|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
44 கலிக்கம்ப நாயனார் புராணம்
1. உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத் 4012-1
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய் 4012-2
வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் 4012-3
பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர் 4012-4
2. மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் 4013-1
கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் 4013-2
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு 4013-3
பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார் 4013-4
3. ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய 4014-1
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் 4014-2
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே 4014-3
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் 4014-4
4. அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள் 4015-1
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம் 4015-2
தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை 4015-3
முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் 4015-4
5. திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும் 4016-1
பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும் 4016-2
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 4016-3
விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண் 4016-4
6. முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் 4017-1
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் 4017-2
அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம் 4017-3
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார் 4017-4
7. கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் 4018-1
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் 4018-2
மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் 4018-3
மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார் 4018-4
8. வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை 4019-1
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு 4019-2
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை 4019-3
தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார் 4019-4
9. விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து 4020-1
துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார் 4020-2
அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று 4020-3
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் 4020-4
10. ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா 4021-1
மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி 4021-2
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த 4021-3
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம் 4021-4
This webpage was last updated on 13 July 2004
|
|