logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிடைமருதூர் உலா

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் 
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் 

 ஆண்டபிள்ளையார் துதி. 

 

  • சீருலா வான்றோர் செவிக்க ணிடைமரு
    தூருலா வேற வொளிதரும்பை - யேருலவப்
    பூண்டமா தங்கமதுப் பூங்கொன்றை யாரளித்த
    வாண்டமா தங்க மது.




  •  
  •  

நூல் 
1706. கலிவெண்பா.

 

  • 1 பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல
    மாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு

    2 மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற
    வைந்துதொழி லாற்று மருட்கொண்மூ - வைந்துதொழில்

    3 சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா
    னந்த மலையரைய னன்கீன்ற - சுந்தரப்பொற்

    4 கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான்
    றுன்னியெவற் றுந்தோய்ந்துந் தோய்விலான் - முன்னியமண்

    5 ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண்
    மோதிய வைந்தொழிற்கு மூலமாய்ச் - சோதி

    6 யுறுமுருவொன் பானுமுற்று மோருருவு மில்லான்
    மறுவின்மறை யாதி வகுத்தோன் - பெறுநெறியே

    7 யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப்
    போமுயிர்க்கே துன்பம் புணர்த்துவோ - னாம

    8 விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த்
    தெருள்சே ரிடையிற்கற் றீயா - யருள்சேருஞ்

    9 சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ
    னெத்தத் துவங்கட்கு மெட்டாதான் - முத்தன்றன்

    10 வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய
    நாமத்தைச் செய்விடமுன் னாள்யின்றோ - னேமத்தண்

    11 சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி 
    வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோ - னல்லற்

    12 சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங்
    குறுகியிருள் கூடவைத்த கோமான் - றெறுபசியால்

    13 வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது
    தந்தமடைப் பள்ளி தனைக்கொடுத்தோன் - கந்த

    14 மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து
    ளலர்கட் கமலத் தழித்தோன் - பலர்வெருவத்

    15 தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக்
    கூற்றுயி ருண்ட குரைகழலான் - சாற்றும்

    16 பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார்
    முரணவிக்குங் கொன்றையந்தார் முன்னோ - னரணவரை

    17 மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால்
    கண்வைத்துங் காணாக் கழலினா - னெண்வைத்துக்

    18 கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல்
    வண்கையிடங் கொண்டவசி வாய்ப்படையா - னெண்கவினார்

    19 தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன்
    மன்னிரத நீர்வேணி வைத்தபிரான் - றுன்னுகணை

    20 வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன்
    றாளின் விரனுதியாற் றானடர்த்தோ - னாளும்

    21 புணரு மடியார் புரிபிழையு மேனோர்
    குணமு மிகந்தகுணக் கோமான் - மணமலிபூங்

    22 காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத்
    தோவினடஞ் செய்கயிலை யோங்கலிடை - மேவிநல 

    23 மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந்
    தேவிக் குபதேசஞ் செய்தருள - மாவிற்கண்

    24 ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி
    யின்னலற நீவிற் றினிதிருக்கு - நன்னயவி

    25 சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச்
    சூடகச் செங்கைத் துணைகூப்ப - வாடமைத்தோ

    26 ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற்
    றங்கா தலியோ டமர்ந்தருளிப் - பங்காளுங்

    27 கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து
    மேதா வியர்புகழு மேன்மைபுனை - போதா;ருங்

    28 காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும்
    வாவி யிடைமருதூர் வாய்மேவ - வோவியநேர்

    தலவிசேடம்


    29. மின்னையு மாதவனும் வேதனுங் காணாத
    தன்னையு நாடிவந்த தன்னைபோற் - பன்னுபுகழ்

    30. வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ
    ரேகீ ரெனவந் திறுத்ததுபோல் - வாகார்

    31. திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும்
    விருப்புமிக நின்றேத்தும் வெள்ளிப் - பொருப்புப்

    32. பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா
    லொருமருத மாகியவ ணுற்ற - தருமையத

    33. னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித்
    தன்னிட நீங்காத் தலைவியைப்பார்த் - தின்னகையாய்

    34. மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப்
    பூவுல காக்கும் பொழில்பாராய் - தாவிமிசைப்

    35. பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப்
    பங்கமில்பொன் னாக்கும்விட பம்பாரா - யெங்குநின்மெய்க்

    36. காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி
    மாமையினன் காடு மயில்பாராய் - பூமருநஞ்

    37. சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று
    கூயமருந் தேமாங் குயில்பாராய் - மேயவிரு

    38. நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற்
    பைம்மேனி யாமாம் பழம்பாரா - யம்புலிக்

    39. கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர்
    மான்முதனீத் தாற்றிடுத வம்பாராய் - பான்மொழியே

    40. யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக்
    கொன்றுமகிழ் வாற்க ணுறைதுளிப்ப - வன்றதுமுற்

    41. காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென்
    பூணும் பெயரிலகப் பூண்டதன்மேற் - கோணிலவு

    42. சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா
    யோடி வடமேற் குதக்கெதிருங் - கூடுதடத்

    43. துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா
    னட்பாம் விதிக்கு ந்றுந்தடத்துப் - பெட்பா

    44. முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப்
    பெருத்தசிவ லோகமுற்ற பின்னர்த் - திருத்தவண்வாழ்

    45. தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய்
    வண்முனிவன் வந்துதவ மாமுனிவீர் - கண்ணொருமூன்

    46. றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை
    பற்றி முயலுமென்றப் பாற்போக - வெற்றி

    47. முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப்
    புனித தவம்புரியும் போது - நனிமகிழ்ந்து

    48. தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த
    வன்னேர் குழலு மவணடைந்து - பொன்னேர்

    49. வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன
    வளவிலா மாதவமங் காற்ற - வுளமகிழ்வுற்

    50. றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா
    ரம்மாவென் றியாரு மதிசயிப்ப - விம்மாநன்

    51. மேதினி நின்று வெளிமுகடு மூடுருவச்
    சோதியுருக் கொண்டெழுந்து தோன்றினோன் - றீதிலரு

    52. ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத்
    தானே யருச்சித்த தம்பிரான் - வானாட

    53. ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி
    யோதியருச் சிக்க வுவந்தருள்வோன் - போதியனீர்

    54. காகம் படியக் கனகவுரு நல்கிப்பி
    னேக வுருத்திரமெய் யெய்தவைத்தோன் - கோகநக

    55. மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி
    யாண்டமத வேழ மருச்சித்தோன் - பூண்டதவத்

    56. தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற
    கோதையொடு காட்சி கொடுத்தபிரான் - மேதை

    57. யொருவீர சோழ னொளிரா லயமும்
    வெருவா நகரமுஞ்செய் வித்துத் - திருவார்தைத்

    58. திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய
    வங்கட் கருணை யருளியகோ - னங்கண்மிரு

    59. கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை
    கொண்டுமிளிர் காட்சி கொடுத்தகோன் - றண்டாப்

    60. புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான்
    வரவுக் கெதிர்பார்க்கும் வள்ளல் - பரவுற்ற

    61. பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக்
    காசில்வினை யெச்ச மளித்தபரன் - காசிபன்றான்

    62. கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய
    வண்ணலது காட்டுவித்த வைம்முகத்தோன் - வண்ணக்

    63. குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி
    லமர நதியை யமைத்துத் - தமரமிகப்

    64. பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு
    கேசிக் கினிய கிளர்மதலை - வீசி

    65 யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த
    நினையுநதி யோரா நெறிக்கொண் - டினையலென

    66 வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக்
    கொன்னைக் குழமகனுங் கூடவந்து - முன்னையொரு

    67 வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர்
    மேவியெழுந் தென்ன வெளிவந்து - கூவிவரு

    68 மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச் 
    சித்த மகிழ்ந்தருளிச் செய்தபிரா - னுத்தமச்சீர்

    69 வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ்
    சாய்த்தவுடற் கண்ணனுக்குந் தானுவந்து - பூத்த

    70 மதலைபல நல்கி வழிபட்டா ரென்று
    மதலைபல நல்கிய வள்ளல் - சுதமில்

    71 புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித்
    திகழ வழிபாடு செய்ய - மகிழ்சிறந்தோன்

    72 மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை
    மெச்சும் பராசற்கு வீட்டினோ - னச்சமிலா

    73 தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந்
    தேசார் மதிவணங்கத் தீர்த்தருளு - மீச

    74 னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு
    ணனைத்தவுடன் காயவைத்த நாதன் - வினைத்திறனோ

    75 ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த
    தெய்வப் பெருமான் சிவபெருமான் - குய்யம்வைத்து

    76 வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன்
    றேந்துபழிக் கும்பழிச்ச வீறுசெய்தோன் - போந்துதழல்

    77 காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண
    வீண்டரின்முற் றும்பரவ வீடழித்தோன் - மாண்ட

    78 குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி
    மறுவி லகோரவுரு வாய்ந்தோ - னுறுசீர்

    79 நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற்
    கருதியடை யாவண்ணங் காப்போன் - சுருதி

    80 நடையார் வருண னறுநீர் படியக்
    கடையார்சோத் தீப்படியக் கண்டோ - னடையுங்

    81 கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப்
    பெருமுழுநீர் மூழ்கவைத்த பெம்மான் - வருமொருதன்

    82 றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந்
    தாழ வுயர்த்துந் தனிமுதல்வன் - வாழ்வடைவா

    83. னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச்
    சாகா வரங்கொடுத்த தண்ணளியோன் - வாகான

    84. கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக்
    கண்ணன் களித்தருளுங் காபாலி - கண்ணுவணம்

    85. பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை
    மண்ணி யருளு மகாலிங்கம் - புண்ணியமே

    86. மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம
    தேவவுருக் கொண்டெதிர்ந்த தேவர்பிரா - னோவறமுன்

    87. கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு
    வாதனைப்பா டாணவுரு மாற்றுவித்தோன் - போதலர்கல்

    88. யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித்
    தேணறத்தீண் டிக்கொள்பழிக் கீறுசெய்தோ - னீணிலஞ்சே

    89. ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி
    வந்த கலியைக்கறுத்து மண்கொடுத்தோ - னந்துமதில்

    90. வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக்
    கள்ளக் கறுப்பகலக் கண்சிவந்தோன் - றள்ளரிய

    91. சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங்
    கூர்த்தவான் கங்கை குவலயத்தி - லார்த்துவரச்

    92. செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல
    கெய்தா விருக்க வினிதளித்தோன் - வையகத்துப்

    93. பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய
    வல்லார் மெய்க்கூற்றவனுக் கஞ்சவைத்தோன் - சொல்லுமந்நீர்

    94. வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும்
    வல்லா னெனச்சொல் வலியளித்தோ - னல்லார்

    95. திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர்
    புகழுற்றா டக்கருணை பூத்தோ - னிகழ்வற்ற

    96. வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன்
    வைத்தசா பங்கழுவ வைத்தவருண் - முத்த

    97. னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே
    ரிருகோட் டதற்கிடவுள் ளேய்ந்தோ - னொருவீர

    98. சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த்
    தீனமிலா வான்கைலை யேற்றினோன் - மானமிகு

    99. சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப்
    புத்திரனை நல்கும் புகழாளன் - சுத்த

    100. மறையோன் கனகதடம் வந்து படியக்
    குறையார் குருடொழித்த கோமா - னிறையோனோய்

    101 விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து
    மண்ணுலகை யாளும் வயவேந்தன் - றண்ணளிசேர்

    வரகுணபாண்டியதேவர் வழிபாடு.

    102 மன்னன் மதுரை வயங்கு வரகுணத்
    தென்னன் பெருங்கானஞ் சென்றொருநாண் - முன்னுகடு

    103 மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர்
    தீவேட்ட வேதியனச் செல்வழியின் - மேவி

    104 மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா
    லுயங்கிக் கழிய வுணரா - னயங்கெழுசீர்

    105 பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர
    வுற்றதெவை யாலு மொழியாம - னற்றவர்சூ

    106 ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு
    ளேல விடைமருதூர்க் கேகென்னச் - சாலமகிழ்

    107 பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத்
    தீர்த்தருளிச் செய்திடவத் தென்னவனு - மாத்தலமா

    108 மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா
    ளத்த கொடுமுடி யாவரணம் - வித்தகமாய்ச்

    109 செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி
    செய்துசூழ்ந் துங்கரவு தேரொருவன் - செய்யநுதல்

    110 வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து
    நண்ணீ றிலாதபொரு ணன்களித்து - மெண்ணிநரி

    111 யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென்
    றெள்ளரிய வாடை யினிதளித்தும் - விள்ளாத்

    112 தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று
    திவண்மணிபொன் வாரிச் சிதறி - யுவகையுற்று

    113 மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான்
    றள்ளுண்ட வெச்சி றனைநுகர்ந்துங் - கொள்ளா

    114 விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண்
    டிழிகணீ ரோடுகரத் தேந்திக் - கழிவுற்

    115 றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக்
    குடியாமோ வென்றிரக்கங் கொண்டும் - படர்தளிமுற்

    116 புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து
    நன்குறவேம் பிற்குவிதா னஞ்சமைத்து - மன்புமுதிர்

    117 பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை
    மன்னு மியற்பகைக்கு மாறாக - முன்னு

    118 முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந்
    தயர்வறநீ கொள்கென் றளித்தும் - பெயர்வரிதா

    119 வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு
    மன்னுபுகழ் முத்தி வழங்கினோ - னன்னிலைமைத்

    120 தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறா;ப்புண்
    வல்லை வலஞ்சூழ மாற்றினோன் - வெல்லுமவன்

    121 மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி
    முந்தவலஞ் சூழ்முன் முருக்கினோ - னந்துவசு

    122 மான்வந்து சூழ்போது மற்றவன்ற னா;டவனைத்
    தான்வந்து சூழத் தலையளித்தோ - னீனந்தீ

    123 ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ்
    வஞ்சப் பிரமகத்தி மாய்த்தபிரான் - விஞ்சுபுகழ்ப்

    124 பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந்
    தாசற் றிரண்டுயிர்வா னண்ணவைத்தோன் - மாசற்ற

    125 நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க
    வாரம் படுகருணை வைத்தபிரான் - வார்மீ

    126 னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி
    யிணங்குலகத் தெய்தவரு ளேந்த - லுணங்கன்மீன்

    127 கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத்
    தண்டலில்பொன் னாகச் சமைத்தபிரா - னண்டர்தொழப்

    128 பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத்
    தன்னுருவி லாவுருவந் தான்றெரித்தோன் - பன்னுபொரு

    129 ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக
    ளார்தரச் செய்ய வருள்வைத்தோ - னோரு

    130 மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர்
    சுணங்கனுக்கு முத்திதந்த தூயோ - னிணங்குபொடி

    131 மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான்
    றைப்பூச மாடத் தகுமென்றோ - னெப்பேது

    132 மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக
    மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர்

    133 தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக
    வண்மாந் துறையிரவி வைப்பாக - வெண்மாறா

    134 நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக
    மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணுந்

    135 தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர்
    மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - வுன்னிற்

    136 றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக
    விடைமருதில் வீற்றிருக்கு மீச னடைதருசீ

    137 ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து
    போற்றவருள் செய்த புகழ்ப்பெருமான் - மாற்ற

    138 மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும் 
    வணங்கு மருதவன வாண - னணங்கயர்புற்

    139 றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல்
    லாலுடையான் யாவரையு மாளுடையா - னூலுடையார்

    140 நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங்
    கூடுவோன் பொன்செய் குளிர்மன்றத் - தாடுவோ

    141 னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ்
    சீராழி யங்கைமகட் சேருவா - னேராகச்

    142 சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து
    நன்மதிகொ டன்வத னத்தொகைகொ - டுன்னுதிதிப்

    143 புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக்
    கட்கொடி யேற்றிக் களிசிறப்ப - விட்குலவு

    144 குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத்
    தொன்று பலரு முடனெருங்க - வன்றுமுதற்

    145 காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும்
    வேலையினு மார்ப்ப வியன்மறுகின் - மாலைபெற

    143 வெற்பு நிகர விளங்குபல வூர்தியினும்
    பொற்பு மலிபவனி போந்தருளி - யற்புமுதி

    147 ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு
    மொன்பதா நாளென்னு மொண்டிருநாண் - மின்பயில்பூண்

    148 வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று
    மேய்ந்த துயினீத் தினிதெழா - வாய்ந்தசெழும்

    149 பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த
    வம்பொற் றிருமண் டபமணுகி - நம்புற்ற

    150 வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே
    கூறு மபிடேகங் கொண்டருளி - நாறுகுழற்

    151 பெய்வளைத்தோ ளெங்கள் பெருநல மாமுலைதன்
    மைவளையு நீல மலர்நோக்கான் - மெய்வளைத்த

    152 பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக் 
    காரழகு மேனி கலந்ததென - வீரமலி

    153 காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை
    போர்த்தி யிருந்த பொலிவென்னச் - சீர்த்திமிகு

    154 பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத்
    தென்முகத்து வண்ணமெங்குஞ் சேர்ந்ததெனத் - துன்னுபிறர்

    155 தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த
    குப்பாய மெய்ப்புனைந்து கொண்டதென - வொப்பேது

    156 மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப்
    பல்லாருங் கண்டு பசப்பெய்திப் - புல்லாளப்

    157 பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும்
    பட்டான் மறைத்த படியென்னக் - கட்டார்கொ

    158 ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர்
    பாதியுரு வுங்கவர்ந்த பான்மையெனத் - தீதின்மணம்

    159 பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி
    யெங்குநெருக் குற்றே றியவென்னத் - தங்கு

    160 மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத்
    தணவாத் திருச்சாந்து சாத்தி - நிணமலிவாய்

    161 வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும்
    வேங்கை கொடுத்தகலை வீக்கியே - யோங்குபய

    162 னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச்
    சாய்ந்து நிமிர்ந்த தனியிடத்து - வாய்ந்தபுனற்

    163 பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன்
    மைவிழிகா ணாமன் மறைத்ததெனக் - கைவல்லா

    164 ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத்
    தோற்றுகதி ரென்று சொலக்கவித்துப் - போற்றுபுக

    165 ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம
    னேற்றுமகிழ் பூத்த வியலிடத்துச் - சாற்றுபுனன்

    166 மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள்
    செங்கை புதவஞ் செறித்ததெனப் - பங்கமிலா

    167 மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற்
    றூமகர குண்டலமுந் தொட்டணியா - வேமவரை

    168 யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர்
    குன்றுபட மெல்கிக் குழையிடத்து - நன்றுதரு

    169 போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த
    வாகு வலயம் வயக்கியே - மாகவின்செய்


    170 கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற்
    றஞ்சச் சிறைவைத்த வவ்விடத்தே - விஞ்சுபுகழ்
    171 மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா
    மன்னுமணிக் கட்டு வடமணிந்து - பன்னுமுமை

    172 வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட
    மட்டினிலா விற்றரள மாலையிட்டு - முட்டரிய

    173 தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல
    மேவிய வாயிடைமேன் மேற்புனைந்து - தாவா

    174 மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல்
    லிடங்கீண் டெழுந்த விடத்தே - மடங்காக்

    175 கருவி தனக்குக் கருதுபிற வேண்டா
    விருமை மணிக்கடக மிட்டுக் - கருது

    176 மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா
    யிலகுமிடத் தாழிபல விட்டு - நலமருவு

    177 பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து
    மன்னுதர பந்தம் வயக்கியே - துன்னியொரு

    178 பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து
    சென்ற விடத்துச் சிலம்பணிந்து - நன்றவற்றுட்

    179 கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன்
    கண்ட விடத்துக் கழல்கட்டித் - தண்டாத

    180 மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய்
    மாதங்க வுத்தரிய மன்னுவித்துத் - தாதுவிரை

    181 தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட
    மோவாதாண் மேவ வுவந்தணிந்து - பூவார்கை

    182 கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி
    யுண்ட கடுங்கூற் றுறையிடத்தே - தண்டலில்பா

    183 லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே
    னாறுதிரி புண்டரநா னத்திலகம் - வீறுகொள

    184 விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய
    நட்டினது வைத்த நயமென்ன - வெட்டுணையு

    185 மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த
    தேசு மிகுவா சிகைசேர்த்துப் - பேசுபுக

    186 ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர்
    மட்டுறுதா ராரூரன் மன்னுவகை - யுட்டுளைய

    187 நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென்
    றென்மலர்வா மத்தா ளிசைத்தூட - நன்மைதிக

    188 ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ்
    செம்மை யுறவுகொண்டு சீர்படைப்ப - மும்மைப்

    189 புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப்
    பவளக்காற் கண்ணாடி பார்த்துத் - திவள்பருப்புப்

    190 பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர்
    துங்கமடை நெய்மிதக்குஞ் சொன்றியளை - தங்கயினி

    191 பாகு கருனை பகரும் வறையறுவை
    யாகு மிலட்டுகமெல் லாவியப்பம் - போகுசுவை

    192 நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ்
    சோலை யுதவு சுவைக்கனியுங் - காலை

    193 யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய
    வளநீர் கனிபிழிந்த மாநீ - ரளவா

    194 வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக் 
    குவைகொள்விரைப் பாகடையுங் கொண்டு - நவையரிய

    195 மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ
    யோதுபசா ரங்க ளுவந்தருளிக் - கோதறுசீர்

    196. வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற் 
    றோய்ந்தவடி யாருஞ் சொலவந்த - வாய்ந்த

    197 வெழுதா மறையு மெழுது மறையும்
    வழுவாது கேட்டு மகிழ்ந்து - தொழுவார்

    198 நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய
    வயங்கு மொருகோட்டு மாவுஞ் - சயங்கொள்சத

    199 கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத்
    தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும் -பாடியலா

    200 வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங்
    கேட்டை யுற்ச்சிவந்த கேடிலியு - நீட்டுமொரு

    201 கைத்தலைநால் வேதங் கமழ்வாய்த் தலையொன்று
    வைத்தலைநெய்த் தோரேற்ற வானவனு - நித்தமுந்தன்

    202 னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத்
    தாய்மனை யென்றழைக்கத் தக்கோனுந் - தூயவையை

    203 நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை
    யோரும் படியருள்கொ ளொண்மழவுந் - தீராத்துன்

    204 பாய கடலமண ராழ வரையொடலை
    மேய கடன்மிதந்த வித்தகனு - மாயவன்கண்

    205 காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின்
    மாணாகப் பூத்துழல வைத்தோனுங் - கோணாது

    206 மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை
    யாக வியற்றிய வாண்டகையும் - பாகமிலாத்

    207 தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ
    டாதையிரு தாளடைந்த சான்றவனு - மோதைகெழு

    208 கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி
    வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை

    209 யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய
    வாய்நீர் பொழியன்பு மாமுகிலும் - பாய்மை

    210 தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண
    மகவரிந் தூட்டியசீ மானு - நகமறைக

    211 ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு
    மான்றசொல்லி சைக்க வமைந்தாளுஞ் - சான்றதிரு

    212 மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது
    குங்கிலியங் கொண்டுவந்த கொள்கையனும் - வெங்கொடியோன்

    213 கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த
    னேச மறைத்தறியா நீதியனும் - வாசமுறத்

    214 தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத்
    தாய்ந்தபுகழ் மற்றை யடியாரும் - வாய்ந்த

    215 வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை
    மலர்துழாய் நாறவைத்த மானு - நிலவு

    216 முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ
    துலகறிய வுண்டுமிழ்ந் தோனு - மிலகுநடங்

    217 கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று
    கொண்டே விளங்கு குணத்தவருந் - தண்டேறல்

    218 பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச்
    செய்தவ ரென்னுமற்றைச் செய்தவருங் - கையிற்

    219 குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி
    வடவளை கட்டுண்ட மாலு - மிடவளையப்

    220 பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந்
    நாமேல்வெண் மாதுவைத்த நான்முகனு - மாமே

    221 வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி
    யிருசுவர்க்கம் வைகு மிறையும் - பொருவரிய

    222 வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த
    கற்பக மாலைக் கடவுளரும் - பொற்பகலாத்

    223 தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு
    வேந்தா மதுகுவிக்குவ் வெண்கதிருங் - காந்தாப்

    224 பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி
    யொலிபடைத்த பூதகணத் தோரு - மலியுமிசை

    225 பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ்
    சித்த ருரகர்முதற் செம்மையரு - முத்தமமீ

    226 தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற்
    றுண்போர் பலரு ளுயர்ந்தோனும் - பண்போ

    227 ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும்
    மணிக்கோவை சூட்டியகோ மானும் - பிணிக்கோதி

    228 லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற்
    கேதிலரா காதியற்று மெல்லோரு - நீதிநெறித்

    229 தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின்
    மிக்க திருக்கூட்ட மேன்மையரு - மொக்கவரப்

    230 பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா
    னண்பார்சந் தான நனிதழைக்க - விண்பார்

    231 புகழ வருங்குரவர் போரேறு ஞானந்
    திகழவரு மானந்தச் செல்வ - னிகழ்வி

    232 றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக்
    குறவுபூண் டெவ்வுயிரு முண்மை - பெறவுவக்கு
    233 ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு
    சான முடையார் தனித்துணைவன் - மானத்

    234 திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை
    மருவா வருநமச்சி வாயன் - பொருவா

    235 வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப்
    பிரமணிய தேசிகனெம் பெம்மான் - பரவுமுண்மை

    236 தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென
    வோங்குதிருக் கூட்டத் துடன்மேவ - வீங்குசெம்பொற்

    237 றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற்
    றூரும் பிறவுமுவந் தூர்தருபல் - லோருள்ளு

    238 முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப்
    பின்னூர்வோ ரம்முறையே பெற்றூரப் - பொன்னூரு

    239 மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத்
    தன்பணியி னந்தி தலைநிற்பக் - கொன்பரவு

    240 வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு
    மூரி விடைக்கொடி முன்போத - வேரிவரு

    241 மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன்
    ஞாலவட்டஞ் சொல்பலவு நண்ணிமொய்ப்பக் - கோல

    242 முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன
    வெழுவெண் குடைமே லிலகப் - பழுதில்

    243 பதலை முழவம் படகந் திமிலை
    முதல முகிலின் முழங்க - நுதலினொளிர்

    244 கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம்
    பெண்ணுடையான் வந்தான் பிரான்வந்தா - னெண்ணினருக்

    245 காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான்
    றாய்தந்தை யில்லா தவன்வந்தான் - பாய்தந்த

    246 நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை
    வல்லா ரணிமருத வாணன்வந்தான் - புல்லார்

    247 நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான்
    வயந்தழைவெங் கூற்றுதைத்தான் வந்தா - னயர்ந்தயன்மால்

    248 சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம்
    மூவா முழுமுதன் மூர்த்திவந்தான் - றாவாத

    249 பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று
    சின்னம் பலவுமெதிர் சேவிப்ப - வன்னமணி

    250 யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு
    மேத்திமறை வாழ்த்த வினிதெழுந்து - தாத்திரிநின்

    251 றம்பொன்முடி யண்ட மளாவவெழு கோபுரநற்
    பைம்பொன்மணி வாய்தல் பலகடந்து - செம்பொன்மலர்

    252 தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி
    னேற்ற வழியே யெழுந்தருளித் - தோற்றத்

    253 தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி
    னிலங்கு திருத்தேர்மே லேறி - நலங்கொளரி

    254 யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண்
    டாதரத்து மேவவந்த வன்னமெனச் - சீதநிழல்

    255 வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த
    கேழ்கிளர்செந் தார்ப்பசுங் கிள்ளையெனத் - தாழ்சடைமேன்

    256 மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த
    மன்னு கலாப மயிலென்னப் - பொன்னிறங்கைத்

    257 தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த
    கூய்க்குலவு தேமாங் குயிலென்னச் - சேய்க்குமுன

    258 மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த
    வாவு மிளமட மானென்னத் - தாவாத

    259 வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக்
    கொண்டருகு வந்த கொடியென்ன - மண்டு

    260 சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா
    யிடையடைய வந்தமின லென்ன - வுடையதன

Related Content

Madurai Chokkanathar Ulaa in English

ஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )

குலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)

திருவெங்கையுலா

பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா