logo

|

Home >

hindu-hub >

temples

திருவிற்கோலம் (கூவம்) திருக்கோயில் தலபுராணம்

இறைவர் திருப்பெயர்: திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம். கூபாக்கினி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

Tiruvirkolam temple
திருவிற்கோலம் திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் 
  • இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு + வில் + கோலம் - இதுவே தலத்தின் பெயராயிற்று.
  • மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி.
  • அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மைப் படரும் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் 'ஐயன் நல் அதிசயன் ' என்று குறிப்பிடுகின்றார். (இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம்.)
  • வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.
  • கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும், கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.
  • தலபுராணம் சிவப்பிரகாச சுவாமிகளால் பாடப்பெற்றுள்ளது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. உருவினார் உமையொடும் (3.23); பாடல்கள்      :   சேக்கிழார்   -       திருத்தொண்டர் (12.28.1005) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

Tiruvirkolam Temple full view
  • மூலவர் தீண்டாத் திருமேனி - சுயம்பு மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகிவிடுமாம் (சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வமாம்.)
  • மணல் லிங்கம், இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்கு சார்த்தப்படுகிறது.
  • அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், 
    போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும், சொல்லப்படுகின்றது. 
  • இங்குள்ள தீர்த்தத்திற்கு 'அச்சிறுகேணி ' என்றும், 'கூபாக்கினி தீர்த்தம் ' என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகளே இல்லை; சுற்றிலும் வயல்வெளிகள் இருந்தும் இக்குளத்தில் தவளைகளே இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறி விடுமாம். இத்தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திரப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
  • தனிக் கோயிலாக விளங்கும் பைரவர் சந்நிதியில், பைரவருக்கு நாய் இல்லை. 
  • வலம் முடித்து உள்ளே செல்லும் போது எதிரில் நடராசர் காட்சி தருகிறார்; காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் 'ரக்ஷீநடம் ' எனப்படுகின்றது. காளிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் 10-ம் நாளில் கொண்டாடப்படுகிறதாம்.
  • இக்கோயில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.
  • ஊருக்கு அண்மையில் தர்க்க மாதா என்னும் அம்மன் கோயில் உள்ளது. திருவாலங்காட்டு நடராசப் பெருமானுடன் தர்க்கித்து நடனமாட, சிலம்பு முத்துக்கள் வீழ்ந்த இடம் இதுவென்றும்; இதனால் அம்பாளுக்குத் 'தர்க்க மாதா' என்று பெயர் வந்ததென்றும் சொல்லப்படுகிறது.
  • இவ்வூருக்குக் 'கூபாக்னபுரி ' என்றும் பெயர் சொல்வதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் 'குமாரவட்டம் ' என்று முருகன் பெயராலேயே வழங்கப்படுகிறது.
  • கூவம் நதி இங்கிருந்து துவங்குகிறது
  • கோயிலிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள 'திருமஞ்சனமேடை' என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு, இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து, அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.
  • துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது, இதில் அரைத்த சந்தனம் 
    சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.
  • இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் பற்றிய அரிய செய்தி - கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள 'பிஞ்சிவாக்கம் ' கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகிறார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகின்றது. இந்த பால் அன்றாடம் வந்த பிறகே 'உச்சிக்கால அபிஷேகம் ' செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்று வரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே கொடி மரங்கள் உள்ளன.
  • சித்திரைத் திங்களில் பத்து நாட்களுக்குப் பெருவிழா.  சித்திரை பிரம்மோற்சவத்தின் போது சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
  • ஆடி மாதம் 10 நாட்கள் அம்பாளுக்குப் பூப்பாவாடை விழா.
  •  இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் செங்கற் கோயிலாகவும் 11 ஆம் நூற்றாண்டில் கற்றளியாகவும் திருப்பணி செய்யப்பட்டதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாம் ராஜேந்திரன், ராஜராஜன், மூன்றாம் ராஜராஜன், வீரகண்ட கோபாலன். விஜய கண்ட கோபாலன். முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலங்களில் இக்கோயிலின் நிர்வாகச் செலவிற்காக கோயிலில் விளக்கெரிக்க விழாக்கள் செய்ய நிலங்களையும் காசுகளையும் தானமாக அளித்த செய்திகளை இக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன
  • பையரவு அல்குல் அம்மைக்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு இம்மடி சென்னம்ம நாயக்கரும், விற்கோலம் ஊரார்களும் நிவந்தம் அளித்தனர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்து நேரே செல்லப் பேரந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்லலாம். தொடர்பு : 09443253325

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)