|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
30 திருமூல நாயனார் புராணம்
1. அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில் 3564-1
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி 3564-2
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் 3564-3
நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர் 3564-4
2. மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார் 3565-1
கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால் 3565-2
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு 3565-3
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் 3565-4
3. மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர் 3566-1
பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் 3566-2
துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை 3566-3
அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார் 3566-4
4. கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும் 3567-1
அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி 3567-2
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி 3567-3
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் 3567-4
5. நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி 3568-1
ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித் 3568-2
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து 3568-3
மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் 3568-4
6. நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க் 3569-1
கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர் 3569-2
அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப் 3569-3
பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார் 3569-4
7. எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் 3570-1
செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து 3570-2
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை 3570-3
அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் 3570-4
8. தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய் 3571-1
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே 3571-2
விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே 3571-3
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் 3571-4
9. காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி 3572-1
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து 3572-2
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து 3572-3
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் 3572-4
10. அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து 3573-1
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் 3573-2
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள் 3573-3
பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார் 3573-4
11. அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி 3574-1
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான் 3574-2
வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை 3574-3
வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான் 3574-4
12. மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து 3575-1
சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக 3575-2
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ 3575-3
உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் 3575-4
13. இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று 3576-1
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும் 3576-2
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற 3576-3
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார் 3576-4
14. பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம் 3577-1
நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து 3577-2
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் 3577-3
நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால் 3577-4
15. ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய் 3578-1
மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம் 3578-2
காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப் 3578-3
பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார் 3578-4
16. வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச் 3579-1
சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் 3579-2
பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி 3579-3
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார் 3579-4
17. போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார் 3580-1
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று 3580-2
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் 3580-3
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார் 3580-4
18. அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் 3581-1
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர 3581-2
இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப் 3581-3
பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார் 3581-4
19. இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் 3582-1
சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள் 3582-2
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப 3582-3
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் 3582-4
20. பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று 3583-1
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் 3583-2
வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார் 3583-3
இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார் 3583-4
21. பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல் 3584-1
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் 3584-2
சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி 3584-3
மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார் 3584-4
22. இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் 3585-1
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த 3585-2
முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் 3585-3
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் 3585-4
23. தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை 3586-1
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் 3586-2
கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க 3586-3
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் 3586-4
24. சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை 3587-1
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் 3587-2
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச் 3587-3
செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார் 3587-4
25. ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி 3588-1
மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் 3588-2
தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று 3588-3
பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார் 3588-4
26. ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய 3589-1
ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை 3589-2
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம் 3589-3
ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து 3589-4
27. முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி 3590-1
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து 3590-2
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை 3590-3
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் 3590-4
28. நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம் 3591-1
மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி 3591-2
அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட 3591-3
தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம் 3591-4
This webpage was last updated on 13 July 2004
|
|