|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
33 சோமாசி மாற நாயனார் புராணம்
1. சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை 3630-1
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் 3630-2
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் 3630-3
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் 3630-4
2. யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் 3631-1
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன 3631-2
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால் 3631-3
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார் 3631-4
3. எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் 3632-1
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார் 3632-2
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை 3632-3
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார் 3632-4
4. சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி 3633-1
ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால் 3633-2
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப் 3633-3
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் 3633-4
5. துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் 3634-1
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே 3634-2
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப 3634-3
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார் 3634-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர் 3635-1
துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை 3635-2
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க 3635-3
அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே 3635-4
திருச்சிற்றம்பலம்
வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
|
|