|
Home > Shaiva Siddhanta > Thirumurai > 9th ThirumuRai
திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவிசைப்பா - திருவாலியமுதனார் அருளியது
(ஒன்பதாம் திருமுறை)
திருச்சிற்றம்பலம்
215.
மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே. 1
216.
சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே. 2
217.
குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள் திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே. 3
218.
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தடமில்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளிர்வித்ததே. 4
219.
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம் நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும் அணியார் தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்கழி என்உள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே. 5
220.
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே. 6
221.
படங்கொள் பாம்பனை யானொடு பிரமன் பரம்பரா! அருளென்று
தடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே. 7
222.
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே. 8
223.
செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினும்
நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. 9
224.
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே. 10
225.
தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே. 11
திருச்சிற்றம்பலம்
மேலே செல்ல
திருச்சிற்றம்பலம்
226.
பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை
யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. 1
227.
ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன் மலர்க்கணை படுந்தொறும் அலைந்தேனே. 2
228.
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று) அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக் காலனை உயிர்செ வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேலொற்ற வந்தருள் செய்யாயே. 3
229.
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை பொன்பயப் பிப்பது வழக்கமோ?
திரளும் நீள்மணிக் கங்கையைத் திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே. 4
230.
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழந்(து) இன்னமும் துதிக்கின்றார் எழில்மறை அவற்றாவே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே. 5
231.
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைத்து அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே. 6
232.
உடையும் பாய்புலித் தோலும்நல் அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வது மேவிடங் கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று ஆரையும் உள்ளுவது அறியேனே. 7
233.
அறிவும் மிக்கநல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன் என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர் ஏத்தநன் மாநடம் மகிழ்வானே. 8
234.
வான நாடுடை மைந்தனே ! ஓஎன்பன் 'வந்தரு ளாய்' என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்
தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
என் வாமணிப் பூணணி மார்பனே ! எனக்கருள் புரியாயே. 9
235.
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள் பூகரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக் காதலித்(து) இனையவர் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன(து) அடியினை பணிவாரே. 10
திருச்சிற்றம்பலம்
மேலே செல்ல
திருச்சிற்றம்பலம்
236.
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே 1
237.
அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே. 2
238.
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத்திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்(று)
அளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே. 3
239.
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுட் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவங் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே. 4
240.
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்துமுகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத்(து) எழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே. 5
241.
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் பபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே. 6
242.
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா! அருளாய் அணியம் பலவா! என்றென் றவரேத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே. 7
243.
அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அரளென்று
துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணிஎங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே. 8
244.
மாலோ(டு) அயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்(று)
ஆல கண்டா ! அரனே ! அருளாய் என்றென்(று) அவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டுமுடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே. 9
245.
நெடிய சமணும் அறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச்
செடியும் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிகள் அவரை ஆருர் நம்பி அவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே. 10
246.
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத் தானைத்
தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானோர் பாடல் பத்தும் பாடப் பாவ நாசமே. 11
திருச்சிற்றம்பலம்
மேலே செல்ல
திருச்சிற்றம்பலம்
247.
கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே. 1
248.
காண்பதி யான் என்றுகோல் கதிர்மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கு அரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறையோர் மலர்ப் பாதங்களே. 2
249.
கள்ளவிழ் தாமரைமேல் கண்டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்நடுவே உருவாய்ப்பரந் தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒருவனை உணர்வரிதே. 3
250.
அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம் உகந்தான் உம் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய் புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற எம்பிரான்என் இறையவனே. 4
251.
இறையவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே. 5
252.
நினைத்தேன் இனிப்போக்குவனோ? நிமலத் திரளை நினைப்பார்
மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம்
சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே. 6
253.
கூத்தனை வானவர்தம் கொழுந்தைக் கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவருவின் முதலைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்பிரானடி சேர்வன்கொலோ? 7
254.
சேர்வன்கொலோ அன்னையீர் திகழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே. 8
255.
நேசமு டையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண் டிருந்த
காய்சின மால்லிடையூர் கண்ணுதலைக் காமருசீர்த்
தேசமிகு புகழோர் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)
ஈசனை எவ்வுயிர்க்கும் எம்மிறைவன்என்(று) ஏத்துவனே. 9
256.
இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே. 10
திருச்சிற்றம்பலம்
மேலே செல்ல
Back to 9th thirumuRai Page
Back to thirumuRai Main Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|