logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolபிரபுலிங்க லீலை - பகுதி-1 - Prabhulinga leelai - Part-IOm symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


சுரகு லாதிபன் தூய்மலர் நந்தனம் பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன் கரக நீரைக் கவிழ்த்த மதகரி சரணம் நாளும் தலைக்கணி யாக்குவாம். 1. துதி கதி சிவபெருமான் பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன் கைகால் முடங்கு பொறியிலிதன் நாவர யொழுகிற் றெனவுலகம் அளந்த மாலும் நான்முகனுங் காவா யெனநின் றேத்தெடுப்பத் தானே* யுவந்தெங் கரதலத்தில் மேவா அமர்ந்த மாமணியைத் தொழுது வினைக்கு விடைகொடுப்பாம். 1 (* தானே வந்தெங்கர தலத்தின்; என்றும் பாடம் உளது. தணிப்பான் நீக்குதற்கு.) உமாதேவியார் ஆதி பகவன் தனதூடல் தணிப்பான் பணிய அவ்விறைவன் பாதம் இறைஞ்சு மதற்கு நெற்றிப் பகையும் அல்குற் பகையுமாம் சீத மதியும் அரவும்விழுஞ் செயற்கும் உவகை செயாமல்லை மாது பணியு மதற்குமன மகிழும் உமையை வணங்குவாம். 2 ஆனைமுகக் கடவுள் மாரன் எடுத்து வளைக்குமொரு கரும்பை ஒடித்து மலர்சிதறி நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடும் ஈர மதிஞ்செஞ் சடைக்களிநல் யானை யிணைத்தாள் ஏத்துவாம். 3 முருகக் கடவுன் பாக மொருபெண் குடியிருக்கும் பரமன் அணியிற் பரித்தமணி நாக நுழைவுற் றுடல்சுருண்டு கிடந்து நகுவெண் தலைப்புழையிற் போக மெல்லத் தலைநீட்டிப் பார்த்து வாங்கப் போகுமொரு தோகை மயில்வா கன்ப்பெருமாள் துணைத்தாட் கமலந் தொழுகிடுவாம். 4 அல்லமதேவர் கலையை மதிக்கும் புலவர்தமைச் சித்தர் குழத்தைக் கடவுளரை நிலையை மதிக்கு முனிவரரைத் திசைமா முகனை நிரைவளையாச் சிலையை மிதிக்கு நெடியோனை விழுங்கி உமிழாத் திறல்மாயை கலையை மிதிக்கும் அல்லமன் செங்கமல மலர்த்தாள் தலைக்கணிவாம். 5 வசவேசர் வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாஞ்செய் அடிமை மெய்யாகக் கள்ள வேடம் புனைந்திருந்த கள்வ ரெல்லாங் களங்கமறும் உள்ள மோடு மெய்யடியா ராக உள்ளத் துள்ளுமருள் வள்ள லாகும் வசவேசன் மலர்த்தாள் தலையால் வணங்குவாம். 6 சென்னவசவர் பங்க வளற்று வழிமாற்றி ஒருநல் வழியைப் பகர்வார்போல் தங்கள் மதியிற் பலபிதற்றுஞ் சமய ருரைகள் தமைநீக்கி அங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென் றருளும் வீரசைவ சிங்க நிலைத்த அருட்சென்ன வசவன் திருத்தாள் சிரத்தணிவாம். 7 மடிவாலமாச்சையர் வார்க்குங் குமமென் முலைபாக னடியார் அறுவை மாசடித்துத் தீர்க்குஞ் செயல்போல் விச்சலமன் னவன்றன் சேனை செய்பிழையைத் தாக்குங் கரவாள் கொடுசின்ன பின்ன மாகத் தடிந்திட்டுப் போக்குங் கருணை மடிவால மாச்சன் பொன்னங் கழல்போற்றி. 8 சமயகுரவர் நால்வர் பெண்ணிற் கரசு தானாக என்பு பெருநீற் றறைபிரச வண்ணக் கமல மலர்ப் பொய்கை யாகச் செங்கல் மாழையாய் நண்ணச் சிறிய நரிகள் முடங் குளைய பரியாய் நகர்புகுதப் பண்ணற் குரிய அமுதுறுழ்முத் தமிழ்நால் வரையும் பணிகுவாம். 9 அடியார்கள் பரவை கேள்வன் திருத்தொண்டத் தொகையுள் அடியார் பத்தியெலாம் உருவ மாகு நஞ்சோம நாதன் துதியு ளுறுசரணர் அரவ வணியான் அடியார்கள் மற்றை யவர்கள் அனைவருந்தாம் விரவி நாளும் இருப்பவிடங் கொடுக்கு முள்ளம் விரிந்தன்றே. 10 சிறப்புப் பாயிரம் *தண்ணிலவு புனைசடிலத் திறைபுகழல் லமதேவன் சரிதத் தீம்பால் புண்ணியரஞ் செவிவாயில் தமிழ்ச்சங்கத் தான் முகந்து புகட்டி னானால் எண்ணரிய புகழ்மலயத் திருந்தவனோர் வடிவெடுத்தான் என்று கூறப் பண்ணியமுத் தமிழ்க்கவிதைச் சிவப்பிரகா சப்பெரும்பேர் படைத்து ளானே. 11 ( * இச் செய்யுள் சிவப்பிரகாச அடிகளின் உடன் பிறந்தார் ஒருவரால் செய்யப்பெற்றது. ) அவையடக்கம் அடலுறும் அல்லமன் அரிய சீரொடு படுதலி னயந்துபா ராட்டும் பன்முறை மடனிகும் உலகமென் மொழியை வந்துவர்க் கடலிலு மூழ்குவர் காலம் ஒன்றினே. 12 *கதித்தொகை நாற்கதி தருமிடர் கடந்து நச்சுநர் பார்க்கதி முதலிய பத்தைந் தாங்கதி மேற்கதி பெறவருள் விளங்கும் அல்லமன் சீர்க்கதி யிருபதோ டைந்துஞ் செப்புவாம். 13 (* கதி - படலம்) இந்நூலின் பிறப்பு கன்றிய வைரிகள் காதுங் காதையும் வன்றுயர் மதனநோய் வளர்க்கு மாற்றமும் புன்றொழி லினர்வறும் பொழுது போக்கலும் அன்றருள் அல்லமன் அமல லீலையே. 14 இந்நூலின் பயன் புறங்கறை ஒழுகுசெம் புண்ணில் ஈயென வறுங்கதை புல்லியர் கொள்வர் மாமலர் உறுங்களி வண்டினல் லமனொண் காதையைப் பிறந்துள பயன்பெறு பெரியர் கொள்வரே. 15 மயலளற் றூன்றுகோல் மல்கும் அன்பெனும் இயலெழுத் தெழுதுகோ லங்க லிங்கமாம் வியனிலத் தளவுகோல் மதிவி ளக்கினை அயர்வறத் தூண்டுகோல் அமல லீலையே. 16 நன்றிகொள் அடிகணான் குறந டந்துபோ யென்றனி நாவினின் றெழுமிச் செய்யுளான் வென்றிகொள் அல்லமன் சீர்த்தி மென்பயன் கன்றலில் அன்பராங் கன்றை ஊட்டுமால். 17 சிவத் தோற்றம் பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கந் தன்னின் வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைப்பொ ருந்தும் அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன். 18 உருத்திரன், திருமால் ஆகியவர்களின் தோற்றம் சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியவ் விருவ ரானும் தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும் போற்றுறும அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால். 19 நான்முகன் தோற்றமும் உலகத் தோற்றமும் அத்திரு மாலு மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச் சத்திவெண் கமலை அன்னோர் தரவரும் உலகின் தோற்றம் நித்தனங் குருகு கேச னினைவுமாத் திரையி னாமால். 20 அல்லமதேவன் முத்தேவர்களையும் அதிகாரத்தில் நிறுத்தியது ஆக்குறுஞ் செயல தொன்றே அயன்றனக் காக்க லோடு காக்குறுஞ் செயிலி ரண்டுங் கண்ணனுக் காக்கல் காத்தல் போக்குத லென்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன். 21 முதலாவது - துதிகதி முடிந்தது கதி 1 - க்குச் செய்யுள் 21. 2. கைலாச கதி [இக்கதிக்கண் கைலைமலையின் பலவகைச் சிறப்புக்களும், சிவபெருமான் அரசாட்சி மண்டபப் பெருமையும், திருவோலக்கச் சிறப்பும், இறைவனுடைய பெருமையும், அக்கடவுளிடத்திலே உமையம்மை யெழுந்தருளியுள்ள மேன்மையும், அவ்வம்மையின் சிறப்பும், அவை கூடும் நிகழ்ச்சியும், இறைவனுக்கும் தேவிக்கும் உரையாடல் நிகழந்து அது சொற்போராய் முடிவு பெறுதலும், சிவபெருமான் அல்லம தேவருடைய சிறப்பினைக் கூறி அவரைக் காண்டல் அரி தென்றலும், இறைவியானவள் அல்லமதேவரைக் கண்டுபிடித்தல் தனக்கு எளிதேயாமென்று கூறி மாயையை நிலவுலகிற்கு அனுப்புதலும், அம்மாயை சூள்மொழி புகன்று நிலவுலகை யெய்துதலுமாகிய செய்திகள் கூறப்பபெறுகின்றன.] இச்செய்யுள் கதியின் செய்தியைத் தொகுத்துரைக்கின்றது வெள்ளிமால் வரையின் உச்சி வீற்றிருந் தருளு முக்கண் வள்ளலா ரொடுசூ ளுற்று மதரரி நெடுங்கட் செவ்வாய்ப் பிள்ளைவாள் மதிநு தற்றம் பிராட்டியல் லமனைக் காண்பான் கள்ளமா யையைஞா லத்து விடுத்தவக் கதியு ரைப்பாம். 1 நான்முகன் அசுரர் முதலியோர்க்குப் படைத்த இடங்கள் இயங்குவ நிற்ப வான யாவையுங் கலைமா தோடு முயங்குபு முன்ன மீன்ற முளரிவா னவன்வ குத்து வியன்புவி யண்டந் தன்னுள் விதித்தனன் தகுமி டங்கள் வயங்கெழும் அசுரர் நாகர் வானவர் முதலி யோர்க்கும். 2 கைலைமலைச் சிறப்பு நான்முக அண்டந் தன்னுள் நனிசிறந் தொப்பி கந்த(து) ஊன்முக விழிக ளாற்கண் டும்பர்கள் உவகை பூப்பத் தான்மிகு மருளான் மேனி சாத்திய பேரா னந்தக் கூன்முக மதிய ணிந்த கொற்றவன் கைலைக் குன்றம். 3 கொள்ளைவண் டிழிந்து தாது குடைந்துமூக் குழவு டைந்து கள்ளழிந் தொழுகு செம்பொற் கடுக்கைவேய்ந்த திலகு வேணி வள்ளல்வெண் புகழ்தி ரண்ட வளங்கெழு கைலைக் குன்றில் வெள்ளிவந் தத்தி யாச மாகவே விளைந்த தம்மா. 4 கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினுந் தனைக்கொ டுப்பன் மண்பிசைந் துண்ட மாயன் மறித்திட வலிய னல்லன் நண்பிசைந் திறைவ னுக்கே நாமிட னாவ மென்று பண்பிசைந் தலைதி ரண்ட பரிசினின் றிடுமக் குன்றம். 5 ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினா னகுவெண் டிங்கள் பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவு ளூர்தி அழகுறு நடையா லன்றி அறிதரப் படாவக் குன்றில். 6 விளங்கொளி துளும்பும் அந்த வெள்ளியங் கிரியி னுச்சி துளங்கொளி விரிக்குஞ் செம்பொற் சுடர்மணிச் செயகுன் றொன்று களங்கறு பராரைத் துய்ய கருப்புரக் குவாலின் மீது வளங்கெழு சுடரொன் துற்று வயங்குதல் போலு மன்றே. 7 இறைவன் அரசிருக்கை மண்டபச் சிறப்பு இனையதிக் கைலை வெற்பில் இறையர சிருக்கை ஒன்றுண் டனையதை யணிய மாட்டா தப்புறம் போயி னானென் றெனையிகழ் பவர்க ளில்லை யிலங்குமம் மண்ட பத்தின் தனிவள மனந்த னாலுஞ் சாற்றிடற் கரிது மாதோ. 8 இறைவன் தனது இருக்கையில் இருத்தல் அன்ன மண்டபத் தங்கண னோர்பகல் மின்னு செம்மணி வேதிகை ஒன்றன்மேல் மன்னு செங்கதிர் மண்டலத் துற்றனன் என்ன வந்தங் கிருந்தன னென்பவே. 9 திங்களுந் தேவியுந் திகழ்தல் குழவி யாயுடற் கூனிந ரைத்ததோர் விழவு வாண்மதி வேணியின் மேவுறக் கிழவி யாகிக் கிரிக்கோன் மகப்பெறும் அழகு நீர்மக் ளாயிடை வாழ்வுற. 10 முக்கண் விணங்குதல் அங்கி யென்றற் கடுப்பமே னோக்கிய செங்க ணொன்று திருநுதல் சேர்தரத் திங்க ளென்றுந் தினகர னென்றும்வாழ அங்கண் மல்கும் அருள்மடை போன்றுற. 11 காதில் தோடுகளும் கண்டக் கருமையும் எண்ணு மன்பர் இதயமென் புட்படு கண்ணி போன்றுவார் காதிடைத் தோடுற நண்ணு மாதுமை நன்னுதற் பொட்டென வண்ண நீல மணிமிடற் றொன்றுற. 12 கையின் கண்ணுள்ள மான் திரும்பியதற்குக் காரணம் நகந்த ருங்கொடி கண்களை நாணியே முகந்தி ரும்பு முறையில் திரும்புமான் மகிழ்ந்தி டங்கதிர் வீர மழுவலந் தகுந்த குந்தகு மென்று தயங்குற. 13 பாம்புக்காப்பு, பன்றிக்கொம்பு, புலித்தோல் அணிந்தமை சொற்றெ ரிந்த சுடர்மணிக் கங்கணம் உற்றி லங்க ஒரகருங் கேழலின் பற்றி ருந்த மதாணியிற் பட்டெனப் புற்ற ருங்கலை உற்றரை பொற்புற. 14 தாள் வீரக்கழலின் தனிச்சிறப்பு புரத்தை வென்ற நகைக்குமென் போதினோன் சித்தை வென்றசெங் கைக்குஞ் சிலைமதன் எரித்த கண்ணிற்கும் இன்றெனக் கூற்றுடூஉத் தரித்த வீரக் கழலொடு தாளுற. 15 இறைவனிடத்தில் இறைவி எழுந்தருளியிருத்தல் இருந்த ஆதி யிடத்தில் இருந்தனன் பரந்த வானும் படியும் உயிர்களும் ஒருங்கு தோன்ற உதவிக் கருவுறீஇ வருந்தி லாத மணிவயிற் றன்னையே. 16 கூந்தலில் திருமாலை விளங்குதல் இறைவன் அங்கண் எனுமுச் சுடர்களும் உறவு கொண்ட இருளெனும் ஓதிமேல் அறவ னென்றவவ் வண்ணல் புனைந்தருள் நறவு மிழ்ந்த நறுமலர் தாழ்ந்திட. 17 நெற்றியில் நெற்றிச்சுட்டி விளங்குதல் ஏற்று வார்கொடி யெந்தை சடைப்பிறை யாற்றுள் வீழ்வுற் றிறப்பதற் கெண்ணுறத் தோற்ற மேவு சுடர்த்திரு நெற்றியின் ஞாற்று மோர்மணிச் சுட்டி நலந்தர. 18 திருநோக்கும் திருநகையும் ஈசனார்முக மென்னு முளரியில் ஆசை கூரும் அளிவிழிக் காரருள் வாச மாமலர் வாய்க்கிள வெண்ணகை தேசு லாமணி யாகச் சிறந்துற. 19 காதோலை மாணப் பூண்புனை மற்றை உறுப்பெனப் பூணுட் பட்டிடா தோலையின் பூணென யாணர்ச் செம்பொன் இலங்கொளி யோலைமேற் காணக் காதெனும் வள்ளை கவின்செய. 20 பூணரசாக விளங்கும் பொன்தாலி ஓங்கு வாவுடை உம்பன் அயனரி தாங்கும் ஆவி தணந்தொழி நாளினும் வாங்கு றாவெழில் மங்கல நாணொளி தேங்கு பூணர சென்னச் சிறந்திட. 21 முத்துமாலை அரவு லாஞ்சடை அண்ணலைப் பிள்ளைதான் பருவ மூன்றினிற் பாடஇன் பால்தரும் பொருவில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி மருவும் ஆர மணிவடந் தாழ்ந்துற. 22 கையில் கருங்குவளைமலரும் பைங்கிளியும் பறந்தி டாமணி வண்டு படுமலர் சிறந்த நீல மலரொடு சீர்பெற மறந்தி டாது மறைமுடி யின்பொருள் அறைந்து பைங்கிளி முன்கை அமர்ந்திட. 23 பட்டாடையும் மேகலையும் தோலு டைப்பரன் தொல்மனை யாட்டிதன் பால டுத்ததெவ் வாறெனும் பட்டரை மேலு டுத்து விளங்கவொண் மேகலை நூலி டைக்குறு நோய்புரி யாதுற. 24 அடிகளிற் சிலம்பு புத்த னிச்சம் படினும் பொறாமையை எய்த்து மற்றை யிருமணத் தம்மியில் அத்தன் வைத்த அடிக்கம லங்களின் முதத ரிச்செஞ் சிலம்பு முழங்குற. 25 இறைவியின் இடம் அரம்பைமாதர் பலர் வருதல் இந்த ஆரருள் எம்பெரு மாட்டிபால் குரும்பை நாணுமென் கொங்கைப் பொறையினால் வருந்து நூற்பக வன்ன மருங்குலார் அரம்பை மாதர் அளப்பிலர் எய்தினார். 26 அருந்ததி முதலிய மாதர்கள் இறைவியைத் தொழுதல் முல்லை யந்தொடை அருந்ததி முதலெழு முனிவர் இல்ல றம்புரி துணைவிய ராமெழு வரும்போய் வல்ல ரும்பெனக் குவிமுலைப் பனிமலை மகளைச் சொல்ல ருந்துதி செய்துவாழ்த் தெடுத்தனர் தொழுது. 27 திருமகளிர் கவரி வீசுதல் அன்னம் ஒன்றறி யாமுடிக் கங்கையை யறிந்து துன்ன வந்தல மருமெகி னங்களின் தொகுதி என்ன அம்புயத் தொருசத கோடியிந் திரைகள் முன்ன டைந்துவெண் கவரிகள் இரட்டினர் முறையால். 28 இந்திராணிகள் சிற்றாலவட்டம் வீசுதல் அரவு கௌவிய கதிரெனப் பட்டசாந் தாற்றி பரவை அல்குல்வெண் முத்தவாள் நகைக்கொலை பயில்வில் புருவ மென்மலர்க் குழற்சசி கோடிகள் புகன்று மருவி அம்பிகை மருங்குநின் றசைத்தனர் மன்னோ. 29 கலைமடந்தையர் வீணை மீட்டுதல் எடுத்து வீணைகள் உவர்நரம் பிதுமிட றிதுவென் றடுத்த கேள்வராம் பிரமரும் அறிவரி தாகப் படத்த பாம்பணி பரன்புடை மாதுசீர் பாட்டில் தொடுத்து வாலிய கலைமடந் தையர்பலர் துதித்தார். 30 உருத்திரகணிகையர் கூத்தியற்றுதல் செப்ப மைந்ததண் ணுமையிசை தாளமென் சிறுதாள் துப்ப மைந்தவொண் சதிதழிஇச் சுவையபல் காயம் உப்ப மைந்தஇன் கறியென நடித்தனர் உழையோ டொப்ப மைந்தகண் உருத்திர கணிகையர் உவந்து. 31 தமோகுணமாதின் தருக்கு எந்தை பாலுமை முக்குணங் களுமுரு வெடுத்து வந்த மாதர்கள் அருகுநின் றனர்பணி மகிழூஉ அந்த மாதருள் தமோகுண மாதுமை அருளால் சந்த மாயையென் பெயர்கொடு தருக்கிநின் றனளே. 32 உருத்திரர்களின் கூட்டம் வருதல் தெள்ளு வார்திரைக் கங்கையுங் கங்கையுஞ் சிறிய பிள்ளை யாகிய மதியமும் மதியமும் பெரிது துள்ளும் ஓரிள நௌவியும் நௌவியுந் தொடர்பு கொள்ளு மாறவன் நெருங்கின உருத்திர குழாங்கள். 33 நாராயணர் கூட்டம் வருதல் சங்க மொன்றுடன் ஒன்றுதாக் குறவொளி தழைக்குந் துங்க நேமியும் அன்னவா யுறவலை சுருட்டும் பொங்கு வேலைவந் தெனவரிக் கணங்களற் புதத்த எங்கள் நாயகன் பேரவை யிடத்துவந் திறுத்த. 34 பல நான்முகர் வருதல் முகங்கள் நான்கிலும் நான்மறை விதிமுறை முழங்க உகந்து கையிரு நான்குநான் குச்சியிற் குவியச் சகந்த ருஞசெயற் பிரமர்கள் அளப்பிலர் தையல் பகுந்த மேனியன் அவையிடைப் புகுந்தனர் பரவி. 35 பல இந்திரர் வருதல் அயனு மாயனும் எனினுயர்ந் தவரென்ப தன்றிக் கயிலை நாயகன் அமர்திரு வோலக்கங் காண்பான் நயனம் ஆயிரம் இலாமையி னதிகன்நா னென்று வயிர வான்படை யிந்திரர் எண்ணிலர் வந்தார். 36 நாகர் சித்தர் முதலியோர் வருதல் உரகர் சித்தர்கள் வித்தியா தரர்சுர ருயர்கிம் புருடர் மெய்க்கதிர் முதிலிய கோள்திசை புரப்போர் நிருதர் மற்றுளார் விழிபிதுங் கிடவுடல் நெருங்க வரதன் அத்திரு வோலக்கங் காணிய வந்தார். 37 வசிட்டர் முதலிய முனிவர்கள் வருதல் அழிவும் ஆக்கமும் உரையினாற் செயும்வலி அடைந்தார் மொழியும் யாக்கையு மனமுநல் அறங்களின் முயன்று கழியு மாறுமுக் காலமு முளர்தளை கழன்றார் பழயி லாவதிட் டாதிமா முனிவரர் பரந்தார். 38 பூதக் கூட்டம் வருதல் குழவி பால்குடிப் பதுகடல் குடிப்பது குழவி பழகு மாறுணல் மண்ணெடுத் துண்பது படைப்பு முழுது மோர்தளர் நடைமகச் செயலெனு முரண்கொள் வழுவி லாவருட் கணங்களெண் ணிகந்தன வந்த. 39 வீரபத்திரர் வருதல் செருக்கொ டுஞ்சிவ நிந்தைசெய் வாய்க்கிலை தீர்வு விரிக்கி னென்றுமுன் சிறுவிதி தலையற வெட்டி எரிக்கு நல்கிநிந் தனைசெயா மறிமுகம் இயைத்துத் தருக்கி நின்றவவ் வீரன்வந் தொருபுடை சார்ந்தான். 40 வடுகன் வருதல் காதி யாயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோற் கோது வீசினுங் கடல்கவிழ்த் தனையசெங் குருதி பாதி யாயினு நிரம்புறாக் கபாலபா ணியனாய் மாது பாதியன் அவையிடைப் புகுந்தனன் வடுகன். 41 வீரமாகாளி வருதல் வீர மாதருக் கில்லையென் றுரைப்பதென் விளங்க வீர மாதென அறிகிலி ரோவென விளம்பி வீர யோகினி வெள்ளமோ டமர்பொர விரும்பும் வீர காளியும் புகுந்தனன் அவையிடை விரைந்து. 42 பிருங்கி முனிவர் மகிழல் ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம் மூன்று காலெனக் கொண்டரன் முகத்திள முறுவல் தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப் போற்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன். 43 நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல் படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண் முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன் அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக் கடிகொள் மாலையம் பிரம்பொடு திந்தனன் களித்து. 44 வாணாசுரனும் பானுகம்பனும் பேரொலி யுண்டாக்குதல் பெய்யு மாமழை முகிலெனப் பெரியவாய் முழவம் துய்ய மாமதி அனையவெண் சுரிமுகச் சங்கம் ஐய வாணனும் பானுகம் பப்பெய ரவனும் கையும் வாயுமொத் ததிர்த்தனர் செவிகரங் கவிழ்ப்ப. 45 அவையிற் குழுமிய பலர் செயல்கள் துதிப்ப ரோர்சிலர் பாடுவ ரோர்சிலர் துள்ளிக் குதிப்ப ரோர்சிலர் கைகளால் தோளிணை கொட்டி அதிர்ப்ப ரோர்சிலர் நெக்குநெக் குருகிநெஞ் சகமெய் விதிர்ப்ப ரோர்சிலர் ஆனியர் அவையிடை மிடைந்தோர். 46 பலவகைப்பட்ட ஒளிகள் படைக்க லங்களின் ஒளியிமை யவரொளி பரித்த தொடைக்க லங்களின் ஒளியரம பையர்பணைத் தோளின் இடைக்க லங்களின் ஒளியெலாம் இருளிடை மிடற்றின் அடைக்க கலம்புக நிறைந்தன பரந்தபே ரவையில். 47 இறைவி இறைவனிடம் வினாவல் இன்னணம் அவையிடை யிருந்த எம்பிரான் தன்னொடு வினவுமோர் தகைமை உன்னுபு கன்னலும் அமுதமுங் கைப்ப எம்முடை அன்னைதன் வாய்திறந் தறைதல் மேயினான். 48 இங்குக் கூடியோர் வீடு பேறு எய்துவரா? எய்தாரா? என வினவல் தலைவநின் அவையிடைச் சார்ந்த இப்பெரு நலனுடை யவரெலாம் நணுகி வெம்பவத் தலைகில ராகியின் படைவ ரோவலால் நிலையில ரோவது நிகழ்த்துவா யென்றாள். 49 இறைவன் பதிலுரைத்தல் விளங்கிழை நன்றுநின் வினாவென் றெந்தைமண் அளந்தவன் அயன்முத லாயி னோருமின் புளங்கொளு நாமரூ பத்தொ டொன்றுறத் தளைந்துள கிரியையாற் சார்கிலா ரென்றான். 50 வினையை வெல்வதற்கு இறைவி சூழ்ச்சி கேட்டல் அனையதேல் நாம ரூபக் கிரியைகள் அனைத்தும் வெல்ல நினைவுறு சூழ்ச்சி யொன்று நீயெனக் குரைத்தி யென்னாப் பனிமலை தவஞ்செய் தீன்ற பவளவாய் மடந்தை கூற நனையவிழ் கொன்றை வேணி நம்பன்மற் றிதனைச் சொல்வான். 51 வீடுபே றடையும் வழியை இறைவன் கூறல் போகபூ மியினிற் போக தனுவினாற் பொருந்த லாகா தேகமாம் இன்ப சித்தி யியம்புறிற் கரும பூமி ஆகமா னதுகொண் டன்றி ஆதலால் ஞாலத் தெய்தி யோகமா நெறியி னின்றோர் உண்மைசா தித்துக் கொள்வர். 52 நல்லாசிரியன் யார்? என வினவல் என்றிது கொழுநன் கூற இளங்கொடி அனைய தாயின் ஒன்றொரு மக்கள் ஞாலத் துவமையின் ஞான சித்தி நன்றுற உணர்த்த வல்ல குரவன்யார் நவிறி யென்னக் குன்றணி மதிய மொப்பக் குனித்தவன் கூற லுற்றான். 53 இறைவன் யாமே அல்லமனெனல் தொல்லையில் உயர்சுஞ் ஞானி தூய்நிராங் கார னென்போர் எல்லையில் தவங்கள் செய்ய எமதுமெய் வடிவத் தானே அல்லம நாம மைந்தன் ஆயினம் அனையான் தன்னை வில்லுறழ் நதலாய் காண்டல் மிகவுனக் கரிய தென்றான். 54 இறைவி சினந்துரைத்தல் என்றலும் இமைய வல்லி யெனக்கரி தென்ப தென்கொல் உன்றனி அல்ல மன்றன் உண்மையை அறிய வேண்டின் நின்றவர் தமக்கெ லாமும் எளிதெனா நெகிழ்ந்து ரைப்ப அன்றினர் புரமெ ரித்த அணிநகை யாளன் சொல்வான். 55 இறைவன் அல்லமதேவரின் பெருமை கூறல் முனிவுறேல் வறிய உன்றன் மொழியள வல்லன் மாதே வினைதபும் அன்ப ரன்பால் வேண்டிய வடிவ னாகி அனையவர் விழியில் தோன்றி அருளுவன் அலம தேவன் தனதியல் பியாவ ரானுஞ் சாற்றிடற் கரிய தென்றான். 56 இறைவி, மாயையால் அல்லமனைக் காண்பேன் எனல் மெய்ம்மையிம் மாற்றம் ஆகும் வேறுளார்க் கியான்செய் மாயை பொய்ம்மலி செயலில் தப்பிப் போமெனிற் காண்ப லென்னா அம்மலை மகள்த ருக்கிஅறைதலு நின்றன் ஆற்றல் மைம்மலி குழலாய் காண்கும் என்றிது வள்ளல் கூறும். 57 இறைவி தன் சூள் பொய்யாதெனல் இன்னணஞ் சூளி யம்பி இனிவறி திருத்தி யாயின் பொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலை மடவாய் தோல்வி நின்னிடை வருமென் றண்ணல் நிகழ்த்தலும் இமைய வல்லி என்னுரை தவறா தென்னா நெடுமொழ யிசைத்துப் பின்னர். 58 இறைவி மாயையை நிலவுலகிற் கனுப்புதல் ஆயிடை அருகு நின்ற தமோகுண வடிவ மாகும் மாயையை விளித்து நீபோய் மண்ணிடை அல்ல மப்பேர் நாயகன் தனைய றிந்து நணுகுதி யென்று கூறி ஏயினள் அவள்வ ணங்கி இனையதொன் றியம்ப லுற்றாள். 59 மாயை சூள்மொழி புகலுதல் அல்லமன் இயல்ப றிந்தங் கணைகுவன் நழுவு மாயின் வல்லிதின் வலிந்து பற்றி யீர்த்திவண் வருவ லென்று சொல்லினள் ஒருசூள் வேலை சுவறவுண் டிடுவ லென்று புல்லிய எறும்பொன் றாற்றல் ல்வது போல அன்றே. 60 மாயை நிலவுலகடைய எண்ணுதல் தன்னள வறியாள் மாழ்கித் தண்மதி தவழும் வேணி முன்னவன் அவையுள் நின்று மொழிந்தவச் சூள்மு டிப்பான் பன்னக முடிப ரித்த பார்மிசைச் செலவை நெஞ்சத் துன்னினன் எய்தி னாளவ் வொளியிழை மாயை மாதோ. 61 இரண்டாவது கைலாச கதி முடிந்தது கதி 2 - க்குச் செய்யுள் - 82. 3. மாயையின் உற்பத்தி கதி [இக்கதிக்கண் விளவல நாட்டின் பெருமையும், அந்நாட்டின், தலைநகராகிய வனவசை மாநகரின் சிறப்பும், அந்நாட்டினை யாளும் மமகாரன் என்னும் அரசனின் சீர்த்தியும், அவன் மனைவி மோகினியின் நலமும், அவ்விருவரும் மகவுக்காக நோன்புகளியற்றுதலும், மோகினி வயிற்றில் மாயை கருவாதலும், மாயையின் பிறப்பும், அவள் பிறப்பால் மகிழ்ந்த மமகாரன் விழாக் கொண்டாடுதலும், காமன் செய்கையும், தவம்புரிவோர்க்கு நேரிடும் இடையூறும், அவர்கள் அவ்விடையூற்றின் காரணத்தை யாராய்தலும், துருவாச முனிவர் ஆங்குத் தோன்றி ஐயத்தைப் போக்குதலும், மமகாரன் தன் மகளுக்குப் பெயரிட்டுச் சிறப்புக் கொண்டாடுதலும், மோகினி தன் மகளை வளர்க்கும் அருமைப்பாடும், பேதை பெதும்மை முதலிய பருவங்களைக் கடந்து, மாயை மங்கைப் பருவமடைதலும், அப்பருவத்தில் அவள் பொழுது போக்குதலும், மமகாரன் தன் மகளுக்கு மணவாளனை யாராய்தலும், அகங்காரனாகிய குலு வருதலும், அவன் மாயையைப் பார்த்துச் சிவபிரானே அவளுடைய தலைவனாகத் தக்கவன் என்று கூறுதலும், மாயைக்கு இறைவனைப் பூசனைபுரியும் முறையைப் போதித்தலும் ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்பெறுகின்றன.] பூத லத்தைப் பொருந்துபு மாயையென் றோத லுற்ற ஒருபிடி நுண்ணிடை மாத வத்தர் மனங்கள் கலங்குறச் சாத முற்று வளர்ந்தமை சாற்றுவாம். 1 விளவல நாட்டின் பெருமை களங்க வெண்மதி நெஞ்சங் கவற்றுமோர் துளங்கு சங்குடைத் தோன்றல் மணத்தணி வளங்கொள் மண்மகள் மார்பின்ம தாணிபோல் விளங்கு மென்ப விளவல தேயமே. 2 அந்நாட்டின் குளம், வயல், பொழில், வீடு முதலியன வாவி யாவு மதன்பெருந் தூணிசெய் யாவு மார னெடுக்குஞ் சிலையிடங் காவெ லாமவன் காகள சாலைகள் பூவை மார்மனை போர்க்கள மென்பவே. 3 அந்நாட்டில் அறச்செயல் மிக்கவர்களின் மிகுதி பொறைக்க யிற்றிற் புகழையின் சொல்லெனும் விறற்க யிற்றின் விருநதைக் குரவர்சொல் மறைக்க யிற்றின் மனத்தைத் திருவைநல் அறக்க யிற்றின் அசைப்பவர் எங்குமே. 4 அந்நாட்டில் செல்வத்தினும் அறிவினும் அழகினும் மிகுந்தவர்கள் உளர் வறிய னாவன் வடதிசை மன்னவன் அறிவி லாள னனந்தனு மாவனேர் சிறிய னாவன் சிலைமதன் பூம்பொழில் வெறியு லாவும் விளவலத் தெய்தினே. 5 விளவல நாட்டிலுள்ள வனவசை மாநகர் இணையி லாத இனைய வளம்பல நணுகி வாழும் விளவல நாட்டிலவ் வணியின் நாப்பண் அழுத்தும் விலையிலா மணியின் மேவும் வனவசை மாநகர். 6 வேர்ப்பலாப் பழுத்து நிலம் வெடித்தல் படிக்குள் ஈரப் பலாப்பழுத் தொண்புவி வெடித்த வாயின் அனந்தன் மணிவெயில் அடுத்து வானத் தமர்மதி யைத்தொடாக் கடுத்த வேள்குடைக் காம்பெனத் தோன்றுமால். 7 துறவிகளைப் போன்ற தும்பிகள் நறவ விழ்ந்த நறுமலர் தோறும்வண் டுறவ ருந்தி யிறாலுற் றொடுங்குமால் அறவர் தங்கள் அகந்தொறும் ஐயமுண் துறவர் தங்குகை துன்னுதல் போலவே. 8 வண்டுகள் தேனினைக் கொள்ளையிடல் வாவிச் செங்கம லங்களில் வல்லிருள் மேவித் துஞ்சி விடிதரு காலையில் காவிற் சென்று களிவண் டினங்குயில் கூவத் தண்மதுக் கொள்ளைகொண் டுண்ணுமால். 9 வயல்மடை உடையாமைக்குக் காரணம் பெடையொ டுற்றுப் பிரிவில்பைங் கிள்ளைகள் குடியி ருக்குங் குளிர்பொழில் வாய்மலர்ப் பொடியு திர்க்கில வேலளி போய்வயல் மடையு டைக்கு மதுப்பெரு வெள்ளவே. 10 தண்ணீரின் போக்கு சேலு லாவித் திரியும் நதிப்புனல் மாலி யானை மறையக் கதிர்த்தலைச் சாலி நீடித் தழைத்து விளைவயல் காலி னோடிக் கடிது விழுமரோ. 11 கழனி காமன் கையைப் போன்றது வரிக்க யல்செங் கமலம் வரிவளை இருக்கை யால்மலர் அம்பினை யேந்தலால் விரிக்கும் அஞ்சிறை மென்னடைப் புள்வயல் செருக்கு வில்மதன் செங்கை நிகர்க்குமால். 12 தடாகங்களில் சங்குகளின் மிகுதி நளிர்க டல்துயில் நாரணன் தன்னுருக் கொளவ ளிப்பவர் கையிற் கொடுத்திடும் வளைபி றக்கும் இடமென வண்புனல் குளம னைத்துங் குடவளை மொய்க்குமால். 13 தாழ்வும் உயர்வும் தாழ்ந்தோர் உயர்வ ரென்றுமிக உயர்ந்தோர் தாழ்வ ரென்றுமறஞ் சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில்சூழ் கிடந்த தொல்லகதி தாழ்ந்தோ ரனந்தன் மணிமுடிமேல் நின்றன் றுயர்ந்து தடவரையைச் சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன் தாட் கீழ்நின் றதுபோய்ச் சூழெயிலே. 14 அந்நகர் மக்கள் இயல்பு சொற்போர் புரிவர் நான்மறையா றங்க முணர்ந்த தொழுகுலத்தோர் விற்போர் புரிவர் நெடியசிலை யிராம னனைய விறல்வேந்தர் பொற்போர் புரிவர் பிறர்பொருளுந் தமபோற் பேணிப் புரிவணிகர் நெற்போர் புரிவர் அந்நகரில் வேளாண் குலத்து நெறியினரே. 15 அந்நகரத்திற்குள்ள ஒரு குறை உடுப்போர்க் குடுக்குந் துகில்காளல் உண்போர்க் குண்ணும் பொருள்களால் தொடுப்போர்க் கெடுக்கு மலர்களால் அணிவோர்க் கணியுஞ் சுடரிழையால் அடுப்போர்க் கடுக்கு மனைகளாற் குறைபா டுடைய தன்றதுதான் கொடுப்போர்க் கிரப்பா ரில்லாத குறையொன் றுளது கூறுங்கால். 16 யானை குதிரைகளின் தனிச் சிறப்பு ஈச னளித்த ஒருகோட்டி யானைக் கியாங்கள் இணையாயின் வாச வனைத்தாங் கீரிருகோட் டியானை யெம்மை மானுமெனும் பாச வுரற்கால் யானையொடு பாண்டில் இழுக்கும் பகடுயரின் தேசின் இரதப் பரிசிறந்த என்னும் பரிகள் தெருவகலா. 17 அந்நகரின் பல்வகை ஒலிச்சிறப்பு மறையுங் கலைகள் பற்பலவும் முழுங்கும் ஒலியும் மங்கலஞ்செய் பறையுங் குழலும் யாழுமியம் பொலியுங் கரியும் பரிமாவும் நிறையுந் தெருவி லோடுமணித் தேரி னொலியும் நிறைகடலின் அறையுந் திரையிற் சென்றுவிசும் பமரர் செவியின டைந்திடுமால். 18 வனவசை மாநகரின் பெருமை வேயை நகுமென் சுடர்த்தொடிய தோள்மா துமையை விடைகொண்டு பேயு மகன்று வரற்கரிய கைலை மலையைப் பிரிந்தெய்தித் தூய மனமுங் கலங்கஅருந் தவர்வேள் குவவுத் தோள்வீங்க மாயை பிறந்த வனவசைமா நகரின் வளத்தை யார்சொல்வார். 19 மமகார மன்னனது சிறப்பு இம்மா நகரிற் கரசாகி யிருந்து வாழ்வோன் அம்மால் புணருஞ் செயன்மாதரை யாகம் வைத்தல் சும்மா புகழன் றெனவிந்தையைத் தோளில் வைத்தோன் கைம்மாறு வேண்டா மழைபோல்மம கார னென்பான். 20 அவனது இயற்கைப் பண்பு திறைதா னளக்குந் திறல்வேந்தர்க் கரிய சீரான் குறைதான் இரக்கு மவர்க்கோடிக் குறுக நிற்பான் நிறைதான வெற்பு மணிநாகமு நின்று தாங்கும் பொறைதா னெடுக்கு மிகுமாற்றல் பொருந்து தோளான். 21 கொடையால் மிகுபுகழ் பெற்றவன் இரப்பார் வரினோ ரடிஞான மெளிய தன்றிக் கரப்பார் கரக்கும் பொருளன்றென ஈகை கற்றே உரைப்பா ருரைக்கு முரையாவும் புகழில் வைத்தோன் தரைப்பா லுவமை யிலையாகத் தருக்கி வாழ்வோன். 22 மாகினி அன்னான் மனைவி வணர்வார்குழல் ஐய வேற்கண் மின்னார் மருங்குல் தளர்ந்தொல்கி மெலிய விம்மிப் பொன்னார் சுணங்கு விரிபூண்முலைப் பூங்கொம் பன்னான் இன்னா ரமுத மொழிமோகினி யென்னும் பேராள். 23 மாகினியின் சிறப்பு ஒன்றான நம்பன் மருங்காயிழை உய்த்த மாயை குன்றத ஆற்றல் முனிவோருளங் குன்று மாறு பொன்றாத பொற்பிங் கிவள்பூங்கருப் போந்து பெற்றாள் என்றா லிவளுக் கிணையாவினி யாரைச் சொல்வாம். 24 மகவுக்காக நோன்புகள் இயற்றல் இம்மம காரனு மோகினி யென்னும் மைம்மலி மென்குழல் வாள்விழி மாதும் அம்மக வின்மையின் ஆரஞ ரெய்தி மெய்ம்மெலி நோன்பு விளைத்தன ரன்றே. 25 மாயை மோகினியின் கருப்பையை அடைதல் முன்னிய நோன்புசெய் மோகினி மாதின் தன்னுத ரத்துமை தண்ணரு ளாலே மன்னியல் மாரன் வலப்புய மாடக் கன்னிகை மாயை கருப்ப மடைந்தாள். 26 கருப்பகாலக் குறி முத்தணி கொங்கை முகங்கள் கறுத்தாள் மெய்த்திரு மேனி விளர்த்து நரம்பு பைத்தன மீது பரப்ப இருந்தாள் பொய்த்துயில் கொண்டு புளிக்கு முவந்தாள். 27 மோகினி மாயையைப் பெறுதல் இன்னணம் ஐயிரு திங்க ளிருந்து பின்னரு மோகினி பெண்மக வீன்றாள் தன்னிகர் கின்ற சலஞ்சல மொன்றிங் கின்னொளி முத்தினை யீன்றதை யொத்தே. 28 மாயைபிறந்தநாட் கொண்டாடல் சங்கொடு தண்ணுமை சச்சரி தாளம் வங்கியம் வெந்துடி வார்முர சங்கள் மங்கல மங்கை மகப்பெறு நாளில் அங்கசன் வெம்முர சென்ன அதிர்ந்த. 29 அந்தணர்களுக்குப் பொருள் அளித்தல் தூண்டொளி போல்மகள் தோன்ற உவப்புற் றாண்டகை மன்னவன் அந்தணர் கொள்ளப் பூண்துகில் மாமணி பொன்னில மற்றும் வேண்டின யாவும் பெறுப்ப அளித்தான். 30 அப்பொழுது காமன் செய்கை இங்கொரு மாயை யென்னும் எழில்முளை தோன்ற லோடும் பொங்குறும் உவகை நெஞ்சம் பொறுக்கல னாகி யெய்யும் வெங்கணை மழையுந் தூவு மென்மலர் மழையு மொன்றா எங்கணு மதன வேள்நின் றிடையறச் சொரிந்தா னம்மா. 31 அப்போது தவஞ்செய்வோர்கட்கு நேரிட்ட இடையூறு கண்ணகல் நிலத்த கங்கைக் கரையிலும் முழையி டத்தும் புண்ணிய வனத்து மெய்திப் புற்றுமாய் மரமா யுற்றுந் தண்ணிய புனலில் தீயிற் சார்ந்துமூண் துயில்து றந்து பண்ணிய தவத்தோர் நெஞ்சும் பதைத்தன மயலின் மூழ்கி. 32 முனிவர் தம் மனக்கலக்கத்தை ஆராய்தல் ஐம்பெரும் பூதம் எல்லாம் அடுக்கழிந் தொழியும் போதும் கம்பமில் நமது நெஞ்சங் கலங்கிய தென்னை கொல்லோ வம்புறு செயலிஃ தீங்கு வந்தவா றெவ்வா றென்னாச் செம்பொரு ளுணர்ந்த சீர்சால் செய்தவ ரிந்த காலை. 33 அப்பொழுது துருவாச முனிவர் அங்கு வருதல் தளர்ந்துழி யுதவுங் கல்வி தானெனத் துருவா சப்பேர் கொளுந்தனி முனிவர் கோமான் குறுகலு முனிவ ரெல்லாம் உளங்கனி வரநின் றேத்தி உயர்தவி சிடையி ருத்தி வளங்கெழு மலர்கள் தூவி வந்தனை செய்து சொல்வார். 34 தங்கள் உள்ளக் கலக்கக் காரணம் வினவல் என்றுமெம் முள்ள மெல்லாம் எழுதிய விளக்குப் போல நின்றிடும் இன்றென் கொல்லோ நிலைதடு மாறா நின்ற தென்றன்மு னிருந்த செய்ய சிறுசுடர் போல ஐய நன்றிதை உணரு மாறு நவின்றருள் செய்தி யென்றார். 35 துருவாச முனிவர் பதில உரைத்தல் சங்கரி யொருசூ ளாற்றன் தமோகுண வடிவ மாயை மங்கையை விடுப்ப அன்னாள் வனவசை நகரிற் பிள்ளைத் திங்களி னுதித்தாள் இன்று செய்தவக் கிழமை பூண்டீர் உங்கள் நெஞசதனா லாற்றல் உடைந்ததென் றவனு ரைத்தான். 36 முனிவர்கள் தங்கள் ஐயம் நீங்கிற்று என்றல் அருந்தவ முனிநீ கூறிற் றுண்மையே யன்றி யெங்கள் பெருந்தவ முயலு நெஞசம் பிறழ்தரற் கேது வில்லை இருந்துளம் வருந்தி யாய்ந்த எம்மிடை ஐய மெல்லாம் பரிந்தன அருளால் நீயெம் பால்வரு கையினா லென்று. 37 மாயை உலகில் தோன்றியதற்குக் காரணம் கேட்டல் முனிவரர் துவா சப்பேர் முனிவர்கோன் தனைவ ழுத்திப் பனிமலை வல்லி யேவப் பட்டெழில் மாயை யென்னும் வனிதையிவ் வுலகில் வந்த வாறுநீ விரித்தி யாங்கள் இனிதுணர் வுறுமா றோது கென்றலும் அவனு ரைப்பான். 38 துருவாச முனிவர் கைலையில் நிகழ்ந்த செய்தியைச் சொல்லுதல் கயிலையோ லக்கத் துற்ற கண்ணுதல் அல்ல மன்றன் இயல்பினை அறிதல் தேற்றா யென்றுமை யுடனு ரைப்ப மயிலிய லறிவ லென்று மாயையை விளக்கைக் காண்பான் பயிலிரு ளினைவி டுத்த பரிசென விடுத்தா ளன்றே. 39 கலக்கம் தீருவதற்குத் துருவாசர் வழி கூறுதல் காரணம் இதுவே யெங்கோன் கைலையை விடுத்து மாயை தாரணி தனில்வ ரற்குத் தக்கவம் மாயை யென்னும் மாரண விடங்க லந்த மயக்கமல் லமனென் றிட்ட பேரணி கலுழன் தன்னை நினைந்திடிற் பெயரு மன்றே. 40 அல்லமதேவரே எல்லா நன்மைகளையும் அருளுவர் என்றல் பிணிதப வேண்டில் வாழநாள் பெரிதுற வேண்டிற் செல்வம் அணிதர வேண்டிற் கல்வி அறிதர வேண்டில் வானம் பணிதர வேண்டின் முத்திப் பயன்பெற வேண்டில் என்றும் இணையறும் அல்ல மப்பேர் எந்தையை நினைப்ப ரென்று. 41 துருவாசர் செல்ல முனிவர்கள் அல்லமரைப் போற்றல் புகன்றவ ருளத்தில் துன்பம் போக்குபு துருவா சன்றான் அகன்றுதன் னிடத்த டைந்தா னன்றுதொட்டருந்த வத்தோர் மகிழ்ந்தருள் அல்ல மன்றன் மலரடி மனத்தில் தாங்கி உகந்தவன் புகழாய் வந்த வாறெலாம் உரைக்க லுற்றார். 42 முனிவர்கள் தவஞ்செய்திருத்தல் நெஞ்செனு மகலி லன்பாம் நெய்நிறைத் துள்ள மென்னும் பஞ்சுறு திரியி னுச்சி பற்றிட அல்ல மப்பேர் அஞசுட ரிலக வேற்றி யருந்தவர் மாயை யென்னுந் துஞ்சிரு ளகன்றி ருந்தார் தொல்லைமா தவங்கள் செய்து. 43 மாயையின் செய்தி கூறப்பெறுகின்றது மந்தர கிரிப்பேர் பெற்ற மத்தெறி கடல்போ லையர் சிந்தனை கலங்கி மெல்லத் தெளிந்தமை தெரிந்து ரைத்தாம் வந்துமண் பிறந்த வன்றே மாதவர் மனங்க லக்கும் வெந்திறல் மமகா ரன்றன் மகள்திறம் விளம்ப லுற்றாம். 44 மமகாரன் மகளுக்குப் பெயரிடுதல் காந்தம் வலியும் இரும்புபோற் கண்கள் தன்னோ டுறப்பிணித்து நேர்ந்த மனமோ ரணுவென்னல் நியாய மன்றென் றம்மனத்திற் போந்த ஆசைப் பெருங்கடலைப் புகட்டு மகளைக் கண்டுவந்து வேந்தன் மாயை யெனுநாமம் விளம்பிச் சிறப்புப் பலசெய்தான். 45 மோகினி தன் மகளுக்கு நீராட்டிப் பொட்டிடுதல் மாயைப் பெயர்கொள் மகளைநறு மஞ்சள் திமிர்ந்து கணைக்காலின் ஏயக் கிடத்தி நீராட்டி யிணைக்க ணுந்தி நீரூதி நேயத் துகிலின் மெய்துடைத்து நெகிழ்மென் முலையோ டுறத்தழுவி வாயில் திவலை கொடுதேய்த்து மண்பொட்டணிந்து நீ றிட்டு. 46 அணிகலன்கள் அணிதல் கண்ணிற் கமைய மையெழுதிக் காற்குச் சதங்கை பொற்றண்டை நண்ணப் புனைந்து பொன்னரைஞா ணடுவிற் பூட்டிப் புலியுகிர்சேர் வண்ணப் பசும்பொன் அணிமார்பில் வனைந்து சிறுமென் தொடிசேர்த்திப் பெண்ணிற் கரசி திருநுதற்பொற் பிறைமேற் சுட்டி யொன்றணிந்து. 47 தொட்டிலில் இட்டுச் சீராட்டுதல் போக்கும் பொருளாற் கண்மிச்சில் போக்கி யன்பான் முலையூட்டித் தூக்கும் பவளக் காற்பசும்பொன் தொட்டில் மலியக் கிடத்தியே பார்க்குஞ் சுவைவா னமுதமே பார்வேந் தணியே யென்துயரந் தீர்க்குங் கரும்பே கண்மணியே திருவே யென்று சீராட்டி. 48 மோகினி மகளைப் போற்றும் அருமை மிடிய னொருசெய் யாளனச்செய் விளையக் காக்குஞ் செயல்போலப் படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்று மதுபோல ஒடிவில் செங்கோல் மனுவேந்தன் உலகம் புரக்கு முறைபோலக் கொடிய நோன்பு செய்தீன்ற கொடியை வளர்த்தாள் மோகினியே. 49 மாயை கிடத்தலின் சிறப்பு கள்ள மாயை தன்னெழில்போற் கண்ட தில்லை யென்னமிக உள்ளம் வியந்து தலையசைப்ப தொப்ப அசையுஞ் சுடர்பார்த்து மெள்ள விரலொன் றனைச்சுவைத்து மிளிர்பூஞ் சதங்கைத் தாளுதைத்தும் விள்ளு மலர்வாய் குவித்தழுது மீள நகைத்துங் கிடக்குமால். 50 மாயைக்கு எதிராக மதனவேள் செய்கை மாயை கவிழ முகங்கவிழ்ந்த மதனன் இருந்தா னவளிருப்பப் போய சிலையொன் றெடுத்தெழுந்தான் பொன்னா லியன்ற பாவையெழ மேய அனங்க வேள் நடந்தான் வேந்தன் பயந்த மகள் நடப்பத் தூய தவஞ்செய் தைந்தவித்த துறவி னோர்பா லோடினான். 51 மாயை மழலைமொழி பேசுதல் குழலும் யாழும் இனியவெனக் கூறா வண்ணம் மென்கனிவாய் மழலை மொழிந்தும் உடற்கின்ப மருவ வோடி மேல்விழுந்தும் விழையும் அமிழ்தின் மிகவினிமை விளைய நுகருஞ சுவையடிசில் செழிய சிறுகை யாலளைந்துஞ் செய்தாள் மோகம் ஈன்றோரை. 52 மாயையின் விளையாடல் பரவு பெருஞ்சீ ரல்லமனைப் பற்ற வந்த மதியாற்றன் உருவ நிழலைப் பற்றநினைந் தோடி யோடிக் கலுழ்ந்திடுவாள் பொருவின் மதிய மேன்முனிந்து பொங்கு முழலை வீசாமல் மருவி உறவு கொள்வாள் போல் வாவா என்ன அழைத்திடுவாள். 53 மாயை பெதும்பைப் பருவம் அடைதல் மாதிப் பரிசு தந்தைதாய் மகிழ வளர்வுற் றரசிருந்த நீதிக் கிழவன் இறப்பவவ னெறிசேர் இளஞ்சே யவன் றவிசின் மீதுற் றதுபோல் முன்முளைத்த வெண்பல் விழவே றெயிறுதிப்பப் பேதைப் பருவங் கடந்துமேற் பெதும்பைப் பருவம் நண்ணினான். 54 பெதும்பைப் பருவச் சிறப்பு செய்ய வல்ல கம்மியன்செய் சிங்கஞ் சுமந்த மணியணைமேல் பைய வந்து மணிமௌலிப் பார்வேந் திருக்கும் பரிசுபோல் வெய்ய குதம்பை வளர்த்தகல விழுநீர் வள்ளைக் காதினிடைத் துய்ய பசும்பொன் மணிகுயின்ற துணைத்தோ டமையத் தோன்றினாள். 55 எட்டிப்பார்க்கும் இளமுலைகள் மட்டுக் கணைவே ளரணாக வளர்த்த குழற்கா டலர்விரவிக் கட்டுற் றதுநம் பரன்களத்திற் கடுவும் விழிகள் சிறிதுற்ற முட்டித் துறவாம் பறவைமயல் முடியிற் படுதல் மெல்லமறைந் தெட்டிப் பார்ப்ப வெனமுகங்கொண் டெழுந்த மார்பில் இளமுலைகள். 56 மாயையின் தருக்கு அன்ன நடையும் அன்னமிலா ஐயர் நடையுந் தளர்வெய்தக் கன்னி நடக்கும் நடைகற்றாள் கரும்பு கசக்கும் மொழிபெற்றாள் மன்னு மலர்வீழ் சுரும்பனைய மைந்தர் பார்வைக் குறிப்புணர்ந்தாள் தன்னை யரிய ளெனவறிந்து தானே மனத்தில் தருக்குற்றாள். 57 காமன் கணை தொடுத்தல் இந்தக் கன்னி மதிமுழுநோக் கெய்திச் செவ்வாய் வலியடைந்து சந்தச் சிங்கந் தனையடுத்த தக்க அரவின் வலிசார்ந்து முந்தைக் கொடிமீ னத்தலைவன் முனிவ ராகும் பகைவெல்லக் கந்தப் பகழி பலவேழக் கருப்புச் சிலையில் தொடுத்தனனால். 58 மங்கைப்பருவம் அடைதல் பாக மாகப் பொங்கியெழும் பதமே போலப் பொங்குமெழில் மோக மாயை தன்பருவ முன்னி முடிவேந் தயனுமால் ஆகு மாட மொன்றுபுரிந் ததன்கட் கல்வி பற்பலவும் போகு மாதர் பலர்சூழப் போற்றி யிருப்பச் செய்தனனால். 59 பாடல் பயிலுதல் வாயத்துள அம்மணி மாடம் நண்ணுபு பாத்தொடை பற்பல பயின்றுந் தந்திரி நாத்தனி யாழைமா ணாக்க னென்றுதான் பேர்த்துளர் விரல்களாற் பேசு வித்துமே. 60 பாடி ஆடுதல் அங்கொரு மடவர லதிர்ப்பத் தண்ணுமை மங்கையர் சிலரிசை மரபிற் பாடுறக் கொங்கவிழ் மலரளி குமுறத் தென்றலால் பைங்கொடி யசைதல்போற் பாடி யாடியும். 61 பந்தடித்தல் வருமுலை யிறைக்கிணை யாக வந்துறக் கரமெனும் ஏவலன் புடைக்குங் காட்சிபோல் விரைமல ரோதிமேல் மிஞிறி ரைந்தெழப் பருமணி குயின்றமென் பந்த டித்துமே. 62 மாலைபுனைதல் முதலியன பூந்தொடை வார்குழல் புனைந்து நல்விரைச் சாந்தமும் நானமும் தயங்கப் பூசியும் ஏந்திழை பலவுறுப் பிசையத் தாங்கியும் மாந்துறு சுவைபல வகைய மாந்தியும். 63 கிளி வளர்த்துப் பேசப் பழக்குதல் தீங்கனி பாலொடு செம்பொற் பஞ்சரம் தாங்குறு பைங்கிளி ஊட்டித் தன்மொழி ஆங்கது பயில்வுற அளித்துங் கற்பகப் பூங்கொடி யனையவள் பொழுது போக்குநாள். 64 மமகாரமன்னன் தன்மகள் திருமணங்குறித்து எண்ணுதல் தென்னவன் செம்பியன் சேரன் கொங்கண மன்னவன் மாளுவன் மகத நாட்டிறை என்னுமிங் கிவர்தமுள் யாவர் கண்ணதோ கன்னிதன் மணவினைக் கடனென் றுன்னியே. 65 மமகாரமன்னன் தன் குரு வரக்கண்டு வணங்கல் ஆய்ந்திருந் தனன்மம கார னாயிடைப் போந்தன னவன்குரு வாகப் போற்றுறும் சாந்தவாங் காரனாந் தகுதிப் பேரினோன் வேந்தனு மெதிர்கொளீஇ விதியில் தாழ்ந்தனன். 66 அகங்காரன் மாயையைக் காண்டல் மன்னவன் வந்தன மரபிற் கொண்டவன் கன்னித னெழில்நலங் காணப் போயினான் அன்னவ ளெதிர்நடந் தாரி யன்றனைச் சென்னியின் வணங்குபு சிறப்புச் செய்தனள். 67 மாயையைக் காரணமாதென ஆங்காரன் அறிதல் மாந்தளிர் ஆலிலை வயங்கு கோங்கரும் பேந்தெழில் மரைமல ரெய்தி யற்புதப் பூந்துணர் வல்லிநேர் பொன்னைக் கண்டவன் ஓர்ந்தனன் காரண மாதென் றுன்னியே. 68 குரு ‘உன்மகளுக்கு மணவாளன் யாவன்?’ என்று அரசனைக் கேட்டல் மாதுரு வுறுகுறி மதித்த றிந்தவன் ஆதர வொடுமுடி யரசை நோக்கிநின் கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர் ஓதுக என்றலும் உரைத்தல் மேயினான். 69 ’நான் அறியேன் நீயே கூறுக’ என்று அரசன் கூறல் உணர்ந்திலன் அடியனே னொருநங் கோதைதன் மணந்தனக் குரியவர் மனிதர் வானவர் கணங்களு ளொருவரைக் கருத்தில் தேர்ந்துநீ இணங்குற எனக்கிவண் இயம்பு கென்றனன். 70 சங்கரனே மாயைக்குத் தலைவன் என்று குரு கூறுதல் கொங்கவிழ் தொடையினாய் கூன்கொன் கன்றுவான் கங்கையை யடைவது கடவு ளன்னமே மங்கையை யணைபவர் மனித ரல்லர்நம் சங்கர னேயிவள் தலைவ னென்றனன். 71 இறைவன் இவளுக்கு எளியனோ எனல் மாலுநான் முகனுநா டரிய வள்ளலிவ் வேலவார் குழலினாட் கெளிய னோவென ஆலமார் மிடற்றினோ னன்பர் வேண்டிய கோலமாய் நணுகுமீ துண்மைக் கூற்றென்றான். 72 குரு, மாயைக்கு இறை வழிபாட்டு முறையை உணர்த்தல் இன்னணம் அரசனோ டியம்பி மாயையாம் கன்னியை விளித்தவள் கருத்தி ணங்குறச் செந்நிலை தனையுப தேசித் தேகினான் தன்னிகர் குருபரன் தனதி டத்தரோ. 73 மாயை, மதுகைநாதனை வழிபடல் குருவருள் மொழிநெறி கொண்டு மாயைதான் வரவன வசைநகர் மதுகை நாதனைப் பரவினன் அருச்சனை பயின்று பூசனைக் கருவிகள் முழுவதுங் கடைப்பி டித்தரோ. 74 மூன்றாவது - மாயையின் உற்பத்தி கதி முடிந்தது கதி 3 - க்குச் செய்யுள் - 156 4. மாயை பூசை கதி [இக்கதிக்கண், மாயை படுக்கையைவிட்டு எழுந்து நீராடுதல், ஆடையணிதல், அணிகலச் சாலைக்குச் செல்லுதல், பலவகையான அணிகலன்களை பூணுதல், மதுகைநாதனைப் பூசனை புரியச் சிவிகையிற் புறப்படுதல், அவள் செல்லும் ஆரவாரம், அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர்கள் தன்மை, கோயிலையடைந்து பூசனை புரிந்து வழிபாடு இயற்றுதல், இறைவன் முன்னிலையில் தேவர்களும் வியக்கும்படியாகத் திருக்கூத்து இயற்றுதல் ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்படுகின்றன.] பதியை மேவுறுங் காதல்நெஞ் சகத்தினுட் பதித்து மதுகை நாதனை வரன்முறை வரிவிழி மாயை உதய காலையில் பூசைசெய் நாளகளு ளொருநாள் விதியை யோதுவன் குவிமனத் தவர்கொள விரித்து. 1 கதிரோன் எழுதல் விதுவைச் சேய்மையிற் கண்டலர் குவளைகள் மெலிய முதிர்விற் பூணிள முலையெழில் மாயைதன் முகமாம் மதியைச் சேர்தரு வரிக்கருங் குவளைகண் மலரக் குதிரைத் தேரவன் எழுந்தனன் குணதிசைக் குன்றில். 2 மாயை படுக்கையை விட்டு எழுந்து நீராடுதல் அனைய காலையில் அன்னமென் தூவிபெய் யணைமேல் தனியண் மாமயில் போல்துயின் றவள்துயில் தணந்து வினையி னான்மலி மஞ்சனச் சாலையுள் மேவி இனிய வாசநீ ராடினள் சேடிய ரேந்த. 3 ஆடையணிதல் விலைவ ரம்பறி யாமணிக் கோவைசூழ் விளிம்பு கலைய ணிந்தொரு தலைமுலை மேலலங் கரித்தாள் முலையொ டுந்துகில் கண்டநாள் முதுல்தொடர்ந் தன்றோ இலகு றுங்கலை வல்லவர் கடபடா மென்றல். 4 அணிகலன்கள் பூணுமிடத்தை அடைதல் மணிய மைந்தபொற் பாதுகை யொருத்திமுன் வைப்பப் பிணிய விழ்ந்தசெந் தாமரைப் பதங்கொடு பெயர்ந்தே அணிய ணிந்திடும் மண்டபத் தணைமிசை யமர்ந்தாள் பணிய ணிந்திடு மங்கைய ரடைந்தனர் பலரே. 5 சடை பின்னிவிடுதல் மார வேள்சிலை வளைந்திடப் பூட்டிய வண்டு நாரி யோர்தலை நெகிழ்த்துவிட் டெனவொரு நாரி கார வாமலர்க் குழற்சடை கைபுனைந் தியற்றி வீர வேனெடுங் கண்ணிதன் முதுகுற விடுத்தான். 6 நெற்றியில் திருவும் பிறையும் அணிதல் பின்னும் வேணிவார் குழலெனுங் கரியபே ரரவம் முன்ன மார்தரு சுடர்களை உமிழ்ந்திடு முறைபோல் கன்னி வாணுதல் மிசைக்கதிர் பிறையொடு கவினப் பொன்ன வாஞ்சுணங் கவிலை ஒருத்திகை புனைந்தாள். 7 மாணிக்கச் சுட்டி அணிதல் ஓதி யாகிய அறல்மிசைச் சுவடுற வூர்ந்து தீதி லாதவொண் சந்தனத் திலகவெண் மதிக்குப் போது மோர்சிறு பம்பென மயிர்வகிர்ப்பொருந்தச் சோதி மாமணிச் சுட்டியொன் றொருத்திதூக் கினளால். 8 காதிற் குவளைமலர் அணிதல் வேன லம்பதி கொலைவிட மூட்டிய வெவ்வேல் மான அஞ்சனம் எழுதிய விழிபொர வரலால் தான தன்பகை தனைத்துணை கொண்டுறுந் தகைபோல் பான லஞ்செவி மிசையணிந் தனளொரு பாவை. 9 காதில் பொன்னோலைச் சுருளணிதல் அடுத்து மாதவம் அழிமினென் றனங்கவேள் தமக்கு விடுத்த வோலையைக் கண்கள்தம் மேற்பழி விளம்பில் கொடுத்த வேள்மிசை நிந்தைகூ றுதற்குவைத் திருத்தல் கடுத்து வாழதர ஒருத்திபொன் னோலைகா தணிந்தாள். 10 மூக்கிலே முத்துமூக்கணி புனைதல் யூன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன் முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை என்ன வெண்மணி மூக்கணி யொத்திநின் றிட்டாள். 11 கழுத்தில் அட்டிகை அணிதல் கற்றை யங்குழல் நறுமலர்த் தொடையொடு கனமாய் உற்ற ணங்குமென் றிலகுபூண் பிடித்ததை யொப்ப விற்ற யங்குவாள் நுதலெழில் மாயைதன் மிடற்றில் பொற்ற டந்தகட் டணியொரு மடவரல் புனைந்தாள். 12 கைகளில் வளையல்கள் அணிதல் கன்னி யத்தம்வந் தினமணிக் கற்கட கத்தின் மன்னி யுற்றதற் புதமென வளைபல காக்க வின்னு தற்கருங் கண்மட மாதுகை விளங்கப் பொன்னின் நற்கட கம்புனைந் தனளொரு பூவை. 13 செம்பவளக் கோவை அணிதல் ஆயும் இன்சுவை தரச்செலுங் கையுட னடுத்து வாயி னொண்கவின் காணிய மருவுறு மாபோல் மாயை தன் கையிற் பொற்கட கத்தின்முன் வனைந்தாள் தூய செம்பவ ளங்களைக் கோத்தொரு தோகை. 14 மார்பில் அணிக்கோவை அணிதல் மங்க லத்தொழில் ஆடவர் மனநடக் கிற்காக் குங்கு மப்பெருஞ் சேற்றினைக் குறித்திடு கற்போல் மங்கை யர்க்கொரு திலகமா கியவெழில் மாயை கொங்கை யிற்புனைந் தனளொரு பெண்மணிக் கோவை. 15 மணிமேகலை அணிதல் பாயும் வெண்திரைக் கருங்கடல் நிலச்சுமைப் பாம்பின் ஆயி ரம்படங் களுந்திறை யிட்டன வனைய மீயி லங்கொளி விரிமணி மேகலை வேய்ந்தான் மாயை மங்கைத னல்குலி னொருதிரு மடந்தை. 16 காலில் சிலம்பணிதல் கறைய டிக்களி யானையின் வரவினைக் கண்டு மறுகி னுற்றவர் இரிதர மணிமருங் கிடல்போல் உறுத வத்தினர் அறிந்தனர் ஓடவொண் ணுதற்கு நறு மலர்ப்பதத் தணிந்தனள் சிலம்பொரு நங்கை. 17 சந்தனக் குழம்பணிதல் கூடை மென்மலர் மணத்தினால் அறிந்ததைக் குறுகப் பாடும் வண்டினஞ் சூழ்தல்போல் இளைஞர்கண் பரப்பத் தேட ரும்பொரு ளனையவட் குறுநறுந் தேய்வை பீடு றுங்குவி முலைக்கணிற் தனளொரு பேதை. 18 கண்ணாடி காட்டுதல் நின்றன் விம்பமே நினக்கெதி ரன்றிவே றில்லை என்று கண்கொளத் தெளிந்தபே ராடியொன் றெடுத்தாள் குன்றெ னுங்குவி முலையவ ளெதிர்கொடுங் குழைமேல் சென்று சென்றுபா யரிமதர் மழைக்கணோர் தெரிவை. 19 அழகுபடுத்தப்பெற்ற மாயையின் தோற்றம் வீர வேள்வளை யாதசெங் கரும்பவன் வில்லின் நாரி மேலிடா மலர்மறு விலாநகை மதியம் காரு றாதமின் கடற்பிற வாதஇன் னமுதம் வேரி லாதபூங் கொடியென விளங்கினள் மாயை. 20 ஒருமாது மாயையைப் பூசனைக்கு எழச் சொல்லுதல் மாத ரிவ்வகை யணியலு மதுகைநா யகன்றன் பாத தாமரை யருச்சனைப் பொருள்கள்பற் பலவும் நீதி யாலமைந் தனவினி நிகரிலெம் பிராட்டி போது வாயென வொருமட மாதெதிர் புகன்றாள். 21 மாயை எழுந்த பொழுதுண்டாகிய மகிழ்ச்சி மயிலெ ழுந்தென எழுந்தனள் கோமகள் வாழ்த்திக் குயிலெ ழுந்தென எழுந்தன மடந்தையர் குழாங்கள் துயிலெ ழுந்தென எழுந்தன நூபுரத் துழனி வெயிலெ ழுந்தென எழுந்தன மணியணி விளக்கம். 22 மாயை சிவிகையிலேறிப் புறப்படல் பொன்னி லங்கிய சிவிகைமுன் கொணர்ந்தனர் பொறுப்போர் மன்னி யங்கதை யேறினள் மதர்விழி மாயை சின்னம் வெண்பணி லம்பணை தண்ணுமை திமிலை மன்னி ரைந்தன மதியெழக் கடல்முழங் குதல்போல். 23 வேய்ங்குழல் ஊதுதல் ஆன்றி ரட்டுறும் கண்ணன் வாய்க் குழலிஃ தணிபூண் மான்றி ரட்டுறு மெனக்குழ லூதினர் மலர்வில் கோன்றி ரட்டிய வமுதனை யாள்முனங் குறுகி மூன்றி ரட்டிய முகமுடை முருகனு முருக. 24 மாயையை மாதர் பலர் சூழ்ந்து செல்லல் வயங்கு மாயையங் கரும்பினில் தாழ்ந்தவர் மாவின் உயர்ந்த மாதரார் ஊற்றிருந் தொழுகுகண் மலரை நயந்து சூழ்தரு மளியினண் ணினர்பிறர் காலால் இயங்கு மாதிரு புடையினும் இடையற ஈண்டி. 25 குடை பிடித்தலும் கவரி வீசுதலும் வேள ளித்தனன் தன்குடை யெனக்குடை விதிர்க்கும் வாளெ னப்பிறழ் மதர்நெடுங் கண்ணிபால் மருவக் காள மொத்தகண் மடந்தையர் பலரிளங் கமுகின் பாளை யொத்தவெண் கவரிவீ சினரிரு பாலும். 26 விசிறி வீசுதலும் மலர் சொரிதலும் காம வெந்தழல் மூட்டல்போற் கடிமலர்ச் சிவிறி தாம சைந்தன பொய்க்கணை சொரிந்துவில் தடக்கைக் கோம கன்றிருந் திழையுள மறிதல்போற் குறுகிப் பூம டந்தையை வென்றவர் பூமழை பொழிந்தார். 27 பலவகைப் பொருள்கொண்டு பாவையர் செல்லல் பாகு வெள்ளிலை சந்தனம் குங்குமம் பளிதம் ஓகை மான்மதம் வண்டிமிர் நறுமல ரொலியல் பேர்கெ ழும்பணிப் பெட்டிமென் துகிலுடைப் பேழை தோகை மார்பலர் மருங்கினிற் சுமந்துபோ யினரால். 28 அரிவையர் செல்லுந் தெரு ஆறு போன்றது கொங்கை யங்குவி முகிழ்விழிக் கயலிதழ்க் குமுதம் அங்கை யம்புய முந்தியஞ் சுழியிவை யடுத்துப் பொங்கு றுங்கவி னீர்பெரு காற்றினைப் புரையும் மங்க லந்திகழ் வுறுமணி மாளிகை மறுகு. 29 பலவகை ஒலிகள் கலந்து பேரொலியாதல் திங்கள் வாணுதல் மடந்தையர் செஞ்சிலம் பொலியும் சங்கி னோடணி கலன்களின் சிற்றொலி தாமும் கொங்கு லாமலர்த் தொடையளி யிசைகளுங் குழுமிப் பொங்கும் ஆழியிற் பஃறுளி பெருகுதல் போன்று. 30 மாயை சென்ற தோற்றம் துன்று பெண்படை சூழ்வர மாயையந் தோகை வென்றி யங்கனல் மழுவினோன் விதியினால் வேளைக் கொன்ற தென்னெனக் கேட்பமென் றுளவலி கொண்டு சென்று றுஞ்செய லென்னவத் தெருவிடைச் சென்றாள். 31 அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர் தன்மை அரிமதர் மழைக்கணல் லரிவை தன்புடை வருமட வரலியர் வனப்புக் காண்டலும் எரிபுரை விழியரி யேறு போல்பவர் கரிநுகர் வெள்ளில்அம் கனியை யொத்தனர். 32 ஆடவர் அறிவு கொள்ளை போதல் இடையொரு சற்றுவா ணுதல்சற் றேழையர் படைவிழி சற்றுவாய்ப் பவளஞ் சற்றிணைக் குடமொரு சற்றிவண் கொள்ளை கொள்ளநம் புடைபெயர் அறிவெலாம் போயிற்றே யென்பார். 33 திருநீறும் மயலை உண்டாக்குதல் இனத்தியல் பாமறி வென்ப துண்மையே மனத்துயர் செயுமயல் மாற்று நீறுதான் அனிச்சமெல் லடியினார் நுதல டுத்தலும் பனித்துடல் வெதும்புமால் படுத்தலா லென்பார். 34 கண் நஞ்சின் கடுமை உரைப்பேம் எனல் தொல்லைநஞ் சடர்துயர் சொல்லக் காத்தவன் வல்லிபங் குடையருள் மதுகை நாயகன் செல்லுமங் கையர்விழி நஞ்சு செய்வதும் சொல்லுதும் அவனொடு தொழுதுநா மென்பார். 35 மகளிர் அனைவரும் சிறந்த அழகினர் இக்குழு மகளிருள் யார்வ னப்பினால் மிக்கவ ளெனத்தமை வினாவி னாரெதிர் முக்கனி களுட்சுவை முதிர்ச்சி பெற்றுள தெக்கனி யதனைநீர் இயம்புவீ ரென்பார். 36 இதுவும் அது கரும்பினும் இனியசெங் கயற்க ணாரிளம் குரும்பையும் பயன்படாக் கோவை தன்னையும் விரும்பினம் உலகர்முன் வீணில் நெஞ்சகம் வருந்துதல் நகைதரு மடமையே யென்பார். 37 உடல் முழுதும் மூடினால் உயிர் பிழைக்கலாம் என்றல் விடங்குலா மதர்விழி விரைத்தண் பூங்குழல் நுடங்குநூ லிடைப்பிறை நுதற்பொற் கொம்பனார் குடங்கள்நா ணுறுமிளங் குவவுக் கொங்கைபோல் உடம்பெலா மூடினா லுய்யலா மென்பார். 38 மாயை கோயிலை அடைதல் இவ்வனங் கருத்தழிந் திளைஞர் மாழ்குறக் கொவ்வையங் கனியிதழ்க் கோதை மாரொடு மௌவலங் குழலெழில் மாயை யென்பவள் அவ்வரன் கோயிலின் அருகு போயினாள். 39 சிவிகையினின்று இறங்கிச் செல்லுதல் சிவிகையின் இழிந்துதன் சென்னி தாங்கிய குவிகையி னொடுபுகாக் கோபு ரத்துள்வெண் கவிகைய னெனுமம காரன் கன்னிகட் செவிகையி னணிபர னெதிர்சென் றாளரோ. 40 பூசனைபுரியத் தொடங்குதல் வேண்டிய அனைத்தையும் ஏவல் மெல்லியர் ஆண்டரு குறவமைத் தளிப்ப மாயைதான் காண்டகு நுதல்விழிக் கடவுட் கன்புளம் பூண்டனள் அருச்சனை புரிதல் மேயினாள். 41 இறைவற்கு நீராட்டத் தொடங்குதல் ஆதிய வரன்முறை செய்த ருக்கியம் ஆதிய கொடுபர னணிந்தி ருந்தபூ ஆதிய களைந்துமந் திரம றைந்துநம் ஆதியை மஞ்சன மாட்டல் மேயினாள். 42 எண்ணெய் முதலிய பொருள்களால் நீராட்டல் தயிலமுடன் ஆனிடத்தைந் தையமுத நறுநெய்பால் தயிர்செ ழுந்தேன் வயலினெழு கரும்புடைத்துக் கொள்சாறு பழம்பிழிந்த மதுரச் சாறு புயலளவு தாழையிள நீர்நறுஞ்சந் தனக்குழம்பு போற்று நூலின் இயலினமை தபனமிவை யொன்றன்பி னொன்றுமுறை யிறைவற் காட்டி. 43 முத்தால் அக்கதை இடுதல் சங்குலவு மென்கைநெடுஞ் சுடரிலைவேல் விழிமாயை சாம்பற் பூத்து மங்கலமா கியமேனி முழுவதுஞ்சந் தனத்திரளை மலியச் சாத்தித் திங்களெனும் ஒருசிறுகூன் முதுகிப்பி யீன்றதெனச் சினவெள் ளேற்றான் கங்கைமுடி மீதினில்வெண் ணிலவெ றிக்கு நித்திலவக் கதையு மிட்டாள். 44 மாலையணிந்து பூண்பல புனைதல் பிறைதவழு நெடுஞ்சடையெம் பெருமானைச் சார்ந்துசர்ப்ப பிராந்தி மேவ நறுமலர்மென் தொடைமாலை பலவனைந்து கூர்ங்கோட்டு நால்வாய்ச் சீற்றக் கறையடியீ ருரிசுமந்த திருமேனி யழகுறநுண் கலைபு னைந்திட் டிறைவனெலும் பணிநாண அவிர்மணிப்பூண் பற்பலவு மெடுத்த ணிந்தாள். 45 உணவு படைத்துப் பூசித்தல் நற்றூமங் கமழ்நித்ய கலியாணி மணாளர்க்கு நானஞ் சாத்திப் பெற்றூனங் கடிதலிலாக் கறிமருவு போனகங்கள் பிச்சை யல்லால் மற்றூணொன் றில்லாத பெருந்தகைக்கு நிவேதித்து வண்டு கிண்டி உற்றூதுங் கடிமலர்மென் குழல்மடவாள் வெள்ளிலையும் உவந்த ளித்தாள். 46 மற்றுமுள்ள சிறப்புக்கள் செய்தல் நறியபுகை செழுஞ்சுடர்மென் சிவிறியொடு வெண்கவரி நாடும் ஆடி நெறிமுறையி னெடுங்கடல்போல் இயமுழங்க நின்றுதவி நிமலன் தன்னைப் பிறைநுதலிவ் வகைபூசை புரிந்துதுதி பலசெய்து பெருகு மன்பால் மறைபுகலு மஞ்செழுத்தும் அறைந்துவலம் வந்துமுனம் வணங்கிப் பின்னர். 47 ஆடும் அரங்கை அடைதல் அன்பினுள முருகிவிழி சொரிநீரா லெழுதியமை யழிந்தி ருப்பப் பொன்புரையும் வடிவமயிர் பொடிப்பவெயர் வாணுதலின் பொட்ட ழிந்து மின்புரையு நெடுஞ்சடிலப் பொன்மலையி னானந்த வெள்ள மூழ்கி இன்பினடிப் பவளென்ன வந்துநட நவிலரங்கில் எய்தி னாளால். 48 ஆடுதற்கு ஏற்பக் கோலங் கொள்ளுதல் அரங்கினிடை நடநவிலுஞ் செயற்கேற்ப உடையணிந்திட் டரும்பைவென்ற குரும்பைமுலை யினைவம்பு கொண்டணிந்து தவங்களெல்லாங் கொள்ளை கொள்ளும் கருந்தடங்கண் மலர்க்கோதை சிற்றடியிற் கைபுனையக் கற்ற மாதர் சுரும்புமுரல் மல்லிகைமென் போதனைய சிறுசதங்கை துளங்க ஆர்த்தார். 49 பல்வகைப் பக்க இயங்கள் முழங்கல் மாயைமுலைக் கிணையெனவென் முன்தானும் வந்ததென வலக்கைத் தாளம் போயிடக்கைத் தாளமதைப் பொறாமையினால் தாக்குதல்போற் புடைத் தொலிப்ப வாயுரைக்கு மொழிபோலத் தண்ணுமைசெங் கைகளால் வார்த்தை சொல்ல மேயகலைப் பெண்விளர்ப்ப எழில்மாதர் இசைபாட வீணை கொண்டு. 50 கூத்து இயற்றுதல் என்னொருகை யொடுமற்போர் புரிகவென நிற்பவள்போ லிடையி னோர்கை மன்னியுற வைத்தொருகை நீட்டியர னெதிர்நின்று மாயை வல்லி கன்னல்மதன் தனைவருக வெனவிளித்தல் போல்தழங்கக் காற்ச தங்கை பொன்னினியல் ஒருபாவை நடிக்கின்ற தென்னநடம் புரிய லுற்றாள். 51 தாளம் முதலியவைகட்குத் தக நடித்தல் தண்ணுமை விளங்கலுறு தாளமிசை யெல்லாம் வண்ணமலர் மெல்லடி வழிச்சதியி னிற்பக் கண்ணிணைகொள் பல்வளைய கைவழி நடப்பப் பெண்ணமுத மன்னவள் பெயர்ந்தனள் நடித்தாள். 52 சைகையோடு ஆடுதல் வாயுரைசெய் சொற்பொருள் மலர்க்கரம் உரைப்ப மீயுயர் விசும்பினெழு மென்புளொலி யெல்லாம் பாயொளி பஞ்சுறு பதத்துற மிதித்துப் பேயொடு நடித்தஇறை பித்துற நடித்தாள். 53 மாயையின் கூத்துக்குத் தேவர்களும் மயங்கல் அந்தணனி ருங்கலை அணங்கினை உமிழ்ந்தான் செந்திருவை நேமியிறை சீயென வெறுத்தான் இந்திர னருஞ்சசியை யெண்ணிலன் மறந்தான் பைந்தொடி நடிப்பநரர் பட்டதெ னுரைப்பாம். 54 மாயையைப் பார்க்க விரும்பிய மைந்தர்கள் செயல் பொன்னெயிலின் ஒன்றிய புழைக்குள் முகம்வைத்தும் துன்னிமுனர் நின்றவவர் தோளிடை யிவர்ந்தும் மின்னென நடம்புரியு மெல்லியல் மருங்குல் என்னும்வெளி காணிய இடர்ப்படுவர் மைந்தர். 55 இளைஞர்கள் செயலற்றிருத்தல் பற்றுமன மோடியிரு பார்வையினு மெய்தி மற்றைய புலன்களை மறந்து நடமாடும் பொற்றொடியை நண்ணவுயர் பொன்மதி லுறுப்பின் உற்றபொறி போலசை வொழிந்திளைஞன் நின்றார். 56 கூத்து முடிந்தபின் சேடம் பெறுதல் இளங்கொடி மருங்குலவள் இன்னணம் நடிப்பக் களங்கனியை வென்றமணி கண்டனை அருச்சித் துளங்குளிர் அருந்தவன் உவந்திறை அணிந்த வளங்கெழுமு சந்தமலர் மாலையொ டளித்தான். 57 சேடம் பெற்றபின் அரங்கில் இருத்தல் வணங்கிமது கேசனிரு மாலியம் தேற்றங் கணங்குமட வாருடன் அரங்கிடை யிருந்தாள் நுணங்கிழை மருங்குல்மிக நோமென விரைந்து பிணங்குறு சதங்கையழு பிள்ளையின் அடங்க. 58 மாயையின் வழிபாட்டை அல்லமதேவர் அறிதல் மைத்தட நெடுங்கணிள வல்லிநிகர் மாயை பத்தியொ டருச்சனை பயின்றதை அறிந்தான் நித்தனுல கெங்கணு நிறைந்தவன் அனாதி முத்தனருள் அல்லம முதற்பெயரி னானே. 59 நான்காவது - மாயை பூசை கதி முடிந்தது கதி 4 - க்குச் செய்யுள் - 215 5. பிரபுதேவர் வந்த கதி [இக்கதிகண், அல்லமதேவர் மாயை பூசனைபுரிந்துகூத்தியற்றிக் கொண்டிருந்த இடத்திற்கு அழகிய வடிவங்கொண்டு செல்கிறார். மிக வியக்கத்தக்க முறையில் மத்தளத்தை யடிக்கிறார். மத்தளவொலி மாயையின் காதிற் படுகிறது. ‘இவ்வாறு சிறந்த முறையில் மத்தளம் அடிப்பது யாரென்று பார்த்து வாருங்கள்’ என்று தோழிகள் சிலரை ஏவுகிறாள். தோழிகள் சென்று அல்லமதேவரைக் காண்கிறார்கள். அவருடைய அழகு அவர்களுடைய உள்ளத்தைக் கவருகிறது. அவர்கள் திரும்பிச் சென்று மாயையிடஞ் செய்தியைச் சொல்லுகிறார்கள். மாயை அல்லமதேவரை அழைப்பிக்கிறாள். அல்லமதேவருடைய அழகு மாயையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. மாயையின் உயிர்த்தோழிகள் மாயையின் உள்ளப்போக்கை உணர்ந்துகொண்டு அல்லமதேவரைத் தங்களுடன் தங்கியிருக்குமாறு வேண்டிக்கொள்ளுகிறார்கள். அதன்பொருட்டு அரசனுடைய உடன்பாட்டையும் பெறுகிறார்கள். அல்லமதேவர் அவர்களுடன் தங்கியிருத்தற்கு மிகவரிதில் உடன்படுகிறார். மாயைக்கு அல்லமதேவரிடம் காமக்காழ்ப்பு அதிகரிக்கிறது. மதமானி என்பவள் அல்லமதேவரிடஞ் சென்று அவருடைய உள்ளப்போக்கை மெல்ல ஆராய்கிறாள். மாயைக்குத் தக்கபடி பக்குவமாகப் பேசுவதில் வல்லவராகிய அல்லமதேவர், மாயைக்கு இணங்குபவரைப்போலக் குறிப்புக்காட்டி நயமாகப் பேசுகிறார். சில நற்குறிகளைக் கண்டு மாயையின் தோழிகள் மாயையின் எண்ணங் கைகூடுமென்று மாயைக்குக் கூறுகிறார்கள். மதமானி என்பவள் திரும்பி வந்து அல்லமதேவரின் உடன்பாட்டைத் தெரிவிக்கிறாள். அவள்மொழி மாயைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசனுக்குத் தெரியுமாயின் யாதாக முடியுமோ வென்று தோழிகள் அஞ்சுகிறார்கள். பகற் காலம்போய் மாலையும் இரவும் வருகின்றன. காமங் கைம்மிகப் பெற்ற மாயை, திங்களையுந் தென்றலையுங் காமனையும் வெறுத்துப் பலவாறு புலம்புகிறாள். மதமானி அல்லமதேவரை அழைத்து வந்து ஓர் அறையில் தங்கியிருக்கச் செய்து மாயையை அங்கு அனுப்புகிறாள். மாயை அல்லமதேவரைத் தழுவுவதற்கு முயல்கிறாள். அல்லமதேவரின் உருவம் கட்புலனாகின்றதேயன்றி மாயையின் கைக்குப் பிடிபடவில்லை. அல்லமதேவரைத் தழுவச் செய்த முயற்சிகள் பலனளியாமல் மாயை களைத்து வாடி உறங்குகின்றாள். கனவின்கண் அல்லமதேவரைத் தழுவினதுபோலக் காண்கிறாள். இச்செய்திகள் தோழிகள் சிலரால் மோகினிக்குத் தெரிகின்றன. மோகினி மாயையின் இருப்பிடம் போந்து அவளுடைய செய்கைகளைக் கண்டிக்கிறாள். பிறகு, அல்லமதேவரைத் தழுவுதற்குத் தன்னுடைய உடன்பாட்டைத் தெரிவிக்கிறாள். ‘மணமாகும்வரை மன்னனுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருங்கள்’ என்று சொல்லிச் செல்லுகிறாள். சகளை யென்பவள் அல்லம தேவரை வெளியே வைத்திருக்க வேண்டுமென்று எண்ணி, அவரிடஞ்சென்று தனித்துறையுமாறு கூறுகிறாள். அல்லமதேவரோ, மாயையைப் பிரிந்து தனித்து இருக்கமுடியாதென்று கபடமாகப் பதிலுரை கழறுகின்றார். வழக்கம்போல் மத்தளம் அடித்தலாகிய தம்முடைய தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார் என்னுஞ் செய்திகள் விரிவாகக் கூறப்பெறுகின்றன.] நூலாசிரியர் கூறல் நிரந்தரம் அடியார் வேண்டும் நினைவெலாம் நிரப்பா நின்ற பெருந்தகை அல்ல மையன் பெயர்ந்தொரு மனித னாகி வருந்துறு மயல்ம னத்தால் வந்தனை புரிந்தாள் தன்பால் பொருந்துறு பவன்போற் செய்த புணர்ப்பினைப் புகன்று ரைப்பாம். 1 அல்லமதேவர் மத்தளக்காரனாதல் தாமுறு நுகர்வும் வீடுந் தந்திட வல்லன் தானே ஆமென இயம்ப லாலே அல்லம தேவன் உண்மை நாமமும் மறைய வேறோர் நாமமுற் றம்மா யைக்குக் காமிய வினைப்ப யன்றான் கடைப்பிடித் தருள எண்ணி. 2 அழகிய வடிவங் கொள்ளுதல் கதந்தரு திருநு தல்தீக் கண்ணினால் நீறு பட்ட மதன்செயல் செய்ய அன்னோன் வடிவுதான் கொண்ட தென்ன முதிர்ந்தழ கொழுகும் ஆறு முகங்களுட் சிறந்த ஒன்றோ டெதிர்ந்துள முருகன் என்ன இளமையோ டழகு வாய்ப்ப. 3 கோலத்தின் சிறப்பு அவிர்சடை முனிவர் மாதர் அழுங்குறக் கொண்ட கோலம் கவினுமிவ் வடிவங் கொள்ளக் கற்றுமுன் விட்ட தென்னக் குவிமுலை மகளிர் ஆவி கூட்டுணுங் கோலம் என்னப் புவியுறும் இரவி யென்னப் பொங்கொளி உருவொன் றுற்றான். 4 திருமுக அழகும் திருமயிர் அழகும் விளிம்புற நடுக்க ளங்கம் வீழ்ந்துசூழ் மதியொன் றுண்டேல் வளங்கெழு மயிரொ ழுங்கு வள்ளல்வாள் முகநி கர்க்கும் துளங்குறும் உந்தி மேற்போய் மார்பிடைத் தோன்று ரோமம் இளங்கரு நளினம் உண்டேல் ஏய்க்குமென் றியம்ப நின்றான். 5 நல்லாடை முதலியன புனைதல் விலைவரம் பறியா ஆடை விரித்துடுத் தரையி லங்க மலைவரும் புதிய சந்தம் மான்மதங் காத நாறக் கலைவரம் பறிந்து ளோர்தங் கருத்தினுக் கரிதா யென்முன் தலைவருங் கமலப் பொற்றாள் தம்பிரான் மலியச் சாத்தி. 6 தலையில் மாலை தலைப்பாகை அணிதல் தளிர்த்ததண் பொழிலில் தேமாந் தடஞ்சினைக் குயில்மு கம்போல் துளித்தலை முகில்க வற்றுஞ் சுரிகுழற் சிகழி ஆர்த்திட் டளித்தொடர்மாலை வேய்ந்தவ் வலங்கனோக் குறுவோர்க் கெல்லாம் வெளிற்றுரைப் பொருள்போல் தோன்ற மென்தலைச் சாத்த ணிந்து. 7 நெற்றியில் பொட்டிட்டுக் குண்டலம் அணிதல் களத்திடை இருப்பின் உண்மை காண்குவர் என்ன ஆலம் குளத்திடை வாங்கி வைத்த கொள்கைபோல் திலதந் தீட்டி ஒளித்தனி மனிதன் பாங்கர் உரோணியோ டொருபெண் கூட்டி அளித்துற வைத்த தென்ன அணிமணி செவிக்க ணிந்து. 8 பலவகை அணிகலன்கள் சூடுதல் விலையில்வெண் தரளக் கோவை வீரசங் கிலிகே யூரம் இலகுசெம் மணிப்பொன் னு£ழி யிவைமுத லாய எல்லாக் கலனுமொண் கவினெ னுஞ்செங் கனலிற்பெய் நறுநெ யென்ன மலைவினங் குருகு கேசன் வயங்குறுப் பெலாம ணிந்து. 9 முதுகில் மத்தளம் தாங்குதல் இந்திர திருவிற் கேற்ற இலக்கணம் முழுதும் வாய்த்த சுந்தர குமரற் காவா இதனைத்தான் சுமப்ப தாக வந்துள தெதுகொ லோவென் றெண்ணிமா னிடர்ம யங்க நிந்தையின் முதுகின் பால்தண் ணுமையொன்று நிகழத் தாங்கி. 10 மாயையிடஞ் சென்று மத்தளம் அடித்தல் சென்றருள் மதுகை நாதன் திருமுன்வான் சுடர்வ லஞ்சூழ் குன்றுறழ் கொடிநெ டும்பொற் கோபுரத் தெதிர்போய் நின்று மன்றிடை நவில்கூத் தாடி மத்தளத் தொழில்கைக் கொண்டான் என்றுள மருள எங்கோன் எறிந்துதண் ணுமைய திர்த்தான். 11 மத்தளம் முழக்குதல் உரலசைத் திடாத டுக்கி உறியில்நெய் யெடுத்த யின்றோன் குரலசைந் தூதும் ஓர்வேய்ங் குழல்மொழி மாதர் மாழ்கச் சிரலசைந் தாடா நின்ற சிறகர்போல் மத்த ளத்தை விரலசைந் தறைத லன்றி மெய்யசை யாமல் நின்றான். 12 மத்தள ஒலி கேட்ட மாயை வியப்பு சுத்தமெய்ஞ் ஞானா னந்த சூரியன் கரத்தா லார்க்கும் மத்தள முகில்மு ழக்கம் நடித்துறு மயில்கேட் டம்மா இத்தரை மனிதர் கையா லெஞ்செவிப் படாதி ருந்த புத்ததொலி யிதுவென் றுள்ளம் வியந்திது புகலு மன்றே. 13 மத்தளம் அடிப்பார் யாரென அறியுமாறு கூறல் மோட்டிள முலையீர் இன்ன தண்ணுமை முழக்கங் காதால் கேட்டிலம் இவ்வா றுண்டென் றுரைப்பவுங் கேட்டி லேமால் வேண்டுல கனைத்து நின்று வியக்குமிவ் விஞ்சை கற்றக் காட்டிய அவன்யார் கொல்லோ காண்கவென் றணங்கு ரைத்தாள். 14 தோழிகள் அல்லமதேவரைக் காண்டல் மாதர்வல் விரைந்து சென்று மத்தள முழக்கி நின்ற சோதியை விழியால் தாஞ்செய் தொல்லைமா தவத்தாற் கண்டு காதொடு பொருது மீளுங் கயனெடுங் கருங்கட் செவ்வாய்க் கோதைதன் மருங்கின் மீண்டு வந்திது கூற லுற்றார். 15 மாயை அல்லமதேவரை அழைப்பித்தல் கற்றதன் விஞ்சை போலக் கவினுநாங் கண்ட தில்லை விற்றொழில் அனங்க வேளே மேனிகொண் டடைந்தான் என்ன உற்றனன் ஒருவன் என்ன ஒண்தொடி விளிமி னென்றாள் மற்றவர் விளித்து வந்து மாயைமா தெதிர்வி டுத்தார். 16 அல்லமரைக் கண்ட மாயை மயங்கல் அந்நிலை அலம னாமத் தண்ணலைக் கண்ட போதே செந்நிலம் உகுநீர் போலச் செல்விமால் மயமே யாகிப் பொன்னவிர் ஒருபூம் பாவை போன்றசை வறவி ருந்தாள் கன்னல்வில் மதவே ளெய்து கையிளைத் தருகு நின்றான். 17 தோழிகள் அல்லமதேவரின் ஊர் முதலியன வினவல் மயக்குமென் பதுபோய் மாயை மயங்குமென் றிடவி ருப்ப வியக்குநின் தேயம் யாது வீரவேள் அனையா யின்பம் பயக்குநின் பெயர்யா தெங்குப் பயின்றுறை குவைசொல் லென்னா நயக்குமென் மொழியார் கேட்ப ஞானவா ரிதியு ரைக்கும். 18 அல்லமதேவர் பதில் உரைத்தல் செல்லுறழ் குழலீர் தேய மோபர தேயஞ் சூளால் வல்லவ ரென்ன வந்தோர் வலிநிலை அல்ல வென்னும் அல்லமன் என்பே ரென்றும் அன்புசெய் பவரி டத்தில் புல்லுவன் தொடர்பி லாமல் என்றனன் பொய்ம்மை யில்லான். 19 அல்லமதேவரைத் தோழிகள் வேண்டுதல் உலகுள விஞ்சை எல்லாம் உணர்ந்தவெம் பிராட்டி தன்பால் மலைவற விஞ்சை கற்றோர் தம்மொடு மருவி அப்பால் செலவினை ஒழிந்தி ருத்தி செல்வமோ டைய என்னா இலவிதழ் அமுதம் அன்னார் இயம்பினர் இணங்கும் வண்ணம். 20 அஃதறிந்த மாயை மகிழ்ச்சியடைதல் தன்கனி வாய்தி றந்து சாற்றவேண் டியசொல் லெல்லாம் மின்குழு வனைய மாதர் விளம்பலும் மகிழ்வுற் றீது புன்சடை மதுகை நாதன் பூசனைப் பயனென் றெண்ணி இன்குழல் மொழிம டந்தை யிருந்தனள் உரையா டாமல். 21 அல்லமதேவருக்குச் சிறப்புச் செய்தல் மோகினி தவஞ்செய் தீன்ற முகிழ்முலை மாயை தன்கைப் பாகுவெள் ளிலைய ளித்துப் பரிந்தரு குறும டைப்பைப் போகியென் பவள்சி றந்த போகிபோல் நடித்து நின்ற யோகிதன் கரத்த ளிப்பித் துரியன பலவுஞ் செய்தான். 22 சிறப்புக்களை அல்லமர் ஏற்றுக்கொள்ளுதல் அடிக்கம லங்கள் போற்றும் அடியவர் வேண்டிற் றெல்லாம் கொடுத்தருள் கருணை வள்ளல் கொண்டகோ லத்திற் கேற்ப நடிப்பவன் ஆத லாலே நாமவேல் தடங்கண் மாயை எடுத்துத வுறுவ தங்கை யேற்றனன் இழிந்து ளோன்போல். 23 மாயை தன் இருப்பிடம் செல்லுதல் விடைக்கொடி அமலன் தன்னை விடைகொடு புறம்போந் தங்கண் மடக்கொடி மதவேள் வாளி மருமம்பாய்ந் துருவ நைந்து நடக்கரி தாகி அம்பொன் நகைமணிச் சிவிகை ஊர்ந்து தொடிக்கைநுண் இழைம ருங்குல் தோழியர் சூழச் சென்றாள். 24 மாயை அல்லமருடன் இருத்தற்குத் தன் தந்தை உடன்பாடு பெறல் நண்ணிவெண் குடைவேந் தன்பால் நடம்புரி தொழிற்கி சைந்த தண்ணுமை அல்ல மன்றன் சதுருரைத் துடனி ருப்பக் கண்ணகல் ஞாலங் காக்குங் காவலன் இசைவு கொண்டு பெண்ணமு தனைய மாயை பிறங்குதன் மாடம் புக்காள். 25 மாயை அல்லமதேவரோடு பேசத் தொடங்குதல் வலம்புரி வளைய னந்தம் மருங்குசூழ்ந் துறச்சி றந்த சலஞ்சலம் இருப்ப தென்னத் தமனிய மணிமா டத்தில் பொலங்குழை மகளிர் சூழப் பூந்தவி சிருந்து விஞ்சை நலந்தெரி பவள்போல் எங்கள் நம்பனோ டுரைவி ழைந்தாள். 26 மாயையின் நினைவு முதலியன மாறுபடல் நினைவவன் புணர்ச்சி மேற்று நெடுங்கணோக் கனங்கன் அன்னான் நனிமிகும் அழகின் மேற்று நாவெறுங் கூற்றின் மேற்று புனைமலர் வணர்வார் கூந்தற் பொற்றொடிக் கிதனா லன்றோ மனமொழி மெய்யொ ருங்கு மங்கையர் அரியர் என்பார். 27 மாயையின் மடமை தீதறு கழைக்க ரும்பின் தீஞ்சுவை இரத நீத்துக் கோதினை விரும்பிக் கொள்ளுங் கொள்கைபோல் நாவி யின்கண் போதுறு மதம்வி டுத்துப் புன்மலங் கொள்ளு மாபோல் பேதையெம் பிரானான் முத்தி பெறாதுபுன் போகம் வேட்டாள். 28 மாயை காமப் பெருக்கடைதல் ஒன்றிரண் டொழிய வாளி உளவெலாம் மாரன் தூர்த்தான் குன்றிரண் டனைய கொங்கைக் கோமகள் ஆற்றா ளாகி மின்திரண் டனைய மேனி விமலன்மேற் சாய்ந்து வீழ்வாள் பொன்திரண் டனைய மாதர் பொருந்தலால் நாணி நின்றாள். 29 பெருகிய காமம் வளர்ந்து முறுகுதல் தளிரியல் காமத் தீயிற் சருகுபட் டாற்றா ளாகி உளநிகர் மகளிர் சில்லோர் உடன்வர எழுந்துட் போகி அளிமலர் அளகஞ் சோர அணிமுலைத் துகில்வி லங்க வளமலி அணையின் மீது வாயுயிர்ப் பெறிந்து வீழ்ந்தாள். 30 மாயை, தோழிகள்பால் அல்லமர் இருப்பிடம் வினவல் அள்ளிக் கொளும்பே ரழகனருள் நாமம் புகலும் அவாவாலும் உள்ளக் கருத்தை உயிர்போலும் மகளிர்க் குணர்த்தும் உளத்தாலும் மெள்ளப் பவள வாய்திறந்து வீடே தலமன் மேவுதற்குப் பிள்ளைப் பிறைவாள் நுதல்மடவீர் என்றாள் பிறரை வென்றாளே. 31 தோழிகள் மாயையின் விருப்பம் வினவல் இறங்கு துறையில் நீத்தாயிற் றென்ன மாயை இடத்துமயல் பிறந்த பொழுதே உயிரளவாய் நின்ற தென்னும் பெற்றிமையை அறிந்து மகளிர் நின்கருத்தை அறிய உணர்த்தில் அல்லமற்குச் சிறந்த மனையொன் றளிக்குதுமென் றுரைத்துப் பின்னுஞ் செப்புவார். 32 மாயை நோயை அறிந்ததாகத் தோழிகள் கூறல் காம முளைதோன் றிற்றுனக்கென் றெங்கள் கருத்தில் தோன்றிற்று வாம மணிமே கலைமருங்குல் வடிவேல் மருட்டும் மதர்விழியாய் யாமும் நினது நெஞ்சகமும் வேற லேநின் இதயத்தில் சேம மதனை நாணாமற் செப்பு கென்றார் திருந்திழையார். 33 மாயை பேசாதிருத்தல் கன்னித் தன்மை அழியுமெனும் நாணும் உலகங் காக்குமொரு மன்னற் குரிய மகளென்னும் பெருமை தானும் மத்தளிகன் தன்னைப் புணர்ந்தாள் என்றுவருந் தகாத மொழியுந் தன்னுளத்தில் உன்னிக் கருங்கண் மடமாயை ஒன்றும் உரையா திருந்தனளால். 34 சகளை, விலாசினிபால் நோய்பற்றிக் கேட்டல் இறைவி ஒன்றும் உரையாமல் வாளா இருப்ப ஏவல்புரிந் துறவி னின்ற சகளையெனும் மாது பிராட்டி உரையொடுதான் பிறவும் இன்று வேறுபட்டாள் என்னே பெண்ணே அறியேனென் றறிவு கலங்கி ஒருவுகலா விலாசி அணங்கை வினாயினாள். 35 மாயை கொண்ட மயலை விலாசினி கூறல் இனியான் மறைப்ப தென்கொல்நுமக் கின்று வந்த அல்லமனாம் தனிநா யகன்பே ரழகென்னும் நறவை உண்டு தரியாமல் கனிவாய் மடந்தை உளமழிந்தாள் என்று விலாசி கட்டுரைக்க முனியாள் இயைந்து புன்னகைகொண் டிருந்தாள் மாயை முகங்கவிழ்ந்து. 36 மாயை, அல்லமரிடம் மையல் கொண்டுள்ளதை அறிதல் மாயை இடையை உளள் முலையான் மற்றை மாதர் போலென்று தூய மதிஞர் அனுமிதித்துச் சொல்லு மருங்குல் தோகைதான் வாயின் இளவெள் நகைதோன்ற வாளா இருப்பக் கண்டுமயல் ஆயி னுடையள் எனமாதர் அறிந்தார் அருத்தா பத்தியினால். 37 அல்லமர் உளமறிய மதமானி செல்லல் வல்லி உள்ளம் அறிந்தனமிம் மாயை தனையும் மயக்கவல்ல அல்ல மன்றன் கருத்தையினி அறிய வேண்டும் என்றவர்தாம் சொல்ல ஒல்லை மதமானி என்பாள் யானத் தோன்றல்தனை மெல்ல உள்ளம் அறிவலெனச் சென்றாள் வினோத விமலன்பால். 38 அல்லமதேவர் தம் இருப்பிடம் கூறல் மங்கை வருமவ் வரவைய றிந் தவளோர் மாற்றம் வகுத்திடு முன் தங்கு மனையிற் சென் றிருப்பன் உங்கள் தலைவி யெனைத்தேடில் திங்கள் நுதல்வெண் நகைக்கருங்கட் செவ்வாய்த் திருவே செப்புகவென் றெங்கள் தலைவன் இயம்பமத மானி யியம்பல் மேயினாள். 39 மதமானி அல்லமரை வேண்டல் வீடு புறநீ வேண்டற்க ஐய எமது விளங்குமணி மாட நினதே இவணுறைக அரசர் கோமான் மகளிதய பீட மதனில் உனைவிடா திருத்தி யிருந்தாள் பிரிவறநீ கூட உறையும் விருப்புடையள் என்றாள் குறிப்பு வெளிப்படவே. 40 அல்லமர் காரணங்காட்டி மறுத்தல் ஒன்றும் இல்லேன் நானீவிர் மிகவும் உடையீர் உம்மிறைவி வென்றி அரசர் குலமடந்தை சாதி அறியா விகிர்தன்யான் அன்றி மகளிர் நீயிர்நான் மைந்தன் என்றால் அடாதம்மா என்றும் உங்க ளுடனுறைவென் றெந்தை நகைகொண் டியம்பினான். 41 மதமானி, மாயை தன் நட்டார்பால் வேறுபாடு காட்டாள் எனல் நள்ளா தொழியின் அன்றியவள் நட்டா ளாயின் பினைப்பேதம் கொள்ளாள் ஒருவர் மாட்டுமெனில் உயிர்போற் சிறப்பிற் கொண்டவுனை எள்ளாள் என்ன வேண்டுமோ என்சொல் எல்லாம் இருந்தறிதி வள்ளால் எனஇன் மொழிபுகன்றாள் மாற்றம் அறிந்த மதமானி. 42 அல்லமர் கூறுதல் காரிற் சிறந்த மலர்க்குழலாய் நின்சொல் எல்லாங் கவர்பொருளைப் பாரித் திருந்த தேறுகிலேன் பணியொன் றொருவர் பாற்புரிவோர் தூரத்திருந்து வருங்காலந் துணிந்து வருதல் துணிவென்றான் நாரிக் கிணங்கு மவன்போல நடித்து விடுத்து நழுவுவோன். 43 மதமானி மாயையின் எண்ணங் கூறல் மன்னர் மன்னன் மகள் திருவோ லக்கங் காணு மைந்தரோ டுன்னை உன்னும் அவளல்லள் தலைவ னாக உன்னினளால் என்ன அன்னம் அனையாய்நுந் தலைவிக் கியற்கை உயர்த்திடுதல் முன்னம் என்ன அடங்கியொழு குறுதல் எனக்கு முறையென்றான். 44 மதமானி, மாயையின் மையல்நிலை கூறுதல் சொற்போர் செய்து மறைப்பதினி என்னாம் யாங்கள் தொழும்இறையா நிற்போய் நின்னை எதிர்ந்தளவே கரியுண் விளவின் நிறையழிந்தாள் கற்போல் நின்ற அருந்தவருங் காணு முன்னம் உனைக்கண்ட தற்போல் நின்று தடுமாற நினைப்போல் இருந்த தலைவியே. 45 அல்லமதேவர் மறுமொழி என்று மங்கை கூறுதலும் தலைவி இதயம் நீயறிவை அன்றி யின்று புதியன்யான் அறிவ னோவிங் காப்தமாய் நின்ற உன்றன் மொழிகேட்கு மதுவே யெனக்கு நெறியென்றான் குன்றை வென்ற குவி முலையாள்களிப்ப எமையாட் கொள்ளுவோன். 46 நீ வரும்போது நற்குறி கண்டு வந்தாய் எனல் நல்ல சகுனம் என்னவெதிர் கண்டு வந்தாய் நம்பிநீ வல்ல அசுரர் சுரர்முனிவர் எல்லாம் மயங்கு மாயையையோர் புல்லின் எளியள் எனப்புல்ல நின்றா யெனப்புன் முறுவலொடு சொல்லி மகிழ்வு கொண்டிறைவி பால்மீண்டணளச் கூடர்த்தொடியே. 47 மாயையின் மனத்தளர்ச்சி அங்கு மாயை மதமானி சென்ற தற்பின் அகந் தளர்ந்து மங்கை வாய்மை கூறியுடம் படுக்கு மோமன் மகள் தனக்குப் பங்க மாமென் றென்னுயிரைச் சீறி அகலப் பண்ணுமோ இங்கு நானென் செய்வலென அறியேன் என்ன இருந்தயர்வாள். 48 மாயை வருந்துதல் என்னோ வறிந்து போயினாள் சந்து பொருந்தா தெய்துமோ அன்னோ அரசன் மகளென்ன அஞ்சி அழகன் அகலுமோ இன்னோ ரன்ன நினைவின்றி யெனையே நினைந்திட் டிருக்குமோ பொன்னோ டுறழும் வாள்முகங்கண் டலது துயரம் போகாதே. 49 தோழிகள் எண்ணுதல் என்னப் பலவும் நினைந்துமட மாயை யிருப்ப இகுளைமார் மின்னற் கருங்கண் இடனாடக் குறிகள் நல்ல விளங்குதலால் கன்னிக் குவகை கைகூடும் என்ன இருக்குங் காலைதனில் அன்னப் பெடைபோல் நடந்துமத மானி களிப்புற் றடைந்தனளால். 50 காரியங் கிட்டிற்றென மதமானி செப்புதல் வண்டா மரைபோல் முகமலர்ந்து வந்தாள் சென்ற மதமானி கண்டார் மகளிர் அவனுள்ளங் காயோ பழமோ கழறென்றார் தண்டார் வனைமென் குழல்மடவீர் பழமே யென்று சாற்றினாள் கொண்டார் உவகை யவர்மாயை உவகை யாரே கூறுவார். 51 தோழிகள் அச்சமும் மாயையின் களிப்பும் மன்னன் அறியின் என்னாமோ அறியோம் இதனை மறைமினெனப் பன்னி மகளிர் உளத்தடக்கிக் கங்குல் வரவு பார்த்திருந்தார் அன்னம் அனையாள் அல்லமன்றன் உடம்பா டுரைத்த அம்மொழியே கன்னல் மதவேள் எய்தபசும் புண்ணின் மருந்தாக் களிப்புற்றாள். 52 திங்களின் தோற்றம் புனலின் விளையா டிருமைந்தர் தம்முள் எழுந்து போயோடிப் புனலின் விழுவான் போல்விழுந்த தொளிஞா யிறுபோய்ப் புணரியிடைப் புனலின் விழுந்து மூழ்குபுவந் தெழுவான் போலக் குணாதுகடல் புனலின் மிசைவந் தெழுந்ததிருள் பருகிப் புதுவெண் திங்களே. 53 அப்போது தாமரை முதலியவற்றின் நிலை தொக்க கமலம் வாய்மூடக் கள்ளுண் டிடறுஞ் சுரும்பினங்கள் மொய்க்கு நறுமென் குவளைவாய் திறந்த முகில்துஞ் சிளம்பொழிலில் புக்க மணிநீர்க் கயத்திரைதேர் குருகு விண்மீன் பூத்தனவால் செக்கர் எனுஞ்செந் தீயினிடைப் பொரிந்து தெறிந்து பொரிபோல. 54 செவ்வானத்தின் சிறப்பு தூய சோதிப் பகலவன் போய் மேலைப் புணரி தோய்ந்திடலும் மாயை நாமங் கொண்டிருந்த மணிமென் கலாப மயிலைவான் ஆய கோம்பி கண்டுசினந் துடலஞ் சிவப்புற் றடங்கல்போல் மேய மாலைப் பொழுதிலிருஞ் செக்கர் தோன்றி வீந்ததால். 55 மாயைக்குக் காமநோய் வளருதல் காலை அரும்பிப் பகலெல்லாம் போதா யிருந்த காமமலர் மாலை மலர்ந்து பொறாமலொரு மாயை நாம மணிவல்லி மூலை யிருந்து புறம்போந்து விரிவெண் ணிலாமென் முற்றத்தில் பீலி மஞ்ஞை யெனவீழ்ந்து மதநோய் மிகவாய் பிதற்றுமால். 56 திங்களை வெறுத்தல் தாய்வா யடைந்து மிகுந்தலையை மோதி மோதிச் சலித்தலறக் காய்வாய் நிலவே உடன்பிறந்தாள் இருந்து வாழுங் கடிமனையை நீவான் எழுந்து வந்தழிப்பா யென்றால் அந்தோ நிலையின்றித் தேய்வாய் நின்னோ டியைபில்லா என்னை என்ன செய்யாயே. 57 நீ, நஞ்சினுங் கொடியாய் என்றல் தக்கன் மகத்தில் ஒருஞான்று தாளிற் படுநீ தலையேறி மிக்க முனிவர் மந்திரநீர் இறைப்ப இன்னும் மீண்டிலாய் நக்கன் பவள வாய்ப்பட்டுக் களத்தே யிறங்கு நஞ்சுநினை ஒக்கு மென்ப தறியாமை அன்றோ ஒளிர்வெண் மதியமே. 58 உன்னை அமுதகலை என்பது மங்கல வழக்கெனல் அங்க மதினஞ் சிருத்தினோன் அங்க மல்லா அவிர்சடைமேல் தங்க நினைவைத் திட்டதுநின் கொடுமை கருதித் தானன்றோ பொங்கும் அமுத கலையென்ன நின்னைப் புகறல் வெண்திங்காள் இங்கு மனிதர் காராட்டை வெள்ளா டென்ப தொக்குமால். 59 நெருப்பை வெண்ணிறமென்றற்குக் காரணம் உருப்ப மிகுவன் தழல்சிவப்புற் றுலகர் காண ஒளிதரவும் நெருப்பு வெண்மை யென்பதுநல் நியாயர் நின்னைக் குறித்ததன்றோ பொருப்பு நறுஞ்சந் தனச்சேறு புலர்ந்து பொரியப் பூவணையும் விருப்ப மலருங் கொளுந்தவழல் வீசி யெழுந்த வெண்திங்காள். 60 திங்கள் வளர்தல் தேய்தலுக்குக் காரணம் இன்றோர் உலகில் எனக்கொன்று பிறர்க்கொன் றாகி யிருக்கின்றாய் நன்றோ உனக்கு மதியமே ஞாயி றேபோல் வாழாமல் முன்தோ கையர்கள் யாவரையும் ஒப்பக் காணா முயற்சியால் அன்றோ தேய்ந்து போகின்றாய் அந்தோ அதனை அறியாயோ. 61 தென்றலை வெறுத்தல் கொல்லா நோன்பு முனி மலையில் தோன்றி என்னைக் கொல்கின்றாய் பொல்லா மந்த மாருதமே என்னோ கருணை பூண்டிலாய் சொல்லாய் திருப்பாற் கடலினிடைத் தோன்றுங் கடுவின் தன்குணமே அல்லால் அமுத குணமுண்டோ நின்னை வெறுப்ப தறிவன்றே. 62 குயிலை வெறுத்தல் உயிர்த்த பொழுதே நின்குரல்கேளாமுன் னோடிற் றீன்றதாய் நயத்தின் வளர்த்த தாய்குரல்கேட் டலுமே நடுங்கத் துரந்ததால் பயத்த மலர்ப்பூங் காவகத்தில் இருந்து பல்காற் கூவினால் செயிர்த்து நின்னைக் குயிலே நான் வெறுத்தல் செப்ப வேண்டுமோ. 63 காமனை முனிதல் கன்னற் சிலையாய் என் மனத்தைக் கலக்குங் காளை கவின்கண்டு முன்னிற் பதற்கு நாணியோ இங்கே நின்று முனிகின்றாய் தன்னிற் பெரியார் இல்லையெனும் அவனைச் சமரில் தாக்காமல் நன்னர்த் தளிரின் மெலியாரை அடர்த்தாய் ஆண்மை நன்றரோ. 64 மதமானி, அல்லமதேவரிடத்து மாயையை விடுத்தல் என்று புலம்பி மயல் முதிர்ந்து மாயை இரங்கி இருந்தயர மன்றல் மலர்பெய் மெல்லணைப்பூம் பள்ளி யறையின் மதமானி சென்று நம்பி அல்லமனை முன்தந் திருத்தித் தேரையூண் வென்றி மடங்கற் கிடுதல்போல் அவளை விடுத்தாள் அவ்வறையுள். 65 மாயை, அல்லமதேவரைத் தழுவ முயலல் வேனில்நண் பகலின் வெய்யபா லையுள் நீர் வேட்டவன் அந்நிலத் துறுநீர் தானெதிர் கண்டு பருகவோ டுதல்போல் தண்மலர் அணைமிசை அமர்ந்த ஞானநல் விளக்கை விழியுறக் கண்டு நகையொடு திருமுக மலர்ந்து பானலங் கண்ணி முணர்முலை விம்மப் பரிந்துமேல் விழுந்துபுல் லினளால். 66 அல்லமதேவர் தன் கைக்கு அகப்படாமையால் மாயை வருந்தல் நாடிய ஆடி நிழலென அணைமேல் நண்ணுறத் தோன்றிய இறையை ஓடினள் விழுந்து தழுவுறத் தழுவ உறாமையால் அணைமிசை விழுந்தே ஆடியி னிழலைப் பற்றநீட் டியகை ஆடியில் தாக்கநின் றழுது வாடுறு மழலைப் பேதையே போல வருந்தினள் மதர்விழி மாயை. 67 அல்லமரை உருவெளித் தோற்றமென மாயை ஐயுறல் சொல்லரும் அழகன் திருவுரு விழியில் தோன்றலான் மீளவும் எழுந்து புல்லினள் மலர்மென் கைகளால் வெளியைப் புல்லல்போற் சுவைத்தனள் வெறுவாய் வல்லியிவ் வாறு வெளிமயக் குற்று வள்ளல்தன் கைப்படா மையினால் அல்லமன் அலனீ துருவெளி யென்ன அயிர்த்தனள் உண்மையை அன்றே. 68 ஆசிரியர் கூற்று அருந்தவ நெடுநாள் முயன்றுதான் பெற்ற அமுதைவாய் வைத்திடு மளவில் கரந்தவ றுதல்போல் அல்லம தேவன் கட்புலத் துற்றுமென் தோளில் பொருந்துற வெளிபோல் வராமையால் தீயிற் புழுவெனப் பதைபதைத் தரிவை வருந்தினள் காமம் அல்லமன் அன்றி வடிவுளார் யார்கடந் திடுவார். 69 மாயை வருந்தியிருத்தல் கன்னிகை யென்றும் இறைமகள் என்றுங் கருதிடா தவாவிளைத் திட்டும் என்னிணை முலைகள் மாபுறத் தழுவி யிதழ்சுவைத் தணைமிசைப் புணர்வுற் றின்னலில் இன்பக் கடலிடை மூழ்க இவன் றானாற் பெற்றிலேன் என்று தன்னக நைந்து வெய்துயிர்ப் பெறிந்தாள் தவத்தரை அலைத்தவம் மடந்தை. 70 அல்லமரை மாயையால் மயக்கலாகாதெனல் பொழிந்திழி மழையால் வளிநனைந் திடுமேற் புகைத்தெழும் எரியில்வான் வேமேல் முழங்குவெண் திரைப்பே ராழியக் கலய முனிவனை அழுத்துமே னஞ்சம் எழுந்தரன் தன்னை வருத்துமேல் மயக்க மெய்துவன் அல்லம தேவன் ஒழிந்தவர் தம்மை யொழிவற மயக்கும் ஒருத்தியும் அவன்றனை மயக்கும். 71 மாயை, கனவு காண்டலும் பொழுது விடிதலும் விண்ணினைக் குத்திக் கையிளைப் பவர்போல் வேனெடுங் கண்ணியங் கிருந்த அண்ணலைத் தழுவித் தழுவிமெய் வருந்தி அவசமுற் றணைமிசை உறங்கி எண்ணுறு நினைவால் அவன்புணர்ந் ததுபோல் இன்கன வொன்றுகண் டெழுந்தாள் கண்ணகல் நிலத்தின் இருள்குடிப் பவனுங் கருங்கடல் முகட்டினில் எழுந்தான். 72 இரவு நிகழ்ச்சியை மாயை தன் தோழியர்க்குக் கூறல் காலையில் மாலை வார்குழல் மாதர்க் கண்டுரை செய்வள் அல்லமன்தன் கோலமென் சொல்வேன் விழியெதிர் தோன்றிக் குறுகிலென் கைப்படான் அதனால் சாலவும் நைந்து துயின்றனன் கனவில் தடமுலை குழைந்திடப் புல்லி மேலுநல் அருள்செய் துன்னைநான் என்றும் விடுகிலேன் என்றனன் என்றாள். 73 அல்லமரை வியந்து தோழிகள் மாயைக்கு உரைத்தல் அருந்தவம் அழிக்கும் அழகுடை அணங்கிற் ககப்படா விறலினன் யாரோ புரந்தரன் அயன்மால் சுரர்முனி வரர்கிம் புருடர்வித் தியாதரர் என்னப் பரந்தவர் தம்முள் அலனிவ னொருவன் பார்த்திடிற் பராபரன் என்று திருந்திழை மகளிர் மனத்துளே வியந்து தெரிவையோ டுரைத்தல்மே யினரால். 74 தோழிகள் அல்லமன் நின்னை அணைவன் எனல் ஆசைநின் உளத்தின் மிகவளர்ப் பதற்கா யல்லமன் இவ்வகை நடித்தான் பேசுறு கனவின் பயனுனக் குரைப்பிற் பின்புனை மெய்யுற அணைவன் வாசமென் குழலா யென்றவள் மனத்தின் வருத்தமற் றிடவறிந் துரைத்தார் காசணி மருங்குல் மடந்தையர் மாயை கவலைதீர்ந் துள்ளுளே களித்தாள். 75 மோகினி, தன் மகள் இடத்திற்கு வருதல் இன்னண மாயை மாதிடை நிகழ்ந்த இயல்பினை மோகினி சிலர்போய்ப் பன்னுற அறிந்து மானமீக் கூரப் பருவரற் கடலிடைப் படிந்து தன்னொரு மகள்வாழ் மாளிகை யெய்தித் தனயையைப் பாங்கிமா ரொடுகூய் என்னிது செய்தாய் ஐயகோ பேதா யென்றுநைந் தின்னன புகன்றாள். 76 மோகினி, தன் மகள் செயலை வெறுத்துரைத்தல் மானமும் உயிரும் ஒருங்குநில் லாத வழியுயிர் தன்னையே விடுத்துத் தானுறு பொருளாய் மானமே கொளுமுன் தந்தைதன் செவிப்படில் என்னாம் பானுவும் மதியும் இயங்குறு மளவும் பழியிது வழிவழி வராதோ யானுனை வருந்தி யீன்றதும் இதற்கோ என்செய்தாய் பாவியென் றிசைப்பாள். 77 கன்னியர் கடமை குரவர்தாம் இயைந்து கொடுத்தில ராயிற் குமரவே ளனையவ ரேனும் அருவரா நிற்பர் தந்தைதாய் தங்கள் ஆணையி னொழுகுகன் னியர்தாம் உருவிலார் எனினுங் குரவருள் மகிழ்வுற் றுதவுறி னனையவர் தம்மைப் பரவுவான் கடவு ளாகவே நினைந்து பண்பொடும் பயிலுவர் அன்றே. 78 பெண்கள் தம் மனம்போல் நடத்தற்குரியர் அல்லர் எனல் மணம்புரி வதன்முன் குரவரா ணையினும் மணவினை முற்றிய பின்னர் இணங்குற அருள்செய் கொழுநனா ணையினும் இருப்பர்தம் வயமில ரென்றும் அணங்கனை யவர்தாம் என்பதை அறிந்தும் அடாதவிச் செயலினைச் செய்தாய் பிணங்குவார் இலையென் றிருந்தனை போலும் பேதைநீ என்றுதான் முனிந்தாள். 79 மாயை வருந்த மோகினி சினம் நீங்கல் தான்செயுந் தவறும் தாய்செயு முனிவும் தன்மனந் தனைநனி வருத்த நான்செய்வ தென்னென் றிருநில நோக்கி நாணிநீர் விழியுக இருந்தாள் தேன்செய்மென் மொழியாள் மோகினி கண்டு சினந்தவிர்ந் தகங்கரைந் துன்மேல் மான்செயும் விழியாய் பிழையிலை யென்றாள் மனங்கரை வன்னைபோல் உண்டோ. 80 தோழிகள் மாயையின் மோகப்பெருக்கை மோகினிக்கு மொழிதல் மங்கைமீர் நீயிர், சூழ்ந்தனர் இருந்தும் வளைதரு வேலியில் பயிர்போல் எங்கள்தம் மடந்தை நிறையழிந் தொழிய என்செய்தீர் பாவிகாள் என்றாள் அங்குறு மடவார் சொல்வரெம் பிராட்டி அருளொடு கேண்மதி மதனால் உங்குல மடந்தை உயிர்விடா திருந்த துன்தவ மென்றுநைந் துரைத்தார். 81 மோகினி சகளையைப் பார்த்து வினவல் பாங்கியர் பகரச் சினஞ்சிறி தவிந்து பாங்கியர் குழுவினுட் சிறப்புற் றோங்கிய சகளை தன்முக நோக்கி உரைப்பள்மோ கினியெனும் அரசி பூங்கணை மதவே ளனையஅல் லமனைப் புறத்துநின் றகற்றிடா தெங்கள் ஈர்ங்கதிர் முகமெல் லியல்முனம் விடுத்தாய் என்கொலோ எனவவள் உரைப்பாள். 82 மாயையை வெறுப்பது கூடாது என்று சகளை கூறுதல் மானிடப் பிறவி அரிததில் அரசர் மக்களா குதலரி ததனில் ஊனுறுப் பமைதல் அரிததில் அரிதால் உணர்வொடு போகங்கள் நுகர்தல் தானெனப் பெரியர் கூறலால் அன்னாய் தவம்பல முயன்றுநீ பெற்ற மீனெனப் பிறழுங் கண்ணியை வெகுண்டு வெறுப்பது தகாதென உரைத்தாள். 83 மோகினி தன் கருத்துரைத்தல் மோகினி சகளை புகல்மொழி கேட்டு முகமலர்ந் தென்தவப் பயனாம் பாகெனு மொழியாள் தவறிலள் யாழோர் பயில்மணம் அரசர்மேற் றென்பர் ஆகலில் இவளுக் கல்லமன் தானே அருமணத் தலைவனங் கவன்பால் போகம்வேண் டியவா கொள்கெனப் புகன்று புகன்றனள் பின்னுமோர் மாற்றம். 84 மன்னனுக்கு இச்செய்தி தெரியலாகாது என்றல் உலகெலாம் அறிய வதுவைசெய் காறும் உலகமன் னவனறி யாமல் திலகவாள் நுதலாள் ஒழுக்கநீர் மறைமின் தேமொழி யீரிவள் தீமை நலமெலாம் நுமதே ஆதலால் நுமக்கு நான்சொல்வ தென்எனா மகளுக் கலகிலா உவகை செய்துபோ யினள்தன் அகத்தினுள் முனிவுற வந்தாள். 85 மாயை, சகளையிடம் தன் தாயைப் பாராட்டிக் கூறல் என்பிழை பொறாமல் அன்னையோ டென்பால் இருந்தவ ரேசொலின் அதனால் அன்புடை அன்னை முனியுமோ என்ன அறைந்தனள் மாயைகேட் டறைவாள் பொன்புரை சகளை நங்குரு உனக்குப் புராரியே தலைவனென் றிருப்பப் பின்பிது நீசெய் தனையெனி னின்னைப் பிழைசொல்வார் மேற்பிழை உண்டோ. 86 அல்லமரை வெளியே அனுப்பவேண்டுமெனச் சகளை கூறல் மானனை யாய்நந் தாயறிந் தமையான் மறைந்தது நொய்துபட் டன்றிக் கோனிதை அறிவன் எனினெளி தாமோ கோமள வல்லிநீ கேண்மோ போனது போக இனியவன் றன்னைப் புறத்தினில் விடுவதே யறிவு தானென உரைத்தாள் மாயைகேட் டயர்ந்து தாங்கருந் துயரமோ டிருந்தாள். 87 அல்லமர் வினாவுதல் அல்லமன் அறிந்து நும்திரு மடந்தைக் கடுத்ததென் புகலெனச் சகளை வல்லிநின் மாயை வலையிடைப் பட்ட மறையெலாம் இறைமனை நிறைந்த தொல்லைநல் வினையால் அறிந்திலன் வேந்தன் ஒருவனும் யாமுய்ய வேண்டிச் சொல்லுவ தொன்றுண் டையநீ புறத்தோர் சூழலில் இருத்தல்நன் றென்றாள். 88 அல்லமர், ‘மாயையைப் பிரிந்து இருக்க இயலுமோ’ என ஏளனஞ் செய்தல் மாயையை அகன்றால் நடக்கக்கால் எழுமோ வாயிடை மாற்றமொன் றுண்டோ போயொரு விடயம் உணமனம் வருமோ பொருந்துறும் பகலிர வுளவோ காயமும் உயிருங் கலந்துவாழ் வுறுமோ கண்டனம் எனவெனை ஒருவர் நீயறி வுறவிங் குரைப்பவர் உளரோ நேரிழா யென்றனன் அண்ணல். 89 மாயை கிட்டுவள் எனள் கருத்தினை அறியா தவன்மொழி தனக்குக் காட்டிய பொருளையே கொண்டு விரைத்துணர் மலர்மென் குழலினாள் புணரும் விதியுள தென்னிலெங் கொடியைத் தரித்தெவ ணொருநீ யிருப்பினும் உனக்குத் தருமிதில் ஐயம்வேண் டாவென் றுரைத்தனள் கருணை யென்றுசெய் குவனென் றுழன்றவள் அண்ணலை நோக்கி. 90 அல்லமர் மத்தளம் அடித்தல் சகளையிவ் வாறு மொழிதர நங்காய் சாலவும் நன்றுநன் றென்று நகைமதி தவழுஞ் செஞ்சடை மதுகை நாயகன் திருமுனஞ் சென்று முகிழ்முலை நடிக்கும் பொழுதுதன் செயல்செய் முயற்சியி னின்றனன் தனக்குத் தகுமென வளர்பே ரறிவினால் தன்னைத் தானலா தறிதரப் படாதான். 91 ஐந்தாவது - பிரபுதேவர் வந்த கதி முடிந்தது கதி 5 - க்குச் செய்யுள் - 306 6. விமலை கதி [இக் கதிக்கண், தன்னால் நிலவுலகிற்கு அனுப்பப்பெற்ற மாயை நெடுங் காலமாகியும் மீண்டு வராமையைக் கண்ட இறைவி, விமலையை நிலவுலகிற்கு அனுப்புதலும், அவள் வந்து மாயையைக் காண்டலும் மாயை நிலவுலகிற்கு வந்தசெய்தியை நினைவுறுத்தலும், மாயை அல்லமதேவரது இயல்பைப் பற்றி விமலையைக் கேட்டலும், விமலை அல்லம தேவர் வரலாற்றை இறைவன் இறைவிக்குக் கூறியவாறு சொல்லத் தொடங்கி, நிராங்காரனும் சுஞ்ஞானியும் அருந்தவஞ் செய்து அல்லம தேவரைப் பிள்ளையாகப் பெற்றதையும், அல்லம தேவரின் இளமைக்கால விளையாட்டையும் பின்னர் உலகெலாஞ் சென்று திருவிளையாடல் நிகழ்த்தும் பொருட்டு நிராங்காரனையும் சுஞ்ஞானியையும் பிரிந்து செல்ல விரும்பி அவர்களுடைய உடன்பாடு கேட்டதையும், அவர்கள் ‘நீ யெமைப் பிரியின் நாங்கள் வீடுபேறு அடையாமல் வருந்துவோம்’ என்றுரைக்க அவர்கட்கு அருள் புரிந்ததையும் மாயைக்கு விளக்கமாக எடுத்துரைக்குஞ் செய்திகள் கூறப்படுகின்றன.] நூலாசிரியர் கூறல் அமலை யேவ அகனிலத் தெய்துபு சமல மாயை தனக்கருள் மூர்த்தியாம் நிமலன் அல்லமன் நீதியை அன்பினால் விமலை கூறிய வண்ணம் விளம்புவாம். 1 மாயை, மயல் மிகுந்திருந்தாள் என்றல் மதுகை நாதனை நாடொறு மாயைதான் அதிக வந்தனை ஆற்றிநம் அல்லமன் உதவு மால்மனத் தோங்க இருந்தனள் திதிகள் எண்ணில செல்ல நிலத்தினே. 2 இறைவி, விமலையை நிலவுலகிற் கனுப்புதல் ஆய காலையில் அம்பிகை ஞாலமேல் மாயை போய் நெடு நாளினும் வந்திலள் போயி ராதவட் கொண்டிவண் போதென ஏயி னாள்நல் விமலையை என்பவே. 3 விமலை, நிலவுலகிற்கு வருதல் கறையில் சோதிக் கயிலையில் நின்றுநம் இறைவி யேவ இறைஞ்சி வருமுலைப் பொறையி னால்விழுந் தாளெனப் பூமிசை மறுவி லாமதி போல்பவள் வந்தனள். 4 மாயையைக் காணுதல் வந்து பொன்னெயில் வட்ட வனவசை நந்து பொன்மணி மாட நணுகியே சந்த மாயை தனதெதிர் நின்றனள் கந்த மென்மலர்க் கற்பக வல்லிபோல். 5 மாயை, விமலைக்கு இருக்கை யளித்தல் நின்ற போதெதிர் கண்டு நிலவுல கன்று போலுமிவ் வாயிழை வாழிடம் என்று மாயை யெழுந்து தொழுதணை ஒன்று மேவி யிருப்ப உதவினாள். 6 இவர்களைக் கண்ட மாதர்கள் வியத்தல் இருகி ருந்த அனையர் இருவரும் இருக ரங்களும் ஏந்து மணியென உருவ மைந்திவண் ஒத்தனர் என்றுசூழ் புரம டந்தையர் புந்தி வியந்தனர். 7 மாயை, விமலையை வினாதல் மாயை வந்த மடந்தையை நோக்கியே நீயி ருந்ததெங் குன்பெயர் யாதுநீ மேய தன்மையென் என்று வினாவலும் தேயும் நுண்ணிடை செப்புதல் மேயினாள். 8 விமலை மறுமொழி உரைத்தல் கயிலை யென்னிடங் கற்பக வல்லியென் பெயரி யம்பின் விமலை பெருங்குல சயில மங்கைநின் தன்புடை ஏவினாள் வியனி லந்தனில் வந்துனை மேவினேன். 9 மாயை வினாவல் என்ன மன்மகள் எம்பெரு மாட்டிதான் மன்னும் வெந்துயர் மக்கட் பிறப்பினேன் தன்னை உன்னிநின் தன்னை விடுத்ததென் பன்னு கென்னப் பகர்தரல் மேயினாள். 10 விமலை, மாயையின் வரலாறுரைத்தல் அல்லமன் வலிநிலை அறிந்து வாவென நல்லுமை நினைவிட நன்றென் றெங்கைநீ வல்லமை பேசியிம் மண்ணில் வந்தபின் சொல்லிய நின்பெருஞ் சூள்ம றந்தனை. 11 நீ, உன்னையும் அறியவில்லை என்றல் நின்னையும் அறிந்திலை நீயென் றாவலிவண் உன்னுறு மனமொழி உறாத அல்லமன் தன்னைநீ அறிவுறுந் தன்மை உண்டுகொல் கன்னிமா துமைதம கலையை அல்லையோ. 12 இறைவி, தன்னையனுப்பிய காரணத்தை இயம்பல் ஓடுற மருந்தயின் றுறங்கல் போலுரை ஆடிய சூள்மறந் தயர்ந்தி ருத்தலால் நாடிநின் றனைத்தரற் கென்னை நல்லுமை ஏடவிழ் மலர்க்குழால் ஏவினாள் என்றாள். 13 மாயை, தன் வரலாறுணர்தல் கதிரெழு பகலெனக் கணடி டாதுதண் மதியெழும் இரவென மனந்தெ ளிந்துதன் திதியொடு நினைவுமோர் சிறித றிந்தனள் விதியுணர் இறைமகள் விமலை சொல்லினால். 14 மாயை கூறுதல் மூலகா ரணனெனச் சிலர்மொ ழிந்திடும் மாலுமோ மானிடப் பிறப்பில் வந்துதன் சீலமோர்ந் திலனெனிற் சிறிய பேதைநான் ஞாலமேல் மயங்குதல் நவிறல் வேண்டுமோ. 15 மாயை, அல்லமதேவரின் இயல்பை விமலைபால் கேட்டல் அல்லமன் இயல்பெலாம் அறியப் பூந்துணர் வல்லிநின் குமுதவாய் மலர்ந்து கூறெனச் சொல்லிநின் றிணையடி தொழுத மாதொடு வில்லுறழ் நறுநுதல் விமலை கூறுவாள். 16 விமலை கூறுதல் கயிலையின் உமையொடு கண்ணு தற்பிரான் செயலுறும் அல்லமன் செய்தி கூறலும் அயலுற இருந்துநான் அறிந்து ளேனதை மயிலியல் கேளென வகுத்தல் மேயினாள். 17 நிராங்காரனும் சுஞ்ஞானியும் படியில் வள்ளி காவையெனும் பதியில் தனக்கு நிகரில்லான் ஒடிவில் கருணை நிராங்காரன் என்னும் உண்மைப் பெயரினான் மடிவில் கற்பின் அவன்தேவி மாசு தீர்ந்த சுஞ்ஞானி கடிவில் மறையா கமவிதிகள் கண்ணுற் றறிய ஒழுகுவார். 18 அவ்விருவரின் தன்மை மெய்ம்மை சிவமே அல்லாத விரியும் உலகம் பொய்யென்பார் இம்மை மறுமை நிலையல்ல என்ன நிகழ்ந்த கருத்தினோர் செம்மை நெறியிற் புறமொடகந் திரியுங் கரணங் காமாதி பொய்ம்மை வினையில் அவர்குருநூல் பொருளாத் துணிந்து வீடுவப்பார். 19 மக்கட்பேறில்லாத வாழ்வு இனையர் ஆகி இருக்குநாள் இல்வாழ்க் கையினின் றிடுதலால் தனையர் இன்மை யானெஞ்சந் தளர்வான் போன்று நிராங்காரன் நினையுந் தியானம் இல்லாத நெஞ்சு ஞானம் இல்லாத வினையும் போலு மக்களிலா மிக்க வாழ்வென் றியம்பியே. 20 நன்மக்கட்பேறு விரும்பாதவன் பதடி ஆவன் இந்த உலகிற் குதவியாய் இயன்ற தொழில்கள் பலசெய்யும் மைந்தன் வேண்டும் எனநிற்போன் மக்கட் பதடி ஆகுவான் அந்த உலகிற் காநினைப்போன் அறங்கூர் மகனாம் அத்துவிதா னந்தம் உதவும் மகவிருப்போன் ஞானி யாகும் என்றெண்ணி. 21 நன்மக்கட்பேற்றை நாடுதல் உடம்பைப் பொறியைக் கரணத்தை உயிரைத் தானென் றுழலாமல் அடங்கத் துறந்து தனையறிந்து பேதா பேதம் என்னுமயல் கடந்திட் டிருக்கும் பரமுத்தி காட்டும் புதல்வன் வேண்டுமென இடும்பைப் பிறவி நோய்தணிப்ப எண்ணும் மனத்தான் எண்ணினான். 22 இறைவனால் தன் எண்ணத்தை முடிக்க எண்ணுதல் இரண்டோ டிரண்டு மூவிரண்டை இரண்டா றிரண்டு மீமிசையெண் இரண்டோ டிரண்டு கொண்டிருந்த இதழ்ப்பங் கயங்கள் கடந்துபோய் இருந்த குளத்தின் மேலோரா யிரந்தோட் டமல கமலமிசை இருந்த சோதி தனைக்கண்டெம் எண்ணம் முடிப்பேம் எனவெழுந்து. 23 விரும்பித் தவஞ்செய்தல் வேறாம் ஒருவன் உடனிருப்பும் வேண்டா தவத்திற் கென்பதொடு மாறாய் மனையுங் கொழுநனும்போய் வனத்திற் கமலா சனத்திருந்து தேறார் புனல்போல் தெளிந்தமனத் திறந்துந் திறவா விழியொடுதம் பேறாம் இட்ட லிங்கத்திற் பிறழா தமையும் படிவைத்து. 24 தவஞ்செய்திருந்த தன்மை தறிபோல் உடலம் நேரிருந்து தயங்கு மருங்கின் இருநாடி நெறிபோய் மீளும் வளியதனை நிறுவி நடுநா டியிற்செலுத்தி அறிவோர் சிறிதுஞ் சலியாமல் அன்னப் பெயர்மந் திரமாறிக் குறிபோ யிருந்த ஒருகுறியைக் குறித்துக் கொண்டங் கிருந்தனரால். 25 அறிவுச்சுடரைக் கண்டிருத்தல் வாயு நிற்ப மனநின்று மனந்தான் நிற்பப் பொறிநின்று பாய பொறிகள் நிற்பஇடர் படுவுன் புலன்கள் நின்றனவால் ஆய புலன்கள் நின்றமையால் அகிலந் தோன்றா துள்ளத்தே தூய பரமா ளந்தபரஞ் சோதி தோன்றக் கண்டிருந்தார். 26 கடவுள் குழவியுருவாகத் தோன்றுதல் ஒருங்கு மனமோ டினையசிவ யோக சமாதி நவதிங்கள் நிரம்ப இருந்த காலத்து நெற்றி மிசையிற் பரஞ்சோதி திரண்டு குழவி உருவாகிச் சென்று புறமுற் றிடவதனை விரும்பும் இருவர் தாமுமுடன் விழிகள் திறந்து கண்டனரால். 27 அக்குழந்தையின் அழகுத் தன்மை வெம்மை ஒழிந்து நிலத்திழிந்து விளங்கு கதிரோ பனிநீங்கி எம்மை ஆள வருமதியோ இடுமிந் தனங்கள் நுகராத செம்மை ஒளிவான் பேரழலோ தெரியா தென்ன ஒளிர்ந்ததவர் தம்மை அறியா உவகையுளந் தழைப்பச் சோதி மதலையே. 28 யாரும் இத்தகைய மக்கட் பேற்றை அடையார் எனல் அலைந்து பிறப்பில் ஆங்கார அஞ்ஞா னிகளாம் மானிடரும் மலிந்த சுரரும் முனிவரரும் மற்றை யோரும் பெறுவரோ தொலைந்த மாயை நிராங்கார சுஞ்ஞா னிகள்போல் மலவிருளை நலிந்து வளர்சச் சிதானந்த நந்தா விளக்காம் மதலையையே. 29 எவரையும் இவ்விருவர்க்கும் ஒப்பாக உரைக்கமுடியாது எனல் பேரா னந்தம் பிள்ளையாப் பெற்ற அவர்க்கு விடயத்துள் ஓரா னந்தம் பெற்றுடனே ஒழியும் உலகர் தம்மைநாம் நேரா இயம்ப லாகுமோ நிகர்தாம் தம்மில் தாமென்று வாரார் இளமென் முகிழ்முலைநன் மடவாய் உரைப்ப தன்றியே. 30 இருவரும் உலகிற்குக் கடவுளைக் காட்டிய சிறப்பினர் எனல் பண்டு பாசந் தபுசிலரும் பரஞ்சோ தியைத்தாம் தம்முள்ளே கண்டு வாழ்வு பெறுநரலாற் கண்ணிற் காட்டும் அவரில்லை தொண்டு படுமிந் நிராங்கார சுஞ்ஞா னிகள்தம் உட்கண்டு கொண்ட ஒளியை உலகுய்யக் குழவி ஆக்கிக் காட்டினரால். 31 கடவுட்குழவி பிறந்தபோது உண்டாகிய புதுமை சங்கும் தெய்வ துந்துமியம் தழங்க மலர்மா மழைபொழிந்த எங்கும் திசைகள் விளங்கினகன் றீன்ற மலடு தறிதளிர்த்த பங்கம் கலந்த புனல்தெளிந்த பதகர் மனமும் தெளிந்தவருள் பொங்கும் துறவர் மனமகிழ்ந்த புனிதன் மகவாய்த் தோன்றுநாள். 32 நிராங்காரன் குழந்தையைத் தழுவியெடுத்தல் நையா மனத்து நிராங்காரன் ஞானத் திரளாம் பிள்ளைதனை மெய்யாம் உளக்கண் அன்றியுமிவ் விழியுங் காணப் பெற்றனமென் றெய்யா உவகைக் கடல்மூழ்கி யேறான் மார்போ டுறத்தழுவிக் கையால் எடுப்ப எங்குநிறை கனவான் கனவான் நொய்தாகி. 33 சுஞ்ஞானி கணவனைக் கேட்டல் செவ்வாய் ஞான மயில்கொழுநன் செந்தா மரைத்தாள் வணங்குபுநம் இவ்வாய் மகன தியல்புநீ யியம்பா யென்ன அவன்தெரிந்து சைவா கமமும் ஆரணமும் சாற்றற் கரிய நம்மகவை எவ்வா றுரைப்பன் யான்மடவாய் என்று வியந்து கூறுவான். 34 இறைவனே குழவியாகப் பிறந்தான் எனல் நாம்பார்க் குழவி ஆகாமல் நம்பாற் குழவி ஆயினான் தீம்பாற் கடலில் துயில்வோனும் நெந்தா மரைமேல் உறைவோனும் தாம்பார்க் கரிய அடிமுடியோன் தானே ஐயம் இதற்கில்லை காம்பாற் புரிந்த தனையதோட் கனிவாய்த் தடங்க ணாயென்றான். 35 அதுகேட்டு சுஞ்ஞானி களிப்படைதல் ஆன்ற மயல்செய் சையோகத் தன்றித் தவயோ கத்தினால் ஈன்ற பொழுதின் தன்மகனை யிருந்து சான்றோன் எனக்கேட்டுத் தோன்றும் உவகைக் கடற்படிந்தாள் சுஞ்ஞா னித்தாய் பசும்பொன்மலை போன்று வளர்ந்தும் மருங்குல்மிடி போக்க அறியா இளமுலையாய். 36 அல்லமப்பிரபு என்று பெயரிடுதல் மத்த நெஞ்சக மோடுதம் மதியின் ஒன்றை அறைந்திது மெய்த்து றும்பொரு ளென்றதை வேதம் ஆகமம் ஓதுமென் றுத்தி கொண்டுரை செய்தெதிர் ஒன்றை நிந்தைசெய் சமயர்தம் பித்தை அல்லெனும் அல்லமாப் பிரபு எனும்பெயர் இட்டனர். 37 அல்லமதேவரின் சிறு விளையாடல்கள் வினையி னாலொரு வன்றரு மேனி யாளன லாதொரு மனிதன் ஆகிந டித்திடு வடிவன் ஆதலின் அல்லமன நினையு மாறு தவழ்ந்துபின் நின்று மெல்ல நடந்துபோய் வனையு மாமணி மாளிகை மறுகின் ஆடல் பயின்றனன். 38 அன்னை அழைக்க வருதல் வருக எங்கள்தம் ஆவியே வருக கண்நுகர் அமுதமே வருக எங்குல தீபமே வருக கேடறு செல்வமே வருக பாச வினாசனே வருக ஞான வினோதனே வருக என்றனை உளமகிழ்ந்திட வந்து மேல்விழும் அல்லமன். 39 சிற்றில் சிதைத்தல் மாயை யாலுள ஆகிய வடிவு நாமம் அழித்துள தாய வோர்பிர மந்தனை அறியு மாறறி வித்தல்போல் மேய பேதையர் மணலமை வீடு தாள்கொ டழித்தனன் போயு லாவுவன் மானிடன் போல வேவிளை யாடுவோன். 40 சிறு தேருருட்டலும் பம்பரம் ஆடுதலும் நானி யக்கின் இயங்குறும் ஞாலம் என்றறி வித்தல்போல் தானு ருட்டுநல் வீதியில் தமனி யச்சிறு தேரினை யான டக்கரு நெஞ்சகம் இதனை ஒக்குறும் என்பது போன மக்குயிர் ஆயினோன் புதிய பம்பரம் ஆடுமால். 41 கல்வி கற்றல் ஆடி ஒன்றெதிர் கொண்டுதம் ஆன னந்தெரி வார்கள்போல் கூடி ஒண்குரு வெதிர்கொடு கொண்டு தன்பெரு விஞ்சைகள் நாடி ஒண்கலை கற்றல்போல் நாடக ம்பல செய்தனன் பீடு றும்பழ மறைகளும் பேச ரும்புக ழாளனே. 42 அல்லம தேவர் எங்கும் செல்ல எண்ணுதல் தந்தை தாயுளம் இன்புறத் தனது பேரரு ளாலிள மைந்த னாகி யிருந்தொரு வால லீலை நடித்தருள் எந்தை தானுல கெங்கணும் எய்தி மக்கள்தம் வல்வினை சிந்து மாறு நினைந்திது செப்பல் மேயினன் என்பவே. 43 அல்லமதேவர் தாய் தந்தையர்க்கு உரைத்தல் உங்கள் பாவனை ஒருமையால் ஒருவ மாமகன் ஆகிநான் இங்கு மேவி இருந்தனன் இனிந டந்துல கெங்கணும் தங்கு மாதவர் முதலியோர் தங்கள் எண்ணம் முடிப்பனென் றெங்கள் நாதன் இயம்பவிவ் விருவ ரும்புகல் கின்றனர். 44 இருமுதுகுரவரின் பதில் பிறப்பெ னுங்கட லிற்படும் பீழை யேமுறு புணையனாய் துறப்பின் வீடெனும் ஒண்கரை துன்னு றாதமிழ் வேமெனா மறப்பி லாஇரு குரவரும் மனமு ளைந்துரை செய்திடச் சிறப்ப ஞான சிகாமணி தெளியு மாறுரை யாடினான். 45 உங்களை நான் பிரியேன் என்று உரைத்தல் சற்றும் நும்மை அகன்றிடேன் தளரன் மின்மனம் என்றுநான் சொற்ற தையம் உமக்கெனில் துணியும் ஆகம வேதநூல் கற்று ளோரை வினாய்நிராங் கார ஞானிகள் தமையிவண் உற்ற அல்லமன் அகல்வனேல் உரைமின் என்றுணர் மின்களே. 46 உண்மைப் பொருளை உணர்த்துதல் என்று பொன்றுமிவ் வுடலமுதல் யாவும் வேறென நீக்குபு நின்ற தம்மில்வே றலனெனும் நிலையை நின்றுதா தான்மியம் ஒன்று றும்பரி சுரைசெயூ உணரும் வண்ணம் உணர்த்தினான் பின்றல் இன்றிய அல்லமாப் பிரபு எனுங்குரு ராயனே. 47 நிராங்காரன் சுஞ்ஞானியை உலகினர் போற்றுதல் தந்தை தாயிலன் ஆகிய தாணு வாகிய சங்கரன் மைந்த னாய்மக வில்லெனு மனவ ருத்தம கற்றவும் முந்து தேசிகன் ஆகிநல் முத்தி நல்கவும் எய்தினோர் இந்த மாதவ ரலதிலை யென்று மக்கள் துதித்தனர். 48 விமலை கூறிமுடித்தல் ஆத லாலெழில் அல்லமன் அருளி னாலுறு கின்றது வாத மாறுநன் முத்திதான் மலைத ருங்கொடி அறிதியென் றோதி னானரன் அதுபொழு துடனி ருந்தனன் என்றவண் மேதை மாயை அறிந்திட விமலை கூறினள் என்பவே. 49 அல்லமர் அன்பர் உள்ளத்தில் விளங்குவர் எள்ளில் எண்ணெய் எனப்படர் இந்த னத்தெரி யென்னவாய் விள்ளு மென்மலர் மணமென விரவி யெங்கணும் நிற்பினும் வள்ளல் அல்லமன் அன்பர்தம் மனம டைந்து விளங்குவன் தெள்ளும் இன்சுவை விம்முபால் திரள்மு லைக்கணின் ஒழுகல்போல். 50 ஆறாவது - விமலை கதி முடிந்தது கதி 6 - க்குச் செய்யுள் - 356 7. மாயை கோலாகல கதி [இக் கதிக்கண், மாயை விமலையைப் பார்த்து அல்லம தேவரை எவ்வாறு அடையலாம் என்று கேட்டலும், இறைவழிபாட்டால் அல்லம தேவரை அடையலாமென்று விமலை கூறுதலும், நான் இறைவனை வழிபட்டேன்; அதனாற் பயனில்லை என்று மாயை பதிலளித்தலும், இறை வழிபாடு பயனில்லை யென்றதைக் கேட்ட விமலை கலங்கி, இறை வழிபாடில்லாமல் யாருக்கும் எக்காரியமும் கைகூடாது என்றலும், தேவர்கோன் முதலிய தேவர்கள் வழிபட்ட கோயிலை நீல நிலவுலகில் பார்க்க வில்லையோ என்று கேட்டலும், மக்கட்பேற்றை யடைந்தும் இறைவழிபாடற்றவர்கள் மிகவும் இழிந்த பிறப்பினர் என்றலும், இறைவழிபாட்டைக் குருமுகமாக வுணர்ந்து செய்யில் பயனேற்படுமென்றலும், அன்பின்றிச் செய்யும் வழிபாட்டால் பயன் ஏற்படாதென்றலும், நீ செய்த வழிபாட்டில் ஏதோ தவறு நேரிட்டிருக்கிறதென்றலும், மாயை தான் காமன் கணைக்கு ஆளானதைத் தெரியப்படுத்தலும், மாயை விமலையைத் தன்னுடன் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு சென்று அல்லம தேவரைக் காட்டுதலும், விமலையால் அந்த அல்லமதேவரே இறைவன் கூறான அல்லம தேவர் என்பதை யுணர்ந்து அவரைத் தழுவ முயலுதலும், மாயையின் கருத்தை யுணர்ந்த அல்லம தேவர் மத்தளத்தை எறிந்து விட்டு ஓடுதலும், மாயை விமலை முதலிய மகளிர் அல்லம தேவரைத் தேடிப் பாலை நிலத்தில் அலைந்து மிகவும் வருந்துதலும் மாயை முதலியோரின் முன்னர் அல்லமதேவர் எதிர்ப்பட்டு மாயையுடன் சொற்போரிடுதலும், மாயை அல்லம தேவரைப் பற்ற முயலுதலும், அல்லம தேவர் மறைந்துவிடுதலும், முனிவர்கள் அல்லம தேவரைப் போற்றுதலும் ஆகிய செய்திகள் விரித்துரைக்கப் படுகின்றன.] நூலாசிரியர் கூறல் நல்லெழில் விமலைஇன் னணம்ந வின்றிட முல்லைவெண் ணகைவரு முயற்சி எண்ணிவே புல்லுவன் அவனையென் றெழுந்த போதினில் அல்லமன் அகன்றமை அறியக் கூறுவாம். 1 மாயை, விமலையை வினாவல் முகிழ்மதி அணிபவன் முதல்விக் கோதிய வகைபெற விமலைதான் வகுப்ப மாயைகேட் டகநெகிழ் வுற்றுநாம் அல்ல மப்பெருந் தகைதனை அடைவதெவ் வாறுசாற் றென்றாள். 2 விமலை, இறைவழிபாட்டால் அல்லமர் தோன்றுவர் எனல் மழுவலம் உயரிய வள்ளல் வந்தனை அழகுற இயற்றினை ஆயின் அல்லமன் விழியெதிர் தோன்றிநீ மனத்து வேண்டிய தொழிவற நல்குவன் உனக்கென் றோதினான். 3 அதனாற் பயனில்லையென மாயை கூறுதல் முதல்விநீ உரைசெயும் முன்ன மேயருள் மதுகைநா யகன்றனை வழிபட் டேத்தினேன் அதுதரும் பயனிலை அறிந்து ளேனெனப் புதுமயல் மூழ்கினாள் புலர்ந்து கூறினாள். 4 அதுகேட்ட விமலை கலக்கமுறல் வெருவற இவளக விழியி லாமையால் பரசிவ பூசனைப் பயனில் என்றனள் அரகர என்றுகா தங்கை வைத்திஃ துரைசெயும் விமலைதன் உளங்க லங்கியே. 5 இறைவழிபாடின்றி ஒன்றும் நடவாதெனல் பயனிலை அருச்சனை பயின்றும் என்றனை அயனரி முதலிய அமரர்க் காயினும் நயமொடு சதாசிவ நாதன் பூசனை முயலுதல் அன்றியோர் எண்ணம் முற்றுமோ. 6 தேவர்கோன் முதலியோர் வழிபட்ட கோயில்களைப் பார்க்கவில்லையோ எனல் வாசவன் அரியயன் வான நாட்டுளோர் பாசமில் முனிவரர் பலரும் மண்ணிடைப் பூசனை விதிமுறை புரிந்த ஆலயம காசணி அல்குலாய் காண்கி லாய்கொலோ. 7 மலைமகள் முதலியோர் வழிபட்ட கோயிலைக் காண்கிலையோ நீ எனல் மலைமகள் சூரர மகளிர் பாற்கடல் அலைமகள் முனிவரில் லறக்கி ழத்தியர் கலைமகள் விழிநுதற் கடவுட் பூசையால் நிலைமைகள் அடைந்தமை நினைந்தி லாய்கொலோ. 8 இறைவழிபாட்டால் எல்லாப்பேறும் எய்தலாமெனல் சித்தியும் ஆயுளுஞ் சிறப்புங் காமிய புத்தியர் அடைவரப் புத்தி நீக்கினோர் முத்தியை அடைவரெம் முதல்வன் பூசையால் சத்தியம் சத்தியம் தளர்ம ருங்குலாய். 9 இறைவனை வழிபடாதவர் அறிவிலார் எனல் பீடுறு மானிடப் பிறப்பு வாய்த்துநல் ஏடவிழ் மலரினால் இறையைப் பூசியார் பாடமை நாளெலாம் பாழ்க்கி றைப்பவர் மூடரை எண்ணுங்கால் முந்தி நிற்பரே. 10 இறைவனை வழிபடுவோர் இறைவன் போன்றார் எனல் காம்படு தோளிமுக் கண்ணன் தாள்மலர் தேம்படு மலர்கொடு பூசை செய்பவர் பாம்பொடு பழகிலாப் பரமன் என்றவர் பூம்பத மனமகிழ்ந் துலகம் போற்றுமே. 11 இறைவனைப் போற்றார் நாயினும் கடையர் எனல் நோய்ப்பிறப் பிலாதகண் ணுதலைப் பூசியா வாய்ப்புறத் தலைக்கொரு மதிபெ றாநர னாய்ப்பிறப் புற்றதின் அறிஞர் எள்ளுறா நாய்ப்பிறப் பாற்றவும் நன்று நன்றரோ. 12 சிவ வழிபாடு குருவின் ஆணைப்படி செய்தல் வேண்டும் பொருவிலி ஆகமம் புகன்ற மந்திரக் கிரியைகள் வழுவறக் கிளக்கும் நல்லருள் குருபரன் அருளினாற் கொண்டு செய்குநர் பரசிவ பூசனைப் பயனை நண்ணுவார். 13 அன்பில்லா வழிபாடு வீண் எனல் அண்ணல்ஐம் முகங்களும் அருளும் ஆகமம் நண்ணிய விதிமுறை நன்கு செய்யினும் எண்ணரும் அன்புளத் தில்லை யேயெனில் பண்ணிய பூசனை பயன்த ராதரோ. 14 தன் இயல் முதலியன ஆசிரியனால் அறிதல் வேண்டும் பூசைசெய் தன்னையும் பூசிக் கப்படும் ஈசன தியல்பையும் இறைவன் பூசைசெய் ஆசறு பொருளையும் அறவ றிந்துயர் தேசிகன் அருளினால் தெளிய வேண்டுமால். 15 உன் வழிபாட்டிற்குப் பயனில்லாதது ஏன் எனல் மந்திர தந்திர வழுக்கள் வந்தவோ சிந்தனை புறவிட யத்திற் சென்றதோ பைந்தொடி பூசனை பயனில் என்றுநீ நிந்தனை செய்ததென் நிகழ்த்து வாயென்றாள். 16 மாயை பதிலுரைத்தல் என்றுநல் விமலைமா தியம்பப் பூசையால் வென்றிகொள் அல்லமன் விழியில் தோன்றிய நன்றியை அறிந்திலள் நழுவி நிற்றலால் வன்துயர் மனமுற மாயை கூறுவாள். 17 (வேறு) இறைவழிபாடு பயனளிக்கவில்லை எனல் ஒன்றையும் உணர்கி லேனான் எங்குரு உரைத்த ஆற்றால் இன்றள விலிங்க பூசை இயற்றியும் பயனொன் றில்லை என்றனள் பருவ முற்றோர்க் கிருமறை உபதே சிப்ப தன்றிவன் மனிதர்க் கோதின் அதுபயன் படுவ துண்டோ. 18 மாயை மயக்கங்கண்டு விமலை மனந்தளரல் நெறிபல முறையு ரைத்து நினைந்திலன் அதனை அந்தோ மறுகுறு மனத்த ளாகி மாயைமால் கொண்டி ருந்தாள் அறிவிலர்க் கறிவிப் பார்தாம் அறிவிலார் ஆவர் என்று வெறிமலர் வணர்வார் கூந்தல் விமலைதன் மனந்த ளர்ந்து. 19 உண்மையைக் கூறுமாறு உரைத்தல் இவள்மனங் கவன்றி ருந்த திதனைநான் அறிவல் என்று குவிமுலை விமலை சொல்வாள் கோற்றொடி மடந்தாய்! நின்மேல் அவிழ்மலர் அம்பு பட்ட தாயிருந் தன்றெ னக்கு நவிலுதி மறையேல் அன்னை நகமகள் ஆணை என்றாள். 20 மாயை தன் மையலைக் கூறுதல் ஆணைய வெருவி மாயை அம்பலத் தாடா நின்ற தாணுவும் உளம்வி ரும்பும் தண்ணுமைத் தொழிலான் கண்கட் கூணெனும் அழகின் மிக்கான் ஒருவன்வந் தனனன் னானைக் காணலும் எனைநான் காணேன் என்றனள் கற்றார் போல. 21 அன்னான் பெயர் அல்லமதேவன் என்றல் அல்லமன் அனையன் நாமம் அவன்றனக் கலதென் நெஞ்சக் கல்லுரு குறாது முக்கண் கடவுளுக் கன்றி மேரு வில்லுரு ஆவ துண்டோ விளங்கிழாய் நின்னைக் காணும் நல்வினை ஒன்றி ருப்ப நானுயிர் தரித்தேன் என்றாள். 22 நீ கூறியோனே நான் கூறிய அல்லமர் எனல் நீ நவில் அல்ல மன்வேல் நெடுங்கண்வாள் நுதல்ம டந்தாய் நானவில் அல்ல மன்றான் நச்சுமுன் தனக்குத் தக்க மானிட வடிவங் கொண்டு வந்தனன் போலும் அன்னான் ஞானநல் விழியின் அன்றி நயந்துதன் உண்மை காட்டான். 23 அவன் மத்தளம் அடிப்பவன் எனல் என்னநல் விமலை கூற இலங்கிலை நெடுவேற் கண்ணி தன்னிகர் அல்ல மன்சச் சிதானந்த சம்பு என்றாய் அன்னவன் அலனி வன்றான் மத்தள அல்ல மன்காண் முன்னொடு பின்ம யங்க மொழிந்தனை அணங்கே என்றாள். 24 அல்லம தேவர் ஆடல்களை நின்னால் அறியமுடியாது எனல் வேண்டிய வடிவங் கொண்டு வேண்டிய வாறு செய்யும் ஆண்டருள் அல்ல மற்கீ தாமென்றும் ஆகா தென்றும் கோண்தரு நினது நெஞ்சாற் குறித்திடப் படுவ துண்டோ பூண்திகழ் இளமென் கொங்கைப் பொற்றொடி என்று சொன்னாள். 25 அல்லமதேவரை அரங்கிற் காட்டுகிறேன் எனல் தருக்கநின் னுடனு ரைத்தல் தகாதினி அரங்கில் என்றன் கருத்துறும் அனையன் தன்னைக் காட்டுவல் கண்டு நீபின் புரைத்தருள் இனையன் என்ன உணர்ந்தறி வரியன் என்று தெரிந்தவன் ஆயின் அன்னான் திறலினைக் காண்பல் என்றான். 26 மாயை, விமலையைக் கோவிலுக்குக் கூட்டிச் செல்லல் கண்டுகொள் மணியின் தன்மை காட்டுதற் கறிந்து ளோரைக் கொண்டுசெல் பவர்போல் வந்த கோதையை உடன்கொண் டேகிப் பண்டுதன் பூசைக் கெய்தும் பரிசுபோல் மகளிர் சூழத் தொண்டையங் கனிவாய் மாயை சுடர்மணிக் கோயில் புக்காள். 27 மாயை நாடக அரங்கிற்கு வருதல் அருச்சனை முன்பு போனன் றாற்றுபு மதுகை நாதன் திருச்சர ணங்கள் போற்றிச் சேயரி நெடுங்கண் செவ்வாய் விரைத்துணர் மலர்மென் கூந்தல் விமலைமா தோடும் வந்து நிருத்தமண் டபம்பு குந்தாள் நிரைவளைத் தளிர்க்கை மாயை. 28 அல்லமர் மத்தளமடிக்க மாயை கூத்தாடல் அல்லமர் இவர்தாம் தாமென் றறிதர வறிதி ராமல் சொல்லுக எனவ டிக்குந் தோற்றம்போல் மத்த ளத்தை வல்லவன் அறைத லோடும் மாயைநெஞ் சூச லாடச் சில்லரி மணிச்சி லம்பு சிலம்புற ஆடு கின்றாள். 29 மாயையின் கண்ணும் கருத்தும் முன்னுற நின்ற ஞான மூர்த்திமேல் விழியும் ஆர்த்துப் பின்னுற நின்ற மூர்த்தி மால்மிசைப் பெயரும் நெஞ்சு மன்னுற இருத்தி நின்று மாயைதான் நடித்தாள் கண்டோர் தன்னய னமுமால் நெஞ்சுந் தன்மிசை வந்து வீழ. 30 மாயையின் வழிபாட்டிற்கேற்ப அல்லமர் விளங்கல் அரத்தம துறுப ளிங்கா அரிமதர் மழைக்கண் மாயை கருத்துறு காமம் தன்பாற் காணுறத் தோன்றி நின்றான் வருத்துறு செயல்கொள் மாயை மருவிய குணம டுத்துப் பரத்தினில் தோன்றும் என்று பகர்வதும் உண்மை யன்றே. 31 விமலைக்கு அல்லமரைக் காட்ட மாயை நாணுதல் கூத்துக்குப் புகுந்த நம்பி கொட்டுக்கு நாணு றாமல் சீர்த்தப்பு நடந வின்று சிந்தைவே றாகி நின்றாள் வார்த்தைக்குட் படாத ஞான வாரியை வாயாற் சொல்ல மூத்துக்கு மதியை வென்ற முகத்தியர் குழாத்துள் நாணி. 32 விமலைக்கு அல்லமரைக் கடைக்கண்ணால் அறிவித்தல் கையொடு செல்லா நின்ற கடைக்கணான் மாயை காட்ட ஐயனை விமலை கண்ணுற் றதிசயம் உடைய ளாகி வையக மதனின் மிக்க மனிதருள் இனையன் போல மெய்யழ குடையான் தன்னை வேறுகண் டிலனென் றுள்ளி. 33 அல்லமர், விமலையும் மயங்கச் செய்தல் மாறரும் அலம னேயிவ் வடிவுகொண் டவள்செய் பூசைப் பேறரு ளுதற்குற் றானோ பெருந்தவத் தாற்பி றந்த வேறொரு மகனோ என்று விமலையை யத்த ளாகித் தேறிலள் நிற்ப மாயஞ் செய்து நின் றனனெங் கோமான். 34 விமலையே மயங்கினால் மாயையைப் பற்றிச் சொல்லுவதென்ன? தமமில்வே லையினிற் சேய்மைத் தடத்தொரு வனைக்கண் டன்னான் அமைவுற வருதல் போதல் ஐயமுற் றறியார் போல நிமலனை விகாரி என்றும் நிகழ்நிரு விகாரி என்றும் விமலையே மயங்கும் என்னின் மாயையை வெறுப்ப தென்னே. 35 அல்லமரை மாயைக்கு விமலை கண்ணால் காட்டல் நீர்நிலை கோலாற் காணும் நீர்மைபோல் இங்கு நின்றோன் சீர்நிலை மாயை தன்னால் தெளிவுற அறிவல் என்னா ஏர்நிலை வடிவ மாயைக் கினையனே அலமன் என்று வார்நிலை முலைம டந்தை வடிக்கணாற் காட்டி னாளால். 36 மாயை உண்மை தெளிதல் கண்ணினாற் கேட்குஞ் சீர்சால் கங்கணத் திறைவன் முன்னர் கண்ணினாற் குமரர் நெஞ்சக் கட்டவிழ்த் தாடு வாட்குக் கண்ணினாற் கூறவந்த கயிலைமா தறிந்தாள் அன்னாள் கண்ணினாற் கண்டு ஞானக் கண்ணினாற் காண்பான் தன்னை. 37 மாயை அல்லம தேவரைத் தழுவ முயலுதல் வல்லிதன் மனத்திற் காமம் மாய்ந்துவண் கயிலைக் குன்றில் சொல்லிய சூள்நெஞ் சத்தில் தோன்றலுஞ் சுழன்றாடிப்போய் அல்லமன் மீது வீழ்வாள் ஆகமேல் வீழ்ந்து பற்றிப் புல்லிய நினைந்து சென்றாள் புல்லிய நெறியில் நின்றாள். 38 அல்லமர் மத்தளத்தை எறிந்துவிட்டு ஓடுதல் கண்டனன் அவள்க ருத்தைக் காரிகை மனத்திற் காமம் மண்டலம் உணரக் காட்டி வழிக்கொள்வல் என்று ளத்தில் கொண்டுகை தவறி வீழ்ந்த குடமென மத்த ளந்தான் விண்டுக எறிந்து போகட் டோடினன் விரைந்து வீரன். 39 இதன் தொடர்ச்சி 'இரண்டாம் பாகத்தில்' தொடர்கிறது. பிரபுலிங்க லீலை : இரண்டாம் பாகம் பிரபுலிங்க லீலை : மூன்றாம் பாகம்

Related Content

பிரபு லிங்கலீலை - பகுதி-2 - Prabulingaleelai - Part-II

பிரபுலிங்கலீலை - மூன்றாம் பகுதி - Third part of Prabhulingal

குமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை

சித்தாந்த சிகாமணி 2 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம் றிய சித்தாந

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes