|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
1. திருமலைச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
5 தடுத்து ஆட்கொண்ட புராணம்
1. கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த 0147-1
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு 0147-2
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச் 0147-3
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு . 0147-4
2. பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் 0148-1
அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த 0148-2
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத் 0148-3
திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே 0148-4
3. மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் 0149-1
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு 0149-2
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் 0149-3
தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் 0149-4
4. தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் 0150-1
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க 0150-2
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி 0150-3
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில் 0150-4
5. நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு 0151-1
பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று 0151-2
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் 0151-3
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் 0151-4
6. பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் 0152-1
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து 0152-2
அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து 0152-3
திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார் 0152-4
7. தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ 0153-1
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப 0153-2
வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் 0153-3
செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார் 0153-4
. குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் 0154-1
நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று 0154-2
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை 0154-3
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் 0154-4
9. மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் 0155-1
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை 0155-2
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக் 0155-3
கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார். 0155-4
10. மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி 0156-1
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் 0156-2
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து 0156-3
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் 0156-4
11. மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம் 0157-1
புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலராகி 0157-2
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலைப் பந்தர் 0157-3
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள் 0157-4
12. மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத் 0158-1
துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப் 0158-2
புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலே 0158-3
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார் 0158-4
13. மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித் 0159-1
தூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத் 0159-2
தேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக் 0159-3
காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான் 0159-4
14. காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன 0160-1
வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான் 0160-2
நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் 0160-3
மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான் 0160-4
15. வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப் 0161-1
பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால் 0161-2
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் 0161-3
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் 0161-4
16. அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி 0162-1
முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த 0162-2
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை 0162-3
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான். 0162-4
17. தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில் 0163-1
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி 0163-2
மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப் 0163-3
பான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான் 0163-4
18. தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை 0164-1
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி 0164-2
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும் 0164-3
நாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான். 0164-4
19. மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க 0165-1
நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் 0165-2
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப் 0165-3
பொன் அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார் 0165-4
20. இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர் 0166-1
நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க 0166-2
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே 0166-3
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார் 0166-4
21. மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு 0167-1
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றிச் சூதும் 0167-2
பங்கய முகையும் சாயத்துப் பணைத்து எழுந் தணியில் மிக்க 0167-3
குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கைத் தாகி 0167-4
22. அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும் 0168-1
இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிகளாலும் 0168-2
நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும் 0168-3
கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே 0168-4
23. நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப் 0169-1
பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆட 0169-2
அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில் 0169-3
வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால் 0169-4
24. நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி 0170-1
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி 0170-2
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி 0170-3
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார் 0170-4
25. கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார் 0171-1
பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார் 0171-2
மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் 0171-3
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் 0171-4
26. ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் 0172-1
தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார் 0172-2
பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் 0172-3
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார் 0172-4
27. வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத் 0173-1
திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் 0173-2
பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும் 0173-3
ஒரு மணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் 0173-4
28. ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த 0174-1
சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் 0174-2
மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து 0174-3
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் 0174-4
29. கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ் 0175-1
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத் 0175-2
தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே 0175-3
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க 0175-4
30. காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச் 0176-1
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் 0176-2
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க 0176-3
ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க 0176-4
31. பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக் 0177-1
கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள 0177-2
வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத் 0177-3
தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள 0177-4
32. மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ 0178-1
அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ 0178-2
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முத§ல்யோ 0178-3
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி 0178-4
33. வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும் 0179-1
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று 0179-2
இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான் 0179-3
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் 0179-4
34. என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும் 0180-1
மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும் 0180-2
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ 0180-3
நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது என்றார் 0180-4
35. பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி 0181-1
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான் 0181-2
முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே 0181-3
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் 0181-4
36. நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் 0182-1
உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் 0182-2
மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் 0182-3
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் 0182-4
37. ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான் இந் 0183-1
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் 0183-2
தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர் 0183-3
யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான் 0183-4
38. என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும் 0184-1
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான் கொல் என்று 0184-2
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான் 0184-3
நன்றால் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கான் 0184-4
39. நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் 0185-1
மிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று 0185-2
அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால் 0185-3
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட என்ன 0185-4
40. மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி 0186-1
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி 0186-2
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் 0186-3
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார் 0186-4
41. பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று 0187-1
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் 0187-2
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று 0187-3
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் 0187-4
42. கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும் 0188-1
கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் 0188-2
உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று 0188-3
தொண்டனார் ஓலை காட்டுக என்றனர் துணைவனாரை 0188-4
43. ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல் 0189-1
பாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை என்ற 0189-2
வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று 0189-3
மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார் 0189-4
44. ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன் 0190-1
காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி 0190-2
பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற 0190-3
ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்? 0190-4
45. மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற 0191-1
இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி 0191-2
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன 0191-3
முறை எனக் கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான் 0191-4
46. அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி 0192-1
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்தப் 0192-2
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற 0192-3
திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும் என்றார் 0192-4
47. என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது 0193-1
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி 0193-2
வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி 0193-3
நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை என்றான் 0193-4
48. குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப் 0194-1
பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க 0194-2
விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய் நல்லூராயேல் உன் 0194-3
பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் 0194-4
49. வேதியன் அதனைக் கேட்டு வெண்ணெய் நல்லூரிலே நீ 0195-1
போதினும் நன்று மற்றப் புனித நான்மறையோர் முன்னர் 0195-2
ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் 0195-3
சாதிப்பன் என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான் 0195-4
50. செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த 0196-1
வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான் 0196-2
எல்லையில் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல 0196-3
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி 0196-4
51. வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று 0197-1
நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தன் 0197-2
காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி 0197-3
மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு என்றான் 0197-4
52. அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் 0198-1
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் 0198-2
வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை 0198-3
தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் 0198-4
53. இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று 0199-1
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ? 0199-2
தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான் 0199-3
அசைவில் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில்மிக்கார் 0199-4
54. அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னைத் 0200-1
தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல் 0200-2
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் 0200-3
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் 0200-4
55. அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச் 0201-1
செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி 0201-2
இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற 0201-3
வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் 0201-4
56. ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் 0202-1
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே 0202-2
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை 0202-3
மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான் 0202-4
57. வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல் 0203-1
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச் 0203-2
செல்வ நான் மறையோய்! நாங்கள் தீங்குற ஒட்டோம் என்றார் 0203-3
அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார் 0203-4
58. இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ 0204-1
அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச் 0204-2
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித் 0204-3
தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான் 0204-4
59. அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை 0205-1
பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால் 0205-2
வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை 0205-3
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து 0205-4
60. வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் 0206-1
ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர் 0206-2
மாசிலா மறையோர் ஐயா! மற்றுங்கள் பேரனார் தம் 0206-3
தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின் என்றார் 0206-4
61. அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் 0207-1
தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில் 0207-2
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி 0207-3
வந்தது மொழிமின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் 0207-4
62. திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன் 0208-1
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை 0208-2
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி 0208-3
இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை என்றார் 0208-4
63. நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் 0209-1
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க 0209-2
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் 0209-3
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் 0209-4
64. திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி 0210-1
அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் 0210-2
பெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில் 0210-3
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் 0210-4
65. பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை 0211-1
ஒருவரும் அறியீராகில் போதும் என்றுரைத்துச் சூழ்ந்த 0211-2
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் 0211-3
திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் 0211-4
66. எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள் 0212-1
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி 0212-2
தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோடு 0212-3
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் 0212-4
67. முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் 0213-1
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது 0213-2
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து 0213-3
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் என்றார் 0213-4
68. என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட 0214-1
கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம் 0214-2
துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக 0214-3
மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது என்றார் 0214-4
69. எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் 0215-1
விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம 0215-2
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப 0215-3
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார் 0215-4
70. மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் 0216-1
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க 0216-2
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச் 0216-3
சொற் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் 0216-4
71. தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும் 0217-1
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன 0217-2
நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள் 0217-3
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று 0217-4
72. வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த 0218-1
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட 0218-2
கோதிலா அமுதே! இன்று உன் குணப் பெருங் கடலை நாயேன் 0218-3
யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் என மொழிந்தார் 0218-4
73. அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் 0219-1
முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே 0219-2
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற 0219-3
வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார் 0219-4
74. கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் 0220-1
மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான் 0220-2
பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம் 0220-3
இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் 0220-4
75. முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில் 0221-1
குறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால் 0221-2
நிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால் 0221-3
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் 0221-4
76. சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும் 0222-1
பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு என்றுறு பரிவில் 0222-2
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன் 0222-3
எல்லா உலகும் உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான் 0222-4
77. அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் 0223-1
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் 0223-2
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் 0223-3
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் 0223-4
78. நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில் 0224-1
மேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின் 0224-2
பூ அலரும் தடம் பொய்கைத் திருநாவலூர் புகுந்து 0224-3
தேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார் 0224-4
79. சிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால் 0225-1
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத் 0225-2
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று 0225-3
பவ நெறிக்கு விலக்கு ஆகுந் திருப்பதிகம் பாடினார் 0225-4
80. புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள 0226-1
அலர் கொண்ட நறுஞ் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும் 0226-2
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம் 0226-3
மலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன தொண்டர் 0226-4
81. திருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் 0227-1
பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர் 0227-2
நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று 0227-3
வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனங் கொண்டார் 0227-4
82. மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் 0228-1
அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் 0228-2
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில் 0228-3
செலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார் 0228-4
83. உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி 0229-1
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து 0229-2
அடையும் அதற்கு அஞ்சுவான் என்று அந் நகரில் புகுதாதே 0229-3
மடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார் 0229-4
84. வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர் 0230-1
விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள் 0230-2
புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற 0230-3
பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார் 0230-4
85. அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் 0231-1
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே 0231-2
பொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல் 0231-3
பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் 0231-4
86. அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என் 0232-1
சென்னியில் வைத்தனை என்னத் திசை அறியா வகை செய்தது 0232-2
என்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து 0232-3
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் 0232-4
87. அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச் 0233-1
செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி 0233-2
இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார் என்னக் 0233-3
கங்கை சடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான் 0233-4
88. செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து 0234-1
தம்மானை அறியாத சதியார் உளரே என்று 0234-2
அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த 0234-3
கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் 0234-4
89. பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும் 0235-1
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும் 0235-2
வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் 0235-3
தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி 0235-4
90. அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப் 0236-1
பொங்கு நதித் தென்கரை போய்ப் போர் வலித்தோள் மாவலி தன் 0236-2
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த 0236-3
செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார் 0236-4
91. பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு 0237-1
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி 0237-2
நரம்புடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி 0237-3
அரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார் 0237-4
92. தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள்
செங்கமலத் தண் 0238-1
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள்
வளை வாவி 0238-2
தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்
தம்மும்மை 0238-3
மா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின்
எல்லை வணங்கி 0238-4
93. நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம் 0239-1
பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல
எங்கும் நெருங்கி 0239-2
மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப் 0239-3
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார் 0239-4
94. வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு
செருந்தி மந்தாரம் 0240-1
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் 0240-2
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த 0240-3
பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன்
மணங்கமழ் தாரான் 0240-4
95. இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம்
உய்ய எடுத்து 0241-1
நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப்
பதியை நாளும் வணங்க 0241-2
கடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகு 0241-3
சேட் செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சி தண்
கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் 0241-4
96. மன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை
புறத்தின் மருங்கே 0242-1
குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல
வண்டலர் கைதைத் 0242-2
துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை
தொண்டர்கள் என்னச் 0242-3
சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு
திளைத்து எதிர் சென்றார் 0242-4
97. பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக
வெண்கொடி ஆடும் 0243-1
சீர் விளங்கு மணி நாவொலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் 0243-2
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை 0243-3
ஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தரத் திசை
வாயில் முன் எய்தி 0243-4
98. அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ
நம்பி ஆரூரர் தாமோ 0244-1
முன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து 0244-2
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் 0244-3
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுந்தார் 0244-4
99. அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு முழங்கும் 0245-1
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் 0245-2
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி
எங்கும் முழங்கும் 0245-3
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி 0245-4
100. போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி 0246-1
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை 0246-2
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப 0246-3
மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் 0246-4
101. ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர்
ஆகுதி தோறும் 0247-1
மாடுதாமமணி வாயில்கள் தோறும் மங்கலக் கலசம் வேதிகை தோறும் 0247-2
சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை
சாலைகள் தோறும் 0247-3
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம்
நீளிடை தோறும் 0247-4
102. எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில்
அழகு சொல்லிய எல்லாம் 0248-1
மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப் 0248-2
புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் 0248-3
அண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி 0248-4
103. மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள்
முற்றும் நெருங்கி 0249-1
சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின்
அடி கொண்டு திளைத்துக் 0249-2
காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக் காதல் அன்பர் கணநாதர் புகும்பொற் 0249-3
கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார் 0249-4
104. பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும்
பேரம்பலம் மேரு 0250-1
வருமுறை வலம் கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் 0250-2
அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த 0250-3
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் 0250-4
105. வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட 0251-1
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த 0251-2
கைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் 0251-3
செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு 0251-4
106. ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் 0252-1
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக 0252-2
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் 0252-3
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார் 0252-4
107. தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று 0253-1
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம் என்று 0253-2
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சி மேற் குவித்துப் 0253-3
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் 0253-4
108. தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந்
தாண்டவம் புரிய 0254-1
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறிபுனல் மறி திரைப் பொன்னி 0254-2
மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் என வானில் 0254-3
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும்
அது உணர்ந்து எழுந்தார் 0254-4
109. ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி
சென்னி மேற் கொண்டு 0255-1
சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந் தொறும் புறவிடை கொண்டு 0255-2
மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங்கினர் போந்து 0255-3
நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரங் கடந்து 0255-4
110. நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி 0256-1
மன்றலார் செல்வ மறுகினூடேகி மன்னிய திருப்பதி அதனில் 0256-2
தென்திசை வாயில் கடந்து முன் போந்து சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக் 0256-3
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார் 0256-4
111. புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர் 0257-1
அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம் 0257-2
பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில் 0257-3
சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார் 0257-4
112. பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி 0258-1
உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி 0258-2
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங் 0258-3
கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள 0258-4
113. மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித் 0259-1
தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக் 0259-2
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று 0259-3
பண்டரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார் 0259-4
114. இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள 0260-1
வெருக் கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பிப் 0260-2
பெருக்கோதம் சூழ்புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த் 0260-3
திருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி 0260-4
115. தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால் 0261-1
ஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி 0261-2
மானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கிக் 0261-3
கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார் 0261-4
116. வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும் 0262-1
பைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்தாடி 0262-2
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர் 0262-3
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் 0262-4
117. மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை 0263-1
முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து 0263-2
பொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் 0263-3
தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார் 0263-4
118. தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு 0264-1
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க 0264-2
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர் என்று 0264-3
நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார் 0264-4
119. தம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி 0265-1
எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால் 0265-2
நம் பிரானார் ஆவார் அவரன்றே எனும் நலத்தால் 0265-3
உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார் 0265-4
120. மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத் 0266-1
தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும் 0266-2
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும் 0266-3
ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார் 0266-4
121. சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக் 0267-1
கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி 0267-2
தாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்து 0267-3
வீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார் 0267-4
122. மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச் 0268-1
செங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில 0268-2
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் 0268-3
பொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார் 0268-4
123. வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர்
அஞ்சலி கூப்பி வந்து 0269-1
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத் தொண்டர் தம்மை நோக்கி 0269-2
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ
கேளீர் என்னும் 0269-3
சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார் 0269-4
124. வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து
உறுப்பால் வணங்கித் 0270-1
தேனுறை கற்பக வாசமாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சி 0270-2
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைக§ள்¡டும் 0270-3
தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு
மாளிகை வாயில் புக்கார் 0270-4
125. புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயில்
மேய பிரானையார்க்கும் 0271-1
பற்று இடம் ஆய பரம் பொருளைப் பார்ப்பதி பாகனை பங்கயத்தாள் 0271-2
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை
வீழ்ந்து இறைஞ்சி 0271-3
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை
மெய்ம்மை பெற்றார் 0271-4
126. அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க
பஞ்சாங்கம் ஆக 0272-1
முன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி 0272-2
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற 0272-3
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை
வண்டமிழ் மாலை பாட 0272-4
127. வாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்னவனார்
அருளாலோர் வாக்கு 0273-1
தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம் நாம் முன்பு
தொண்டு கொண்ட 0273-2
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து
நின் வேட்கை தீர 0273-3
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர்
கேட்க எழுந்தது அன்றே 0273-4
128. கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை
இறைஞ்சி நின்றே 0274-1
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியே 0274-2
வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா! மற்று உன் பெரிய
கருணை அன்றே 0274-3
நாட்கமலப் பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் 0274-4
129. என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினொடும் 0275-1
வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு 0275-2
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார் 0275-3
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அழைத்தார் 0275-4
130. மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான் 0276-1
சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி 0276-2
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்னத் 0276-3
தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார் 0276-4
131. இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து 0277-1
முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப் 0277-2
பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில் 0277-3
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் 0277-4
132. கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம் 0278-1
பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம் 0278-2
விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற 0278-3
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி 0278-4
133. பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள் 0279-1
விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் 0279-2
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை 0279-3
தர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவஞ் சேர்ந்தார் 0279-4
134. மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத் 0280-1
தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக் 0280-2
கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன் 0280-3
தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன 0280-4
135. நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க 0281-1
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன 0281-2
பாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம் 0281-3
கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற. 0281-4
136. பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி 0282-1
அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம் 0282-2
கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப 0282-3
உள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் 0282-4
137. பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத் 0283-1
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ 0283-2
ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும் 0283-3
பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாட் போந்தார் 0283-4
138. அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம்
என்று ஆர்ப்ப 0284-1
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற 0284-2
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும் 0284-3
பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் 0284-4
139. புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார் 0285-1
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி 0285-2
நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய் 0285-3
விற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரைக் கண்டார் 0285-4
140. கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? 0286-1
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து 0286-2
விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ? 0286-3
அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார் 0286-4
141. ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் 0287-1
மேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோ 0287-2
மூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்து 0287-3
நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார் 0287-4
142. தண்டரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும் 0288-1
கெண்டை நெடுங் கண் வியப்பப் கிளர் ஒளிப் பூண் உரவோனை 0288-2
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப் 0288-3
பண்டை விதி கடை கூட்டப் பரவையாருங் கண்டார் 0288-4
143. கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப 0289-1
விண் கொள்ளாப் பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு 0289-2
எண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கை 0289-3
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் 0289-4
144. முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால் 0290-1
தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ? 0290-2
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ? 0290-3
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் 0290-4
145. அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால் 0291-1
உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடைச் சாய்ந்தன எனினும் 0291-2
வண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதாக்கிக் 0291-3
கண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செலவுய்ப்ப 0291-4
146. பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம் 0292-1
தாங்கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும் 0292-2
தேங்கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப் 0292-3
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போய்ப் புகுந்தான் 0292-4
147. வன்தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் 0293-1
இன் தொண்டைச் செங்கனி வாய் இளங் கொடி தான் யார் என்ன 0293-2
அன்றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் 0293-3
சென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் எனச் செப்ப 0293-4
148. பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல் 0294-1
ஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை 0294-2
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் 0294-3
ஏர் பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை 0294-4
149. என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான் 0295-1
முன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு 0295-2
நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன் என்றுள் மகிழ்ந்து 0295-3
சென்றுடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக 0295-4
150. பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே 0296-1
புரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் 0296-2
விரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி 0296-3
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் 0296-4
151. அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின் 0297-1
மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து 0297-2
எவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் எனச் 0297-3
செவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார் 0297-4
152. பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும் 0298-1
ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர் 0298-2
தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய 0298-3
ஈசனார் அருள் என் நெறிச் சென்றதே 0298-4
153. உம்பர் நாயகர் தங்கழல் அல்லது 0299-1
நம்புமாறு அறியேனை நடுக்குற 0299-2
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று 0299-3
எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே 0299-4
154. பந்தம் வீடு தரும் பரமன் கழல் 0300-1
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை 0300-2
வந்து மால் செய்து மான் எனவே விழித்து 0300-3
எந்தையார் அருள் எந் நெறிச் சென்றதே 0300-4
155. என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர் 0301-1
நின்றது எங்கு என நித்திலப் பூண் முலை 0301-2
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான் 0301-3
சென்று தேவ ஆசிரியனைச் சேர்ந்த பின் 0301-4
156. காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான் 0302-1
யாவரோடும் உரையியம்பாது இருந்து 0302-2
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் 0302-3
பூவின் மங்கையைத் தந்து எனும் போழ்தினில் 0302-4
157. நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை 0303-1
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினைக் 0303-2
காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல் 0303-3
பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக 0303-4
158. எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு 0304-1
பொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம் 0304-2
வைகு சேக்கை கண் மேற்செல வந்தது 0304-3
பையுள் மாலை தமியோர் புனிப்புற 0304-4
159. பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும் 0305-1
வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன் 0305-2
அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர் 0305-3
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் 0305-4
160. மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால் 0306-1
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று 0306-2
நறு மலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன் 0306-3
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா 0306-4
161. அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர் 0307-1
வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல் 0307-2
பரந்த வெம் பகற்கொல்கிப் பனி மதிக் 0307-3
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம் 0307-4
162. தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே 0308-1
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய் 0308-2
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் 0308-3
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா 0308-4
163. வாவி புள்ளலி மாறிய மாலையில் 0309-1
நாவலூரரும் நங்கை பரவையாம் 0309-2
பாவை தந்த படர் பெருங் காதலும் 0309-3
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார் 0309-4
164. தந்திருக் கண் எரிதழலிற் பட்டு 0310-1
வெந்த காமன் வெளியே உருச் செய்து 0310-2
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே 0310-3
எந்தையார் அருள் இவ் வண்ணமோ? என்பார் 0310-4
165. ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் 0311-1
தூர்ப்பதே எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர் 0311-2
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச் 0311-3
சாத்தும் வெண் மதி போன்றிலை தண் மதி 0311-4
166. அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே 0312-1
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக் 0312-2
கடுத்த நஞ்சுன் தரங்கக் கரங்களால் 0312-3
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் 0312-4
167. பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச் 0313-1
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் 0313-2
புறம் பணைத் தடம் பொங்கழல் வீசிட 0313-3
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்! 0313-4
168. இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் 0314-1
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் 0314-2
தன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம் 0314-3
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம் 0314-4
169. கனங்கொண்ட மணி கண்டர் கழல் வணங்கிக் கணவனை
முன் பெறுவாள் போல 0315-1
இனங் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும் 0315-2
தனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால் 0315-3
தனித்துச் சென்ற மனங்கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு
தன்மணிமாளிகையைச் சார்ந்தாள் 0315-4
170. சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே
ஒலிப்ப முன்னர் 0316-1
வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி
மாளிகையின் மேலால் 0316-2
ஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில்
நலங் கொள் பொற் கால் 0316-3
மாறில் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில்
மருங்கிருந்தாள் வந்து. 0316-4
171. அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட 0317-1
மைவிரவு கண்டாரை நாம் வணங்கப் போம் மறுகெதிர்
வந்தவரார் என்ன 0317-2
இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம்
எதிர் நின்று ஆண்ட 0317-3
சைவ முதல் திருத் தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் 0317-4
172. என்றவுரை கேட்டலுமே எம் பிரான் தமரேயோ
என்னா முன்னம் 0318-1
வன் தொண்டர் பால் வைத்த மனக் காதல் அளவு
இன்றி வளர்ந்து பொங்க 0318-2
நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி 0318-3
மின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல்
அணை மேல் வீழ்ந்த போது 0318-4
173. ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை
அருகு வீசி 0319-1
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் 0319-2
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன 0319-3
மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி
சொரிந்தான் வந்து 0319-4
174. மலரமளித் துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு
ஆற்றாள் மங்குல் வானில் 0320-1
நிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை
ஆற்றா நீர்மை யோடும் 0320-2
கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றாக் கையள் ஆகி 0320-3
இலவ இதழ்ச் செந்துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின்
வறிதே இன்ன சொன்னாள் 0320-4
175. கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாண் மதியம்
கனல்வான் எனை இச் 0321-1
சந்தின் தழலைப் பனி நீர் அளவித் தடவுங் கொடியீர் தவிரீர் தவிரீர் 0321-2
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையானிலமும்
எரியாய் வருமால் 0321-3
அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள்
பெற்றுடையார் அருளார் 0321-4
176. புலரும் படி யன்றி இரவென்னளவும் பொறையும் நிறையும்
இறையும் தரியா 0322-1
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு
வாழ்வுரையீர் 0322-2
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன் மதனார்
புடை நின்று அகலார் 0322-3
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார்
அவரோ அறியார் 0322-4
177. தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்
நீரே அல்லால் 0323-1
ஆரென் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்
படியோ இதுதான் 0323-2
நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை
வெண்டலையின் புடையே 0323-3
ஊரும் சடையீர் வருவீர் உமது அன்பிலர் போல்
யானோ உறுவேன் 0323-4
178. என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளகச்
சுருள் ஓதியையும் 0324-1
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருளுவான் அருளும்
வகையார் நினைவார் 0324-2
சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ்
பெருமான் அடிகள் 0324-3
அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும் என்று அடியார்
அறியும் படியால் அருளி 0324-4
179. மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை
தன்னைத் தந்தோம் 0325-1
இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை
செய்தனம் என்று அருளிப் 0325-2
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின்
உரிவை புனைவான் 0325-3
அன்னந் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன்
பால் மணம் என்று அருள 0325-4
180. காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில்
இருளும் கங்குல் கழி போம் 0326-1
யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழுகாலையில்
வந்து அடியார் கூடிச் 0326-2
சேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு
நாவலர் கோன் மகிழத் 0326-3
தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை
யினால் நிகழச் செய்தார் 0326-4
181. தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் 0327-1
மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன் 0327-2
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப் 0327-3
பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார் 0327-4
182. தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர் 0328-1
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம் 0328-2
பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும் 0328-3
மின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார் 0328-4
183. மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை 0329-1
போதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றிச் 0329-2
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந் தவிசி இழிந்து தங்கள் 0329-3
நாதர் பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி 0329-4
184. அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச் 0330-1
சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச் 0330-2
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி 0330-3
இந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற 0330-4
185. கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும் 0331-1
மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் 0331-2
ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச் 0331-3
சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார் 0331-4
186. நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே என்றும் 0332-1
மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர் என்றும் 0332-2
தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் 0332-3
மேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற 0332-4
187. கைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப் 0333-1
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல 0333-2
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ 0333-3
மைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் 0333-4
188. பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத 0334-1
இலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல் 0334-2
நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும் 0334-3
அலங்கலந் தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில் 0334-4
189. கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து 0335-1
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி 0335-2
எண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆகப் 0335-3
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவிச் சென்றார் 0335-4
190. அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூரக் 0336-1
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார் 0336-2
கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும் 0336-3
படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு 0336-4
191. மன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்து 0337-1
அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை 0337-2
நன் பெரும் பரம ஆனந்த நன் மது 0337-3
என் தரத்தும் அளித்து எதிர் நின்றன 0337-4
192. ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின 0338-1
காலன் ஆருயிர் மாளக் கருத்தன 0338-2
மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை 0338-3
சீலம் ஆக வருடச் சிவந்தன 0338-4
193. நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன 0339-1
வேதி யாதவர் தம்மை வேதிப்பன 0339-2
சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய 0339-3
ஆதி மால் அயன் காணா அளவின 0339-4
194. வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன 0340-1
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன 0340-2
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன 0340-3
பூத நாத நின் புண்டரீகப் பதம் 0340-4
195. இன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும் 0341-1
அந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி 0341-2
மன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப் 0341-3
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார் 0341-4
196. பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் 0342-1
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் 0342-2
அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் 0342-3
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று 0342-4
197. நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர் நான் இங்கு 0343-1
ஏதந் தீர் நெறியைப் பெற்றேன் என்றெதிர் வணங்கிப் போற்ற 0343-2
நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலை 0343-3
கோதிலா வாய்மையாலே பாடென அண்ணல் கூற 0343-4
198. தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச் 0344-1
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர் 0344-2
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் 0344-3
பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய் என்ன 0344-4
199. தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன் 0345-1
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் 0345-2
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று 0345-3
எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் 0345-4
200. மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் 0346-1
சென்னியுற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில் 0346-2
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள 0346-3
அந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார் 0346-4
201. தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு 0347-1
சேரத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா 0347-2
வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று 0347-3
ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார் 0347-4
202. தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச் 0348-1
செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம் 0348-2
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த 0348-3
எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் 0348-4
203. உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த 0349-1
நம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார் 0349-2
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே 0349-3
எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன் 0349-4
திருமலைச் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 16 May 2004
|
|