logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்

சித்தாந்த சிகாமணி

மூன்றாம் பாகம்

2 - வது குருலிங்கத் தலம்

[அதாவது - ப்ரதிஷ்ட்டாகலா சமேதமாய் ஜ்ஞான சக்தியோடு கூடிக் கர்த்ரு சாதாக்யத்தைப் பொருந்திப் புத்தி கம்யமாயிருத்தல் என்பது.]

(மாகேச்வர ஸ்தலத்தைச் சேர்ந்த உட்பிரிவுகள்)

 

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        முன்புற மொழிந்து நின்ற முறைபத் தத்தலந் தொடர்ந்து 

        வொன்பது தலமு மைய வுரைத்தனை தமிய னேனுக் 

        கின்புற வினிமா கேசத் தலத்தினை யெய்தி நிற்குந் 

        துன்பறு தலபே தங்க டம்மையுந் தோன்றச் சொல்வாய்.                                          1

 

        கிரியைநற் பாவ ஞானங் கிடைக்குமா கமஞ்ச காயம் 

        பரிவறு மகாயம் பின்னர்ப் பரகாயந் தருமம் பாவ 

        மருவறு மாசா ரத்தான் மகேசநற் றலமொன் பானா 

        முறைசெயு* மவற்றி னுண்மை யுரைக்குது முனிவ கேண்மோ.                                   2

*குருலிங்க ஷட்பக்தர்கள்:- குருலிங்கமோஹி, குருலிங்கபக்தன், குருலிங்கபூஜகன், குருலிங்கவீரன், குருலிங்கப்ரசாதி, குருலிங்கப்ராணி என ஆறு வகைப் படுவார்கள். இவர்களில், மாதாபிதாக்களின் மோகங்களை விட்டுக் குருவினிடத்தில் ப்ரீதியுள்ளவனே குருலிங்கமோஹி, பந்துக்களின் உபசாரமற்றுக் குருவினிடத்தில் ப்ரீதியுள்ளவனே குருலிங்கபகதன், வேறொரு பூஜையைச் செய்யாது குருபூஜனை செய்பவனே குருலிங்கபூஜகன், அன்னிய மார்க்கத்தை விட்டுக் குருவின் யுக்தி மார்க்கத்தில் வர்த்திப்பவனே குருலிங்கவீரன், குருவின் ஆஜ்ஜை வசத்தவனே குருலிங்கப்ரசாதி, குருநிந்தையைக் கேட்காதவனே குருலிங்கப்ராணி.

த்ரிவித குருலிங்கம்:- தீக்ஷை, சிக்ஷை, ஸ்வாநுபவம் என மூவகைப்படும். இவைகளில், ஆகமோக்த விதானந்தினாலும் குண்ட மண்டலாதிகளினாலும் ஷட்வித ஷுத்த முதலியவைகளைச் செய்தலே தீக்ஷை, ஜங்கமமே லிங்கமென்பது முதலான சம்யக் ஜ்ஞானம் சத்புருஷர்களா லாவதே சிக்ஷை, பூர்வஜன்ம சம்ஸ்கார வல்லமையினால் பக்தி ஜ்ஞானாதிகங்கள் தாமே தலைகாண்பித்தலே ஸ்வாநுபவம்.)

ஐம்பத்து நான்காவது

(54) கிரியாகமத்தலம்

[அதாவது - பரனே ப்ரத்யசூனான சிவன் என்று சொல்லப்படுகிற மேற்கூறிய பரஸ்தல சம்பந்நனான சிவயோகியின், நியமம் லோபமாகாமையாலும், அவனுக்கு சிவன் ப்ரசன்ன மாதலாலும், அவன் விதிப்படி செய்யும் லிங்கபூஜைக்குரிய க்ரியா சமூகமே உலகத்தாருக்கு சாஸ்த்ரமா யிருத்தலால் கிரியாகமம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        அப்பர யோகி தானே யருஞ்சிவ மவன்றன் பூசை 

        யொப்புறு கிரியை யாகு முரைத்தவக் கிரியை தன்னை 

        மெய்ப்புறு முதன்மை யாக மேவுமா கமந்த னக்குச் 

        செப்புறு பெயர்யா தென்னிற் செழுங்கிரி யாக மந்தான்.                                           1

 

        ஒள்ளழ லரணி தன்னிற் கடைதலை யொழிந்துண் டாகா 

        துள்ளுறுஞ் சிவனுஞ் செய்யுங் கிரியையை யொழிந்து தோன்றான் 

        றெள்ளுறு நியம நாசஞ் சேர்ந்திடா தாக மத்திற் 

        கொள்ளுறு முறைவ ழாமற் குறித்துநற் கிரியை செய்க.                                         2

 

        விதித்திடு கருமந் தன்னுள் விசேடமாஞ் சிவன தேவன் 

        மதித்தது தனையே செய்க மாசிலா சானைக் கொண்டு 

        பொதுத்தவிர் பூசை செய்க புராரியைப் பரமன் றன்னைத் 

        துதிப்பொடு பூசை செய்வோன் சுரரெலம் பூசை செய்வோன்.                                        3

 

        கருதுறு சிவபூ சைக்கட் கருவிக ளான வற்றி 

        லொருதனி மனம்வைத் தென்று முயர்சிவ யோக வேட்கை 

        புரிதரு மமல யோகி பொருந்திய மலங்க ளெல்லா 

        மிரிதர வகற்ற வல்ல னிதிலிலை யைய மன்றே.                                                4

 

        கண்ணிலன் முடவன்போலக் கருதரு ஞான கன்ம 

        மெண்ணுறு மிரண்டு மொன்றை யொன்றவா யிருத்த லாலே 

        நண்ணுறு பலன்வி ருப்பி னன்றுறத் துறந்தா னேனும் 

        பண்ணுக வவையிரண்டு மெனமறை பகரு மன்றே.                                               5

 

        அறிவினர் தமக்கு ஞான மடைந்ததிங் கெனினு மென்று 

        நெறிதரு கருமங் கூடி நின்றிடு மதனா லம்ம 

        செறிதரு பலனிற் றீர்ந்து செய்கரு மங்க ளேனும் 

        வறிதென விடலென் றோது மதிமுடி வள்ள னூலே.                                             6

 

        யாவர்க்கு மாசா ரந்தா னெழிலணி யாகி நிற்கு 

        மோவுற்றோ னதனை நிந்தை யுறுகுவ னாசா ரத்தை 

        மேவுற்ற ஞானந் தன்னால் விளங்குறு மீச னென்றாற் 

        சாவுற்று மெய்வீழ் காறுஞ் சார்வதா சார மன்றே.                                                 7

 

- கிரியாகமத்தலம் முற்றிற்று -
* * *

 


 

ஐம்பத்தைந்தாவது

(55) பாவாகமத்தலம்

[அதாவது - விஷய போகங்களை நிஷ்காமமாகத் துய்க்கும் சிவயோகி அகத்தும் புறத்தும் சிவத்தை நோக்கும் லக்ஷணமே பாவாகமம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        வீவுறு மவாவி னோடு விளங்கறி வுடைமை யோன்றன் 

        பாவசின் னங்க டாமே பகர்பாவா கமம தென்ன 

        யாவரு மறிய நிற்கு மென்றுளந் துணிந்து கோடி 

        பூவல யங்க ளேத்தப் பொதியமா மலையி லுற்றாய்.                                             1

 

        சீரணி சிவோக மென்னும் பாவனை சிவம தற்குக் 

        காரணம் வேறு ஞான கருமங்கா ரணமே யாக 

        பூரண வத்து வாகும் பொலிதரு ஞான மத்தின் 

        காரணந் தியான மந்தத் தியானமே கருத்திற் கொள்க.                                            2 

 

        நிரந்தர முட்பு றம்பு நிறைந்துள மகேசன் றன்னைப் 

        பரந்தரு பரமா நந்தப் பயன்பெறும் பொருட்டு மேவி 

        விரிந்துள கலைக ளெல்லாம் விளங்கிய வறிவி னாலே 

        தெரிந்துள புலவ ரென்றுந் தியானமே செய்க மாதோ.                                            3

 

        பொருளறு மொழியு நூலிற் புக்குறா மதியுந் தன்பா 

        லருளுறு கொழுநற் றீர்ந்த வரிமதர் மழைக்கட் செவ்வாய்ச் 

        சுருளுறு மலர்மென் கூந்தற் றுடியிடை மாதும் போலுந் 

        தெருளுறு பாவ மோடு சேர்ந்திடாக் கிரியை யன்றே.                                             4

 

        கண்ணிலான் வடிவ மொன்றுங் காண்கிலா வாறு போல 

        வெண்ணுபா வனையி லாதா னிறைவனைக் காணான் முக்கட் 

        பண்ணவன் றனையர்ச் சிக்கப் பாவனை மனத்தி னோடு 

        நண்ணுறான் சிவனை யந்தப் பாவனை நழுவி னோனே.                                         5

 

        கீடசிந் தனையி னாலே கிருமியுங் கீட மாகும்* 

        பீடுறுஞ் சிவனை யென்றும் பிரிவறத் தியானஞ் செய்வோ 

        னீடுறு சிவமே யாவ னிட்கள சிவத்தி யானங் 

        கூடருந் தகைய தேனுங் குறிக்கொணீ யவன்றன் வாழ்வே.                                         6

( * புழுவானது குளவியை த்யாநித்தலால் எவ்வாறு குளவியின் தன்மை புழுவுக்கு ஏற்படுகின்றதோ, அவ்வாறே யோகியின் பாவனையானது சிவனைக்குறித்து இடைவிடாது த்யானிக்க நன்கு வாய்ந்தால் யோகிக்கு சிவத்வம் நிகழவது என்று கூறுப வடநூலார்.)

- பாவாகமத்தலம் முற்றிற்று -
* * *

 


 

ஐம்பத்தாறாவது

(56) ஞானாகமத்தலம்

[அதாவது - ஜகத்தெல்லாம் சிவாத்மகமானது, சிவத்தைவிட வேறு பதார்த்தமில்லை, நானே சிவனாயிருக்கிறேன் என்னும் அந்தப் பாவாகம சம்பந்நனான சிவயோகியின் ஜ்ஞான சின்னங்கள் எத்தனையுண்டோ, அத்தனையும் தேகிகளுக்கு மோக்ஷ ஹேதுக்களாதலால் ஞானாகமம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        நவின்றிடும் பரம யோகி ஞானசின் னங்க டாமே 

        பவந்தொடர் மனிதர்க் கெல்லாம் பவமற வின்ப வீடிங் 

        குவந்தருள் செய்யு ஞான கமமென வுரைப்பர் மேலோர் 

        தவந்தனி யுருவு கொண்ட தனையசந் தநவெற் புள்ளோய்.                                        1

 

        கிரியைபா வங்க டம்மாற் கிடைத்திடும் பயனொன் றில்லை 

        கிரியைபா வங்கண் மேவு ஞானத்தாற் கிடைக்கு முத்தி 

        பிரிவிலா நூறு கோடி பிறப்பினி லெனினுங் கன்ம 

        முரியவீ டுதவா தம்ம வுதவுவ துயர்ஞா னங்காண்.                                                      2

 

        ஞானமற் றொழிந்த கன்ம நவைதரு பிறப்பிற் கேது 

        வானவக் கருமந் தானே யறிவொடு கூடு மாயி 

        னீனவப் பிறவி மாற்று மீவது கருமம் பொன்றும் 

        வானிலைப் பதமே ஞானம் வழங்குவ தழியா வீடு.                                                3

 

        முன்னுறு நூல்க ளாதி முயற்சியாற் குரவன் சொல்லாற் 

        பன்னரு ஞான மொன்றே பயிலுக வொழிந்த வற்றா 

        லென்னுறு பலன்ஞா னந்தா னியல்சிவாத் துவித நல்கித் 

        துன்னுறு பவங்க ளெல்லாந் தொலைத்திடு நல்லோர்க் கன்றே.                                    4

 

        தெரிந்திடு முலக மெல்லாஞ் சிவமயஞ் சிவனில் வேறா 

        யிருந்துள பொருளொன் றில்லை யாதலாற் சிவனா னென்றே 

        யுரந்தரு முணர்வு தானே யுத்தம ஞான மென்ப 

        ரருந்தவ முனிவ ரேறே யாகம நெறியு ணர்ந்தோர்.                                                       5

 

        கண்ணிலா னெதிர்ந்த தொன்றைக் காண்கிலா னதுபோ னீங்கா 

        துண்ணிலா மிறையை ஞான மொழிந்தவன் காணா னென்று 

        நண்ணுறா தொழிக்கும் பாச நற்சிவ காட்சி ஞானக் 

        கண்ணுளார் தங்கட் கந்தக் காட்சிதா னௌ¤து மாதோ.                                           6

 

        எறிசுட ரன்றி யில்லி லிருளறா ததுவே போல 

        வறிவினை யொழிய நீங்கா தகத்துறு மோகந் தானு 

        மறிவறு ஞான மாகும் வலிகெழு கதவங் கொண்டு 

        பொறிவழி யடைத்து மிக்க பொதியில்வீற் றிருக்க வல்லோய்.                            7

 

- ஞானாகமத்தலம் முற்றிற்று -
* * *

 


 

ஐம்பத்தேழாவது

(57) சகாயத்தலம்

[அதாவது - ஜ்ஞானாகமஸ்தல சம்பந்நனா சிவயோகி க்ரியா த்யான பூஜைகளுக்குச் சரீரம் வேண்டியதா யிருக்க, அப்படிப்பட்ட சரீரத்தை வைராக்யாதிகளினால் கெடாதிருக்கச் செய்தலால் சகாயன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        கிரியைநற் பாவ ஞானங் கிடைத்திடா காய மின்றேல் 

        விரிதரு முலகில் யார்க்கும் விளம்புறி னதனால் யோகி 

        தரையுறு சகாய னாகச் சரிப்பனென் றெடுத்து ரைப்ப 

        ரரிமதர் மழைக்கண் மங்கை பாகனா மங்கள் வல்லோர்.                                          1

 

        ஏகமா ஞான யோகி யென்னினு முடம்பி னானே 

        போகமா முத்தி யாதி பொருந்துவன் விறகை யின்றி 

        யாகுறா தொளிரு மங்கி யதுவென வாக்கை யின்றி 

        யோகிதா னான்ம ஞான முடையவ னாகா னன்றே.                                                2

 

        ஒப்பறு பரமன் றானு முருவொடு பூசை கொள்வ 

        னப்பரி சுடம்பின் மேவி யருச்சனை கொள்வன் யோகி 

        செப்புமைந் தொழிற்கு மாகச் சிந்மய னாகு மீசன் 

        மெய்ப்புறு மூர்த்தி மானாய் விளங்குவ னென்பர் மேலோர்.                                         3

 

        அயன்முத லாகி நின்ற வமரரு முத்தி வேட்ட 

        மயன்முனி முனிவர் தாமு மியாவையும் வழங்க வல்ல 

        செயன்மிகு தவமு டம்பாற் செய்தன ரத்த வத்திற் 

        கியன்முத லாய வாக்கை யினைவிட லாகா தன்றே.                                             4

 

- சகாயத்தலம் முற்றிற்று -
* * *

 


 

ஐம்பத்தெட்டாவது

(58) அகாயத்தலம்

[அதாவது - சிவனுக்கு தேக சம்பந்தமிருப்பினும் காமாதி விகாரங்கள் எவ்வாறில்லையோ அவ்வாறே சகாயஸ்தல சம்பந்நனனான சிவயோகி, தேக சகிதனாயிருப்பினும் நான் மனிதனல்லன் தேவனல்லன் ராக்ஷஸனல்லன் சிவனாயிருக்கிறேன் என்னும் உணர்ச்சியினாலும் தேக விகாரங்க னில்லாதிருப்பதினாலும் அகாயன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        சாற்றிய பரம யோகி சகஞ்சிவ மயம தாகத் 

        தோற்றுறு நிலையி னாற்பொய் மாயையின் றொடக்கி லாத 

        வாற்றலா லுதவி யாகு மாக்கைய னாத லாலே 

        போற்றுறு மகாய னென்றே புகன்றிடப் படுவ னன்றே.                                            1

 

        சங்கர னெனமெய் யோடு சாரினும் பரம யோகிக் 

        கிங்குறு முடல்வி கார மிலாமையா லகாய னாகும் 

        பொங்கொளி யம்பரத்திற் புக்குறு மியோகிக் காக 

        மெங்குள துடம்பி போல விருப்பது பிராந்தி யன்றே.                                             2

 

        ஆக்கையின் மான மில்லா தருஞ்சிவ மாகி நிற்கு 

        நோக்குறு மியோகிக் காக்கை நுவன்றிடு முலக மொன்றாற் 

        போக்கறு முடல மொன்றாற் பொருந்துறும் வாதை யாதோ 

        வீர்க்குமிந் தியவாங் கார விடரவற் கில்லை யன்றே.                                             3

 

        மயக்குறு மனித னல்லேன் வானவன் றானு மல்லே 

        னியக்கனு மல்லேன் மிக்க விராக்கத னல்லே னென்று 

        முயர்த்துறு சிவமே நானென் றுணர்ந்தவன் றனக்கு வந்து 

        பயக்குறு முடம்பு செய்யுங் கருமமென் பயனைச் செய்யும்.                                         4

 

                       பிரபுலிங்க லீலை

 

        வான மல்லேன் வளியல்லே னழனீ ரல்லேன் மண்ணல்லேன்

        ஞான மல்லேன் வினையல்லே னானே சிவமென் றெண்ணினோ

        னூனை யல்லா வொரு சிவமே யாவனிவ் வாறுன்னாதா

        னீன மெல்லா முடையவுடம் பெடுத்துச் சுழலு மெஞ்ஞான்றும்.

 

- அகாயத்தலம் முற்றிற்று -
* * *

 


 

ஐம்பத்தொன்பதாவது

(59) பரகாயத்தலம்

[அதாவது - அகாயனான சிவயோகி, தேசிகனாகவும் மாயாதீதனாகவும் ஜ்ஞானானந்தனாகவு மிருப்பினும் சரீரியாயிருப்பதனாலும் சாக்ஷாத் பரப்ரஹ்மமே தான் என்று அறிந்திருப்பதனாலும் பரகாயன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        பகுதியை வசிக ரிக்கும் பான்மையான் மாயா மார்க்கத் 

        தொகுதியை நீங்கி நீற்குந் தூய்மையா லறிவா னந்தத் 

        தகுதிகொள் பிரமந் தானாய்த் தகும்பர காய னாவன் 

        மிகுதிகொ டவத்தர் கோவே விளம்புறு மகாய னென்றே.                                         1

 

        பேரறி வுருவாய் நின்ற பிரமமே வடிவ மானோற் 

        கேரறு மாயை யாக்கை யாற்பய மென்னே ஞான 

        வாரழ லாற்பி றப்பிற் காதியா முடலஞ் சுட்டு 

        நேரறு சிவம டைந்தோ னிகழ்பர காய னென்பான்.                                                 2

 

        வினைதரு மநோவி ருத்தி விடயவிந் தியங்க ளெல்லா 

        மெனையதி லடங்கு மந்த விருஞ்சிவ மேயி வற்குத் 

        தனியுரு வாகு நானே சிவமெனச் சகங்க ளெல்லா 

        நனியறி வாகிக் கண்டோற் குடல்சொல னன்மா லாகும்.                                          3

 

        சோதியாம் பிரம மேதன் சொரூபமாய்ச் சிந்தை செய்வோன் 

        மேதையா முடம்போ டுற்று மெய்யிலி சீவன் முத்தன் 

        போதமா மியோதி யாக்கை யிருப்பினும் போகி னுந்தான் 

        றீதிலா முத்தி யாகு மென்பர்நூ றிருந்தக் கற்றோர்.                                                4

 

        பெரும்பவ நோய்வ ருத்தல் பிறங்குதன் சொரூப ஞானம் 

        பொருந்துறு மளவே யன்றோ பொங்கொளி யிரவி தோன்றப் 

        பரந்திடு மிருளு முண்டோ பகர்ந்திடிற் காலா தீத 

        வரும்பத மடைந்து ளோனுக் காக்கையுட் படுத லின்றே.                                         5

 

- பரகாயத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபதாவது

(60) தருமாசாரத்தலம்

[அதாவது - அகிம்சா, சத்யம், ப்ரஹ்மசர்யம், ஆஸ்தேயம், தயை, க்ஷமை, சகஜதானம், லிங்கபூஜை, பஞ்சாக்ஷரீ ஜபத்யானம், சத்குரு சேவை, சரணர் சங்கம், மனோ நிக்ரகம், சிவ சித்தாந்த விச்வாசம், வைராக்யம், விவேகம், வித்யை, இந்த்ரிய நிக்ரகம், பக்தி, நீதி, நிகமாகமங்களில் நம்பிக்கை ஆகிய ஆசாரங்கள், அந்தப் பரப்ரஹ்ம ஸ்வரூபனும் பரகாயனுமான சிவயோகிக்கு ஸ்வபாவமா யுண்டாயிருப்பன. அதனால் அவ்வாசாரமே எல்லாருக்கும் அநுசரணீயமான தர்மமாயிருப்பதால் தருமாசாரம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        அப்பர காயன் செய்வ தியாதொரா சார மம்ம 

        செப்புறு மதுதான் யார்க்குஞ் செய்திடுந் தரும மாகி 

        யொப்பறு முதவி யாமென் றுரைப்பர்க ளுணர்வின் மிக்கோர் 

        துப்புறழ் சடிலக் கற்றைச் சுடர்முடி முனிவர் வேந்தே.                                           1

 

        கூறருந் தருமா சாரங் கொல்லாமை வாய்மை யோடு 

        வேறுறுங் களவி லாமை வெகுளாமை பிரம சரியம் 

        பேறெனுந் தயையே தானம் பிறங்குறு செபந்தி யான 

        மாறரும் பூசை யென்று வகுத்துரை செய்வர் மேலோர்.                                          2

 

        வினையிலி யாக மத்தின் விதித்தவித் தருமா சாரம் 

        புனையிழை யாகக் கொள்வோன் புராரிதன் னருளுக் கேற்றோ 

        னினைவற வறம லாமை நியமஞ்செய் தருமந் தன்னை 

        நனிவரு காம மின்றி நவிற்றுதன் ஞான வேது.                                                 3

 

        உலகெலா மொருதா னாக வுன்னலால் வடிவ மாதி 

        விலகலா லுயிர்க ளெல்லாம் வேறறத் தானாய்க் காண்பா 

        னுலகெலாஞ் சிவமொன் றாக வுணர்ந்தவற் கெனதென் றெண்ண 

        விலகுமோர் பொருளு முண்டோ விலையென விளம்பு நூலே.                                    4

 

        அறநெறி முத்தியேது வாதலா லவ்வ றத்தைத் 

        துறவின னெனினுஞ் செய்க தொல்லறி வமுதந் தன்னா 

        னிறையினு மறத்தை நீங்கா னின்றதன் னொழுக்க நோக்கிப் 

        பிறரிது நெறியென் றெய்தப் பெறுதலாற் பரம யோகி.                                            5

 

        விமலனுஞ் சதாசா ரத்தில் விருப்புள னாகி யென்று 

        மமலுறு மாசா ரத்தா லருச்சிக்கப் படுவன் கண்டாய் 

        நிமலமா மாசா ரத்தை யன்றியே நெற்றி நாட்டத் 

        துமையொரு பாகன் செய்யு மோங்கரு ளுண்டா காதால்.                                         6

 

- தருமாசாரத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்தொன்றாவது

(61) பாவாசாரத்தலம்

[அதாவது - தர்மாசார சம்பந்நனான சிவயோகியின் சத்பாவமே அனைவருக்கும் அநுசரணீய மாதலால் பாவாசாரம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        அறமுறு மிவன்றன் பாவ மனைவர்க்கும் பாவா சாரந் 

        திறமுறு பாவந் தன்னைச் செப்புறின் மனவ ழக்காய் 

        நிறைதரு சிவனைப் பற்றி நிற்பதென் றறிந்து கொண்ணீ 

        மறிதிரை சுருட்டு மாழி வாய்மடுத் துண்ண வல்லோய்.                                          1

 

        பாவனை யாற்செய் கன்மம் பாவநங் களினுண் மேலாம் 

        பாவனை யால றத்தைப் பண்ணுக வதனா லென்றும் 

        பாவனை யாற்செய் கன்மம் பலித்திடு மனமுந் தூய்தாம் 

        பாவனை யாலென் றெண்ணிப் பாவனை விடாமற் செய்க.                                         2

 

        நித்திய கரும மாதி நிகழ்சிவ பாவந் தன்னாற் 

        சுத்தநல் யோகி செய்து துரிசினிற் கட்டு றானால் 

        சித்தெனு மிரவி தன்னைச் சிந்தையிற் பாவித் தெய்த 

        லுத்தம மாய சந்தி வந்தனை யுணர்ந்து கொள்ளே.                                                3

 

        பரசிவ வங்கி தன்னிற் படர்புல விந்த நத்தைத் 

        துரிசறு பாவத் தாலே சுடுதலே யாக மாகும் 

        பரிசுறு கரும மெல்லாம் பரமனுக் காவ வாகக் 

        கரிசுறு பவந்தொ லைப்பான் கருத்தினிற் கொள்க மாதோ.                                        4

 

        செயத்தகு செயல்செய் யாத செயலெல்லாஞ் சிவன்பால் வைத்த 

        மயக்கமி லறிவன் றீமை மருவுறா னென்பர் தன்னை 

        வியக்குறு முலகை ஞான விமலனை வேறி லாம 

        லயிர்ப்பற வொன்றாய்க் கண்டோன் கண்டவ னாகு மன்றே.                                        5

 

- பாவாசாரத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்திரண்டாவது

(62) ஞானாசாரத்தலம்

[அதாவது - பாவாசார சம்பந்நனான சிவயோகியின் சிவைக்யத்தினால் கூடிய ஜ்ஞானாசாரமே அனைவருக்கும் அநுசரணீயமாதலால் ஞானாசாரம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        இந்நிலை யோகி தன்பா லிலங்குறு ஞான சார 

        மன்னிய வுலகில் யார்க்கு மருவிய ஞானா சார 

        மென்னநன் குரைப்பர் கற்றோ ரிரைந்திழி யருவிக் குன்றந் 

        தன்னைவென் றிணையெ றிந்த தவத்தினி லுயர்ந்த மேலோய்.                                    1

 

        ஞானமா வதுசி வாத்து விதஞான மென்பர் நல்லோ 

        ரேனைய ஞான மெய்திற் றென்னினு மெய்தா தேனுந் 

        தானதா லாவ தென்கொல் சாற்றுமப் பரஞா னத்தா 

        லூனமாம் பிறவி நீங்கு மொழிந்ததா லொழிந்தி டாதால்.                                         2

 

        பூரண ஞானம் பற்றிப் புரிவதே ததுதான் மிக்க 

        வேரணி ஞானா சார மென்பர்நற் சிவமி தென்னும் 

        பேரணி பரத்தி லெல்லாம் பேரறி வாலொ டுக்குஞ் 

        சீரணி பவனே யாகுந் திகழ்தரு ஞானா சாரி.                                                    3

 

        முத்தியை யுதவு ஞானங் குருவருண் முறையிற் பெற்றோ 

        னெய்த்திடும் பவம்பெ ருக்குங் கருமத்தி லிச்சை செய்யான் 

        றத்தலை யொழுகு நீர்போற் சார்ந்துள கரும பந்தஞ் 

        சுத்தமெய்ஞ் ஞானத் தீயாற் கூடுதலான் மறித்துந் தோன்றா.                                        4

 

        ஞானமி லாதான் கன்ம நாணினாற் கட்டுப் பட்டான் 

        ஞானமு ளானக் கன்ம பந்தனை நழுவி னோனாம் 

        ஞானவா சார நண்ணிப் பரசிவ நாட்டம் பெற்ற 

        ஞானிதான் சீவன் முத்த னாகியே நடிக்கு மன்றே.                                                 5

 

- ஞானாசாரத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் க்ரியாகமம், பாவாகமம், ஜ்ஞானாகமம், சகாயன், அகாயன், பரகாயன், தர்மாசாரம், பாவாசாரம், ஜ்ஞானாசாரம் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் சிவஜ்யோதி ஒன்றிலேயே நோக்கம் வைத்து லௌகிகர்களைப்போல வ்யவஹாரம் செய்து கொண்டிருக்கும் ஜீவன்முக்தனும், அங்கஸ்தலத்து இரண்டாமவனுமான மாகேச்வரனே குருலிங்க ஜங்கமன் என்று அறியப்பட்டான்.

2 - வது குருலிங்கத்தலம் முற்றும்
- - - - - -

 



 

3 - வது சிவலிங்கத் தலம்

[அதாவது - வித்யாகலா சமேதமாய் இச்சாசக்தியுடன் கூடி மூர்த்தி சாதாக்யத்தைப் பொருந்தி அகங்கார கம்யமா யிருத்தல் என்பது.]

( ப்ரஸாதிக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )

 

                               கலிநிலைத்துறை

 

               தாவி லாதமா கேசநற் றலத்தவாந் தலங்கள் 

               யாவு மோதினை யினிப்பிர சாதியத் தலத்தை 

               மேவு றுந்தல பேதமும் விளங்குற வெனக்கு 

               நாவலோர் புகழ் தருகண நாயக நவில்வாய்.                                            1

 

               காய மிந்தியம் பிராணநல் லநுக்கிர கந்தாங் 

               காய மோடுறு கரணபா வார்ப்பிதங் கருதி 

               னேய சீடனற் சிசுருடை சேவியத் தலமென்* 

               றாய வத்தல மொன்பதா மவற்றையு மறைவாம்.                                         2

* சிவலிங்க ஷட்பக்தர்கள் :- சிவலிங்கமோஹி, சிவலிங்கபக்தன், சிவலிங்கபூஜகன், சிவலிங்கவீரன், சிவலிங்கப்ரசாதி, சிவலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், அந்யமோகமில்லாதவனே சிவலிங்கமோஹி, அந்ய தைவநிராசகனே சிவலிங்கபக்தன், அந்ய தைவபஜனையில்லாதவனே சிவலிங்கபூஜகன், அந்ய புண்ய க்ஷேத்ர யாத்ராதிகளை த்யாகஞ் செய்தவனே சிவலிங்கவீரன், சுகதுக்காதிகளை சகிப்பவனே சிவலிங்கப்ரசாதி, ஸ்த்ரீசம்போக மில்லாதவனே சிவலிங்கப்ராணி.

த்ரிவித சிவலிங்கம் :- இஷ்டலிங்கம், பாவலிங்கம், த்ருப்திலிங்கம் என மூவகைப்படும். ஸ்ரீசத்குருவானவர் தீக்ஷையினால் கொடுத்ததே இஷ்டலிங்கம், தேக குண வ்யாப்தியைவிட்டு சிவலிங்க ஸ்வரூபத்தில் மனம் லயித்திருப்பதே ப்ராணலிங்கம், சகலா வஸ்த்தைகளிலும் சிவலிங்கத்துடன் அநன்யபாவமாயிருப்பதே த்ருப்திலிங்கம்.)

 

அறுபத்துமூன்றாவது

(63) காயாநுக்கிரகத்தலம்

[அதாவது - ஜ்ஞானாசார சம்பந்நனான சிவயோகி, லோகாநுக்ரகத்தி னிமித்தம் தேகதாரணம் செய்து கொண்டிருப்பதனால் காயாநுக்கிரகன் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               இந்த யோகிதன் மெய்யினை யிலங்குறக் காட்டி 

               வந்தி யாரையு முலகினி லளித்திடு மாற்றா 

               லுந்து பேரெழி லுடலநுக் கிரகனென் றுரைக்கு 

               முந்து நாமமுற் றிடுமென வறைகுவர் முன்னோர்.                                        1

 

               அண்ண லாகிய பரசிவன் வடிவுகொண் டடுத்திங் 

               கெண்ணி லாவுயி ரியாவையு மளித்திடு மியல்போன் 

               மண்ணில் யோகியும் வடிவொடு மருவியா வரையு 

               நண்ணி யேயளித் திடுபவ னாமென நவில்வார்.                                         2

 

               ஈசன் மேனியோ டொன்றினும் பற்றில னென்ப 

               மாசில் யோகியு முடம்பின னெனினுமல் வாறாம் 

               பாச மாய்வுறு மருஞ்சிவ பாவனை யதனாற் 

               றேசு லாவுறு பரசிவ னாமவன் றிண்ணம்.                                                3

 

               இன்ப வெள்ளமாஞ் சிவத்தினின் மனவழுக் கிறந்த 

               துன்பில் யோகிமா யைப்பொரு டோன்றுறக் காணான் 

               முன்பு வெள்ளியன் றிதுவென விப்பிகாண் முறைபோற் 

               பின்பி லங்குறு மிதுசக மன்றெனப் பிரமம்.                                             4

 

               சொற்ப னப்பொருள் விழித்திடத் தோன்றிடா மாயா 

               கற்ப னைப்பொருண் ஞானம்வந் துற்றிடிற் காணா 

               முற்பெ றச்சக மயக்கினுக் கவித்தையே முதன்மை 

               நிற்ப தற்றிடி னதுபினை யுலகெதிர் நில்லா.                                             5

 

               விண்ட மூலவாங் காரனாய் விளிந்திடு முபாதி 

               கொண்டு தான்விளை யாடலான் மெய்யொடு கூடிக் 

               கண்ட யோகிமெய் யாளர்போ னடித்திடுங் கண்டாய் 

               மண்டு வெண்டிரைக் கருங்கடன் மடுத்தவாய் மலரோய்.                                  6

 

- காயாநுக்கிரகத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்துநான்காவது

(64) இந்திரியாநுக்கிரகத்தலம்

[அதாவது - விவேகச்ரேஷ்ட்டனும் காயாநுக்ரக சம்பந்நனுமான சிவயோகி, தன் தேகத்தை லோகாநுக்ரகத்தி னிமித்தம் விநியோகித்திருக்குமாறு தன் இந்திரிய வ்யாபாரங்களை ஏனையோர்களால் அநுசரணீயமாகுமாறாக்கி லோகோத்தாரணஞ் செய்தலால் இந்திரியாநுக்கிரகன் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               வடிவு கொண்டருள் பவனது காட்சியான் மருவு 

               மொடிவி லிந்திய விவேகமே யுலகுளார் யார்க்கும் 

               படிவி லிந்தியா நுக்கிர கம்மெனப் பகர்வார் 

               முடிவ றுஞ்சிவ தத்துவ முணர்பெரு முனிவர்.                                          1

 

               இந்தி யங்கடத் தம்புல னிதமொடு வெறுப்பாய் 

               வந்து றும்படி யடைந்திடு மிவனவை மருவா 

               னிந்தி யங்கடாம் புறந்திரிந் திடுதலே பந்த 

               மிந்தி யங்கணின் றகத்தடங் கிடுதலே முத்தி.                                            2

 

               உள்ளு றுஞ்சிவத் தொடுங்கிய மனமுடை யோகி 

               கொள்ளு மிந்திய மியாவையுங் கூடினுங் கூடான் 

               றெள்ளு றும்பர சிவத்தையே காண்குவன் சிறிதும் 

               விள்ளு றும்பிற பொருளினைக் கண்டிடான் விழித்து.                                    3

 

               மான மின்றியே சிவத்தினில் வைத்தவிந் தியத்தோ 

               னூன மொன்றியே மூப்பொடு முயிர்விடு மரணந் 

               தானு ணும்பசி தாகமென் றிவற்றினைச் சாரான் 

               வான மொன்றொடும் பற்றிலா வாறென மன்னோ.                                         4

 

               எங்க ணெய்துறு மனமவ ணெய்துமிந் தியமுஞ் 

                சங்க ரன்றனை யுறின்மனஞ் சரிக்குமா புலன்க 

               ளிங்க ருஞ்சிவ யோகிதான் மனத்திடை யெண்ணிப் 

               பங்க மின்றியே பார்த்திடும் பொருளெலாம் பரமாம்.                                        5

 

               கரண மோடுறு பிராணனா மனத்தொடு கலந்தோன் 

               புரண மாஞ்சிவ மாகுவன் சகமயல் பொன்றி 

               முரணு றும்புலன் யாவினு முயன்றுமுட் புறமோ 

               ரரண வஞ்சிவ மடைந்தவ னெங்குமின் படைவான்.                                        6

 

- இந்திரியாநுக்கிரகத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்தைந்தாவது

(65) பிராணாநுக்கிரகத்தலம்

[அதாவது - இந்திரியாநுக்ரக சம்பந்நனானவனும் பரப்ரஹ்மமே தேகமாயுள்ளவனுமான சிவயோகி, தான் ப்ராணவாயுவைத் தடுத்தலால் சிவலிங்க தர்சனமாகும், தத்க்ரமத்தை ஜகத்தெல்லாம் அநுசரிக்கும்படிச் செய்வதனால் பிராணாநுக்கிரகன் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               சிவமெ னும்பர வடிவமாய்த் திகழ்ந்திடு மிவன்ற 

               னுவகை யந்தரி சனமிகு முயலகனைத் தினுக்கும் 

               பவம றும்படி யுயிரநுக் கிரகமாப் பகர்வர் 

               தவம டைந்துயர் த்துவ முணர்ந்துள தலைவர்.                                          1

 

               யோகி னாற்சிவத் தொடுங்கிய வுயிருள னெனினு 

               மாக மேவுறுந் தன்சத்தி வாசனை யதனா 

               லேக மாஞ்சிவத் தடங்கிய பிராணனோ டிருப்போன் 

               போக மார்புல னொடுமன மெங்ஙனம் பொருந்தும்.                                         2

 

               தத்தம் வெவ்விட யங்களைச் சார்வுற மீள 

               வுய்த்தி டுங்கர ணங்களோ டுள்ளடங் குயிரான் 

               மெய்த்த சாந்திய னாகியே விளங்குவ னென்று 

               முத்த னாகம முழுதையு முணர்ந்தவர் மொழிவார்.                                        3

 

               சாந்தி யாமெனி னிங்குயிர் விருத்திதான் றழைந்து 

               போந்த வன்மன விருத்தியோ டமைந்திடும் புகலி 

               னேய்ந்த வம்மனச் சாந்தியா லிலங்குறும் யோகி 

               யார்ந்தி டுஞ்சிவ மன்றிவே றொருபொரு ளறியான்.                                        4

 

               உடம்பி னுக்குயி ருயிரினுக் கிறைவனா தார 

               மடைந்த காரண னாகிய சிவனிரா தாரன் 

               தொடர்ந்து மாபர னாலுயி ருயிரினாற் றோன்றி 

               மடங்கு காயநின் றியங்குறு மெனமதி மதித்தே.                                          5

 

               இந்த வாயுநற் பயிற்சியா லின்பபூ ரணமா 

               யந்த மாதியி லாததா யறிவுரு வாகிப் 

               பந்த மாகிய தத்துவங் கடந்துயர் பரத்தில் 

               வந்து மாய்தலில் யோகிதான் சலித்திடான் மன்னோ.                                     6

 

               நீங்கு வாசனை யுடையனாய் நிகழுயிர் விருத்தி 

               யீங்கு மாறுபு சிவத்தினி லேகமா யிருப்போ 

               னோங்கு தாணுவொத் தசைந்திடா னென்றுமென் றுணர்க 

               வாங்கு வார்திரைக் கடல்குடித் துயர்ந்திட வல்லோய்.                                    7

 

- பிராணாநுக்கிரகத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்தாறாவது

(66) காயார்ப்பிதத்தலம்

[அதாவது - பரப்ரஹ்ம காயனாகியும் ப்ராணாநுக்ரக சம்பந்நனாகியு மிருக்கும் சிவயோகி, தன் லிங்கபூஜா விஷயத்தில் தேகாபிமானத்தை த்யாகம் செய்வதே காயார்ப்பிதம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               அருள்செ யப்பர யோகிதா னருச்சனைப் பொருட்டு 

               மருள்செய் யிவ்வுடன் மானமற் றிடுவதே மதிப்பிற் 

               றெருள்செய் கின்றகா யார்ப்பித மென்றுரை செய்வ 

               ரிருள்செய் வெம்பவ மகன்றுநல் லறிவறிந் திருப்போர்.                                   1

 

               என்று தன்னுடம் பீசனுக் கர்ப்பிதஞ் செய்வ 

               னன்று தன்வடி வொருசிவ வடிவமே யாகு 

               மொன்று மிந்திய விடயவின் பங்களை யோகி 

               நின்ற சிந்மய சிவத்தினுக் காக்குவ னேர்ந்து.                                            2

 

               கண்டு கேட்டுமற் றுண்டுயிர்த் துற்றிடு காலைக் 

               கொண்ட வின்பங்கள் யாவையுஞ் சிவத்தினிற் கொடுத்து 

               மண்டி யிவ்வுடல் வழிவரு மற்றுள சுகமும் 

               விண்ட வெந்தளைப் பரமனுக் காக்குவோன் விமலன்.                                    3

 

- காயார்ப்பிதத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்தேழாவது

(67) கரணார்ப்பிதத்தலம்

[அதாவது - காயார்ப்பணம் செய்த சிவயோகி சகலேந்திரியங்களையும் லிங்கத்தில் சம்யோகம் செய்வதே கரணார்ப்பிதம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               ஆதி யாகிய சிவத்தினிற் கரணங்க ளனைத்தும் 

               வேதி யாவத னிடைப்புணர்த் திடுதலே விளங்கத் 

               தீதி னூல்கர ணார்ப்பித மென்னவே தெரிக்கும் 

               பூத நாயக னருள்கொடு பொதியிலிற் புகுந்தோய்.                                        1

 

               யாது தானொரு கரணங்கொண் டுறுபுல னிடத்திற் 

               போது மோர்சுகஞ சிவத்தினிற் சமர்ப்பணை புரியு 

               நீதி யான்கர ணார்ப்பித னென்னவே நிகழ்த்து 

               மாது பாதிய னருளிய வாகமம் வகுத்து.                                                2

 

               அகந்தை யாமதம் பொழதரு கரணவா ரணத்தை 

               மிகுந்த மாசிவ மெனுந்தறி பிணிப்பவன் வீரன் 

               பகுந்த விந்தியத் ததிபதி யாமனம் பரத்திற் 

               புகுந்து ளான்றனக் கதுதொடர் பொறிகொடென் பொருந்தும்.                                 3

 

               இந்தி யங்களை மறித்தருஞ் சிவத்தினி லிசைத்தோற் 

               கந்த வெம்பவ முழுகுத லியாண்டுள தறையி 

               னிந்தி யங்கடன் வழிபடுத் திடல்பவ மென்னும் 

               பந்த வல்வன மெறிந்திடற் கொருபெரும் பரசாம்.                                        4

 

               இந்தி யங்களாற் பாவபுண் ணியங்கள்வந் தெய்து 

               மிந்தி யஞ்சிவத் தாக்கினாற் கிருவினை யில்லை 

               யந்த வெம்பவ முறான்மனத் தாஞ்சக வவியை 

               முந்து ஞானவா ரழலிடை யிட்டிடு முறைபோல்.                                        5

 

               அகம்பு றங்களு நிறைந்துள ஞானவங் கியினின் 

               மிகும்பு லன்களெ னவியிடை யிட்டுவேட் கின்றோ 

               னுகந்தி டும்பர முத்தனொத் தொருசிவ மாமென் 

               றிகம்ப ரங்களு முணர்ந்தவ ரியம்புவ ரன்றே.                                            6

 

               பொறிகள் யாவையும் போகசா தனமெனும் புரமு 

               நெறிகொ ளீசன தருச்சனை யங்கமா நினைந்தோன் 

               குறிகொ ளங்கமி லொருபர முத்தியே குறுகும் 

               வெளிகொள் வண்டின மிசைமுரல் சந்தன வெற்போய்.                                   7

 

- கரணார்ப்பிதத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்தெட்டாவது

(68) பாவார்ப்பிதத்தலம்

[அதாவது - கரணார்ப்பணஞ் செய்த சிவயோகி ஸ்த்திரமான பாவத்தினால் லிங்கத்திற்கு மனோவிகாரங்களான பாவங்களை சமர்ப்பணம் செய்வதே பாவார்ப்பிதம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               சலன மின்றிய பவனை கொண்டுசற் பாவ 

               நலமு றுஞ்சிவ னிடத்தினி லர்ப்பித நவிற்று 

               நிலையி லங்குபா வார்ப்பித மென்னவே நிறுப்பர் 

               புலமை கொண்டுயர் சிவநிலை யுணர்ந்திடும் புலவர்.                                     1

 

               மான சந்தனைப் பாவமென் றறைகுவர் மனத்தி 

               லான வப்பொரு ணினைவொரு சிவத்தி லர்ப்பிதமா 

               மீன வெம்பவ மடைகிலன் பாவசுத் தியினோன் 

               றான திங்கிலன் பவத்தினிற் சுழலுவன் றளர்ந்தே.                                        2

 

               பாவ சுத்திதான் சிவோகமென் யோகமாய்ப் பகர்வர் 

               பாவ மற்றது தீர்ந்துளன் பவத்தினிற் படுவான் 

               மேவி யுண்பவ னுணும்பொரு ரூட்டுவோன் விளம்பின் 

               யாவு மோர்சிவ மயமென வெண்ணுவோன் சிவனாம்.                                    3

 

               மித்தை யென்றுல கனைத்தையும் விடுத்தறி வின்பச் 

               சத்தெ னுஞ்சிவந் தன்னையே நினைந்துறுந் தகையோ 

               னெத்தி றங்களி னாயினு மலத்துட னிசையான் 

               முத்த னென்றவன் றனைமொழி குறுவர்மூ தறிஞர்.                                       4

 

               கருமம் யாவுமோர் பரசிவ பூசனை கழறு 

               முரைகள் யாவுமொண் டுதியென வுன்னுவோற் கில்லை 

               கரும பந்தனை யின்பதுன் பங்களைக் கருதா 

               தொருப ரன்றனக் காக்குவோ னுயர்சீவன் முத்தன்.                                        5

 

- பாவார்ப்பிதத்தலம் முற்றிற்று -
* * *

 


 

அறுபத்தொன்பதாவது

(69) சீடத்தலம்

[அதாவது - பரகாயனாகவும் பாவார்ப்பித சம்பந்நனாகவு மிருக்கும் சிவயோகியினால் சிக்ஷிக்கப்படுவதற்கு யோக்யனானவனே சீடன் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               பிரம மேவடி வாகுமப் பெரியவன் றன்னா 

               லருள்பு ரிந்தளிக் கப்படு வோனவ னருளாற் 

               பரம வின்பவீ டவாவுளோ னெவனவன் பகரி 

               னிருமை தங்கிய சீடனென் றுயர்ந்தவ ரிசைப்பார்.                                         1

 

               பாவ நற்குணங் கட்கிட மாகியே பரமாய் 

               மேவு சற்குரு பரனிடை மனமொழி மெய்யால் 

               யாவு முற்றவன் றன்னையே சீடனென் றிசைக்குங் 

               காவி யொத்தகண் மலைமகள் பாகனா கமங்கள்.                                        2

 

               சாந்தி தாந்திநற் றவஞ்சம தரிசனம் வாய்மை 

               வாய்ந்து மாண்குரு சிவனிடை யொத்தநன் மனத்தா 

               லேய்ந்து ளான்றனைச் சீடசூ டாமணி யென்பர் 

               தீர்ந்த மாலுடை யொருபர சிவமுணர் திறத்தோர்.                                         3

 

               குருவை மெய்ச்சிவ மாகவச் சிவன்றனைக் குருவா 

               யொருமை பெற்றிடக் காண்கவக் குருபர னுரைத்த 

               திரிவ றச்சிவ நெறிசிவத் தியானமெய்ஞ் ஞான 

               மருவ லுற்றவை நிட்டையி னோங்குக மாதோ.                                         4

 

               அண்ட மொக்குள்சேர் மாயையங் கடலுய ராசான் 

               கண்ட நல்லருள் கடைக்கணால் வற்றுறுங் கலப்பப் 

               பண்டி ரும்பிர தத்தினாற் பசும்பொன மாபோன் 

               மண்ட லந்தனின் மனிதருஞ் சிவமய மாவர்.                                            5

 

               தேசி கன்றன தாணையைக் கடந்திடல் செய்யா 

               னாச கன்றுள ஞானமுற் றடைகுவ னவனாற் 

               பேசு றுஞ்சக மித்தைபே ரறிவது பிரம 

               மேச லின்றது நீயென விசைந்தவன் முத்தன்.                                           6

 

               பிறவி நன்மருந் தாகிய பிரம ஞானத்தை 

               யறவ னென்றுயர் குரவனா லடைந்துவந் தமர்வோ 

               னுறவு வெம்பகை யிலாவுயிர் முத்தனென் றுரைப்பர் 

               மறுவ கன்றுள கலைமுழு துணர்ந்துறு மதிஞர்.                                          7

 

- சீடத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபதாவது

(70) சிசுருடைத்தலம்

[அதாவது - பரப்ரஹ்மாகாரனான ஸ்ரீசத்குருவினால் சதா போதிக்கப்படும் அந்த சிஷ்யன் குருவைக் குறித்து நித்யம் யாது? அநித்யம் யாது? ஜீவன் யாது? சிவன் யார்? என்று வினவுவதே சிசுருடை என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               பீடு றுங்குரு வாலருள் செய்திடப் பெற்ற 

               சீட னொண்குரு சிசுருடை விருப்பினைச் செயலா 

               னாடு றுஞ்சிசு ருடைப்பெயர் நண்ணுவ னென்னப் 

               பாடு றும்புகழ் மாதவ வாகமம் பகரும்.                                                 1

 

               மெய்ம்மை யாதுபொய் யாதுயிர் யாதுதான் விளங்குஞ் 

               செம்மை யார்சிவம் யாதென வினவுவோன் சீட 

               னிம்மை யேசிவ மருள்குரு வின்மொழி கேட்டுப் 

               பொய்ம்மை போயக மமைபவன் வீட்டினைப் பொருந்தும்.                                2

 

               ஆரி யன்றன துரையிலா தலர்வுறா திதயஞ் 

               சூரி யன்றனை யலான்மரை யலர்வுறா சொல்லி 

               னாரி யன்றிகழ் வால்விளங் குவனருஞ் சீடன் 

               சூரி யன்றிகழ் வாற்கதிர்க் காந்தமுஞ சுடரும்.                                           3

 

               சீட னக்குரு பரனெதி ரஞ்சலி செய்து 

               கேடி லத்துவி தானந்த மொன்றையே கேட்க 

               நாடு தத்துவம் யாதுல கெதன்கணே நண்ணும் 

               வீட டுத்துறல் யாதினால் விளம்புக வென்பான்.                                          4

 

               இன்ன வாறருஞ் சீடனேர் வினாவுற விறைவ 

               னின்ன லம்பவ மொழிகுவான் றத்துவ மிசைப்ப 

               னுன்ன ருஞ்சிவ னேபர முண்மையு மவனே 

               யன்னி யங்களா மிச்சக மநித்தமென் றறிவாய்.                                          5

 

               மித்தை யாஞ்சகஞ் சிவனிடை மேவுறும் வெள்ளி 

               சுத்தி மேவல்போற் சிவோகமென் பாவனை தோன்றி 

               னத்த னாகிய சிவநிலை யுண்மையை யடைய 

               முத்த னாகுவன் பவநெறி மூலமா மோகம்.                                             6

 

               மைந்த நீயுனைச் சிவமய மென்னவே மதித்திங் 

               கிந்த வேறெனு முலகினை யெண்ணலை யிங்ஙன் 

               வந்து றுஞ்சிவாத் துவிதவின் பத்தினான் மருவிப் 

               பந்த மின்றிய வுயிர்முத்த னாயினை பகரின்.                                            7

 

               மேவு நற்குணக் குன்றமாங் குரவனால் விளங்கப் 

               பாவ மற்றுயர் போதனை யருள்செயப் பட்டோ 

               னியாவு மிச்சகஞ் சிவமய மேயெனக் கண்டு 

               சீவன் முத்தனா குவனென வாகமந் தெருட்டும்.                                         8

 

- சிசுருடைத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்தொன்றாவது

(71) சேவியத்தலம்

[அதாவது - சுச்ருஷு இவ்வாறு ஸ்ரீசத்குரூபதேச முகத்தினால் சிவாத்வைத ஜ்ஞானத்தை சம்பாதித்துக் கொண்ட பின்னர் சேவியன் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               போத மாபலன் குருமொழி யமுதினாற் பொருந்து 

               மேதை யாமிவ னேயுல கடங்கவும் விரும்பித் 

               தீதி லாதுசே வித்திடப் படுவனாற் றெரியி 

               னாத லாலிவன் சேவிய னெனும்பெய ரடைவான்.                                         1

 

               குரவ னல்குமெய்ஞ் ஞானநெஞ் சகத்தினிற் கூடி 

               விரவு றுஞ்சிவ வடிவமாஞ் சீடனும் விளம்பிற் 

               பரவு றுங்குரு பரனெனப் பூசிக்கப் படுவன் 

               வரமு றுஞ்சிவ ஞானவாழ வினனென மதித்து.                                          2

 

               என்று மெய்ச்சிவ நானெனும் பாவனை யெய்தி 

               நின்ற வற்கிடை யீடிலா திறைநிலைத் திடலா 

               னன்று றச்சிவன் போலவே யிங்கவ னாளுங் 

               குன்ற லற்றுயர் பூசனை கொள்வனென் றறிவாய்.                                        3

 

               ஒழிவ றுஞ்சிவ பாவனை யுடையநல் யோகி 

               யிழிவு றுஞ்செயல் விடயநெஞ் சுடையவ னெனினு 

               மொழியு மவ்விட யங்களின் முத்தனாய் மருவும் 

               வழிப டுஞ்செயல் பரவுமா சிவனென மன்னோ.                                          4

 

               பந்த நாசநஞ் செயுஞ்சிவ ஞானமே பற்றுஞ் 

               சிந்தை யாலுல கோர்பவந் தொலைத்திடல் செயுமா 

               நந்த ஞானமெய்ச் சிவபத மடைந்தநல் யோகி 

               யிந்த மாநிலத் தனைவரும் போற்றிட விருப்பன்.                                        5

 

- சேவியத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் காயாநுக்ரகம், இந்திரியாநுக்ரகம், ப்ராணாநுக்ரகம், காயார்ப்பிதம், கரணார்ப்பிதம், பாவார்ப்பிதம், சிஷ்யன், சிச்ருஷை, சேவியன் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் எல்லாராலும் இவ்வுலகில் போற்றப்பட்டவனும், சிவசாயுஜ்ய பதடைந்த யோகியும், அங்கஸ்த்தலத்து மூன்றாமவனுமான ப்ரசாதியே சிவலிங்கப்ரசாதி என்று அறியப்பட்டான்.

3 - வது சிவலிங்கத்தலம் முற்றும்
- - - - - -

 



 

4 - வது ஜங்கமலிங்கத் தலம்

[அதாவது - சாந்திகலா சமேதமாய் ஆதிசக்தியுடன் கூடி அமூர்த்த சாதாக்யத்தைப் பொருந்தி மனோகம்யமாயிருத்தல் என்பது. (பிராண லிங்கிக்குச் சேர்ந்த உட்பிரிவுகள்)]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        நற்பிர சாதி யெய்துந் தலத்திற நயந்து ரைத்தாய் 

        பிற்பெறு பிராண லிங்கி தலத்தினிற் பேதந் தானுஞ் 

        சொற்பொருள் விளங்கு மாறு சொல்லுக வடிய னேற்குப் 

        பொற்புறு கயிலை காக்கும் புகழ்மலி கணங்கள் வேந்தே.                                         1

 

        பொற்புறு மான்மா மூன்றும் புகழுமா கமங்கண் மூன்றுந் 

        தற்பிர சாத மூன்று மாகவே தலங்க ளொன்பான் * 

        சொற்பெறு பிராண லிங்கி தொடர்ந்துள தலமி வற்றை 

        வெற்பமர் முனிவர் வேந்தே விளம்புது முறையிற் கேண்மோ.                                    2

* ஜங்கமலிங்க ஷட்பக்தர்கள் :- ஜங்கம லிங்கமோஹி, ஜங்கம லிங்கபக்தன், ஜங்கம லிங்கபூஜகன், ஜங்கம லிங்கவீரன், ஜங்கம லிங்கப்ரசாதி, ஜங்கம லிங்கப்ராணி, என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், பூர்வாசாரங்களை நிஷேதித்தவனே ஜங்கம லிங்கமோஹி, ஜாதிகுலாபிமானங்களை விட்டவனே ஜங்கம லிங்கபக்தன், அந்யார்ச்சனைகளை விட்டவனே ஜங்கம லிங்கபூஜகன், அர்த்தப்ராணாதிகளை ஜங்கமத்திற்குக் கொடுத்து மீளவும் மோஹிக்காதவனே ஜங்கம லிங்கவீரன், ஜங்கமத்திற்கு சகல த்ரவ்யங்களைக் கொடுப்பதன்றிக் கொள்ளாம லிருப்பவனே ஜங்கம லிங்கப்ரசாதி, ஜங்கமமே ஸாக்ஷாத் சிவமென்னும் விச்வாசியே ஜங்கம லிங்கப்ராணி.

த்ரிவித ஜங்கம லிங்கம் :- ஸ்வயலிங்கம், சரலிங்கம், பரலிங்கம் என மூவகைப்படும். இவைகளில், சிவலாஞ்சனம் தரித்தவனே லிங்கமென்றறிந்து பாஹ்யகர்ம பரித்யாகத்தினால் சதானந்தி யாயிருப்பதே ஸ்வயலிங்கம், சிவலிங்கத்துடன் சர்வேந்த்ரியங்கள் கூடிக் கொண்டு பேதப்ராந்தி மீளவும் உண்டாகாமல் நிஜாநந்தத்தினால் ஸ்வேச்சையாய் விஹரிப்பதே சரலிங்கம், ஸ்த்தாவர ஜங்கமாதி ஸகலத்திலும் தான் என்பதே பரலிங்கம்.)

 

எழுபத்திரண்டாவது

(72) சீவான்மத்தலம்

[அதாவது - பூர்வோக்தனான சேவ்யஸ்தலத்தை யடைந்த ப்ரசாதியே ஸ்ரீசத்குரு வினாலுண்டான சிவஜ்ஞானத்தினால் ஜீவபாவனையை விட்டு எப்போது பரதத்வத்தைப் பாவிக்கின்றானோ அப்போது சீவான்மா என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        ஆரிய னருளு ஞான போதனை யடைந்த விந்தச் 

        சீரியன் சீவ பாவந் தீர்ந்துநற் றத்து வத்தை 

        யோரியல் பொடுபா விக்குங் காலையி லுணர்ந்து ளோர்நற் 

        பேரிய லான்மா வென்னப் பெற்றிடு முலகி லன்றே.                                               1

 

        பகர்ந்திடி லுண்மை வாலாக் கிரசத பாக மொத்து 

        நுகர்ந்துறு வினையின் பேறு நுண்ணிய னாகு மான்மா 

        வகந்தனி லிருளி ரிக்கு மருஞ்சுடர் போலிருந்து 

        திகழ்ந்திடு மென்று சொல்வர் சிவாகம நெறியு ணர்ந்தோர்.                                         2

 

        ஆணவத் தடையி னாலோ ரணுவென வாதி கன்ம 

        நாணுற வசைக்கப் பட்டு நவிலினுண் ணியனா மான்மா 

        வேணுறுங் கரணந் தன்னை யிசைந்துளா னென்றி சைப்பர் 

        தாணுவி னமல நூலாற் றமையுணர்ந் தமைந்த மேலோர்.                                         3

 

        தெள்ளுறு பளிங்கு தானோர் சேயொளி யரத்தச் சார்வாற் 

        கொள்ளுறு மிலங்கு செம்மை குறித்திடி னவ்வா றேபோல் 

        விள்ளரு மாங்கா ரத்தின் சார்வினால் விளங்கு மான்மாத் 

        தள்ளரு முடலின் மானந் தரிக்குமென் றறிந்து கொள்ளே.                                        4

 

        நிரஞ்சன மாய வான்மா நிறைந்தவ னெங்கு மேனும் 

        வருஞ்செய லுடலி லாதா னாயினு மாயை தந்த 

        புரஞ்செறி பவனாய் நின்று புகலரும் பவங்க டோறுந் 

        திரிந்திடு மென்று கூறுஞ் சிவனரு ளாக மங்கள்.                                                5

 

        மெய்யுட னிந்தி யங்கள் வேறுசெய் வழியி னாலே 

        பொய்யறு மகண்டா நந்த பூரண பிரம ரூபா 

        லையம தறவே யான்ம சொரூபநன் கறிதல் செய்யச் 

        செய்யுமெந் நாளந் நாளான் மாவினைச் சேர்த லென்பார்.                                        6

 

        உடம்பறு மான்மா விற்கோ ருடலிலை யியல்பா லேனு 

        மடந்தரு மவித்தை கன்ம மருவலா லவன்றா னிங்குத் 

        தொடர்ந்துள நுகர்விற் காகத் தோன்றுவன் றேகி யாயென் 

        றொடுங்கிய புலவ ழக்க முடையவ ருரைப்ப ரன்றே.                                             7

 

        தேவல னியக்கர் நற்கந் திருவரோ டரக்கர் மக்கண் 

        மாவல னிற்ப வற்றின் வடிவலன் வயங்கு மான்மா 

        யாவன்மற் றென்னி னவ்வவ் வுடம்புறு மிசைவி னாலே 

        மேவுவ னவற்றா னாம மென்றறி விளக்க மிக்கோய்.                                            8

 

        பற்பல கருமந் தன்னாற் பற்பல யோனி யெய்திப் 

        பற்பல மதிபொ ருந்திப் பற்பல நெறியி னெய்தி 

        யற்பமென் றறிவு டன்சிற் றிறைமையு மடைந்த சீவன் 

        சிற்பர னாட லுக்கோ ரிடமெனச் செறியு மன்றே.                                                9

 

        தன்னுறு வினையி னாலச் சம்புவா லியக்கப் பட்டு 

        வெந்நர கொடுது றக்க மேவிய கரும சேட 

        மன்னுற வனைவ யிற்றில் வந்துதித் திறந்து தோன்றி 

        யின்னண முழலுஞ் சீவ னிரும்பவத் தமைதி யின்றி.                                            10

 

        அருந்துயர்க் கிடம தாயஞ் ஞானகற் பிதமே யாகிப் 

        பொருந்திநின் றுள்ள சீவத் துவமுடன் போகு மாசான் 

        றிருந்தருண் மொழியான் ஞான சத்தியுந் திகழு மென்பர் 

        பரந்துள கலைகண் முற்றும் பழுதறக் கற்ற மேலோர்.                                           11

 

- சீவான்மத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்துமூன்றாவது

(73) அந்தரான்மத்தலம்

[அதாவது - ஜீவாத்மா தேகத்திலிருப்பினும் தோகாபிமான மில்லாமல் ஸ்ரீசத்குரூபதேசத்தின் ஸ்வஸ்வரூப ஜ்ஞானத்தினால் ஜீவபாவத்தைப் போக்கிக்கொண்ட ஆத்மாவே அந்தரான்மா என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        தேசிக னருளி னாலே சீவபா வந்தா னென்று 

        நாசம தடையு மன்று நசித்திடப் பட்ட வற்குப் 

        பாசமி லந்த ரான்ம பாவம்வந் துறுமென் றோர்வாய் 

        மாசறு தவத்தின் மிக்க மலயவெற் பமர்ந்த மேலோய்.                                           1

 

        அறைந்தவச் சீவன் மெய்யோ டடுக்கினு முடல பந்தந் 

        துறந்தொரு பரமான் மாவை யுள்கலாற் றுளங்கு சீவ 

        னிறைந்துள பரம னாப்ப ணிற்றலா லுபயத் தன்மை 

        பெறுந்திற மதனா லெய்தும் பிறங்குமந் தரான்ம நாமம்.                                         2

 

        முற்றுறு மனிதத் தன்மை முதலவாங் காரச் சார்வான் 

        மற்றவை யியல்பன் றென்று மதிப்பவ னந்த ரான்மாச் 

        சொற்றிடு மவன்பு னற்கட் டோன்றுபா சிலையுந் துன்னத் 

        தெற்றுறு குடம்பைப் புள்ளும் போலவே மெய்யிற் றீர்ந்தான்.                                       3

 

        மதிதனை யடையா மேக மறைத்திடப் படல்போ லான்மாப் 

        பொதியுட லகல நின்று புணர்த்திடப் படுவன் மெய்யா 

        மிதனிடை யுறினு மாழ்கி யானென தென்ப தில்லோன் 

        பதியெனுஞ் சிவனை யோகப் பயிற்சியாற் காண்ப னென்றும்.                                     4

 

        போத்துரு வாம வற்கும் போக்கிய மாம வற்றைப் 

        பேர்த்திடு தலினான் மிக்க பிரேரக னருளி னாலே 

        போத்துருப் பாவ நீங்கிப் பொலிகுவ னெங்கு நின்று 

        காத்தருள் பரமற் கண்டு களிக்குவ னந்த ரான்மா.                                                 5

 

- அந்தரான்மத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்துநான்காவது

(74) பரமான்மத்தலம்

[அதாவது - அந்தராத்மா, தான் சிவாத்வைத ஜ்ஞானசக்தியினால் சம்சாரமூலமான அஜ்ஞானத்தைப் போக்கிக் கொள்ளவும் பரமான்மாவினிடமுள்ள சாமரஸ்யம் ப்ராப்தமாதலால் பரமான்மா என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        பரமமெய்ஞ் ஞானந் தன்னாற் பவநெறிக் கேது வாகு 

        மிருண்மல மகலு மாற்றாற் பரமனோ டிருக்கும் பற்றா 

        லுரமுறு பரமான் மாவென் றுரைத்திடப் படுவ னன்னோன் 

        றிரைமலி கடல்கு டித்துத் தேக்கெறி முனிவ ரேறே.                                               1

 

        தன்னொளி யானிறைந்து தான்மிளிர் சிவனே யிங்ங 

        னுன்னுமான் மாக்கட் கெல்லா முயர்தலாற் பரமான் மாவா 

        மன்னுமா மாயை யென்னும் வாரியு ளண்ட மொக்குள் 

        சின்னமா யெழுந்த டங்கச் செய்பவன் பரமான் மாவாம்.                                          2

 

        யாதினி லொளிக ளெல்லா மெரியினிற் பொறிபோற் றோன்றி 

        மாய்தரும் பரம னுக்கவ் வடிவமாந் தத்து வங்கள் 

        யாதினிற் கடற்ற ரங்க மென்னவந் தெழுந்தொ டுங்கு 

        மோதுமவ் வடிவ மாகு மொருபர மான்மா விற்கே.                                               3

 

        உலகினுக் குயிரு மாகி யொழிந்திடு மலத்த னாகி 

        யிலகுமப் பரமன் றன்னை யிசைப்பர்தத் துவத்தின் மேலோ 

        யலரிதன் கதிரா லெங்கு மவிர்தல்போற் பரமன் றானும் 

        விலகிலச் சத்தி தன்னால் வியாபித்து விளங்கு மன்றே.                                          4

 

        எங்கணு மொளிர்வோ னேனு மகிலமு மிறந்து நின்ற 

        பொங்கறி வுருவ மாகப் புகன்றிடு பரமன் சீவர் 

        தங்களுக் கொருதன் சோதி வடிவமாய்ச் சாரு மென்பர் 

        மங்கலப் பொருளை யீன்ற மலயவெற் பமர்ந்த மேலோய்.                                         5

 

- பரமான்மத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்தைந்தாவது

(75) நிர்த்தேகாகமத்தலம்

[அதாவது - சிவயோகி பரமாத்ம பாவனையைச் செய்து, அகங்கார மமகாரங்களைத் துறந்து, ஸ்தூலாதி சரீர தர்மங்களை த்யாகம் செய்திருப்பதே நிர்த்தேகாகமம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        ஓவுறு மகந்தை யோனா யுயர்தரு பரமான் மாவைப் 

        பாவனை புரிவோ னாகிப் பழுதுடற் றரும நீங்கி 

        மேவுறு தேகிக் கிங்கு விளம்புவ ரறிவ றிந்த 

        நாவலர் விளங்கு நிர்த்தே காகம நயந்து மாதோ.                                                1

 

        இரும்பவ மூல மாகு மியானென தென்ப தின்றி 

        யரும்பர நானென் றன்மை யடைந்தவற் குடல முண்டோ 

        வருஞ்சகங் கடந்து ஞான வாரிதி தன்னின் மூழ்கு 

        முரம்பெறு யோகி யெவ்வா றுடம்பினைச் சிந்தை செய்வான்.                                    2

 

        தன்னையோ ரெல்லை யில்லாத் தனிச்சிதம் பரமாய்க் கொள்வோன் 

        மன்னுமா யினுமு டம்பில் வடிவுறு விகார மொன்றான் 

        றன்னைவே றிலாமற் சச்சிதா நந்த பரமா காச 

        மென்னவே யுணர்ந்த யோகி யாண்டமோ கத்திற் சேர்வான்.                                        3

 

        ஒருபொரு ளிடத்திற் பேத முபாதியாற் றோன்று மென்னத் 

        தெருளுற வுணர்வோற் குண்டோ தேகத்தி னளவா யுற்றல் 

        விரிவுறு பேத புத்தி வினைப்பரிச் சேத வேது 

        வரிதெனு மபேத புத்தி யதுதனக் கேது வாமோ.                                                 4

 

        நிரம்பிய சிவோக மென்னு நினைவுவந் தியார்க ணுண்டாம் 

        வரம்பெறு மவனுக் கெங்கு மருவுறா துடல பந்த 

        மிருங்கடன் முகட்டெ ழுந்த வமுதினு மினிமை பெற்ற 

        வருந்தமிழ் பயந்த செவ்வா யகத்தியப் பெயரி னானே.                                           5

 

- நிர்த்தேகாகமத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்தாறாவது

(76) நிர்ப்பாவாகமத்தலம்

[அதாவது - நிர்த்தேகாகம சம்பந்நனான சிவயோகிக்கு இந்த்ரிய விகாரமில்லாத மநோவ்யாபாரம் சித்திப்பதே நிர்ப்பாவாகமம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        அப்பெருஞ் சொரூப முள்ள வவற்குமா றாகு மென்னச் 

        செப்புறு பாவ பேதஞ் சிதைந்திட விகார நீங்கு 

        மெய்ப்புறு பாவ நிர்ப்பா வாகம மெனவி ளம்புங் 

        கைப்பொலி மழுவொன் றுள்ள கடவுளா கமங்க ளன்றே.                                         1

 

        பிரமநா னெனுமி ரண்டு பெரும்பொருள் பாவத் தெய்தும் 

        பரமதி லொன்றா தற்கப் பாவமின் றென்ப துண்மை 

        புரையறு சிதம்ப ரத்தி கேமாய்ப் பொருந்தி னோற்கு 

        வரையறு சாதி மேனி யலமரன் மருவு றாவால்.                                                2

 

        உரைமன மிறந்து நின்ற வொருபெருஞ் சிதாகா சத்தி 

        லிருமையின் றிலயித் தொன்றா னேதினா லெதைப்பா விப்பன் 

        றிரையறு ஞான வாரி சேர்ந்தடங் கினற்குச் சிந்தை 

        மருவுறு பாவஞ் சங்கற் பனையிவை மருவு மோதான்.                                          3

 

        நல்லிட மல்லி டங்க ளெனாதுசெஞ் ஞாயிற் றின்பே 

        ரெல்லொளி விழல்போல் யோகி யெங்ஙணு மொப்பக் காண்பன் 

        சொல்லரு மறிவா நந்த சுகிபசி தாகத் தின்கட் 

        செல்லுதல் செய்யான் மூப்பு மரணத்திற் சிறிது மஞ்சான்.                                         4

 

- நிர்ப்பாவாகமத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்தேழாவது

(77) நட்டாகமத்தலம்

[அதாவது - த்வைதசூந்யமான மகா சிவஜ்ஞானத்தில் ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேயங்களென்னும் த்ரிபுடிமயமான த்வைத ப்ரபஞ்சம் சூந்யமாகவும், நிர்ப்பாவாகம சம்பந்நனான சிவயோகிக்கு பேதஜ்ஞானம் நஷ்டமாவதே நட்டாகமம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        பேதமி லாத மாபோ தத்தினிற் பிரிந்து நின்ற 

        ஞாதுரு வாதி யிங்கு நண்ணலான் ஞானத் தின்கட் 

        போதுறு நட்ட பாவம் புகல்வர்நட் டாக மந்தான் 

        றீதறு கலைகண் முற்றுந் திருந்துறக் கற்ற மேலோர்.                                            1

 

        ஏகமா நினைவு தோன்று மிதயத்திற் றனைக்கண் டோன்வே 

        றாகுஞா துருத்து வத்தை யடைவதெவ் வாறு சொல்லா 

        யோகையார் கருத்தா வல்லே னுணர்பவ னல்லே னல்லேன் 

        றேகநா னிமல னென்னுஞ் சிந்தையாற் கொளிரு ஞானம்.                                        2

 

        தணந்திடும் பேத முள்ள சாந்தனாய்த் தன்னிற் றானே 

        யணைந்தடங் குறுநல் யோகிக் கயலொரு ஞேய முண்டோ 

        விணங்கிடிற் றன்சொ ரூப ஞானத்தி லேக மாக 

        வுணர்ந்திடு பொருள்சி றந்த வுணர்வுணர் பவனெவ் வாறாம்.                                       3

 

        உண்டெனு மொருமா சித்தே யுலகமாய் விளங்கி நிற்குங் 

        கண்டிடு மறிவை யன்றிக் காண்பொருள் வேறொன் றில்லை 

        விண்டுறு பேத புத்தி மேவினோற் கென்று கூறும் 

        பண்டரு மறைக ளெல்லாம் பராரைவெற் பமர்ந்த மேலோய்.                                       4

 

- நட்டாகமத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்தெட்டாவது

(78) ஆதிப்பிரசாதித்தலம்

[அதாவது - பூர்வோக்த நஷ்டாகம சம்பந்நனான சிவயோகி, சிவன் தனது ப்ரபஞ்சத்திற்கு ஆதாரபூதனாகவும், அதற்கு நியாமகனாகவும், ஸ்ருஷ்ட்யாதி பஞ்சக்ருத்யங்களுக்கு மூலகாரண னாகவும், அனைத்திற்கும் ஆதிபுருஷனாகவு மிருப்பனென்றறிந்து அவனுடைய அநுக்ரகத்தை யடைவதால் ஆதிப்பிரசாதி என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        அனைத்தினு மதிட்டித் துள்ள சம்புவே யாதி யாமத் 

        தனிப்பரன் பிரசா தத்தால் விகாரமில் பதத்தைச் சார்வுற் 

        றினைப்பறு மவனை யாதிப் பிரசாதி யென்று கூறும் 

        பனிக்கதிர் தவழும் வேணிப் பராபர னருளு நூலே.                                                1

 

        புனிதனாய்ப் பலபி றப்பிற் பொருசக வகந்தை யுள்ளோற் 

        கினிதுறு மாதி தேவ னிரும்பிர சாத மென்ப 

        வனைசிவப் பிரசா தத்தான் மலிசிவ மாயி னோற்குக் 

        கனைசகங் காண்ப தாயுங் காணுறப் படாது கண்டாய்.                                            2

 

        பிறப்பெறி மூல மாகும் பிரான்பிர சாதந் தன்னா 

        லறப்பெறு மோக முத்தி யடைகுவன் பிறவி வெந்நோய் 

        சிறப்பரன் பிரசா தத்தா லன்றியே தீர்ந்தி டாதால் 

        வெறுப்பிரு ளிரவி யன்றி வீயுமோ வுலகந் தன்னில்.                                            3

 

        அகிலமு மளிக்கு மீச னருளினா லுயிர்கட் கெல்லாம் 

        புகலுறு பாச நீக்கம் புரிவனிப் புரித லின்கண் 

        முகிழிள மதிய ணிந்த முதல்வனுக் கேது வின்றா 

        லிகலுறு புலன டங்க ஞானவா ளெடுத்த வேலோய்.                                               4

 

- ஆதிப்பிரசாதித்தலம் முற்றிற்று -
* * *

 


 

எழுபத்தொன்பதாவது

(79) அந்தியப்பிரசாதித்தலம்

[அதாவது - சகல பதார்த்தங்களுக்கும் லயஸ்த்தானனான பரசிவனே அனைத்திற்கும் அந்த்யனாயிருப்பன் என்றறிந்து, அந்த சர்வாந்த்யனான சிவனுடைய அநுக்ரகத்தை யடைபவனே அந்தியப்பிரசாதி என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        ஆகிய பதார்த்த மெல்லா மடங்குறு மிடமாய் நிற்கு 

        மேகனந் தியனா மென்ப ரிவனநு பவமே யிங்குச் 

        சீர்கெழு பிரசா தப்பேர் சேர்ந்திடு மிதனைப் பெற்ற 

        யோகியென் பவன் றானேயந் தியப்பிர சாதி யோர்வாய்.                                          1

 

        சுரர்நரர் மிருக மாதி தோற்றுறு மாயை மாயிற் 

        பரனிடை யதுப யந்த பதார்த்தமு மாயு மென்ப 

        ருரமுறு சத்தாநந்த வொருபொரு ளுண்மை பெற்றா 

        னிரைதரு பதார்த்த ஞானம் யாதுயர் ஞேயம் யாதோ.                                            2

 

        கனவிடைக் கண்ட தெல்லாங் கழிந்திடும் விழிப்ப மாயை 

        தனில்வரு வனமெய்ஞ் சார்ந்திட மாய்ந்து போகு 

        முனலருஞ் சுழுத்தி யோனுக் கொன்றுமங் கெதிரா வாபோ 

        லினலறு சீவன் முத்தற் கெதிர்ந்திடா தொன்று மன்றே.                                           3

 

        அந்தரம் விகார மின்றி யகண்டித மாகு மாபோ 

        லுந்துறு சீவன் முத்த னுருவமும் விளங்கு மென்பர் 

        சிந்தனை செய்து காண்கை செய்கையம் முத்தற் கில்லை 

        நிந்தையில் சுகநி றைந்த நிச்சல னாகி மேவும்.                                                 4

 

        பரசிவாத் துவித ஞான பலத்தினா னழுவப் பட்ட 

        விரிதரு பொருளு ளானாய் மெய்யுணர் வினையே காண்போற் 

        கொருவனா லாவ தாக வுறுபொரு ளில்லை யென்ப 

        ரரவுலாம் வேணி முக்க ணமலனா கமங்கள் வல்லோர்.                                          5

 

- அந்தியப்பிரசாதித்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பதாவது

(80) சேவியப்பிரசாதித்தலம்

[அதாவது - அனைத்திற்கும் சிவனே சேவ்யன் (குரவன்) என்றறிந்து அவனுடைய அநுக்ரகத்தை யடைபவனே சேவியப்பிரசாதி என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        தேசிகன் சிவனே யந்தத் தேசிகன் சேவி யன்றா 

        னாசிலிங் கவன்ற னாதோ ரநுபவ மெவற்று மேலாய்ப் 

        பேசுறும் பிரசா தப்பேர் பெற்றுள ததனைப் பெற்றோன் 

        வீசுறும் பவமு றுஞ்சே வியப்பிர சாதி யாகும்.                                                  1

 

        குரவனே பரம னந்தப் பரமனே குரவ னென்ப 

        விரவுமிவ் வேகமாகு மநுபவ மெய்ம்மை யென்று 

        முரைமன மிறந்த தன்பே ருருவவின் பங்கண் டுற்றோன் 

        மருவுறு மயலொன் றின்கண் மனம்விழைந் திடுமோ சொல்வாய்.                                 2

 

        ஞானவா ரமுதந் தன்னா னன்றுற நிரம்பி னோனுக் 

        கேனையூண் பொருளா லென்கொ லெய்துதல் சத்தா மீசன் 

        ஞானமே கொண்டு பேரா னந்தநின் றிலக்கு மென்னும் 

        பானல்வா ளரிநெ டுங்கட் பாவைபங் குடையோ னூலே.                                         3

 

        சத்துட னறிவா னந்தத் தகுமிலக் கணத்த தாகு 

        முத்தியே யுயர்தி ருத்தி யென்குவர் முதனூல் கண்டோர் 

        நித்திய நிரம்பல் பெற்ற நிகரிலம் முத்த னுக்குத் 

        துய்த்திடு பொருள்க டம்மாற் றோன்றுறு பயனென் சொல்வாய்.                                   4

 

        சிவம்பெறு மேக ஞானஞ் சேர்ந்துடன் மயக்கி லாற்குப் 

        பவம்பெறு கரும மில்லைப் பகர்தரிற் புறவ கத்துந் 

        தவஞ்செபந் தியானம் யோகஞ் சார்ந்திடா வவற்றின் மேலா 

        யுவந்துள ஞானந் தன்னி லுற்றிடு மவனுக் குள்ளம்.                                             5

 

- சேவியப்பிரசாதித்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் நிர்த்தேகாகமம், நிர்ப்பாவாகமம், நஷ்டாகமம், ஆதிப்ரசாதி, அந்த்யப்ரசாதி, சேவ்யப்ரசாதி என்னும் ஆறு ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் சிவைக்யஜ்ஞான மடைந்து சித்தவ்ருத்தியின்றி ஜ்ஞாநியானவனும் அங்கஸ்தலத்து நான்காமவனுமான ப்ராண லிங்கியே ஜங்கமலிங்கப்ராணி என்று அறியப்பட்டான்.

4 - வது ஜங்கமலிங்கத்தலம் முற்றும்
- - - - - -

 



 

5 - வது பிரசாதலிங்கத் தலம்

[அதாவது - சாந்த்யாதீதகலா சமேதமாய்ப் பராசக்தியுடன் கூடி தசிவசாதாக்யத்தைப் பொருந்தி ஜ்ஞானைக்ய கம்யமாயிருத்தல் என்பது.]

( சரணனுக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )

 

                       கலிவிருத்தம்

 

               உரைத்தனை விளங்குற வுயிரி லிங்கித 

               னிரைத்தல மனைத்தையு நீயெ னக்கினி 

               யருட்சர ணத்தல மடைந்த வற்றையுங் 

               கருத்துற வருளுதி கணங்கள் வேந்தனே.                                                1

 

               அத்தல மடைவுற வடிப்பு னற்பினிட் 

               பத்திவிண் ணொளியின்மும் மூன்று பாலவாய் 

               வைத்துள பன்னிரு தலமு மாசற * 

               மெய்த்தவ வறைகுதும் விழைந்து னக்கரோ.                                            2

* ப்ரசாதலிங்க ஷட்பக்தர்கள் :- ப்ரசாதலிங்கமோஹி, ப்ரசாத லிங்கபக்தன், ப்ரசாதலிங்கபூஜகன், ப்ரசாதலிங்கவீரன், ப்ரசாதலிங்கப்ரசாதி, ப்ரசாதலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், அந்யருசியை யறியாதவனே ப்ரசாதலிங்கமோஹி, பூர்வாகாரங்களை விட்டவனே ப்ரசாதலிங்கபக்தன், அந்யருடன் ஸ்நேகம் சம்பாஷணை தானம் ப்ரதிக்ரகாதிகளில்லாதவனே ப்ரசாதலிங்கபூஜகன், அந்ய த்ரவ்யங்களைக் கையாற்றொடாதவனே ப்ரசாதலிங்கவீரன், ஜீவஹிம்சைகள் எவ்விடத்திலும் செய்யாமலும் செய்விக்காமலு மிருப்பவனே ப்ரசாதலிங்கப்ரசாதி, ஆத்மநிக்ரஹம் செய்தவனே ப்ரசாதலிங்கப்ராணி.

த்ரிவித ப்ரசாதலிங்கம் :- சுத்தம் சித்தம் ப்ரசித்தம் என மூவகைப்படும். இவைகளில், குரு புஜித்த சேஷமே சுத்தமாம், லிங்கம் புஜித்த சேஷமே சித்தமாம், ஜங்கமம் புஜித்த சேஷமே ப்ரசித்தமாம். இதுவன்றி, மற்றொருவிதமாய்ப் பொருள் கூறுதலுமுண்டு - அதாவது, பூர்வத்திலிருந்த சகல குணங்களையும் த்யாகம் செய்து காமாதிகளைவிட்டு லிங்கத்தில் பற்றுறுவதே சுத்தமாம், சிவஜ்ஞானோதயமாவதே சித்தமாம், திவோஹம் பாவனையில் நிலைத்திருப்பதே ப்ரசித்தமாம்.)

 

எண்பத்தொன்றாவது

(81) தீக்ஷாபாதோதகஸ்த்தலம்

[அதாவது - சிவதீக்ஷையினால் த்வைத ஜ்ஞானம் நஷ்டமாகி, குரு சிஷ்யர்களுக்கு அபேத ஜ்ஞானம் பிறந்து, அதனுடன் சாஸ்வதமான ஆனந்தரசம் ஐக்யமாவதே தீக்ஷாபாதோதகம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        ஆரிய னோடு சீட னானந்தத் தயிக்க மாகச் 

        சீரிய தீட்சை யாலே தீர்ந்துள பேத முள்ள 

        பேரியன் ஞானந் தன்னாற் பெருங்கலை யுணர்ந்த மேலோ 

        ரேரியன் முனிவ தீட்சா பதோதக மியம்பு வாரால்.                                               1

 

        பாதமென் கிளவி யாலே பகர்தரப் படுவ னாசான் 

        மேதைகொ ளுதகச் சொல்லால் விளம்புறப் படுவன் சீடன் 

        றீதறு தீட்சை தன்னாற் செப்புறு மிவர யிக்க 

        மேதமி லுலகிற் றீட்சா பதோதக மென்ன நிற்கும்.                                                 2

 

        பரித்திடும் பரமா னந்தம் பாதமென் கிளவி ஞான 

        முரைத்திடு முதகந் தீட்சை யுரைத்திடு மிவற்ற யிக்கந் 

        தெரித்தவிஞ் ஞானா னந்தஞ் சேர்ந்துதான் பேத மின்றி 

        வரைத்தொரு பொருளுங் கண்ணாற் காண்குறான் மான யோகி.                                   3

 

        ஆரிய னருளி னாலே ஞானவா ரமுத முண்டு 

        சீரிய பரம யோகி தீர்ந்துவெம் பிறவி நோய்தா 

        னோரிய லாடல் செய்தே யொழுகுமென் றறிந்து கொண்ணீ 

        கூரிய விலைவேற் செங்கைக் குமரனாற் றருமங் கண்டோய்.                                       4

 

- தீக்ஷாபாதோதகஸ்த்தலம் முற்றிற்று -

 


 

எண்பத்திரண்டாவது

(82) சிக்ஷாபாதோதகஸ்த்தலம்

[அதாவது - தீக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகி சிக்ஷாபாதோதகத்தையடைய வேண்டும், அதனால் பாதோதக சப்தவாச்யரான குரு சிஷ்யர்களின் அபேத ஜ்ஞானம் தீக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகியை ப்ரேரேபிக்கும், அதனால் அந்த சிக்ஷா ஜ்ஞானங்களின் சாமரஸ்யமுண்டாம், அதனாலாகிய சுகாநுபவத்தைச் செய்வதே சிக்ஷாபாதோதகம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        யாதொரு சிட்சை யிங்குக் குருசீட மயமா ஞானந் 

        தீதறு மியோகிக் காகச் செய்திடு மவையி ரண்டும் 

        பேதம தறக்க லந்த பெருமையை யுரைப்பர் நல்லோர் 

        மாதவ முனிவ சிட்சா பதோதக மென்ன மாதோ.                                                1

 

        மதியெனு மந்த ரத்தால் வாய்த்தநூற் கடலை யாசான் 

        விதிமுறை கடையத் தோன்றும் விளங்கறி வமுத முண்ப 

        னெதிரறு மியோகி முத்தி யிரவினிற் பரமா காசத் 

        துதிதரு ஞானத் திங்க ளின்பநல் லொளியே காண்பன்.                                           2

 

        வரைந்துள தேச கால மருவறும் பரமா னந்தம் 

        பொருந்தினோன் காண்ப கேட்ப வறிவவாம் பொருளிங் கில்லை 

        யொருங்கிய பரமா னந்த யோகிபால் விடய வேட்கை 

        வருங்கொலொண் கங்கை பெற்றோன் மதிப்பனோ கூவ நீரை.                                    3

 

        அலையில்பே ரின்ப வாரி யமிழ்ந்துவன் பரம யோகி 

        யெலையிலவ் வாரி திக்கோ ரெல்லையு முண்டோ சொல்வாய் 

        கலைமலி குரவன் மிக்க கருணைவா னிலவு திப்ப 

        மலர்தரு நெஞ்ச நீல மருவினோன் மயங்கு றானால்.                                            4

 

- சிக்ஷாபாதோதகஸ்த்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்துமூன்றாவது

(83) ஞானபாதோதகத்தலம்

[அதாவது - சிக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகி குரூபதிஷ்ட ஜ்ஞானத்தினால் ஜ்ஞானானந்தத்தை யடைவதே ஞானபாதோதகம் என்பது.]

                       கலிவிருத்தம்

 

               நாடுமா னந்த ஞானங்க ளேயிவண் 

               டேடரு ஞானதே சிகன்மற் றன்னவை 

               கூடிய சமரசங் குலவு பாதநீர் 

               சீடனென் றுரைத்திடச் சிறந்து ளோர்க்கரோ.                                             1

 

               நிறைவொடு நிமலமாய் நின்ற வித்தையா 

               மறையர வொடுபுயன் மாறி யின்பமா 

               மறைகடல் பொலியவா னந்தச் சோதியாற் 

               கறையறு ஞானவெண் கதிரி லங்குமால்.                                                2

 

               அறிவெனு மதிவர வவித்தை யாகிய 

               செறியிரு ளொழிதரச் சிதானந் தங்களே 

               குறியெனு மொருபெருங் கோலந் தோன்றுமா 

               லுறவொடு பகைதவிர் யோகி கட்கரோ.                                                 3

 

               மாயைவல் லிரவற வந்து ஞானமாஞ் 

               சேயொளி யிரவிதான் றிகழுங் காலையிற் 

               போயுற வுலகியல் வழக்கம் போற்றுறான் 

               றூயநல் யோகிதான் றுயிலு மென்பவே.                                                4

 

               அகன்றிட வனாதியா மவித்தை நித்திய 

               சுகந்திகழ் பரமமாஞ் சூரி யன்றனிற் 

               புகுந்துறு மனமுடைப் புனித யோகிதான் 

               சகந்தரு கற்பனை தன்னிற் றோய்வுறான்.                                                 5

 

               மெய்ப்பர சுகமொடு விளங்கு சோதியர்க் 

               கொப்பல ரயனரி யுரத்தி ரன்கதி 

               ரப்படி தமையுணர்ந் தவர்க்கத் தேவர்தாந் 

               துய்ப்புறு சுகஞ்சிறு துளியொன் றாகுமால்.                                                6

 

               மானுடர் சிறுசுக மருவு மிந்திய 

               ஞானம தடைகுவர் நச்சி யிந்திய 

               மானம தறுபரா நந்த வாழ்வினைத் 

               தானெவர் விரும்புவார் சார்தற் கெண்ணியே.                                            7

 

- ஞானபாதோதகத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்துநான்காவது

(84) கிரியாநிட்பத்தித்தலம்

[அதாவது - ஜ்ஞானபாதோதக சம்பந்நனான சிவயோகி கிரியையை யாசரிப்பதாயினும் ரஜ்ஜுவினிடத்தில் சர்ப்ப ப்ராந்தி யுண்டாவது போல க்ரியா ஜந்யமான பலன் அவனைப்பற்றா திருப்பதால் கிரியாநிட்பத்திமான் என்பது.]

                       கலிவிருத்தம்

 

               உன்னரும் பரமநல் யோகி தன்கணே 

               மன்னுறுங் கிரியையோர் வன்க யிற்றினிற் 

               பன்னகம் போன்றுகற் பிக்கப் பட்டதா 

               லன்னவன் றான்கிரி யாநிட் பத்திமான்.                                                 1

 

               சிறப்புறு ஞானிசெய் செயல்கள் யாவுமிப் 

               பிறப்புறு காரண மல்ல பேரழல் 

               வறுப்புறு விதையினை மண்ணி னொண்முளைக் 

               குறப்பெறு மேதுவென் றுரைக்க லாகுமோ.                                                2

 

               தீதறு ஞானிதன் செயல்க ளாலவற் 

               கேதுள தெய்துவ திருள்வி ழுங்குறு 

               சோதிகொண் மதிக்கெதிர் தோன்றும் விம்பமார் 

               வாதைய துளதுகொன் மதித்து நாடினே.                                                 3

 

               திங்களுக் கிரிதருஞ் செயல்வி சும்பினா 

               லிங்குரைத் திடுதல்போ லிசைந்த வாக்கையான் 

               மங்கலத் தொளிகொளான் மாவி னுக்குமா 

               றங்குமச் செயுந்தொழில் சாற்றப் பட்டிடும்.                                               4

 

               வினைபல விரவினும் விமல ஞானிதா 

               னனையவை தருபய னவன டைந்திடா 

               னினியன பலபொரு ளிசைந்த ருந்தினு 

               நனியுணு நாவவை நண்ணு மோசொலாய்.                                                5

 

               விடுத்துள வுபாதியான் வினைகள் யாவுமிங் 

               கடுத்துள வளவதா யவன்கண் மாயுமா 

               னடப்பினு மிருப்பினு நனியு றங்கினுந் 

               தோடக்குறு முயிர்வினை ஞானி தோய்ந்திடான்.                                         6

 

               நிறையுறு பரானந்த சுத்த நெஞ்சனா 

               மறிவுடை யவன்றனை யணங்கு வல்வினைச் 

               செறிதொடர் பந்தனை செயாதென் றோர்கநீ 

               குறுமுனி யென்றுயர் குணப்பொற் குன்றனாய்.                                           7

 

- கிரியாநிட்பத்தித்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்தைந்தாவது

(85) பாவநிட்பத்தித்தலம்

[அதாவது - க்ரியாநிஷ்பத்தியுள்ள சிவயோகி சுக்திரஜத ந்யாயத்தைப் போலப் பாவநிஷ்பத்தி யுள்ளவனா யிருப்பதனாலும், சிவனிடத்தில் அசஞ்சல பாவமுள்ளவனா யிருப்பதனாலும், அதன் சம்பந்த மில்லாதிருப்பதனாலும் பாவநிட்பத்திமான் என்பது.]

                       கலிவிருத்தம்

 

               உடைத்திடு மயலுடை யோகி தன்கணே 

               யடுத்துள பாவமிப் பியின்க ணாகிய 

               கடுத்துள வெள்ளிபோற் காட்ட லாலிவன் 

               படைத்துள பாவநிட் பத்தி மானரோ.                                                    1

 

               பரமஞா னிக்கொரு பாவ பந்தன 

               மருவுறா தெனினுமே வருத்து வெம்பவ 

               மொருவவா ரருள்புரி யொருசி வத்தினில் 

               விரவுபா வனையது மேவ வேண்டுமால்.                                                 2

 

               நிரம்பிய சிதானந்த நித்தன் றன்கணே 

               விரும்பிய பாவனை விடேல வன்றனிற் 

               பரம்பெறு பாவனை பரவு வெம்பவக் 

               கருங்கடல் கடந்திடக் கடத்து மென்பவே.                                                3

 

               இங்குறு பவவிடா யாவு நீக்கியே 

               சங்கர பாவனை தானு நீங்குமாற் 

               பொங்கழல் விறகினைப் பொடித்து நின்றுதா 

               னங்கவி யாமலே யடுக்கு மோசொலாய்.                                                4

 

               ஏத்துறு சிவானந்த மெய்தி னென்செயும் 

               வாய்த்தபா வனையினி மனத்தி னெண்பொருள் 

               சாத்திய மாயுறிற் சாத னங்களற் 

               பேர்த்தொரு பயனிலை பேசுங் காலையே.                                                5

 

               பாவமு ஞானமும் பரனி லேகமாய் 

                மேவிடி னொருசிவ மாய்வி ளங்குவான் 

               பாவமு ஞானமும் வேறு பட்டுநின் 

               றாவன வின்மையா லவைவி டேலரோ.                                                6

 

- பாவநிட்பத்தித்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்தாறாவது

(86) ஞானநிட்பத்தித்தலம்

[அதாவது - விச்வ வ்யவகார ஜ்ஞானம் ஸ்வபாவமாயும் ஸ்த்திரமாயு மிருப்பினும் பாவநிஷ்பத்திமானான ஜ்ஞானி, சிவனல்லாது ஜ்ஞேயாந்தரம் அதாவது நான் அறியத் தக்கவன் இது அறியத்தக்கது என்னும் வ்யவகாரங்கள் இல்லாதிருப்பதனாலும், ஸ்வப்ன சத்ருசமான ஜ்ஞான வ்ருத்தியுள்ளவனா யிருப்பதனாலும் ஞானநிட்பத்திமான் என்பது.]

                               கலிவிருத்தம்

 

               உலகினி லுணர்பொரு ளுணர்விற் கின்மையா 

               லிலகுறு மிவன்கன வென்ன ஞாலமேற் 

               பலர்புகழ் ஞானநிட் பத்தி மேவலா 

               னலமலி ஞானநிட் பன்ன னென்பரால்.                                                  1

 

               சொற்பனந் தனில்வரு முணர்வு தோன்றுமப் 

               பற்பல பொருளொடு போகும் பான்மைபோற் 

               றற்பர மிலகுறத் தன்னு ணர்ச்சியான் 

               முற்பெறு ஞேயமு முடிந்து போகுமால்.                                                2

 

               நிறைந்திடு பரானந்த நிமலன் றன்னிடை 

               யிறந்துள மனமுடை யிவற்கு ஞேயமா 

               யறிந்திடு பொருள்சிவ மன்றி யில்லையென் 

               றுறுந்தவ முனிவர வுலக மோதுமால்.                                                  3

 

               சச்சிதா னந்தமாந் தன்மை யோன்சிவ 

               னிச்சக மியாவுமோ மித்தை யென்பதிங் 

               கச்சுறா ஞானமென் றறிவி லக்கணம் 

               வச்சநூ லுணர்பவர் வகுத்துக் கூறுவார்.                                                4

 

               உற்றிடு பரனில்வே றாங்க டாதியிற் 

               பற்றிநின் றிடுவன பார்த்து மித்தையென் 

               றற்றிட விடுதலை யறிவென் றோதுவார் 

               தெற்றென வறிவறி திறத்தின் மேலையோர்.                                             5

 

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        காரண காரி யங்கள் கடந்துபா திகள னைத்து 

        மாரண மடைய நின்ற வத்துவே பிரம மந்த 

        வேரணி பிரம நானென் றிருந்திடு நிட்டை தானே 

        சீரணி ஞான மென்பர் செழுமறை கற்று ணர்ந்தோர்.                                               6

 

        விரிந்துள பொருள னைத்தும் விடுத்தொரு முதலாய் நின்ற 

        பரந்தனி லபேத மெய்தப் படுமெனி னறிகு வேனான் 

        றெரிந்தறி ஞேய மீதென் றுணாதருந் திறத்து ஞானம் 

        பொருந்துவ தெவ்வி டத்து மிலையெனப் புகல்வர் கற்றோர்.                                        7

 

- ஞானநிட்பத்தித்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்தேழாவது

(87) பிண்டாகாசத்தலம்

[அதாவது - “ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஸ்தே” என்னும் ச்ருதிப்ரமாணத்தினால் அத்வைத லக்ஷண யுக்தனானவனும், “சிவ யேகோத்யேய:” என்னும் அதர்வசிகா ப்ரமாணத்தினால் ப்ரசித்தனானவனுமான பரசிவத்தை மற்றொரு அவலம்பனமில்லாத மனத்தினால் ஆத்மா தேஹோபாதி யுள்ளவனா யிருப்பினும் பரிபூர்ணன் என்றறிந்து த்யானஞ் செய்கின்றவனே பிண்டாகாசன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        நெடியவான் பிண்டத் துற்று நிறைவெனப் படுதல் போலப் 

        படியறு மான்மா வுந்தா னிறைவெனப் படுமென் றோர்வாய் 

        விடலரு மிவன திந்தப் பொருடெரி விவேக மேதான் 

        றடையறு பிண்டா காசத் தலமென வறைவர் மேலோர்.                                          1

 

        குடத்தினி லுறுவி சும்பு குறிக்கிற்பூ ரணமா மாபோ 

        லடுத்துறு பிண்டத் தான்மா வதனது சொரூபத் தானே 

        தடுப்பரு நிறைவ தாகித் தயங்குமென் றறைவர் மேலோர் 

        கடத்தினி லுதித்து மிக்க கடல்குடித் துயர்ந்த மேலோய்.                                          2

 

        அகத்தினிற் பரவி சும்பா யத்துவி தத்த தாகி 

        மிகுத்துறு சிவத்தை யென்றும் விமலமா மனத்திற் பாவ 

        மிகப்பற வியற்று வோனே யியம்பிற்பிண் டாகா சத்தன் 

        றகக்கலை முழுது மோர்ந்து தயங்கிய முனிவ ரேறே.                                            3

 

        தத்துவ முப்பத் தாறாற் சமைத்திடப் பட்டு மாசில் 

        சுத்தநன் மனமாம் பீடந் துளக்கற வமைத்து ஞானப் 

        புத்தொளி மணிவி ளக்குப் பொருந்துறு மிந்த யாக்கை 

        யத்தனஞ் சிவனி ருக்கு மாலய மென்பர் மேலோர்.                                                4

 

        மிக்குறு பரமா காச மேனியாய் விளங்கு மீசன் 

        மெய்க்கணி னவரு ளத்தின் மேவுவோ னாகக் காண்க 

        விக்குறி யுடல மாகுஞ் சிவபுரத் திதயக் கோயில் 

        புக்குறு மமல நீரிற் பொருந்திய விசும்பு போல.                                                 5

 

        அந்தரா காச விம்பத் தடுத்துபா திகள னைத்தும் 

        வந்துறா தொழிந்து நிற்கு மணிக்குட வானம் போல 

        முந்தையோர் சின்ன மாகி மூதறி வுருவாய் நின்ற 

        வெந்தையாஞ் சிவத்தை யென்று மியல்பிற்பா விக்க மாதோ.                                     6

 

- பிண்டாகாசத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்தெட்டாவது

(88) விந்தாகாசத்தலம்

[அதாவது - சகல ப்ராணிகளின் மேற்பாகத்திலும் ஆகாசம் வ்யாபித்துக் கொண்டிருப்பது போல, ஆத்மா சகல ப்ராணிகளின் புறத்திலும் வ்யாபகனா யிருக்கிறானென்று சிவயோகி யறியவேண்டுமென்னு முணர்ச்சியே விந்தாகாசம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        உலகினி லெவர்க்கு மேலா யுயர்தரு மகல்வி சும்பை 

        யிலகுற விபுவென் றோரு மியல்பென மேலா மான்மா 

        வலகறு விபுவென் றோர்க வாயவிவ் வுவமை கொண்டு 

        விலகறு பொருளை யேதான் விந்துவிண் டலம தென்பர்.                                        1

 

        யாவர்த மிடத்து மோர்காற் றிருப்பினு நிறைவா மாபோல் 

        யாவர்த மிடத்துந் தானே யிருப்பினும் விபுவா மான்மா 

        மேவுறு வன்னி யொன்றே யெங்கணும் விளங்கல் போலத் 

        தேவர்க டேவன் றானுங் கண்டிதந் தீர்ந்தோ னாவான்.                                            2

 

        தேகிக ளனைவ ருள்ளுஞ் சித்தமா கியகண் ணாடி 

        சேகர விளங்கு மென்றும் விபுவெனுஞ் சிவன்றா னான்மா 

        வாகுட லதில்விம் பித்திட் டமர்குவன் மேலின் மேலா 

        மேகனிவ் வனைவர் கண்ணு மிருப்பினும் விபுவா மென்பர்.                                        3

 

        செங்கதி ரொன்று தானே தேசுறு கிரணந் தன்னா 

        லெங்கணு நிறைதலுற்றே யிலங்குறு மதனைப்போல 

        மங்கல வடிவா மான்மா மல்குதன் சத்தி தன்னா 

        லெங்கணு மிடைந்தோ னாகி யிலங்குவ னென்பர் மேலோர்.                                        4

 

- விந்தாகாசத்தலம் முற்றிற்று -
* * *

 


 

எண்பத்தொன்பதாவது

(89) மகதாகாசத்தலம்

[அதாவது - ப்ரஹ்மாண்டா பிண்டாண்டங்களை யடைந்திருக்கும் ஆகாசம் எவ்வாறு பின்னமாக வில்லையோ, அவ்வாறு ஆத்மாவைப் பார்க்கிலும் பரமாத்மா பின்னமாயில்லை என்னும் ஜ்ஞானமே மகதாகாசம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        அண்டபிண் டத்தி லுற்ற வம்பரம் வேறா காமைக் 

        கண்டன மதனைப் போலக் கருதரு மிவனான் மாவி 

        லுண்டெனும் பரமான் மாவே றுறுவதின் றிதையு ணர்ந்து 

        கொண்டிடன் மகதா காசத் தலமெனக் குறிப்ப ரன்றே.                                            1

 

        கடத்தினு மடத்தின் கண்ணுங் கலந்தவா காசம் வேறா 

        யடுத்திட லிலாதவாபோ லண்டபிண் டத்தின் கண்ணே 

        யெடுத்துரை செயுமான் மாவும் பின்னமன் றினைய மாற்றந் 

        தடுத்திட லரிய வேதந் தலையினாற் சுமக்கு மன்றே.                                            2

 

        ஓங்கொளி யாகிக் கால மொப்புரை மனங்க டந்து 

        தீங்கறு சுவரநு பூதிப் பிரமாணஞ் செறிவுற் றியாவுந் 

        தாங்குறு நிலைமை சச்சி தானந்தம் பரமா காச 

        மாங்கது சிவமி லிங்கம் பிரமமென் றறையா நிற்கும்.                                            3

 

        யோகிகண் மனம டங்கு மொருபரஞ் சோதி யாய்மால் 

        போகிய வறிவா னந்த பூரண வுண்மை யாகி 

        மோகமின் முனிவர் கூறு முதன்மையாம் பரமா காச 

        மாகன லிங்க மென்று வகுத்துரை செய்வர் மேலோர்.                                            4

 

        திரைநுரை கடல்வே றாகாச் செழுமல ரிலைகா யெல்லா 

        மரனில்வே றாகா வாபோல் வகுக்குமிவ் வுலகந் தானும் 

        பரனில்வே றாவ தின்று பற்பல வுடுக்கள் வானில் 

        விரவல்போற் பரமா காச மேவியிவ் வுலகி லங்கும்.                                             5

 

        நீங்கிய வுபாதி கொண்டு நிமலமாம் பரமா காச 

        மோங்குறு முலக மென்னு மோவியம் பலவுந் தோன்றாத் 

        தாங்குறு பித்தி யாகித் தயங்குமென் றறிஞர் சொல்வர் 

        தீங்குறு புலக்கு றும்பு செற்றுயர் முனிவர் வேந்தே.                                                6

 

- மகதாகாசத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூறாவது

(90) கிரியாப்பிரகாசத்தலம்

[அதாவது - மகாகாச ஸ்வரூபனான சிவயோகியே சாஸ்த்ரோக்தமாய் சிவ ஸ்வரூபத்தை யநுசந்தானம் செய்வதனால் கிரியாப்பிரகாசன் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        நிறைவுறு மதுவாய் ஞானா காசமாய் நிகழ்சி வத்தி 

        னறைவுறு சொருபந் தன்னோ டநுசந்தா நத்தி னாலே 

        யுறுவினை யறுமி வன்றான் கிரியைமா வொளிய னென்ன 

        மறுவறு கலையு ணர்ந்தோர் வகுத்துரை செய்வ ரன்றே.                                         1

 

        மாசறு ஞானா காய மயமதாய் நிறைவ தாகு 

        மீசன துருவி றந்த வொளியினின் மனம டங்குந் 

        தேசுடை யவன்ற னாது திறல்வலிக் கிரியை யந்தப் 

        பாசமி லொளியே யாகப் பகர்ந்திடப் பட்டு நிற்கும்.                                                2

 

        முழுமையு முணர்ந்தோ னாகி முழுவிறை யாகி யெங்கு 

        மொழிவற நிறைந்தோ னாவ னொருசிவ னவன்பாற் சென்றுற் 

        றழிதரு சிந்தை யானே யவன்றனி வடிவ மாகப் 

        பழுதற வொளிர்வ னென்று பகர்ந்தன ரறிஞ ரெல்லாம்.                                          3

 

        இந்திய வழக்க மெல்லா மெய்தியு மோனோக் குற்ற 

        சிந்தையா லசல மாகுஞ் சிவத்தினைக் கண்டு வப்ப 

        னுந்துறு மறிஞ னான வுயர்ந்தகூ டத்தன் றன்னைப் 

        பந்தமில சிவமாய்க் கண்ட படிவத்தா லுவப்பன் யோகி.                                          4

 

        கிரியைக ளனைத்தும் வானிற் கிளந்தகந் திருவ வூர்போற் 

        பரவடி வாயி னோன்பாற் பரந்துநின் றிலங்க லாலே 

        யுரவிய வறிஞ ரெல்லாங் கிரியைமா வொளிய தென்பர் 

        பொருவறு புகழ்ம லிந்த பொதியில்வீற் றிருக்கு மேலோய்.                                         5

 

- கிரியாப்பிரகாசத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றொன்றாவது

(91) பாவப்பிரகாசத்தலம்

[அதாவது - சமுத்திரத்தில் பிறந்த அலை நுரை முதலியவைகளுக்கும் சமுத்திரத்திற்கும் பேதமில்லாதிருப்பது போலப் புத்தி முதலிய சமஸ்த பாவங்களுக்கும் அந்த சிவயோகியின் சைதந்யத்திற்கும் பேதமில்லை யாதலால் இது பாவப்பிரகாசம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        தரங்கமா திகடாம் வேலை தன்னில்வே றாகா வாபோற் 

        பரந்துள புத்தி யாதி பாவங்க ளான்மா வில்வே 

        றிருந்தன வலவென் றோது மிதுபாவ வொளியா மென்பர் 

        புரங்கடந் தவன்றன் னூலின் பொருடெரிந் துணர்ந்து ளோரே.                                       1

 

        சகமெலாஞ் சிவமே தானுந் தற்சிவ மேயென் றுன்னும் 

        பகவிலா யோகி தான்வெம் பவத்தினால் வருத்த மெய்தா 

        னிகரிலாச் சிவபா வந்தா னிலைத்திடு மேல வற்குத் 

        திகழ்வுறு பாவ மெல்லாஞ் சிவமய மாகு மன்றே.                                                 2

 

        வேறறு சிவபா வத்தால் விலக்குறு வினைக ளுள்ளோன் 

        மாறறு சிவமே யன்றி மற்றொரு பொருளுங் காணான் 

        பாறிய மலமு டைத்தன் சொரூபாநு பவிபு லன்க 

        ளேறிய விடங்க ளெல்லா மிருஞ்சிவ மயமே யாகும்.                                            3

 

        விருப்பொடு வெறுப்பு மேவும் பாவனை விளையா நிற்கு 

        முருப்பவ மலையொ டுங்கும் பாவனை சிவமே நாட்டு 

        மிருட்படா மிரவி தன்னை யெய்திடா ததுபோற் பாவந் 

        தரிப்புட னிலகு மான்மாத் தனையுறா தவித்தை யன்றே.                                         4

 

- பாவப்பிரகாசத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றிரண்டாவது

(92) ஞானப்பிரகாசத்தலம்

[அதாவது - அங்கலிங்கங்களின் முக்யார்த்தம் தெரியாதிருக்கையில் அவைகள் கார்ய காரணங்களென்னும் உபாதிகளைக் கூடியிருக்கும் ஜீவேச்வர சம்ஞையுள்ளவைகளா யிருக்கின்றன. உபாதிரூபத்தினா லுண்டாயிருந்த அந்த அங்கம் லிங்கம் என்னும் ஜ்ஞான த்வயத்தை சமானமான சமரச பாவத்தினால் சம்யோகம் செய்வதே பாவப்ரகாச சம்பந்நனான சிவயோகிக்கு ஞானப்பிரகாசம் என்பது.]

               அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

        முக்கியப் பொருளிற் கூட்ட முளைத்திடு மாசெ யான்மன் 

        மிக்குறு மிலக்க ணார்த்த மேவுறு நிமலன் றன்னாற் 

        புக்குறு மந்த ஞானம் பொருந்துத றனைய வற்குத் 

        தக்கவர் மொழியு ஞானப் பிரகாசந் தானென் றோர்வாய்.                                         1

 

        முத்தனுக் கந்த ஞான சம்பந்த முறைமை கூறின் 

        வைத்திடு மியல்பான் ஞேய மிலாமையாம் வகுத்து நின்ற 

        மெத்துறு முபாதி யோடு மேவிநிற் கின்ற ஞான 

        மித்தலை யென்னும் பேத மிறந்திடா தென்பர் நல்லோர்.                                         2

 

        பொருளுறு பரிச்சே தந்தான் புகன்றிடு ஞான மாகு 

        மருளறும் பரிச்சே தம்பின் வரும்பர மான்மா வின்க 

        ணுரைசெயு ஞான மில்லை யுணர்விற்கு விடய மல்லாப் 

        பரசிவ னிடத்த யிக்கம் பண்ணலே ஞான மாகும்.                                                3

 

        உலகெகரு மயமா யின்ப வுண்மையா யபரிச் சேத 

        நலமலி பிரம மென்னு ஞானமே பிரம ஞான 

        மலிசக வுபாதி நீங்கி மலர்வுறு பிரம ஞான 

        மிலகுறி னறிவா மெங்குங் காண்பதொன் றில்லை வேறு.                                         4

 

        முத்திகா ரணமா மத்து விதஞான முற்றி னானுக் 

        கெய்த்திடும் பவமே யில்லை யெங்கணு நிறைந்து நின்ற 

        நித்தியா னந்த ஞான நிட்கள சிவத்தொ டுங்குஞ் 

        சித்தனா மியோகி பேதந் தீர்ந்தொரு தானே யாகும்.                                                5

 

- ஞானப்பிரகாசத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் தீக்ஷாபாதோதகம், சிக்ஷாபாதோதகம், ஜ்ஞானபாதோதகம், க்ரியாநிஷ்பத்தி, பாவநிஷ்பத்தி, ஜ்ஞானநிஷ்பத்தி, பிண்டாகாசம், பிந்த்வாகாசம், மகாகாசம், க்ரியாப்ரகாசம், பாவப்ரகாசம், ஜ்ஞானப்ரகாசம் என்னும் பன்னிரண்டு ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் நிஷ்கள சிவத்தில் மனம் லயித்து அபேதமில்லாதவனும், அபரோக்ஷமாய் விளங்கு கின்றவனும், அங்கஸ்தலத்து ஐந்தாமவனுமான சரணனே ப்ரசாதலிங்க சரணார்த்தி என்று அறியப்பட்டான்.

5 - வது பிரசாதலிங்கத்தலம் முற்றும்
- - - - - -

 



 

6 - வது மகாலிங்கத் தலம்

[அதாவது - சாந்த்யாதீதோத்தரகலா சமேதமாய்ச் சிச்சக்தியுடன் கூடி மகா சாதாக்யத்தைப் பொருந்தி பாவகம்யமா யிருத்தல் என்பது.]

( அயிக்கியனுக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )

 

                               கலிநிலைத்துறை

 

               இலங்க வோதினை யச்சர ணத்தல மெய்துந் 

               தலங்க ளியாவையு மினியயிக் கத்தலஞ் சார்ந்த 

               நலங்கு லாந்தல பேதமு மெனக்குநீ நவில்வாய் 

               கலங்கி லாவுளத் தருளினாற் கணங்கணா யகனே.                                        1

 

               சாத மேவருஞ் சுவிகிரு தப்பிர சாத 

               மாதி ஞானசூ னியமுடி வாகிய வொன்பான் * 

               பேத  மாகிய தலங்களை யயிக்கியன் பெறுதற் 

               கோது வரமுறை யினிலவை யகத்திய வுணர்வாய்.                                        2

* மகாலிங்க ஷட்பக்தர்கள் :- மகாலிங்கமோஹி, மகாலிங்கபக்தன், மகாலிங்கபூஜகன், மகாலிங்கவீரன், மகாலிங்கப்ரசாதி, மகாலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், உலக வ்ருத்தாந்தத்தை நினையாதவனே மகாலிங்கமோஹி, பூர்வ பக்யாத்யநுசந்தான மில்லாதவனே மகாலிங்கபக்தன், அஜ்ஞானிகளுடன் சங்கசம்பாஷணைகளைச் செய்யாதவனே மகாலிங்கபூஜகன், உத்பத்து ஸ்திதி லயங்களுக்குச் சிந்திக்காதவனே மகாலிங்க வீரன், பங்தி போஜனத்தை அங்கீகரிக்காதவனே மகாலிங்கப்ரசாதி, பாஹ்யார்ச்சனார்ப்பணங் களாதிகளைச் செய்யாமல் அந்தரங்க க்ரியாநிஷ்ட்டனே மகாலிங்கப்ராணி.

த்ரிவித மகாலிங்கம் :- பிண்டஜம், அண்டஜம், பிந்த்வாகாசம் என மூவகைப்படும். இவைகளில், தேகமே தேவாலயம் ஆத்மாவே லிங்கம் என்னும் நிச்சயமே பிண்டஜமாம், பூமியே பீடம் ஆகாசமே லிங்கம் என்னும் விகல்பரஹித பாவனையே அண்டஜமாம், ஆகாசமே தன்னுடன் தன்னுடனே ஆகாசம் என்னும் அந்யோந்ய வ்யாப்த்யநுசந்தானமே பிந்த்வாகாசமாம்.)

 

தொண்ணூற்றுமூன்றாவது

(93) சுவிகிருதப்பிரசாதத்தலம்

[அதாவது - ஜ்ஞானப்ரகாச சம்பந்நனான சிவயோகியினிடத்தில் அங்கலிங்க ரூபமான ஜீவேச்வர வியோகரூபமான முக்யார்த்தமும், அவியோகரூபமான லக்ஷணார்த்தமும் ஆகிய பேதம் இல்லாமல் அபரோக்ஷ ஜ்ஞானமுள்ளவனாய் ஜ்ஞானப்ரகாசத்தை ஸ்வீகரிப்பதே சுவிகிருதப்பிரசாதம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               முக்கி யார்த்தமு மிலக்க ணார்த்தமு மிலைமொழியிற் 

               றக்க பேரறி வுருவமா மவற்கவன் றனக்கு 

               வைக்கு மோர்தடை யிலாமையான் மகிழ்பிர சாதந் 

               துய்க்கு மாறுகொண் டிடப்படு மெனமறை சொல்லும்.                                    1

 

               மாது ருப்பிர மேயமொண் பிரமாண வழக்கிற் 

               பேத மற்றுயர் சிந்மய மாக்குறப் பெற்றே 

               யேத மற்றிடு யோகிதன் சொரூபமுற் றிருப்பன் 

               போத மற்றவத் துவிதனைப் பொருந்துமோ பந்தம்.                                        2

 

               போத மாகிய சிவனிடைப் பொருந்துமிவ் வுலக 

               மியாது மாரழற் படுவன போற்சிவ மேயாஞ் 

               சோதி யாஞ்சிவங் கண்டிடின் மண்முதற் சொல்லும் 

               பூத மோடுமற் றுள்ளவும் பொருந்திநின் றிலங்கா.                                        3

 

               சோதி லிங்கநின் றகத்தினிற் சுடர்வுற யோகி 

               பூத மாதிய தத்துவங் கண்டவை பொருந்தான் 

               போத வாரழ லிடைப்புல னியாவையும் போக்கித் 

               தீதி லாமனத் துவகைபெற் றிடுஞசிவ யோகி.                                            4

 

               நவையில் யோகிதான் சச்சிதா னந்தமாய் நண்ணுஞ் 

               சிவனின் மேவுற விடயங்கள் சமர்ப்பணஞ் செய்தே 

               யவனி லாம்பிர சாதமுண் குவனென வறிவாய் 

               தவமெ லாமொரு வடிவுகொண் டனையமா தவனே.                                     5

 

- சுவிகிருதப்பிரசாதத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றுநான்காவது

(94) சிட்டோதனத்தலம்

[அதாவது - ஜ்ஞானப்ரசாதத்தை ஸ்வீகரித்த சிவயோகி மாயா தத்வமாகிய சகல பதார்த்த சமூகத்தை ஸ்வஸ்வரூபத்தினால் க்ரகித்து சுகமாயிருப்பதே சிட்டோதனம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               மாயை யாதஃதி யாவர்க்குந் தோன்றியே மறையு 

               மாய மாயைதா னறிவுரு வாகிய வவற்குத் 

               தூய ராற்சொல் சிட்டோதனப் பெயர்பெறுந் தொன்மை 

               மூய மாமல விருளற முனிவுறு முனியே.                                                1

 

               மாயை தந்துள சகம்வடி வாயதன் சொரூபந் 

               தூய ஞானத்தின் மூடுறப் படுதலாற் றோன்று 

               மாயை யொன்றுமே யெஞ்சிய தொருசிவ மயமே 

               யாய முத்தனுக் கேவல்செய் தொழிலியம் மாயை.                                         2

 

               எண்ணில் சத்தியா லுலகெலா மயக்குமிம் மாயை 

               நண்ணு மெய்ச்சிவத் தயிக்கனை நண்ணுற வற்றோ 

               கண்ணி னிற்றிகழ் சோதியாஞ் சிவத்தினிற் கலந்தோ 

               னுண்ண லுற்றிடு விடயங்க ளொழிந்திடுந் தாமே.                                         3

 

               பொறிக ளாலுணும் புலன்கடல் புகுந்திடு நதிபோ 

               லறிஞ னாகியோ னிடத்திற்புக் கடங்குறு மென்பர் 

               மறிவில் யோகியிப் பொருளொழி வறவடி வடக்கிச் 

               செறியு மார்கதி ரெலாங்கொடு வீழ்திந கரன்போல்.                                         4

 

- சிட்டோதனத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றைந்தாவது

(95) சராசரலயத்தலம்

[அதாவது - கேவலம் ஜ்ஞானப்ரசாத ஸ்வீரகாரத்தினால் சிஷ்டோதன சம்பந்நனான சிவயோகிக்குச் சராசர ப்ரபஞ்ச ஸ்வரூபமான மகாலிங்கத்தில் ஐக்யத்வம் கிடைக்கவும், தான் நிர்த்தேஹியய் ப்ரபஞ்சத்தை யடைந்திருக்கும் மலசக்தியை நாசஞ்செய்து, எந்த வஸ்துவும் காணாது எந்த சப்தமும் கேளாது தன்னைவிட அந்யமானதை யறியா திருப்பதே சராசரலயம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               பாகு பாடுது சராசரத் துறுபரத் தொன்றாம் 

               யோகி தானுடம் புறுகில னாகியே யொழிவி 

               லேக மாகிய சராசர நாசக னென்ன 

               மோக மாயையை முனிந்தவர் மொழிந்திடப் படுவான்.                                   1

 

               உலக ஞானமோ ரவித்தையால் காரண முடைத்திங் 

               கலகி லாததன் சொரூபஞா னம்பெற வவிச்சை 

               மலமி ராதெனி னிச்சகம் விளங்கிட வற்றோ 

               கலையெ லாமுணர்ந் துயர்தரு கலயமா முனிவ.                                        2

 

               வானின் மாமுகி லெழுந்தடங் குதலென மயங்கா 

               ஞானிபா லெழுந் தடங்குறும் விடயங்க ணவிலி 

               னான தோர்கன விற்பொரு ணனவிலற் றிடல்போ 

               லூன மாஞ்சகத் தோற்றமெய் யுணர்வினி லொழியும்.                                    3

 

               சாக்கி ரந்தொடர் சொற்பனஞ் சுழுத்தியைத் தணந்து 

               மீக்கி ளந்திடு மவத்தையை மேவிய வொருவ 

               னாக்கு ஞாதுரு ஞானஞே யங்களா மனைத்து 

               நீக்கி நின்றிடு மென்பர்நல் லறிவினி னிலைத்தோர்.                                        4

 

               துரியா தீதமாம் பதத்திடைத் துளக்ற விருந்த 

               பெரியா னிவ்வுல கத்துருக் காண்கிலன் பின்னர்க் 

               கரியாய் நின்றமெய்ச் சிவத்தினைக் கண்டவன் காணான் 

               றிரியா மற்றொரு பொருளினைச் செவிக்கொளா னறியான்.                                 5

 

               மித்தை யாகுமிவ் வுலகமுன் னுண்மைபோல் விளங்குஞ் 

               சத்த தாகிய பரசிவம் வெளிப்படிற் றனது 

               மெய்த்து நின்றமெய்ச் சொரூபமே யெங்கணும் விளங்குஞ் 

               சித்த மாமய லொழிந்துமுன் னூல்பல தெரிந்தோய்.                                       6

 

- சராசரலயத்தலம் முற்றிற்று -

* * *

 


 

தொண்ணூற்றாறாவது

(96) பாண்டத்தலம்

[அதாவது - அநேக கோடி ப்ரஹ்மாண்டங்களின் ஸ்ருஸ்டி ஸ்திதி லயங்களுக்கு ஆதார பூதமானது யாதோ என்னும் விசாரமானதும், மாயையினால் விடப்பட்ட சிவயோகி சக்தியே முதலாகி ப்ருதிவியே ஈறாயுள்ள சகல தத்வங்களென்னும் குமிழிகளை விமர்சம் என்னும் பாண்டத்திலிருத்தி ஸ்வஸ்வரூபத்தினால் ப்ரகாசிப்பதுமே பாண்டம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               அண்ட நூறுகோ டிகள்படைப் புடனிலை யழிவு 

               கொண்ட தோரிட மாகிய வதனையே குறித்துக் 

               கண்ட தோர்விம ரிசந்தனைக் கசடற வுணர்வாற் 

               பண்டை நூலுணர் பவர்பாண்டத் தலமெனப் பகர்வார்.                                    1

 

               தத்து வங்களுக் கொருகரி யாகியே சகத்திற் 

               குய்த்த காரண மாய்விம ரிசப்பெய ருடைய 

               சத்தி தானிலங் குறுஞ்சக மடங்கிடத் தானாய் 

               மெய்த்த வாருயிர் விளங்கிடும் விமரிச கலையே.                                         2

 

               ஈச னோர்பர வகந்தைசேர் விமரிச வானாய்ப் 

               பேசு மியாவையு முணர்ந்தொழி வறுபெருந் தகையாந் 

               தேசு லாம்பர வகந்தையிற் சிறந்துள தாகி 

               மாசி லாவிம ரிசநிகழ் வுறுமென மதிப்பாய்.                                            3

 

               பரந்த தாகிய விமரிச பாண்டத்தி லடங்க 

               விரிந்த தத்துவ மியாவையு மேவுற வைத்துத் 

               தெரிந்த தன்னையே கண்டிருப் பன்றிகழ் முத்த 

               னருந்த வர்க்கர சாகிய வகத்திய முனியே.                                                4

 

- பாண்டத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றேழாவது

(97) பாசநத்தலம்

[அதாவது - சமஸ்த ப்ரஹ்மாண்டங்களின் உத்பத்தி ஸ்திதி லயங்களுக்குக் காரணீ பூதமான விமர்ச பரபிந்துவானது திரோதான ரூபத்தினால் சிவனுடன் கலந்திருக்கும் சக்தியில் ப்ரகாசிக்கும், அந்த சக்தி ஸ்வரூபமே பாண்டஸ்தல சம்பந்நனான சிவயோகிக்கு பாசநம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               ஓது மண்டங்கள் யாவும்வந் துதித்துநின் றொடுங்கற் 

               கேது வாகிய விமரிச மியாதன்க ணிலங்கு 

               மேதை யாமது பாசன மெனவிவண் விளம்பு 

               மாது பாதிய னருளிய வாகம மறைகள்.                                                1

 

               வேறு பாடுறு முலகினுக் கொருதனி வித்தாய்க் 

               கூறு மோர்விம ரிசப்பெயர் பராசத்தி குறுகும் 

               பேறி யாதெனிற் பெற்றிடும் பிரமமா மதுவே 

               தேறு பாசன மனைத்திற்கு மென்றுரை செய்வார்.                                        2

 

               ஆதி யாயசிற் சத்தியிச் சகமுளை யாகி 

               யோது மாகர ணத்துரு வாலெதி லொளிருக் 

               தீதி லாவது பிரமமென் சிவமென வறைவர் 

               வேத மோடுய ராகம முணர்ந்திடு விமலர்.                                                3

 

               திங்கள் வெண்ணிலா வனைத்தையுந் திகழ்த்துதல் போலச் 

               சங்க ரன்றனி லுறுவிம ரிசமெனுஞ் சத்தி 

               யிங்க னைத்தையு மொருங்குற விளக்குமென் சிறைப்பர் 

               மங்க லப்பெருங் கலைகளி னுழைந்திடு மதியோர்.                                         4

 

               ஆதி யிற்பெறு மகரமே யுயர்சிவ மந்தா 

               னோது தற்கருஞ் சத்தியிச் சிவசத்தி யுருவா 

               மேத மற்றிடு பிரமமொன் றேயக மென்னு 

               மேதை நற்பதம் பொருந்துமென் றறைகுவர் மேலோர்.                                   5

 

               திகழு றும்பர மாகியே சிவசத்தி மயமா 

               மகமெ னும்பத மடைந்துய ரருஞ்சிவ யோகி 

               சகம டங்கலுந் தன்னுரு வாகவே சார்ந்து 

               நிகழு மென்றுரை செய்திடு நிமலனா கமங்கள்.                                          6

 

               மரம டுத்துள பாசிலை மலர்முத லனவோர் 

               தரைய டுத்துள வித்தினி லடங்குறுந் தகைபோற் 

               பரவு மிச்சக மியாவுமோர் பரமநல் யோகி 

               யிருத யத்தனி வித்தினி லடங்குமென் றிசைப்பார்.                                       7

 

- பாசநத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றெட்டாவது

(98) அங்கலேபத்தலம்

[அதாவது - திரோபாவ லக்ஷணத்துடன் கூடியிருக்கும் ஜ்ஞான க்ரியா சக்திகளே பாஜனமாயுள்ள சிவயோகி புண்யபாப கர்மங்களினால் லிப்தனாகாதிருப்பதால் அங்கலேபன் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               காலந் திக்கிவை யாதியாற் கண்டித மின்றிக் 

               கோலஞ் சச்சிதா னந்தமா மிதுமுனங் கூறுஞ் 

               சீலங் கொண்டவற் குருவெனச் செப்புவ ரவன்றான் 

               மாலிங் கோவுமங் காலேப னென்பர்நூல் வல்லோர்.                                        1

 

               போத மேனியா மதிஞன்வெண் புகைமுத லனவா 

               லோதும் வானென வொன்றொரு தொழிலொடு முறானான் 

               மேதை யாமிவன் றனக்கிலை விதியொடு விலக்காம் 

               பேத மாகிய விகற்பமு மென்றிடும் பெருநூல்.                                           2

 

               வேறு பட்டிடு கடாதியால் விசும்புவே றுறினும 

               வேறு பட்டிடா வாறென விமலமெய்ப் பிரமம் 

               வேறு பட்டிடு முபாதியால் வேறுவே றுறினும் 

               வேறு பட்டிடா தெனமறை விளங்குற விளம்பும்.                                        3

 

               வான மேயென வளவற வயங்குறும் பிரம 

               மான வங்கதிற் சிற்கலை விசேடமென் றறிவாய் 

               மானி டங்கட வுளர்விலங் கெனுந்தகை மருவான் 

               ஞானி யாவையுந் தன்வடி வாகவே நண்ணும்.                                           4

 

- அங்கலேபத்தலம் முற்றிற்று -
* * *

 


 

தொண்ணூற்றொன்பதாவது

(99) சுபராஞ்ஞத்தலம்

[அதாவது - அங்கலேபமில்லாத சிவயோகி பாசபஞ்சக ரஹிதனா யிருப்பதனாலும், வ்யாபகனா யிருப்பதனாலும், ஏகத்வமடைந் திருப்பதனாலும், தன்னை வேறாகவும் மற்றவர்களைத் தனக்கு அந்யர்களாகவு மறியாமலும், சம்யோக வியோகங்கள், பந்தமுக்திகள், சுகதுக்கங்கள், ஜ்ஞானாஜ்ஞானங்கள், ஒளத்க்ருஷ்ட்ய நைக்ருஷ்ட்யங்களில்லாமலு மிருப்பவனே சபராஞ்ஞன் என்பத.]

                               கலிநிலைத்துறை

 

               ஏக மாகியே யறிவுரு வாயள விசையா 

               தாகு மோர்பிர மத்தினிற் கலந்திடு மரிய 

               யோகி யாமவன் றன்னையும் பரனையு முணரும் 

               பாகு பாடுறு மியல்பினை யுடையனோ பகராய்.                                          1

 

               ஞான சீலமே வினற்குநீ நானெனு மயலோ 

               டான வின்பதுன் பம்புணர் வகறறே வாதி 

               மான ஞாதுரு ஞேயம்வா லறிவறி யாமை 

               யீன மேலொடு பந்தம்வீ டிவைமுத லில்லை.                                           2

 

               தேச காலமற் றொளிதரு தேசடை தலினா 

               லாசி றன்னையும் பரனையு மறிந்திடா மையினா 

               லேசி றன்னொடு பரமறி யாத்தல மிதனைப் 

               பேசு மாகம மென்றறி யருந்தவப் பெரியோய்.                                           3

 

- சுபராஞ்ஞத்தலம் முற்றிற்று -
* * *

 


 

நூறாவது

(100) பாவாபாவலயத்தலம்

[அதாவது - அகம்பாவ மில்லாமலிருக்கும் சூந்யமான சிதாகாசத்தில் ஐக்யத்தை யடைந்திருக்கும் ஸ்வபரஜ்ஞான மில்லாத லிங்கைக்யனுக்கு எந்த வஸ்துவினிடத்திலும் பாவாபாவங்களில்லா திருப்பதே பாவாபாவலயம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               பகுத்து நின்றுநீ நானெனும் பரிசில தாகி 

               யுகப்ப டைந்திடு சூனிய சிதம்பரத் தொன்றாந் 

               தகப்பெ ருந்தகை யாகிய யோகியைச் சாரா 

               மிகுத்து நின்றபா வாபாவ மெனவறி மேலோய்.                                          1

 

               ஈங்கு நானெனும் பாவத்திற் கிலாமைவந் துறலாற் 

               றீங்கி லாதவான் மாவினத பாவமுஞ் செப்புற் 

               றாங்கி லாமையை யடைதலா லச்சீவன் முத்த 

               னோங்கு பாவமோ டபாவமு மிலனென வுணர்வாய்.                                     2

 

               பந்த மோவிய பெருமையோ னின்பதுன் பத்தில் 

               வந்த பாவமு மபாவமு மிலனென மதிப்பா 

               யுந்து ஞானியாய்ப் பாவமு மபாவமு மொழித்தோ 

               னந்தி லுள்ளதா யினுமில்ல தாயினு மறியான்.                                          3

 

               தோன்று பாவமு மபாவமு மெங்கணுந் தோயான் 

               சான்ற தாஞ்சிவத் தேகமாந் தகையினோ னதனா 

               லான்று நின்றபா வாபாவ லயத்தல மதனை 

               ஞான்ற வார்சடைக் கடவுளா கமமெலா நவிலும்.                                        4

 

- பாவாபாவலயத்தலம் முற்றிற்று -
* * *

 


 

நூற்றொன்றாவது

(101) ஞானசூனியத்தலம்

[அதாவது - சவ்பரஜ்ஞான சூந்யனாகவும், பாவாபாவலய சம்பந்நனாகவும், பரப்ரஹ்ம ஸ்வரூபனாகவுமிருக்கும் சிவயோகியினிடத்தில் ஏகத்வமடைந்து இது உத்தமமானது இது அதமமானது என்னும் பாவாபாவ விசாரயுக்தமான விகல்பஜ்ஞானமின்மையே ஞானசூனியம் என்பது.]

                               கலிநிலைத்துறை

 

               பராப ரத்தினை விழைந்தபா வாபாவ விவேகம் 

               விராவு நற்பெரு ஞானமொண் பிரமத்தின் மேவுற் 

               றிராதெ னப்பட லான்ஞான சூனிய மிசைக்கு 

               மராவு டைச்சடை யெம்பிரா னாகம மனைத்தும்.                                        1

 

               நீரி னீரும்வெந் நெருப்பினி னெருப்புமே போல 

               வாரு மோர்பிர மத்தினி லயிக்கமுற் றடைந்த 

               பேரி னோன்விபா கத்தினாற் காண்குறா னென்று 

               சாரு மாகம நெறியுணர்ந் தவருரை தருவார்.                                            2

 

               பேத மாறிய வனைத்துமா மொருபிர மத்தின் 

               ஞாது ராதிகள் வழக்கினாற் றோன்றுறு ஞானம் 

               யாது மேவுது மியாதுமே வாதென வெய்ப்பாய் 

               போத வாரமு துண்டருந் தமிழ்க்கலை புகன்றோய்.                                        3

 

               வான மாமென வடிவில்சிந் மாத்திர மாகி 

               மான மின்றிவே றொனறொடும் படாதுதான் மலர்ந்தொன் 

               றான வோர்பிர மத்தினி னானெனு மதனான் 

               ஞான பாவனை பாவிப்போன் யாவனீ நவில்வாய்.                                         4

 

               ஞேய மாகவொன் றெதிருற நின்றிடா மையினாற் 

               பாய ஞானசூ னியமென்றும் பாவிக்கப் படுமாற் 

               றூய தானசத் தானந்த வடிவமாஞ் சோதி 

               மேய வோர்பரா காசமொத் தெங்கணும் விளங்கும்.                                        5

 

               சூனி யம்பெறு ஞானாதி கற்பனைச் சோதி 

               யான வொண்சிவ லிங்கமாந் தன்னுரு வதனிற் 

               றானி ரண்டற வடைந்துள தகுதியோன் றனக்கு 

               ஞான மென்பதொன் றிலையென வறைகுவர் நல்லோர்.                                  6

 

               சாற்று காரணத் துவமொடு காரியத்தன்மை 

               யேற்ற சேடமோ டுற்றசே டித்துவ மிலானைப் 

               போற்று மோர்பர முத்தனென் றறைகுவர் புலவ 

               ராற்றல் சாறவத் துயர்தரு மகத்தியப் பெயரோய்.                                        7

 

- ஞானசூனியத்தலம் முற்றிற்று -
* * *

 

இவ்விதமாய் ஸ்வீக்ருதப்ரசாதம், சிஷ்டோதனம், சராசரலயம், பாண்டம், பாஜனம், அங்கலேபம், ஸ்வபராஞ்ஞம், பாவாபாவலயம், ஜ்ஞானசூன்யம் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் ஜ்யோதிர்லிங்கமாகிய மகாலிங்கத்தில் இரண்டாவது பொருளில்லாது வ்ருத்திஜ்ஞான மின்றி ஏகத்வமடைந்தபர முக்தனும் அங்கஸ்தலத்து ஆறாமவனுமான ஐக்யனே மகாலிங்கைக்யன் என்று அறியப்பட்டான்.

-ஆறாவது மகாலிங்கத்தலம் முற்றும்-

- - - -

ஆக காப்பு பாயிரம் உள்பட செய்யுள் - 851

 

 

த்விதீய பரிச்சேதமாகிய

லிங்கஸ்தலம் சம்பூர்ணம்
* * *

 



 

அங்கலிங்க சம்பந்தம்
- - - - - -

ஷட்விதலிங்கார்ச்சனை

தேகத்தில் குதம் குஹ்யம் நாபி இருதயம் கண்டம் ப்ரூமத்யம் என்னும் ஷட் ஸ்தானங்களுள்ளதும், அந்த ஸ்தானங்களில் முறையே சதுர்தள ஷட்தள தசதள த்வாதசதள ஷோடசதள த்விதளங்கள் என்னும் ஷட்வித தளங்களுள்ளதும், சதுரஸ்ரம் அர்த்தசந்த்ரன் த்ரிகோணம் ஷட்கோணம் வ்ருத்தம் சித்ரம் என்னும் ஷடாகாரங்களுள்ளதும், ப்ருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஆத்மா என்னும் ஷட்பூதங்களுள்ளதும், பீதம் ஸ்வேதம் ரக்தம் நீலம் ஸ்ப்படிகம் மாணிக்கம் என்னும் ஷட்வர்ணங்களுள்ளதும், வாதிசாந்தம் பாதிலாந்தம் டாதிபந்தம் காதிடாந்தம் அகாராதி ஷோடசஸ்வரங்கள் ஹம் க்ஷம் என்னும் அக்ஷரங்களுள்ளதும், ய வா சி ம ந ஓம் என்னும் ஷட்ப்ரணவங்களுள்ளதும், ஆதாரம் ஸ்வாதிஷ்ட்டானம் மணிபூரகம் அநாஹதம் விசுத்தி ஆஜ்ஞேயம் என்னும் ஷட்சக்ரங்களுள்ளதும், அந்தச் சக்ரங்களில் முறையே மூர்த்திகரித்திருக்கும் ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் ஜங்கமலிங்கம் ப்ரசாதலிங்கம் மகாலிங்கமாகிய ஷட்லிங்கங்களுண்டு. அவ்விலிங்கங்கள் கரஸ்தலத்தில் உள்ள இஷ்டலிங்கத்தின் வ்ருத்தம் மத்யம் கோமுகம் வர்த்துலம் நாளம் பீடம் என்னும் ஷட்ஸ்தானங்களில் இருக்கின்றன வெனவறிந்து, இஷ்ட லிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல ஜலத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு சிவானந்தம் பரிணாமம் பரமானந்தம் சாந்தி க்ஷமை சந்தோஷம் என்னும் ஷட்ஜலங்களையும் அபிஷேகஞ்செய்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல கந்தத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ப்ருதிவி நிவ்ருத்தி அப்பு நிவ்ருத்தி தேஜோ நிவ்ருத்தி வாயு நிவ்ருத்தி ஆகாச நிவ்ருத்தி ஆத்ம நிவ்ருத்தி என்னும் ஷட்கந்தங்களையும் லேபித்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூலாக்ஷதையையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்குச் சித்தம் புத்தி அகங்காரம் மனம் ஜ்ஞானம் பாவம் என்னும் ஷடக்ஷதைகளையும் இட்டு, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல புஷ்பத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு மேற்கூறிய சதுர்தள ஷட்தள தசதள த்வாதசதள ஷோடசதள த்விதள கமலங்களென்னும் ஷட்புஷ்பங்களையும் தரித்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல தூபத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு மேற்கூறிய கமலங்களின் வாசனைகளென்னும் ஷட்தூபங்களையும் கொடுத்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல தீபத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு மேற்கூறிய பீத ச்வேத ரக்த நீல ஸ்படிக மாணிக்க வர்ணங்களாகிய ஷட்தீபங்களையும் காட்டி, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல நைவேத்யத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்குக் கந்தம் ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் த்ருப்தி என்னும் ஷட்வித நைவேத்யங்களையும் படைத்து, இஷ்டலிங்கத்திலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ஸ்தூல தாம்பூலத்தையும் சக்ரங்களிலிருக்கும் ஷட்விதலிங்கங்களுக்கு ச்ரத்தாபக்தி நிஷ்ட்டாபக்தி அவதானபக்தி அநுபவபக்தி ஆனந்தபக்தி சமரசபக்தி என்னும் ஷட்வித தாம்பூலங்களையும் சமர்ப்பித்து, மேற்கண்ட ஷட்விதலிங்கங்கள் மேற்கண்ட ஸ்தானங்களிலல்லாமல் க்ராணத்தில் ஆசாரலிங்கம் ஜிஹ்வாவில் குருலிங்கம் சக்ஷுவில் சிவலிங்கம் த்வக்கில் ஜங்கமலிங்கம் ச்ரோத்ரத்தில் ப்ரசாதலிங்கம் இருதயத்தில் மகாலிங்கம் என்றும், பின்னும் இரத்தத்தில் ஆசாரலிங்கம் மாம்சத்தில் குருலிங்கம் மேதையில் சிவலிங்கம் அஸ்தியில் ஜங்கமலிங்கம் மஜ்ஜையில் ப்ரசாதலிங்கம் சர்மத்தில் மகாலிங்கம் என்றுமறிந்து, சர்வாங்கமும் லிங்கமயமாயிருக்கிறது என்னும் பாவத்தினால் அஷ்டவிதார்ச்சனை செய்யவேண்டும். மேற்கூறிய ஷட்சக்ரங்களிலிருக்கும் ஷட்லிங்கங்களல்லாமல் தேகத்தின் மஸ்தகம் சிகை சிகாந்தம் என்னும் ஸ்தானங்களில் சகஸ்ரதள த்ரிதள ஏகதளங்களுள்ள அக்ஷராத்மகம் அனக்ஷராத்மகம் நிச்சப்தம் என்னும் த்ரிநாதங்களுள்ள ப்ரஹ்மசக்ரம் சிகாசக்ரம் பச்சிமசக்ரம் என்னும் மூன்று சக்ரங்களும், முறையே மகா ஸ்தலத்தில் கூறிய நிஷ்களலிங்கம் சூன்யலிங்கம் நிரஞ்ஜனலிங்கம் என்னும் த்ரிவித லிங்கங்களுமிருக்கின்றன வென்று அறியவேண்டும். மேற்கூறிய ஷட்சக்ரங்களும் இறுதியில் கூறிய த்ரிசக்ரங்களும் சேர்ந்த நவசக்ரங்களில் மேற்கூறிய ஷட்வித லிங்கங்களும் இறுதியில் கூறிய த்ரிவித லிங்கங்களும் சேர்ந்து நவலிங்கங்களாயிருக்கும். 
 

யோகம்

யோகம் சகுணயோகமென்றும் நிர்க்குணயோகமென்றும் இருவகையாகச் சொல்லப்படும். இவ்விருவகை யோகங்களும் இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், த்யானம், தாரணை, சமாதியாகிய எட்டுறுப்புக்களை யுடையன; இவற்றுள், 
 

சகுணாஷ்டாங்கயோகம்

இயமம் :- அகிம்சா (கொல்லாமை), சத்யம் (வாய்மை), அஸ்தேயம் (திருடாமை), ப்ரஹ்மசர்யம் (விவாகமின்மை), க்ஷமை (பொறுமை), த்ருதி (தைர்யம்), தயை (கருணை), ஆர்ஜவம் (நேர்மை), மிதாஹாரம் (மித உண்டி), சௌசம் (தூய்மை) என பத்து வகைப்படும்.

நியமம் :- தபம், சந்தோஷம், ஆஸ்திக்யம் (ச்ரத்தை), தானம், ஈச்வரபூஜை, சித்தாந்த ச்ரவணம், லஜ்ஜை (நாணம்), மதி, ஜபம், வ்ரதம் என பத்து வகைப்படும்.

ஆசனம் :- சுத்தாசனம், சித்தாசனம், சிம்ஹாசனம், சுகாசனம், பத்ராசனம், வீராசனம் முதலியனவாக எண்பத்து நான்கு வகைப்படும்.

ப்ராணாயாமம் :- பூர்வோத்தர முகமாயுட்கார்ந்து தந்தங்களினால் தந்தங்களைத் தீண்டாமல், ஜிஹ்வாவையும் அசைக்காமல், நாசாக்ர த்ருஷ்டிகூடி, சிவத்தியானம் செய்துகொண்டு, கநிஷ்டம் அனாமிகை என்னும் விரல்களினால் இடநாசியின் த்வாரத்திலிருக்கும் இடநாடியை ஈர்த்து, வலநாசியின் த்வாரத்திலிருக்கும் பிங்கல நாடியினால் தேகாந்தர்க்கத வாயுவை அகாரோச்சாரணத்தினால் பன்னிரண்டு மாத்திரை காலம் ரேசித்து, அதன்மேல் அங்குஷ்டமென்னும் விரலினால் பிங்கல நாடியை ஈர்த்து, இட நாடியினால் வெளிப்புறத்து வாயுவை உகாரோச்சாரணத்தினால் பன்னிரண்டு மாத்திரை காலம் பூரித்து, அதன்மேல் நாபீ இருதயம் கண்டம் என்னும் மூன்று ஸ்தானங்களு ளொன்றில் மகாரோச்சாரணத்தினால் பன்னிரண்டு மாத்திரை காலம் கும்பித்து, இந்த ப்ரகாரம் செய்வதே சரீர ஜநித வாயு நிரோதனத்தை யுண்டாக்கும் ப்ராணாயாமம் என்பதாம்.

ப்ரத்யாஹாரம் :- பாஹ்ய கர்ம பரித்யாகத்தினால் சித்தத்தை அந்தர்முகத்தி லடையச் செய்வதாம்.

த்யானம் :- சிவசிந்தனை ப்ரவாஹமாம்.

தாரணை :- வாயுதாரணை பூதாரணை க்ரமங்க ளுள்ளனவாதலன்றிப் பரசிவ மென்னும் சுபாச்ரயத்தில் சித்தஸ்த்தாபனம் செய்வதாம்.

சமாதி :- த்யேய வஸ்துவில் மநோநிச்சலாத்மகமா யிருப்பதாம்.
 

நிர்க்குணாஷ்டாங்கயோகம்

இயமம் :- தேஹேந்த்ரியாதிகளில் வைராக்யமாம்; அதாவது சர்வம் சிவமென்னும் விஜ்ஞானத்தால் இந்த்ரிய சமூகத்தை யடக்குதல்.

நியமம் :- பரமாத்ம விசேஷ ஆசக்தியாம்; அதாவது சஜாதீய வ்ருத்தியின் ப்ரவாஹமும் விஜாதீய வ்ருத்தியின் திரஸ்காரமும்.

ஆசனம் :- சர்வ விஷயங்களில் உதாசீனமும் உறுதியுமான நிலைமையாம்; அதாவது இடைவிடா சிவசிந்தனம் சுகமாக வுண்டாகு மிடம்.

ப்ராணாயாமம் :- விஷயார்த்தமான இந்த்ரிய நிரோதனமாம்; அதாவது சித்த முதலிய சர்வ பாவங் (இருப்பு) களிலும் சிவத்தன்மையாக பாவித்தலால் சகல வ்ருத்திகளையும் நிரோதித்தல். ப்ரபஞ்சத்தை நிஷேதித்தல் ரேசகமென்னும் வாயு, சிவமேயானென்னும் வ்ருத்தி யாதோ அது பூரகமென்னும் வாயு, அதன்பின் அந்த வ்ருத்தியின் நிச்சலத்தன்மை கும்பகம்.

ப்ரத்யாஹாரம் :- விஷய விமுகத்தால் அந்தரங்காபி முகமாம்; அதாவது விஷயங்களில் சிவத்தன்மை யறிந்து மனம் சிவத்தி லழுந்துதல்.

த்யானம் :- ப்ரஹ்மமே நானென்னும் ஐக்யாநுசந்தானமாம்; அதாவது சிவமேயான் என்னும் சத் வ்ருத்தியினால் நிராசம்பத் தன்மையாக நிற்றல்.

தாரணை :- ஸ்வாத்ம நிஷ்ட்டையாம்; அதாவது யாண்டு யாண்டு மனம் செல்கின்றதோ ஆண்டு ஆண்டு சிவத்தைக் காண்டலால் மனதை நிறுத்துதல்.

சமாதி :- நினைப்பு மறப்புகளில்லாத ஸ்வஸ்வரூபத்தில் ப்ரகாசிப்பதாம்; அதாவது நிர்விகாரத் தன்மையினால் மீண்டும் வ்ருத்தியின் சிவாகாரத் தன்மையாக செவ்வனே த்யேயாகாரவ்ருத்தி சூந்யமாயிருத்தல் (த்வைதாநுசந்தானமின்மை).
 

அஷ்டாங்கயோகம் ஷட்ஸ்தல சம்பந்தம்

இயமாதி சகுணநிர்க்குணாங்க யோகமானது பக்தாத்யைக்யாந்தமான அங்கஸ்தல மாயிருக்கிறது, எவ்வாறெனின்:-

இயமம், நியமம் :- இயம நியமங்கள் ச்ரத்தாபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட ச்ரத்தாபக்தியினால் ஆதார சக்ரத்திலிருக்கும் ஆசாரலிங்கத்தை ப்ருதிவ்யாங்க சமேதனாய் க்ரியா சக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, பக்தன் இயம நியமயோக முள்ளவனாயிருக்கிறான்.

ஆசனம் :- ஆசனமானது நிஷ்ட்டாபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட நிஷ்ட்டாபக்தியினால் ஸ்வாதிஷ்ட்டான சக்ரத்திலிருக்கும் குருலிங்கத்தை ஜலாங்க சமேதனாய் ஜ்ஞனசக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி மாகேச்வரன் ஆசனயோகமுள்ள வனாயிருக்கிறான்.

ப்ராணாயாமம் :- சேதன மென்னும் சவிகல்ப நிர்விகல்பாத்ம ஜ்ஞானத்திற்கும் அசேதன மென்னும் பாரமார்த்த வ்யவஹாரங்களுக்கும் பீஜரூபத்தினால் கர்ப்பீகரிக்கும் லயஸ்தானமான நாதாத்மகமென்னும் ப்ரசாதலிங்கம் பரமாகாசம் என்னும் சிவபீஜத்தில் ப்ராணகலாத்மகமான ஆத்மபீஜம் மனோமாருதங்களுடன் கூடி லயமாகும் க்ரமமுள்ள ப்ராணாயாமமானது அநுபவபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட அநுபவ பக்தியினால் அநாஹத சக்ரத்திலிருக்கும் ஜங்கமலிங்கத்தை வாய்வாங்க சமேதனாய் ஆதி சக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, ப்ராணலிங்கி ப்ராணாயாமயோக முள்ளவனாயிருக்கிறான்.

ப்ரத்யாஹாரம் :- ப்ராணலிங்கத்தில் லயிக்கும் மனோமாருதங்களைக் கலக்கவிடாமலிருக்கும் க்ரமமுள்ள ப்ரத்யாஹாரமானது அவதானபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட அவதான பக்தியினால் மணிபூரக சக்ரத்திலிருக்கும் சிவலிங்கத்தை அக்ந்யங்க சமேதனாய் இச்சாசக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, ப்ரசாதி ப்ரத்யாஹாரயோக முள்ளவனாயிருக்கிறான்.

த்யானம், தாரணை :- லிங்கத்தின் த்யான தாரணைகள் ஆனந்தபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட ஆனந்த பக்தியினால் விசுத்தி சக்ரத்திலிருக்கும் ப்ரசாதலிங்கத்தை ஆகாசாங்க சமேதனாய்ப் பராசக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, சரணன் த்யானதாரணை யோக முள்ளவனாயிருக்கிறான்.

சமாதி :- பூர்ணகும்பம் போலவும், நிவாததீபம் போலவும், நிஸ்தரங்காம்புதி போலவும், ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேயரூப த்வைத பாவமில்லாதிருக்கும் லக்ஷணமுள்ள சமாதியானது சமரசபக்தி ரூபமாயிருப்பதனால், அப்படிப்பட்ட சமரச பக்தியினால் ஆஜ்ஞேய சக்ரத்திலிருக்கும் மகாலிங்கத்தை ஆத்மாங்க சமேதனாய்ச் சிச்சக்தியினாற் கூடிப் பூஜிப்பவனாகி, ஐக்யன் சமாதியோக முள்ளவனாயிருக்கிறான்.

இந்தப்ரகாரமாய் இயமாத்யஷ்டாங்க யோகமுள்ளவனே ஷட்ஸ்தல முள்ள வீரசைவனாயிருப்பதனால், சர்வ ப்ரயத்னத்தாலும் மேற்கூறியவாறு கர்மாஷ்டாங்க ஜ்ஞானாஷ்டாங்க யோகங்களை யப்யாசம் செய்ய வேண்டும்.
 

ஷண்மூர்த்திலிங்கஸ்தலம்

நிஷ்களலிங்கமத்தியில் சிச்சக்தி, அந்தச் சிச்சக்தியின் மத்தியில் சாந்த்யாதீ தோத்தரகலை, அதன் மத்தியில் மகாலிங்கம், அதன் மத்தியில் மகாசாதாக்யம், அதன் மத்தியில் பசுபதி என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் சிவன் என்னும் ஐக்யன், அவன் மத்தியில் உபமாதீதன், அவன் மத்தியில் ஆத்மா வுண்டாயிற்று. இது மகாசாதாக்ய ஸ்ருஷ்டியாம்.

அந்த நிஷ்கள லிங்கமத்திய்ல பராசக்தி, அந்தப் பராசக்தியின் மத்தியில் சாந்த்யா தீதகலை, அதன் மத்தியில் ப்ரசாதலிங்கம், அதன் மத்தியில் சிவசாதாக்யம், அதன் மத்தியில் மகாதேவன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் க்ஷேத்ரஜ்ஞன் என்னும் சரணன், அவன் மத்தியில் சதாசிவன், அவன் மத்தியில் ஆகாசம் உண்டாயிற்று. இது சிவசாதாக்ய ஸ்ருஷ்டியாம்.

அந்த நிஷ்கள லிங்கமத்தியில் ஆதிசக்தி, அந்த ஆதிசக்தியின் மத்தியில் சாந்திகலை, அதன் மத்தியில் ஜங்கமலிங்கம், அதன் மத்தியில் அமூர்த்தி சாதாக்யம், அதன் மத்தியில் பீமேச்வரன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் கர்த்தாரன் என்னும் ப்ராணலிங்கி, அவன் மத்தியில் ஈச்வரன், அவன் மத்தியில் வாயு வுண்டாயிற்று. இது அமூர்த்தி சாதாக்ய ஸ்ருஷ்டியாம்.

அந்த நிஷ்கள லிங்கமத்தியில் இச்சாசக்தி, அந்த இச்சாசக்தியின் மத்தியில் வித்யாகலை, அதன் மத்தியில் சிவலிங்கம், அதன் மத்தியில் மூர்த்தி சாதாக்யம், அதன் மத்தியில் பவன் என்னும் ப்ரசாதி, அவன் மத்தியில் ருத்ரன், அவன் மத்தியில் அக்னி யுண்டாயிற்று. இது மூர்த்தி சாதாக்ய ஸ்ருஷ்டியாம்.

அந்த நிஷ்கள லிங்கமத்தியில் ஜ்ஞானசக்தி, அந்த ஜ்ஞானசத்தியின் மத்தியில் ப்ரதிஷ்ட்டாகலை, அதன் மத்தியில் குருலிங்கம், அதன் மத்தியில் கர்த்ரு சாதாக்யம், அதன் மத்தியில் சர்வன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் சைதந்யன் என்னும் மாகேச்வரன், அவன் மத்தியில் விஷ்ணு, அவன் மத்தியில் அப்பு வுண்டாயிற்று. இது கர்த்ரு சாதாக்ய ஸ்ருஷ்டியாம்.

அந்த நிஷ்கள லிங்கமத்தியில் க்ரியாசக்தி, அந்த க்ரியா சக்தியின் மத்தியின் நிவ்ருத்தி கலை, அதன் மத்தியில் ஆசாரலிங்கம், அதன் மத்தியில் கர்ம சாதாக்யம், அதன் மத்தியில் அபவன் என்னும் கலாமூர்த்தி, அதன் மத்தியில் அந்தர்யாமி என்னும் பக்தன், அவன் மத்தியில் ப்ரஹ்மா, அவன் மத்தியில் ப்ருதிவி யுண்டாயிற்று. இது கர்ம சாதாக்ய ஸ்ருஷ்டியாம். அதன்மேல், ப்ரஹ்மாவால் சகல சராசரங்களு முண்டாயின.
 

ப்ரவ்ருத்திக்ரமம்

ப்ரவ்ருத்தி யென்றால் முன்னுக்கு ஆவரித்துக் கொண்டு போதல். சக்தி ப்ரபஞ்சத்தின் வ்ருத்தியை இச்சிக்கத்தக்கதென்று முன்னரே சொல்லப்பட்டிருப்பதனால் ப்ரவ்ருத்திக்கு சக்தியே காரணமாயிற்று. நிஷ்களலிங்கம் சிச்சக்தியின் ஸ்ப்புரணத்தினால் மகாலிங்கமாயிற்று, இந்த மகாலிங்கத்திற்கு ஐக்யன் உபாசகனானான்; மகாலிங்கம் பராசக்தியின் ஸ்ப்புரணத்தினால் ப்ரசாதலிங்கமாயிற்று, இந்த ப்ரசாதலிங்கத்திற்குச் சரணன் உபாசகனானான்; ப்ரசாதலிங்கம் ஆதிசக்தியின் ஸ்ப்புரணத்தினால் ஜங்கமலிங்கமாயிற்று, இந்த ஜங்கமலிங்கத்திற்கு ப்ராணலிங்கி உபாசகனானான்; ஜங்கமலிங்கம் இச்சாசக்தியின் ஸ்ப்புரணத்தினால் சிவலிங்கமாயிற்று, இந்த சிவலிங்கத்திற்கு ப்ரசாதி உபாசகனானான்; சிவலிங்கம் ஜ்ஞானசக்தியின் ஸ்ப்புரணத்தினால் குருலிங்கமாயிற்று, இந்தக் குருலிங்கத்திற்கு மாகேச்வரன் உபாசகனானான்; குருலிங்கம் க்ரியாசக்தியின் ஸ்ப்புரணத்தினால் ஆசாரலிங்கமாயிற்று, இந்த ஆசாரலிங்கத்திற்கு பக்தன் உபாசகனானான். இது ப்ரவ்ருத்திக்ரமமாம்.
 

நிவ்ருத்திக்ரமம்

நிவ்ருத்தி யென்றால் பின்னுக்குக் கழித்துக் கொண்டு போதல். பக்தி ப்ரபஞ்சத்தின் லயத்தை இச்சிக்கத்தக்கதென்று முன்னரே சொல்லப்பட்டிருப்பதனால் நிவ்ருத்திக்கு பக்தியே காரணமாயிற்று, அதனால் பக்தனானான்; இந்த பக்தன் ஆசாரலிங்க சம்யோகத்தினால் ச்ரத்தா பக்தியுடனிருப்பதே நிஷ்ட்டாபக்தியாயிற்று, அதனால் மாகேச்வரனானான்; இந்த மாகேச்வரன் குருலிங்க சம்யோகத்தினால் நிஷ்ட்டாபக்தி யுடனிருப்பதே அவதான பக்தியாயிற்று, அதனால் ப்ரசாதியானான்; இந்த ப்ரசாதி சிவலிங்க சம்யோகத்தினால் அவதானபக்தி யுடனிருப்பதே அநுபவ பக்தியாயிற்று, அதனால் ப்ராணலிங்கியானான்; இந்த ப்ராணலிங்கி ஜங்கமலிங்க சம்யோகத்தினால் அநுபவ பக்தியுடனிருப்பதே ஆனந்த பக்தியாயிற்று, அதனால் சரணனானான்; இந்தச் சரணன் ப்ரசாதலிங்க சம்யோகத்தினால் ஆனந்த பக்தியுடனிருப்பதே சமரச பக்தியாயிற்று, அதனால் ஐக்யனானான்; இந்த ஐக்யன் மகாலிங்க சம்யோகத்தினால் சமசர பக்தியுடனிருப்பதே முக்தியாயிற்று. இது நிவ்ருத்திக்ரமமாம்.

சக்தியின் வல்லமையை பக்தியின் வல்லமையால் வென்று முக்தியடைதல் ஷட்ஸ்தல யுக்தியாம்.

- அங்கலிங்க சம்பந்தம் முற்றும் -
- - - - - -




 

அந்திய கதை
* * *

[அதாவது - ஸ்ரீரேணுக கணநாதர் திக்விஜயஞ் செய்யுங்காலையில் பொதிகையை யடைந்து, அகஸ்த்ய முநிவருக்குபதேசித்து, லங்காபுரியை நணுகி, விபீஷணரது வேண்டுகோளின்படி ஆசார்யத்வத்தை வஹித்து, மூன்றுகோடி லிங்கங்களை ஏக காலத்தில் ஸ்தாபித்து, லங்கையை விட்டேகி, உலகங்களிளெல்லாம் சஞ்சரித்து, ஆங்காங்கு அநேக மகிமைகளைப் புரிந்து, கடைசியாக ஸ்ரீருத்ரமுனீச்வரஸ்வாமிகளுக்கு ஆசார்ய பட்டாபிஷேகஞ் செய்து, கொல்லீபாக்கத்தில் தமது அவதாரக்ஷேத்ரமாகி ஸ்ரீசைலமடைந்து, தாமுத்பவித்த சோமேச லிங்கமென்னும் மகாலிங்கத்திலேயே ப்ரவேசித்தனர் என்பது.]

mUnRu kODi sivalingam prathishttai seyya prArththiththal

ஸ்ரீரேணுகாகஸ்த்ய சம்வாதம்

 

        அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

முக்கண னம்பி கைக்கு முன்சொலத் துவித ஞான 

மக்கண நாத னிவ்வா றகத்திய முனிக்கு ணர்த்தி 

நெக்குறு மனத்தி லீச னினைவொடு மவுனி யானான் 

கைக்கம லங்கள் கூப்பிக் கடமுனி கசிந்து சொல்வான்.            1

 

வருத்துறு பிறவி நோய்தீர் மருத்துவ நெஞ்சக் கோட்டந் 

திருத்துறு முரவ ஞானச் செல்வவே தாக மங்கள் 

கருத்துணர் புலவ நீநின் கருணையா லடிய னேனுக் 

குரைத்தருண் ஞான நூலா லுளத்துறு முவகை பெற்றேன்.        2

 

 

இன்றுநான் மனித யாக்கை யெய்திய பயன டைந்தே 

னின்றுநான் முனிவர்க் கெல்லா மிறைவனாம் பெரியோ னானே 

னின்றுநா னச்சை யென்னு மிருள்விடி காலை பெற்றே 

னின்றுநா னளவி னோன்பா லெய்த்ததற் குறுதி கண்டேன்.                                                        3

 

        பரமநூ லிதனைக் கேட்க வருந்தவம் பயின்றோ ரென்போ 

        லொருவரு முலகி லில்லை யுமையொரு பாக னெங்கோ 

        னருளினா லடிய னேனை யடிமைகொண் டருள வேண்டி 

        மருவினை யென்று சீர்சான் மலயமா தவன்று தித்தான்.                                         4

 

        அறைந்தநூ லிதற்கு நீயே யதிகாரி யன்றி யில்லை 

        பிறந்திடா வடிவ முக்கட் பெருந்தகை யருளி னுக்குச் 

        சிறந்துளா யென்னு மாற்றாற் செப்பின னிதனைப் போல 

        மறைந்திடா திலகு ஞான சாதன மற்றொன் றில்லை.                                            5

 

        ஆகம சார மாகி யருமறைப் பொருளி றைந்து 

        சீர்கெழு கிரியை ஞானந் திகழ்த்து மிவ்விணையி னூலைப் 

        பாகம தடைந்த சீடன் பாலுகந் தளிப்ப தன்றி 

        மோகம தடைந்து ளோற்கு மொழிந்திடத் தக்க தன்றே.                                           6

 

        இப்பரி சருளி யெங்க ளிரேணுகன் கடிதெ ழுந்தங் 

        கொப்பரு முனிவர் கோமு னுயர்விசும் பிடைக்க ரந்தா 

        னப்பெரு முனிவ னோக்கி யற்புத முடனி ருந்தான் 

        செப்பரும் வீரசைவ சித்தாந்த நூலு ணர்ந்து.                                                    7

 

                       விபீஷணாபீஷ்டதானம்

 

        வேண்டுரு வடைய வல்ல விழுமிய விரேணு கன்றான் 

        சேண்டொடு மதிலி லங்ககைத் திருநகர் தன்னிற் சென்றான் 

        பூண்டிகழ் குவவுத் திண்டோட் பொருவலி விபீட ணன்றான் 

        காண்டலு முவகை பூத்துக் கரிப்பகை யணையி லுய்த்தான்.                                        8

 

        அருக்கிய முதல ளித்தங் கருச்சனை முறையி னாற்றித் 

        திருக்கிளர் கமலப் பொற்றாள் சென்னியின் வணங்கி நிற்பச் 

        செருக்கொழி யுளத்த னன்பாற் செய்பணி யுவந்தி யோகி 

        யிருக்கென வயலொடுங்கி யிருந்தன னியம்ப லுற்றான்.                                          9

 

        கண்ணுதல் கயிலை காக்குங் கணங்களிற் றலைவ நீயிம் 

        மண்ணுல குய்ய வந்த மாற்றமு முணர்ந்தி ருந்தேன் 

        புண்ணிய மூர்த்தி நீயிப் புரத்திடைத் திருத்தாள் வைக்கப் 

        பண்ணிய தவங்க ளென்னோ வுணர்ந்திலன் பண்டி யானே.                                         10

 

        பரித்துட லிருந்த தற்குப் பயனுனை யின்று கண்ட 

        தொருத்தரு மென்னை யொப்பா ருளர்கொலோ வென்று கூறக் 

        கருத்துவ கையினின் மூழ்கிக் கணங்கணா யகனு ரைப்பான் 

        பெருத்துள வறத்தி னின்போற் பெரியரிவ் வுலகி லில்லை.                                       11

 

        சங்கர பத்தி தன்னாற் றலைமையோய் நின்னைக் காண்பா 

        னிங்குற வடைந்தே மெம்பா லெய்துறும் வரமொன் றுண்டேற் 

        சங்கைய தறவு ரைத்தி தருதுமென் றவனுரைப்பப் 

        பங்கய மலர்த்தாள் போற்றி யரக்கர்கோன் பகர லுற்றான்.                                         12

 

                       கலிவிருத்தம்

 

               இன்றுநீயிங் கெழுந்த ருளப்பெறு

               நன்றி மேவிய நான்குறை யீதெனச் 

               சென்று கூறுஞ் செயலிலை யாயினு 

               மொன்று கூறுவ துண்டுனக் கின்றரோ.                                                  13

 

               எனக்கு முன்னவ னாகு மிராவணன் 

               சினக்கும் வென்றியி ராமன் சிலையுமிழ் 

               நுனிக்கு மம்புற நொந்துயிர் போம்பொழு 

               துனிக்க வன்றிது ரைத்திடன் மேயினான்.                                                14

 

               நங்கு லம்பெறு நன்மைப் பெருக்கினாற் 

               றிங்க ளென்னத் திசைகள் விளங்குறும் 

               பொங்கி ரும்புகழப் புண்ணிய னாகுநீ 

               யிங்கொ ழிந்தனை யெம்பியென் றோதினான்.                                           15

 

               இலங்கை யொன்றவி லிங்கம் புதியவாய் 

               நிலங்க ளொன்பது கோடி நிறுவுவான் 

               மலங்க லின்றி மனங்கொண் டவற்றினு 

               ணலந்த யங்கறு கோடிக ணாட்டினேன்.                                                 16

 

                               கலிநிலைத்துறை

 

               மூன்று கோடிலிங் கங்களிங் கொழிந்தன முறைநீ 

               யூன்று வாயென வுரைத்திறந் தனனவ னுரையா 

               லான்ற வாகம முறையது செயத்துணிந் தகத்தெஞ் 

               ஞான்று நானினைத் திருந்தன னென்றிது நவில்வான்.                                    17

 

               மூர்த்த மொன்றின்முக் கோடிலிங் கமுமுறை நிறுவித் 

               தீர்த்த வென்கருத் தினைமுடித் தருளெனச் செப்பி 

               யேத்தி நின்றன னரக்கர்கோ னிரேணுக னதுகேட் 

               டாத்த நன்றது புரிகுவ னென்றன னருளால்.                                             18

 

               மூன்று கோடியா ரியவுரு வாயினன் முயன்று 

               மூன்று கோடிலிங் கங்களு முறையுளி வழாம 

               லூன்றி னானொருங் கெயினரு ளொருவனா லன்றி 

               யூன்றி னானிருங் கணத்தினு ளுயர்ந்துள வொருவன்.                                    19

 

               அரக்கர் கோனது கண்டுளத் தற்புத மடைந்து 

               நிரைக்கு மாமணி முடியக னிலம்பட விறைஞ்சி 

               யுரைக்கு மாறுள துதியெலா முரைத்திட வருளிச் 

               செருக்கு மாறிய கணேந்திரன் மறைந்தனன் சென்றான்.                                   20

 

               சென்ற திக்கினை நோக்கின னஞ்சலி செய்தங் 

               கென்று மற்புட னிருந்தன னரக்கர்கோ னப்பா 

               னன்றி யுற்றருள் யோகிதா னல்லருள் புரிந்து 

               தன்ற னிச்சையிற் றடையற வுலகெலாஞ் சரித்தான்.                                     21

 

                       ஸ்ரீரேணுகர் ஸ்ரீசைலமடைதல்

 

               எண்ணி லாவகை யாடல்கொண் டோங்குறு மின்ப 

               மண்ணு ளோர்தமக் குதவின னுலாவினன் வந்தே 

               யண்ணன் மேவிய கொல்லிபாக் கத்தினை யடைந்தான் 

               கண்ணி னாலடி யவர்கள்கள் டுவந்திடக் கணேசன்.                                         22

 

               ஆல யத்தினி லடைந்துசோ மேசனா மரனை 

               மால யற்கரி யான்றனை யன்பொடு வணங்கிச் 

               சால மெய்த்துதி செய்திரு தடங்க னீரருவி 

               போல நெக்குள முருகின னின்றிது புகலும்.                                             23

 

               இன்று காறுநின் னேவலான் மண்ணிடை யிருந்தே 

               னன்று நீயினித் திருவடித் தாமரை நல்கி 

               யென்று நானுடற் பொறையெடா தருளென விரந்து 

               நின்று ஞானமே னியனுருப் பெற்றிட நினைந்தான்.                                         24

 

               ஆன காலையி லங்கணன் றனதுபே ரருளான் 

               மான மாகுநின் பத்தியான் மகிழ்ந்தன முள்ள 

               ஞான மாமொழி மைந்தநீ வருகென நவின்றான் 

               வானு ளார்மலர் பொழிந்தனர் மண்ணுளா ரார்த்தார்.                                       25

 

                  ஸ்ரீரேணுகர் மகாலிங்கத் தந்தர்த்தானமாதல்

 

               ஆதி நாயக னருண்மொழி கேட்டக மகிழ்ந்து 

               போத மாதவ ரனைவரு முறைமுறை போற்றச் 

               சோதி யாயெழுந் திலங்குசோ மேசன்மெய்ச் சொரூபத் 

               தோதி யான்மிகு மிரேணுக கணேசனுற் றொளித்தான்.                                    26

 

               கணங்க ணாயகன் சிவலிங்கத் துற்றமை கண்டு 

               வணங்கி வானவர் கணங்கண்மா தவரெலாம் வழுத்தி 

               மணங்கொண் மாமலர் பொழிந்துநின் றார்த்தனர் மண்மே 

               லணங்கு பாதியன் புகழ்வளர்ந் தோங்கிய தம்மா.                                         27

 

                  அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

               வேதமோ டாக மங்கள் வேறுபா டின்றி நல்குந் 

               தீதறு பொருளை யெல்லாந் திரிவற வுலகிற் காட்டு 

               மாதவ னனைய விந்நூ லாதர வொடுபொ றிப்போ 

               ரோதுந ரோது விப்போ ருயர்தனி முத்தி சேர்வார்.                                         28

 

                       கலிவிருத்தம்

 

               மாரி பெய்க மநுநெறி யோங்குக 

               பாரி லொண்சிவ பத்தர்கண் மல்குக 

               சீரின் மல்குஞ் சிவன் புகழ் வெல்குக 

               வீர சைவம் விளங்குக வெங்குமே.                                                     29

- அந்தியகதை முற்றும் -
* * *

 

ஆக - காப்பு பாயிரம் (மூன்று பாகங்கள்) உள்பட செய்யுள் - 880

- - - - - -

 

இவ்விதமாய் ஸ்ரீரேணுகாசார்யர் அகஸ்த்ய முனிவருக்கு

 உபதேசித்தருளிய வீரசைவ 

சித்தாந்த சிகாமணி (மூலம்)

முற்றுப் பெற்றன
- சுபம் -

·  முதல் பாகம் : பாயிரம்

·  இரண்டாம் பாகம் : சதுர்விதசாரத் தலம்

 

Related Content

Mudhal Thanthiram

அகத்தியர் தேவாரத் திரட்டு

சித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்

திருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்

வீரசைவ நூல்கள்