|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
20 சண்டேசுர நாயனார் புராணம்
1. பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு 1206-1
வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய 1206-2
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் 1206-3
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞ்லூர் 1206-4
2. செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் 1207-1
மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் 1207-2
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின் 1207-3
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது 1207-4
3. கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழைக் குடுமி 1208-1
ஓதுகிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் 1208-2
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர் மாடங்கள் 1208-3
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன 1208-4
4. யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின் 1209-1
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள் 1209-2
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் 1209-3
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள 1209-4
5. தீம் பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும் 1210-1
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அனைவனவும் 1210-2
பூம் பாசடைநீர்த் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் 1210-3
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவுமுள 1210-4
6. வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின் 1211-1
தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாகத் தடம் சாலை 1211-2
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் 1211-3
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் 1211-4
7. மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலிக் கதிர்க்கற்றைப் 1212-1
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம்பாளை 1212-2
அடையில் பயிலுந் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி 1212-3
நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினைக் காஞ்சி 1212-4
8. சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை 1213-1
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் 1213-2
மன்னர் பெருமான் அநபாயன் வருந் தொல் மரபின் முடி சூட்டும் 1213-3
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அவ்வூர் 1213-4
9. பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இண் சுவையும் 1214-1
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனும் எழுத்து ஐந்தும் 1214-2
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப் பயனாம் சைவமும் போல் 1214-3
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ 1214-4
10. பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ் 1215-1
தருமம் நிலவு காசிய கோத்திரத்துத் தலைமை சால் மரபில் 1215-2
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் 1215-3
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளனானான் 1215-4
11. மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் 1216-1
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப் புதல்வர் 1216-2
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள் 1216-3
பற்றை எறியும் பற்றுவார் சார்பாய் உள்ள பவித்திரையாம் 1216-4
12. நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்க 1217-1
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய 1217-2
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் 1217-3
வென்றிவிளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார் 1217-4
13. ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த 1218-1
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் 1218-2
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் 1218-3
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் 1218-4
14. நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப் 1219-1
புகழும் பெருமை உப நயனப் பொருவில் சடங்கு முடித்து அறிவின் 1219-2
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயந்த எனினும் தம் 1219-3
திகழு மரபின் ஓது விக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் 1219-4
15. குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த 1220-1
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் 1220-2
அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனக் கொண்ட 1220-3
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந் தகையார் 1220-4
16. நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை 1221-1
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் 1221-2
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் 1221-3
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒரு நாள் 1221-4
17. ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க 1222-1
போது மற்று அங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச 1222-2
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப 1222-3
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து 1222-4
18. பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால் 1223-1
மேவும் பெருமை அரு மறைகள் மூலமாக விளங்கு உலகில் 1223-2
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் 1223-3
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள் செய்வார் 1223-4
19. தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன 1224-1
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன 1224-2
துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத 1224-3
அங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ? நல் ஆனினங்கள் 1224-4
20. ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் 1225-1
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண்டலைத் தொடையும் 1225-2
மேய வேணித் திரு முடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத் 1225-3
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள் தாம் 1225-4
21. சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன் 1226-1
காலம் முழுதும் உலகனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும் 1226-2
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறுதரும் 1226-3
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ 1226-4
22. உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே உழை மான் மறிக்கன்று 1227-1
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் 1227-2
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசைக் 1227-3
கொள்ளும் சின மால் விடைத் தேவர் குலம் அன்றோ? இச் சுரபி குலம் 1227-4
23. என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்தக் 1228-1
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே 1228-2
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று 1228-3
நின்ற ஆயன் தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் 1228-4
24. யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும் 1229-1
தானேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் 1229-2
ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்கு 1229-3
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர் 1229-4
25. கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக் குலவு மான் 1230-1
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப் 1230-2
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் 1230-3
சாலும் புல்லின் அவை வேண்டுந் தனையும் மிசையும் தலைச் சென்று 1230-4
26. பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி 1231-1
இதம் உண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி 1231-2
அதர் நல்லன முன் செல நீழல் அமர் வித்து அமுத மதுரப்பால் 1231-3
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார் 1231-4
27. மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் 1232-1
தண்ணித்தில நீர் மருதத் தண்தலை சூழ் குலையின் சார்பினிலும் 1232-2
எண்ணிற் பெருகு நிரை மேய்த்துச் சமிதை உடன் மேல் ஏரிகொண்டு 1232-3
நண்ணில் கங்குல் முன் புகுந்தும் நன்னாள் பலவாம் அந் நாளில் 1232-4
28. ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கி 1233-1
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் 1233-2
ஏய மனங்கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும் 1233-3
தூய தீம்பால் மடி பெருகிச் சொரிய முலைகள் சொரிந்தனவால் 1233-4
29. பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள் 1234-1
காணும் பொலிவின் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய் 1234-2
பேணுந் தகுதி அன்பால் இப் பிரம சாரி மேய்த்த அதற்பின் 1234-3
மாணுந் திறத்தவான என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் 1234-4
30. அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி 1235-1
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக் கன்று 1235-2
தனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாந் தன்மை நிலைமையவாய்க் 1235-3
கணைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் 1235-4
31. தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு வந்து 1236-1
செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே 1236-2
எம்மையுடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் 1236-3
மெய்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் 1236-4
32. அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப் 1237-1
பொங்கும் அன்பால் மண்ணி மணற் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச் 1237-2
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும் 1237-3
துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார் 1237-4
33. ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில் 1238-1
பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திரு முடிமேல் 1238-2
சாத்தல் ஆகும் திருப் பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்து 1238-3
கோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் 1238-4
34. நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங் 1239-1
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவுங் கோக்கள் உடன் கூட 1239-2
ஒல்லை அணைந்து பாலாக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் 1239-3
செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால் 1239-4
35. கொண்ட மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் 1240-1
அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து 1240-2
வண்டு மருவுந் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையே 1240-3
பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி 1240-4
36. மீள மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட
ஆள் உடையார் 1241-1
தம்முடைய அன்பர் அன்பின்பால் உளதாய் மூள அமர்ந்த 1241-2
நயப் பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ் 1241-3
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் 1241-4
37. பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில் 1242-1
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான 1242-2
திரு மஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி 1242-3
வரும் அந் நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் 1242-4
38. இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும் 1243-1
நிறை பூசனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள் 1243-2
குறைபாடு இன்றி மடி பெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றி 1243-3
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால் 1243-4
39. செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு 1244-1
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக முந்நூல் அணிமார்பர் 1244-2
இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டித் திறத்தை அறியாத 1244-3
அயல் மற்று ஒருவன் அப் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் 1244-4
40. அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் 1245-1
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமைக் கறந்து 1245-2
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை 1245-3
எச்ச தத்தன் தனை அழைமின் என்றார் அவையில் இருந்தார்கள் 1245-4
41. ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின் 1246-1
பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப் பரந்த 1246-2
ஓங்கு சபையோர் அவனைப் பார்த்து ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய் 1246-3
தீங்கு தன்னைக் கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் 1246-4
42. அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம் 1247-1
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்பான் போல் 1247-2
கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து 1247-3
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் 1247-4
43. மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது 1248-1
இறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை 1248-2
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் 1248-3
எனக் குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதில் குற்றம் எனதேயாம் என்றான் 1248-4
44. அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்து 1249-1
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான் 1249-2
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க 1249-3
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் 1249-4
45. சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் 1250-1
மன்றல் மருவும் புறவின் கண் மேய்ப்பார் மண்ணி மணற் குறையில் 1250-2
அன்று திரளக் கொடு சென்ற அதனை அறிந்து மறைந்தப் பால் 1250-3
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் 1250-4
46. அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்கு 1251-1
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து 1251-2
பின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம் 1251-3
தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார் 1251-4
47. நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி 1252-1
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடிமேல் 1252-2
மன்றல் விரவும் திருப் பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா 1252-3
நன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்பு உற்று ஆட்டுதலும் 1252-4
48. பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் 1253-1
விரவ மேதக்கவர் பால் மேவும் பெருமை வெளிப் படுப்பான் 1253-2
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து 1253-3
குரவ மேவு முது மறையோன் கோப மேவும் படி கண்டான் 1253-4
49. கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டு 1254-1
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத் 1254-2
தொண்டு புரியும் சிறிய பெரும் தொன்றலார் தம் பெருமான் மேல் 1254-3
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால் 1254-4
50. மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் 1255-1
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு 1255-2
மாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப்பால் 1255-3
காலால் இடறிச் சிந்தினான் கையால் கடமைத் தலை நின்றான் 1255-4
51. சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத் 1256-1
தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் 1256-2
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால் 1256-3
வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் 1256-4
52. எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக 1257-1
மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில் 1257-2
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திடப்புகலும் 1257-3
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி 1257-4
53. பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர் 1258-1
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் 1258-2
காதல் கூர வெளிப் படலும் கண்டு தொழுது மனம் களித்துப் 1258-3
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் 1258-4
54. தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை 1259-1
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் 1259-2
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி 1259-3
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள 1259-4
55. செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார் 1260-1
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய் 1260-2
பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதலாம் 1260-3
துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார் 1260-4
56. அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம் 1261-1
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் 1261-2
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத் 1261-3
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார் 1261-4
57. எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப் 1262-1
பல்லாயிரவர் கண நாதர் படி ஆடிக் களி பயிலச் 1262-2
சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவ 1262-3
நல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் 1262-4
58. ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நால் மறையின் 1263-1
சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில் 1263-2
கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றம் உடன் 1263-3
மூல முதல்வர் சிவ லோகம் எய்தப் பெற்றான் முது மறையோன் 1263-4
59. வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர் 1264-1
அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார் 1264-2
இந்த நிலைமை அறிந்தாரார்? ஈறிலாதார் தமக்கு அன்பு 1264-3
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால் 1264-4
சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
1. நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணி கண்டத்து 1265-1
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத் 1265-2
தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன் 1265-3
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் 1265-4
திருச்சிற்றம்பலம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 16 May 2004
|
|