thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

7 அமர் நீதி நாயனார் புராணம்
1. சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக் 0502-1 காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்து 0502-2 தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து 0502-3 பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை 0502-4 2. மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார் 0503-1 பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா 0503-2 எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால் 0503-3 அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார் 0503-4 3. சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் 0504-1 அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக் 0504-2 கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி 0504-3 வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் 0504-4 4. முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர் 0505-1 மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித் 0505-2 தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் 0505-3 தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் 0505-4 5. மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த் 0506-1 திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார் 0506-2 பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி 0506-3 உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள் 0506-4

6. பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க் 0507-1 கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டி 0507-2 நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான் 0507-3 மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி 0507-4 7. செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும் 0508-1 சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும் 0508-2 மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் 0508-3 கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும் 0508-4 8. முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில் 0509-1 தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும் 0509-2 வஞ்ச வல் வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள் 0509-3 நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய 0509-4 9. கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத் 0510-1 தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த் 0510-2 தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை 0510-3 கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக 0510-4 10. வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து 0511-1 கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும் 0511-2 படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ 0511-3 அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் 0511-4 1.1 பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு 0512-1 ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள் 0512-2 யாணர் வெண் கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக் 0512-3 காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் 0512-4 12. என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே 0513-1 நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருளத் 0513-2 துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் 0513-3 இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச 0513-4 13. வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே 0514-1 அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் 0514-2 உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் 0514-3 குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துக் கொடுப்பார் 0514-4 14. ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே 0515-1 ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை 0515-2 வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே 0515-3 ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் 0515-4 15. கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர் 0516-1 கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து எனக் கங்கை 0516-2 மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர் 0516-3 அடுத்த தெண்டிரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார் 0516-4 16. தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர் 0517-1 முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் 0517-2 கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச் 0517-3 சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார் 0517-4 17. போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப் 0518-1 பானலந்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ 0518-2 தூநறுஞ் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ 0518-3 வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் 0518-4 18. கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில் 0519-1 முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே 0519-2 அதிக நன்மையின் அறு சுவைத் திருவமுது ஆக்கி 0519-3 எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் 0519-4 19. தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி 0520-1 மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத் 0520-2 தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக் 0520-3 கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவணக் கள்வர் 0520-4 20. ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி 0521-1 எய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில் 0521-2 மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் 0521-3 செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் 0521-4 21. பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல் 0522-1 சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் 0522-2 எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார் 0522-3 அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார் 0522-4 2.2 மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும் 0523-1 இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து 0523-2 நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார் 0523-3 புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் 0523-4 23. அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை 0524-1 வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில் 0524-2 உய்த்து ஒளித்தனர் இல்லை அ·து ஒழிந்தவாறு அறியேன் 0524-3 இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று 0524-4 24. வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் 0525-1 கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள் 0525-2 நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து 0525-3 மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க 0525-4 25. நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை 0526-1 நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால் 0526-2 இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு 0526-3 ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா 0526-4 26. நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் 0527-1 சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ 0527-2 ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று 0527-3 எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் 0527-4 27. மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப் 0528-1 பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து 0528-2 சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன் 0528-3 அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார் 0528-4 28. செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி 0529-1 நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் 0529-2 உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்காப் 0529-3 பயத்தொடுங்குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார் 0529-4 29. பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார் 0530-1 தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த 0530-2 மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய 0530-3 அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான் 0530-4 30. மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் 0531-1 அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராக 0531-2 இலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர் 0531-3 நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர் 0531-4 31. உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் 0532-1 கொடுத்ததாக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணநேர் 0532-2 அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது 0532-3 எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார் 0532-4 32. நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக் 0533-1 குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் 0533-2 நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு 0533-3 ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் 0533-4 3.3 நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த 0534-1 நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றாக் 0534-2 கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு 0534-3 ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி 0534-4 34. உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு 0535-1 அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்துப் 0535-2 பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயர 0535-3 இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார் 0535-4 35. முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர் 0536-1 மட்டு நின்ற தட்டு அருளடு தாழ்வு உறும் வழக்கால் 0536-2 பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர் 0536-3 தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு 0536-4 36. ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் 0537-1 தூ நறுந் துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா 0537-2 மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் 0537-3 ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச 0537-4 37. மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே 0538-1 இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல் 0538-2 அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர் 0538-3 எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் 0538-4 38. நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும் 0539-1 பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் 0539-2 எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டே 0539-3 மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் 0539-4 39. தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த 0540-1 சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு 0540-2 அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றிப் 0540-3 புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ 0540-4 40. நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று 0541-1 உலைவில் ப·றனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் 0541-2 தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் 0541-3 துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள் எனத் தொழுதார் 0541-4 41. பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று 0542-1 அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால் 0542-2 நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனுஞ் சலத்தால் 0542-3 இச் சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் 0542-4 42. மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப் 0543-1 புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் 0543-2 தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால் 0543-3 இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து 0543-4 43. இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை 0544-1 பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று 0544-2 மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித் 0544-3 தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் 0544-4 4.4 மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற 0545-1 அண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும் 0545-2 கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத் 0545-3 தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான் 0545-4 45. மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர் 0546-1 துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார் 0546-2 கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின் 0546-3 புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் 0546-4 46. அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த 0547-1 முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப் 0547-2 பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங் 0547-3 கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார் 0547-4 47. தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும் 0548-1 வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் 0548-2 முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும் 0548-3 அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர் 0548-4 48. நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே 0549-1 மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக் 0549-2 கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த 0549-3 ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார் 0549-4 49. மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் 0550-1 பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவணப் பழமை காட்டி 0550-2 உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித் 0550-3 தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் 0550-4 திருச்சிற்றம்பலம்

தில்லை வாழந்தணர் சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 16 May 2004

See Also:

  • amar n^Ithi nAyanAr purANam in English prose
  • The Puranam Of amar-n^Ithi n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page