|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
5 திருநின்ற சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
5 திருநின்ற சருக்கம்
25 அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
1. தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் 1783-1
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார் 1783-2
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே 1783-3
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார் 1783-4
2. களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் 1784-1
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள 1784-2
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் 1784-3
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் 1784-4
3. வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் 1785-1
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால் 1785-2
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள 1785-3
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 1785-4
4. பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின் 1786-1
திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர் 1786-2
ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் 1786-3
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் 1786-4
5. அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார் 1787-1
உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக் 1787-2
குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் 1787-3
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார் 1787-4
6. வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப் 1788-1
பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச் 1788-2
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர் 1788-3
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார் 1788-4
7. இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு 1789-1
அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் 1789-2
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார் 1789-3
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் 1789-4
8. என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று 1790-1
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத் 1790-2
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண் 1790-3
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் 1790-4
9. அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார் 1791-1
தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த 1791-2
திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் 1791-3
நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார் 1791-4
10. கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம் 1792-1
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் 1792-2
முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி 1792-3
வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் 1792-4
11. ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி 1793-1
வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் 1793-2
தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை 1793-3
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார் 1793-4
12. ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த 1794-1
ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே 1794-2
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல் 1794-3
கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார் 1794-4
13. நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் 1795-1
நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன் 1795-2
ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே 1795-3
வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் 1795-4
14. நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே 1796-1
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச் 1796-2
செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத 1796-3
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி 1796-4
15. பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை 1797-1
அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே 1797-2
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் 1797-3
எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார் 1797-4
16. திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர் 1798-1
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற 1798-2
அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த 1798-3
தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார் 1798-4
17. அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம் 1799-1
கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய 1799-2
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத் 1799-3
தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார் 1799-4
18. மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள 1800-1
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர் 1800-2
முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி 1800-3
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் 1800-4
19. மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே 1801-1
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் 1801-2
ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப் 1801-3
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார் 1801-4
20. மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் 1802-1
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன் 1802-2
முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் 1802-3
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் 1802-4
21. ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன் 1803-1
வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத் 1803-2
தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும் 1803-3
நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் 1803-4
22. செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி 1804-1
எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று 1804-2
மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே 1804-3
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் 1804-4
23. தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி 1805-1
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள் 1805-2
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை 1805-3
மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார் 1805-4
24. நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று 1806-1
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை 1806-2
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று 1806-3
அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே 1806-4
25. கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற 1807-1
பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும் 1807-2
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக் 1807-3
கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் 1807-4
26. பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த 1808-1
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் 1808-2
அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று 1808-3
திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான் 1808-4
27. எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம் 1809-1
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து 1809-2
விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான் 1809-3
பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான் 1809-4
28. தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும் 1810-1
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி 1810-2
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று 1810-3
துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார் 1810-4
29. பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப் 1811-1
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே 1811-2
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று 1811-3
விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார் 1811-4
30. கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே 1812-1
அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப் 1812-2
படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் 1812-3
குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு 1812-4
31. அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் 1813-1
திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர் 1813-2
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் 1813-3
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் 1813-4
32. ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக் 1814-1
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே 1814-2
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை 1814-3
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் 1814-4
33. அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் 1815-1
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி 1815-2
இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான்
இதற்கு ஒன்று உண்டால் 1815-3
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி 1815-4
34. பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ 1816-1
வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை 1816-2
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து 1816-3
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே 1816-4
35. நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் 1817-1
யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே 1817-2
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் 1817-3
பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார் 1817-4
36. தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் 1818-1
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று 1818-2
சேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய 1818-3
பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே 1818-4
37. பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின் 1819-1
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள் 1819-2
அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச் 1819-3
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் 1819-4
38. ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட 1820-1
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற 1820-2
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும் 1820-3
தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார் 1820-4
39. புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் 1821-1
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி 1821-2
நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் 1821-3
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார் 1821-4
40. திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும் 1822-1
பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி 1822-2
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன 1822-3
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் 1822-4
41. மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச் 1823-1
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக் 1823-2
கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் 1823-3
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே 1823-4
42. மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து 1824-1
காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை 1824-2
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் 1824-3
நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார் 1824-4
43. அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற 1825-1
மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த 1825-2
இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும் 1825-3
செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் 1825-4
44. இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும் 1826-1
அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் 1826-2
செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும் 1826-3
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே 1826-4
45. மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற 1827-1
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப் 1827-2
கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை 1827-3
நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன் 1827-4
This webpage was last updated on 16 May 2004
|
|