|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
5 திருநின்ற சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
5 திருநின்ற சருக்கம்
26 திருநீலநக்க நாயனார் புராணம்
1. பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும் 1828-1
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச் 1828-2
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் 1828-3
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு 1828-4
2. நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார் 1829-1
மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி 1829-2
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் 1829-3
பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை 1829-4
3. ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில் 1830-1
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர் 1830-2
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை 1830-3
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் 1830-4
4. சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர் 1831-1
ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார் 1831-2
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் 1831-3
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் 1831-4
5. வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி 1832-1
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து 1832-2
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே 1832-3
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் 1832-4
6. மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை 1833-1
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே 1833-2
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா 1833-3
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார் 1833-4
7. ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் 1834-1
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத் 1834-2
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த 1834-3
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 1834-4
8. உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற 1835-1
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன 1835-2
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட 1835-3
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர் 1835-4
9. அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் 1836-1
துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி 1836-2
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த 1836-3
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் 1836-4
10. நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் 1837-1
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித் 1837-2
தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி 1837-3
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் 1837-4
11. தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம் 1838-1
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை 1838-2
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச் 1838-3
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி 1838-4
12. விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று 1839-1
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி 1839-2
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப் 1839-3
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக 1839-4
13. பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம் 1840-1
சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண் 1840-2
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச் 1840-3
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார் 1840-4
14. மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் 1841-1
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில் 1841-2
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் 1841-3
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார் 1841-4
15. மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி 1842-1
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர 1842-2
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய் 1842-3
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார் 1842-4
16. மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான் 1843-1
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க 1843-2
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக் 1843-3
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார் 1843-4
17. அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் 1844-1
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் 1844-2
செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு 1844-3
பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார் 1844-4
18. பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில் 1845-1
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி 1845-2
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக் 1845-3
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள 1845-4
19. கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக் 1846-1
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத் 1846-2
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் 1846-3
அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார் 1846-4
20. போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே 1847-1
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம் 1847-2
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி 1847-3
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் 1847-4
21. பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த 1848-1
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி 1848-2
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு 1848-3
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார் 1848-4
22. அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்¢ல் 1849-1
மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை 1849-2
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் 1849-3
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் 1849-4
23. பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ 1850-1
மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள் 1850-2
விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார் 1850-3
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார் 1850-4
24. நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர் 1851-1
தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர் 1851-2
கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் 1851-3
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர் 1851-4
25. கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து 1852-1
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் 1852-2
நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து 1852-3
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார் 1852-4
26. சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம் 1853-1
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு 1853-2
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் 1853-3
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார் 1853-4
27. பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க 1854-1
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப 1854-2
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி 1854-3
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார் 1854-4
28. அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக் 1855-1
குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில் 1855-2
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும் 1855-3
தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார் 1855-4
29. சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி 1856-1
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் 1856-2
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது 1856-3
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் 1856-4
30. நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு 1857-1
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன 1857-2
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச் 1857-3
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் 1857-4
31. ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று 1858-1
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர 1858-2
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர் 1858-3
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார் 1858-4
32. கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் 1859-1
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த 1859-2
திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே 1859-3
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார் 1859-4
33. பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி 1860-1
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி 1860-2
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும் 1860-3
புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார் 1860-4
34. பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு 1861-1
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும் 1861-2
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை 1861-3
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் 1861-4
35. மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும் 1862-1
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச் 1862-2
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர் 1862-3
பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் 1862-4
36. சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும் 1863-1
நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி 1863-2
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் 1863-3
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர் 1863-4
37. பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க 1864-1
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி 1864-2
ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே 1864-3
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் 1864-4
38. தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில் 1865-1
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி 1865-2
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால் 1865-3
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம் 1865-4
This webpage was last updated on 16 May 2004
|
|