logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruppiramapuram-eriyarmaluvon

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்



1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்


எரியார்மழுவொன் றேந்தி அங்கை யிடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான் முகத்தன்
பெரியான் பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி யிந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2

நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின் மையாலமரர்1
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 1.63.3

சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 1.63.4

தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. 1.63.5

கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாய அவள்தன் மன்னனாள்மண்மேல்
தவர்பூம்பதிக ளெங்குமெங்குந் தங்குதராயவனே. 1.63.6

முலையாழ்கெழுவ2 மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7

எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதேர் தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே. 1.63.8

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணம் காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 1.63.9

நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகம் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. 1.63.10

கட்டார் துழாயன் தாமரையா னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த 1.63.11
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.

கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந் தன்நல்ல
படையார்மழுவன் மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 1.63.12


திருச்சிற்றம்பலம்.

பாடம்: 1. அயலின்மயலாலமரர், 2. முலையாழ்கெழும்.

Related Content

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்

திருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்