logo

|

Home >

hindu-hub >

temples

திருஆவடுதுறை (திருவாவடுதுறை)

இறைவர் திருப்பெயர்: மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர் (மூலவர்), அணைத்தெழுந்தநாயகர் (உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்; (திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.), செம்பொன் தியாகர் (திருவிழா காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர்).கோகழிநாதர், பூகயிலேசுவரர். புத்திரத்தியாகர். மகாதாண்டவேசுரர், போதிவன நாதர், சிவலோக நாயகர், போதியம் பலவாணர், அர்த்தத்தியாகர், முத்தித்தியாகர், திருவாவடுதுறை உடையார், பரமசாமி திருவாவடுதுறை ஆழ்வார்

இறைவியார் திருப்பெயர்: ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குசாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்

வழிபட்டோர்:உமாதேவியார், தருமநந்தி, முசுகுந்த சக்கரவர்த்தி, செவ்வாய், அகத்தியர், அக்னி, நவகோடி சித்தர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கோச்செங்கட்சோழன், திருமூலர், போகர், திருமாளிகைத்தேவர், சேரமான் பெருமாள், மிதிலேசன், வரகுணபாண்டியன், சேந்தனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி , சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

  • தலத்தின் வேறு பெயர்கள்:கோகழி, துறைசை, திருவாவடுதுறை. பூலோகக் கயிலாயம், நந்திக்ஷேத்திரம், தியாகபுரம், போதிவனம், அரசவனம், மகாதாண்டவபுரம், வேதபுரம், சித்தபுரம்,  நவகோடி சித்தபுரம், முக்தி க்ஷேத்ரம், சிவபுரம்

 

  • அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு).

     

  • தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில் அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது.

     

  • தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால், இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்).

     

  • நந்தி தருமநந்திதேவராவார்.

     

  • முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்: ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)

     

  • திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகம சாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.

     

  • நந்தியம் பெருமானிடம் அருள் பெற்ற சிவயோகியார் சுந்தரநாதர் என்பவர், பொதியமலையை நோக்கிச் செல்லும்போது சாத்தனூர் (திருவாவடுதுறைக்கு மிக அருகில் உள்ள புராணச் சிறப்புடைய ஒரு ஊராகும்) என்னுமிடத்தில் பசுக்கள் மேய்ப்பன்  ஒருவன் இறந்து கிடப்பதையும், அதனால் அப்பசுக்கள் உறும் துயரத்தையும் கண்டு, மூலன் என்னும் அம்மேய்ப்பனின் உடலில் தன் உயிரைச் செலுத்தி திருமூலர் என்னும் பெயர் கொண்டார்.

     

  • திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் சில காலம் தங்கியிருந்த புண்ணிய பூமி - சாத்தனூர் என்னும் ஊராகும்.
    	அவதாரத் தலம்	: சாத்தனூர் (சுந்தரநாதராக இருந்து திருமூலராக மாறியத் தலம்).
    	வழிபாடு		: குரு வழிபாடு.
    	முத்தித் தலம் 	: திருவாவடுதுறை.
    	குருபூசை நாள் 	: ஐப்பசி - அசுவினி.
    

     

  • போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.

     

  • முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.   முசுகுந்தன் போகங்களும் தேகமும் உலகும் நீர்க்குமிழிபோலத் தோன்றி அழியும் எனத் திருவருளாலே அறிந்தான். மேலாம் வீட்டை அடைய விரும்பி ஒரு நாள் போய்க் கை கூப்பி தொழுது இந்தப் பூபாரத்தையெல்லாம் புத்திரனை அருளி என்னைத் தவஞானச் சிவபக்தர் கூட்டத்துடன் துணையாகச் சேர்த்து ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினான்.அன்று இரவு கனவிலே இறைவன் தோன்றி 'இன்னும் உன்னால் யாம் ஏற்றுக் கொள்ளும் பணி உள்ளது. ஆரூர் போலவே இந்தத் துறைசையிலும் யாம் அடைந்திருப்பதால் அத்தலத்தில் பணி செய்து வருங்கால் புத்திரனும் பெற்று மகிழ்வாய்' என்றார்.மறு நாள் கனவில் கண்டபடி ஆரூர்ப்பெருமானை வணங்கிப் பல சேனைகளுடன் கோமுத்தி என்று போற்றப்படும் துறைசைத் தலத்தின் எல்லையை அடைந்தான்.கோமுக்தி தீர்த்ததில் நீராடி வெண்ணீறணிந்து துணைவந்த விநாயகரை முன்னர் வழிபட்டு, கோபுரவாயிலைக் கடந்து அரசினை வலம் வந்தான். பெரிய திருவுருவாயமைந்த நந்தி தேவரைத் தரிசித்து முசுகுந்தன் மாசிலாமணிப் பெருமானின் சந்நிதிக்குப் போகும்போது உண்மை ஞான நோக்கத்தை முசுகுந்தனுக்கு இறைவன் அருளி மாசிலாமணிப் பெருமானே வன்மீக இலிங்கமாகவும் திரு ஆரூரே அருள் நிறைந்த துறைசையாகவும், திருவாரூரைப் போன்றே காட்சி கொடுத்தருளி நர்த்தன மண்டபத்தின் நடுவில் நின்று வீதிவிடங்கராய் நடித்து மாசிலாமணி இலிங்கத் திருமேனியுள் மறைந்தருளினார். இதனைக்கண்டு முசுகுந்தன் கூப்பிய கரத்துடன் ஆனந்தக் கண்ணீர் சொரிய நின்று போற்றித் துதித்தான்.

    போதகம் புரிவாய் போற்றி போதியம்பலத்தாய் போற்றி
    மாதவாக் கரசே போற்றி மாசிலாமணியே போற்றி
    கீதமோ டுறையு நாகக் கிண்கிணிச் சரணா போற்றி
    மேதகு துறைசை வீதி விடங்கனே போற்றி போற்றி 

    மாசிலாமணிப்பெருமான் ஆகாயத்தினின்று அசரீரியாக, பேற்றை இப்போது அளித்தோம். உனக்கு ஞானத்தைப் பின்னர் தருவோம். அதுவரை துறைசையிலிருந்து நம்மைப் பூசிப்பாயாக என்று அருளினார்.

    முசுகுந்தன் தமது திருமாளிகையில் இரவு துயில் கொண்டு விடியற் காலையில் எழுந்து காவிரியில் நீராடி, திருநீறணிந்து திருக்கோயிலினை வலம் வந்து தொழுது வந்தார்.
    முசுகுந்தன் நடத்திய ரதசப்தமி : தை மாத ரதசப்தமி மகோற்சவத்தைத் தானே முன்னின்று நடத்தத் திட்டமிட்டு எல்லா நாட்டவர்க்கும் தூதுவர்கள் மூலம் செய்திகளை அனுப்பியும், திருக்கோயிலினை படுத்தியும், தானங்கள் பல செய்தும் வந்தான். அழகு துறைசையினைக்காவல்புரியும் சாஸ்தா, காளி, முதலான கிராம தேவதைகளுக்குப் பத்து நாள் திருவிழாவினைச் சிறப்பாக நடத்தி ஸ்ரீ மாசிலாமணிப் பெருமான் திருக்கோயிலில் துவஜாரோகணம் நிகழச் செய்தான். காலையிலும், இரவிலும், ரிஷபம், சூரியன், சந்திரன், மஞ்சம் முதலானவற்றில் சந்திரசேகரரை எழுந்தருளச் செய்து வீதி வலம் நடத்தினான், ஐந்தாம் நாள் விழாவன்று தியாகராஜர் ஆடுவதற்கு மகிழ்ந்து, அடியார்கள் போற்ற அசைந்து ஆடி நர்த்தன மண்டபத்தில் வந்து திருநடனம் ஆடினார். இப்படியாக ஆடிக் கொண்டே வசந்த மண்டபத்தை அடைந்து சிம்மாசனத்தில் பெருமானை எழுந்தருளச் செய்து
    ஆதி சைவர்களால் செய்யப்படும் பூசையினை கண்டு களித்தான். ஒன்பதாம் திருநாளன்று திருவாரூரில் தியாகராசர் திருத்தேர் விழாக்கொள்வதைப் போலத் துறைசையிலும் தியாகேசப் பெருமானைத் திருத்தேரில் பவனிவரச் செய்து பத்தாம் நாளில் தீர்த்தவாரியினைப் பாங்குற நடத்தினான். மாலையிலே தியாகராஜர் இறைவியோடு எல்லோருக்கும்
    பேரின்பம் கொடுத்தற் பொருட்டுப் பந்தர்க் காட்சியையும் அருளி, தேவியோடும் திருக்கோயில் சேர்ந்து அமர்ந்தார். பணியாற்றிய அரசர்கள், வேதவிற்பன்னர்கள், துறைசையில் நிகழ்ந்த ரதசப்தமி மகோற்சவத்தில் ஆதிசைவர்கள், முதலானோர்க்குத் தக்கபடி சன்மானத்தை வழங்கினான். 
    முசுகுந்தனுக்கு இறைவனும் திருவாரூரின் உணர்வை உண்டாக்கி ஆசிரியனாக வந்து ஆட்கொண்டு மூலத்தானத்து இலிங்கத்தில் மறைந்தருளினார். பின்னர் தன் பட்டத்தரசியுடன் திருவாரூர் கோயிலையடைந்து வன்மீகநாதரைப் புகழ்ந்து பாடினான். தாம் அரண்மனையில் இருந்து வரும்நாளில் இறைவன் திருவருளால் எட்டு சேய்கள் வந்தடைய வடி வழகு வீரம், கருணை, ஒப்பரவு ( நடுவு நிலைமை ) கலை, அஞ்சாமை, அறிவு ஊக்கம், பொறை, கொடை இவைகள் அனைத்தும் பொருந்திய மூத்த மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து உலகபாரம் அனைத்தையும் தமது மகனிடம் ஒப்படைத்து ஆட்சி செய்து வருக எனக் கூறினான். பின்னர் சிவன் அடியார் கூட்டத்தில் சேர்ந்து இறைவனது திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி நிட்டை கூடி, ஆரூர் வாழும் இறைவன் கழலடி சேர்ந்தான்..

     

  • சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.

     

  • திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.

 

  • முனிவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தது.
     

 

திருமுறைப் பாடல்கள்	: 

பதிகங்கள்  :  சம்பந்தர்  -   1. இடரினும் தளரினும் (3.4);

                அப்பர்    -   1. மாயிரு ஞால மெல்லாம் (4.56),
                               2. மஞ்சனே மணியுமானாய் (4.57),
                               3. நிறைக்க வாலியள் (5.29),
                               4. நம்பனை நால்வேதங்கரை (6.46),
                               5. திருவேயென் செல்வமே (6.47);  

               சுந்தரர்   -    1. மறைய வனொரு மாணி (7.66),
                              2. கங்கை வார்சடை யாய் (7.70);

            சேந்தனார்  -    1. பொய்யாத வேதியர் (9.6) திருவிசைப்பா;

            திருமூலர்   -    1. திருமந்திரம் (மூவாயிரம் பாடல்கள்)  திருமூல நாயனார் அருளியது, பத்தாம் திருமுறை; 

பாடல்கள்  :  பட்டினத்துப் பிள்ளையார்  -  நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; 

               நம்பியாண்டார் நம்பி     -  இருந்தண் (11.35.40 & 85) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி,
                                             மாயிரு ஞாலத்து (11.38.16) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, 
                                             தாழுஞ் சரணச் (11.40.18) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை;

               சேக்கிழார்               -   மேவு புனல் பொன்னி (12.21.190 & 191) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                             என்று கூறி (12.28.430 & 431) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                             விளங்கும் திருவாவடு துறையில் (12.29.63) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம். 

 

 

Specialities

  • சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம்.

     

  • திருக் கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் பதி.

 

  • சம்பந்தர் தனது தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு இறைவனைப்பாடி 1000  பொன்பெற்று கொடுத்ததை 4696ம் பாசுரம் கூறும்.

     

  • அமாவாசை, பிரதோஷம், அட்டமி, உத்தராயணம், தட்சிணாயனம், சோமவாரம், கார்த்திகைச் சோமவாரங்கள், செவ்வாய்க்கிழமை, பிர்மோற்ஸவ காலங்கள், தீர்த்தவாரி முதலிய தினங்களில் நீராடி இஷ்டசித்திகளைப் பெறலாம் எனத் தலபுராணம் கூறுகின்றது.

 

  • இக்கோயிலில், ஒன்பது கல்வெட்டுக்களுக்கு மேல் உள்ளன.பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.
  • கல்வெட்டுக்கள்
    பிற்காலச் சோழமன்னர்கள் முதலாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், அவனது மகனாகிய விசயராசேந்திரன். முதல் குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜதேவன் முதலானோர், பாண்டியர்களுள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு ஒன்றும் இருக்கின்றன.

  • திருக்கோயில் எழுப்பித்த காலம் :
    இத்திருக்கோயிலில் தில்லைச் சிற்றம்பலத்தை பொன்வேய்ந்த முதற் பராந்தக சோழன் காலத்தில் பொறிக்கப் பெற்ற ஒன்பது கல்வெட்டுகள் இருக்கின்றன. இப்பராந்தக சோழன் கி. பி. 907 முதல் கி. பி. 948 வரை சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தான். இவன் தனது முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் (கி. பி. 945 ) 500 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான். அப்பொன்னைக்கொண்டு இக்கோயில் குடப்படை பீடத்துக்கு மேல் திருப்பணி செய்யப்பட்டது. எனவே இத்திருப்பணி முடிவு பெற்றுக் கும்பாபிஷேகஞ் செய்யக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சென்றிருக்க வேண்டும். எனவே கி.பி. 947 இல் தனது ஆட்சியின் இறுதிக் காலத்தே இன்றைக்கு சுமார் 1053 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கற்றளியாக ஆக்கப் பெற்றதாகும் எனக் கணக்கிடப்படுகிறது.

  • கற்றளியாக எழுப்பியவன் :
    முதற்பராந்தகன் காலத்தில் இக்கோயிலைக் கருங்கற்கோயிலாகக் கட்டியவன் கற்றளிப்பிச்சன் என்பவன். இவன்உருவம் கர்ப்பக்கிருகத்தின் தென்புறத் தேவகோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி திருவுருவத்திற்குக் கீழ்ப்புறத்தில் கைகளை மார்பிற்கு நேரே வைத்துக் குவித்து, திருவாவடுதுறை உடையாரை வழிபடும் நிலையில் அமைந்துள்ளது. கற்றளிப் பிச்சன் என்று அவனது தலைக்குமேல் செதுக்கப்பட்டுள்ளது. பிச்சன் - அன்புடையவன் எனப் பொருள்படும் ) ''நின்கோயில்வாயிலில் பெரிய பிச்சனாக்கினாய்'' திருவாசகம் இக்கற்றளிப்பிச்சன் பிரதிமத்திற்குக் கிழக்குப் பக்கத்தில் கைகளைத் தலைமேல் குவித்து வழிபடும் மற்றொரு உருவம் இருக்கின்றது. இவன் கற்றளிப்பிச்சனார்க்கு இளைய திருநாவுக்கரைய தொண்டராவர்.என்பது கற்றளிப் பிச்சனர் இக்கோயிலைக்கட்டினார் என்பதற்கு ஆதாரங்கள்:ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேஸரி வன்மற்கு யாண்டு இருபத்தைந்தாவது தென் கரைத் திருவழுந்தூர் நாட்டுப் பிர்மதேயம் சிற்றானைச்சூர் சபையோம். இவ்வூர் கவிசங்கரன் மரறனிடைத் திரைமூர் நாட்டு பிர்மதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை கற்றளி எடுத்த பித்தன் மஹாதேவருக்கு உவச்சப்புறமாக விலைகொண்டநிலம் பதினொருமாச் செய்யும் என்னும் கல்வெட்டுப்பகுதி விளக்குகின்றது. இக்கல்வெட்டுப்பகுதி கோஷ்டத்தில் உள்ள அகத்தியர் திருவுருவத்திற்கு மேற்குப் பக்கத்தில் இருக்கிறது, உவச்சர் என்பார் சங்கு, காளம், இவைகளை ஊதுபவர். புரம் - நிவந்தம். உவச்சபுரம் - என்பது சங்கு. காளம் இவைகள் ஊதுபவர்களுக்கு நிவந்தமாக அளிக்கப்பெற்றது எனப் பொருள்படும்.
    கோயிலின் சில பகுதிகளைச் செய்வித்தவர்கள் :
    அர்த்த மண்டபத்தின் வடபால், துர்க்கா தேவிக்கும் கிழக்குப் பக்கத்தில் திருவாவடுதுறை உடையாரைத் தொழுவாராக ஒரு ஆடவரின் உருவமும் அவ்வுருவத்திற்கு பக்கத்தில் ஒரு அம்மையாரின் உருவமும் இருக்கின்றன. இவர்கள் இக்கோயிலில் ஒருபடை (Atier) செய்வித்தவர் ஆவர். இவ்வுருவங்களுக்கு அருகில் இக்கோயிலில் படை செய்விச்சு நின்றான் வாமபூசலுடையான் எழுவன் சந்திரசேகரன் இவன் பின்பே நின்றான் பெரிய வேளத்து வானல்லடிகள் நக்கன்” என்று பொறிக்கப்பட்டுள்ளன.அர்த்த மண்டபத்தின் தென்பாகத்தில் பிள்ளையார் திருமேனிக்குக் கிழக்குப் பக்கத்தில் "கல்கட்டு வித்தார் பல்லவ மகா தேவியார் சிவகாமு ” என்று செதுக்கப் பட்டுள்ளது. எனவே இவ்வம்மையாரும் இப்பகுதியைக் கட்டுவதற்கு உதவி செய்தவர் ஆவர்.
    கர்ப்பக்கிருகத் தெற்குப்புறத் தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி திருமேனிக்கு மேற்குப் பக்கத்தில் கைகளைத் தலைமேல் குவித்து வணங்கும் வண்ணம் ஒரு பிரதிமம் இருக்கிறது. அதன் கீழ் ஸ்ரீ திருவாவடுதுறை அடியான் அம்பலவன் திருவிசலூரான் திருநாவுக்கரையன் என்று செதுக்கப்பட்டுள்ளது. இவனும் இத்திருப்பணிக்கு உதவியளித்திட்டவன் ஆவான்.  இத்தட்சிணாமூர்த்திக்கு மேற்குப் பக்கத்தில் இருக்கும் பிரதிமம் மிறைக் கூற்றத்து வீரமாங்குடி உடையானது ஆகும், அர்த்த மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கு வடபால், மார்பில் கைகளைக் குவித்துக் கொண்டு இறைவனை வழிபடும் நிலையில் செதுக்கப்பட்டிருக்கும் பிரதிமம் திருநரையூர் நாட்டுச் சிற்றடியான் தாமன் அம்பலவனான நமசிவாயனுடையதாகும்.

  • கல்வெட்டுகளில் இறைவன் இறைவி திருப்பெயர்கள் :
    திருவாவடுதுறைத்தேவர், திருவாவடுதுறை ஆழ்வார், திருவாவடுதுறை உடையார், திருவாவடுதுறைப்பெருமானடிகள் என்றும், மிகப் பிற்காலத்துக் கல்வெட்டில் கோமுக்தீஸ்வரர் என்றும், இறைவியை அதுலகுச நாயகி என்றும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

  • மிகப் பழங்காலத்தில் இக் கோயிலில் எழுந்தருளுவிக்கப் பெற்ற திருமேனிகள் :
    சிற்றம்பலத் திருமேனி முதல் ஆடி அருளும் உடையாரும். ஆட்டத்திற்கு வாசிக்கும் பூதமமைத்த பீடமும் பிரபையும் (திருவாசி) உட்பட முழ உயரத்து ஒருவர். இவர் நம் பிராட்டியார் பீடமும் பிரபையுமுள்பட இருந்த ஒரு முழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர். சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ உயரத்து ஒருவர். இவர் நம்பிராட்டியார் பத்மத்தோடும் ஒருமுழ உயரத்து ஒருவர். திரிபுவன சுந்தரர் பீடமும் பிரபையும் உட்பட மும்முழ உயரத்து ஒருவர். கணபதியார் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழ உயரத்து ஒருவர்; சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் ஒரு சாணும் ஒரு விரல் உயரத்து ஒருவர். க்ஷேத்திரபால தேவர் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழ உயரத்து ஒருவர். மேற்படி தேவர் பீடம் உட்பட ஒரு சாணே நால்விரல் உயரத்து ஒருவர். இட்டவாகன தேவரும் பிராட்டியாரும், இடபமும், பீடமும் பிரபையுமுட்படமும் முழ உயரத்து ஒருவர். பிச்சத்தேவர் மானும் பூதமும் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ மூவிரல் உயரத்து ஒருவர். அர்த்தநாரித்தேவர் பத்மத்தொரு முழம் ஒட்டை உயரத்து ஒருவர். தட்சிணாமூர்த்தி ஒருமுழ உயரத்து ஒருவர். பள்ளிக்கட்டில் நம்பிராட்டியார் பீடமுட்பட இருமுழ உயரத்து ஒருவர். அஸ்திரதேவர் நடுவுமாகத் தண்டொடும் ஒருவர். இடபதேவர் பீடமுட்படத் திருக்காம்பு அளவும் ஈரொட்டை உயரத்து ஒருவர். சண்டேசுவர பீடமுட்பட இருந்த ஒருமுழ உயரத்து ஒருவர். திருநாவுக்கரைய தேவர் ஒருமுழமும் நான்கு விரல் உயரத்து ஒருவர் சிவஞானசம்பந்த அடிகள் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழம் ஆறுவிரல் உயரத்து ஒருவர். நம்பி ஆருரனார் பத்மத்தோடு ஒரு முழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர் திருக்காளத்திப்பிச்சர் தம்மையாக வார்த்த ஒருமுழ உயரத்து ஒருவர்,

  • பாத்திரங்களும் குத்து விளக்குகளும் :
    (வெண்கலம், பித்தளை, செம்பு, இவைகளால் செய்யப்பட்டவை):
    வெண்கலம் முதல் உரு ஐம்பத்து மூன்றினால் வெள்ளிக் கோலால் நிறை ஆயிரத்து நாநூற்று இருபத்து முப்படி வரை, பித்தளை முதல் உரு மாண்டினால் மேற்படி கோலால் நிறை நூற்றேழுபலம். செப்பு முதல் உரு எழுபதினால் மேற்படி கோலால் நிறை தொள்ளாயிரத்து இருபத்தைம் பலனே கஃசு தராமுதலுரு நாற்பத்து நாலினால் மேற்படி கோலால் நிறை இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பத் தைம்பலவரை, தராகுத்திவிளக்கு கருவும் உட்பட விளக்கு முப்பது. இவ்வூர்க் கவுணியன் இந்நிலத்தானாக வார்த்த விளக்கு ஒன்று ஆக விளக்கு முப்பத்தொன்று.

  • அணிகலன்களும் பரிகலன்களும் உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர் நம்பிராட்டியார் திரைலோக்கிய மாதேவியாரின் தாயாரான
    அபிமான கொங்கியார், திருவாவடுதுறை உடையார்க்கு அமுது செய்தருள வெள்ளித் தளிகை ஒன்று குடிஞைச் கல்லால் எழுபதின் கழஞ்சு நிறை உள்ளதும், உடையார்க்குப் பொற்கொள்கை ஒன்று. குடிஞைக் கல்லால் செம்பொன் நா நூற்று ஒருபத்து முக்கழஞ்சரை நிறையுள்ளதும் ஆகிய இவ்விரண்டையும் கொடுத்திருந்தனர்.உடையார் இராசயிராச தேவர் பெரிய வேளத்து அலோயன் அணுக்கி மேற்படி வேளத்து மற்றொரு அம்மையார் கொடுத்த பொன்னால் பொற்பூ இருபத்தேழு செங்கழுநீர்ப்பூ முப்பத்தாறு, மாந்தளிர் ஒன்று, பிட்சதேவர் கண்டக் காறை ஒன்று, பொற்கை ஈச்சோப்பி ஒன்று.இவைகள் செய்யப் பெற்று அணிவிக்கப்பெற்று வந்தன,

  • திருவிழாச் செய்திகள் :
    இத் திருக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஏழு நாட்களில் திருவிழா நடைபெற்று வந்தது. அக்காலம் மூல நட்சத்திரத்தன்று கொடியேறி பூரட்டாதி நட்சத்திரத்தன்று தீர்த்தமாடுவது வழக்கம். இச் செய்தி. '' திருமா எடுத்த நாள் மூலமுதல் அடக்கடவ அரிசி அரிய சிவயோகிகளுக்கும்:மாகேசுரர்களுக்கும் அரிசி தூணியும், பூரட்டாதி அன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி தூணிப் பதக்கும் பன்மாகேசுவரர்க்கு அடும் கலமும், உத்திரட்டாதி அன்று சிவயோகிகளுக்கு அரிசி கலமும் பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி முக்கலமும், திருவோணத்தன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி இருகலமும். பன்மாகேசுவரர்களுக்கு அடும் அரிசி ஆறு கலமும், அவிட்டத்தினன்று சிவயோகிகளுக்கு அடும்
    அரிசி முக்கலமும் பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி ஏழுகலமும், சதயத்தன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி நாற்கலமும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி எண் கலமும், தீர்த்தமாடும் பூரட்டாதி ஞான்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி ஐங்கலமும் பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி பன்னிரு கலமும் ஆக இவ்வேழு நாளும் அடக்கடவ அரிசி ஐம்பத்திருகலமும் "என்னும் மிறைக்கூற்றத்து வீரமாங்குடி உடையான் தாயங்காடன் என்பவன். மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் முப்பத்தாறாம் ஆண்டில் இவ்விழாவிற்கு வரும் சிவயோகிகளுக்கும், பன்மாகேசுவரர்களுக்கும் ஊட்டூட்டின் பொருட்டு சிறுபுலியூரிலும் சிற்றானைச் சூரிலும் நில நிவந்தம் அளித்துள்ள கல்வெட்டுப் பகுதியால் அறியக் கிடக்கின்றது.

  • திருமூலர்கோயில் கல்வெட்டு :
    மேற்படி விழா முடிவுநாளாகிய புரட்டாசிப் பூரட்டாதி நாளில் திருமூல நாயனாரது நாடகமும் ஆரியக்கூத்து ஏழு அங்கமும் நடத்தப் பெற்றுவந்தன. இச்செய்தி இக்கோயில் கர்ப்பக்கிருகத்தின் மேற்குப்புறச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ளது முதலாம் இராசராசசோழதேவரது ஒன்பதாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டினால் புலப்படுகின்றது.

  • மகாமண்டபத்தைக் கட்டியவன் :
    இக்கோயில் மகாமண்டபத்தைக் கட்டியவன் இளங்கால் குடையான் சங்கரதேவன் ஆவான். இத்திருப்பணிக்கும் திருவெண்காடு உடையான் அனங்கனும் உதவி செய்துள்ளான். இவைகளை இம்மண்டபத்தின் உள்பக்கத்தில் இருக்கும் தூண் ஒன்றில் "ஸ்வதிஸ்ரீ இத்திருமண்டபம் இளங்காரி முடையான் சங்கரதேவன் " என்னும் கல்வெட்டாலும்; இம்மகா மண்டபத்தின் தென்பக்கமுள்ள ஒரு தூணின் பொதியக் கட்டையில் உள்ள * இக்கல் திருவெண்காடு உடையான் அனங்கன் திருப்பணி" கல்வெட்டாலும் அறியலாம்.

  • திருமடங்கள் :
    இவ்வூரில் முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் திருநீலவிடங்கன் மடம், திருவீதிமடம். நாற்பத்தெண்ணாயிரவர் மடம், என்னும் பெயருள்ள திருமடங்கள் பல இருந்தன,

  • அறச்சாலைகள் :
    இவ்வூரில் விக்கிரமசோழன் காலத்தில் பெருந்திருவாட்டி அறச்சாலை, சங்கரதேவன் அறச் சாலை, முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை என்னும் அறச் சாலைகள் இருந்தன. இவற்றுள் பெருந்திருவாட்டி என்னும் அறச்சாலை, கங்கை கொண்ட சோழபுரத்துக் கங்கை கொண்ட சோழன் திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதியாக இருந்த இளங்கார் குடையான் சங்கரன் அம்பலன் கோயில் கொண்டானான அனந்தபாலன் என்பவனால் நிறுவப்பெற்றதாகும். சங்கரதேவன் அறச்சாலை திருவாவடுதுறை கோயில் சிவலோக நாயகன் திருவாசலின் முன் பக்கத்தில் இருந்தது. மேற்குறித்த மடங்களிலும் அறச்சாலைகளிலும் திருவாவடுதுறை உடையார் திருநாளில் அடியார்களுக்கும் தபசிகளுக்கும், அனாதைகளுக்கும்  அமுது அளிக்கப்பெற்றுவந்தன. முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலையில் *மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும், இலக்கணம் படிப்பவர்களுக்கும் அமுது அளிக்கப்பெற்று வந்த செய்தி குறிப்பிடத் தக்கதாகும். இவைகளன்றி முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டில் சர்வதேவன் திருமடம் என்று குறிக்கப்பெற்றுள்ளது.

  • நடனசாலை
    இத்திருக்கோயிலில் முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் நானாவித நடனசாலை என்னும்பெயருள்ள நடன அரங்கம் இருந்ததாக அறியப்படுகிறது

  • நிவந்தங்கள் :
    இக்கோயிலைக் கட்டிய கற்றளிப் பிச்சன் திருப்பதியம் பாடுவார் ஒருவர்க்கும்; திருமஞ்சன மாட்டுவார்க்கும், உவச்சர்களுக்கும். மடத்துக்கும் சிற்றானைச்சூரில் நிலம் வாங்கி அளித்துள்ளான். கோப் பரகேசரிவர்மர் அதாவது முதற்பராந்தக சோழன் காலத்தில் இந்நிவந்தம் செய்யப்பெற்றதாகும்.இதை உணர்த்தும் கல்வெட்டு பின்வருமாறு :ஸ்வஸ்திஸ்ரீ கோப் பரகேசரிவன்மற் கியாண்டு மூன்றாவது திருவாவடுதுறை கற்றளிப்பிச்ச நேன். சிற்றானைச் சூரனான் விலைக்கறக் கொண்டு மேற்புலத்து வடக்கடையைத் திருப்பதியம் பாடுவாரொருவற்கு அறுமாவும், இதன் தெற்சடை காற்செய திருமஞ்சனமட்டுவார்க்குக்காலும், இதன் தெற் கடையைத் திரு உவச்சர்களுக்குக் காணிமடத்துக்கும் காலுமாக நிவந்தஞ்செய்து குடுத்தேன். கற்றளிட் பிச்சனின் இது பன்மாஹேஸ்வர ரக்ஷை .
    ( இக்கல்வெட்டு அர்த்த மண்டபத்தின் கிழக்குப்புறச்சுவரில் வாசலுக்கும் துவாரபாலகர்க்கும் வடபால் இருக்கின்றது. )

  • திருமூலர் நாடகம் நடிக்கவும் ஆரியக்கூத்து ஏழு அங்கம் ஆடுவதற்கும் அளித்த நிவந்தங்கள் :
    இந்தச் செய்தி முதலாம் இராஜராஜ சோழனின் ஒன்பதாமாண்டுக் கல்வெட்டில் உள்ளது. திருவாவடுதுறை உடையாரின் திருவிழா முடிவு நாளில் அதாவது புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தன்று திருமூலநாயனாரது நாடகம் நடித்தல்; ஆரியக்கூத்து ஏழு அங்கம் ஆடுதல் இவைகளைப் பற்றி முன்னர்க் கூறப் பெற்றுள்ளது. அவைகளை அக்காலத்தே நடித்தவர் வடுகமாங்குடி பாண்டிகுலாசனி ஆவர். அவர்க்குப்பின் அவைகளை நடித்தவர் சாக்கையர் குமரன்சீகண்டவன் ஆவர். அவைகளின் பொருட்டு சீகண்டனுக்குச் சாத்தனூர்சபையார் தங்கள் ஊரில் இருந்த அறச்சாலை அம்பலத்தில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து தென்கரை சாக்கைவேலி ஆன நில அளவுப்படி அரையே இரண்டுமாவும், திருஆவடுதுறை ஆழ்வார் தேவதானம் நெற்குப்பை பதிற்றுவேலியினும் கிழக்கடையமாம் பள்ளி வாய்க்காலுக்கு வடக்கு முக்காலும் ஆக நிலம் ஒன்றே எழுமாவை நிர்த்தபோகம் அளித்திருந்தனர்.

  • விக்கிரமபாண்டியன் சந்தி :
    விக்கிரமபாண்டியன் தான் பிறந்த அஸ்த நட்சத்திரத்தில் தன் பேரால் கட்டின விக்கிரம பாண்டியன் சந்திக்கு அமுதுபடி, சாத்துபடி நிவந்தங்களுக்கு விருதராச பயங்கர வள நாட்டுக் கஞ்சனூர்ப்பற்றுத் தென்பால் திரைலோக்கியான விருதராச பயங்கரச் சதுர் வேதிமங்கலத்துக் குலோத்துங்கசோழன் பெருவழிக்கு உட்பட்ட திறப்பில் இருபது வேலியும். துறைசையார் அகரமான இராசேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கூத்தனூர் கொடியாலத்து விட்ட நிலம் பதிற்று வேலியும் வேணவரை நல்லூரில் நான்கு வேலியும் ராட்சதச்சதுவேதிமங்கலத்துப் பிடாகையூரிலும் அனபாய சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கண்டியூரிலும் நிலம் இருபத்தாறு வேலியும் ஆக நிலம் அறுபதிற்று வேலியைக் கொடுத்திருந்த தான். மேற்குறித்த இவைகளின்றித் திருவாவடுதுறை ஆழ்வார்க்கு சங்கராந்தி தோறும் முக்குறுணி நெல்லின் அரிசியால் அமுது செய்விப்பதற்கும் இரண்டு சங்கராந்திக்கும் அயன நூற்றெட்டு கலசத்தில் ஸ்நபனம் செய்விக்கவும் வடகரை தேவதானம் கார் நாட்டுத் தனிக் கடம்பூர் உடையான் கண்ணி புலியூர் நக்கர் அளித்த எண் கழஞ்சு பொன் கொண்டு மூன்றுமா நிலம் வாங்கி அளிக்கப் பெற்றிருந்தது. இதுபோலவே இன்னும் பல நிவந்தங்களாம். 

  • வைத்தியத்திற்கு அளிக்கப் பெற்ற நிவந்தம் :
    உய்யக் கொண்டார் வளநாட்டு சோழேந்திரசிங்கமலத்து சவர்னன் அரையன் சங்கரனான உத்தமசோழ அசலரையனுக்கும் அவன் வம்சத்தார்க்கும் திருவாவடுதுறையில் வைத்தியஞ்செய்து கொண்டு உண்ணும் பொருட்டு ஆழ்வார் ஸ்ரீ பராந்தக ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார் இராஜேந்திர சிம்மவள நாட்டு இன்னம்பர் நாட்டுப் பழைய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்துச் சடையாரிடத்தில் நூற்று இருபது காசுகொடுத்து நிலம் எட்டு மாக்காணி முந்திரிகைக்கீழ் அரையும் குழி ஒன்றும் மனை இரண்டும் வாங்கி அளித்துள்ளனர். இந்நிகழ்ச்சி முதலாம் இராசேந்திர சோழனது நான்காம் ஆண்டில் நிகழ்ந்ததாகும்.

  • திருவாவடுதுறையைத் தன்னகத்துக்கொண்ட வள நாடு
    இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வள நாடு உய்யக் கொண்டார் வள நாடாகும். இந்நாடு காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை உடையது. இது ஆக்கூர் நாடு, அம்பர் நாடு, குறும்பூர் நாடு, மருகல்நாடு, பாம்பூர் நாடு, தென் கரைத் திரைமூர் நாடு, திருநறையூர் நாடு, திருவழுந்தூர் நாடு. வெண்ணாடு, விளநாடு, பேராவூர் நாடு என்னும் பிரிவுகளை உடையதாய் இருந்தது.

  • திருவாவடுதுறை தன்னகத்துக்கொண்ட நாடு :
    திரு ஆவடுதுறை உய்யக்கொண்டார் பிரிவிகளில் ஒன்றாகிய தென் கரைத் திரைமூர் நாட்டிற்கு வள நாட்டின் உட்பட்டதாகும். நெற்குப்பை, சாத்தனூர், நடார், நல்லுச்சேரி, திருக்குரங்காடுதுறை, மகேந்திரமங்கலம் என்னும் ஊர்கள் இந்நாட்டிற்கு உட்பட்ட சில ஊர்கள் எனக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

  • பிற செய்திகள் :
    வடக்கு தேவகோஷ்டத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கா பரமேஸ்வரியின் திருமேனிக்குக் கிழக்குப்பக்கமாக உள்ளதும், சில பகுதிகளை சுவரி வைத்துக் கட்டப்பெற்றதும் ஆகிய கல்வெட்டில் கோப்பரகேசரி பன் மரான உடையார் காவேரி கரைகண்ட கரிகால சோழதேவர் என்று ஒரு சோழ அரசர் குறிக்கப்பெற்றுள்ளனர். இக் கல்வெட்டின் தொடக்கத்தில் தேவற்குயாண்டு நாலாவது தென்கரை திருவழுந்தூர் நாட்டு வாய்தலைப் படி குலையரையரோம் உடையார் திருவாவடுதுறை உடையார்க்கு நாங்கள் கை தீட்டு இட்டுக்கொடுத்த பரிசாவது' எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதில் வாய்தல் படி குலையரையர்' ஒரு சபையினர் என்பது உறுதி. அவர்கள் எவ்வேலையைக் கண்காணித்துவந்தனர் என்பது புலப்படவில்லை  

    இக்கோயிலிலுள்ள பொன் ஆபரணங்கள் குடிஞை கல்லாலும் வெண்கல உருக்கள் வெள்ளிக் கோலாலும் பித்தளை உருக்கள் மாண்டினாலும் நிறுக்கப்பெற்று வந்தன. வெள்ளிக் கோலால் நிறை தொளாயிரத் திருபத்தைம்பு நேகைசு ( கஃசு ) என்னும் தொடர்களால் அக்காலத்தில் பலம் தான் உயர்ந்த நிறுத்தல் அளவை என்பதும் கஃசுதான் மிகச் சிறியது என்பதும் பெறப்படுகின்றன. கோயில் காரியங்களின் பொருட்டு ஊர்ச்சபையார் திருவாவடுதுறை உடையார் கோயில் வடபக்கத்து உலகளந்தான் என்று பேர் கூறப்பட்ட மாடத்தில் கூட்டங் குறைவறக் கூடியிருந்தும் சங்கரதேவன் மண்டபத்தே கூட்ட குறைவறக் கூடியிருந்தும் கவனித்து வந்தனர். சாத்தனூர்க்குச் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கி  வந்ததாக முதலாம் இராஜேந்திரசோழ தேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது இந்த ஸ்ரீ சதுர்வேதி மங்கலத்துக் வடக்கில் சிற்றானைச்சூர் என்னும் ஊர் இருந்தது.

Contact Address

அமைவிடம் அ/மி. மாசிலாமணிசுவரர் திருக்கோயில், திருவாவடுதுறை - 609 803. மேலாளர் : 04364 - 232055 / +91-94439 00408. மாநிலம் : தமிழ் நாடு இஃது, நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து பாதையில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

Related Content