Thiruvachakam of Manikkavachakar
in Tamil script, Unicode/UTF-8 format)

திருத்தோணோக்கம் - திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)


  15. திருத்தோணோக்கம் - பிரபஞ்ச சுத்தி

  (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

  பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
  பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே
  தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய்
  கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315

  என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
  கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
  குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
  துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316

  பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச்
  செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
  விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
  அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317

  கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால்
  நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி
  நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்
  சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318

  நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
  புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான்
  உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
  பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319

  புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
  தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
  சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
  அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320

  தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
  சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ்
  சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
  பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321

  மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
  வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம்
  ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே
  ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322

  எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
  கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
  எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
  மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323

  பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
  தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே
  சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
  எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324

  காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
  நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்
  சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்
  தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325

  பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால்
  பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
  அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
  பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326

  ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
  பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
  ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
  தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327

  உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
  கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே
  இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
  துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328

  திருச்சிற்றம்பலம்

  Etext of this work (tiruvAcakam) was first released in Mylai, Inaimathi formats in March 1998
  The TSCII version was first put up on Dec 12, 2000
  This unicode version was last revised on 13 sept.2002.
  Please send your comments and corrections to the
  Webmaster(s) of this site

  Index to all thiruvAcagam songs
  Back to ThirumuRai Main Page
  Back to thamizh shaivite literature Page
  Back to Shaiva Sidhdhantha Home Page