|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்
1. மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப் 3748-1
பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான் 3748-2
சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக் 3748-3
கோவீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர் 3748-4
2. காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி 3749-1
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலி 3749-2
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி 3749-3
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் 3749-4
3. மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன 3750-1
பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன 3750-2
தக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவன 3750-3
தொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன 3750-4
4. வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற 3751-1
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் 3751-2
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் 3751-3
கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில். 3751-4
5. முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின் 3752-1
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத் 3752-2
திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய் 3752-3
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையர் 3752-4
6. திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் 3753-1
வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி 3753-2
தருமா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப் 3753-3
பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால் 3753-4
7. மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் 3754-1
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய் 3754-2
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் 3754-3
தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார் 3754-4
8. உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் 3755-1
புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி 3755-2
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து 3755-3
மலரும் முகையும் கொணர்ந்து மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து 3755-4
9. திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு 3756-1
வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் 3756-2
பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும் 3756-3
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள் 3756-4
10. நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ் 3757-1
சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும் 3757-2
காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த் 3757-3
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான் 3757-4
11. வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் 3758-1
சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி 3758-2
முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக 3758-3
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார் 3758-4
12. எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச் 3759-1
செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு 3759-2
மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப் 3759-3
பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண் 3759-4
13. இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் 3760-1
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் 3760-2
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு 3760-3
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் 3760-4
14. மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் 3761-1
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத் 3761-2
தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம் 3761-3
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார் 3761-4
15. ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம்
போந்து அரசு அளித்தல் 3762-1
ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே 3762-2
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் 3762-3
மான அமைச்சர் தாள் பணிந்து அவ் விணைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் 3762-4
16. உரிமை நாளில் ஒரை நலன் எய்த மிக்க உபகரணம் 3763-1
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து 3763-2
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் 3763-3
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம் 3763-4
17. தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து 3764-1
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும் 3764-2
நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார் 3764-3
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார் 3764-4
18. மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் 3765-1
உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே 3765-2
இழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து 3765-3
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார் 3765-4
19. சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி 3766-1
யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச் 3766-2
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் 3766-3
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் 3766-4
20. மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் 3767-1
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி 3767-2
மின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு 3767-3
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய 3767-4
21. யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண் 3768-1
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப் 3768-2
பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி 3768-3
மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார் 3768-4
22. உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட 3769-1
நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி 3769-2
அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து 3769-3
மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார் 3769-4
23. நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் 3770-1
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள் 3770-2
ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம் 3770-3
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள் 3770-4
24. வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம் 3771-1
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் 3771-2
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் 3771-3
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொன் பார் சிலம்பின் ஒலி அளித்தார் 3771-4
25. நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் 3772-1
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் 3772-2
செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி 3772-3
உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் 3772-4
26. இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு 3773-1
மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால் 3773-2
பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு 3773-3
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார் 3773-4
27. இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும் 3774-1
பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் பட்டு ஆடை 3774-2
விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித் 3774-3
தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று 3774-4
28. அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே 3775-1
எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று 3775-2
மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக் 3775-3
கதிர் ஒளி விரிந்த தோட்டு திருமுகம் கொடுத்தார் காண 3775-4
29. சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார் 3776-1
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித் 3776-2
துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடி 3776-3
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் 3776-4
30. கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால் 3777-1
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி 3777-2
ஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் 3777-3
பாட்டின் தலைமைப் பணனார் பாதம் பலகால் பணிகின்றார் 3777-4
31. அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது
என்ன அவர் தாமும் 3778-1
கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார் 3778-2
முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர் 3778-3
பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் 3778-4
32. பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்க 3779-1
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி 3779-2
விரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம் 3779-3
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார் 3779-4
33. தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப் 3780-1
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் 3780-2
அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத் 3780-3
தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என 3780-4
34. சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள் 3781-1
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் 3781-2
சீர் கொள் நிதியும் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல் 3781-3
பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள் 3781-4
35. பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு 3782-1
நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும் 3782-2
உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் 3782-3
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் 3782-4
36. பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் 3783-1
காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப் 3783-2
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை 3783-3
அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச 3783-4
37. இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் 3784-1
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே 3784-2
உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் 3784-3
பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் 3784-4
38. பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் 3785-1
கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய 3785-2
நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு 3785-3
திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர் 3785-4
39. வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக் 3786-1
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் 3786-2
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி 3786-3
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார் 3786-4
40. அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் 3787-1
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக் 3787-2
களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம் 3787-3
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் 3787-4
41. வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டுத் 3788-1
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் 3788-2
தேன் அக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் 3788-3
மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி 3788-4
42. பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொரும் 3789-1
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று 3789-2
தேகின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட 3789-3
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் 3789-4
43. ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர் 3790-1
கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து 3790-2
நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன் 3790-3
தேடற்கு அரியாய் திருஅருள் திரு அருள் முன் செய்யது
ஒழிந்தது என் என்றார் 3790-4
44. என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால் 3791-1
மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் 3791-2
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் 3791-3
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் 3791-4
45. என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று 3792-1
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி 3792-2
தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பான் என விரும்பி 3792-3
நல் நீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார் 3792-4
46. பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும்
அமைச்சர்க்கு அ·து இயம்பி 3793-1
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற 3793-2
மின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் 3793-3
அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் 3793-4
47. இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து 3794-1
மட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய் 3794-2
பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம் 3794-3
தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் 3794-4
48. யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன 3795-1
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற 3795-2
சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த 3795-3
கானம் அடைய உடன் படர்வன போலும் காட்சி மேவினதால் 3795-4
49. புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவன 3796-1
அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல் 3796-2
விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாக 3796-3
நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால் 3796-4
50. அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு
எல்லாம் விடை அருளி 3797-1
மினார் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு 3797-2
கொனார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி 3797-3
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர்
நாட்டு இடைப் போவார் 3797-4
51. சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக் 3798-1
குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத் 3798-2
துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து 3798-3
வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார் 3798-4
52. பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர் 3799-1
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித் 3799-2
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற 3799-3
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் 3799-4
53. வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் 3800-1
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச் 3800-2
சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச் 3800-3
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் 3800-4
54. நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர்
நிலத்து இறைஞ்சி 3801-1
மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மாளிகை வலம் கொண்டு 3801-2
உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் 3801-3
அலகில் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் 3801-4
55. அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட 3802-1
உளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார் 3802-2
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து 3802-3
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் 3802-4
56. ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் 3803-1
சீரார் வண்ணப் பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப் 3803-2
பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும் 3803-3
காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம் 3803-4
57. தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ் சொல் மாலை கேட்பிக்க 3804-1
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச் 3804-2
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் 3804-3
இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார் 3804-4
58. ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம் 3805-1
கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார் 3805-2
நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து 3805-3
மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார் 3805-4
59. பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள் 3806-1
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை 3806-2
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ் 3806-3
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில் 3806-4
60. ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்ந்த படி தமக்குக் 3807-1
கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை 3807-2
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல் 3807-3
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் 3807-4
61. அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப் 3808-1
பிறவி இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்று 3808-2
செறியும் ஞானப் போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி 3808-3
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் 3808-4
62. வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச் 3809-1
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி 3809-2
வழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக் 3809-3
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார் 3809-4
63. நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி 3810-1
அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா 3810-2
பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் 3810-3
தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார் 3810-4
64. வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவரூர் எய்த 3811-1
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச் 3811-2
சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடந்தார் சேரலனார் 3811-3
சந்தம் விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் 3811-4
65. முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே 3812-1
அன்பு பெருகத் தழுவ விரைந்து ஆர்வத்தொடு தழுவ 3812-2
இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதவர் போல் 3812-3
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் 3812-4
66. ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்த 3813-1
மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த 3813-2
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும் 3813-3
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால் 3813-4
67. ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து 3814-1
மருவ இனியார் பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் 3814-2
பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத் 3814-3
தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேரமான் தோழர் 3814-4
68. சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டு 3815-1
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக 3815-2
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே 3815-3
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் 3815-4
69. தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கி 3816-1
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவை 3816-2
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார் 3816-3
தாவில் பெருமைச் சேரல் அனார் தம்பிரானார் தாம் கொண்டார் 3816-4
70. அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர் 3817-1
நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார் 3817-2
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் 3817-3
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார் 3817-4
71. சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொன் கால் அமளி 3818-1
மீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக் 3818-2
கோதில் குணத்துப் பரவையார் கொழுநர்க்கும் தோழர்க்கும் 3818-3
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் 3818-4
72. தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுது 3819-1
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும் 3819-2
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும் 3819-3
ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின்
விருந்து அமைத்தார் 3819-4
73. அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாக 3820-1
விரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின் 3820-2
புரசைக் களிற்றுச் சேரலன் ஆர் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப் 3820-3
பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார் 3820-4
74. சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால் 3821-1
தாரின் மலிபூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி எனப் 3821-2
பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள் 3821-3
ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியாய் ஏற்றுதலும் 3821-4
75. ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள 3822-1
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும் 3822-2
நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள 3822-3
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் 3822-4
76. ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்துப் பரவையார் 3823-1
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் 3823-2
தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத் 3823-3
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார் 3823-4
77. பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவை 3824-1
வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும் 3824-2
புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார் 3824-3
இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் 3824-4
78. ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித் 3825-1
தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்து 3825-2
மேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின் 3825-3
சேய நீர்மை அடைந்தார் ஆய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் 3825-4
79. மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக் 3826-1
கலை நாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார் 3826-2
சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கை 3826-3
அலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் 3826-4
80. செல்வத் திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த 3827-1
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை 3827-2
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து 3827-3
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் 3827-4
81. இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர் 3828-1
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச் 3828-2
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான 3828-3
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் 3828-4
82. சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும் 3829-1
வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த 3829-2
வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச் 3829-3
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார் 3829-4
83. இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் 3830-1
ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி 3830-2
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள் 3830-3
பொருவில் பண்டாரங் கொண்டு போதுவார்கள் உடன் போத 3830-4
84. சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக் 3831-1
காவில் பயிலும் புறம்பு அணையைக் கடந்து போந்து கீழ்வேளூர் 3831-2
மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல் 3831-3
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் 3831-4
85. திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை 3832-1
உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய் 3832-2
பெருக்கார் உலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி 3832-3
அருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் 3832-4
86. முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி 3833-1
செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும் 3833-2
அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து 3833-3
நன்னீர் பொழியும் விழியினர் ஆய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி 3833-4
87. நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை 3834-1
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும் 3834-2
அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர் 3834-3
சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார் 3834-4
88. எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள் 3835-1
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு 3835-2
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக் 3835-3
கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார் 3835-4
89. கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் 3836-1
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் 3836-2
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப் 3836-3
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார் 3836-4
90. அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் 3837-1
தங்கும் இடங்கள் வணங்கிப் போய் பாண்டி நாடுதனைச் சார்ந்து 3837-2
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் 3837-3
மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் 3837-4
91. சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண் 3838-1
ஆரமார் மார்பரை ஆலவாயினில் வணங்க 3838-2
வாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல் 3838-3
கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார் 3838-4
92. தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே 3839-1
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் 3839-2
அன்னவர்கள் உடன் கூட அனைய அவரும் கூடி 3839-3
மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார் 3839-4
93. திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம் 3840-1
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு 3840-2
தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் 3840-3
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் 3840-4
94. படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து 3841-1
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை 3841-2
முடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக் 3841-3
கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார் 3841-4
95. செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன் 3842-1
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் 3842-2
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் 3842-3
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் 3842-4
96. உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் 3843-1
கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி 3843-2
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு 3843-3
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் 3843-4
97. அந் நாளில் மதுரை நகர் மருங்கரனார் அமர் பதிகள் 3844-1
பொன்னாரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச் 3844-2
செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச் 3844-3
சொன்மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்தை அணைந்தார் 3844-4
98. நீடு திருப் பூவணத்துக் அணித்தாக நேர் செல்ல 3845-1
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத் 3845-2
தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப் 3845-3
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் 3845-4
99. சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான் மகிழ் கோயில் 3846-1
முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து 3846-2
நின்று பரவிப்பாடி நேர் நீக்கி உடன் பணிந்த 3846-3
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் 3846-4
100. அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில நாளில் ஆரூரர் 3847-1
முப்பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி 3847-2
மெய்ப் பரிவில் திருவால வாயுடையார் விரை மலர்த்தாள் 3847-3
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் 3847-4
101. செஞ்சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம் 3848-1
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே 3848-2
எஞ்சலிலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து 3848-3
மஞ்சணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் 3848-4
102. பரமர் திருப்பரம் குன்றில் சென்று பார்த்திபர் ஓடும் 3849-1
புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச் 3849-2
சிரமலிமாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும் 3849-3
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் 3849-4
103. கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை 3850-1
மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே 3850-2
ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி 3850-3
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில் 3850-4
104. இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து 3851-1
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி 3851-2
மறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார் 3851-3
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் 3851-4
105. அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை 3852-1
நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள 3852-2
மின்னாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார் 3852-3
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார் 3852-4
106. இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதற் பின் எழுந்து அருளும் 3853-1
பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர் 3853-2
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல் 3853-3
குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் 3853-4
107. குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கிச் 3854-1
சொல்தாம மலர் புனைந்து குறும் பலாத் தொழுது இப்பால் 3854-2
முற்றா வெண்மதி முடியார் பதிபணிந்து மூவெயில்கள் 3854-3
செற்றார் மன்னிய செல்வத் திருநெல் வேலியை அணைந்தார் 3854-4
108. நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி நிகழ் 3855-1
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் 3855-2
வில்வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின் 3855-3
செல் வேத முதல்வரமர் திரு இராமேச்சரத்து 3855-4
109. மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப் 3856-1
பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்த 3856-2
சென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்த 3856-3
சொல்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார் 3856-4
110. திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க் கொழுந்தைப் 3857-1
பரிவினால் தொழுது அகன்று பரமர் பிற பணிந்து 3857-2
பெருவிமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் 3857-3
மருவினார் வன்தொண்டர் மலை வேந்தருடன் கூட 3857-4
111. திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக் 3858-1
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின் 3858-2
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப் 3858-3
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் 3858-4
112. அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில் 3859-1
கங்குல் இடைக் கனவின் கண் காளையாந் திருவடிவால் 3859-2
செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் உடன் 3859-3
எங்கும் இலாத் திருவேடம் என்புருக முன்காட்டி 3859-4
113. கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறி கங்கை எனும் 3860-1
வானப் பேராறும் உலவும் மா முடியார் தாம் அகல 3860-2
ஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் 3860-3
ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் 3860-4
114. கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப் 3861-1
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய் 3861-2
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் 3861-3
தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார் 3861-4
115. காளையார் தமைக் கண்டு தொழப் பெறுவது என் என்று 3862-1
தாளை நாளும் பரவத் தருவார் பால் சார்கின்றார் 3862-2
ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலே 3862-3
வாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வள நாடார் 3862-4
116. மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்தி 3863-1
சென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டு 3863-2
முன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து 3863-3
பன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார் 3863-4
117. ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச் 3864-1
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக் 3864-2
காராரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார் 3864-3
போரானேற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில் 3864-4
118. புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு 3865-1
மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே 3865-2
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில் 3865-3
சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார் 3865-4
119. திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் 3866-1
விருப்புடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் 3866-2
பொருப்பினொடு கானகன்று புனல் பொன்னி நாடு அணைந்து 3866-3
பருப்பத வார் சிலையார் தம் பாம்பு அணிமா நகர் தன்னில் 3866-4
120. பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் 3867-1
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன் 3867-2
சூதாரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவு 3867-3
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் 3867-4
121. திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர் உடன் 3868-1
வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத் 3868-2
தரும் காதலுடன் வணங்கித் தம் பெருமான் கோயிலினுள் 3868-3
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெறப் புகுந்தார் 3868-4
122. வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டு 3869-1
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி 3869-2
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் 3869-3
பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் 3869-4
123. பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த 3870-1
விரவு பேர் அலங்கார விழுச் செல்வம் மிகப் பெருக 3870-2
வரவு எதிர் கொண்டு அடிவணங்க வன் தொண்டர் மலைநாட்டுப் 3870-3
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் 3870-4
124. பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்தி 3871-1
விரவிய போனகங்கறிகள் விதம் பலவாகச் சமைத்துப் 3871-2
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத் 3871-3
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் 3871-4
125. மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து 3872-1
தங்கி இனிது அமர் கின்றார் தம்பிரான் கோயிலினுள் 3872-2
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து 3872-3
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் 3872-4
126. நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி 3873-1
விலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல் கண்டு அருளி வென்றி பெற 3873-2
மலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளி 3873-3
அலைக்கும் அறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் 3873-4
127. விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்லக் 3874-1
கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டுப் 3874-2
பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணை 3874-3
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்து அருள 3874-4
128. நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்து அருளத் 3875-1
திங்கள் முடியார் திரு அருளைப் பரவிச் சேரமான் பெருமாள் 3875-2
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளிப் 3875-3
பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில் 3875-4
129. தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய 3876-1
நம்பி ஆருரரும் சேரர் நன்னாட்டு அரசனார் ஆய 3876-2
பைம் பொன் மணி நீள் முடிக் கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் 3876-3
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார் 3876-4
130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4
131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4
132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4
133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிறுத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4
134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4
135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4
136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4
137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4
138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் 3885-4
139. அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித் 3886-1
தங்கள் பெருமான் திரு அருளால் தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித் 3886-2
பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத் 3886-3
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியதால் 3886-4
140. ஆய செயலின் அதிசயத்தைக் கண்ட கரையில் ஐயாறு 3887-1
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த் 3887-2
தூய மதிவாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச் 3887-3
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரர் உடன் 3887-4
141. கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லையுற 3888-1
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் 3888-2
அங்கண் உடனே அணை எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால் 3888-3
எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் 3888-4
142. பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள் 3889-1
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார் 3889-2
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன 3889-3
வீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ 3889-4
143. திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம் 3890-1
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் 3890-2
மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு 3890-3
அசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார் 3890-4
144. கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து 3891-1
தொடுங்கோபுரங்கள் மாளிகைகள் குளிர் குளிர் சாலைகள் தெற்றி 3891-2
நெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணித் தாமம் கமுக 3891-3
விடுங்கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து 3891-4
145. நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண்ணில் அரங்கு தொறும் 3892-1
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் 3892-2
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக் களத்து 3892-3
நிகரில் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் 3892-4
146. இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு 3893-1
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர் 3893-2
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப் 3893-3
பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார் 3893-4
147. தொழுது தினைத்துப் புறம் போந்து தோன்றப் பண்ணும் பிடிமேற்பார் 3894-1
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றிப் பின்பு தாம் ஏறிப் 3894-2
பழுதில் மணிச் சாமரை வீசிப் பைம்பொன் மணி மாளிகையில் வரும் 3894-3
பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார் 3894-4
148. நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் 3895-1
எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம் இவரைத் தொழ என்பார் 3895-2
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் 3895-3
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலைப் பாரீர் எனத் தொழுவார் 3895-4
149. பூவும் பொரியும் பொன் துகளும் பணிவார் பொருவில் இவர் 3896-1
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார் 3896-2
பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையின் 3896-3
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் 3896-4
150. கழறிற்றறியுந் திருவடியும் கலை நாவலர் தம் பெருமானாம் 3897-1
முழவில் பொலியும் திரு நெடுந்தோள் முனைவர் தம்மை உடன் கொண்டு 3897-2
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை 3897-3
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று 3897-4
151. செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த 3898-1
அம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர் 3898-2
தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்து 3898-3
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என 3898-4
152. பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெரும் தகையார் 3899-1
திருமா நெடுந்தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் 3899-2
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன்பின் 3899-3
ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் 3899-4
153. சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி 3900-1
ஆரம் நறுமென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண் 3900-2
ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதலாயின வருக்கம் 3900-3
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிகத் தமக்கு ஆக்கி 3900-4
154. பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில் 3901-1
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழ 3901-2
மாடு விரைப்பூந்தருமணஞ்செய் ஆராமங்கள் வைகுவித்துக் 3901-3
கூட முனைப் பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் 3901-4
155. செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும் 3902-1
வண்டாடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் 3902-2
தண்டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர் 3902-3
கண்டாரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள் 3902-4
156. நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும் 3903-1
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய் 3903-2
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் 3903-3
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார் 3903-4
157. திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்று 3904-1
மரு ஆர்வத் தொண்டர் உடன் வழி கொண்டு செல்பொழுதில் 3904-2
ஒருவா நண் புள்ளுருக உடன் எழுந்து கை தொழுது 3904-3
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் 3904-4
158. வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் 3905-1
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன 3905-2
ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து 3905-3
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் 3905-4
159. ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் 3906-1
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர் 3906-2
தேரூரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள 3906-3
நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் 3906-4
160. மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார் 3907-1
என்னுயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை 3907-2
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் 3907-3
இன்னருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச 3907-4
161. மற்றவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்து 3908-1
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன்புகுந்த 3908-2
நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன வெலாம் 3908-3
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என 3908-4
162. ஆங்கவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் 3909-1
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம் 3909-2
ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்பத் 3909-3
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டு அணைந்தார் 3909-4
163. மற்றவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் 3910-1
முற்படவே செலவு இட்டு முனைப்பாடித் திருநாடார் 3910-2
பொற் பதங்கள் பணிந்து அவரைத் தொழுது எடுத்துப் புணை அலங்கல் 3910-3
வெற்புயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர் 3910-4
164. ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று 3911-1
காரூரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும் 3911-2
நீரூரும் கான் யாரும் நெடும் கானும் பலகழிய 3911-3
சீரூரும் திருமுருன் பூண்டி வழிச்செல்கின்றார் 3911-4
165. திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண் 3912-1
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால் 3912-2
ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப் 3912-3
பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம் 3912-4
166. வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று 3913-1
வன்தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள 3913-2
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச் 3913-3
சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து 3913-4
167. வில் வாங்கி அலகம்பு விசை நாணில் சந்தித்துக் 3914-1
கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி 3914-2
எல்லையில் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி 3914-3
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் 3914-4
168. ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் சென்று அணையாதே 3915-1
நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர் 3915-2
சேரூராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப் 3915-3
போரூரு மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார் 3915-4
169. அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுது 3916-1
மங்குலுற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப் 3916-2
பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதி 3916-3
திங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார் 3916-4
170. உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம் 3917-1
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார் 3917-2
வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு 3917-3
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம் 3917-4
171. பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால் 3918-1
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண்ணெருங்க 3918-2
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி 3918-3
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக் கொண்டார் 3918-4
172. கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவி 3919-1
மைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அன்று 3919-2
மெய்க் கொண்ட காலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் 3919-3
செய்க் கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் 3919-4
173. நாவலர் மன்னவர் அருளால் விடை கொண்ட நரபதியார் 3920-1
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர் தமை நினைந்து 3920-2
மாவலரும் சோலை மா கோதையினில் மன்னிமலைப் 3920-3
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் 3920-4
174. இந் நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன்தொண்டர் 3921-1
பொன்னி வளநாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து 3921-2
மன்னு திருக் கயிலை யினில் மத வரைமேல் எழுந்து அருள 3921-3
முன்னர் வயப்பரி உகைக்கும் திருத்தொழில் பின்மொழிகின்றாம் 3921-4
175. மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா கடல் போல் 3922-1
சிலை மலிந்த கொடித் தானைச் சேரலனார் கழல் போற்றி 3922-2
நிலை மலிந்த மணிமாடம் நீள் மறுகு நான் மறை சூழ் 3922-3
கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம் 3922-4
This webpage was last updated on 13 July 2004
|
|