|
அனல்வாதம்காட்சி - 7.இடம் : அரண்மனை முன்புறம் திருஞானசம்பந்தர் : [சம்பந்தர் சரணாலயரிடம் பதிக ஏடுகளைப் பெற்று, இறைவனை வணங்கியபடி] செங்கண் ஏற்றவரே பொருள். [அப்பதிக ஏடுகளில் கயிறு சாற்றுகின்றார்; போகமார்த்த பூண்முலையாள்... திருப்பதிகம் வெளிப்படுகின்றது.] என்னை ஆளுடைய ஈசன்தன் நாமமே எப்பொழுதும் நிலைபெறும் மெய்ப்பொருள். [திருஞானசம்பந்தர் “தளிரிள வளரொளி...” திருப்பதிகம் பாடி, போகமார்த்த பூண்முலையாள் பதிக ஏட்டை நெருப்பினில் இடுகின்றார்.] தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள் சமணர்கள் : எரிகின்றது... எரிகின்றது... ஏடு எரிகின்றது; நாம்தான் வெல்வோம். ஆஆ! இல்லையே எரிய வில்லையே! இது என்ன விந்தை! குலச்சிறையார் : இவ்வேடு தீயினில் எரியாது இருப்பதுடன், மிகவும் பசுமையாக விளங்குகின்றது. அடியார்கள் : அர அர சிவ சிவ அர அர சிவ சிவ. மன்னர் : அருகர்களே, நீங்களும் உம்முடைய ஏட்டினை இந்நெருப்பிலே இடுங்கள்! சமணன் - 1: என்ன ஆகப்போகின்றதோ?! எரிந்து விடுமோ?! சமணன் - 2: ம்ம்க்ங்... இதை முன்பே யோசித்திருக்க வேண்டும்; இப்போது யோசித்து என்ன பிரயோசினம்; போடு போடு என்ன ஆனாலும் சமாளிப்போம். சமணன் - 1: எனக்குப் பயமாக இருக்கின்றது நீயே போடேன்! சமணன் - 2: இல்லை... இல்லை... நீயே போடு; என் இரண்டு தொடைகளும் பயத்தில் தாளம் போட்டு கொண்டிருக்கின்றன. [சமணர்கள் தம் ஏட்டினை தீயினில் இடுகின்றார்கள்; [சமணர்கள் இட்ட ஏடு நெருப்பில் எரிந்து சாம்பலாகின்றது.] [திருஞானசம்பந்தர் தாம் தீயினில் இட்ட ஏட்டினை நெருப்பிலிருந்து எடுத்துக் காட்டுகின்றார்; அது மிகவும் பசுமையாக காட்சியளிக்கின்றது.] மன்னர் : நெருப்பினில் எரியாத இவ்வேடு பசுமையாகவும், புதியதாகவும் உள்ளது; [சமணர்களைப் பார்த்து] நீங்கள் தீயினில் இட்ட ஏட்டினை எடுத்துக் காட்டுங்கள்?! சமணர்கள் : [அந்நெருப்பில் சமணர்கள் தம் கைகளை விட்டு தம் ஏட்டினை தேடுகின்றார்கள்.] சமணர் - 1: ஆ... நெருப்பு சுட்டு விட்டது! அருகா!! சமணர் - 2: ஆ... என்னையும் சுட்டு விட்டது! சமணர் - 1: கத்தாதே மானம் போகிறது. மன்னர் : காவலர்களே, நீரினை ஊற்றி வெப்பத்தைத் தணியுங்கள். [நீரினை ஊற்றி நெருப்பு அணைக்கப்படுகின்றது.] மன்னர் : இப்பொழுது தேடிப்பாருங்கள். [சமணர்கள் எரியுனுள் தம் கைகளை விட்டு தேடிப்பார்க்கின்றார்கள்.] சமணர் - 2: ஆமாம் நீ வாது செய்வதற்கு ஏட்டினைப் போட்டாயா?! அல்லது எரியூட்டுவதற்கு விறகினைப் போட்டாயா?! ஒரே கரி மயமாக இருக்கின்றதே! சமணர் - 1: நம் ஏடு முற்றிலுமாக எரிந்து விட்டது. மன்னர் : [எரிச்சலும், கோபத்துடனும்] ஏட்டினை இன்னும் அரித்துப் பாருங்கள்; பொய்மை நெறியை துணையாகக் கொண்டு, அதனை மெய்ப்பொருளாக விளக்க முயன்ற நீங்கள் அகன்று செல்லுங்கள்; அனைத்து வாதங்களிலும் தோற்ற வல்லமை மிக்கவர்களே! நீங்கள் இன்னுமா தோற்கவில்லை என்று நினைக்கின்றீர்கள்?! சமணன் - 1: இரண்டு வாதங்கள் செய்தோம், மூன்றாவது வாதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். உண்மை திறத்தை மூன்றாவது வாதின் முடிவில் அறியலாம். மன்னர் : இதனை ஏற்க முடியாது; இனிமேல் உங்களால் ஆகக் கடவது ஒன்றுமில்லை. திருஞானசம்பந்தர் : நீங்கள் விரும்பும் மூன்றாவது வாது என்ன? சமணன் : மெய்ப்பொருள் வாய்மைத் தன்மை. நிலைபெறும் தன்மையெல்லாம் தொகுத்து ஏட்டினில் எழுதி ஓடுகின்ற ஆற்றில் விட்டால் நீருடன் செல்லாது நீரினை எதிர்த்து செல்லும் ஏடு எதுவோ அதுவே நல்ல பொருளை பெற்றுடையதாகும். திருஞானசம்பந்தர் : நன்று; அதன்படியே செய்வோம். குலச்சிறையார் : இனி செய்யப்புகும் இந்த வாதம் ஒன்றிலும் தோற்றுவிட்டால், அதன்மேல் செய்ய வேண்டுவது இது, என்பதை முடிவு செய்த பின்னரே இவ்வாதை தொடங்க வேண்டும். சமணன் : இவ்வாதத்திலும் தோற்றோமானால், இவ்வரசனே எங்களை வெவ்விய கழுவில் ஏற்றுவானாவான். மன்னர் : உங்கள் செற்றத்தினால் இவ்வாறு உரைத்தீர்கள். உங்கள் செய்கையும் மறந்து விட்டீர்கள். உம்முடைய ஏட்டினை நீரினில் அழகு பொருந்த விடுவதற்கு செல்லுங்கள். புனல் வாதம்பாத்திரங்கள் : திருஞானசம்பந்தர், சம்பந்தசரணாலயர், அடியார்கள், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், மன்னன், காவலாளிகள், சமணர்கள், ஊர் மக்கள். காட்சி - 8.இடம் : வைகை ஆற்றங்கரை. பின்குரல் : [சமணர்களின் மூன்றாவது வாதான புனல் வாதத்திற்காக, திருஞானசம்பந்தர், மன்னர், ஊர் மக்கள் உள்ளிட்டோர் வைகை ஆற்றங்கரையில் குழுமி இருக்கின்றார்கள்; புனல் வாதம் தொடங்குகின்றது.] திருஞானசம்பந்தர் : [சமணர்களைப் பார்த்து] நீங்கள் இசைந்தபடி, உங்களுடை ஏட்டினை இவ்வாற்றில் இடுங்கள். சமணன் - 1: முன்னர் தோற்றவர்கள் பின்னர் தோற்க மாட்டார்கள். அத்தி... நாத்தி... அருகா...; [மற்றொரு சமணரிடம்] ஆற்றில் நீர் செல்லும் வேகத்தைப் பார்த்தால், எம் ஏட்டினை ஒரே மூச்சில் கடலில் சேர்த்துவிடும் போலிருக்கின்றதே! சமணன் - 2: ஆமாம்... ஆமாம்... [தான் மட்டும் முணுமுணுத்தவாறு] இந்த ஆற்றில் ஏன் நீர் இத்தனை வேகமாக செல்கின்றதோ?! சமணன் - 1: [தங்களையும், ஊர்மக்களையும் சமாதானம் செய்யும் பொருட்டு] ஏடு அடித்துச் செல்லவில்லை... நீரை எதிர்த்துதான் வருகின்றது. சமணன் - 2: ஆமாம்... ஆமாம்... எதிர்த்துதான் வருகின்றது. ஊர் மக்கள் : எங்கே எதிர்த்து வருகின்றது?! நன்றாக உள்ளது நீங்கள் செய்யும் வேடிக்கை; நீங்கள் விட்ட அவ்வேடு இந்நேரம் கடலையே அடைந்திருக்கும். [சமணர்கள் இட்ட ஏடு, நீரினில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டு, அனைவரின் கண் பார்வையினின்றும் மறைந்தது.] சமணன் : [சம்பந்தரைப் பார்த்து] இவரும் ஏட்டினை விடட்டும், பின்னர் என்ன ஆகின்றது என்று போர்ப்போம். [திருஞானசம்பந்தர் மன்னருக்குத் திருநீறு பூசிவிடுகின்றார், ஏனையோருக்கும் தருகின்றார். பின்னர் “வாழ்க அந்தணர்...” என்ற திருப்பாசுரத்தைப் பாடி தாமே ஏட்டில் எழுதி, ஆற்றில் இடுகின்றார்.] வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் [வேந்தனும் ஓங்குக என்றவுடன் பாண்டியனின் கூன் நிமிர்கிறது. ஏடு ஆற்றில் இட்ட மாத்திரத்தில், நீரினை எதிர்த்து செல்கின்றது. குலச்சிறையார் தம் குதிரையில் ஏறி அவ்வேட்டினைத் தொடர்ந்து செல்கிறார்.] மன்னர்: ஆஆ! மதுரை மாநகரில் சங்கம் வைத்துத் தமிழ் அருளிய பெருமானைத் தெய்வம் என்று தெளியாத இச்சமணர்கள் ஒலை போலல்லாமல் தாங்கள் இட்ட பதிக ஓலை நீரோட்டப் பாங்கிற்கு எதிர்த்தும் செல்கின்றதே! பெற்றொன்றுயர்த்தார் பெருமானே பெருமான்! ஞானபோனகரே! இவ்வோடு எதிர் நீந்துவதற்கு நம் குலச்சிறையாராலும் ஈடு கொடுக்க முடியாது போல. ஏடு தங்கத் தாங்கள் பதிகம் பாடுங்கள். வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் குலச்சிறையார் : [திருஞானசம்பந்தரிடம்] ஓடும் ஆற்றினை எதிர்த்துச் சென்ற இவ்வேடு, தங்கள் அருளால் திருஏடகத்தில் நிற்க, அடியேன் அதனை தாங்கி வரும் பெரும் பேறு பெற்றேன். அர அர அர அர. மன்னர் : குலச்சிறையாரே, வாதத்தில் தாமே ஒட்டி தோல்வியுற்று, அத்துடன் இந்நாட்டை பொய்ம்மை நெறிக்குத் வழிகாட்டிய இச்சமணர்கள் தண்டனைக்கு உரியவர்கள்; ஆகையினால், இவர்களின் விருப்பப்படியும், நீதி முறைப்படியும் இவர்களைக் கழுவில் ஏற்றுங்கள். குலச்சிறையார் : உத்தரவு மன்னா! [திருஞானசம்பந்தர் மன்னருக்கு திருநீறு அளிக்கின்றார்; மன்னன் திருநீறு அணிந்ததால், பாண்டி நாடே திருநீறு அணிந்தது.] அந்தமில் பெருமை ஆலவாய் அண்ணல் திருவடிகள் போற்றி போற்றி! திருச்சிற்றம்பலம் |