இறைவர் திருப்பெயர்: காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்.
இறைவியார் திருப்பெயர்: நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர்,பரணதேவ நாயனார், சேக்கிழார்,ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன்,விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன்,சண்டதருமன் முதலியோர்.
Sthala Puranam

புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம். இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.
பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.
இது, ஆதி சேஷனால் பூஜிக்கப் பெற்றதால், நாகை என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்துகொண்டமையால், காயாரோகணம் என்றும் பெயர். இது மருவி, காரோணம் என்றாயிற்று. (காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளது; 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 3.கச்சிக்காரோணம் [காயாரோகணம்] - லிங்கபேசம் [காயாரோகணம்]ஆகும்.)
ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் முதலிய பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகின்றது.
கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.
ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்தால், தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம். இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்; சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம்.
சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவை வழங்கிய தலம்; இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.
![]() |
![]() |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. புனையும் விரிகொன்றை (1.84), 2. கூனல்திங்கட் குறுங்கண்ணி (2.116); அப்பர் - 1. மனைவி தாய் தந்தை (4.71), 2. வடிவுடை மாமலை (4.103), 3. பாணத்தால் மதில் (5.83), 4. பாரார் பரவும் (6.22); சுந்தரர் - 1. பத்தூர்புக் கிரந்துண்டு (7.46); பாடல்கள் : அப்பர் - அறையார்பொற் (6.54.6); பரணதேவ நாயனார் - கடனாகக் கைதொழுமின் (11.23.35) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - சோலை மறைக் காட்டு (12.21.291) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மற்றவர்தம் பெரும் கேண்மை (12.28.466) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், சேவித்து அணையும் (12.37.84) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
“இந்நூலில் பல நயங்கள் மிகுந்து விளங்கும். சொல்லணி,பொருளணி, தொடைநயம்,பொருட்சிறப்பு,சுவைநயம்,நீதி,சிவபக்தி,சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”
ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.
2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.
Contact Address