logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Pantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய 
பண்டார மும்மணிக்கோவை


 


Acknowledgements: 
Etext preparation: Mr. S.A. Ramchandar, Bombay, India; 
Proof-reading: Mr. S.A. Ramchandar and Dr.K.S.V. Nambi, Tirunelveli, India 
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland 

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following: 
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer 
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). 

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view. 

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of 
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
https://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. 


பண்டார மும்மணிக்கோவை


நேரிசை வெண்பா 
எண்டிசைக்குஞ் சூளா மணிமாசி லாமணிசீர்
கொண்டிசைக்கு மும்மணிக் கோவைக்குக்-கண்டிகைபொற்
பைந்நாகத் தானனத்தான் பாற்கடலான் போற்றவருள்
கைந்நாகத் தானனத்தான் காப்பு.
1

நேரிசை யாசிரியப்பா 
பூமலி சததளப் பொன்னந் தாதுகு
காமர்பீ டிகையிற் கருணையோடு பொலிந்து
வீற்றுவீற் றமைந்த விரிதலைப் புவனம்
பாற்பட வகுத்த பழமறைக் கிழவனும்
மதுக்குட முடைந்தாங் கிதழ்க்கடை திறந்து .....(5) 
பிரசமூற் றிருந்து முருகுகொப் புளிப்ப
வண்டுழு துழக்குந் தண்டுழா யலங்கற்
புரவுபூண் டகிலம் பொதுக்கடிந் தளிக்கும்
கருணைபூத் தலர்ந்த கமலக் கண்ணனும்
அஞ்சிறைச் சுதைநிறச் செஞ்சூட் டன்னமும் .....(10) 
செம்மயிர்க் கருங்கண் வெள்ளெயிற் றேனமும்
ஆகுபு தனித்தனி யலமர நிவந்த
மீகெழு பரஞ்சுடர் வௌிப்பட் டம்ம
எம்மனோர் போல வினிதெழுந் தருளிக்
கைம்மா றற்ற கணக்கில்பே ரின்ப .....(15) 
மோனவாழ் வளிக்கு ஞான தேசிகன்
விரிகதிர் பரப்பு மரகதத் தகட்டிற்
சுடர்செய் செம்மணி யிடையிடை பதித்தெனப்
பாசடைப் பரப்பிற் பதும ராசிகள்
சேயிதழ் விரிக்குஞ் செழுமல ரோடையும் .....(20) 
அண்டகோ ளகையு மெண்டிசா முகமும்
கோட்டுடைத் தடக்கை நீட்டியளந் தென்னச்
சேட்பட நிவந்த செண்பகா டவியும்
கால்கிளர் விசும்பிற் கற்பகா டவிக்கு
வேலியிட் டன்ன வியன்மணிப் புரிசையும் .....(25) 
மருங்குசூழ் கிடந்த வண்டமிழ்க் கமலைப்
பெரும்பதி புரக்கும் பேரருட் குரிசில்
நான்மறை நவின்ற நற்பொரு ளிவையென
மோனவா சகத்தான் முப்பொரு ணவிற்றுபு
நன்னலம் புரியு ஞானப் பிரகாசன் .....(30) 
இன்னருள் பழுத்த செந்நெறிச் செல்வன்
திருக்கிளர் ஞானத் திருந்திழைக் கணியாம்
அருட்பெருஞ் சைவத் தருங்கல னாப்பண்
ஆசற விளங்கு மாசி லாமணி
அமண்மா சறுத்த கவுணியர் பெருந்தகை .....(35) 
பிள்ளைமை விடுத்த தள்ளரும் பருவத்
துள்ளதன் படிவ முணர்த்துவ கடுப்ப
மாநிலத் தமர்ந்த ஞானசம் பந்தன்
பொன்னடிக் கமலஞ் சென்னிவைத் திறைஞ்சுதும்
இருகால் சுமந்த வொருபெருஞ் சேவகத் .....(40) 
தைம்புலக் களிறுந் தம்புலத் திழுப்ப
ஊனிடைப் பிறவிக் கானகத் துழலா
தேனைய முத்திநா டெய்தவோர்
ஞான வாரண நல்குதி யெனவே.
2

நேரிசை வெண்பா 
என்வடிவ நின்வடிவாக் கொண்டா யௌியேற்குன்
றன்வடிவ நல்கத் தகுங்கண்டாய் - மன்வடிவால்
வெம்பந்த நீக்கும் விமலநீ மெய்ஞ்ஞான
சம்பந்த னென்பதனாற் றான்.
3

கட்டளைக் கலித்துறை 
தானின் றெனைத்தனக் குள்ளே யொளிக்குமென் றன்மைநிற்க
யானின்ற போதெனக் குள்ளே யொளித்திடு மிப்பரிசே
வானின்ற சின்மய மாமாசி லாமணி மன்னுந்தன்மை
நானின்று கண்டனன் காணே னிதற்கொத்த நன்மணியே.
4

நேரிசை யாசிரியப்பா 
மணிவடஞ் சுமந்த புணர்முலைக் கொதுங்கி
ஈயா மாக்க டீமொழி கவர்ந்த
சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்
கரைகொன் றிரங்குந் திரைசெய்நீர்ப் பட்டத்து
மைவிழி சேப்பச் செவ்வாய் விளர்ப்பக் .....(5) 
கருங்குழல் சரிய வெள்வளை கலிப்பச்
சீராட் டயரு நீராட் டயர்ந்து
புலவியிற் றீர்ந்து கலவியிற் றிளைக்கும்
நீரர மகளிர் பேரெழில் காட்ட
மருதம்வீற் றிருந்து பெருவளஞ் சுரக்கும் .....(10) 
தருமையம் பதிவாழ் சற்குரு ராய
ஒள்ளொளி பரப்பும் வெள்ளிவே தண்டத்
தொருபாற் பொலிந்த மரகதங் கவினச்
சுடர்விடு செங்கதிர்க் கடவுண்மா மணிக்கு
விளங்கெழின் மிடற்றோர் களங்கமுண் டென்பவக் .....(15) 
காசுலா மலினங் கரந்தகா ரணத்தால்
மாசிலா மணியென வண்பெயர் நிறீஇ
மேன்மையோ டமர்ந்த ஞானசம் பந்த
ஈண்டுனைத் தமியனேன் வேண்டுவ தியாதெனின்
அந்நிய மென்று மநநிய மென்றும் .....(20) 
இந்நிலை யிரண்டு மெய்திற் றென்றும்
பல்வே றுரைக்குநர் சொல்வழிப் படாது
திவ்வியம் பழுத்த சைவசித் தாந்தத்
திறவா நிலைமைபெற் றின்பமார்ந் திருக்கும்
பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே .....(25) 
அங்கது புரிதற் கரிதெனி னிங்கொரு
சனனமியான் வேண்டுவ தினிதரு ளெனக்கே, அதுவே
ஐந்தரு நிழற்கீ ழரசுவீற் றிருக்கும்
இந்திர னாகிவாழ்ந் திருப்பதோ வன்றே
மலரோ னாகி மன்னுயிர்த் தொகுதி .....(30) 
பலர்புகழ்ந் திசைப்பப் படைப்பதோ வன்றே
அடலரா வணையி லறிதுயி லமர்ந்த
கடவுளா யுலகங் காப்பதோ வன்றே, அவைதாம்
ஆரா வின்பமென் றரும்பெயர் பெறினும்
வாரா வல்வினை வருவிக் கும்மே .....(35) 
அன்னவை யொழியமற் றென்னைகொல் பிறவெனின்
விழுத்தகு கல்வியு மொழுக்கமு மிலராய்ப்
பழிப்பபள ராயினு மாக வழுத்துநின்
பொன்னடித் துணைசேர் நின்னடித் தொண்டர்
திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த .....(40) 
பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்
வரனுடை ஞமலி யாகிநின்
அருளையு மயரா தவதரிப் பதுவே.
5

நேரிசை வெண்பா 
அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற்
பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார்
ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக்
கதியருளத் தானே கடன்.
6

கட்டளைக் கலித்துறை 
கடல்பெற்ற தோர்மணி சிந்தித்த

நல்குங் கருத்துக்கெட்டா
மிடல்பெற்ற பேரின்ப நல்கிய

வாவருள் வேலைபெற்றென்
உடல்பெற்ற கண்மணிக் குண்மணி

யாகியொண் கூடல்வைகும்
அடல்பெற்ற ஞானச் சுடர்மாசி

லாமணி யானதொன்றே.

7

நிலைமண்டில வாசிரியப்பா 
ஒன்றே தன்மை யுனக்குமற் றெமக்கும்
அன்றென மொழியினு மாமெனப் படுமே
அங்ஙனங் கூறிய தெங்ஙனம் பிறவெனின்
எஞ்ஞான் றுளையுள மஞ்ஞான் றியாமே
அழியா நிலைமையை யனையம் யாமே .....(5) 
வியாபக நினக்குள தியாமுமஃ துளமே
அறிவெனப் பெயரிய பெயரினை யப்பெயர்
பிறிவரும் பெயராப் பெற்றனம் யாமே
இச்சா ஞானக் கிரியையென் றிசைக்கும்
சத்திக ளுளையுள தத்திற மெமக்கே .....(10) 
இந்நிலை முழுவதூஉ மெமக்குமுண் டாகலின்
அந்நிய மலநினக் கநநிய மியாமே
தருமையுங் கமலையும் விரிதமிழ்க் கூடலும்
திருநக ராக வரசுவீற் றிருக்கும்
மாசி லாமணித் தேசிக ராய .....(1) 5
சம்பந் தப்பெயர் தரித்தமை யாலெமைச்
சம்பந் தஞ்செயத் தகுந்தகு நினக்கே
கருவிகட் கிறைமை காட்டுபு நிற்றலிற்
புருட நாமம் புனைந்தன மாயினும்
அத்தநிற் குறிப்பிற் சத்திகள் யாமே .....(20) 
புருடனைச் சத்தியிற் புணர்த்தனை யன்னதற்
கொருகாட் டென்ப புருடோத் தமனே
உன்னுட னெம்மையு மொப்பெனப் படுத்து
முன்னர்க் கூறிய முறைமையிற் சிற்சில
முழுவது மொவ்வா தொழியினு மொழிக .....(25) 
உயர்ந்தோன் றலைவ னொத்தோட் புணரினும்
இழிந்தோட் புணரினும் மிழிபெனப் படாதே
ஆதலின் யாமுனைக் காதலித் தனமாற்
காதலி னெமையருட் கைப்பிடித் தருளி
ஒருவரு முணராப் பரம வீட்டில் .....(30) 
இருளறை திறந்த பெருவௌி மண்டபத்
துயர்நா தாந்தத் திருமல ரமளியிற்
புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற
உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க
ஞானவா ரமுத பானம தார்ந்து .....(35) 
கருவிகள் கழன்று பரவச மாகிப்
பரமா னந்தப் பரவையுட் படிந்து
பேரா வியற்கை பெற்றினி திருப்ப
ஆரா வின்ப மளித்தரு ளெமக்கே.
8

நேரிசை வெண்பா 
எம்மா ருயிரா மெழின்மாசி லாமணியை
அம்மா பெறுதற் கரிதன்றோ - சும்மா
இருந்தாரே பெற்றார்மற் றெவ்வுலகில் யாரே
வருந்தாது பெற்றார் மணி.
9

கட்டளைக்கலித்துறை 
மணிகொண் டவர்தம் பொருளாவ

தன்றியம் மாமணியாம்
அணிகொண் டவரைக்கொண் டாள்வதுண்

டேயருட் கூடல்வைகும்
கணிகொண்ட கொன்றைத் தொடைமாசி

லாமணி கண்டவுடன்
பணிகொண்டு தொண்டுங்கொண் டாளுங்கொள்

வோமென்று பார்க்குமுன்னே.

10

நிலைமண்டில வாசிரியப்பா 
முற்படு மாயை முதற்கரை நாட்டிற்
பற்பல புவனப் பகுதி பற்றி
ஈரிரு கண்ணாற் றெழுதரம் வகுத்த
ஆறே ழிரட்டி நூறா யிரத்த
செயற்படு செய்களி னுயிர்ப்பயி ரேற்றி .....(5) 
ஊழெனப் பட்ட தாழ்புனற் படுகரிற்
றெய்விக முதலாச் செப்புமும் மதகும்
ஒவ்வொரு மதகா யுடனுடன் றிறந்து
தாக மென்னுந் தனிப்பெருங் காலிற்
போக மென்னும் புதுப்புனல் கொணர்ந்து .....(10) 
பாயுமைம் பொறியாம் வாய்மடை திறந்து
பருவம் பார்த்து வரன்முறை தேக்கலும்
இதத்துட னகித மெனுமிரண் டூற்றிற்
புதுபுனல் பெருகிப் புரம்பலைத் தோட
வார்புன லதனை மந்திர முதலா .....(15) 
ஓரறு வகைப்படு மேரிக ணிரப்பி
விளைவன விளைய விளைந்தன வறுத்தாங்
கொருகளஞ் செய்யு முழவ னாகி
மாநிலம் புரக்கு மாசி லாமணி
ஞானசம் பந்த ஞான தேசிக .....(20) 
நல்லருட் டிறத்தா னம்பி நீயே
பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண் டுய்கெனக்
குடிலை யென்னுந் தடவய னாப்பண்
அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
வேத மென்னும் பாதவம் வளர்த்தனை .....(25) 
பாதவ மதனிற் படுபயன் பலவே, அவற்றுள்
இலைகொண் டுவந்தனர் பலரே யிலையொரீஇத்
தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரொரீஇ
அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை
விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே .....(30) 
அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப
ஓரும்வே தாந்தமென றுச்சியிற் பழுத்த
ஆரா வின்ப வருங்கனி பிழிந்து
சாரங் கொண்ட சைவசித் தாந்தத்
தேனமு தருந்தினர் சிலரே யானவர் .....(35) 
நன்னிலை பெறுதற் கன்னிய னாயினும்
அன்னவர் கமலப் பொன்னடி விளக்கியத்
தீம்புன லமுத மார்ந்தன னதனால்
வேம்பெனக் கொண்டனன் விண்ணவ ரமுதே.
11

நேரிசை வெண்பா 
விண்புரக்குஞ் சிந்தா மணியென்கோ மெய்ச்சுடரால்
மண்புரக்குஞ் சூளா மணியென்கோ - பண்பார்
திருமா முனிவர் சிகாமணியென் கோசீர்
தருமாசி லாமணியைத் தான்.
12

கட்டளைக் கலித்துறை 
தானவ னாகிய தன்மைபெற் றானடி தாழப்பெற்றால்
தானவ னாகிய தன்மைபெற் றுய்வனத் தன்மையின்றித்
தானவ னாகிய தன்மைபெற் றேற்கரு டாழ்சடிலத்
தானவ னாகம் பெறாமாசி லாமணிச் சம்பந்தனே.
13

நேரிசை யாசிரியப்பா 
பந்தனை தவிராச் சிந்தனை நிகர்ப்பப்
பாயிருள் பரந்த மாயிரும் பொழிலிற்
கொளற்குரி மாந்தர்க் களித்தல் செய்யா
தரும்பூண் சுமந்த வறிவி லாளரிற்
சுரும்பூண் வெறுத்த துதைமலர் வேங்கை .....(5) 
தன்மருங் குறீஇப் பொன்மலர் பிலிற்ற
இலையறப் பூத்த சுதைமலர்ப் புன்னையின்
மெய்ப்புல னோக்கார் கட்புலன் கடுப்ப
இமையா வறுங்கண் ணிமைத்தபைங் கூந்தற்
பசுந்தார் மஞ்ஞை யசைந்தமர் தோற்றம் .....(10) 
பொற்றுணர் பொதுளிய கற்பகப் பொதும்பர்
பொறிவண் டுண்ணா நறுமலர் தூற்றப்
பாடல் சான்ற கோடுபல தாங்கிக்
கவளங் கொள்ளாத் தவளமால் களிற்றிற்
கண்பல படைத்த கார்முகில் வண்ணத் .....(15) 
திந்திரன் பொலியு மெழினலங் காட்டும்
தண்பணை யுடுத்த தமிழ்ப்பெருங் கூடல்
வண்பதி புரக்கு மாசி லாமணி
தலைப்படு கலைமதி தாங்கா தாங்கத்
தலைப்படு கலைமதி தாங்கி நிலைப்படு .....(20) 
மானிட னாய வடிவுகொண் டருளாது
மானிட னாய வடிவுகொண் டருளி
எற்பணி பூணா தெற்பணி பூண்டு
பாரிடஞ் சூழாது பாரிடஞ் சூழ்தர
ஆரு ரமர்ந்த ஞான்சம் பந்த .....(25) 
நிற்புகழ்ந் திறைஞ்சுங் கற்பின் மாக்கள்
விருப்பு வெறுப்பற் றிருப்ப ரென்ப
பொருட்டுணி புணர்ந்த புலமை யோரே
இகபர மிரண்டினு மெதிர்நிறை கொளினும்
தொகுதியுள் வேற்றுமைத் தொகைப்பொருள் கொளினும் .....(30) 
முன்னவர் மொழிந்ததற் கன்னிய மாகலின்
விருப்பு வெறுப்புள வாய
கருத்தின ராகவுங் கண்டனம் யாமே.
14

நேரிசை வெண்பா 
கண்ணிற் கணியாங் கதிர்மாசி லாமணியைப்
பண்ணிற் கணியாப் பகர்வரால் - எண்ணுங்காற்
பன்னூலிற் கோக்கப் படுமணியன் றிம்மணிமற்
றிந்நூலிற் கோக்குமணி யென்று.
15

கட்டளைக் கலித்துறை 
எனவச மாகநில் லாதநெஞ்

சாமிரும் பைக்குழைத்துத்
தன்வச மாக்கொண் டிழுக்கின்ற

தாற்றொண்டர் தம்மையருள்
மன்வச மாகச் செயுமாசி

லாமணி மாமணிக்குப்
பொன்வச மாகச்செய் காந்தமென்

றேசொல்லப் போந்ததுவே.

16

நேரிசை யாசிரியப்பா 
போந்தையங் கண்ணி வேந்துவிற் பொறித்த
மன்பெருங் கிரியின் மென்கரும் பெழுதித்
தேசுலாம் பசும்பொற் சிகரமந் தரத்தின்
வாசுகி பிணித்தென மணிக்கச் சிறுக்கிக்
கடாம்பொழி கரடக் களிநல் லியானை .....(5) 
படாம்புனைந் தென்னப் பைந்துகில் போர்த்துப்
பிதிர்சுணங் கலர்ந்த கதிர்முலை மடந்தையர்
விட்புலத் தவர்க்குங் கட்புலன் கதுவாச்
சூளிகை வகுத்த மாளிகை வைப்பிற்
சுவல்கைத் தாங்குபு மதியணந்து பார்க்கச் .....(10) 
சேணிகந் தோங்கும் யாணர்செய் குன்றத்
தாடகத் தியன்ற சூடகக் கரத்தால்
மாடகத் திவவியாழ் மருமமீ தணைத்து
மூவகை நிலையத் தேழுசுர நிறீஇக்
கொவ்வைவாய் திறந்து குயிலென மிழற்றுபு .....(15) 
மென்னரம் புகிரான் விரன்முறை தடவிக்
கின்னரம் வியக்குங் கீதம் பாட
நகைநில வெறிக்கு முகமதி காணூஉச்
சந்திர காந்தத்திற் சமைத்தசெய் குன்றம்
மைந்தர்போன் றுருகி மழைக்கணீர் சொரியப் .....(20) 
பல்வளஞ் சுரக்கும் பைந்தமிழ்க் கமலை
நல்வளம் பதிவாழ் ஞானசம் பந்த
பாசமா மிருட்கோர் படர்மணி விளக்கெனும்
மாசி லாமணித் தேசிக ராய
சாற்றுவன் கேண்மதி மாற்றமொன் றுளதே .....(25) 
மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் வார
மொழிதடு மாற வுழுவலன் பலைப்பச்
சத்திநி பாதத் தன்மைவந் தடைந்தோர்க்
கப்பொருள் புரிதற் கதுபொழு தாகலின்
மெய்ப்பொரு ளுணரத்துதல் வியப்பெனப் படாதே .....(30) 
சொற்றமிழ் விரகன் றுணைக்கண் சாத்த
முற்றுணர் கேள்வியர் பற்பல ராயினும்
கைசொலக் கேட்குங் கட்செவி மூங்கைக்
குய்வகை புணர்த்த தொருவியப் பாகலின்
அன்னது கடுப்பநின் சந்நிதி விசேடத் .....(35) 
தின்னருள் பெறாதவர் யாவரு மிலரென
வியப்புள தாக நயப்பதொன் றுளதே
அனையதீங் கென்னென வினவுதி யாலெனிற்
கதலித் தண்டிற் பொதிதழற் கொளீஇப்
பற்றா திருப்பினும் பைப்பைய மூட்டுபு .....(40) 
மற்றொரு சூழ்ச்சியிற் பற்றுவித் தாலென
ஒருசிறி தெனினும் பருவமின் றாயினும்
பவவிரு டுரந்தருள் பதியத்
தவமில் பேதையேன் றனக்கருள் வதுவே.
17

நேரிசை வெண்பா 
தன்னேரி லாஞான சம்பந்தன் றாளடைந்தார்க்
கென்னே யிருள்வௌியா மென்பரால் - அன்னோன்
அருளாத போதுவௌி யாயிருந்த வெல்லாம்
இருளா யிருந்த வெனக்கு.
18

கட்டளைக்கலித்துறை 
என்செய லாலொன்றும் யான்செய்வ

தில்லை யெனக்கவமே
புன்செய லாம்வினைப் போகமுண்

டாவதென் போதமில்லேன்
தன்செய லாயவெல் லாமாசி

லாமணிச் சம்பந்தநின்
நன்செய லாயினு மென்செய

லாச்செய்யு நானென்பதே.

19

நேரிசையாசிரியப்பா 
நான்மறைக் கிழவ நற்றவ முதல்வ
நூன்முறை பயின்ற நுண்மைசா லறிஞ
சொற்சுவை பழுத்த தொகைத்தமிழ்க் கவிஞ
கற்றவர் வியக்குங் காவியப் புலவ
செவிதொறுஞ் செவிதொறுந் தெள்ளமு தூட்டுபு .....(5) 
கவிஞர்வயி னிரப்புங் கல்விப் பிரசங்க
வெள்ளிடைத் தோன்றா துள்ளத் துணர்த்தவும்
சேய்நிலை நின்று திருக்கண் சாத்தவும்
சாயா மும்மலச் சகலரே முய்ய
எம்முருக் கொண்டு மெம்மொடு பயின்றும் .....(10) 
மும்மலக் கிழங்கை முதலொடு மகழ்ந்து
சிற்பர முணர்த்துஞ் சற்குரு ராய
பளிங்கினிற் குயின்ற பனிநிலா முற்றத்து
விளங்கிழை மடந்தையர் விளையாட் டயர்தரக்
கொங்குவார் குழலுங் குவளைவாள் விழியும் .....(15) 
பங்கய முகமும் பத்திபாய்ந் தொளிர்தலிற்
சைவலம் படர்ந்து தடங்கய லுகளும்
செய்யபூங் கமலச் செழுமல ரோடையென்
றாடவர் சிற்சிலர் நாடினர் காணூஉ
வம்மின் வம்மின் மடந்தையர் நீவிர்மற் .....(20) 
றம்மெ லோதி யரம்பைய ராதலின்
நீர்நிலை நிற்றிரா னீரவர் தங்களுள்
யார்கொல் யார்கொ லிசைமி னிசைமினென்
றிறும்பூ தெய்தி யிரந்தன ரிசைப்ப
மறுமொழி கொடாது குறுநகை முகிழ்த்தாங் .....(25) 
கையுற வகற்று மணிமதிட் கமலை
நன்னகர் புரக்கு ஞான தேசிக
ஆசிலா வண்புக ழணிநிலா வெறிக்கும்
மாசி லாமணி ஞானசம் பந்த
என்பொருட் டாயினு மின்பொருட் டன்றிது .....(30) 
நின்பொருட் டொருபொரு ணிகழ்த்துவன் கேண்மோ
வறிஞ னோம்பிய செறுவொன் றேய்ப்பப்
பருவ நோக்காப் பவந்தொறும் பவந்தொறும்
இருவினைப் போகமு மெற்கொண் டார்த்துபு
மற்றென் னுருக்கொடு முற்றனை யாலினித் .....(35) 
தாகமின் றாகலிற் பாகமின் றெனக்கென
அருளா தொழியினும் பரிபவ நினக்கே
சேய்முகம் பாராள் சினந்தன ளேகினும்
போயெடுத் தாற்றுமத் தாய்மீட் டன்றே
ஆதலி னெனைப்போ லடிக்கடி தோன்றலை .....(40) 
ஈதியா லின்னரு ளின்னண மெனக்கே
சமையந் தீர்ந்த தனிப்பொரு டெரித்தற்
கமையந் தேர்கலை யருளுதி யாயினும்
எண்ணீ ராண்டைக் கிலக்கமிட் டிருந்த
அண்ணலங் குமரற் காருயிர் தோற்ற
கடாவிடை யூர்திபாற் கண்டும்
அடாதென மொழிகுந ரார்கொன்மற் றுனையே.
20

நேரிசை வெண்பா 
ஆரூரே யூர்பே ரருண்மாசி லாமணியென்
றோரூர்பே ரில்லாற் குரைத்தேற்குப் - பாரேறப்
பொய்யென்றான் மெய்யென்றான் பொய்யான பொய்யுடலை
மெய்யென்றான் பொய்யென்றான் மீண்டு.
21

கட்டளைக் கலித்துறை 
மீளா மணிமந் திரமருந்

தாற்சென்ம வெவ்விடநோய்
வாளா மணியொன்றி னான்மீண்ட

வாவம் மணிபிறர்கொண்
டாளா மணியெமை யாட்கொள்சிந்

தாமணி யைந்தவித்தோர்
சூளா மணிமெய்ச் சுடர்மாசி

லாமணி சூழ்ந்திடினே.

22

நேரிசை யாசிரியப்பா 
சூழ்போய் நிவந்த வாழ்கட லுலகத்
தின்னருட் டிறத்தா லிடைமரு தமர்ந்த
பொன்னவிர் கடுக்கைப் புரிசடைப் புங்கவன்
அமையாக் காத லிமையவல் லிக்கு
வழிபடன் முறைமை விழுமிதி னுணர்த்தத் .....(5) 
தானே தன்னைப் பூசனை புரிந்தென
அருத்தியோ டெம்மைநம் முருத்திர கணங்கள்
தெரித்துமற் றிவ்வா றருச்சனை புரிதிரென்
றங்கையற் கண்ணி பங்கில்வீற் றிருந்த
செக்கர் வார்சடைச் சொக்கநா யகனை .....(10) 
ஈரெண் டிறத்துப சாரமும் வாய்ப்பப்
பூசனை புரியுந் தேசிக ராய
மழைக்குலந் தழைப்பத் தழைத்ததீம் பலவின்
வேரிடைப் பழுத்துப் பாரினுட் கிடந்த
முட்புறக் கனிகள் விட்புறக் காண்டலும் .....(15) 
சிறுகண் மந்தி குறிவழிச் சென்று
கீண்டுபொற் சுளைபல தோண்டுவ தம்ம
முற்பக லொருவர் பொற்குட நிரம்பப்
புதைத்தனர் வைத்த நிதிக்குழா மனைத்தும்
வஞ்சகம் பழகு மஞ்சனக் கள்வர் .....(20) 
கண்டுகண் டெடுக்குங் காட்சித் தன்ன
தண்டலை வளைஇத் தடமதி லுடுத்த
தேசுலாங் கமலைத் திருநகர் புரக்கும்
மாசி லாமணி ஞானசம் பந்த
வாக்கு மனனும் யாக்கையு மொன்றாச் .....(25) 
சொற்றரு கரண மற்றிவை மூன்றும்
நின்புகழ் நவிற்றியு நினைத்துநின் றுணைத்தாள்
அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்
அவகர ணங்களே யல்லமற் றம்ம
சிவகர ணங்களாய்ந் திரிந்தன வன்றே, அதனாற் .....(30) 
றிரிகர ணங்களெள் றுரைசெயு மப்பெயர்
ஒருபொருட் கிளவியெல் லோர்க்கும்
இருபொருட் கிளவியா யிருந்ததின் றெனக்கே.
23

நேரிசை வெண்பா 
எற்கமலஞ் செய்யு மெழின்மாசி லாமணிதன்
பொற்கமலஞ் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை
ஊரிற் குறுகினே னோர்மாத் திரையளவென்
பேரிற் குறுகினேன் பின்.
24

கட்டளைக் கலித்துறை 
பின்னம் படைத்த சமய விரோதப் பிணக்கறுத்தோர்
சின்னம் படைத்த முனிமாசி லாமணிச் சித்தரியாம்
இன்னம் படைத்தவ ரேது பெறாரமு திங்கெமக்கென்
றன்னம் படைத்தவர் பெற்றார் புவன மடங்கலுமே.
25

நேரிசை யாசிரியப்பா 
அடங்கா வைம்புல னடங்கினர்க் கம்ம
ஒடுங்கா வைம்புல னுளத்தினு முளவே, அவைதாம்
செவிப்புல னறியா வகத்தொலி யொன்றே
மெய்ப்புல னறியாத் தட்பமற் றொன்றே
கட்புல னறியாக் கதிரொளி யொன்றே .....(5) 
நாச்சுவை யறியா நறுஞ்சுவை யொன்றே
மூக்குயிர்த் தறியா முருகுமற் றொன்றே
பேரா வின்பமிப் பெற்றியிற் றிளைக்கும்
ஆரா வின்பமொன் றார்ந்தனம் யாமே, அதுவே
கரையெறிந் தார்க்கும் பொருபுனற் படுகரிற் .....(10) 
பணிலமீன் றளித்த மணிநிலாப் போர்ப்பத்
தருணவெள் ளெகினந் தன்னகத் தடங்க
அருண முண்டக மகவிதழ் முகிழ்ப்பது
தெண்டிரை யுடுத்த தீம்புனன் மடந்தை
வெண்டுகிற் படாஅம் விரித்தனள் போர்த்து .....(15) 
வள்ளவாய்க் கமல மலர்க்கையால் வளைத்துப்
பிள்ளைவெள் ளெகினம் பிடிப்பது கடுக்கும்
காசுலாம் பசும்பொற் கடிமதிற் கமலை
மாசி லாமணி ஞானசம் பந்தனென்
றருந்தவர் துதிப்பவோர் பெரும்பெயர் நிறீஇப் .....(20) 
பரமா னந்தப் பரவையுட் டோன்றிய
இன்பவா ரமுதமவ் வமுதம்
அன்பருக் கௌிதௌி தரிதுவிண் ணவர்க்கே.
26

நேரிசை வெண்பா 
விண்மணியாய்க் காண்போர் விழிக்குட் பொலிந்துணைக்
கண்மணியாய் நின்றெவையுங் காட்டுமால் - ஒண்மணிச்சூட்
டம்மா சுணந்த னணிமுடிமேற் கொண்டிருந்த
இம்மாசி லாமணிமற் றின்று.
27

கட்டளைக் கலித்துறை 
இன்றோர் வியப்புள தான்மாசி லாமணி யென்றிருப்ப
தொன்றோர் மணிகண் டவர்பல ராலதற் கோர்மருங்காய்
நின்றோர் பலபல பேதங்க ளாச்சொல்வர் நீக்கமறச்
சென்றோர்மற் றிம்மணி செம்மணி யேயென்று செப்புவரே.
28

நேரிசை யாசிரியப்பா 
ஏழுயர் மும்மதச் சூழிமால் யானை
தடம்புனல் குடைந்து படிந்தெழுந் துழக்கத்
தெண்டிரை சுருட்டுங் குண்டகழ் வாவியிற்
பங்கயத் தவிசிற் பசும்பொற் றாதளைந்
தங்கம் வேறுபட் டரசனம் பொலிதலும் .....(5) 
ஆவலிற் படர்ந்த சேவல்கண் டயிர்த்துநம்
பேடையன் றிதுமல ரோடையு மன்றே
படரும்வெண் டாமரை படர்ந்ததை யன்றிது
கடவுள ரமுதங் கடைந்தபாற் கடலே
காந்துவெங் கனற்கட் களிறுமன் றிதுகடற் .....(10) 
சாய்ந்தெழு மந்தரத் தடங்கிரி யதுவே.
போகுவா லுறுப்பும் புழைக்கையுந் தைவரு
பாகரோ வாசுகி பற்றும்வா னவரே
பொங்கிவெண் ணிலவு பொழிந்தவெண் டரளமன்
றிங்கிது வங்கதி லெழுந்தவா ரமுதே .....(15) 
கொடிவிடு பாசடைக் குழாமன் றிங்கிதக்
கடலிடைத் தோன்றிய கற்பகா டவியே
சேயிதழ் விரிக்குஞ் செந்தா மரையிதன்
றாயதன் வடிவமா யமர்ந்தமா நிதியே
சங்கமன் றிதுவதன் றனிப்பெயர் நிதியே .....(20) 
செங்கிடை யன்றிது சிந்தா மணியே
ஆதலி னமதுபேட் டன்னமு மன்றிதப்
போதிலங் குதித்த பொலங்கொம் பன்றே
என்றுள மருளவோ ரெழினலம் பயக்கும்
மன்றலம் பணைசூழ் மருத வேலிப் .....(25) 
பொன்மதிற் கமலை நன்னகர் புரக்கும்
தேசிக ராய சிற்பர முதல்வ
மாசி லாமணி ஞானசம் பந்த
எனையாட் கொள்ளவந் தெய்தினை யாகலின்
முனியா தொன்றிது மொழிகுவன் கேண்மதி .....(30) 
கற்றன ராயினுங் கல்லா ராயினும்
அற்றனம் யாமென வடைந்தனர் தமையெனிற்
காலம் பாரார் கருத்தினை யளவார்
சீல நோக்கார் தீக்குணங் கொள்ளார்
பரிசிலர் வேண்டிய பரிசுமற் றெல்லாம்
வரிசையோ டளிப்பது வள்ளியோர் கடனே
நன்னெறிப் படரா நவமலி யாயினும்
செந்நெறிப் படர்ந்தநின் சீர்புனைந் தேத்தலிற்
சத்திநி பாதநின் சந்நிதிப் பட்ட
இத்திறத் தௌிதினி லெய்திய தெனக்கே, அதனாற்
சரியையிற் றாழ்க்கலை கிரியையிற் பணிக்கலை
யோகத் துய்க்கலை பாகமு நோக்கலை
நாளையின் றெனவொரு வேளையு நவிற்றலை
ஈண்டெனக் கருளுதி யிறைவ
பூண்டுகொண்டிருப்பனின் பொன்னடித் துணையே.
29

நேரிசை வெண்பா 
பொன்னேயல் லாமற் பொருளோ டுடலுயிர்விற்
றென்னே மணியொன் றெவர்கொள்வார் - கொன்னே
குருமாசி லாமணியைக் கொள்வோர்கொள் ளாமுன்
தருவார்மற் றிம்மூன்றுந் தான்.
30

கட்டளைக் கலித்துறை 
தருமணிக் கோவைத் தருண்ஞான சம்பந்தன் றண்கமலைக்
குருமணிக் கோவை நிகர்மாசி லாமணி கோத்திடலால்
ஒருமணிக் கோவையிம் மும்மணிக் கோவையொண் சங்குகஞ்சம்
பொருமணிக் கோவைப் பொருளாக்கொள் ளாரிது பூண்டவரே.
31
தடுத்த பிறவித் தளையாம்

விலங்கு தனைமுறித்து
விடுத்த கருணைக் கடன்மாசி

லாமணி மெய்ப்புகழாற்
றொடுத்த தமிழ்மும் மணிக்கோவை

நித்தந் துதிக்கவல்லார்
எடுத்த சனனத்தி லெய்தாத

பேரின்ப மெய்துவரே.

32
உள்ளத் தருணின் றுணர்த்தவென்

னாவி லுறைந்த வெள்ளை
வள்ளக் கமலத் தவண்மாசி

லாமணி வண்புகழில்
எள்ளத் தனையள வோர்தொடை

யாக்கி யிசைத்தனளாற்
கள்ளப் புலன்கொண் டுரைத்தே

னலனிக் கவிமுற்றுமே.

33
விரிக்குஞ் சரியையிப் பாமாலை

சேர்த்தது மெய்க்கிரியை
தரிக்கும் படிக்கின்று சாற்றிய

தேமற்றென் றண்டமிழைத்
தெரிக்கின்ற போதருள் செய்தது

வேசிவ யோகமுண்மை 
பரிக்கின்ற ஞானமொன் றேமாசி

லாமணி பாலித்ததே.

34

பின்னே வரும் இரண்டு செய்யுட்கள் பழைய பதிப்புகளிற் காணப் படுகின்றன.

நேரிசை யாசிரியப்பா 

தமிழ்மணங் கமழுங் கமலையம் பதிவாழ்
ஞானசம் பந்தனை வணங்கின்
ஈனசம் பந்த மில்லைவீ டௌிதே.

வஞ்சித்துறை 

மாசி லாமணித்
தேசி காவென
பேசு வோர்கண்முப்
பாச மோடுமே.

 

பண்டார மும்மணிக்கோவை முற்றிற்று.

Related Content

காசிக் கலம்பகம் - குமரகுருபரர்

குமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்

சிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி