logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்

சிவமயம்

தண்டி கவி இயற்றிய

தமிழ் உரை:

டாக்டர் . கங்காதரன் எம்.., எம்.லிட்., பிஎச்.டி.

ஸம்ஸ்க்ருத விரிவுரையாளர், சென்னை ஸர்வகலாசாலை


       த்ருஷ்ணாதந்த்ரே மனஸி தமஸா

            துர்தினே பந்துவர்த்தீ

      மாத்ருக்ஜந்து: கதமதிகரோத்யைச்வரம்

            ஜ்யோதிரக்ர்யம் |

      வாச: ஸ்பீதா பகவதி ஹரே

            ஸந்நிக்ருஷ்டாத்மரூபா:

      ஸ்துத்யாத்மான: ஸ்வயமிவ

            முகாதஸ்ய மே நிஷ்பதந்தி                   || 1 ||

 

(! ஹரனே!) ஆசையின் பெருக்கால் வளரும் இந்த ஸம்ஸாரத்தில் மனத்தில் அறிவின்மை சூழ்ந்திருக்கும் பொழுது பந்து மக்களிடம் ஈடுபாடு கொண்டுள்ள என் போன்றவர்கள் எவ்விதம் ஈச்வரனின் உயர்ந்த ஒளியைக் குறித்து கூற முடியும். பலவாறான சொற்றொடர்கள் தானாகவே சீரான துதியாக முகத்தினின்று வெளிப்படுக்கின்றன போலும்.

      இப்பிரஞ்சத்திலுள்ள பொருள்கள் யாவும் ஈசுவரனின் வடிவாகும் சொல்லும் பொருளும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு சொல் மொழிந்தவுடனேயே அதைக் குறிக்கும் எப்பொருளாகினும் ஈசுவரனின் வடிவாகையினால் அது ஈசுவரனைக் குறித்துக் கூறுவதால் அது துதியாகிறது. பலவிதமான பந்த பாசங்களில் கட்டுண்ட உலக மக்கள் எவ்விதம் ஒளிரும் பரமனைக் குறித்து துதிக்க இயலும் என்று கூறி உலகின் பொருள்கள் சொற்கள் உட்பட பரமனின் வடிவாகக் கொண்டு அதனால் தான் சீரற்ற சொற்களும் சீரான துதியாகிறது என்று கூறுகின்றார்.

 

 

      வேதா விஷ்ணுர்வருணதனதெள

            வாஸவோ ஜீவிதேச –

      ச்சந்த்ராதித்யெள வஸவ இதி யா

            தேவதா பின்னகக்ஷ்யா: |

      மன்யே தாஸாமபி ந பஜதே

            பாரதீ தே ஸ்வரூபம்

      ஸ்தூலே த்வம்சே ஸ்ப்ருசதி ஸத்ருசம்

            தத்புனர்மாத்ருசோ (அ)பி                      || 2 ||

 

நான்முகன், திருமால், வருணன், குபேரன், இந்திரன், யமன், சந்திரன், சூரியன், வஸுக்கள் முதலிய தேவர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை உடையவர்கள். அதனால் அவர்களுக்கும் உன்னுடைய நிர்க்குண ஸ்வரூபம் புலப்படுவதில்லை. ஆனால் ஸகுண ஸ்வரூபம் அவர்களுக்கு எப்படி புலப்படுகிறதோ அவ்விதமே எனக்கும் புலப்படுகிறது என்று நினைக்கின்றேன்.

      நான்முகன் முதலானோராலும் பரமனின் நிர்க்குணஸ்வரூபம் வருணிக்க இயலாதது. ஏனெனில் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட கருத்துக்களை உடையவர்கள். அதனால் ஒருமைப்பட்ட சொல்லில் உன்னை அவர்களால் புகழ இயலாது. ஸகுண ஸ்வரூபத்தை எப்படி அவர்களால் வருணிக்க முடியுமோ அவ்வாறே என்னாலும் முடியும் என்று கூறுகிறார். பரமனின் ஸகுண ஸ்வரூபம் தானே யாவருக்கும் எளிதாக தெளிவாக புலப்படக் கூடியது. அதனால் நினைத்தற்கரிய அறிவதற்கரிய நிர்க்குண வடிவைத் தவிர்த்து ஸகுண வடிவை நானும் கூறுகின்றேன் என்கின்றார் கவி.

      தத்ர ஸ்தாணோ ஸ்துதிரதிபக

            பக்திருச்சைர்முகீ சேத்

      க்ராம்ய: ஸ்தோதா பவதி

            புருஷ: கச்சிதாரண்யகோ வா |

      நோ சேத் பக்திஸ்த்வயி ச யதி வா

            ப்ரஹ்மவித்யாஸ்வதீதே

      நாநுத்யேயஸ்தவ பசுரஸாவாத்ம-

            கர்மாநாபிக்ஞ:                                 || 3 ||

     

அப்படி உன் ஸகுணஸ்வரூபத்தைத் துதிக்கத் துவங்கும் பொழுது ஹே தூண் வடிவானவரே! துதியானது உயர்ந்ததாகிறது. உன்னைச் சார்ந்த உயர்ந்த பக்தி இருக்குமாயின், துதிப்பவர் நாட்டில் வசிப்பவரோ அல்லது காட்டில் வசிப்பவரோ அல்லது வேறெங்காவது வசிப்பவராக இருப்பினும், அவர் செய்யும் துதியானது உயர்ந்ததாகின்றது. உம்மிடம் பக்தி இல்லையெனின், ஒருவன் பிரம்மத்தை உணர்த்தும் நூல்களைப் பயின்றும் கூட, மிருகத்தை போன்று விவேகமற்றவனாகின்றான்.

      கண்ணப்பன் போன்றவரின் ஆழ்ந்த பக்தியே பரமனை அடைய எளிய வழி. பக்தியற்ற பல மகாகவிகளின் துதிகளினாலும் அவர் அடைய முடியாதவர். பக்தி இல்லாத ஒருவன் அரிய பல தத்துவ நூல்களைப் பயின்றாலும் பகுத்தறிவற்ற விலங்கினுக்கு ஒப்பாக ஆகின்றான்.

விச்வம் ப்ராதுர்பவதி லபதே

            த்வாமதிஷ்டாயகம் சேந்ந

      ஹ்யுத்பத்திர்யதி ஜனயிதா

            நாஸ்தி சைதன்யயுக்த: |

      க்ஷித்யாதீனாம் பவ

            நிஜகலாவத்தயா ஜன்மவத்தா

      ஸித்யத்யேவம் ஸதி பகவதஸ்ஸர்வ-

            லோகாதிபத் பம்                               || 4 ||

 

! பவனே! இந்தப் பிரபஞ்சமானது உம்மை ஆதாரமாக அடையுமாகில் அது தோற்றம் பெறுகிறது. சேதனமான தோற்றுவிப்பவர் ஒருவரிலர் எனின் இந்த பிரபஞ்சத்திற்குத் தோற்றமில்லை. இந்த புவி முதலான பொருள்களனைத்திற்கும் நீரே உள்ளிருக்கும் பொருளாவீர். அப்படியிருப்பதினால் உமக்கே அனைத்துலகிற்கும் ஆதிபத்யம் என்பது உறுதியாகின்றது.

      பரமனை ஆதாரமாகப் பெற்ற பிரபஞ்சம் ஒரு தோற்றத்தைப் பெருகிறது. இல்லையென்றால் இதற்குத் தோற்றம் எப்படி? உலகிலுள்ள பொருளனைத்திற்கும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவர் பரமனே அன்றோ. அதனால் தான் உலகப் பொருளனைத்தையும் ஆட்டி வைப்பவர் பரமன் என்றாகிறது.

      போக்யமாஹு: ப்ரக்ருதிம்ருஷயச்

            சேதனா சக்திசூன்யாம்

      போக்தா சைனாம் பரிணமயிதும்

            புத்திவர்த்தீ ஸமர்த்த: |

      போகோ(அ)ப்யஸ்மின் பவதி

            மிதுனே புஷ்கலஸ்தத்ர ஹேதுர் –

      நீலக்ரீவ த்வமஸி

            புவனஸ்தாபனாஸூத்ர்தார:                   || 5 ||

 

முனிவர்கள் உயிரற்ற மூலப்பொருளான ப்ரக்ருதியை நுகரும் பொருளெனக் கூறுகின்றனர். ப்ரக்ருதியினின்றும் தோன்றிய புத்தி அல்லது மஹத்தத்துவத்தை உடைய ஆத்மாவானது இந்த ப்ரக்ருதியை ஸம்ஸாரமாக மாற்ற முடிகிறது. இந்த சேர்க்கையில் போகமும் முழுமையாக ஏற்படுகிறது. ! நீலக்ரீவ (நீல வண்ண கழுத்தை உடையவனே)! நீர்தான் இந்த பிரபஞ்சத்தின் துவக்கத்தின் ஸூத்ரதாரர் அல்லவா!

      ப்ரக்ருதியை நடிகையாகவும், புருஷனை (ஸாங்க்ய) பொதுஜனமாகவும், பரமனை ஸூத்ரதாரன் எனப்படும் நாடகத்தின் துவக்கத்தில் வரும் அரங்கத்தின் ஊக்குவிப்பவராகவும் கவி கூறியுள்ளார். ஒரு நாடகத்தில் ஸூத்ரதாரனின் பங்கு நடிக நடிகையரை மேற்பார்வையிட்டு நாடகத்தை நடத்துவதே. அம்மாதிரியான பரமன் இந்த உயிரற்ற இயற்கைப் பொருள்களையும் இவைகளை நுகரும் ஆத்மாவையும் இயங்க வைக்கும் ஸூத்ரதாரன் பரமனே.

      சாரூத்ரேகே ரஜஸி ஜகதாம் ஜன்ம

            ஸத்வே ப்ரக்ருஷ்டே

      யாத்ராம் பூயஸ்தமஸி பஹுலே

            பிப்ரத: ஸம்ஹ்ருதிம் ச |

      ப்ரஹ்மாத்யேதத்ப்ரக்ருதிகஹனம்

            ஸ்தம்பபர்யந்தமாஸீத்

      க்ரீடாவஸ்து த்ரிநயன மனோ

            வ்ருத்தி மாத்ராநுகம் தே                      || 6 ||

 

! முக்கண்ணனே! ரஜோகுணம் பெருகி இருக்கும் பொழுது இந்த உலகம் தோன்றுகிறது. ஸத்வ குணம் நிரம்பி இருக்கும்பொழுது அது போற்றி வளர்க்கப்படுகிறது. தமோ குணம் நிரம்பி இருக்கையில் அது அழிவடைகிறது. இம்மாதிரி மீண்டும் மீண்டும் ஏற்படும் காட்டை போன்ற நான்முகன் முதலான இந்தப் பிரபஞ்சமானது உம்முடைய மனோவ்ருத்தியின் விளையாட்டுப் பொருளேயாகும்.

      நான்முகன், திருமால், சிவன் என்று மூவிதமான பரமனின் தோற்றம் அவரிடம் முக்குணங்களான ஸத்துவ, இரஜ, தமோ குணங்களில் யாதொன்று மேம்பட்டு இருக்கிறதோ அதைப் பொருத்ததாகும். இம்மாதிரி மீண்டும் மீண்டும் உலகமும் அதன் பொருள்கள் யாவையும் தோன்றவும், வளரவும், அழியவும் செய்தல் அந்த பரமனுக்கு இவை யாவும் ஒரு விளையாட்டேயாகும்.

      க்ருத்திச்சித்ரா நிவஸனபதே

            கல்பிதா பெளண்டரீகெள

      வாஸாகாரம் பித்ருவனபுவோ

            வாஹனம் கச்சிதுக்ஷா |

      ஏவம் ப்ராஹு: ப்ரலகுஹ்ருதயா

            யத்யபி ஸ்வார்த்தபோஷம்

      த்வாம் ப்ரத்யேகம் த்வனதி

            பகவந்நீச இத்யேஷ சப்த:                     || 7 ||

     

! பெரும் பேறுபெற்றவனே! பல நிறங்களையுடைய புலித்தோல் உமது உடையாகும். மயானமே நீர் வசிக்கும் இடம். ஒரு காளைமாடே உம்முடைய வாஹனம். மந்த புத்தியுடையவர்கள் உம்மைப் பற்றி இவ்விதமாகக் கூறிய போதும், ‘ஈசன்என்னும் சொல் தானாகவே உங்களுக்குள்ள ஆதிபத்யத்தைக் குறிக்கிறது.

      சிவனாரின் உடை, உறைவிடம், அவரது வாகனம் இவற்றைப் பற்றி இழிவாகப் பாமரர் கூறிய போதும் அவரைக் குற்க்கும்ஈசன்என்னும் சொல்தானாகவே அவருக்கு உடைய ஆதிபத்தியத்தின் சிறப்பை விளக்குகிறது.

      ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ஈச்வரஸ்ஸர்வ பூதானாம் என்றல்லவா மறையும் அவரது பெருமையைக் குறித்துக் கூறுகிறது.

க்லுப்தாகல்ப: கிமயமசிவைரஸ்தி-

            முக்யை: பதார்த்தை:

      கஸ்மாதஸ்ய ஸ்தன –

            கலசயோர்பாரநம்ரா பவானீ |

      பாணெள கண்ட: பரசுரிதமப்யக்ஷஸூத்ரம்

            கிமஸ்யேத்யாசக்ஷாணோ

      ஹர க்ருததியாமஸ்து

            ஹாஸ்யைகவேத்ய:                           || 8 ||

 

      இந்தப் பரமேச்வரன் அமங்களமான எலும்பு முதலானவைகளால் எதற்காக அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றார்? குடம் போன்ற முலைகளின் பாரத்தினால் சாய்ந்துள்ள பார்வதி எக்காரணத்தினால் உம்மை அடைந்துள்ளாள்? கையில் பிளவுபட்ட கோடாலி எதற்காக? ஜபமாலை எதற்காக? என்று கூறும் திடசித்தமுடையவர்களால் பரிஹாசமாகவே நீர் அறியப்பட்டாலும் அது உம்மை எவ்விதமும் பாதிக்காது.

      சிவனார் மனம் மகிழ்ந்து நடம் புரியும் இடம் மயானமாகையினால் அவரது சிறந்த அணிகலன் மயானத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகள். இப்படிப்பட்ட உம்மை மென்மையான உடலை உடைய அன்னை பார்வதி எதற்காக அடைந்தாள்? உம் கையில் பிளவுபட்ட கோடாலியும் ஜபமாலையும் எதற்காக பலவாறாக உம்மைக் குறித்து ஏளனமாக பலரால் கூறப்பட்டாலும் இவை யாவும் உம்மைச் சிறிதளவும் பாதிக்காது.

யத்காபாலம் வ்ரதமபி

            மஹத்த்ருஷ்டமேகாந்தகோரம்

      முக்தேரத்வா ஸ புனரமல:

            பாவன: கிம் ந ஜாத: |

      தாக்ஷாயண்யா: ப்ரியதமதயா

            வர்த்ததே யோகமாயா

      ஸாப்யாதத்தே மிதுனசரிதம்

            வ்ருத்திமூலம் ப்ரஜானாம்                     || 9 ||

 

பெரும் பேறு பெற்றவனே! எந்தக்காரணத்தால் காபால வ்ரதமும் மிகச் சிறந்ததாகக் காணப்படுகிறதோ அதுவும் முக்திக்கு சிறந்த வழியாகும். அவ்வழி மிகவும் புனிதமாக ஆகவில்லையா என்ன? மிகவும் பிரியமான தாக்ஷாயணியின் யோகமாயை இருக்கிறதே அது மக்களின் ஸந்ததி பெருகுவதற்கு தாம்பத்யத்தைப் போஷிக்கின்றது.

சோம்பேறிகளால் கடைப்பிடிக்க முடியாத மிகவும் அரிய மண்டை ஓட்டை அணிதல் என்னும் விரதமும் மிகப் புனிதமாக ஆக வில்லையா என்ன? உண்மையில் பரமன் அதை அணிகலன்களாக அணியவில்லை. அதை ஒரு நோன்பாகவே அவர் செய்கின்றார். மேலும் அன்னை பார்வதியும் மாயையினால் அவருடன் சேர்ந்திருப்பது போன்று தோன்றுகின்றாள். முன் செய்யுளின் கருத்தின் கண் தோன்றும் ஐயமகல இங்கு கவி இக்கருத்தை கூறுகின்றார்.

      கச்சிந்மர்த்ய: க்ரதுக்ருசதநுர்

            நீலகண்ட்த்வயா சேத்

      த்ருஷ்ட: ஸ்நிக்தம் ஸ

            புனரமரஸ்த்ரீபுஜக்ராஹ்யகண்ட: 

      அப்யாரூடஸ்ஸுரபரிவ்ருதம்

            ஸ்தானமாகண்டலீயம்

      த்வம்சேத் க்ருத்தஸ்ஸ பததி

            நிராலம்பனோ த்வாந்தஜாலே                 || 10 ||

 

நீலகண்டனே! எவனொருவன் யாகங்கள் செய்து உடல் மெலிந்து உம்முடைய கடாக்ஷத்தைப் பெறுகின்றானோ அவன் தேவமடந்தையர்களின் கைகளால் தழுவப்பட்ட கழுத்தை உடையவனாகவும் தேவர்கள் சூழ இந்திர லோகத்தில் இடத்தையும் பெறுபவனாகவும் ஆகின்றான். நீங்கள் சினந்தால் அவன் ஆதாரமற்று பெரும் நகரத்தில் விழுகின்றான்.

பரமனைப் போற்றும் இந்திரன் பெரும் பேற்றையும் பரமனை மதியாத தக்ஷன் பெற்ற துயரையும் கவி எடுத்துக் கூறுகிறார். பரமனைப் பணிபவன் அவன் கடாக்ஷத்தைப் பெற்று பெரும் பேற்றைப் பெறுகின்றான். பரமனின் சினத்திற்குப் பாத்திரமானவனோ பெரும் நரகத்தில் போய் விழுகின்றான். சிவனை மதியாத தக்ஷன் ஏற்பாடு செய்த யாகம் யாவையும் அழிக்கப்பட்டு தக்ஷனும் பெருந்துயருக்கு ஆளானதை கருத்தில் கொண்டு கவி சொல்லாமல் குறிப்பிடுகிறார்.

      சச்வத்பால்யம் சரவணபவம்

            ஷண்முகம் த்வாதசாக்ஷம்

      தேஜோ யத்தே கனகநலினீ –

            பத்மபத்ராவதாதம் |

      விஸ்மார்யந்தே ஸுரயுவதயஸ்தேன

            ஸேந்த்ராவரோதா:

      தைத்யேந்த்ராணாமமரஜயிநாம்

            பந்டனாகாரவாஸம்                           || 11 ||

     

எப்பொழுதும் இளைமைப் பருவமாயும், நாணற் புதரில் தோன்றியதும், ஆறுமுகங்களும் பன்னிரு கைகளை உடையதும் பொற்றாமரையின் இலையைப் போன்று தெளிவானதுமான உன்னுடைய ஒளிரும் உருவினால் முன்னர் தேவர்களை வென்ற தாரகன் முதலான அரக்கர்களால் சிறையில் வைக்கப்பட்டதை இந்திரனின் அந்தப்புரப் பெண்டிருடன் தேவ மடந்தையரும் மறக்கின்றனர்.

பரமனின் ஒளி நிறைந்த ஆறுமுக வடிவைக்காணும் தேவ மடந்தையர் தாங்கள் முன்னர் தாரகன் முதலான அரக்கர்களால் சிறையில் வைக்கப் பெற்று இன்னலுற்றதை மறக்கின்றனர்.

வீரபத்திரனைப் போன்று பரமனின் குமார உருவும் பரமனின் லீலா வினோதமென்று பக்தர்களின் நம்பிக்கை.

வேகாக்ருஷ்ட-க்ரஹ-ரவி-சசி

            வ்யச்நுவானம் திகந்தான்

      ந்யக்குர்வாணம் ப்ரலய

            பயஸாமூர்மிபங்காவலேபம் |

      முக்தாகெளரம் ஹர தவ

            ஜடாபந்தஸம்ஸ்பர்சி ஸ்த்யோ

      ஜக்ஞே சூடாகுஸுமஸுபகம்

            வாரி பாகீரதீயம்                               || 12 ||

 

! ஹரனே! சூரியன், சந்திரன் முதலான கோள்களை வேகமாக அடித்துக் செல்வதும், திசை எங்கிலும் பரவுவதும் பிரளய கால நீர் பெருக்கின் அலைச் சுழல்களின் செருக்கை அடக்கும் முத்தைப் போன்று வெண்மையான இந்த கங்கையின் நீரானது பரமனின் சடையை அடைந்தவுடன் சடையில் மல்லிகை மலரினை ஒத்த அழகு உடைத்தாயிற்று.

ஆகாச கங்கையானது ஆகாயத்தைத் தன் சடை முடியாகக் கொண்ட பரம்னின் தலைமீது பிரவஹிக்கும் பொழுது வெண் முத்தை போன்று உள்ளன அதன் நீரின் நுரைகள் மல்லிகை மலரினை ஒத்து ஒளிருகின்றன. கோள்களை எல்லாம் அடித்துச் செல்வதும், நாற்றிசையிலும் பரவுவதுமான பிரளய கால வெள்ளப் பெருக்கின் செருக்கை அடக்கி அதை நாணமடையச் செய்கிறது கங்கையின் நீர். அப்படிப்பட்ட கங்கை நீரின் வெண் நுரைகளை பரமனின் சடைமுடியில் அணியாகக் காண்கின்றார் கவி.

      கல்மாஷஸ்தே மரகதசிலாபங்க –

            காந்திர்ந கண்டே

      ந வ்யாசஷ்டே புவனவிஷயாம்

            த்வத் ப்ரஸாதப்ரவ்ருத்திம் |

      வாராம் கர்ப்பஸ்ஸ் ஹி

            விஷமயோ மந்தரக்ஷோபஜன்மா

      நைவம் ருத்தோ யதி ந பவதி

            ஸ்தாவரம் ஜங்கமம் வா                      || 13 ||

 

மரகதமணி என்னும் பச்சைகல் துண்டுகளின் ஒளியையொத்து உன் கழுத்தில் ஒளிரும் கருமை உலகிலுள்ள படைப்புகளிடம் உமக்குள்ள அன்புப் பெருக்கை வெளிப்படுத்துவதன்றோ! மந்திர மலையைக் கொண்டு கடைந்த பொழுது நீரினின்றும் தோன்றியகாலகூடம்என்னும் நஞ்சு இவ்விதமாக தடுக்கப்படவில்லை எனில் உயிர் வாழினங்கள் யாவும் இருந்திருக்காது அல்லவா?

பாற்கடலைக் கடைந்து தோன்றிய காலகூடம் என்னும் நஞ்சு சிவனாரின் கழுத்தில் பச்சைக் கற்களின் ஒளியுடன் ஒளிருகின்றது. அது மட்டுமா! அது உலகிலுள்ள உயிர் வாழினங்களிடம் பரமனுக்கு உள்ள மட்டற்ற அன்பை புலப்படுத்துகிறது. ஏனெனில் கடையும்பொழுது தோன்றிய நஞ்சை பரமன் எடுத்து அருந்தவில்லை என்றால் அக்கொடிய விஷத்தினால் எந்த உயிர் தான் பிழைத்திருக்கும்!

      ஸந்தாயஸ்த்ரம் தநுஷி

            நியமோன்மாதி ஸம்மோஹனாக்யம்

      பார்சவே திஷ்டன் கிரிச தத்ருசே

            பஞ்சபாணோ முஹூர்த்தம் |

      தஸ்மாதூர்த்வம் தஹனபரிதெள

            ரோஷத்ருஷ்டே: ப்ரஸூதே

      ரக்தாசோக: ஸ்தபகித இவ

            ப்ராந்ததூமத்விரேப:                           || 14 ||

 

ஹே! கிரீச! தியானத்தை குலைக்கும் ஸம்மோஹனம் என்னும் அஸ்திரத்தை வில்லில் ஏற்றி மன்மதன் (உம்) அருகில் ஒருக்கணம் நின்றதும் அதற்குப் பின்னர் (உம்) சிவந்த கண்ணினின்றும் வெளிப்பட்ட நெருப்பு பரவி நிற்கவும் அருகில் உள்ள புகையே வண்டுகள் போல உடையதாய் சிவந்த அசோக மரமானது மலர்ந்த மலர்களையுடையதாய் இருந்தது.

காமனின் ஐந்து பாணங்களில் ஒன்றானது ஸம்மோஹனம் என்பது. அதை வில்லில் ஏற்றி அருகில் காமன் நிற்கின்றான். ஒருக்கணம் கழிந்த பின் பரமன் தன் ஒன்றுபட்ட தியானம் கலைந்ததால் சினந்து தன் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றார். சினத்தால் அது சிவந்து காணப்படுகிறது. அச்சமயம் அருகில் உள்ள புகையை வண்டாகக் கொண்டு சிவந்த கண்ணினின்று தோன்றிய சிவந்த நெருப்பையும் ஒன்றிணைத்து கவி ஒரு கற்பனைத் தோற்றத்தைக் காண்கின்றார். அசோக வனத்தின் சிவந்த மலர்கள் மலர்ந்ததாகக் கூறுகிறார்.

      லங்காநாதம் லவணஜலதி – ஸ்தூல –

            வேலோர்மிதீர்க்கை:

      கைலாஸம் தே நிலயனகிரிம்

            பாஹுபி: கம்பயந்தம் |

      ஆக்ரோசத்பிர்-வமித-ருதிரை-

            ரானனைராப்லுதாக்ஷை-

      ராபாதாலாதநயதலஸா-

            பத்தமங்குஷ்டகர்ம                            || 15 ||

     

உவரியின் கடற்கரையும் அதன் அலைகளும் போன்று நீண்ட கைகளால் உம்முடைய வசிக்குமிடமான கைலாய மலையை அசைக்கும் இராவணனை கூக்குரலிடுவதும் இரத்தம் கக்குவதுமான முகங்களுடனும் நீர் தளும்பும் கண்களுடனும் பாதாளம் வரையிலும் விளையாட்டாகச் செயல்படும் உங்கள் கட்டைவிரல் பாதாளம் வரையிலும் கொண்டு சேர்த்தது.

தன் நீண்ட கைகளால் கைலாய மலையை ஆட்டி அசைவித்தான் இராவணன். அன்னை பார்வதி அஞ்சி நடுங்கினாள். அப்பொழுது விளையாட்டாகச் சிவனார் தன் கால் கட்டை விரலால் நசுக்க அவன் முகங்களினின்றும் நீர் பெருகிய வண்ணம் பாதாளம் வரை கொண்டு செல்லப்பட்டான். சிவனாரின் லீலா வினோதமான செயலும் பெரும் சக்தி வாய்ந்தது என்று கூறுகிறார்.

ஐச்வர்யம் தே வ்யவ்ருணுத

            பதந்நேக மூர்த்தாவசேஷ:

      பாதத்வந்த்வே தசமுகசிர:

            புண்டரீகோபஹார: |

      யேனைவாஸாவதிகததபா

            ராக்ஷஸ ஶ்ரீவிதேயச்சக்ரே

      தேவோ (அ)ஸுரபரிஷதோ

            லோகபாலைகசத்ரு:                           || 16 ||

 

 

இராவணன் தன் தலையாகிற தாமரை மலர்களால் உம்மை வழிபடுகையில் ஒரே ஒரு தலை எஞ்சியுள்ள பொழுது உம் பாதத்தில் விழுந்துள்ள அவை உம்முடைய திறமையை வெளிப்படுத்துகின்றன. இந்த வழிபாட்டினாலேயே இராவணனும் தன் தவத்தினால் பெற்ற அரக்கப் பேரரசுடன் அரக்கர் கூட்டத்தின் தலைவனாக ஆகி இந்திரன் முதலானவர்களுக்கு ஒரு முக்கியமான பகைவன் ஆனான் அல்லவா?

கடும் தவம் புரிந்து தன் தலைகளையே மலர்களுக்கு பதிலாக பரமனின் காலடிகளில் ஸமர்ப்பணம் செய்யவும், இராவணனின் வழிபாட்டினால் மனம் மகிழ்ந்த பரமனும் அவனது ஒரே ஒரு தலை எஞ்சியிருக்கும் பொழுது அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு. அந்த வரத்தின் மேன்மையினால் அவன் அரக்கர் குலக்திற்குத் தலைவனாக ஆகி இந்திரன் முதலான தேவர்களுக்கெல்லாம் முக்கிய பகைவனாக ஆனான். பரமன் தன் அடி பணிபவர் அனைவருக்கும் அருள் செய்பவர் என்பதற்கு இது ஒரு சான்றல்லவோ?

      பக்திர்பாணாஸுரமபி

            பவத்பாதபத்மம் ஸ்ப்ருசந்தம்

      ஸ்தானம் சந்த்ராபரண கமயாமாஸ

            லோகஸ்ய மூர்த்நி |

      ந ஹ்யஸ்யாபி ப்ருகுடி –

            நயனாதக்நி-தம்ஷ்ட்ரா-கராலம்

      த்ரஷ்டும் கச்சித்வதனமசகத்

            தேவ – தைத்யேச்வரேஷு                     ||  17 ||

 

மதியை அணிந்தவனே! உம்முடைய அடித்தாமரையைப் பணியும் பாணாஸுரனையும் அவனுடைய பக்தியின் காரணமாக உலகத்தில் முதலிடம் பெறச் செய்தாயல்லவா? உலகத்தில் முதலிடம் பெறச் செய்தாயல்லவா! அந்த பாணாஸுரனுடைய புருவங்களின் சுருக்கமான கண்ணின் காரணமாய் நெருப்பாலான அச்சம் தரும் பற்களையுடைய முகமானது தேவாஸுரர்களில் எவர் ஒருவராலும் பார்க்க முடியவில்லை அல்லவா!

பக்தியின் காரணமாக தன் அடி பணிந்த பாணாஸுரனை முதலிடம் பெறச் செய்தான் பரமன். மேலும், சினந்த பாணாஸுரன் தன் புருவங்களை சுருக்கும் பொழுது அந்த சேர்க்கையும் ஒரு கண் எனக்கொண்டு அவனுடைய நெருப்பை ஒத்த பற்களையுடைய அவனது அஞ்சத்தக்க முகத்தை எவராலும் துணிவாக நேருக்கு நேர் நின்று நோக்க முடியவில்லை அல்லவா என்று கவி கற்பனை செய்கிறார். தன்னிடம் பக்தி செய்யும் அனைவருக்கும் பரமன் அருள் செய்கின்றார்.

      பாதந்யாஸான்னமதி வஸுதா

            பந்நகஸ்கந்தலக்னா

      பாஹூத்க்ஷேபாத்க்ரஹணயுதம்

            கூர்ணதே மேகப்ருந்தம் |

      உத்ஸார்யந்தே க்ஷணமிவ திசோ

            ஹுங்க்ருதேநாதிமாத்ரம்

      பிந்நாவஸ்தம் பவதி புவனம்

            த்வய்யுபக்ராந்தந்ருத்தே                       ||  18 ||

 

நீர் நடனம் செய்யும் பொழுது உலகிலுள்ள பொருள்கள் யாவும் பலவிதமான மாறுதல்களை அடைகின்றன. பாம்பின் தலை மீது நிலைத்த இந்த புவியானது உங்கள் காலடி வைக்கப்பட்டதினால் வணங்குகிறது. கோள்களுடன் கூடிய மேகங்களின் கூட்டங்கள் உங்கள் கைகளின் அசைவினால் சுழல்கின்றன: நடனம் அளவுக்கு மிஞ்சிப் போகும் பொழுது உம்முடைய ஹுங்கார ஒலியினால் திசைகளனைத்தும் கண நேரம் தொலைவில் அகற்றப்பட்டவை போல உள்ளன.

ஆதிசேஷன் தன் தலைமீது இப்புவியைத் தாங்கி நிற்பதென்றோரு நம்பிக்கை. நடமிடும் பரமனின் காலடி புவி மூது வைக்கப்பட அதன் பாரத்தினால் சாய்கிறது. அதையே பரமனடி பணிவதாகக் கூறுகிறார் கவி. அவருடைய கைகள் அசைய அதன் வேகத்தினால் கோள்களும் மேகக் கூட்டங்களும் சுழல்கின்றன. நடனம் உச்ச கட்டத்தை அடைந்து அளவு கடந்து போகும் பொழுது அவரது ஹுங்கார ஒலியினால் திசைகள் அனைத்தும் எட்ட அகன்றவை போல உள்ளன.

      நோர்த்வம் கம்யம் ஸரஸிஜபுவோ

            நாப்யத: சாரங்கபாணே –

      ராஸீதந்தஸ்தவ ஹுதவஹஸ்தம்ப –

            மூர்த்யா ஸ்திதஸ்ய |

      பூயஸ்தாப்யாமுபரி லகுணா

            விஸ்மயேன ஸ்துவத்ப்யாம்

      கண்டேகாலம் கபிலநயனம்

            ரூபமாவிர்பபூவ                               ||  19 ||

     

 

அவர்களுக்கு (மாலயன் இருவருக்கும்) இடையே அனற் பிழம்பாக நெடுந்தண்டமான உருவாக நின்ற உம்முடைய முடியை நான்முகனும், அடியைத் திருமாலும் அடைய முடியவில்லை. பின்னர் தம் தம் சிறுமையையும் உணர்ந்து வியப்பினால் உம்மைத் துதிப்பவர் முன் உம்முடைய கருத்த கழுத்தும் பழுப்பு செந்நிறமான கண்ணுமுடைய உருவம் தோன்றியது.

தமக்குள் தாம் தான் பெரியவர் என்று கூறி வாதம் செய்து கொண்டிருந்த மாலயன் இருவருக்கிடையே அனல் பிழம்பாக பரமன் தோன்றியது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்பொழுது அதன் அடிமுடி காண மாலயன் இருவரும் தம் தம் நிலை உணர்ந்து பரமனைப் போற்றிப் பணியவும் பரமன் தன் இயல் நிலையில் கருத்த நெஞ்சுடனும் சிவந்த மூன்றாவது கண்ணுடனும் தோன்றின வரலாற்றை கவி இங்கே வருணித்துள்ளார்.

ச்லாக்யாம் த்ருஷ்டிம் துஹிதரி

            கிரேர்ந்யஸ்ய சாபோர்த்வகோட்யாம்

      க்ருத்வா பாஹும் த்ரிபுர –

            விஜயாநந்தரம் தே ஸ்திதஸ்ய |

      மந்தாராணாம் மதுஸுரபயோ

            வ்ருஷ்டய: பேதுரார்ர்த்ரா:

      ஸ்வர்கோத்யான ப்ரமரவனிதா –

            தத்ததீர்க்காநுயாதா:                           || 20 ||

 

முப்புரங்களையும் வென்ற பின் மலைமகளை அன்புடன் நோக்கியும் வில்லியின் நுனியில் கையை வைத்துக்கொண்டும் நின்ற உம் மீது விண்ணுலக நந்தவனத்திலுள்ள பெண் தேனீக்களின் பெரும் கூட்டத்தினால் தொடரப்பட்ட மந்தார மரங்களின் நறுமணம் கமழும் மலர்களின் மழை பொழிந்தது.

செயற்கரிய செயலைச் செய்து முடித்துப் பெருமிதமாக நின்ற பரமனின் மீது தேவலோக மலர்கள் பொழிவது இயற்கை தானே! அவ்விதம் நறுமணம் கமழும் மலர்களை மொய்க்கும் பெண் தேனீக்களும் மலர்களைப் பின் தொடர்ந்து வருவதில் வியப்பென்ன! அவ்விதமான காட்சியைத் தான் கவி இங்கே காண்கிறார்.

அடுத்துவரும் இரு செய்யுட்களில் திருமாலிற்குப் பரமன் ஸுதர்சன் சக்கரம் அருளிய லீலா வினோதத்தை கவி வருணனை செய்கிறார்.

 

      உத்த்ருத்யைகம் நயனமருண –

            ஸ்நிக்ததாராபராகம்

      பூர்ணே(அ)தாத்ய: பரமஸுலபே

            புஷ்கராணாம் ஸஹஸ்ரே |

      சக்ரம் பேஜே தஹனஜடிலம்

            தக்ஷிணம் தஸ்ய ஹஸ்தம்

      பாலஸ்யேவ த்யுதிவலயிதம்

            மண்டலம் பாஸ்கரஸ்ய                       || 21 ||

 

எவர் ஆயிரம் தாமரை மலர்களும் ஆன பின்னர் மாசற்ற விழியின் மணியை மலரின் மகரந்தத் தூளாக உடைய சிவந்த விழியைப் பிடுங்கிக் கொடுத்தாரோ அந்த விழியானது அனல் பொழியும் உதிக்கும் சூரியனின் ஒளியினால் சூழப்பட்ட வளையம் போலிருந்த ஸுதர்சன் சக்கரத்தை வலது கைக்கு அனுப்பியது போலும்.

      ஆயிரத்தெட்டு மலர்களினால் சிவனாரை வழிபட்டு திருமால் ஸுதர்சன் சக்கரம் பெற்ற புராண வரலாற்றை இங்கு கவி நினைவு கொள்கிறார். இதைப்பற்றி அடுத்த செய்யுளில் காண்க.

      விஷ்ணுச்சக்ரே கரதலகதே

            விஷ்டபானாம் த்ரயாணாம்

      தத்தாச்வாஸோ தநுஸுத –

            சிரச்சேத்தீக்ஷாம் பபந்த |

      ப்ரத்யாபந்நம் ததபி நயனம்

            புண்டரீகாநுகாரி

      ச்லாக்யா பக்திஸ்த்ரிநயன

            பவத்யர்ப்பிதா கிம் ந ஸூதே                 || 22 ||

 

முக்கண்ணே! ஸுதர்சன சக்கரம் கையை அடைந்ததுமே திருமாலானவர் மூவுலகிற்கும் தேறுதல் மொழிந்து அரக்கர்களின் தலையைக் கொய்ய உறுதி பூண்டார். அந்தக் கண்ணும் தாமரைக் கண்ணனை மீண்டும் அடைந்தது. உம்மிடம் வைத்த போற்றத் தகுந்த பக்தியானது எதைத்தான் கொடுக்காது?

      முந்தைய செய்யுளில் திருமால் செய்த அரும் பெருஞ் செயலான தம் தாமரைக் கண்ணைப் பிடுங்கி பரமனடியில் ஸமர்ப்பணம் செய்ததைக் கூறி அதை மீண்டும் அவர் பெற்றதை இச் செய்யுளில் கூறுகிறார். பரமனிடம் பக்தி பூண்டவர் எதைத்தான் பெறமாட்டார்? யாவற்றையும் பெறுவார் அன்றோ?

      திருமால் பரமனைக் குறித்துத் தவம் இயற்றி ஆயிரம் மலர்களைக் கொண்டு வழிபட்டு வரும் பொழுது இன்னம் ஒரு மலர் எஞ்சியுள்ள பொழுது விளையாட்டாக அதைச் சிவனார் மறைக்க, தியானத்திற்குப் பின் கண் திறந்த திருமால் மலரினைக் காணாது மனம் கலங்கி மலரையொத்த தன் கண் மலரையே பிடுங்கி ஸமர்ப்பணம் செய்ய அதனால் மனம் மகிழ்ந்த சிவனார் அவரது கண்ணையும் திரும்பக் கொடுத்து அருள் செய்தார் என்று லிங்க புராணம் கூறுகிறது.

      ஸவ்யே சூலம் த்ரிசிகமபரே

            தோஷணி பிக்ஷாகபாலம்

      ஸோமோ முக்த: சிரஸி

            புஜக: கச்சிதம்ஸோத்தரீயம் |

      கோ(அ)யம் வேஷஸ்த்ரிநயன

            குதோ த்ருஷ்ட இத்யத்ரிகன்யா

      ப்ராயேண த்வாம் ஹஸதி பகவந்

            ப்ரேம நிர்யந்த்ரிதாத்மா                       || 23 ||

     

முக்கண்ணனே! உமது இடது கையில் திரிசூலம், வலது கையில் பிக்ஷா பாத்திரமான மண்டை ஓடு. தலையில் பிறைச்சந்திரன். மேலாடையாக அணிந்திருப்பதோ அரவம். இந்த வேடம் எவ்விதம் உங்களுக்குக் கிடைத்தது என்று இவ்விதம் பேறுடைத்தவனே! உம்மிடம் உள்ள அன்புப் பெருக்கால் உம்பால் ஈர்க்கப்பட்ட உள்ளம் கொண்ட மலைமகள் உம்மைக் கண்டு நகைக்கின்றாள்.     

      பரமனின் கோலம் மிகவும் வியக்கத்தக்கதே. இருப்பினும் அவர் பால் தம் மனம் ஈர்க்கப்பட்ட மலைமகள் அவரது வியக்கத்தக்க கோலத்தைக் கண்டு இவ்விதமாக பரிகாசம் செய்கின்றாள்.

ஆர்த்ரம் நாகாஜிஅனமவயவ

            க்ரந்திமத்-பிப்ரதம்ஸே

      ரூபம் ப்ராவ்ருங்கனருசி –

            மஹாபைரவம் தர்சயித்வா |

      பச்யந் கெளரீம் பயசலகராம்

            லம்பிதஸ்கந்தஹஸ்தாம்

      மன்யே ப்ரீத்யா த்ருத இவ பவான்

            வஜ்ர தேஹோ (அ)பி ஜாத:                    || 24 ||

 

குருதியுடன் கூடியதும் அவயவங்களில் முடியப் பெற்றிருப்பதுமான யானைத் தோலை தோளிலணிந்து மழைக்காலத்தில் தோன்றும் கருமையான மேகங்களைப் போல மிகவும் பயங்கரமான உம் உருவை காண்பித்ததும் அதைக் கண்டு பயந்து நடுங்கும் கைகளை உடைய பார்வதி உம்மைத்தழுவிக் கொள்ள அதைக்கண்ட நீர் வஜ்ரம் போல உடலைப் பெற்றிருந்தும் அன்பின் பெருக்கினால் இளகிவிட்டீர் போலும்.

      யானைத் தோலைத் தரித்த சிவனாரின் உருவைக் கண்டு அஞ்சிய பார்வதி அவரைத் தழுவிக் கொண்டார். மலைமீது சஞ்சரிப்பவரும், மயானத்தில் வாசம் செய்பவரும், அச்சம் தரும் அணியும் ஆடையும் அணிந்தவருமான சிவனாரது வஜ்ரம் போன்ற தேகமும் அவளிடம் பரமனுக்கு உள்ள அன்பின் பெருக்கினால் இளகி திரவநிலை அடைந்தார் போலும் என்று கவி கற்பனை செய்கிறார். அவள் நிலை கண்டு பரமன் அவள் பால் பிரிவு கொள்கிறார் என்று பொருள்.

வ்யாலாகல்பா விஷமநயனா

            வித்ருமாதாம்ரபாஸோ

      ஜாயாமிச்ரா ஜடில சிரஸச் –

            சந்த்ர்ரேகாவதம்ஸா: |

      நித்யாநந்தா நியதலலிதா:

            ஸ்நிக்த-கல்மாஷகண்டா

      தேவா ருத்ரா த்ருதபரசவஸ்தே

            பவிஷ்யந்தி பக்தா:                            || 25 ||

 

உம்முடைய பக்தர்கள் பாம்புகளை அணிகலன்களாகக் கொண்டவர்களாகவும், முக்கண் உடையவர்களாகவும், பவளங்களையும் தாமிரங்களையும் ஒத்த நிறம் உடையவர்களாயும், தம் தம் மனைவிகளுடன் கூடியவர்களாயும், சடைமுடியுடன் கூடியவர்களாயும், பிறைச்சந்திரனுடன் கூடியவர்களாகவும், எப்பொழுதும் மகிழ்ச்சி உடையவர்களாயும், இயமம் நியமம் உடையவர்களாகவும், அழகியவர்களகவும், வெளிர் கருமையான கழுத்தை உடையவர்களாகவும், விளையாட்டில் விருப்பமுள்ளவர்களாகவும், உருத்திரர்களாகவும், கோடரியைத் தாங்கிய வருமாக ஆகின்றனர்.

      பரமனைப் பணியும் பக்தர்களும் அவரது உருவையே பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. சிவனாரின் உடல் எப்பொழுதும் வெண்மையானது என்று கூறப்பட்டாலும் அவரது உமையொருபாக வடிவில் உமையின் நிறமான பவழங்கள் தாமிரம் இவைகளின் நிறமும் பக்தர்களிடமும் காணப்படுகின்றன. சிவனாரின் உருத்திர வடிவு ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுவதால் பக்தர்களும் உருத்திர என்ற சொல்லால் கூறத்தக்கவர்கள் ஆகின்றனர்.

      மந்த்ராப்யாஸோ நியமவிதயஸ்தீர்த்த –

            யாத்ராநுரோதோ

      க்ராமே பிக்ஷாசரணமுடஜே

            பீஜவ்ருத்திர்வனே வா |

      இத்யாயாஸே மஹதி

            ரமதாமப்ரகல்ப: பலார்த்தீ

      ஸ்ம்ருத்யைவாஹம் தவ

            சரணயோர்-நிர்வ்ருதிம் ஸாதயாமி                  || 26 ||

 

பலனை விரும்பும் மூடர்கள் மந்திரங்களை ஜபித்தல், (க்ருச்ரம், சாந்திராயணம் போன்ற) நோன்புகளை நோற்றல், புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செல்லுதல், கிராமத்தில் பிட்சை எடுத்தல், பர்ண சாலையிலோ அல்லது காட்டிலோ தானாக விளைந்த பயிர்களைக் கொண்டு உயிர் வாழ்வது என்று இவ்விதமான பெரும் பிரயாசையில் ஈடுபட்டுள்ளவர்களாக இருக்கட்டும். நானோவென்றால் உம்முடைய அடிகளின் நினைவாலேயே மோக்ஷத்தைப் பெறுவேன்.

      எளிதான முறையை அறியாத மூடர்கள் தம் உடலை வருத்தும் கடினமான முறைகளான நோன்பும் நோற்றல், காசி, ராமேச்வரம் முதலான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லுதல், காடுகளில் வசித்தோ அல்லது பர்ணசாலையில் வாழ்ந்து கொண்டோ தானே விளைந்த பயிர்களின் மூலம் உயிர் வாழ்ந்தோ இருக்கட்டும். அவர்கள் பரமனை அடைய எளிதான முறையை அறியாதவர்கள். நான் எப்பொழுதும் தங்கள் திருவடிகளை மனத்தில் நிறுத்தி வைத்தே மோக்ஷத்தை அடைவேன்.

      ஆஸ்தாம் தாவத் ஸ்நபனமுபரி

            க்ஷீரதாராப்ரவாஹை:

      ஸ்நேஹாப்யங்கோ பவனகரணம்

            கந்ததூபார்ப்பணம் ச |

      யஸ்தே கச்சித்கிரதி

            குஸுமாந்யுத்திசன் பாதபீடம்

      பூயோ நைவ ப்ரமதி ஜனனீ –

            கர்ப்பகாராக்ருஹேஷ                         || 27 ||

      உம் தலையின் மீது பாலபிஷேகம், உடலில் எண்ணை முதலியவற்றால் அபிஷேகம், உங்களுக்காக ஆலயங்கள் கட்டுதல் சந்தனம், சாம்பிராணி மற்றும் இதர வழிபாட்டுப் பொருள்களை ஸமர்ப்பித்தல் முதலியன இருக்கட்டும். எவனொருவன் உங்கள் திருவடியைத் தாங்கும் பீடத்தின் மீது மலர்களைச் சாத்துகின்றானோ அந்த மானிடன் தாயின் வயிறெனும் சிறைச்சாலையில் மீண்டும் உழல்வதில்லை.

      பரமனைக்குறித்து அவன் காலடியில் சாத்தும் மலர் வழிபாடொன்றே பிறப்பு இறப்பு என்னும் இந்த ஓயாத வாழ்க்கைச் சுழலைத் தடுத்து நிறுத்த மிகவும் எளிதான முறையாகும். வேறு வழிபாட்டு முறைகள் எதையும் தேடி அலைந்து அல்லல்பட வேண்டாம்.

      ஶ்ரீ சங்க்ர பகவத் பாதரின் சிவானந்தலஹரியில் தம் மனமாகிற மலரிருக்க வீணே பிற மலரினைத் தேடி குளம், குட்டை, காடு, மலை எல்லாம் அலையும் மானிடரைப் பற்றிக் கூறும்கபீரே காஸாரே விசதிஎன்னும் செய்யுளை ஒப்புநோக்குக.

முக்தாகாரம் முனிபிரநிசம்

            சேதஸி த்யாயமானம்

      முக்தாகாரம் சிரஸி ஜடிலே

            ஜாஹ்நவீமுத்வஹந்தம் |

      நாநாகாரம் நவ-சசி-கலா-சேகரம்

            நாகஹாரம்

      நாரீமிச்ரம் த்ருதநரசிரோ-

            மால்யமீசம் நமாமி                           || 28 ||

 

அருவானவரும் அல்லது சுத்த சைதன்யமான வரும், முனிவர்களால் எப்பொழுதும் மனத்தில் தியானிக்கப்படுபவரும், முத்தைப்போன்ற வெண்மையானவரும், இந்தப் பிரபஞ்சமே உருவானவரும், பிறைச்சந்திரனைச் சூடியவரும், பாம்பை அணியாக உடையவரும், உமையையொரு பாகமாக உடையவரும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தவருமான ஸதாசிவனை வணங்குகின்றனே.

      சிவனாரின் பிரசித்தமான உருவை வருணித்து அதைக் கவி வணங்குகின்றார்.

 

 

      திர்யக்யோநெள த்ரிதசநிலயே

            மாநுஷே ராக்ஷஸே வா

      யக்ஷாவாஸே விஷதரபுரே

            தேவ வித்யாதரே வா |

      யஸ்மிந் கஸ்மிந் ஸுக்ருதநிலயே

            ஜன்ம நி:ச்ரேயஸாய

      பூயாத்யுஷ்மச்சரண –

            கமலத்யாயிநீ சித்தவ்ருத்தி:                   || 29 ||

 

! தேவனே மோக்ஷத்திற்காக பறவை பூச்சிகளின் யோனீயிலோ, ஸ்வர்க்கத்திலோ, மனிதகுலத்திலோ, அரக்கர்கள் குலத்திலோ, யக்ஷர்கள் லோகத்திலோ, நாக லோகத்திலோ அல்லது கைலாயத்திலோ எங்காவது எனக்கு பிறப்பு இருக்கட்டும். உமது அடித் தாமரையை தியானம் செய்யும் மனோ நிலை இருக்கட்டும்.

      மோக்ஷம் கிடைக்க எப்பிறவியாயினும் இருக்கட்டும். அந்த எப்பிறவியிலும் ஈசனின் அடித்தாமரையை எப்பொழுதும் இடையறாது நினைக்கும் மனோ நிலை இருக்கட்டும் என்று கோருகிறார்.

      வந்தே ருத்ரம் வரதமமலம்

            தண்டினம் முண்டதாரம்

      திவ்யஞானம் த்ரிபுரத்தஹனம்

            சங்கரம் சூலபாணிம் |

      தேஜோராசிம் த்ரிபுவனகுரும்

            தீர்த்த-மெளலிம் த்ரிணேத்ரம்

      கைலாஸஸ்தம் தனபதிஸகம்

            பார்வதீநாதமீசம்                              || 30 ||

 

துயரைத் துடைப்பவரும், விரும்பும் பொருளைக் கொடுப்பவரும், வெண்மை நிறத்தவரும், கோலைப் பிடித்தவரும், மண்டை ஓட்டை அணிந்தவரும், மேம்பட்ட அறிவே உருவானவரும், முப்புரம் எரித்தவரும், சங்கரரும் (நன்மை பயப்பவரும்), திரிசூலம், ஏந்தியவரும், ஒளிமயமானவரும், மூவுலகிற்கும் கற்பிக்கும் குருவும், கங்கையைத் தரித்தவரும், முக்கண்ணரும் கைலாயத்தில் வசிப்பவரும், குபேரனுக்கு நண்பரும், பார்வதீமணாளனுமான பரமனை வணங்குகின்றேன்.

      முன் செய்யுளில் கூறியது போல இச்செய்யுளிலும் பரமனின் பல்வேறு சிறப்பு குணங்களையும் கூறி பரமனைப் பணிகின்றார் கவி.

      யோகீ போகீ விஷபுகம்ருத:

            சஸ்த்ரபாணிஸ்தபஸ்வீ

      சாந்த: க்ரூர: சமிதவிஷய:

            சைலகன்யாஸஹாய: |

      பிக்ஷாவ்ருத்திஸ்த்ரிபுவனபதி:

            சுத்திமானஸ்திமாலீ

      சக்யோ க்ஞாதும் கதமிவ சிவ

            த்வம் விருத்தஸ்வபாவ:                      || 31 ||

     

சிவனே! நீர் பற்றற்றவரும், பற்றுடையவரும் ஆவீர். விஷத்தைக் குடிப்பவர் ஆனாலும் இறப்பற்றவர். கையில் ஆயுதம் ஏந்தியும் தவமியற்றுபவர். சாந்தமானவர். ஆயினும் கொடூரமானவர். போகப் பொருள்களைத் துறந்தவர். ஆயினும் மலை மகளுடன் கூடியவர் பிச்சை எடுப்பவர். இருப்பினும் மூவுலகிற்கும் அதிபதி. மிகவும் தூய்மையானவர். இருப்பினும் எலும்பு மாலையை அணிந்தவர். இப்படி ஒன்றுக்கொன்று முரணாக உள்ள உம்முடைய தன்மையை எப்படி அறிய முடியும்?

      ஒன்றுக் கொன்று முற்றிலும் முரணான குணமுடைய பரமனின் தன்மையை அறிவது என்பது மிகவும் கடினமானதே.

உபதிசதி யதுச்சைர் – ஜ்யோதி –

            ராம்நாயவித்யா

      பரமபரமதூரம்

            தூரமாத்யந்த – சூன்யம் |

      த்ரிபுரஜயினி தஸ்மிந்

            தேவதேவே நிவிஷ்டா

      பகவதி பரிவர்த்தோன் –

            மாதிநீ பக்திரஸ்து                             || 32 ||

 

மிகப் பெரியதும், மிகச் சிறியதும், உள்ளிருப்பதும், பிரபஞ்சத்தின் வடிவானதும், துவக்கமும் முடிவும் அற்றதுமான் எந்த ஒளிமயமான வடிவைப் பற்றி வேதாந்தம் எடுத்துரைக்கின்றதோ அந்த முப்புரம் வென்றவனும் தேவாதி தேவனுமான பெரும் பேறுடைத்தவனிடம் பிறப்பிறப்பைக்களையும் பக்தி தழைத்திருக்கட்டும்.

      பரமனின் வடிவதிசயத்தை விளக்கி அப்படிப்பட்ட பரமனிடம் ஸம்ஸாரமாகிற சக்கரத்தை அறவே களையும் பக்தி நிலைத்திருக்கக் கவி வேண்டுகின்றார்.

      ‘பரம், அபரம்என்னும் சொற்களுக்கு பரப்ரஹ்ம ஸ்வரூபம், ஜீவஸ்வரூபம், என்றும் பொருள் கூறலாம்.

      இதி விரசிதமேதச்சாரு

            சந்த்ரார்த்தமெளலே:

      லலிதபதமுதாரம் தண்டினா

            பண்டிதேன |

      ஸ்தவனமவனகாமேநாத் –

            மனோ (அ)நாமயாக்யம்

      பவதி விகதரோகோ

            ஜந்துரேதஜ்ஜபேன                             || 33 ||

 

      தன்னைக் காக்க விரும்பி தண்டி என்னும் பண்டிதரால் பிறைச்சந்திரனைத் தரித்தவனைக் குறித்து அழகிய சொற்கள் கொண்டதும் மிகச் சிறந்த பொருளை உடையதுமானஅனாமயம்என்பது துதி என்று இயற்றப்பட்டதை படிப்பதினால் மக்கள் தம் நோய் அகன்றவர் ஆவார்கள்.

      இந்த துதி இயற்றியதன் காரணத்தையும், அதன் தன்மையையும் கவி இந்த செய்யுளில் கூறுகிறார்.

      ‘ஆமயம்என்னும் சொல்லிற்கு நோய் என்பது பொருள். ‘அநாமயம்என்றால் நோயின்மை என்று பொருள். பிறப்பு இறப்பு என்னும் ஸம்ஸார சக்கரம் ஒரு நோயென கூறப்படுவது வழக்கம். அந்த நோயைக் களையும் தன்மை கொண்ட இந்த துதி மிகவும் அழகிய சொற்களைக் கொண்டு உயர்ந்த பொருள் பொதிந்ததாக இயற்றப்பட்டுள்ளது.

      [உரை ஆசிரியர் குறிப்பு: - இந்தத் துதியை இயற்றிய தண்டி கவி என்பவர் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும்காவ்யாதர்சம்என்னும் காப்பிய இலக்கண நூலை இயற்றிய்வருமான தண்டி என்பவரே என்பதுசாரு, லலிதபதம், உதாரம்என்ற மூன்று சொற்களை அவரது இத் துதியின் கடைசிச் செய்யுளில் கையாண்டதிலிருந்து தெரியவருகிறது.

      முன் குறிப்பட்டபடி இத்துதிஆமயம்என்னும் இந்த பிறவிப்பிணியை போக்க வல்லது என்பதால் இதற்குஅநாமயஸ்தவம்என்பது சாலப் பொருந்தும்.

      இங்குள்ள 33 செய்யுட்களில் முதல் 31 செய்யுட்கள்மந்தாக்ராந்தாஎன்னும் விருத்தத்திலும் கடைசி 2 செய்யுட்கள்மாலினிவிருத்தத்திலும் அமைக்கப் பெற்றுள்ளன.

      சென்னை கீழ்க்கலை ஓலைச்சுவடி நிலைய அரையாண்டு ஆயுவு நூலில் அச்சிடப்பட்டுள்ள இத் துதியை பக்தர்கள் அனைவரும் பயன்பெற தமிழ் மொழி உரையுடன் கொடுத்துள்ளேன். இதைப் படித்து நாம் நமது பிறவிப்பயனைப் பெறுவோமாக.]

சிவம்.

Related Content