logo

|

Home >

hindu-hub >

temples

தஞ்சை இராசராசேச்சரம் பிரகதீஸ்வரர் கோயில்

இறைவர் திருப்பெயர்: பிரகதீஸ்வரர், பெருவுடையார், இராசராசேச்சரமுடையார், தக்ஷிணமேருவிடங்கர்

இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சிவகங்கை

வழிபட்டோர்:

Sthala Puranam

thanjavur periyakoyil

  • தஞ்சகன் ஆண்ட ஊராதலின் தஞ்சகனூர் என்பது மருவி தஞ்சாவூர் என்றாயிற்று என்பது வரலாறு.
  • தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் - பெருவுடையார் கோயிலே இராசராசேச்சரம் என்பதாகும்.
  • முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்டதாதலின் இராசராசேச்சரம் எனப்பட்டது.
  • முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அஷ்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். அ•தறிந்த போகமுனிவர் மன்னனுக்குச் செய்தியனுப்ப, அதன்படி கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது வரலாறு.

Specialities

  • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
  • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
  • சோழர்க்கு தலைநகராக விளங்கிய பதி.
  • தலைசிறந்த சிற்பக் கலையழகு வாய்ந்த அற்புதமான திருக்கோயில்.
  • கோயில் கலைப்பராமரிப்பு, தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருந்து வருகின்றது.
  • தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குச் சொந்தமான திருக்கோயில்; கோயில் வழிபாடு, நிர்வாகம் அரண்மனை தேவஸ்தானத்தின் மூலம் நடைபெறுகிறது.
  • வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன.
  • சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள "தளிக்குளம்" வைப்புத் தலமாகும். அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் தாண்டகத்துள் "தஞ்சைத் தளிக் குளத்தார்" என்று பாடுகிறார்.
  • சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம்.
  • கருவூர்த் தேவரின் உருவச்சிலை கோயிலில் உள்ளது.
  • கோயிலின் முதற்கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும்; இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராசராசன் வாயில் என்றும்; தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர்.
  • பரந்த நிலப்பரப்பில் விசாலமாக, ஓங்கி உயர்ந்துள்ள விமானம் தொலைவிலிருந்து பார்ப்போருக்கும் கலைக்காட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது.
  • சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது - தக்ஷ¢ணமேரு எனப்படும்.
  • மூலமூர்த்தியாகிய (சிவலிங்க) பிரகதீஸ்வரமூர்த்தி மிகப்பெரியது. நர்மதை தீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டதென்பர்.
  • முன்னால் அமைந்துள்ள மிகப்பெரிய நந்தி ஒரே கல்லில் அமைந்தது. 12 அடி உயரம்; 19 அடி நீளம்; சுமார் 8 1/2 அடி அகலமுடையது.
  • விமானத்தின் மேலிருக்கும் பிரமரந்திரத்தைச் சாரம் கட்டி ஏற்றியிருக்கும் அருமையை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது. சாரம் கட்டிய இடமே இன்று சாரப்பள்ளம் எனப்படுகிறது.
  • இக்கோயில் விமானக் கலசத்தின் நிழல் நிலத்தில் விழாதவண்ணம் அமைத்திருப்பது சோழர்களின் கட்டிடக் கலையின் நுட்பம் புலனாகிறது.
  • சோழ மன்னர்களுக்கு திருவாரூர்த் தியாகராசாவிடத்தில் அளவிறந்த பற்றுண்டு, எனவே அவர்கள் இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை தியாகராசாவாகவே எண்ணி, அதற்குரிய சிறப்புக்களைக் குறைவின்றிச் செய்து போற்றி வழிபட்டனர். இம்மூர்த்தி "தஞ்சை விடங்கர், தக்ஷ¢ணமேரு விடங்கர்" என்று போற்றப்படுகிறார்.
  • இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராசராசனும், அவன் மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அதிகாரிகளும் தந்தனர் என்பது கல்வெட்டால் தெரியவருகிறது.
  • கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகை நடன அமைப்புகளின் சிற்பங்கள் உள்ளன.
  • இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர், சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஓவியங்கள் கலைக்கு விருந்தாகும் கவினுடையன.
  • அம்பாள் கோயிலை எழுப்பியவன் 'கோனேரின்மைகொண்டான்'. எழுந்தருளுவித்த மூர்த்தத்திற்கு 'உலகமுழுதுடைய நாச்சியார்' என்று பெயர் சூட்டப்பட்டது.
  • விநாயகர் திருமேனிகளை இராசராசன் பிரதிஷ்டை செய்வித்துள்ளான்.
  • பிராகாரத்திலுள்ள சுப்பிரமணியர் கோயில், பிள்ளையார் கோயில் பிற்காலத்தில், சரபோஜி மன்னரால் பழுது பார்க்கப்பட்டு முன் மண்டபங்கள் கட்டப்பட்டன.
  • நடராஜ மண்டபம் மிகவும் பிற்காலத்தியது.
  • சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டை நாளில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் 'ஆட்டைத் திருவிழா' எனப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இவ்விழாவில் இராசராச நாடகம் நடிக்கப்பட்டது. இதை நடித்த சாந்திக்கூத்தன் திருமுதுகுன்றனான விஜயராசேந்திர ஆசாரியனுக்கு இதற்காக 120 கலம் நெல் தரப்பட்டது.
  • சுவாமிக்கு சண்பக மொட்டு ஏல அரிசி இலாமிச்சை முதலியவை ஊறவைத்த நன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பருப்பு நெய் தயிர் அமுதுகள் நிவேதனமாகப் படைக்கப்பட்டன.
  • சுவாமிக்கு முன்பு திருப்பதிகம் விண்ணப்பிக்க நாற்பத்தெட்டு பிடாரர்களும், உடுக்கை வாசிக்க ஒருவரும், கொட்டு மத்தளம் முழக்க ஒருவரும் ஆக 50 பேர்களை இராசராசன் நியமித்தான். இவர்களுடைய பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. அப்பெயர்கள் அனைத்தும் அகோரசிவன், ஞானசிவன், தத்புருஷசிவன், பரமசிவன், ருத்ரசிவன், யோகசிவன், சதாசிவன் என்று முடிவதால் இக்கோயிலில் தீட்சை பெற்றோரே திருப்பதிகம் விண்ணப்பிக்க நியமிக்கப்பட்டனர் என்ற செய்தி தெரிகிறது.
  • கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டுவந்து 2 நீளத் தெருக்களில் 400 நடனப் பெண்களைக் குடியமர்த்தினான் இராசராசன். இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்றழைக்கப்படலாயினர். இவர்கள் வசித்த தெரு தளிச்சேரி என்று வழங்கியது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டன. இவர்களுக்கு வீடு கட்டித்தந்து, ஆடல்வல்லான் மரக்காலால் நெல் அளித்து இறைபணிகளுக்கு அமர்த்தியதாகத் தெரிகிறது.
  • மேற்கண்டவாறே கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர், மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள், மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் நியமித்தான்.
  • நிலநிவந்தங்கள் பல தந்துள்ளான். அம்மன்னன் கோயிலுக்குத் தந்துள்ள ஆபரணங்களின் பெயர்களைப் படித்தாலே பிரமித்துப் போகிறோம் - வியப்பும் பேராச்சரியமும் அடைகிறோம். ஆனால் அவை ஒன்று கூட இன்றில்லாதது - அதைவிட மிகப் பெரிய ஆச்சரியமாகும். நினைத்தால் அடையும் வேதனைக்கு அளவுமில்லை - மருந்துமில்லை.
  • தன்னாற் கட்டப்பட்ட கோயிலுக்குத் தேவையென்பது ஏதுமில்லாதபடி - சிறிதும் குறைவில்லாதபடி அனைத்தையும் செய்து வைத்தான் என்பதை எண்ணுங்கால், அம்மன்னனின் சமயப்பற்று, பரந்த இறைமனம், தெய்வ வழபாட்டில் மருந்த மட்டற்ற ஈடுபாடு தெரியவருகிறது.
  • இத்திருக்கோயிலால் தஞ்சை, சுற்றுலாத் துறையில் தனியிடம் வகிக்கிறது.
  • இக்கோயிலைக் கட்டியவன் முதலாம் இராசராசசோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன்; இயற்பெயர் அருண்மொழித்தேவன; பட்டப்பெயர் இராசகேசரி. தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையுடையவன். இம்மன்னன் கி.பி. 1010ஆம் ஆண்டில் இக்கோயிலைக் கட்டி முடித்திருக்க வேண்டும் என்பர் ஆய்வாளர். இவனுடைய காலம் சோழர் வரலாற்றில் வெற்றிக் காலம். மாலத்தீவுகளையும் வென்ற இவனுடைய வெற்றியிலிருந்து இவனுடைய கப்பற்படை வலிமையும் புகழப்படுகிறது.
  • கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷ¢ணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சர முடையார், இராசராசேச்சமுடைய பரமசுவாமி எனவும்; ஊர்ப் பெயர் பாண்டிகுலாசனி வளநாட்டி தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. (பாண்டி குலாசனி என்பது இராசராசனின் விருதுப்பெயர். இதற்குப் பாண்டியர் குலத்துக்கு இடியைப் போன்றவன் என்று பொருள்)thanjore periyakovil
  • மன்னன் மட்டுமின்றி அவன் குடும்பத்தாரும், அலுவலர்களும் பற்பல நிவந்தங்களைக் கோயிலுக்கு ஏற்படுத்தினர், அவையனைத்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. மற்றும், நாடொறும் கோயிலில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்த வாறிருந்ததும், மக்கள் கண்டு மகிழ்ந்ததும்; திருப்பதிகம் விண்ணப்பித்தோர், கணக்காயர், மெய்க்காவலர் முதலியோர் பெயர்களும்கூடக் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • பிரகதீஸ்வர மகாத்மியம், சமீவன §க்ஷத்ரமான்மியம் முதலிய தலபுராண நூல்கள் (சமஸ்கிருதத்தில்) உள்ளன.
  • கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் 'பெருவுடையார் உலா' பாடியுள்ளார்.
  • இவ்வளவுச் சிறப்புக்களோடு திகழ்ந்த தஞ்சைப் பெரிய கோயில் காலச்சூழலால் மாறி, செல்வம் அனைத்தையும் இழந்து, இன்று கலையழகு ஒன்றை மட்டுமே கொண்டு காட்சிப் பொருளாக இருந்து வருகின்றது.
  • இதன் சிறப்பைக் கருதி அரசுச் சார்பில் ஆண்டு தோறும் இராசராசனின் சதயத் திருவிழா நடத்தப்படுகிறது. அம்மன்னனின் உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
  • இராசராசனுடைய ஆயிரமாண்டு விழா அப்போதைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களுடைய வருகையுடன் அரசினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
  • இராசராச சோழன் தன் காலத்தில் பொறித்து வைத்துள்ள 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் அனைத்தையம் அச்சிட்டு 'சிவபாதசேகரன் கல்வெட்டுக்கள்' என்னும் நூலை வௌ¤யிட்டதோடல்லாமல் பூசைகள் தடையின்றி நடைபெற நிரந்தர வைப்புநிதியும் இன்னும் பல அரிய பணிகளையும் செய்துள்ளார் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள்.
  • ஓலைச்சுவடிகளையும் அரும்பெரும் நூல்களையும் காத்து வரும் சரஸ்வதி மகால் நூல் நிலையம் தஞ்சையில் உள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்நகரில்தான் நிறுவப்பட்டுத் தமிழின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் செயற்பட்டு வருகின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும், சென்னை - இராமேஸ்வரம் இருப்புப் பாதை - பிரதான இருப்புப்பாதை (Main line) உள்ள சந்திப்பு நிலையமும் உள்ளது.

Related Content

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

கங்கைகொண்ட சோழபுரம்

கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

திருவிடைக்கழி

களந்தை ஆதித்தேச்சரம் (களப்பால் - கோயில் களப்பால்)