logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்

தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை M.A.,

Source: 
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து வெளியீடு
செந்திலாண்டவன் துணை

"திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்"

ஆசிரியர்: 
தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை M.A.,

திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம்
ஸ்ரீ-ல ஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் அவர்கள்
7-ஆம் ஆண்டு நினைவு மலராகிய
திருமந்திர வெளியீட்டில் வந்துள்ளவை.
8-4-51
-----------------------------------------------------------
 

திருமந்திர ஆராய்ச்சி


     சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் முருகவேளின் பன்னிரு கண்கள் போலவும் பன்னிரு திருக்கைகள் போலவும் தம்மை நாடிப்போற்றும் உயிர்களுக்கு ஆக்கந் தரவல்லன. இப்பன்னிரண்டு திருமுறைகளுள் பத்தாக நிலை பெறுவது திருமூல நாயனார் திருவாய் மலர்ந்த "திருமந்திரம்" என்னும் உயரிய மந்திரநூல்.


ஆசிரியர் வரலாறு
 

     அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய இத்திருமூலரைப் பற்றிய முதற்குறிப்பை நம்பி ஆரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையில் "நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்" என்னும் பகுதியிற் காண்கின்றோம். திருத்தொண்டத் தொகையிற் "பிரான்" என்னும் அருமைச் சொல்லால் இருவரையே ஆரூரர் போற்றினர். ஒருவரை "எம்பிரான்" எனப்போற்றி செய்தார். அவ்வொருவர் "சம்பந்தர்". மற்றொருவரை "நம் பிரான்" என நயந் தேத்தினர். அவ்வொருவர் "திருமூலர்". "கோவணம் பேணு மேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே"[1] என்னும் சம்பந்தர் திருவாக்கினின்றும் 'பிரான்' என்னும் சொல்லின் சிறப்புப் பெறப்படும். இத்தகைய சிறப்புப் பெயரைச் சம்பந்தருக்கும் திருமூலருக்குமே சூட்டினர் ஆரூரர் என்றால் ஆரூரருக்குத் திருமூலர்பால் இருந்த மதிப்பு எப்பெற்றியது என்பது நன்கு தெரிகின்றது. யோக நெறியைப் புலப்படுத்த வந்த நம்பி ஆரூரர் தவராஜ யோகியாகிய திருமூலரை "நம் பிரான்" என வியந்து போற்றாது வேறு எவ்வாறு தான் போற்றக்கூடும்! 


     1 திருப்புகலூர்-2-115-7. பிரான்-தலைவன் 'தன்னை நானும் பிரான் என்றறிந்தேனே'- அப்பர்-5-91-8.

     ஆரூரருக்குப் பின்னர் வந்த நம்பியாண்டார் நம்பியும் ஆரூரரைப் பின்பற்றித் திருமூலரைப் 'பிரான்' என்றே தாமும் போற்றுகின்றனர்; தாம் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் தம் உச்சியில் திருவடி சூட்டிய பிரான் திருமூலர் என்று அவரைப் போற்றி செய்து, அவரது வரலாற்றையும் சுருக்கிக் கூறியுள்ளார். சாத்தனூரிற் பசுக்களை மேய்த்திருந்தவனுடைய உடலிற் புகுந்து அவ்வுடலில் இருந்தபடியே சிவபிரானைத் "தமிழின்படி மன்னு வேதத்தின் சொற்படியே" பரவின பிரான் திருமூலர் என்று பின் வரும் பாடலில் விளக்குகின்றார்:

 

    "குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
        மேய்ப்போன் குரம்பைபுக்கு
    முடிமன்னு கூனற் பிறையாளன்
        தன்னை முழுத்தமிழின்
    படிமன்னு வேதத்தின் சொற்படி
        யேபர விட்டெனுச்சி
    அடிமன்ன வைத்த பிரான்
        மூலனாகின்ற அங்கணனே.”
 

நம்பியாண்டார் நம்பி இங்ஙனம் சுருக்கமாகக் கூறிய வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் தாம் அருளிய பெரிய புராணத்தில் விளக்கமாக எடுத்தோதியுள்ளார். சேக்கிழாரும் "திருமூல தேவர்" என இவரைச் சிறப்பித்துள்ளார். பெரிய புராணத்தின்படி திருமூலர் வரலாறு சுருக்கமாகப் பின் வருமாறு:

     கயிலைமால் வரையைக் காத்தருளும் நாயகராம் நந்தி தேவரின் திருவருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் திருமூலர். அவர் அணிமாதி சித்தி பெற்றவர்; பொதிய மலையிலிருந்த தம் நண்பர் குறு முனிவரொடு சில நாள் உடனுறைய விரும்பிப் புறப்பட்டுக் கேதாரம், பசுபதி நேபாளம், காசி, பருப்பதம், காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை, தில்லை முதலிய தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறைக்கு வந்து சிவதரிசனஞ் செய்து புறப்பட்டுச் சாத்தனூர் என்னும் ஊருக்கு அருகில் வரும் பொழுது அங்குப் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் அவைகளை மேய்க்கும் இடையன் இறந்து கிடப்பதையும், அவனைச் சுற்றி பசுக்கள் கண்ணீர் விட்டுப் புலம்பி நிற்பதையுங் கண்டார். இந்த ஆயன் உயிர் பெற்று எழுந்தா லொழிய இப் பசுக்களின் துயரம் நீங்காதென உணர்ந்த இக் கருணையாளர் தமது உடலை ஒருபுறம் சேமித்து வைத்துத் தம் உயிரை இறந்து கிடந்த மூலன் என்னும் பெயரிய அந்த இடையன் உடலில் அடைவித்து மூலனாய் உயிர் பெற்றெழுந்தனர். ஆயன் எழுந்ததைக் கண்ட பசுக்கள், அவனை நாத்தழும்ப நக்கி, மோந்து அணைந்து, கனைப்பொடு நயந்து, களிப்பினால் வாலெடுத்துத் துள்ளித் துயரம் நீங்கின. மாலைப்பொழுது வந்ததும் பசுக்கள் தத்தம் இல்லங்களுள் தாமே நுழைய மூலனாம் இவர் வெளியே நின்றார். இவர் காலந் தாழ்ந்து நிற்பதைக்கண்ட இவர் மனைவி இவருக்கு ஏதோ ஈனம் அடுத்ததுபோலும் எனக் கவன்று வந்து இவரை அழைக்க, ‘எனக்கு உன்னுடன் யாதொரு தொடர்பும் இல்லை’ என்று இவர் சொல்லிப் பொது மடம் ஒன்றிற் புகுந்தார். பிற்றைநாள் நல்லார் பலர் வந்து இவரை அழைத்தும் பயனில்லாது போக 'இவருக்கு ஞான உணர்வு வந்து விட்டது, இவர் இனி வரமாட்டார்' எனக்கூறி மூலன் மனையாளை அவர்கள் அழைத்துச்சென்றனர். அவர்கள் நீங்கியதும் திருமூலர் தமது பழைய உடலைத் தேடினர். அது காணப்படவில்லை. ஆகமப் பொருனைத் தமிழில் வகுக்க வேண்டி இறைவன் உடலை மறைப்பித்தார் எனத் தமது ஞான உணர்வால் இவர் தேர்ந்து திருவாவவடுதுறையை அடைந்து ஓர் அரச மரத்தின் கீழ்ச் சிவயோகத்தில் அமர்ந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாகச் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் நிலைகளை விளக்கும் மூவாயிரம் பாடல்களைத் தெள்ளுதீந் தமிழில் உலகோர் உய்யும்படிப் பாடி, மூவாயிரம் ஆண்டு இப்புவியில் மகிழ்ந்திருந்து கயிலையிற் சிவன் தாள் அடைந்தார். அவர் அங்ஙனம் பாடிய பாடல்களுக்குத் 'திருமந்திரமாலை', 'திருமந்திரம்' எனப் பெயர்கள் வழங்கலாயின.

திருமூலர் காலம்: நம்பி ஆரூரரால் போற்றப்பட்டமையால் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இவர் இருந்தார் என்பது தெளிவு. 'தமிழ் மூவாயிரஞ் சாத்தி மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து' எனச் சேக்கிழார் பெருமான் கூறுவதால் கி.மு. 2100-க்கு முன்னரும் சித்தப் ப்ரசித்தராகிய இவர் இருந்திருத்தல் வேண்டும். பல்லாண்டு இவர் உயிர் வாழ்ந்தனர் என்பது,

'தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே' - 74
'இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி' - 80
என்னும் இவர் திருவாக்காலும், 'சந்ததமும் இளமையோடிருக்கலாம்' எனத் தாயுமானவர் கூறியிருந்தாலும் ஐயமின்றிக் கொள்ளக்கிடக்கின்றது.

     இவர் அருளிய திருமந்திரமாலை என்னும் நூல் திருவாவடுதுறைத் திருக்கோயிலுட் பலிபீடத்தருகிற் புதைந்து கிடந்ததாகவும், ஆங்குத் தரிசனத்துக்கு வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் பலிபீடத்தருகே வணங்கி எழுந்தபொழுது இங்குத் தமிழ் மணம் கமழுகின்றது; தோண்டிப் பாருங்கள் எனக் கூற, அங்ஙனமே தோண்டினபொழுது இத் திருமந்திர நூல் கிடைத்ததென்றும் ஆன்றோர் கூறுவர். இவ்வரலாறு உண்மையாயின் திருமூலர் காலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரும் போகும்.


திருமூலர் வரலாறு: அகச் சான்றுகள்


திருமந்திர நூலினின்றே திருமூலரைப் பற்றிய பல அரிய குறிப்புகள் கிடைக்கின்றன; அவைதாம்:
1. சிவபிரானே இவரது வழிபடு கடவுள்: 
'நந்தி என்னால் தொழப்படும் எம்இறை' - 9

2. நந்தியின் அருளால் 'நாதன்' என்னும் பட்டத்தைப் பெற்றார்; அதுகொண்டு இவர் பெயர் 'திருமூலநாதர்' எனவும் வழங்கும்.

'நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்' - 68
'நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் ...............
என்னோ டெண்மரு மாமே' - 67

3. மூலன் என்னும் ஆயன் உடலிற் புகுந்ததும் நந்தியின் திருவருட் குறிப்பே:

'நந்தி அருளாலே மூலனை நாடி' - 68, 92

4. நந்தி தேவரிடம் அருள்பெற்ற எண்மருள் இவர் ஒருவர்; மற்றைய எழுவர் நந்திகள் நால்வர், சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர் - 67

5. திருமூலரிடம் மந்திரோபதேசம் பெற்றவர் மாலாங்கன், கந்துரு, கஞ்ச மலையன் முதலிய ஏழுபேர்:

'மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் ......... கஞ்ச
மலையனோ, டிந்த எழுவரும் என்வழி யாமே' - 69,1443

6. அரனடியை நாடோறும் சிந்தை செய்து ஆகமம் இவர் செப்பினர்:

'........ அரனடி நாள்தோறும்
சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற்றேனே' - 73

7. திருவாவடுதுறையில் அரச மர நீழலில் இருந்து, சிவ நாமங்களை ஓதிக்கொண்டும் ஞானபூஜை செய்துகொண்டும் எண்ணிலி காலம் இருந்தனர்:

'ஆவடுதண்டுறை...சிவபோதியின் நீழலில்...நாதனை
அர்ச்சித்து...எண்ணிலி கோடி இருந்தேன்' - 78, 79, 80, 82

8. தமது புகழைத் தமிழிற் புலப்படுத்துமாறே இறைவர் தன்னைப் படைத்தனர்:

'என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே' - 81

9. வான்வழியாக வந்தனர்:

'வான்வழி யூடு வந்தேனே' -- 83

10. அவயோகஞ் சாராத சிவயோகி இவர்:

'அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே' - 122

11. இறைவனது திருவடி தீட்சையும் சட்சு தீட்சையும் (கண்ணோக்கமும்) பெற்றவர் இவர்:

'திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்து' - 1597

'இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி' - 1596

'........எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத்தான் அருட்கண் விழிப்பித்து' - 114

12. இராப்பகலற்ற இடத்தே களித்திருந்த பரமயோகி இவர்:

'இருந்தேன் இராப்பக லற்ற இடத்தே' - 80

13. தேவியின் அருட்பிரசாதம் பெற்றவர் இவர். திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மையைத் தியானித்திருந்தவர்:

' நேரிழையாவாள்...என் பிறப்பறுத் தாண்டவள்' - 78
'ஆவடுதண்டுறை - சீருடை யாள்பதம் சேர்ந்திருந்தேனே ' - 78

14. வேதாகம சாரத்தைத் தமிழிற் செப்ப வந்தவர் இவர்:

'வேதத்தைச் செப்ப வந்தேனே' - 77
'ஆகமம் செப்ப லுற்றேனே' - 73

15. திருமூலர் பெருங் கருணையாளர் என்பது:

'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' - 85

என்னும் அருமை வாக்கிற் புலப்படுகின்றன.


நூல் நுதலும் பொருள்கள் 


     திருமந்திரம் வேதப்பொருளும் சிவாகம சாரமும் வடித்துள்ள அருமை நூல். 'வேதத்தை விட்ட அறம் இல்லை, வேதத்தின், ஓதத் தகும் அறம் எல்லாம் உள' (51) என்று வேதத்தைச் சிறப்பித்தும், 'அண்ணல் அருளால் அருளும் சிவா கமம்...எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே' (58) என ஆகமத்தின் பெருமையைக் கூறியும், திருமூலர் தமது கருத்துக்களை 
வெளியிட்டுள்ளார். சிறப்புப் பாயிரமாம் பாடல் ஒன்றில்:

' தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே' - 101

என ஆகமத்தை மூவாயிரம் பாடல்களால் ஒன்பது தந்திரமாகத் திருமூலர் மொழிந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

பாயிரத்தில் - கடவுள் வாழ்த்து, வேதாகமச் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியனவும்,

முதல் தந்திரத்தில் - உபதேசம், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, கொல்லாமை, கல்வி, கள்ளுண்ணாமை முதலியனவும்,
இரண்டாம் தந்திரத்தில் - அட்ட வீரட்டம், இலிங்க புராணம், பஞ்ச கிருத்தியம், கர்ப்பக் கிரியை, சிவநிந்தை, குருநிந்தை முதலியனவும்,
மூன்றாம் தந்திரத்தில் - அட்டாங்க யோகம், அட்டமா சித்தி முதலியனவும், 
நாலாந் தந்திரத்தில் - திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவி மந்திரம் முதலியனவும்,
ஐந்தாம் தந்திரத்தில் - சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்திநிபாதம் முதலியனவும்,
ஆறாந் தந்திரத்தில் - குரு தரிசனம், துறவு, திருநீறு, தவவேடம், ஞான வேடம் முதலியனவும்,
ஏழாந் தந்திரத்தில் - ஆறாதாரம், சிவ பூசை, குரு பூசை, சமாதிக் கிரியை, பசு இலக்கணம் முதலியனவும்,
எட்டாந் தந்திரத்தில் - அவத்தைகள், வாய்மை, அவா அறுத்தல், பத்தி, முத்தி முதலியனவும்,
ஒன்பதாந் தந்திரத்தில் - பஞ்சாட்சரம், சிவ தரிசனம், சூனிய சம்பாஷணை, தோத்திரம் முதலியனவும் கூறப்பட்டுள்ளன.

சூனிய சம்பாஷணை என்பது, எளிதில் பொருள் விளங்காதனவாய்க் குரு மூலமாகப் பொருள் காண வேண்டியனவாயுள்ள 
பாடல்களைக் கொண்டது. படிக்க வேடிக்கையாயிருக்கும்; உதாரணமாகக் கீழ்க் காட்டியுள்ள பாடலைக் காண்க:

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே - 2869.

["வழுதலை வித்து - யோகப்பயிற்சி; பாகல்-வைராக்கியம்; புழுதியைத் தோண்டினேன்- தத்துவ ஆராய்ச்சி செய்தேன்; பூசணி பூத்தது- சிவம் வெளிப்பட்டது; தோட்டக் குடிகள் - இந்திரியாதி விடயங்கள்; பழுத்தது-கிடைத்தது; வாழைக்கனி- ஆன்ம லாபம்" இது செவப் பெரியார் துடிசைகிழார் எழுதி யுள்ள உரைக் குறிப்பு.]

பிற நூல்களிற் போலவே திருமந்திரத்திலும் இடைச்செருகலான சில பாடல்கள் உள்ளன; சில பாடல்கள் இருமுறை, மும்முறை வந்துள்ளன; எடுத்துக் காட்டாக -448-3011; 490-2012-3024; எண்ணுள்ள பாடல்களைப் பார்க்கவும். இவைகள் நன்கு ஆயப்பட்டு இப்பதிப்பிலும் சைவசித்தாந்த மகாசமாஜப் பதிப்பிலும் காட்டப்பட்டுள; சைவப் பெரியார் துடிசைகிழாரது பதிப்பில் திருத்தப்பட்டுள.


மனப்பாடஞ் செயத் தகுந்தன 


மனப்பாடஞ் செயத் தகுந்த பல பாடல்களும் பாடற் பகுதிகளும் இந்நூலில் உள்ளன; அவற்றுட் சிறந்தன சில எடுத்துக்காட்டுவாம்:


1. பாடல்கள்

 

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே - 252
1
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - 270
2
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே - 532
3
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கினாற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே - 603
4
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே - 725
5
அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே - 916
6
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே - 1680
7
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே - 2290
8
ஆசூச மில்லை அருநிய மத்தருக்
காசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்
காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போருக்
காசூச மில்லை அருமறை ஞானிக்கே - 2552
9
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே - 2716
10


2. பாடற் பகுதிகள்



1. சிவனோடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை -- 5

2. நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் -- 85

3. பதியினைப் போற்பசு பாசம் அனாதி -- 115

4. ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி -- 133

5. பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு...
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே -- 145

6. வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் -- 229

7. நல்லாரைக் காலன் நணுகநில் லானே -- 238

8. வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன் -- 240

9. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் -- 250

10. அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்போன் மணியினை எய்தஒண் ணாதே -- 272

11. பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் -- 298

12. ஈச னடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் -- 534

13. பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே -- 545

14. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் ....
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே -- 724

15. அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன -- 977

16. சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது -- 1459

17. சைவம் சிவனுடன் சம்பந்த மாவது -- 1512

18. குருவே சிவமெனக் கூறினன் நந்தி -- 1581

19. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை -- 1624

20. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து 
நீ யொன்று செய்யல் -- 1683

21. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் -- 1726

22. அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா -- 1808

23. அருளிற் றலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் -- 1814

24. செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை -- 2103, 2303

25. வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை -- 2103

26. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் -- 2104

27.இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் -- 2108

28. ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன -- 504, 2175

29. வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை -- 2303.


பிற உண்மைகள் 



1. நூலிற் பல இடங்களிற் பல பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன; எடுத்துக்காட்டாக நாலாந் தந்திரத்தைப் பார்க்கவும்.

2. சைவசித்தாந்த உண்மைகள் பல ஆங்காங்கு விளக்கப் பட்டுள எவ்வண்ணம் ஏத்தினாலும் அவ்வண்ணத்தில் ஈசன் அருள்புரிவான் என்னும் அரிய உண்மை --

'எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே -- 36

எனத் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. ஐந்தெழுத்தின் பெருமை, இருவினையொப்பு, மலபரிபாகம் முதலிய உண்மைகள் எடுத்தோதப்பட்டுள -- 966, 977, 1527.

3. தல தரிசனத்தின் இன்றிமையாமையும் அங்ஙனம் வணங்கினோர் நெஞ்சத்துள் இறைவன் கோயில் கொள்வதும் --

'நாடு நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே -- 1445

என்னும் பாடலில் விளக்கப்பட்டுளது. இச்செய்யுள்,

'தேடிக் கண்டு கொண்டேன் ... தேவனை
என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்'

என்னும் அப்பர் பெருமான் தேவாரப் பாடலை நினைவூட்டுகின்றது.

திருமந்திர நூலின் பழமையும் பெருமையும்.

திருமந்திரம் மிகப் பழைய நூலாதலின் திருமூலருக்குப் பின்வந்தோர் பலரும் இந்நூலின் சொல்லையும் பொருளையும்
ஆண்டுள்ளார்கள். [ஒப்புமைப் பகுதியைப் பார்க்க -- பக்கம் 45].

1. பெரியார் துடிசைகிழார் 'தமிழ் மூவாயிரத்தினின்றும் திருவள்ளுவர் எடுத்தாண்ட பகுதிகள்' என்று சில பகுதிகளை எடுத்துத் தமது திருமந்திர நூற்பதிப்பிற் காட்டியுள்ளார்.

2. சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பில் உள்ள திருமூலர் வரலாற்றுக் குறிப்பில் திரு ம. பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள் "திருவாசகத்துக்கும் திருமந்திரத்துக்கும் பல வகையான சொல், சொற்றொடர், கருத்து ஒற்றுமைகள் காணப்படுதலால், இவ்விரண்டு நூல்கட்கும் ஒரு தொடர்பிருத்தல் வேண்டும்" -- என எழுதியுள்ளார்.

3. அப்பர் பெருமானும் திருமந்திரச் சொற்றொடர்களையும் கருத்துக்களையும் ஆண்டுள்ளார் - [ஒப்புமைப் பகுதியைப் பார்க்க -- பக்கம் 45.]

4. சித்தாந்தம் மலர் 19 - இதழ் 12-ல் திரு. பூ. ஆலால சுந்தரச் செட்டியாரவர்கள் 'திருமந்திரத்திலுள்ள சில பாடல்களும், நாலடியாரிலுள்ள சில பாக்களும் சொல்லினும் பொருளினும் ஒத்துள்ளன எனக் கூறித், 'திருமந்திரமும் நாலடியாரும்' என்ற ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

5. 'திருமூலநாதருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒத்த இயல்புகள் பலவுள, அவர் தம் நூலகத்தும் ஒற்றுமை வாய்ந்த இடங்கள் பலவுள - எனக்காட்டி யானும் ஒரு சிறு நூல்* எழுதியுள்ளேன்.
-------
* அந்நூல் 'திருமூல நாதரும் அருணகிரி நாதரும்' என்பதாகும்.

6. அவிரோத உந்தியார் உரை, கொலை மறுத்தல் உரை, சிவப்பிரகாசம் மதுரைச் சிவப்பிரகாசர் உரை, சிவப்பிரகாசச் சிந்தனை உரை, சிவ தருமோத்தர உரை, நெஞ்சுவிடுதூது உரை, சிவஞான பாடியம், வைராக்கிய தீப உரை ஆகிய இவ்வுரை நூல்கள் எட்டிலும் உரையாசிரியர்கள் திருமந்திரச் செய்யுள்களைத் தாம் கூறும் கருத்துகளுக்கு மேற்கோள்களாக ஆண்டுள்ளார்கள் -- (சமாஜ மூன்றாம் பதிப்பு - பக்கம் 19-26).

7. தாயுமானவர் 'அறிஞர் உரை' என்னும் பகுதியில் --

திரையற்ற நீர்போல் தெளியஎனத் தேர்ந்த
உரைபற்றி யுற்றங் கொடுங்குநா ளெந்நாளோ --

என்னுங் கண்ணியில்:--

திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே -- 2955

எனவரும் திருமந்திரச் செய்யுளையும்,

எந்நாட் கண்ணி --குரு மரபின் வணக்கம்

என்னும் பகுதியில் --

சக்கர வர்த்தி தவராச யோகியெனும்
மிக்கதிரு மூலனருள் மேவுநா ளெந்நாளோ --

எனத் திருமூலர் பெருமையையும் மிக அருமையாகப் பாராட்டியுள்ளார்.

8. அருளையர் அருள் வாக்கிய அகவலில் --

மூலன் மரபின் முளைத்த மௌனிதன்
பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோள் --

எனத் தாயுமானவரைத் துதித்த இடத்துத் திருமூலரைக் குறித்துள்ளார்.

9. திருக்குறள், நான்மறை, தேவாரம் முனிமொழி, திருக்கோவையார், திருவாசகம் இவையெலாம் உயரிய, ஒத்த, இணையிலாப் பொருள் ஒன்றையே குறிப்பன என்பதற்கு --

'தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்'

என்னும் ஔவையார் அருளிய நல்வழிச் செய்யுளே தக்க சான்றாம்.

திருக்குறள் முப்பால் செப்பி, என்றும் தேன்பிலிற்றும் தன்மையதாய் விளங்குகின்றது; திருமந்திரம் நாற்பாலும் நவின்று என்றும் தேன்பிலிற்றும் பெற்றியதாய்ப் பொலிகின்றது. இந்நூலின் அருமை, பெருமை தெரிந்தே சித்தாந்த தீபிகை, செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் இந்நூலிலுள்ள செய்யுள்கள் சில உரை எழுதப் பெற்றன; சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்றன; அண்மையில் - மாம்பக்கம்- குருகுல ஆசிரியர் திரு. இளவழகனார் அவர்களைக்கொண்டு, திருமந்திரப் பாடற் பொருள் விளக்கச் சொற்பொழிவுகளும் சென்னையில் நடந்தேறின. இத்தகைய அருமை பெருமை வாய்ந்த இந்நூல் திருப்பனந்தாள் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிநாத சுவாமிகள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு வெளியீடாகக் காசி மடத்துத் தலைவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களின் அன்பின் முதிர்வால் வெளிவருகின்றது.

பன்னிரு திருமுறையும் என்னிரு கண்மணியாம்
என்ன எழுந்திடுமோர் இச்சை பிறங்குதலால்
என்னது செல்வமெலாம் சைவம் இலங்குறவே
நன்னர் அளித்திடுவேன் நானெனுந் தன்மையராய் --

இந்நாள் விளங்குகின்ற ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் சைவநெறி தழைத்தோங்க வேண்டி இயற்றும் அறப்பணிகள் எண்ணிலவாய் எழுகின்றன.

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்ற திருமூல நாதரின் பெருமையை "அருணந்தி" அல்லது வேறு யாவர் அறிவர்?
நந்தி அருளாலே "அருணந்தி" வாழ்க பல்லாண்டு; அவர் தாபிக்கும் அறம் பலவும் வாழி, வாழி, வாழி.

292, லிங்கசெட்டித் தெரு, சென்னை
22-3-1951.
இங்ஙனம்:
வ. சு. செங்கல்வராய பிள்ளை, M.A.
-----------------------------------------------------------


சிவமயம்

ஒப்புமைப் பகுதி

[திரு. தணிகைமணி இராவ்பகதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளை எம்.ஏ.]

செய்யுள் எண் திருமந்திர நூல் அல்லது கருத்து நூல் நூற்பகுதி ஒப்புமை நூல் மூலம் அல்லது கருத்து
1 ஐந்து வென்றனன் தே – சம் 1-113-10 வென்றவன் புலனைந்தும்
    தே – அப் 5-98-7 வென்றானைப் புலனைந்தும்
  ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான், ஐந்து வென்றனன் ஆறுவிரிந்தனன்.. திருப்புகழ் 389 தொல்லை முதல் தானொன்று, மெல்லியிரு பேதங்கள், சொல்லு குண மூவந்தம் எனவாகித், துய்ய சதுர் வேதங்கள், வெய்யபுலனோ ரைந்து, தொய்யு பொருளாறங்கம் எனமேவும்... ஆனந்த பௌவம்
7 தன்னையொப்பா யொன்றும் இல்லாத் தலைமகன் திருக்குறள் 7 தனக்குவமை யில்லாதான்
    தே-சம் 2-62-3 தன்னோர் பிறரில்லானை
    தே-அப் 6-1-2 மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
31 கண்ணகத்தே நின்று காதலித் தேனே திருவாச திருப் பள்ளி-9 கண்ணகத்தே நின்று களிதரு தேனே.
81 என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே கந்-அநு 17 யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் (வேலவர் தாம்பெறவே தந்ததனால்)
95 ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை தே-சம் 3-112-1 இவர் தன்மை அறிவார் ஆர்?
    தே-அப் 4-112-10 நின்னைக் காணும்படித்தன்று நின் பெருமை
      6-11-8 ஆரொருவர் அவர் தன்மை அறிவார்
121 உடம்பொடு செத்திட்டிருப்பர் சிவயோகி யார்களே கந்-அலங் 19 நின்னை யுணர்ந்துணர்ந்து எல்லாம் நிர்க்குணம் பூண்டு, என்னை மறந்திருந்தேன் இறந்தேவிட்ட திவ்வுடம்பே.
123 அளித்தான் உலகெங்கும் தானான உண்மை. திருமுரு 293 உலகத்தொரு நீயாகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல் குமதி.
126 முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்கு கந்-அநு 47 ஆறாறையும் நீத்ததன் மேல்நிலை யைப் பேறா அடியேன் பெறுமா றுளதோ  
" ஆனந்தத்துள்ளொளிபுக்கு...சிவங் கண்டு கந்-அலங் 55 ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன் உருவங் கண்டு
129 தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முளே கந்-அலங் 55 முருகன் உருவங்கண்டு தூங்கார்
    திருப்புகழ் 757 உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி
140 தானே தனித்தெம் பிரான் தனைச் சந்தித்தே கந்-அலங் 95 சத்தியம்...சான்றாகும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே
167 காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென், பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற் பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும், கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே. நாலடி யாக்கை நிலை யாமை-6 நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென், பல்லோர் பழிக்கிலென், தோற்பையுள் நின்று தொழிலறச் செய் தூட்டுங், கூத்தன் புறப்பட்டக் கால்
171 ஈட்டிய தேன்பூ.. கூட்டி வைத்திடும்..ஓட்டித் துரத்திட்டது வலி யார் கொள.. கைவிட்ட வாறே நாலடி செல்வ நிலை யாமை-10 கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர்.. உய்யத்தீட்டும் தேனீக் கரி
172 கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே " " - 6 கூற்றங் குதித்துய்ந்தார் ஈங்கில்லை
188 ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே கந்-அலங் 84 ஐவருங் கைவிட்டு மெய்விடும் போது
234 அந்தண்மை பூண்ட..அந்தணர் திருக்குறள் 30 அந்தணர்..செந்தண்மை பூண் டொழுகலான்
297 வழித்துணையாய் மருந்தா யிருந்தார் தே-சுந் 7-70-9 வானநாடனே வழித்துணை மருந்தே!
331 இராப்பகல் அற்ற இடத்தே இருந்து ...பராக்கற கந்-அலங் 74 ஐவர் பராக்கறல் வேண்டும்..எ றால் இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே
409 அப்பரி செண்பத்து நான்கு நூறாயிரம்... உயிராய் நிற்கும் தே-சம் 1-132-4 உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்
603 எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணாரமுதனைக் கண்டறிவாரில்லை உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே கந்-அலங் 85 காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே....மூச்சை யுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே
632 போதுகந்தோறும் புரி சடையான் திருக்குறள் 3 மலர்மிசை ஏகினான்
    தே-சம் 1-21-5 மலர்மிசை யெழுதரு பொருள்
1178 அரனுக்குத் தாயும் மகளும் நல்தாரமு மாமே திருவாச பொற்சுண்ணம்-13 எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்
    திருக்கோவையார் 112 அவனத்தனாம் மகனாம் தில்லையான்
1350 சுவையொளி யூறோசை திருக்குறள் 27 சுவையொளி யூறோசை
1459 சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது திருப்புகழ் 239 சீவன் சிவச் சொரூபம்
1527 இருவினை நேரொப்பில் இன்னருட் சட்டி குருவென வந்து கந்-கலி வெண்பா 21-24 சத்திநிபாதம் தருதற் திருவினையும் ஒத்து வருங்காலம்... குருபர னென்றோர் திருப்பேர் கொண்டு
1529 மாலை விளக்கும் மதியமும் தே-அப் 5-90-1 மாசில் வீணையும் மாலை மதியமும்
1538 குற்றந் தெளியாதார் குணங் கொண்டு கோதாட்டார் திருவாச 20 அம்மானை குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி
1593 உரையற் றுணர்வற் றுயிர்பர மற்று..கரையற்ற சத்தாதி கந்-அலங் 61 உரையற் றுணர்வற் றுடலற்றுயிரற்று.. கரையற்..றிருக்கு மக் காட்சியதே
1644 சித்தம் சிவமாக திருவா அச்சோ-1 சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி
1722 என்னுடல் கோயில் கொண்டானே திருவா பிடித்த-10 புன்புலால் யாக்கை..பொன் னெடுங் கோயிலாப் புகுந்து
1751 ஆரும் அறியார் அகாரம் அவ னென்று திருக்குறள் 1 அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
1753 அகர முதலா யனைத்துமாய்நிற்கும் " " "
1848 ஊனினை நீக்கி யுணர்பவர் தே-அப் 4-25-3 ஊனையே கழிக்கவேண்டில் உணர்மின்கள் உள்ளத்துள்ளே
1876 உலகம் படைத்தான் " 6-3-3 முந்தி உலகம் படைத்தான்
1934 ஒருபுற் பனிபோல் அரிய துளிவிந்து....வளரும் காயத்திலே திருப்புகழ் 862 அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆகமாகி
1953 மாதரை மாய வருங்கூற்றம் என்றுள்ள " 734 காலன் பெண் தனக்குள கோலா கலம் இன்றெடுத்து இளையோ ராவிகள் மன்பிடிப்பது போல் நீள்வடிவுடை மாதர்
2053 நேயத்தே நிற்கும் நிமலன் திருவா சிவபுரா-13 நேயத்தே நின்ற நிமலன்
2090 பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் கந்-அலங் 67 பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்
2262 இருவினை ஒத்திட இன்னருட் சத்தி மருவிட கந்-கலி வெண்பா 21-24 திருமந்திரம் 1527-என்பதன் நேர் பார்க்க
2271 ஆறாறுக் கப்பால் அரனினி தாமே கந்-அநு 47 ...12 6- என்பதன் நேர் பார்க்க
2300 வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை கந்-அலங் 15 விடுங்கோள் வெகுளியை
2367 அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி திருப்புகழ் 1019 அறிவும் அறியாமையுங் கடந்த அறிவுதிருமேனி யென்றுணர்ந்து
2362 அறிவறியாமை கடந்தறிவானால் " " "
2580 அறிவறியாமை இரண்டும் அகற்றி " " "
2365 தித்திக்கும் தீங்கரும்பாய் அமுதாகி நின் றண்ணிக்கின்றானே திருவா திருவே சறவு-10 தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
" " தே -அப் 5-61-5 கருப்புச்சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே
2388 அண்டங்கள் ஏழுங் கடந்தகன்று " 6-97-1 அண்டங்கடந்த சுவடு முண்டோ?
2428 எந்தையும் என்னை யறிய கிலானாகில் எந்தையை யானும் அறிய கிலேனே " 5-91-8 என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன்
2436 காமம் வெகுளிமயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்திருந்தேன் திருக்குறள் 360 காமம் வெகுளி மயக்கம் இவை மூன்ற னாமங் கெடக்கெடு நோய்
2550 தேயத்துளே யென்றும் தேடித்திரி பவர் காயத்துள் நின்ற கருத்தறி யாரே தே-அப் 4-9-12 தேடிக்கண்டு கொண்டேன்..என்னுளே தேடிக்கண்டு கொண் டேன்
2586 எவ்வா யுயிரும் இறையாட்ட ஆட லால் " 6-95-3 ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
2593 கரியுண் விளவின் கனிபோல் சீவக சிந்தாமணி 1122 வெஞ்சின வேழமுண்ட விளங்கனி போன்று
    திருப்புகழ் 57 வேழமுண்ட விளாங்கனியதுபோல
2616 அடுவன பூதங்கள் ஐந்தும் தே-அப் 4-76-10 அடுவன அஞ்சு பூதம்
2639 பாலினுள் நெய்யாம் பழத்துள் இரதமும் " 6-15-1 பாலின் நெய்யாம் பழத்தின் இரத மாம்
2831 பாலொடுதேனும் பழத்துள் இரதமும் " " "
2646 ஆதிப்பிரான் தந்த வாளங்கைக்கொண்டபின் . . என்னைவிலக்க வல்லாரில்லை கந்-அலங் 25,64,69 ஞானச்சுடர் வடிவாள் கண்டா யடா அந்தகா--கட்டிப் புறப்படடா சத்திவாள் என்றன்
2968 நமன்வரில் ஞானவாள் கொண்டே எறிவன் வல்லாரில்லை " 25,64,69 ஞானவாளென்று சாதித்தருள் கந்தச்சுவாமி எனைத்தேற்றிய பின்னர்க்காலன்...என்னை என் செய்யலாம் சத்திவா ளொன்றினால் சிந்தத் துணிப்பன்..த்ரி சூலத்தையே
2744 விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும் தே-சம் 2-18-1 வெருவா விழுமால்
2850 வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் ..நாதனை நாடுவன் நானே தே-அப் 4-112-8 வானந் துளங்கிலென்..தண் கடலும் மீனம்படிலென்.. ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே
2970 நினைப்பும் மறப்பு மிலாதவர் கந்-அலங் 55 நினைப்பும் மறப்பும் அறார்
2976 விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே " 6 பரமானந்தம் தித்தித் தறிந்த அன்றே கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக்கைத்ததுவே


திருமூலர் துதி

--------------
ஐய மாகடல் ஆழ்ந்த உயிர்க்கெலாங்
கையி லாமல கம்மெனக் காட்டுவான் 
மையல் தீர்திரு மந்திரஞ் செப்பிய
செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்.
      -பதிபசுபாச விளக்கம்.

திருமூலர் மாலையெனுந் தெப்பத்தைப் பற்றிக்
கருவேலை யைக்கடப்போங் காண்.
      -சித்தாந்த தரிசனம்.
 

வேண்டுகோள்


முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில் 
நிற்பன நெளிவ தத்துவ தவழ்வ 
நடப்பன கிடப்பன பறப்பன வாகக் 
கண்ணகல் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்
பிள்ளைகள் பெற்ற பெருமானைக் கிழத்திக்கு 
நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்(கு)
எண்ணான்(கு) அறமும் இயற்றுதி நீயென 
வள்ளன்மை செலுத்தும் ஒண்ணிதிச் செல்வ!
அளியன் மாற்றமொன்(று) இகழாது கேண்மதி;
எழுவகைச் சனனத் தெம்ம னோரும் 
உழிதரு பிறப்பிற்(கு) உட்குவந்(து) அம்ம!
முழுவதும் ஒரீஇ முத்திபெற் றுய்வான் 
நின்னடிக் கமலம் போற்றுப...........
      -சிதம்பர மும்மணிக்கோவை - ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள். 

 

"நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்"
-- திருத்தொண்டத்தொகை.

... "மந்திரமாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே"[*] --86

* இதுபோல் வரும் எண்கள் ஸ்ரீ காசிமடத்து வெளியீடாகிய இந்தத் திருமந்திர நூலின்கண் உள்ள வரிசை எண்களைத் தழுவி நிற்பன.

 

"குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
      மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
      தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
      யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்
      மூலனாகின்ற அங்கணனே.”

Related Content