logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

இறைவர் திருப்பெயர்: ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்.

இறைவியார் திருப்பெயர்: யோகாம்பாள்

தல மரம்:

தீர்த்தம் : அக்கினித் தீர்த்தம் (திருத்தமாம் பொய்கை)

வழிபட்டோர்:மாணிக்கவாசக சுவாமிகள்

Sthala Puranam

avudayarkovil temple

  • உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது.
  • இன்று மக்களால் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது.
  • அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.
  • மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணிய பூமி.
  • அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சித் தந்த பதி.
  • இத்திருக்கோயில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.
  • ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு சென்றார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது.
  • ஒரு முறை இறைவனே இறைவனே அந்தணராய் கிழவேடங்கொண்டு பெருந்துறையில் வாழந்து வரும் முந்நூறு அந்தணர் வீட்டுக் குழந்தைகட்கும் வேதசாத்திரங்களைக் கற்றுத்தர முன்வந்தார். அந்தணர்களும் அதுகேட்டு மகிழ்ந்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பாடசாலையொன்றை ஏற்படுத்தித் தந்தனர். அந்தணர்களின் வீடுகளில் நாடொறும் புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து அப்பெரியவருக்கு உணவாகத் தந்து வந்தனர். அவரும் அவ்வுணவை உண்டு பிள்ளைகளுக்கு வேதங்களைக் கற்பித்து வந்தார். ஞானயோக சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்கம் முதலியவை அனைத்தையும் முறையாகக் கற்பித்தார். குழந்தைகளோடு குழந்தையாய்க் கலந்து ஓடியாடியும், கண்ணைப் பொத்தி விளையாடியும் மகிழ்வித்தார்.
  • இவருடைய வரவால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ந்து வேதங்களைப் பயின்று வந்தனர். ஒருநாள் குழந்தைகளோடு விளையாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர் - தத்தமது பெற்றோர்களிடம் முறையிட்டனர். அவர்களும் மனம் வருந்தி எல்லாவிடங்களிலும் தேடினர்; பயனில்லை.
  • அன்றிரவு குழந்தைகள் அனைவருடைய கனவிலும் ஒரே சமயத்தில் இறைவன் தோன்றி, "கிழவராக வந்து உங்களுக்கு வேதசாத்திரங்களைக் கற்பித்தது நானே. உங்கள் பெற்றோரிடம் சொல்லி இதுவரையில் நான் சுடச்சுட விரும்பியுண்டு வந்த புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் ஆகிய இவற்றையே எனக்குச் சமைத்துச் சூட்டோடு நிவேதித்து வரச்செய்யுங்கள்" என்றருளிமறைந்தார். குழந்தைகள் விழித்து, மகிழ்ந்து, தத்தம் பெற்றோர்களிடம் செய்தியைச் சொல்ல; வந்தவர் இறைவனே என்று மகிழ்ந்து வணங்கினர். அன்று முதல் சுவாமிக்கு கீழேசொல்வதுபோல் நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது.
  • இறைவன் குழந்தைகட்கு வேதசாத்திரங்களை ஓதுவித்த இடமாகிய குருந்தவனத்தில் ஸ்ரீ வித்யாகணபதி எழுந்தருளியுள்ளார்.
  • பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் துண்டகன் என்னும் அமைச்சன் இருந்தான். அவன் பேராசை கொண்டவன். சிவபுரம் என்னும் இக்கிராமத்தின் வளத்தைக் கேள்வியுற்று அக்கிராமத்தைத் தான் அடைய எண்ணினான். அக்கிராமம் தனக்குச் சொந்தமானது என்னும் அந்தணர்கள் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகவும் மன்னனிடம் சொல்லிவிட்டுச் சிவபுரம் வந்து அதிகார பலத்தால் அந்தணர்களை விரட்டியடித்தான்; எல்லைக்கற்களை யெல்லாம் எடுத்தெறிந்தான். மறையவர்கள் செய்வதறியாமல், அவனை எதிர்க்கமாட்டாமல் சொத்துக்களை இழந்து அலைந்தனர். ஆத்மநாதரே கதி என்று அழுது வேண்டினர். .
  • அவர்களுக்கருள விரும்பிய ஆத்மநாதர் வயது முதிர்ந்தவராக வேடங்கொண்டு அந்தணர்களிடம் சென்று, "என் பெயர் பரமசுவாமி, தில்லையிலிருந்து வருகின்றேன். உங்கள் கிராமத்தைப் பற்றிய விவரமனைத்தும் எனக்குத் தெரியும். உங்கள் நிலையை அறிந்துதான் நான் வந்துள்ளேன். என்னிடமுள்ள பட்டயத்தைக் காட்டி உங்களுடைய பூமியை மீட்டுத் தருகின்றேன். அப்படி மீட்டுத் தந்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து 300ல் 1 பங்கை எனக்குத் தரவேண்டும்" என்றார். அதுகேட்ட அந்தணர்கள், துண்டகனின் கொடுமையைக் கூறி அவரைத் தடுத்தனர். வந்த பெரியவர் அவர்களைத் தைரியப்படுத்தி அழைத்துக் கொண்டு மதுரை வந்தார். வீதியில் உரக்கக் கூவினார். மன்னனுக்குச் செய்தி தெரிந்தது. அவரை அழைத்து அமர்த்தி விவரம் கேட்டான். சிவபுர மகிமையையும், அரசனுடைய குலப்பெருமையையும் எடுத்துரைத்துத் தன் வசமிருந்த பட்டயத்தைக் காட்டினார். சினந்த மன்னன் அமைச்சனை அழைத்து விசாரிக்க, அவனும் தன்னிடமிருந்த பட்டயத்தைக் காட்டினான். இருபட்டயங்களையும் பார்த்த மன்னன் செய்வதறியாது திகைத்து, இருவரையும் அந்தப் பூமிக்குரிய அடையாளங்களைச் சொல்லுமாறு கேட்டான்.
  • அமைச்சனோ தன் பூமியில் எவ்வளவு வெட்டினாலும் தண்ணீர் வாராது என்று சொன்னான். பெரியவரோ தன் பூமியில் வெட்டினால் நீர் வரும் என்றார். பாண்டியன் இருவரையும் அழைத்துக்கொண்டு சிவபுரம் வந்தான். கோயிலின் ஈசான திசையில் உயர்ந்த மேட்டில் நீரை வரவழைக்குமாறு கூறினான். பெரியவர் அதற்குடன்பட்டு, அனைத்துத் தீர்த்தங்களையும் அவ்விடத்தில் வருமாறு சங்கற்பித்து, பூமியை வெட்டிக் கீழ்நீரை மேலே வரச்செய்து வெளிப்படுத்தினார், அத்துடன் பூமியின் நான்கு எல்லைகளையும் அடையாளம் காட்டினார். பாண்டியன் துண்டகனைத் தண்டித்ததுடன் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கிவிட்டு மதுரை திரும்பினான். அந்தணர்கள் தங்கட்குப் பூமியை மீண்டுத் தந்த பெரியவர் ஆத்மநாத சுவாமியே என்று துதித்து, அவரை பிரம்ம ரதத்தில் ஏற்றி, உபசரித்து, ஊர்வலமாக அழைத்து வந்து, வாக்களித்தபடியே அவருக்கும் ஒரு பங்கை அளித்து, தங்களோடு அவரையும் சேர்த்துக் கொண்டனர். அவரும் (இறைவனும்) அவர்களோடு சேர்ந்து முந்நூற் றொருவராக ஆனார்.

Specialities

  • வெள்ளாறு (சுவேதநதி) பாய்கின்ற வயற்பரப்புகள் நிறைந்த பகுதி.
  • "தெள்ளுநீர் வெள்ளாறுபாய்; திருமிழலை நாட்டுப் பெருந்துறை" என்பது சிவலோக நாயகி பொன்னூசலில் வருந்தொடர்.
  • திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.
  • வாதவூரரை மணிவாசகராய் மாற்றிய இத்திருப்பெருந்துறைக்கு பதினெட்டுத் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. அவைகளாவன - 1. திருப்பெருந்துறை, 2. குருந்தவனம், 3. சதுர்வேதபுரம், 4. சிவபுரம், 5. ஞானபுரம், 6. திரிமூர்த்திபுரம், 7. தென்கயிலை, 8. தேசுவனம், 9. பராசத்திபுரம், 10. பவித்திரமாணிக்கம், 11. யோகபீடம், 12. ஆளுடையார் கோயில், 13. உபதேசத்தலம், 14. அனாதிமூர்த்தத்தலம், 15. ஆதிகயிலாயம், 16. சதுர்வேத மங்கலம், 17. தட்சிணகயிலாயம், 18. யோகவனம் என்பனவாம்.
  • இத்தலத்தில் ஆத்மநாத சுவாமிக்கும் பதினெட்டு திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. அவை - 1. ஆத்மநாதர், 2. பரமசுவாமி, 3. திருமூர்த்திதேசிகர், 4. சதுர்வேதபுரீசர், 5. சிவயோகவனத்தீசர், 6. குந்தகவனேசர், 7. சிவக்ஷேத்ரநாதர், 8. சன்னவனேசர், 9. சன்னவநாதர், 10. மாயபுரநாயகர், 11. விப்பிரதேசிகர், 12. சப்தநாதர், 13. பிரகத்தீசர், 14. திருதசதேசிகர், 15. அசுவநாதர், 16. சிவபுரநாயகர், 17. மகாதேவர், 18. திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.
  • சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.
  • ஆவுடையார்க்குப் பின்புறச் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும் அதற்கு மேல் சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று தீபங்களும் சுடர்விடுகின்றன-சுவாமி திருமுன்பு அமுத மண்டபத்தில் உள்ள படைகல்லில் புழுங்கல் அரிசி அன்னத்தை ஆவி புலப்பட பரப்பி அதைச் சூழத் தேங்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவற்றை வைத்து நிவேதனம் செய்து தீபாராதனைகள் முறைப்படி செய்யப்படும்.
  • யோகாம்பிகை கோயில்:
    ஆத்மநாத சுவாமியின் கருவறைக்கு வடமேற்கில் முதல் பிரகாரத்தில் யோகாம்பிகை கோயில் உள்ளது. இக் கோயிலின் உள்ளே யோகபீடமும் அதன்மேல் அம்பிகையின் பாதங்களும் உள்ளன. அம்பிகை அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. கோயிலின் தெற்குப்புறத்தில் உள்ள கருங்கல் பலகணி வழியாக தெரிசனம் செய்யவேண்டும். இக்கோயிலைவலம்வரப் பிரகார அமைப்பு இருக்கிறது.
     
  • திருப்பரங்குன்றத் திருப்புகழில் "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில் "வழியடியர் திருக்குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர்" என்று ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.
  • இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது. அவை: 1. வனம் - குருந்தவனம், 2. தலம் - தீர்த்தத்தலம், 3. புரம் - சிவபுரம், 4. தீர்த்தம் - தீருத்தமாம் பொய்கை, 5. மூர்த்தி - ஆத்மநாதர், 6. தொண்டர் - மாணிக்கவாசகர்.
  • கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
  • பண்டைநாளில் ஸ்பதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால் ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார்கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்று எழுதும் வழக்கம் இருந்ததாம்.
  • முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று உணர்த்துவதாக உள்ளது.
  • அடுத்துள்ளது பெரிய மண்டபம் - இது ரகுநாத பூபால மண்டபமாகும். அற்புதமான வேலைபாடுடைய பெரிய மூர்த்தங்களைக் கொண்டது. இம்மண்டபம் பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறுமுகப் பண்டாரம் ஆகியோர்களால் 330 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டதாம்.
  • ரகுநாத பூபால மண்டபத்தின் இடதுபுறத்தின் சிவானந்த மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.

தியாகராஜ மண்டபம்:
அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே பிரகாரத்தின் வடகோடியில் தியாகராஜ மண்டபம் இருக்கிறது. இதற்கு அச்சுதப்ப பூபால மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்து இரண்டு பெரிய தூண்களில் குதிரை வீரர் சிற்பங்கள் இரண்டு உள்ளன. மண்டபத்தின் நடுவில், உள்மதிலை ஒட்டினாற்போல் மேற்கு முகமாக முத்து விநாயகர் சந்நிதி உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் கருங்கல் சங்கிலி தொங்குகிறது. இந்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் ஊஞ்சல் மண்டபம் ஒன்று இருக்கிறது. இவ்விரு மண்டபங்களும் ஒன்றுபோல் இணைக்கப்பட்டு மேல் தளத்தால் மூடப்பட்டிருக்கிறது. மேல் தளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள கொடுங்கைகள், அதி அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பகுதியிலுள்ள கொடுங்கையில் சில துளைகளைக் காணலாம். இத்துளைகள், கொடுங்கையின் கனம் எவ்வளவு என்பதை அறியத்
துணையாகின்றன. கொடுங்கையின் கனம் சுமார் ஓரங்குலம்.
ஊஞ்சல் மண்டபம்:
தியாகராஜ மண்டபத்திற்குள்ளே வடக்குப்புறத்தில் ஊஞ்சல் மண்டபம் அமைந்திருக்கிறது. உயரமான மேடைமேல் இம்மண்டபம் உள்ளது. ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும்
நடைபெறும் திருவிழாக்களில் மூன்றாம் நாள் விழாவில் மாணிக்கவாசகர் இங்கே எழுந்தருளிக்காட்சி வழங்குவது வழக்கம்.
வசந்த மண்டபம்:
மூன்றாம் பிரகாரத்தில் கிழக்குப் பகுதியில் வெளிமதிலை ஒட்டித் திருமாளிகைப் பத்தி மண்டபம் உள்ளது. மடப்பள்ளிக்குத் தெற்கே திருமாளிகைப் பத்தியில் வசந்த மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் நடுவில் ஒருமேடையும் அதனைச் சுற்றி நீராழியும் உள்ளன. இந்த மேடைக்கு வடக்கே வசந்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். ஆனி, மார்கழி மாத விழாக்களில் ஐந்தாந் திருநாள் விழாவன்று மாணிக்க வாசகர் இம்மண்டபத்தில் எழுந்தருளிக் காட்சி வழங்குவது வழக்கம். இதற்குத் தெற்கே திருமாளிகைப் பத்தியில் நெற்களஞ்சிய அறைகளும் அரிசிக் களஞ்சிய அறைகளும் உள்ளன.
பஞ்சாட்சரமண்டபம்:
மூன்றாம் பிரகாரத்தில் இரண்டாம் கோபுரவாயிலை ஒட்டினாற் போல் பஞ்சாட்சர மண்டபம் இருக்கிறது. இதற்குக் 'கனகசபை' என்ற பெயருமுண்டு. இம்மண்டபம் நடுவில் சதுர அமைப்பும் நான்கு புறமும் தாழ்வார அமைப்பும் கொண்டிருக்கிறது. நடுப்பகுதியிலுள்ள தூண்களில் குதிரைச் சாமி என்ற அசுவநாத சிற்பமும், பாண்டிய மன்னன் சிற்பமும், மாணிக்கவாசகரின் அமைச்சர் கோலச் சிற்பமும், குறும்பர்கோன் சிற்பமும் உள்ளன. புவனம், தத்துவம், கலை என்ற ஆறு அத்துவாக்களும் கட்டங்களாக இம்மண்படத்தின் மேல் தளத்தில் - மந்திரம், பதம், வன்னம், அமைத்துக் காட்டப்பெற்றுள்ளன. மேல் தளத்தை ஒட்டியமைந்த ஒரு சரத்தில் முந்நூற்றொருவர் சிற்பமும், நம்பிமார் ஒருவர் சிற்பமும் உள்ளன.

தில்லை மண்டபம்:
இரண்டாம் பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் முதல் கோபுர வாயிலை ஒட்டினாற்போல் தில்லை மண்டபம் இருக்கிறது. இதற்கு நடன சபை என்ற பெயரும் உண்டு.  மண்டபத்தின் இரண்டு தூண்களில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் சிற்பங்கள் உள்ளன. மற்றும் இம்மண்டபத்தின் நான்கு தூண்களில் குறவன் குறத்தி சிற்பங்கள் உள்ளன. இவை உலகப் புகழ்பெற்ற அதி அற்புதமான சிற்பங்கள்,
சுந்தரபாண்டியன் மண்டபம்:
ஆத்மநாதர் மூலக்கோயிலுக்கு எதிரே சுந்தரபாண்டியன் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் தெற்குப் புறத்தில் உள்ளது பிரதான வாயில். இவ்வாயில் வழியாக உள்ளே நுழைவது வழக்கத்தில் இல்லை. உற்சவ மாணிக்கவாசகரைவணங்கிய பிறகு இம்மண்டபத்தின் மேற்குக் கர்ணத்துவார வழியாகச் சென்று ஆத்மநாதரை வழிபடுவதுவழக்கமாக உள்ளது.

 

  • வலமாக வரும்போது சுவரில் காணப்படும் வண்ண ஓவியங்கள் மிகப் பழமையானவை; அழிந்த நிலையில் உள்ளன.
  • வண்ண ஓவியங்களில் ஒன்று 'அண்டரண்ட பட்சி'யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒருசேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
  • அடுத்துள்ளது ராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நெடிதுயர்ந்த ராஜகோபுரம்; தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணை சான்றான ஆத்மநாத ஸ்வரூபத்தின்ஸ்தூல அடையாளம்.
  • ராஜகோபுர வாயிலின் இடப்பக்கதில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:-
  • ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்ய விளம்பரமாவது:-
  • இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது.
  • இக்கோயிலில் கலாத்வா, தத்துவாத்வா, புவனாத்வா, வர்ணாத்வா, பதாத்வா, மந்திராத்வா முதலிய ஆறு ஆத்வாக்களைக் குறிக்கும் வகையில் ஆறு வாயில்கள் - ஆறுசபைகள் உள்ளன. அவை 1) கனகசபை, 2) நடனசபை, 3) தேவசபை, 4) சத்சபை, 5) சித்சபை, 6) ஆநந்த சபை என்றழைக்கப்படுகின்றன.
  • கனகசபை - 81 தீபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நர்த்தனசபை (நடன/நிருத்தசபை) - பதஞ்சலி வியாக்ரபாதர்கள் பெருமானிடம் கருணையை வேண்டிப் பெற்ற இடம் 224 புவன தீபங்களையுடையது.தேவசபை - சூரனிடம் பயந்த தேவர்கள் தவஞ்செய்த இடமாகச் சொல்லப்படுவது; இதை சுந்தரபாண்டிய மண்டபம் என்பர். இங்கு ஏகாதச மந்திரங்கள் 11 தீபங்களாக உள்ளன. சத்சபையில் 36 எண்ணுடைய தத்துவத் தீபங்கள் பிரகாசிக்கின்றன. சித்சபையில் அகர முதலான 51 எண்ணுடைய தீபங்கள் திகழ்கின்றன. ஆநந்தசபையில் (கருவறை) பஞ்ச கலைகள் என்னும் சுடர் பிரகாசிக்கிறது. இவ்வாறு இத்திருக்கோயிலில் தத்துவம் அனைத்தும் தீப வடிவங்களாகவே வைத்துக் காட்டப்பட்டுள்ளன.
  • 1. உள்கோபுரத்தை கடந்து சென்றால் அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம் - இதை கனகசபை என்பர். முந்நூறு ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய நிலையிலுள்ள பாம்பும்; சாமுத்திகா லட்சணத்தைக் காட்டும் பெண் முதலான சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப்பட்டுள்ளன. தனியாக இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. சந்நிதி மேற்புறத்தில் 27 நட்சத்திர வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. சந்நிதியில் வெளிச்சுவரில் வண்ண ஓவியத்தில் ஸ்பரிச - உபதேச - திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன.
  • 2. அடுத்தது நிருத்த மண்டபம் - நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத் தௌ¤வாகத் தெரியும் வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் - வேடனின் நளினத் தோற்றம் - இவ்வாறே வலதுபுறம் காட்சித்தரும் வேடன் வேடுவச்சி சிற்பங்கள் - அற்புதமான கலையழகு கருவூலங்கள்.
  • 3. வாயிலைக் கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது) இடப்பால் பிராகாரத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து விட்டுத்தான் மூலவரைத் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இக்கோயில் மரபு. சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி; சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம்தான். ஸ்ரீ யோகாம்பாள் சந்நிதியில் திருமேனி இல்லை. சததள பத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அடுத்த தரிசனமாக தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி; கல்லில் வடித்துள்ள குருந்தமரம் - கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும்மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேச ஐதீகம் நடக்கிறது. இங்குள்ள திருவாசகக் கோயிலில் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விசேடம்.
  • 4. அடுத்த சபை, சத்சபை - இங்குள்ள விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம் நிவேதிக்கப்படுகிறது. (இதனால் இதற்கு அமுத மண்டபம் என்றும் பெயர்) இங்கு புழுங்கல் அரிசி சாதம் நிவேத்தியம் சிறப்பு.
  • 5. அடுத்தது, சித்சபை - பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாக காட்சி நல்குமிடம்.
  • 6. பரமசுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே - குருவருள் கொலு வீற்றிருக்குமிடமே ஆநந்த சபை.
  • ஆவுடையார் - சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார். அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது.
  • ஆவுடையாரின் பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாச்சி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கிறதென்பர்.
  • சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர்விடுகின்றன.
  • முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்திலும் காணலாம்.
  • எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்காளக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டு காட்டியுள்ளார்கள்.
  • இத்தலத்தில் 24 தீர்த்தங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை - அக்கினி தீர்த்தம், ஆத்ம கூபம், வேத தீர்த்தம், நாராயண தீர்த்தம், தேவ தீர்த்தம், வாயு தீர்த்தம், மானவ தீர்த்தம், காலாக்னிருத்ர தீர்த்தம், ரிஷி தீர்த்தம், ஆசுர தீர்த்தம், காந்தர்வ தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர வாவி, வைதிக தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சரஸ்வதி கூபம், பக்த தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கௌதம தீர்த்தம், தொண்டர் குழி, கீழ் நீர், சுவேதநதி என்னும் வௌ¢ளாறு என்பவாகும்.
  • மூலவருக்கு மகுடாகமம் உத்தரபாகத்தின்படி பூஜைகள் நடைபெறுகின்றன. நாள்தோறும் ஆறுகால பூஜைகள்.
  • ஆத்மநாதருக்கு ஆறு காலங்களிலும் புழுங்கலரிசி நிவேதனம், ஒரு தவலையில் வடித்து, கைபடாமல் அப்பாத்திரத்தோடு கொண்டுவந்து அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் (சுவாமிக்கு எதிரில்) அப்படியே கொட்டி, ஆவியோடு சுவாமிக்கு நிவேதிப்பதை நாமும் பார்த்து ரசிக்கலாம்.
  • அர்த்த சாமத்தில் தினமும் சுவாமிக்கு புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நிவேதனம் நிவேதிக்கப்படுகின்றன.
  • திருவிழாக் காலங்களில் வழக்கமான மேற்படி நிவேதனங்களுடன் தேன்குழல், வடை, புட்டு, சீயம், அதிரசம், தோசை முதலியவை சிறப்பு நிவேதனமாகும். இந்த நிவேதன அமைப்பு ஆனி மகத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் நடைபெறும் உற்சவகாலங்களில் மாணிக்வாசகருக்கும் உண்டு. ஆத்மநாதசுவாமிக்கு வருடமுழுவதும் உள்ள நைவேத்தியம் மாணிக்கவாசகருக்கும் இந்த இருவிழாக் காலங்களில் (10 + 10 = 20 நாள்களில்) படைக்கப்படுகிறது.
  • இக்கோவிலுக்கு உரிய இசைக்கருவி தவள சங்கமாகும். பூசைகளின்போது சங்குமுழங்குவர்; புல்லாங்குழல், முகவீணை முதலியனவும் இசைக்கப்படுகின்றன; திருச்சின்னம் ஊதப்படுகிறது. மாலையில் கொலுமேளம் வாசிக்கப்படும்; அர்த்தஜாம பூசையில், ஊஞ்சல் லாலி, கப்பல், கதவுதிறக்கும்பாடல், தாலாட்டு எச்சரிக்கை முதலியன வாசிக்கப்படுகின்றன. விழாக்காலங்களில் உவச்சர்கள் லவண்டை அடிக்கின்றனர்; கொம்பு, வளைகொம்பு, எக்காளம், கௌரிகாளம் முதலியவற்றை ஊதும் வழக்கமும் இருந்துள்ளது.
  • யோகாம்பிகை சந்நிதியில், பதினெட்டு தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றான "சல்லரி" என்ற இசைக்கருவி (கெத்து வாத்தியம்) தினமும் சாயரட்சை முடிந்ததும் வாசிக்கப்பட்டு வந்துள்ளது.
  • கோயில் கல்வெட்டுக்களில் இத்தலம், மிழலைக்கூற்றத்து நடுவிற்கூற்றம் பிரமதேசம் தனியூர்திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்" என்றுக் குறிக்கப்பட்டுள்ளது.
  • இக்கோயிலிலுள்ள மண்டபங்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. இக்கல்வெட்டுக்கள் மூலம் கோயிலுக்கும் சுவாமிக்கும் விடப்பட்ட நிவந்தங்கள் குத்தகைதாரர்களின் பத்திரங்கள், கும்பாபிஷேகம் நடைபெற்ற விபரங்கள், நிர்வாகச் செய்திகள் முதலியவை தெரிய வருகின்றன.
  • இத்திருக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ளது. தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி அங்குதான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.
  • ஆதிகயிலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
  • இக்கோயிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டீசர் இல்லை  

பார்த்து ரசிக்கவேண்டிய சிற்பங்கள் 
வல்லப கணபதி 
உக்கிர நரசிம்மர் 
பத்திரகாளி 
ஊர்த்துவ தாண்டவர் 
பிட்சாடனர் 
வில் ஏந்திய முருகன் 
ரிஷபாந்திகர் 
அரியர்த்த மூர்த்தி (சங்கர நாராயணர்)
வீரபத்திரர்கள் 
மாணிக்க வாசகர் அமைச்சர் கோலம், துறவுக் கோலம் 
அசுவநாதர் (குதிரைச்சாமி)
குறவன், குறத்தி 
டுண்டி விநாயகர் 
உடும்பும் குரங்கும் 
கற்சங்கிலிகள் 
இரண்டே தூணில் ஓராயிரம் கால்கள் 
1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவி திருவுருவங்கள் 
பல நாட்டுக் குதிரைச் சிற்பங்கள் 
27 நட்சத்திர உருவச் சிற்பங்கள் 
நடனக்கலை முத்திரை பேதங்கள் 
சப்தஸ்வரக் கல்தூண்கள் 
கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போல் இருப்பது 

தீர்த்தம்

திருப்பெருந்துறையில் பலதீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் ஆதியில் உண்டானவை ஒன்பது தீர்த்தங்கள். இவை நவதீர்த்தம் எனப்படும்.
1. சிவதீர்த்தம்:
இது அம்பாள் சந்நிதிக்கு எதிரே கிணறு ரூபமாக இருக்கிறது. இதற்கு ஆத்மகூபம், ஆன்மநாதகூபம் என்றும் பெயர்கள் உண்டு. இதன் தீர்த்தம் ஆன்மநாதர்க்கு அபிடேகத்துக்கு
மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
2. அக்கினி தீர்த்தம்:
இது ஆன்மநாதர் ஆலயத்தில் தென்மேற்கில் குளமாக இருக்கிறது. இதற்குச் சத்தி தீர்த்தம், திருத்தமாம் பொய்கை என்ற பெயர்கள் உண்டு. இதன் தீர்த்தத்தைக் கண்டாலும், தொட்டாலும்,
பருகினாலும், நீராடினாலும் நினைத்த பயனை பெறலாம்.
3. தேவதீர்த்தம்:
இது ஆன்மநாதர் ஆலயத்தின் எதிரே தெற்குத் திசையில் நெல்லியடி என்ற இடத்தில் பெரிய தடாகமாக விளங்குகிறது. இதற்கு நாததீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இத்தீர்த்தத்தில்
நீராடுவோர் இம்மை இன்பமும் மறுமை போகமும் அனுபவித்து இறுதியில் சிவனடி சேர்ந்து பேரின்பம் எய்துவர்.
4. முனிவர் தீர்த்தம்:
இது திருக்கோயிலின் வடக்கு வீதிக்கு அருகில் ஓடையாக இருக்கிறது. இதற்கு விந்து தீர்த்தம், ரிஷி தீர்த்தம் என்ற பெயர்களும் உண்டு. இதில் நீராடினால் சகலபாதகங்களும் நீங்கும்.
5. அசுர தீர்த்தம்:
இது திருக்கோயிலின் மேற்குத் திசையில் இருக்கிறது. இதற்கு சதாசிவ தீர்த்தம், குளிர்ச்சிக்குளம் என்ற பெயர்கள் உண்டு. இதில் நீராடுவோர் பாவங்கள் நீங்கி வீடுபேறு அடைவார்கள்.
6. வாயு தீர்த்தம்:
இது ஆன்மநாதர் ஆலயத்திற்கு வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதற்கு மகேச தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இத்தீர்த்தத்தில் நீராடினால் தீராத வியாதிகள் தீரும்.
7. சிவகங்கை தீர்த்தம்:
இது ஆன்மநாதர் ஆலயத்திற்கு வடகிழக்கே உள்ள கயிலாசநாதர் திருக்கோயிலுக்கு வடக்கே உள்ளது. இதற்கு உருத்திரதீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இதில் நீராடுவோர் கயிலாய பதவி
பெறுவார்கள்.
8. நாராயண தீர்த்தம்  
இது திருக்கோயில் வடக்கு வீதியில் பெருமாள் கோயிலுக்கு மேற்கே ஓடைரூபமாக இருக்கிறது. இதற்கு விஷ்ணு தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இதில் மூழ்குபவர்கள் முப்பகையும் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற்று வீடுபேறு அடைவார்கள்.
9. பிரம தீர்த்தம்:
இது திருக்கோயிலுக்கு மேற்குத் திசையில் இருக்கிறது. இது முதன்மையப்பர் சந்நிதிக்குளம் என்று இப்போது சொல்லப்படுகிறது. இதில் மூழ்குகிறவர்கள் மகாபாதகங்கள் எல்லாம் நீங்கப் பெறுவர். மேலே சொல்லப்பட்ட நவந்தருபேதமான ஒன்பது தீர்த்தங்களேயன்றி மேலும் அறுபத்துநான்கு கோடி தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் முதலியனவும் திருப்பெருந்துறையில் உள்ளன.
10. அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம்:
இறைவனின் திருவருளால் இத்தலத்தில் வெட்டின இடமெல்லாம் நீர் பெருகியது. இப்படி வெட்டி நீர்வரக்கண்ட குளங்களே அறுபத்து நான்கு கோடித் தீர்த்தமாகும். அவைகளில் ஒருசில தற்போது குறும்பனுடையான் தோப்புக் கிணறு, கட்டளை மடத்துத் தோப்புக் கிணறு, கணநாதர் கோயில்கிணறு, ராமகங்கை ஓடை என்ற பெயர்களில் பேசப்படுகின்றன.
11. வெள்ளாறு:
இது ஆவுடையார்கோயிலுக்கு வடக்கே ஓடுகிறது. இதற்கு ஆனந்த வெள்ளாறு என்ற பெயரும் உண்டு.

12. திருத்தொட்டித் தீர்த்தம்:
ஆன்மநாதருக்கும் யோகாம்பிகைக்கும் அபிடேகமான நீர் தேங்கி இருக்கிற தொட்டி திருத்தொட்டித் தீர்த்தமாகும். இந்த நீரை முகந்து நீராடுகிறவர்கள் உடலைப்பற்றிய பலநோய்களும் உயிரைப் பந்தித்து இருக்கிற மலப்பிணியும் நீங்கிப் பாதகங்களும் நீங்கப் பெறுவார்கள்.

திருக்கோயில் பூசைமுறைகள்
ஆவுடையார்கோயிலில் நாடொறும் உஷக்காலம், திரிகால சந்தி, காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என்று ஆறு கால பூசைகள் நடைபெறுகின்றன.
உஷக்கால பூசை:
நடுவாசல் காவல்காரர் விடியற்காலையில் நாலரை மணிக்கு மணியடிப்பார்கள். வெளிமண்டபத்தில் நித்திரை செய்யும் நம்பிமார் முதலியோர் மணி ஓசை கேட்டு எழுவர். அனைவரும் நீராடி ஆசாரத்துடன், தத்தம் காரியம் தொடங்குவர். சுயம்பாகிகள் நிவேதனம் தயாரிப்பர். பரிசாரகர் சன்னதிகளைத் தூய்மை செய்வர். இடையர்கள் பஞ்சகவ்வியப் பொருள்களும் அபிஷேகப் பாலும் கொண்டு வருவர். நம்பிமார்கள் அனுட்டானம் முடித்து தேவசபைக்கு வந்து பஞ்சகவ்வியம் சேர்த்துப் புண்ணியாகவசனம் செய்து மடைப்பள்ளி முதலான இடங்களில் தெளிப்பர். பிறகு சிற்சபைக்கு பவந்து கெண்டாபூசை, கலசபூசை, சங்கபூசை, துவார பூசைகளைச் செய்து ஆத்மநாதர் சன்னதியைத் திறப்பர். தீபம்
போடுவர். அவ்விதமே அம்பாள் சந்நிதி குருந்த மூலம் ஆகிய இடங்களிலும் புண்ணியாகவசனஜலம் தெளித்துத் தீபம் இடுவர். பிறகு சுவாமி சந்நிதியிலும் அம்மன் சந்நிதியிலும் அபிஷேகம் நடக்கும். புண்ணியாக வசனம் செய்து கெண்டா பூசை முதலியன செய்து அலங்காரம் நடைபெறும். பிறகு மாணிக்கவாசகர் சன்னதியில் சுவாமிக்கும் குருந்த மூலத்துக்கும் தீபாராதனை நடக்கும். பிறகு கதவு திறக்கப்படும். கணபதி முதலிய பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். அதன்பிறகு
அம்பாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் ஏககாலத்தில் தீபாராதனை நடக்கும். பிறகு மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் தீபாராதனை. இவ்வாறு பூசை நடக்கும்போது சுவாமி சன்னதியில் தீபாராதனையும் நடந்த பின்பு அஷ்டவர்கம் ஓதலும் வேதம் ஓதலும் தட்சிணாமூர்த்தி சகஸ்ரநாமார்ச்சனையும் சுத்தான்ன நிவேதனமும் திருவாவடுதுறை ஆதீனத்துப் பண்டாரச் சந்நிதிகளின் நாமநட்சத்திரத்துடன் ஆசீர்வாதமும் நடக்கும். அதன்பிறகு ஓதுவாமூர்த்திகள் தேவார திருவாசகம் ஓதுவார். இவ்விதமே எல்லாச் சன்னதிகளிலும் தீபாராதனை நடக்கும். ஒவ்வொரு கால பூசையிலும் சுவாமியின் நிர்மால்யம் மாணிக்கவாசகர்க்குச் சாத்தப் பெறும்.
திரிகாலசந்தி பூசை:
இது புதுக்கோட்டை மகாராஜாவின் கட்டளையின்கீழ் நடைபெறுவதாகும். நம்பிமார்கள் சுவாமி சன்னதிக்குப் புண்யாகவசனம் செய்தபிறகு குருந்த மூலத்துக்கு அபிஷேகமும்
அஷ்டோத்தரமும் அம்பாளுக்கு அபிஷேகமும் லலிதா சகஸ்ர நாமார்ச்சனையும் மகாராஜாவின் நாம நட்சத்திரத்துக்கு ஆசீர்வாதமும் நடக்கும். பிறகு மாணிக்கவாசகருக்குச் சகஸ்ரநாமார்ச்சனை நடக்கும்.
காலசந்தி பூசை:
நம்பிமார் தேவசபையில் புண்ணியாகவசனம்செய்து சகல இடங்களிலும் தெளிப்பர். வைதீகர் சுவாமி சன்னதி குருந்த மூலம் அம்பாள் சன்னதிகளில் ருத்திர கலசத்தை ஆயத்தம் செய்து வைப்பர். நம்பிமார் அக்கலசங்களில் பூசை செய்து அபிஷேகம் செய்வர். குருந்த மூல அபிஷேகம் ஆன பிறகு செட்டியார் கட்டளைக்காகச் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். பிறகுசுவாமி சன்னதி அம்பாள் சன்னதி முதலியவற்றிலும் அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெறும்.
உச்சிக்காலபூசை:
இது சேதுபதி மகாராஜாவின் கட்டளையின் கீழ் நடைபெறுவதாகும். முன்சொன்னவாறே புண்ணியாகவசனம் முதலானவைகள் நடைபெறும். சேதுபதி மகாராஜாவின் நாம
நட்சத்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லப்படும். இக்காலத்தில் சிறப்பாக மாஷாபூபம் நிவேதனம் செய்யப்படும்.
சாயங்காலபூசை:
நம்பிமார் முறைப்படி புண்ணியாகவசனம் செய்து சகல இடங்களிலும் தெளித்துக் கும்பபூசை செய்து சன்னதிகள் அபிஷேகம் நடைபெறும். குருந்த மூலத்துக்குத் தீபாராதனை
ஆனபிறகு தும்பைமாலை சாத்திப்பதினெட்டுநாமார்ச்சனை நடக்கும். அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாமார்ச்சனையும் பாயச நிவேதனமும் நடக்கும்; சாயங்கால பூசையில் பச்சையப்ப முதலியார் கட்டளையின்கீழ்ச் சுவாமிக்கு சகஸ்ரநாமார்ச்சனையும் குருந்த மூலத்துக்கு அஷ்டோத்தரமும், அம்பாளுக்குத் திரிசதியும் மாணிக்கவாசகருக்கு அஷ்டோத்தரமும் நடைபெறும்.
அர்த்தசாம பூசை:
இது உடையாத்தேவர் கட்டளையின்கீழ் நடைபெற்று வருவதாகும். முதலில் கணேசருக்குக் கணேச சகஸ்ரநாமார்ச்சனை நடக்கும். பிறகு நம்பிமார் புண்ணியாகவசனம் வைத்து சகல இடங்களில் தெளித்து முறைப்படி அபிஷேகம் செய்வர். சுவாமிக்குச் சகஸ்ர நாமார்ச்சனையும் வர்க்கான்ன நிவேதனமும் நடக்கும். அம்பாளுக்குச் சகஸ்ரநாமாச்சனையும் முத்கான்ன நிவேதனமும் நடக்கும். தீபாராதனையுடன் பூசை முடிவுபெறும்.

உற்சவங்கள்:
இத்தலத்தில் ஆனிமாதம், மார்கழி மாதம் ஆகிய காலங்களில் இரண்டு உத்ஸவங்கள் நடைபெறும். அவற்றுள் ஆனிமாத உத்ஸவம் மகத்தானது. மாணிக்கவாசகர் இத்தலத்தில்   உபதேசம் பெற்றுச் சிறப்பெய்தியபடியால் அவர் இறைவனோடு ஒன்றிக் கலந்த ஆனிமகத்தை ஒட்டி உத்ஸவம் நடக்கும். உத்ஸவமும் அவருக்குத்தான் நடைபெறுகின்றது. சுவாமிக்கு உத்ஸவமில்லாதபடி மணிவாசகருக்கு நடப்பதால் இதனைப் பக்தோத்ஸவம் என்று நினைக்கலாகாது. மணிவாசகர் சிவமாகவே விளங்குவதால் இதனைப் பிரமோத்ஸவமாகவே கூறவேண்டும். திருவிழாக் காலத்தில் இடபம் திருத்தேர் முதலான வாகனங்களில் மணிவாசகர் திருவுலாவருகிறார். 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

Related Content

பட்டமங்கலம் சுந்தரேசுவரர் (குருபகவான்) கோயில் Pattamangalam

ஓரியூர் சேயுமானவர் திருக்கோயில் (Oriyur Seyumanavar Sivan Te