logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandhapuranam-ubadesa-padalam

கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - உபதேசப் படலம்

Kandapuranam of Kachchiyappa Sivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

தக்ஷ காண்டம் - உபதேசப் படலம்


செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

5. தக்ஷ காண்டம்

 

1. உபதேசப் படலம்

 

மாயையின் வலியோ னாகி மான்முத லோரை வென்றே

ஆயிரத் தோரெட் டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக்

காயம தழிவின் றாகிக் கடவுளர்க் கலக்கண் செய்த

தீயசூ£¢ முதலைச் செற்ற குமரன்றான் சென்னி வைப்பாம்.               1

 

உலகினுள் மேல தாகி ஓங்குபே ரொளியாய் வான்மேல்

தலைமைய தாகி வைகுஞ் சத்திய வுலகந் தன்னில்

புலனுணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையிற் போற்ற

மலரயன் தனது கோயில் மன்றில்வீற் றிருந்தான் அன்றே.         2

 

இருந்திடு காலை வேதா யாவையும் அளிப்ப மேனாள்

தெரிந்தருள் பதின்ம ராகுஞ் சீர்கெழு குமரர் தம்முட்

பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் முன்செய்

அருந்தவ நெறியால் ஈதொன் றையனை வினவ லுற்றான்.        3

 

தேவரின் முதல்வ ராகிச் சிற்குணத் தலைவ ராகி

மூவரில் உயர்ந்தோ ராகி முடிவிலா ஒருவ ராகி

ஓவற வுயிர்கள் தோறும் உயிரென வுறைவோ ராகி

மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோ யென்றான்.          4

 

என்றுதன் மைந்தன் இவ்வா றியம்பலும் மலரோன் கேளா

நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும்

அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில்

சென்றதோர் சிவனே யார்க்கு மேலவன் தௌ¤நீ என்றான். 5

 

(1. மாயையின் - மாயை செய்வதில்.  சூர்முதலை - சூரபன்பமனை.   

2. புதல்வர்கள் - உபப்பிரமர்கள்.  அயன் - பிரமதேவன்.   

3. ஐயனை - பிரமதேவனை.  4. சிற்குணம் - தூயகுணம்.  

5. அன்று - ஒரு பிரம கற்பத்தில்.)

 

தருசெயல் வல்லோன் ஈது சாற்றலுஞ் செயலோர் மூன்றின்

இருசெயல் புரியும் நீவிர் ஏதில ராகப் பின்னர்

ஒருசெயல் புரியும் ஈசன் உங்களுக் கிறைவ னாகி

வருசெயல் என்னே சிந்தை மயக்கற வுரைத்தி யென்றான். 6

 

தற்புகழ் கருத்தின் மிக்க தக்கன்ஈ துரைத்த லோடுஞ்

சிற்பரன் நிலைமை அன்னான் அருளினால் தெரிந்த வேதாச்

சொற்படு மறைகள் முன்நீ துகளறக் கற்றுத் தூய

நற்பொருள் தெரிந்த வாறு நன்றுநன் றென்ன நக்கான்.            7

 

பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றுந் தன்மை

என்னென வுரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத்

துன்னிய வுயிர்கள் தம்மைத் தொலைவுசெய் திடுவன் ஈற்றில்

அன்னவர் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ.       8

 

அந்தநாள் ஒருவ னாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள்

வந்தவா றொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை

தந்தையாய் உயிர்கட் கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண்

எந்தைதன் செய்கை முற்றும் இனையதென் றிசைக்கற் பாற்றோ.   9

 

செங்கண்மால் தன்னை என்னைத் திண்டிறல் மொய்ம்பின் நல்கி

அங்கண்மா ஞாலங் காப்பும் அளிப்பதும் உதவி யாமும்

உங்கள்பால் இருத்து மென்றெம் முயிருள்நின் றியற்றா நின்றான்

எங்களால் முடியுஞ் செய்கை யாவதும் இல்லை கண்டாய்.        10

 

உயிருள்நின் றியற்றல் அன்றி உற்றநஞ் சிந்தை உள்ளும்

இயன்முறை வழாது காப்போன் இருவிழி யகத்து மானான்

மயலுறு பொழுதும் எம்பால் வந்தருள் செய்வன் தானோர்

செயல்புரி கின்றான் போல எம்மொடு செறிவன் அன்றே.          11

 

எள்ளுறும் எண்ணெய் என்ன எறிமணி அரவ மென்னக்

கள்ளுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னில்

தள்ளுற அரிய சோதி தானென உலக மெங்கும்

உள்ளடு புறமு மாகி ஒருமையாற் பரவும் அன்றே.                12

 

வேதமே முதலா வுள்ள வியன்கலை அனைத்துந் தொன்னாள்

ஓதினான் அவனே எங்கட் குரைத்திட உணர்ந்தா மன்றே

ஈதுநீ அவற்றிற் காண்டி யாருமொன் றாகக் கொண்டாய்

பேதையோ பெரிது மென்னப் பிதாமகன் இனைய சொற்றான்.      13

 

அவனிது புகற லோடும் அருள்மகன் இசைப்பான் மேலாஞ்

சிவனருள் வேதம் பூதத் திறத்தையும் உயிர்க ளோடும்

எவரையும் பிர மென்றே இசைப்பதென் எனது நெஞ்சங்

கவலுறு கின்ற தெந்தை கழறுதி கடிதின் என்றான்.                14

 

(6. தருசெயல் வல்லோன் - படைக்கும் தொழிலில்வல்ல பிரமன்.  

7. சொற்படு - சத்தவடிவான.  நாக்கான் - சிரித்தான்.  

10. கண்டாய் - முன்னிலையசை.  

11. ஓர்செயல் - அழித்தலாகிய ஒரு தொழில். 

12. ஒருமையால் - ஒன்றாகி வியாபித்து.  பரவும் - நிற்பான்.  

13. பெரிதும் பேதையோ - நீ மிகவும் பேதையே.  பிதாமகன் - பிரமன். 

14. பிரமம் - பரம்பொருள்.)

 

என்னலுங் கமலத் தண்ண லியாவருந் தெரிதல் தேற்றா

உன்னரும் பெற்றி ஈதென் றுணர்தரக் கேட்டி அன்னான்

சொன்னதோர் மறைகள் தம்மில் துணிபுகேள் இறுதி யில்லா

முன்னவற் காத லுண்மை ஒழிந்தன முகம னாமால்.             15

 

ஆதலால் ஈசன் அல்லா அனைவர்க்கும் உயிர்க்கும் ஐந்தாம்

பூதமா னவைக்கும் ஏற்றம் புகலுதல் முகமா னாகும்

ஒதலா மேல தாக ஒருபொருள் புகழ வேண்டின்

வேதபா ரகரை அன்றோ யானென விளம்பு கின்றார்.              16

 

யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய் முக்கண்

ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை

வேதம துரைக்க நின்ற வியன்புகழ அனைத்தும் மேலாம்

நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென் றென்ன.          17

 

கேளினி மைந்த வேதக் கிளையெலாம் இயம்பு கின்ற

சூளுரை சிவனே யெல்லாந் தோற்றுவித் தளித்து மாற்றி

மீளவுந் தருகின் றானும் வியனுயிர்க் கருளை நல்கி

ஆளும்நா யகனும் ஆதி அந்தமி லோனும் என்னும்.              18

 

அத்தனும் பகவன் தானும் அருவமும் உருவு மாகுஞ்

சுத்தனும் உணர்தற் கொண்ணாச் சோதியு மியாண்டு மேவுஞ்

சித்தனும் அநாதி தானுந் தேவர்கள் தேவு மென்று

நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே என்னும்.        19

 

மூன்றெனும் உலகந் தன்னில் முளைத்திடு பொருளை யெல்லாம்

ஈன்றருள் புரியுந் தாதை எனுந்திரயம் பகனும் யார்க்குஞ்

சான்றென நிற்கின் றோனும் தாணுவும் பரனுந் தன்னைப்

போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும் என்னும்.      20

 

அண்ணலும் ஏகன் தானும் அளப்பருங் குணத்தி னானும்

கண்ணனும் அயனுந் தம்மால் காணிய நில்லான் தானும்

பெண்ணொடாண் அலிய தென்னும் பெற்றியி லோனும் யாரும்

எண்ணிய எண்ணி யாங்கே ஈபவன் தானும் என்னும்.             21

 

விதிமுதல் உரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகட் கெல்லாம்

பதியென அருளுந் தொன்மைப் பசுபதி தானும் அன்னோர்க்

கதிகனென் றெவருந் தேற ஆங்கவர் துஞ்ச வெந்த

பொதிதரு பலியும் என்பும் புனைபவன் தானும் என்னும்.          22

 

(15. முகமன் - உபசார மொழி.  17. இங்கு, “யாதொரு தெய்வங் கொண்டீர் 

அத்தெய்வமாகி ஆங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர்” எனவரும் சிவஞான 

சித்தியார் அடிகளை ஒப்புநோக்குக.  21. இங்கு, 'எண்ணிய எண்ணியாங்கே ஈபவன்' 

என்பதனோடு, “மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே” என்ற அப்பர் சுவாமிகள் 

தேவார அடி ஒப்புநோக்கற்பாலது.  22. விதி - பிரமன், பலி - சாம்பல்.)

 

ஊன்புகும் எவரை யுந்தன் ஒண்குணத் தொடுக்கித் தானே

வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ளூடு

தான்புக லில்லா தோனுந் தன்னியல் இனைய தென்றே

யான்புக லரிய தேவும் ஈசனும் அவனே என்னும்.         23

 

அன்றியும் ஒன்று கேண்மோ அம்புய னாதி யாகி

நின்றவர் தம்மை யெல்லாம் நீக்கியச் சிவனென் றுள்ள

ஒன்றொரு முதல்வன் தானே உய்த்திடு முத்தி வேண்டின்

என்றும்அ• தியம்பிற் றென்னின் யாவரே தேவர் ஆவார்.  24

 

பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும்

விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்

உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே

பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ.  25

 

இன்னமும் பலவுண் டன்னாற் கியம்பிய மறையின் வாய்மை

அன்னதை எனக்கும் உன்னி அறையொணா தறைவன் என்னில்

பன்னெடுங் காலந் தேயும் பகரினும் உவலா தென்பால்

முன்னமீ துணர்ந்தா யேனும் மோகமுற் றாய்கொல் ஐயா.         26

 

காரெழில் புரையும் மேனிக் கண்ணனை என்னைப் பின்னை

ஆரையும் புகழும் வேதம் அரன்றனைத் துதித்த தேபோல்

ஓருரை விளம்பிற் றுண்டோ உரைத்தது முகமன் என்றே

பேருல கறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே.             27

 

நான்மறை தனிலோர் பாகம் நாரமார் கடவுட் சென்னி

மேன்மைய தியம்பும் எம்மை விண்ணவர் தம்மை ஏனைப்

பான்மைகொள் பூதந் தன்னைப் பல்பொருள் தனையும் பாதி

தான்மொழிந் திடுமால் ஈது தவறல உணர்தி தக்கோய்.            28

 

நம்மையும் பரமென் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும்

வெம்மைகொள் நெஞ்சமர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர்

தம்மைய• தெடுத்தல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்கள்

எம்மையுந் துயர மென்னும் இருங்கடற் படுப்பர் அன்றே.          29

 

கானுறு புலித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்பர்

ஆனவ ரென்றும் அன்னாற் கடித்தொழில் புரிந்து வாழும்

வானவ ரென்றும் எம்மை வழுத்தினர்க் கருள்வோம் அல்லா

ஏனையர் தம்மைத் தெவ்வென் றெண்ணியே இருந்தும் யாமே.     30

 

பதியரன் பாசந் தன்னில் பட்டுழல் பசுநாம் என்றே

விதியொடு மறைகள் கூறும் மெய்ம்மையைத் தௌ¤ய வேண்டின்

இதுவென வுரைப்பன் யாங்கள் இவ்வர சியற்ற ஈசன்

அதிர்கழல் அருச்சித் தேத்தும் ஆலயம் பலவுங் காண்டி.           31

 

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்

அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை

அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை

அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். 32

 

(26. மோகம் - மயக்கம்.  

27. என்னை - இங்குப் பிரமனை, ஆரையும் - பிறரையும்.  

28. நாரம் - கங்கை, பாதிதான் - பாதி வேதம்தான்.  

30. தெவ் - பகைவர்.  

32. அவன் - இங்குச் சிவன், யாரும் - மற்றைய உலக வாசிகளும், 

ஆணை - உறுதி.)

 

ஆகத் திருவிருத்தம் - 32

     - - -

 

 

2.  த க் க ன் ற வ ஞ் செ ய்  ப ட ல ம்

 

தந்தை இவ்வகை உரைத்தலுங் கேட்டுணர் தக்கன்

முந்து வீடுசேர் செறியினை முன்னலன் முக்கண்

எந்தை யால்அயன் முதலவர் தம்மினும் யானோற்

றந்த மில்வளம் பெறுவனென் றுன்னினன் அகத்துள்.              1

 

ஏத வல்வினை உழந்திடும் ஊழினால் இதனைக்

காத லோடுதனித் தந்தையை வணங்கிநீ கழறும்

ஆதி தன்னையான் பரமென அறிந்தனன் அவன்பால்

மாத வத்தினால் பெற்றிட வேண்டினன் வளனே.                  2

 

கணிப்பில் மாதவம் புரிதர ஓரிடங் கடிதில்

பணித்து நல்குதி விடையென நான்முகப் பகவன்

இணைப்பி லாததன் மனத்திடைத் தொல்லைநாள் எழுந்த

மணிப்பெ ருந்தடத் தேகென விடுத்தனன் மன்னோ.               3

 

ஈசன் நல்லருள் அன்னதோர் மானதம் என்னும்

வாச நீர்த்தடம் கோகிஓர் சாரிடை வைகி

வீசு கால்மழை ஆதபம் பனிபட மெலியாய்

பாசம் நீக்குந ராமென அருந்தவம் பயின்றான்.                   4

 

காலை நேர்பெற ஓட்டியே கனலினை மூட்டிப்

பால மார்பயன் வீட்டியே தன்னுறு படிவத்

தேலும் அன்பினில் மஞ்சனம் ஆட்டியே இறைக்குச்

சீல மாமலர் சூட்டியுட் பூசனை செய்தான்.                       5

 

சுத்தம் நீடிய தன்னுளம் ஒருமையில் தொடர

இத்தி றத்தினால் எம்பிராற் கருச்சனை இயற்றிச்

சித்த மேல்அவன் நாமமும் விதிமுறை செப்பிப்

பத்து நூறியாண் டருந்தவம் புரிந்தனன் பழையோன்.              6

 

(1. முன்னலன் - நினைத்தானல்லன்.  2. உ(ன்)னி - நினைத்து.  

3. மணிப்பெருந்தடம் - மானச சரோவம் என்னும் அழகிய தடாகம்.  

5. கால் - பிராணவாயு, கனல் - மூலாக்கினி. 

 6. பழையோன் - புராதனனான தக்கன்.)

 

அன்னம் ஊர்திசேய் அன்னமா தவஞ்செயும் அதனை

முன்னி நல்வளன் உதவுவான் மூரிவௌ¢ ளேற்றில்

பொன்னின் மால்வரை வௌ¢ளியங் கிரிமிசைப் போந்தால்

என்ன வந்தனன் உமையுடன் எம்மையாள் இறைவன்.            7

 

வந்த செய்கையைத் தெரிதலும் விரைந்தெழீஇ மற்றென்

சிந்தை எண்ணமும் முடிந்தன வால்எனச் செப்பி

உந்து காதலுங் களிப்புமுள் புக்குநின் றுலவ

எந்தை தன்னடி பரவுவல் யானென எதிர்ந்தான்.                   8

 

சென்று கண்ணுதல் அடிமுறை வணங்கியே சிறப்பித்

தொன்று போலிய ஆயிரந் துதிமுறை யுரையா

நின்ற காலையில் உன்செயல் மகிழ்ந்தனம் நினக்கென்

இன்று வேண்டிய தியம்புதி யால்கடி தெனலும்.                   9

 

ஆற்று தற்கரு தோன்மைய னாகியோன் அமலன்

பேற்றின் வேண்டுவ கொள்கென இசைத்தலும் பிறவி

மாற்றும் முத்திய திரந்திலன் தொல்விதி வழியே

ஏற்ற புந்தியுஞ் சேறலின் மயங்கியீ திசைப்பான்.                  10

 

வேறு

 

நீணி லப்பெரு வைப்பும் நிகரிலா

வீணை வல்லவர் ஏனையர் மேவிய

சேணும் மாலயன் ஊரும் திசையுமென்

ஆணை செல்ல அளித்தருள் செய்தியால்.                11

 

உன்னை வந்து வழுத்தும் உயிரெலாம்

என்னை வந்து வழுத்தவும் யானினி

நின்னை யன்றி நெஞ்சாலும் பிறர்தமைப்

பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதியால்.                 12

 

ஆய தேவர் அவுணர்கள் யாரும்யான்

ஏய செய்கை இயற்றவும் எற்குநற்

சேயி னோர்களுஞ் சிற்றிடை மாதரும்

மாய்வில் கொள்கையில் மல்கவும் நல்குதி.                      13

 

ஆதி யாகி அனைத்தையும் ஈன்றநின்

பாதி யான பராபரை யான்பெறு

மாத ராக மறையவ னாகிநீ

காத லாகக் கடிமணஞ் செய்தியால்.                             14

 

என்று தக்கன் இயம்பலும் இங்கிது

நன்று னக்கது நல்கினம் நன்னெறி

நின்றி யென்னில் நிலைக்குமிச் சீரெனா

மன்று ளாடிய வானவன் போயினான்.                           15

 

(8. பரவுவல் - துதிப்பேன்.  9. கடிது - விரைவில்.  

10. நோன்மையனாகியோன் - இங்குத் தக்கன்.  

11. வீணை வல்லவர் - கந்தருவர். 

13. எற்கு - எனக்கு, மாய்வுஇல் - இறப்பு இல்லாத.  

14. பராபரை - பராசக்தி, கடிமணம் - திருமணம். 

15. நன்னெறி - சன்மார்க்கம், மன்று - சிற்சபை.)

 

ஈசன் அவ்வரம் ஈந்தனன் ஏகலும்

நேச மோடவன் நீர்மையைப் போற்றியே

தேசின் மிக்க சிறுவிதி யாரினும்

பேசொ ணாத பெருமகிழ் வெய்தினான்.                  16

 

ஓகை மேயவன் ஓதிம வூர்திமேல்

ஏகும் ஐயனை எண்ணலும் அச்செயல்

ஆக மீதுகண் டன்னவன் மங்கையோர்

பாகன் ஈந்த பரிசுணர்ந் தானரோ.                        17

 

வேறு

 

பெற்றிடு மதலை யெய்தும் பேற்றினை அவன்பால் மேல்வந்

துற்றிடு திறத்தை யெல்லாம் ஒருங்குற வுணர்வால் நாடித்

தெற்றென உணர்ந்து தக்கன் சிவனடி உன்னிப் பன்னாள்

நற்றவம் புரிந்த வாறும் நன்றென உயி£¢த்து நக்கான்.            18

 

முப்புர முடிய முன்னாள் முனிந்தவன் நிலைமை யான

மெய்ப்பொருள் பகர்ந்தேன் மைந்தன் வீடுபெற் றுய்ய அன்னான்

இப்பரி சானான் அந்தோ என்னினிச் செய்கேன் நிம்பங்

கைப்பது போமோ நாளுங் கடலமிர் துதவி னாலும்.               19

 

ஆலமார் களத்தோன் தானே ஆதியென் றுணர்ந்து போந்து

சாலவே இந்நாள் காறுந் தலையதாந் தவத்துள் தங்கி 

ஞாலமேல் என்றும் நீங்கா நவையொடு பவமும் பெற்றான்

மேலைநாள் வினைக்கீ டுற்ற விதியையார் விலக்க வல்லார்.      20

 

செய்வதென் இனியான் என்னாச் சிந்தையின் அவலஞ் செய்து

மைவளர் தீய புந்தி மைந்தனை அடைந்து வல்லே

மெய்வகை யாசி கூறி மேவலும் வெய்ய தக்கன் 

இவ்விடை நகர மொன்றை இயற்றுதி ஐய வென்றான்.            21

 

அன்னஅத் தக்கன் கூற இமைப்பினில் அமைப்பன் என்றே

கொன்னுறு கமலத் தண்ணல் குறிப்பொடு கரங்க ளாலே

தன்னகர் என்ன ஒன்று தக்கமா புரியீ தென்றே

பொன்னகர் நாணுக் கொள்ளப் புவியிடைப் புரிந்தான் அன்றே.      22

 

அந்தமா நகரந் தன்னில் அருந்தவத் தக்கன் சென்று

சிந்தையுள் உவகை பூத்துச் சேணகர் தன்னுள் ஒன்றும்

இந்தவா றணிய தன்றால் இணையிதற் கி•தே என்னாத்

தந்தைபால் அன்பு செய்து தன்பெருங் கோயில் புக்கான்.           23

 

(16. சிறுவிதி - தக்கன்.  17. ஓதிமம் - அன்னம், ஆகம் - மனம்.  

18. உயிர்த்து - பெருமூச்சு விடுத்து. 

19. நிம்பம் - வேம்பு, கைப்பது - கசப்பது.  

20. ஆதி - முழுமுதற் கடவுள், பவம் - பிறவி. 

 22. கொன்உறு - பெருமை பொருந்திய, 

தக்கமாபுரி - தக்கன் நகரம், புவியிடை - பூமியில். 

 23. அணியதன்று - அழகானதன்று.)

 

தன்பெருங் கோயில் எய்தித் தவமுனி வரர்வந் தேத்த

மன்பெருந் தன்மை கூறும் மடங்கலந் தவிசின் உம்பர்

இன்புறு திருவி னோடும் இனிதுவீற் றிருந்தான் என்ப

பொன்புனை கிரியின் மீது பொலஞ்சுடர்க் கதிருற் றென்ன. 24

 

கேசரி அணையின் மீது கெழீஇயின தக்கன் எண்டோள்

ஈசன்நல் வரம்பெற் றுள்ள இயற்கையை ஏமஞ் சான்ற

தேசிக னாகும் பொன்போய்ச் செப்பலுந்* துணுக்க மெய்தி

வாசவன் முதலா வுள்ள வானவர் யாரும் போந்தார்.              25

 

(பா-ம் * துன்ப)

 

வானவர் போந்த பான்மை வரன்முறை தெரிந்து மற்றைத்

தானவர் குரவ னானோன் தயித்தியர்க் கிறையைச் சார்ந்து

போனதுன் னவலம் அஞ்சேல் புரந்தரன் தனக்குத் தக்கன்

ஆனவன் தலைவ னானான் அன்னவன் சேர்தி என்றான்.           26

 

சேருதி யென்னு மாற்றஞ் செவிதளிர்ப் பெய்தக் கேளா

ஆரமிர் தருந்தி னான்போல் அகமுறும் உவகை பொங்க

மேருவின் ஒருசார் வைகும் வெந்திறல் அவுணா கோமான்

காரென எழுந்து தொல்லைக் கிளைஞரைக் கலந்து போந்தான்.     27

 

ஆளரி ஏறு போலும் அவுணர்கோன் சேற லோடும்

வாளுறு கதி£¢ப்புத் தேளும் மதியமும் மற்று முள்ள

கோளடு நாளும் ஏனைக் குழுவுறு கணத்தி னோரும்

நீளிருந் தடந்தேர் மீதும் மானத்தும் நெறியிற் சென்றார்.           28

 

மங்குல்தோய் விண்ணின் பாலார் மாதிரங் காவ லோர்கள்

அங்கத நிலயத் துள்ளா£¢ அனையவர் பிறரும் உற்றார்

இங்கியவர் யாருந் தக்கண் இணையடி வணங்கி ஈசன்

பொங்குபே ரருளின் ஆற்றல் புகழந்தன ராகி நின்றார்.             29

 

அவ்வகை முளரி அண்ணல் ஆதியாம் அமரர் தத்தஞ்

செய்வினை யாக வுன்னி வைகலுஞ செறிந்து போற்ற

மெய்வகை உணராத் தக்கன் வியன்மதிக் குடையுங் கோலும்

எவ்வகை உலகுஞ் செல்ல இருந்தர சியற்றல் செய்தான்.          30

 

( 24. பொன்புனைகிரி - மேருமலை, பெருந்தன்மை கூறும் - 

பெருந்தன்மையினைக் காட்டும்.  

25. ஏமம் - கலக்கம்.  பொன் - வியாழன், துணுக்கம் - நடுக்கம், 

வாசவன் - இந்திரன்.  

26. தானவர் குரவன் ஆனோன் - சுக்கிரன், தயித்தியர்க்கு இறை - அசுராதிபன்.  

28. ஆளரிஏறு - நரசிங்கம், மானம் - விமானம். 

29. அங்கதநிலையத்துள்ளர் - பாதலத்தார்.)

 

ஆகத் திருவிருத்தம் - 62

     - - -

 

 

3.  த க் க ன்  ம க ப் பெ று  ப ட ல ம்

 

ஆங்கவன் தேவி யானாள் அருந்ததிக் கற்பின் மிக்காள்

வாங்கிய நுசுப்பின் நல்லாள் மறைக்கொடி யெனுநா மத்தாள்

பூங்கம லத்துப் புத்தேள் பொன்னடி தன்னில் வந்தாள்

ஓங்குதொல் லுலகுக் கெல்லாம் ஒருதனி முதல்வி யானாள்.       1

 

வேறு

 

சேயிழை அவளடு செறிந்து புல்லியே

மீயுயர் கமலமேல் விரிஞ்சன் காதலன்

மாயிரும் பணிபதி மணிகள் ஈன்றென

ஆயிர மைந்தரை அருளி னானரோ.                             2

 

அப்பெரு மைந்தர்கள் ஆயி னோர்க்கெலாம்

முப்புரி நூல்விதி முறையின் ஆற்றியே

செப்பரு மறைகளின் திறமும் ஈந்துபின்

இப்பரி சென்றினை இசைத்தல் மேயினான்.                      3

 

நல்லதோர் மானதம் நணுகி நீவிர்கள்

எல்லிரும் ஈசனை எண்ணி நோற்றிரீஇப்

பல்லுயி ருந்தரும் பரிசு பெற்றிவண்

செல்லுதி ராலெனச் செப்பி ஏவினான்.                   4

 

ஏயின காலையில் இறைஞ்சி மைந்தர்கள்

போயினர் மானதப் பொய்கை புக்கனர்

ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே

மாயிரு நோன்பினை இயற்றி வைகினார்.                5

 

நேரற இன்னணம் நெடிது நோற்புழி

நாரதன் என்பவன் நண்ணி ஆயிடை

வாரியுள் ஆற்றவும் வருந்து கிற்றிரால் 

காரியம் யாவது கழறு வீர்என்றான்.                             6

 

என்னலும் முனிவகே ளியாங்கள் **நல்கிடும்

முன்னுற நல்குவான் முயன்று முக்கணான்

தன்னடி உன்னியே தவத்தை ஆற்றுதும்

அன்னதும் எந்தைதன் ஆணையா லென்றார்.                     7

 

(பா-ம் **நல்கிட.)

 

அறிந்திடு முனிவரன் அதனைக் கேட்டலுஞ்

செறிந்திடு கரத்தொடு செங்கை தாக்குற

எறிந்தனன் நகைத்தனன் இதுகொல் ஈசனால்

பெறும்பரி சேயெனப் பின்னுங் கூறினான்.                8

 

(1. மறைக்கொடி - வேதவல்லி.  

3. மறைகளின் திறம் - வேதங்களை ஓதும் தன்மைகள்.  

4. பல்லுயிரும் தரும் பரிசு - பலவுயிர்களையும் படைக்கும் தன்மை.)

 

ஈசனை யேநினைந் திறைஞ்சி யேத்தியே

பேசரும் அருந்தவம் பிடித்து மூவகைப்

பாசம தகல்நெறி படரச் சிந்தியீர்

ஆசுறு படைப்பினுக் கார்வஞ் செய்திரோ.                9

 

சிறப்புள அருந்தவஞ் செய்து நீர்இனி

உறப்படு கதிமுறை உரைப்பக் கேட்டிரால்

பிறப்புள திடருள தன்றிப் பின்னரும்

இறப்புள ததுநுமக் கினிய தாகுமோ.                             10

 

இன்றுநீர் வெ•கிய தியற்று நான்முகன்

தன்றலை ஐந்தினில் ஒன்று சங்கரன்

பொன்றிகழ் கரங்கொளப் புகுந்த தீமையும்

நின்றதோர் பழியையும் நினைக்கி லீர்கொலோ.                   11

 

என்னல திறையவா¢ இல்லை யார்க்கும்யான்

முன்னவன் என்றுநான் முகத்தன் மாலொடு

பன்னெடு நாளமர் பயின்று சோதிகண்

டன்னம தானதும் அறிந்தி லீர்கொலோ.                  12

 

நேயமெண் ணுற்றென நிறைந்த கண்ணுதல்

நாயகன் விதித்திட நம்மில் யாவையும்

ஆயவென் றகந்தையுற் றமர்வன் அன்னவன்

மாயமென் றுரைத்திடுந் தளையின் வன்மையால்.                13

 

பற்றொடு முழுதுயிர் படைக்கும் பான்மையால்

பெற்றிடு பயனெவன் பெருமை யல்லது

நற்றவ முனிவிர்காள் நன்கி தென்றொரு

பொற்றளை தம்பதம் பூட்ட லாகுமோ.                           14

 

எத்துணை எத்துணை இன்பம் வேண்டுநர்க்

கத்துணை அலக்கண்வந் தடையும் ஆங்கது

மெய்த்திறம் நீவிரும் விதியின் நிற்றிரேல்

கைத்துறு துயரெனுங் கடலில் சா£¢திரால்.                       15

 

அன்றியும் ஈசனை அயர்த்தி யாமிறை

என்றுளம் உன்னுதிர் இசைவில் தீவினை

மன்றவு மாற்றுதிர் மயக்கங் கொள்ளுதிர்

ஒன்றிய பேருணா¢ வொருவிப் போதிரால்.                       16

 

வீட்டிடும் இச்செயல் வீடு சேர்தர

மோட்டுறு நிலைகொடு முயன்று கூடுதிர்

ஈட்டுறு நன்னெறிக் கியைவ தொன்றினைக்

காட்டியே இனைத்தெனக் கழற லாகுமோ.                17

 

(9. மூவகைப் பாசம் - ஆணவம் முதலியவை.  

10 உறப்படு - அடையத்தக்க.  

11. வெ•கியது - பெற விரும்பியது.  

13. நேயமெண்ணுற்றென நிறைந்த - எள்ளுக்குள் எண்ணெய் 

போல் எங்கும் நிறைந்த(நேயம்-நெய், எண்-எள்), தளை - பாசம்.  

14. பொற்றளை - பொன்விலங்கு.  

15. கைத்துறு - வெறுக்கத்தக்க.)

 

அற்றமில் தவம்புரிந் தரிய வீட்டினைப்

பெற்றவர் அளப்பிலர் பெறுவ தாகியே

உற்றவர் அளப்பிலர் உலகில் சிற்சில

மற்றவர் தமதியல் வகுப்பக் கேண்மினோ.                18

 

சுற்றம தரனடித் தொண்டர் அல்லது

மற்றிலர் அவனடி மலர்க ளேயலால்

பற்றிலர் சாலவும் இனிய பண்பினா¢

குற்றம தகன்றதோர் கொள்கை மேயினார்.                       19

 

நேசமுற் றடைபவர் நினைப்பின் நீக்கரும்

ஆசறுத் தருள்பொழி அறிவின் மேலையோர்

ஈசனைக் குறுகியெஞ் ஞான்றும் வாழபவர்

பேசுதற் கரியதோர் பெருமை எய்தினார்.                 20

 

ஆதலின அவரென அவாஇன் றுற்றிடு

மேதகு நெறியுறீஇ வீடு சேருதிர்

ஏதமில் வெறுக்கைபெற் றெண்ணந் தீர்ந்திடுந்

தாதைதன் பணியினைத் தவிர்திர் என்னவே.                     21

 

அந்தமில் வீடுபே றடையும் ஊழுடை

மைந்தர் கள்ஓர்புடை வந்து தேர்வுறாத்

தந்தைசொல் லினுமது தக்க தேயெனப்

புந்திகொண் டடிகளை வணங்கிப் போற்றினார்.                    22

 

வேறு

 

போற்று மைந்த ரைப்பெரும் புறந்தழீஇ அரன்புகழ்

சாற்றி வீடு வெ•குறுந் தவத்தினோர்கள் நிலையினைத்

தேற்றி மந்தி ரங்களுஞ் செயற்கையும் புணர்த்தியே

மாற்றினன் தொல்லுணர்வு தன்னை மற்றொருண்மை உதவினான். 23

 

வேறொ ருண்மை உதவல்செய்து விதியின்நாடி வேதநூல்

கூறு கின்ற முறைபுரிந்து குமரர்யாரும் இன்னணம்

ஈறின் மாத வங்கள்ஆற்றி எல்லைதீர்ந்த முத்தியில்

சேறி ரென்று முனிவன்ஒல்லை சேணெழுந்து போயினான்.        24

 

போகு நார தற்புகழ்ந்து பொன்னடித் தலத்தின்மேல்

ஓகை யோடு தாழ்ந்துமுன் உணர்த்துபான்மை உன்னியே

மோக மாதி யானதீமை முழுதுமாற்றி மோனிகள்

ஆகி மைந்தர் எவரும் அங்கண்ஆற்றினார் அருந்தவம்.            25

 

(21. வெறுக்கை - செல்வம்.  

22. ஊர்உடை - ஊழ்வினையினையுடைய, 

அடிகளை - நாரதன் அடிகளை. 

23. புறந்தழீஇ - மார்பொடு தழுவி, ஒரு உண்மை - 

ஒப்பற்ற முத்திநிலையின் உண்மையினை.  

24. வேறொருண்¢மை - ஞானநிலை.)

 

அருந்த வங்கள் பலவும்ஆற்றி அவர்கள்வீடு சேர்தலும்

இருந்த வம்பு ரிந்த தக்கன் இளைஞர்பெற்றி இன்னமுந்

தெரிந்த தில்லைஎன்று சிந்தை செய்துபோத வுணர்வினால்

பொருந்த நோக்க லுற்ற வட்பு குந்த பான்மை கண்டனன்.  26

 

மானதத்த டத்தி னூடு மாற்றருந்த வத்தராய்

மோனமுற்ற சிறுவர் பாலின் முன்னிவந்து நாரதன்

ஞானமுற்று மோதி யென்சொல் நவையதென்று மாற்றியே

மேனிலைக்கண் உய்த்து மீண்டு விண்படர்ந்து போயினான். 27

 

மிக்க மைந்தர் அவன் உரைத்த விதியினின்று வீடுபே

றொக்க லோடுமே யினார்கள் ஒருவரின்றி எற்கினி

மக்க ளின்றெனத் தெரீஇ வருத்தமுற்றி ருந்திடுந்

தக்கன் மற்றும் ஆயிரந் தவச்சிறாரை உதவினான்.               28

 

பெற்ற மைந்தரைத் தழீஇப் பிறங்குகாமர் மீச்செல

அற்றமில் சிறப்பின் வேதம் அறிவுறுத்தி ஆதியாம்

நெற்றியங் கணானை உன்னி நீவிர்யாவும் நல்குவான்

நற்ற வஞ்செய் தணைதிர் மாதத்துடத் தில்என்னவே.              29

 

கேட்ட மைந்தர் தாதைதாள் கெழீஇயதங்கள் சென்னியில்

சூட்டி ஏவல் போற்றிஅன்ன தூமலர்த் தடத்திடை

ஈட்ட மோடு சென்றிருந் திருந்தவம் புரிந்தனர்

காட்டி லுள்ள கயமுனிக் கணங்கள்அங் கணுற்றென.              30

 

வேறு

 

ஆன காலையில் அனைய மைந்தர்கள்

றுன மின்றிநோற் றொழுக முன்னரே

போன நாரதன் புணர்ப்பொன் றோர்ந்திடா

மான தத்தட மருங்கில் எய்தினான்.                             31

 

எய்தி யாவர்நீர் யாரும் மாதவஞ்

செய்திர் எப்பொருள் சேர்தல் வெ•கினீர்

நொய்தில் அன்னது நுவல வேண்டுமால்

கைத வம்பெறாக் கருத்தி னீரென.                              32

 

தந்தை யாகியோன் தக்கன் ஆங்கவற்

கந்தி வண்ணனார் அருளும் பேற்றினால்

வந்த மைந்தரேம் யாங்கண் மற்றவன்

இந்த வான்தடத் தெம்மை ஏவினான்.                           33

 

தேவ தேவனைச் சிந்தை யிற்கொடே

ஆவி யோடுடல் அலச நோற்றிரீஇ

ஓவில் பல்லுயிர் உதவல் பெற்றிட

ஏவி னானெமை என்று சொற்றனர்.                             34

 

(26. போதவுணர்வு - ஞானவுணர்ச்சி. 

27. மோனம் - மௌனநிலை.  

28. மற்றும் - பின்னறும்.  30. கயமுனிக்கணங்கள் - யானைக்கன்றுகள்.  

32. நொய்தில் - விரைவில்,  கைதவம் - வஞ்சனை.  

33. அந்திவண்ணனார் - சிவன்.)

 

சொற்ற காலையில் துகளில் தூயவன்

நற்ற வஞ்செய்வீர் தாதன் தாளையே

பற்ற தாவுளீர் பயனென் றுன்னலீர்

குற்றம் யாவரே குறுக லார்களே.                       35

 

நோற்றி யாவையும் நோக்கிச் செய்வினைப்

பேற்றை எய்துவீர் பிறப்பு மாய்வது

மாற்று வீரலீர் மயக்கந் தீர்திரோ

ஏற்றம் என்கொல்நீர் றீரினும்.                           36

 

மேய மாசுதோய் விழைவின் மெய்யினர்

தூய தோ£¢தடந் துறையை எய்தியுஞ்

சேய சேதகந் திளைத்தல் போலுமால்

நீயிர் கொண்டதோர் நிலைமை தானுமே.                37

 

தலைய தாகிய தவந்த னக்குநீர்

விலைய தாப்பெறும் விதியின் செய்கையும்

நிலைய தாகுமோ நீடு நாளடே

உலக மீதுசீர் உறுவ தன்றியே.                          38

 

போவதும் வருவதும் பொருமலும் நன்குமின்

றாவதோர் கதியதே ஆருயிர்க் குறுதியாம்

நீவிரக் கதியினை நினைகிலீர் இறுதியும்

ஓவரும் பிறவியும் உம்மைவிட் டகலுமோ.                     39

 

சிறுவர்தம் முள்ளமுஞ் சேயிழை மகளிர்தம்

அறிவுமா லெய்தினோர் சிந்தையும் ஆனவால்

உறுவதோர் பனுவலும் உற்றிடும் பெற்றியே

பெறுவதாம் அன்றியே பின்னரொன் றாகுமோ.                    40

 

ஆதலால் உங்களுக் கருள்செயுந் தன்மையான்

தாதையா கின்றதோர் தக்கனே எனின்அவன்

பேதையாம் ஈசனால் பெருவளம் பெற்றவன்

பாததா மரையினில் பரிவுறா நெறிமையால்.                     41

 

ஆங்கவன் மையலோன் ஆதலால் அவனருள்

நீங்களும் அனையரே நெறிதருந் தேசிகன்

தீங்கெலாம் நீக்கியே சிவகதிப் பாற்பட

ஓங்குபேர் அருளடும் உணர்த்துவான் அல்லனோ.         42

 

(36. ஈகின்றீர் - படைக்கப் போகின்றீர். 

 37. சேதகந்திளைத்தல் - சேற்றினைப் பூசிக்கொள்ளுதல்.  

39. பொருமலும் - துன்புறுதலும், நன்கும் - இன்படைதலும்.  

41. பரிவுஉறா - அன்பு பொருந்தாத.  

42. ஆங்கவன் - அத்தக்கன், நெறி - ஞானமார்க்கம், அல்லனோ - அல்லவா.)    

 

முந்துமா யிரவரும் முன்பரிப் பொய்கைவாய்த்

தந்தைதன் பணியின்மூ தாதைபோல் நல்கவே

வந்துளார் நோற்றுழி மயலறத் தேற்றியே

அந்தமா நெறிநிறீஇ அரியவீ டருளினாம்.                43

 

என்னலும் நாரதன் எழில்மலர்த் தாளிணை

சென்னிமேற் சேர்த்தியே சிறியரேம் உய்யவே

உன்னியீண் டேகிநீர் உணர்த்துமெய்ந் நெறியினை

இன்னதென் றுணர்கிலேம் எமக்கருள் புரிதிரால்.                  44

 

என்பவர்க் கருள்புரிந் தெண்ணிலார் வத்தொடு

நன்பொருட் காட்சியை நானுமக் குதவியே

வன்புலத் தாறுபோய் மதிமருண் டின்பமுந்

துன்புமுற் றுழல்பவந் தொலைவுசெய் திடுவனால்.                45

 

ஆதியார் தாளிணை அருளடே வழிபடும்

நீதியாம் நீரினார் நிலைமையாய் நின்றிடும்

பாதநான் கவர்பெறும் பதமுநான் கதனுளே

ஓதியார் பெறுவதோர் உயர்பெருங் கதியதே.                      46

 

முத்தியென் றிடுவதே மொழிவதோர் நாமமாம்

அத்திறங் கடவுளர்க் காயினுந் தெரிவதோ

நித்தன்அன் புறுவதோர் நெறியராய் இருவினை

ஒத்தபண் போர்களால் உணரலாம் அல்லதே.                     47

 

அந்நிலைக் கண்ணுளார் ஆதியார் தாளடைந்

தின்னலுக் கிடையதாம் இப்பெரும் பிறவியுட்

பின்னருற் றிடுகிலர் பேசுதற் கரியதோர்

நன்னலத் தொடுகெழீஇ நாளுமின் புறுவரே.                      48

 

ஆதலால் நீவிரும் அந்நெறிப் பாலுறீஇ

மேதைசால் யோகினால் வீடுசே ருதிரெனா

ஆதியாம் இறைவனூல் அறையுமுண் மைகளெலாம்

நாதனார் அருளினால் நாரத னுரைசெய்தான்.                     49

 

அன்றுநா ரதமுனி அவரெலாம் அவ்வழி 

நின்றிடும் படிநிறீஇ நெறிகொள்வா னுலகமேல்

சென்றனன் பின்னரச் சிறுவரா யிரவரும்

ஒன்றுசிந் தனையினால் உயர்தவத் தொழுகினார்.         50

 

உயர்தவக் கிழமையில் ஒழுகியே யுற்றுளோர்

மயல்தொலைத் தருள்சிவன் மன்னுபே ரருளினால்

வியனெறிப் பாலதாம் வீடுபே றெய்தினார்

அயன்மகற் கினிமைகூர் ஆயிரங் குமரரும்.                      51

 

(43. மூதாதைபோல் - பிரமனான பாட்டனைப்போல்.  

46. பாதம் நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன; 

பதம் நான்கு - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்; 

ஓதியார் - ஞானமுடையவர்.  47. கடவுளர் - தேவர்.)

 

உங்ஙனம் நாரதன் ஓதிய துணர்வுறா

இங்ஙனம் வீடுபே றெய்தலுஞ் சிறுவர்கள்

எங்ஙனம் போயினார் இன்னும்வந் திலரெனா

அங்ஙனஞ் சிறுவிதி அயருவான் ஆயினான்.                      52

 

வேறு

 

போதத் துணர்வால் அவர்க்கண்ணுறும் போழ்து தன்னின்

மேதக்க மைந்தர் தமைநாரதன் மேவி மேலாம்

ஓதித் திறமுள்ளன கூற உணர்ந்து நோற்றுத்

தீதற்று வீடு புகுதன்மை தெரிந்த தன்றே.                53

 

தெரிகின்ற வேலைக் கிளர்கின்றது சீற்றம் உள்ளம்

பரிகின்ற தாவி பதைக்கின்றது பையுள் மாலை

விரிகின்ற தம்மா வியர்க்கின்றது மேனி விண்ணின்

றிரிகின் றதுகோள் இரங்குற்றது ஞால மெல்லாம்.         54

 

தன்பா லகர்தஞ் செயல்கண்டு தளர்ந்து சோரும்

வன்பா லினனா கியதக்கன் வரத்தை வேண்டும்

என்பாலர் என்பால் இலதாக்கினன் எண்ண மிக்கு

நன்பா லுலகத்து ழல்வானினி நாளு மென்றான்.                  55

 

மேனா ரதன்செய் புணர்ப்புன்னி வெகுண்டு தக்கன்

நோனாது சாபம் நுவன்றே நனிநோற்க மைந்தர்

ஆனாரை நல்கேன் மகப்பெற்ற தமையு மென்னா

மானார் தமையே புரியத்தன் மனம்வ லித்தான்.                  56

 

வேறு

 

இருபதின் மேலும் மூவர் ஏந்திழை மாரை நல்கிப்

பெருமை கொள்தக்கன் தன்மன் பிருகுவே மரீசி யென்போன்

கருணை கொள்பு லத்தியன் அங்கிராப் புலகன் வசிட்டன்

திரிவில் அத்திரி தீவேள்வி சீர்ப்பி தராவுக் கீந்தான்.              57

 

துய்யதோர் சுபுத்தி புத்தி சுரசையே திருதி துட்டை

செய்யநற் கிரியை கீர்த்தி சிரத்தையோ டிலச்சை மேதா

மைவிழிக் கத்தி சாந்தை வபுவைமுன் தருமன் வேட்டுப்

பொய்தவிர் இருபா னேழு புதல்வரை அளித்தான் மன்னோ.        58

 

கேதமில் பிருகு என்பான் கியாதியைக் கொண்டு புல்லி

ஏதமில் விதாதாத் தாதா என்றிரு சிறாரை ஈன்று

சீதள வனசங் கொண்ட செந்திரு வையுமுன் தந்து

மாதவன் தனக்கு நல்கி மாதவத் திருந்¢தான் மாதோ.             59

 

(54. பையுள்மாலை - துன்பவரிசை, கோள் - நவக்கிரகம், இரிதல் - விலகி ஓடுதல்.  

56. மானார்தமை - பெண்மக்களை.  

57. தன்மன் - தருமன், தீ - அக்கினிதேவன், வேள்வி - பலி; 

இ•து இங்குக் கிரது என்பவரை குறிக்கும் போலும்.  

59. செந்திரு - இலக்குமி, மாதவன் - திருமால், மாதவம் - சிறந்த தவம்.)

 

தாரணி புகழ்ம ரீசி சம்பூதி தன்னை வேட்டாங்

கீரிரு பிணாக்கள் ஈந்தான் இவர்வழிப் பிறந்தார் பல்லோர்

போரியல் புலத்தை வென்ற புலத்திய முனிவன் என்பான்

நாரிசன் னதியை வேட்டு நன்மகார் பலரைத் தந்தான்.             60

 

அங்கிரா மிருதி என்னும் ஆயிழை தனைம ணந்து

பங்கமில் அங்கி தீரன் பரதனாம் மகாரைப் பெற்று

மங்கையர் நால்வர் தம்மை மகிழ்ந்துடன் அளித்தான் அன்னார்

தங்குடிப் பிறந்த மேலைத் தவத்தரும் அளப்பி லோரால்.          61

 

பெருமைகொள் புலகன் என்போன் பிருதியைக் கொண்டு தத்தாத்

திரிதனைப் பயந்தான் அன்னோன் சீர்வழிக் கும்பன் போந்தான்

ஒருமைசேர் வசிட்டன் என்போன் ஊற்சையை மணஞ்செய் தாங்கோர்

தெரிவையை நல்கி மைந்தர் எழுவரைச் சிறப்பில் தந்தான்.        62

 

அத்திரி என்னு மேலோன் அனசூயை தன்னை வேட்டுச்

சத்தி நேத்திரனே திங்கள் சனிசங்க தானன் என்னும்

புத்திரர் தம்மைத் தந்தான் பொங்குதீச் சுவாவை வேட்டு

மெய்த்திறல் படைத்த மைந்தர் மூவரை விரைவொ டீந்தான்.      63

 

கவிபுகழ் கிரது வானோன் கமைதனை மணத்திற் கூடி

உவகையின் மூன்று பாலர் உதவினன் பிதரா என்போன்

கவதையென் றிசைக்க நின்ற துடியிடை தன்னை வேட்டுத்

தவலருஞ் சிறப்பின் மேனை தரணிமங் கையரைத் தந்தான்.       64

 

அந்தநன் மேனை தன்னை ஆர்வமோ டிமவான் கொண்டான்

முந்துறு தரணி தன்னை முறையினால் மேரு வேட்டு

மந்தர கிரியை நல்க மற்றது நோற்று முக்கண்

எந்தைதன் னிடத்தெஞ் ஞான்றும் இருந்திடப் பெற்ற தன்றே.       65

 

விண்ணுயர் மேருப் பின்னர் வேலையென் பவனை நல்கித்

தண்ணுறு கடற்கு நல்கச் சரவணி என்ன ஆங்கோர்

பெண்ணினை அனையன் பெற்றுப் பெரும்புகழப் பிராசி னப்பேர்

அண்ணலுக் குதவ அன்னான் ஈயிரு மகாரைத் தந்தான்.           66

 

(64. கவி - கவிந்த, தரணி - பூமி.  65. இமவான் - மலையரசன், மேரு - மேருமலை.)

 

ஆகத் திருவிருத்தம் - 128

     - - - 

 

 

4.  ச ந் தி ர சா ப ப்  ப ட ல ம்

 

இன்னபல் கிளைகள் மல்க இருந்திடுந் தக்கன் பின்னர்த்

துன்னிய நாண்மீ னத்துள் தொகைபெறும் இருபா னேழு

கன்னியர் தம்மை நல்கிக் கடிமண விதியி னீரால்

தன்னிகர் இல்லாப் பொற்பின் தண்மதிக் கடவுட் கீந்தான்.          1

 

ஈந்தபின் மதியை நோக்கி யார்க்குமோர் பெற்றித் தாக

வாய்ந்திடும் ஆர்வம் உய்த்து மருவுதி சிலர்பால் அன்பில்

தோய்ந்தொரு சிலரை எள்ளிச் சுளிகிற்பாய் அல்லை என்னா

ஆய்ந்திவை புகன்று தேற்றி அனையரோ டேகச் செய்தான். 2

 

ஏகிய கடவுட் டிங்கள் இலங்கெழில் மானத் தேறி

மாகநீள் நெறியிற் போந்து மடந்தையர் அவரை யெல்லாம்

ஓகையால் மேவ வுன்னி ஓர்பகற் கொருவர் பாலாய்ப்

போகமார் இன்ப மாற்றி வைகலும் புணர்ச்சி செய்தான்.           3

 

இன்னணம் புணர்ச்சி போற்றி ஏகிய திங்கட் புத்தேள்

பன்னியர் அனையர் தம்மில் பழுதிலா ஆரல் தானும்

பின்னவன் தானும் ஆற்றப் பேரெழி லுடைய ராக

அன்னவர் திறத்து மேலாம் ஆர்வமோ டணுக லுற்றான்.           4

 

ஏனையர் தம்பால் சேரான் இருதுவின் வேலை பூத்த

தேனிமிர் சொல்லார் மாட்டுச் சேருறாக் கணவ ரேபோல்

வானிடை மதியப் புத்தேள் மறுத்தனன் திரியும் வேலை

ஆனதோர் பான்மை நோக்கி அவரெலாம் முனிந்து போனார்.       5

 

போந்தனர் தக்கன் தன்பால் பொருமியே பொலம்பூட் கொங்கை

ஏந்திழை மாதர் தங்கள் கேள்வன தியற்கை கூறக்

காந்திய உளத்த னாகிக் கனன்றவன் கலைகள் எல்லாம்

தேய்ந்தில வாக என்று தீமொழிச் சாபஞ் செய்தான்.               6

 

செப்பருந் திருவில் வைகுஞ் சிறுவிதி என்பான் சொற்ற

இப்பெருஞ் சாபந் தன்னால் என்றுமெஞ் சாத திங்கள்

ஓப்பருங் கலைகள் வைகற் கோரொரு கலையாய் அ•காப்

பொய்ப்பெருஞ் செல்வம் பெற்றோன் புகழெனக் குறைந்த அன்றே.  7

 

மூன்றுறழ் ஐந்து வைகல் முடிந்துழி மதியம் என்போன்

ஆன்றதண் கலையின் மூவைந் தழிதலும் அவனே யென்னச்

சான்றுரை செய்தல் போல்ஓர் தண்கலை இருத்த லோடும்

மான்றனன் மெலிந்து வௌ¢கி வானவர் கோனை உற்றான்.       8

 

தக்கனென் பவன்சா பத்தால் தணகலை அனைத்தும் போகி

இக்கலை யொன்று நின்ற தீதும்இன் றிறக்கும் என்னில்

மிக்கஎன் னியல்புங் குன்றும் வியன்பெயர் தொலையும் யாண்டும்

புக்கதொல் புகழும் போகும் புகல்வசை யாகும் அன்றே.           9

 

ஈங்கினிச் செய்வ தென்னோ உணர்கிலேன் எற்கோர் புந்தி

தீங்கற வுரைத்தி யென்னச் செப்பினன் இரங்கி ஏங்கித்

தாங்கரும் பையுள் வேலை சார்தலுந் தழுவி எற்கோர்

பாங்கனை அஞ்சல் என்னா இவைசில பகர்தல் உற்றான்.          10

 

(1. நாண்மீன் - நட்சத்திரம், கடிமணம் - விவாகம், தண்மதிக்கடவுள் - சந்திரன்.  

2. சுளித்தல் - கோபித்தல்.  4. ஆரல் - கார்த்திகை, பின்னவள் - இங்கு உரோகணி.  

5. பூத்த இருதுவின் வேலை - மாதவிருது அடைந்த காலத்தில், 

தேனிமிர் சொல்லார் - பெண்கள்.  7. வைகல் - நாள், அ•கா - குறைந்து.  

8. அவனே - அச்சந்திரனே, மான்றனன் - மயங்கி.  

10. பையுள் வேலை - துன்பக்கடல், பாங்கனை - தோழனே.)

 

எந்தைவாழ கயிலை தன்னில் இபமுகன் முதிரை யாவுந்

தந்தபே ரகடும் அங்கைச் சகுலியும் நோக்கி நக்காய்

அந்தநாள் அனையான் சீறி ஆரும்நிற் காணா ராகி

நிந்தைசெய் தகல வேநீ நீசரின் திகழ்தி என்றான்.         11

 

என்றவச் சாபந் தன்னா லியாவரும் இறப்ப எள்ளி

அன்றுதொட் டுனைநோக் காராய் அகலநீ வௌ¢கி விண்மேல்

சென்றிலை ஒடுங்கல் நாடித் திசைமுகன் முதலோர் வௌ¢ளிக்

குன்றிடை ஏகி முன்னோன் குரைகழல் பணிந்து சொல்வார்.       12

 

காண்டகு நினது மேன்மை கருதிடான் இகழ்ந்து மாசு

பூண்டனன் அதனால் திங்கள் பொருமலுற் றொடுங்கும் அன்னான்

வேண்டுமிவ் வுலகிற் கெந்தை விதித்திடு சாபத் தன்மை

ஆண்டொரு வைகல் போற்ற அருள்புரிந் தளித்தி என்றார். 13

 

ஙூயங்கரன் அதனைக் கேளா அவ்வகை அருள வெய்யோன்

திங்களின் முதலாம் பாலிற் செல்லுறு நாலாம் வைகல்

மங்குல்சூ ழுலகம் நோக்கா மரபினால் வதிந்தாய் மற்றப்

புங்கவற் கந்நாள் மிக்க பூசனை புரிய மேலோர்.                  14

 

இதுபழி ஒன்று நிற்க இன்றுநீ தக்கன் தன்னால்

புதியதோர் குறையும் பெற்றாய் பொலிவொடு திருவுந் தீர்ந்தாய்

மதியினை மதிய தற்றாய் மற்றினி வல்லை சென்று

விதியொடு பகர்தி சேயை வேண்டியீ தகற்று மென்றான்.          15

 

வச்சிரம் எடுத்த செம்மல் மற்றிவை புகலும் எல்லை

இச்செயல் இனிது வல்லே ஏகுவல் அவ்வா ரென்னா

அச்சென வெழுந்து திங்கள் அவன்பணி தலைக்கொண் டேகி

முச்சகந் தன்னின் மேலாம் முளரியான் உலகம் புக்கான்.          16

 

தாமரை என்னுந் தண்பூந் தவிசிடைத் திகழ்ந்த அண்ணல்

மாமல ரடியின் வீழா மாதுலன் வெகுண்டு சொற்ற

தீமொழி யுணர்த்தி உன்றன் சேயினைத் தெருட்டித் தீயேன்

தோமுறு கவலை மாற்றித் துடைத்திஇச் சாப மென்றான்.         17

 

அன்னது மொழிந்த திங்கட் கம்புயன் மொழிவான் ஈண்டுத்

தன்னுள நெறிப்பால் அன்றிச் சார்கிலன் தக்கன் என்பான்

என்னுரை இறையுங் கொள்ளான் யான்அவன் மாட்டுஞ் செல்லேன்

முன்னுளன் அல்லன் யார்க்கும் முதல்வனே யாகி நின்றான்.       18

 

(11. இபமுகன் - விநாயகக் கடவுள், முதிரை - சுடலை, அகடு - வயிறு, 

சகுலி - மோதகம், நக்காய் - சிரித்தாய்.  

12. இறப்ப - மிகவும், முன்னோன் - விநாயகக்கடவுள்.  

13. ஆண்டொரு வைகல் - வருடத்திற்கு ஒரு நாள்.  

14. வெய்யோன்ஸ.நாலாம் வைகல் - ஆவணி மாத சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி நாள்.  

15. விதி - பிரமதேவன், சேய் - இங்குத் தக்கன்.  

16. வச்சிரம் எடுத்த செம்மல் - இந்திரன், அச்சென - விரைவாக.  

17. மாதுலன் - மாமனான தக்கன்.  18. இறையும் - சிறிதும்.)

 

சொல்லுவ பிறஎன் வேறு தொல்லைநாள் யானே கூற

அல்லுறழ் கண்டத் தெந்தை அரும்பெருந் தன்மை யாவும்

ஒல்லையின் உணர்ந்து பன்னாள் உழந்ததோர் தவத்தால் இந்த

எல்லையில் திருவின் வைகி இறையும்அங் கவனை எண்ணான்.   19

 

வேறு

 

செக்கரிற் படர்சடைத் தீயின் தோற்றமாம்

முக்கணா யகன்எதிர் மொழிந்து வேண்டலாம்

எக்குறை யாயினும் எவரும் ஈண்டையில்

தக்கன்முன் ஓருரை சாற்ற லாகுமோ.                           20

 

அண்ணலந் திருவிடை அழுந்தி யாரையும்

எண்ணலன் செந்நெறி இயற்ற வோர்கிலன்

கண்ணிலன் மதியிலன் களிப்பி னோர்மகன்

மண்ணிடை விரைவொடும் வழிக்கொண் டாலென.               21

 

களியுறு பெற்றியன் கறுவு சிந்தையன்

அளியறு முகத்தினன் அருளில் வாய்மையன்

தௌ¤தரு முணர்விலன் சிதைந்து மேலிவன்

விளிவுறு பொருட்டின்இம் மேன்மை பெற்றுளான்.        22

 

ஈண்டிவன் விளிதலும் இன்றி எம்மனோர்

பூண்டநன் னிலைகளும் போக்கல் சிந்தியான்

நீண்டசெஞ் சடைமுடி நிமலன் அன்னவன்

வேண்டிய வரமெலாம் விரைவில் நல்கினான்.                   23

 

அன்னது நிற்கயாம் அவனை வேண்டுவம்

என்னினும் முனிவுறா இகழும் எம்மையும்

நின்னுறு சாபமும் நீக்க லான்இனிப்

பின்னொரு நெறியுள பேசக் கேண்மியா.                 24

 

செய்யனைக் கண்ணுதற் சிவனை எம்மனோர்க்

கையனை அடிகளை அமலனாகிய

மெய்யனை அடைந்து நின்மேனி மாசினை

ஒய்யென அகற்றிலை உணர்வி லாய்கொலோ.                   25

 

ஈதவன் முன்புசென் றிசைக்க நீக்குநின்

பேதுற அனையது பேசல் வேண்டுமோ

மேதகும் இருவினால் விளங்கி டாதவை

ஆதவன் காட்டுதற் கையஞ் செய்வரோ.                  26

 

சிறாரென நமையெலாஞ் சிறப்பின் நல்கிய

இறால்புரை சடைமுடி எந்தைக் கன்பராய்

உறாதவர் தம்மையும் உற்ற பான்மையர்

பெறாததோர் பொருளையும் பேச வல்லமோ.                    27

 

21. களிப்பினோர்மகன் - கட்குடியன்.  24. கேண்மியா - கேள்; மியா; அசை.  

25. ஆதவன் - சூரியன்.  27. இறால்புரை - தேன்கூடுபோல் அடர்ந்த.)

 

தெருளடு தன்னடி சேருந் தொண்டினோர்

பருவரல் ஒழித்திடும் பான்மைக் கல்லவோ

விரிசுடர் கெழுவியே வௌ¢ளி ஓங்கலின்

அருளுரு வெய்தியே அமலன் மேயதே.                  28

 

இடுக்கணங் கொருவர்மாட் டெய்தின் எந்தைதன்

அடித்துணை அரணமென் றடைவ ரேயெனில்

துடைத்தவர் வினைகளுந் தொலைக்கும் இப்பொருள்

பிடித்திலை ஆற்றவும் பேதை நீரைநீ.                           29

 

அந்தியஞ் சடைமுடி அண்ணல் தன்னடி

சிந்தைசெய் தடைந்திடு சிறுவன் மேல்வரு

வெந்திறல் நடுவனை விலக்கி அன்றுமுன்

வந்தருள் புரிந்தது மறத்தி போலுமால்.                          30

 

விஞ்சிய திரைகெழு வேலை தன்வயின்

நஞ்சமன் றெழுதலும் நடுங்கி நாம்அவன்

தஞ்சென அடியிணை சாரத் தான்மிசைத்

தஞ்சலென் ருறிய தயர்க்க லாகுமோ.                           31

 

வார்த்தன உமையவள் மலர்க்கைத் தோன்றியே

ஆர்த்தெழு கங்கையிவ் வகிலம் எங்கணும்

போர்த்திட வெருவியாம் போற்றச் சென்னியில்

சேர்த்தியன் றளித்ததுந் தேற்றி லாய்கொலோ.                    32

 

அளப்பருங் குணத்தின்எம் மண்ணல் அன்பரால்

கொளப்படும் பேரருள் கூற்றின் பாலதோ

கிளத்திட அரியதேல் கேடில் பல்பகல்

உளப்பட உன்னினும் உலவிற் றாகுமோ.                 33

 

ஆதலின் ஈண்டுநின் றாதி நாயகன்

காதலின் மேயவக் கயிலை யுற்றவன்

பாதமிங் கரணெனப் பற்றி வல்லைநின்

*பேதுறுல் ஒழிமதி பெருந்தண் மாமதி.                          34

 

(பா-ம் * போதுற.)

 

என்றலும் அயன்பதத் திறைஞ்சி எம்பிரான்

நன்றிவை புகன்றனை ஞான மூர்த்திபால்

சென்றடை வேனெனச் செப்பி வௌ¢ளியங்

குன்றினை அணைந்து பொற்கோயில் மேயினான்.         35

 

தன்னுறு பருவரல் சாற்றக் காவலோன்

மன்னருள் நிலையொடு மரபின் உய்த்திடப்

பொன்னவிர் செஞ்சடைப் புனித நாயகன்

முன்னுற வணங்கினன் முடிவில் அன்பினால்.                    36

 

(28. பருவரல் - துன்பம், வௌ¢ளி ஓங்கல் - கயிலைமலை.  

29 அரசணம் - அடைக்கலம்.  30. சிறுவன் - மார்க்கண்டன், நடுவன் - நமன்.  

32. வார் - கச்சு.  34. அரண் - அடைக்கலம், வல்லை - விரைவில், ஒழிமதி, மதி : அசை.)

 

மேற்றிகழ உபநிட வேத வாய்மையால்

போற்றலும வந்ததென் புகல்தி யாலெனச்

சாற்றினன் உயிர்தொறுந் தங்கித் தொல்வினை

தேற்றுபு வினைமுறை செலுத்துந் தொன்மையோன்.              37

 

நங்களை அலைத்திடு நண்ண லன்தனை

இங்கிவண் அடுதும்என் றிருட்கள் சூழ்ந்தென

மங்குலின் நிறங்கொடு வடிவம் வேறாந்

திங்கள்நின் றெம்பிராற் கினைய செப்புவான்.                     38

 

வன்றிறல் தக்கன்முன் வழங்கு தீச்சொலால்

துன்றிருங் கலையெலாந் தொலைந்து போந்திட

ஒன்றிவண் இருந்ததால் உதுவுந் தேய்ந்திடும்

இன்றினி வினையினே னியாது செய்வதே.                       39

 

எஞ்சிய இக்கலை இருக்கத் தேய்தரு

விஞ்சிய கலையெலா மேவ நல்குதி

தஞ்சநின் னலதிலை என்னத் தண்மதி

அஞ்சலை என்றனன் அருளின் ஆழியான்.                40

 

தீர்ந்தன அன்றியே திங்கள் தன்னிடை

ஆர்ந்திடு கலையினை அங்கை யாற்கொளா

வார்ந்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான்

சார்ந்தில தவ்வழித் தக்கன் சாபமே.                             41

 

மேக்குயர் தலைவராம் விண்ணு ளோர்கள்பால்

தாக்குறு வினையையுஞ் சாபம் யாவையும் 

நீக்கிய தலைவன்இந் நிலவின் சாபத்தைப்

போக்கினன் என்பது புகழின் பாலதோ.                   42

 

நெற்றியங் கண்ணுடை நிமலத் தெம்பிரான்

உற்றவர்க் கருள்புரி கின்ற உண்மையைத்

தெற்றென உணர்த்தல்போல் திங்க ளின்கலை

கற்றையஞ் சடைமிசைக் கவின்று பூத்ததே.                      43

 

வேறு

 

எந்தை அவ்வழி மதியினை நோக்கிநீ யாதுஞ்

சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால்

அந்த மில்லையிக் கலையிவண் இருந்திடும் அதனால்

வந்து தோன்றுநின் கலையெலாம் நாடொறும் மரபோல்.           44

 

நின்ன தொல்கலை ஐந்துமுப் பகலிடை நிரம்பிப்

பின்னர் அவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியா

தின்ன பான்மையே நிகழுமெக் காலமு மென்றான்

முன்னை ஆவிதோ றிருந்தெலாம் இயற்றிய முதல்வன்.          45

 

(37. புகல்தியால், ஆல் : அசை.  38. மங்குல் - கருமை.  

39. வினையினேன் - பாவியாகிய நான்.  

40. அருளின்  ஆழியான் - கருணைக்கடலான சிவபெருமான்.  

43. கவின்று - அழகுடன்.  44. அந்தம் இல்லை - அழிவுஇல்லை.)

 

முதல்வன் இவ்வஆஆ யருள்புரிந் திடுதலும் முளரிப்

பதயு கங்களில் வணங்கினன் விடைகொடு படரா

மதிய வானவன் தன்னுல கடைந்துதொன் மரபில்

கதிகொள் செய்வினை புரிந்தனன் வளர்ந்தன கலையே.           46

 

ஒன்று வைகலுக் கோ£¢கலை யாய்நிறைந் தோங்கி

நின்ற தொன்னிலை நிரம்பியே பின்னுற நெறியே

சென்று தேய்ந்துவந் தொருகலை சிதைவுறா தாகி

என்றும் ஆவதும் அழிவதும் போன்றனன் இரவோன்.              47

 

செங்க ணான்முதல் அனைவரும் அம்மதித் திறத்தை

அங்கண் நாடியே தக்கனால் இவன்கலை அனைத்தும்

மங்கு மாறுமேல் வளர்வதும் இயற்கையா வகுத்தான்

எங்கள் நாயகன் செய்கை யார்அறிந்தனர் என்றான்.               48

 

செக்கர் வானமேற் கிளர்ந்தெழு திங்களின் செயலை

ஒக்க நாடிய சிந்தையாந் தூதினால் உணர்ந்து

தக்க னென்பவன் கனன்றியான் உரைத்தசா பத்தை

நக்க னேகொலாந் தடுக்கவல் லானென நகைத்தான்.               49

 

எந்தை தன்றந்தை யாவரும் மருமகனுக் கியான்முன்

தந்த வாய்மையை விலக்கிலர் விலக்கஎன் றன்முன்

வந்தும் வேண்டிலர் அச்சமுற் றிருந்தனர் மற்றத்

தந்தை தாயிலா ஒருவனாம் என்னுரை தடுப்பான்.        50

 

நன்று நன்றியாம் பரம்பொருள் நான்முகன் முதலாந்

துன்று தொல்லுயிர் யாவையும் அழித்தும்ஐந் தொழிலும்

நின்று நாம்புரி கின்றனம் எங்கணும் நீங்காம்

என்று தன்மனத் தகந்தையுற் றான்கொலோ ஈசன்.        51

 

அன்ன தன்றியே இன்னமொன் றுண்டுபா ரகத்தில்

தன்னை யேநிகர் தக்கனும் நோற்றிடு தவத்தான்

என்ன இத்திரு வுதவினம் என்பதை நினைந்தோ

என்ன தாணையை இகழ்ந்தனன் இத்திறம் இழைத்தான்.           52

 

செய்ய தோர்பரம் பொருளியா மென்பது தௌ¤ந்தும்

வைய மீதில்இத் திருவெலாம் பெற்றுநம் மலர்த்தாள்

கையி னால்தொழான் என்றுகொல் முன்னியான் கழறும்

வெய்ய வாய்மையை விலக்கினன் சிவனென வெகுண்டான்.       53

 

தகவும் ஈரமும் நீங்கிய புரைநெறித் தக்கன்

புகலும் வாய்மையைத் தேர்ந்துழிப் புலகன்என் றுரைப்போன்

நிகரில் கண்ணுதற் கடவுளை எள்ளலை நின்னை

இகழ்வர் யாவரும் எஞ்சும்உன் வெறுக்கையும் என்றான்.          54

 

(45. ஐந்து முப்பகல் - பதினைந்து நாட்கள்.  49. நக்கன் - சிவபெருமான்.  

52. பாரகம் - பூமி.  54. ஈரம் - இரக்கம், புலகன் - ஒரு முனிவன்;

 இவர் தக்கன் மருமக்களில் ஒருவர்.)

 

என்ற வன்முக நோக்கியே தவத்தினால் என்கண்

நின்ற இத்திரு நீங்குமோ நெடியமால் முதலோர்

என்றும் என்பணி மறுத்திலர் எள்ளுவ துண்டோ

நன்று நன்றுநின் னுணர்வெனச் சிறுவிதி நக்கான்.         55

 

முறுவ லித்திடு தக்கனைக் கண்ணுறீஇ முனிவன்

பிறரி ழிப்புரை கூடுறா தென்னினும் பெருஞ்சீர்

குறைவு பெற்றிடா தென்னினும் நினக்கருள் கொடுத்த

இறைவ னைப்பழித் திடுவது தகுவதோ என்றான்.         56

 

புலகன் என்றிடு முனிவரன் இனையன புகலி

விலகு தீநெறி யாற்றிய சிறுவிதி வினவி

அலகி லாததன் னாற்றலும் பெருந்திரு அனைத்தும்

உலகில் நீங்குவான் பெருமிதங் கொண்டிவை உரைப்பான்.         57

 

நோற்று முன்னியான் பெற்ற இத்திரு நுகர்ந்திடுமுன்

மாற்று வான்அலன் செய்வினை முறையலால் வலிதின்

ஏற்ற மாகஒன் றிழைக்கலன் ஆதலால் என்பால்

ஆற்ற லால்அரன் செய்கின்ற தென்னென அறைந்தான்.            58

 

அறைத லோடுமப் புலகனென் றுரைப்பவன் அனைத்தே

உறுதி யாயினும் ஈசனை இகழந்தவர் உய்யார்

மறையெ லாமவை சொற்றது மற்றவன் தன்னை

இறையும் எள்ளலை மனங்கொடு பராவுதி இனிநீ.         59

 

தன்ன டைந்தவர் ஆகுல மாற்றியே தகவால்

என்ன தோர்பொருள் வெ•கினும் ஈகின்ற தியற்கை

அன்ன வற்கது மதிதெரிந் தடைதலும் அவன்பால்

நின்னின் உற்றசா பத்தினை நீக்கினன் நெறியால்.         60

 

கற்றை வான்கலை நிறைந்தபின் முன்னநீ கனன்று

சொற்ற வாய்மையும் நிறுவினன் நாடொறுஞ் சுருங்கச்

செற்றம் என்இனித் திங்கள்நின் மருமகன்அச் சிவனாம்

பெற்றம் ஊர்தியும் அம்முறை யாவனால் பின்னாள்.              61

 

என்ன இத்திறம் மொழிதலுஞ் சினமகன் றிமையோர்

அன்னம் ஊர்தியோ னியாவரும் புகழ்தர அனையான்

பன்னெ டும்பகல் அரசின்வீற் றிருந்தனன் பரையாங்

கன்னி மற்றவன் மகண்மையாய்வருதல் கட்டுரைப்பாம்.           62

 

(57. விலகு தீ நெறி - நல்லாரிடைப் பொருந்தாது அகன்ற தீயமார்க்கம்.  

59. பராவுதி - துதிப்பாயாக.  60. ஆகுலம் - துன்பம், வெ•கல் - விரும்பல்.  

61. வான் - உயர்வு, பெற்றம் - வௌ¢விடை, அம்முறை - மருமகன்முறை.  

62. பரையாங்கன்னி - பராசத்தி.)

 

ஆகத் திருவிருத்தம் - 190

     - - -

 

 

5. உ மை  க யி லை  நீ ங் கு  ப ட ல ம்

 

கமல மூர்த்தியுங் கண்ணுனுங் காண்கிலா

அமல மேனியை அன்பினர் காணுற

நிமல மாகிய நீள்கயி லாயமேல்

விமல நாயகன் வீற்றிருந் தானரோ.                             1

 

வீற்றி ருந்தவன் மெல்லடி கைதொழூஉப்

போற்றி யுன்றன் பொருவரு மெய்மையைச்

சாற்று வாயெனச் சங்கரி வேண்டலும்

ஆற்ற அன்புசெய் தாங்கருள் செய்குவான்.                       2

 

வேறு

 

உருவொடு குணஞ்செயல் ஒன்றும் இன்றியே

நிருமல மாய்ச்சிவன் நிறைந்து நின்றதும்

பரவிய வுயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான்

ஒருதனிச் சத்தியால் உன்னல் உற்றதும்.                 3

 

ஐந்தியற் சத்திகள் ஆயி னோர்தமைத்

தந்ததும் அருவுருத் தாங்கி அவ்வழிச்

சிந்தனை அருச்சனை செய்தி யாவரும்

உய்ந்திடச் சதாசிவ வுருவைந் துற்றதும்.                4

 

இருபதின் மேலும்ஐந் தீசன் கேவல

உருவம தாகியே உறைந்த பெற்றியும்

விரவிய குடிலையின் விளைவு செய்துபின்

அருள்புரி மூர்த்திக ளாய பேதமும்.                             5

 

முந்திய மாயைகள் மூல மாகவே

அந்தமில் தத்துவம் ஆறொ டாறுமுன்

வந்திட அளித்தது மரபின் ஐந்தொழில்

சிந்தைகொள் கருணையான் நடாத்துஞ் செய்கையும்.              6

 

விதித்திடு மூவகை வியனு யிர்த்தொகை

கதித்திடு தத்துவக் கணங்கள் அங்குவார்

உதித்திடு முறைமையின் ஒடுங்கச் செய்துதான்

மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பதும்.                      7

 

(1. கமல மூர்த்தி - பிரமதேவன், அமலம் - பரிசுத்தம்.  

2. சங்கரி - அம்பிகை, ஆற்ற - மிகுந்த.  3. பரவிய - விரிந்துகிடக்கும், 

தனிச்சத்தி - ஏகசத்தி; பராசத்தி.  4. ஐந்தியல் சத்திகள் - பராசத்தி, 

ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி என ஐவகை சத்திகள்; 

சதாசிவ உரு ஐந்து - ஐந்து திருமுகங்களைக் கொண்ட சதாசிவமூர்த்தி.  

5. இருபதின் மேலும் ஐந்து ஈசன் - சகல வடிவுகொண்ட இருபத்தைந்து 

மகேசுவர வடிவங்கள், குடிலை - ஒருசத்தி.  

6. தத்துவம் ஆறொடு ஆறு - முப்பத்தாறு தத்துவம்.  

7. மூவகை வியன் உயிர்த்தொகை - விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் 

என்னும் மூவகை ஆன்மாக்கள்.)

 

ஆனதன் னியற்கைகள் அனைத்துங் கண்ணுதல்

வானவன் ஆகம மறையின் வாய்மையான்

மேனிகழ் தொகைவகை விரிய தாகவே

தானருள் புரிந்தனன் தலைவி கேட்கவே.                 8

 

சுந்தரி இவ்வகை உணர்ந்து தோமிலா

எந்தைநிற் குருவிலை என்றி பின்னுற

ஐந்தொடு பலவுரு அடைந்த தென்னெனக்

கந்தனை அருளுவான் கழறல் மேயினான்.                       9

 

உருவிலை நமக்கென ஒன்று நம்வயின்

அருளுரு அவையெலாம் என்ன அன்னதோர்

பொருளென உன்னியே புவனம் ஈன்றவள்

பெருமகிழ் வெய்தியப் பெற்றி கூறினாள்.                10

 

அந்நிலை வடிவெலாம அருளின் ஆதலால்

உன்னருள் யானென உரைப்ப துண்மையே

என்னுரு வாம்அவை என்று பாங்கமர்

கன்னிகை வியந்தனள் கழறும் வேலையே.                      11

 

கயந்தன தீருரி கவின்று பொற்புறப்

புயந்தனில் அணிந்தருள் புனிதன் நங்கைநீ

நயந்தரு நின்புகழ நாடி நம்முனம்

வியந்தனை உனையென விளம்பி மேலுமே.                     12

 

இருளுறும் உயிர்தொறும் இருந்து மற்றவை

தெருளுற இயற்றுதும் அதனைத் தீர்துமேல்

மருளுறு சடமதாய் மாயும் ஏனைய

பொருளுறு நிலைமையைப் புகல வேண்டுமோ.                  13

 

உன்னிடை தனினும்யாம் உறுத லில்வழி

நின்னுயிர் உணர்வுறா நினக்குக் காட்டுதும்

அன்னது காண்கெனா அயனை யாதிய

மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான்.                     14

 

தேவர்கள் நாயகன் செயலி லாமையால்

ஆவிகள் யாவையுஞ் சடம தாகியே

ஓவிய மேயென உணர்வின் றுற்றன

பூவுல கேமுதற் புவனம் யாவினும்.                             15

 

ஆட்டுவித் திடுபவன் அதுசெ யாவழிக்

கூட்டுடைப் பாவைகள் குலைந்து வீழ்ந்தென

நாட்டிய பரனருள் நடாத்தல் இன்மையால்

ஈட்டுபல் லுயிர்த்தொகை எனைத்து மாய்ந்தவே.                  16

 

(9. ஐந்து - பஞ்ச சாதாக்கிய வடிவு, 11. அந்நிலை வடிவு ஏலாம் - 

அச்சதா சிவாதி வடிவமனைத்தும். 12. இருள் - மலவிருள், சடம் - உடல். 

15. ஆவிகள் - உயிர்கள். 16. நந்துதல் - கெடுதல்.)

 

இந்தவா றுயிர்த்தொகை யாவும் ஒல்லையில் 

நந்தியே சடமதாய் நணிய வெல்லையில் 

சிந்தைசெய் தினையது தெருமந் தஞ்சியே

சுந்தரி அரனடி தொழுது சொல்லுவான்.                  17

 

அறிகிலன் எந்தைநீ அனைத்து மாகியே

செறிவது முழுதுயிர்த் திறன்இ யற்றியே

உறுவதை என்பொருட் டொருவி நின்றனை

இறுதியின் அவையெலாம் இருளின் மூழ்கவே.                   18

 

ஓரிறை யாகுமீ துனக்கு யிர்க்கெலாம்

பேருகம் அளப்பில பெயரும் என்பிழை

சீரிய வுளங்கொளல் தேற்றம் பெற்றெழீஇ

ஆருயிர் மல்குமா றருளு வாயெனா.                            19

 

பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும்

அன்மலி கூந்தலுக் கருளி யாவிகள்

தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான்

நின்மலன் நினைந்தனன் கருணை நீர்மையால்.                   20

 

திருத்தகு தனதருள் சேர்ந்த பல்வகை

உருத்திரா¢ தமக்குமுன் னுணர்வு செய்துழி

நிருத்தனை அவ்வழி நினைவுற் றிச்செயல்

கருத்திடை யாதெனக் கருதி நாடினார்.                   21

 

நாடிய எல்லையில் நான்மு கத்தன்மால்

தேடிய அண்ணல்தன் செய்கை யீதெனக்

கூடிய ஓதியாற் குறித்து முன்னுற

வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெ•கியே.                 22

 

கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை

பண்ணுதல் உன்னியப் பகவன் தொல்சுடர்

விண்ணிடை இன்மையின் வேலை காண்கிலா

மண்ணிடை அருச்சுன வட்டத் தெய்தினார்.                      23

 

எங்க ணும் கனையிருள் இறப்ப வீசலிற்

கங்குலே போன்றதிக் காலை கண்ணுதற்

புங்கவற் கேற்றிடு பூசை செய்துமென்

றங்கவர் யாவரும் ஆய்தல் மேயினார்.                  24

 

முண்டக மலா¢கெழு முக்கண் மேலையோன்

கொண்டதோர் ஐம்பெருங் கோலத் தேவரும்

எண்டகு மூவகை இயல்பு ளாங்கவர்

மண்டல விதியினால் வடிவ தாக்கியே.                          25

 

(19. ஓர் இறை - ஒரு இமைப்பொழுது.  20. அன்மலி, அன் : சாரியை.  

21. திருத்தகு - அழகிய, பல்வகை உருத்திரர் - பதினோருருத்திரர்கள்.  

23. அருச்சுன வட்டம் - திருவிடைமருதூர், அருச்சுனம் - மருதமரம்.  

25. ஐம்பெருங்கோலம் - பஞ்ச மூர்த்திகள்.)

 

எண்ணிரு திறத்தவாய் இயன்ற நற்பொருள்

உண்ணிகழ் அளியொடும் உய்த்து வேதனுங்

கண்ணுனும் வழிபடு கங்குற் பூசையை

பண்ணுதல் முயன்றனர் பரிவின் மேலையோர்.                   26

 

ஆறிரு நாலுடன் அஞ்செ ழுத்தையுங்

கூறினர் எண்ணினர் கோதில் கண்டிகை

நீரொடு புனைந்திறை நிலைமை யுட்கொளா

வேறுள முறையெலாம் விதியிற் செய்துபின்.                    27

 

வான்குலாம் வில்லுவம் மருமென் பாசடை

தேன்குலா மரையிதழ் செய்ய சாதிவீ

கான்குலாம் வலம்புரி கடவுள் தொல்பெயர்

நான்கியா மத்தினும் நவின்று சாத்தியே.                 28

 

ஏயவான் பயறுபால் எள்நல் ஓதனந்

தூயநல் லுணவிவை தொகுத்துக் கண்ணுதல்

நாயகன் முன்னுற நான்கியா மத்தும்

நேயமொ டம்முறை நிவேதித் தேத்தியே.                29

 

பின்னரும் இயற்றிடு பெற்றி யாவையுந்

தொன்னிலை விதிகளில் தோமு றாவகை

உன்னினர் புரிந்துழி யுவந்து ருத்திரர்

முன்னுற வந்தனன் முக்கண் மூர்த்தியே.                30

 

அவ்விடை மருதினில் ஐந்தும் ஆறுமாம்

மெய்வகை உருத்திரர் வேண்டி யாங்கருள்

செய்வதொர் கண்ணுதல் தேவன் தொன்மைபோல்

எவ்வகை உயிரையும் இயற்ற வுன்னலும்.                       31

 

எழுந்தனர் மாலயன் இந்தி ராதியர்

எழுந்தனர் எழுந்தனர் யாரும் வானவர்

எழுந்தனர் முனிவரர் ஏனை யோர்களும்

எழுந்தன உயிர்த்தொகை இருளும் நீங்கிற்றால்.                  32

 

அல்லிடை உறங்கினர் அறிவு சேர்ந்துழி

மெல்லென அயர்ந்தகண் விழித்தெ ழுந்தபோல்

எல்லையில் உயிர்த்தொகை யாவும் அவ்வழி 

ஒல்லையில் எழுந்தன உலகில் எங்கணும்.                       33

 

(26. எண் இரு - பதினாறு.  27. ஆறு இரு நாலுடன் அஞ்செழுத்து - 

சோடசகலா பிரசாத மந்திரம்; இது பிரணவ பீசங்களுடன் கூடி பதினாறு 

மாத்திரைகளுடன் ஒலிக்கும் சூக்கும பஞ்சாக்கரம் என்பர், கண்டிகை - உருத்திராட்சம், 

வேறுளமுறை என்றது பூதசுத்தி, அந்தரியாகம் முதலியவற்றை.  

28. வீ - பூ; இங்கு மல்லிகை, வலம்பு£¤ - நந்தியாவட்டம்.  29. ஓதனம் - சோறு.  

31. மருதினில் - திருவிடைமருதூரில், ஐந்தும் ஆறுமாம் உருத்திரர் - ஏகாதச ருத்திரர்.  

33. அல் - இரவு.)

 

ஓங்கலுங் கரிகளும் உலப்பில் நாகமுந்

தாங்கின தரணிபா தலத்திற் கூர்மமாம்

ஆங்கது போற்றிய தண்டந் தன்னிடைத்

தீங்கதிர் மதியுடுப் பிறவுஞ் சென்றவே.                          34

 

அன்னதொர் திறமெலாம் அமலன் ஆணையால்

தொன்னிலை அமைந்தவத் தொடர்பு நோக்கியே

இந்நெறி யாவையும் ஈசன் செய்கையே

பின்னிலை என்றனர் பிரம னாதியோர்.                  35

 

வேறு

 

மற்றிவை நிகழும் வேலை மன்னுயிர்க் குணர்ச்சி நல்கி

உற்றனன் எந்தை என்றே உருத்திரர் உணர்ந்து தம்முன்

பற்றலர் எயில் மூன் றட்ட பண்ணவன் வரநேர் சென்று

பொற்றிரு வடியில் வீழ்ந்து போற்றலும் அமலன் சொல்வான்.     36

 

ஈண்டெமை அருச்சித் திட்ட இயல்பினால் உயிர்கட் கெல்லாம்

மாண்டதொல் லுணர்ச்சி நல்கி எழுப்பினம் மற்று நீவிர்

வேண்டின யாவுங் கேண்மின் விரைந்தென அமலன் தன்கண்

பூண்டதொ ரன்பு மிக்கோர் இனையன புகலல் உற்றார்.             37

 

நிற்றலும் அல்லில் எம்போல் நின்னடி எனைய ரேனும்

பற்றுடன் அருச்சித் தோர்க்குப் பழிதவிர் மாசுத் திங்கள்

உற்றிரு கதிரு மொன்றும் ஒண்பகல் முதனாட் கங்குல்

பெற்றிடு சிறப்பு நல்க வேண்டுமால் பெரும என்றார்.              38

 

நீவிர் பூசை தன்னை நெடிதுநாம் மகிழ்ந்த வாற்றல்

ஆவிகள் அனைத்தும் உய்ந்த அருவினை அகன்று நும்போல்

பூவினில் என்றும் பூசை புரிந்தவர்க் கெல்லாம் முத்தி

மேவர அளித்தும் என்றே வியனருள் புரிந்து போந்தான்.           39

 

எம்பெருந் தலைவன் ஏக வுருத்திரர் யாரும் ஈண்டித்

தம்பதங் குறுகி முன்போற் சார்ந்தனர் அனைய காலை

அம்புய னாதி வானோர் அனைவருங் கயிலை புக்கு

நம்பனை வணக்கஞ் செய்து தொழுதிவை நவிலல் உற்றா£¢.              40

 

மன்னுயிர்க் குயிராய் உற்ற வள்ளல்கேள் யாங்கள் எல்லாம்

உன்னருள் உறாத நீரால் உணர்வொரீஇச் சடம தாகிப்

பன்னெடுங் காலம் வாளா கிடந்தனம் பவமூழ் குற்றேம்

அன்னது தனக்குத் தீர்வொன் றருளென அண்ணல் சொல்வான்.     41

 

மங்கியே உணர்வு சிந்தி மறைமுறை பு£¤யா நீரால்

உங்கள்பால் வருவ வெல்லாம் உமையிடத் தாகு மன்றே

இங்குநீர் இன்று பற்றி இயற்றுநுங் கடன்கள் என்னப்

பங்கயா சனனுந் தேவர் யாவரும் பணிந்து போனார்.              42

 

வேறு

 

வாலி தாமயன் முதலினோர் வணங்கினர் ஏக

ஏல வார்குழல் உமையவள் பிரான்கழல் இறைஞ்சி

மேலை நாளுயிர்த் தொகையினுக் கெய்திய வினையென்

பால்வ ரும்பரி சென்கொலோ பணித்தருள் என்ன.        43

 

முன்பு நீயுனை வியந்தனை அத்துணை முனிந்து

நின்பொ ருட்டினால் உயிர்கள்தம் முணர்ச்சியை நீக்கிப்

பின்பு ணர்த்தினம் ஆதலின் அன்னவை பெற்ற

மன்பெ ரும்பவம் யாவையும் நின்னிடை வருமால்.               44

 

முறைய தாகுமால் பின்னுமொன் றுண்டுயிர் முற்றும்

பெறுவ தாமுனக் கல்லது பெரும்பவம் அவற்றால்

பொறைபு ரிந்திடற் கௌ¤யவோ போற்றுநீ யென்றான்

சிறுவி திக்கருள் பரிசினை முடிவுறச் செய்வான்.                 45

 

நாதன் அவ்வுரை இயம்பலும் உளம்நடு நடுங்கிப்

பேதை யேன்செயும் பிழைதணித் தென்வயிற் பெருகும்

ஏத மாற்றவோர் பரிசினை உணர்த்துதி என்னாப்

பாத பங்கயந் தொழுதலும் இனையன பகர்வான்.          46

 

ஆல மேபுரை நிறத்ததாய் அமிழ்தினுஞ் சுவைத்தாய்

ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதிபோய்

மூல மெய்யெழுத் தன்னதோ£¢ முதுவலம் புரியின்

கோல மாகிநோற் றிருத்தியால் உலகருள் குறிப்பால்.              47

 

அந்ந திக்குள்நீ பற்பகல் இருந்துழி அயன்சேய்

என்ன நின்றிடு தக்கனென பவன்அவண் எய்தி

உன்னை நேர்ந்துசென் றெடுத்தலுங் குழவியின் உருவாய்

மன்னி யாங்கவன் பன்னிபாற் சிறுமியாய் வளர்தி.         48

 

ஐந்தி யாண்டெனும் அளவைநிற் ககன்றுழி அதற்பின்

புந்தி ஆர்வமோ டெமைநினைந் தருந்தவம் புரிதி

வந்தி யாமது காணுறா மணஞ்செய்து மறையால்

இந்த மால்வரை யிடைஉனைத் தருதுமென் றிசைத்தான்.         49

 

இசைத்த வாசகம் உணர்தலும் இறையுரத் தழுந்தத்

தசைத்த பூண்முலை உமையவள் அன்னவன் சரணின்

மிசைத்தன் வார்குழல் தைவர வணங்கியே விடைபெற்

றசைத்த சிந்தையள் நீங்கினள் உலகுநோற் றதனால்.             50

 

(43. வாலிதாம் - வெண்ணிறமான.  ஏலம் - மயிர்ச்சாந்து.  

45. பரிசினை - வரத்தினை.  47. ஆலமேபுரை - விடம்போலும் (கரிய). 

காளிந்தி நதி - யமுனா நதி. மூலமெய் எழுத்து - பிரணவம்.  வலம்புரி - வலம்புரி சங்கு.  

48. பன்னி - மனைவி; இங்கு வேதவல்லி.  49. தருதும் - அழைத்து வருகின்றோம்.)

 

ஆதி தேவனை ஒருவியே  புடவியில் அணுகி

ஓத வேலையை மாறுகொள் காளிந்தி யுழிப்போய்

வேத மூலநேர் வால்வளை உருக்கொடு விளங்கி

ஏத மில்லதோர் பதுமபீ டத்தின்மேல் இருந்தாள்.          51

 

தௌ¤த ருஞசிவ மந்திரஞ் சிந்தனை செய்தே

அளவில் பற்பல் அன்னைநோற் றிருந்தனள் அவட்கண்

டுளம மகிழ்ந்தெடுத் தேகுவான் ஓங்குகா ளிந்தி

நளிகொள் சிந்துவில் தக்கன்உற் றனஇனி நவில்வாம்.             52

 

(51. புடவி - உலகம்.  ஓதம் - அலை.  வேதமூலம் நேர் - பிரணவத்தை ஒத்த.  

வால்வளை - வௌ¢ளிய சங்கு.  52. நளி - குளிர்ச்சி.  சிந்து - ஆறு; 

இங்கு யமுனா நதி.)

 

ஆகத் திருவிருத்தம் - 242

     - - -

 

 

6.  கா ளி ந் தி ப்  ப ட ல ம்

 

நீளுந் தகைசேர் நிலமா மகள்தன்

கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய்

நாளுந் தியவீ நணுகிக் கரிதாங்

காளிந் தியெனும் கடிமா நதியே.                        1

 

முத்துங் கதிரும் முழுமா மணியுந்

தொத்துந் தியசெந் துகிரும் மகிலும்

நத்தும் பிறவுந் நனிநல் குவபோல்

ஒத்துந் துவதவ் வொலிநீர் நதியே.                              2

 

எண்மேல் நிமிரும் மிருநீ£ பெருகி

விண்மேல் உலவா விரிகின் றதொரீஇ

மண்மேல் ஒலியா மலிகார் தழுவிக்

கொண்மூ வரவொத் துளதக் குடிஞை.                           3

 

மீனார் விழிமங் கையர்விண் ணுறைவோர்

வானார் செலவின் வருநீள் இடையில்

கானா மெனவுங் கடலா மெனவுந்

தானா குவதத் தடமா நதியே.                           4

 

பாரின் புடையே படரந் நதியை

நேரும் படியோர் நெடுநீ ருளதோ

காருந் தௌ¤யாக் கடலீ தெனவே

யாரும் பெருமைத் த•தா யிடவே.                              5

 

(1. நாள் உந்திய வீ - பகற்காலத்தில் மலர்ந்த நீலம் முதலிய பூக்கள்.  

2. துகிர் - பவளம்.  நந்து - சங்கு.  3. எண் - அளவற்றதாய்.  

கொண்மூ - மேகம்.  முடிஞை - காளிந்த நதி.)

 

துப்பா யினதாய்த் துவரத் தகைசேர்

அப்பா யுவரற் றழிவில் பொருளின்

வைப்பா யருளால் வருமவ் வொலியற்

கொப்பா குவதோ உவரா ழியதே.                       6

 

பாலோங் கியவிற் பணிலம் படர்வாள்

நீலோங் கியஅம் பொடுநே மியெலாம்

மேலோங் கியதன் மையின்மெய்த் துயில்கூர்

மாலோன் றனையொத் ததுமற் றதுவே.                  7

 

மீன்பட் டமையால் விரியுந் தொழுதிக்

கான்பட் டிடவுங் கழுநீ ருறலால்

தேன்பட் டிடவுந் திரைபட் டிடவும்

வான்பட் டிடுமோ சைமலிந் ததுவே.                            8

 

ஊன்பெற் றலகில் உயிர்பெற் றகிலம்

வான்பெற் றவள்வால் வளையா யுறவெங்

கோன்பெற் றிடுமக் கொடிமெய் யுருவந்

தான்பெற் றதையொத் தமுமா நதியே.                          9

 

வேறு

 

நஞ்செனக் கொலைசெய் கூர்ங்கண் நங்கையர் குடையக் கூந்தல்

விஞ்சிய நானச் சேறும் விரைகெழு சாந்தும் ஆர்ந்து

தஞ்செனக் கொண்ட நீலத் தன்மை குன்றாது மேலோர்

அங்சனப் போர்வை போர்த்தால் அன்னதால் அனைய நீத்தம்.      10

 

இவ்வுல கத்தோர் உள்ளத் தெய்திய இருளும் அன்னார்

வெவ்வினை இருளுந் தன்பால் வீழ்த்தியே விளங்கி ஏக

அவ்விருள் அனைத்துந் தான்பெற் றணைந்தென அங்கங் காராய்ச்

செவ்விதின் ஒழுகிற் றம்மா சீர்தகழ் யமுனை யாறே.             11

 

எத்திறத் தோரும் அஞ்ச எழுந்துமால் வரையிற் சார்ந்து

மெய்த்தலை பலவும் நீடி விரிகதிர் மணிகள் கான்றிட்

டொத்திடு கால்கண் மேவி ஒலிகெழு செலவிற் றாகி

மைத்துறு புனற்கா ளிந்தி வாசுகி நிகர்த்த தன்றே.         12

 

நிலமகள் உரோம வல்லி நிலையென நகிலின் நாப்பண்

இலகிய மணித்தார் என்ன இருங்கடற் கேள்வன் வெ•குங்

குலமகள் என்ன நீலக் கோலவா ரமுத மென்ன

உலவிய யமுனை எம்மால் உரைக்கலாந் தகைமைத் தாமோ.     13

 

இன்னபல் வகைத்தாய் நீடும் இரும்புனல் யமுனை யின்கண்

மன்னிய நெறிசேர் மாசி மகப்புன லாட வேண்டி

அந்நிலத் தவர்கள் யாரும் அடைந்தனர் உலக மெல்லாந்

தன்னிகர் இன்றி யாளுந் தக்கன்இத் தன்மை தேர்ந்தான்.           14

 

(6. துப்பு - தூய்மை.  துவர - முற்றிலும்.  7. பணிலம் - வலம்புரிச்சங்கு. 

அம்பு - நீர்.  நேமி - சக்கரவாகப் பறவை.  14. மாசிமகப்புனல் ஆடல் - 

மாசிமாத மக நாளன்று யமுனையில் நீராடல்.)

 

மெய்ப்பயன் எய்து கின்ற வினைப்படும் ஊழின் பாலால்

அப்பெரு நதியில் அஞ்ஞான் றாடலை வெ•கித் தக்கன்

மைப்படுங் கூர்ங்கண் வேத வல்லையை மகளி ரோடும்

ஒப்பில்பல் சனத்தி னோடும் ஒல்லைமுன் செல்ல உய்த்தான்.      15

 

மாற்றமர் செம்பொற் போயில் வயப்புலித் தவிசின் மீதாய்

வீற்றிருந் தருடல் நீங்கி விரிஞ்சமு முனிவர் யாரும்

ஏற்றதோர் ஆசி கூற இமையவர் கணமா யுள்ளோர்

போற்றிட யமுனை யென்னும் புனலியா றதன்கட் போனான்.       16

 

போனதொர் தக்கன் என்போன் புரைதவிர் புனற்கா ளிந்தித்

தூநதி யிடைபோய் மூழ்கித் துண்ணென வரலும் ஓர்பால்

தேனிமிர் கமல மொன்றிற் சிவனிடத் திருந்த தெய்வ

வானிமிர் பணிலம் வைக மற்றவன் அதுகண் ணுற்றான்.          17

 

வேறு

 

கண்ணுறுவான் நனிமகிழ்ந்தே கையினையுய்த்

தெடுத்திடுங்காற் காமர் பெற்ற

பெண்ணுருவத் தொரு குழவி யாதலும்விம்

மிதப்பட்டுப் பிறைவாழ் வேணி

அண்ணலருள் புரிவரத்தாற் கவுரியே

நம்புதல்வி யானாள் என்னா

உண்ணிகழ்பே ருணர்ச்சினாற் காணுற்றுத்

தேவர்குழாம் ஒருவிப் போனான்.                       18

 

அந்நதியின் பால்முன்னர் அவன்பணியாற்

சசிமுதலாம் அணங்கி னோர்கள்

துன்னினராய் வாழத்தெடுப்பத் துவன்றுபெருங்

கிளைஞரொடுந் தூநீ ராடி

மன்னுமகன் கரைஅணுகி மறையிசைகேட்

டமர்வேத வல்லி யென்னும்

பன்னிதனை யெய்தியவள் கரத்தளித்தான்

உலகீன்ற பாவை தன்னை.                                     19

 

ஏந்துதனிக் குழவியினைத் தழீஇக்கொண்டு

மகிழ்ந்துகுயத் திழிபா லார்த்திக்

காந்தண்மலர் புரைசெங்கைச் சூர்மகளிர்

போற்றிசைப்பக் கடிதின் ஏகி

வாய்ந்ததன திருக்கையிடைப் புக்கனளால்

தக்கன் அங்கண் வானோ ரோடும்

போந்துமணிக் கோயில்புக்குத் தொன்முறைபோல்

அரசியற்கை புரிந்தி ருந்தான்.                           20

 

(16. விரிஞ்சன் - பிரமன்.  17. வான் இமிர் - வெண்ணிறம் பொருந்திய.  

18. கவுரி - அம்பிகை.  19. சசி - இந்திராணி.  20. குயத்து இழிபால் - 

முலைப்பால். சூர்மகளிர் - சூரரமகளிர்.)

 

ஆகத் திருவிருத்தம் - 262

     - - -

 

 

7.  உ மை  த வ ம் பு ரி  ப ட ல ம்

 

கொண்டுதன தில்லில் குறுகியபின் வேதவல்லி

மண்டுபெருங் காதலொடு மகண்மையாவ ளர்த்தனளால்

அண்டமள வில்லனவும் அலகிலா உயிர்த்தொகையும்

பண்டுதன துந்தியினால் படைத்தருளும் பராபரையை.             1

 

வளருமதிக் குழவியென மாநிலமேல் தவழ்தலொடுந்

தளருநடை பயில்கின்ற தாறுமுடன் தப்பியபின்

முளையெயிறுள் ளெழுபோத முளைத்ததெனத் தோன்றுதலும்

அளவிலுயிர் முழுதீன்றாள் ஐந்தாண்டு நிரம்பினளால்.            2

 

ஆறான ஆண்டெல்லை அணைதலும்அம் பிகைதனக்கோர்

கூறான பிரான்றன்னைக் கோடன்முறை குணித்தனளாய்

மாறாது நோற்பலென மனங்கொண்டி யாய்தனக்கும்

பேறான தக்கனெனும் பெருந்தவற்கும் இ•துரைத்தாள்.            3

 

கூறுவதொன் றுமக்குண்டால் குரவீர்காள் இதுகேண்மின் 

ஆறுபுனை செஞ்சடிலத் தண்ணலுக்கே உரித்தாகும்

பேறுடையேன் அவன்வதுவை பெறுவதற்கு நோற்பலியான்

வேறொருசார் கடிமாடம் விதித்தென்னை விடுத்திரென.           4

 

நன்றென்று மகிழ்சிறந்து நல்லாயுந் தந்தையுமாய்ப்

பொன்துஞ்சு தமதிருக்கைப் பெருவில்நகர்ப் புறத்தொருசார்

அன்றங்கொர் கடிமாடம் அணிசிறக்கப் புனைவித்துச்

சென்றங்கண் தவமியற்றச் சேயிழையை விடுக்கின்றார்.           5

 

முச்சகமுந் தருகின்ற முதல்விதனைத் தம்மகளென்

றிச்சைகொடு நனிபோற்றி இருவரும்நா ரொடுநோக்கி

உச்சியினைப் பன்முறைமோந் துயிர்த்தம்மோ உன்னுளத்தின்

நச்சியநோன் பியற்றுகென நாரியரோ டேகுவித்தார்.               6

 

மாதவர்பால் விடைபெற்று வல்விரைவுற் றேகுதலும்

வேதவல்லி அதுகாணா மெய்க்கணவன் தனைநோக்கிப்

பேதையிவள் சிவனையுணர் பெற்றிமைஎன் மொழிகென்ன

ஈதனையள நிலைமையென யாவுமெடுத் தியம்புகின்றான்.         7

 

பொங்குபுனல் தடத்திடையான் புரிகின்ற தவங்காணூஉச்

சங்கரன்அங் கெய்திடலுந் தாழ்வில்வரம் பலகொண்டுன்

பங்கினள்என் மகளாகப் பண்ணவநீ என்மருகாய்

மங்கலநல் வதுவையுற மறையவனாய் வருகென்றேன்.           8

 

(1. மகண்மைஆ(க) - மகள் தன்மையாக.  பராபரை - அம்பிகை.  

2. போதம் - ஞானபோதம்.  3. யாய் - தாய்; வேதவல்லி.  

4.குரவீர்காள் - பெற்றோர்களே!  வதுவை - திருமணம்.  கடி - காவல்.  

6. முச்சகம் - மூவுலகம்.  நார் - அன்பு.  அம்மோ - அன்னையே.  

8. மறையவனாய் - அந்தணனாய்.)

 

அற்றாக நின்பாலென் றருள்செய்தான் அம்முறையே

கற்றாவின் ஏறுயர்த்த கண்ணுதலோன் முழுதுலகும்

பெற்றாளை யமுனையென்னும் பெருநதியில் உய்ப்பநம்பால்

உற்றாள்மற் றெஞ்ஞான் உணர்வினொடு வைகினளால்.            9

 

மாதவமோர் சிலவைகல் பயின்றுமதிக் கோடுபுனை

ஆதிதனக் கன்பினளாய் அருந்துணைவி யாகின்றாள்

பேதையென நினையற்க பெருமாட்டி தனையென்னக்

காதலிவிம் மிதமெய்திக் கரையிலா மகிழ்சிறந்தாள்.               10

 

இந்நிலைசேர் முதுகுரவர் ஏவலினால் சிலதியராங்

கன்னியர்கள் சூழ்போதக் கடிமாடம் போந்துமையாள்

சென்னிநதி புனைந்தபிரான் திருநாமம் உள்ளுறுத்தி

நன்னியமந் தலைநின்று நாளுநனி நோற்கின்றாள்.        11

 

வேறு

 

ஈண்டுறு மடவார் சூழ இம்முறை இருத்த லோடும்

ஆண்டுபன் னிரண்டு சென்ற அம்பிகைக் கனைய காலை

வேண்டிய வேண்டி யாங்கு விரதரு¢குதவும் வண்மை

பூண்டிடு பரமன் அன்னாள் புரிந்திடு தவத்தைக் கண்டான்.  12

 

கண்டு மற்றவளை ஆளக் கருதியே கயிலை யென்னும்

விண்டிலை இகந்து முந்நூல் வியன்கிழி தருப்பை யார்த்த

தண்டுகைக் கொண்டு வேதத் தலைநெறி ஒழுக்கம் பூண்ட

முண்டவே தியனில் தோன்றி முக்கண்எம் பெருமான் வந்தான்.    13

 

தொக்குலாஞ் சூலத் தன்னல் தொல்புவி உய்ய வேதச்

செக்கர்நூ புரத்தாள் பின்னுஞ் சேப்புற மண்மேற் போந்து

தக்கமா புரத்தின் நண்ணிச் சங்கரி யென்னுந் தொல்பேர்

மைக்கணாள் நோற்குந் தெய்வ மல்லல்மா ளிகையிற் புக்கான்.     14

 

அன்னைநோற் கின்ற கோட்டத் தணுகியே அளப்பில் மாதர் 

முன்னுறு காவல் போற்றும் முதற்பெருங் கடையிற் சாரக்

கன்னியர் எவரும் வந்து கழலிணை பணித லோடும்

என்னிலை தலைவிக் கம்ம இயம்புகென் றிசைத்து நின்றான்.      15

 

நிற்றலுங் கடைகாக் கின்ற நோ¤ழை மகளிர் சில்லோர்

பொற்றொடி உமைபால் எய்திப் பொன்னடி வணங்கி ஈண்டோர்

நற்றவ மறையோன் நின்பால் நண்ணுவான் விடுத்தான் என்ன

மற்றவன் தன்னை முன்கூய் வல்லைநீர் தம்மின் என்றான்.               16

 

(9. கற்றாவின் ஏறு - எருது. (கன்று+ஆ = கற்றா - கன்றையுடைய பசு).  

11. முதுகுரவர் - தாய் தந்தையர்.  சிலதியர் - தோழியர்.  நனி - மிகுதி.  

13. விண்டு - மலை.  கிழி - கோவணம்.  வேதத்தலை நெறி யொழுக்கம் - 

பிரமசரியம். 15. கோட்டம் - தவச்சாலை.  என்நிலை - எனது வருகை.)

 

தம்மினீர் என்ற லோடுந் தாழ்ந்தனர் விடைபெற் றேகி

அம்மினேர் கின்ற நாப்பண் அரிவையர் கடைமுன் னேகி

வம்மினோ அடிகள் எம்மோய் வரவருள் புரிந்தாள் என்னச்

செம்மலும் விரைவிற் சென்று தேவிதன் னிருக்கை சேர்ந்தான்.    17

 

தேவர்கள் தேவன் அங்கோர் சீர்கெழு மறையோன் போலாய்

மேவிய காலை அம்மை விரைந்தெதிர் ஏகி மற்றென்

காவலர் தம்பால் அன்பர் இவரெனக் கருதி அன்னான்

பூவடி வணங்கி வேண்டும் பூசனை புரிந்து நின்றாள்.              18

 

நேயமொ டருச்சித் தேத்தி நின்றவள் தன்னை நீல

ஞாயிறு நிகர்த்த மேனி நகைமதி முகத்தாய் ஈண்டியாம்

ஏயின தொன்றை வெ•கி விரைந்தருள் புரிதி என்னின்

ஆயது புகல்வம் என்ன அம்மையிங் கிதனைச் சொல்வாள்.        19

 

எனக்கிசை கின்ற தொன்றை இசைத்தியே என்னின் இன்னே

நினக்கது கூடும் இங்ஙன் நினைத்ததென் மொழிதி என்ன

உனைக்கடி மணத்தின் எண்த உற்றனன் அதுவே நீஎன்

தனக்கருள் புரியு மாறு தடுத்தெதிர் மொழியல் என்றான்.          20

 

வேறு

 

அத்தன் ஈதுரைத் தலோடும் அம்மை அங்கை யாற்செவி

பொத்தி வெய்தெனக் கனன்று புந்தி நொந்து யிர்த்துநீ

இத்தி றம்புகன்ற தென்னை என்னை யாளு கின்தோர்

நித்தன் வந்துவதுவை செய்ய நீள்த வஞ்செய் தேனியான்.         21

 

என்ன லோடும் இனையன் என்றி யாருமென்றும் இறையுமே

முன்னொ ணாதுநின்ற ஆதி முதல்வன் நின்னை வதுவையால்

மன்னு கின்றதரிது போலும் மாத வங்கள் ஆற்றியே

கன்னி நீவருந்தல் என்று கழற மாது புகலுவாள்.          22

 

பரம னேவிரும்பி வந்து பாரின் மாம ணஞ்செய

அரிய மாதவங்கள் செய்வல் அன்ன தற்கு முன்னவன்

வருகி லாதுதவிர்வன் என்னின் வலிதின் ஆவிநீப் பன்யான்

சரதம் ஈது பித்தனோ சழக்கு ரைத்தி ருத்திநீ.                    23

 

போதி போதிஎன்  றுதானொர் புடையின் ஏக உவகையாய்

மாது நின்தன் அன்பு முள்ள வன்மை தானும் நன்றெனா

ஆதி தேவன்ஏ னையோர்கள் அறிவு றாத வகையவள்

காதல் நீடு தனதுதொல் கவின்கொள் மேனி காட்டினான்.          24

 

ஆதி தன்தொல் உருவுகாட்ட அமலை கண்டு மெய்பனித்

தேதி லாரெ னாநினைக் திகழ்ந்த னன்எ னாவவன்

பாத பங்க யங்களிற் பணிந்து போற்றி செய்தியான்

பேதை யேனு ணர்ந்திலேன் பிரான்ம றைந்து வந்ததே.            25

 

(17. அம் மின் நேர்கின்றநாப்பண் - அழகிய மின்னலை யொத்த இடையினராகிய.  

எம்மோய் - எமது அன்னை.  செம்மல் - இறைவனாகிய பிரமசாரி.  

20. கடிமணம் - விவாகம். 23. சழக்குஉரைத்து - குற்றமான மொழிகளைக் கூறி. 

25. அமலை - அம்பிகை; தாட்சாயணி. ஏதிலார் - அயலார்.  பிரான் - தேவரீர்.)

 

உன்ன ருட்கண் எய்துமேல் உணா¢ச்சி யெய்தி நிற்பன்யான்

பின்னொர் பெற்றி இல்லையாற் பிழைத்த துண்டு தணிதிநீ

எனது நற்றவத் திதன்னை இனிதின் எந்தை கண்ணுறீஇ

நின்னி யற்கைநன் றுநன்று நீது ளங்கல் என்றனன்.               26

 

என்ற நாத னைப்பினும் இறைஞ்சி யெம்பி ராட்டிபால்

நின்ற மாதரைத் தனாது நேத்தி ரத்தின் நோக்கலாள்

ஒன்றும் உன்னல் செய்திலாள் உலப்பில் எந்தை தொல்புகழ்

நன்று போற்றெடுத் துநிற்ப நாட்டம் நீரு குத்தரோ.                27

 

கண்டு பாங்க ராயமாதர் கன்னி எம்மை நோக்கலாள்

மண்டு காதல் அந்தணாளன் மாயம் வல்ல னேகொலோ

பண்டு நேர்ந்துளா ரையுற்ற பான்மை போலும் மேலியாம்

உண்டு தேரு மாறதென் றுளத்தில் ஐயம் எய்தினார்.              28

 

சிலதி யர்க்குள் விரைவிரைந்து சிலவர் சென்று தக்கனென்

றுலகு ரைக்கும் ஒருவன்வைகும் உறையுள் நண்ணி உன்மகள்

நிலைமை ஈது கேளெனா நிகழ்ந்த யாவும் முறையினால்

வலிது கூற மற்றவன் மனத்தி லோர்தல் உற்றனன்.              29

 

போத நீடு புந்தியால் புலப்ப டத்தெ ரிந்துழி

ஆதி யந்த மின்றிநின்ற அண்ணல் வந்த தாகலும்

கூதி லாம கிழ்ச்சிபெற் றெழுந்து துள்ளி யான்பெறு

மாதை அங்கவற் களிப்பன் வதுவை ஆற்றி என்றனன்.            30

 

(26. பிழைத்தது - குற்றம் செய்தது.  துளங்கல் - நடுங்காதே.  

27. உன்னல் - நினைத்தல். 

 30. போத நீடு புந்தியால் - ஞான திருஷ்டியினால்.)

 

ஆகத் திருவிருத்தம் - 292

     - - - 

 

 

8.  தி ரு ம ண ப்  ப ட ல ம்

 

தொல்லையில் வதுவையந் தொழிந டாத்திட

ஒல்லுவ தெற்றையென் றுளங்கொண் டாய்வுழி

நல்லன யாவும்அந் நாளில் நண்ணலும்

எல்லையில் உவகைமிக் கேம்பல் எய்தினான்.                    1

 

அண்ணலுக் கிப்பகல் அணங்கை ஈவனென்

றுண்ணிகழ் ஆர்வமோ டுளத்தில் தூக்கியே

விண்ணவர் யாவரும் விரைந்து செல்லிய

துண்ணென ஒற்றைத் தூண்டி னானரோ.                 2

 

தன்னகர் அணிபெறச் சமைப்பித் தாங்கதன்

பின்னுற முன்னினும் பெரிதும் ஏர்தக

மன்னுறு கோயிலை வதுவைக் கேற்றிடப்

பொன்னகர் நாணுறப் புனைவித் தாரோ.                  3

 

(1. தொல்லை - பழமை: வேதமுறை.  ஏம்பல் - இறுமாப்பு.)

 

கடிவினை புரிதரக் காசின் றாக்கிய

படியறு திருநகர் பைய நீங்கியே

கொடியுறழ் மெல்லிடைக் குமரி பால்வரும்

அடிகளை அணுகினன் அடிகள் போற்றியே.                       4

 

அணுகினன் அண்ணல்நீ அணைந்து மற்றிவள்

மணநய வேட்கையால் மாது நோற்றனள்

நணுகுதி அடியனேன் நகரின் பாலெனா

நுணுகிய கேள்வியான் நுவன்று வேண்டவே.                     5

 

இறையவன் நன்றென எழுந்து சென்றொராய்

நறைமலர் செறிகுழல் நங்கை யாயொடு

மறல்கெழு மனத்தினான் மனையுற் றானரோ

அறைதரு நூபுரத் தடிகள் சேப்பவே.                             6

 

பூந்திரு நிலவிய பொருவில் கோயின்முன்

காந்தியொ டேகலுங் கடவுள் முன்னரே

வாய்ந்ததொ ரெண்வகை மங்க லங்களும்

ஏந்தினர் ஏந்திழை மார்கள் எய்தினார்.                           7

 

தையலர் மங்கலத் தன்மை நோக்கியே

வையகம் உதவிய மங்கை தன்னுடன்

ஐயனும் உறையுளின் அடைந்து தானொரு

செய்யபொற் பீடமேற் சிறப்பின் வைகினான்.                     8

 

அன்னது காலையில் ஆற்று நோன்புடைக்

கன்னியை மறைக்கொடி கண்டு புல்லியே

தன்னுறு மந்திரந் தந்து மற்றவள்

பின்னலை மென்மெலப் பிணிப்பு நீக்கினாள்.                     9

 

சிற்பரை ஓதியின் செறிவை ஆய்ந்தபின்

பொற்புறு நானநெய் பூசிப் பூந்துவர்

நற்பொடி தீற்றியே நவையில் கங்கைநீர்

பற்பல குடங்கரின் பாலுய்த் தாட்டினாள்.                 10

 

ஆட்டினள் மஞ்சனம் அணிய பூந்தொடை

கூட்டினள் பொற்கலை சூழ்ந்து பல்கலன்

பூட்டினள் எம்பிரான் புடையில் உய்த்தனள்

ஈட்டுறும் உயிர்த்தொகை ஈன்ற ஆய்தனை.                      11

 

(4. கடிவினை - திருமணம்.  பைய - மெல்ல.  6. மறல் - மயக்கம்.  

7. எண்வகை மங்கலம் - அட்ட மங்கலப் பொருள்கள்.  9. பின்னல் - கூந்தல்.  

10. சிற்பரை - ஞான வடிவினள்; அம்பிகை.  நானம் - புனுகு.  பூந்துவர் நற்பொடி - 

அழகிய நெல்லி முதலிய வாசனைப் பொடிகள்.  குடங்கர் - குடம்.)

 

மணவணி முற்றுறு மாது போந்துதன்

கணவன தொருபுடை கலந்த காலையில்

பணைமுத லாகிய பல்லி யங்களும்

இணையற இயம்பின ரியாரும் ஏத்தவே.                 12

 

தூதுவர் உரைகொளீஇத் துண்ணென் றேகியே

மாதவன் முதலிய வானு ளோரெலாம்

போதினை வளைதரு பொறிவண் டாமென

ஆதியை அடைந்தனர் அடிப ணிந்துளார்.                 13

 

வீழ்குறும் இழுதெனும் வெய்ய நோன்குரல்

காழ்கிளர் திவவுடைக் கடிகொள் யாழினை

ஊழ்கிளர் கின்னரர் உவணர் ஏந்துபு

கேழ்கிளர் மங்கல கீதம் பாடினார்.                               14

 

கானுறு ப•றலைக் காவு கான்றிடு

தேனுறு விரைமலர் அடிகள் சிந்துபு

வானவர் மகளிர்கள் வணங்கி வாழத்துரை

ஆனவை புகன்றனர் அமலை பாங்கரில்.                 15

 

எல்லைய தாகலும் இருந்து தக்கனாங்

கொல்லையின் மறைமொழி உரைத்துத் தன்மனை

வல்லிபொற் சிரகநீர் மரபின் வாக்குற

மெல்லென அரனடி விளக்கி னானரோ.                   16

 

விளக்கிய பின்றையில் விரைகொள் வீமுதற்

கொளப்படு பரிசெலாங் கொணர்ந்து மற்றவற்

குளப்படு பூசனை உதவி மாதினை

அளித்திட உன்னினன் அமரர் போற்றவே.                17

 

சிற்கன வடிவினன் செங்கை யுள்உமை

நாற்கரம் நல்குபு நன்று போற்றுதி

நிற்கிவள் தன்னையான் நேர்ந்த னன்எனாப்

பொற்கர கந்தரு புனலொ டீந்தனன்.                             18

 

மூர்த்தமங் கதனிடை முதல்வன் அம்பிகை

சீர்த்திடு மணவணி தெரிந்து கைதொழூஉ

நீர்த்தொகை கதிரொடு நிலவு கண்டுழி

ஆர்த்தென வழுத்தினர் அமரர் யாவரும்.                 19

 

மாடுறு திசைமுகன் மணஞ்செய் வேள்வியில்

கூடுறு கலப்பைகள் கொணர்ந்து நூன்முறை

நேடினன் சடங்கெலாம் நிரப்ப மால்முதல்

ஆடவர் இசைத்தனர் அமலன் வாய்மையே.                      20

 

(14. இழுது - நெய்.  நோன்குரல் - வலிய தந்தி.  உவணர் - கருடர்கள்.  

17. வீ - மலர்.  20. கலப்பைகள் - உபகரணங்கள்.  

அமலன் வாய்மை - வேதமொழிகள்.)

 

அன்னுழி உருவமும் அருவும் ஆவியும்

முன்னுறும் உணர்வுமாய் உலகம் யாவிற்கும்

நன்னயம் புணர்த்தியே நண்ணு நாயகன்

தன்னுரு ஔ¤த்தனன் அருளின் தன்மையால்.                    21

 

மறைந்தனன் இருத்தலும் மகிணன் காண்கிலாள்

அறந்தனை வளர்க்கும்எம் மன்னை நோற்றுமுன்

பெறும்பெரு நிதியினைப் பிழைத்து ளோரெனத்

துறந்தனள் உவகையைத் துளங்கி மாழ்கியே.                     22

 

பொருக்கென எழுந்தனள் பூவின் மீமிசைத்

திருக்கிளர் திருமுதல் தெரிவை மாதர்கள்

நெருக்குறு சூழல்போய் நிறங்கொள் தீமுகத்

துருக்கிய பொன்னென உருகி விம்மினாள்.                       23

 

அயிர்த்தனள் கலுழ்ந்தனள் உணர்வு மாழ்கியே

அயர்த்தனள் புலர்ந்தனள் அலமந் தங்கமும்

வியர்த்தனள் வெதும்பினள் விமலன் கோலமே

மயிர்த்தொகை பொடிப்புற மனங்கொண் டுன்னுவாள்.             24

 

புரந்தரன் மாலயன் புலவர் யாவரும்

நிரந்திடும் அவையிடை நிறுக்கும் வேள்விவாய்

இருந்தனன் மாயையால் இறைவன் துண்ணெனக்

கரந்தனன் ஆதலின் கள்வன் போலுமால்.                 25

 

எய்தியெற் கொண்டதோர் இறைவன் தன்னையான்

கைதவ னேயெனக் கருத லாகுமோ

மெய்தளர் பான்மையின் வினையி னேன்இவண்

செய்தவஞ் சிறிதெனத் தேற்றல் இன்றியே.                       26

 

வேறு

 

நன்றென் றுன்னி உயிர்த்திரங்கும் இறைவி செய்கை எதிர்நோக்கி

மன்றல் நாறுங் குழல்வேத வல்லி புல்லி மனந்தளரேல்

உன்றன் கணவன் பெரும்வாயில் தவமே இன்னும் உஞற்றுகென

நின்ற திருவும் நாமகளும் பிறரும் இனைய நிகழ்த்தினரால்.       27

 

அன்னை வாழி இதுகேண்மோ அகில முழுதும் அளித்தனையால்

என்ன பொருளும் நின்னுருவே யாண்டும் நீங்கா நின்கணவன்

தன்னை மறைக்கு மறையுளதோ தவத்தை அளிப்பான் நினைந்தனையோ

உன்னல் அரிதாம் நுமதாடல் முழுதும் யாரே உணர்கிற்பார்.        28

 

வாக்கின் மனத்தில் தொடர்வரு நின்மகிணன் தனையும் உன்றனையும்

நோக்க முற்றோம் தஞ்சமென நுவறல் செய்ய வினையாவும்

போக்க லுற்றோம் தோற்றமுறும் புரையுந் தீர்ந்தோம் போதமனந்

தேக்க லுற்றோம் உய்ந்துமியாஞ் செய்யுந் தவமுஞ சிறிதன்றே.    29

 

(25. புலவர் - தேவர்.  26. கைதவன் - வஞ்சகன்.  29. மகிணன் - கணவன்.)

 

என்னா இயம்பி வாழ்த்தெடுப்ப இறைவி அவர்க்கண் டினிதருள்செய்

தன்னார் பொய்தல் ஒருவிப்போய் அருமா தவமே புரிவாளாய்

முன்னா முன்னைக் கடிமாடம் முயன்று போந்தாள் இவ்வனைத்தும்

நன்னா ரணனே முதலானோர் நோக்கி நனிவிம் மிதரானார். 30

 

எங்குற் றனன்கொல் இறையென்பார் இ•தோர் மாயம் எனவுரைப்பார்

மங்கைக் கொளித்த தென்னென்பார் வாரி காண்டு மேலென்பார்

அங்கித் தகைய பலபலசொற் றலமந் தேங்கி யதிசயித்துக்

கங்குற் போதின் மாசூர்ந்த கதிர்போன் மாழ்கிக் கவலுற்றார்.        31

 

நோக்குற் றனைய பான்மைதனை நொய்தில் தக்கன் நனிகனன்று

தீக்கட் கறங்க வெய்துயிர்த்துச் செம்பொற் கடகக் கைபுடைத்து

மூக்கிற் கரந்தொட் டகம்புழுங்க முறுவல் செய்து முடிதுளக்கி

ஆக்கத் தொடியாம் புரிவதுவை ஆற்ற அழகி தாமென்றான்.        32

 

வரந்தா னுதவும் பெற்றியினான் மற்றென் மகடூஉ வயின்வாரா

இரந்தான் அதனை யான்வினவி இயல்பின் வதுவை முறைநாடி

நிரந்தார் கின்ற சுரர்காண நெறியால் நேர்ந்தேன் நேர்ந்ததற்பின்

கரந்தான் யாரு மாமுற நவையொன் றென்பாற் கண்டானோ.       33

 

புனையுந் தொன்மைக் கடிவினையைப் புன்மை யாக்கி ஊறுபுணர்த்

தெனையும் பழியின் மூழ்குவித்தே இறையும் எண்ணா தொளித்தானே

அனையுந் தாதை யுந்தமரும் ஆரும் இன்றி அகன்பொதுவே

மனையென் றாடும் ஒருபித்தன் மறையோ னாகில் மயல்போமோ.  34

 

ஆயிற் றீதே அவனியற்கை அறிந்தேன் இந்நாள் யானென்று

தீயுற்  றெனவே உளம்வெதும்பித் திருமால் முதலாந் தேவர்தமைப்

போயுற் றிடுநும் புரத்தென்று போக விடுத்துப் புனிதன்செய்

மாயத் தினையே யுன்னியுன்னி வதிந்தான் செற்றம் பொதிந்தானே. 35

 

பொன்னார் மேனிக் கவுரிமுன்னைப் பொலன்மா ளிகையிற் போந்துலப்பின்

மின்னார் செறிந்த பண்ணையுடன் மேவி அங்கண் வீற்றிருந்து

பன்னாள் ஈசன் தனையெய்தப் பரிந்து நோற்கப் பண்ணவனோர்

நன்னாள் அதனில் தாபதன்போல் நடந்தான் அவள்தன் இடந்தானே.36

 

நலனேந் தியவெண் டலைக்கலனும் நறிய களப நீற்றணியுங்

களனேந் தியகண் டிகைதொடுத்த கவின்சேர் வடமுங் கடிப்பிணையும்

நிலனேந் தியதா ளிடைமிழற்றும் நீடு மறையின் பரியகமும்

வலனேந் தியசூ லமும்பின்னல் வனப்புங் காட்டி வந்தனனே.       37

 

வேறு

 

வந்துமை முற்பட வந்த வனைக்கண்

டெந்தை பிராற்கினி யாரிவ ரென்னாச்

சிந்தனை செய்தெதிர் சென்றுகை கூப்பி

அந்தரி போற்றினள் அன்புறு நீரால்.                             38

 

(31. வாரி - வரவுகட்காய ஏது.  கதிர் - சந்திரன்.  33. மகடூஉ - மகள்.  

36. பண்ணை - கூட்டம்.  தாபதன் - தவசி.  37.பரியகம் - பாதகிண்கிணி.)

 

பற்றொடு சென்று பராய்த்தொழும் எல்லைப்

பெற்றம் அதன்மிசை பெண்ணிட மன்றி

மற்றுள தொல்வடி வத்தொடு நித்தன்

உற்றனன் அவ்விடை ஒண்டொடி காண.                 39

 

பார்ப்பதி யாகிய பாவை நுதற்கண்

நாற்புயன் என்வயின் நண்ணினன் என்னா

ஏற்புறு சிந்தைகொ டின்னல் இகந்தே

மேற்படும் ஓகையின் வீற்றின ளானாள்.                 40

 

பன்முறை வீழ்ந்து பணிந்து பராவி

என்முனம் முந்தை இகந்தனை இன்றிப்

புன்மையை நீக்குதி போந்தனை கொல்லோ

சின்மய என்றெதிர் சென்றுரை செய்தாள்.                41

 

அம்முறை செப்பும் அணங்கு தனைக்கூய்

மைம்மலி கண்டன் மலர்க்கரம் ஓச்சித்

தெம்முனை சாடுறு சீர்விடை மேற்கொண்

டிம்மென வேதன் இடத்தினில் வைத்தான்.                       42

 

நீல்விட மேயினன் நேரிழை யோடும்

பால்விடை ஊர்ந்து படர்ந்தனன் வௌ¢ளி

மால்வரை ஏகினன் மற்றவள் பாங்கர்

வேல்விழி மாதர் விரைந்தது கண்டார்.                          43

 

இக்கென உட்கி இரங்கினர் ஏகித்

யூக்கன் இருந்திடு சங்கமுன் ஆகிச்

செக்க ரெனத்திகழ செஞ்சடை அண்ணல்

புக்கன னால்ஒரு புண்ணிய னேபோல்.                   44

 

கண்டனள் நின்மகள் கைதவம் ஓராள்

அண்டினள் சேர்தலும் ஆயவன் வல்லே

பண்டை யுருக்கொடு பாற்பட அன்னாட்

கொண்டுசெல் வான்இது கூறுவ தென்றார்.                       45

 

பாங்கியர் இன்ன பகர்ந்தன கேளாத்

தீங்கனல் மீமிசை தீயதோர் தூநெய்

ஆங்குபெய் தென்ன அளப்பில செற்றந்

தாங்கி யுயிர்ப்பொடு தக்கன் இருந்தான்.                  46

 

அக்கணம் வானவர் ஆயினர் எல்லாந்

தொக்கனர் வந்து தொழுங்கடன் ஆற்றிப்

பக்க தூடு பராவினர் வைகத்

தக்கன் அவர்க்கிவை சாற்றுதல் உற்றான்.                47

 

(39. பராய் - துதித்து.  ஒண்டொடி - தாட்சாயணி.  44. இக்கென விரைவாக.  

உட்கி - நடுங்கி.  40. கனல் மீமிசை - அக்கினியின்மேல்.)

 

என்புகல் வேன்இனி என்மகள் தன்னை

அன்புற வேட்டருள் ஆல மிடற்றோன்

மன்புனை யுங்கடி மன்றல் இயற்று

முன்பு கரந்தனன் முன்னரி தாகி.                        48

 

அற்றல தின்றும் என்ஆடவள் பாங்கில்

கற்றை முடிக்கொள் கபாலி யெனச்சென்

றுற்றனன் என்முன் உறாமல் ஔ¤த்தான்

பற்றி னன்அன் னவளைப் படர்கின்றான்.                 49

 

அன்னையும் அத்தனும் ஆர்வமொ டீய

மன்னிய கேளிர் மகிழ்ந்தனர் வாழ்த்தப்

பின்னர் மகட்கொடு பேர்ந்திலன் ஈன்றோர்

தன்னை மறைத்திது செய்வது சால்போ.                 50

 

இங்கிது போல்வன யாவர்செய் கிற்பார்

சங்கர னேல்இது தான்செய லாமோ

நங்கள் குலத்தை நவைக்கண் உறுத்தான்

அங்கது மன்றியென் னாணையும் நீத்தான்.                       51

 

வேறு

 

இரந்தனன் சிவனெனும் ஏதம் எங்கணும்

நிரந்தது மற்றது நிற்க இவ்விடை

கரந்தனன் என்பதோர் உரையுங் காசினி

பரந்தது வேறுமோர் பழியுண் டாயதே.                           52

 

பண்டொரு பாவையைப் பரிந்து மன்றல்வாய்

ஒண்டொடிச் செங்கையின் உதக மேவுறக்

கொண்டிலன் என்பதுங் கொள்ளு நீரரைக்

கண்டிலன் என்பதுங் காட்டி னானரோ.                   53

 

என்றிவை பற்பல இசைத்துச் செய்நலங்

கொன்றிடு சிறுவிதி குழுமித் தன்புடைத்

துன்றிய சுரர்தமைத் தொல்லைத் தத்தமூர்

சென்றிட ஏவினன் செயிர்த்து வைகினான்.                       54

 

கறுவுகொள் நெஞ்சொடு கயவன் அன்றுதொட்

டிறைவனை நினைக்கிலன் எள்ளும் நீர்மையான்

உறுதலும் சிலபகல் உயங்கி இச்செயல்

அறிதரும் அயன்முதல் அமரர் தேர்குவார்.                       55

 

(51. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்; சிவன்.  52. நிரந்தது - பரவியது.  

கரந்தனன் - மறைந்தனன்.  வேறும் ஓர்பழி - இங்கு உமையைத் திருடிச் சென்றது.  

54. செய்நலம் கொன்றிடு - செய்ந்நன்றியை மறந்த.  55. கறுவு - கடுங்கோபம்.  

கயவன் - அறிவில்லாதவன்; தக்கன்.  உயங்கி - வருந்தி.)

 

ஆகத் திருவிருத்தம் - 347

     - - - 

 

9.  த க் க ன்  க யி லை  செ ல்  ப ட ல ம்

 

மெய்ம்மா தவத்தால் திருத்தக்கு விளங்கு தக்கன்

எம்மான் தனைஎண் ணலன்ஆவி இழப்பன் வல்லை

அம்மா வியாமும் அவன்ஏவலை யாற்று கின்றாம்

நம்மா ருயிர்க்கும் இறுவாய் நணுகுற்ற போலும்.                 1

 

ஆனால் இனித்தக் கனைஎண் ணலமாயின் அன்னான்

மேனாள் அரனால் பெறுகின்றதொர் மேன்மை தன்னால்

மானாத சீற்றங் கொடுநம்பதம் மாற்றும் என்னா

வோநாம் இனிச்செய் பரிசென்றிவை ஓர்ந்து சொல்வார்.           2

 

ஈசன் கயிலை தனில்தக்கன் எழுந்து செல்ல

மாசொன்று சிந்தை கொளத்தேற்றினம் வல்லை யென்னில்

நேசங் கொடுபோய் அவற்காணின் நிலைக்கும் இச்சீர்

நாசம் படலும் ஒழிவாகும் நமக்கும் என்றார்.                    3

 

வேதா முதலோர் இதுதன்னை விதியின் நாடித்

தீதான தக்கன்றனை மேவிநின் செய்த வத்தின்

மாதா னவளைச் சிவனொடு மறத்தி போலாம்

ஏதா முனது நிலைக்கம்ம இனைய தொன்றே.                    4

 

குற்றந் தெரிதல் அ•தேகுண னென்று கொள்ளில்

சுற்றம் மொருவற் கெவணுண்டு துறந்து நீங்கிச்

செற்றஞ் செய்கண்ணும் மகிழ்வுண்டிது சிந்தி யாயேல்

மற்றுன்னை வந்தோர் வசைசூழ்தரும் வள்ள லென்றார்.           5

 

முன்னின் றவர்கூ றியபான்மை முறையின் நாடி

என்னிங் கியான்செய் கடனென்ன இறைவி யோடும்

பொன்னஞ் சடையோன் றனைக்கண்டனை போதி என்ன

மன்னுங் கயிலை வரையே கமனம் வலித்தான்.                  6

 

கானார் கமலத் தயன்இந்திரன் காமர் பூத்த

வானாடர் யாரும் அவணுற்றிடும் வண்ண நல்கி

ஆனாத முன்பிற் றுணையோரொ டகன்று தக்கன்

போனான் அமலனமர் வௌ¢ளியம் பொற்றை புக்கான்.            7

 

வௌ¢ளிச் சயிலந் தனில்எய்தி விமலன் மேய

நள்ளுற்ற செம்பொற் பெருங்கோயிலை நண்ணி நந்தி

வள்ளற் குறைவுளெனுங் கோபுர வாயில் சாரத்

தள்ளற்ற காவல் முறைப்பூதர் தடுத்தல் செய்தார்.         8

 

(2. அன்னான் - அத் தக்கன்.  நம்பதம் - நம்முடைய பதவிகளை.  

4. நின் செய் தவத்தின் மாதானவள் - உனது பெரிய தவத்தால் சங்கு வடிவாக 

இருந்துவந்த சிவசத்தியாகிய அம்பிகை.  5. இங்குக் 'குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை' 

என்ற முதுமொழி உன்னற்பாலது.  வள்ளல் - வள்ளலே!  7. பொற்றை - மலை.)

 

கடிக்கொண்ட பூதர் நிரைதன்னைக் கனன்றி யான்முன்

கொடுக்கின்ற காதல் மடமான்தன்தன் கொழுந னோடும்

அடுக்கின்ற பான்மை இவணாடி அறிவன் நீவிர்

தடுக்கின்ற தென்கொ லெனக்கூறினன் தக்கன் என்போன்.           9

 

அவ்வா சகஞ்சொல் கொடியோனை அழன்று நோக்கி

மெய்வாயில் போற்றும் பெருஞ்சாரதர் மேலை ஞான்று

மைவாழுங் கண்டன் றனைஎள்ளினை மற்று நீயீண்

டெவ்வா றணைகின் றனைசால இழுதை நீராய்.                  10

 

முந்துற்ற தொல்லை எயின்மூன்றுறை  மொய்ம்பி னோர்கள்

நந்துற்ற வையந் தனைவானை நலிவ ரேனும்

எந்தைக்கு நல்லர் அவரன்பில் இறையும் நின்பால்

வந்துற்ற தில்லை எவணோஇனி வாழதி மன்னோ.               11

 

இறக்கின்ற வேலை இமையோர்கள்தம் இன்னல் நீக்கிக்

கறுக்கின்ற நீல மிடற்றெந்தை கருணை செய்த

சிறக்கின்ற செல்வ மிசைந்தன்னவன் செய்கை யாவும்

மறக்கின் றனைநீ யெவன்செய்குதி மாயை உற்றாய்.              12

 

ஈசன் தனது மலர்த்தாளை இறைஞ்சி யாற்ற

நேசங்கொடு போற்றலர் தம்மொடு நேர்தல் ஒல்லா

பாசந் தனில்வீழ கொடியோய்உனைப் பார்த்தி யாங்கள்

பேசும் படியுந் தகவோபவப் பெற்றி யன்றோ.                     13

 

ஆமேனும் இன்னுமொரு மாற்றமுண் டண்ணல் முன்னர்

நீமேவி அன்பிற் பணிவா யெனில் நிற்றி அன்றேல்

பூமே லுனது நகரந்தனில் போதி என்னத்

தீமேல் கிளர்ந்தாலென ஆற்றவுஞ் சீற்ற முற்றான்.        14

 

பல்லா யிரவர் பெருஞ்சாரதர் பாது காக்கும்

எல்லார் செழும்பொன் மணிவாயில் இகந்து செல்ல

வல்லான் நனிநாணினன் உள்ளம் வருந்தி அங்கண்

நில்லாது மீள்வான் இதுவொன்று நிகழ்த்து கின்றான்.              15

 

கொன்னாருஞ செம்பொற் கடைகாக்குங் குழாங்கள் கேண்மின்

எந்நாளும் உங்க ளிறைதன்னை இறைஞ்ச லேன்யான்

அன்னா னெனது மருகோனிதறிந்தி லீரோ

இந்நா ரணனும் அயனும்மெனக் கேவல் செய்வார்.                16

 

நின்றா ரெவரு மெனதொண்டர்கள் நீடு ஞாலம்

பின்றாது போற்றும் இறையான்பெயர் தக்கன் என்பார்

ஒன்றாய உங்கள் பெரும்பித்தனை ஒல்லை மேவி

இன்றா மரபிற் பணிந்தேதொழு தேத்து கின்றேன்.         17

 

(9. கடி - காவல்.  10. சாரதர் - பூதர்.  இழுதை - அறிவிலி.  

15. எல்ஆர் - ஔ¤ பொருந்திய.  வல்லான் - மாட்டான்.  

17. இறை - தலைவன்.  இன்றா - இல்லாத தொழுதேத்துகின்றேன் - 

பணிந்து துதிப்பேன் (துதியேன்). )

 

நில்லிங் கெனவே தடைசெய்த நிலைமை நும்மால்

செல்லும் பரிசோ மருகோனுஞ் சிறுமி தானுஞ்

சொல்லும் படியல் லதுசெய்வதென் தொண்ட ரானீர்

ஒல்லும் படியாற் றுதல்உங்கட் குறுதி யன்றோ.                  18

 

தேற்றாமல் இன்ன வகைசூழந்த நுந்தேவை யாரும்

போற்றாமல் வந்து பணியாமற் புகழ்ந்து மேன்மை

சாற்றாமல் எள்ளல் புரிபான்மை சமைப்பன் என்னா

மேற்றா னிழைத்த வினையுய்த்திட மீண்டு போனான்.             19

 

வேறு

 

மீண்டுதன் பதியை எய்தி வி£¤ஞ்சனை யாதி யாக

ஈண்பண் ணவரை நோக்கி என்மகள் ஈசன் தன்பால்

பூண்டபே ரார்வத் தொன்றிப் புணர்ப்பதொன் றுன்னித் தங்கண்

மாண்டகு வாயி லோரால் மற்றெமைத் தடுப்பச் செய்தார்.         20

 

பின்னரும் பலவுண் டம்மா பேசுவித் தனவும் அவ்வா

றென்னையென் றுரைப்பன் அந்தோ எண்ணினும் நாணுக் கொள்வேன்

அன்னஈங் கிசைப்ப னேனும் ஆவதென அவர்பாற் போந்தேன்

தன்னைநொந் திடுவ தன்றித் தாழ்வுண்டோ அனையர் தம்பால்.    21

 

நன்றுநன் றென்னை எண்ணா நக்கனை உமையை நீவிர்

இன்றுமுன் னாக வென்றும் இறைஞ்சியே பரவு கில்லீர்

அன்றியும் மதித்தீர் அல்லீர் அப்பணி மறுத்தீ ராயின்

மன்றநும் மு£மை இன்னே மாற்றுவன் வல்லை யென்றான்.              22

 

கறுத்திவை உரைத்தோன் தன்னைக் கடவுளர் யாரும் நோக்கி

வெறுத்தெமை உரைத்தாய் போலும் மேலுநின் னேவல் தன்னின்

மறுத்தன வுளவோ இன்றே மற்றுநின் பணியின் நிற்றும்

செறுத்திடல் என்னாத் தத்தஞ் சேணகர் சென்று சேர்ந்தார். 23

 

(18. ஒல்லும்படி - பொருந்துமாறு.  19. தேற்றாமல் - ஆலோசனை புரியாமல்.  

வினை - தீயஊழ்.  20. புணர்ப்பது - தந்திரம்.  மாண்தகு - மாட்சிமை தங்கிய. 

வாயிலோர் - துவாரபாலகர்கள்.  

23.  கடவுளர் - பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள். நிற்றும் - நிற்கின்றோம்.

செருத் திடல் - கோபங்கொள்ளாதே.)

 

ஆகத் திருவிருத்தம் - 370

     - - - 

 

 

10.  பி ர ம யா க ப்  ப ட ல ம்

 

இப்படிப் பன்னாள் யாரும் இவன்தனி ஆணைக் கஞ்சி

அப்பணி இயற்ற லோடும் அம்புய மலர்மேல் அண்ணல்

முப்புரம் முனிந்த செங்கண் முதல்வன தருளால் ஆங்கோர்

செப்பரும் வேள்வி யாற்ற முயன்றனன் சிந்தை செய்தான்.        1

 

வேண்டிய கலப்பை யாவும் விதியுளி மரபி னோடு

தேண்டினன் உய்த்துத் தக்கன் செப்பிய துன்னி யானே

மாண்டிட வரினும் முக்கண் மதிமுடிப் பரமன் தன்னை

ஈண்டுதந் தவிமுன் ஈவன் எனக்கிது துணிபா மென்றான்.          2

 

இனையன புகன்று சிந்தை யாப்புறுத் தேவல் போற்றுந்

தனையர்தங் குழுவைக் கூவித் தண்டுழாய் முகுந்த னாதி

அனைவரும் அவிப்பால் அழைத்து நீர்தம்மின் என்னாத்

துனையவே தூண்டிப் போதன் தொல்பெருங் கயிலை புக்கான்.     3

 

கயிலையின் நடுவ ணுள்ள கடவுள்மா நகரில் எய்தி

அயிலுறு கணிச்சி நந்தி அருள்நெறி உய்ப்ப முன்போய்ப்

பயிலுமன் பொடுநின் றேத்திப் பணிதலுஞ சிவன்ஈண் டுற்ற

செயலதென் மொழிதி என்னத் திசைமுகன் உரைப்ப தானான்.      4

 

அடியனேன் வேள்வி ஒன்றை ஆற்றுவல் அரண மூன்றும்

பொடிபட முனிந்த சீற்றப் புனிதநீ போந்தென செய்கை

முடிவுற அருடி யென்ன முறுவல்செய் திறைவன் நந்தம்

வடிவுள நந்தி அங்கண் வருவன் நீபோதி என்றான்.               5

 

போகென விடுத்த லோடும் பொன்னடி பணிந்து வல்லே

ஏகிய தாதை தக்கன் இருந்துழி எய்தி யேயான்

பாகநல் வேள்வி ஒன்று பண்ணுவன் முனிவர் விண்ணோர்

ஆகிய திறத்த ரோடும் அணுகுதி ஐய என்றான்.           6

 

என்னலும் நன்று முன்போய் இயற்றுதி மகத்தை யென்னப்

பொன்னவிர் கமலத் தண்ணல் மனோவதி அதனில் போந்து

செந்நெறி பயக்கும் வேள்விச் செய்கடன் பு£¤தல் உற்றான்

அன்னதோர் செய்கை மாலோன் ஆதியர் எவருந் தேர்ந்தார்.        7

 

வேறு

 

அக்க ணந்தனில் மாயவன் இமையவர்க் கரசன்

மிக்க தேவர்கள் முனிவரர் யாவரும் விரைந்து

தக்கன் முன்னுற மேவலும் அவரொடுந் தழுவி

முக்க ணாயகற் கவியினை விலக்குவான் முயன்றான்.            8

 

ஏற்றம் நீங்குறு தக்கன்அக் கடவுள ரியாரும்

போற்றி யேதனைச் சூழ்தரத் தாதைதன் புரத்தில்

ஆற்றும் வேள்வியில் அணைதலும் அயன்எழுந் தாசி

சாற்றி ஆர்வமொ டிருத்தினன் பாங்கரோர் தவிசின்.               9

 

(1. வேள்வி - யாகம்.  2. கலப்பை - திரவியம்.  தேண்டினன் - தேடி; 

முற்றெச்சம்.  ஈவல் - அளிப்பேன்.  4. அயில் - கூர்மை.  கணிச்சி - மழுப்படை.  

5. நம்தம் - நம்முடைய.  நந்தி - நந்தியம்பெருமான்.  7. மகம் - யாகம்.  

மனோவதி - பிரமதேவன் நகர்.  8. அவி - அவிப்பாகம்; தேவருணவு.  

9. ஏற்றம் - பெருமிதம்.)

 

கானு லாவுதண் டுளவினான் அடிகள் கைதொழுதே

ஆன பான்மையி லோர்தவி சிருத்தினன் அல்லா

ஏனை யோருக்கும் வீற்றுவீற் றுதவினன் இடையில்

தானொ ராசனத் திருந்தனன் மறையெலாந் தழங்க.               10

 

வேறு

 

அங்கண் ஞாலம தளித்தவன் இவ்வகை அமர்தலும் அதுபோழ்தின்

நங்கை யாளரு பங்கினன் அருளடு நந்திதே வனைநோக்கிப்

பங்க யாசனன் வேள்வியிற் சென்றுநம் பாகமுங் கொடுவல்லே

இங்கு நீவரு கென்றலும் வணங்கியே இசைந்தவ னேகுற்றான்.     11

 

நூற்றுக் கோடிவெங் கணத்தவர் சூழ்தர நொய்தின்அக் கிரிநீங்கி

எற்றின் மேல்வரும் அண்ணலை உள்ளுறுத் தேர்கொள்பங் கயப்போதில்

தோற்று நான்முகக் கடவுள்முன் அடைதலுந் துண்ணெ னவெழுந் தன்பிற்

போற்றி யேதொழு திருத்தினன் என்பஓர் பொலன்ம ணித்த விசின்கண்.12

 

நின்ற பாரிடத் தலைவர்க்கும் வரன்முறை நிரந்தஆ சனநேர்ந்து

பின்றை நான்முகன் வேள்விய தியற்றலும் பிறங்கெ ரியுற நோக்கி

நன்றி யில்லதோர் தக்கன்அக் கிரியுறை நக்கனுக் காளாகிச்

சென்ற வன்கொலாம் இவனென நகைத்தனன் செயிர்த்திவையுரைக்கின்றான்.13

 

நார ணன்முத லாகிய கடவுளர் நளினமா மகளாதிச்

சீர ணங்கினர் மாமுனி கணத்தவர் செறிகுநர் உறைகின்ற

ஆர ணன்புரி வேள்வியில் விடநுகர்ந் தாடல்செய் பவன் ஆளுஞ்

சார தங்களு மோநடு வுறுவது தக்கதே யிதுவென்றான்.           14

 

மேவ லாரெயில் முனிந்ததீ விழியினன் வௌ¢ளிமால் வரைகாக்குங்

காவ லாளனாம் நந்தியுங் கணத்தருங் கதுமென இவண்மேவக்

கூவி னாரெவ ரோஎன உளத்திடைக் குறித்தனன் தெரிகுற்றான்

தேவர் யாவரும் வெருவுற அயன்தனைச் செயிர்த்தி வையுரைக் கின்றான்.15

 

ஆதி நான்முகக் கடவுளை யாகுநீ அழல்மகம் புரிசெய்கை

பேதை பாகனுக் குரைத்தனை அவன்விடப் பெயரும்நந் தியைஎன்முன்

காத லோடுகை தொழுதுநள் ளிருத்தினை கடவதோ நினக்கீது

தாதை ஆதலிற் பிழைத்தனை அல்லதுன் தலையினைத் தடியேனோ.16

 

இன்னம் ஒன்றியான் உரைப்பதுண் டஞ்ஞைகேள் ஈமமே இடனாகத்

துன்னு பாரிடஞ் சூழதரக் கழியுடல் சூலமீ மிசையேந்தி

வன்னி யூடுநின் றாடுவான் தனக்குநீ மகத்திடை யவிக்கூற்ற

முன்னை வைகலின் வழங்கலை இப்பகல் முதலவன் றனக்கின்றால்.       17

 

(10. கான் - வாசனை.  துளவினான் - திருமால்.  

12. வெங்கணத்தவர் - வெவ்விய பூதர்.  

13. பாரிரத்தலைவர் - பூதத்தலைவர்.  நக்கன் - சிவன்.  செயிர்த்து - சீறி. 

14. நளினமாமகள் - திருமகள். ஆரணன் - பிரமன்;  இங்கு தக்கன், 

சிவன் விடம் நுகர்ந்ததையும், ஆடல் புரிந்ததையும் இழிசெயல் 

என்று மருண்டு கூறினான்.  

15. இங்கு, எவராலும் வெல்லுதற்கரிய திரிபுரத்தைச் சிவன் அழித்ததையும் 

இழிசெயல் என்று தக்கன் கருதினான்.  

16. பேதைபாகன் - சிவபெருமான்.  

17. அஞ்ஞை அறிவிலியே! ஈமம் - சுடுகாடு.  வன்னி - அக்கினி.  

அவிக்கூற்றம் - அவிப்பாகம்¢; இங்குச் சிவபரத்துவத்தைத் தக்கன் இகழ்ந்துரைத்தான்.)

 

அத்தி வெம்பணி தலைக்கலன் தாங்கியே அடலைமேற் கொண்டுற்ற

பித்தன் வேள்வியில் அவிகொளற் குரியனோ பெயர்ந்தஇப் பகல்காறும்

எத்தி றத்தரும் மறையொழுக் கெனநினைந் தியாவதும் ஓராமல்

சுத்த நீடவி யளித்தனர் அன்னதே தொன்மையாக் கொளற் பாற்றோ.18

 

மற்றை வானவர் தமக்கெலா நல்குதி மாலையே முதலாக

இற்றை நாண்முதற் கொள்ளுதி இவற்குமுன் ஈகுதி யவிதன்னைக்

கற்றை வார்சடை யுடையதோர் கண்ணுதற் கடவுளே பரம்என்றே

சொற்ற மாமறைச் சுருதிகள் விலக்குதி துணிவுனக் கிதுவென்றான். 19

 

என்ற வாசகங் கேட்டலும் நந்திதன் இருகரஞ் செவிபொத்தி

ஒன்று கொள்கையின் ஆதிநா மந்தனை உளத்திடை நனிஉன்னி

இன்றி வன்சொலுங் கேட்ப உய்த் தனைகொலாம் எம்பிரா னெனைஎன்னாத்

துன்று பையுளின் மூழ்குறா ஆயிடைத் துண்ணென வெகுளுற்றான்.        20

 

பண்டு மூவெயில் அழலெழ நகைத்திடு பரம்பரன் அருள்நீரால்

தண்ட நாயகஞ் செய்திடு சிலாதனார் தனிமகன் முனிவெய்தக்

கண்ட வானவர் யாவரும் உட்கினர் கனலும்உட் கவ லுற்றான்

அண்டம் யாவையும் நடுநடுக் குற்றன அசைந்தன உயிர்யாவும்.    21

 

ஏற்றின் மேயநம் அண்ணறன் சீர்த்தியில் இறையுமே குறிக்கொள்ளா

தாற்ற லோடவி விலக்கிய தக்கனுக் கஞ்சினம் இசைந்தோமால்

மாற்றம் ஒன்றும் இங்குரைத்திடல் தகாதென மற்றது பொருதந்தோ

சீற்ற முற்றனன் நந்தியென் றுட்கினர் திசைமுக னொடுமாலோன்.  22

 

ஈது வேலையில் நந்திஅத் தக்கனை எரிவிழித் தெதிர்நோக்கி

மாது பாகனை இகழ்ந்தனை ஈண்டுநின் வாய்துளைத் திடுவேனால்

ஆதி தன்னருள் அன்றென விடுத்தனன் ஆதலின் உய்ந்தாய்நீ

தீது மற்றினி உரைத்தியேல் வல்லைநின் சிரந்துணிக் குவன்என்றான்.23

 

இவைய யன்மகன் உள்ளமுந் துண்ணென இசைத்துமா கந்தன்னில்

அவிய தெம்பிராற் கிலதென விலக்கினை அதற்கிறை யவன்அன்றேல்

புவன மீதுமற் றெவருளார் அரிதனைப் பொருளெனக் கொண்டாய்நீ

சிவனை யன்றியே வேள்விசெய் கின்றவர் சிரம்அறக் கடிதென்றான்.24

 

வேறு

 

இன்னதொர் சாபம தியம்பி ஆங்கதன்

பின்னரும் இசைத்தனன் பிறைமு டிப்பிரான்

தன்னியல் மதிக்கிலாத் தக்க நிற்கிவண்

மன்னிய திருவெலாம் வல்லை தீர்க்கவே.                25

 

(18. அத்தி - என்பு.  வெம்பணி - பாம்பு.  

19. தக்கன் காலத்திற்குமுன் திருமாலை முதல்வன் என்று கூறுவார்

ஒருவரும் இலர் என்பது இங்கு அறியத்தக்கது.  

21. சிலாதனார் - நந்தியம்பெருமானின் தந்தையார்.  உட்கினா¢ - நடுங்கினர்.  

22. திசைமுகனொடு, ஓடு; எண் ஓடு.  

24. அரிதனை - திருமாலை.  பொருள் என - பரம்பொருள் என்று. 

 என்றான் - என்று சாபமிட்டான்.)

 

ஏறுடை அண்ணலை இறைஞ்சல் இன்றியே

மாறுகொ டிகழ்தரு வாய்கொள் புன்றலை

ஈறுற உன்றனக் கெவருங் காண்டக

வேறொரு சிறுசிரம் விரைவின் மேவவே.                26

 

ஈரமில் புன்மனத் திழுதை மற்றுனைச்

சாருறு கடவுளர் தாமும் ஓர்பகல்

ஆருயிர் மாண்டெழீஇ அளப்பி லாவுகஞ்

சூரெனும் அவுணனால் துயரின் மூழ்கவே.                       27

 

என்றுமற் றினையதும் இயம்பி ஏர்புறீஇத்

துன்றிருங் கணநிரை சூழ வௌ¢ளியங்

குன்றிடை இறைக்கிது கூறிக் கீழத்திசை

முன்றிரு வாயிலன் முறையின் மேவினான்.                     28

 

முன்னுற நந்தியம் முளரி மேலவன்

மன்னுறு கடிநகர் மகத்தை நீங்கலும்

அன்னதொ ரவையிடை அமரர் யாவரும்

என்னிது விளைந்ததென் றிரங்கி ஏங்கினர்.                29

 

நந்தியெம் மடிகள்முன் நவின்ற மெய்யுரை

சிந்தைசெய் தேங்கினன் சிரம்ப னிப்புற

மைந்தன துரையையும் மறுத்தற் கஞ்சினான்

வெந்துயர் உழந்தனன் விரிஞ்சன் என்பவன்.                     30

 

முடித்திட உன்னியே முயலும் வேள்வியை

1நடத்திட அஞ்சினன் நவின்று செய்கடன்

விடுத்தனன் அன்னதை விமலற் கின்னவி

தடுத்தவன் கண்டரோ யாதுஞ் சாற்றலன்.                31

 

(பா-ம் - 1 நடத்திய)

 

கறுவுகொள் பெற்றியான் கவற்சி கொண்டுளான்

வறியதோர் உவகையான் மனத்தில் அச்சமுஞ்

சிறிதுகொள் பான்மையான் தேவ ரோடெழக்

குறுகினன் தன்னகர்க் கோயில் மேயினான்.                       32

 

அலர்ந்திடு பங்கயத் தண்ணல் தன்மகங்

குலைந்திட ஆயிடைக் குழீஇய தேவர்கள்

சலந்தனில் நந்திசெய் சாபஞ் சிந்தியாப்

புலர்ந்தனர் தத்தம புரத்துப் போயினார்.                  33

 

        (27. ஈரம் - இரக்கம்.  இழுதை - அறிவிலியே.  

32. வறியதோர் உவகையான் - மகிழ்ச்சியற்ற தக்கன்.   

33. சலம் - கோபம்.  புலர்ந்தனர் - வருந்தி; முற்றெச்சம்.)

 

ஆகத் திருவிருத்தம் - 403

     - - -


·  முந்தையது : தேவ காண்டம்...

·  அடுத்தது : தக்ஷ காண்டம் - பகுதி 2...

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்