|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
41 புகழ்ச்சோழ நாயனார் புராணம்
1. குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி 3942-1
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் 3942-2
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர் 3942-3
உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர் 3942-4
2. அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும் 3943-1
இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க் 3943-2
கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும் 3943-3
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் 3943-4
3. நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த 3944-1
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் 3944-2
மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும் 3944-3
ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம் 3944-4
4. பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் 3945-1
போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும் 3945-2
சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக் 3945-3
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம் 3945-4
5. படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி 3946-1
நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப 3946-2
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் 3946-3
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் 3946-4
6. துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும் 3947-1
விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத 3947-2
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர் 3947-3
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு 3947-4
7. கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை 3948-1
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி 3948-2
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண் 3948-3
பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால் 3948-4
8. அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் 3949-1
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் 3949-2
சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர் 3949-3
பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார் 3949-4
9. ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து 3950-1
பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப 3950-2
திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப 3950-3
அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் 3950-4
10. பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் 3951-1
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக் 3951-2
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி 3951-3
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார் 3951-4
11. அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து 3952-1
கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத் 3952-2
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் 3952-3
மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார் 3952-4
12. வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் 3953-1
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி 3953-2
சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில் 3953-3
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் 3953-4
13. மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன் 3954-1
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த 3954-2
ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம் 3954-3
நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் 3954-4
14. திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி 3955-1
முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர் 3955-2
உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு 3955-3
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் 3955-4
15. சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம் 3956-1
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் 3956-2
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என 3956-3
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார் 3956-4
16. விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும் 3957-1
துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர் 3957-2
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என 3957-3
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார் 3957-4
17. ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக 3958-1
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப 3958-2
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த 3958-3
பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார் 3958-4
18. அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து 3959-1
கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார் 3959-2
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக 3959-3
மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார் 3959-4
19. வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற 3960-1
அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும் 3960-2
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக் 3960-3
கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால் 3960-4
20. கயமொடு கயம் எதிர் குத்தின 3961-1
அயமுடன் அயமுனை முட்டின 3961-2
வயவரும் வயவரும் உற்றனர் 3961-3
வியனமர் வியல் இடம் மிக்கதே 3961-4
21. மலையொடு மலைகள் மலைந்தென 3962-1
அலை மத அருவி கொழிப்பொடு 3962-2
சிலையினர் விசையின் மிசைத் தெரு 3962-3
கொலை மதக் கரிகொலை உற்றவே 3962-4
22. சூறை மாருதம் ஒத்து எதிர் 3963-1
ஏறு பாய் பரி வித்தகர் 3963-2
வேறு வேறு தலைப் பெய்து 3963-3
சீறி ஆவி செகுத்தனர் 3963-4
23. மண்டு போரின் மலைப்பவர் 3964-1
துண்டம் ஆயிட உற்று எதிர் 3964-2
கண்டர் ஆவி கழித்தனர் 3964-3
உண்ட சோறு கழிக்கவே 3964-4
24. வீடினார் உடலில் பொழி 3965-1
நீடுவார் குருதிப் புனல் 3965-2
ஓடும் யாறென ஒத்தது 3965-3
கோடு போல்வ பிணக் குவை 3965-4
25. வானிலாவு கருங்கொடி 3966-1
மேனிலாவு பருந்து இனம் 3966-2
ஏனை நீள் கழுகின் குலம் 3966-3
ஆன ஊணொடு எழுந்தவே 3966-4
26. வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள் 3967-1
சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல் 3967-2
எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல் 3967-3
முரி உற்றன உற்றன மொய்க் களமே 3967-4
27. வடிவேல் அதிகன் படைமாள வரைக் 3968-1
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 3968-2
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் 3968-3
முடி நேரியனார் படை முற்றியதே 3968-4
28. முற்றும் பொரு சேனை முனை தலையில் 3969-1
கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப் 3969-2
பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச் 3969-3
சுற்றும் படை வீரர் துணித்தனரே 3969-4
29. மாறுற்ற விறல் படை வாள் அதிகன் 3970-1
நூறுற்ற பெரும்படை நூழில் படப் 3970-2
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு 3970-3
ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே 3970-4
30. அதிகன் படை போர் பொருதற்றதலை 3971-1
பொதியின் குவை எண்ணில போயின பின் 3971-2
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா 3971-3
எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே 3971-4
31. அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம் 3972-1
இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் 3972-2
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் 3972-3
தரணித் தலைவன் கழல் சார் உறவே 3972-4
32. மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் 3973-1
முன் வந்த கரும் தலை மொய் குவைதான் 3973-2
மின்னும் சுடர் மா முடிவேல் வளவன் 3973-3
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் 3973-4
33. மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் 3974-1
எண்ணில் பெருகும் தலை யாவையினும் 3974-2
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக் 3974-3
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே 3974-4
34. கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது 3975-1
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த 3975-2
திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி 3975-3
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார் 3975-4
35. முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி 3976-1
உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் 3976-2
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான் 3976-3
அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார் 3976-4
36. தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார் 3977-1
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார் 3977-2
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும் 3977-3
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார் 3977-4
37. என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார் 3978-1
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து 3978-2
மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப 3978-3
வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார் 3978-4
38. அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக் 3979-1
கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார் 3979-2
செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப் 3979-3
பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார் 3979-4
39. கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி 3980-1
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார் 3980-2
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி 3980-3
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் 3980-4
40. புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய 3981-1
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப 3981-2
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் 3981-3
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் 3981-4
41. முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் 3982-1
பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப் 3982-2
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி 3982-3
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 3982-4
This webpage was last updated on 13 July 2004
|
|