|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
15 மூர்த்தி நாயனார் புராணம்
1. சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும் 0968-1
கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்பு 0968-2
நார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும் 0968-3
பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு 0968-4
2. சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண் 0969-1
வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய 0969-2
வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம் 0969-3
பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் 0969-4
3. மொய்வைத்த வண்டின் செறிகுழல் முரன்ற சந்தின் 0970-1
மை வைத்த சோலை மலயந்தர வந்த மந்த 0970-2
மெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத் 0970-3
தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம் 0970-4
4. சூழும் இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள் 0971-1
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார் 0971-2
யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும் 0971-3
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் 0971-4
5. சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் 0972-1
நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப் 0972-2
பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும் 0972-3
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம் 0972-4
6. மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் 0973-1
பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் 0973-2
சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற் 0973-3
செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை 0973-4
7. மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர் 0974-1
மெய்ய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மை 0974-2
செம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில் 0974-3
எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் 0974-4
8. அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச் 0975-1
செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார் 0975-2
எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள் 0975-3
மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார் 0975-4
9. நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே 0976-1
கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம் 0976-2
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார் 0976-3
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம் 0976-4
10. அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில் 0977-1
எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டா 0977-2
அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச் 0977-3
சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில் 0977-4
11. கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல் 0978-1
மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் 0978-2
யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர் 0978-3
சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான் 0978-4
12. வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச் 0979-1
சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம் 0979-2
சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் 0979-3
கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான் 0979-4
13. வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி 0980-1
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு 0980-2
வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு 0980-3
செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் 0980-4
14. தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து 0981-1
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச் 0981-2
சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும் 0981-3
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் 0981-4
15. செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள் 0982-1
முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை 0982-2
மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் 0982-3
எக்கர்க்குடனாக இகழ்தன செய்ய எண்ணி 0982-4
16. அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் 0983-1
முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார் 0983-2
தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் 0983-3
எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் 0983-4
17. எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் 0984-1
தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக் 0984-2
கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான் 0984-3
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து 0984-4
18. புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும் 0985-1
வன்மைக் கொடும் பாதகன் மாய்திட வாய்மை வேத 0985-2
நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத் 0985-3
தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)?" என்று சார்வார் 0985-4
19. காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று 0986-1
ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி 0986-2
ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை 0986-3
சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில் 0986-4
20. நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று 0987-1
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று 0987-2
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் 0987-3
கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய 0987-4
21. கல்லின் புறந் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி 0988-1
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை 0988-2
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார் 0988-3
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு 0988-4
22. அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால் 0989-1
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு 0989-2
முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் 0989-3
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன 0989-4
23. இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு 0990-1
செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து 0990-2
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து 0990-3
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம் 0990-4
24. அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் 0991-1
மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன் 0991-2
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு 0991-3
மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல 0991-4
25. இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் 0992-1
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் 0992-2
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் 0992-3
வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான் 0992-4
26. முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் 0993-1
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் 0993-2
முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப் 0993-3
பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது மோத 0993-4
27. அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் 0994-1
கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி 0994-2
வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே 0994-3
செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார் 0994-4
28. தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் 0995-1
கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும் 0995-2
சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி 0995-3
வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார் 0995-4
29. பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் 0996-1
தன் நெடும் குடைக் கீழ்த் தம் தம் நெறிகளில் சரிந்து வாழும் 0996-2
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை 0996-3
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் 0996-4
30. இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை 0997-1
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க 0997-2
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக் 0997-3
கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று 0997-4
31. செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் 0998-1
இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று 0998-2
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக் 0998-3
கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் 0998-4
32. கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர் 0999-1
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித் 0999-2
திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின் 0999-3
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி 0999-4
33. நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் 1000-1
ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம் 1000-2
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப் 1000-3
பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப 1000-4
34. வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று 1001-1
வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச் 1001-2
சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு 1001-3
தாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே 1001-4
35. மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா 1002-1
ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் 1002-2
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது 1002-3
ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர் 1002-4
36. சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் 1003-1
எங்கு எங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல 1003-2
அங்கு அங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின் 1003-3
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் 1003-4
37. வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து 1004-1
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை 1004-2
அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத் 1004-3
திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார் 1004-4
38. மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண் 1005-1
துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ் 1005-2
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் 1005-3
உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் 1005-4
39. வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் 1006-1
சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் 1006-2
முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் 1006-3
இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வான் என்றார் 1006-4
40. அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு 1007-1
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும் 1007-2
எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர் 1007-3
செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப 1007-4
41. வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறே 1008-1
செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள் 1008-2
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் 1008-3
மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார் 1008-4
42. என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும் 1009-1
வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும் 1009-2
நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை 1009-3
ஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார் 1009-4
43. மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் 1010-1
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் 1010-2
தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து 1010-3
நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார் 1010-4
44. மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது 1011-1
தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் 1011-2
பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால் 1011-3
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி 1011-4
45. குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக் 1012-1
கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி 1012-2
நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ 1012-3
உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன 1012-4
46. நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் 1013-1
பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற 1013-2
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி 1013-3
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம் 1013-4
47. ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் 1014-1
சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி 1014-2
ஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக் 1014-3
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து 1014-4
48. பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற 1015-1
ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின் 1015-2
பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்று 1015-3
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே 1015-4
49. அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த 1016-1
இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம் 1016-2
முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப் 1016-3
புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம் 1016-4
This webpage was last updated on 16 May 2004
|
|