logo

|

Home >

prayers-for-specific-ailments >

for-coming-out-of-gloom-of-loss-of-relatives

For coming out of gloom of loss of relatives

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! புத்திரசோகத்திலிருந்து மீள.. ஞானசம்பந்தப் பெருமான் விடம் தீர்த்தெழுப்பிய காதலன் கதையையும், நாவுக்கரசர் பெருமான் விடம் தீர்த்தெழுப்பிய மகவின் கதையையும் முன்னர் கண்டோம். புத்திரசோகத்திலிருந்து தம் அடியவரை மீட்டெழுப்பும் அற்புதப் பதிகங்கள் இரண்டினைக் கீழே காண்போம். முதலில் சுந்தரர் நிகழ்த்திய மாபெரும் அதிசயம்: இது பெரியபுராணத்தில் வெள்ளானைச் சருக்கமெனும் இறுதி அத்தியாயத்தில் பாடப் பட்டுள்ளது. தம் உற்ற தோழர் சேரமான் பெருமானைக் காணவேண்டி கொங்கு நாட்டின் வழியே பயணிக்கும் சுந்தரர் திருப்புக்கொளியூரெனும் அவிநாசியின் வீதி வழியே செல்கையில் ஒரு வினோதத்தைக் காண்கிறார். அருகாமை வீடுகள் இரண்டில் ஒன்றில் மகிழ்ச்சி ஆரவாரமும், ஒன்றில் பெருத்த அழுகையொலியும் கேட்கிறது. நின்று காரணம் யாதென வினவும் சுந்தரருக்கு அவ்வூர் அந்தணர் பெருமக்கள் சொல்வது: 'இரண்டு வீடுகளிலும் ஒத்த வயதுடைய பிள்ளைகள் இருந்தனர். தம் ஐந்தாம் பிராயத்தில் ஊரெல்லையில் மடுவொன்றில் விளையாடச் சென்ற அச்சிறுவரில் ஒருவனை முதலையொன்று கவ்விச் செல்ல மற்றவன் தப்பி விடுகிறான். தப்பிய அந்தப் பிள்ளைக்கு இன்று இந்த வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. முதலையுண்டு மாண்ட மதலையின் அந்த வீட்டில் அவனை மறக்கவியலாத பெற்றோர் ஓலமிட்டு அழுகின்றனர். என் செய்வது! விதியினை யார்தாம் மாற்றவியலும்' என்று சொல்லியழும் அந்தணர்களிடம் முதலையுண்ட மதலையின் பெற்றோரை அழைத்து வரச் சொல்கிறார் சுந்தரர். தம்பிரான் தோழர் ஆருரர் அழைப்பதைக் கேட்டுத் தம் துயரையெல்லாம் மறைத்து மலர்ந்த முகத்துடன் வந்து பணிகின்றனர் பெற்றோர். அவர்தம் முகக்குறிப்பினைக் கண்டு கரைந்து நிற்கும் சுந்தரர் 'வருந்தற்க! முதலை கொண்டு சென்ற மகவினை சிவனருளால் மீட்போம். அன்றேல் அவிநாசியார் தரிசனமும் கொள்ளேன்!' என்று சூளுரைத்து முன்னர் அந்த முதலை கொண்ட மடுவினைக் காட்டச் சொல்கிறார். இந்த அதிசயத்தை சேக்கிழார் பெருமான் தம் திருவாக்கால் காண்போம்: மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும் சிறுவனையான் அந்த முதலையின் வாய் நின்றும் அழைத்துக் கொடுத்த அவிநாசி எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார்  இடர் களைவார். இவ்வாறு அருளிச் செய்து அருளி இவர்கள் புதல்வன் தனைக் கொடிய வெவ்வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவிக் கேட்டு அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் வைவாள் எயிற்று முதலை கொடு வருதற்கு எடுத்தார் திருப்பதிகம். 'உரைப்பார் உரை' என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும் தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான். பெருவாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை உருகா நின்ற தாய் ஓடி எடுத்துக் கொடுவந்து உயிர் அளித்த திருவாளன் தன் சேவடிக்கீழ் மறையோன் ஒடு வீழ்ந்தாள் மருவார் தருவின் மலர் மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள். மடுவின் கரையில் நின்று இந்த அற்புதப் பதிகத்தைப் பாடியருள என்றோ விழுங்கிய மைந்தனை இடைப்பட்ட காலத்தின் வளர்ச்சியையும் சேர்த்து வெளியே உமிழ்ந்து சென்றது அந்த முதலை. யாரும் கண்டிராத கேட்டிராத இந்த அதிசயத்தைக் கண்டு விண்ணின்றும் மலர்மாரி பொழிந்தனர் தேவர்! சிலிர்க்க வைக்கும் இந்தப் பதிகத்தை உலகின் சோகமெல்லாம் ஒழித்துய்ய சேர்ந்து பாடுவோம்.     

முழுப்பதிகம்- எற்றான் மறக்கேன்    

சேக்கிழார் பெருமான் சுட்டும் 'உரைப்பார் உரை உகந்து' என்று தொடங்கும் நான்காம் பாடலில் 'சிற்பரவியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்தில்' என்றும் ஆடியிருக்கும் அந்த அற்புதக் கூத்தனின் சூக்குமத்தைச் சுட்டும் பரம யோகீஸ்வரரான சுந்தரர் பின்னர் முதலை வாயில் மீட்ட மகவுக்குத் தாமே உபநயனம் செய்வித்தும் அருள்கிறார்.    
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்     

திருமயிலையெனும் கபாலீச்சரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் நிகழ்த்திய மாபெரும் அதிசயத்தை அடுத்துக் காண்போம். மயிலைவாழ் வணிகர்தலைவர் சிவநேசன் செட்டியார் அவர்களின் செல்வமகள் பூம்பாவை என்ற பெயர் கொண்ட மங்கை அரவம் தீண்டி மாள்கிறாள். துயரத்தில் வீழ்ந்த சிவநேசனார் தம் மகளின் சடலமெரித்த சாம்பலை ஒரு கும்பத்தில் திரட்டி என்றாவது ஆளுடைப் பிள்ளையார் அத்தலம் வருகையில் முறையிட்டழுவோமெனக் காத்திருக்கிறார். இறையனார் திருவருளால் தம் திருத்தல யாத்திரையின் இறுதிச் சுற்றில் திருவொற்றியூரிலிருந்து திருமயிலை வந்து சேர்கிறார் ஞானசம்பந்தர். சிவநேசனாரின் சோகக்கதையை உடன் செவிமடுத்து அந்த சாம்பல் குடத்தை ஆலயவாயிலுக்கு எடுத்துவரப் பணிக்கிறார். அனைவரும் கண்டு அதிசயிக்க இந்த அருட்பதிகத்தைப் பாடப்பாட குடம் வெடித்து சாம்பலிலிருந்து உயிர் பெற்று வனப்புடன் எழுகிறாள் பூம்பாவை. இந்த அற்புதத்தை சேக்கிழார் பெருமான் பாடக் காண்போம்: ஆங்கனம் எழுந்துநின்ற அணங்கினை நோக்கு வார்கள் 'ஈங்கிது காணீர்' என்னா அற்புதம் எய்தும் வேலைப் பாங்குசூழ் தொண்ட ரானோர் 'அரகர' என்னப் பார்மேல் ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்ற தன்றே!   

முழுப்பதிகம்- மட்டிட்ட புன்னையங்    

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 

Related Content