சேதிராயர் அருளிய திருவிசைப்பா

பன்னிரு திருமுறைகளில் ஒன்றான
திருவிசைப்பா - சேதிராயர் அருளியது
(ஒன்பதாம் திருமுறை)



9. சேதிராயர் அருளிய திருவிசைப்பா

கோயில் - சேலுலாம்

திருச்சிற்றம்பலம்

279.
சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள்அயன் சார்வதி னால்இவள்
வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று
மால தாகும்என் வாணுதுலே. 1

280.
வாணு தற்கொடி மாலது வாய்மிக
நாணம் அற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணு தற்பொலி தில்லையு ளீர்உமை
காணில் எய்ப்பிலள் காரிகையே. 2

281.
காரி கைக்(கு)அரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
கீரி யல்தில்லை யாய்சிவ னே என்று
வேரி நற்குழலாள் இவள்விம்முமே. 3

282.
விம்மி விம்மியே வெய்துயிர்த்(து) ஆளெனா
உம்மை யேநினைந்(து) ஏத்துமொன்(று) ஆகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே. 4

283.
அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயவுன் கொன்றையுந் தார்அருளாய்எனும்
செயலுற் றூர்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே. 5

284.
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பன்என்(று)
ஓதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்மடக் கொடியையே. 6



285.
கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சீலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே. 7

286.
அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே. 8

287.
அன்ற ருக்கனைப் பல்லிறுத்(து) ஆனையைக்
கொன்று காலனைக் கோளிழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்றும் ஆகிலள் உம்பொருட்டே. 9

288.
ஏயு மா(று)எழில் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம்எய் தியிருப்பரே. 10
திருச்சிற்றம்பலம்



Back to 9th thirumuRai Page
Back to thirumuRai Main Page
Back to Shaiva Sidhdhantha Home Page