|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
5 திருநின்ற சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
5 திருநின்ற சருக்கம்
24 காரைக்கால் அம்மையார் புராணம்
1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் 1717-1
ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி 1717-2
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் 1717-3
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால் 1717-4
2. வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர் 1718-1
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால் 1718-2
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து 1718-3
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார் 1718-4
3. வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின் 1719-1
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே 1719-2
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத் 1719-3
தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் 1719-4
4. பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம் 1720-1
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய 1720-2
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால் 1720-3
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் 1720-4
5. வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை 1721-1
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று 1721-2
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள் 1721-3
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார் 1721-4
6. நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1722-1
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால் 1722-2
இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் 1722-3
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார் 1722-4
7. நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண் 1723-1
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத் 1723-2
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச 1723-3
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் 1723-4
8. வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து 1724-1
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த 1724-2
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு 1724-3
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் 1724-4
9. மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து
செலவு இடச் சென்று 1725-1
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப் 1725-2
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும் 1725-3
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான் 1725-4
10. மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் 1726-1
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே 1726-2
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி 1726-3
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் 1726-4
11. அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து 1727-1
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத் 1727-2
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக் 1727-3
களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள் 1727-4
12. மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள் 1728-1
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன் 1728-2
பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன் 1728-3
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் 1728-4
13. மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம்
கொடுத்து அதன்பின் 1729-1
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும் 1729-2
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி 1729-3
மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான் 1729-4
14. ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற 1730-1
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ் 1730-2
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப் 1730-3
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் 1730-4
15. நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் 1731-1
செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான 1731-2
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும் 1731-3
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் 1731-4
16. பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு 1732-1
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப 1732-2
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே 1732-3
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் 1732-4
17. கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு 1733-1
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின் 1733-2
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர் 1733-3
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார் 1733-4
18. வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு 1734-1
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப் 1734-2
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து 1734-3
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் 1734-4
19. கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட 1735-1
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே 1735-2
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் 1735-3
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் 1735-4
20. இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த 1736-1
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு 1736-2
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் 1736-3
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார் 1736-4
21. மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத் 1737-1
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர் 1737-2
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப் 1737-3
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் 1737-4
22. மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன் 1738-1
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப் 1738-2
பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக் 1738-3
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார் 1738-4
23. இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின் 1739-1
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த 1739-2
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் 1739-3
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார் 1739-4
24. மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி 1740-1
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் 1740-2
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என 1740-3
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் 1740-4
25. அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு
அங்கு என்செய்வார் 1741-1
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் 1741-2
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் 1741-3
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று 1741-4
26. மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் 1742-1
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான் 1742-2
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால் 1742-3
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான் 1742-4
27. அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார்
அளித்து அருளும் 1743-1
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் 1743-2
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை 1743-3
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார் 1743-4
28. செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் 1744-1
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி 1744-2
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு 1744-3
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார் 1744-4
29. ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் 1745-1
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான் 1745-2
தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் 1745-3
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் 1745-4
30. பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி 1746-1
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன 1746-2
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை 1746-3
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் 1746-4
31. வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் 1747-1
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி 1747-2
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும் 1747-3
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில் 1747-4
32. விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் 1748-1
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி 1748-2
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும் 1748-3
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் 1748-4
33. கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் 1749-1
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி 1749-2
சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும் 1749-3
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான் 1749-4
34. கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில் 1750-1
அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி 1750-2
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப் 1750-3
படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் 1750-4
35. அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும் 1751-1
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து 1751-2
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற 1751-3
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் 1751-4
36. பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை 1752-1
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் 1752-2
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு 1752-3
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் 1752-4
37. முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் 1753-1
இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப் 1753-2
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால் 1753-3
பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான் 1753-4
38. மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு 1754-1
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத் 1754-2
தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு 1754-3
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் 1754-4
39. இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் 1755-1
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன 1755-2
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும் 1755-3
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக 1755-4
40. விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன் 1756-1
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி 1756-2
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று 1756-3
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம்
கேட்டார் அன்றே 1756-4
41. அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் 1757-1
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு 1757-2
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் 1757-3
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் 1757-4
42. மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத் 1758-1
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக் 1758-2
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும் 1758-3
தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார் 1758-4
43. சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி 1759-1
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து 1759-2
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை 1759-3
தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார் 1759-4
44. வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும் 1760-1
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த 1760-2
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு 1760-3
முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான் 1760-4
45. தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும் 1761-1
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே 1761-2
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும் 1761-3
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் 1761-4
46. கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும் 1762-1
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப 1762-2
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை 1762-3
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார் 1762-4
47. மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் 1763-1
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு 1763-2
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே 1763-3
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான் 1763-4
48. என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார் 1764-1
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக் 1764-2
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை 1764-3
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் 1764-4
49. ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத் 1765-1
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால் 1765-2
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் 1765-3
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் 1765-4
50. ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே 1766-1
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் 1766-2
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக 1766-3
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் 1766-4
51. மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் 1767-1
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் 1767-2
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற 1767-3
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் 1767-4
52. உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை 1768-1
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார் 1768-2
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும் 1768-3
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி 1768-4
53. ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி 1769-1
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் 1769-2
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண 1769-3
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார் 1769-4
54. கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் 1770-1
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே 1770-2
அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை 1770-3
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார் 1770-4
55. வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று 1771-1
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும் 1771-2
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின் 1771-3
நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் 1771-4
56. தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி 1772-1
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் 1772-2
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச் 1772-3
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே 1772-4
57. அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து 1773-1
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும் 1773-2
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன 1773-3
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் 1773-4
58. வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண்
உமையே மற்று இப் 1774-1
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை 1774-2
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை 1774-3
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார் 1774-4
59. அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று 1775-1
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச் 1775-2
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால் 1775-3
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார் 1775-4
60. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் 1776-1
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் 1776-2
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 1776-3
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 1776-4
61. கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும் 1777-1
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில் 1777-2
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் 1777-3
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் 1777-4
62. அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத 1778-1
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து 1778-2
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம் 1778-3
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே 1778-4
63. ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற 1779-1
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு 1779-2
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி 1779-3
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் 1779-4
64. மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் 1780-1
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி 1780-2
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம் 1780-3
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார் 1780-4
65. மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி 1781-1
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர் 1781-2
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை 1781-3
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா 1781-4
66. ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது 1782-1
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச் 1782-2
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் 1782-3
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன் 1782-4
This webpage was last updated on 16 May 2004
|
|