logo

|

Home >

video-gallery >

63-nayanmar-drama-ulagai-venra-thathaiyar-siruthondar-tamil-drama

63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமிழ் நாடகம்

சிறுத்தொண்டர் - தமிழ் நாடகம்

Ulagai Venra Thathaiyar

Siruthondar - Tamil Drama


 

உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் புராணம்

திருச்சிற்றம்பலம் 
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் 
சங்காட்டம் தவிர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே 
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணி செய்ய 
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே

காட்சி 1

பின்குரல் : காவேரித் திருநாடு என்று சொல்லப்படுகின்ற சோழ வள நாட்டில் சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருப்பதி திருச்செங்காட்டங்குடி என்பதாகும்.ஒப்பற்ற அப்பதியில் நீண்ட சடையையுடைய சிவ பெருமானின் திருநீற்றுச் சார்பினால் உலகத்தில் தோன்றி வளர்கின்ற எல்லா உயிர்களுக்கும் உயர்வான மருத்துவத் தொழிலை மேற் கொண்டு பெருகும் புகழையுடைய அம்மருத்துவர் குலத்தின் சீலம் பெருகுமாறு பலரும் புகழ்கின்ற பரஞ்சோதியார் என்பவர் தோன்றினார்.ஆயுள் வேதம் என்று கூறப்படுகின்ற மருத்துவ நூற் கலையும், எல்லை இல்லாத வடநூல்களில் உள்ள பல்வேறான கலை களும், தூய படைக்கலத் தொழிற்கலைகளும் ஆகிய இவற்றை யெல்லாம், அவ்வவற்றில் எல்லை காண்பளவும் பரஞ்சோதியார் பயின்றார். அவற்றுடன் பாய்கின்ற மதம் பொழியும் யானைகளையும் குதிரைகளையும் செலுத்தும் தன்மை பொருந்திய வீரம் செறிந்த கலையிலும், உலகத்தில் மேம்பட்டவராக விளங்கினார் பரஞ்சோதியார்.அவர் தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, `அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது, சிவனடிகளில் பொருந் திய அன்புடைமையான ஒழுக்கமேயாகும்' என்று கொள்ளும் உணர் வினால் முதன்மை பெற, காலனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கம், பள்ள மடையில் நீர் ஓடுவது போல், தடையில்லாது விரைவாக என்றும் பயின்றுவரும் பண்பை உடையவரானார்.சிவனடியார்களுக்கு எந்நாளும் இயல்பால் பொருந்திய தொண்டுகளைச் செய்தே, குற்றம் அற்ற புகழையுடைய மன்னனிடத்து அன்பினால் பக்கத் துணையாயிருந்து, அவனுக்காகப் போரில் செலுத்தப்படுகின்ற யானைப் படையைச் செலுத்திப் பல போர்களில் வெற்றி கொண்டு, போரில் எதிர்த்து நின்ற மன்னர்களின் நாடுகள் பலவற்றையும் கைக்கொண்டு, தேர்ப்படையையுடைய தம் மன்னனிடம் சிறப்பைப் பெற்றார்.ஒரு முறை தன் மன்னனுக்காகப் படையெடுத்துச் சென்று வடநாட்டில் `வாதாபி' என்ற பழைய நகரம் தூளாக ஆகும்படி, யானைப் படையைச் செலுத்தி வென்று, பல மணிகளையும், பொருட் குவைகளையும், யானைக் கூட்டங்களையும், குதிரைத் தொகுதிகளை யும், இன்னும் இத்தகைய எண்ணில்லாதவற்றையும் கைக்கொண்டு தம் மன்னன் முன் கொணர்ந்தார்.பரஞ்சோதியாரின் வீரத்தைக் கண்டு மன்னனும் அரசவையில் உள்ளோர்களும் வியப்படைகின்றனர்.

இடம் : பல்லவ அரசவை

பரஞ்சோதியார்: அரசே தங்களை வணங்குகின்றேன், தங்கள் ஆணையின் வண்ணம், வடநாடு சென்று வாதாபிநகரை வென்று அரிய பொருட் குவைகளை கொண்டு வந்துள்ளேன்.

மன்னன்: பரஞ்சோதியாரே! மிக்க மகிழ்ச்சி! இப்படியல்லவா இருக்கவேண்டும் தளபதி! சாதாரணப்பட்டவனா அந்த வாதாபி மன்னன்? எத்தணை வல்லமை மிக்க என் தந்தை மகேந்திர பல்லவரையே காஞ்சிக் கோட்டைக்குள் முற்றுகையிட்டவனல்லவா?! அவன். இப்பொழுது.. .. .. என் சிங்கம் பரஞ்சோதி வாதாபியை வென்று வந்துள்ளது! போர்களத்தில் பரஞ்சோதியார் நின்றால் வெற்றி நமதே என்பதை நான் கூறவும் வேண்டுமா? பரஞ்சோதியாரே! தங்களை படைத்தளபதியாக கொண்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

பரஞ்சோதியார்:: அரசே! தங்கள் ஆணையை நிறைவேற்றுவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

அமைச்சர்-1 : அரசே! நம் தளபதியார், யானைப் படையைச் செலுத்தி எதிர்த்து வந்த பகைவர்கள் அனைவரையும் வீழ்த்தி நம் படைகளை முன்னடத்திச் சென்ற காட்சி என் கண்களை விட்டு இன்னும் அகலவே வில்லை.

மன்னன் : ஆகா அப்படியா! பரஞ்சோதியாரின் வீரத்திற்கு இவ்வுலகில் யாரும் ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை என்பதை நம் நாட்டிலுள்ள அனைவரும் அறிவர். பரஞ்சோதியாரே! தங்கள் வல்லமையையும், எவருக்கும் அஞ்சாத மன உறுதியும் , வீரம் செறிந்த போர் செய்யும் திறனையும். கண்டு நான் வியக்கிறேன் .

அமைச்சர்-2 : ஆம் அரசே! பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமானின் திருத்தொண்டு வாய்க்கப் பெற்ற பரஞ்சோதியாரை எதிர்த்து நிற்பவர் எவரும் இவ்வுலகத்தில் இல்லை.

மன்னன் : என்ன!? பரஞ்சோதியார் கொன்றை மலர் சூடிய நம் சிவபெருமானின் அடியவரா? சிவ சிவ! அமைச்சரே நீங்கள் என்ன சொல்கிறீர்?!

அமைச்சர்-1: ஆமாம் அரசே! எதிரிகள் எந்தப் பரஞ்சோதியாரின் பெயர் கேட்டவுடன் சிம்ம சொப்பனமாக தளர்ந்து விழுந்துவிடுகிறார்களோ அத்தகு மாவீரர் பரஞ்சோதியார், செம்மேனியை உடைய சிவபெருமானின் அடியவர் ஒருவரை கண்டுவிட்டால் உருகக் காய்ச்சிய பொன் போலப் பணிந்து விடுவார். எல்லாக் கலைஞானத்தின் தெளிந்த பொருள், சிவபெருமான் திருகழலுக்கு “அன்பு” என்ற உணர்வினால் பெருமானை நினைந்து, பள்ளமடையாய் பாயும் அன்பினில் பரஞ்சோதியார் மெய்ம்மறந்து கிடப்பதை நான் பலகாலும் கண்டுள்ளேன்! வீரம் மிகுந்த இந்த சிங்கத்தின் உள்ளம் சிவனார் என்றால் எப்படித்தான் இப்படிப் பாகாய் உருகுகிறதோ!!

மன்னன் : ஆ ஆ! பரஞ்சோதியாரே! தாங்கள் உம்பர் பிரான் அடியார் என்பதை உணராது மிக கொடிய போர்முனையில் சென்று போர் புரியுமாறு தங்களை செய்து விட்டேனே! எம்பெருமானே! இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும்.

பரஞ்சோதியார்: சிவ சிவ! அரசே, என் உரிமையான படைத்தொழிலுக்கு ஏற்றதான பொருந்திய திறத்தையே யான் செய்தேன். அதனால் ஒரு பிழையும் நேர்ந்து விடவில்லை. தாங்கள் வருத்தப்பட வேண்டாம்.

மன்னன் : நம் கருவூலத்தில் இருந்து மிகுந்த பொற்குவியல்களை எடுத்து வாருங்கள். (பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.)

மன்னன் : பரஞ்சோதியாரே, தங்கள் உண்மை நிலையான திருத்தொண்டை, இதுகாறும் யான் அறியாதவாறு தாங்கள் உள்ளன்பு ஒன்றே கருத்தாய் செய்து வந்தீர்கள்! என் மனக் கருத்திற்கு இனிமை பெற இனித் தாங்கள் உள்ளும் புறமும் ஏறுயர்ந்த இறைவனுக்கு இசைந்த, செம்மை தரும் நெறியான சிவநெறித் தொண்டே செய்வீர்களாக! அதற்கு இவையெல்லாம் அடியேனின் காணிக்கை. தாங்கள் இதனை மறுக்காது ஏற்றுக் கொள்ளுங்கள்.

பரஞ்சோதியார் : சிவ சிவ! அரசே! பிறை சூடிய பெருமானின் திருவருள் அடியார்களுக்கு எப்போதும் வேண்டுவனவே அளிப்பது. அடியேனுக்குத் திருச்செங்காட்டங்குடி கணபதீச்சரப் பெருமான் மேல் அளவிலாக் காதல். அப்பெருமானுக்கும் அடியவர்களுக்கும் பணி செய்தலே என் வாழ்வாகும். சிவ சிவ!

மகுடம் : கணபதீச்சரத்துப் பெருமான் திருவடிகள்! போற்றி! போற்றி!! வாதாபி வென்ற தளபதி பரஞ்சோதியார்! வாழ்க! வாழ்க!! சிவனடிச் சிந்தையார் பரஞ்சோதியார்! வாழ்க! வாழ்க!! பல்லவ மன்னர்! மாமல்லர்! நரசிம்ம வர்மர்! வாழ்க! வாழ்க!!

காட்சி 2

பின்குரல் : மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு பரஞ்சோதியார், தம் பதியான செங்காட்டங் குடியை அடைந்து, குளிர்ந்த பிறைச் சந்திரன் வாழ்வதற்கு இடமான திருமுடியையுடைய சிவபெருமானைக் `கணபதீச்சரம்' என்ற கோயிலில் வணங்கித், திருத்தொண்டினை முன்னைய நிலைமையினின்று வழுவாது முறையாக அன்புடன் செய்து வருவாராயினார். மறைகள் தோன்றற்குக் காரணரான சிவபெருமானின் அடியவர்களுக்கு வேண்டிய உண்மைப் பணிகளை யெல்லாம் செய்வாராய், குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்ற காதலையுடைய இல்லக் கிழத்தியாருடன், இருவர் கருத்தும் ஒன்றாய்ப் பொருந்த வரும் பெருமையுடையதாய், நீதியின் வழியே வரும் இல்லறம் நடத்தி வாழும் தன்மையில் நிலை நின்றார். கொன்றை மலர் மாலையைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் அடியவர்களை நாள்தோறும், முறையாக முன்னமேயே உணவு உண்ணச் செய்து, அதன் பின்னர்த் தாம் உண்ணுதலான பெருவிருப்பத்தால் அதனை வழக்கமாகக் கொண்டு ஒழுகும் நிலையில், தவறாது ஒழுகுதலான தூய்மையான தொழிலில் சிறந்து விளங்கினார். சிவபெருமானின் அடியவர்களுக்கு விருப்புடன் செய்யும் வழிபாட்டு வகையால், மேன்மையுடைய அவ்வடியவர்களின் முன்பு, தம்மை மிகவும் சிறியவராய்க் கருதி ஒழுகி வந்தமையின், அவர், சிறுத்தொண்டர் என்ற பெயருடன் உலகில் விளங்கலானார்.

இடம் : திருச்செங்காட்டங்குடி நகர வீதி

சிறுத்தொண்டர் : அடியவரே தங்களை வணங்குகின்றேன்; தாங்கள் அடியேன் இல்லத்தில் எழுந்தருளி, திருஅமுது செய்து அடியேன் பிறந்த பிறவியின் பயனை அருளிச் செய்ய வேண்டுகிறேன்.

அடியவர் : மிக்க மகிழ்ச்சி! சிவனடியார்கள் இடும் அமுதினை உண்ண யான் என்ன தவம் செய்தேனோ. இப்போதே வருகிறேன் ஐயா.

சிறுத்தொண்டர் : சிவ சிவ! அடியேன் பெரும் பேறு பெற்றேன்! எம்பெருமானே என்னே உன் திருக்கருணை!

ஊரார்-1 : அங்கே பார்த்தாயா! பரஞ்சோதியார்க்கு இன்றைய பொழுதிற்க்கு ஒரு சிவனடியார் கிடைத்து விட்டார்.

ஊரார்-2 : நீ என்ன கூறுகிறாய்! எனக்கு ஒன்றும் புரியவில்லையே!

ஊரார்-1 : உலகத்தில் உமக்கு என்னதான் புரிந்தது! இது புரிவதற்கு?! விவரமாக கூறுகிறேன் கேளும். பரஞ்சோதியார், தினம்தோறும் ஒரு சிவனடியாருக்காகவாவது அறுசுவை உணவளித்து, அதன் பின்னரே தான் உணவு உட்கொள்ளும் கொள்கை உடையவர்; உமக்குத் தெரியுமோ?!.

ஊரார்-2 : ஓ அப்படியா..........!

ஊரார்-1 : ஓ அப்படியாவா? நீர் யோசிப்பதைப் பார்த்தால் நாளை சிறுத்தொண்டர் வீட்டுச் சாப்பாட்டிற்குச் சென்றுவிடுவாய் போலுள்ளதே!

ஊரார்-2 : ஆமாம்! ஓ இல்லை... இல்லை...! ம்... ம்... சிறுதொண்டர் சிவனடியார்கள் மேல் அவ்வளவு அன்பு கொண்டவரா?! என்று ஆழ்ந்து யோசித்தேன் அவ்வளவுதான்.

ஊரார்-1 : நீர் ஆ......ழ்ந்து யோசித்தது போதும் வாரும் நம் பிழப்பைப் பார்க்கலாம்.

(ஊரார்-2 ஊரார்-1-ஐ மெதுவாகச் சுரண்டி கூப்பிடுகிறார்.)

ஊரார்-1 : என்னையா...?

ஊரார்-2 : ஆமாம்... ஒரு வேளை சிறுத்தொண்டருக்குச் சிவனடியார்கள் யாரும் கிடைக்காவிட்டால் அன்றைய தினம் அவர் உணவே உண்ண மாட்டாரா!

ஊரார்-1 : ஏனய்யா உமக்கு இந்த விபரீத சிந்தனை?! நீர் இப்படியே பேசிப் பேசி காலத்தைத் தள்ள வேண்டியதுதான். என்றாவது ஒரு நாளாவது நீர் திருநீறு, ருத்ராக்ஷைம், சிவனடியார் என்று யோசித்து இருப்பாயா?

ஊரார்-2 (தன் தலையச் சொரிந்து கொண்டு அசடு வழிகிறார்.)

ஊரார்-1 : இப்படி வாரும் உமக்கு விளக்கமாக கூறுகிறேன். பரஞ்சோதியாரின் திருத்தொண்டின் உறைப்பை அறியாததால் நீர் இவ்வாறு கேட்டு விட்டீர். அவர் எப்பாடு பட்டாவது ஒரு சிவனடியாரையாவது தேடிப்பிடித்து, தினந்தோறும் திருஅமுது செய்வித்து விடுவார். ஒரு வேளை நீர் கூறுவது போல், சிவனடியார் யாரேனும் சிறுத்தொண்டருக்குக் கிடைக்காவிட்டால், அவர் நித்தம் வணங்கும் செங்காட்டங்குடி சிவபெருமானே அடியவர் வேடத்தில் வந்தாலும் ஆச்சிரியபடுவதிற்க்கில்லை. சிவபெருமான் மீதும் அவர் அடியார்கள் மீதும் அத்துணை காதல் கொண்டவர் பரஞ்சோதியார் போதுமா!

ஊரார்-2 : அடேயப்பா! பரஞ்சோதியாரின் திருத்தொண்டின் பெருமையை என்னவென்று கூறுவது!! இன்று முதல் நிச்சயமாக நானும் சிவனடியார்களை வணங்கப் போகிறேன். சிவ சிவ!

ஊரார்-1 : என்னால் நம்பவே முடியவில்லையே! உனக்குள் இத்தனை பெரிய மாற்றமா?! சிவ சிவ!

காட்சி 3

பின்குரல் : சிவபெருமானின் திருவருளால், நிறைந்த தவத்தையுடைய சிறுத்தொண்டருக்கு பெருகும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கையாரின் மணிவயிற்றில் `சீராளன்' என்னும் திருமகனார் தோன்றினார். பிறர் எவரும் பெறுதற்கரிய அருமையான ஒப்பற்ற நன்மகவாம் "சீராள தேவர்" தோன்றியபொழுது, சிறுத்தொண்டர் தம் செல்வமனையை அழகுபடுத்தி, மகவு தோன்றிய பெருமையால் சுற்றத்தார்கள் மகிழ, பெறற்கரிய அம்மகவைப் பெற்றமையால் பெருகிவரும் மன மகிழ்ச்சி, தந்தையாரின் மனத்தில் அடங்குதற்கரிய நிலையில் வளர்ந்து வர சிறப்புமிக்க நெய்யாடல் விழாவினைத் திருச்செங்காட்டங்குடியிலுள்ளார் கொண்டாடினர் மங்கலமான நல்ல இயங்களின் ஒலியும், மறை களின் ஒலியும் வானத்தில் ஓங்க, இறைவரின் சிறப்புடைய அடியார்களுக்கு அளவில்லாத பொருள்களைத் தந்து, தங்கள் குல மரபிற்கு உரிய செயற்பாடுகளைப் பத்து நாள்களிலும் மேன்மேலும் மிக மகிழ்ச்சியுடன் செய்து, காப்பு அணிவித்தனர். நாட்கள் சென்றன. சீராள தேவர் பள்ளி செல்லும் பருவம் அடைந்தார். செழுங்கலைகளைப் பயில்வதற்காகத் தம் பிறவிப் பிணிப்பு நீங்க வந்த சீராள தேவரை பள்ளியில் சேர்த்தனர். அந்நாளில் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்தருள, சிறுத்தொண்டர் முன்னாகச் சென்று எதிர்கொண்டு வரவேற்று, அழைத்து வந்து, தம் மனையில் இருக்கச் செய்து, சீகாழித் தலைவரின் நலமும் பெருமையும் மிக்க திருவடிகளைப் போற்றி நலம் பெற்றார். சீகாழியினரின் தலைவரான ஞானசம்பந்தரும் அளவிடற்கரியதாய், மேன்மேலும் வளரும் அரிய பத்திமைப் பண்புடைய சிறுத்தொண்டருடன் பயின்று, அவரை உலகம் போற்றும் திருப்பதிகத்தால் பாராட்டிச் சிறப்புச் செய்து, தம் நட்பினராகும் பேற்றையும் வழங்கியருளினார். இதனை எண்ணி எண்ணி சிறுத்தொண்டர் உருகுகின்றார்.

இடம் : சிறுத்தொண்டர் செல்வமனை.

சிறுத்தொண்டர் : தேவி, புரமெரித்தார் திருமகனாராகிய திருஞானசம்பந்தப் பெருமான் நம் இல்லத்திற்கு எழுந்தருளியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இவ்வுலகினை ஈன்ற நம் உமை அம்மையிடம் ஞானப்பால் உண்ட புகலி வேந்தரின் திருவடிகளைப் போற்றும் பெரும் பேறு நமக்கு கிடைத்தது நாம் முன்னைப் பிறவியில் செய்த தவமாகத்தான் இருக்கும். சிவ சிவ!

திருவெண்காட்டு நங்கை: உண்மைதான் சுவாமி; இதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை. தங்களை என் கணவராகப் பெற்றதால் தான், வையகம் உய்ய வந்த மறைக்குல வள்ளலாரை வணங்கும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது.

சிறுத்தொண்டர் : எல்லாம் ஈசன் செயல். நம்மையும் ஒரு பொருளாக இன்னருள் புரியும் செங்காட்டங்குடி அண்ணலின் கருணையினை நாம் என்னவென்று போற்றுவது! சிவ சிவ. அது சரி, சீராள தேவன் பள்ளியில் இருந்து வந்து விட்டானா?!

திருவெண்காட்டு நங்கை : சுவாமி, அவன் வரும் நேரம் தான் இது. அவன் வருகையைத்தான் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நம் மகனை பிரிந்து இருக்கும் சில நொடிகள் கூட எனக்கு பெரும் யுகமாக தோன்றுகிறது.

சிறுத்தொண்டர் : தேவி, நம்முடைய திருத்தொண்டு நிலை பெரும் பொருட்டுதான் நமக்கு சீராள தேவன் மகனாக தோன்றியிருக்கிறான்.

(சீராள தேவர் ஓடி வருகிறார்)

சீராளதேவர் : அம்மா! அப்பா!!

சிறுத்தொண்டர் : சிவ சிவ! என் செல்வமே! மகனே! திருமணியே! மணிக்குன்றே! சீராளா! தற்போது தான் நானும் உன் அன்னையும் உன்னைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். நீயே வந்து விட்டாயே!

திருவெண்காட்டு நங்கை : அன்பு மகனே! என் கண்ணே! மணியே! என் கற்பகமே!. செங்காட்டங்குடி ஈசன் அருள் உனக்கு நிறைந்து இருக்கட்டும்! (சீராள தேவரை கொஞ்சி மகிழ்கிறார் )

காட்சி 4

பின்குரல் : இவ்வாறாக நிகழ்ந்துவரும் சிறுத்தொண்டரின் திருத்தொண்டானது, உயர்ந்த திருக்கயிலாய மலையில் வீற்றிருக் கின்ற இறைவரின் திருவடிக் கீழ்ப் போய்ச்சேர, ஆனேற்றூர்தியை யுடைய இறைவர், தாமே அவர்தம் மெய்யார்ந்த அன்பை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு, உள்ளம் மகிழும் வயிரவக் கோலத் துடனே திருமலையினின்று நீங்கி, இதழ்களையுடைய கொன்றை மலரைச் சூடிய நீண்ட சடையையே அழகுபொருந்த, கருநீலக் கடலில் சேர்ந்து நீரை யுண்டு மேலே எழுந்த கரிய மேகத்தின் சுருள் போலத் தொடர்ந்து, நீண்ட தலைமயிராகக் காடு என அடர்ந்து, நெறிப்பும் அசைவும் உடையதாகச் செறித்துப் படரும் வரிசை கொண்ட கருங்குஞ்சிக் கொத்தைப் போல் ஆக்கி அழகுடையதாய்ப் பரப்பி முடித்து,திருக்கழுத்தில் கொண்ட நஞ்சை மறைத்தருளும் பொருட்டுப் பாற்கடலில் தோன்றிய அமுதத்தின் குமிழிகளின் வரிசையாய் வாய்ந்த ஒளியுடைய வெள்ளிய திரட்சிகளின் தூய வடத்தை அணிந்ததுபோல, உள்ளத்துள் நினைப்பவரின் உடலும் உயிரும் உருகும்படி மிக விளங்கும் திருக்கழுத்திலே வெண்மையான பளிங்கு மாலை விளங்க,நான்முகனின் மண்டையோட்டை எடுத்த இடக் கையினால், அணைத்த விளங்கும் ஒளியையுடைய மூவிலைச் சூலமா னது அழகிய தோள்களில் விளங்க, விளங்கி வீசும் ஒளியையுடைய வலத்திருக்கையிலே பிடித்த தமருகத்தின் ஒலி ஒலிக்க, முன்னைத் தவத்தால் பயன் பெறும் நிலமும் அடித் தாமரைகளைத் தாங்க,அருள் பொழியும் திருமுகத்தில் புன்முறுவலானது நிலவைப் போன்று குளிர்ந்த ஒளி வீச, மயக்கத்தை மிகச் செய்யும் மும் மலங்களின் வலியையும் போக்கும் கூரிய சூலம் வெயில் ஒளி வீச, உண்மைப் பொருளை விளக்கும் பெருகும் அன்பு மேலும் மேலும் தழைத்து ஓங்கி இவ்வுலகம் போற்ற, அறிவு விளக்கம் செய்யும் வளமையுடைய தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.

இடம் : திருச்செங்காட்டங்குடி நகர வீதி

இறைவர் : இங்கே சிறுத்தொண்டரின் இல்லம் எங்குள்ளது?

ஊரார் : ஐயா! சிவபெருமானது தொண்டருக்கு எந்நாளும் திருஅமுது அளிக்கின்ற சிறுத்தொண்டரின் செல்வ மனை அதோ தெரிகிறது பாருங்கள். அது தான் அவர் மனை.

இறைவர் : உம்ம்....

(இறைவர் செல்கிறார்)

இறைவர் : சிறுத்தொண்டர் இந்த இல்லத்தில் உள்ளாரோ?

சந்தனத்தாதியார் : சிவ சிவ! வரவேண்டும் அடியவரே! தங்களை வணங்குகிறேன்! எல்லையில்லாத சிறப்புடைய அடியவரைத் தேடும் பொருட்டு அவர் வெளியே சென்றுள்ளார்; எம்மை ஆள்பவரான முதல்வரே! இம்மனையகத்து எழுந்தருளுக!'

இறைவர் : என்ன! சிறுத்தொண்டர் இல்லையா? பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் யாம் தனியே புகமாட்டோம்.

திருவெண்காட்டு அம்மையார் : ஐயா, தங்களை வணங்குகிறேன், எம் கணவர் அம்பலவரின் அடியவர்களைத் திருவமுது செய்விக்கின்ற நியமம் உடையவர்; அச்செயலை முடிப்பதற்கு, `எம்பெருமானே! இன்று அடியார் எவரையும் காணாமையால் தேடிச் சென்றுள்ளார். புதிதாய் நீங்கள் எழுந்தருளி வரும் இத்திருக்கோலத்தைக் கண்டால் “பெரும் பேறு” என்று மிகவும் மகிழ்ச்சி அடைவார். இனிக்காலம் தாழ்க்க மாட்டார். இப்பொழுதே வந்து சேர்வார். தாங்கள் இம்மனையில் எழுந்தருள வேண்டும்.

இறைவர் : ஒப்பற்ற இல்லறத்தைத் தவறாது நடத்தும் நங்கையே! யாம் வடநாட்டில் உள்ளோம். சொல்வதற்குரிய சிறப்புடைய சிறுத்தொண்டரைக் காணும்பொருட்டு யாம் இங்கு வந்தடைந்தோம்: எவ்வகையாயினும் அவர் இல்லாதபோது இங்கே நாம் இருக்க மாட்டோம்! கணபதியீச்சரத்தில் உள்ள அழகிய மலர்களையுடைய திருவாத்தி மரத்தின் கீழ்ச் சென்று அமர்ந்து இருப்போம்; அவர் மீண்டு இங்கு வரும் பொழுது, அங்கு யாம் இருக்கும் தன்மையினைச் சொல்வீராக!

திருவெண்காட்டு அம்மையார் : தங்கள் ஆணை ஐயா! என் கணவர் வெகு விரைவில் வந்து விடுவார்.

(சிறிது நேரம் கழித்து)

சிறுத்தொண்டர் : தேவி, இது என்ன திருவிளையாட்டு. நம் நகரம் முழுவதும் தேடியும் என் கண்ணில் ஒரு அடியவர் கூட தென்படவில்லையே. சிவ சிவ! அடியவருக்கு திருஅமுது செய்யாமல் நாம் வாழ்ந்து என்ன பயன். இறைவா! எம்பெருமானே! நான் என் செய்வேன்?

திருவெண்காட்டு அம்மையார் : சுவாமி வருத்தப்பட வேண்டாம். விடையேறும் வித்தகரின் அருளால் இவ்வுலகமே காதல் கொள்ளும் திருவேடம் கொண்ட அன்பர் ஒருவர் சற்று முன் வந்தார். தாங்கள் மனையில் இல்லாததால் இங்கு தங்க மறுத்து விட்டார். நம் கணபதியீச்சரத்தில் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் தங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

சிறுத்தொண்டர் : அப்படியா?! சிவ சிவ. அடியேன் உய்ந்தேன். இப்போழுதே அவரை கண்டு தொழுது நம் மனைக்கு அழைத்து வருகிறேன்.

காட்சி 5

பின்குரல் : திருக்கயிலை மலையில் இருந்து எழுந்தருளிய இறைவன் ஆத்தி மரத்தடியில் வீற்றிருக்கிறார்.அவரைக் காண சிறுத்தொண்டர் ஓடோடி வருகிறார்.

இடம் : திருச்செங்காட்டங்குடி திருக்கோவில்

(சிறுத்தொண்டர் இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகிறார்.)

இறைவர் : நீர் தானோ எல்லோராலும் பெரியவராய்ச் சொல்லப்படுகின்ற சிறுத்தொண்டர்!

சிறுத்தொண்டர் : சிவ சிவ! திருநீற்றுத் திருத்தொண்டர்களின் முன் சென்று போற்றி வழிபட தகுதியற்றவனாயினும், அடியேன் அடியவர்களின் அருளால் அப்பெயருடையவன்' எனக் கூறுவர், குற்றம் தீர்ந்த அடியவரை அமுது செய்விப்பதற்காகப் பழமை வாய்ந்த இப்பதியில், பெருவிருப்பத்தால் யான் எங்கும் தேடியும் ஒரு அடியவரையும் கண்டிலேன்; முன்பு யான் செய்த தவப்பயனால் தங்களைக் காணும் பேறும் பெற்றேன். அடியவரே, தாங்கள் அடியேனின் இல்லத்தில் எழுந்தருளி திருவமுது செய்தல் வேண்டும்.

இறைவர் : விளங்கும் தவத்தை உடைய சிறுத்தொண்டரே! யாம் வடநாட்டில் உள்ளோம்; உம்மைக் காண்பதற்காகவே இங்கு வந்தோம்! எம்மை அன்புடன் உண்ணச் செய்ய உம்மால் இயலாது, அஃது அரியதாகும்.

சிறுத்தொண்டர் : சிவ சிவ! அடியவரே! அடியேன் எண்ணிப் பார்க்காது கூறமாட்டேன். கண் நிறைந்த அழகையுடைய நிறை தவத்தவரே! தாங்கள் திருவமுது செய்யும் இயல்பை, விரைவாக அமைப்பதன் பொருட்டுக் கூறியருள் செய்வீராக! குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடிய இறைவரின் அடியார்கள் கிடைக்கப்பெற்றால், தேடினும் கிடைக்காதனவும் கிடைக்க உள்ளனவாகும்; எனக்கு எதுவும் அருமை இல்லை.

இறைவர் : சிறுத்தொண்டரே! எமக்கு திருஅமுது செய்விப்பது அரியது என்று யாம் கூறியும் நீரோ இல்லை என்கிறீரே! ம்ம்! அன்புத் தொண்டரே! நாம் ஆறு திங்களுக்கு ஒருமுறை, பசுவை வீழ்த்தி அமுது இட உண்பது வழக்கமாகும். அங்ஙனம் உண்பதற்குரிய நாளும் இன்றே யாம். ஆனால் அவ்வாறு உண்பித்தல் உமக்கு அருமையுடையதாகும்!

சிறுத்தொண்டர் : ஐயா, அடியேன், ஆடு, எருமை, பசு என்ற மூன்று நிரைகளையும் நிரம்ப பெற்றிருக்கின்றேன், அடியேனுக்கு இங்குக் குறைவில்லை. நஞ்சை உண்ட சிவ பெருமானின் அன்பராம் தாங்கள், உண்ணுதற்குரிய அப்பசுதான் இன்னது என்றருளின், அடியேன் விரைவாகச் சென்று உணவு சமைத்து அதற்குரிய காலம் தவறாது வருவேன்.

இறைவர் : அடியாரிடம் பேரன்பு உடையவரே! நன்றாகக் கேளும். நாம் உண்பதற்குக் கொல்லப்படுகின்ற பசுவும் மானிடப் பசுவாகும். ஐந்து வயதாயும், உடற் குறையற்றதாயும் இருத்தல் வேண்டும். அதுவே யாம் உண்பதாகும்; நோய் செய்யும் புண்ணிலே வேலைப் பாய்ச்சியதைப் போல், மேலும் கூறத்தக்கது ஒன்றுண்டு.

சிறுத்தொண்டர் : தங்கள் திருவடிக்கு தொண்டு புரியும் அடியேனுக்கு ஏதும் அரியது இல்லை, விரைவாய்க் கூறியருளுங்கள்.

இறைவர் : ஓ! திருவேடத்தின் மேல் நீர் கொண்டு இருக்கும் அன்பினால் உமக்கு அரியது எதுவுமே இல்லையோ?! சொல்கிறேன் கேளும். ஒரு குடிக்கு ஒரே மகனாக உள்ள பிள்ளையை தாய் பிடிக்கவும், தந்தை அரியவும், அந்நிலையில் அவர்கள் இருவரும் உளம் உவந்து அமைத்த கறியே நாம் உண்பதாகும். இப்போது கூறும். உம்மால் எமக்கு உணவு அளிக்க முடியுமா?

சிறுத்தொண்டர் : எம் இறைவரான தாங்களின் திருவமுது செய்யும் பேற்றைப் பெற்றதால் எனக்கு இதுவும் அரியதன்று. மென்மையான தாமரையனைய தங்கள் திருவடிகளை வணங்குகிறேன். அடியேனுக்கு விடையருளிச் செய்யுங்கள். அடியேன் நனி விரைந்து வந்து விடுகிறேன்

இறைவர் : மிக்க நன்று: நீர் வரும் வரை யாம் இங்கேயே இருப்போம்.

காட்சி 6

பின்குரல் : வயிரவ கோலத்தில் வந்த இறைவருக்கு திருஅமுது செய்விக்கும் மகிழ்ச்சியுடன் சிறுத்தொண்டர் தன் மனைக்கு வருகிறார். அங்கே அன்புமிக்க பெருங்கற்பையுடைய பெண்ணான திருவெண்காட்டு நங்கையார், அடியவரைத் காணச் சென்ற தன் கணவரின் வரவை எதிர்நோக்கி வாயிலின் முன் நின்று கொண்டிருக்கிறார்

திருவெண்காட்டு நங்கையார் : சுவாமி, அத்தவமுனிவர் வந்துவிட்டாரல்லவா?! அவருக்கு நாம் எத்தகைய உணவு படைப்பது?

சிறுத்தொண்டர் : தேவி, வந்திருக்கும் மாதவர், ஒரு குடும்பத்திற்க்கு ஒரு மகனாக, ஐந்து வயது உள்ளவனாக, உறுப்புகளில் குறைவு ஒன்றும் இல்லாதவனாக இருக்கும் மைந்தனைத் தாய் பிடிக்கத் தந்தை மகிழ்வுடன் அரிந்து அமுது சமைக்கப் பெற்றால், உள்ளம் மகிழும்படி உணவு உண்டருளலாம் என இசைந்துள்ளார்.

திருவெண்காட்டு நங்கையார் : சுவாமி, பெருமையுடைய வயிரவத் தொண்டர் உணவு உண்ணப் பெறுவதற்கு இங்கு உரிய வகையினால் அமுது அமைப்போமானால் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு மகனாகிவரும் அச்சிறுவனை நாம் பெறுவது எங்ஙனம்?

சிறுத்தொண்டர் : இத்தகைய தன்மை பொருந்திய மைந்தர்தமை, அவ்வவர் எண்ணம் நிரம்பும் அளவும் நிதியம் அளித்தால் கொடுப்பவர்களும் இருப்பர்; ஆனால் நேர் நின்று, தம் மைந்தனைத் தந்தையும் தாயுமாக அரிபவர் இவ்வுலகத்தில் இருப்பரோ! இல்லவே இல்லை! தேவி, இனியும் காலம் தாழ்த்தாது இங்கு என்னை உய்யச் செய்வதற்கு நீ பெற்ற மகனை நாம் இதன் பொருட்டு அழைப்போம்!

திருவெண்காட்டு நங்கையார் : சுவாமி, நம் இறைவரின் தொண்டர் இன்று காலம் தாழ்க்காது அமுது செய்யப்பெற்று அவர்தம் மகிழ்ச்சி பொலியும் திருமுகத்தை நாம் காண்பதே இங்கு செய்யத்தக்கதாகும்! அதுவே தாங்கள் எனக்கு காட்டிய இல்லற நெறியும் ஆகும். இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்; நம்மைக் காக்க வந்த மணி போன்ற மகனைப் பள்ளியில் போய் அழைத்துக் கொண்டு வாருங்கள்.

சிறுத்தொண்டர் : தேவி, உன்னுடைய மலர்ந்த முகத்தைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்பொழுதே பள்ளி சென்று சீராளனை அழைத்து வருகிறேன்.

காட்சி 7

பின்குரல் : சிறுத்தொண்டர் பள்ளியை அடையவும், காலில் அணிந்த சதங்கை மணிகள் ஒலிக்கப் பிள்ளை அவர் எதிரே ஓடி வந்து தழுவிக் கொள்ள, அவனை எடுத்துத் தோள்மீது வைத்துப் பொருந் தும் படி அணைத்துக்கொண்டு, மீண்டு வந்து தம் இல்லத்துக்குள் புகுந்திடவும், நற்குலத்தில் தோன்றிய திருவெண்காட்டுநங்கையார், வள்ளலார் சிறுத்தொண்டரின் முன்பு போய், அம்மைந்தனை எதிரில் தாம் வாங்கிக் கொண்டு, அம்மைந்தனின் தலைமயிரைத் திருத்தி, முகத்தைத் துடைத்துக், காதணியிலும், அரைஞாணிலும் படிந்த தூசியைப் போக்கி, அணிந்த கலவைச் சாந்து அழிந்ததற்கு வருந்திக், கண்ணில் அணிந்த மையினையும் கண்ணில் படாமல் ஒழுங்காகப் பக்கத்தில் அமைய ஒதுக்கிப், பஞ்சும் அஞ்சத்தக்க மென்மையுடைய அடியையுடைய அம்மையார், அன்புடன் எடுத்து நீராட்டிக், குறையாத கோலத்தைச் செய்து, கணவரான சிறுத்தொண்டரின் கையிலே அம்மைந்தனை அளித்தார்.திருத்தொண்டருக்கு ஆக்கும் அமுதுக்கு உதவும் பொருள் என்பதால் அச்சம் கொண்டு அரிய மைந்தனை உச்சிமோவா ராய், மார்பில் அணைத்து முத்தம் தாராராய்க், குற்றம் இல்லாத திருத் தொண்டராம் புனிதரான அடியவருக்குக் கறியை ஆக்குதற்கு விரும் பும் உள்ளத்தால், அடுக்களையில் மேவாராகி வேறு தனியிடத்திலே கொண்டு செல்கிறார்.ஒன்றுபட்ட உள்ளம் கொண்டு அவ்விருவரும் உலகத்தவர் இதன் உண்மை இயல்பை அறியமாட்டார் என்று நினைத்து, மறைவான இடத்தை எய்திப் பிள்ளையைப் பெற்ற தாயார் திருவெண்காட்டு நங்கையார் செழுமையான கொள்கலங்களை நன்றாய்க் கழுவி எடுத்துக்கொண்டு செல்ல, நல்ல மைந்தனாரை எடுத்து, உலகியலை முற்றும் வென்ற தந்தையாரான சிறுத்தொண்டர் தலையைப் பிடித்துக் கொள்ள, மெய்த் தாயாரான அம்மையார் விரைந்து, குழந்தையின் இனிய ஒலிதரும் கிண்கிணி அணிந்த கால்கள் இரண்டையும் மடியின் இடையே பிறழாமல் அமிழ்த்தி வைத்துக்கொண்டு, கொவ்வைக் கனியைப் போன்ற வாயையுடைய மகனின் கைகள் இரண்டையும் தம் கையால் பிடிக்க, அவ்வன்பின் சிறுவனும் தம் பெற்றோர் தம்மை மிகவும் அணைத்து மகிழ்ச்சி கொள்கின்றார்கள் என்று மகிழ்ந்து நகைக்க, ஒப்பில்லாத பெருமை யுடைய மகனாரைத் தந்தையாரான சிறுத்தொண்டர் வாள் கொண்டு தலையை அரிகிறார்.

இடம் : சிறுத்தொண்டர் செல்வ மனை.

பின்குரல் : வறியவனான ஒருவன் சங்கநிதி, பதுமநிதி என்ற இரண்டையும் பெற்று மகிழ்ந்தாற்போல, சிறுத்தொண்டர் வைரவக் கோலம் கொண்ட இறைவரை உடன் அழைத்துக்கொண்டு தம் இல்லத்துள் புகுந்தார்.அங்ஙனம் இல்லத்துள் புகுந்தருளிய அளவில் மனைவியார் அம்மாதவத்தவரின் முன்வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்று, திருவடிகளில் விழுந்து வணங்கி, மணம் கமழும் மலர் மாலைகளும், முத்தால் இயன்ற மாலைகளும் தொங்கவிடப்பெற்றதால் முற்றும் அழகுபடுத்திய அந்த இல்லத்தில், மணமுடைய மலர் மாலைகள் பரப்பிய இருக்கையில் அமர்ந்தருளுமாறு வேண்டி, மணமுடைய நீர் நிறைந்த கரகத்தை எடுத்து ஏந்தி நின்று நீரை வார்க்க, தூய்மையான அந்நீரால், சிறுத்தொண்டர், இறைவரின் திருவடிகளை விளக்கி, அங்ஙனம் விளக்குவதால் பெற்ற நீரைத் தலைமீது நிறையத் தெளித்துக் கொண்டு, இன்பம் பொருந்திய மனையின் எப்பக்கத்தினும் வீசி இறைத்து, மணமுடைய மெல்லிய மலர்கள் கொண்டு போற்றியுரை செய்து, சந்தனக் கலவை சாத்திப், பொருந்தியவாறு நறுமணமும் ஒளி விளக்கும் காட்டி, அடியவருக்கு ஆற்றத்தக்க வழிபாட்டு முறைகளை எல்லாம் செய்து வணங்குகிறார்.

சிறுத்தொண்டர் : அடியவரே தாங்கள் இவ்வாசனத்தில் எழுந்தருளுங்கள்.

இறைவர் : அடியவருக்கு நீர் ஆற்றும் பணி கண்டு மகிழ்ந்தோம். இனிய சோறு உடன் நீவிர் செய்த கறி வகைகளையும் ஒருசேரப் படைப்பீராக!

சிறுத்தொண்டர் : தங்கள் ஆணை! மிக்க மகிழ்ச்சி.

பின்குரல் : பண்பு விளங்குமாறு உண்கலத்தை விளக்கி, அதனைப் பாவாடையின் மேல் வைத்து, அமுது வகைகள் வெவ் வேறாக நன்கு தெரியும்படி செந்நெல்லரிசியான செழுஞ் சோற்றையும் கறிவகைகளையும் முன்னே வைக்கிறார்.

இறைவர் : யாம் சொன்ன முறையில், பசுவினது தொடர்ந்த உறுப்புக்கள் எல்லாவற்றையும் கொண்டு சுவைபெறச் சிறப்பாக சமைத்துள்ளீர்களா?

திருவெண்காட்டு நங்கை : ஐயா, தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது எனக் கருதி அதனை நீக்கிவிட்டு சமைத்திருக்கிறோம்.

இறைவர் : தலை இறைச்சி ஆகாது என்று எப்படி நீக்கலாம்? அதையும் யாம் உண்போம்.

(உள்ளம் கலங்கிய சிறுத்தொண்டர், மனைவி யாருடன் சேர்ந்து மனம் தடுமாறுகிறார்)

சந்தனத்தாதியார் : அடியவரே, `அந்தத் தலையின் இறைச்சியானது அருள் செய்ய வந்த திருத்தொண்டர் உணவு உண்ணும் பொழுது நினைக்க நேரிடும் என்று எண்ணியே முன் உணர்வால் முன்னமேயே அதனைக் கறியமுதாக அமைத்துள் ளேன். இதோ தாங்கள் விரும்பிய தலைக்கறி.

இறைவர் : ம்!! மிக்க நன்று. இப்போது தனித்து உண்ண எமக்கு இயலாது, சிறுத்தொண்டரே! சிவனடியார் எவரேனும் இப்பக்கத்தில் இருந்தால் அவரை அழைத்து வருவீராக!

சிறுத்தொண்டர் : உததரவு ஐயா! இப்போதே செல்கிறேன்.

பின்குரல் : இறைவர் ஆணையினை ஏற்ற சிறுத்தொண்டர் வந்த மாதவமுனிவர் உணவு உண்பதற்கு இதுவோ இடையூறாய் வருவது? என வருந்தி இல்லத்திற்கு வெளியே சென்று தேடியும் இறைவன் திருவருட் செயலால் எங்கும் அடியவரைக் காணாதவறாய் முகத்தில் மிகவும் வாட்டம் கொண்டு வருகிறார்.

சிறுத்தொண்டர் : தவமுதல்வரே, இகத்தினும் பரத்தினும் இனியவரான சிவனடியார்களைத் தேடியும் காணேன், அடியேன் அறியேனாயினும் உலகத்தில் திருநீறு இடுவார்களைப் பார்த்து நானும் திருநீற்றை இடுவேன்!

இறைவர் : சிறுத்தொண்டரே! உம்மைப் போல் திருநீற்றைச் சிறப்பாய் இட்ட அடியவரும் உளரோ? நீவிர், எம்முடன் இருந்து உண்பீராக! இறைச்சியும் சோறும் ஆகிய இவற்றின் மற்றப் பகுதியையும் இவருக்கும் படைப்பீராக!

திருவெண்காட்டு நங்கை : தங்கள் உத்தரவு ஐயா!

பின்குரல் : சிறுத்தொண்டர் இறைவரை உண்பிக்க வேண்டி அவர் விரைந்து உண்ணத் தொடங்க இறைவர் தடுக்கிறார்

இறைவர் : ஆறு திங்கள் கழிய நாம் ஒருமுறை உண்போம், நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! அங்ஙனமாக யாம் உண்பதற்கு முன் நீவிர் உண்ணப் புகுந்தது ஏன்?! நம்முடன் இருந்து உண்பதற்கு, ஒப்பில்லாத மகனைப் பெற்றீரானால் அவனையும் இப்போது அழையும்!'

சிறுத்தொண்டர் : சுவாமி, அடியேனை மன்னியுங்கள், இதுவரை தாங்கள் விரும்பியதை செய்ய முடிந்த எனக்கு இது அரியது ஆகும். அவன் இப்போது இங்கு உதவான். அடியேனை மன்னித்து அருளுங்கள்.

இறைவர் : திருவேடம் வணங்கும் எனக்கு அரியது இல்லை என்று முன்பு கூறினீரே. மறந்து விட்டீரோ! அவன் இங்கு வந்தால் தான் நாம் உண்ண முடியும். ஆதலால் அவன் வருகையை நாடி அழையும்.

பின்குரல் : இறைவர் இவ்வாறு அருள, சிறுத்தொண்டர் அதைத் தவிர்க்க இயலாதவராகித் தலைவரான இவ்வடியார் உணவு உண்டருள இங்கு நாம் என்ன செய்தால் முடியும்? என்று ஏங்கியவாறு, விரைவாய் எழுந்து, இறைவரின் அருளாணையின் வழியில் நின்று, மலர்சூடிய கூந்தலையுடைய அம்மையாருடனே, வீட்டின் புறத்தே சென்று, அழைக்கத் தொடங்குகிறார்.

சிறுத்தொண்டர்: கணபதீச்சரப் பெருமானே! இறைவா! உன் திருவருள் வகையினை யாரறிவார்! மாயத்தில் வீழ்ந்து கிடக்கும் பொழுது சிந்தனை குறுகிக் கிடப்பர். எல்லோரையும் எல்லாவற்றையும் தன் தொடர்பு பற்றியே விருப்பு வெறுப்போடு உழல்வர்.

சிவபெருமானே! உன் திருவருளால் எல்லாமும் ஈசனாகிய நீயே உறைவது, உனது அளவிறந்த கருணை வெள்ளத்தில் மாளாத பேரின்பம் அனுபவிப்பதே வாழ்வின் பயன்.

இதனைப் பெரியோர் வாக்கால் தொடர்பால் அறிந்தும் உணர்ந்தும் நின்ற பின்னால் யானார், எனதார், யார் உற்றார், யார் அயலார்?

நீயே யாவையும் ஆகி இவையெல்லாம் கடந்தும் நிற்கின்ற கடவுளாம் தன்மையால் உன்னையே மகிழ்ந்து அன்பினால் இன்புறுதலே அன்றி செய்யத் தக்கது தான் ஒன்றுளதோ? இது உணராதவர் தானே என் மக்கள், என் சுற்றம், என் செல்வம், நான் என்று பேயாய்த் திரிந்து நாயுற்ற செல்வம் போல் இன்பத்தில் நிறைவுறாமல் அயர்ந்து போகின்றார்கள். உன் அடியார் பெருமக்களுக்கு எப்போதும் இன்பமன்றோ! நீ அவர்களைத் தொழிற்படுத்துதலன்றி அவர் செய்வன எல்லாம் உன் பால் அன்பு தானே! அவர்தன் வினையெல்லாம் அந்நிலையில் உனதே அன்றோ?

இங்கு எழுந்தருளியிருக்கும் அடியவர் கூறியபடி இறந்த சீராளனை அழைக்க வருவானோ எனில் அது சிறுமையான அறிவு. எல்லா உலகையும் படைத்த பெருமான் திருவருள் அது எனில் நிச்சயம் வருவான். இதில் என் வினை உன் அருள் வழி நிற்றலே அன்றி வேறு யாதுளது? கணபதீச்சரம் காதல் செய் கண்ணுதலே! உனதருளே வெல்லட்டும்!

சுற்றம் நீ, பிரானும் நீ, தொடர்ந்திலங்கு சோதி நீ, கற்ற நூல் கருத்தும் நீ, அருத்தம் இன்பம் என்றிவை முற்றும் நீ! புகழ்ந்து முன் உரைப்பதென் முகம்மனே! இந்தப் பேரின்பத் தெளிவை அளித்த சிவபெருமானே! எதிர்பலன் நோக்காத கருணை வள்ளலே! உன்னை என்னவென்று போற்றுவேன்!!

சிவ சிவ! இனி அடியார் கூறியபடி சீராளனை அழைப்பேன்!

சிறுத்தொண்டர் : மகனே! வருவாய்!

திருவெண்காட்டு நங்கை : செய்ய மணியே! சீராளா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்பதற்கு அழைக்கின்றார். ஓடி வா!

சிறுத்தொண்டர் : மகனே! சீராளா விரைந்து ஓடி வருவாய்!

திருவெண்காட்டு நங்கை : செய்ய மணியே! சீராளாதேவா! சிவனடியார் உடன் உண்ண அழைக்கின்றார். விரைந்து ஓடி வா!

பின்குரல் : இறைவர் அருளால், அழைக்கும் ஒலிகேட்டுப் பள்ளியினின்றும் ஓடி வருபவனைப் போல எதிரே ஓடிவந்த ஒப்பில்லாத அழகுடன் விளங்கிய, தன் மகனை அம்மையார் எடுத்துத் தழுவிக் கொண்டு, கையால் அணைத்துக் கணவனின் கையில் தர, `முப்புரங்களையும் எரித்த இறைவனின் தொண்டர் உணவு உண்ணப்பெறும் பேற்றைப் பெற்றோம்' என்று மகிழ்ச்சியுடன் விளங்கினார். அங்ஙனம் வந்த மகனை அழைத்துக் கொண்டு இறைவரை உண்ணச் செய்யும்பொருட்டு விரைந்து வந்தவர், அதற்கு முன்னமேயே வயிரவராக வந்த முதல்வர் அவ்விடத்தினின்றும் மறைந்தருள, அவரைக் காணாமல் உள்ளம் கலங்கித் திகைப்படைந்தார்; விழுந்தார்; எழுந்தார், அச்சமுற்றார். வெந்த இறைச்சிக் கறியையும் பரிகலத்தில் காணாதவராய்த் திடுக்கிட்டார்.

சிறுத்தொண்டர் : சிவந்த மேனியும் கரியமுடியும் செழிய போர்வையும் கொண்ட வயிரவர், நாம் உய்யும்படி உணவு உண்ணாமல் எங்கு மறைந்தார்.

பின்குரல் : அப்போது அவ்வயிரவர் தாமே, மலைமகளாரான உமையம்மையா ருடனும் சரவணப் பொய்கையில் வளர்ந்த திருமகனாரான முருகப் பெருமானொடும் அணைவாராகி சிவபூதக் கணத்தலைவரும், முனிவரும், தேவரும், வித்தியாதரரும் முதலாக உள்ளவர்கள் போற்றி செய்ய, இனிய கறியையும் உணவையும் அமைத்த அவர்கள் காணும்படி, நீண்ட விண்வெளியில் ஒப்பில்லாத வெண்மையான விடையின்மீது வெளிப்பட்டு எழுந்தருளிக் குளிர்ந்த வெண்மையான சந்திரனைச் சூடிய திருமுடி அசைய, பரந்த அருள் நோக்கத்தை அருளினார். அன்பின் உறைப்பினால் உலகியல் வழிப்பட்ட உணர்வை வென்ற சிறுத்தொண்டரும், அவர் தம் நெஞ்சொத்த மனைவியாரும், மைந்தரும் தம்முன்பு வெளிப்பட்டுத் தோன்றிய பெருவாழ்வான சிவபெருமானின் காட்சியை முற்றும் கண்டு, தம் வயமிழந்து, அக்காட்சியின் அருள்வயமாய் நின்று, எலும்பும் உள்ளமும் கரைந்து உருக விழுந்தனர்; எழுந்தனர்; போற்றினர். இறைவர் அப்பெருமக்களுக்கேற்ற தகுதிப்பாட்டால் அருள் செய்வாராய் கொன்றை மலரைச் சூடிய சடையை உடைய சிவபெருமானும், அவர்தம் இடமருங்கை இடமாகக் கொண்ட உமை யம்மையாரும், வெற்றி பொருந்திய நீண்ட வேல் ஏந்திய மைந்தரான முருகப் பெருமானும், தம் மணமுடைய தாமரை மலர் போன்ற சேவடிகளின் கீழ் விழுந்து எழுந்து போற்றி நிற்கும் சிறுத்தொண்டரையும் திருவெண்காட்டு நங்கையாரையும் மகனாரான சீராள தேவரையும் சந்தனத் தாதியாரையும் என்றும் தம்மைப் பிரியாமல் வணங்கி மகிழுமாறு, தம் சிவலோகத்துள் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

காட்சி - 8

சுவாமி - அம்பாள் முருகப் பெருமானுடன் சிறுத்தொண்டர் குடும்பத்தினருக்குத் திருக்காட்சிக் கொடுத்து சிவலோகம் அருளல்.

திருச்சிற்றம்பலம்

 

 

 


 

 

Related Content

The Puranam of Siruthonda Nayanar

The history of Sirutonda Nayanar

சிறுத்தொண்ட நாயனார் புராணம்