“முனிவர்களே! இப்போது சர்வ கல்யாணங்களுக்கும் காரணமான கேதார விரதத்தின் மகிமைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்தக் கேதார விரதமானது, புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அஷ்டமியில் ஆரம்பித்து, இருபத்தியோரு நாட்கள் முடியும் வரையிலும் முறைப்படி அனுஷ்டிக வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தின் முடிவு தினத்திலும், முறைப்படி அனுஷ்டித்து நியமத்துடன் உணவு உட்கொள்ள வேண்டும். எவனொருவன் சகல மனோ விருப்பங்களையும் அடையக்கூடிய இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறானோ, அவன் இந்த உலகத்தில் சகலவிதமான போகங்களையு அனுபவித்துவிட்டு, முடிவில் மோக்ஷத்தையும் அடைவான்.
முன்பொரு சமயம் ஸ்ரீகௌரிதேவி இந்த விரதத்தை அனுஷ்டித்து, அதன் மகிமையால் சிவபெருமானின் பாதி உடலைப்பெற்று மகிழ்ந்தாள். திருமாலும் அவ்வாறே வைகுண்டத்திற்கு அதிபதியாக விளங்கினார். பிரும்மதேவனும் அதன் பயனாகவே அன்னத்தை வாகனமாக அடைந்தார். அஷ்டதிக்குப் பாலகர்களும் இந்த விரதத்தை அனுஷ்டித்து அந்த வினாடியிலேயே பிரும்ம தேவனுடைய சாபத்திலிருந்தும் விடுதலை பெற்றார்கள். இதேபோன்று முன்பொரு பாக்கியவதி, புண்ணியவதி என்னும் பெண்மணிகள் இருவர், இந்த விரதத்தை அனுஷ்டித்ததின் பயனாக அளவற்ற ஐஸ்வரியங்களை அடைந்து மகிழ்ந்தார்கள். நற்குணம் வாய்ந்த பிராமணச் சிரேஷ்டர் ஒருவர் உமாபதியின் பிரியத்திற்குப் பாத்திரமான இந்த விரதத்தை அனுஷ்டித்து ஒப்பற்றவர்களான நூறு புத்திரர்களைப் பெற்றெடுத்தார். அப்பிள்ளைகளையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கச் செய்த அவர், நீண்ட காலம் அவர்களோடு சேர்ந்து பலவிதமான போகங்களையும் அனுபவித்துவிட்டு, முடிவில் சிவலோகத்தை அடைந்து, மோக்ஷத்தையும் பெற்றார். இதுபோலவே கௌரிநாதருக்கு பிரீத்தியளிக்கக் கூடிய இந்த விரதத்தை அனுஷ்டித்து மோக்ஷமடைந்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆகையால் இந்தச் சிறப்பு வாய்ந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ, அல்லது கேட்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் பல போக பாக்கியங்களையும் அனுபவித்துவிட்டு முடிவில் ஈடு இணையற்ற மோக்ஷத்தையும் அடைவார்கள்”. இவ்வாறு தவ சீலரான சூதமாமுனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு கூறினார்.
- ஸ்ரீகந்த புராணம்; உபதேச காண்டம்.