவே
வெய்ய கூற்றுவன் வீசு பாசமே.

திருக்கருவையில் எழுந்தருளிய எமது பெருமானும் கொய்தற்குரிய அன்றலர்ந்த கொன்றை மலர்மாலையையணிந்த சடாமுடியை யுடையவனுமாகிய இறைவன், தனது செவந்த திருவடியை, எனது சிரத்தில் சூட்டுதலால், கொடிய இயமன் வீசாநின்ற பாசம், என்னையடைந்து யாதுசெய்யும்? (யாதும் செய்யமாட்டாது.)

நாள்மலர்-புதியமலர்-அன்றலர்ந்தமலர். வேணி-சடை. கூற்றுவன்-காலத்தைக் கூறுபடுத்துபவன்-காலன்-யமன்.

கொய்யும் நாண்மலராவது, கொய்யப்படும் தன்மையையுடைய நாண்மலர். கொய்யும்-செயப்படு பொருளைச் செய்தது போலக் கிளந்த வழுவமைதி.

மலநீக்கத்தில் திருவருட்பதிவு செய்தன னென்பார் ‘செய்யபாதமென் சென்னிவைக்க’ எனவும், அத் திருவருட்பதிவு வாய்ந்த என்னிடத்து இயமனுக்கு வேலை இல்லையென்பார் ‘கூற்றுவன் பாசம் எய்தியென்செயும்’ எனவுங் கூறினார். இச் செய்யுள் பூட்டுவிற் பொருள் கோள் உடையது.

(78)

79. பாசம் நீக்கிமூ வகைப்ப சுக்களை
மாசில் முத்தியாம் வனத்தில் மேய்த்திடும்
ஈசன் மின்னைநேர் இடைச்சி காதலன்
ஆசில் பால்வணத்(து) அண்டர் நாதனே.

 

 

87

(விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும்) மூவகை யான்மாக்களை, மலபந்தத்தினின்று நீக்கி, குற்றமில்லாத முத்தியாகிய சோலையில், ஈசனும், மின்னலையொத்த இடையையுடைய உமையம்மைக்கு அன்பனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய, குற்றமில்லாத பால்போலும் நிறத்தையுடைய இறைவன், (பேரின்பம் துய்த்து மகிழும்படி) சேர்ப்பான்.

விஞ்ஞானகலர்-ஆணவமலம் ஒன்றுமே உடையோர்; பிரள யாகலர்-ஆணவம் கன்மம் என்னும் இருமலம் உடையோர்; சகலர்-ஆணவம் மாயை கன்மமென்னும் மும்மலங்களும் உடையோர். பாசம்-உயிர்களை அனாதியே பற்றிய மும்மலங்கள். பசு-ஆன்மா. முத்தி-வீடுபேறு. வனம்-சோலை. மேய்த்திடும் என்பது ஈண்டு நுகரச்செய்யும் என்னும் பொருளது. மின்னை நேர் இடைச்சி-மின்னலையொத்த இடையினை யுடையாள் (உமாதேவி); ஆசுஇல்-குற்றம் இல்லாத. இனி இச் செய்யுளிற் கொள்ளக்கிடக்கும் பிறிதொருபொருள் வருமாறு :

(மாடும் எருமையும் ஆடுமாகிய) மூவகைப் பசுக்களையும் கட்டவிழ்த்துக் கொண்டுபோய்க் குற்றமற்ற மூவகை யாகாக்கினி (வளர்வதற் கிடமாகிய) காட்டில் (அப்பசுக்களுக்குத்) தலைவனும், மின்னற் கொடியைப் போன்ற கோகுல மகளுக்குக் காதலனும், குற்றமில்லாத பாலமுதால் பொலிவுவாய்ந்த இடையர்களுக்குத் தலைவனுமானவன் மேய்த்திடுவான்.

இப்பொருட்கு: பாசம்--கயிறு. முத்தீ முத்தியெனக் குறுக்கல் விகாரம் பெற்றது. வனம்-காடு. ஈசன்-தலைவன். மின்னல், ஈண்டு மகளிரின் தோற்றத்துக்கு உவமையாயிற்று; இடைக்கன்று. இடைச்சி-இடைமகள். அண்டர்-இடையர் ; இதனை ‘அண்டரே பகைவர் வானோர் ஆயரென் றாகு முப்பேர்’ என்பதா லறிக. பசுக்கள் மூவகையாதலை நம்பியகப் பொருளில் முல்லைக்கருப்

 

88


பொருளில் கூறுமிடத்து ‘ மூவின மேய்த்தல்’ என வருவது கொண்டறிக.

இங்ஙனம் சொற்கள் ஒரேவகையாய் நின்று இருபொருள் பயத்தலின் இச்செய்யுள் செம்மொழிச் சிலேடை யணியுடைத்தால் காண்க.

(79)

80. அண்ட கோளமும் அகில லோகமும்
மண்ட செந்தழல் வடிவ மானவன்
முண்ட கக்கழற் கருவை மூர்த்தியைக்
கண்ட கண்ணிணை களிது ளங்குமே.

அண்டகோளகைக்கு அப்புறத்திலும், எல்லா வுலகங்களுக்கு அப்புறத்திலும், (தாவி ஒளி) நிறைந்த செவந்த தீப்பிழம்பின் வடிவா யமைந்தவனாகிய, தாமரை மலர்போன்ற திருவடிகளையுடைய, திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனைத் தரிசித்த இரண்டு கண்களும் ஆனந்தக் களிப்பி லழுந்தும்.

அகிலம்-எல்லாம். மண்டு-நிறை. முண்டகம்-தாமரை. திருமால் பன்றி யாகவும், பிரமன் அன்னமாகவும் சென்று திருவடியுந் திருமுடியுங் காணாது வருந்த அவர்களுக்கிடையே சோதித்தம்பமாய் நின்றோனாதலால் செந்தழல் வடிவமானவனென்றார்.

(80)

ஒன்பதாம்பத்து.

முதற்சீரும் ஈற்றுச்சீரும் மாச்சீர்களாகவும்
இடை மூன்றும் பெரும்பாலும் விளச்சீர்களாகவும் வந்த

கலிநிலைத்துறை.

81. துளங்கு நெஞ்சமே! துயருறா
வகையொன்று சொல்வேன்:
வளங்கொள் செந்தமிழ்க் கருவையம்
பெரும்பதி மருவி
விளங்கு பானிற மேனியன்
திருவடி தொழுதால்
அளந்து காண்பருந் துறக்கவாழ்
விம்மையின் அளிப்பான்.

 


89

(விடயங்களிற்) கலங்கும் மனமே நீ துன்பம் அடையாதவண்ணம் ஒரு செய்தி சொல்லாநின்றேன்: வளம் அமைந்த செந்தமிழ் வழங்கும் திருக்கருவை யென்னும் அழகிய பெரிய திருப்பதியிலெழுந்தருளி விளங்கா நின்ற பால்போலும் வெள்ளிய நிறம் வாய்ந்த திருமேனியையுடைய சிவபெருமானுடைய திருவடியை வணங்கி னால், அளவுசெய்து காணுதற்கரிய சுவர்க்க வாழ்க்கையை, (அவன்) இப் பிறப்பிற் கொடுத்தருளுவான்.

துறக்கம்-முத்தியுலகம்.

சிவபெருமான் திருவடித் தொண்டுபூண்டு ஒழுகுவார்க்கு முத்திவாழ்வு கிடைத்தல் ஒருதலையாதலின் ‘துறக்கவாழ் விம்மையின் அளிப்பான்’ என்றார். சீவன்முத்தர்நிலை இம்மையிற் கிட்டும் எனினுமாம். சீவன்முத்த ராவார் சிவனடியிலே திளைத்த சிந்தையராய்ச், சஞ்சித வினையொழிந்து, ஆகாமியவினை அணுகப்படாத வராய்ப், பிராரத்த உடலோடு நிலவும் ஞானியர். அவர் இம்மை யிலேயே பரமுத்தி யெய்துவர் என்பதனை ‘மும்மை தருவினைகள் மூளாவாம்; மூதறிவார்க்-கம்மையும் இம்மையே ஆம்’ என்னும் உமாபதி சிவாசாரியர் திருவாக்கினும் காண்க.

(81)

82. இம்மை இன்பமும் இறுதியின்
முத்தியும் அளிக்கும்,
நம்மை ஆளுடை நாயகன்
கருவைநன் னகரிற்
கொம்மை வெம்முலைக் கொடியொடும்
இனி துவீற் றிருக்க
விம்மி மானுடர் வெந்துயர்
உழப்பதென் விரகே.

இப் பிறப்பில் இன்ப வாழ்க்கையினையும், (இப்பிறவியின்) முடிவில் (பேரின்ப வாழ்க்கையான) முத்தியினையும்


தொடக்கம்

90


(தன் அடியார்க்குக்) கொடுத்தருளுகின்றவனும், (பசுக்களாகிய) நம்மை ஆட்கொள் ளும் உரிமையுடைய (பசு) பதியுமானவன் திருக்கருவை என்னும் நல்ல நகரில், திரட்சியுடையவும் (உயிர்கள் ஞானப்பால் பெறவேண்டி) விரும்புதற் கிடமானவு மான தனங்களை யுடைய பூங்கொடி போன்ற உமாதேவியோடும் இன்பமயமாகத் (திருவுருக்கொண்டு) எழுந்தருளி யிருக்கவும், மக்கள் (உலக இச்சைகளில் உள்ளம்) பொருமி கொடிய துன்பங்களை நுகர்வது என்ன அறிவோ ? (அறிவின்மையே என்பது கருத்து).

கொம்மை-திரட்சி. வெம்-விருப்பத்திற் கிடமாகிய; வெம்மை-விரும்புதலாகிய பண்பை உணர்த்தும் ஓர் உரிச்சொல்; ‘வெம்மை வேண்டல்’ என்பது தொல்காப்பியம்; வெம்மை வெப்பத்தை யுணர்த்துதல் வழக்கு. விம்முதல் - (ஏக்கத்தாற்) பொருமுதல். விரகு-அறிவு.

உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் ஈறு தொக்கு உடை என நின்றது. உழத்தல், வருந்தலுமாமாகையால் ‘கொடிய துன்பங்களில் வருந்துதல்’ எனினுமாம். ‘எவன்’ என்னும் வினாவினைக்குறிப்புமுற்று என்னென மரீஇ அறிவு என்னும் பண்புப் பெயரைக்கொண்டு முடிந்தது.

‘ஆளுடை நாயகன்’ என்றதால் உயிர்கள் அடிமையும் இறைவன் ஆண்டானு மாதல் பெறப்படும். அடிமையைக் காத்தல் ஆண்டான் கடமையாதலால், ஆண்டான் இருக்க அடிமை துயருழக்க ஏதுவின்று. மேலும் அவ் வாண்டான் அருளோடு கூடியிருப்பவன்; அன்றியும், எவரும் அஞ்சிப் பின்வாங்காது துணிந்து நெருங்கிக் குறையிரக்க ஏற்ற இனிய தோற்றத்துடன் அமர்ந்திருப்பவன். அவ் வாறாக அவனை அணுகித் தம் துயரை அவனருளால் போக்கிக் கொள்ளாத மானுடர் பெரும் பேதையரே ஆவார் என்பார் ‘ நாயகன் கொடியொடு மினிது வீற்றிருக்கத் துயருழப்பதென் விரகே’ என்றார்.

(82)

 

91

83. விரகி னாற்சிலர் செய்திடும்
வினைகளும் உண்டோ ?
மருவி அம்பாம் மறைந் துநின்
றாட்டுவான் போல
உரக கங்கணக் கருவையான்
ஒருவன்நின் றாட்டப்
பரவை சூழ்நில மன்பதைப்
பரப்பெலாம் நடிக்கும்.

திரைச் சீலையால் மறைவுபட்டு (அரங்கத்துள்) பொருந்தியிருந்து (அவை யார்க்குப் புலனாக அமைத்த பாவைகளைக் கயிற்றின்வழியே தன் இச்சைப்படி) ஆடச்செய்யும் பொம்மலாட்டிபோல, அரவினைக் கைவளையாக அணிந்த திருக் கருவைச் சிவபெருமான் ஒருவன் (மாயையாகிய திரையால் உயிர்களின் கட் புலனுக்குப் புலப்படாமல் சிதாகாயத்தில் மறைவுபட்டு) நின்று (மாயா காரியமாகக் கட்புலனாக அமைந்த உடலோடுகூடிய உயிர்களைக் கன்மத்தின் வழியே தன் இச்சைப்படி) ஆடச்செய்ய, கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள மக்கட் கூட்டமெல்லாம் ஆடாநிற்கும். (அவ்வாறாக அம் மக்களிற்) சிலர், தம்வயத்தராய்த் தத்தம்) அறி வினால் செய்யும் தொழில்களும் உண்டோ ? (இல்லை).

மருவி-பொருந்தி. அம்பரம்-சீலை, பரவெளி. உரகம்-பாம்பு. கங்கணம்-வளையல். பரவை-கடல். மன்பதை என்பதே மக்கட் பரப்பை யுணர்த்துமாயினும், மிகுதி யுணர்த்த ‘மன்பதைப் பரப்பு’ என்றார்; ‘ மன்பதை பைஞ்ஞீலி மக்கட் பரப்பே’ என்பது பிங்கலந்தை. எல்லாம் என்னும் திணைப் பொதுப்பெயர் இடை குறைந்து நின்றது.

இறைவன் இயக்கினாலன்றி உயிர்கள் இயங்கா என்பதனை,

 


92


ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே.

என்னும் தேவாரத் திருவாக்கினும்,

ஊட்டுவிப் பானும் உறங்குவிப் பானுமிங் கொன்றொடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின்வழி
ஆட்டுவிப் பானும் ஒருவனுண் டேதில்லை யம்பலத்தே.

என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கினும் காண்க. இறைவன் உயிர்களைப் பாவைபோல் ஆட்டுவது கன்மக்கயிற்றின் வழியே என்பதும் ஈண்டுப் பெறப் பட்டது காண்க. திரையைநீக்கிப் பார்ப்போர்க்குப் பொம்மலாட்டி புலப்படுவது போல மாயையாகிய திரையை நீக்கிக் காண வல்லார்க்கு இறைவனும் புலப்படுவன் என்க. இக் கருத்தானே ‘ மாயையெனும் திரையை நீக்கி நின்னையார் காணவல்லார்’ என்றார் பிறரும்.

(83)

84. நடித்த தாள்களும் நகைமணி
முறுவலும் முகமும்
பொடித்த வேர்வெழும் புருவமும்
அருள்விலோ சனமும்
முடித்த தண்பிறை வேணியும்
முகலிங்கன் மழுமான்
பிடித்த செங்கையும் காண்பவர்
புவியிடைப் பிறவார்.

 


93

முகலிங்கப் பெருமானுடைய திருநடனம் செய்த திருவடிகளையும், விளங்குகின்ற அழகிய புன்னகையையும், வியர்வை யரும்பும் திருமுகத்தையும், மேலேறும் திருப்புருவங்களையும், அருள் கனியும் திருக்கண்களையும், குளிர்ந்த இளஞ்சந்திரனைச் சூடிய சடாபாரத்தையும், மழுவையும் மானையும் ஏந்திய செவ்விய திருக்கரங்களையும் (ஞானக்கண்ணால்) தரிசிப்பவர் இந் நிலவுலகத்தில் (மீண்டும்) பிறவார்.

‘வேர்வு பொடித்த முகமும்’ எனவும், ‘ தண்பிறை முடித்த வேணி ’ எனவும் இயைத்துப் பொருள் கொள்க.

நகை-விளங்குதல்; நகு-பகுதி, ஐ-புடைபெயர்ச்சி விகுதி, உகரக்கேடு சந்தி : நகை முறுவல்-விளங்குதல் உடைய முறுவல் என்க. மணி-அழகு. முறுவல்-புன்னகை. பொடித்த-அரும்பிய. விலோசனம்-கண்.

‘முகமும் பொடித்த வேர்வெழும் புருவமும்’ என்னும் சொற்றொடர்க்கு ஆற்றொழுக்காகப் பொருள்கொண்டு ‘ திருமுகமும் அரும்பிய வியர்வை எழும் திருப்புருவங்களும் ’ என்று உரை கூறுவாரும் உளர். முகத்தில் வியர்வரும்பியது என்பதன்றிப் புருவத்தில் வியர்வரும்பியது என்பது மரபாகாமையானும், கூறும் உறுப்பு ஒவ்வொன்றினுக்கும் அடை கொடுத்துக் கூறிய ஆசிரியர் உறுப்புக்களிற் சிறந்த முகத்திற்கு அடைகொடாது செல்லாராதலானும், ‘ திருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் ’ என வரும் திருக்கோவையாரில் சிறந்த உறுப்புக்கு உவமையாதல் பற்றிக் கோங்கு அடைபெறாது நின்றாற்போல ஈண்டுங் கொள்ளலா மாயினும் அங்ஙனம் கொண்டவிடத்து, எழும் என்னும் பெயரெச்சவினை புருவத்திற்குரிய தாகாது வியர்வைக் குரியதாகி நடிக்குங் காலைப் புருவத்தில் நிகழுதற்குரிய மெய்ப்பாட்டைக் காட்டாது பொருட் சிறப்பை அழிக்குமாதலானும் மேற்கூறியதே உரையாதல் கண்டு கொள்க.

புருவம்-ப்ரூ என்னும் வடமொழிச் சிதைவென்பர்.

 


94


மாயா காரியமான பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பையல்லாத அருளுருவத் திருமேனிக்கு முகம் வியர்த்தல் முதலியவற்றை ஏற்றிக் கூறுதல் சொல்லளவிலேயாம்.

முகலிங்கன் தாள்களும் முறுவலும் முகமும் புருவமும் விலோசனமும் வேணியும் கையும் காண்பவர் புவியிடைப் பிறவார் என்க. முகலிங்கன் என்பதில் ஆறாம் வேற்றுமைக்குரிய உடைய என்னும் சொல்லுருபு தொக்கது, கிழமைப்படுவன பலவாதலின்; அகர உருபு தொக்கதெனினுமாம்.

(84)

85. பிறந்த யாக்கைகள் அளப்பில
பெருங்கடற் புவிக்குள் ;
இறந்து போயதல் லால்அவற்
றெய்திய துண்டோ?
கறந்த பால்நிற வண்ணனைக்
கருத்துற இருத்திச்
சிறந்த யாக்கையீ திதற்குநான்
செய்வதும் உளதோ ?

பெரிய கடல் (சூழ்ந்த) உலகத்தில் (யான் கொண்டு) பிறந்த உடம்புகள் அளவில்லாதன ; இறந்து போனமையல்லாமல் அவற்றால் (நான்) பெற்ற பேறு ஏதேனும் உண்டோ ? (இல்லை). கறந்த பாலின் நிறத்தை யொத்த நிறமுடை யவனை உள்ளத்தில் பொருந்தி உறையச் செய்து மேன்மை பெற்ற உடம்பு (இப்பொழுது யான் கொண்டுள்ள) இதுவே. (ஆதலின்) இவ்வுடம்பிற்கு யான் செய்யத்தக்க கைம்மாறும் உண்டோ ? (இல்லை).

அளப்பு இல-அளவு இல்லாதன ; அளப்பு, கலப்பு நடப்பு என்பனபோல புகரவிகுதி பெற்று வந்த தொழிற்பெயர் ; இல, எதிர்மறைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர். புவி-பூமி. போயது-போனமை ; காலங்காட்டும் தொழிற்பெயர் ; ‘போயவல்லால்’ எனப் பாடத்தை மாற்றிவிட்டுப் ‘ போய் ’ அகர

 

 

95

வீற்று அஃறிணைப் பன்மை முற்றென்று கொள்வாரு முளர். அவற்று-அவற்றால் ; அவ் என்னும் வகரவீற்றுச் சுட்டுப் பெயர் அற்றுச் சாரியை பெற்றுக் கருவி வேற்றுமை உருபு தொக்கு நின்றது. பானிற வண்ணன்-பால்வண்ணன் எனப் பொருள்பட்டு ஒரு சொல் நீர்மைப்படும். உண்டோ, உளதோ என்பவற்றில் ஓகாரம் எதிர்மறைப் பொருளன.

பிறவியாற் பெறத்தக்க பயன் வீடுபேறு. இப் பிறவி எடுத்தமையே கடந்த பிறவிகளால் வீடுபேற்றை எய்தியதில்லை என்பதற்குக் கண்கூடான சான்றாமாதலின், முன் எடுத்த யாக்கைகள் இறந்தொழிந்தனவே யல்லாமல் அவற்றால் எய்திய பயன் யாதுமில்லை என்றார். பால்வண்ணநாதனை இடையறாது சிந்தித்திருக்கும் அறிவு இந்த யாக்கையிலே நிகழக் காண்டலினாலும், அச் சிந்தனையே வீடுபேற்றை எய்துவிக்கும் என்பது ஒருதலையாதலினாலும் இதுவே பயன் தந்த யாக்கை என்பார், ‘ சிறந்த யாக்கை ஈது ’ என்றார். ஆன்மாவை வீடு பெறுவித்துத் தானழிவதே யாதலின் ‘ இதற்கு நான் செய்வதும் உளதோ ’ என்றார்.

(85)

86. உள்ள தில்லதென் றுரைத்திடும்
பொருளையுய்த் துணராக்
கள்ளர் நாவினில் இருந்திடாக்
களாநறுங் கனியைத்
தெள்ளு செந்தமிழ்க் கருவையிற்
சினகரம் புகுந்து
மெள்ள நான்சென்று காண்டலும்
தீர்ந்தது விடாயே.

உள்ளதென்றும் இல்லதென்றும் (நூல்களாற்) கூறப்படும் (உண்மைப்) பொருளைத் (திருவருள் விளக்கத்தாற்) கூர்ந்து உணரமாட்டாத வஞ்சகர் நாவிற் பொருந்தாத, திருக்களாநீழலில் அமர்ந்த இனிய கனிபோன்ற (சிவபெருமானைத்) தெளிவும் செம்மையும் வாய்ந்த தமிழ்மொழி

 

96


வழங்கும் திருக்கருவையில் உள்ள திருக்கோயிலுள் யான் (பயபக்தியால்) மெல்லப்புகுந்து சென்று கண்டவுடனே (எனது பேரின்ப) வேட்கை தீர்ந்தது.

கருவைத் திருக்கோயிலினுட் சென்று ஆண்டெழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்த மாத்திரையானே பேரின்பப்பேறு பெற்றவ னாயினேன் என்பது கருத்து.

உள்ளது-இல்லது, பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர் கள். உய்த்துணரல்-ஆராய்ந்தறிதல். உணரா, இருந்திடா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாதலின் உணராக் கள்ளர் இருந்திடாக் கனி என வலி மிக்கது. இருந்திடா-பொருந்தாத ; கனியை வாயிற் பொருந்த இடார், இட்டாலும் அது வாயிற் பொருந்திச் சுவை முதலிய பயன்களைத் தராதெனவும் ; சிவபெருமான் புகழை நாவாற் சொல்லார், சொல்லினும் உள்ளமின்புறுதல் முதலிய பயன்களைப் பெறார் எனவும் பொருள்படும். எனவே மெய்யர் அவன் புகழைப் பேசுவார், பேசிப் பல பயன்களையும் பெறுவார் என்பன அருத்தாபத்தியாற் பெறப்படும். அருந்திடா, எனவும் இனித்திடா எனவும் பாடங்கொள்வாருமுளர். தெள்ளு செந்தமிழ்-தெளிந்த செவ்விய தமிழ். தெளிந்த-மாசுநீங்க வடித்த ; ‘ வடித்த நுண்ணூல் ’ ‘ வடித்தநூற் கேள்வியார் ’ என்றார் சிந்தாமணியாரும். ஆரியம் போல, முப்பதெழுத்துக்களை ஐம்பத்து மூன்றாக விரித்தலும், ஒருமை பன்மைகளை ஒருமை இருமை பன்மையென விகற்பித்தலும், உவமை ஒன்றனையே எண்ணிறந் தனவாகப் பெருக்கலும் முதலாயின செய்யாது வரையறைப்படும் இலக்கணமே கொண்டதாகலின் ‘ தெள்ளு தமிழ் ’ எனவும் ; உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடும், வினையாற் றிணைபாலாதிய உணர்த்தலும், அகம்புறம் என்ற பொருட் பாகுபாடும் இவை போல்வன பிறவும் கொண்டு முற்ற முடிந்த இலக்கண முடையதாதலின் செந்தமிழ் எனவும் கூறினார். சினகரம்-கோயில் ; ‘ ஜினக்ருஹம் ’ என்பதன் சிதைவென்பர். மெள்ள-மெல்ல என்பதன் மருஉ. விடாய்-(பிறவித் துன்பத்

 


97

தால் தோன்றிய பேரின்ப) வேட்கை. கள்ளர் நாவுறாத கனியை யான் கண்ட மாத்திரையில் வேட்கை தீர்ந்தது என்றலின், உண்டு பயன்பெறுதல் ஒரு தலை யென்பது தானே பெறப்படும். கனி என்பது ஈண்டுப் பழம் என்னும் பொருளில் இயற்சொல்லாகவும், சிவபெருமான் என்னும் பொருளில் உவமை யாகுபெயராகவும் கொள்ளக் கிடப்பது கண்டுகொள்க. திருநாவுக்கரசு சுவாமிகள்,

மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந்தாற் கனியுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழ லீசன் எனும்கனி
இனிதுசாலவும் ஏசற்றவர் கட்கே.

என்றருளிச் செய்தமை ஈண்டு நோக்கற்பாலது.

கடவுளையன்றி ஒருபொருள் இல்லாமையால் கடவுளே உள் பொருள் எனவும், உலகத்துப் பொருள்களை ஒவ்வொன்றாய் எடுத்து இத கடவுளோ இது கடவுளோ என்று ஆராய்வுழி அவையாவும் கடவுள் அல்ல என்று கழிக்கப்படுத லின் கடவுளை இல்லது எனவும் கூறும் நூல்கள். ஆதலின் ‘உள்ள தில்ல தென்றுரைத்திடும் ’ என்றார். இல்லது என்றது கடவுளின் இன்மையைக் குறியாது அன்மையையே குறிக்கும். ஆதலின் ‘உரைத்திடும் பொருளை ’ என்றார். பொருளாவது உண்மை; ‘ பொருண்மை சுட்டலாவது உண்மைசுட்டல் ’ என்றார் சேனாவரையரும். இல்லது என்பது கடவுளின் இன்மையைச் சுட்டியதன்று என்பதை ‘ இல்லையில்லை யென்னின் ஒன்று மில்லாதல்ல; என்றுமுள்ள இயற்கையாகி’ என வரும் தாயுமானவர் திருவாக்கினும் கண்டு கொள்க. இங்ஙனமாகிய இறைவன் இயல்பு அவனருள் வழிநின்று அனுபவ வாயிலான் உணரப்படுவதன்றி, வெறும் அறிவின் ஆற்றல்கொண்டு அறியப்படுவ தன்றாகலான் ‘ உய்த்து உணரா ’ என்றார்.

அவன் அருள்வழிநின்று இவ்வுணர்வைப் பெறாதவர்கள் பேரின்பவீடுபெற்றுப் பிறவிநோய் தீரவொட்டாமல் தம்மைத் தாமே வஞ்சித்தலின் ‘ கள்ளர் ’ என்றார். அவ் வஞ்சர் ஒருகால்

 

98


ஏதோ ஒரு காரணம்பற்றி இறைவன் பெயரைப் பேசினாலும், உள்ளன்பின்றிப் பேசப்பட்டதாகலின் இறைவன் பெயர் அவர்கள் நாவிற் பொருந்தாதென்பார், ‘நாவினில் இருந்திடா ’ எனத் தன்வினை வாய்பாட்டாற் கூறினார். நாயகனைக் காண்டலும் உள்ளம் நெகிழும் கற்புடை மகளிர்போல, இறைவன் வடிவாக எதைக் காணினும் உள்ளம் நெகிழும் அன்பர்க்குப் பிறவிநோய் தீர்ந்து பேரின்பம் கிட்டுதல் ஒருதலை என்பார் ‘ காண்டலும் தீர்ந்தது விடாயே ’ என்றார்.

(86)

87. விடக்கை, மும்மலக் குழிசியை,
விளிந்தபின் தீண்டாத்
துடக்கை, நோய்க்கணம் துணங்கையிட்
டாடுறும் அரங்கை,
நடக்கும் சூத்திரப் பாவையை
நான்சுமந் துழலல்
கடக்க நீக்கியென் றாளுவை ?
கருவைஉத் தமனே!

திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் மேலோனே! ஊன்மயமானதும், (ஆணவம் மாயை கன்மம் என்னும்) மூன்று மலங்கள் (நிறைந்த) பாண்டம் போல் வதும், உயிர் நீங்கியபின் தொடவும் தகாத அசுத்தமாவதும், பிணிக்கூட்டம் (களிப்பு மிகுதியால்) துணங்கைக் கூத்தாடுவதற்கிடமான அரங்கம் போல்வதும், (ஒருவர் நடத்த) நடக்கும் சூத்திரப்பாவை போல்வதும் (ஆன இவ்வுடலை) நான் சுமந்து வருந்தியலைதல் ஒழிய (இதை) மாள்வித்து (என்னை நீ) என்று ஆண்டருள்வாயோ ?

விரைவில் ஆண்டருள வேண்டும் என்பது கருத்து.

விடக்கு-மாமிசம். குழிசி-பாண்டம். விளிதல்-சாதல். துடக்கு-அசுசி. கணம்-கூட்டம். துணங்கை-ஒருவகைக் கூத்து (28-ம் செய்யுளுரை காண்க). அரங்கு-கூத்துமேடை.

 

 

99

நடக்கும் என்றது ஈண்டுப் பொதுவாய்த் தொழில் நிகழ்த்துவதைக் குறிக்கும் ; காலால் நடத்தல் ஒன்றையே யன்று. ‘ நடிக்கும் என்பதும் பாடம். உடல் சூத்திரப் பாவைபோல் இயக்கப்படுதலை 38-ம் செய்யுளுரையிற் கண்டு தெளிக. உழலல்-வருந்தல், சுழல்தல். கடத்தல்-சென்றொழிதல்.

முன் நின்ற ஐகாரங்கள் ஐந்தும் அழிக்கப்படு பொருளில்வந்த இரண்டாம் வேற்றுமை யுருபு ; ஒன்று பலவடுக்காய் வந்தன. ஆளுவை-என்பதில் ஐகாரம் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; உகரம் சாரியை ; வகரவொறறு இடைநிலை.

மாசறத் துலக்கி அழகுற வைத்துப் போற்றப்படும் உண்கலன் உணவிட்டு உண்டபிறகு எச்சிலென்று இழித்தொதுக்கப்படுதல் போல, உண்டியும் உடையும் அணியுஞ் சாந்தும் இட்டுப் போற்றப்படும் உடல் இருவினை நுகர்ச்சிக்கு இடமாகி அவ் வினை நுகரப் பட்டபிறகு இழித்தொதுக்கப்படுமாதலின் ‘ விளிந்தபின் தீண்டாத் துடக்கை ’ என்றார். பிறப்பை அஞ்சியே இறப்பை அஞ்சுவர் மெய்யுணர்வுபெற்ற ஞானிகள். ‘ யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் ’ என்றார் திருவாதவூரடிகள். காரைக்காலம்மையார் ‘ பிறவாமை வேண்டும் ; மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் ’ என்றார். ஆதலின், இவ்வுடலை ஒழிக்கத் துணிவது, பிறப்பறுத்து என்னை நீ ஆட்கொள்வாய் என்ற உறுதியாற்றான் என்பார் ‘ நீக்கி என்று ஆளுவை ’ என்றார்.

(87)

88. உத்தி வாளரா முடித்தபால்
வண்ணனே ! உனது
பத்தி வேண்டுவ தன்றியே
நரகிடைப் படினும்
முத்தி வேண்டிலேன்; துறக்கமும்
வேண்டிலேன் முனிவர்;
சித்தி வேண்டிலேன் ; வேண்டிலேன்
திசாதிபர் சிறப்பே.

 

100


படத்தின் புள்ளிகளையுடைய ஒளிபொருந்திய பாம்பினை(ச் சடாமுடியில்) தரித்த பால்வண்ணப் பெருமானே! (யான்) நரகில் விழுந்து வருந்தினாலும் உன்னிடத்தே (இடையறாத) பக்திசெய்திருத்தலை வேண்டுவதே யல்லாமல், (அந்தப் பக்தி எய்தாதாயின், நரகத் துன்பத்தினின்று விடுபெறுதலை ஒரு பொருட்டாகக் கருதி) வீடு பேற்றையும் விரும்பிலன் ; (போக நுகர்ச்சிக்கிடமான) சுவர்க்கப் பேற்றையும் விரும்பிலன் ; முனிவர்களால் எய்தப்படும் (அணிமா முதலிய எண்வகைச்) சித்திப்பேற்றையும் விரும்பிலன் ; திக்குப்பாலகர்(களுள் இர்திரகுபேரர்)க்குரிய சிறப்புக்களையும் விரும்பிலன்.

உத்தி-பாம்பின் படத்தில் உள்ள புள்ளிகள் ; ‘உத்தியுந்துத்தியும் உரகப் படப்பொறி’ என்பது பிங்கலம். வாள்-ஒளி. ‘வசியும் ஒளியும் வாளென லாகும்’ என்பதும் அது. ‘வாள் ஒளியாகும்’ என்பது தொல்காப்பியம். அரா-பாம்பு; ஈண்டு இயல்பாய் நின்ற இவ்வாகாரவீற்றுப்பெயர் குளியதன்கீழ் நின்ற ஆக் குறுகி உகரம் ஏற்று ‘அரவு’ எனவும் வரும். உனது, ஏழாம் வேற்றுமை நிற்குமிடத்து ஆறாம் வேற்றுமை உருபு வந்த உருபுமயக்கம்; நான்காம் வேற்றுமை உரிய தெனலு முண்டு; விஷயமாக உடைமை வேற்றுமைப் பொருளாகிய சம்பந்தம் எனலுமொன்று. ‘நரகிடைப்படினும்’ என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளது. முத்தி, சித்தி, சிறப்பு என்பவற்றில் உயர்வு சிறப்பும்மை தொக்கன. முத்தி-இருவினை யொழித்துப் பிறப்பறுத்துச் சார்தற்கிடனான சிவநிலை : துறக்கம்-நல்வினைப் பயன் நுகர்தற்கு இடனான சுவர்க்கபூமி : இவற்றின் வேறுபா டுணர்க. எண்வகைச் சித்தியாவன : ‘அணிமா மகிமா கரிமா இலகிமா-பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் மசித்துவம்என்-றோதற்கரிய அட்டமா சித்தி ’ இதனான் உணர்க. திசாதிபர் எண்மர் ; அவ

 

 

101

ராவார் ‘ இந்திரன் அக்கினி இயமன் நிருதி-வருணன் வாயுகுபேரன் ஈசானன். ’

எண்மர் திசாதிபருள் இந்திரனது பதவியும் குபேரனது சம்பத்துமே மக்கள் விரும்பும் சிறப்புடையனவாகக் கோடல் மரபாதலின் அவர் இருவருமே கொள்ளப்பட்டனர்.

(88)

89. சிறக்கத் தக்கது கருவையான்
திருவடி நேயம் ;
மறக்கத் தக்கது மற்றுள
சமயத்தின் மயக்கம் ;
துறக்கத் தக்க(து)இவ் வுடம்பையான்
என்றுறு தொடர்பு;
பிறக்கத் தக்கது சிவானந்த
வாரியின் பெருக்கே.

திருக்கருவைச் சிவபெருமானது திருவடிக்கீழ் வைக்கும் அன்பே சிறக்கத் தகுதியானது ; (சைவத்தின்) வேறாக உள்ள மதங்களில் மயங்குதலே மறக்கத் தகுதியானது; இவ்வுடம்பை யான் என்று பற்றியிருக்கும் பற்றே விட்டொழியத் தகுதியானது ; சிவானந்த வெள்ளமாகிய பெருக்கே உண்டாகத் தகுதியானது.

தக்கது - தேற்றப் பொருள்பட்டு நிற்கும் தொழிற்பெயர் ; வியங்கோட் பொருட்டென்பது முண்டு. நேயம்-அன்பு. தொடர்பு-பற்று. வாரி-பெருக்கு-வெள்ளம். வாரியின், இன் தவிர்வழிவந்த சாரியை.

(89)

90. பெருகு காதல்கொண் டனுதினம்
பேதைநெஞ் சடியேன்
உருகி நாடவும் வெளிப்படா
உனைஉளத் துணர்ந்தேன் ;
இருக ணாரவும் காண்பதற்(கு)
என்றெதிர்ந் திடுவாய்,
கருகு கண்டனே ! கருவையிற்
களாநறுங் கனியே!

 


102


(நஞ்சுண்டதனாற்) கறுத்த கண்டத்தை உடையவனே ! திருக்கருவையின்கண் களாமரத்தின்கீழ் எழுந்தருளிய இனிய கனிபோல்பவனே ! அடியேன் மிகுந்த அன்புகொண்டு நாள்தோறும் (எனது) மூடமனம் உருகித் தேடவும் (என் ஊனக் கண் காண) வெளிப்படாத உன்னை (என்) உள்ள(க்கண் தெவிட்டும்படி கண்டு) அறிந்துகொண்டேன் ; (புறமான) இரண்டு கண்களும் தெவிட்டும்படியும் (யான் உன்னைத்) தரிசிப்பதற்கு (நீ) எப்பொழுது பிரசன்ன மாவாயோ ? (விரைவில் பிரசன்னமாகித் தரிசனந் தந்தருள்.)

‘அடியேன் பேதைநெஞ்சுருகி’ என இயைக்க.

நாட-தேட; ‘நாடவிட்ட படலம்’ என்பது காண்க. இரு கண், என்பது இனைத் தென்றறி பொருளாதலால் முற்றும்மை வருவித் துரைக்கப்பட்டது. ஆர்தல்-நிறையக்கொள்ளுதல் ; ‘கண்ணாரக்கண்டேன்’ ‘நாவாரத் துதித்தேன்’ ‘வாயார வாழ்த்தினேன்’ ‘செவியாரக் கேட்டேன்’ ‘வயிறார உண்டேன்’ ‘மனமாரச் செய் தேன்’ என வரும் வழக்கு நோக்கி உணர்க. ஆரவும், என்பதில் உம்மையை இறந்தது தழீஇய எச்ச வும்மையாகக்கொண்டு, அதற்கேற்ப ‘ உளத்து ஆர உணர்ந்தேன் ’ என ஆர என்பது முன்னும் வருவித் துரைக்கப்பட்டது. ஆரவும் என்பதன் உம்மையை ‘இரு கண்ணுமார’ என மாற்றிக் கோடலுமொன்று. பெருகுகாதல், கருகுகண்டன்-வினைத்தொகை; முன்னது முக்காலத்ததும் பின்னது இறந்தகாலத்ததுமாம். கருவையின் இன்சாரியை ; ஏழாம் வேற்றுமையுருபு தொக்கது.

பதிற்றுப் பத்தான இந்நூலில் இச்செய்யுள் ஒன்பதாம் பத்தின் இறுதி. சென்ற எட்டுப் பத்துக்களினும் இப்பத்தின் முற்பகுதியிலும் திருக்கருவைச் சிவபெரு மானது திருப்புகழையும் தமக்கு அவன் மாட்டுள்ள பக்திப் பெருக்காகியவற்றையும் பலபட விரித்துரைத்த ஆசிரியர் இப்பத்தின் பிற்பகுதியில் தமது முடி

 


103

வான நோக்கத்தை வெளியிடுகின்றார். அஃதாவது, உடற்சுமை ஒழிதல், பத்தி உடைமை, சிவபெருமானது அருட்டிருக் கோலத்தைக் கண்ணாரக் காணுதல் முதலாயின. இங்ஙனம் தமது முடிவான நோக்கத்தை அறிவித்து விட்டமையால், இனி அந் நோக்கத்தை நிறைவேற்றத் திருவுளம் இரங்கும் வகையில் சிவபெரு மான் திருவடித் தாமரைகளை வந்தித்து நிற்றலன்றிச் செய்யக்கடவது வேறெதுவும் இல்லையாதலின், அடுத்து வரும் இறுதிப்பத்து முற்றும் வணக்கமே கூறி முடிப்பர். ‘ அருளே திருமேனியாக உடையை யாதலால் என்மாட் டருள்கூர்ந்து யான் வேண்டிய திருக் காட்சியை நல்கி யருள்வாய்’ என்பது படக் ‘கருகு கண்டனே’ எனவும் ‘ கனியே ’ எனவும் விளித்தார் ; கருகு கண்டம் தேவர்க்கிரங்கி ஆலமுண்ட அருட்செயலையும், கனி கனிவுடைமையையும் குறித்து நிற்றலின். கனி உவமையாகுபெயர்.

(90)

பத்தாம் பத்து

முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் சீர்கள்
மாச்சீர்களாகவும்
பிறவெல்லாம் விளச் சீர்களாகவும் வந்த

எண்சீர் ஆசிரிய விருத்தம்

91. கனிவு றாமனம் கனிய நின்பெரும்
கருணை தந்தவா ! போற்றி. நாயினேன்
இனிய பாடலால் களவின் ஈசனென்(று)
ஏத்த நாத்தரும் இறைவ ! போற்றி.வான்
பனிநி லாவுடன் கங்கை துன்றுசெம்
பவள வார்சடைப் பரம ! போற்றி.வில்
குனிவு றாமுனம் புரம்எ ரித்திடக்
குருத்த வாள்நகைக் குழக ! போற்றியே.

கனியாத (எனது) மனமும் கனியும்படி நினது பேரருளைத் தந்தவனே ! (உனது திருவடிகட்கு) வணக்கம். நாய்போற் (கடைப்பட்ட) யான் (உனக்கு) இனிய

 

104


பாடல்களால் ‘ திருக்களா நீழலில் எழுந்தருளிய கடவுளே ’ என்று துதிக்க நாத் தந்தருளிய தலைவனே ! வணக்கம். வானின்கண் (உலவும்) குளிர்ந்த (பிறைச்) சந்திரனோடு கங்கையும் சேர்ந்த பவளம்போற் செவந்த நீண்ட சடையை யுடைய மேலோனே ! வணக்கம். (மேருமலையாகிய) வில்லானது வளைதற்கு முன்னே முப்புரங்களைச் சுட்டெரிக்கக் கோபித்த ஒளிபொருந்திய புன்னகையைக் கொண்ட அழகனே ! வணக்கம்.

ஈண்டும் மேலும் வணக்கம் என வருந்தோறும் ‘ உனது திருவடிகட்கு-வணக்கம் ’ என இசையெச்சம் கூட்டிப்பொருள் கொள்க.

கனிவு உறா-கனியா என ஒரு சொல் நீர்மைப்படும். தந்தவா - ஈறுகெட்டு அயல்நீண்ட விளிப்பெயர். போற்றி-வணக்கம் ; இகரவிகுதிபெற்ற விணைப்பெயர், மறதி என்பது போல. போற்று, பகுதி ; இ, புடைபெயர்ச்சிவிகுதி, உகரக்கேடு சந்தி. இவ் வருந்தமிழ்ச் சொல்லின் பெருமையை எமது ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதிவரும் திருவாசக விரிவுரை 35-ம் பக்கத்திற் காண்க. போற்றி என்பதுனுள் இகரம் செயப்படுபொருள் விகுதி எனக்கொண்டு வணங்கப் படுவது எனப் பொருளுரைத்தலும் ஒன்று. வாழிய என்பது வாழி எனவந்தாற் போல, போற்றிய என்னும் வியங்கோள் போற்றி என வந்ததெனக் கொண்டு காக்கஎனப் பொருள் கூறலும் ஒன்று நாயினேன்-நாய், பகுதி; இன், சாரியை; ஏன், தன்மை ஒருமை விகுதி : நாய் போல்வேன் என்பது பொருள். களவில் ஈசன்-களவின்கீழ் எழுந்தருளியுள்ள சிவபெருமான். வான்-வான்கண் உலவும் ; ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கன. பனிநிலா, பண்புத்தொகை. ‘நிலாவுடன்’ என்பதில் உடன் மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. வார் சடை-வினைத்தொகை. சடைப் பரம-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை. பரம, குழக ஈறுகெட்ட விளிப்பெயர்கள். குனிவு-

 


105

வளைவு. வாள் ஒளியாதல் 88-ம் செய்யுளுரையிற் காண்க. குருத்த-கோபித்த. குழகன்-அழகன். ‘ தந்தவா போற்றி ’ முதலாயின விளித்தொடர். தந்தவாறு என்பது விகாரப்பட்டு வந்ததாகக் கொண்டு தந்த விதம் புகழப்படுவது எனப் பொருளுரைப்பினுமாம்.

பாமாலையே உனக்கு இனியதாவது என்றறிந்து பாமாலையால் உன்னைத் துதிக்க விரும்பிய எனக்கு அவ் விருப்பத்தை நிறைவேற்றத் தக்க நாவன்மையைத் தந்தருளினை என்பார் ‘இனிய பாடலால்...ஏத்த நாத்தருமிறைவ’ என்றார். இவ்வாறு உனக்கு இனிய பாடல் எனக் கொண்டு பொருளுரையாவிடத்துத் தாம் பாடி ஏத்தும் பாடலைத் தாமே இனியதென இறைவனுக்குக் கூறினாராகித் தம்மைத் தாமே இடமல்லா இடத்திற் புகழ்ந்துகொள்ளும் குற்றம் ஆசிரியர்க்கு ஏறும் என்பதுணர்க. சிவபெருமானுக்குப் பாட்டு இனியதாவதை,

பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர்
பாமாலைக் கேநீதான் பட்ச மென்று
நன்மாலை மாலையா எடுத்துச் சொன்னார்.
நலமறிந்து கல்லாத நானும் சொன்னேன்.

எனவரும் தாயுமான சுவாமிகள் திருவாக்கினும் காண்க.

(91)

92. குழவி வெண்ணிலா அனைய வெண்ணகைக்
கொடியி டத்துவாழ் குரிசில்! போற்றி.என்
பழைய தீவினைப் பகைதொ லைத்திடும்
பாவ நாசனே ! போற்றி. காய்சினத்(து)
உழுவை யின்வரித் தோல சைத்தபட்(டு)
உடைம ருங்கினோய் ! போற்றி. செந்தமிழ்க்
கழும லப்பதிக் கவுணி யன்புகழ்
களவின் நீழலிற் கடவுள் ! போற்றியே.

இளமையான வெள்ளிய சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய புன்சிரிப்பினையுடைய பூங்கொடியனைய உமா

 

106


தேவி இடப்பாகத்தில் வாழும் இறைவனே ! வணக்கம். தொன்று தொட்டுள்ள எனது தீவினையாகிய பகையைப் போக்கியருளும் பாவநாசனே ! வணக்கம். வருத்தும் கோபத்தையுடைய புலியின் கோடமைந்த தோலைப் பட்டு உடையாகக் கட்டிய இடையை உடையவனே! வணக்கம். செந்தமிழ் (இசைத்தலில் வல்ல) சீகாழிப் பதியில் திருவவதாரம்செய்த கௌணிய கோத்திரத்தரான (திருஞானசம் பந்த நாயனார்) புகழ்ந்து பாடிய திருக்களா நீழலமர் கடவுளே ! வணக்கம்.

ஏகாரம் ஈற்றசை.

குழவி-இளமையுடையது; இளமை குறிக்கும் குழ வென்னும் உரிச்சொல்லடி யாகப் பிறந்த பெயர்: ‘ மழவும் குழவும் இளமைப் பொருள ’ என்பது தொல் காப்பியம். வெண்ணகை என்பதில் வெண்மை ஒளியுணர்த்தி நின்றது. இடத்து-இடப்பாகத்தின் கண். குரிசில்-ஆண்பாற் பெயர். வினைப் பகை-பண்புத்தொகை. பாவ நாசன்-பாவத்தை நாசம் செய்பவன். காய்தல்-அழித்தல். காய் சினம்-முக்கால வினைத்தொகை. உழுவை-புலி. வரி-கோடு. ‘தோல் அசைத்த பட்டு உடை மருங்கு’ தோல் பட்டு உடை அசைத்த மருங்கு என இயைக்க. மருங்கினோய்யடியாகப் பிறந்த பெயர். செந்தமிழ் என்பதைக் கவுணியனுக்கு அடையாக்குக ; கமுமலத்திற்கு அடையாக்கினும் ஆம். கழுமலம் என்பது சீகாழிக்குரிய பன்னிரு திருப்பெயர்களுள் ஒன்று. கௌணியன் என்பது குடிப்பெயர்.

சீகாழிக்குரிய பன்னிரு திருப்பெயர்களையும்,
பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவையம்.

பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் எனவரும் சேக்கிழார் திருவாக்கால் அறிந்துகொள்க. திருஞானசம்

 


107

பந்த சுவாமிகள் தாம் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப் பதிக ஈறுகள் பலவற்றி னும் தம்மைச் சுட்டிக் கூறும்போது ‘ நற்றமிழ் ஞானசம்பந்தன் ’ எனவும், ‘தமிழ் ஞான சம்பந்தன் ’ எனவும், ‘ முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ’ எனவும், ‘ செந்தமிழான் ஞான சம்பந்தன் ’ எனவும் பிறவாறும் தமிழொடு தம்மைத் தொடர்புபடுத்திப் பேசுதலானும், ஆதி சங்கராசாரியர் இயற்றிய ‘ சௌந்தரியலகரி’ என்னும் வடமொழிநூலில் நம் சம்பந்தப் பெருமானார் ‘ திராவிடசிசு ’ எனச் சுட்டப்படுதலானும் ‘ செந்தமிழ்க் கவுணியன்’ என்றார். இங்ஙனமே இந்நூலாசிரியர் தாம் மொழிபெயர்த்தியற்றிய காசிகண்டத்துப் பாயிரத்துள்ளும், ‘ஏழ்நில வரைப்பு முய்ய ஈர்ந்தமிழ் மாரி பெய்த-காழிமா முகிலின் செய்ய மலரடி கருத்துள் வைப் பாம்’ என்றனர். இவ்வாற்றால் ‘ செந்தமிழ்’ என்பதனைக் கழுமலத்துக்கு அடை யாக்குதல் சிறப்பன்மையு முணர்க.  

(92)

93. கடையு கத்தினிற் பொழில்கள் ஏழையும்
கனல்கொ ளுத்திய சுடலை யம்பலத்(து)
அடலை பூசிஎன் அம்மை காணநின்(று)
ஆடும் ஐயனே ! போற்றி, போற்றி.நெஞ்(சு)
இடைவி டாமல்உன் சரண பங்கயத்(து)
இருக்க நல்கிய இறைவ ! போற்றி.மால்
விடையின் மேவியே கருவை மாநகர்
வீதி வாய்வரும் விமல ! போற்றியே.

யுகங்கள் முடியும் (பிரளய) காலத்தில் ஏழுலகங்களையும் நெருப்பாய்நின்று எரித்தருளியதால் உண்டாகிய சுடுகாடாகிய பொது இடத்தின்கண் சாம்பலைப் பூசிக்கொண்டு என் அன்னை(யான உமாதேவி) காணும்படி நின்று திருக் கூத்தாடியருளும் ஐயனே ! வணக்கம், வணக்கம். (எனது) உள்ளம் உனது திருவடித் தாமரையின்கண் இடையறாது பதிந்திருக்க அருள்செய்த தலைவனே ! வணக்கம். பெரிய

 

108


இடபவாகனத்தின்மீது ஆரோகணித்துத் திருக்கருவையென்னும் சிறந்த நகரத்தின் வீதியின்கண்ணே எழுந்தருளிவரும் குற்றமற்றவனே ! வணக்கம்.

கடையுகம்-யுகக்கடை; இலக்கணப்போலி. பொழில்-பூமி; ‘புவியும் சோலை யும் பெருமையும் பொழிலே’ என்பது பிங்கலம். ‘ஏழையும்’ என முற்றும்மை கொடுத்தார் ‘இனைத்தென்றறி பொருள்’ ஆதலின். கொளுத்துதல்-பற்றுவித்தல்; ‘அறிவு கொளுத்தினான்’ ‘கூரை கொளுத்தினான்’ என வருதல் காண்க. கொளுத்திய சுடலை-எரித்த காரணத்தால் உண்டான காரியமாகிய சுடலை எனப் பொருள்படுதலின் ‘கொளுத்திய’ என்பது காரணப் பொருட்டாய் நின்ற இறந்த காலப் பெயரெச்சமாம். ‘கொளுத்திய சுடலை’ எனப் பாடங்கொள்வாருமுளர்; ‘எரித்து அந்தச் சுடலை’ எனப் பொருள் கொள்வர். அடலை-சாம்பல். ‘அடலை வெண்பலி சாம்பலாகும்’ என்பது பிங்கலம். மேவியே-ஏ, இசைநிறை.

சர்வசங்காரகாலத்தில் சிவபெருமான்கொள்ளும் திருவுருவம் அனற்பிழம்பாத லால் ‘ கனல் கொளுத்திய ’ என்றார். உலகம் ஏழையும் என்பதை மேல் உலகம் ஏழையும் கீழ் உலகம் ஏழையும் எனக் கொள்க. அம்பலமாவது பொது இடம். போற்றி போற்றி என்பது உவகைபற்றிவந்த அடுக்கு. யாவுமழிந்த சங்காரகாலத்தில் இறைவன் திருநடத்தைக் காண்பார் உமாதேவியேயாதலால் ‘ அம்மைகாண ’ என்றார்.

(93)

94. விமல ! போற்றி. நின் பெருமை நாரணன்
விரிஞ்சன் ஆதியோர் அறிய கிற்றிலா
அமல ! போற்றிநான் அறியும் வண்ணம்முன்
அறிவு தந்தருள் அறிவ ! போற்றி. தண்
கமல வாவிசூழ் கருவை மாநகர்க்
களவின் நீழல்வாழ் கால காலனே !
இமய மால்வரைக் குமரி ஒப்பனைக் (கு)
இனிய காதல ! போற்றி. எந்தையே !

 


109

குற்றமற்றவனே ! வணக்கம். திருமால் நான்முகன் முதலிய (தேவர்களும்) உன்னை அறியமாட்டாத பெருமையையுடைய மலரகிதனே ! வணக்கம். (உன்னை) யான் அறிந்து (வழிபடும்) வண்ணம் முன்னதாக (எனக்கு) அறிவு தந்தருளிய ஞானசொரூபனே! வணக்கம். குளிர்ந்த தாமரைத்தடங்கள் (அகத்தே) சூழ்ந்த திருக்கருவை யென்னும் சிறந்த நகரின் கண்ணே களாமரத்தின் நீழலில் எழுந்தருளியிருக்கும் காலகாலனே ! இமயம் என்னும் பெரியமலை (யரசன் பெற்ற) புதல்வியான ஒப்பனை யம்மைக்கு இனிமைதரும் அன்பனே ! என் தந்தை யனையானே ! வணக்கம்.

‘நாரணன் விரிஞ்சன் ஆதியோர் நின் அறியகிற்றிலாப் பெருமை அமல’ என இயைக்க. விரிஞ்சன்-பிரமன். அறிய கிற்றிலா-ஈறு கெட்ட எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சம் ; அறி-பகுதி, அ-சாரியை, யகரத்தோற்றம் சந்தி, கில்-ஆற்றலுணர்த்தும் விகுதி ; அனைத்தும் ஒரு பகுதியாய் ‘அறியகில்’ என நின்று துகரச்சாரியையும் இல் என்னும் எதிர்மறை விகுதியும், ஆகாரச் சாரியையும் கூடி ‘அறியகிற்றிலா’ என்றாயிற்று ; லகர தகரங்கள் றகரமாகத் திரிந்ததும் உகரக்கேடும் சந்தி. கால காலன்-யமனுக்கு யமனானவன் ; கூற்றை யுதைத்தமைபற்றிச் சிவபெருமானுக்கு இப் பெயர் வழங்கலாயிற்று : ‘கூற்றுவன் தனக்கோர் கூற்றுவனாகி’ என்றார் நக்கீரரும். மால் வரை-பெரிய மலை. எந்தை-என் தந்தை என்பதன் மரூஉ.

இறைவனது திருவுருவம் சத், சித், ஆனந்தம் என மூன்றென்பர். இவற்றுள் சித் என்பது அறிவாதலால் அவ்வடிவைக் குறிப்பிட்டு ‘ அறிவ ’ என விளித்தார். அவனை வணங்குதற்கும் அவனருள் வேண்டுதலின், உன்னை அறியும் அறிவை, உன்னை அறியும் முன் நீயே கொடுத்தருளினை என்பார் ‘ முன்னறிவு தந்த ருளறிவ ’ என்றார். இமயம் என்னும் பர்வதராஜன் புதல்வி பார்வதி யாதலால் ‘இமயமால்வரைக் குமரி’ என்றார்.

(94)


110


95. எந்தை யாயினாய் ! குரவன் ஆயினாய் !
இறைவன் ஆயினாய் ! போற்றி. என்மனப்
பந்தம் ஆயினாய் ! வீடும் ஆயினாய் !
பரமும் ஆயினாய் ! போற்றி. தென்புலச்
சந்த மால்வரைத் தமிழ்மு னிக்கு(உ)மை
தனைம ணந்தமெய்க் கோலம் காட்டினாய் !
சுந்த ரப்புயத் தழகு போற்றி.நற்
சோதி ! பால்வணத் தாதி ! போற்றியே.

எனக்குத் தந்தை ஆனவனே ! (எனக்கு) ஆசிரியன் ஆனவனே ! (எனக்குத்) தலைவன் ஆனவனே ! வணக்கம். என் மனத்துக்குப் பற்றுக்கோ டானவனே ! (மனப்பற்றற்ற) முத்தியும் ஆனவனே ! (பற்றும் முத்தியுமான அவ்விரண்டையும் தரும்) மேலோனும் ஆனவனே ! வணக்கம். தென்திசையில் உள்ள சந்தனமரம் (செறிந்த) பெரிய (பொதிய) மலையில் அமர்ந்த தமிழ்முனிவராகிய அகத்தியருக்கு உமாதேவியைத் திருமணஞ் செய்தருளிய (உனது) உண்மைத் திருக்கோலத்தைக் காட்டியருளினவனே ! (உனது) திருப்புயங்களின் அழகு புகழப்படுவதாக. நல்ல சோதியே ! பால்வண்ணனான முதல்வனே ! வணக்கம்.

குரவன்-ஆசிரியன்; ‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்’-இவ்வைவரும் ஐங்குரவர் எனப்படுவர் ; குரவராவார் வழிபாடு பெறத்தக்க பெரியோர்; இச் சொல் ஆண்பாலீற்றதாய் வருமிடத்து ஆசிரியனையும், பலர்பால் ஈற்றதாய் (ஐந்து என்னும் எண்ணடைபெறாது) வருமிடத்துத் தாய்தந்தையரையும் குறித்தல் பெரும்பான்மையான வழக்கு ; ‘ குரவனை வணங்கக் கூசிநின்றோனும் ’ ‘குரவர்தாம் இயைந்து கொடுத்திலராயின் ’ என்பன எடுத்துக்காட்டு. பந்தம்-பற்று ; வீடு-முத்தி (பற்றுக்கு மறுதலை); பரம்-மேலானது. ‘ பற்றாயதன்றி அப் பற்றுக்கு மறுதலையுமாகி

 


111

னாய் ; பந்தமும் வீடுமாயதன்றி அவற்றிற்கு மேற்பட்டோனுமாயினாய் ’ எனப் பொருள் தருதலின் உம்மைகள் இரண்டும் இறந்தது தழீஇய எச்சவும்மை. சிவபெருமான் பந்தம் வீடு என்ணும் இரண்டிற்கும் மேலானவன் என்பது ‘ பந்தமும் வீடும் ஆயபத பதார்த்தங்கள் அல்லான் ’ என்னும் சிவஞானசித்தித் திருவாக்கினும் பெறப்படுதல் காண்க. தமிழ்மொழிக்கு ஆதியிலக்கணம் செய்தவராதலால் அகத்தியர் தமிழ்முனி எனப்பட்டரர். ‘ அழகு போற்றி ’ என்பதில் போற்றி என்பதை வியங்கோளாகக் கொண்டு பொருள் கூறுக ; ஈண்டுப் போற்றுதல் புகழ்தல். ‘அழக போற்றி’ எனவும் பாடம் கொள்வர்.

(95)

96. ஆதி நின்திருத் தொண்டு காதலித்(து)
அறிவு சென்றமட் டாக நின்புகழ்
ஓது செய்யுளிற் குறையு ரைத்ததிங்(கு)
ஒன்றும் நின்செவிக்(கு) உற்ற தில்லையோ ?
காதல் நண்புடைக் கவிஞன் ஏவலும்
கங்கு லிற்கழற் கால்சி வப்புறத்
தூது சென்றவா ! போற்றி. நாடொறும்
தொழும வர்க்கருள் கருவை ஐயனே !

நாள்தோறும் (உன்னை) வணங்குகிறவர்களுக்குத் திருவருள் செய்யும் திருக்கருவைக் கடவுளே ! ஆசைத் தோழமை பாராட்டிய (சுந்தரமூர்த்தி என்னும்) பாவலர் ஏவியவுடனே, வீரக்கண்டை அணிந்த நின் திருவடிகள் சிவக்க இராப்போதில் தூது சென்றவனே ! வணக்கம். உன் திருவடித் தொண்டை விரும்பி, (அவ்விருப்பம் எழுந்த நாள்) முதலாக (இன்று வரையும்) என்னுடைய (அற்ப) அறிவு சென்ற அளவாக உன்னுடைய புகழை(ப் பாடுதல் காரணமாக யான்) பாடிய பாக்களில் (என்னுடைய) குறைகளையும் (பலமுறை உரைத்தேன். அங்

 

112


ஙனம்) உரைத்ததில் ஒன்றேனும் நின் செவிக்கெட்டியதில்லையோ ?

எட்டியிருந்தால் என் குறைகள் தீர்ந்திருக்கும் என்பது கருத்து. குறைகளாவன, உடற்சுமையைச் சுமந்துழலல், சிவபெருமானை இருகண்ணாரக் காணப் பெறாமை முதலியன. செய்யுள் 87, 88, 90 காண்க.

‘நின்திருத்தொண்டு காதலித்த (நாள்) ஆதி(யாக)’ என்க. ஆதி என்பதை விளியாக்கினு மமையுமேனும் மேற்செய்யுளினிறு தியில் அவ் விளி பெறக் கிடந்தமையின் ஈண்டும் கோடல் சிறப்பன்று. செய்யுள்-தொழிலாகுபெயர். காதல் நண்பு-ஆசையோடு கூடிய தோழமை. சிவப்புற-சிவக்க; ஒரு சொல் நீர்மைத்து.

சிற்றறிவுடைய உயிர்களால் அறியப்படாத பெரும் புகழுடையனாதலால், அன்பின் வழிப்பட்டு என் சிற்றறிவிற் கெட்டிய அளவாக உன் புகழைப் பாடினேன் என்பார் ‘காதலித் தறிவு சென்றமட்டாக நின்புகழ் ஓது செய்யுள்’ என்றார். உன் புகழைப் பாடுதலல்லால் என் குறைகளைக் கூறுதல் காரணமாகப் பாடிலேன். ஆயினும் துன்ப உணர்ச்சியின் மிகுதியால் என்னையும் அறியாமல் என்குறைகள் உன் புகழோடு விரவி வெளிப்பட்டன என்பார் ‘நின் புகழ் ஓது செய்யுளிற் குறை யுரைத்தது’ என்றார். குறையிரந்தும் வேண்டத்தகாத ஒரு கருமத்தை, ஏவி வேண்டிய ஒரு கவிஞனுக்கு இசைந்து நீ அவன் ஏவல் வழி நின்று அக்கருமத்தை முடிக்க நின் திருப்பாதம் சிவக்க நடந்தருளினாய் ; அங்ஙனம் தகாததொன்றையும் யான் இரந்தும் வேண்டிலேன் ; என் குறை முடித்தற்கு நீ நின் பெருமைக் கேலாத எதுவும் செய்ய வேண்டிற்றுமில்லை; இருந்தும் யான் தீர்க்கவேண்டிப் பல்காற் குறையிரந்து கூறிய குறைகளில் ஒன்றையும் இதுகாறும் தீர்த்திலாமையை நோக்கின் யான் உரைத்த குறைகளில் ஒன்றேனும் நின்செவிக் கெட்டிலது போலும் என்பார் ‘ கவிஞன் ஏவலும் கங்குலிற் கழற்கால் சிவப்புறத் தூது சென்றுவா ’ என விளித்து ‘ஓது செய்யுளிற் குறையுரைத்ததொன்றும் நின்செவிக்குற்ற தில்லையோ ’ என்றார்.

 

 

113

சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாதமார்க்கம் எனச் சிவ பெருமானை வழிபடும் மார்க்கம் நான்காகக் கூறுவர். இறையும் உயிரும் இவ்வகையால் நிற்கும் முறைமை முறையே, காதலனும் காதலியும் தோழனும் தோழனும், தந்தையும் மகனும், ஆண்டானும் அடிமையும் போல்வதாமெனவும்; இந் நால்வகைக்கும் எடுத்துக்காட்டாவார் முறையே திருவாதவூரடிகளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரையருமாவர் எனவும் கூறுவர். இதுகொண்டு ‘காதனண்புடைக் கவிஞன்’ என்றதறிக.

(96)

97. ஐய னே!சரண் போற்றி. என்னையாள்
அப்ப னே!சரண் போற்றி. பொய்யிலா
மெய்ய னே!சரண் போற்றி. வானவர்
வேந்த னே!சரண் போற்றி மான்மழுக்
கைய னே!சரண் போற்றி. காலனைக்
காய்ந்த வா!சரண் போற்றி. தீநிறச்
செய்ய னே!சரண் போற்றி. காமனைச்
செற்ற வா!சரண் போற்றி. தேவனே!

(தேவர்களுக்குத்) தேவனே ! கடவுளே ! உன் திருவடிக்கு வணக்கம். என்னை ஆண்டருளும் அப்பனே ! உன் திருவடிக்கு வணக்கம். பொய்மை அற்ற சத்தாயுள்ளவனே ! உன் திருவடிக்கு வணக்கம். தேவர்களுக்கு இறைவனே ! உன் திருவடிக்கு வணக்கம். மானையும் மழுவையும் ஏந்திய திருக்கரங்க ளுடையவனே ! உன் திருவடிக்கு வணக்கம். இயமனைக் கோபித்தவனே ! உன் திருவடிக்கு வணக்கம். தழல்போலச் சிவந்த மேனியனே ! உன் திருவடிக்கு வணக்கம். காமனை அழித்தவனே ! உன் திருவடிக்கு வணக்கம்.

(97)


114


98. தேவ னே!பிறர்க் கடிமை யுற்றிலேன் ;
சிந்தை நின்வசம் தந்த தன்றியும்
நாவி னால்தினம் பரவி வாழ்த்துவேன் ;
நாளும் என்குறை தீர்ப்ப தார்கொலோ ?
காவல் மூவரண் கனல்கொ ளுத்திடக்
கருணை செய்திடும் கடவுள்! போற்றி.யான்
பாவ காரியே எனினும் என்னைநீ
பாது காப்பதுன் பண்ப தாகுமே.

காவல் பொருந்திய மூன்று புரங்களை நெருப்புப் பற்றும்படி திருவருள் புரிந்த கடவுளே ! வணக்கம். (தேவ) வேதனே ! (யான் நினக்கல்லால்) பிறருக்கு அடிமைப்பட்டில்லேன் ; (என்னுடைய) உள்ளத்தை உன்பாலே ஒப்புவித்ததோடு (என் நாவையும் உனக்கே தந்து அந்) நாவினால் நாள்தோறும் (உன் திருப் புகழைப் பேசித்) துதித்து வாழ்த்துகின்றேன் ; (அவ்வாறாக) ஒவ்வொரு நாளும் எனக்கு உண்டாகும் குறைகளை நீக்கி (என்னை ஆதரிப்பவர் நின்னையல்லால் வேறு) எவர் உளர் ? (ஒருவருமில்லை.) யான் தீவினையேன் ஆனாலும் நி என்னை ஆதரிப்பது உன் (அருட்) குணத்துக்கு இயைந்ததேயாகும். (ஆதரித்தருள்.)

வசம், ஏழாம் வேற்றுமை இடப்பொருள்தரும் ஒரு சொல்லுருபு. அன்றியும் என்பதில் உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. பரவல்-முன்னிலைப்படுத்திப் புகழ்தல். நாளும், என்பதில் உம்மை முற்றும்மை. யாவர் என்னும் வினாவினைக் குறிப்பு ஆர் என மரீஇயது. கொல், ஒ,-அசைநிலை. காவல்மூவரண்-உருபும் பயனும் உடன்தொக்க தொகை. பண்பது-பண்பு; அது பகுதிப்பொருள் விகுதி.

‘பிறர்க்கடிமை யுற்றிலேன்’ என்றதால் உனக்கடியனாயினேன் என்றா ராயிற்று. எனவே காயத்தால் உனக்குத் தொண்டு

 


115

செய்வேன் என்றாராம்; ‘ சிந்தை நின்வசம் தந்ததன்றியும் நாவினால் தினம் பரவி வாழ்த்துவேன் ’ என்றதால் மனமொழிகளால் வழிபடுதல் கூறினாராம். ஆகவே மனமொழி மெய்களாற் செய்யக்கடவ மூவகை வழிபாடுகளும் பெறப்பட்டன. பிறர்க்கடிமை யுற்றிலேன் என்றது பிறதெய்வங்களை வழிபடாமையைக் குறிக்கும். ‘உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லால் எங்கள் உத்தமனே’ என்றார் பிறரும். அடிமையுறலும், சிந்தனை அவன் வசமாக்கலும், நாவால் வாழ்த்தலுமாக ஈண்டுக் கூறிய இவற்றோடு மேல் (63-ம் செய்யுளில்) ‘சிந்தனையுனக்குத் தந்தேன்’ எனப்போந்த செய்யுளை ஒத்திட்டு நோக்குக.

(98)

99. பண்ப யிற்றிவண் டாடு கொன்றையம்
படலை மார்பனே ! போற்றி. அம்பிகை
கண்க ளித்திடத் தில்லை மனிறினிற்
கடிந டம்புரி கடவுள் ! போற்றி.பூஞ்
சண்ப கச்செழுங் காவின் வேரிசூழ்
தண்க ளாவனத் தடிகள் ! போற்றி.மீ
விண்ப ரிப்பவன் தொழுத நம்பனே !
வெள்ளை மேனியாய் ! போற்றி, போற்றியே.

இசை பாடிக்கொண்டு வண்டுகள் சூழந்து பறக்கும் அழகிய கொன்றை மாலையினை அணிந்த திருமார்புடையவனே ! வணக்கம். உமாதேவி கண்டு களிக்கும்படி தில்லைப் பொதுவில் சிறந்த நடனஞ் செய்தருளுகின்ற ஐயனே ! வணக்கம். அழகிய சண்பகமரங்கள் நிறைந்த வளமுடைய சோலையினின்று வரும் வாசம் சூழ்ந்து (கமழும்) குளிர்ந்த களாவனத்தில் எழுந்தருளிய அடிகளே ! வணக்கம். மேலுள்ள விண்ணுலகத்தைக் காப்பவன் (ஆன இந்திரன்) வணங்கிய நம்பனே! வெண்(ணீறு பூசியதிரு) மேனியனே! வணக்கம், வணக்கம்.

 

116


அம்-அழகு; சாரியை யெனலுமாம். படலை-மார்பிலணியும் மாலை. மன்று-பொதுவிடம். கடி-சிறப்பு. பூஞ்சண்பகம், ‘பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்’ ஆதலால் ஞகரந் தோன்றியது. கா-சோலை. வேரி-வாசனை. அடிகள்-சுவாமிகள், மீ-மேல். பரிப்பவன்-காப்பவன். நம்பன்-நம்பியடைதற்கு இடமானவன் ; இறைவன்.

‘தில்லைமாநகர்க் கனகமன்றினின் றாடிபோற்றி நீள்’ என்பதும் பாடம். ‘சோலை வாவிசூழ்’ என்பதும் பாடம். ‘வான் வெண்பிறைக் கொழுந்திலகு வார்சடை வெள்ளை மேனியாய்’ என்பதும் பாடம்.

தில்லைமன்றுள் சிவகாமசுந்தரி கண்டு மகிழச் சிவபெருமான் திருநடனம் புரிதலை,

தேய்பொடி வெள்ளைபூசி யதன்மே லொர்
திங்கடிலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
கரிகாடர் காலொர் கழலர்
வேயுட னாடுதோளி யவள்விம்ம வெய்ய
மழுவீசி வேழஉரி போர்த்
தேயிவ ராடுமாறு மிவள் காணுமாறு
மிதுதா னிவர்க்கொ ரியல்பே.

என்ற தேவாரத் திருவாக்கினும் காண்க. ‘தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி’ என்று திருவாய்மலர்ந்தருளினார் திருவாதவூரடிகள். அநாதி மலத்திற் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களை அக்கட்டகற்றித் தொழிற்படுத்தி அவ்வாற்றால் ஆணவ வலியைக் கெடுத்துப் பேரின்பப் பெருவாழ் வளிக்கும் அருட்குறிப்போடு, சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகம் என்னும் ஐந்தொழிலும் இயற்றும் நடமாதலால் ‘ கடிநடம் ’ என்றார்.

(99)

 

117

100. வெள்ளை மேனியாய் ! போற்றி. ஒப்பனை
மேவு மார்பனே ! போற்றி, போற்றி.பூங்
கள்ள லம்புதண் களவின் நீழலிற்
கருணை யங்கடற் கடவுள் ! போற்றி.நான்
உள்ளம் ஒன்றிநின்(று) அடிவ ழுத்திட
உதவி செய்தவா ! போற்றி. இன்புறத்
தெள்ளு செந்தமிழ்க் கருவை மாநகர்ச்
செல்வ ! போற்றி.நின் சீர்கள் போற்றியே.

(பால்போலும்) வெள்ளிய திருமேனியனே ! வணக்கம். ஒப்பனை யம்மை விரும்பிச் சேர்ந்த திருமார்பனே ! வணக்கம், வணக்கம். தேன் ததும்புகின்ற மலர்களை யுடைய குளிர்ந்த களா மரத்தின் நீழலில் எழுந்தருளிய அருட்கடலான ஐயனே! வணக்கம். நான் மனம் பொருந்தி நிலைத்து (உனது) திருவடிகளைத் துதிக்க (உணர்வு கொடுத்து)அருள் செய்தவனே ! வணக்கம். இன்பமுண்டாகும்படி தெளிந்த செவ்விய தமிழ் வழங்கும் திருக்கருவை என்னும் சிறந்த நகரிற் கோயில் கொண்டருளிய (சர்வ) ஐஸ்வரியனே ! (வணக்கம்.) அளவிடற்காகாத உன்னுடைய நலங்கள் (யாண்டும் என்றும்) புகழப்படுவனவாக.

மேவுதல்-விரும்புதல். அலம்புதல்-ததும்புதல். ஒன்றி-பொருந்தி. நின்று-நிலைத்து. வழுத்தல்-துதித்தல். உதவி-அருள். ‘ நாவலர் தெள்ளு செந்தமிழ் ’ என்பதும் பாடம்.

‘உள்ளம் ஒன்றி நின்று அடி வழுத்திட உதவி செய்தவா ’ என்றது, பொது வகையால் சிவபெருமானைத் துதிக்க உணர்வளித்த திருவருளைக் குறித்தலோடு ; சிறப்புவகையால், சிவபெருமானைத் துதிக்க என்றெடுத்த இந்நூல் இனிது முடியச் செய்த திருவருளையும் குறிக்கும். தெளிவும் செவ்வியும் இன்புறுதற்கு ஏதுவாத லால் ‘ இன்புறத் தெள்ளு செந்தமிழ்’ என்றார். ‘தெள்ளு

 

118


செந்தமிழ் ’ என்னும் சொற்றொடர்க்குப் பொருள் முன் 81-ம் செய்யுளிற் கூறப்பட்டது. ‘ நின் புகழைப் பாடத்தொடங்கி முடித்தேனாயினும் நின் புகழ் இதனோடு முடிந்ததில்லை. பலவாகி அளவிறந்த நின் கீர்த்திப் பிரதாபங்கள் என்றென்றும் புகழப்படுவனவாக என்று கூறுதலன்றி யான் நின்புகழை முற்றமுடிய உரைக்குமா றறியேன் ’ என்பார் ‘நின்சீர்கள் போற்றியே’ என்று முடித்தார். அந்தாதியாதலால் சீர் என இறுதியும் முதலும் மண்டலித்து முடிந்தது.

மூலமும் உரையும்

முற்றும்.

 

119

புறனடை

_____

இந் நூலகத்துச் சுட்டப்பட்ட

புராண வரலாறுகள்.

_____

காப்புச் செய்யுள். விநாயகப் பெருமானுக்கு யானைமுகம் வந்த வரலாறு: கயமுகாசுரன் தேவர்களாலும் பூதங்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் ஆயுதங்களாலும் இறவாதிருக்கச் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான். அப் பேற்றால் அகந்தை கொண்டு அவன் தேவர்களைப் பெரிதும் துன்புறுத்துவா னாயினான். அதனைப் பொறுக்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து தமது துன்பத்தையெல்லாஞ் சொல்லி முறையிட்டனர். அடைந் தாரைப் புரந்தருளும் அருட்பெருந்தகையாளராகிய சிவபெருமான் தேவர்களுக்குத் தேறுதல் கூறி அவர்களை அனுப்பிவிட்டுத் தாம் பார்வதிதேவியாருடன் கைலை மலைச் சாரலில் அணிமலர்ச் சோலையகத்த தாயதொரு திருமணி மண்டபத்துக்கு எழுந்தருளினர். ஆண்டொரு சித்திரச் சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களை அண்ணலுந் தேவியுங் கண்ணுற்றுச் செல்லுங்காலைப் பிரணவமந்திரம் ஒரு சித்திரமாய் வரையப்பட்டிருக்கக் கண்ட சிவபெருமான் யானைமுக வடிவிற்றாய அவ்வோங்காரத்தைக் கயமுகாசுரனைக் கொன்று தேவர்களைக் காத்தருளும் திருக்குறிப்புடன் நோக்குவாராயினர். அவ்வளவிலே அவ் வோங்காரம் களிறும் பிடியுமாய்ப் பிரிந்துகூட அக் கூட்டத்தின் விளைவாக விநாயகப் பெருமான் யானைமுகத்துடன் தோன்றிக் கணங்களுக்குத் தலைமை பூண்டு கணபதியாய்க் கைலாயத்தில் அமர்ந்தருளித் தேவர்கள் குறைதீர்க்கக் கயமுகாசுரனோடு போர்புரிந்து, ஆயுதங்களால் அவன

 


120


இறவானென்பதை உணர்ந்து தமது திருமுகத் திருகோட்டில் வலக்கோட்டை ஒடித்து வீசு அதனால் அவ்வசுரனைக் கொன்றனர்.

சிந்துரன் என்னும் அசுரனை அழித்தற்பொருட்டுக் கருவுருக் கொண்டிருக்கை யில் அவ்வசுரனால் சிரங் கொய்யப்பட்டு ஆவணி மாதச் சதுர்த்தியில் சிரமின்றித் திருவவதாரஞ்செய்து பின்னர்க் கயாசுரன் சிரத்தைக்கொண்டு திருவுரு முற்றுப் பெற்றதாகக் கூறும் விநாயகபுராணம். ‘கசானனர் திருவவதாரப்படலம்’ காண்க. வேறு பிற புராணங்கள் பல, வேறு பலவாறாகக் கூறுவதுமுண்டு. பிரணவ சொரூபம் விளக்கவந்த திருவுருவென்று கோடலே சாலும்.

நூல்

செய்யுள்-2. ‘ சீறுடரவம் முடித்த சடை ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை மறந்து மீமாஞ்சை நூலை உண்மை எனக் கொண்டு இறுமாந்திருந்தனர். அவர்கள் இறுமாப்பை அடக்கி உள்ள நிலையைச் சோதித்துத் தமது திருவடிக் காட்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான்,

‘திருவடியின் மிதியடியும், திகழுடைவெண் கோவணமேல்
மருவரையும், புரிநூலும், வலஞ்சுழிஉந் தியும்,மார்பும்,
ஒருவரையும், இருவரையும் புரையாத உயர்தோளும்,
பரவருநற் பொக்கணமும், தமருகமும், பலிக்கலனும்,
‘சீராரும் திருமிடறும், செங்கனிவாய்ப் புன்சிரிப்பும்,
ஏராரும் வார்காதும், இலகுவிழித் தொழில் நயப்பும்,
வேராரும் திருநுதற்கீழ் விருப்புருவத் திருப்புருவம்
தாராநிற் கும்கமலத் தனிமலர்போல் திருமுகமும்,
‘பொட்டுமலி திருநுதலும், புரிந்துமுரிந் திசைந்தசைந்த
மட்டுமலி கருங்குழலும், வளர்பவள ஒளிமழுங்க
விட்டுவிளங் கியஎழிலார் மேனியுமாய் மெல்லியலார்
பட்டுவிழும் படியில்விழும் படியழகின் படிவமென’
(கோயிற்புராணம்)

 


121

பிக்ஷாடனத் திருக்கோலம் கொண்டு, திருமாலைப் ‘ புகல்வரிதாம் பொலிவினதாய், அற்புதமாய்ச் சிவந்துநிமிர்ந் தகன்றவயில் விழிக் கணைகள், விற்புருவத்துடன் ’ கூடிய மோகினி உருக்கொள்ளச் செய்து, மோகினி உருவாய அத் திருமாலும் தாமுமாய்த் தாருகாவனத்து முனிவர் பன்னசாலைகளிற்சென்று பிச்சை இரந்தனர். அப்போழ்து அம் முனிவர்கள் மோகினியின் பேரழகில் மயங்கியும் அவர்கள் மனைவியர் சிவபெருமானது பேரழகில் மயங்கியும் தம் நிறையும் கற்பும் முறையே இழந்து உள்ளநிலை குலைந்தனர். அன்றியும் அம் முனிவர்கள் தம் மனைவியர் கற்பிழக்கக்காரணமான காபாலி என்பதுபற்றிச் சிவபெருமான்மீது சீற்றங்கொண்டு அவரைப் பலவாறு சபித்தனர். அச் சாபங்களெல்லாம் இறைவனை அணுக மாட்டாமல் கெட்டொழிந்தன. அதுகண்டும் அம் முனிவர்கள் உண்மை உணராமல் முன்னையினும் சீற்றம் மிகுந்து இக் காபாலியை எம் யக்ஞபலத்தால் அழிப்பம் என எழுந்து சிவபெருமான் திருமுன்னர் ஓமகுண்டம் அமைத்து ‘ நஞ்சான திரவியங்கள் பல கொண்டு நெஞ்சாலும் நினைவரிய நிருமலனே இலக்காக ’ அபிசார வேள்வி ஒன்று செய்தனர். உடனே அவ்வோமகுண்டத்தினின்று புலி ஒன்று கர்ச்சித்து எழுந்தது. முனிவர்கள் அதனைச் சிவபெருமான்பால் ஏவினர். சிவபெருமான் சிரித்தருளித் தம்மை நோக்கிவந்த அப் புலியைப் பிடித்துத் தமது திருக்கரத்தின் நுனி நகத்தால் அதன் தோலைக் கிழித்துப் பசும்பட்டாக அரையில் உடுத்தருளினார். அதன்மேல் ஓமகுண்டத்தினின்று பூதங்கள் எழுந்தன. முனிவர்கள் அவற்றினை ஏவ அவை சிவபெருமானுக்கு அடிமைகளாகி அவரைச் சூழ்ந்து சேவித்து நின்றன. பின்னர் மானும் மழுவும் நாகங்களும் ஓமகுண்டத்தினின்று உண்டாயின. முனிவர்கள் ஏவலால் வந்த அவைகளில் மானை இடக்கையிலும் மழுவை வலக்கையிலும் நாகங்களைச் சிரத்திலும் உரத்திலும் கரத்திலும் ஆபரணங்களாக அணிந்தருளினார் சிவபெருமான். அப்பால் முயலகன் என்னும் அசுரன் குறள் வடிவினனாய் ஓமகுண்டத்தினின்று தோன்றி வந்தனன். சிவபெருமான் அவ்வசுரனைக் கீழேதள்ளி முதுகுநெரியத் தமது வலத்திருவடியால் மிதித்து ஏறி

 

122


நின்றார். முனிவர்கள் யாவும் பயனற்றமைகண்டு மந்திரங்களை ஏவினர். அவற்றைச் சிவபெருமான் தமது திருப்பாதச் சிலம்புகளாகத் தரித்தருளிச் சடைதாழச் சிலம்பொலிப்ப அம் முனிவர்களுக் கெதிரே நாற்கரமும் நுதல்விழியும் கறைக்கண்டமும் தோன்ற, கணங்கள் துணங்கைக் கூத்தாட, அரிய திருநடனம் செய்யத் தொடங்கினார். அக்கினியையும் இழந்து மந்திரங்களையும் இழந்த அம் முனிவர்கள் அந் நடன வேகத்தைத் தாங்கலாற்றாது வீழ்ந்தனர். மோகினி உருக்கொண்ட திருமாலும் நடுங்கினர். சிவபெருமான் நாக கங்கணம் அணிந்த திருக்கரத்தால் அஞ்சல் என்று அவரை அமைத்தருளினார். அவ்வளவில் பார்வதி தேவியார் இடப வாகனத்தோடு ஆண்டு எழுந்தருளிவந்து சிவபெருமானது இடப் பாகத்திலே பொருந்தினர். சிவபெருமான் மகிழ்ந்து அம்மையார்மீது திருக்கடைக் கண் சாத்தியருளினார். அப்பொழுது தேவர்கள் மலர்மழை பொழிந்தனர்; பிரமாதிய ரனைவரும் சிவபெருமான் திருமுன்வந்து நிலந்தோயப் பணிந்தனர். திருமாலும் தமது பெண்வடிவொழித்து முன்னை யுருப்பெற்றுப் பிரமாதியரோடு சென்று சிவபெருமானை நமஸ்கரித்து நின்றனர். சிவபெருமான், பார்வதிதேவி யாரும் தேவர்களுங் காண ஒப்பரிய திருக்கூத்துகள் ஆடிப் பின்னர் தேவர்களை நோக்கி, ‘ எமது இன்பக் கூத்தைச் சிவலிங்கத்தினிடமாகத் தியானித்து உய்யுங்கள்’ என்று திருவாய்மலர்ந்தருளிப் பார்வதிதேவியாரோடு ஆகாயத்தில் மறைந்தருளினார். இவ்வாறு கோயிற் புராணம் கூறிற்று.

இவ் வரலாறு வேதத்தில் விதிக்கப்பட்ட யாகாதி கர்மங்கள் ஒழிந்து சிவ வழிபாடு சிறக்கத் தொடங்கிய சரித உண்மையைக் குறிக்க எழுந்த தென்பது அறிஞர் சிலர் கருத்து. மீமாஞ்சையாவது உலகம் முதலீறற்ற உள்பொருள் எனவும், ஆன்மாக்களின் வேறாக ஆண்டவன் ஒருவன் இல்லை எனவும், சிவன் முதலிய சத்தங்களே பிரமம் எனவும், வேதம் விதித்த கருமங்களே இருமைப் பயன்களையும் பயக்கும் எனவும் கூறுவது. இது செய்தார் சைமினி முனிவர்.

செய்யுள்-4. ‘ பொதுவில் நடித்தோன் ’ என்றதாற் பெறக்

 


123

கிடக்கும் வரலாறு : மத்தியந்தின முனிவர், சிவபெருமான் திருவருளால் தமக்குப் பிறந்த அருமை மகனார்க்கு நாமகரண முதலாகிய சடங்குகள் அனைத்தையும் முறைப்படி செய்துமுடித்து ஸ்ரீபஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து ‘ குழந்தாய், இனியாம் உனக்குச் செய்யவேண்டுவ தென்ன ? ’ என்று வினாவியருளினார். அப்பொழுது குமாரர், தந்தையார் திருவடிகளை வணங்கி, வேதாகமங்களிற் கூறப்பட்ட தவவகைகளுட் சிறந்தது யாதென்று அறிவிக்குமாறு வேண்டினர். சிவார்ச்சனையே சிறந்ததென்று அருளினர் தந்தையார். தனயர் அதனை ஏற்றுக் கொண்டு, ‘சிவபெருமான் திருவுளங்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலம் யாது? அதனையும் அடியேற்குத் தெரிவித்தருளல் வேண்டும்’ என்று இரந்தனர். அதற்குத் தந்தையார் அருளிச்செய்வார்: ‘உலகமெல்லாம் சிவசன்னிதியேயாம். அப்படிக் காணாமை தவக்குறை என்பதறிவாயாக. ஆயினும், பசுவின் மடிமுழுதும் நிறைந்திருக்கும் பாலமுதம் முலைக்காம்பில் வெளிப்பட்டுத் தோன்றுமாறுபோல வும், உடலெங்கும் வியாபித்த ஆன்மா உள்ளக்கமலத்தைச் சிறப்பிடமாகக் கொண்டாற்போலவும், இறைவன் எங்கும் நிறைந்திருப்பினும் சிறப்பாகக் கொண்டிருக்கும் இடமும் ஒன்று உண்டு. அஃதாவது, தில்லை மூலத்தானமே’ என்றுகூறி அதற்கான காரணத்தையும் விளக்கியருளினார். புதல்வர், அவர் உரைத்தவற்றைக் கேட்டுக்கொண்டு, அவரையும் அன்னையாரையும் அடிவணங்கி விடை பெற்றுத் தில்லை நாடிச் சென்றார். சென்ற பாலமுனிவர் தில்லைவனத்தின் மேற்புறம் உற்று, ஆங்கொரு மரநிழலில் சிவலிங்கம் ஸ்தாபித்து நாடோறும் அதை அருச்சித்து வழிபடுவாராயினர். அப்பொழுது, அருச்சனைக்காகும் பூக்களைக் குற்றமற ஆய்ந்து கொய்வது அரிதாக, அதற்காக வருந்திச் சிவபெருமானை வேண்டி, அவரால் புலிநகங்களுடைய கால்களும் கைகளும் பெற்றதன்றி ஒவ்வொரு நகத்தினும் ஒவ்வொரு கண்ணும் அமையப்பெற்றார். அதனால் அவர் வியாக்கிரபாதமுனிவர் எனவும் புலிக்கால்முனிவர் எனவும் பெயர்பெற்றனர். இங்ஙனம் பூக்களைக் குற்றமற ஆய்ந்து கொய்தற்கு ஏற்ற அவயவங்களைப்பெற்ற முனிவர் சிவார்ச்சனை

 


124


யைக் குறைவற நடத்திவருநாட்களில், தந்தையார் விருப்பத்திற்கிணங்கி வசிட்டமுனிவர் தங்கையை மணம்புரிந்து அவ்வம்மையார்பால் உபமன்னியரைப் பெற்றார். அப்பால் ஒருநாள் வியாக்கிரபாதமுனிவர் தம்மை ஆண்டருளும் சிவலிங்கப் பெருமான் சன்னிதியில் சிவயோகம்பொருந்தி யிருந்தனர். அப்பொழுதுண்டான அனுபவ ஞானத்தினாலே, சிவபெருமான் தாருகாவனத்தில் நாற்பத்தெண்ணாயிர முனிவர்க்கு மோகத்தை யொழித்து ஆனந்தத் தாண்டவம் செய்தருளியதை அறிந்தார். உடனே, அத் திருநடனத்தை யாம் தரிசிக்கப் பெற்றோமில்லையே என்று வருந்தினர். பிறகு, தமது தந்தையார் திருவாய்மலர்ந் தருளிய தில்லை மூலத்தானச் சிறப்பைச் சிந்தித்து, இதுவே பொதுவாய்ச் சம்சார வழக்கறுக்கும் அம்பலம் என்பது தெளிந்து, இங்கே சிவபெருமான் தமது திருநிருத்தத்தைத் தரிசிக்கத் தந்தருளுவார் என்று மன அமைதியுற்றுப் பண்டுபோல் அன்புவளர வழிபட்டு வந்தார். இவரிங் கிவ்வாறாக ஆதிசேடர், சிவபெருமான் தாருகாவனத்தில் இயற்றியருளிய திருக்கூத்தை நாராயணனால் அறிந்து, அதைத் தாமும் தரிசிக்க விரும்பித் தவஞ்செய்தார். சிவபெருமான் அவர் தவத்துக்கிரங்கி எதிர்ப்பட்டு, ‘தாருகாவனம் பூமி மையமன்றாதலால், ஆண்டு யாம் ஆடிய திருக்கூத்தால் உலகம் அசைந்தது, எமது நடனத்தைப் பொறுக்கக்கூடிய இடம் தில்லை மூலத்தானமே. அத் தில்லைவனத்தில் வியாக்கிரபாத முனிவனும் உன்னைப்போலவே எமது நடனத்தைத் தரிசிக்க நெடுங்காலமாகத் தவஞ்செய்து வருகின்றான். நீ, இவ்வுருவோடு சென்றால் உலகினர் உன்னைக் கண்டு அஞ்சுவர். ஆதலின், நீ இவ்வுருவொழித்துப் பதஞ்சலி முனிவனாகச் சென்று அத்தில்லை வனத்தை யடைந்து, ஆண்டு அருந்தவம்செய்யும் வியாக்கிரபாத முனிவனோடு மூலத்தான வெளியில் காத்திரு. தைப்பூசம் குருவாரத்தோடு பொருந்துகிற சித்தயோக தினத்தில் யாம் அவ்விடத்தில் நீங்கள் தரிசிக்கும்படி ஆனந்த நிருத்தஞ் செய்தருளுவோம்’ என்றருளி மறைந்தனர்.

ஆதிசேடர் அவ்வாறே பதஞ்சலி முனிவராகத் தில்லைவனம்

 


125

நண்ணி வியாக்கிரபாதரைக் கண்டு அளவளாவி அவரோடு சிவபெருமான் குறித்த இடத்தை நண்ணிக் குறித்த காலத்தை எதிர்பார்த்திருந்தனர். நெடுங்காலம் இங்ஙனம் செல்லக் குறித்தநாள் வந்துற்றது. அன்று, இவ்விருவரும், முனிவரர் மூவாயிரரும், அரியயன் முதலிய தேவருங் காணச் சிவபெருமான் தில்லைப்பொதுவில் திருநடனஞ் செய்தருளினர்.

செய்யுள்-13. ‘ ஒப்பனை மைப்பரந் தெறிக்கும் விழியினால் உருகி ஒருபுற மளித்த விமலனே ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : சிவபக்தரான பிருங்கி முனிவர் நாடோறும் சிவபெருமானை வலம்வந்து வழிபட்டு வணங்கும் நெறியுடையவர். அவர் உமாதேவியை நீக்கிச் சிவபெருமானைமட்டும் வலம் வருதலைக் கண்ட தேவியார் இறைவனை நோக்கி முனிவர் தம்மை வலம் வராமைக்குக் காரணம் யாதென வினாவினார். அதற்குச் சிவபெருமான் ‘ இஷ்ட சித்தி பெற விரும்புவோர் உன்னையும் முத்திபெற விரும்புவோர் என்னையும் வலம் வருவர்’ என்றார். அது கேட்ட உமாதேவியார் சிவபெருமானைப் பிரியாதிருக்கத் தவஞ்செய்தனர். சிவபெருமான் தேவியார் தவத்துக்கிரங்கித் தமது இடப்பாகத்தை அளித்தனர்.

செய்யுள்-17. ‘ நாரண னறியாத் திருவுரு ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : ஒரு காலத்தில் அயனும் மாலும் தாந்தாமே தலைவர் என்று தருக்கி வாதிட்டனர். அப்போது, அவர்கள் தருக்கடக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான் இருவருக்கும் இடையே தோன்றி ‘ எமது அடியையேனும் முடியையேனும் எவர் காண வல்லீரோ, அவரே தலைவர் ’ என்றருளினர். அது கேட்டு அயன் ‘ யான் முடி காண்பேன் ’ என்று அன்னவுருக்கொண்டு எழுந்து விண்சென்றும், திருமால் ‘ யான் அடி காண்பேன் ’ என்று வராக உருக்கெண்டு நிலங்கீண்டு சென்றும் அடி முடி தேடினர். நெடுங்காலந் தேடியும் இருவரில் எவரும் சிவபெருமான் அடியையேனும் முடியையேனும் காணமாட்டாமல் எய்த்து ஓய்ந்து தம் தருக்கொழிந்தனர்.

செய்யுள்-19. ‘ குறுமுனிபரவ ’ என்றதாற் பெறக்கிடக்கும்

 

126


வரலாறு: சிவபெருமானது திருக்கலியாணச் சிறப்பைக் காண அனைவரும் திரண்டு இமயமலைக்குச் செல்ல, வடதிசை தாழ்ந்தது; தென்திசை உயர்ந்தது. அதுகண்டு பலரும் வருந்த, சிவபெருமான் அகத்தியரை நோக்கி ‘நீர்தென்றிசையிற் போயிரும். பூமி சமநிலை யாய்விடும்’ என்றனர். அவ்வாணை தாங்கிச் செல்ல உடன்பட்ட அகத்தியர் ‘சிவபெருமான் மணக்கோலத்தைத் தரிசித்தற் கில்லையே’ என்று உளம் வருந்தினர். அஃதறிந்த இறைவர் ‘யாம் உமக்குத் தென்றிசையில் வந்து மணக்கோலங் காட்டுவோம்’ என்று அருளிப் பின்னர் அவ்வாறே செய்தனர்.

செய்யுள்-24. ‘குமரனா லடுஞ் சூர்ப்பகை தடிந்தவன்’ என்றதாற் பெறக்கிடக் கும் வரலாறு : சூரபத்மன் என்னும் அசுரன் சிவபெருமானைக் குறித்து அருந்தவஞ் செய்து பல வரங்களைப் பெற்றனன். அதனால் தருக்குற்று இந்திரன் முதலிய தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அதனைப் பொறுக்க லாற்றாத தேவர்கள் சிவபெருமானை அடைந்து தமது குறையைச் சொல்லி முறையிட்டனர். சிவ பெருமான் அவர்கள் வேண்டுகோட்கு இரங்கிக் குமாரக்கடவுளை உண்டாக்கி அவ் வசுரனைக் கொன்று வரும்படி அனுப்பினர். குமாரக்கடவுள் சிவகணங் களோடும் பல்லாயிர வீரர்களுடனும் சென்று சூரபத்மனையும் அவனைச்சேர்ந்த கொடியர்களையும் கொன்றொழித்தனர்.

செய்யுள்-25. ‘ ஒன்றலர் புரம் நீற்று, பெருவை யம்பெனக் கண்ணனை உடையன் ’ என்றதாற் பெறக் கிடக்கும் வரலாறு : தாரகாசுரனது புத்திரர்களான வித்யுந்மாலிகை, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் அசுரர்கள் மூவர் இருந்த னர். அவர்கள் பெருந்தவஞ் செய்து மயன் என்னும் அசுரத் தச்சனால், சுவர்க்க மத்திய பாதாளங்களாகிய மூன்றிடங்களிலும், அந்தரத்திற் சஞ்சரிக்கத் தக்க மூன்று பட்டணங்களை முறையே இரும்பினாலும் வெள்ளியினாலும் கனகத்தினா லும் பெற்றனர். அவையே முப்புரங்கள். அவற்றின் உதவியால் அவர்கள் தம்மோ டொத்த அசுரர் பலரையும் உடன் கொண்டு, நினைத்த இடத்திற்குச் சென்று ஆங்காங்குள்ளவரைக் கொன்றும் வருத்தியும் திரிந்தனர். அவர்களது கொடுமைக் கஞ்

 


127

சிய தேவர் முனிவர் முதலாயினோர் சிவபெருமானைச் சரணடைந்து அக் கொடியர்களை அழித்தருள வேண்டினர். இறைவனும் அவர்கள் வேண்டு கோட்கிரங்கி, மதியமும் ஞாயிறும் சக்கரங்களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், பிரமன் சாரதியாவும் அமைந்த பூமியாகிய தேரின்மீது ஆரோகணித்து; மேருவை வில்லாகவும், ஆதிசேடனை அதற்கு நாரியாகவும், அக்கினியை அம்பாகவும், வாயுவை அவ்வம்பின் சிறகாகவும், திருமாலை அம்பின் முனையாகவும் கொண்டு அசுரர் முப்புரங்களையும் அவ்வம்பால் எய்தழிக்கத் திருவுளங் கொண்டனர். அப்பொழுது, சிவபெருமான் தமக்குக் கருவிகளாகக் கொண்ட சந்திரன் முதலிய தேவர்கள் ‘ திரிபுரங்களை அழித்தலாகிய இவ்வருஞ்செயல் நம் உதவியாலன்றோ சிவபெருமானுக்கு முற்றுப் பெறப் போகிறது ’ என்றெண்ணி இறுமாப் புற்றனர். சிவபெருமான் அவர்கள் உள்ளக் கிடக்கையை அறிந்து, ‘ என்னே இவர்கள் அறியாமை இருந்தவாறு ! இன்னமும் நமது பேராற்றலை உணராது தருக்கு கின்றனரே. இவர்களுக்கு நமது ஆற்றல் இனைத்தெனத் தெளிவுறக் காட்டி இவர்கள் தம் சிற்றறிவாற் கொண்ட இறுமாப்பை ஒழிப்பாம்’ எனத் திருவுளங் கொண்டு முப்புரங்களும் அழியவென்று புன்னகை புரிந்தனர். அவ்வளவிலே அம் முப்புரங்களும் எரிந்து சாம்பராயின. அவற்றோடு, அவற்றில் வசித்த அசுரரும் நீறா யொழிந்தனர். தேவர்களும் தம் தருக்கடங்கினர்.

ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும் சிவனருளாற் சுட்டெரித்தலை விளக்க எழுந்ததென்பர் இவ்வரலாறு. இதனை,

‘அப்பணி செஞ்சடையெம் ஆதி புராதனன்
முப்புர மழித்தன னென்பர்கள் மூடர்கள் ;
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புர மழிந்தமை யாரறி யாரே ’

எனப்போந்த திருமந்திரத் திருவாக்கும் வலியுறுத்தும்.

செய்யுள்-27. ‘பாலற்காச் சினத்த காலனை யுதைத்தவன்’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : மிருகண்டுமுனிவர் புத்திரப்

 

128


பேற்றைக் குறித்துத் தவம் செய்தனர். அப்பொழுது இறைவன் அவர்முன் தோன்றி ‘நினக்கு நிறை ஆயுளுடைய குமரன் வேண்டுமோ? நிறைகுணமுடைய குமரன் வேண்டுமோ?’ என்று கேட்க, முனிவர் ‘நிறைகுணமுடைய புதல்வனே வேண்டும்’ என்றனர்.

இறைவன் அவ்வாறே அருள்செய்து மறைய, அருளியவாறே உரியகாலத்தில் முனிவர்க்குத் தவக்குமரர் ஒருவர் பிறந்தார். அக்குமரர்க்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர் பெற்றோர். சிவபெருமான் அருளியவாறே மார்க்கண்டேயனார், சிவபக்தி சிவார்ச்சனைகளில் இளமைதொட்டே ஈடுபட்டு நிறைகுணச் செல்வராய் விளங்கினார். ஆனால் அவருக்கு வரையறுக்கப்பட்ட ஆயுள்காலமோ பதினாறாண்டுதான். அவ் வாயுள்காலம் முற்றுப் பெற்றவுடன் காலன் அவர் உயிரைக் கொண்டு செல்ல எய்தினன். அதுகண்ட மார்க்கண்டேய னார் சிவபெருமானைச் சரணடைந்தனர். காலன் அதைக் கருதாது தன் கடமையை நிறைவேற்றுவதிலேயே கண்ணாய், எம்பெருமானை அடைந்த அருந்தவ இளைஞரைத் தன் கொடிய காலபாசத்தாற் கட்டி ஈர்க்கலாயினன். அவ்வளவில், சிவபெருமான் சினந்து தம் அன்பரை ஈர்த்த கூற்றுவனைக் காலால் உதைத்து வீழ்த்திச் சிறுவர்க்கு என்றும் பதினாறாய் இனிது வாழ வரந்தந்தருளினர்.

செய்யுள்-31. ‘ பௌவ நஞ்ச முண்டான் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : முன் ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் தமக்கு மரணம் நேராதிருக்க அமிழ்தம்வேண்டிப் பிரமனிடம் சென்று தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். பிரமன் அவர்களோடு திருமாலிடம்சென்று பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் தந்தருளும்படி வேண்டினர். திருமால் அதற்கிசைந்து கருடனால் மந்தரமலையைக் கொண்டுவந்து அதைப் பாற்கடலில் மத்தாக நாட்டி, வாசுகி என்னும் அரவை அதில் தாம்பாகப் பூட்டி, ஒருபுறம் தேவர்களும் ஒருபுறம் அசுரருமாக நின்று கடையச்செய்தனர். அவ்வாறு கடையும்பொழுது, வாசுகி வருத்தம்பொறாமல் விஷத்தைக் கக்க, அஃது அங்கிருந்தார் அனைவரையும் கொல்ல எழுந்தது. அதுகண் டஞ்சிய தேவர்களனைவரும் சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவபெருமான், தேவர்களைக் காக்கத் திருவுளங்கொண்டு அவ் விஷத்தைத் தாம் உண்டு தமது கண்டத்தில் நிறுத்திக்கொண்டனர்.

செய்யுள்-34. ‘ தலைக்கொள் வெண்டலை மாலையன் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : சிவபெருமான் நான்முகனைக் கொண்டு உலகங்களைப் படைத்தும், திருமாலைக்கொண்டு உலகங்களைக் காத்தும், தமது உருத்திராமிசத் தால் உலகங்களை, அழித்தும் முத்தொழிலியற்றும் முதல்வர். ஆதலால், அவரது சங்கார கிருத்தியத்தில் பிரம விஷ்ணுக்களும் அவரவர்க்கு வரையறுத்த கால எல்லையில் மாய்க்கப்படுவார்கள். அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த தேவசரீரம் புனிதமடைந்து அவர்கள் நற்பேறு பெற வேண்டுமென்ற அருள் நோக்கத்தால் சிவபெருமான் அவர்கள் என்புகளையும் சிரங்களையும் மாலையாகக் கோத்துத் தம் ஆகத்தில் அணிந்துகொள்வர். இதனால் சிதாகாசத் திருமேனி யுடைய எம்பெருமான் ‘ வெண்டலை மாலையன் ’ ஆயினர்.

‘தண்ணிலா மிலைக்கும் தென்கருவாபுரி வேதியன் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : தக்கன் தன் (தாரகைகளாகிய) புத்திரிகள் இருபத் தெழுவரையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்து ‘நீ இவர்கள் அனைவரை யும் ஒருதன்மையாகப் பாராட்டிக் காதலித்து வாழ்க’ எனக் கூறியிருந்தனன். சந்திரனோ, சிறிது கால மவ்வாறிருந்து பின்னர், அவ் விருபத்தேழு மனைவியருள் மிக்க அழகுடையரான கார்த்திகை உரோகினி என்னும் இருவரிடத்துமட்டும் பெருங்காதல்கொண் டொழுகி மற்றையோர் இருபத்தைவரையும் ஏறெடுத்தும் பாராதிருந்தனன். அவ் விருபத்தைவரும் அதனால் மிகவும் மனம்வருந்தித் தம் தந்தையாகிய தக்கனிடம் தங் கணவன்செயல் இருந்தவா றிதுவெனச்சொல்லி முறையிட்டனர். அதுகேட்டுத் தக்கன் கோபங்கொண்டு, சந்திரனுடைய சோடச கலைகளும் நாளுக்கொன்றாகத் தேய்ந்து ஒழியக்கடவன என்று சாபமிட்டான். சந்திரனுக்கு அச் சாபப்படி நாளுக்கொரு கலையாகத் தேயத்தொடங்கி பதினைந்து கலைகள் தேய்ந்தொழிந்தன. அதுகண்ட சந்திரன் எஞ்சியுள்ள ஒருகலையும் ஒழிந்து

 

 

130


விடுமே என்றஞ்சிச் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். சிவபெருமான், தமது சடையில் இருந்தால் தக்கன் சாபம் அதையணுகாதாதலால், அவ்வொரு கலையைத் தமது சடையில் தரித்துக்கொண்டதுமன்றித் தக்கன் சாபத்துக்கு ஒரு பரிகாரமாக, ஒருகலையாய்க் குறைந்த சந்திரன் நாளுக்கொரு கலையாக வளர்ந்து சோடச கலைகளும் நிறைவுற்றும், ஆனால் அதன்பின்னர் வளர்ந்த முறையே குறைந்தும் மீண்டும் வளர்ந்தும் இப்படியே என்றும் தேய்ந்தும் வளர்ந்தும் வர அருள்செய்தார். இதனால் சடையிற்றரிக்கும் சந்திரன் ஒருகலையுடைய பிறைச் சந்திரனே என்பதும் அங்ஙனம் தரிப்பதும் மறைமதி நாளிலேயே என்பதும் அறிக. (பிறைமதி - பிறந்தமதி-இளமதி. கலைவளர்வது நோக்க அஃது இளமதியாதல் காண்க. மறைமதிநாள் - அமாவாசை. முழுமதி நாள் - பௌர்ணமி. வளர்பிறைநாள் - சுக்கிலபட்சம். தேய்பிறைநாள் - அமரபட்சம்.)

செய்யுள்-37. ‘ மால்விடையான் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : தருமதேவதையானது சர்வசங்கார காலத்தில் பிரமாதி தேவர்களும் மாண்டொழி வார்க ளாதலால், அக் காலத்தில் தான் இறவாதிருக்கும் பொருட்டு ரிஷபரூபமாகிச் சிவபெருமானை அடைந்து தோத்திரஞ்செய்து தான் என்றும் அழியாதிருக்கத் தன்னை வாகனமாகக் கொண்டருளுமாறு வேண்டியது. சிவபெருமான் அவ் வேண்டுகோளுக்கு ஒப்பி அதனைத் தம் வாகனமாகக் கொண்டருளினார். இதுவன்றிச் சிவபெருமான் திரிபுரதகனம் செய்த காலத்தில் திருமால் அவருக்கு ரிஷபவாகனமாயினர் என்பது மொன்று. ‘ திரிபுரங்க ளவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்-திருமாலே இடபமாய்த் தாங்கினன்காண் சாழலோ ’ என்ற திருவாதவூரடிகள் திருவாக்கைக் காண்க.

செய்யுள்-41. ‘முடைத்தலையிற் பலிகொள்ளும் முகலிங்கா’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : முன் ஒருகாலத்தில் பிரமன் தானே முதற்கடவுள் என்று தருக்க, அத் தருக்கை அடக்கச் சிவபெருமான் பிரமன்முன் தோன்றினர். அப்பொழுதும் பிரமன் அவரே தனிமுதல்வர் என்பதை உணராது அவரை இகழ, அவர்.

 

 

131

தமது அமிசமாகிய வைரவக்கடவுளை நோக்கினர். அவ்வளவில் வைரவர் பிரமனது ஐந்து சிரங்களில் நடுச்சிரத்தைத் தமது இடக்கை விரல்நகத்தாற் கொய்தனர். கொய்தசிரம் அவர் விரலோடு ஒட்டிக்கொண்டது. அப்பொழுது சிவபெருமான் தருமத்தை உலகினர் அறிந்து நடக்கத் தாமே அதை நடத்திக் காட்டத் திருவுளங்கொண்டு, வைரவரை நோக்கி, ‘ இப் பாவந் தொலையப் பிச்சையெடுத்தல் வேண்டும்’ என்றுகூற, அவரும் அங்ஙனமே அப் பிரம கபாலத்தில் பிச்சை யெடுத்தனர்.

செய்யுள்-54. ‘ அத்திக்கு முன்னம் வரமேயளித்த சருவேச ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : முன்னம் ஒரு யானை சீகாளத்தியில் பொன் முகலியாற்றில் நாள்தோறும் நீராடித் துதிக்கையில் நீர் கொண்டுவந்து சிவபெருமான் திருமுடிமேற்சொரிந்து அருச்சித்து வழிபாடு செய்து வந்தது. சிவபெருமான், அவ் யானை முன்னமொருகால் கைலையில் தமது தேவியாரது சாபத்தினால் யானையுருக்கொண்ட அத்தி என்னும் கணநாதன் என்பதுணர்ந்து, தேவியோடு ரிஷபாரூடரா யெழுந்தருளி அதற்குத் தரிசனந் தந்து முத்தியும் அளித்தருளினர்.

செய்யுள்-59. ‘ கடவாரணத்தி னுரிபோர்வை கொண்ட கருவேச ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : கயாசுரன் என்பான் அரிய தவங்கள்செய்து தான் தேவராதியோரையும் வெல்லத்தக்க ஆற்றல் பெறவேண்டுமென்று பிரமனை வேண்ட, பிரமனும் அவ்வாறே வரம்கொடுத்து ‘ நீ சிவபெருமான் எதிரே செல்லாதே. சென்றால் இவ் வரம் அழியும் ’ என்று எச்சரித் தனுப்பினர். கயாசுரன் தான்பெற்ற வரத்தால் செருக்குற்றுத் தேவேந்திரன் முதலியவர்களை வென்று, முனிவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். முனிவர்கள் அவனைக் கண்டு அஞ்சி ஓடி மணிகர்ணிகை என்னும் ஆலயத்துட்சென்று சிவபெருமானே கதி என்று அவரைச் சரணடைந் திருந்தார்கள். கயாசுரன் பிரமன் கூறியதை மறந்து, அம் முனிவர்களைத் தொடர்ந்து சென்று, சிவபெருமான் சன்னிதியில் அவர்கள் இருப்பதை உணர்ந்தும் அவர்களைக் கொல்ல யத்தனித்தான். உடனே சிவபெருமான் உக்கிரசொரூபங்கொண் டெழுந்து, யானைமுக உருவினனான அக் கயாசுரன் மத்தகத்தை மிதித்து, உடலைக் கிழித்துத் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டருளினார்.

செய்யுள்-70. ‘ கவிஞனேவ நள்ளிருட்போதிற் சென்ற தூதனே ’ என்ற தாற் பெறக்கிடக்கும் வரலாறு: சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் பரவைநாச்சி யாரைக் காதலித்து அவரை விவாகஞ் செய்துகொண்ட பிறகு திருவொற்றியூரில் சங்கிலி நாச்சி யாரை விவாகம் செய்துகொண்டார். அஃதறிந்த பரவையார், மீண்டும் நாயனார் திருவாரூரில் தம்மை விரும்பிவந்தபோது, ஊடல்கொண்டு அவர் தம்மை அணுகவொட்டாதபடி தடுத்தார், அப்பொழுது நாயனார் பரவையின் ஊடலைத் தீர்க்கும்படி தம்பிரானை வேண்ட, சிவபெருமான் ஓர் ஆதிசைவராக வடிவங்கொண்டு, நள்ளிருளில் பரவையார்பால் இருமுறை சுந்தரருக்குத் தூது சென்று அவள் ஊடலைத் தீர்த்து இருவரும் கூடி மகிழும்படி செய்தார்.

முற்றிற்று

குறிப்பு:- ஒரு செய்யுளிற் சுட்டப்பட்ட வரலாறே வேறு பிறசெய்யுட்களினும் சுட்டப்படினும், முதன் முதலாகச் சுட்டப்பட்ட செய்யுளின் எண்ணால் மட்டுமே அவ்வரலாறு குறிக்கப் பட்டுள்ளது.

 

Related Content