logo

|

Home >

hindu-hub >

temples

திருவக்கரை சந்திரசேகரர் வக்கரை காளி திருக்கோயில் தல புராணம்

இறைவர் திருப்பெயர்: சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்துபோயிற்று.) மற்றொன்று சிதிலமாகியுள்ளது).

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், வக்கிராசுரன் முதலியோர்

Sthala Puranam

Tiruvakkarai temple

  • வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருந்துகின்றது.
  • குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். வெற்றி அடைந்த காளி வழிபட்ட தலம்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்    -    1. கறையணி மாமிடற்றான் (3.60); பாடல்கள்     :     அப்பர்     -        கொக்கரை (4.66.9),                                          நக்க ரையனை (5.22.5),                                          தக்கனது வேள்விகெடச் (6.74.7),                                          கயிலாய (6.51.1),                                          மண்ணிப் படிக்கரை (6.70.6);              கபிலதேவ நாயனார் -       நக்கரை சாளும் (11.22.45) சிவபெருமான் திருவந்தாதி;                   சேக்கிழார்    -       கன்னி மாவனம் காப்பு (12.28.963 & 964) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • "வராகநதி " என்றழைக்கப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாக உள்ளது; மிகப் பழமையான தலம்.
  • மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள 'சிலிகா ' என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊருருவி, மர அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில் பூமிக்குக்கீழ் உள்ள உப்பு நீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக (நிலக்கரியாக) மாறின என்றும்; இங்கு வெள்ளையாக மாறின என்பதும் அறிவியற் செய்தியாகும். இப்பகுதிக்குப் பக்கத்திலுள்ள, 'செம்மேடு' என்னுமிடத்தில் நிலவியல் துறையினரால் 'முதுமக்கள் தாழி 'யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • ராஜகோபுரத்தின் இடப்பக்கம் "வக்கிரகாளி " உள்ளது; இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. பௌர்ணமியில் அம்பாளுக்கு விசேஷம்.
  • சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது.
  • சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.
  • சஹஸ்ரலிங்கம் உள்ளது.
  • உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது; இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர்.
  • அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது; இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர்.
  • இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது.  மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று, 'பெரும்பாக்கம் ' என்னும் இடத்தில் பிரியும் கிளைப் பாதையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம். தொடர்பு : 0413 - 2688949

Related Content

திருநாவலூர் தலவரலாறு

திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு

இடையாறு தலவரலாறு

திருவெண்ணெய்நல்லூர் தலவரலாறு