logo

|

Home >

hindu-hub >

temples

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : நித்யானந்தகூபம், மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:முருகப்பெருமான், விபச்சித்து முனிவர், உரோமேச முனிவர், சுக்கிராசாரியார், யாக்ஞவல்க்கிய முனிவர், சிகண்டி, கோசிகன், விதர்க்கண செட்டி, குபேரன் தங்கை, சம்பந்தர், அப்பர், சுந்தரர், சுவேத மன்னர், நாதசர்மா, அநவர்த்தினி, பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பிரமன், அகஸ்தியர் , குருநமசிவாயர், சிவப்பிரகாசர், இராமலிங்க வள்ளலார் முதலியோர்

Sthala Puranam

thirumudukunram temple

  • சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது. ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.
  • பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி.
  • இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.

"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
                    (கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

  • இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.
  • கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன.
  • சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.
  • சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.
  • இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. பண்டை நாளில் இத்தலத்துள்ளோர் காசிக்குச் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது.
  • இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரின் 
    பெயர்களில் அமைந்த கோயில்களும் உள்ளன.
  • குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து தில்லை சென்றார். வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியைத்  துதித்து                      

"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி 
என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற
நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி 
மலைக் கிழத்தி சோறு கொண்டு வா" - என்று பாடினார்.

பெரிய நாயகி, முதியவடிவில் எதிர்தோன்றி "எனைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?' கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டுவர முடியும் என்று கேட்க; குருநமசிவாயர்

"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே 
பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்
இடத்தாளே முற்றா இளமுலை மேலார 
வடத்தாளே சோறு கொண்டு வா" என்று பாடினார்.

அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்டானதே பாலாம்பிகை கோயிலாகும்.

  •  குமாரதேவர் பாடியுள்ள பெரியநாயகியம்மன் பதிகமும்; குருநமசிவாயர் பாடியுள்ள க்ஷேத்திரக்கோவையும்; வள்ளற் பெருமானின் குருதரிசனப் பதிகமும்; சொக்கலிங்க அடிகளார் என்பவர் (19-ஆம் நூற்றாண்டு) எழுதிய பெரியநாயகி பிள்ளைத் தமிழும் இத்தலத்திற்கு உள்ளன. சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பிக்ஷாடன நவமணிமாலை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்கள். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானக்கூத்தர் என்பவர்தாம்' திருமுதுகுன்றத் தல புராணத்தைத் 
    தமிழில் பாடியுள்ளார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. மத்தாவரை நிறுவிக்கடல் (1.12),                                         2. தேவராயும் அசுரராயும் (1.53),                                         3. நின்று மலர்தூவி (1.93),                                         4. மெய்த்தாறு சுவையும் (1.131),                                         5. தேவா சிறியோம் பிழையை (2.64),                                         6. வண்ணமா மலர்கொடு (3.34),                                         7. முரசதிர்ந் தெழுதரு (3.99);                       அப்பர்       - 1. கருமணியைக் கனகத்தின் (6.68);                       சுந்தரர்      - 1. பொன்செய்த மேனியினீர் (7.25),                                         2. நஞ்சி யிடையின்று நாளை (7.43),                                         3. மெய்யை முற்றப்பொடி (7.63); பாடல்கள்      :    சம்பந்தர்      -      அண்ணாமலை (2.39);                       அப்பர்       -      மாவாய்ப் பிளந்துகந்த (6.82);                       சுந்தரர்      -       முந்தையூர் (7.31.1);           பட்டினத்துப் பிள்ளையார்  -       இறைத்தார் (11.30.59) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;                     சேக்கிழார்    -       தூங்கானை மாடத்துச் (12.21.154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             அங்கு நின்று (180.181 & 182) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            கூடலை ஆற்றூர் (12.29.104,127,132.133) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                             உளத்தில் (12.47.9) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்.

Specialities

  • இத்தலத்தின் பெயரில் 'குன்றம்’ என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று 
    பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் -மலை)
  • வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும்.
  • இந்தத் தலத்தில் மங்கள அமைப்புகள் எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளதால் பஞ்ச மங்கள க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.
    • ஐந்து கோபுரங்கள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்
    • ஐந்து பிரகாரம்  - தேரோடும் பிரகாரம், கைலாயப் பிரகாரம், வன்னியடிப் பிரகாரம், அறுபத்துமூவர் பிரகாரம்,  பஞ்சவர்ணப் பிரகாரம்
    • ஐந்து கொடிமரம்
    • ஐந்து நந்தி 
    • ஐந்து உள் மண்டபம் - அர்த்த மண்டபம், இடைக்கழி மண்டபம், ஸ்நபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்
    • ஐந்து வெளி மண்டபம் - இருப்பது கல் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம் 
  • இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.
  • காசியில் இறந்தால் முத்தி என்பது போல இத்தலத்தில் இறந்தால் சாரூப பதமுத்தி கிடைக்கும் என்று கந்த புராணம் கூறுகிறது.
  • வைகாசி வசந்த உற்சவம் நடைபெறும் 
  • மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்
  • அலங்கார மண்டபமே உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியுள்ள இடமாகும். எல்லாத் திருமஞ்சனச் சிறப்பும் இங்கு இவருக்குத்தான். இவர் ஆண்டில் ஒரு நாள் மட்டும் - அதாவது மாசி மகம் ஆறாம் நாள் விழாவில் - வெளியில் உலா வருவார். மற்ற விழாக் காலங்களில் சிறிய பழமலை நாயகர் வெளியில் உலா வருவது மரபு. 
  • ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரிய நாயகருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது  
  • விபச்சித்து முனிவர் மண்டபம்: மாசிமகத்தில் 6ஆம் நாள் விழாவில் இவ்வொரு நாளில் மட்டுமே உலா வருகின்ற உற்சவ மூர்த்தி - பெரிய நாயகர் - காட்சி தர விபசித்து முனிவர் தரிசிக்கும் விழா இங்கு தான் நடைபெறுகிறது. 
  • இக்கோயில் பலகாலங்களில் பலரால் திருப்பணிகள் பல செய்யப்பட்டுத் திகழ்கின்றது. ஆதியில் விபச்சித்து முனிவர் முதன் முதலில் இக்கோயில் திருப்பணியைச் செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பின்பு 10-ஆம் நூற்றாண்டில் செம்பியன் மாதேவியால் மூலவர் கருவறை ஸ்தபன மண்டபம், பரிவாரக் கோயில்கள், வன்னியடிப் பிராகாரக் கோயில்கள் முதலியவை திருப்பணிகள் செய்யப்பட்டன.  இசை மண்டபம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 1193-ல்) ஏழிசைமோகனான குலோத்துங்க சோழக்காடவராதித்தன் என்பவனால் கட்டப்பட்டது. மாசிமக ஆறாம் நாள் விழா நடைபெறும் இடமாக உள்மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் பெரம்பலூர் கிராமத்தில் வாழ்ந்த உடையார் ஒருவரால் கட்டப்பட்டது. கி.பி.1813 முதல் 1926 வரை தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த 'ஹைட்துரை' என்பவர் கைலாச பிராகாரத்திற்குத் தளவரிசை போட்டுத் தந்துள்ளார். அத்துடன் தேர்இழுக்க இரும்புச் சங்கிலியும், கும்ப தீபாராதனைக்காக வெள்ளிக் குடமும் வாங்கித் தந்துள்ளார் என்னும் செய்தி இம்மாவட்ட கெஜட்டால் தெரிய வருகின்றது. இத்துரையின் பெயரால் இன்றும் இவ்வூரில் தென்கோட்டை வீதியில் ஒரு சத்திரம் உள்ளது - (ஹைட் சத்திரம்). 
  • சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.
  • இக்கல்வெட்டுக்களிலிருந்து வேதமோதவும், புராணம் படிக்கவும் திருமுறைப் பாராயணம் செய்யவும், பணியாளர்கட்குத் தரவும், நந்தவனம் வைக்கவும் நிலமும் பொன்னும் பொருளும் நெல்லும் கொடுத்த செய்திகள் அறியக்கிடக்கின்றன. வாங்கிய கடனைத் திருப்பித்தராத ஒருவனுக்குத் தண்டனையாக கோயில் விளக்கிடுமாறு பணித்த செய்தியொன்றும் ஒரு கல்வெட்டால் தெரிய வருகிறது. பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் என்பவன், தான் போர்க் களத்தில் பலரைக் கொன்ற பழி நீங்குவதற்காகப் பழமலைநாதருக்கு வைரமுடி ஒன்று செய்துதந்து அதற்கு அவனியாளப் பிறந்தான் என்று பெயரும் சூட்டினான் என்பதும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியாகும்.
  • கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமுதுகுன்றம் உடையார்' 'ராசேந்திரசிம்ம வளநாட்டு 
    இருங்கொள்ளிப்பாடி பழுவூர்க் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் உடையார்க்கு' என்று குறிக்கப்படுகிறது.
  • இராஜகேசரிவர்மனான குலோத்துங்கசோழன் காலத்தில் இத்தலம் விருதராஜபயங்கர வளநாட்டு மேற்காநாட்டு இருங்கோளப் பாடியின் ஒருபகுதியான மருவூர்க்கூற்றத்துத் திருமுதுகுன்றம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமிபெயர் முதுகுன்றுடைய நாயனார் எனவும், திருமுதுகுன்றத்துடையார் எனவும் வழங்கப்பெறுகின்றது. 
  • கோப்பெருஞ்சிங்கன் சுவாமிக்கு ஒரு மாங்காய்மாலையும், விளக்குக்குப் பொன்னும், ஆடுகளும், பசுக்களும் அளித்தான் (134, 135 of 1902). இராஜ ராஜன், பரகேசரிவர்மன், குலோத்துங்கன் இவர்களும் பசுக்களையும், பொன்னையும், நிலத்தையும் அளித்தனர்.
  • இராஜகேசரிவர்மனான குலோத்துங்கனது காலத்து, ஆளப் பிறந்தான் ஏழிசைமோகனான குலோத்துங்கசோழ காடவராதித்தன் இறைவற்கு ஸ்நபனமண்டபம் கட்டினான்(137 of 1900). புக்கண உடையார், ரங்கப்ப நாயகர், செவ்வப்பநாயகன் இவர்கள் காலத்திய நிபந்தங்களும் மிகுதியாக உள்ளன. சகம் 1545இல் கச்சிராயன் என்பவன் குகை காவலனுக்கு நான்கு கலம் நெல் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். ரங்கப்பமாவைராயர் என்பவர் அரியலூர் சந்தைப்பேட்டையில் மூட்டை ஒன்றுக்கு அல்லது ஆள்தூக்கக்கூடிய கைமூட்டை இரண்டுக்கு ஒருகாசு விழுக்காடு வரிவாங்கிக்கொள்ள உரிமை வழங்கியிருக்கிறார். கி.பி. 16 ஆம் நூற்றாண்டினனான செவ்வப்பநாயகன் நான்கு இராசகோபுரங்களையும் கட்டியதாகச் சொல்வர். கி.பி. 1602 இல் முத்துக்கிருஷ்ணப்பராயர் என்பவர் திருமுதுகுன்றமுடையார்க்குப் பஞ்சாவரணப் பிராகாரம் கட்டிவைத்ததாகத் தெரிகின்றது. அப்பிராகாரம், புறமதிலுக்கு வெளியிலிருந்து முகமதியர் கலகத்தில் இடிந்துபோனதாகக் கூறுவர். 
     

மேலும் காண்க :

  • விருத்தாலபுராணம்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04143 - 230203

Related Content

திருநெல்வாயில் அரத்துறை தலவரலாறு

திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) தலவரலாறு

திருக்கூடலையாற்றூர்

திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்) தலவரலாறு

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு