logo

|

Home >

hindu-hub >

temples

திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.

தல மரம்:

தீர்த்தம் : கெடில நதி, வெள்ளாறு , கயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்), இந்திரதீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன், பார்வதி ஆகியோர்.

Sthala Puranam

pennakadam temple

  • இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் ' எனப் பெயர் பெற்றதென்பர்.
  • இத்தலத்திற்கு, ஐராவதம் வழிபட்டதால் 'தயராசபதி' என்றும், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் 'புஷ்பவனம், புஷ்பாரண்யம்' என்றும் இந்திரன் வழிபட்டதால் 'மகேந்திரபுரி' என்றும், பார்வதி வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் 'சோகநாசனம்' என்றும், சிவனுக்குகந்த பதியாதலின் 'சிவவாசம்' என்றும் வேறு பெயர்கள் உள்ளன.
  • ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம். எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. 
  • இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.
  • இக்கோயிலுக்கு 'தூங்கானைமாடம்' (கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.
  • காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால் கயிலை தீர்த்தத்தில் நிரம்பி குளமாகியது என்பர்.
  • அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம். 
  • மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
  • வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார்; அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.
  • கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர் ' என்ற பெயரும் உண்டு.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. ஒடுங்கும் பிணிபிறவி (1.59);                       அப்பர்       - 1. பொன்னார் திருவடிக்கு (4.109); பாடல்கள்      :     அப்பர்       -       சுடர்ப்பவளத் திருமேனி (6.33.5);                      சேக்கிழார்      -       கார் வளரும் (12.21.149 & 154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             ஆங்கு நாதரைப் பணிந்து (12.28.184) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல் பெற்றத் தலம்.
  • கலிக்கம்ப நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய சிவப்பதி. நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயிலில் உள்ளது. அவதாரத் தலம் : பெண்ணாகடம் (தூங்காணைமாடம்). வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : பெண்ணாகடம். குருபூசை நாள் : தை - ரேவதி. பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்றதலம்
  • மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழ்ந்தவராவார். மெய்கண்டாரின் தந்தையான அச்சுத களப்பாளர் பெயரில் ஊருக்கு மேற்கில் 'களப்பாளர்மேடு' என்னும் இடமுள்ளது; அங்கு மெய்கண்டாருக்குச் சிறிய கோயில் உள்ளது.
  • மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது.
  • கோயிலின் முன் வாயிலில் தென்பால் குடவரை விநாயகரை இருக்கிறார்.
  • இக்கோபுரவாயிலில் மேல்பக்கச் சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார்.
  • 30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம் அருகில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.
  • மூலவரின் - கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பதுபோல் (கஜப்ருஷ்ட அமைப்பு) அமைந்துள்ளது.
  • மூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமானது, ஆவுடையார் சதுர வடிவானது.
  • கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.
  • தலமரத்தின் கீழ் சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது.
  • தீர்த்தம்:
    1. கபிலை தீர்த்தம் :- கோயிலை அடுத்து மேற்பால் உள்ளது. காமதேனு, சிவபூசை செய்யும்போது, வழிந்தோடிய பால் நிரம்பி குளமாகியது என்பர். 
    2. பார்வதி தீர்த்தம் :- - கோயிலின் முன் கீழ்த்திசையில் உள்ளது. இதற்குப் பரமானந்ததீர்த்தம் என்றும் பெயர் சொல்லப்படுகிறது.
    3. முக்குளம் - ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது. 
    4. இந்திர தீர்த்தம் - ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது.
    5. வெள்ளாறு :- இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
  • சித்திரை சதய விழாவில் அப்பர் சுவாமிகள் சைவ சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது.
  • சேது மகாராசா இத்திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ததோடு தேரும் அமைத்துத் தந்துள்ளார்.
  • சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானைமாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்படுகின்றனர்.
  • கோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.
  • பரகேசரிவர்மனான இராஜேந்திரன் காலத்தில் வடகரை இராஜாதிராஜ வளநாட்டு மேற்காநாட்டுப் பிரமதேயமான முடி கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்துத் திருத்தூங்கானைமாடம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் நாமம் திருத்தூங்கானை மாடமுடைய மகாதேவர் எனவும்(235 of 1929) திருத்தூங்கானைமாடமுடைய நாயனார் (247 of 1929)எனவும் நல்ல பெண்ணாகடத்திலுள்ள வீற்றிருந்த பெருமாள் ( 250 of 1929) எனவும் திருத்தூங்கானை மாடத்துக்கடவுள் (255 of 1929)எனவும் வழங்கப்படுகின்றார். இவையன்றி கோயிலுள் கோச்செங்கணேசுவரமுடையார் கோயிலும் (238) மதுராந்தக ஈச்சரமுடையார் கோயிலும் (239) தனிமையாகப் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் (273 of 1929)இருந்திருக்கின்றன.
  • இராஜகேசரிவர்மனான குலோத்துங்கன் காலத்து வடகயிலாயமுடைய மகாதேவர்க்கு விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு முடிகொண்ட சோழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரால் நிலம் தானம் வழங்கப்பட்டது. திருத்தூங்கானை மாடமுடைய மகாதேவர் கோயிலுக்கும் கோச்செங்கணேசுவரமுடையார் கோயிலுக்கும் முடி கொண்டசோழ சதுர்வேதி மங்கலத்துத் தேவதானமான கிராமத்தைச் சேரிசபையார் இறையிலிசெய்தனர். குலோத்துங்கன் தான்பிறந்த நாளாகிய மாதபூச விழாவை நடத்தவும், கோயில் நாட்பூசைக்காகவும் நிலமளிக்க உத்தரவிட்டான். மேலும் மதுராந்தகேசுவரமுடையார் கோயிலிலுள்ள இரு சிவப்பிராமணர்களுக்கு உணவளிக்கப் பணம் வழங்கப்பட்டது. 
  • பரகேசரிவர்மனான இராஜேந்திரன் காலத்து, திருத் தூங்கானைமாடமுடைய மகாதேவர் கோயிலுக்குத் தூண்டா விளக்கெரிக்கப் பசுக்கள் வழங்கப்பட்டன. தென்கரை நித்தவினோத வள நாட்டுக் கிழார்க்கூற்றத்துக் கீழநல்லூர் உடைய ஒருவன் பசுக்கள் அளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு நீராட்டவும் பார்ப்பனர்களுக்கு அன்னமளிக்கவும் ஸ்ரீராமன் ஸ்ரீதரரான பவித்திர மாணிக் கச்சேரி உடையான் ஒருவனால் ஏற்பாடுசெய்யப்பட்டது. 
  • இராஜகேசரி வர்மனான ராஜராஜன் முத்திரையிடப்பட்ட அளவைகளால் வியாபாரிகள், பொருள்களை அளக்கவும் சில வரிகளைக் கோயிலுக்களிக்கவும் ஏற்பாடுசெய்தான் (244 of 1929) 249-ஆவது கல்வெட்டால் மூவாயிரவன் கோல் என்ற நீட்டலளவை (15அடி) யால் நிலமளந்த செய்தி தெரிகிறது. 
  • பரகேசரிவர்மனான விக்கிரமன் காலத்து அரையன் ஆதித்ததேவன் தேவர்கள்நாதன் என்ற மரக்காலைப் பயன்படுத்தியுள்ளான் (270 of 1929)
  • குலசேகரன் காலத்துப் பொன்பேத்தி அம்பலத்தாடி அழகனால் மண்டபமும், முகப்பும் கட்டப்பட்டன. அரசன் மந்திரியான மையிருஞ் சோலை, மண்டபங் கட்டியுள்ளான்.
  • விஜயநகர தேவமகாராயர் காலத்தில் நைவேத்தியத்திற்கும் திருப்பணிக்கும் பள்ளிகொண்டபெருமாள் கச்சிராயருடைய மகனான ஏகாம்பரநாதன் சில கிராமங்களை இறையிலிசெய்தான். தேவராஜ மகாராஜா சகம் 1356இல் 18 -ப் பற்றுச்சபையாரால் வீதிகளுக்கு இறையிலிசெய்து திருமடை விஜயத்திற்காகவும் நல்ல பெண்ணாகடத்துப் பெருமாளுக்கும் திருமாறன் பாடியிலுள்ள தாகந்தீர்த்தருளிய நாயனாருக்கும் விழாசெய்வதற்காக, பெரியநாட்டான் இறையிலி செய்தார்.
  • விக்கிரமன் காலத்தில் அமாவாசையில் சுவாமி உலாவரவும் விளக்குக்கு நெய் இடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனையவை விளக்கு முதலானவற்றிற்கு நிலம், பொன், பசுக்கள், நெல் முதலியன அளித்தமையைக் குறிப்பிடுகின்றன.

Contact Address

அமைவிடம் அ/மி. பிரளயகாலேசுவரர் திருக்கோயில், பெண்ணாகடம் & அஞ்சல், விருத்தாச்சலம் வழி, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் - 608 105. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாச்சலத்திற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்த 17-கி. மீ. தொலைவில்) உள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15-கி. மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04143 - 222788, 098425 64768.

Related Content

திருநெல்வாயில் அரத்துறை தலவரலாறு

திருக்கூடலையாற்றூர்

திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்) தலவரலாறு

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு

திருச்சோபுரம் (தியாகவல்லி) தலவரலாறு