logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கோவலூர் வீரட்டம் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி).

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்) முதலியோர்

Sthala Puranam

thirukovalur temple

  • ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.
  • இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
  •  பார்வதி தேவி ஒரு முறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட, சிவபெருமானின் திருக்கண்கள் சூரிய சந்திரர் ஆகையால் உலகம் முழுமையும் இருள் சூழ்ந்தது. அப்போது சிவபெருமான் தனது மூன்றாவது விழியாகிய அக்னிஸ்வரூபமான கண்ணின் மூலமாக உலகிற்கு ஒளி காட்டினார். அன்னை கண்களை மூடிய போது சூழ்ந்த இருளானது ஒரு அசுர வடிவம் கொண்டு இருளினால் கண்கள் தெரியாத அந்தகாசுரன் என்ற அசுரனாக உருவானது. அந்த அசுரன் தன்னுடைய தவவலிமையினால் பல வரங்கள் பெற்று தேவர்களையெல்லாம் வென்று தான் உருவாவதற்கு காரணமான அன்னை தந்தையாராகவும் உலகுக்கே இறைவனாகவும் உள்ள சிவ பார்வதிரை வணங்கி மகிழாமல் தவறான சிந்தையுடன் பார்வதி தேவி இருக்கின்ற திருக்கயிலாய மலைக்கு போர் புரிய வந்தான். சலனம் இல்லாத மூர்த்தியாக இருக்கின்ற சிவபெருமான் அந்தகனை புத்தி புகட்டக்  கோவமான ஒரு உரு எடுத்துத் தன்னுடைய சூலத்தினால் அந்தகனை வாட்டினார். சூலத்தில் குத்தப்பட்ட அந்தகன் அந்த சூலத்தில் இருந்தே சிவபெருமானை வழிபட்டு உந்தன். இந்த வீரச்சம்பவம் நடந்த வீர ஸ்தானமே கோவலூர் வீரட்டானம் ஆகும். இறைவன் கோவ உருக் கொண்டதனால் ஊர் கோவலூர் எனப் பெயர் பெற்றது.
  • சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். 

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :     சம்பந்தர்    - 1. படைகொள் கூற்றம் (2.100);                      அப்பர்      - 1. செத்தையேன் சிதம்பநாயேன் (4.69); பாடல்கள்      :     அப்பர்      -        கொண்டலுள்ளார் (6.51.9);                       சுந்தரர்     -        வீழக் காலனைக் (7.12.1);            கபிலதேவ நாயனார்   -        கொடிக்குல வும் (11.22.34) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை;                      சேக்கிழார்   -        சென்று அணைந்து (12.28.967 & 968) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                             திருவதிகைப் பதி (12.21.148) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

Specialities

  • திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது. கீழூரில் (கீழையூரில்) இக்கோயில் உள்ளது. 
  • மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது. அவதாரத் தலம் : திருக்கோவலூர். வழிபாடு : சங்கம வழிபாட். முத்தித் தலம் : திருக்கோவலூர். குருபூசை நாள் : கார்த்திகை - உத்திரம்
  • முகப்பு வாயிலில் முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது.
  • தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. 
  • சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம்.
  • திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.
  • ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.
  • கபிலர் பாரி மகளிரைத் திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து, அதன்பின்பு வடக்கிருந்து உயிர் விட்ட இடம்.
  • கோயிலின் பக்கத்தில் ஆற்றின் நடுவில் 'கபிலர் குகை' என்னும் பெயரில் உள்ளது. இது கோயிலமைப்பில் உள்ளது. உள்ளே சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தில் நின்று பார்த்தால் எதிரில் அறையணிநல்லூர் தலம் தெரிகிறது. 
  • கோஷ்ட மூர்த்தமாகவுள்ள துர்க்கை மிகவும் விசேஷமாகவுள்ளது. எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம். இத்தேவியின் விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் இராசராசன் தாயின் காலத்தியது.
  • கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடாலயம் உள்ளது. இதுவே ஆதி மடாலயம் 
    எனப்படுகிறது. முதல் மூன்று சந்நிதானங்கள் இங்குத்தான் வாழ்ந்து சமாதியடைந்துள்ளனர். நான்காவது 
    சந்நிதானத்திலிருந்துதான் திருப்பாதிரிப்புலியூர் மடாலயம் அமைந்தது என்பர். இச்சமாதிகள், பக்கத்தில் 
    உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளன.
  • இவ்வூரின் வடக்கு வீதியில் குகைநமசிவாயர் சமாதி உள்ளது. 
  • சுவாமி ஞானானந்தகிரியின் தபோவனம் இத்தலத்தில்தான் உள்ளது. 
  • மாசிமாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆறாம் நாள் விழாவில் மாலையில் 
    அந்தகாசூரசம்ஹார ஐதிகம் நடைபெறுகின்றது. 
  • சித்திரையில் வசந்தோற்சவம்.
  • இக்கோயிலில் 79 கல்வெட்டுக்களின் படிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் சோழர்களது காலத்தவை. அவற்றுள் 52 கல்வெட்டுக்கள் இவை:- பரகேசரி 1, இராஜகேசரி1, இராஜராஜன் 10, இராஜேந்திரன் 8, இராஜாதிராசன் 1, ராஜேந்திரதேவன் 1, வீரராஜேந்திரன் 1, அதிராஜேந்திரன் 1, குலோத்துங்கன் 6, விக்கிரமன் 1, குலோத் துங்கன்-II 1, இராஜாதிராஜன் 2, குலோத்துங்கன்-III 3, இராஜராஜன்-III 3, நிச்சயிக்கப்படாதது குலோத்துங்கன் 4, இவைகள் தவிர பல்லவர்கள் 3, இராஷ்டிரகூடன், கன்னரதேவன் 3, பராந்தகன் 2.
  • இக்கல்வெட்டுக்களால் இக்கோயிலானது சோழர்களது முழுக்காலத்திலும் நன்கு புகழப்பெற்றிருந்தது என அறிகிறோம். இக்கல்வெட்டுக்களை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் ஒரு சிறந்த சரிதப் பகுதியே கிடைக்கக்கூடும். இவ்வூரைச் சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜநநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர் என்று கூறியிருக்கிறது. சுவாமி திருவீரட்டான முடையார் தேவர் என்றே கண்டிருக்கிறது. விளக்குத் தானங்கள் நிரம்பச் செய்யப்பட்டுள்ளன. அதற்காகவும், வழிபாட்டிற்காகவும் நிலங்கள் கொடுக்கப்பட்டன. இராஜராஜன் காலத்துப் பெரிய கல்வெட்டு ஒன்று, நீண்ட அகவற்பாவால் எழுதப்பட்டு இறுதியில் இரண்டு வெண்பாக்களும் ஒரு விருத்தமும் கூறி முடிக்கப்பட்டுள்ளது. அதில் பண்டைய வழக்கங்கள் பல கூறப்பட்டுள்ளன.
  • இத்திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலைக் கட்டியவர் மகதைப்பெருமாளின் மந்திரியாவர். அது குலோத்துங்க சோழரின் இருபதாம் ஆண்டில் கட்டப்பெற்றது. இக்கோயிலில் உள்ள மடைப்பள்ளி விக்கிரமசோழசேதிராயரின் மனைவியாரால் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழனின் நான்காம் ஆண்டில் கட்டப் பெற்றதாகும்.
  • இக்கோயிலில் நுந்தாவிளக்குக்களுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள்தான் மிகுதியாகும். ஒரு விளக்கினுக்கு முப்பத்திரண்டு பசுக்களும், ஒரு எருதும்: நான்கு விளக்கினுக்கு நானூற்றெண்பது ஆடுகளும்: இருபத்துநான்கு விளக்குக்களுக்கு இரண்டாயிரத்து முன்னூற்று நான்கு ஆடுகளும் இவைபோன்று பலவாகக் கொடுக்கப் பெற்றுள்ளன. பரகேசரிவர்மனாகிய இராசேந்திரசோழதேவர் கல்வெட்டு இக்கோயிலுக்குரிய அணிகலன்களைக் குறிப்பிடுகின்றது.
  • இத்திருக்கோயில் கல்வெட்டினால் முதலாம் இராச ராசனுடைய மனைவியராகிய உலகமாதேவியாரின் தாயாரின் பெயர் அமிர்தவல்லி என்று அறியக்கிடக்கின்றது. பரகேசரிவர்மனின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு செம்பியன் மிலாடுடையாரைப் பற்றியும், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டு மிலாடுடையார் மகளைப்பற்றியும் விக்கிரம சோழன் கல்வெட்டு கீழையூர் மலையமான் விக்கிரமசோழ சேதிராயனைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. 

Contact Address

அமைவிடம் அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோயிலூர் - 605 757. விழுப்புரம் மாவட்டம். தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

Related Content

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு

வழுவூர் வீரட்டம் தலவரலாறு