logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

கொல்லிக் குளிரறைப்பள்ளி / கொல்லிமலை / அறப்பள்ளி / கொல்லி அறப்பள்ளி / வளப்பூர்நாடு (Arappalli / Kolli Arappalli / Kollikkuliraraippalli / Valappur nadu / Kollimalai)

Om symbol

இறைவர் திருப்பெயர்: அறப்பளீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: தாயம்மை, அறம் வளர்த்த நாயகி

தல மரம்:

தீர்த்தம் : ஐயாறு/பஞ்சநதி - ஆகாயகங்கை மற்றும் சிற்றருவி

வழிபட்டோர்:காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்.

Loading map...

Sthala Puranam

Kollimalai Arapaleeswarar Temple

  • இன்று மக்கள் வழக்கில் "கொல்லிமலை" என்று வழங்குகிறது. இயற்கை வளம் மிக்க மலை.
  • 'வல்வில் ஓரி' என்னும் கடையேழு வள்ளல்களில் ஒருவனான மன்னன் ஆண்ட பகுதி.
  • காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.
  • முன்பு முனிவர் சித்தர்களால் வழிபடப்பட்ட சிவலிங்கத் திருமேனி, மண்ணில் புதைந்து இருந்தபோது, அங்கு உழுத விவசாயியின் ஏர்க்கலப்பை சிக்கிய இடத்தில தோண்ட வெளிப்பட்டது. 
  • தேவாரத்தில் இத்தலம் கொல்லிக் குளிரறைப் பள்ளி என்று குறிக்கப்படுகிறது. கொல்லி என்பது இம்மலையின் பெயர். குளிர்ந்த திருக்கோயிலாக இது உள்ளதால் குளிரறைப்பள்ளி எனப்பட்டது.  அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.
  • இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது.
  • இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.
  • இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.
  • இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.
  • கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.
  • கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.
  • வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - அறப்பள்ளி அகத்தியான் (2-39-4). 

 

Specialities

Kollimalai Agayagangai Waterfalls

  • மூலவர் சுயம்பு லிங்கம். மூர்த்தியின் மேல் கலப்பை மோதிய தழும்பு காணப்படுகிறது. 
  • பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எழுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது 'அறப்பளீசுவரர்' ஆலயம் உள்ளது.
  • இம்மலைமீது பல ஊர்கள் உள்ளன; இங்குள்ள பலவூர்களிலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
  • நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயருமுண்டு.
  • ஊர் - பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி - அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.
  • அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும்.
  • கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக -1196 படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 300 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.
  • செம்மேட்டில் 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.
  • தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன.
  • செங்குத்தான மலைப்பாதை - 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hair pin bend) கொண்டது. 
  • மலை வாழ் மக்கள் ஆடிப் பெருக்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
  • உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.
  • ஆடி 18ஐ ஒட்டி ஐந்து நாட்கள் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
  • கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன், விஜயநகர அரசர் வேங்கடபதி போன்ற மன்னர்கள் அரசிகள் பணிசெய்துள்ளனர்.
  • இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.
  • கருவறை நுழைவாயிலின் இடப்பாகம் உள்ள உத்தமசோழனின் கல்வெட்டு கி.பி. 980 
    கார்த்திகைத் திருவிழாவின் போது இக்கோயிலில் எழுந்தருளியுள்ள திரு அறப்பள்ளி ஆழ்வார் பக்தர்கள் உட்கார்ந்து சாப்பிட இடமும், கை கால்கள் கழுவிக்கொள்ளக் குளமும் வெட்டக் கால் செய் நிலத்தை பிரதிகண்டன் என்பவன் கொடையாகக் கொடுத்தான்.
  • மண்டபத்தில் இருக்கும் கல்வெட்டு உத்தமசோழன் காலம் கிபி 980 
    பதினெண்டன் சுந்தர சோழன் கார்த்திகைத் திருவிழாவின்போது திரு அறப்பள்ளி ஆழ்வார் உடைய பக்தர்கள் உட்கார்ந்து சாப்பிட இடமும் குளமும் உருவாக்க அரை செய் நிலம் கொடுத்துள்ளான்.
  • கருவறை வடக்கு சுவரில் உள்ள உத்தமசோழன் கல்வெட்டு கி.பி 981  
    அறப்பள்ளி ஈஸ்வரர் கோயிலில் பணி செய்து வந்த நான்கு பிரம்மச்சாரிகள் (மாணி) ஒரு கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டனர். கிராமத்திலிருந்து கிடைத்த விளைச்சலில் திரு வெள்ளறைக் கானம் என்ற அளவையில் நான்கு நாழியாக 12 நாழி பெற்றுக்கொண்டு மூன்று வேளை பூஜை செய்ய ஒத்துக் கொண்டனர்.
  • கருவறையின் வடக்கு சுவரில் உள்ள உத்தம சோழனின் கல்வெட்டு கி.பி 984  
    மழ பெருமாளின் மருமகள் கணலைத்தாதியர் கார்த்திகை திருநாளின் போது இறைவனுக்கு விளக்கு ஏற்ற கொல்லிமலை கிராமத் தலைவர்களிடம் மலைக்கல் என்ற எடைக்கல்லில் இரண்டு கழஞ்சு பொன் நிறுத்து கொடுத்தாள்.
  • கருவறையின் நிலைக்காலில் உள்ள உத்தம சோழன் கல்வெட்டு கிபி 986  
    உத்தம சோழனின் தங்களாச்சியார் (தாய்) செம்பியன் மாதேவி கொல்லிமலையில் உள்ள கருங்கயம், படுவூர், புன்னபுரம், மேல்புன்னம், முத்தூர், வெருணூர், மங்கலம், கயிரங்காடு, நெடுவலம், காமுள், இவனைத்தூர் ஆகிய பன்னிரண்டு கிராமங்களைச் சேர்ந்த ஊர்ப் பெரியவர்களிடம் 100 கழஞ்சு பொன் (533 கிராம்) கொடுத்துள்ளார். இந்தப் பணத்திற்குக் கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும்.
  • கருவறையின் வடக்கு சுவரில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டு கிபி 1024  
    திருஅரப்பள்ளி இறைவனுக்கு திருவமுது படைகளுக்காக முன்பு வழங்கிய நிலத்தை விட இரண்டு மடங்கு நிலம் மங்கலம் கிராமத்தில் தரப்பட்டது.
  • கருவறையின் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு பதினோராம் நூற்றாண்டு  
    திருஅறப்பள்ளி கிராம சபையாரிடம் 20 கழஞ்சு பொன் தரப்பட்டது ஒரு கழஞ்சுக்கு ஆறு மாதத்திற்கான வட்டி 5 குருணி. 20 கழஞ்சுக்கு ஒரு வருடத்து வட்டியாக பதினாறு கலன் இரு தூணி நெல் பெறப்பட்டது. கோயிலின் மேளம் (உவச்சு) கொட்டுபவருக்கு மூன்று வேளை உணவிற்காகக் கொங்கம் என்னும் மரக்காலில் அளந்து பதினொரு கலனே முக்குறுணி தரப்படும். மீதமுள்ள ஐந்து கலனே தினமும் ஐங்குறுணி நெல்லுடன் பருவூர் பல குடிகள் பெற்றுக்கொண்ட ஒரு கழஞ்சு பொன்னின் வட்டியையும் சேர்த்து பத்து கலனே குறுணி கோயிலில் மூன்று வேலையும் சங்கு ஊதுபவருக்குத் தரப்படும்.
  • கருவறையின் தென்மேற்கு சுவரில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கிபி 1082  
    ராஜ மகேந்திர தேவர் சோழப் பேரரசனாக இருந்த காலத்தில் கொல்லிமலை நாட்டின் வாயலூர் கிராமத்தினரிடம் கோயிலுக்கு வரி செலுத்தப்பட்டது. அது நடைமுறையில் இருந்தது. தற்போது தடைபட்டுள்ளது. கொல்லிமலை கிராமத்தலைவர்களும் கோயில் நிர்வாகிகளும் இப்பகுதித் தலைவர்களும் மீண்டும் வாயலூர் கிராமத்தினரிடம் வரி பெற முடிவு செய்தனர். நான்கு கலம் நெல் விதை விதைக்கக்கூடிய அளவுள்ள நிலங்களிலிருந்து கிடைக்கும் நெல்லைக் கோயிலுக்குத் தர வாயலூர் கிராமத்தினர் ஒத்துக் கொண்டனர்.
  • தெற்கு சுவரில் உள்ள இரண்டாம் ராஜாதிராஜனின் கல்வெட்டு கிபி 1172  
    வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வாருக்கு கொல்லிமலை மலையாள நாட்டினர் கொடை கொடுத்துள்ளனர். வருடத்திற்குக் கொங்கம் என்ற மரக்காலில் அளந்த தூணி அளவுள்ள தினையும், ஊரால் என்ற மரக்காலில் அளந்து ஒரு புழுகும் தரப்பட்டது.
  • கருவறையின் தென்சுவரில் உள்ள இரண்டாம் ராஜாதிராஜனின் கல்வெட்டு கிபி 1172  
    பாண்டி குலாசனி வளநாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறையைச் சேர்ந்த வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வாருடன் வீரசோழமண்டலம் கொல்லிமலை நாட்டைச் சேர்ந்த பல கிராமத்தினர் செய்து கொண்ட உடன்படிக்கை (இக்கல்வெட்டு சிதைந்துள்ளது) 
  • தென் சுவரில் இரண்டாம் ராஜாதிராஜனின் கல்வெட்டு கிபி 1172  
    வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வாருக்கு கொல்லிமலை நாட்டு மலையாளிகள் ஒன்பதாவது ஆண்டு முதல் வரி செலுத்துவதாக ஒத்துக்கொண்டு கோயில் கல்வெட்டில் பதிவு செய்து கொடுத்தனர்.
  • தென் சுவரில் இரண்டாம் ராஜாதிராஜன் காலக்கல்வெட்டு கிபி 1173  
    வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வான் என்பவன் கொல்லிமலைக்கு வந்த போது திருக்களிற்றுப்படி நம்பி என்பவன் அறப்பள்ளி இறைவனுக்கும் இறைவி நாச்சியாருக்கும் மார்கழி திருவாதிரை நோன்புக்காக வெருணூர் பள்ள வழி கிராமத்தில் நிலம் கொடுத்த செய்தி.
  • கருவறையின் வடக்குச் சுவர் கல்வெட்டு கிபி 12ஆம் நூற்றாண்டு  
    கருங்கயம் கிராமத்திலிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து பதினைட்டரை கழஞ்சு பொன் கொடுத்தனர். ஒரு கழஞ்சுக்கு ஆறு மாத வட்டி தூணி நெல். அந்த நெல்லைக் கொண்டு திருவறப்பள்ளி உடையார்க்கு அமுது படைக்கப்பட்டது. காமளூர் ஊர் கிராமத்தினரும் உதவிகள் செய்தனர். அதைக் கொண்டு நடராஜப் பெருமானுக்கு அமுது படைக்கப்பட்டது. வெருணூர் திசை மாணிக்கஞ் செட்டி நிலத்தின் குடிகள் சேர்ந்து தாயம்மாள் கோயிலுக்குப் படையல் அளித்தனர்.
  • கருவறையின் வடக்குச் சுவர் பொன்னேரி வர்மனின் கல்வெட்டு கிபி 12ஆம் நூற்றாண்டு  
    பொன்னேரி வர்மனின் 22 ஆம் ஆட்சியாண்டில் இறைவனுக்கு இரண்டு நந்தா விளக்குகள் வழங்கப்பட்டன நிலமும் வழங்கப்பட்டது செப்பேடு ஒன்றின் உண்மைப் பதிவு இது.
  • கருவறையின் மேற்குச் சுவர் கிபி 12ஆம் நூற்றாண்டு 
    வீராணச் செட்டி 25 கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டார். அதற்கு ஆறு மாத வட்டியாக தூணி அளவு நெல்லும் ஆண்டுக்கு பதினாறு கலன் இரு தூணி நெல் கிடைத்தது. கரடிகை என்ற கருவியை இசைக்கும் கலைஞருக்கு நாள் ஒன்றுக்குக் கொங்கம் என்ற மரக்கால் மூலம் வருடத்திற்கு பதினொரு கலனே முக்குறுணி நெல் 3 வேளை உணவிற்காகத் தரப்படும். மீதியுள்ள 5 குறுணி நெல் இறைவனுக்கு மூன்று வேளை படையலுக்குப் பயன்படுத்தப்படும்.
  • கருவறை வடக்கு சுவரில் உள்ள விஜயநகர அரசர் வெங்கடபதி தேவ மகாராயரின் கல்வெட்டு 1.2.1611 
    நரலோக கண்ட வங்கி நாராயணன் கோனூர் ராமச்சந்திர நாயக்கர் மகன் இம்முடி (இரண்டாம்) ராமச்சந்திரன் காலத்தில் கோயில் திருப்பணி நடைபெற்றது. நாச்சியார் திருமேனி உருவாக்கப்பட்டது. குத்தமலை நாட்டிலுள்ள அசை (அசக்காடு) என்ற ஊர் கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது.
  • வடக்குச் சுவர்  
    குடவாசல் உடையான் திருநாதர் சங்கமதேவன் என்பவன் அறப்பள்ளி உடையாருக்கும் நாச்சியாருக்கும் இளைய நாயனாருக்கும் (முருகன்) வழிபாட்டிற்காக நிலமும் நந்தவனமும் வழங்கினார்.
  • வடக்கு சுற்றுச்சுவர் 6.2.1771 
    அரப்பள்ளி ஈஸ்வரர் தாயம்மனுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டது.
  • தாயம்மை சன்னதி கிழக்குப் புறச்சுவர் 11.9.1823 
    துறையூர் வட்டம் ராஜ நரசிங்கையர் ஆட்சிக்காலத்தில் அறப்பள்ளி ஈஸ்வரருக்கும், அம்மனுக்கும் விமானம் அமைத்துத் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாமக்கல்லிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது.
Loading map...

Related Content

கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீஸ்வரர் தி

ஏழூர் - ஏளூர் (Yezhur - Yelur)

குமரிக்கொங்கு (கொங்கு குமரித்துறை - மோகனூர்) Kumarikkongu (

தோழூர் (தோளூர்) Thozhur (Tholur)