logo

|

Home >

hindu-hub >

temples

கங்கைகொண்ட சோழபுரம்

இறைவர் திருப்பெயர்: கங்கைகொண்ட சோழேச்சரர், பிரகதீஸ்வரர், பெருவுடையார்.

இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி, பிருகந்நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • கோயில் - கங்கைகொண்ட சோழேச்சரம். ஊர் - கங்கைகொண்ட சோழபுரம்.
  • முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர் தலைநகராகத் திகழ்ந்தது. தன் தந்தையைப்போல அதற்கீடாக மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012 - 1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பி போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணி; முயன்றான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் - கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும். அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம்.
  • இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை (உக்கோட்டை) என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றது. இவ்வூருக்காக கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது.
  • முதலாம் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டியர் கி.பி.12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்தெழாயினர். அப்போது சோழமன்னர் பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையை அழித்தனர். இதனால் மனங்குமுறிய பாண்டியர், சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு, பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தேதான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்தல் வேண்டும். மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
  • மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதாவது, லோயர் அணைக்கட்டில் கொள்ளிடத்திற்குப் பாலம் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக்கோயிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மலையும் இடித்துக் கற்களை எடுத்தனர். ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை. கோயிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன. கோயிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன்தான் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால் அக்கேணி முதலாம் இராசேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க வில்லையென்றும்; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் வைத்தான் என்பதும் தெரிகின்றது.

Specialities

  • இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும்.
  • இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
  • ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
  • 160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்); பல கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது.
  • இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது.
  • இத்தலம் தற்பொழுது சிற்றூராக உள்ளது. (இங்குப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை.) பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய இத்தலைநகரின் பகுதிகளே, இன்றுள்ள 1. உட்கோட்டை, 2. மாளிகைமேடு, 3. ஆயிரக்கலம், 4. வாணதரையன் குப்பம், 5. கொல்லாபுரம், 6. வீரசோழ நல்லூர், 7. மெய்க்காவல்புத்தூர், 8. சுண்ணாம்புக்குழி, 9. குருகைபாலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும்.
  • சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே 'மாளிகைமேடு' ஆகும்.
  • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள்.
  • கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன.
  • சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தபதி.
  • கோயிலமைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயிலமைப்பே ஒத்துள்ளது. சிற்பக் கலையழகு சிந்தனைக்கு எட்டாதது.
  • இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது.
  • முதலாம் இராசேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வழங்கினான்.
  • மூலவர் சிவலிங்கமூர்த்தி கிழக்கு நோக்கியுள்ளார், பேருருவம் 13 அடி உயரம்; ஆவுடையார் சுற்றளவு 60 அடி - ஒரே கல்லால் ஆனவை; விமானம் 160 அடி உயரம் - 100 அடி சதுரமானது.
  • மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது.
  • மூலவர் முன்பு நிற்குங்கால் - வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் - உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்குச் சொல்லப்படும் காரணம், மூலவரின் அடியில் சந்திரக் காந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக் காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது.
  • மூலவரை வணங்கியபின் வெளியே வந்து வலமாக வரும்போது பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராசர், சுகாசனர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர், ஞானசரஸ்வதி முதலிய அருமையான சிற்பமூர்த்தங்களைக் கண்ணாரக் கண்டு மகிழலாம். அரிய சிற்பக் களஞ்சியம் அழகிழந்து நின்று அருமையை பறைசாற்றுகிறது.
  • கோயிலின் சிறப்புக்களை இணைதளத்தில் படித்துவிட்டு நேரில் காணச் செலவோருக்கு மிஞ்சுவது, இடிபாடுகளைக் காண்பதால் வரும் வேதனையே! கோயிலுக்கு முன்னால் மொட்டைக்கோபுரம் - வாயில் தாண்டியதும் அழகான நடைபாதை - சுற்றிலும் புல் தரைகள். வலப்பால் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. அம்பாள் இருபது கரங்களுடன் காட்சித் தருகிறாள். அபயவரதம் நீங்கலாக 18 கரங்களில் 18 ஆயுதங்கள் உள்ளன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது.
  • சற்றுத் தள்ளிச் சென்றால் சுதையாலான பெரிய யாளி காட்சி தருகிறது. அதனுள் இறங்கிச் சென்று "சிம்மக்கிணற்றை"க் காணலாம். இக்கிணற்றில் கங்கை நீர் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதிற்சுவர்கள் இடிந்து போயுள்ளன.
  • உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் சானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன்; சுற்றிலும் எட்டு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது; ஒருபால் 12 பேர் நாதஸ்வர வாத்யங்களை வாசிப்பது, கடையாணி பூட்டிய தேரில் உலகை வலம்வரும் கோலம் - மிகவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
  • இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம், ஊர்ப் பெயர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும்; இறைவன் பெயர் திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர் வழங்கப் பெற்றன என்ற செய்தியும்; மன்னனார் என்பது - திருமாலுக்குப் பெயர். அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனாகுடி என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன் பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள் இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.
  • இத்திருக்கோயிற் பெருமானுக்கு இராசேந்திர சோழன் கங்கை நீராட்டியதை நினைவு கூறும் வகையில் 108 குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் 1985, 1986ஆம் ஆண்டுகளில் செய்வித்து, அது முதல் ஆண்டுதோறும் சுவாமிக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதற்கும் ஸ்ரீ காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திரரால் வழிவகை செய்யப்பட்டு நடந்துவருகிறது.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஜயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. தொடர்புக்கு:- +91 97513 41108

Related Content

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

தஞ்சை இராசராசேச்சரம் பிரகதீஸ்வரர் கோயில்

திருவிடைக்கழி

களந்தை ஆதித்தேச்சரம் (களப்பால் - கோயில் களப்பால்)